Jan 31, 2005

நரசிம்ம அவதாரம் உண்மையாகுமா?

நண்பன் அனுப்பிய மின்னஞ்சலின் உரலைப் பார்த்து, படித்துமுடிந்த பின் ஒரு பக்கம் பயமாகவும் இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருந்தது. கைமரா (Chimera) என்று சொல்லக்கூடிய கூட்டு உயிரினங்களைப் பற்றிய பதிவு அது. கைமரா என்பதற்கு சிங்கத்தலையும், ஆட்டின் உடம்பும், பாம்பின் வாலும் கொண்ட நெருப்பைக் கக்கக் கூடிய ஒரு பெண் ராட்சத மிருகம் என்று கிரேக்க மொழியில் பொருள் (கைமரா).

அறிவியல் ரீதியிலான விளக்கம்- கைமரா என்பது இரண்டு அல்லது மூன்று உயிரினங்கள் அடங்கிய ஒரே உயிரினம். நம்முடைய நரசிம்ம அவதாரம் போல (The National Academy of Sciences) கேட்பதற்கு sci-fi போலத் தோன்றினாலும், உலகில் உள்ள சில ரகசிய ஆராய்ச்சி அறைகளில் அவற்றை ஆய்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது யார் காதிலும் பூ சுத்த அல்ல. இதை வேறு யாராவது சொல்லியிருந்தால், அவர்களை நன்றாக கலாய்த்து அனுப்பியிருப்பேன். ஆனால், இந்த தகவல்கள் நேஷ்னல் ஜியோகிராபிக் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அது அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.சில விசயங்களை இந்த தளத்தில் படித்து வியந்தும் பயந்தும் போனேன் என்றால், அது மிகைப்படுத்தப் பட்ட வார்த்தையல்ல.

என் வியப்புகள் முழுதும் அறிவியலின் வீச்சைப் பற்றியே. எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால், என்னால் வியக்காமல் இருக்க இயலவில்லை. என் பயங்கள் அனைத்தும் இவற்றின் சமூக பங்களிப்பைப் பற்றியே.

சில தகவல்கள்:
2003-ல், ஷாங்காய் இரண்டாவது மருத்துவப் பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த மாணவர்கள், முயலின் முட்டையையும், மனித செல்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிவிட்டு அழித்துவிட்டார்கள்.

சென்ற ஆண்டு, மின்னசோட்டாவின் மாயோ கிளினிக்கில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மனித ரத்தம் ஒடக்கூடிய பன்றிகளை உருவாக்கிக் காட்டினார்கள்.

இந்த வருட இறுதியில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக்த்தினர், மனித மூளையின் கூறுகளை உள்ளடக்கிய ஒரு எலியை உருவாக்க உள்ளனர். இந்த எலி மனித மூளையின் 100-ல் ஒரு பங்கை ஒத்திருக்கும் எனக் கூறுகிறார்கள் ( இதுக்கு எதுக்கு அவ்ளோ தூரம் போகணும், எங்க வீட்டு எலிக்கு அத விட மூளை அதிகம். எலி பிடிக்க வைத்திருக்கும் எலிப்போனில் உள்ள வடையை சாப்பிட்டு, "ஆயா கடைல வாங்காதே....அப்துல் காதர் கடையில வாங்கி வை. அங்க தான் நல்ல எண்ணெயில வடை சுடுறாங்க" என நோட் போட்டு போகும் என கலாய்க்கிறான் நண்பன் )
ஆராய்ச்சியாளர்கள் இதனை ஒரு ஆய்வு மாடலாகப் பார்க்கிறார்கள். அவர்களின் வாதம், இதன் மூலம், நம்மால், மனித அங்கங்களுக்கான ஒரு 'ஸ்பேர் பார்ட்ஸ்' களை உருவாக்குதல், அவைகளின் (அது?!! அவன்?!! அவள்?!!) மேல் மருந்து மற்றும், நோய்முறிவுகளை பரிசோதித்துப் பார்த்தல், புதிய மருந்துகளை கண்டறிதல், ஒரு வாழும் உயிரினத்தில், செல்களின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்தல் என பல்வேறு வகையில் நீளுகிறது.

வியக்காமல் இருக்க முடியவில்லை, அதே சமயத்தில் இதன் பல்வேறு பின் விளைவுகளைப் பற்றி நினைத்து பயப்படாமலும் இருக்க முடியவில்லை. இதுப்போன்ற ஹைபிரிட் உயிரினங்களைப் பற்றிய விவாதங்கள் தற்போது உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன.

இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நிறைய விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளார்கள். மனித இனத்தின் வாழ்வும், இன்னமும் நம்மால் வேட்டையாடப்படாத விலங்குகளின் வாழ்வும் இந்த நூற்றாண்டில் நிச்சயிக்கப்பட்டுவிடும் எனத் தோன்றுகிறது.

இதை எழுதுவதை விட படிக்க ஆவலாகவும், பயமாகவும் இருக்கிறது.
படிக்க: நேஷ்னல் ஜியோகிராபிக் தளத்தின் உரல்

பச்சத்தமிழன். சிகப்பு தமிழன்.

அன்புள்ள டாக்டர் ராமதாஸ் ஐயாக்கும், தொல். திருமாவளவன் அவங்களுக்கும்,

கும்புடறேன் சாமியோவ். ஒரே கஷ்டமா இருக்குங்க நம்ம அம்மா தமிழ்படங்களுக்கு தமிழைத்தவிர இந்தி, இங்கிலிஷு, மராத்தி, துளு பேருல எல்லாம் பேரு வச்சிக்க சொல்லிட்டாங்க. பச்சத்தமிழனோட செவுப்பு ரத்தம் கொதிக்குது. மரத்தமிழனோட மண்ட காயுது. ஒரே கவுரத குறைச்சலா வேற இருக்கு. தமிழ்நாட்டுல தமிழ்படங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க முடியலைன்னா, யூகோஸ்லாவியாவிலய தமிழ் பேரு வைப்பான். உங்க அறிவிப்பு வந்தவுடனே மனசுல ஒரே சந்தோசமா இருந்திச்சு, இனிமே புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ன்னு என்னை உஸ்கூல் படிக்கும்போது சித்ரவதை பண்ண தமிழாசிரியருக்கு சமமா நமக்கும் தமிழ் தெரிஞ்சுடும் அப்படின்னு ஒரே நக்கலு எனக்கு.

நீங்க கமலோட மும்பை எக்ஸ்பிரஸை தமிழ்ல மாத்த சொல்லி மிரட்டினப்போ எனக்கு தென்னக ரயில்வேவை நினைச்சு ஒரே பகிர்ன்னுச்சு...ஏன்னா இங்க சென்னை சென்டிரல, எழும்பூர்ல இருந்து ஒடுற எல்லா ரயிலுக்கும் ஏதாவது ஒரு பேரு இருக்கும். அந்தப் பேரும் ஏதோ எக்ஸ்பிரஸு, மெயிலு, பாஸஞ்சர்ன்னு தான் முடியும். அவ்ளோ ரயிலுக்கும் பேரு வைக்கினோம்னா எவ்வளோ எம்.எல்.ஏ, எம்.பி தேவைப்படுவாங்கன்னு நினைச்சாலே தலை சுத்துது. வெளியூர்ல இருக்கற புண்ணியவான்களுக்கு, இன்னாத்துக்கு எம்.எல்.ஏ, எம்.பி ன்னு கேக்காதிங்க, ஏன்னா எங்க ஊருல எல்லாத்துக்கும் பேரு வைக்கிற உரிமை இவங்களுக்குதான் இருக்கு.

ஒரு சின்ன சந்தேகம் அய்யா. ரஜினி, கமல், விஜயகாந்த் மட்டும் தான் தமிழ்ல பேரு வைக்கணுமா இல்ல எல்லாருமா ? ஏன் கேக்கிறன்னா 7ஜி ரெயின்போ காலனி, ட்ரீம்ஸ், M. குமரன் s/o மகாலட்சுமி இதல்லாம் கூட தமிழ்படங்கள் தான், இதவுட்டிங்களேன்னு ஒரு சந்தேகம். ஒரு வேளை நீங்க சொல்றாப்போல, பெரிய நடிகர்கள் தான் தமிழ் வளர்க்கணும், சின்ன நடிகர்கள் எல்லாம் இங்கிலிஷ் வளர்க்கணும் அப்படின்னு ஏதாவது உங்க கூட்டத்துல பேசி வச்சிருந்திங்கன்னா, மன்னிச்சிருங்க, கிறுக்கு பய புள்ள, தப்பா கேட்டுப்புட்டேன்.

எனக்கு இருக்கற ஒரு டவுட்டை உங்க முன்னாடி வக்கிறேன். தமிழ்நாட்டுல ஒரு வருஷத்துல 80 படங்கள் தான் எடுக்கறாங்க. அதுல நல்லா ஒடுற படங்கள் 20% கூட கிடையாது. ஆக, மக்களுக்கு படங்கள் மூலமா போய் சேர இங்கிலிஷு கொஞ்சம் தான், அதுக்கூட நல்லா புழக்கத்துல இருக்கற, தெரிஞ்ச இங்கிலிஷு வார்த்தையைத் (நியூ, ரெட்) தான் வைப்பாங்க இல்லன்னா, நம்மாளு ஏதோ இது பிரெஞ்ச் படமுன்னு ஷகிலா படம் பாக்க போயிடுவான். கல்லா ரொம்பாது.

படத்தை வுடுங்க. படம் தியேட்டருலே வரத்துக்குள்ளேயே நம்மாளு VCD-ல பார்த்துருவான். ஆனா, உங்க தமிழ்ப்பற்றை கொஞ்சம் தொலைக்காட்சி பக்கம் திருப்புங்க. நிறைய பேரோட சண்டைப் போடலாம்.மிரட்டலாம். அறிக்கை விடலாம்.உங்க கூட்டணி தலைவரு (அதான் தலிவரு முன்னாடி சொல்லிட்டாருல்ல, சன் டிவிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை....ஆனா, காலை,மதியம், மாலை ன்னு 3 அறிக்கை குடுத்தா அது மட்டும் சன் டிவில படிப்பாங்க?!!) தொலைக்காட்சில வர்ற ப்ரொக்ராம்மு தலைப்பை கொஞ்சம் பாருங்க (காமெடி டைம், சென்னை டைம்ஸ், மைடியர் பூதம், மங்கையர் சாய்ஸ்) அதுவும் SCVன்னு ஒரு அலைவரிசையில கொஞ்சமா தமிழ் பேசி, அத ஒரு உலகத்தொலைக்காட்சி தரத்துக்கு உயர்த்த முயற்சி செய்யறாங்கோ. அதுல வர்ற ப்ரொக்ராம்மு பேரு கேட்டா முதல்ல ஏதோ இங்கிலிஷ் சானலுன்னு தான் நினைச்சேன். அப்புறம் அதுல வர்ற ஒரு காம்பியர நம்ம பெரம்பூர் பிரிட்டிஷ் ஒயின்ஸ் பக்கமா பார்த்த பொறவுதான் ஆஹா இது தமிழ் சேனலுதான்னு முடிவு கட்டினேன். (லவ்லி சாய்ஸ், டிராபிக் ஜாம், லேடீஸ் சாய்ஸ், மசாலா மெயில், டியர் SCV, டிரிங் டிரிங், ஹி! குட்டிஸ், போஸ்ட் பாக்ஸ், ஹலோ ஹலோ) நம்ம ஊருல இருக்கற 61/2 கோடி பேருல குறைஞ்ச பட்சம் ஒரு 5 கோடி பேராவது டிவி பொட்டி முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு சீரியலுக்கு அழுவறாங்க. தமிழ்நாடே ஒரே அழுக்காச்சியா போச்சி!! இன்னா ஒரே பிரச்சன தமிழ்நாட்டு தாய்க்குலம் கட்டய தூக்கிட்டு ஓடியாந்துரும்.

அதுவும் வேணாம்னா, இருக்கவே இருக்கு நம்ம ஊருல இருக்கற சின்ன கடைகள் வச்சிருக்கறவங்க. அவங்களுக்கெல்லாம் தமிழ்ப்பற்றை இல்லீங்கய்யா. இன்னா தெனாட்டுல இருந்தா பொண்டாட்டி நகைய அடமானம் வச்சி, ஊருல இருக்கற நிலத்த வித்து சென்னையில வந்து கட போடுவாங்க.(நிர்மலா பேன்சி ஸ்டோர்ஸ், திருமுருகன் ஹார்டுவேர்ஸ்)அவன எல்லாம் தமிழ்நாட்டை விட்டே விரட்டனம்மய்யா. என்னா தில்லு இருந்தா ஒழுங்கா வேலை செஞ்சி, குடும்பத்த காபாத்துவானுங்க. அதெல்லாம் நடந்துட்டா நம்ம எதுக்கு? நம்ம படைய திரட்டுங்கய்யா. தமிழ் பற்று இல்லாத இந்த மாதிரி கடைகள அடிச்சி ஒடச்சி, தமிழன் பெருமைய காப்போம்மய்யா. எலேய், அவன் பட்டினி கிடந்து சாவான்னு எவன்லே கூட்டத்துல குரல் உடறது. அப்படி சாவரத்து முன்னாடி அவனுக்கு பிரியாணியப் போட்டு அவனை வாழவைப்போம்டா மக்கா. பிரியாணி போடறது, கஞ்சி ஊத்தறது இதுல எல்லாம் நாங்க எஃஸ்பர்ட் அப்பு.

இப்படி நம்ம கூட்டணியே டாப்ல வக்க நிறைய திட்டங்கள் கையில வச்சிருக்கேன் அய்யா. போறதுக்கு முன்னாடி, வேதம் புதுதில் சத்யராஜைப் பார்த்து ஒரு அயிரு புள்ள கேக்கற மாதிரி ஒரு கேள்வி....ஊரு முழுக்க தமிழ் பரப்பணும்ன்னு சொல்ற நீங்க, ஏன் எல்லா போஸ்டருலேயும், அறிவிப்பிலேயும் "டாக்டர் ராமதாஸ் அழைக்கிறார். டாக்டர் ஐயா பேசுகிறார்" ன்னுப் போடசொல்றிங்க. ஏன்? ஏன்? ஏன்?

அன்புடன்
ஒரு வேலைக்காகத தமிழன்.

[செய்தி: தமிழ்ப்படங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் பேர் வைக்கலாம். நடிகர்களை அச்சுறுத்துவதா ? ஜெயலலிதா எச்சரிக்கை ]

Jan 30, 2005

பயாஸ்கோப்பில் பார்க்காமல் டிவிடியில் பார்த்தது ;-)

மூன்று நாட்களாக எதுவும் எழுதாமலிருந்தற்கு மிக முக்கியமான காரணம், வேலை மற்றும் தொடர்ச்சியாக சில நல்ல படங்களைப் பார்த்து முடித்தேன். இதில் எழுதுவதற்கு எவ்வளவோ விசயங்களிருப்பினும், ஒரே மூச்சில் எழுதி விடமுடியாது. அவ்வளவும் விலாவாரியாக சொல்லி சிலாகிக்க வேண்டிய படங்கள். ஒவ்வொன்றாய் எழுத முயற்சிக்கிறேன். நான் கடந்த சில நாட்களில் பார்த்த மிக முக்கியமான படங்கள்.
  1. அகிரா குரோசாவின் "ரேன்"
  2. மைக்கேல் விண்டர்பாட்டமின் "இன் திஸ் வேர்ல்டு"
  3. பிரேசிலிய படமான "பஸ் 174
  4. நளின் பாலின் "சம்சாரா"
  5. பார்பரா சொன்பர்னின் "ரிக்ரெட் டூ இன்பார்ம்"
  6. பிரடரிக்கோ பெலினியின் "லே ஸ்ட்ராட்டா" மற்றும்
  7. மீண்டுமொருமுறை "சிட்டி ஆப் காட்"
வாய்ப்புகளிருப்பின் இவையத்தனையும் மிகச்சிறந்த படங்கள். தவறவிடாதிர்கள். நாளை வேலை சற்று குறைவாக இருப்பின், போர்களின் பிண்ணணியில் எடுக்கப்பட்ட 2 மிகச்சிறந்த ஆவணப்படங்களைப் பற்றிய தகவல்களை பதிகிறேன்.

Jan 29, 2005

.................................


------------------------------------------------------------
எதுவும் எழுதறதுக்கு இல்லாம விடாம தொடர்ந்து படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். "மண்டை காலி" என்பதைத் தான் ஒரு சிம்பாலிக்காக உணர்த்தவே மேலேயுள்ள வெற்றிடம் -- நற....நற......நற....நற....நற

Jan 27, 2005

கிராமப்பொருளாதாரம் - என் கருத்துக்கள்

பத்ரியின் பதிவில் பதிந்த சற்றே நீளமான பின்னூட்டமிது. மற்றவர்களின் கருத்துக்காக இங்கே முன் வைக்கிறேன்.
-------------------------
கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதுப் பற்றி நீங்கள் பேசி வருவது நிறைவான விஷயம். நான் பதியப்போகிற விசயம் எந்தளவிற்கு உங்களின் பதிவோடு ஒத்துப்போகும் எனத்தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் சொல்வதைப் போலவே இது ஒரு விவாதத்தில் முடியக்கூடிய விசயமில்லை. அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை மிக அவசியம். அதில் ஜெயஸ்ரீ, கார்த்திக் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.

நான் சொல்லவிழைவது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதனை ஒரு பெரும் காரியமாக எடுத்துக்கொண்டு அதில் முழு முனைப்போடு இறங்கியிருக்கின்றன. இது எத்தனை பேருக்கு தெரியும். இதனால், இந்தியா மாறிவிட்டது என்று பொருள் அல்ல. நாம் மாற்றவேண்டியவை, முன்னெடுத்து செல்ல வேண்டியவை நிறைய உண்டு. அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளில்லை. இங்கே நான் பதிய விரும்புவது, தற்போது நடைமுறையில் உள்ள முயற்சிகளும் அதன் பலன்களும் மட்டுமே.

அமுல்:
அமுல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அமுலின் முக்கியமான விற்பனையாளர்கள், குஜராத் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களிலுள்ள சிறு விவசாயிகள், ஆடு, மாடு வளர்ப்பவர்கள். இன்று இந்தியாவில் ஒரு இன்றியமையாத பிராண்டாக அது மாறியுள்ளது என்பது ஒரு கூட்டுறவினால் என்பது மெச்சத்தக்கது. கூட்டுறவு அமைப்பில் சில, பல குறைபாடுகள் இருக்கலாம், அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளுண்டு. ஆனாலும், இது ஒரு முக்கியமான பாதை.

ஐஐடியின் என்-லாக்
சென்னை ஐஐடியின் என்-லாக் பற்றி அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன். என் - லாக் செய்வது ஒரு மிக முக்கியமான பணி என்பது என் எண்ணம். ஒரு பன்னூடக கியாஸ்கை (Multimedia & Browsing Kiosk) ஒவ்வொரு கிராமங்களில் உருவாக்குவதன் மூலம் ஒரு வலைப்பின்னலை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. ஒரு கியாஸ்கினால் பெரிய வேலை வாய்ப்புகள் வாராது என்பது ஒரு சாரரின் கருத்து. என்னைப் பொருத்தவரை, அது மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி. இணையம், மின்னஞ்சல், வெப்கேம் மற்றும் பிற தகவல் சாதனங்களின் மூலமாக ஒரு கிராமத்தையும் (அல்லது பல கிராமங்களையும்) , அந்த கிராமத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் ஒருங்கிணைக்க இதனால் முடியும். எல்லாவிதமான தகவல்களையும் இதன் மூலம் விநியோகிக்க முடியும். ஏறக்குறைய, 11/2 வருடங்களுக்கு முன்பே, வெப்கேமின் வழியே மருத்துவ ஆலோசனைகளையும், விவசாய சார்புள்ள விசயங்களையும் இந்த கியாஸ்கள் செய்து வருகின்றன என்பது உண்மையிலேயே நிறைய பேருக்கு வியப்பூட்டும் செய்தியாக இருக்கும்.

ஈ-சோபால் - ஐடிசி
தனியார் நிறுவனங்களின் மீது வீசப்படும் பெரும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது அவர்கள் கிராம சந்தையை(rural market) பற்றி கவலைபடுவது இல்லை (நன்றி: ஜேஸ்ரீ) என்பது தான். ஆனால், உண்மை என்னவென்றால், அரசாங்கத்திற்கு முன்னர், எல்லா வசதிகளையும் முன் எடுத்து செல்பவை தனியார் நிறுவனங்கள். உதாரணத்திற்கு, ஐடிசி யை எடுத்துக்கொள்வோம். ஐடிசியின் ஈ-சோபால் என்ற திட்டத்தில், மகாராஷ்டிரா, உத்தரான்ஞல் போன்ற மாநிலங்களில் மட்டும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவும் ஏறத்தாழ, என் - லாக் செய்வதுப் போல, ஒரு கியாஸ்க்கை நிறுவி, அதன் முலம் விவரங்களை தருகின்றது. மிக முக்கியமாக இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்களின் distribution network. ஐடிசியின் விவசாயப் பொருட்களுக்கான சந்தையின் நீட்சிதான் இது. ஈ-சோபாலில் உறுப்பினராக உள்ள விவசாயியின் வீட்டிற்கு உரமுட்டைகளும், விதைகளும், நிலம் சார்ந்த அறிவியலாளரின் குறிப்புகளும், ஆலோசனைகளும் வந்து இறங்குகின்றன. இதற்குமுன் ஒரு விவசாயி, தன் விதைகளையும், பயிர் சார்ந்த பிறப் பொருட்களையும் வாங்க டவுனுக்கோ, பிற சந்தைக்கோ போக வேண்டிய நிலைமை இருந்தது. இது ஒரு மனரீதியான மாற்றமாய் பார்க்கலாம். ஒரு விற்பனையாளன் என்ற நிலை மாறி, இன்றைக்கு, ஐடிசி, அவர்களை தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்காளியாய் (Channel Partner) பார்ப்பது ஒரு ஆரோக்கியமான மாற்றம். இது என்னளவில் ஒரு மிக முக்கியமான மாறுதல், இதன் மூலம், மிக அத்தியாவசியமான மாறுதல்கள் ஏற்படலாம் என்பது என் எண்ணம்.

பிராஜக்ட் ஷக்தி - HLL
இதைப் போன்றதொரு காரியத்தை, முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான பாரி விவசாயப்பொருட்களின் பிரிவும் செய்கிறது (Parry Agro Division). இதைத்தவிர மும்பாயினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெண்களுக்கான் தன்னார்வ நிறுவத்தோடு (பெயர் மறந்துவிட்டது....சில மாதங்களுக்கு முன் பிபிசி - இந்தியா ஷோவில் பார்த்த்து) இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையார் பொருட்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் (HLL) கைக்கோர்த்துக் கொண்டுள்ளது. அதன் பணி, ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது கிராம குழுமத்திலும் ( 10 -15 கிராமங்கள் அடங்கிய ஒரு குழு) உள்ள பெண்களை தயார்படுத்தி ஒரு குழு அமைத்து (Self Help Group) அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது. இந்த அமைப்புக்கு "பிராஜக்ட் ஷக்தி" என்று பெயர். உடனே நாம் அவர்கள் அவர்களின் தயாரிப்புகளைத் தான் விற்பார்கள், இதில் எங்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்று, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட வேண்டியதில்லை. இதன் மூலம் வெளியுலகத் தொடர்புகள் பெருகும். ஒரு கிராமத்தின் உற்பத்தியென்ன, அதை வைத்துக்கொண்டு, கையில் இருக்கக்கூடிய குழுவின் மூலம் எப்படி புதுப் பொருட்களை தயாரிக்கலாம் என்ற சிந்தனைகள் வளர இது உதவும்.

கவின் கேர்
சென்னையைச் சார்ந்த கவின்கேர் நிறுவனம் HLLக்குப் போட்டியாக இன்று சந்தையில் உள்ளது.கவின்கேரின் (Cavin Care) இன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் மிகத்தீவிரமாய் கிராம சந்தையை குறிவைத்து வியாபாரத்தை அமைத்து.

C.K. பிரஹாலாத் போன்ற மேலாண்மை குருக்கள் கூட மிக முக்கியமான எதிர்காலப் பிரச்சனையாக கிராமப் பொருளாதார முன்னேற்றத்தைத் தான் முன் வைக்கின்றார்கள். இதை எப்படி தீர்ப்பது அல்லது வழிகள் கண்டறிவது என்பதில் தான் எதிர்கால இந்திய சந்தை அடங்கியிருக்கிறது.

இவற்றைப் போல் ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் காரியங்கள் நடக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து இதன் மூலம் ஒரு வணிக சாத்தியமான நிறுவதலை (Business Model) கண்டெடுக்க முடிந்தால், அதன்பின் விசயங்கள் தானாய் நடக்க ஆரம்பித்துவிடும் என்பது என் கருத்து.

இதில் நம்மால் கட்டுப்படுத்த இயலாத விசயமொன்று உண்டென்றால், அது இயற்கை மட்டுமே.

இதற்கு உறுதுணையாயிருந்த தளங்கள்:

N-Logue - http://www.n-logue.co.in/
Shakthi - http://www.blonnet.com/catalyst/2003/05/29/stories/2003052900020100.htm
E-choupal - http://www.echoupal.com/default.asp
EID Parry - http://www.eidparry.com/stories.asp
http://www.washingtonpost.com/ac2/wp-dyn?pagename=article&node=&contentId=A13442-2003Oct11¬Found=true
-------------------------
இந்தப் பதிவினை எழுதத் தூண்டுதலாய் இருந்த பத்ரியின் பதிவு
பத்ரியின் கிராமப் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்க என்ன செய்ய வேண்டும் - பகுதி 1 | பகுதி 2

Flash News: தலீவர் பத்ரி வால்க!!

இந்தியாவிலிருந்து பதியப்படும் வலைப்பதிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது பத்ரியின் வலைப்பதிவு தமிழின் சிறந்த வலைப்பதிவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் பத்ரி.

இதற்காக, வலைப்பதிவு நண்பர்கள் போஸ்டர் அடித்து, கடா வெட்டி, சாலைகளை மறித்து, கட்-அவுட் வைத்துக் கொண்டாடவேண்டும் என்ற வேண்டுகோள் தலைவர் சார்பில் விடுக்கப்படவில்லை( யோவ், நாங்க அப்படித்தான் சொல்லுவோம், அதுக்காக, சும்மா இருப்பிங்களா ;-) )

வாழ்த்துக்கள் பத்ரி

விருதுகளின் விவரங்கள் இங்கே

போராடினால் ட்சுனாமி வரும் - புது சித்தாந்தம்

சுனாமியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது:-

சுனாமியினால் அதிக அழிவுகள் ஏற்பட்ட இடங்கள் இந்தோனேசியாவில் உள்ள Aceh எனும் இடமும் இலங்கையில் வட பகுதிகளும் அதாவது மனிதன் அதிகம் போராடும் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

http://groups.yahoo.com/group/agathiyar/message/31604
இந்த கடிதத்தில் உள்ள வரிகளில் சில ...

"மேலும் இப்படியான மாறுதல் இவ்வுலகில் சில அழிவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் மேலும் அந்தப்படியான அழிவுகள் பல யுகங்களாக நடந்தும் இருக்கும் என்பதால் நம் வித்துகளில் அதுவே நமது Survival instinctஐ தூண்டி இது நிகழும் காலத்தில் அருகே மனிதனிடையே போர்களை தூண்டுவதாக கொள்ளலாம்.அதே சமயம் இப்படியான அழிவுகளில் இருந்து மனிதனின் தப்புவிற்கும் முயற்சி, இந்த நூற்றாண்டுகளின் கண்டுபிடிப்புகளின் பிரவாகத்திற்கும் காரணம் எனக்கொள்ளலாம்.இதனால் உலகம் அழியாது,ஆனால் மனிதன் எங்கு அதிகாமாக போராடுகிறானோ அங்கு அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதாக உணருகிறேன்,அதனால் தான் கூறுகிறேன்...போராடாதீர்கள் அல்லது போராடும் இடத்தில் வாழாதீர்கள்.போராடுவது என்றால் சண்டையிடுவது மற்றுமல்ல "survival" எனும் கருத்து அதிகம் உள்ள இடங்களும் அடங்கும் என்பதே.......அதாவது மிகப்பெரிய நகரங்களும் உலகை ஆளும் நாடுகளும் இதில் அடங்கும்."
இந்தக் கடிதத்தை எழுதிய நண்பர் ஒரு சிந்தனை சிற்பி. சங்கராச்சாரியின் கைதால் தான் ட்சுனாமி வந்தது என்பதைக் கூட மன்னிக்கலாம் எனத்தோன்றுகிறது இப்போது. என்னத்தான் சொன்னாலும் இருப்பது ஒரு சில சங்கர மடங்கள் தான், ஆனால் உலகமுழுக்க, நிறைய போராட்டங்கள். ஆனால், இந்த கடிதத்தில் அதைவிட நான் பார்ப்பது சாதுரியமாக போராட்டத்தை நசுக்கும் உத்தி. அதை உயிர்வாழ்ந்திருத்தல் என்ற போர்வையில் சாமர்த்தியமாக நெய்திருக்கும் எழுத்துக்கள். இவர் சொல்வதைப் பார்த்தால், வியட்நாமையோ, பாலஸ்தீனத்தையோ, குரோசியாவையோ ட்சுனாமி, பூகம்பம் மற்றும் இதர இயற்கை சீற்றங்கள் தாக்கி அழிவு ஏற்படுத்தி இருக்கவேண்டும் ஏன் ஏற்படவில்லை. இதில் உள்ள உட்பொருளை கவனியுங்கள். நவீன காலனி மனப்பான்மையை உயர்த்திப் பிடிக்கக்கூடிய நாடுகளைச் சொல்லாவிட்டால், எங்கே சண்டைக்கு வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் போகிற போக்கில் போனால் போகிறதென்று "மிகப் பெரிய நகரங்களும், உலகை ஆளும் நாடுகளும் இதில் அடங்கும்" என்ற ஒற்றை வரியில் எச்சரிக்கை வேறு.

இந்தக்கடிதத்தை எப்படி புரிந்துக்கொள்வது ? அடிப்படை உரிமைகளை, தன் நாட்டை, தன் நிலத்தை இழந்த மக்கள் போராடக்கூடாது. போராடுதல் தவறு. யார் எக்கேடு கெட்டால் என்ன, நீ யார் பேச்சையும் கேட்காதே. அரசாங்கத்தை பகைத்துக்கொள்ளாதே. எதுவும் உனக்கு சொந்தமில்லை. உனக்கு அளிக்கப்பட்டதை வைத்துக்கொண்டு, கேள்வியேதும் கேட்காமல் அடங்கி வாழ். வாழ்தலுக்காக எதையும் முயற்சிக்காதே. "survival" என்பது உனக்களிக்கப் பட்ட பிச்சை, அதை அதனளவில் வைத்துக்கொண்டு வாழு. எல்லாவற்றுக்கும் மேலாக, "மேல இருக்கறவன் பார்த்துப்பான்" அல்லது "எல்லாம் விதி" என நம்மை சிந்திக்கவிடாமல் அடக்கி வைக்கும் தந்திரம்.

போராடுதல் என்பது மனித இயல்பு. கோடிக்கணக்கான விந்தணுக்களில் போராடி ஜெயித்த ஒரு விந்தணு தான் நானும் நீங்களும். தெருநாய் கூட கல்லால் அடித்தால், திருப்பி குரைக்கும். போராடாமல் இருப்பது வேண்டுமானால், "பெஞ்சு கிளார்க்' உத்தியோகத்திற்கு பெருமையாக இருக்கலாம். மனிதர்களுக்கில்லை. இந்த வார்த்தைகளின் பின் உக்கிரமாய் ஒளிந்திருக்கும் கோரமான நிதர்சங்களை எண்ணுகையில் எப்பேற்பட்ட அடிமை வாழ்க்கைக்கு இது அடிகோலுகிறது என்பது தெரியும்.

இதன் பின்னுள்ள சூட்சுமான அடக்கிவைத்தலை, அடிமையாய் இருத்தலை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். இந்த வார்த்தைகளை யார் முன் வைப்பார்கள் என்பதும், யார் இப்படியான 'உலக மக்களுக்கு நன்மை பயக்கும் அருள் மொழிகளை' நமக்கு அளிப்பார்கள் என்பதை தெரிந்துக்கொண்டால் இதன் வேர் யாரென விளங்கும். இப்படி எல்லாவற்றையும் துருவி, நோக்கி, உள்ளர்த்தம் உணர்ந்து படித்தல் என்பது எத்தனை பேருக்கு சாத்தியமாகும் என தெரியவில்லை. நான் சந்திக்கும் நிறைய நண்பர்கள், ஊடகங்கள் சொல்லிகுடுத்ததை திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளைகள் போலத்தான் இருக்கின்றார்கள். இவர்களின் முன் இப்படிப்பட்ட 'கருத்துப் பெட்டகங்கள்' வைக்கப்பட்டால், அதன் நம்பகத்தன்மையும், பரவலாகும் சாத்தியங்களும் என்னை சற்றே அச்சுறுத்த செய்கின்றன.

நன்றி: அகத்தியர் யாஹு விவாதக்களம், திரு. ரமேஷ் அப்பாதுரை.

இந்த அஞ்சல் திரு. ரமேஷ் அப்பாதுரை என்பவரால் மரத்தடியில் இடப்பட்டிருந்த பதிவு. இந்த அஞ்சலில் குறிப்பிடப்பட்டிருப்பது அகத்தியர் யாஹு விவாதக்களத்தில் இடம்பெற்றிருந்த ஒருவரின் கருத்தே.

Jan 26, 2005

நிராத் சி. சொளத்திரி

தற்போது மேய்ந்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக, இந்தியாடயம்சின் புத்தகத்தளத்தில், சுபாஷ் சந்திர போஸ் [ The Lost Hero - A Biography of Subhas Bose ]பற்றிய ஒரு புத்தகத்தின் விமர்சனத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, தற்செயலாக, நிராத் சி.சொளத்திரி என்ற பெயர் எங்கோ பொறி தட்டியது. எப்போதோ, காந்தியை விமர்சித்தவர்களின் பட்டியலில் இந்த பெயரைப் பார்த்ததாக ஞாபகம். யாரேனும் விரிவாக அவரையும் அவரின் நூல்களையும் பற்றி எழுத முடியுமா?

சென்னையில் போர்த்துகிசிய திரைப்பட விழா

சென்னையில் அண்மையில் இரண்டாவது உலகத்திரைப்படவிழாவை வெற்றிக்கரமாக முடித்து வைத்த ICAF-ன் இந்த வருடத்தின் திரைப்படவிழாக்கள், 28-ம் தேதி முதல் தொடங்குகின்றது. இந்த விழா உறுப்பினர்களுக்காக மட்டுமே எனப் போட்டிருந்தது. நான் ஏற்கனவே உறுப்பினன்.ஆனாலும், உலகசினிமாவின் மேல் காதல் உள்ளவர்கள், உறுப்பினராதல் நலம் எனத் தோன்றுகிறது. 500 ருபாய் செலவில் வருடமுழுக்க உலகசினிமா பார்க்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதைச் சாக்காய் வைத்தாவது உறுப்பினராகுங்கள்.

இந்த விழாவில் திரையிடப்படும் படங்கள்

28.01.2005 - O, Defim (2002)
29.01.2005 - A Selva (The Forest) (2002)
30.01.2005 - Palabra Y Utopia ( Word * Utopia) (2000)
31.01.2005 - Zona J (1998)

அனைத்துப் படங்களும் சென்னை ஃபிலிம் சேம்பர் திரையரங்கில் மாலை 6.30 க்கு திரையிடப்படும். 30ந்தேதிப் படமான Word & Utopia மட்டும் மாலை 3.30க்கு திரையிடப்படும். இது தவிர்த்து, 30ந் தேதி மாலை, சென்னை திரைப்படவிழாவில் அதிகமான பாராட்டைப் பெற்ற "சம்சாரா" என்ற திபெத்திய படம், மக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க மீண்டும் திரையிடப்படுகிறது. தவறவிடாமல் பார்க்கவேண்டிய படமது.

சம்சாரா ஒரு புத்தத் துறவியின் வாழ்க்கைப் பற்றிய கேள்விக்களும், ஒரு பெண்ணின் வாழ்வின் மீட்டெடுப்பும் பற்றி நிறைய கேள்விகளை உள்ளடக்கிய படம்.

சென்னையிலிருந்தால், இதனை தவறவிடாதிர்கள். மேலும் விவரம் மற்றும் விசயங்கள் தேவைப்படுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் [narain[at]gmail[dot]com] அனுப்பவும்.

Jan 25, 2005

கூகிள் வீடியோ தேடல்

ஒரு மாறுதலுக்கு சின்ன தொழில்நுட்ப அறிவிப்பு.

கூகிள் என்னை எப்போதும் அசத்தும் ஒரு இணையத்தளம். புதிது புதிதாக ஏதாவது ஒரு ஆச்சரியம் எப்போதும் காத்திருக்கும். தற்போதைய புதிய விசயம், கூகிள் வீடியோ. நீங்கள் அமெரிக்காவில் இருப்பின் இந்த தளம் இனி உங்கள் தளமாகக் கடவது. பின்கோடு வழியேயும், சானல்களின் வழியேயும் நீங்கள் உங்களுக்குத் தேவையான நிகழ்ச்சி நிரலைப் பார்க்கலாம். நான் தேடியப் போது, ஒரு சீரியலின் எபிசோடு தகவல்களோடுப் பார்த்தேன்.

அமெரிக்காவில் வாழும் நீங்கள் அனைவரும், கூகிள்ப் பார்த்து கொண்டு குடும்பத்தோடு அழுமாறு உங்களை சபிக்கிறேன்.

ஆனாலும் இதை, கூகிள் சற்றே தாமதமாய்த் தான் செய்திருக்கிறது என்பது என் எண்ணம். இதேவிசயத்தே சற்றே ஒரு மாதத்துக்கு முன் பிளிங்ஸில்ப் பார்த்துவிட்டேன். ஆயிரம் சொன்னாலும், கூகிள், கூகிள் தான்.

அரசியலில் 'மட' அதிபதிகளா? -பின்னூட்டப் பதிவு

சுதர்சனின் பதிவுக்கு அளித்த பின்னூட்டமிது.

------------------------------------------------
சுதர்சன், உங்களின் கருத்துக்கு பின்னூட்டம் இட்டபின், பெரியார் பதிப்பகத்தில் வாங்கிய சங்கராச்சாரி யார்? என்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். ஏற்கனவேப் படித்திருந்தாலும், அதில் உள்ள சில விஷயங்கள், என் கேள்விகளை அதிகமாக்குகின்றன. என் வலைப்பூவில் ஒரு பதிவாய் இதனை போடுகிறேன்.

ஆயினும், 'An Encyclopaedian survey of Hinduism" என்ற நூலில் வரும் சிலக் குறிப்புகள், ஆதி சங்கரர் மற்றும் சங்கர மடத்தின் நிலைமையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. இந்தக் குறிப்புகளும், அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்தவையே.அதிலிருந்து,

"Sankara was Extremely Crossed conscious a victim of his times, was unable to rise above many of the superstitious beliefs of his age"

"Sankara had no great liberality, besides he used to back great pride in his Brahminism" - சுவாமி விவேகானந்தர்.

அதுமட்டுமின்றி, சங்கரருடைய தத்துவங்கள் என்று சொல்வதேகூட, ஒரு பக்கம் புத்தருடைய கொள்கைளிலேயே இருந்து எடுத்திருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் இசுலாமியக் கருத்துக்களிலும் ஒரு சிலவற்றைக் காப்பியடித்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்கிறார்கள்.

மேலும், விவேகானந்தரே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் "Hinduisum could hardly expect to find a messiah in Sankara" எனச் சொல்லியிருக்கிறார்.

அதனால், எல்லாக் கட்சிக் கூடாரங்களைப் போலவேத் தான் சங்கரமடமும். ஆதி சங்கரரின் கூற்றுக்களையேப் பொய் என நிருபணமாகும் போது, அவரின் வாரிசுகளை எந்த இடத்தில் வைப்பது என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

அந்த மடம் ஒரு சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கேவலமான, பிற்போக்குத்தனத்தின் மொத்தக் குத்தகை. இல்லையென்றால், பெண்கள் வேலைக்குப் போனால், கற்பிழந்துவிடுவார்கள் போன்ற மிகவும் கீழ்த்தரமான "அருள் மொழிகளை" உலகுக்கு அளிப்பார்களா.

ஆக இந்த "அள்ளக்கைகளை" குற்றம் சொல்லுவதில் எவ்விதமான பயனுமில்லை. நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல.
---------------------------------------------------------------------------------

Jan 24, 2005

நான் வளர்க்கிறேனே மம்மி!!

சோழிங்கநல்லூர் தெரியுமா உங்களுக்கு? [இப்படி இருட்டா, ஒரு ஸ்கிரீன்ல, வாய்ஸ் ஒவ்ர்-ல ஆரம்பிக்குது நம்ம (இல்லை வேணாம், ராயல்டி பிரச்சனை வரும்) இல்லை என் கதை ஆரம்பிக்குது]

இன்னாடா, திடீர்ன்னு ஒர்த்தன் சைடு வாங்கி, சாண்டில்யன், கோவி.மணிசேகரன் மாதிரி தடம்மாறானேன்னுப் பாக்காதிங்க. சென்னைக்கு ரொம்ப பக்கத்துல இருக்கற ஊரு. (ஊருன்னு சொன்னா என்னை இன்போசிசும், விப்ரோவும், டிசிஎஸ்சும் கட்டையாலேயே அடிப்பாங்க. அரசாங்கம் என்னை பொடா-ல, போடான்னு உள்ளேத் தூக்கிப் போட்ரும்). ஏன்னா, இது தான் சென்னையோட, தொழில்நுட்ப அதி நெடுஞ்சாலை, அதாங்க, Information super highway.

என் பணியகத்தின் புது கிளையண்ட் ஒருத்தர் ஒரு வணிக சந்திப்புக்காக அழைத்திருந்தார். நானும் ரொம்ப நாளாகவே அந்த சாலையில் என்ன அதி அற்புதங்கள் இருக்குமென்ற தேடலில், கசிந்து உருகியதால், வருவதற்கு ஒப்புக்கொண்டேன். அதற்கு முன்னால், என் சந்திப்புக்கள் அனைத்தும், டைடல் பூங்காவோடு முடிந்துவிடும். சரி, எப்படித் தான் இருக்கும் எனப் பார்க்கலாம் என்று நினைத்து என் பைக்கில் கிளம்பினேன். [இங்க நம்ம டைட்டில் கார்டுப் போடறோம். வண்டிப் போகுது, அப்படியே டைட்டில மேல சுப்பர் இம்போஸ்ல ஒட்டறோம் ;-)]

கதை, டைடலைத் தாண்டித் தான் தொடங்குகிறது. டைடல் தாண்டியவுடன், முதலில் நீங்கள் பார்ப்பது உங்கள் தலைக்கு மேல் செல்லும் மின் புகை வண்டியின் மின்சார ரயிலின்(MRTS) மேம்பாலம், சற்றே தள்ளி, என்னவென்று தெரியாத நீள்வட்டமாய், சதுரமாய், வட்டமாய், சன்னமாய் இருந்தும், இல்லாமலும், ஆங்காங்கே பின்னமாயும், (இன்னாடா, திடீர்ன்னு ஞானோதயம் வந்தா மாதிரி, யாருக்கும் புரிஞ்சி, புரியாதமாதிரி எழுதற - ஹிஹிஹி....வேற ஒண்ணுமில்ல, மான்ட்ரீஸ்ரும், வசந்தும், சனியனும் விட்ட டோஸ் வேலை செய்யுது...ஹி..ஹி) இன்ன பிறவுமான வடிவங்களில் ஒரு கட்டிடம். National Institute for Fashion Technology சுருக்கமாய் NIFT. எத்தனையோ படங்களில் பார்த்திருந்தப் போதும், முதன்முறையாக நேரில் பார்ப்பது வித்தியாசமான உணர்வுதான்.

அதன்பிறகு தொடங்குகிறது என்னுடைய டெரெய்ன் பைக்கிங் சாமர்த்தியங்கள். கியர் மாற்றி, கியர் மாற்றி ஒரு தேர்ந்த சர்க்கஸ்காரனைப் போல ஒட்டத் தேவைப்படும் சாலையது. சாலை போடுகிறார்களா, இல்லை செப்பனிடுகிறார்களா, இல்லை இந்த சாலையே இப்படித்தானா என அறிய இயலாதவாறு ஒரு அறிவிப்புமின்றி புகையும் தூசும் மண்டிய சாலை. இந்த சித்ரவதை அங்கிருந்து தொடங்கி, கொட்டிவாக்கம், ஒரு சிறிய ஊர், வேலப்பன் கந்தன் சாவடி(நன்றி: முத்து) என ஊர்ந்து சீவரம் என்ற ஊர் தொட்டவுடன் தெளிகிறது என் சித்தம். கரும் பாம்பென (நன்றி: "இரவு மிருகங்கள்" - சுகிர்தராணி) நெடுந்து பரந்து ஊர்ந்து செல்லும் சாலையில் முதலில் கண்ணை கவர்வது, இரண்டாவது இன்போசிஸ் என தற்போது வர்ணிக்கப்படும், ஃகாக்னிசண்ட் குழுமத்தின் மிக வண்ணமயமான கால் சென்டர். மஞ்சள், நீலம், சிகப்பு என ஒவ்வொரு கட்டிடமும் வண்ணமடிக்கப்பட்டு வித்தியாசமாக காட்சியளித்தது. [புரொடுயசர் கொஞ்சம் டைட்டா படம் பண்ண சொல்லிட்டாரு, இல்லேன்னா, இங்கே ஒரு சாங் வைச்சிறலாம்] சற்றே தள்ளிப் போனால், விப்ரோவின் மென்பொருள் மையமும், டிசிஎஸ்ஸின் மென்பொருள் மையமும் (வெள்ளையை விட மாட்டிங்களா ரத்தன் டாடா சார்?) இருந்து நாம் எந்த சாலையில் இருக்கிறோம் என நினைவூட்டுகின்றன. அதே சமயம், அதற்கு எதிரே, சிறு,சிறு கடைகள், கையேந்திபவன்கள், பஞ்சர் கடை, மளிகை கடை, தவறாமல் ஒரு டாஸ்மாக் என அந்த இடத்தின் பூர்வீகத்தை உணர்த்துக்கின்றன.சாலை.கடைகள்.கட்டிட வேலைகள். கடைகள்.கட்டிட வேலைகள்.மனம் சுற்றி வந்தாலும், பைக் தன் கடமை உணர்ந்து, சாலையில் ஒடிக்கொண்டிருந்தது.

அருமையான சாலை, அவ்வப்போது ஹார்னில் ஆளைக் கொல்லும் லாரிகளைத் தவிர்த்து. சற்று முன்னேறிப் போனால், ஆவினின், சோழிங்கநல்லூர் பால் பண்னையும் அதை ஒட்டிய நகராட்சியும். இன்னமும், நகராட்சி அலுவலகத்தின் வாசலில், கட்சி வேட்டி, துண்டு, இரண்டு எடுப்பு என 'மேட்டர்' முடிக்கும் தலைகள் தெரிகின்றன. சாலையின் இருமருங்கிலும் அசுரகதியில் நடக்கும் வேலைகளைப் பார்க்கும்போது, ரியல் எஸ்டேட் அதிபர்களின் கணக்கு கண் முன் விரிகிறது.முன்னேறிச் சென்றால் இன்போசிஸின் ஆசியாவின் மிகப்பெரிய மென்பொருள் மையம் நம்மை ஆட்க்கொள்கிறது. அதனினும் முன்னேறி சென்றால், என் கிளையண்ட் அலுவலகம் [உதவி இயக்குநர்: அண்ணே இந்த இடத்துல நம்ளோட இன் டர்வெல் பிளாக் வைச்சிப்போம். ஆடியன்ஸ்ல அவனவன் இதுக்கப்பறம் என்ன நடக்கும், ஏது நடக்கும்-னு சாவான்னேன். ஒரே டென்ஷன் தான் போங்க. செம்ம இன் டர்வெல் பிளாக்னே இது, தமிழ் சினிமாவுல எவனும் வைச்சிருக்க மாட்டான். டேய் மொட்டை, அந்த சிக்கன் பீஸ் எடு!!]

சந்திப்பு முடிந்து திரும்புகிறேன். அருகாமையிலுள்ள மேல்நிலைப்பள்ளி விட்டு விட்டார்கள். மெரூன் சீருடைகளை அணிந்த சிறுவர், சிறுமியர், சற்றே வளர்ந்த பெண்கள் தலை குனிந்து, தங்களுக்குள், சன்னமாய் சிரித்தபடி,(பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது ?!!) அவர்களை துரத்தும் பசங்கள், சைக்கிள் பெல் சிக்னல்கள் என அந்த இடம் ஒரே சத்தமாயும், குதூகலமாயும் இருந்தது. குழந்தைகள், சாலையின் குறுக்கே ஒடுவதும், நடப்பதுமாக இருந்த அந்த நெடுஞ்சாலையில் அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு காவல்காரர் கூட இல்லை. 80/90KM வேகத்தில் வரும் லாரிகளிருந்து, அதற்கும் வேகமாய் போகும் பைக்/கார்களிடமிருந்து, மனம் பதைபதைக்க லாவகமாய் நகருகின்றனர். சற்றேத் தள்ளி ஒரு செக்போஸ்ட்டில் 3 போலிஸ்காரர்கள், கருமமே கண்ணாக, நக்கீரன் படித்துக் கொண்டிருந்தனர். அவ்வளவு நீள நெடுஞ்சாலையில் ஒரு மருத்துவமனைக் கூட இல்லை என்பது (நான் போன அளவில்!!) அதிர்ச்சியான விசயம். சற்றே முன்னேறிப் போனால், வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், துப்பட்டாவினால், முகத்தை மூடிக்கொண்டு, ஸ்கூட்டியிலும், ஹோன்டாவிலும் பறக்கின்றனர். சாலையோரப் பூக்கார அம்மாக்கள், அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, பூக்களில் தண்ணீர் தெளித்து சாலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கையில் செல்லோடு, சொல்லாகப் பேசிக்கொண்டே பல்சரில் அமர்ந்துக் கொண்டு, கையேந்திப்பவனின் ஆம்லெட்டை, பங்குப் போடுகிறது ஒரு மென்பொருள் கூட்டம் ( கலர்ப்ளஸ் கால்சட்டை, க்லோபஸ் மேற்சட்டை என இருந்த ஒருவர் போனில் "மயிரு, ..த்தா ட்ரீட் கொடுக்கலைன்னா, உங்காளுக்கிட்ட சொல்லி மானத்தை வாங்கிடுவேன்" என மிரட்டிக் கொண்டிருந்தார்.) இவைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், "தேவதையைக் கண்ட தனுஷின் படத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு, கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது ஒரு லுங்கி கும்பல்.

புகையோடு புகையாக நுழைந்து, புகுந்து, அடித்துப் பிடித்து என் அலுவலகமடையும்போது இரவு மணி 8.40. கே.கே.நகரில் புகுந்தவுடன், சடாரென என்னை "கட்" அடித்துப் போன ஸ்கூட்டியைத் திட்டலாம் என தலை உயர்த்திப் பார்த்தப்போது, பத்மா சேஷாத்திரியின் சீருடை அணிந்த ஒரு பள்ளிச்சிறுமி. (ட்யூசன் முடித்து வீட்டுக்கு) ஏனோ, தாவணி அணிந்து, இரட்டைப் பின்னல் போட்டு, தலைதாழ்த்தி சென்ற சோழிங்கநல்லூரின் பள்ளிப் பெண்கள் ஞாபகத்திற்கு வந்தது.[சில்-லவுட்-ல அப்படியே எண்டு டைட்டில் போட்டு, "உணர்வும், உயிரும் - நாராயணன்" ன்னுப் போட்டிங்கன்னு வைச்சிக்குங்க, எழுதி வைச்சிக்குங்க, இந்தப் படம் சில்வர் ஜுப்ளி. "காதலை" தூக்கிச் சாப்புட்லாம்னே. கவலையை விடுங்க. நம்ம ஃப்ர்ஸ்ட் காப்பி பண்றோம் இதை!! - அண்ணே நைட்டு நம்ம கதிரு ரூம்ல டிஸ்கஸ்ன். அவனுங்க பன்னாடைங்க, இப்பவே அந்த மிச்சமிருக்கற ஒல்டு மாங்கை முடிச்சிலாம்னே! ஒரே பீல் பண்ண வைச்சிட்டிங்க கதையில]

தொழில்நுட்ப அதி நெடுஞ்சாலை - அங்கு வாழும் மக்களுக்குத் தெரியுமா, அதன் மகத்துவமும், பயன்பாடும், இல்லை மென்பொருளில் வேலை செய்வோர்க்குத்தான் தெரியுமா அந்த மக்களின் வாழ்வும். எதிர்காலமும். பெண்களைப் போலத்தான், கண் முன்னே இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது, எனத்தருமை சென்னை மாநகரம். நான் வளர்ந்துக்கொண்டிருக்கிறேனே மம்மி!!

யாராவது தமிழ் கத்துக் கொடுங்க!!

கோணங்கியின் பதில்கள் - பவளக்கொடி - அக்டோபர் 2001
"பயத்துக்குள் என்ன இருக்கிறது ?

எத்தனையோ இருக்கிறது. காமம்தான் பயம். பயம்தான் கனவு. கனவுதான் மனிதர்களை இவ்வளவு மென்மையான சிலைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது, கடினமான பொருளாயத உலகத்தைக்கொண்டு, இருப்பைக் கொண்டு. கடினமானதுதான் அழகியல். பயத்தினுடைய அளவீடுகள் மென்மையக் கடுமையாக்குகின்றன. பயம் என்பது புராதன உருப்பளிங்கு. அதற்குள் இருட்டு ஈரமாக ஊர்ந்து ரத்தநாளங்களில் வெப்பரத்தப் பிறவியாகி உறைய வைக்கிறது மனிதனை. பயம் இருட்டில் இருக்கிற்து. பயத்துக்குள் என் கண்ணாடி அலைகிறது அனைத்து உருவங்களும் என் கண்ணாடிக்குத் தப்பி அலைகின்றன வேகமாக. இவற்றை இணைத்து வைக்கிற கனவு பயத்தில் திரும்புகிறது நம்மிடம். ஒரு பூச்சி உற்பட பயந்துதான் இருக்கிற்து. தான் பிறந்த வெளியிலேயே பயம்தான் இருக்கிறது. பயமென்பது முடிவற்றதாக் மனிதன் மீது இருப்பாக அழுத்திக் கொண்டிருக்கிற்து. கடவுளும் பயந்துதான் இருக்கிறார்."
சத்தியமா ஒண்ணும் புரியலே. தமிழ்ல இருக்கறதனால படிக்க முடியுது. அதைத் தவிர வேற ஒரு மண்ணும் விளங்கலை. நான் ரொம்ப காலமா தமிழை தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்க தமிழாசிரியர்களால மட்டுந்தான் முடியும்ன்னு நினைச்சிருந்தேன், இப்ப அந்த வேலையை இலக்கியவாதிகள் எடுத்துக்கிட்டாங்க போலிருக்கு.

ஏங்க, நிசமாலுமே கேக்கறேன், எழுதறது அடுத்தவங்களுக்கு புரியணுமின்னு தானே எழுதறோம், அப்படி புரியாம எழுதினா எத்தனை பேரு படிப்பாங்க, எத்தனை பேரு புரிஞ்சிப்பாங்க. படிச்சா மட்டும் ஒரு வேளை போதுமோ!!

இன்னமோங்க, படிப்பறிவில்லாத ஆளு கேக்கணும்னு தோணிச்சு, கேட்டுப்புட்டேன்.

Jan 23, 2005

Madame Sata - அடித்தட்டிலிருந்து எழுந்த கருப்பினக் கலைஞன்

சற்று முன் பார்த்து மலைத்து விட்டேன் - மேதெமே சாத்தா (Madame Sata - ஸ்பானிஷில், மேடம் என சொல்லுவதில்லை, ஆகையால், "மேதமே"). உள்ளே செல்லும்முன், இந்தப்படம், சான் பிரான்ஸிஸ்கோ திரைப்பட விழா (2003), டொரன்டோ திரைப்பட விழா (2002), கான்ஸ் திரைப்பட விழா (2002), மியாமி திரைப்பட விழா (2003) களில் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. மேலும், சிறந்த படத்துக்கான விருதை சிகாகோ திரைப்பட விழாவிலும்,(Gold Hugo Award for Best Film), சிறந்த அரங்க அமைப்புக்கான விருதை ஹவானா திரைப்பட விழாவிலும், சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை (லான்சரோ ரொமொஸ் - சாத்தா-வாக நடித்தவர்) ஹியூலாவா ஈப்ரோ-அமெரிக்க திரைப்பட விழாவில் வாங்கி அசத்திய படம்.

இந்தப் படம், பின் நவீனத்துவப்பாணியில் சொல்லவதாயிருந்தால், "தயிர்வடைகளுக்கு / கலாச்சாரம் என்ற ஒற்றைப்பார்வை" பார்ப்பவர்களுக்கான படமில்லை. அவர்கள் தயவுசெய்து மேற்கொண்டுப் படிக்காமல், வேறு எதாவது உருப்படியான வேலை செய்யலாம் / ஆனந்தவிகடன்/குமுதம் படிக்கலாம்.

ஃஜோவ் பிரான்ஸிஸ்கோ தோஸ் சாந்தோஸ் சுருக்கமாய், "சாந்தோஸ்" என்பரின் உண்மைக்கதை தான் மேதெமே சாத்தா. இந்தக் கதை நடந்தது/நடப்பது 1930-ன் ஆரம்பங்களில்.

இடம்: லாபா, ரியோ டி ஜெனிரோ களம்: அடித்தட்டிலும், அடித்தட்டில், தெருக்களில் வாழ்ப்பவர்கள் இருக்குமிடம். சமுதாயத்தின் எல்லா அழுக்குகளையும் ஒரு சேரப் பார்க்கக்கூடிய இடமது. இந்த கதையில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களுமே நிஜத்தில் வாழ்ந்தவை.

கதைக்கு போகுமுன், சாத்தா ஒரு முரடன், ஒரினப் புணர்ச்சியாளன் (queer), கலைஞன், பெண்வேடமிட்டு மதுபான விடுதிகளில் ஆடும் காப்ரே நடனக்காரன்(transvestic), வெறிப்பிடித்த காதலன், 7 குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்ட பொறுப்பான தகப்பன், "சாம்பா" நடன கலைஞன், முன்கோபி, கிரிமினல் என பல்வேறுமுகங்கள் கொண்ட கறுப்பின மனிதன்.

தபு: ஆண் விபச்சாரி, பெண்ணாக மாறவேண்டும் என்று ஆசைப்பட்டு, பெண் சகவாசத்திலேயே, பெண்ணுடையணிந்து வலம்வரும், சாத்தாவின் நண்பன்.

லொரித்தா - விபச்சாரி, அதைவிட நல்ல வார்த்தை Whore (பாலியல் தொழிலாளின்னு சொல்லமுடியாது - கதை நடந்தது 1930-களில்)

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, ஏழு வயதிலேயே தாயால் விற்கப்பட்டவன் தான் சாத்தா. வறுமையும், வன்முறையும், கொலைவெறியும், குடியும், பொறுக்கித்தனமும், அழுக்கும் நிறைந்த லாபாவின் தெருக்களில் வளர்ந்தவன். கொலை, கொள்ளை, துரோகம், விபச்சாரிகள் என் உலகின் எல்லா 'நல்ல' பழக்கவழக்கங்கள் நிரம்பியுள்ள தெருக்களில் சுற்றி தன்னை வளர்த்துக் கொண்டவன் அவன். ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்தரவாமில்லாத வாழ்க்கை. எந்நேரத்திலும், ஒரே ஒரு துப்பாக்கிக்குண்டில் உயிர் போகலாம் என்ற நிலையில், வாழ்வித்திருத்தலை சாமர்த்தியமாக செய்து காட்டியவன்.எந்தவிதமான படிப்பறிவும் இல்லாமல், உயிர் பிழைத்திருத்தல், திருடுதல், புணருதல், என்பதே வாழ்க்கையாக வாழ்ந்தவன். இருட்டும், புகையும், அழுக்கும், உலகின் அத்தனை மொள்ளமாரித்தனங்களுக்கும் இடையில், அடித்தட்டு மக்களின் கலைஞனாய், பாடகனாய், "சாம்பா" நடனக்காரனாய் வாழ்ந்து தன், 76 வயதில் மறைந்தவன் சாத்தா. சாத்தாவின் மேல், பல்வேறு விதமான வழக்குகள். தன் வாழ்வில், 28 வருடங்களை சிறையில் கழித்தும், கலையின் மேலுள்ள தீவிர ஆர்வமும், காதலும், அவரைப் பற்றி பேச வைக்கின்றது.

இந்தப் படத்தை ஒரு மிடில் கிளாஸ் மனிதராய் பார்த்தால் இந்தப் படம் ஒரு அர்த்தமற்ற ஒரு 'ஆண்டி ஹீரோ'வை முன்னிறுத்தும் படமாகவே தெரியும். வன்முறையின் கோரமும், வறுமையும், தெருக்களிலிருந்துக் கொண்டு ஒரு கலைஞனாய், தன்னை முன்னிறுத்திக் கொண்ட, நகமும், சதையும், உதையுமாய் வாழ்ந்த மனிதனின் கதை இது. படத்தில், தரம்குறைந்த வார்த்தைகள் அதன் வழியே நாம் உணரும், வாழ்வின் கோரம், சாதாரண வார்த்தைகளில் சாத்தா சொல்லும் நிரம்பியிருக்கும் வலி நிறைந்த வாழ்வின் உண்மைகள்,
"I was born an outlaw, and that's how I'll live";

"My angel, the bell tolls and the night cries-flee this stinking world";

"What do you want? I want the world."

"Men dont' use guns. they use their fists. let's fight"
இருட்டில் நகரும் கதையில் விடுதிகளிலும், அரங்கிலும், சாலைகளிலும் தெறிக்கும் வண்ணங்கள் என ஒரு வாழ்க்கையே கண் முன் நகரும். நம்மை நெருடச் செய்யும்.

சாதாரணமாகவே பிரெசிலின் இயக்குநர்கள் திறமை வாய்ந்தவர்கள், அதிலும் இப்படியொரு 'ரா'வான கதை கையில் கிடைத்தால் சொல்லவா வேண்டும். இந்த படத்தின் சிறப்பம்சமே, சாத்தாவாக நடித்த லான்சரோ ரொமொஸ். ரொமொஸ் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல முடியும். ஆறடி உயரத்தில், கறுப்பாய், சாத்தாவை அப்படியே நம் கண் முன்னால், கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அடிதடியாகட்டும், இன்னொரு ஆணுடன் புணருதலாகட்டும், மேடையில் உச்சஸ்தாயில் பாடிக்கொண்டே ஆடுவதாயாகட்டும், கடுமையான முகத்துடன் பேசுவதாகட்டும், மனிதர் பின்னி எடுத்து விட்டார். படமுழுக்க, அழுக்கு உடைகளுடன் அலையும்போதும், போலீசிடம் அடி வாங்கி, மூக்கு புடைக்க வெறித்தப் பார்வை பார்க்கும்போதும், பெண் உடையணிந்து, லாபாவில் உள்ள ஒரு மகா மட்டமான பாரில் தன்வசமின்றி அவர் ஆடும் ஆட்டம், குதூகலமான 'சாம்பா" இசை, அதன்பின் நடக்கும் வன்முறைகள், என படமுழுதும் நாம் கண்களை நகர்த்த வாய்ப்பே தராமல், வாழ்ந்திருப்பார்.சிறையில் அடிப்பட்டு வாய்ஸ் ஓவரில், அவர் மேலுள்ள வழக்குகளை, குணாதிசயங்களை விவரிப்பதிலிருந்து ஆரம்பிக்கும் படம் அதே பிரேமில் முடியும். இந்தப் படத்தின் காட்சியமைப்புக்களைப் பற்றியோ, சீன்களையோப் பற்றி இங்கு பேசமுடியாது. அது ஒரு அனுபவம்.

கேட்டதில் பிடித்தது, இந்தப் படத்தின், இயக்குநரின் கமெண்ட்ரியில் ஒரு வாக்கியம்
"Sata re write his history with his body. His love for his body made him a better soul among the meanest people in laba"

சென்னையிலிருந்தால், இந்தப் படம் சினிமா பேரடைசோவில் கிடைக்கின்றது, மறக்காமல் வாங்கிப் பாருங்கள்.

இந்தப் படத்தைப் பற்றிய பிற விமர்சனங்கள்:

http://www.reelmoviecritic.com/holiday2002/id1749.htm
http://www.wellspring.com/movies/text.html?movie_id=7&page=synopsis
http://www.haro-online.com/movies/madame_sata.html

இதைத் தாண்டிப் பார்த்தது "யி-யீ" என்ற ஒரு ஜப்பானியப் படம். மிக, மிக மெதுவாக மறந்துப் போன காதலை நினைக்கும் ஒரு அப்பாவும், காதலை மறக்கக் கோரும் ஒரு பெண்ணுமான கதை. நன்றாக இருந்தாலும், சாத்தா தந்த பாதிப்பில் இது அடிப்பட்டுப்போய் விட்டது. ஒரு முறைப் பார்க்கலாம்.

'சாத்தா' வின் டிவிடியில் "ரஷ்யன் ஆர்க்" என்ற ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படத்தின் டிரைய்லர் பார்த்தேன். எஸ்.ராவின் உலக சினிமாவிலும் இந்தப் படத்தைப் பற்றிய குறிப்பு இருந்தது. யாரேனும் பார்த்திருக்கீறீர்களா? பார்த்திருந்தால் எழுதுங்கள்.

Jan 22, 2005

காதலுக்கு மூக்கில்லை!!

என் பணி நிமித்தமாக அடிக்கடி, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் செல்லவேண்டி வரும். என் அலுவலகம், கே.கே.நகரில் இருப்பதால் ஒவ்வொரு முறையும், சின்மயா நகர் தொட்டு, கோயம்பேடு வழியாகத் தான் நூறடி சாலை பிடித்து செல்வேன். கோயம்பேடு அங்காடியின் 'வாசனைப்' பற்றி நான் சொல்ல தேவையில்லை. அதற்கு இன்னமும் வாசனையூட்டுவது, அங்கிருக்கும் குப்பை கொட்டுமிடம். கோயம்பேடையும், அதனை சுற்றியுள்ள இடங்களிலுமிருந்து, திரட்டி வரப்படும் குப்பைகள் இங்குதான் குவிக்கப்பட்டிக்கும், இது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இடமில்லை எனினும், இங்கே தான் அனைத்தும் கொட்டப்பட்டிருக்கும். அப்படியொரு "வாசனை" வாசஸ்தலம் அந்த இடம். மூக்கினைப் பொத்தாமல், மூச்சினை அடக்காமல் அந்த இடத்தினை தாண்டமுடியாது.

சமீபகாலமாக, நான் காணும் காட்சி, என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு முறையும் அந்த இடத்தினை கடக்கும்போதும், குறைந்தது, 3,4 காதல் (?!) ஜோடிகளையாவது அங்கே பார்க்க முடிகிறது. பைக்கினை ஒரமாய் நிறுத்திவிட்டு, எந்த கவலையும் இல்லாமல், அவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களையேப் பார்த்து செல்லும் பொதுஜனங்களைப் பற்றிய எவ்வித கவலையுமின்றி அவர்கள் உலகத்தேயே மறந்து பேசி, சிரித்துக் கொண்டிருப்பார்கள். காலை, மதியம், மாலை என ஒரே காதல் அரங்கம் தான். மூச்சா போகவே கர்சீப் முடி போகுமிடத்தில், மூக்கினைப் பொத்தாமல், மூச்சினை அடக்காமல் சர்வசாதாரணமாய் இருக்கிறார்கள் என்பது என்னை ஆச்சரியத்திலாழ்த்தும் நிகழ்வு.

ம்ம்ம்.....ஒரு வேளை, காதலுக்கு கண்ணில்லை என்பது போல், காதலுக்கு மூக்கும் இல்லையோ.

இதற்கு சற்றும் குறையாத இன்னொரு இடம், நுங்கம்பாக்கத்தில் உள்ள, டென்னிஸ் அரங்கின் பின்புற சாலை, அதை சாலை என்பதை விட, மூத்திர சாலை என்பது தான் பொருத்தமாயிருக்கும். அங்கும் இதே போன்ற ஜோடிகளைப் பார்க்கலாம்.

புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்

ஒரு சில விஷயங்களை புரிந்துக்கொள்ள, என்னைப் போல், வலைப்பூ எழுதும் எத்தனையோ நண்பர்கள் சார்பில் இந்த பதிவு.

இரண்டொரு நாட்களாக, சோபாசக்தியின் "ம்" பற்றி, வசந்தும், டிசெதமிழனும் தங்கள் பதிவில் பதித்திருந்தனர். இதில் மிகப்பெரியதாய் எழும் கேள்வி, விடுதலைப்புலிகளின் ஆளுமை. புலிகளை ஆதரிப்பதா, வெறுப்பதா என்பது அவரவர் சொந்தப் பிரச்சனை.

ஆனால், சென்னையில் சொகுசாக உட்கார்ந்துக்கொண்டு என்னால், குழந்தைப் போராளிகளைப் பற்றி பேச இயலாது. அப்படி யாராவது பேசினால், அது ஒரு "அறிவுஜீவித்தனமான" வாதமாய் இருக்குமே தவிர, பொருட்பதிந்ததாய் இருக்காது என்பது என் எண்ணம். அவரவர் வாழ்வியல் சூழ்நிலைகளைப் பொறுத்தே, எந்த விஷயத்தையும் அநியாய/நியாயப்படுத்த முடியும். என் போன்ற பலரின் புரிதல்களில் பெரும் குழப்பங்கள் உண்டு. ஊடகங்கள் சொல்லிக்குடுத்த அல்லது வளர்த்தெடுக்கப்பட்ட தோற்றங்களை வைத்துக் கொண்டு என்னால், புலிகளைப் பற்றி பேச இயலாது.
பதில்கள் பரிமாறிக்கொள்வதின் மூலம், ஒரு சில என்னைப் போன்ற குழப்பவாதிகளூக்கு தெளிவு பிறக்குமென நம்புகிறேன்.

Jan 21, 2005

வேஷம் கட்டலாம் வாங்க

ஒரு சின்ன விவாதத்தை ஆரம்பித்து வைக்கலாம் எனத்தோன்றியது.

தமிழ்சினிமா கூத்துப்பட்டறை, மேஜிக் லாண்டர்ன் போன்ற நவீன நாடக தளத்திலிருந்து வருபவர்களை எப்படி நடத்துகிறது என்பது தான். முதலில் நினைவுக்கு வருபவர், அர்ஜுன் அம்மா (ஹலோ, நான் ஆரோக்கியா பால் விளம்பரத்தை சொல்லவரலை) - நான் சொல்ல வந்தவர் கலைராணி. முதலவனில், அர்ஜுனுக்கு அம்மாவாய் நடிக்கத் தொடங்கி, எல்லா இளம் ஹீரோக்களுக்கும், அம்மாவாக நடித்துவிட்டார். ரஜினி, கமல் மற்றும் சில மூத்த நடிகர்கள் தான் பாக்கி. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது, இதில் எந்த அம்மா வேடமும், சீரியல் அம்மாவைத் தாண்டாத கதாப்பாத்திரங்கள். இப்போது அதுக்கும் சீதா, சரண்யா ருபங்களில் வந்தது வேட்டு. சமீபத்தில் சென்னையில் நடந்த உலகத்திரைப்படவிழாவில் எல்லா படங்களுக்கும், "அம்மா" ஆஜர்.

அடுத்து, முக்கியமாய் நான் எதிர்பார்த்து ஏமாந்து போனது "ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" புகழ் பசுபதி. விருமாண்டியில் கமலுக்கு இணையான பாத்திரம், சரிதான், ஒரு கலக்கு கலக்குவாருன்னு நினைச்சு காயப் போடரதுக்கு முன்னாடியே, "சுள்ளான்" "மதுர", "திருப்பாச்சி" என்று வரிசையாக ஒரு தெலுங்கு வில்லனுக்கு இணையான கதாப்பாத்திரங்களில் நடித்து காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறார்.

"ஏடே நீ சொல்லு' என அழகியில் ஆசிரியராக அறிமுகமான, ஜார்ஜ், கூத்துப்பட்டறையில் ஒரு முக்கியமான இயக்குநர். சமீபத்தில் எந்தப் படத்திலும் பார்த்ததாக ஞாபகமில்லை. என்ன செய்யறிங்க ஜார்ஜ்?

சமீபத்தில் குமுதத்திலேயோ/ ஆ.விலேயோ வந்த பாண்டிச்சேரியின் டாப் டென் பிரபலங்களில் ஒருவரான, முனைவர் கே.வி.குணசேகரன் (நாட்டுப்புறக் கலை துறையில் தலைமை என நினைக்கிறேன்), நாசரால், "தேவதை"யில் அறிமுகமாகி பிறகு சிலப்படங்களில் நடித்து, இப்போது நடிக்கிறாரா எனத்தெரியவில்லை.

இதையும் தாண்டி, நிறைய பேர்களை தமிழ்சினிமா, மென்று முழுங்கியிருக்கிறது - வீதி நாடக பிரபலம், ப்ரளயன், ப்ரவீண் (ஆய்த எழுத்தில் மாதவனுக்கு அண்ணணாய் வருபவர்), மற்றும் நிறைய பேர்.

இன்னமும் மிச்சமிருப்பவர்களில், கீழ்க்கண்ட கதாப்பாத்திரங்களுக்கு இவர்கள் பொருத்தமாயிருப்பார்கள் எனத் தோன்றுகிறது.
பின்/முன் மற்றும் ஃசைடு குறிப்பு: இதை ஒரு எள்ளலாக பார்க்கவும், சீரியஸா, பார்ப்பவர்கள், அரசு பொது மருத்துவமனையில் "டிரிப்ஸ்" ஏற்றிக்கொண்டுப் பார்க்கவும்.

சு.ரா - ஜோதிகா / திரிஷா வகையறாக்களுக்கான பணக்கார அப்பா
ஞானி - ரகுவரனுக்கு பதிலாக, இடதுசாரி சிந்தனைகளைப் பரப்பும் தலைமறைவு வாழ்க்கை வாழும் தலைவர்
எஸ்.ரா - மிடில் கிளாஸ் அப்பா, குடும்பத்தின் பெரிய அண்ணன். (கொஞ்சம் டை கட்டி கோட் மாட்டிவிட்டால், ஒரு MNC/FMCG மேலாளர் (CEO/CTO) )
நம்பி /விக்ரமாதித்யன் - தமிழ் அமானுஷ்ய சீரியலுக்கான "சித்தர்"/ "பித்தன்" கதாப்பாத்திரங்கள்
பவுத்த அய்யனார் - ஹீரோவின் நண்பர் (சுக்ரன், ஸ்ரீமனுக்கு வேட்டு)
ப்ரபஞ்சன் - தமிழாசிரியர் / கல்லூரி பேராசிரியர்

இன்னமும் நிறைய பேர் ஞாபகத்துக்கு வரவில்லை, நீங்களும் உங்கள் பங்களிப்பை நிரப்புங்கள்

லால் சலாம் - சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரியிலிருந்து

வசந்த் மற்றும் டிசெதமிழனின் பதிவுகளுக்கு துணை செய்யும் விதமாய் "லால் சலாம் - ஜீரோ டிகிரி" யிலிருந்து.

லால் சலாம்

தலைமைக் காவலாளி போல் தோற்றமளித்த அவன் முனியாண்டியையும் தமிழ்ச்செல்வனையும் அழைத்துப் பேச ஆரம்பித்தான்.
- சொல்லேன் தோழர். சொல்லு.
- ...................
- பாத்தீங்களா சார். இவருக்கு நான் எவ்வளவு தூரம் மரியாதெ குடுத்து தோழர்னு கூப்புட்டுப் பேசுறேன். பேசவே மாட்டேங்கிறாரு. கோவாப்பரேட் பண்ணலைன்னா நான் எப்படி இந்த விஜாரணையெ முடிக்கிறது. ம். நீங்களாவது சொல்லுங்க சார்.

- நீங்க சொல்றது சரிதான். நீங்க கேளுங்க. உங்களுக்கு எந்த விபரம் வேணும்னாலும் நான் சொல்றேன்.

- ம்...பாத்தீங்களா. எழுத்தாளர்னா எழுத்தாளர்தான். ஆக்டிவிஸ்டுன்னா ஆக்டிவிஸ்டுதான். என்னா ஆக்டிவிஸ்டு மயிரு புடுங்குனெ ஆக்டிவிஸ்டு. ஏம்ப்பா தோழர் மயிரு கியிருங்கிறதுக்காக நீ வேற கோச்சுக்காதெ. இந்த எடத்துலெ நீயே வந்து ஓக்காந்தாலும் இப்பிடித்தான் பேசுவெ. எனக்கும் இந்த கிரிமினல்சோட பழகிப் பழகி சலிச்சுப் போய்டிச்சி. சமயத்துலெ இந்த எழவு வேலய வுட்டுட்டு எங்கயாவது காலெஜ்லெ லெக்சரராப் போயில்லாமான்னு கூட தோணும். ஸ்கூல் டேஸ்லயும் காலேஜ் டேஸ்லயும் ஃபிலாஸபி சோசியாலஜி லிட்ரேச்சர்னு படிச்சு திரிஞ்சி என்னா புரோஜனம். நமக்கு இங்கதான்னு எளுதி வச்சிருக்கு. தோழர் ஒத்துக்க மாட்டாரு. அவருக்கு இதுலேல்லாம் நம்பிக்கை இருக்காது. ஒங்களுக்கு சார்.

- நம்பிக்கை இருக்கா இல்லியான்னே சொல்லத் தெயலே.

- டேய் ஃபை நாட் ஃபோரு. நாங்க இங்க பேசிக்கிட்டுத்தான இருக்கம். போயி டீ வாங்கிட்டு வாடா. மயிரு. பிக்பாக்கெட் கேசுன்னு நெனச்சிட்டான் போல்ரிருக்கு. இடியட். இங்க எவனுக்கும் மூளையே கெடயாது சார். என்னையும் சேத்துதான் சொல்றேன். மின்னே இருந்திச்சி. இப்ப அவ்வளவுதான். நாய் வேசம் போட்டுட்டு கொலைக்கமாட்டேன்னு சொன்னா எப்படி. சார் சொல்றனேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க இவன் யாரு நமக்கு அட்வைஸ் பண்றதுன்னு. நீங்க எழுதுங்க. வேணாங்கலே. ஒங்க எழுத்து எனக்கே படிக்கும். ஓங்க ஜீரோ டிகிரியையும் நான் படிச்சிருக்கேன். ஒங்க கோவத்துலெ நியாயம் இருக்கு. ஆனா எனக்கு உங்க கோவத்தைவிட உங்க கிண்டல்தான் புடிச்சிருக்கு. என்ன எளுதிருந்தீங்க. ஒலகத்திலெ தகரம் கண்டுபிடிக்கிறதுக்கு மின்னாடியே கம்யூனிஸóடு காரனுங்க உண்டியலெ கண்டு புடிச்சிட்டானுங்கன்னு... என்ன கிண்டல் சார்.

- அது நான் எழுதினேன்னு சொல்ல முடியாது. என் நாவல்லெ வர்ற அந்த கேரக்டர் அப்படி கிண்டல் பேசுது. அது ஆன்டி கம்யூனிஸ்டு கேரக்டர்.

- ஓ... ஆமாமாம். நீங்க ப்ரோ லெஃப்டுல்ல. தோழர் என்ன நான் சொல்றது. நீ சாரோட ரைட்டிங்ùஸல்லாம் படிச்சிருக்கேல்ல.

- படித்திருக்கிறேன். அமெரிக்க சீரழிவுக் கலாச்சாரத்தின் எச்சம் இவருடைய எழுத்து. எனது மண்ணையும் மக்களையும் மொழியையும் அவமதிப்பது இவருடைய எழுத்து. தனது மூளையை அமெரிக்க அய்ரோப்பிய நாய்களிடம் அடகு வைத்து விட்டவர் இவர். தன்பால் புணர்ச்சி போன்ற சீரழிவுகளுக்கு ஆதரவாக எழுதும் வக்கிர மனம் கொண்டவர். இவருக்கு நிச்சயமாக எங்கள் மக்கள் மன்றத்தில் தண்டனை உண்டு.

- அட நீங்க அந்த மாதிரி விசயங்களுக்கும் சப்போர்ட்டு தானா. நீங்க கம்யூனிஸ்டுங்களுக்கு மட்டும்தான் சப்போர்ட்டுன்னு நெனச்சேன். பருவால்ல. நானும் சப்போர்ட்டுதான். ஆனா மாரல் சபபோர்ட்டுதான். ஏன் சாக்ரடீஸ் கூட ஹோமோன்னு நான் படிச்சிருக்கேன். எப்படியோ சார். நான் என்ன சொல்ல வந்தேன்னா நீங்க எதெ சப்போர்ட்டு பண்ணி வேண்ணாலும் எழுதுங்க. ஆனா இங்கலீஷ்லே எழுதுங்க. ஆயுதப்புரட்சி கலாச்சாரப் புரட்சி ஹோமோ எவ்வளவோ இருக்கு. ஏன் இப்படி தமிழ்லெ எழுதிட்டு இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வந்து அவஸ்தைப்படுறீங்க. எனக்கே தர்மசங்கடமா இருக்கு. உங்க ஜீரோ டிகிய நான் படிச்சேன். அதுக்கு செத்த மூளை எழுதுன விமர்சனத்தையும் படிச்சேன். சரி அதுக்கு எதுக்கு நீங்க பதில் எளுதுறீங்க. எங்கப்பன் குதுருக்குள்ள இல்லேன்னு. அங்கதான் வம்பு வருது. உங்க நாவல எவனாவது பீயின்னு சொன்னாக்கூட கண்டுக்காம போற பக்குவம் வரணும். எழுத்தாளன்னா அந்த கெத்து இருக்கணும். மடையனுங்க அப்படித்தான் சொல்லுவானுங்க. அவனுங்க அப்பிடி சொல்லாட்டிதான சார் நீங்க ஆச்சயப்படணும். அதுக்கு பதிலெ எளுதுனீங்களா. எங்க டிபார்ட்டுமெண்ட்டுகாரனுங்க முளுச்சிக்கிட்டானுங்க. அது நாவலா இருந்தவரைக்கும் புரியாத புதிர் மாதி இருந்திச்சு. நீங்க விண்டு வெவரமா ஒடைச்சு வச்சுட்டீங்க. இப்ப அது லிட்ரேச்சரா பாலிடிக்ஸான்னு பாருன்னிட்டான். ஏன் சார் எவன் சண்டைக்குக் கூப்புட்டாலும் போய்டுவிங்களா. தோழரெப் பாருங்க. இவ்ளோ பேசுறோம். வாயெத் தொறக்குறாரா பாருங்க. அவுருக்கும் எனக்கும் பிரச்சினை இல்லெ. நேரடி ஃபைட். அவுரு இந்த ஸ்டேட் வேணாங்கிறாரு. எங்க மேல குண்டு போட்றாரு. நாங்க அவுரெ என்கௌன்டர்லெ முடிச்சிர்ரோம். இதுலெ நீங்க ஏன் சார் வந்து பூந்துக்கிட்டு. அட இது தெரியுமா ஒங்களுக்கு. நீங்க எழுதியிருக்கீங்களே பேங்க் ராபரி பத்தி அந்த உங்க ஹீரோ மாய்த்தாவோட லெஃப்டினென்டுதான் நம்ம தோழர் தமிழ்ச்செல்வன். என்ன தோழர் சொல்றெ நீ.

- .............

- சும்மா இரு சொல் அறன்னு தாயுமானவர் பாடியிருக்காரே அதெ அப்படியே ஃபாலோ பண்றவன் நீ தான் தோழர். நீ தான் நெஜ தாயுமானவன். நான்லாம் பொய் தாயுமானவன். இந்தப் பேரு எனக்கு எப்படி வந்துச்சு தெயுமா சார். எங்க அப்பா கிறிஸ்தவரு. அம்மா முஸ்லீமு. அந்தக் காலத்லயே லவ் மேரேஜூ. அவுங்க வச்ச பேருதான் இது. மத ஒருமைப்பாடு பாருங்க. எங்க அப்பா அம்மாங்கிறதுக்காக நான் சொல்லலெ. இந்த மாதியே எல்லாரும் இருந்தா ஏன் இங்க மதக்கலவரம்லாம் வரப்போவுது. ம்........ சரி விசாரணெ முடிஞ்சிது. இப்பொ தேசியகீதம். ஏன்னா எதெ முடிச்சாலும் மொறயா முடிக்கணும். என்னா தோழர் நான் சொல்றது. தேசிய கீதம் பத்தி நீ என்னா நெனக்கிறே.

- அது இந்தியாவின் தேசிய கீதம். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் எங்களுக்கான தேசிய கீதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

- அப்புடிப்போடு. டேய் ஃபை நாட் ஃபோரு இங்க பார்ரா தோழர் சொல்றதெ . நீங்களும் இருக்கீங்களடா மடையனுங்களாட்டம். எவுனுக்காச்சும் இந்த மாதி அறிவு இருக்காடா. இருந்தா மனுசன் இப்படி இருக்கணும்டா. பொறாமையா இருக்கு தோழர் ஒன்னைப்பாத்து. என்ன சார் சொல்றீங்க. தேசியகீதத்தைப் பத்தி நீங்க என்னா நெனைக்கிறீங்க.

- நான் அதைப் பிரதியாகப் பார்க்கிறேன். இலக்கியப் பிரதியாக.

- இந்தப் பதிலுக்காகவே ஒங்களுக்கு நோபல் பரிசு குடுக்கணும் சார். என்னா பதிலு சார். எப்படித்தான் ஒங்க மூளையிலெ இப்பிடிலாம் உதிக்கிதோ. ம்...... நானும் அந்தக் காலத்துலெ இப்பிடிலாம் இருந்தவந்தான். ம்........ சரி நாம விசாரணையெ முடிச்சுக்கலாம். எனக்கும் அலுப்பா இருக்குது. எல்லாரும் எழுந்து நின்னு தேசியகீதம் பாடி இத்தோட இதெ முடிச்சுக்கலாம். எல்லாரும் எழுந்து நில்லுங்க.

தமிழ்ச்செல்வன் அமைதியாக அமர்ந்திருந்தான். முளியாண்டியும் தாயுமானவனும் எழுந்து நின்று பாட ஆரம்பித்தார்கள்.

ஐன கன மன அதிநாயக ஐய ஹே
பாரத பாக்ய விதாதா

உட்கார்ந்திருந்த தமிழ்ச்செல்வனை நெருங்கிய கான்ஸ்டபிள் அவன் சட்டைக் காலரைப் பிடித்து அவனை எழுந்து நிற்கச் செய்ய முயற்சித்தான். முடியவில்லை.

முனியாண்டி தாயுமானவனைப் பார்த்தான். தாயுமானவனோ நாட்டுப் பற்று உடல் முழுதும் கொழுந்து விட்டெரிய சத்தியாவேசம் வந்தவனாய் பெருங்குரலெடுத்துப் பாட ஆரம்பித்தான்.

பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா

கான்ஸ்டபின் தமிழ்ச்செல்வனை எழுந்து நிற்கச் சொல்லி சைகை காண்பித்துக் கொண்டேயிருந்தான்.

தாயுமானவன் இப்போது உச்சஸ்தாயியில் பாடினான்.

விந்த்ய மாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா

தமிழ்ச்செல்வனை எழுந்து நிற்கச் செய்யும் முயற்சியில் தோற்றுப்போன கான்ஸ்டபிள் அவன் முகத்தில் பலமாகக் குத்தினான்.

முனியாண்டி பயந்துகொண்டே தாயுமானவனின் குரலுக்கேற்றபடி தன் குரலையும் ஏற்றினான்.

தவ சுப நாமே ஜாகே தவ சுப ஆஷிஷ மாகே
காஹே தவ ஜய காதா

தமிழ்ச்செல்வன் அப்போதும் உட்கார்ந்துகொண்டேயிருந்தான். கான்ஸ்டபிள் கைகளைப் பிசைந்தபடி அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

ஐனகன மங்கல தாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜெய ஹே ஜெய ஹே ஜெய ஹே
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே

தேசிய கீதம் முடிந்ததும் சாமி மலையேறியதும் மயங்கி விழும் சாமியாடியைப் போலானான் தாயுமானவன். பிறகு சுதாரித்துக் கொண்டு கான்ஸ்டபிளிடம் கேட்டான்

- டேய் முட்டாள். தேசிய கீதம் பாடுறப்ப ஏன்டா லொள்ளு பண்ணே. ம். மூவ்மெண்டு இல்லாம நிய்க்கணும்னு கூடவாடா தெயாது.

- இல்லீங்க ஐயா. இவன்தான் எழுந்து நிக்காம அவமரியாதியா ஒக்காந்துகிட்டே இருந்தான். அதான் குடுத்தேன் மூஞ்சிலே.

- ஒனக்கு வயசாயிடிச்சே தவிர மூளையே வளரலெ. ஒனக்குத்தான்யா அது தேசிய கீதம். தமிழ்ச்செல்வன ஒன்னை மாதிரி போலீஸ்காரன்னா நெனைச்சே. அவன் புரட்சிக்காரன்டா. சரி தோழர் நீ மன்னிச்சுக்கெ ஒன்னெ அடிச்ச இந்த மடையனுக்கு பனிஷ்மென்ட் குடுத்திருவம். என்ன பனிஷ்மென்ட் தெயுமா. டேய் நீ தமிழை ஃபக் பண்ணுடா. என்ன ஹாரிபிள் பனிஷ்மென்ட். எனக்கே திடீர்னுதான் மனசுலெ ஃப்ளாஷ் அடிச்சிச்சு. ம்... ரெடி ஸ்டார்ட். க்ளாப்ஸ். எல்லாரும் ஜோரா கை தட்டுங்க.

"Obey the Order"் என்று கத்தியபடி தமிழ்ச்செல்வனின் அடி வயிற்றில் உதைத்தான் அடுத்த கான்ஸ்டபிள்.

ஐயோ என முனகியபடி குனிந்த தமிழ்ச்செல்வனின் கால்சராய் உடனே கிழிக்கப்பட்டது. திமிறிய அவனை சிலர் பிடித்துக் கொண்டார்கள். தன்னை நிர்வாணமாக்கிக் கொண்ட கான்ஸ்டபிள் தமிழ்ச்செல்வனின் பின்புறத்தில் தனது உறுப்பைச் செலுத்தினான். முனியாண்டிக்கு பயத்தில் வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்தது.

Jan 20, 2005

புதிய தத்துவம் - 32,416

"வூட்டுல பிரச்சனை மாமியாரால
நாட்ல பிரச்சனை சாமியாரால"
நன்றி: பாமரன் - தெருவோரக் குறிப்புகள்

ஒண்னு சொன்னாலும், சோக்கா சொன்னார்பா நம்மாளு.

நான் உள்ளார பூந்து சேத்துகனது -
"உலகத்துல பிரச்சனை புஷ்ஷால"

தமிழில் RSS Reader இருக்கிறதா?

தமிழில் ஒரு RSS reader இருக்கிறதா ? நான் உபயோகிக்கும் Active Refresh'ல் எல்லா சுட்டிகளும், அதன் பதிவுகளும், சர்ரியலாக, வெறும் கேள்விக்குறிகள் மட்டுமே வருகிறது. யாரேனும் ஏதாவது சுட்டி இருந்தால் அனுப்புங்கள், இறக்கிக் கொள்கிறேன்.

மேலும், மாலன், எம்.எஸ்.என் ஸ்பேசில், ஒரு புதிய பதிவை தொடக்கியிருக்கிறார்.

்சசில படங்களும், சில படிப்பினைகளும்

நேற்று இரவு பார்த்தப் படங்கள்

- City of God
- Abandoned
- 42 UP
பொழுதுபோகவில்லை , தூக்கம் வரவில்லை என்பதால், இந்த 3 படங்களையும் மீண்டும் பார்த்தேன். இன்னமும், தெருவோரக்குறிப்புகள் பற்றி எழுதாதற்கு என்னை கரித்துக் கொட்டுங்கள். சரியான வார்த்தை சொல்லாடல்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

உலகமே சாட்சி சொல்லும் City of God-ன் குருரமான ரிஜோ டி ஜெனிரோவின் வாழ்வியல் பற்றி, எஸ்.ராமகிருஷ்ணன் முதல் மணிரத்னம் வரை, நிறைய பேர் பார்த்து, எழுதி, சுட்டு படம் பண்ணி விட்டதால், நானும் இங்கே தொடர விரும்பவில்லை. அதனால், ஒவர் டு "அஃபாண்டண்ட்"

Abandoned - ஹங்கேரிய மொழிப்படம். யாரும் பார்த்துக் கொள்ள முடியாத, கண் பார்வை மங்கி வரும் தாயாரிடமிருந்து பிரித்து, ஒரு சிறுவனை நரகமாய்த் தோன்றும் ஒரு ஹாஸ்டலில் சேர்ப்பதிலிருந்து தொடங்கும் படம். இந்த படம் பற்றி எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு சிறுவனின் மறுக்கப்பட்ட குழந்தைத்தனம், அடக்கப்பட்ட உணர்வுகள், சிறுவர்களின் உலகம், சர்வாதிகாரியான ஹாஸ்டல் வார்டன் என விரியும் படம், இறுதியில், இதைவிட, இன்னொரு கொடுமையான ஹாஸ்ட்லுக்கு போவதாக முடியும். முழு நீள உடலுறவு காட்சிகள், நிர்வாணக் காட்சிகள் உள்ள படத்தில், அவைகளை ஒரு சிறுவர்க் கூட்டம் பார்க்கும் பார்வையிலிருந்து பார்க்கும்போது, அவர்களின் உலகம் எப்படி சபிக்கப்பட்டுள்ளது என இதயத்தை கனக்க வைக்கும் படமிது.

படம் முழுக்க, ஒரு விதமான பச்சை நிறமும், சொல்லவியலா அமானுஷ்ய தன்மையுமாய், மிகக் குறைவான ஒலியமைப்புகளோடு, மிகக் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முடிகையில் நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்.

42UP - The world is not enough தந்த ஒரு பிரிட்டிஷ் இயக்குநரின் விவரணப் படமிது. இந்தக் கதைக்கரு மிகவும் எளிமையானது. 7 சிறுவர்கள். அவ்ர்தம் வாழ்க்கையை, 7 வருடக் காலவெளியில், தொடர்ந்து படம் பிடித்து, வாழ்வின் சூட்சுமங்களே, தோல்விகளை, வலிகளை, கனவுகள் கொன்று வாழ்க்கை தேர்ந்தெடுத்த பாதைகளை, எந்த அலங்காரங்களுமின்றி, நேரடியாக சொல்லும் படமிது. இதில் சொல்லப்படும் விவரணைகள், கதைகள், சம்பவங்கள் அனைத்துமே நம் வாழ்விலோ, அல்லது, நமக்கு தெரிந்தவர் வாழ்விலோ, குறைந்தபட்சம் நடந்திருக்கக்கூடிய ்கூடிய சாத்தியங்கள் உண்டு. இதே இயக்குநரின் இந்த வரிசையில் வந்த படங்கள் - 7 Up, 21 Up, 28 Up

இப்படிப்பட்ட படங்கள் பார்க்கும்போது எப்போதும் எழும் தவிர்க்கவியலாத கேள்வி, நமக்கு இப்படிப்பட்ட படங்கள் எடுக்கும் திறமையில்லையா அல்லது மக்கள் ரசனை என்ற பேரில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறோமா அல்லது இங்கே மக்கள் இதற்கெல்லாம் தயாராக இல்லையா ?

நிற்க. யாராவது "மேடம் சாடா" பார்த்து விட்டீர்களா!! ஒரு மார்க்கமாகத் தான் எல்லா விமர்சனங்களிலும் சொல்லுகின்றார்கள். பார்த்து விட்டால், எழுதுங்கள் சாமி, புண்ணியமாக போகும். படித்து விட்டு பார்த்துக் கொள்ளுகிறேன்.

Jan 19, 2005

சாரு டாராயிட்டாரு

நம்ம தோஸ்து சாரு ஊருல இல்லை. ஆனா, நம்ம மக்கள் டிசேதமிழனும் தோழர் வசந்தும் சாருவை ஒரு புடி புடிக்கறாங்கோ!! இன்னா பண்றது, தோஸ்தா இருந்தாலும், எனக்கே சில சமயம் கருத்து வேறுபாடு சாரு மேல இருக்கு. ஆனா, மேட்டர் இன்னான்னா, சாரு, பல பேரை விட எவ்வளவோ பரவாயில்லை. அவரு, RSS-அ தூக்கிப் பிடிக்கலை. தன்னைப் பத்தி விமர்சனம் பண்ணவரை, பையனை விட்டு, கேஸ் போட வைக்கலை. யார் கிட்டையும் ் "ரஜினி சார், சிம்பு சார்" ன்னு குனியலை. அதவிட முக்கியம், கலைஞர் இலக்கியவாதியே இல்லை, காந்தி காங்கிரஸ்காரரே இல்லை ன்னு யாரையும் வம்புக்கிழுக்கலை.

இன்னா, கோணல் பக்கங்கள்லே, கொஞ்சம் சுய புலம்பல் அதிகமாயிருக்கும். பழகின வரைக்கும் கொஞ்சம் ரிஜெண்டான பார்ட்டித்தான் நம்மாளு. ஆனா, சும்மா சொல்லக்கூடாது, செம்மையான டிஸ்கஸன் தான்.

"யக்கக்கோவ், யக்கக்கோவ்வ்வ்வ் கிழி கிழின்னு கிழிக்கப்போவ்"

புது சானல்ங்கோ!!!

இன்னிக்குத்தான் கவனிச்சேன் எங்க வுட்டு டிவி பொட்டில, நம்ம NDTV தாடிக்கார ராய், சோக்கா, செட் பண்ணி ஒரு புது சானல் விட்டுருக்காரு, பேரு, NDTV Profit. சானல்ல, ஒரு கோட்டுப் போட்ட அம்மா ஏதோ நாஸ்டாக் பத்தி சொல்லிக்கினுருந்தாங்கோ!!

இங்க நாஷ்டா துன்னவே வழிய காணோம் அப்புறம் எங்க நாஸ்டாக் பத்தி யோசிக்கறது.

கிறுக்கல் -1

எப்போது திறந்தாலும்
என் இன்பாக்ஸில் காத்திருக்கும்
ஆப்பிரிக்க அரசரின் பொக்கிஷங்களும்
ஆண் குறி நீள வழிவகைகளும்
என் அடமானம் நீக்க யோசனைகளும்
யேசு கிறிஸ்துவின் மகிமைகளும்
அழகிகளின் அந்தரங்கங்களும்
மற்றும் சில அஞ்சல்களும்

Jan 17, 2005

நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி

நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. "அண்ணாமலை" முடிய போகுதாம். எங்க அம்மாக்கு ஒரே கவலை, ராதிகாக்கு என்னவாகுமோன்னு!! அப்பாடா, ஒரு வழியா ஒரு டார்ச்சர் முடியதுரா சாமியோவ்!! ஆனாலும், இது ரொம்ப நாளைக்குத் தாங்காது! அடுத்த டார்ச்சர் அதே நேரத்துல வருது - பேரு "செல்வி" - விளங்கிடும், செல்வி, கிழவியாகி முடியற வரைக்கும் 'தொடரும்" போடுவானுங்க!!

புத்தகங்கள். புத்தகங்கள். மற்றும் என் உரைகள்

இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள்,ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவதாக உத்தேசம் (இது தமிழா?) நாளை, பாமரனின் தெருவோரக் குறிப்புகள்....காத்திருங்கள். இன்றைக்கு தீம்தரீகிட அஞ்சலில் வந்தது. நம்ம ஆளு, விக்ரமாதித்யன் "டாஸ்மாக்" பத்தி ஒரு கவிதை எழுதி இருக்கிறார் பாருங்கள் - தலைவா (இது சென்னை பழக்கதோஷம்!!) பேஜார் போங்க!!

(----------------------------
கவிஞனுக்கும் டாஸ்மாக்க்குமான உறவு
பூர்வஜென்மத் தொடர்பு போல

கவிஞனும்
டாஸ்மாக்கை விடுவதாயில்லை
டாஸ்மாக்கும்
கவிஞனை ஒதுக்குவதில்லை
..................................
டாஸ்மாக்கைக் கடந்தும் கடக்க முடியாமலும்
உழன்று கொண்டிருக்கிறான் கவிஞன்

கவிதை வருமென்று வேறு ஆசை
காட்டுகிறது டாஸ்மாக்.
---------------------------)
நன்றி: திம்தரிகிட மற்றும் ஞானி

Jan 16, 2005

இன்றைக்கு வாங்கியவை

மிக முக்கியமாக வாங்கியது S.ராமகிருஷ்ணனின் உலக சினிமா & துணையெழுத்து மற்றும் விக்ரமாதித்யனின் கவிதைகள். காலையில் சொன்னதுப் போல், மாலதி மைத்ரி, சுகிர்த ராணி கவிதைகள் + நா.முத்துக்குமாரின் "பட்டாம் பூச்சி விற்பவன்" (கலக்கிட்டிங்க தலைவா!!) மற்றும் தெருவோரக் குறிப்புகள் (பாமரன்).

தூக்கம் வருவதனால், மற்றவை நாளை.

புத்தகக் கண்காட்சி

இந்தமுறை கொஞ்சம் நிறைய சுற்றினேன். நிறைய அள்ளினேன். காலச்சுவடு அரங்கில் கனிமொழி இருந்தார். இருந்தாலும், அவரின் எந்த நூலையும் வாங்கவில்லை. ஆனால், காலச்சுவடு அரங்கில், நிறைய வாங்கினேன். நான் வாங்கிய பட்டியல் கீழே உள்ளது. உலாவிய போது ஏதோ அரங்கில், கவிஞர் விக்கரமாதித்தயனை பார்த்தேன். பேசலாம் என நினைத்து தயக்கத்தால் விட்டு விட்டேன். சாரு நிவேதிதாவின் நட்பாலும், நிறைய கவிதை புத்தகங்களினாலும், நம்பி (விக்கரமாதித்தயன்) என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு வருடம் தேடி, கடைசியில், கண்டேன். கொண்டேன் "சே குவாராவின், வாழ்வும் மரணமும்" (விடியல் வெளியிடு). பெரியார் பதிப்பகத்தில் சில நேரங்கள் செலவிட்டு,சிலவற்றை வாங்கினேன். முக்கியமாய் வாங்கியது - ஒரு கத்தோலிக்கக் குருவின் மரண சாசனம் - 3 பாகங்கள். (ஜீன் மெஸ்ஸியர்), அசல் மனுதரும சாஸ்திரம்

தவிர விரும்பி வாங்கியது, பவுத்த அய்யனாரின் "மேன்ஷன் கவிதைகள்",
(பிரபஞனின் முன்னுரை - மேன்ஷன்களை பற்றிய மிகச் சிறந்த ஆவணம்.
"மேன்ஷன் அறையில் ஒரு இளைஞன் கண்ணுக்குத் தெரியாத துயர தேவதை ஒன்றோடு சேர்ந்தே படுக்கைக்குப் போகிறான்"
"மேன்ஷன் உங்களுக்குக் கற்றுத்தரக் காத்திருக்கிறது. கையில் பிரம்பு இல்லாத, புத்தகம் வைத்துக் கொள்ளாத, பரீட்சை வைக்காத வாத்தியார் அது. கற்றுக்கொள்ள நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும், உங்களை!" ) இதைத் தவிர சல்மாவின் கவிதைகள், பெண் மொழிப் பற்றிய புரிதலை உணர்த்தியது.

(" மலை முகடு தொட்டுப் பறந்தாலும்
கூடடைகிறது
இந்தப் பறவையும்"

"உடல்களுக்கிடையேயான மர்மம்
தீர்ந்துவிட்ட பிறகும்
மிச்சமிருக்கும் பாவனைகளுடன்
நீளும் புணர்ச்சி"

"குளியலறையின்
தனிமை ஏற்படுத்துகிறது
நிர்வாணம் பற்றிய
அருவருப்பின் பயம்" )

இந்த முறை போனால், சுகிர்த ராணி, மாலதி மைத்ரி, கிருஷாங்கினியின் கவிதைகள் வாங்க வேண்டும்.

வியாழன் அன்று வாங்கியவை.

சே குவாராவின், வாழ்வும் மரணமும்
ஒரு கத்தோலிக்கக் குருவின் மரண சாசனம் - 3 பாகங்கள்.
அசல் மனுதரும சாஸ்திரம்
சங்கராச்சாரி யார்?
ஒஸாமா பின் லேடன்
மேன்ஷன் கவிதைகள் - பவுத்த அய்யனார்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும் - சல்மா
ஜே.ஜே, சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
ஹர ஹர சங்கர - ஜெயகாந்தன்
குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்
சுட்டாச்சு, சுட்டாச்சு - சுதாங்கன்
9/11: சூழ்ச்சி, வீழ்ச்சி, மீட்சி - பா.ராகவன்
அள்ள அள்ள பணம் - சோம. வள்ளியப்பன்
ராயர் காபி கிள்ப் - இரா.முருகன்.

இன்னமும் எத்தனையோ புத்தகங்கள் என் wish list-ல் உள்ளது, ஆனால், பர்ஸில் "டப்பு" இல்லாததால், நடையைக் கட்டி விட்டேன். இன்று மீண்டும் போவதாய் திட்டம்.Jan 14, 2005

சும்மா Testing!!

என்னத் தான் இருத்தாலும், ஒரு பயம் தான். தமிழ்ல நிறைய பேர் எழுதறாங்க!! நிறைவா வேற எழுதறாங்க!! அதான் லேசா பயம் தட்டுது. பார்ப்போம் நம்ம வண்டி எப்படி ஓடுதுனு!!

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]