Jan 21, 2005

வேஷம் கட்டலாம் வாங்க

ஒரு சின்ன விவாதத்தை ஆரம்பித்து வைக்கலாம் எனத்தோன்றியது.

தமிழ்சினிமா கூத்துப்பட்டறை, மேஜிக் லாண்டர்ன் போன்ற நவீன நாடக தளத்திலிருந்து வருபவர்களை எப்படி நடத்துகிறது என்பது தான். முதலில் நினைவுக்கு வருபவர், அர்ஜுன் அம்மா (ஹலோ, நான் ஆரோக்கியா பால் விளம்பரத்தை சொல்லவரலை) - நான் சொல்ல வந்தவர் கலைராணி. முதலவனில், அர்ஜுனுக்கு அம்மாவாய் நடிக்கத் தொடங்கி, எல்லா இளம் ஹீரோக்களுக்கும், அம்மாவாக நடித்துவிட்டார். ரஜினி, கமல் மற்றும் சில மூத்த நடிகர்கள் தான் பாக்கி. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது, இதில் எந்த அம்மா வேடமும், சீரியல் அம்மாவைத் தாண்டாத கதாப்பாத்திரங்கள். இப்போது அதுக்கும் சீதா, சரண்யா ருபங்களில் வந்தது வேட்டு. சமீபத்தில் சென்னையில் நடந்த உலகத்திரைப்படவிழாவில் எல்லா படங்களுக்கும், "அம்மா" ஆஜர்.

அடுத்து, முக்கியமாய் நான் எதிர்பார்த்து ஏமாந்து போனது "ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" புகழ் பசுபதி. விருமாண்டியில் கமலுக்கு இணையான பாத்திரம், சரிதான், ஒரு கலக்கு கலக்குவாருன்னு நினைச்சு காயப் போடரதுக்கு முன்னாடியே, "சுள்ளான்" "மதுர", "திருப்பாச்சி" என்று வரிசையாக ஒரு தெலுங்கு வில்லனுக்கு இணையான கதாப்பாத்திரங்களில் நடித்து காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறார்.

"ஏடே நீ சொல்லு' என அழகியில் ஆசிரியராக அறிமுகமான, ஜார்ஜ், கூத்துப்பட்டறையில் ஒரு முக்கியமான இயக்குநர். சமீபத்தில் எந்தப் படத்திலும் பார்த்ததாக ஞாபகமில்லை. என்ன செய்யறிங்க ஜார்ஜ்?

சமீபத்தில் குமுதத்திலேயோ/ ஆ.விலேயோ வந்த பாண்டிச்சேரியின் டாப் டென் பிரபலங்களில் ஒருவரான, முனைவர் கே.வி.குணசேகரன் (நாட்டுப்புறக் கலை துறையில் தலைமை என நினைக்கிறேன்), நாசரால், "தேவதை"யில் அறிமுகமாகி பிறகு சிலப்படங்களில் நடித்து, இப்போது நடிக்கிறாரா எனத்தெரியவில்லை.

இதையும் தாண்டி, நிறைய பேர்களை தமிழ்சினிமா, மென்று முழுங்கியிருக்கிறது - வீதி நாடக பிரபலம், ப்ரளயன், ப்ரவீண் (ஆய்த எழுத்தில் மாதவனுக்கு அண்ணணாய் வருபவர்), மற்றும் நிறைய பேர்.

இன்னமும் மிச்சமிருப்பவர்களில், கீழ்க்கண்ட கதாப்பாத்திரங்களுக்கு இவர்கள் பொருத்தமாயிருப்பார்கள் எனத் தோன்றுகிறது.
பின்/முன் மற்றும் ஃசைடு குறிப்பு: இதை ஒரு எள்ளலாக பார்க்கவும், சீரியஸா, பார்ப்பவர்கள், அரசு பொது மருத்துவமனையில் "டிரிப்ஸ்" ஏற்றிக்கொண்டுப் பார்க்கவும்.

சு.ரா - ஜோதிகா / திரிஷா வகையறாக்களுக்கான பணக்கார அப்பா
ஞானி - ரகுவரனுக்கு பதிலாக, இடதுசாரி சிந்தனைகளைப் பரப்பும் தலைமறைவு வாழ்க்கை வாழும் தலைவர்
எஸ்.ரா - மிடில் கிளாஸ் அப்பா, குடும்பத்தின் பெரிய அண்ணன். (கொஞ்சம் டை கட்டி கோட் மாட்டிவிட்டால், ஒரு MNC/FMCG மேலாளர் (CEO/CTO) )
நம்பி /விக்ரமாதித்யன் - தமிழ் அமானுஷ்ய சீரியலுக்கான "சித்தர்"/ "பித்தன்" கதாப்பாத்திரங்கள்
பவுத்த அய்யனார் - ஹீரோவின் நண்பர் (சுக்ரன், ஸ்ரீமனுக்கு வேட்டு)
ப்ரபஞ்சன் - தமிழாசிரியர் / கல்லூரி பேராசிரியர்

இன்னமும் நிறைய பேர் ஞாபகத்துக்கு வரவில்லை, நீங்களும் உங்கள் பங்களிப்பை நிரப்புங்கள்

Comments:
சாரு நிவேதிதா தமிழ் எழுத்தாளர்களை திரைப்பட நடிகர்களுடன் ஒப்பிட்டு எழுதியதைப் படித்திருக்கிறேன். அதில் தன்னை எந்த நடிகருடன் ஒப்பிட்டு சாரு நக்கலடித்தார் சொல்லுங்கள் பார்ப்போம்? கமல்ஹாசன் ;)
 
சாரு நிவேதிதா தமிழ் எழுத்தாளர்களை திரைப்பட நடிகர்களுடன் ஒப்பிட்டு எழுதியதைப் படித்திருக்கிறேன். அதில் தன்னை எந்த நடிகருடன் ஒப்பிட்டு சாரு நக்கலடித்தார் சொல்லுங்கள் பார்ப்போம்? கமல்ஹாசன் ;)
 
சரியாக ஞாபகமில்லை, ஆனால், சாரு சொன்ன வேறு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துத் தொலைக்கிறது. சாருவின் நண்பர் அவரை ஒரு தொலைக்காட்சி தொடர்க்குகாக "ஸ்கிரின் டெஸ்ட்" எடுத்தப்போது, அவருடன், ஒரு ஒல்லியான பெண்ணையும் "ஸ்கிரின் டெஸ்ட்" எடுத்தார்கள். பிறகு, அந்த வாய்ப்பு கை நழுவிப் போனது. ஆனால், அந்தப் பெண் சில வருடங்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டையே கலக்கிய நபர். அந்தப் பெண்ணின் சினிமா பெயர் - ஷகிலா
 
ஜெயமோகனுக்கென்ன ? ராமரா? அனுமானா?
 
கார்த்திக், என்னை வம்பில் மாட்டி வைக்காதீர்கள். அப்புறம், நான் திண்ணையிலோ, காலச்சவட்டிலோ "கட்டம்" கட்டப்பட்டு விடுவேன். எனக்கென்னமோ, ஜெயமோகனை ஒரு கிரேக்க கதாநாயகனாகப் பார்க்கலாம் எனத் தோன்றூகிறது ;-)
 
கிரேக்கத்தை இழுத்துக்கொண்டு வந்துவிட்டீர்களே! அரிஸ்டோஃபானஸின் ஒரு குட்டிக்கதை இருக்கிறது:

ஒரு சிங்கம், காட்டில் ஒரு முயலை வளைத்துவிடுகிறது. சாப்பிடத் தயாராகிறது. முயல் கெஞ்சுகிறது:
"எவ்வளவு பெரிய மிருகம் நீ? என்மேல் கருணை காட்டி, என்னை விட்டுவிடக்கூடாதா?"
ஒருகணம் யோசித்து, பெருந்தன்மையுடன் சிங்கம் சொல்கிறது:
"உன் நகங்களைக் காட்டு"

-ஜெயமோகனை அந்த சிங்கம் என்று கொள்ளலாமா? ஒருவேளை அதுவும் ஒரு கிரேக்க சிங்கமாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் ;)
 
நான் கிரேக்க கதாநாயகன் என்பதை, "காடு" அல்லது வேறு ஏதோ நாவலில் ஒரு பெண் பாத்திரம் காதலிப்பதை வைத்து 'பகடி' அடித்தது. அது சரி, முயலென உருவகப்படுத்தியது 'வாசகனையா" ;-)
 
பதிக்க மறந்தது..விஜய் தொலைக்காட்சியில் திங்கள் தோறும் வரும் "இது எப்படி இருக்கு" பார்க்கறீர்களா, அதில் பல்வேறு விதமான பெண் கதாப்பாத்திரங்களில் வந்து கலாய்க்கும் "அபர்ணா" கூட நவீன நாடகப் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பது செவி வழிச் செய்தி.
 
Manoj Bajpai - National School of Drama
 
நஸ்ருதீன் ஷாவும், அனுபம் கெரும் நாடக்த்திலிருந்து வந்தவர்களா, இல்லை வந்து நாடகத்துக்குப் போனவர்களா ?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]