Jan 16, 2005

புத்தகக் கண்காட்சி

இந்தமுறை கொஞ்சம் நிறைய சுற்றினேன். நிறைய அள்ளினேன். காலச்சுவடு அரங்கில் கனிமொழி இருந்தார். இருந்தாலும், அவரின் எந்த நூலையும் வாங்கவில்லை. ஆனால், காலச்சுவடு அரங்கில், நிறைய வாங்கினேன். நான் வாங்கிய பட்டியல் கீழே உள்ளது. உலாவிய போது ஏதோ அரங்கில், கவிஞர் விக்கரமாதித்தயனை பார்த்தேன். பேசலாம் என நினைத்து தயக்கத்தால் விட்டு விட்டேன். சாரு நிவேதிதாவின் நட்பாலும், நிறைய கவிதை புத்தகங்களினாலும், நம்பி (விக்கரமாதித்தயன்) என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு வருடம் தேடி, கடைசியில், கண்டேன். கொண்டேன் "சே குவாராவின், வாழ்வும் மரணமும்" (விடியல் வெளியிடு). பெரியார் பதிப்பகத்தில் சில நேரங்கள் செலவிட்டு,சிலவற்றை வாங்கினேன். முக்கியமாய் வாங்கியது - ஒரு கத்தோலிக்கக் குருவின் மரண சாசனம் - 3 பாகங்கள். (ஜீன் மெஸ்ஸியர்), அசல் மனுதரும சாஸ்திரம்

தவிர விரும்பி வாங்கியது, பவுத்த அய்யனாரின் "மேன்ஷன் கவிதைகள்",
(பிரபஞனின் முன்னுரை - மேன்ஷன்களை பற்றிய மிகச் சிறந்த ஆவணம்.
"மேன்ஷன் அறையில் ஒரு இளைஞன் கண்ணுக்குத் தெரியாத துயர தேவதை ஒன்றோடு சேர்ந்தே படுக்கைக்குப் போகிறான்"
"மேன்ஷன் உங்களுக்குக் கற்றுத்தரக் காத்திருக்கிறது. கையில் பிரம்பு இல்லாத, புத்தகம் வைத்துக் கொள்ளாத, பரீட்சை வைக்காத வாத்தியார் அது. கற்றுக்கொள்ள நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும், உங்களை!" ) இதைத் தவிர சல்மாவின் கவிதைகள், பெண் மொழிப் பற்றிய புரிதலை உணர்த்தியது.

(" மலை முகடு தொட்டுப் பறந்தாலும்
கூடடைகிறது
இந்தப் பறவையும்"

"உடல்களுக்கிடையேயான மர்மம்
தீர்ந்துவிட்ட பிறகும்
மிச்சமிருக்கும் பாவனைகளுடன்
நீளும் புணர்ச்சி"

"குளியலறையின்
தனிமை ஏற்படுத்துகிறது
நிர்வாணம் பற்றிய
அருவருப்பின் பயம்" )

இந்த முறை போனால், சுகிர்த ராணி, மாலதி மைத்ரி, கிருஷாங்கினியின் கவிதைகள் வாங்க வேண்டும்.

வியாழன் அன்று வாங்கியவை.

சே குவாராவின், வாழ்வும் மரணமும்
ஒரு கத்தோலிக்கக் குருவின் மரண சாசனம் - 3 பாகங்கள்.
அசல் மனுதரும சாஸ்திரம்
சங்கராச்சாரி யார்?
ஒஸாமா பின் லேடன்
மேன்ஷன் கவிதைகள் - பவுத்த அய்யனார்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும் - சல்மா
ஜே.ஜே, சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
ஹர ஹர சங்கர - ஜெயகாந்தன்
குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்
சுட்டாச்சு, சுட்டாச்சு - சுதாங்கன்
9/11: சூழ்ச்சி, வீழ்ச்சி, மீட்சி - பா.ராகவன்
அள்ள அள்ள பணம் - சோம. வள்ளியப்பன்
ராயர் காபி கிள்ப் - இரா.முருகன்.

இன்னமும் எத்தனையோ புத்தகங்கள் என் wish list-ல் உள்ளது, ஆனால், பர்ஸில் "டப்பு" இல்லாததால், நடையைக் கட்டி விட்டேன். இன்று மீண்டும் போவதாய் திட்டம்.Comments:
வாழ்த்துக்கள்!!! தொடர்ந்து எழுதுங்கள்!!!
 
ஜீ.நாகராஜன் படைப்புகள் என்று காலச்சுடடின் வெளியீட்டில் அவரது அனைத்ட்க்கு படைப்புகளும் இருக்குமே! உங்களுக்கு நாகராஜன் பிடித்தால், அழகிய பெரியவன் எழுத்துக்களைப் படித்துப்பாருங்கள். அவரது குறுநாவல் ஒன்று என்னை மிகவும் பாதித்தது.
 
நானும் ஒரு புத்தகப் புழு. சென்னையில் இல்லாமல் போனதற்கு வருந்துகிறேன். காலையில் 6 மணிக்கு புத்தகம் கையில் எடுத்தால் காப்பி, சோறு இன்றி படித்துக் கொண்டிருப்பேன்...அப்பா,"எங்க அந்த தண்டச்சோறு இன்னும் சாப்பிடலையா?" என்று இரையும் வரைக்கும்!
 
நன்றி தங்கமணி!! தற்போது வாங்கியவைகளைப் படித்து முடித்து விட்டு மீண்டும் தொடங்குகிறேன்.
 
உண்மை. அழகியபெரியவன் ஒரு ஆழமான, அழுத்தமான எழுத்தாளர். அவரின் ஒரு சிறுகதை பற்றிய மதிப்பீட்டை, சாருவின் கோணல்பக்கங்களில் படித்தலிருந்து, அவரை ஆழமாக படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]