Jan 24, 2005

யாராவது தமிழ் கத்துக் கொடுங்க!!

கோணங்கியின் பதில்கள் - பவளக்கொடி - அக்டோபர் 2001
"பயத்துக்குள் என்ன இருக்கிறது ?

எத்தனையோ இருக்கிறது. காமம்தான் பயம். பயம்தான் கனவு. கனவுதான் மனிதர்களை இவ்வளவு மென்மையான சிலைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது, கடினமான பொருளாயத உலகத்தைக்கொண்டு, இருப்பைக் கொண்டு. கடினமானதுதான் அழகியல். பயத்தினுடைய அளவீடுகள் மென்மையக் கடுமையாக்குகின்றன. பயம் என்பது புராதன உருப்பளிங்கு. அதற்குள் இருட்டு ஈரமாக ஊர்ந்து ரத்தநாளங்களில் வெப்பரத்தப் பிறவியாகி உறைய வைக்கிறது மனிதனை. பயம் இருட்டில் இருக்கிற்து. பயத்துக்குள் என் கண்ணாடி அலைகிறது அனைத்து உருவங்களும் என் கண்ணாடிக்குத் தப்பி அலைகின்றன வேகமாக. இவற்றை இணைத்து வைக்கிற கனவு பயத்தில் திரும்புகிறது நம்மிடம். ஒரு பூச்சி உற்பட பயந்துதான் இருக்கிற்து. தான் பிறந்த வெளியிலேயே பயம்தான் இருக்கிறது. பயமென்பது முடிவற்றதாக் மனிதன் மீது இருப்பாக அழுத்திக் கொண்டிருக்கிற்து. கடவுளும் பயந்துதான் இருக்கிறார்."
சத்தியமா ஒண்ணும் புரியலே. தமிழ்ல இருக்கறதனால படிக்க முடியுது. அதைத் தவிர வேற ஒரு மண்ணும் விளங்கலை. நான் ரொம்ப காலமா தமிழை தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்க தமிழாசிரியர்களால மட்டுந்தான் முடியும்ன்னு நினைச்சிருந்தேன், இப்ப அந்த வேலையை இலக்கியவாதிகள் எடுத்துக்கிட்டாங்க போலிருக்கு.

ஏங்க, நிசமாலுமே கேக்கறேன், எழுதறது அடுத்தவங்களுக்கு புரியணுமின்னு தானே எழுதறோம், அப்படி புரியாம எழுதினா எத்தனை பேரு படிப்பாங்க, எத்தனை பேரு புரிஞ்சிப்பாங்க. படிச்சா மட்டும் ஒரு வேளை போதுமோ!!

இன்னமோங்க, படிப்பறிவில்லாத ஆளு கேக்கணும்னு தோணிச்சு, கேட்டுப்புட்டேன்.

Comments:
Ha Ha...

சொல்றதும் புரிய கூடாது... சொல்ல வராதும் புரியக் கூடாது... அது தாங்க இலக்கியம் என்கிற நினைப்பு. எல்லாரும் தமிழ்ல பிஎச்டி வாங்கிட்டாங்கங்கிற நினைப்பு தான் இலக்கியமா எழுத வாரவங்களுக்கு. பேசாம அந்த கோணங்கி கோனார் தமிழ் உரையும் கொடுத்த நல்ல இருக்கும் பவளக்கொடியோட. அது சரி உருப்பளிங்குன்ன என்ன?
 
நண்பா, கோணங்கி இத்தனை தெளிவாய் எழுதி(அவரது ஆரம்ப கால சிறுகதைகளுக்கு பிறகு) நான் வாசித்ததில்லை. அத்தனை வாக்கியங்களையும் வாசிக்க முடிகிறது. அதற்கு அர்த்தமும் உண்டு. அதை குற்றம் சொல்லும் உங்களை எப்படி கடுமையாய் கண்டிக்கலாம் என்று தெரியவில்லை.
 
"சொல்றதும் புரிய கூடாது... சொல்ல வராதும் புரியக் கூடாது... அப்போ தாங்க இலக்கியவாதின்னு மதிப்பாங்க"

மேலிட்ட மறுமொழியை மேற்சொன்னபடி திருத்தி படிக்க....
 
வசந்த், நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "பிதுரா" படித்துப் பார்த்தீர்களா? நான் இட்டது, அந்தப் பேட்டியிலேயே என்க்கு கொஞ்சம் விளங்குவதுப்போல் தோற்றம்ளித்த பதிலேயன்றி வேறு ஒண்றுமில்லை. இதற்கு நீங்கள் என்னை தமிழ் நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இல்லை எனச் சொன்னால், அதே ஒரளவுக்கு ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும், ஒரு transistional வாசகனுக்கு எந்தவிதமான வாசிப்பு அனுபவத்தை இந்தப் பதில்கள் ஏற்படுத்தும் என எண்ணிப் பார்த்தல் நலம்.
 
நான் உங்களை குற்றம் சாட்டவில்லை. எழுதியது கிண்டல்! கோணங்கியின் மற்ற எழுத்துக்களை படித்தால் இவை எத்தனை தெளிவாய் எழுதபட்டுள்ளது என்று புரியும்!
 
இன்றைய தத்துவவியலின் மறுபதிப்புதான் இலக்கியம். சிறுசிறு கதைகளின் மூலம் வாழ்க்கைத் தத்துவங்களை எளிய முறையில் சொன்னது அக்காலம். பெருங்கதைகள் நாவல்கள் மூலம் தத்துவார்த்த விவாதங்களை மனதில் நடத்துவது இக்காலம்.

நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பமும்கூட தெரியாத பாமரர்களுக்கு விளையாட்டாகவும், ஏமாற்று செப்படி வித்தையாகவும், கடினமானதாகவும் தோற்றமளிக்கும். ஆனால் கற்றுத் தேர்ந்தவர்கள் கற்க விருப்பமில்லாத அவர்களின் அறியாமையையும் ஆற்றாமையையும் நினைத்து வருத்தப்படத்தான் முடியும். அதுபோலவே இலக்கியங்களை உணர முயற்சி செய்யாதவரையில் அவற்றில் சுவை மட்டுமல்ல சொரணையும் இல்லாததுபோலத்தான் தோற்றமளிக்கும்.

தத்துவார்த்த விவாதங்களில் உங்களுக்கு எவ்வித ஈடுபாடு என்பதைப் பொருத்து இந்த இலக்கிய விவாதங்களும் பேட்டிகளும் உங்களுக்கு புரியும். இவை கடினமானதன்று. கவனத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டியவை.

ஒரு பேட்டியில் திரு.மனுஷ்யபுத்திரன் அவர்கள் குறிப்பிட்டிருந்ததுபோல "இவ்விலக்கியம் உங்களுக்கு புரியவில்லையென்றால் அது உங்களுக்காக எழுதப்பட்டதல்ல". வாழ்வின் மிக நுண்ணிய உணர்வுகளை மனிதம் தாண்டி சிந்தித்துப்பார்க்கும் போது இலக்கியத்தில் கலந்திருக்கும் உண்மை தாண்டிய உணர்வு புரியக்கூடும். பொறுத்திருங்கள்.
 
ஏம்பா,
அரசு இல்லாங்கட்டி அந்துமணி படிச்சு அறிவ வளத்துக்க....
பத்தாதாங்காட்டி அல்லி இருக்கச்சொல்ல இத்த எல்லாம் இன்னாத்துக்கு நீயி படிக்கற/பாக்குற?
மினிமோட்சத்தான்ட பிட்டு பார்த்து புல்லரிக்க்ச்சொல்ல அப்படியே மோட்சம் தான் தலிவா!
 
//நான் ரொம்ப காலமா தமிழை தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்க தமிழாசிரியர்களால மட்டுந்தான் முடியும்ன்னு நினைச்சிருந்தேன், இப்ப அந்த வேலையை இலக்கியவாதிகள் எடுத்துக்கிட்டாங்க போலிருக்கு.//

தலிவா. நீங்களும்தான் Madame Sata பாத்தீங்க; யாரோ ஒரு ஆள் வந்து 'என்னய்யா இழவு படம் இது, என்ன இருந்தாலும் நம்ம தலிவரோட பாச்சா படம் மாதிரி சுளுவா பிரியுதா' ன்னா உங்களுக்கு எப்படி இருக்குமென்று தெரிந்துகொள்ள ஆசை! இந்தமாதிரி விவாதங்களில் ரோஸாவசந்த் போன்றவர்களும் nosedive அடிக்கும்போதுதான் வினோதமாக இருக்கிறது! அல்வாசிட்டி வேறு நிஜமாகவே போட்டுத் தாக்குகிறார்! அய்யா சாமி, விர்ஜினியா வுல்ஃப், சாம்யுவெல் பெக்கெட், ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று கோணங்கியின் எழுத்துக்களுக்கு முன்மாதிரி எழுத்துக்கள் கணக்கற்றுப் பரந்து கிடக்கிறது உலக இலக்கியத்தில். ஜெயமோகன் போன்றவர்கள், நனவோடை என்ற உத்தியைச் சற்று ஓரங்களில் உதைத்து நெளித்துப் பெயர்மாற்றி, "கோணங்கி போன்றவர்கள் எழுதுவது ஒருவகை தானியங்கி எழுத்து (automatic writing) என்று பஜன் பாடுவார்கள் - ஏதோ கியர் போட்டுவிட்டால் வண்டி தானாகக் கடகடவென்று ஓடுவது போல! ஐயா, உங்கள் நண்பர் சாருவின் அபிமான எழுத்தாளரான ழான் ஜெனேயின் Funeral rites போன்ற புத்தகங்களைப் பிறகு என்ன சொல்வது? வில்லியம் பர்ரோஸ் போன்ற கலகக்காரர்கள் கூட அவரது ஃபேவரைட்டு இல்லியா? அவரது Naked Lunch போன்ற புத்தகங்களைப் பிறகு என்ன சொல்வது? புத்தகமாகப் படிக்கச் சந்தர்ப்பம் வாய்க்காவிட்டால் டேவிட் க்ரானென்பெர்க் புத்தகத்தைச் சீரழித்து எடுத்த ஒரு டுபாகூர் film version உள்ளது; அதையாவது பார்க்க முயலவும். என்னவகையான Caucasoid mentalityயில் இதுபோன்ற தமிழ் வாசக உலகம் தத்தளித்துக்கொண்டிருக்கிறதென்று நிரூபிக்க இலக்கியவாதிகள் தேவையில்லை, பட்டுக்கோட்டை பிரபாகரே போதும். முன்பு ஒரு விமானக் கடத்தல் குறித்த தொடர்கதையோ நாவலோ 'சில்க் ஃபோர்ட்டு பிரபாகர்" எழுதியபோது (அதை நான் படித்திருக்கிறேன், பெயர்தான் நினைவிலில்லை), "எந்த ஆங்கில நாவலிலிருந்து காப்பியடிச்சீங்க தம்புடு" என்ற ரீதியில் கேட்டார்களென்று ஒருமுறை வருத்தப்பட்டிருந்தார். ஏனுங்க ஆகாசத்துல ப்ளேனு பறந்துபோறத நாமளும்தான் பார்க்கறோம், அது வெடிச்சா எப்படியிருக்கும்னுகூட யோசிக்க முடியாத அளவா நமக்கு கபாலம் காஞ்சி போச்சி ஆவி ஓஞ்சி போச்சி!! ஐரிஷ் கலாச்சாரத்தில் பரிச்சயமுள்ள மனோநிலை வேண்டும் யுலிஸிஸ் நாவலைப் புரிந்துகொள்ள என்று ஜெ.மோ எழுதியிருந்தார். யுலிஸிஸ் புத்தகத்தில் சட்னி என்றுகூட ஒரு வார்த்தை உள்ளது - டப்ளினில் ரொட்டிக்குச் சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்களா என்ன? நமக்கு ஜி.க்கே கொஞ்சம் உதைக்கும்ங்கிறதால யாராவது விளக்கினா தேவலை. இந்த ராமாயணத்தை எத்தனை தலைமுறைகளுக்குப் பாடிக்கொண்டேயிருக்கவேண்டுமென்று தெரியவில்லை. மௌனியைப் பற்றியும் இதே விமர்சனங்கள்தான் இருந்தன. எம்.வி.வெங்கட்ராம் மௌனியைப்பற்றி எழுதியதைப் படித்துப் பாருங்கள் சாமி. இருநூறு பக்க நோட்டுப்புத்தகத்தில் அங்கங்கே மௌனி குறித்து வைத்திருந்ததுதான் அவரது பல கதைகளாக உருவாகியிருக்கின்றன.
இப்போது ஒரு literary-slick ஜூமாக்ஸு காட்டவேண்டுமென்றால் மௌனி இன்றியமையாத எழுத்தாளர் அல்லவா நண்பரே? இல்லை மௌனி வெறும் ஜுமாக்ஸா? எனக்கு என்னமோ அப்படித் தோன்றவில்லையே நண்பரே?

நிற்க; கோணங்கி, ரமேஷ்-பிரேம் மற்றும் அதுபோன்ற எழுத்துக்களைப் புரியவில்லை புரியவில்லை என்று பிரலாபித்துத் தள்ளும் எத்தனையோ பேர் உள்ளார்கள். இல்லை எவ்வளவு தெளிவாக எழுதவேண்டும் என்றுதான் தெரியவில்லை. சாரு போல முனியாண்டியாக எழுதவேண்டுமா, அல்லது ஜெயமோகன் ஸ்டைலில், "பேரர், சாலட்" என்று எழுதவேண்டுமா? (திண்ணை அறிவியல் புனைகதை வரிசையில் நாசரும் கிருஷ்ணனும் உரையாடும் ஏதோவொரு கதையில் உள்ளது இந்த நிகரற்ற வாக்கியம்!). கட்டுரைகள் வண்டி வண்டியாக எழுதித் தள்ளலாம், இப்படி இருக்கவேண்டும் புனைவுகள் அப்படி இருக்கவேண்டும் என்று, ஆனால் புனைவுகளின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பவையே அந்தத் தியரிகள். செத்த பாம்பு சட்டையுரிக்குமா என்பதுபோலத் தமிழ்ப் புனைவுகளைத் திருப்பித் திருப்பிப் போட்டு தர்ம அடி அடித்துக்கொண்டிருந்தபோது, கோணங்கி போன்றவர்களின் எழுத்துக்களே என்னைப்போன்றவர்களை வசீகரித்தது. அதன்மேல் எனக்கும், எனது நண்பர்களுக்கும் பிற விமர்சனங்கள் இருந்தாலும், புரியுதா இல்லையா என்ற விமர்சனம் எப்போதும் இருந்ததில்லை. Transitional வாசகன் என்று உங்களை நீங்கள் கருதினால், பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது நீங்கள்தான், ஆள்சேர்க்க, ரதகஜதுரகபதாதிகளோடு ஊர்வலம் போக எழுத்தாளன் வேறு மாதிரியெல்லாம் எழுதமுடியாது. நாலு வயதில், அம்புலிமாமாவில் பாதிக் கதைகளே சிரமப்பட்டுத்தான் புரிந்துகொள்ளமுடிந்தது. வாஹினிக்கு ஒருவேளை நான் கடிதம் எழுதிப்போட்டிருக்க வேண்டும், என்ன தலிவா இவ்வளவு கராபா (சொருகு கொஞ்சம் உருது) இருக்குது கதைங்கல்லாம் என்று.

அல்வாசிட்டி வேறு கோனார் நோட்ஸ் கேட்கிறார். மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம், உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை, பாழி (அத்தோடு நிற்கிறது என் வாசிப்பு) இத்தனை புத்தகங்களில் (அல்லது சில கதைகளாவது) எத்தனை படித்துவிட்டுக் கோனார் நோட்ஸ் கேட்கிறார் என்றுதான் தெரியவில்லை. வாசக அனுபவத்துக்கும் LKG, UKG அனைத்தும் உண்டு என்பதும் நிஜம் இல்லையா?

அழியாச்சுடர், குடும்பத்தேர் போன்ற கதைகளாவது முதலில் படிக்கமுயல்வது நலம். புரியாதவற்றைப் பின்பொருநாள் பார்த்துக்கொள்ளலாம். இன்னும் தெளிவாக, விளக்கமாக எழுதமுடியும், காலையில் வந்தவுடன் இவ்வளவு நேரம் தட்டிக்கொண்டிருக்க எனக்கே கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. சந்தர்ப்பமிருப்பின் மறுபடி வருகிறேன்.
 
போட்டிங்களே பலமா முதுகுல! நான் சொன்னது ஒரு transistional வாசகனோட புலம்பல் சாமி. உங்கள மாதிரி, வசந்த் மாதிரி, சனியன் மாதிரி, நான் படிக்கலை. அதான் போட்டேன்இல்லை படிப்பறிவு இல்லாத ஆளுனு. என்ன பண்ணறது, நமக்கு பாக்கற அளவுக்கு, படிப்பு ஏற மாட்டேன்ங்குது.

அதைவிட, உருத்துன விசயம், சாரு என் நண்பர்தான், அதுக்காக, அவரு படிக்கற்தெல்லாம் நான் படிக்கணும்ன்றது இல்ல. என் கேள்வி, நான் அவரோட புத்தகங்கள் படிச்சதால வரலை, இத்தனைக்கும் அவரோட பேட்டி தான் படிச்சேன், அதுவே தலை சுத்திட்சு.

போட்டிங்களே பலமா முதுகுல! நான் சொன்னது ஒரு transistional வாசகனோட புலம்பல் சாமி. உங்கள மாதிரி, வசந்த் மாதிரி, சனியன் மாதிரி, நான் படிக்கலை. அதான் போட்டேன்இல்லை படிப்பறிவு இல்லாத ஆளுனு. என்ன பண்ணறது, நமக்கு பாக்கற அளவுக்கு, படிப்பு ஏற மாட்டேன்ங்குது.

அதைவிட,லேசா உருத்துன விசயம், சாரு என் நண்பர்தான், அதுக்காக, அவரு படிக்கற்தெல்லாம் நான் படிக்கணும்ன்றது இல்ல. அவர்கிட்ட இருக்கற அறிவு எனக்கிடையாது. என் கேள்வி ரொம்ப சுலபம். எப்படி ஒரு வாசகன் ஒரு எழுத்தாளரோடு பரிச்சய படுவான் ? முதல்ல அங்கே, இங்கே படிச்சு, ஏதோ புடிச்சுப் போனா, தொடர்ந்து படிக்கச் செய்வான். அவனை நீங்க வார்த்தையைப் போட்டு மிரட்டினா, நாலு நாள் மூச்சு பேச்சு இல்லாம படுத்துட்டு, பக்திகுமுதம், படிக்க ஆரம்பிச்சிடுவான்.

என்னமோ போங்க, ஒரே வெள்ளைக்காரன் பேரா போட்டிருக்கிங்க. படிச்சவருக்கு நான் மரியாதை தரதுனால, ஒரமா ஒதுங்கிகறேன்.
 
ஒரு சொந்த கதை - http://raja.yarl.net/archives/001208.html
 
/இந்தமாதிரி விவாதங்களில் ரோஸாவசந்த் போன்றவர்களும் nosedive அடிக்கும்போதுதான் வினோதமாக இருக்கிறது! /

மோண்ட்ரீஸர், நான் இங்கே என் கருத்தை சொல்லவில்லை. இது குறித்து இப்படி ஒரு விவாதம் கிளம்புவதும், இது போல பல வித கருத்துக்கள வருவதும் நல்லது என்று நினைக்கிறேன். எழுத தொடங்கினால் பெருசாய் (பிறகு எதிர்வினையாய் கேள்விகள் கேட்க்கப்பட்டு, பதில் சொல்லி இன்னும் பெருசாய்) போய்விடும் என்றே..

என் கருத்தை இது குறித்த ஒரு தனிபதிவாய் சாவகாசமாய் போடலாம் என்று இருந்தேன். அச்சாய் அப்படியே நீங்கள் சொல்லவந்ததாய் இல்லாவிட்டாலும், இந்த தொனியில்தான் எழுத இருந்தேன்.

உங்கள் 'விமானம்' இன்னும் (முழுவதும்) படிக்கவில்லை. மீண்டும் சாவகாசமான வாசிப்பிற்கு புக்மார்க் போட்டிருக்கிறேன்.
 
நான் பரவாயில்லை ராஜா. நான் போட்டது ஏதோ புரியறாமாதிரி இருக்கு, உங்கப் பக்கத்தைப் படிச்சுப் பார்த்தேன். எனக்கென்னமோ எல்லாமே ஒரு பேரொளியின் புதிர்களாய், இலக்கின்றி முன்னேறும் சூரியக்கதிர்களாய்,சோமாலிய பழங்குடியின் பாடல்வரிகளாய், யுகயுகமாய் சூட்சுமமாய் கவிதைப் படிக்கும் பறவைகளின் பிரதியாய் ,பிறழ்ந்துப் போன மனநிலையில் வான் காக் வரைந்த ஒவியத்தின் உபபிரதியாய் இதைப் பார்க்கிறேன்.

இதுக்குத்தான் ஓவராப் படிக்கக்கூடாதுன்னு எங்க பாட்டி, பால்ல தொட்டு பிஸ்கட்டு குடுக்கும்போது சொன்னாங்க.
 
//அதைவிட,லேசா உருத்துன விசயம், சாரு என் நண்பர்தான், அதுக்காக, அவரு படிக்கற்தெல்லாம் நான் படிக்கணும்ன்றது இல்ல. அவர்கிட்ட இருக்கற அறிவு எனக்கிடையாது. என் கேள்வி ரொம்ப சுலபம். எப்படி ஒரு வாசகன் ஒரு எழுத்தாளரோடு பரிச்சய படுவான் ? முதல்ல அங்கே, இங்கே படிச்சு, ஏதோ புடிச்சுப் போனா, தொடர்ந்து படிக்கச் செய்வான். அவனை நீங்க வார்த்தையைப் போட்டு மிரட்டினா, நாலு நாள் மூச்சு பேச்சு இல்லாம படுத்துட்டு, பக்திகுமுதம், படிக்க ஆரம்பிச்சிடுவான்.//

நாராயணன், தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்லவில்லை, அப்படிச் சொல்லும் அபிப்ராயமும் இல்லை. சாரு படிப்பதையெல்லாம் நீங்கள் படிக்கவேண்டும் என்று நான் சொல்வதாகப் பட்டிருந்தால், அது என் தவறே. அதுவும் ஒரு புத்தகம் என்ற ரீதியில்தான் எழுதினேன், ஒருவேளை உங்களுக்குப் பரிச்சயமிருக்கலாம் என்ற எண்ணத்தில், மற்றபடி உள்நோக்கமோ வேறு எதுவோ இல்லை. நானேகூட என் பதிவில் பல எழுத்துக்களைத் திட்டியும் விமர்சித்தும் (அப்படிச் சொல்லலாமா என்று தெரியவில்லை) எழுதியிருக்கிறேன், எழுதாமல் நினைத்தும் இருக்கிறேன், கோணங்கி இன்னபிறவர்கள் உட்பட. ஆனால், "புரியவில்லை" என்று வசைபாடுவதுதான் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. ஒருவேளை எப்படிப் "புரியவில்லை" என்னும் விஷயம்தான் எனக்குப் புரியவில்லையோ என்னவோ! ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார், தேவிபாலா, பாலகுமாரன் என்று படித்தும், விஜயசாந்தி டப்பிங் படங்கள் அனைத்தும் பார்த்தும் அங்கே படிச்சு இங்கே புடிச்சு வந்த வாசகன்தான் நானும் என்பதால், ஏதோ அட்வைஸ்கள் என்ற ரீதியில் பார்க்கவேண்டாம் - அட்வைஸ் செய்யுமளவு எனக்கு வயதும் கிடையாது படிப்பும் கிடையாது, முக்கியமாக எண்ணமும் கிடையாது. சற்றுக் காலம் முன்பு, சிறுபத்திரிகைகள் படிக்கும் அனைவரும் ஜோல்னாப்பை, சோடாபுட்டி பரட்டைத்தலையுடன் திரியும் கிறுக்கர்கள் என்ற ரீதியில் குமுதம் போன்ற இதழ்கள் எழுதிவந்துள்ளன, இப்போது சு.ரா தீராநதியில் எழுதுகிறார். அப்போது குமுதம் படித்து 'இலக்கியம்' படிக்காமல் விட்டவர்களெல்லாம் குமுதத்தை sue பண்ணவா முடியும்?

//நான் பரவாயில்லை ராஜா. நான் போட்டது ஏதோ புரியறாமாதிரி இருக்கு, உங்கப் பக்கத்தைப் படிச்சுப் பார்த்தேன். எனக்கென்னமோ எல்லாமே ஒரு பேரொளியின் புதிர்களாய், இலக்கின்றி முன்னேறும் சூரியக்கதிர்களாய்,சோமாலிய பழங்குடியின் பாடல்வரிகளாய், யுகயுகமாய் சூட்சுமமாய் கவிதைப் படிக்கும் பறவைகளின் பிரதியாய் ,பிறழ்ந்துப் போன மனநிலையில் வான் காக் வரைந்த ஒவியத்தின் உபபிரதியாய் இதைப் பார்க்கிறேன்.//

முன்முடிவுகளை வைத்து படைப்புகளைத் தவிர்ப்பது வாசகனுக்கான இழப்புதான் என்பதால்தான் எழுதியது. மற்றபடி, என் வலைப்பதிவில் என்ன எழுதவேண்டுமென்று தோன்றுகிறதோ அதை நான் எழுதுகிறேன்; அவ்வளவுதான். கற்றது கைம்மண் அளவு என்பதை முழுமையாக நம்புபவன் நான், அதனால், பழங்குடியின் பாடல்வரிகளாக இருந்தாலும் கவலையில்லை ;). தமிழனாய் இருப்பதால் ஒருவகையில் நானும் பழங்குடி தானே. வலைப்பதிவுகளில் நான் எதையோ கிறுக்குவது என் பொழுதுபோக்குக்கு. அதனால், அதைப்பற்றி எனக்குப் பெரிதாக அக்கறையுமில்லை.

//என்னமோ போங்க, ஒரே வெள்ளைக்காரன் பேரா போட்டிருக்கிங்க. படிச்சவருக்கு நான் மரியாதை தரதுனால, ஒரமா ஒதுங்கிகறேன்.//
வெள்ளைக்காரன் பேராப் போட்டு பிஸ்த்து காண்பிக்கறேன்னு நினைச்சுட்டீங்க போலிருக்கு! சொன்னாத் தப்பு, சொல்லாட்டியுந் தப்பு, என்ன செய்ய. அதையெல்லாம் படிச்சுத் தொலையாட்டி யார் சொன்னதையாவது கேட்டுக்கொண்டு "மார்க்வெஸ்ஸின் மந்திரத் தேடல்கள், ஃப்யுண்டஸின் புனிதப் புளுகுகள், கொர்த்தஸாரின் கோர அனுபவங்கள்" என்று ஜெராக்ஸ் மிஷின் மாதிரி எழுத்தாளர்கள் சொல்வதையே பிரதியெடுத்துச் சொல்லிக்கொண்டு வாழ்க்கை முழுதும் ஜெராக்ஸ் வாசகனாக இருக்கவேண்டுமா என்று சொல்லுங்கள் :-).

மற்றபடி, ஒரு பின்னூட்டமாக எழுதத்தான் நினைத்தேனே தவிர, திரும்ப எழுதநேருமென்று நினைக்கவில்லை. ஏதாவது காட்டமாக இருப்பதாகப் பட்டிருந்தால் தவறு என்னுடையது - இதை மேலும் வளர்த்தும் நோக்கம் இல்லை...

ரோஸாவசந்த், nosedive என்பது //எழுதியது கிண்டல்! கோணங்கியின் மற்ற எழுத்துக்களை படித்தால் இவை எத்தனை தெளிவாய் எழுதபட்டுள்ளது என்று புரியும்!// என்பதைக் குறித்து. விமர்சனங்கள் இருப்பதில் தப்பில்லை. இந்த "புரியுது புரியலை" விஷயம்தான் என்னை அளவுக்கதிகமாகக் குழப்புவது. "புரியலை" என்ற ரீதியில் ஒற்றைப் பதிலை நீங்களும் உபயோகப்படுத்தியிருப்பதைப் பார்த்து சற்று ஆச்சரியமடைந்தேன், அவ்வளவே. இப்படித்தான் இருக்கவேண்டுமென்று சொல்வது என் நோக்கமல்ல.

மற்றப்படி, சென்ற பின்னூட்டம் யாரையாவது rub on the wrong sideடியிருந்தால், மன்னிக்க!! Cheers!
 
இந்த விவாதத்தை இப்போதுதான் வாசித்தேன். எனக்கும் கிட்டத்தட்ட Montresorரின் கருத்துக்களுடன் உடன்பாடே. கோணங்கியின் ஆக்கங்கள் எதுவும் வாசிக்காததால் கருத்துச் சொல்ல கூச்சமாயிருந்தாலும், ஒரு படைப்பை எமக்கு விளங்கவில்லையென்பதற்காய் நிராகரிக்கமுடியாதென்றே நினைக்கின்றேன். மற்றும் எல்லா படைப்பாளிகளும் ஏதோ ஒருவகையில் fast food styleல் புகழ் தேடி அலைந்து கொண்டிருக்கையில் இப்படி எழுதுவதால் இருக்கின்ற வாசகர்களையும் கோணங்கி இழந்துகொண்டிருக்கின்றார் என்றால், அதில் வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்றுதான் நான் யோசிப்பதுண்டு. மதனிமார்கள் கதைகளை வருடங்களாய் தேடிக்கொண்டிருக்கின்றேன். பாளியை ஒரு நண்பரின் வீட்டில் கண்டு, நண்பரும் வெருட்ட கொஞ்சம் பயத்துடன் கீழே வைத்துவிட்டேன். எஸ்.ராவின் magical-realism கதைகளை ஆரம்பத்தில் வாசிக்கும்போது எட்ட தொலைவில் நின்றே நகைத்தன. ஆனால் அதன் வாசிப்பு சூட்சுமங்கள் பிடிபட மிகவும் பிடித்துப்போயின.
Montresorன் இன்னொரு கருத்தும் முக்கியமானது. தொடர்ந்து வாசிப்பும் ஆர்வமும் உள்ள வாசகர் ஒருபோழுதும் குமுதம் விகடனோ தங்கிவிடப்போவதில்லை. எல்லோருமே ராஜேஷ்குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டைபிரபாகர் என்று தொடங்கித்தான் இவர்களையும் தாண்டியும் வந்திருப்போம். ரோசாவசந்திடம் கேட்டால், இதுபற்றி (பொதுஜன வாசிப்பு) விரிவாகக்கூறுவார். ரோசாவசந்த் ஒருமுறை கூறியது போல, என்னைக் கேட்டால் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் போன்றவர்களும் தேவை, கோணங்கி, பிரேம்-ரமேஷ் (எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்கள்) போன்றவர்களும் தேவை.
 
ம்ம்ம்.... இதுக்கு பின்னால இவ்ளோ மேட்டர் இருக்கா? அய்யய்யோ என்ன விட்டுருங்கப்பா...தெரியாம சொல்லிட்டேன் கோணங்கியோட பலம் தெரியாம... நான் இந்த மாதிரி மேட்டர் பக்கம் ஒதுங்கவே மாட்டேன். இப்போ தான் குமுதம் ஆனந்த விகடன் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். அப்புறம் மெதுவா பாலகுமாரன், ப.கோ.பிரபாகர் எல்லாம் படிச்சிட்டு நீங்க சொன்ன எல்லா இலக்கியத்தையும் படிச்சிட்டு ஒரு 5 வருஷம் கழிச்சி இந்தப் பக்கம் ஒதுங்குறேன். கோனாரை கேட்டதுக்கு இப்படி போட்டு தாக்கிட்டாங்களே. இருந்தாலும் நல்ல நல்ல மேட்டருங்க நீங்க பேசுனதுல கிடச்சது... நிறைய படிக்கனும்னு தோனுது. மனசு நினைக்கிற அளவுக்கு பாழப் போன என் கிறுக்கு மூளை அனுமதிக்கிறதில்ல.... வாசிப்பு அனுபவத்தில LKG UKG கூட இல்ல அதுக்கும் முன்னால இருக்கிற Play school தான் நானும். வர்ட்டா அண்ணாச்சிங்களா...ஜமாயுங்க
 
நாராயண்..கோணங்கி என்ன ஜூவி நிருபரா..? ஷாக்-ஆகி,பின்னர் கூல்-ஆகி ஜகா வாங்கினோம் என்று தமிழில் எழுத...அவர் சிறு பத்திரிக்கை ஆசாமியப்பா..அப்படித்தான் அவர் தமிழ் இருக்கும்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]