Jan 24, 2005

நான் வளர்க்கிறேனே மம்மி!!

சோழிங்கநல்லூர் தெரியுமா உங்களுக்கு? [இப்படி இருட்டா, ஒரு ஸ்கிரீன்ல, வாய்ஸ் ஒவ்ர்-ல ஆரம்பிக்குது நம்ம (இல்லை வேணாம், ராயல்டி பிரச்சனை வரும்) இல்லை என் கதை ஆரம்பிக்குது]

இன்னாடா, திடீர்ன்னு ஒர்த்தன் சைடு வாங்கி, சாண்டில்யன், கோவி.மணிசேகரன் மாதிரி தடம்மாறானேன்னுப் பாக்காதிங்க. சென்னைக்கு ரொம்ப பக்கத்துல இருக்கற ஊரு. (ஊருன்னு சொன்னா என்னை இன்போசிசும், விப்ரோவும், டிசிஎஸ்சும் கட்டையாலேயே அடிப்பாங்க. அரசாங்கம் என்னை பொடா-ல, போடான்னு உள்ளேத் தூக்கிப் போட்ரும்). ஏன்னா, இது தான் சென்னையோட, தொழில்நுட்ப அதி நெடுஞ்சாலை, அதாங்க, Information super highway.

என் பணியகத்தின் புது கிளையண்ட் ஒருத்தர் ஒரு வணிக சந்திப்புக்காக அழைத்திருந்தார். நானும் ரொம்ப நாளாகவே அந்த சாலையில் என்ன அதி அற்புதங்கள் இருக்குமென்ற தேடலில், கசிந்து உருகியதால், வருவதற்கு ஒப்புக்கொண்டேன். அதற்கு முன்னால், என் சந்திப்புக்கள் அனைத்தும், டைடல் பூங்காவோடு முடிந்துவிடும். சரி, எப்படித் தான் இருக்கும் எனப் பார்க்கலாம் என்று நினைத்து என் பைக்கில் கிளம்பினேன். [இங்க நம்ம டைட்டில் கார்டுப் போடறோம். வண்டிப் போகுது, அப்படியே டைட்டில மேல சுப்பர் இம்போஸ்ல ஒட்டறோம் ;-)]

கதை, டைடலைத் தாண்டித் தான் தொடங்குகிறது. டைடல் தாண்டியவுடன், முதலில் நீங்கள் பார்ப்பது உங்கள் தலைக்கு மேல் செல்லும் மின் புகை வண்டியின் மின்சார ரயிலின்(MRTS) மேம்பாலம், சற்றே தள்ளி, என்னவென்று தெரியாத நீள்வட்டமாய், சதுரமாய், வட்டமாய், சன்னமாய் இருந்தும், இல்லாமலும், ஆங்காங்கே பின்னமாயும், (இன்னாடா, திடீர்ன்னு ஞானோதயம் வந்தா மாதிரி, யாருக்கும் புரிஞ்சி, புரியாதமாதிரி எழுதற - ஹிஹிஹி....வேற ஒண்ணுமில்ல, மான்ட்ரீஸ்ரும், வசந்தும், சனியனும் விட்ட டோஸ் வேலை செய்யுது...ஹி..ஹி) இன்ன பிறவுமான வடிவங்களில் ஒரு கட்டிடம். National Institute for Fashion Technology சுருக்கமாய் NIFT. எத்தனையோ படங்களில் பார்த்திருந்தப் போதும், முதன்முறையாக நேரில் பார்ப்பது வித்தியாசமான உணர்வுதான்.

அதன்பிறகு தொடங்குகிறது என்னுடைய டெரெய்ன் பைக்கிங் சாமர்த்தியங்கள். கியர் மாற்றி, கியர் மாற்றி ஒரு தேர்ந்த சர்க்கஸ்காரனைப் போல ஒட்டத் தேவைப்படும் சாலையது. சாலை போடுகிறார்களா, இல்லை செப்பனிடுகிறார்களா, இல்லை இந்த சாலையே இப்படித்தானா என அறிய இயலாதவாறு ஒரு அறிவிப்புமின்றி புகையும் தூசும் மண்டிய சாலை. இந்த சித்ரவதை அங்கிருந்து தொடங்கி, கொட்டிவாக்கம், ஒரு சிறிய ஊர், வேலப்பன் கந்தன் சாவடி(நன்றி: முத்து) என ஊர்ந்து சீவரம் என்ற ஊர் தொட்டவுடன் தெளிகிறது என் சித்தம். கரும் பாம்பென (நன்றி: "இரவு மிருகங்கள்" - சுகிர்தராணி) நெடுந்து பரந்து ஊர்ந்து செல்லும் சாலையில் முதலில் கண்ணை கவர்வது, இரண்டாவது இன்போசிஸ் என தற்போது வர்ணிக்கப்படும், ஃகாக்னிசண்ட் குழுமத்தின் மிக வண்ணமயமான கால் சென்டர். மஞ்சள், நீலம், சிகப்பு என ஒவ்வொரு கட்டிடமும் வண்ணமடிக்கப்பட்டு வித்தியாசமாக காட்சியளித்தது. [புரொடுயசர் கொஞ்சம் டைட்டா படம் பண்ண சொல்லிட்டாரு, இல்லேன்னா, இங்கே ஒரு சாங் வைச்சிறலாம்] சற்றே தள்ளிப் போனால், விப்ரோவின் மென்பொருள் மையமும், டிசிஎஸ்ஸின் மென்பொருள் மையமும் (வெள்ளையை விட மாட்டிங்களா ரத்தன் டாடா சார்?) இருந்து நாம் எந்த சாலையில் இருக்கிறோம் என நினைவூட்டுகின்றன. அதே சமயம், அதற்கு எதிரே, சிறு,சிறு கடைகள், கையேந்திபவன்கள், பஞ்சர் கடை, மளிகை கடை, தவறாமல் ஒரு டாஸ்மாக் என அந்த இடத்தின் பூர்வீகத்தை உணர்த்துக்கின்றன.சாலை.கடைகள்.கட்டிட வேலைகள். கடைகள்.கட்டிட வேலைகள்.மனம் சுற்றி வந்தாலும், பைக் தன் கடமை உணர்ந்து, சாலையில் ஒடிக்கொண்டிருந்தது.

அருமையான சாலை, அவ்வப்போது ஹார்னில் ஆளைக் கொல்லும் லாரிகளைத் தவிர்த்து. சற்று முன்னேறிப் போனால், ஆவினின், சோழிங்கநல்லூர் பால் பண்னையும் அதை ஒட்டிய நகராட்சியும். இன்னமும், நகராட்சி அலுவலகத்தின் வாசலில், கட்சி வேட்டி, துண்டு, இரண்டு எடுப்பு என 'மேட்டர்' முடிக்கும் தலைகள் தெரிகின்றன. சாலையின் இருமருங்கிலும் அசுரகதியில் நடக்கும் வேலைகளைப் பார்க்கும்போது, ரியல் எஸ்டேட் அதிபர்களின் கணக்கு கண் முன் விரிகிறது.முன்னேறிச் சென்றால் இன்போசிஸின் ஆசியாவின் மிகப்பெரிய மென்பொருள் மையம் நம்மை ஆட்க்கொள்கிறது. அதனினும் முன்னேறி சென்றால், என் கிளையண்ட் அலுவலகம் [உதவி இயக்குநர்: அண்ணே இந்த இடத்துல நம்ளோட இன் டர்வெல் பிளாக் வைச்சிப்போம். ஆடியன்ஸ்ல அவனவன் இதுக்கப்பறம் என்ன நடக்கும், ஏது நடக்கும்-னு சாவான்னேன். ஒரே டென்ஷன் தான் போங்க. செம்ம இன் டர்வெல் பிளாக்னே இது, தமிழ் சினிமாவுல எவனும் வைச்சிருக்க மாட்டான். டேய் மொட்டை, அந்த சிக்கன் பீஸ் எடு!!]

சந்திப்பு முடிந்து திரும்புகிறேன். அருகாமையிலுள்ள மேல்நிலைப்பள்ளி விட்டு விட்டார்கள். மெரூன் சீருடைகளை அணிந்த சிறுவர், சிறுமியர், சற்றே வளர்ந்த பெண்கள் தலை குனிந்து, தங்களுக்குள், சன்னமாய் சிரித்தபடி,(பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது ?!!) அவர்களை துரத்தும் பசங்கள், சைக்கிள் பெல் சிக்னல்கள் என அந்த இடம் ஒரே சத்தமாயும், குதூகலமாயும் இருந்தது. குழந்தைகள், சாலையின் குறுக்கே ஒடுவதும், நடப்பதுமாக இருந்த அந்த நெடுஞ்சாலையில் அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு காவல்காரர் கூட இல்லை. 80/90KM வேகத்தில் வரும் லாரிகளிருந்து, அதற்கும் வேகமாய் போகும் பைக்/கார்களிடமிருந்து, மனம் பதைபதைக்க லாவகமாய் நகருகின்றனர். சற்றேத் தள்ளி ஒரு செக்போஸ்ட்டில் 3 போலிஸ்காரர்கள், கருமமே கண்ணாக, நக்கீரன் படித்துக் கொண்டிருந்தனர். அவ்வளவு நீள நெடுஞ்சாலையில் ஒரு மருத்துவமனைக் கூட இல்லை என்பது (நான் போன அளவில்!!) அதிர்ச்சியான விசயம். சற்றே முன்னேறிப் போனால், வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், துப்பட்டாவினால், முகத்தை மூடிக்கொண்டு, ஸ்கூட்டியிலும், ஹோன்டாவிலும் பறக்கின்றனர். சாலையோரப் பூக்கார அம்மாக்கள், அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, பூக்களில் தண்ணீர் தெளித்து சாலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கையில் செல்லோடு, சொல்லாகப் பேசிக்கொண்டே பல்சரில் அமர்ந்துக் கொண்டு, கையேந்திப்பவனின் ஆம்லெட்டை, பங்குப் போடுகிறது ஒரு மென்பொருள் கூட்டம் ( கலர்ப்ளஸ் கால்சட்டை, க்லோபஸ் மேற்சட்டை என இருந்த ஒருவர் போனில் "மயிரு, ..த்தா ட்ரீட் கொடுக்கலைன்னா, உங்காளுக்கிட்ட சொல்லி மானத்தை வாங்கிடுவேன்" என மிரட்டிக் கொண்டிருந்தார்.) இவைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல், "தேவதையைக் கண்ட தனுஷின் படத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு, கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது ஒரு லுங்கி கும்பல்.

புகையோடு புகையாக நுழைந்து, புகுந்து, அடித்துப் பிடித்து என் அலுவலகமடையும்போது இரவு மணி 8.40. கே.கே.நகரில் புகுந்தவுடன், சடாரென என்னை "கட்" அடித்துப் போன ஸ்கூட்டியைத் திட்டலாம் என தலை உயர்த்திப் பார்த்தப்போது, பத்மா சேஷாத்திரியின் சீருடை அணிந்த ஒரு பள்ளிச்சிறுமி. (ட்யூசன் முடித்து வீட்டுக்கு) ஏனோ, தாவணி அணிந்து, இரட்டைப் பின்னல் போட்டு, தலைதாழ்த்தி சென்ற சோழிங்கநல்லூரின் பள்ளிப் பெண்கள் ஞாபகத்திற்கு வந்தது.[சில்-லவுட்-ல அப்படியே எண்டு டைட்டில் போட்டு, "உணர்வும், உயிரும் - நாராயணன்" ன்னுப் போட்டிங்கன்னு வைச்சிக்குங்க, எழுதி வைச்சிக்குங்க, இந்தப் படம் சில்வர் ஜுப்ளி. "காதலை" தூக்கிச் சாப்புட்லாம்னே. கவலையை விடுங்க. நம்ம ஃப்ர்ஸ்ட் காப்பி பண்றோம் இதை!! - அண்ணே நைட்டு நம்ம கதிரு ரூம்ல டிஸ்கஸ்ன். அவனுங்க பன்னாடைங்க, இப்பவே அந்த மிச்சமிருக்கற ஒல்டு மாங்கை முடிச்சிலாம்னே! ஒரே பீல் பண்ண வைச்சிட்டிங்க கதையில]

தொழில்நுட்ப அதி நெடுஞ்சாலை - அங்கு வாழும் மக்களுக்குத் தெரியுமா, அதன் மகத்துவமும், பயன்பாடும், இல்லை மென்பொருளில் வேலை செய்வோர்க்குத்தான் தெரியுமா அந்த மக்களின் வாழ்வும். எதிர்காலமும். பெண்களைப் போலத்தான், கண் முன்னே இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது, எனத்தருமை சென்னை மாநகரம். நான் வளர்ந்துக்கொண்டிருக்கிறேனே மம்மி!!

Comments:
நாராயணன்,
கந்தன்சாவடியில் இருக்கும் அருமையான, நேர்த்தியான சாலையைப் பற்றிச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே .. அங்குள்ள ஆர்ச்சிட் ஆய்வு மையம் ரொம்ப நாளா நமக்குப் பழக்கம்.
 
This comment has been removed by a blog administrator.
 
Nalla ezhuthi irukeenga...
Good.
Ithai patikka suvarasiyamaa irukku...
Thodarnthu ezhuthungal....
 
:)))
செவப்பு கலர் கமெண்ட்டெல்லாம் இல்லேன்னா.. அது என்னது? எதோ சொல்வாங்களே?........ஆங்.. இலக்கியம் :)

>>
மின் புகை வண்டியின்
>>
அதுல எங்கெ புகை வந்துச்சி? :)

மின் தொடர் வண்டி?
 
சோக்கா புடிச்சிங்களே ஒரு புடி."மின் புகை வண்டி" தப்புத்தான், திருத்திறேன்.
 
நன்றி முத்து, கந்தன் சாவடி என சுட்டிக்காடியமைக்கு. திருத்திவிட்டேன். அது ஒரு அருமையான சாலை என எழுதியிருக்கிறேன், சந்தேகமிருப்பின் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். கந்தன் சாவடியை வேலன் சாவடி என ஆர்வக்கோளாறால், சொதப்பியதால், அழித்துவிட்டு மறுபடியும் இடுகிறேன்.
 
பல மாதங்கள் நான் பயணித்திருந்த சாலை. கோடம்பாக்கத்தில் கம்பெனி பஸ்ல ஏறுனோமா, ஒரு தூக்கம், நேரா கம்பெனி வாசலில் போய் கிச்சென்று ப்ரேக் பிடிக்கும் போது தான் முழிப்பேன். அந்த சாலையில் இவ்வளவு அற்புதங்கள் இருப்பதை நேரில் பார்ப்பதை விட உங்களின் இந்த பதிவை படிக்கும் போது மிக அற்புதமாக இருக்கிறது. மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டும் போது கண்ணை நல்லவே திறந்து வைத்து ரசிப்பேன். நல்ல பதிவு.
 
கொஞ்சம் காலம் கோடம்பாக்கம் எரியாவில் சுத்திட்டுருந்தது உங்க எழுத்தில நல்லா தெரியது..ரொம்பவே பீல் ஆகி படம் பண்ணியிருக்கிங்க........
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]