ShareThis

Thursday, February 27, 2014

வாத்யார் ஆறாமாண்டு நினைவுக் கட்டுரை

STATUTORY WARNING & INFORMATION:

No Animals were harmed in this post, except spending time in KFC munching leg piece during thought process.

All characters are NOT FICTIONAL but DIRECTIONAL.

SMOKING & DRINKING are the two largest revenue streams for Government of India. So, consume more and be on death bed, to make Indian Government richer.

அன்புள்ள ரங்கராஜன்,

லெமன் டீ என்ன வேண்டும் - ட்வின்னீங்ஸா / டெட்லியா வாத்யாரே.

நரகத்தில் என்ன விசேஷம். சித்ரகுப்தனிடம் ஒரு கேள்வி இருக்கிறது, இத்தனை பிக் டேட்டா-வை எப்படி மேமேஜ் செய்கிறார். டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் / ஐ.பி இருந்தால் அனுப்புங்கள். அடுத்த பில்லியன் டாலர் அவுட்சோர்சிங்கிற்கான பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் கொடுத்து வெள்ளைக்கார மாக்கான்களை கவிழ்க்க வசதியாக இருக்கும்.

பூமியில் நாங்கள் நலம். பூமி நலமா என்று கேட்காதீர்கள். குளோபல் வார்மிங்கில் பிப்ரவரி கடைசியில் சென்னையில் தூறுகிறது. மங்கள்யான் விட்டிருக்கிறோம். பூமி மக்கர் செய்தால், இருக்கவே இருக்கிறது செவ்வாய். சுலப தவணைத் திட்டத்தில், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பத்து நிமிட தூரத்தில் செவ்வாயில் மனைகள். முன்பணம் கட்டுபவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செலவு கிடையாது. முதலில் வாங்கும் 100 பேர்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு. நரகத்திலிருந்து பக்கமாக தான் இருக்க வேண்டும். இருந்தால் ஒரு எட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

டெட்லியின் தூள் விழாத லெமன் டீயைப் பார்த்தால், ஏதோ மஞ்சள் காமாலைக்கு லேப் டெஸ்டுக்கு வந்த யூரின் சாம்பிள் மாதிரி இருக்கிறது. இது தோன்றிய நாளிலிருந்து நான் லெமன் டீ குடிப்பதை விட்டு விட்டேன். நான் மொர்ராஜி தேசாயாக மாறும் விருப்பங்களில்லை. வேண்டுமானால் வேறு எதையாவது ஆர்டர் செய்யுங்கள். போன வாரம் ஒஷானில் ”கேஃபே கியுபா” என்றொரு டின் வாங்கினேன். அதே சோடா அழுத்திய இன்னொரு கோலா, முகர்ந்து பார்த்தால் காபி வாசனை வருகிறது. நாராசம். ப்யூஷன் என்கிறப் பெயரில் சென்னையில் நடக்கும் கூத்துகளிலிருந்து தப்பித்து விட்டீர்கள். நுங்கம்பாக்கத்தில் ‘ஷாங்காய் அண்ணாச்சி’ என்றொரு கடையிருக்கிறது. நூடுல்ஸுக்கு தொட்டுக்கொள்ள ஆவக்காய் ஊறுகாயும், அரிசி வடாமும் தருவார்கள் போல.

விஸ்வரூபத்திலும், துப்பாக்கியிலும் ’ஸ்லீப்பர் செல்’ என்று சொன்னாலும் சொன்னார்கள், நதியா கம்மல், தோடு மாதிரி போகிற வருகிறவர்கள் எல்லாம் தங்கள் ஊரிலும் ஸ்லீப்பர் செல் இருக்கிறது என்று பேஸ்புக்கில் உளறுகிறார்கள். இது தென்னக ரயில்வே புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிற படுக்கை வசதியுள்ள அறை மாதிரி ஏதோ ஒன்று என்று எண்ணி, இன்னொரு கூட்டம் ’ரிசர்வேஷன் உண்டா சார்’ என்று கேட்கிறது. இன்னும் சென்ட்ரல் ஸ்டேஷன் வால்டாக்ஸ் சாலையின் லாட்ஜ் வாசலில்

“இவ்விடம் ஸ்லீப்பர் செல்கள் தினசரி, வார, மாத வாடகைக்கு விடப்படும். உரிமையாளர்: ரத்தினசாமி”

என்று போர்டு மாட்டாதது தான் குறை. ஸ்லீப்பர் செல்லுக்கு பதிலாக ஸ்வீப்பர் செல் கொண்டு வந்திருந்தால், நிறைய பேருக்கு வேலையாவது கிடைத்திருக்கும். நாடும் ஏதோ சுத்தமாயிருக்கும். hmmmm. I'm waiting!

நீங்கள் போன ஆறாண்டுகளில் உலகம் நிஜமாகவே மாறிவிட்டது. கேஃபே காபி டேயில் மூணு லேப்டாப், இரண்டு பசங்கள், இரண்டு பெண்கள் சகிதமாய் மில்லியன் டாலர் வேல்யுவேஷன் பேசுகிறார்கள். காபி நன்றாக விற்கிறது. டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பும் வாட்ஸ்ஸாப்பை 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் வாங்குகிறது. சிலிக்கான் வேலியில் ஆளாளுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சம்பளத்தை ஏற்றியதில், வாடகை எகிறிவிட்டதென்று புளூம்பெர்க்கில் கட்டுரை வருகிறது.

இதற்கு எதற்கு அமெரிக்க போக வேண்டும். துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரிலேயே வாடகை எகிறி ஐந்து வருடங்களாகிறது. டிவிட்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடக்கிறது. கூகிள் பஸ்ஸினை உடைக்கிறார்கள்.  வால் ஸ்ட்ரீட்டின் முன் ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டு கத்திக் கொண்டிருக்கிறது. இன்ஈக்வாலிடி உலகம் முழுக்க பிரச்சனையாக இருக்கிறது. எதற்காக பணம், ஏன் இவ்வளவு பணம் என்பதற்கு பதில் இல்லை. இந்த க்ரோனி கேபிடலிசத்தை தான் இந்தியாவும் கொண்டாடுகிறது. நகரம் மாதிரி கதைகள் எல்லாம் இப்போது எழுதினால் வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

சச்சின் ஒய்வு பெற்றுவிட்டார். இருந்திருந்தால் ஒரு கொட்டு அழுது, ஸ்ரீரங்கத்தில் நீங்களாடிய கிரிக்கெட்டினை ஒப்பிட்டு ஒரு முழு நீள கட்டுரை எழுதியிருப்பீர்கள். சச்சினுக்காக பிசிசிஐ பின்னால் வளைந்து மொக்கை டீம்மான வெஸ்ட் இண்டீஸை கொண்டுவந்து இந்தியாவின் மானம் காத்தது. சச்சினும் தன் பங்குக்கு 74 அடித்து ஊரை பேச விட்டார். பிரிவு உபசார பேச்சு, 22 அடிக்கு முத்தம் என்றெல்லாம் பார்த்தவுடன் எமோஷனல் கோஷண்ட் டி.ஆர், துலாபாரம் சாரதா ரேஞ்சுக்கு எகிறி, வான்கடே ஸ்டேடியமே எழவு வீடு போல ஒப்பாரி வைத்தது. சச்சின் பேசிமுடித்து, தோளில் ஏறி, கிரவுண்டை சுற்றி, அழுத கண்களோடு தம்பதி, குழந்தைகள் சமேதராய் ட்ரெஸ்ஸிங் ரூம் போய், ஷூ லேஸ் அவிழ்பதற்குள் ”பாரத ரத்னா’ கொடுத்துவிட்டார்கள். எல்லாம் பணம். இங்கே ஆளாளுக்கு எப்போதாவது வருகின்ற ஐந்தாயிரம் ரூபாய் ராயல்டி பணத்துக்கு அடித்துக் கொள்கிறார்கள். உங்களுக்கு ஒழுங்காய் வருகிறதா Mr. ரங்கராஜன் ?

இணையத்தில் வெண்பா எழுதுகிறேன் பேர்வழி என்று அந்த பார்மெட்டினை அடித்து, துவைத்து, பெண்டு நிமிர்த்தியதில் தமிழ்தாயே வாலி இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்று அங்கே அனுப்பியதாக தகவல். இரண்டு ரங்கராஜன்களும் ஆசிரிய விருத்தமெழுதி, அங்கே இருப்பவர்களை இங்கே அனுப்புங்கள். பதிலுக்கு நானும் ‘அபான வாயு / ஆசான வாயின் / அழுகுரல்’ என்பது மாதிரியான ’பின்’நவீனத்துவ பேரிலக்கிய கோர்ப்புகள் செய்பவர்களை அங்கே அனுப்புகிறேன். நாங்களும் எத்தனை நாள் தான் சுற்றிலும் யோக்கியர்களையும், நியாயவாதிகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது. நரகத்திலும் கொஞ்சம் நேர்மையாளர்கள் இருக்கட்டும்.

போன வாரம் தான் உங்கள் நண்பர் பாலுமகேந்திராவை (பெண்ணீய சண்டைகள் எல்லாம் போட்டு) உங்களிடத்தில் அனுப்பி வைத்தோம். ஷோபா ஒரு வழியாக “ஸப்ப்ப்பா இப்பவாவது வந்து சேர்ந்தீங்களே” என்று வரவேற்றது, கிசுகிசுவாக பூமிக்கே வந்துவிட்டது. செக்யூரிட்டியை டைட் பண்ண சொல்லுங்கள். எமலோகத்திலும் எட்வர்ட் ஸ்னோடன்கள் அதிகமாக இருக்கிறார்கள். நீங்கள் அவசரப்பட்டு பாலுவை சந்திக்கப் போய் விடாதீர்கள். கியுவில் நில்லுங்கள். நரகம் பாலுவுக்கு xx - குரோமோசோம்களால் நிரம்பியது. நீங்கள் xy. அதனால் கொஞ்சம் பொறும் ஒய்.

போஸ்ட்கார்ட் பேமஸ் அயன்புரம் சத்தியநாராயணன் உங்களின் குசலம் விசாரித்தார். எத்தனையோ கார்டு கதைகள் எழுதியிருக்கிறீர்கள். எழுத வைத்திருக்கிறீர்கள். இப்போது கார்டு, காட்பாடியில் கவனிப்பாரற்று கிடக்கிறது. கார்டு போய் டிவிட்டர், பேஸ்புக், எஸ்.எம்.எஸ் என்று சுருக்-கதைகள் வந்தாயிற்று. ஜனரஞ்ச பத்திரிக்கைகளிலிருந்து தான் முன்பு இணையத்துக்கு கதைகள் போனது. இப்போது உல்டா. அங்கிருந்து தான் ‘வலை பாய்ந்து’ பத்திரிக்கைகளுக்கு பக்கம் நிரம்புகிறது. Generational shift.

எர்னஸ்ட் ஹெம்மிங்வேயின் ஆறு சொல் For Sales: Baby Shoes, Never Worn தான் சுருக் கதை என்று எங்கோ சொல்லியிருக்கிறீர்கள். அதையும் விட சுர்க் கதையை ஒரு டீன் ஏஜ் பெண் எழுதி விட்டாள். “God, Pregnant, who did it" தமிழ் சூழலில் இதையும் குறுக்கி, மூன்று சொற்களில் நறுக் கதை “பார்ச்சூனர். போயஸ்கார்டனில் பண்ருட்டி”

இந்தியாவின் வெகுஜன எண்டர்டெயின்மெண்ட் பரப்பில் இப்போது முளைத்திருப்பது கிராபிக் நாவல். நேற்று தான் “ஷோலே” வின் கிராபிக் நாவலைப் படித்தேன். படித்தவுடன் நினைவுக்கு வந்தது “விக்ரம்”.  விக்ரம் கிராபிக் நாவலாக வந்தால் அதகளமாக இருக்கும். ஒரு கிராபிக் நாவலுக்கு தேவையான அத்தனை கதாபாத்திர ஸ்கெட்சுகளும் விக்ரமில் இருக்கிறது. ஏராள, தாராள டிம்பிள் கபாடியா, டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் அம்ஜத்கான், மொட்டை வில்லன் சத்யராஜ், ஏஜெண்ட் XIII, லார்கோ விஞ்ச், ஜேம்ஸ் பாண்ட் சாயலில் கமல் யோசிக்கும்போதே எச்சில் ஊறுகிறது. என்ன, பெண்கள் சுவற்றில் கோலம் போடுவார்களா என்பதை எப்படி விஷுவலாக கொண்டு வரமுடியும் என்பது தான் சிக்கல்.

ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்றுவதற்கு முன்னால், பெண்களை பெண்ணியவாதிகளிடமிருந்தும் சட்டத்திலிருந்தும் காக்கவேண்டும் போல. கொஞ்சம் பிசகினாலும் இருக்கிற 12 கம்பிகளை மாற்றி மாற்றி எண்ண வேண்டியது தான். வசந்த் சொன்னதெல்லாம் legally offensive, derogatory statements against women என்று உங்களை ’உள்ளே’ உட்கார வைக்க முடியும். உங்களுக்கே இப்படியென்றால், அகநானூறு எழுதின புலவர்களை நினைத்துப் பார்த்தேன். உவகைப் பூக்க பின் வாயை தான் பயன்படுத்தவேண்டும் போல.

தலைவன் தலைவியை நோக்கினான் - Eve teasing;
தலைவனும் தலைவியும் ஊடலால் பிரிந்தனர் - Torture, both mental and physical Section 498-A IPC;
தலைவன் தலைவியை வருடினான் - Sexual harassment Section 509 IPC; Molestation Section 354 IPC
காதலாகி, கூட புரவியில் பறந்தனர் - Kidnapping & abduction for different purposes Section 363-373;
கலவியில் ஈடுபட களவொழுக்கமாடினர். சுத்தம் தலைவி கொஞ்சம் ஜகா வாங்கினால் இது -Rape Section 376 IPC.

இந்த சூழலில் எப்படி காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, மன்றாடுவது. இதனாலேயே இளைஞர்கள் நிமிட நேரத்தில் கில்மா காணாமல் போகும் snap chat-டே கதியென்று இருக்கிறார்கள். பேஸ்புக் சாட்டிலும் இந்த வசதி வந்தால் நன்றாக இருக்குமென்று இலக்கியவாதிகள் விருப்பப்படுகிறார்கள். டாபர்மேனுக்கு இருக்கின்ற சுதந்திரம் கூட, டோபமைன் ஊறும் ஆண்களுக்கு இல்லையே என்பது தான் லேட்டஸ்ட் அறிவுஜீவி கதறல்.

குளாபல் வார்மிங்கில் அபாயத்தை தவிர்த்து என்ன ஆதாயம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். Mckenzie Funk-இன் Windfall: The Booming business of Global Warming-னை மனனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஹெட்ஜ் பண்ட், பேமிலி ஆபிஸ் என்று பில்லியன்கள் வைத்திருக்கின்ற கூட்டம் ஆர்க்டிக்கிற்கு கிளம்ப ஆரம்பித்து விட்டது. அமெரிக்காவில் ஷேல் கேஸ் என்று frackin கொண்டிருக்கிறார்கள். ஐம்பது வருடங்களில் உலகின் சராசரி வெப்பநிலையை விட ஆர்க்டிக்கில் இரண்டு மடங்கு வெப்பநிலை கூடுதலாக இருந்திருக்கிறது. ஐஸ் பாளங்கள் தாராளமாகவே கரைய ஆரம்பித்திருக்கின்றன.

கடல் மட்டம் ஏறினால் சந்தோஷப்படுவது ஆர்க்டிக் கரையோரத்தில் இருக்கும் நெதர்லாந்தும், கனடாவும், ரஷ்யாவும் தான்  சூயஸ் கால்வாய்க்கு இணையாக வடக்கில் இன்னொரு ரூட் கிடைக்கும். நெதர்லாந்து குஷியாக இருக்கிறது. அந்த ஊரில் 2/3 மக்கள் கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறார்கள். உலகில் கடல் மட்டம் ஏறி நிலம் கீழே போனால் பில்லியன் டாலர் கன்சல்டிங் பீஸ் வாங்கிவிட்டு டச்சுகாரர்கள் அட்வைஸ் செய்வார்கள். டச்சு கட்டுப்பாட்டில் இருக்கும் க்ரீன்லாந்தில் கனிம வளங்களை ட்ரில் அடித்து தோண்டி எடுக்க இப்போதே கிளம்பிவிட்டார்கள். இதையெல்லாம் இங்கே எழுதவோ, பேசவோ ஆளே இல்லை. நரகத்தில் நேரம் கிடைத்தால் தமிழ் இந்துவுக்கு எழுதி அனுப்புங்கள். அரைப்பக்கத்துக்கு போடுவார்கள். அடுத்த ஆறு நாளுக்கு தூக்கமிருக்காது, ஆளாளுக்கு விஞ்ஞானிகள் மாதிரி சீண்டுவார்கள்.

பத்து வருடங்களில் ஆர்க்டிக்கிற்கும் ஆள் தேவைப்படும். H1Bயும், L1 -ம் வாங்கின கும்பலின் அடுத்த தலைமுறை ஆர்க்டிக் விசா வாங்கும். அங்கேயும் போய் பருப்புப்பொடியும், கறிவேப்பிலை துவையலும், சினிமாவும், அரசியலும் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் என்று ஸ்டேட்டஸ் மெஸேஜ் போடுவார்கள். இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று விவாதிப்பார்கள். ஆர்க்டிக் பற்றி யஜூர் வேதத்தில் 373 வது ஸ்லோகத்தில் நாலாவது வரியில் அன்றே எழுதி இருக்கிறது என்று சாதிப்பார்கள். நாலு பிரபலங்களை ஸ்வெட்டர், ஹீட்டர் சகிதம் அழைத்துப் போய் கெளரவிப்பார்கள். இங்கிருந்து யாராவது போனால் அம்மா/மாமியாரின் பழைய தூளியையும், பாசுமதி அரிசியையும் வைக்க லக்கேஜ்ஜில் இடமிருக்கிறதா என்று தூது விடுவார்கள். ”இந்தியாவுல என்னால கார் ஒட்ட முடியாதுப்பா, the traffic is horrible” என்று சலம்புவார்கள். இந்தியாவுக்கு திரும்பியவுடன் No system. No process. No cleanliness. Corruption everywhere. This is an unliveable place என்று வரிந்து கட்டிவிட்டு, காஞ்சிபுரமருகில் ஏதாவது நிலமிருந்தால் சொல்லுங்கள், முதலீடு செய்கிறேன் என்று முகம் காட்டுவார்கள். இந்தியா உருப்படவே உருப்படாது என்று சொல்லிக்கொண்டே தினமும் எல்லா இடங்களிலும் வரிவிளம்பர ஸ்பெல்லிங் மிஸ்டேக் முதற்கொண்டு எடுத்துவைத்து மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். Times only change, but we won't. நாங்கள் மாற மாட்டோம். அதனால் புதியதாய் சொல்வதற்கு எதுவுமில்லை

இந்தியன் எழுதினீர்கள், காந்தி குல்லாவோடு அன்னா அசாரே வந்தார்; முதல்வன் எழுதினீர்கள், மப்ளர் சுற்றிய கழுத்தோடு அர்விந்த கேஜ்ரிவால் முதல்வரானார்; பேசாமல் முதலீடு ஆலோசகன், கொஞ்சமாய் எழுதுவதால் காலம்னிஸ்ட், அரசியல் போராட்டம் என்று முப்பரிமாணத்தில் ‘அன்னியனாக’ மாறிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தேர்தல் நேரம். துண்டு நோட்டீஸில், சுவற்றில் நாறடித்ததை இப்போது சோசியல் மீடியாவில் செய்கிறார்கள். எல்லோருடைய சுவர்களிலும் யாராவது சிரிக்கிறார்கள். எல்லா நாளிதழ்களிலும் புள்ளிவிவரங்கள் வருகிறது. சுயம் முக்கியம், அதற்காக சுதந்திரமெல்லாம் தேவையில்லை என்பதை கேஷுவலாக பேச ஆரம்பித்து விட்டார்கள். லஜ்ஜையே இல்லாமல் கால்வாய் ஒழுகுவதில் ஆரம்பித்து கவர்னரை மாற்றுவது வரைக்கும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ம்யூட்டில் வைத்தாலும், எம்.வி. வெங்கட்ராமின் ’காதுகள்’ நாவலில் வருவது போல கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஹாக்கியை தூக்கிவிட்டு பேசுவதை இந்தியாவின் தேசிய விளையாட்டாக வைத்து கொள்ளலாம்.

நீங்கள் விட்டுப் போன அறிவியலை என் பங்குக்கு கொஞ்சம் பரப்புவோமே என்று போன வருடம் இயற்பியலில் நோபல் வாங்கிய ஹிக்ஸ் போஸன் பற்றிய காமிக்ஸை ஒரு நண்பரிடம் கொடுத்தேன். காமிக்ஸைப் பாருங்கள். இதை விட எவ்வளவு எளிமையாக இந்த சிக்கலை புரிய வைக்க முடியும்.


பார்த்து விட்டு என் நண்பர் சொன்னது, ஒரு ”fill in the blanks குழப்பத்தை மாத்தினதுக்கா நோபல் கொடுத்தாங்க”.

சாரி ரங்கராஜன், We are like this only. இது பர்மனெண்ட் ஜெனடிக்கல் டிஸ்ஸார்டர். ஒன்றும் செய்ய முடியாது.

புதியதாய் எதுவும் மாறபோவதில்லையென்றாலும், இதே மாதிரியான இன்னொரு சந்திப்பில் அடுத்த வருடம் கதைக்கலாம்.

Friday, December 27, 2013

ஜென்ம விரோதி

மதியம் 12 மணிக்கு நுங்கம்பாக்கம் டென்னிஸ் கிரவுண்டுக்கு பின்னால் நட்ட நடு ரோட்டில் செம குத்து ஆட்டம் ஆடியிருக்கீறார்களா ? நான் ஆடினேன். சாடிஸம் தான். ஆனால் வெறி அடங்காமல் உள்ளேப் பூத்த சந்தோஷத்தோடு ஆடினேன், பூர்ணிமாவைப் பார்த்த அந்த நாளில். பூர்ணிமா என் ஜென்ம விரோதி; இல்லையில்லை ஜென்ம ஜென்மத்துக்கும் விரோதி.

எனக்கும் ராஜிக்கும் 9 மாதங்கள் 17 நாட்கள் 4 மணி நேரம் 33 நிமிஷம் தான் வித்தியாசம். ராஜியிடம் காதலை சொன்ன அந்த இரவில் தான் ராஜீவ் காந்தி செத்துப் போனார். எனக்கு மறுநாள் காலை தினந்தந்தியில் ராஜீவின் லோட்டோ ஷூவை விட, ராஜி என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பது தான் மிகப்பெரியப் பிரச்சனையாக இருந்தது. ராஜி ஆமோதிக்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. இது பூர்ணிமாவுக்கும் எனக்குமான கதை. இன்னும் கேட்டால் பூர்ணிமா என் வாழ்க்கையில் புகுந்து விளையாடிய கதை.

 ராஜி சொந்தக்கார பெண் தான். எட்டாவது படிக்கும்போது கே.கே.நகர் ரிசர்வ் வங்கி குவார்ட்டர்ஸில் மழைப் பெய்த மறுநாளில் ஒரு மரத்துக்கு கீழே நாய்க்குடை பூத்திருந்தது. அதைக் கீறினால் சிகப்பாய் வரும். அதை ரத்தம் என்று சொல்லி ஊரைக் கூட்டுவோம். அது ஒரு விளையாட்டு. அன்றைக்கு, காளான் கீறி திரும்பியபோது ராஜி நின்றிருந்தாள். கையை உதறியதில் சரியாய் ஒரு பொட்டு ராஜியின் நெற்றியில் போய் நின்றது. அவ்வளவு தான். சடாலென்று உள்ளே ஏதோ உடைந்தது. ராஜியை தவிர எல்லாரும் அரூபமானார்கள். மழை நின்ற மரத்திலிருந்து சொட்டிய துளிகளில் பில்ஹார்மானிக் குழுக்கள் இடத்தை அடைத்துக் கொண்டு வயலின்களை உச்சஸ்தாயியில் வாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். உலகின் பில்லியன் காதல்களில் அதுவும் ஒன்று தான். ஆனால் எனக்கு அது முதல்.

பத்தாவது படிக்கும் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராஜி லீவிற்கு வீட்டுக்கு வந்திருந்தாள். சொன்ன அன்றைக்கு ராஜீவ் காந்தி செத்துப் போனார். ஆனால், மொட்டை மாடியில் ஊறப்போட்ட ஊறுகாய் மாதிரி, காதல் ஸ்ட்ராங்காய் வளர்ந்தது. இரண்டு வருடங்கள் உள்ளே உறுத்திக் கொண்டிருந்ததை சொல்லி விட்டதால், கொஞ்சம் தெனாவெட்டு சேர்ந்திருந்தது. ராஜி படித்ததென்னமோ ஒரு கோ - எட் பள்ளியில். நானெல்லாம் இன்றைக்கு வரைக்கும் கே கம்யூன்களோடு தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அவள் பள்ளி ஆண் நண்பர்கள், பெண்கள் பற்றிப் பேசிக் கொண்டேயிருப்போம். ஆனால், காதலிக்கிறாளா என்கிற பதில் மட்டும் வராது. அப்போது தான் பூர்ணிமா அறிமுகமானாள்.

 என்னை விட ஒரு இஞ்ச் உயரம் அதிகம். அதுவே சங்கடமும் கூட. பூர்ணிமாவும் ராஜியும் பேசாத ரகசியங்கள் கிடையாது. பந்தர் தெருவில் டைரி, காலண்டர்கள் மாறிக் கொண்டேயிருந்தன. அத்தோடு வளர்ந்தது அவர்களின் நட்பும், என்னுடைய பதில் தெரியாத காதலும். நடுவில் கே.கே.நகரிலிருந்து அடையாரில் சொந்த வீட்டுக்கு மாறிப் போனாள். கல்லூரிப் போன முதல் வருடத்திலிருந்து வார இறுதிகள் அவள் வீட்டில் தான் கழிந்தது. டைப்ரைட்டிங் முடித்து, ஷார்ட் ஹேண்ட் வகுப்பிற்கு அப்பா துரத்தினார். ராஜி வீட்டின் பிட்மென்னின் ஷார்ட் ஹேண்ட் டிக்‌ஷனரி தான் என்னுடைய போஸ்ட்பாக்ஸாக மாறியிருந்தது.

 ஜி + 1-ன் மொட்டை மாடியில் தான் அது ஆரம்பித்தது. அன்றைக்கும் பூர்ணிமா வந்திருந்தாள். வழக்கமான காதல் போதையோடு மொட்டை மாடிக்கு போகலாம் என்று படிக்கட்டில் ஏறிய போது தான் இடி இறங்கியது. ‘சுந்தர் எங்கண்ணன்ப்பா; நான் எப்படி நீ அவனை லவ் பண்றேன்னு போய் சொல்ல முடியும்’ என்று அமைதியாய் தான் பூர்ணிமா சொன்னாள். என் காதில் அமிலமாய் விழுந்தது. தூர்தர்ஷனில் தலைவர் மரணத்துக்காக வாசிக்கும் ஷெனாய் காரர்கள் எனக்காக ஸ்பெஷலாய் வாசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மாதம் எதுவுமே நிற்கவில்லை. மனம் கொள்ளாமல் அலைய ஆரம்பித்திருந்தேன். அண்ணா நகர் டவரின் கீழிருந்த ஒயின் ஷாப்பில் ஹேவர்ட்ஸ் 5000 எனக்காக தனியாக எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த வைராக்கியமெல்லாம் ஒரே மாதம் தான். இந்த ஒரு மாதத்தில் ராஜி பல தடவை போன் செய்து நான் ஏன் வீட்டுக்கு வருவதில்லை என்று கேட்க ஆரம்பித்திருந்தாள்.

 முரளி அப்போது ‘இதயம்’ செய்திருந்தார். காதலுக்காக காதலியை தாரை வார்க்கிற ட்ரெண்டு தமிழ் சினிமாவைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்திருந்தது. சிவஞானம் பூங்காவில் நண்பர்கள் வேறு ”எல்லாத்தையும் ராஜிக்காக துறக்க ரெடியா இருக்கீயே நீ பெரியாள் மச்சி. நீ அவளை மிஸ் பண்ணலை, அவ தான் உன்னை மிஸ் பண்றா. நியாயமான காதல் எல்லாத்தையும் சாதிக்கும், உன்னோடது தெய்வீகம்டா. கண்டிப்பா அவ தான் உன் வொய்ஃப் நீ வேணும்னா பாறேன்” என்று என் கணக்கில் எதிரிலிருந்த கோபாலன் டீக்கடையில் அக்கவுண்ட் எழுத ஆரம்பித்திருந்தார்கள். லவ்வராக இருப்பதை விட தியாகியாக இருப்பதில் இருக்கும் கெளரவம் கொஞ்சம் போதையூட்டியது.

மீண்டும் அடையார்; மொட்டை மாடி. ஆனால் இந்த முறை, என் வசனங்கள் மாறியிருந்தது. ”நீ உன் மனசுல என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியாது, ஆனா நான் உன்னை மட்டும் தான் லவ் பண்ணுவேன். உனக்காகவே வாழ்வேன்; சாவேன்” etc etc என்று பூடகமாக வாராவாரம் பிட்மென் 186வது பக்கத்தில் ஒரு A4 தாளை சொருக ஆரம்பித்திருந்தேன். ஒரு லீப் வருடம் இப்படியேப் போனது. ஆகஸ்ட் 18 ஏதோ ஒரு வருடம். அன்றைக்கு வீட்டோடு எல்லோரும் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு வேண்டுதலுக்குப் போனார்கள். ராஜிக்கு பரீட்சை. அதனால் துணைக்கு நானும், பெரியம்மாவும். அன்றைய இரவு முதல் முறையாக ராஜி பேச ஆரம்பித்தாள். அதுநாள் வரை, அவளாய் வாயைத் திறந்து வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்று சொல்லவில்லை. அன்றைக்கும் சொல்லவில்லை. ஆனால் அட்வைஸ் பண்ண ஆரம்பித்தாள்.

ஒவராய் அட்வைஸ் புரண்டோடியபோது, அவள் கண்களைப் பார்த்துக் கேட்டேன்.

“இதெல்லாம் நீ எதுக்கு சொல்றேன்னு தெரியும். I know you have someone in your mind”.
கண்கள் சுருங்க என்னைப் பார்த்தாள்.

‘உனக்கெப்படி அது....”

”எல்லாம் தெரியும். தெரியாமலா இவ்வளவு வருஷம் பின்னாடி சுத்தறேன்” 

தீர்க்கமாக என்னைப் பார்த்து விட்டு. குட் நைட் என்று சொல்லிவிட்டுப் போனாள். அது தான் கடைசி. அதற்கு பின்னால் அவளுக்குப் பிடித்த கேட்பரீஸ் பெர்க்கும், அருண் ஐஸ்கீரிமின் இத்தாலியன் டிலைட்டுமாக வாங்கி ப்ரிட்ஜில் வைத்து விட்டுப் போய்விடுவேன். எங்களுக்கான சங்கேதமொழி ‘ப்ரிட்ஜ்ல இருக்கு’ அவ்வளவுதான். வாங்க வேண்டாமென்று அவளும் சொன்னதில்லை. நான் வாங்கியதை நிறுத்தியதுமில்லை.

கல்லூரி முடித்து, நான் வேலைக்குப் போக ஆரம்பித்த 90களின் இறுதியில், நான் படித்த அதே கல்லூரியில் அவள் மாஸ்டர்ஸ் சேர்ந்திருந்தாள். எல்லாரும் என்னுடைய ஜூனியர்கள் என்பதால், வேலைக்கு போகிற சாக்கில் கல்லூரி கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். கல்லூரி கல்ட்சுரல்ஸில் பாட ஆரம்பித்தேன். எல்லா கிறுக்குத்தனங்களையும் ஜுனியர்களுக்கு தெரிந்தே செய்ய ஆரம்பித்தேன். அவர்களும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனாலும் சுந்தர் மனதினை உறுத்திக் கொண்டேயிருந்தான். சகஜமாக பார்ப்பாள். பேசுவாள். எல்லாம் செய்வாள், ஆனாலும் எங்களுக்கு இடையில் ஏதோ ஒரு மெளனம் நிலவியது.

ராஜியின் அக்காவின் கல்யாணத்திற்கு இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் செய்தேன். ஹோட்டலில் முதலிரவு. முதலிரவு அலங்காரமெல்லாம் முடிந்து நான், ராஜி, என்னுடைய இன்னொரு அக்கா மூவரும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அக்கா பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் ராஜி மெதுவாய் காதில் கேட்டாள்.

 ”நாளைக்கு பூர்ணிமா வீட்டுக்கு போகணும். ட்ராப் பண்ணறயா”

 ஏதோ சாக்கு சொல்லி, ராஜியை என்னுடைய டிவிஎஸ் சாம்ப்பில் அழைத்துக் கொண்டு போய் பூர்ணிமா வீட்டில் நிறுத்தினேன். என்னதான் தியாகி பட்டமெல்லாம் போதையாக இருந்தாலும், அவள் வீட்டு வாசலில் நிற்பது awkward-ஆக இருந்தது. நீ போன் பண்ணு என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். போன் வரவேயில்லை. அவளும், பூர்ணிமாவும் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். இந்தக் கோவத்தில் ஏதோ ஒரு அல்ப விஷயத்துக்கு முகத்தைத் தூக்கிக் கொண்டு அடையாரிலிருந்து வெளியேறினேன். நடுவில் ஒரே ஒரு நாள் போன் செய்து ‘பூர்ணிமாவுக்கு கல்யாணம் மதுரையில. மாப்பிள்ளை பெரிய இடம். வீட்ல அனுப்ப மாட்டேங்கறாங்க. நீ சொல்லேன்’ என்று ரெகமண்டேஷனுக்கு இழுத்தாள். அதையும் செய்தேன். லண்டன் போக இருந்த வாய்ப்பினை என் நேர்மையால் கெடுத்துக் கொண்டேன். அந்தக் கடுப்பில் வேலையே கதி என்று டெக்ஸ்டாப்பில் புதைந்தேன். பிறந்த நாள் வாழ்த்துக் கூட சொல்லவில்லை.

அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் அந்த போன் வந்தது.

‘எங்க இருக்க’

‘பாம்பேல’

‘எப்ப வருவ’

‘அடுத்த வாரம்’

‘வீட்டுக்கு வா. உன்னோட பேசணும். மேரேஜ் பிக்ஸ் ஆயிடும் போல இருக்கு’ 

ஐஐடி பவாயின் டாய்லெட்டில் சத்தம் வராமல் அழுதேன். ரூமிலும் தொடர்ந்தது. இருக்கப் பிடிக்காமல், அடுத்த ப்ளைட் பிடித்து, நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கலாம் என்கிற முடிவில் சென்னை வந்தேன்.

வீட்டுக்குக் கூட போக தோணாமல் நேராக அடையார்.

 பெட்டி படுக்கைகளுடன் அந்த வீட்டில் யாருமே என்னை எதிர்பார்க்கவில்லை. ’அர்ஜெண்டா ஒரு மீட்டிங், அதான் ஏர்போர்ட்ல இருந்து நேரா வந்துட்டேன். இது இங்க இருக்கட்டும். வந்து எடுத்துக்கறேன்’ என்று ஜல்லியடித்து விட்டு, மாடிக்கு ஏறினேன். ப்ளைட்டில் இருக்கும்போதே என்ன பேச வேண்டும், எங்கே எகிற வேண்டும், எங்கே அழ வேண்டும் என்பதையெல்லாம் திரும்ப திரும்ப மனதில் ஒட்டிக் கொண்டிருந்தேன். இதயம் கொதித்துக் கொண்டிருந்தது. கோவமும், கையாலாகதனமும் தகித்துக் கொண்டிருந்தது.

‘அடுத்த வாரம் வர்றேன்னு சொன்னே ? ஏன் வீட்டுக்குப் போகலை. நேரா இங்க ஏன் வந்தே. வீட்ல எதாவது நினைச்சுக்கப் போறாங்க’

‘அதெல்லாம் இருக்கட்டும். ஏதோ பேசணும்னு சொன்னியே. btw, congratulations and a happy married life" என்று குத்தலுடன் ஆரம்பித்தேன்.

‘இங்க வேணாம்’ என்றவாறே கீழேப் பார்த்து ‘அம்மா உமா வீட்டுக்குப் போகணும். இவனை துணைக்கு கூட்டிட்டுப் போறேன்’ என்று பதிலுக்கு எதிர்பாராமல் கைனடிக் ஹோண்டா சாவியை கையில் திணித்தாள்.

 ப்ரூட் ஷாப் இன் க்ரீம்ஸ் ரோடு. அனாதையாக இருந்தது. பேச ஆரம்பித்தவனை சைகையால் தடுத்து நிறுத்தினாள்.

‘நான் பேசி முடிச்சிடறேன். நீ கோவமா இருக்கேன்னு தெரியும். முடிச்ச பின்னாடி திட்டு.

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆரம்பத்துல இது வெறும் இன்பாச்சுவேஷன்னு தான் நெனச்சேன். அதனால தான் விலகிப் போனேன். உன்கிட்ட இருந்து நான் ஒண்ணு மறைச்சிட்டேன். நான் யாரையும் லவ் பண்ணலை. பூர்ணிமா தான் அப்படி சொல்ல சொன்னா. அப்படி சொன்னாலாவது நீ என்னை விட்டுட்டு போயிடுவேன்னு நானும் நம்பினேன். அவ அண்ணனை லவ் பண்றேன், அது இதுன்னு அவ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினேன். ஆக்ட்சுவலி, பூர்ணிமாவுக்கு கூடப்பிறந்தவங்க யாருமே கிடையாது. ஐம் சாரி. நான் உன்னை ஏமாத்திட்டேன்.

ஆனா 12 வருஷமா நீ மாறவேயில்லை. இத்தனை வருஷமா இது பொய்யுன்னு சொல்ல என்னால முடியல. இத உள்ள வைச்சுக்கிட்டு என்னால உன் முகம் பார்த்து பேச ஒரு மாதிரி இருந்தது. உன்னோட வாழ முடியுமான்னு எனக்கு தெரியாது. ஆனா, எல்லாரையும் விட நீ தான் என்னை இத்தனை வருஷமா கொண்டாடியிருக்கே.

its over. நான் அப்பா பார்த்த பையனுக்கு ஒகே சொல்லிட்டேன். இதை சொல்லாம போக என்னால முடியலை. உன்னையும் விட முடியலை. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு. உன்னை அலைய வைச்ச பாவத்துக்கு, என்னால கல்யாணம் பண்ணிட்டு இந்த ஊர்ல நிம்மதியா வாழமுடியாது. இந்த பையன் குஜராத். நான் இனிமேல் சென்னையில இருக்க மாட்டேன்.

உன்னை நேருக்கு நேரா பார்க்கற தைரியம் எனக்கில்லை. I don't deserve you டா 

இத்தனை வருஷமா இதுக்காக தானே வெயிட் பண்ணே. யெஸ் ஐ லவ் யூ. ஆனா இது இதோட ஒவர். இதுக்கு மேல எதுவும் நடக்காது. போதுமா. என்னை விட்டுப் போயிடு.’

என்று அழ ஆரம்பித்தாள்.

பன்னிரண்டு வருடங்கள். இந்த ஒற்றை சொல்லுக்காக. ஆனால் கேட்டப்பிறகு அந்த சொல்லால் எந்தப் பயனும் இல்லை. எந்தப் பெண்ணை வாழ்நாள் முழுக்க கண் கலங்காமல் காப்பேன் என்று கர்வத்தோடு இருந்தேனோ, அதேப் பெண் என் முன்னால், எனக்காக அழுகிறாள். இனி ராஜி எனக்கு சொந்தமில்லை என்பதை நினைத்து மருகுவதா, என்னை பிடிக்குமென்று கடைசியாக ஒத்துக் கொண்டதற்காக சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை.

எதுவுமே பேசாமல், ‘போலாம்’ என்று திரும்பினேன். ராஜியின் கல்யாணத்திலும் முன்னின்றேன். மோடியாளும் அகமாதபாத்தில் போய் செட்டிலானாள். செட்டிலான இரண்டாம் வருடத்தில் உண்டானாள். பிறகு குண்டானாள். வருடா வருடம் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து இரண்டு பக்கமும் போகும். அவ்வளவே.

 இப்போது கேட்கும் நண்பர்களுக்கு, we mutually decided to move on. you know, consanguinity issue, don't want to risk our kids என்று அலட்டலாக பதில் சொல்லிவிட்டு நகர்கிறேன்.

கட்.

 நுங்கம்பாக்கம். ஏதோ அவசரமாக ஒரு ப்ரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்று ப்ரெளசிங் செண்டர் தேடினேன். மாட்டிய ஒன்றில் உள்ளே நுழைந்து ctrl + P கொடுத்து விட்டு நிமிர்ந்தால் கல்லாவில் பூர்ணிமா. சட்டென்று அடையாளம் கண்டு கொண்டாள்.

கணவனுக்கு தொழிலில் பெரிய நஷ்டம். சென்னைக்கு குடிப் பெயர்ந்து விட்டார்கள். அம்மா வீட்டோடு வாடகையில்லாமல் குடித்தனம். கணவன் ஏதோ பி.பி.ஒவில் இருக்கிறான். நகைகளை விற்று இவள் ப்ரெள்சிங் சென்டர் நடத்துகிறாள். இரண்டு குழந்தைகள். ராஜியைப் பற்றிக் கேட்டாள். யாரோடும் பேசவில்லையாம். அவமானம் பிடுங்கி தின்பதை கழுத்திலிருந்த வெற்று மஞ்சள் கயிறு உணர்த்தியது.

ஐந்து ரூபாய் ப்ரிண்ட் அவுட்டிற்கு ஐம்பது ரூபாயை வைத்து விட்டு நக்கலோடு முகம் பார்த்து சொன்னேன் ‘சுந்தர் எப்படியிருக்கான்’ பதிலுக்கு எதிர்பாராமல் வெளியே வந்தவுடன் ஆட ஆரம்பித்தேன்.

 ஹார்மோன் அவென்யு தொடரில் இதுவரை

ஹார்மோன் அவென்யு 1 - 'வரா’து வந்த நாயகி
ஹார்மோன் அவென்யு 2 - ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்
ஹார்மோன் அவென்யு 3 - One spoiler is good for life
ஹார்மோன் அவென்யு 4 - சைவப் பூனை
ஹார்மோன் அவென்யு 5 - அனாவஸ்யமா பேசாதீங்கோ
ஹார்மோன் அவென்யு 6 - நான் = கார்த்தி
ஹார்மோன் அவென்யு 7 - அவள். அவன். அப்புறம்

Wednesday, February 27, 2013

வாத்தியார் ஐந்தாமாண்டு நினைவுக் கட்டுரை

அன்புள்ள ரங்கராஜன்,

'அப்பல்லோ தினங்களில்’ நீங்கள் சில நாட்கள் உங்கள் வாழ்நாளிலிருந்து காணாமல் போய்விட்டது என்று எழுதியிருந்தீர்கள். இப்போது வருடங்கள். பெரியதாய் ஒன்றும் மாறிடவில்லை. வருடாவருடம் நாமிருவரும் இந்த நாளில் பேசுவோம். நரகத்தில் எல்லோரும் நலமா ? சொர்க்கம் ரிட்டையர்டான மக்களுக்கு. நரகத்தில் தான் சுவாரசியமான மனிதர்களோடு இருக்க முடியும் என்று சொன்னதாக நினைவு. கசாப்பினையும், அப்சல் குருவினையும் பார்க்க நேர்ந்தால் கேட்டதாக சொல்லவும்.

சொர்க்கம் / நரகமென்று ஆரம்பித்தால் உங்களுடைய இயக்குநர் மணிரத்னம் நினைவுக்கு வருகிறார். நீங்கள் வசனமெழுதாத, செழுமைப்படுத்தாத அவருடைய படைப்புகளின் போதாமையைக் கண்டு கழிவிரக்கம் தான் பிறக்கிறது. கனவிலாவது வந்து நீங்கள் அவருக்கு கிளாஸ் எடுங்கள் ப்ளிஸ்! இன்னொரு ரோஜா, பம்பாய், உயிரே சாத்தியங்களுண்டு.

கஷ்மீர் பற்றி ’கற்றதும் பெற்றது’மில் எழுதியது நினைவுக்கு வருகிறது. cost benefit analysis படிப் பார்த்தால் இவ்வளவு கெளரவத்துக்கு செலவு செய்வது வீண் என்கிற ரீதியில் எழுதியிருந்தீர்கள். கஷ்மீருக்கு பொருந்துமோ இல்லையோ, அது சரியாக வசீம் அகமது கஷ்மிரீக்கு பொருந்தி இருக்கிறது. அது தான் உங்கள் நண்பர் கமலஹாசன் எடுத்த ”விஸ்வரூபம்”

உங்கள் ஆத்ம நண்பர் முட்டி, மோதி, நாராசமாக வசவுகள் வாங்கி, நீதிமன்றம் ஏறி, சமரசமாகி ஒரு வழியாக படத்தினை வெளியிட்டு, எல்டாம்ஸ் சாலை வீட்டினைக் காப்பாற்றிக் கொண்டார். தமிழில் போகிறப் போக்கைப் பார்த்தால் படமே எடுக்க முடியாதுப் போல. மதங்களைப் பற்றிப் பேசினால் பிரச்சனை. சாதியைப் பேசினால் பிரச்சனை. சிகரெட், மது காட்டினால் பிரச்சனை. விலங்குகளைப் பயன்படுத்தினால் பிரச்சனை. இப்போது புதிதாக பெண்களை அடிப்பதுப் போல காட்டினால் ஏ சான்றிதழ் தருவதாக உத்தேசமாம். இந்திய சென்சார் போர்டின் உறுப்பினர்கள் வாழும் உலகம் இந்தியா இல்லையென்று நினைக்கிறேன்.

இங்கே இது. அமெரிக்காவில் செனட்டர்கள் தொல்லை. அதனாலேயே ஆஸ்காரில் Zero Dark Thirtyக்கு பரிசு தராமல் ஒப்பேத்திவிட்டார்கள். நான்கைந்து செனட்டர்கள் அமெரிக்க ராணுவம் சித்ரவதையே செய்யவில்லை என்று சர்ச்சில் சூடமேற்றி அடித்து சத்தியம் செய்கிறார்கள். அபூ கரீப் எல்லாம் கிராபிக் நாவல்கள் போலிருக்கிறது.

நல்ல வேளையாக நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள் இல்லையென்றால் பவர் ஸ்டாரின் அடுத்தப் படத்துக்கு பஞ்ச் டயலாக் எழுதக் கூப்பிடுவார்கள். தமிழ் சினிமா ஒரு பூட்ட கேஸ் என்று நீங்களும், அசோகமித்திரனும் சொல்லும்போது புரியவில்லை. இப்போது தெரிகிறது. தமிழ் சினிமா என்கிற ஜந்து கிட்டத்திட்ட நாற்பது, ஐம்பது வருடங்களாகவே மம்மியை பாதுகாப்பதுப் போல பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பண்டம். இருந்தாலும் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மாதிரி சில சமயங்களில் அது எழுந்து நடக்கிறது.

ஸ்பெஷல் 26 என்றொரு இந்திப் படம். சிபிஜ கொள்ளையடிக்கும் படம். இந்த மாதிரி அரசுத் துறைகள் பற்றி நீங்கள் ரொம்ப காலத்துக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள். ”அனிதாவின் காதல்களில்” அப்போதைய வருமானவரித் துறை கட்டமைப்புப் பற்றி எழுதியிருப்பீர்கள். வணிக முதலாளித்துவத்தினை எதிர்த்து அல்பாயுசில் உயிர்விட்ட சே குவாரா (குபாரா!!) படம் போட்ட டீ சர்ட் தான் அதிக விற்பனையாகிறது. சே ஒரு ப்ராண்டாய் மாறி ரொம்ப காலமாயிற்று. ஆனாலும், புரட்சி வரும் என்று வள்ளூவர் கோட்டத்தில் மைக் பிடித்து லவுட் ஸ்பீக்கரில் ஆர்ப்பரிக்கிறார்கள். மைக், ஷாமியானா, லவுட் ஸ்பீக்கர்கள் வாடகை விடுபவர்களை வாழ்விக்கவாவது வாராவாரம்  புரட்சி நடந்தே தீர வேண்டும்.

96 பக்கங்களில் இலக்கியம் சமைத்ததெல்லாம் பேப்பருக்கு பஞ்சமிருந்த உங்கள் காலம். நண்பர் நடத்தும் புத்தக்கடையில் 55 சிற்றிதழ்கள் வருகிறது. இதையெல்லாம் யார் படிக்கிறார்கள், யார் எழுதுகிறார்கள் என்று யோசித்தால் வியப்பாகவும், கவலையாகவும் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் உயிரோடிருந்து வீட்டிலிருந்தால், மயிலாப்பூரின் போஸ்ட் மேன் நிலையை நினைத்தால் பகீரென்கிறது. பாவம் அந்த மனிதர்! ஆனாலும் இதிலும் ஒரு லாபமிருக்கிறது. இந்தியாவெங்கும் அஞ்சல் அலுவலகங்களைத் தொடர்ச்சியாக மூடிவருகிறார்கள். தமிழ்நாட்டில் சிற்றிதழ்கள் அதை மூடாமல் வைத்திருக்கிறார்கள். இதுவல்லவோ உண்மையான புரட்சி Mr.ரங்கராஜன்!

தினந்தந்தி ஞாயிறு மலரில் கவிதைப் போட ஆரம்பித்ததிலிருந்து தமிழ்நாட்டில் உயிர்வாழக் கூடிய இடங்களிலெல்லாம் கவிஞர்கள் இருக்கிறார்கள். இப்போது அறிவுஜீவிகள்; சமூகப் போராளிகள்; இலக்கியவாதிகள். இலக்கியப் பதிப்பகங்கள் இப்போதெல்லாம் கிலோ கணக்கில் புத்தகம் போடுகிறார்கள். சமீபத்தில் அப்படிப் பார்த்தது “கோபிகிருஷ்ணனின் தொகுப்பு”. கிட்டத்திட்ட 2 - 2.5 கிலோ இருக்கலாம். எடுத்து, மடக்கி, விரித்து தொடர்ச்சியாக செய்தால் ஆர்ம்ஸ் வளருவதற்காக சாத்தியங்கள் உண்டு. அறிவு வளருமா என்று தெரியாது. தமிழிலக்கியம் உடலையும் வளர்க்கும் போல.

இந்த படிநிலை பிரமாதமாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பநிலையில் தமிழும், கொஞ்சமாய் ஆங்கிலமும், உலகமும், உள்ளூர் அரசியலும் தெரிந்திருந்தால்

ரிப்போர்ட்டர்
பத்தி எழுதுபவர் (Columnist)
சமூகப் போராளி (பேஸ்புக், டிவிட்டர், சிற்றிதழ்கள், நாளிதழ்கள் இதிலடங்கும்)
அறிவுஜீவி (சமூகப் போராளி + குறைவாக எழுத வேண்டும்)
இலக்கியவாதி
இலக்கிய பதிப்பகம்
சினிமா வசனகர்த்தா / பேட்டா / டிஸ்கஷன் ஆள்

அத்தோடு வாழ்க்கை முடிந்தது.

ஹிந்துவின் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் நீங்கள் சமூகவியல் படித்தீர்கள். உங்களுக்கு ஹிந்து. எனக்கு டைம்ஸ் ஆப் இந்தியா. டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பின்னால் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன். கூகிள் contextual advertising எல்லாம் கண்டுபிடித்து ஆட் வேர்ட்ஸ் போட ஆறு வருடங்களானது. மூலம், பெளத்திரம், துரித ஸ்கலிதம், சொப்ன ஸ்கலிதம் போன்ற மனிதகுலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்த மருத்துவர்கள் தங்களுடைய விளம்பரங்களை ஒட்டுமிடம் ட்ரான்ஸ்பார்மர், மூத்திர சந்துகள், இருட்டு இடங்கள். இதை விட பிரமாதமான contextual advertising-ஐ எவரால் செய்ய முடியும். நாமிதை 50 வருடங்களாக செய்துவருகிறோம். தமிழன் தீர்க்கதரிசி. இதன் சமூக, உளவியல், டிஸ்ட்ரிப்யுஷன் காரணங்களை ஆராய்ந்து யாரும் முனைவர் பட்டம் வாங்கவில்லை. நாம் இதை தீவிரமாக விவாதிப்போம்.

நீதிமன்றங்கள் மக்களின் மனசாட்சியையொட்டி தீர்ப்புகள் எழுதுகின்றன என்று எழுதும் நீதிபதிகள் சொல்கிறார்கள். மக்களுடைய மனசாட்சி டிவி ரிமோட் மாதிரி. மாறிக் கொண்டேயிருக்கும். அதற்காக நீதியும் மாற வேண்டுமா என்று கேட்டால் மெளனம் காக்கிறார்கள். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற ரீதியில் நீதி பரிபாலனம் நடக்குமெனில் ஜனநாயகமெதற்கு. இதற்கு நீதித்துறையை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் உருவான காலத்திலிருந்து இவ்வளவு நல்லவர்களை, உத்தமர்களை, அறநெறியாளர்களைக் கொண்டிருக்குமா என்று தெரியாது. ஆனால், தமிழில் நான் படிக்கும் பேஸ்புக் துணுக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன. நான் இப்போது காமெடி சேனல்கள் பார்ப்பதில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியாவை நான் விரும்பி வாங்குகிறேன். படிக்க அல்ல. வருட சந்தா ரூ.299. மாதத்துக்கு நான்கைந்து கிலோ தேறுகிறது. பழைய பேப்பர்காரர்கள் சென்னையில் சமத்துவத்தினைக் கொண்டு வந்து விட்டார்கள். தமிழ் பேப்பர், ஆங்கில பேப்பருக்கு முன்னாளில் வித்தியாசமிருந்தது. இப்போது கிடையாது. தமிழக அரசு சமப்படுத்த முடியாததை சாதித்து இருக்கிறார்கள். அவர்களை யாரும் பாராட்டவேயில்லை. கிலோ ரூ.10. மாதத்துக்கு ரூ.40-50, வருடத்துக்கு ரூ.500-600. போட்ட காசுக்கு இரண்டு மடங்கு கொடுக்கும் டைம்ஸ் ஏன் இன்னமும் சிட் பண்ட் ஆரம்பிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சரி அதை விடுங்கள். அறிவியலும், தொழில்நுட்பமும் பேசுவோம்.

”தலைமைசெயலகத்தில்” எழுதியது தான். நியுரான்களிலிருந்து வரும் சிக்னல்களில் தான் மூளை இயங்குகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் உலகமுழுவதும், சென்சார்கள் (sensors) இதை செய்யும். இந்தியாவில் சென்சார்கள் போடப்பட்ட சாலைகள் வந்தாலும் அங்கேயும் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் நிற்பார். ஏனென்று கேட்க மாட்டீர்களென்று தெரியும். ஆடோமெடிக் டீ/காபி மெஷினுக்கே ஆள் வைக்கும் நாடிது.

உலகின் மூளையாக யார் இருப்பது என்பதில் தான் சிக்கல். ஜீனோவுக்கு தெரிந்தது கூட இன்னமும் உலகிற்கு தெரியாது. ஆனாலும், இந்தியர்கள் பிக் டேட்டா, க்ளவுட் கம்ப்யுடிங், அனலிடிக்ஸ் என்று அடுத்த அவுட்சோர்சிங்கிற்கு ரெடியாகிவிட்டார்கள். இண்டியானாபோலிஸில் ட்ரக்கினை ஒதுக்கி “மேட்டர்” செய்தால் நம்மாட்கள் அதை ஒரு காப்பி எடுத்து யூபோர்ன் டாட்.காமில் போட்டுவிட்டு, நல்லபிள்ளையாக “அவன் என்னமோ பண்றான்” என்று ரிப்போர்ட் எழுதுவார்கள்.

போன வார எட்ஜ்.ஆர்க் தளத்தில் ஒரு சுவாரசியம். லெரா பொரொடிட்ஸ்கி (Lera Boroditsky) என்றொரு ஸ்டான்பர்டு துணை பேராசிரியரின் நேர்காணல். அம்மையார் உளவியல், நியுரோசயின்ஸ் & ஸிம்பாலிக் ஸிஸ்டம்ஸில் கில்லி. மொழிகளும், அதன் இலக்கணங்களும் எப்படி மனிதனை கட்டமைக்கிறது என்பது தான் சாரம்.

உலகில் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழியின் இலக்கணத்திலேயே அதன் மனித இயல்புகள் உருவாகுகின்றன என்கிறார் பேராசிரியர். உதா. துருக்கிய மொழியில் வினையை எழுதுதலே ஒரு சாகசம். வினையோடு நேரடியாக தொடர்பு இருந்தால் வேறு மாதிரியாகவும், வினையை வெளியிலிருந்து தொடர்புப் படுத்தினால் வேறாகவும் சொல்ல வேண்டுமாம். இந்தோனேஷியனில் இறந்த/எதிர் காலங்கள் கிடையாதாம். ரஷ்யனில் வினை வெறுமனே மாறாது. ஆடவர் / பெண்டீர் / ஆட்டுக்குட்டி என்று அதனடிப்படையில் மாறும். ஒரு மொழியின் இலக்கணமே அந்த மொழி சார்ந்த குழுவின் இயல்புகளையும், உலகத்தினைப் பற்றியப் பார்வையையும் பிரதிபலித்தால் உலகம் எப்படி அமைதியாக இருக்க முடியும்.

 “இராமன் இராவணைக் கொன்றான்” இந்த வாக்கியத்தை எப்படி மாற்றிப் போட்டாலும் பொருள் ஒன்று தான். இந்த மாதிரியான mathematically rigorous இலக்கணம் நம்முடையது. நீங்களும் இதைக் கற்றுக் கொடுக்க தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தீர்கள். என்ன பிரயோசனம்! எழுவாய், பயனிலை கேட்டால் இங்கே தெரிவது அனுஷ்காவின் மோவாய். விட்டுத் தள்ளுங்கள் ரங்கராஜன், சொர்கத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகை என்றால், இந்தி சினிமாவின் எல்லா ஹீரோயின்களும் நரகத்தில் தான்.

செமன்டிக்ஸையும், ஸிம்பாலிக் ஸிஸ்டத்தையும் உங்களை தவிர வேறு யாரோடு பேசுவது ? மூளைவியலும், பொரூளாதாரமும் சேர்ந்து இங்கே behavioral finance என்றொரு துறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மூளையின் எந்த லோபில் எது படிகிறது என்று தெரிந்துக் கொண்டு சந்தைப்படுத்தும் neuromarketing துறையொன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் இங்கேப் பேசினால் யுரேகா போர்ப்ஸ் சேல்ஸ்மென் மாதிரி பார்க்கிறார்கள்.

அறி-புனை கதைகள், அறிவியல் ரீதியான சிந்தனை, தொடர்ச்சியான தேடல், அதன் ஆழத்தையும் அகலத்தையும் விளாவும் வாக்கியங்கள் என்று நீங்கள் தமிழுக்கு தந்தது ஏராளம். துரோணர் தான். உங்களைச் சுற்றி என்னையும் சேர்த்து ஏகப்பட்ட ஏகலைவர்கள். சன் டிவியில் புதியதாய் மகாபாரதம் போடுகிறார்கள். துரோணராக வருகிறவரை ஒரு முறை வட பழனி பஸ் ஸ்டாண்டில் கோலி சோடாவோடு பார்த்திருக்கிறேன். உங்கள் உயரத்துக்கு தாடி வைத்து துரோணராக யோசித்துப் பார்த்தால் சகிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் பீஷ்மாராகி விடுங்கள். என்ன ஒரே பிரச்சனை மெக்சிகன் சலவைக்காரி ஜோக் சொல்ல முடியாது, அதை ஆப் லைனில் பேசிக் கொள்ளலாம்.

செத்தும் கொடுத்தான் சீதகாதி மாதிரி நீங்கள் போயிருந்தாலும் உங்களை வைத்து நடக்கும் வியாபாரங்கள் கன ஜோராக நடக்கின்றன. விகடன் சிறப்பு மலர் போட்டு கொண்டாடுகிறேன் என்கிறப் பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். நீங்கள் வாழ்ந்தப் போது உங்களைத் தூற்றிய அத்தனை இலக்கியவாதிகளும் மறக்காமல் பதிவு எழுதுகிறார்கள். விழாக்களுக்கு வருகிறார்கள். புத்தகம் போடுகிறார்கள். சே குவாராவுக்கு ஆன அதே ப்ராண்ட் வெறியாட்டம் இனி வரும் நாட்களில் உமக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. சீக்கிரமாய் வீட்டோடுப் பேசி பழையப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்ள சொல்லுங்கள். சொல்ல முடியாது இன்னும் ஐந்து வருடத்தில் காபி டேபிள் புக் வரலாம். :)

நரகத்தில் இனி நாங்கள் அனுப்பப்போகும் ஜனாதிபதிகள், கவர்னர்கள், கொள்ளைக்காரர்களோடு பேசுங்கள். பல சுவாரசியங்கள் கிடைக்கும். இப்போதைக்கு இந்த ட்வீட்டோடு விடைப் பெறுகிறேன். அடுத்த வருடம் லெமன் ஹனி டீ யோடு மீண்டும் பேசலாம்.

Don't worry. When U have NO content with which 2 express the emotion U are feeling. It's not writers block. It's just DOWNLOADING time. - via @fatbellybella (aka ErykahBadoula)