Feb 25, 2005

விர்ஜின் மேரியும், வெஜிடபுள் சமோசாவும்

ஒரு வாரத்திற்கு முன்பு என் வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, லீ மெரிடியன் சென்றிருந்தேன். வழக்கம் போல இளிப்புகள், போலியான வரவேற்புகள், செயற்கையான உபசரிப்புகள் என்று போனது. குடிக்கும் பழக்கமில்லாத காரணத்தினால், நான் ஒரு விர்ஜின் மேரியும் என் வாடிக்கையாளர் வோட்காவும் எடுத்துக் கொண்டு கதைத்து கொண்டிருந்தோம். என் தொழில் விசயமாக மொத்தமே 10 நிமிடங்கள் பேசியிருப்போம். அதன்பிறகு, முழு வெட்டி அரட்டை. மிக நாகரிகமாக விர்ஜின் மேரியை அவ்வப்போது சிப்பிவிட்டு தொடர்ந்தது பேச்சு. கொஞ்சமும் ஒட்டுதலில்லாத சூழலது. செயற்கையான புன்னகைகள், வெட்டித் தனமான அமெரிக்க/ஜரோப்பிய ஜோக்குகள் என பேசிக் கொண்டிருந்தாலும், சற்றே என் நினைவு டீக்கடைகளுக்கு விரிந்தது.

ஸ்டார் ஒட்டல்களில் கொடுக்கும் காசுக்கு பரிமாறபடுபவை வெறும் வெற்று வாய்வார்த்தைகள், ஜாலங்கள். டீக்கடைகள் மிக உத்தமமானவை. இடங்கள் சற்றே அசுத்தமாக இருந்தாலும், கவனிப்பும், பரிமாறலும் அன்பு மிக்கவை. டீக்கடைகள் சுதந்திரமானவை. எவ்விதமான கட்டுக்கோப்புகள் இல்லாதவை. உலகம் பல சமயங்களில் டீக்கடைகளில் எனக்கு விரிந்திருக்கிறது. எல்லா விசயங்களும் டீக்கடைகளில் அலசப்படும். அரசியல், சினிமா, நண்பனின் துரோகம், காதல், அலுவலக ஏற்றத்தாழ்வுகள், குடும்ப பிரச்சினை, டிவி சமாசாரங்கள், திருட்டு விசிடி, மிட்நைட் மசாலா என விரியும் பொழுதுகளில், உலகம் டீயில் தோய்ந்த பிஸ்கெட் போல சாதுவாய் பக்கத்தில் இருக்கும். ஸ்டார் ஒட்டல்களை விட டீக்கடைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. மக்களை தெரிந்து கொள்ள, மக்களை புரிந்து கொள்ள, மக்களின் நாடிதுடிப்பை அறிந்து கொள்ள, டீக்கடைகள் போல வேறெதும் அமையாது. எல்லா தரப்பு மக்களையும் சந்திக்க உகந்த இடம் டீக்கடைகள் தான். டீக்கடைகளை சொல்ல விவரணைகள் தேவையில்லை. ஒரு மாஸ்டர், பாய்லர், அடுப்பு இருந்தால் போதும். நல்ல டீக்கடைகள் அமைவது உங்களின் பூர்வ ஜென்ம பாலன்ஸ் ஷீட்டைப் பொறுத்தது. சென்னையில் கடந்த 15 ஆண்டுகளில் எல்லாவிதமான கடைகளிலும் டீ குடித்திருக்கிறேன். நிறைய கடைகளோடு நீண்ட நாள் நட்புறவுகளுண்டு, கடன் பாக்கிகளையும் சேர்த்து. பத்தாவது படிக்கும்போது ஆரம்பித்த பழக்கம், இன்னமும் தொடர்கிறது.

முதலில் அறிமுகமான டீக்கடை, வடசென்னையின் கொண்டித்தோப்பில் சிவஞானம் (ஞாபகமிருக்கிறதா, தமிழகத்தில் வீரப்பனுக்கு முன் மீசையால் மிக பிரபலமாக இருந்த பெரியவர் ம.போ.சி பெயரிலமைந்த பூங்கா இது)பூங்காவிற்கு எதிரிலிருக்கூடியது. அந்த நாயரின் மகன் என் நண்பனுக்கு பள்ளித்தோழன். எல்லா கதைகளும் ஒடிய காலகட்டமிது. ஒரே நண்பர்கள் கூட்டமாய், "துள்ளித் திரிந்த காலத்தில்" வரும் அருண்குமார் & கோக்களை விட பெரிய ஆனால் பெரிதும் வம்புக்கு போகாத கூட்டமிது. என் இளமைப் பருவமனைத்தும் இந்த டீக்கடையில் தான் கழிந்திருக்கின்றன. சற்றே நசநசவென்றிருந்தாலும், பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தரும் சட்டினியில் தெரியும் கடை நாயரின் அன்பும், எங்களின் கடன்பாக்கியும்.

Aptech-ல் வேலை செய்தபோது ஏற்பட்ட நட்பில் எங்களுக்கு ஒரு புது டீக்கடை தேவைப்பட்டது. புரசைவாக்கம் நெடுஞ்சாலையின் கெல்லீஸின் கடைசியில் இருக்கும் ஹோட்டல் ஹீரா பிடிப்பட்டது. அசைவ விடுதியாயிருப்பினும், அருமையான டீ கிடைக்கும். அங்கு அமர்ந்தவாறே, உலகினை தலைகீழாக்கும் முயற்சிகளில் பேசிக் கொண்டிருப்போம். உலக சினிமா, தொழில்நுட்பம், டிஜிட்டல் ஜிகினாக்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொண்டது இங்கேதான். ஹீரா நள்ளிரவு வரை திறந்திருக்கும், ப்ராஜெக்ட் வேலையிருக்கிறது என்று கூறிவிட்டு, நண்பர்களோடு ஏதாவது ஒரு ஒயின்ஷாப்பில் தண்ணியடித்து விட்டு (எனக்கு பழக்கமில்லை, மற்றும் பெரிதாக அதில் பிடிப்பில்லை) அங்கிருக்கும் காலிப்ளவர் 65-வை காலிசெய்துவிட்டு, அலுவலகத்திற்கு வந்து நள்ளிரவு சினிமாக்களைப் பார்த்துவிட்டு, விடியற்காலை 1, 1.30 மணிக்கு ஷட்டர் இறக்கிய ஹீராவிலிருந்து டீ வாங்கி, நடு ரோட்டில் அமர்ந்து குடித்திருக்கிறோம். முகம் சுளிக்காமல், அந்த கடை தொழிலாளிகளும் சுட, சுட டீப்போட்டு தருவார்கள். வாழ்க நாயர்!!

சற்றே முன் தள்ளி சென்றால், மோட்சம் திரையரங்கத்திற்கருகே ஒரு டீக்கடை வரும், நள்ளிரவு படங்கள் முடித்து வருபவர்களுக்காக. அங்கேயும் பல நாட்கள் அமர்ந்து, மணிரத்னம், ஜார்ஜ் லூகாஸ், சிசில் பி டிமெலி என்று பேசியிருக்கிறோம். சினிமா, தொழில்நுட்பம், பெரியார், அரசியல், காதல், நட்பு, கனவுகள் என்று பேபபபபபபசிக் கொண்டே வாழ்ந்திருக்கிறோம். எத்தனையோ முறை, நள்ளிரவில், விடியற்காலையில் என பேட்ரோல் காவலர்கள் எங்களின் ஜாதகத்தை விசாரித்திருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கெல்லாம் பெண்களில்லை. அவர்களூக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி, வாயை ஊதி காட்டியிருக்கிறேன். லைட், மீடியம், ஸ்ட்ராங்க் என ஊற்றும் டீ டிகாஷனைப் பொறுத்து, அதன் நிறமும், திடமும், சுவையும் மாறும். எப்படியிருந்தாலும், பழுப்பு நிறத்தில் சூடாக இருத்தல் மிக அவசியம்.

டீக்கடைகள் தரும் சுகங்கள் அலாதியானவை. மிக அருமையான நட்புசூழல் டீக்கடைகளில் டீ ஊற்றி வளரக் காத்திருக்கிறது. எனக்கு நாய்களைப் பற்றி மிக அதிகமாக அறிந்து கொண்டதில் டீக்கடைகளுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். பட்டர்பிஸ்கேட் என்கிற வஸ்து பெரும்பாலான டீக்கடைகளில் கிடைக்கும். சில சமயங்களில் நாய்களுக்கும், பல சமயங்களில் எங்களுக்கும் அதுதான் இடைப்பட்ட உணவாகியிருக்கிறது. பட்டர் பிஸ்கேட், கேக், கீரீம் பிஸ்கேட், தேங்காய் பிஸ்கேட்,குட்டி சமோசா தவிர, பல சமயங்களில் நாய்களும், சில சமயங்களில் மனிதர்களும் சாப்பிடும் பொறை என சமர்த்தாய் கண்ணாடி பாட்டில்களில் அமர்ந்திருக்கும் பண்டங்கள், ராவாய் டீக்குடிக்கும்போது கிடைக்கும் அருமையான சைட் டிஷ்கள். இவையனைத்தும் எந்த ஸ்டார் ஒட்டல்களிலும் கிடைக்காது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் விதவிதமாய், கலர்கலராய் திரவ ரூபங்களில் பல்வேறு நாமகரணங்கள் சூட்டிய ஒரே மாதிரியான பழவகைகள்தான். பழுப்பு நிற சூடான டீக்கு ஈடாகுமா இவையெல்லாம் ?

அதன்பின் மயிலாப்பூரில் ஒரு மென்பொருள் நிறுவனவத்தில் வேலை செய்தபோது சென்னையின் மிகப்பெரிய டீக்கடையில் ஐக்கியமாகிவிட்டோம். வேறெங்கே, உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் தான். டாட்.காம் தலைதெறிக்க ஒடிய காலமது. வேலையில்லாமல் இருந்த என் நண்பன் (தற்போது அவன் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில், ஆறு இலக்க வருடாந்திர வருமானத்தோடு, தினமொரு பெக்கும், வளர்ந்துகொண்டிருக்கும் இடுப்பளவுமாக நன்றாக இருக்கிறான்) மதியம் வந்துவிடுவான். அலுவலகத்தில், உணவு இடைவேளை என்று ஒபி அடித்துவிட்டு, டிரைவ்-இன் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். சத்தியமாய் தலையிலடித்து கேட்டாலும் என்ன வெட்டிக்கதைப் பேசினோம் என்பது நினைவிலில்லை. இவ்வாறாக என் வேலைநாட்கள் டீக்கடைகளில் கழிந்தன.

பின் சொந்தமாக நிறுவனத்தினை தொடங்கியதால், அதன் பின் வேறெங்கும் வேலை செய்யவில்லை. ஆனாலும், மதிய நேரங்களில், பிற்பகல்களில், நீண்ட இரவுகளில் என்று டீக்கடைகளுக்கு போக ஏதாவது ஒரு சாக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இவ்வாறு இருந்த காலகட்டங்கள், பெரும்பாலானவை கழிந்த இடங்கள், நுங்கம்பாக்கம் பேசிக்ஸ் பக்கத்திலிருக்ககூடிய பேலஸ் என்கிற டீக்கடையிலும், சங்கீதா உணவகத்தின் எதிரிலிருக்ககூடிய சாய்ஸ் டீக்கடையிலும் தான் பெரும்பாலான நாடகளில் மாலைநேர வாசஸ்தலம். சாய்ஸ் டீக்கடை நிஜமாகவே சாய்ஸான டீக்கடைதான். எல்லாவிதமான டீயும் கிடைக்கும். ப்ளாக் டீ, லெமன் டீ, ஜிஞ்சர் டீ, ஏலக்காய் டீ என பலவகைகளில் டீ குடிக்கலாம்.

நுங்கம்பாக்கத்தின் டீக்கடைகளில் சென்னையினைப் பார்க்கலாம். எல்லாவிதமான மனிதர்களும், எல்லா தரப்பு மனிதர்களையும் இங்கே சந்திக்க இயலும். ஒரு இரண்டு வருடங்கள் ஏதேனும் ஒரு டீக்கடையின் ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால், அந்த பகுதி மக்களைப் பற்றியும், வாழ்வியல் பற்றியும் சுலபமாக படிக்க இயலும். இவ்வாறு சென்னையை சுற்றி நிறைய இடங்களை சொல்ல இயலும். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் போன எல்லா டீக்கடைகளும் எப்படியாவது எங்களை தத்தெடுத்துக்கொள்கின்றன. நுங்கம்பாகக்த்தில் சாய்ஸ், அண்ணா சாலையில் கலிமா (அந்த வெஜிடபுள் சமோசா....ஆஹா..ஆஹா!! இதெல்லாம் அனுபவிக்கனுமய்யா!) சத்யமில் படம் பார்த்தால் இரானி, எத்திராஜ் சாலையிலிருக்கும் ஒரு டீக்கடை, அல்சா மாலின் அருகில் இருக்கும் .நெட், நுங்கம்பாக்கத்திலுள்ள காவேரி காம்பெளக்ஸின் பின்புறமுள்ள டீக்கடை என சென்னை முழுவதும் எனக்கான ஜாகைகள் அநேகம். எவ்வளவு வளர்ந்தாலும், என்னால் டீக்கடைகளுக்கு போகாமல் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. நண்பர்களைப் பார்த்தல், சும்மா இந்த பக்கம் வந்தேன் என எவ்வளவு கதையளந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி, சமூகத்தை வெகு அருகிலிருந்து உற்று நோக்கும் விஷயம் தானோ என்னவோ என்னை அதீதமாய் வசீகரிக்கிறது.

என்னைப்போல சென்னையில் வாழும் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு டீக்கடையுடன் ஜென்ம சம்பந்தம் இருக்கும். குறைந்த பட்சம், மனைவிக்கு தெரியாமல் சிகரெட் அடிக்கவாவது ஒரு பெட்டிக்கடையோ டீக்கடையோ பார்க்காத தமிழன் இருக்க இயலாது. அப்படி இல்லாவிட்டால், ஒன்று அவர்கள் சமுதாயத்தின் உச்சாணிக்கொம்பில் இருக்கக்கூடும், இல்லையென்றால், அவர்கள் சென்னையில் மனிதர்களாக இருக்க லாயகற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து. டீக்கடைகள் இல்லாத ஊரினையும் மக்களையும் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. இந்த ஒரு காரணத்தினாலேயோ என்னவோ, இன்னமும் பெங்களுரின் மீது பிடிப்பே வராமல் இருக்கிறது.

21-ம் நூற்றாண்டில், ஒயின் ஷாப்புகளில், ஒடும் ரயில்களில், மேன்ஷன்களிலும் இலக்கிய கூட்டங்கள் நடப்பதுபோல், ஏன் டீக்கடைகளில் நடப்பதில்லை. சிகரெட்டும், டீயுமாக பொங்கிவரும் கற்பனைக்கு ஸ்டார் ஓட்டல்கள் ஈடுகொடுக்க இயலுமா? டீக்கடைகள் நாயருக்கு சொந்தமாயிருந்தாலும், அது பொது சொத்து. பொது மக்களின் உரிமை. தமிழகத்தின் எதிர்காலம், என்னளவில், டீக்கடைகளிலும், பேப்பர் கடைகளிலும், சலூன்களிலும் தான் இருக்கிறது. சற்றே ஊன்றி கவனித்தால், ஏதோ சாசருக்கு கீழேயும் ஒளிந்திருக்கலாம், தமிழகத்தின் அடுத்த தலைமுறை தலைவர்களும் ஹீரோக்களும்.

சாசரில் ஊற்றாத பின்குறிப்பு: யாரேனும் பின்மாலை (7 -10PM) நேரங்களில் நுங்கம்பாக்கம் சாலையினை கடந்து போனால் ஒரு எட்டு எட்டி சாய்ஸில் பாருங்கள். நான் இருந்தாலும் இருப்பேன். வந்தீர்களேயானால், மிதமான சூட்டில் அருமையான லெமன் டீக்கு நான் கியாரண்டி.

Feb 22, 2005

தேர்தல் முறைகளில் மாற்றம் தேவையா ?

"வாக்காளர் பட்டியலில் ஊழல் நடந்திருக்கிறது என்பதால் 39 மக்களவை தொகுதிகளிலும் நடந்த தேர்தலை செல்லாது என்று அறிவித்து விட்டு மறு தேர்தல் நடத்தவேண்டும் என்றூ முதலைமச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு எடுத்துச் செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார். வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் பற்றி விசாரிக்க மத்திய தேர்தல் ஆணையம் நியமித்த கேரள அதிகாரி தாமஸ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக தேர்தல் அதிகாரிகள் பலருக்கு விளக்க நோட்டிஸை ஆணையம் அனுப்பியிருக்கிறது. சென்னை நகரத்தில் மட்டும் 2001-ல் 32 லட்சம் வாக்காளர்கள் என்றிருந்த கணக்கு2004ல் 26 லட்சமாகிவிட்டது.

இந்த முறைக்கேட்டுக்கு காரணம் தி.மு.க சார்பு அதிகாரிகளும் தேர்தல் ஆணையமும் தான் என்று ஜெயலலிதாவும், அ.தி.மு.க அரசின் அராஜகம்தான் காரணம் என்று கலைஞர் கருணாநிதியும் குற்றம் சாட்டி வருகிறார்கள்

அடுத்தபடியாக சட்டமன்றத் தொகுதிகளை சீரமைக்கும் பணி இப்போது நடக்கிறது. இதிலும் தொகுதி எல்லைகளை மாற்றி அமைக்கும்போது கட்சி ரீதியில் எது சாதகம் என்ற அடிப்படையில் இஷ்டத்திற்கு மாற்றி அமைப்பதாக தி.மு.க குற்றம் சாட்டுகிறது. வரையறை செய்வது அ.தி.மு.க அரசு அல்ல, தேர்தல் ஆணையம்தான் என்று அ.தி.மு.க பதில் குற்றச்சாட்டு வைக்கிறது.

இந்த முறைகேடுகளுக்கு யார் பொறுப்பு என்ற ஆராய்ச்சி தேவைதான். பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கையும் தேவைதான். ஆனால் அந்த ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபடுவது அடிப்படைப் பிரச்சினையை கவனிக்க விடாமல் தடுத்துவிடும்.

அடிப்படை பிரச்சனை நமது தற்போதைய தேர்தல் முறைதான். சிம்பள் மெஜாரிட்டி முறையும், தொகுதி அடிப்படை முறையுமாக உள்ள இந்த தேர்தல் முறையில்தான் இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்து நடக்க வாய்ப்பு அதிகம். விகிதாசாரப் பிரதி நிதித்துவ முறையும், தொகுதியில்லாமல், பிரதிநிதிகள் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டால் இத்தகைய முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை.

எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளுக்கு தொகுதி முறை தேவையில்லை என்ற தீவிர மாற்றத்தை நாம் கொண்டு வந்தாக வேண்டும். தொகுதி அடிப்படை இருக்கும் வரை கட்சிகளின், வேட்பாளர்களின் ஜாதி, வட்டார செல்வாக்குதான் பிரதானமாக இருக்கும். ஒரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ இருக்கும் ஜாதி, வட்டார செல்வாக்கை மாற்றியமைக்க தொகுதி வரையறையை மாற்றுவது என்ற சூழ்ச்சியில் இன்னொரு கட்சி இறங்கும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே பல முறை நாம் வலியுறுத்தியது போல, சாலை, சாக்கடை, விளக்கு, குடி நீர் பிரச்சினைகள், உள்ளாட்சிப் பிரதி நிதியான பஞ்சாயத்து, ந்கராட்சி பிரச்சினைகளாகும். எம்.எல்.ஏ, எம்.பி பொறுப்புகள் மாநில, இந்திய அளவில் கொள்கை, சட்டம் வகுப்பதற்கான பணிகள் மட்டுமேயாகும்.

இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை அடிப்படையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் எண்ணிக்கையை நிர்ணயிப்பது அவசியமில்லாமல் போய்விடுகிறது. அந்த அளவுகோல் உள்ளாட்சி அளவில் மட்டும் இருந்தால் போதுமானது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்திய யூனியனில் சமமான எண்ணிக்கையில் எம்.பிக்கள் இருக்க வேண்டும். இந்த எம்.பிகளுக்கு தொகுதி கிடையாது. தேவையில்லை. அவர்கள் மாநிலத்தின் பிரதிநிதிகள்.

அவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது ? தனியே வேட்பாளர்களாக யாரும் நிற்கத் தேவையில்லை. கட்சிகள் மட்டுமே தேர்தலில் நிற்கும். எல்லா கட்சிகளும் எல்லா ஊர்களிலும் தேர்தலில் நிற்கின்றன. எல்லா ஊர்களிலும் எல்லா வாக்காளர்களும் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். மாநிலம் முழுவதும் ஒரு கட்சி பெற்ற வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் மொத்த எம்.பி எண்ணிக்கையில் அதன் பங்கு ஒதுக்கப்படும். ஒரு மாநிலத்துக்கு மொத்தம் 20 எம்.பிக்கள் என்று வைத்துக்கொண்டால் ஒரு கட்சி 5 சத விகிதம் ஒட்டு பெற்றிருந்தால் அதற்கு ஒரு எம்.பி சீட் கிடைக்கும்.

ஒவ்வொரு கட்சியும் தனக்குக் கிடைத்த எம்.பி சீட்டுகளுக்கு யாரை அனுப்பப் போகிறோம் என்று அறிவிக்கும். அந்தப் பெயர்களில் ஆட்சேபத்துக்குரியவர்கள் இருந்தால் அதை தேர்தல் ஆணையமோ, நீதி மன்றமோ பரிசீலிக்கலாம். இப்படி எம்.பிகளை அறிவிக்கும் போது ஒவ்வொரு கட்சியும் அதில் 50 சதவிகிதமோ அல்லது 33 சதவிகிதமோ பெண்களாக இருக்க வேண்டும் என்று வரையறுக்கலாம். இந்த முறையில் உயர் சாதி பெண்கள் மட்டுமே அதிகமாக உள்ளே வந்துவிடுவார்கள் என்ற சில கட்சிகளின் அச்சம் அகற்றப்படும்.

இந்த அடிப்படைகள் பின்பற்றப்பட்டால், சிம்பிள் மெஜாரிட்டி அராஜகம் ஒழியும். போடப்படும் ஒவ்வொரு ஒட்டுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும். கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கட்சிக்கும் அசல் பலம் என்னவோ அதற்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். தலித்துகளுக்கு இரட்டைத் தொகுதிகள் தேவைப்படாது. ஒவ்வொரு தலித்தும் எந்த் மூலையில் இருந்தாலும் தான் விரும்பும் கட்சிக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பும் அப்படி அளித்த வாக்குக்குப் பயனும் கிடைக்கும். பெண்களுக்கான இட ஒதுக்கீடை இன்னமும் எளிதாக்க முடியும். உண்மையான மாநில சுயாட்சியையும், சமத்துவமுள்ள மத்திய கூட்டமைப்பையும் நோக்கிச் செல்ல சரியான பாதையாக இது இருக்கும். தொகுதி வரையறை இல்லாததால், சாதி, இதர அடிப்படைகளில் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுகள் செய்வதற்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும்.

எனவே சமூக அரசியல் மாற்றங்களை விரும்புவோர் தேர்தல் முறையை மாற்றுவது பற்றி ஆழமாகவும் விரிவாகவும் விவாதிப்பது உடனடி தேவையாகும்."
நன்றி: ஞாநி - தலையங்கம் - தீம்தரிகிட

இதை படித்தவுடன் முதலில் தோன்றியது இதுதான். ஏன் இதனை ஒரு விவாதமாக ஆரம்பிக்கக்கூடாது. என்னளவில் ஒரு உத்தரவாதத்தை தர இயலும். உண்மையிலேயே இது நல்ல விவாதமாக சென்றால், முமு பதிவினையும், பின்னூட்டங்களையும் திரு. ஞாநியிடம் தந்து அதன்மூலம் இனி வரும் தீம்தரிகிட இதழிலோ அல்லது பிற இதழ்களிலோ இதனை ஆணித்தரமாக முன்னிறுத்த முயற்சிப்பேன். இப்போது இட்டது மட்டுமே என் பணி. இதனுள் எழும் கேள்விகளையும், சந்தேகங்களையும் பின்னூட்டமாகவே பதிகிறேன்.

சென்னையில் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டானியோனி படங்கள்

சென்னையில் இத்தாலியின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகிய மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டானியோனியின் 3 சிறந்த படங்கள், சென்னை பிலிம் சேம்பரில் திரையிடப்படுகின்றன.

24/2 - லே அவென்ட்சுரா - 6.15 PM
25/2 - லே நோட்டே - 6.30 PM
26/2 - ரெட் டெஸர்ட் - 6.30 PM

இதுப்பற்றிய இந்துவில் வந்த செய்தி குறிப்பு.

ஆண்டானியோனி இத்தாலியின் மிகச்சிறந்த இயக்குநர். இயக்குநராக 36 படங்களும் ( 1943 - 2004) எழுத்தாளராக 30 படங்களும், எடிட்டராக சற்றேறக்குறைய 7 படங்களும் எடுத்த பிரம்ம வித்தகர். ஆண்டானியோனியை பற்றிய பெரும்குறிப்பு சுட்டி

Feb 19, 2005

நிதமும் கூகிளை காதல் செய்!!

கூகிள்...அட இன்னாடா நம்மாளு லவ் மேட்டரை நல்லா மேஞ்சிட்டு தொழில்நுட்பம் பக்கம் சடார்ன்னு தாவறானேன்னு நக்கீர (ஜூ.வி/குமுதம் ரிப்போர்ட்டர்) பார்வை பாக்காதீங்க. இப்ப எழுதற விசயம் கொஞ்சம் புதுசான பழசு...[ புதுசு பழகினா பழசுதானே ...நற..நற...நற...]

சாதாரணமா கூகிள்-ல போய் தேடுவோம், தேடுவோம்.....தேடிக்கிட்டே இருப்போம். ஆனா, கூகிள்ல இருக்கற மக்கள் நமக்கு நிறைய வசதிகளை கொடுத்துட்டாங்க. என்ன ஒரே பிரச்சனை முக்கால் வாசி புது விசயங்கள் "பீட்டா"-லத் தான் ஓடிட்டிருக்கு...ஆக, இது சூப்பர் ஸ்டார் மாதிரி...எது எப்ப, எப்படி ஆகும்னு சொல்லமுடியாது. ஆனா வேலை செய்யும் போது பேஜாரா வேலை செய்யும். இதுவரைக்கும் எனக்கெந்த பிரச்சனையும் இல்லை...ஆகவே.....

சரி. மேட்டருக்கு வருவோம்.

இங்க பதியபோறது கூகிள் ஸஜஸ்ட், கூகிள் மேப்ஸ், ஜி-மின்னஞ்சல் வன்தகடு, கூகிள் டாஸ்க் பார் கொஞ்சம் பழைசானாலும் கூகிள் கால்குலேட்டர். இது எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சவங்க, உருப்படியா உருப்படாததை விட்டு போயிறலாம்.

கூகிள் ஸ்ஜஸ்ட் (Google Suggest)

கூகிளின் பலமே அதன் பலமான தேடல் தான். ஒரே உள்ளீடைக் கொண்டு நிறைய பேர்கள் உலக முழுக்க தேடியிருப்பார்கள் ( ஜேனட் ஜாக்சன், பமீலா ஆண்டர்சன், பிரிட்னி ஸ்பியர்ஸ், மல்லிகா ஷெராவத், ஜோதிகா, சிநேகா ;-) ). கூகிள் ஸஜஸ்ட் இதனை சுலபமாக்குகிறது. கூகிள் ஸஜஸ்ட்டில் ஒரு உள்ளீடை இடும் போதே, அதேயொத்த பிற தேடல் வார்த்தைகளும் அந்த உள்ளீட்டு பெட்டியிலேயே கீழே விரியும் (drop down) உங்களுக்கு தேவையான தேடல் உள்ளீடு அதில் இருந்தால் உங்களின் விசைப்பலகையின் அம்புக்குறிகளை பயன்படுத்தி, எஸ்கலேட்டர் இல்லாமல், மேலேறி, கீழிறங்கி, தேவையானதை தேர்ந்து எடுக்கலாம். அவ்வாறு வரும் ஆலோசனைகளோடு, அந்த தேடல் குறிகள் எத்தனை முறை தேடப்பட்டிருக்கிறது என்கிற விவரமும் வரும். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தேடல் வார்த்தையினை சார்ந்த, ஒத்த இதர பொறிகளும், அதன் தேடல் விவரங்களும் கிடைக்கும். உங்கள் தேடல் இன்னும் சுலபமாகி, கேபசினோவினை பராக்கு பார்த்துக் கொண்டே, விசைப் பலகையில் கொட்டலாம், அடுத்த கேபினில் பெண்கள் இருந்தால்.

கூகிள் ஸஜஸ்ட் சுட்டி

கூகிள் மேப்ஸ் (Google Maps)

பிற தமிழ் பதிவுகளில் ஏற்கனவே எழுதியது தான். இருந்தாலும், இது அமெரிக்காவிற்கு மட்டுமே. உங்கள் தெரு, பின்கோடு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை வரைப்படங்களின் வழியே பார்க்கலாம். சும்மா இருக்கும்போது உங்கள் வீடு தெரிகிறதா என்று சோதித்து பார்க்கவும். நன்றாக செய்திருக்கிறார்கள். ஆனாலும், நிறைய மாறுதல்கள் வரும் என்று தோன்றுகிறது.

முக்கியமான விசயம், வரைப்படத்தை இடவலமாக, விரிவாகவும் அலச வழியுண்டு. இது சொதப்பலாக தெரிந்தால், பேசாமல் அமேசானின் A9 yellow pages போய் விடுங்கள். புகைப்படத்தோடு உங்கள் தெருவினை காண்பிப்பார்கள். தேடிப்பார்க்கவும், சில சமயங்களில் ஏதாவது மாட்டும். எனக்கு கிட்டியது நண்பனின் அமெரிக்க முகவரியை தேடிப் பார்க்கும் போது வந்த புகைப்படத்தில் ஆப்ரோ-அமெரிக்கர்கள், கையில் துப்பாக்கியுடன் வானம் பார்த்து சுடும் படம் கிடைத்தது. உங்களுக்கும் ஏதேனும் மாட்டலாம்.

கூகிள் மேப்ஸ் | ஏ9 பக்கங்கள் சுட்டிகள்

ஜி-மின்னஞ்சல் வன்தகடு (Gmail Drive)

இது பேஜாரான விசயம். 1GB இருப்பு ஜிமைல் தருகிறது என்பது ஆதாம் ஏவாள் காலத்து விசயம். எப்படி இந்த 1GB-யினை உங்களின் வன்தகடாக மாற்றுவது ? இதுல இருக்கு சூட்சுமம். உங்களின் ஜிமைலினை ஒரு பெரிய சேமிப்பு கிடங்காக மாற்ற முடியும். எல்லா நல்ல/குப்பை விசயங்களையும் இந்த தகட்டில் போட்டு வைத்து விடலாம். முதலில் ஜிமைல் டிரைவ் என்பதை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவுங்கள். உங்களின் "மை கம்பூய்ட்டர்" க்கு சென்று பார்த்தீர்களேயானால் சமர்த்தாக இன்னொரு டிரைவ் உங்களின் கணினியில் "ஜிமைல் டிரைவ்" என்ற பெயரில் சேர்ந்திருக்கும்.

விளையாட்டு இனிமேல் தான் ஆரம்பிக்கிறது. அவசரப்பட்டு, அதனை கிளிக் செய்து சொதப்பாதீர்கள். உங்களின் ஜிமைலுக்கு சென்று பாருங்கள். நீண்ட நாள் பயனாளராக இருந்தால், உங்களுக்கு தற்போது 50 ஜிமைல் இணைப்புகள் வரை கிடைக்கலாம். உங்களுக்கே ஒரு ஜிமைல் வரவேற்பினை அனுப்பி, பயனாளராக பதிந்து கொள்ளுங்கள். இப்போது அந்த புதிதாக சேர்த்த ஜிமைலின் முகவரியையும், கடவு சொல்லையும், ஜிமைல் டிரைவினில் பதியுங்கள். மேட்டர் ஒவர். உங்களுக்கு 1GBக்கான வன்தகடு ரெடி.

நீங்கள் இனி செய்யவேண்டியது, சேமிக்கவேண்டியதை, இழுத்து உங்கள் ஜிமைல் டிரைவினில் இட்டால் போதும். அதுவே உங்களின் கோப்பை உங்கள் ஜிமைல் கணக்கில் கர்மசிரத்தையாக ஒரு இணைப்பாக அனுப்பிவிடும். நீங்கள் கொஞ்சம் ஜித்தராக இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி, ஐபாட்-டுக்கு இணையாக 20/40/80GB வன்தகடுகளை உருவாக்கிக் கொள்ளலாம். திரிஷா விசயங்களையெல்லாம் சேர்த்து வைக்காதீர்கள், இந்தியாவில் பெண்டு கழட்டி விடுவார்கள்.

ஜிமைல் டிரைவ் சுட்டி

கூகிள் டெஸ்க் பார் (Google Deskbar)

இதுவும் கூகிளின் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு ஒவ்வொரு முறையும் ஒரு உலாவியினை திறந்து, அதில் கூகிளின் தளத்தை பதிய வேண்டிய கட்டாயங்களில்லை. உங்களின் டாஸ்க் பாரினிலேயே, உள்ளீடு பெட்டி வந்து விடும். வேண்டுமென்றால், டாஸ்க் பாரிலேயே, தேடல் சொற்கள் இட்டால், அடிமைப் பூதம் பழைய ஜெய்சங்கரின் படங்களில் சடாரென மேல்வந்து "எஜமானே உத்தரவிடுங்கள்" என்று கேட்பது போல, மேலேறி வந்து, உங்களின் தேடல் முடிவுகளை காட்டும். மிகவும் பயனுள்ள குறும்செயலி இது. என்னைப்போல் நீங்களும் அதிகமாய் கூகிளினால்.

கூகிள் டாஸ்க் பார் சுட்டி

கூகிள் கால்குலேட்டர் (Google Calculator)

இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. கூகிளின் உள்ளீடு பெட்டியினை கால்குலேட்டராக உபயோக்கிக்கலாம். வேண்டுமானால் இன்னொரு சாளரத்தை திறந்து 2500 X 128745 + 8746 - 7530 /2345 என்று கணினிக்கே குழப்பம் வருமாறு கொடுத்துப் பாருங்கள். சர்வ சாதாரணமாக கணக்கு பண்ணும். இதுக்கு சுட்டி தேவையில்லை, நீங்கள் உபயோகிக்கும் கூகிளின் உள்ளீடு பெட்டி போதும்.

ஏற்கனவே கூகிளின் வீடியோ சேவை பற்றி பதிந்திருக்கிறேன் ( கூகிள் வீடியோ ) வேறு ஏதாவது சுவாரசியமாக கூகிளில் செய்தால் மறுபடியும் ஒரு தனிப்பதிவாக பதிகிறேன்.

அதுவரை, கணினி விளையாட்டுகளில் "ஏமாற்று சீட்டுகள்" என்று உண்டு. இதன்மூலம் நாம் தொடர்ந்து ஜெயிக்க முடியும். அதுபோல், கூகிளுக்கும் ஒரு ஏமாற்று சீட்டு உள்ளது. வேலையில்லாமல் என்னைப்போலிருக்கும் போது படிக்கலாம் (ஏமாற்று சீட்டு)

I Love Google ;-) ஹி...ஹி...இன்னமும் வெலைன்டன் ஜூரம் போகல...அதான் இந்த மாதிரி தலைப்பு
[321,871,243 - இது தான் அந்த கூட்டுத்தொகை, மேலுள்ள கணக்கிற்கு. கூகிளின் கைங்கரியம் ;-) ]

Feb 16, 2005

பலூன் பார்க்கும் பெண்கள்

காதலர் தின கொண்டாட்டங்கள் முடிந்திருக்கும். எல்லோரும் அவரவர் வேலைக்கு திரும்பியிருப்பார்கள். நானும் திரும்பிவிடலாம் என்றால் முடியவில்லை. அதற்கு காரணம் ஒரு பெண்.

எல்லாம் சந்தோஷமாகதான் ஆரம்பித்தது, பதிவுகளில் கவிதைகள் பதிந்து, பிற பதிவுகளில் கவிதை படித்து ஒரு ஏகாந்தமான மனநிலையில் தான் இருந்தேன். 6 மணிக்கு ஆரம்பித்தது சனி. செல்லில் என் நண்பன், என் பால்ய நண்பனுக்கு நடந்த விபத்தை சொன்னதும், பால்ய நண்பனுக்கு தொலைபேசிவிட்டு, அவனைப் பார்க்க கிளம்பினேன். அவனுடைய இல்லம் இருக்குமிடம் கொடுங்கையூர் ( இது வட சென்னையில் இருக்கும் ஒரு இடம். நிறைய நண்பர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். சென்னை என்பது பல பேருக்கு சென்ட்ரல், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர், விமானநிலையம் பிற சில இடங்கள். இதைத் தாண்டி, வடசென்னை ஒரு மிகப்பெரிய பகுதி. தனியாய் வடசென்னையினை தொடராக எழுதும் எண்ணமுள்ளது, நான் ஒரு வடசென்னைவாசி. அது பிறகு) ஆக, என்னுடைய அலுவலகத்திலிருந்து, சற்றேறக்குறைய 25KM. பைக்கினை தொடக்கி, இன்னொரு நண்பனையும் அழைத்து கொள்ள எழும்பூர் விரைந்தேன்.

ஸ்டெர்லிங் சாலை சந்திப்பின் ட்ராபிக் சிக்னலில் நிற்கிறேன். சென்னையில் இப்போது ஒரு நல்ல வசதி சிக்னல்களில். ஒளிரும் சிகப்புடன், எவ்வளவு நேரம் நிற்கவேண்டும் என்னும் நொடிகளும் மேலே ஒடிக்கொண்டிருக்கும். மிகவும் நீளமான நிறுத்தங்களெனில் ( 120 விநாடிகள்) வண்டியை அணைத்து விட்டு பராக்கு பார்க்கலாம். இங்கும் அதே நிலைமைதான். எனக்கு இணையாக 4 பைக்குகள். இடதுபுறம் ஒரு பஜாஜ் காலிபர், இரு இளைஞர்கள். பார்க்க ஏதோ விற்பனை பிரதிநிதிகள் போல இருந்தார்கள். வலது புறம் ஒரு பல்சர். பல்சரில் ஒரு பணக்கார இளைஞன்/ஞி. அவள் கையில் ஒரு இதய வடிவ பலூன். அவள் மிகவும் அவனை நெருக்கமாய் அணைத்தப்படி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தாள். அதற்கு இணையாக ஒரு டிவிஸ் விக்டர். கணவன், இளம் மனைவி, அவள் கையில் ஒரு குழந்தை.

இளம் பெண் அவள். 23-25 வயதிருக்கலாம். கையில் குழந்தையுடன், பேசிக் கொண்டிருக்கும் கணவனை சற்றும் சட்டை செய்யாமல், பலூனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பலூன் வைத்திருந்த பல்சர் பெண்ணோ, உலகினை மறந்து தன் காதலனுடன்(?!) ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். பஜாஜ் இளைஞர்களோ, பல்சர் இளைஞனை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "செம பிக்கப். எங்கியாவது மேஞ்சிருவான் இன்னிக்கு" என்று முனங்குவது காதில் விழுந்தது. இவர்கள் எல்லாரையும் விட என்னை வசிகரித்தது அந்த இளம் தாய் தான். தன் பார்வையை சற்றும் விலக்காமல், பலூன் மீதே வைத்திருந்தாள். பார்வையா அது ? ஆழ்ந்த யோகம் என்றுதான் சொல்லவேண்டும். நானும் பலூனைப் பார்த்தேன். இதய வடிவில் அடர்சிவப்பாய், i love you என்பதை பெரிதாய் எழுதி வைத்திருந்தது.

அந்த பெண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனாலும், அவள், குழந்தை சிணுங்குவதைக் கூட கவனியாமல் பலூனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றே என் மூளையில் பல்ப் எரிந்தது. எத்தகைய சூழ்நிலையில் நான் இருக்கிறேன் என்பது அப்போது தான் விளங்கியது. காதலி இல்லாமல் பொறாமையில் மனம் வெம்பும் இளைஞர்கள் ஒரு புறம். காதலர் தினத்தினை தன் காதலனுடன் கொண்டாட வெளியில் வந்திருக்கும் ஒரு இளம்பெண். இதைத்தாண்டி, இளம் வயதில் கல்யாணமாகி கணவனோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு பெண்.

சிக்னலில் ஆரஞ்சு ஒளிர்ந்தது. அணைக்கப்பட்டிருந்த வாகனங்கள் உறும ஆரம்பித்தன. அப்போது தான் கவனிப்பவள் போல, குழந்தையை சமாளிக்க எத்தனித்தாள். சிக்னலில் பச்சை. வாகனங்கள் வேகமெடுத்தன. என் மனம் வேகமாய் கணக்கு போட்டு கொண்டிருந்தது. நான் நினைப்பது சரியென்றால், அந்த இளம் தாய் சற்று முன்போனபின் அந்த பலூன் பெண்ணை பார்ப்பாள். 10-15 விநாடிகளில் அது நடந்தது. அவள் அந்த பல்சர் சற்றே கடந்து போகுமுன் மீண்டும் பலூனையும் இந்த முறை அந்த பெண்ணையும் பார்த்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டு, தன் கணவனின் தோள் பற்றி, முன் செல்லும் வாகனங்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அங்கிருந்து என் சிந்தனை என்னையும் அறியாமல் ஒடிக் கொண்டிருந்தது. அவளின் பார்வையில் இருந்த சோகமும், இயலாமையும் சற்றே புலப்படலாயிற்று. அவள் யாரெயேனும் காதலித்திருக்கலாம் அல்லது காதலித்தவனையே கல்யாணம் பண்ணி, இன்று அவனுடன் எவ்வித கொண்டாட்டங்களும் இல்லாமல் காதலர் தினத்தில் போய் கொண்டிருக்கலாம் அல்லது கல்யாணம் அவளின் / அவர்களின் உள்ளிருக்கும் காதலை கொன்றிருக்கலாம் அல்லது முதலிரவில் அல்லது பிற்பாடு, கணவன் சொன்ன அவனின் முன்னாள் காதலியின் நினைவு வந்திருக்கலாம் அல்லது இதேப் போன்று காதலித்து வாழ ஆசைப்பட்டு நடக்காமல் கல்யாணம் நடந்திருக்கலாம் அல்லது நெருங்கிய தோழர் /ழிகள் இதேப் போல் அவளின் கல்லூரி காலங்களில் சென்றது நினைவுக்கு வந்திருக்கலாம் அல்லது 'காதல்' படம் போன்று ஏதேனும் அவள் / எவர் வாழ்விலோ நிகழ்ந்தது ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். இன்னமும் எவ்வளவோ சிந்தனைகள் ஒடிக் கொண்டிருந்தது. என் வாழ்வில் மறக்க இயலாத பார்வையது. எவ்விதமான குறுக்கீடுகளுமின்றி, தன் முன் இருக்கும் பலூனினை மட்டும் பார்த்து கொண்டிருக்கும் பெண்ணினை, ஆயுள் உள்ளவரைக்கும் மறக்க இயலாது. என்ன நினைத்து கொண்டு அவள் அந்த பலூனை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பாள் ? உலகெங்கிலும், பலூன் பார்க்கும் பெண்களும், ஆண்களும் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.வாழ்க்கை பல கேள்விகள் நிறைந்தது. எல்லா சந்தர்ப்பத்திலும் கேள்விகள் வாய்மொழியாய் வருவதில்லை.

காதலர் தினம் சில பேருக்கு கொண்டாட்டமாய் தெரிந்தாலும், நிறைய பேருக்கு அது ஒரு பேரவஸ்தை. சரெலேன மேலேறும் நினைவுகளில், மறைந்து இருப்பது காதலிகளும், காதலர்களும் மட்டும் அல்ல. இயலாமையும், சில நேரங்களில் கையாலகத தனமும் கூட. தூர் வாரிய கிணறு போல், மறந்துவிட்டதாய் நினைத்தவைகள் எல்லாம் திடீரென தலை காட்டி, சில சமயங்களில் சந்தோஷத்தையும், நிறைய நேரங்களில் தாங்கவியலா துன்பத்தையும் விட்டு சென்றுவிடும். மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப சில நாட்களாகும். யதார்த்தம் பல சமயங்களில், கவிதைகளை தோற்கடிக்கும்.

உள் மன விகாரங்கள், அம்மணமாய் பல்லிளிக்கும் வேளைகள் எல்லோர் வாழ்விலும் உண்டு. அவளுக்கு அது நேற்றாய் கூட இருந்திருக்கலாம். என்னாலும் சாதாரணமாய் இருக்க முடியாமல், ஊர் உலகம் சுற்றி பின்னிரவு வீடு திரும்பினேன். அவள் யார், என்ன என்று தெரியாவிட்டாலும் ஒன்று தெளிவாக தெளிந்தது, அவளால், இன்றிரவு, சத்தியமாக தூங்க முடியாது

அடுத்த காதலர் தினத்திலாவது நான் வெளியில் செல்லாமலிருக்க வேண்டும். அப்படியே சென்றாலும், பலூன் பார்க்கும் பெண்களை பார்க்காமல் இருக்க கடவது. [என் பால்ய நண்பனுக்கு அடி பலம்தான், இருந்தாலும் பெரியதாய் பிரச்சனைகளில்லை]

Feb 14, 2005

இவற்றையும் காதல் கவிதைகள் என சொல்லலாம்.....

மனுஷ்யபுத்திரன், டிசெயின் வழியில் இங்கும் சில கவிதைகள், படிப்பதும், படிக்காமலிருப்பதும் அவரவர் விருப்பம்.

நீ

கொஞ்சம்
உறிஞ்சிக்குடித்தால்
பன்றியாவென்கிறாய்

அம்மாவோடேயே
இருந்துகொள்ள வேண்டியதுதானேவென்று
கோபப்படுகிறாய்

உனக்கெல்லாம்
பெண்பிள்ளை பிறந்திருக்கவேண்டுமென்று
சபிக்கிறாய்

உன்னோடு
எவளும் இருக்கமுடியாதென்று
குறைகூறுகிறாய்

எழுதுவதைத்தவிர
வேறென்னதெரியும் உனக்கென்று
குற்றம் சொல்கிறாய்

உன்னோடு
வாழ்தல் அரிது

தொலையவேயில்லை
விடுதலறியாவிருப்பம்

- விக்ரமாதித்யன்


தண்டவாளமும் இரு காதலர்களும்

பச்சைஓளி பரவசமூட்ட
தெளிந்த வானத்தில் ஆழ்ந்தவாறு
கற்பூக்களின்மேல் படுத்திருந்தேன்
சற்றுத்தள்ளிப் பரவியிருந்த புல்திட்டில்
இருவர் அமர்ந்திருந்தனர்
காதலர்களாக இருக்கக்கூடும்
பூவிரியும் சூட்சுமத்தோடு
அவன் விரல்களில் சொடுக்கெடுத்தாள்
ஒவ்வொரு சொடுக்கிற்கும்
காற்றிலவன் உதடுகுவிக்கையில்
வெட்கத்தின் சரிகை அவள் முகத்தில்
உரத்த குரலில் அவனொரு
கவிதை வாசித்தான் போலிருக்கிறது
கோடைமழையில் நனைந்த
வெடிப்புநிலமாய் இலகுவானாள்
வெகுநேரம் கெஞ்சிக் கொண்டிருந்த
அவன் உதடுகளில் முத்தத்தின் ஏமாற்றம்.
பின் எதுவும் பேசிக்கொள்ளவில்லை
பின்புறத்தைத் தட்டியபடி எழுந்த அவர்கள்
என்னை சமீபித்து மடியில்
தலைஉயர்த்தி படுத்துக் கொண்டனர்
அமைதியாக இருந்த என்னை
விநாடியில் புணர்ந்துபோட்டது ரயில்
காதலின் வலிமையைச் சொல்ல
காதலர் வலிமை சுயபலியிடுகிறது

- சுகிர்தராணி


டென்த் ஏ காயத்ரிக்கு......

நீ குடியிருந்த வீடு....
கைமாறி கைமாறி
கக்கடைசியில்
காயலான் கடையாகி
ஒட்டடை படிந்தது.
நீ தட்டச்சிய பயிலகம்.....
ஒரு மழைக்கால இரவில்
மகள் ஒடிப்போன துக்கத்தில்
asdfgf க்கு மத்தியில்
உரிமையாளர் தூக்கில் தொங்க
நொடிந்தது.
நீ தரிசனம் தந்த கோயில்....
வெளவால் சந்ததி பெருகி
புராதன வாசத்தில்.
உன்னைக் காதலித்த
எங்கள் கவிதைகள்
பரணேறிய் டைரித்தாளில்
கன்னி கழியாமல்.
தெரியும்,
மிலிட்டரிக்காரனுக்கு மணமாகி
நீ டெல்லியில் இருப்பது.

சப்தர்ஜங்கோ சர்தாஜி பேட்டையோ
சப்பாத்தியும், சால்னாவுமாய்
தேய்ந்து, துரும்பாகி
தூர்த்திருக்கும் உன் வாழ்வு.
பேருந்தில்,
டீக்கடையில் என
பொருள்வயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
'காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?'
என் பதில்:
'பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல.'

- நா.முத்துகுமார்


உன் நினைவெனும் புதைகுழி

தொலைதூரத்தில்
என் தனிமையின் சுமைகூடித்
தொலைபேசியில் கசியும்
உன் பிரியங்கள்
என் உயிர் பிளந்து
இரட்சிக்கும்
சிலந்தியின் கால்களில்
துவளும் எனதிருப்பை

உன் நினைவுகள்
கடும் பனியின் நிசப்தமாய்
என்னோடிருக்க
இன்று உன் இன்மையை உணர்த்த
ஏதொன்றும் நிகழவில்லையென்றாலும்
ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டிருக்கிறது

உன்னை வேண்டும்
ஆன்மாவிற்கு உயிரூட்ட
ஒலிக்கும் உன் குரல்
எப்போதோ தாழிடப்பட்டுவிட்ட
அதிர்ஷ்டத்தின் கதவுகளைத்
தட்டிவிட்டுப் போகும்

மெழுகின் ஒளியில்
சுவரில் வளர்ந்து ததும்பும்
நிழல்கள் போல
இந்த நிலவொளி
என் இதயத்தில் வளர்த்தெடுக்கும்
உன் பிம்பத்தை

சுடரும் நெருப்பாய் வெடித்து சிதறும்
மூச்சுக்காற்றில் கருகும்
இந்த அறையும்
எனது உடலும்

இந்த தவிப்புகளையெல்லாம்
நள்ளிரவில் இல்லாத எதிரியைத் துரத்தும்
நாயின் ஆவேசமெனவோ
அடர்ந்தேயிருக்கும் இருளை
துளையிட்டுச் செல்லும்
மின்மினிப் பூச்சியெனவோ
அர்த்தம்கொள்கிறேன்.

இந்த இரவை விடாப்பிடியாகப்
பற்றியிருக்கும் மழையைப்போல
எனைப் பற்றியிருக்கும்
உன் நினைவுகள் அழிக்கும்
எனது முந்தைய சுவடுகளை

எப்போது வீழ்ந்தாலும்
எப்படி வீழ்ந்தாலும்
பற்றியெழுவதென்னவோ
உன் நினைவுகளில் மட்டும்தான்

பாதைகளற்ற வனமொன்றிற்கு
நீ வந்து சேரவும்
இருக்கத்தான் செய்கிறது
ஒரு ஒற்றையடிப் பாதை

சருகென உலர்ந்த உடலில்
சிறு தளிர்கள் முளைவிட

இந்நினைவுகளின்
புதைகுழிக்குள்
மூழ்கிவிடும் அபாயத்துடன்

மறுபடியும்
அந்நினைவுகளௌக்குள்ளேயே
தடுமாறி நுழைகிறேன்.

- சல்மா


பெண்களுக்கென்று
பிரத்யேகமாக
வாசனைகள் உண்டென்று
கேள்விப்பட்டிருக்கிறேன்
குறுகலான மாடிப்படிகளின்
எதிரெதிர் திசைகளில்
ஒருவருக்கொருவர்
வழிவிடுவது போல் வழிமறித்து
உரசிக்கொண்டே கடந்தோமே
அன்றுதான் தெரிந்து கொண்டேன்
வாசனைக்கென்றே
பிரத்யேகமான பெண்களும்
இருக்கிறார்கள் என்று

- விஜய் மில்டன்.

முதல் ரயில் பயணம்
வற்றாத அனுபவம் நிறைந்தது
உன்னுடனான முதல் பயணமும்கூட
சக்கரம் வேகம் தூரம் காலம் பிரமிப்பு
என் முகம் ஜன்னலில் வெட்டும் காட்சிகளினூடாக
பால்ய காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு
வருகிறேன்.
நாம் இறங்கும் இடம் வந்தவுடன்
என் மீது கோபமா
பயணம்முழுவதும் என்னிடம் பேசவில்லையே என்கிறாய்
உன்னுடன்தானே பேசிக்கொண்டிருந்தேன்
இதழ் பிரியாத சிரிப்புடன் கனவிலா என்கிறாய்
நீ அருகில் இல்லாச் சமயங்களிலும்
உன்னுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்

காலம் வெளி அற்ற நம் உறவுகள்
சக்கரத்தின் ஒயாத உராய்வுகளோடு கிடக்கும்
நம் உடல்கள்

- மாலதி மைத்ரி

உன் பிரிவில் நிகழ்வது
துயரமல்ல
எதிர்பாராத
ஒரு வெளி

சற்று முன்
காலி செய்யப்பட்ட
ஒரு வீடு போல

-மனுஷ்ய புத்திரன் (1988) [நன்றி: டிசே.தமிழன்]
மனுஷ்யபுத்திரனுக்கு, உங்களின் இடமும் இருப்பும் தொகுப்பில் வரும் "சாரதா"வை பதியுங்களேன். என்னிடத்தில் இப்போது அந்த தொகுப்பு இல்லை என்பதனாலேயே....

Feb 13, 2005

காசியின் OPML-ம் உலகம் சுற்றலும்

தமிழ்மணம் காசிக்கு பரந்த மனது. இவ்வளவு விசயங்களை தன்னந்தனியாக செய்து வருகிறார் என்றால், பாராட்ட வார்த்தைகள் கிடையாது. எவ்வளவோ add-ons தந்திருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது, எல்லா பதிவுகளையும் உள்ளடக்கிய OPML பதிவு. Outline Processor Markup Language என்று ஜல்லியடித்து, நீட்டி, முழக்கி என் தொழில்நுட்ப அறிவை மேன்மைப் படுத்திக் கொள்ளலாம். ஆனால், அது தேவையில்லாத மேட்டர். OPML பற்றி சும்மா இருக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள். படிக்க

சுருக்கமாக சொன்னால், ஒரு OPML பதிவு என்பது பல்வேறு பதிவுகளை உள்ளடக்கிய பதிவு. இதன் மூலம் அந்த பெரும்பதிவில் உள்ள எல்லா பதிவுகளையும் தனித்தனியே படிக்க இயலும். நீங்கள் ஏதேனும் RSS Reader உபயோகிப்பதாய் இருந்தால், இப்படியே படிப்பதை நிறுத்திவிட்டு, இந்த உரலை சொடுக்கி, அதன் முகவரியை ஈயடிச்சான் காப்பி எடுத்து, உங்கள் ரீடரில் பதிந்து மொத்தமாய் தரவிறக்குங்கள். முடிந்தது கதை. தமிழில் எழுதப்படும் எல்லா வலைப்பதிவுகளையும் ஒரே நேரத்தில் படிக்க முடியும்.

இதுவரை நீங்கள் எந்த RSS Reader-ம் உபயோகிக்கவில்லையென்றால், ஒரு நல்ல ரீடரை தரவிறக்குங்கள். அல்வாசிட்டி விஜயின் பரிந்துரையின் பேரில் நான் உபயோகிப்பது ஒமியா ரீடர். ஒமியா ரீடரைப் பற்றி ஏற்கனவே தனது டிஜிட்டல் அல்வாவில் விஜய் எழுதியிருக்கிறார். படிக்க - சொடுக்குக.

இதனை தவிர்த்து வேறு ஏதேனும் ரீடர்களிருப்பின் பின்னூட்டமிடவும்.மற்றவர்களுக்கு உதவும். செய்துவிட்டீர்களேயென்றால், உட்கார்ந்த இடத்தில் நாம் உலகத்தை சுற்றி எழுதும், தமிழ் வலைப்பதிவோர்களின் வயிற்றெரிச்சலை மொத்தமாக கொட்டிக் கொள்ளலாம். (அப்பாடா, டைட்டிலை நிலை நிறுத்தியாச்சு!!)

இந்த வசதியை தந்த காசிக்கு நன்றி. நன்றி. நன்றி.

Feb 12, 2005

அசோகமித்ரன் - 50

முதலில் காப்பி - ஆஹா! ஒஹோ!!

திரு. எஸ்.வைதீஸ்வரன் - ஆங்!! ஆவ்!! (நன்றி: மாண்டீ )
திரு. பிரபஞ்சன் -- அட!!
திரு. சுந்தர ராமசாமி - வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
திரு. வேங்கடசலபதி - ஓ!
திரு. ஞானக்கூத்தன் - ம்க்கும்!
திரு. பால் சக்கரியா - அடடா!! ஆஹா !!
திரு. அசோகமித்ரன் - ம்..ம்...ம்...ம்....ம்...ம். ("ம்" கொட்டுங்க!!)


எல்லாத்துக்கும் மேலாக, விழாவினை ஒருங்கிணைத்த பத்ரிக்கு...ஜோரா ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Feb 11, 2005

பகுதி 2: தமிழ் இணைய திரையரங்கம் - சாத்தியமா?

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கொஞ்சம் தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும். மிகுந்த வேலைகள் இந்த வாரத்தில். இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள மின்வணிக பொழுதுபோக்கு தளங்களை ஓயாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்றே முயற்சித்தால் சாத்தியம் என்று கூட தோன்றுகிறது. எல்லா மறுமொழிகளையும் படித்து பார்த்தவுடன் முதலில் செய்யவேண்டியவை என சில விசயங்கள் தோன்றுகிறது.

எல்லா மறுமொழிகளிலும், மிக அதிகமாக சிலாகிக்கப்பட்டது "ரசனை மாற்றம்". ரசனை மாற்றமென்பது ஒரு நீண்ட நாள் முயற்சி. ஆனாலும், திட்டவட்டமாக, 10-20 வருடங்களில் ரசனை மாறிவிடும் என்று தோன்றவில்லை. சீரியல்கள், வணிக சினிமாக்கள், தொலைக்காட்சி என ஆக்ரமிக்கப்பட்டுள்ள, பார்வையாளனின் பார்வையை மாற்று சினிமாவிற்கு திருப்ப நல்ல அறிமுகங்கள் தேவைப்படுகிறது.

நான் விசாரித்த வரையில், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், சினிமா பேரடைசோ, மாக்ஸ் மூலர் பவன், ரஷ்ய கலாச்சார மையம் பிலிம் சேம்பர் திரையரங்கம், சத்யம் திரையரங்கம், ஆனந்த் திரையரங்கம் போன்றவர்கள் இதில் ஆர்வமாக உள்ளார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு நான் சொன்ன இடங்களுக்கு மட்டும், ஒரு 1000-1200 பேர்கள் வந்து போகிறார்கள் (எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்). இவர்களுக்கு மாற்று சினிமா பார்க்க ஆர்வமும், தேடலும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் ICAF [Indo Cine Appreciation Forum]-இன் தங்கராஜிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மாதிரியாக இந்த விசயத்தை கோடிட்டு காட்டியபோது, அவர் மிக்க ஆர்வத்துடன் எப்போது செய்யப்போகிறீர்கள் என்று கேட்டார். ஒவ்வொரு முறையும் ஏதேனும் உலக சினிமா விழா பார்க்கும் போதும், குறைந்தது 100-150 பேர்களாவது பிலிம் சேம்பர் திரையரங்கில் தலை காட்டுவார்கள். மான்ட்ரீஸர், மூக்கன் சொன்னது போல் நிறைய பேர்களுக்கு எங்கு படம் பார்ப்பது என்ற தகவலே தெரியாது.

ஆக, ரசனை மாற்றத்திற்கு எனக்கு தெரிந்த மிக சிறந்த வழி, கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இந்த படங்களைப் பற்றிய அறிமுகங்களை கொடுப்பது தான். [நான் பள்ளி படித்த காலத்தில், ஒரு தேய்ந்து போன ப்ரொஜக்டரில் "ஆயிரத்தில் ஒருவன்" பார்த்திருக்கிறேன்] எல்லா கல்லூரி விழாக்களிலும், புகைப்பட கலைப் போல 5 நிமிட படமெடுத்தலை ஒரு போட்டியாக நடத்தி, சில திரை பிரபலங்களை விட்டு பரிசு தர சொன்னால், மாற்று சினிமாவிற்கான அடித்தளம் அமைக்கப்படும். இந்த தலைமுறை தட்டு தடுமாறி, தேடி, அலைந்து, திரிந்து கற்றுக்கொண்டதை, அடுத்த தலைமுறை சுலபமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். மாற்று சினிமா பற்றிய அறிமுகம் பெருகும். உண்மையிலேயே மாற்று சினிமாவை ரசிக்கும், வணிக சினிமா பிரபலங்களின் மூலம் இதனை முன்னிறுத்தலாம் (உதா. இயக்குநர் வசந்த், நாசர், பாலு மகேந்திரா) ஒரு பேட்டியில் கூட பாலு மகேந்திரா, சினிமாவைப் பார்ப்பது பற்றி ஒரு பாடம் வைக்க வேண்டும் என்று படித்ததாக ஞாபகம். ஆக, ரசனை மாற்றமென்பது ஒரு நீண்ட காலப் தொடர் பணி.

சிறு/பெரும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து இந்த தளத்தின் மூலம் பார்க்கப்படும் குறும்படங்களை பற்றி பத்தி இருத்தல் அவசியம் என்று தோன்றுகிறது. இணைய பத்திரிக்கைகளில் தொலைக்காட்சி, நிகழ்ச்சி நிரல் போல சிறு இடம் கிடைத்தால், குறும் பட நிரல்களை ( புதிதாக வந்த 5 படங்கள், விரும்பி பார்த்த 5 படங்கள் ...) பிரசுரிக்கலாம்.(திரு. மாலன் அவர்களின் கவனத்திற்கு இது)- தொலைக்காட்சிகளின் ஃபில்லர்களாக(Gap Fillers) சில சமயங்களில் சில படங்களை உபயோகப்படுத்தலாம்

மாற்று சினிமாக்களைப் பற்றிய தெரிதல். யார் என்ன படமெடுக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் - போன்ற விசயங்கள். என் பதிவில் ஏற்கனவே இதனை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இதற்கு மிகச் சிறந்த வழி இணையம் தான். சிதறி கிடக்கும் பல்வேறு தகவல்களையும் ஒரு தளத்திலோ, வலைப்பூவிலோ ஒருங்கிணைக்க வேண்டும். இப்போது தொடங்கினால், 2005 டிசம்பருக்குள், ஒரு நல்ல எண்ணிக்கையை எட்ட முடியும். எண்ணிக்கை தான் வணிகத்தை தீர்மானிக்கும். நிறைய படங்களிருப்பின், பார்வையாளனுக்கு சந்தோஷமும், படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கும் உரிமையும் இருக்கும். எண்ணிக்கையை கொண்டே நம் இலக்குகளை நம்மால் குறிப்பிட இயலும். சற்றேரக்குறைய, ஒரு 400-500 படங்கள் இருப்பின், ஒரு சந்தையை நம்மால் உருவாக்க இயலும், அதற்கு முதலில் தேவைப்படுவது, உலகமெங்கும் எடுத்த, எடுக்கும், எடுக்கப்போகின்ற படங்களைப் பற்றிய அறிமுகங்களும், பார்வைகளும். வெறுமே மின்வணிக தளமாக இராமல், iTunes போல ஒரு படத்தை தரவிறக்கிப் பார்க்க $1.99 என்று செய்யலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன். பைரசி வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என யாராவது திருவாய் மலர்ந்தால், அவர்களுக்கான என் பதில் "சாமி, முதல்ல அவன் படத்தை பாக்கட்டும். இல்லைன்னா உங்க வீட்டு DVD Player-ல இலவசகாட்சி தான் ஓட்டணும்"

மேலும், உலகமெங்கும் நடக்கும் திரை விழாக்களிலும், குறும்பட, இலக்கிய, தன்னார்வ விவாதங்களிலும், அந்த தளத்தை பிரபலப் படுத்துவமேயானால், படங்களை ஒருங்கிணைக்க இயலும். என்னளவில், சென்னையில் நான் சொன்ன எல்லா இடங்களிலும் பேசிப் பார்த்து அதனை ஒரு நிரந்தர தளமாகவோ, வலைப்பூவாகவோ பதியப்படுத்துகிற வேலையை செய்ய இயலும். மேலும், ஒரு கூட்டமைவு என்ற முறையில் எல்லா குறும்பட, மாற்று சினிமா இயக்குநர்களுக்கும் இந்த தளத்தை அவர்களின் படத்தின் பெயர்வரிசையில் இடம்பெற வேண்டுகோள் வைக்கலாம். அவ்வாறு செய்யும்போது, படம் பார்க்கும் சிறிய கூட்டத்திற்கும், மாற்று சினிமா பற்றிய உலகளாவிய ஒரு நிரந்தர ஆணையத்தை பார்க்கும் வாய்ப்பும் அதன்மூலம் தளத்தில் உள்ள பிற படங்களைப் பற்றிய அறிமுகமும் கிடைக்கும்.

அரசு அளவில் மாற்று சினிமாவை முன்வைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால், இந்தியாவில் அது சாத்தியமா என்று தெரியவில்லை. அரசாங்கம் புகும் எந்த வேலையும் வேகமாக, லாபமாக செய்ய இயலும் என்று தோன்றவில்லை. மாற்றுக் கருத்துக்கள் இதில் இருக்கலாம். ஆனால், என்னளவில், மக்கள் ஒரளவிற்கு தயாராகிவிட்டால், அரசு தானாக உள்ளே வரும் என்று தான் எண்ணம்.

திரையரங்குகளில் மாற்று திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்பது கொஞ்சம் ஓவரான எதிர்பார்ப்பாக தோன்றுகிறது. லாபம் மிக முக்கியம். மாற்று சினிமாவின் நீளம் மிகக்குறைவு. ஆக இடைவேளை, லேஸ், காபி, சமோசா, எஃக் பஃப், சாக்லேட் விற்க முடியாது. படத்தின் நீளத்தை விட பார்வையாளர்கள் குறைவு. அதனால், தொடர்ச்சியாக படம் காண்பிக்க முடியாது. எனக்கென்னவோ இந்த திரையரங்க அதிபர்கள் அனைவரும் இன்னும் 2-3 வருடங்களில் காணாமல் போய்விடுவார்கள் என்று தோன்றுகிறது. 39" பிளாஸ்மா ஸ்க்ரின்கள் மூலம், ப்ரிவியு திரையரங்க அளவிற்கு DVD திரைகள் இந்தியாவெங்கும் மொய்க்கக்கூடும் என்பது என் ஊகம். இல்லாவிடினும், ரிலையன்ஸ் ப்ரொஸிங்கினைக் கொண்டு, தாமதமில்லாத ஸ்ட்ரீமிங்கு வீடியோ(streaming video) மூலமாக, அகல திரையில் படங்களை திரையிட்டு கல்லா கட்டிவிடலாம், திரையரங்குகளை தொங்குவது வேலையத்த வேலை எனத் தோன்றுகிறது.

ஆக முதலில் செய்யவேண்டியது, மாற்று சினிமாவினை ஒருங்கிணைப்பது. உங்களின் ப்ரெஷ்ஷான கருத்துக்களோடு, இந்த விவாதத்தினை நீட்டிக்கலாம்.

பகுதி 1: தமிழ் இணைய திரையரங்கம்

Feb 6, 2005

தமிழ் இணைய திரையரங்கம் - சாத்தியமா?

இரண்டு வாரங்களாக மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் விசயமிது. ஒருவாறாக, என் எண்ணங்களை ஒருங்கிணைத்து இதனை தொகுத்திருக்கிறேன். திரைப்படங்கள், தமிழர்களாகிய நம் வாழ்வில் ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்துவிட்டது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை.வலைப்பதிவில் பதியும் நிறைய சக பதிவாளர்கள், திரைப்படங்கள் (உலக/உள்ளுர்/வேற்றுமொழி) பற்றிய பதிவுகளை முன் வைக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கு திரையிடப்படும் படங்களையும், என்னைப் போல் சென்னையில்/தமிழகத்தில் உள்ளவர்கள் இங்கு திரையிடப்படும் படங்களைப் பற்றிய பதிவுகளையும் பதிகிறோம்.

சில மாதங்களுக்கு முன் யாருடைய பதிவிலோ படித்தது. குறும்படங்கள் அல்லது மாற்று திரைப்படங்கள் ஏன் மக்களை சென்று அடையவில்லை? என்னளவில், அதற்கு மிக முக்கியமான காரணம் இரண்டு.

1. மாற்றுசினிமாவை மிக அதிக அளவில் பார்க்கக்கூடிய பார்வையாளர்களின்மை
2. குறும்படங்கள்/மாற்று சினிமாவை சந்தைப் படுத்த இயலாமை அல்லது அதற்கான ஒரு சந்தையில்லாமை.


இதனை சற்றே விரிவாகப் பார்க்கலாம். தமிழ்பாம்பு என் பதிவின் பின்னூட்டமாக இட்ட ஒரு விசயத்திலிருந்து இதனை தொடங்குவோம் "உண்மையில், எங்கெங்கே படம்பார்க்க சென்னையில் வாய்ப்புக்கள் கிடைக்கிறது என்பதே பலருக்குத் தெரியாது என்பதே நிஜம். ரஷ்யக் கலாச்சார மையம், ஃபிலிம் சொசைட்டி போன்றவை குறித்த தகவல்கள் பரவலாகத் தெரியவந்தாலே பெரும்பாலானோருக்கு உபயோகமாயிருக்கும்...மூன்று வருடங்கள் தண்டமாகச் சுற்றியபின்தான் அவைகளுக்கெல்லாம் நுழையத்தொடங்கியது...." [ பார்க்க: நன்றி: தமிழ்பாம்பு]

நமது பிரச்சனை இங்கிருந்து தான் துவங்குகிறது. மாற்று சினிமாவை எங்கு பார்ப்பது என்பது பற்றிய குறைந்தபட்ச தகவல்கள் கூட நிறைய பேருக்கு தெரியாது. அப்படியிருக்கையில் மாற்றுசினிமாவிற்கான பார்வையாளர்கள் எப்படி வருவார்கள்? பார்வையாளர்கள் குறைவு என்னும் போது அதன் வணிகத்தன்மை கேள்விகுறியாகிறது. வணிகத்தன்மை மிகப்பெரிய கேள்விகுறியாய் முன் நிற்கும்போது, எவ்வளவு பேர் அதில் பணம் போட முன் வருவார்கள் ? அப்படியே பணம் போட்டு படமெடுத்தாலும், அதனை எப்படி சந்தைப் படுத்துவார்கள் ? ஆக, இது ஒரு vicious circle.

இதன் விரிவாக உள்ள இன்னொரு பிரச்சினை, உலகெங்கிலும் எடுக்கப்படுகின்ற தமிழ் படங்கள் (குறும்படங்கள்/ஆவணப்படங்கள்) ? சென்னையில் உள்ளவர்கள், லண்டனில் எடுக்கப்படும் படங்களைப் பார்க்க இயலாது, அமெரிக்காவில் உள்ளவர்கள் சென்னையில் திரையிடப்படும் படங்களை பார்வையிட இயலாது. ஆக, யார் எதைப் பற்றி, எந்தக் கருத்தினை உள்ளடக்கி படம் எடுக்கிறார்கள் என்று தெரியவே பல வருடங்களாகிறது. இதனை தாண்டி, அந்தப் படங்களை பார்க்கும் பாக்கியம் பெறுபவர்கள் மிகச் சிலரே.

இவ்விதமான பிரச்சனைகளைத் தாண்டி வந்தால், படங்களை வணிகரீதியில் அனுகுவது என்பது அடுத்த பிரச்சனை. பணம் போட்டு படம்மெடுப்பவர்கள் என்னத்தான், விருதுகளுக்காகவோ, ஆத்ம திருப்திக்காகவோ படம் எடுத்தாலும், போட்ட முதலை எப்படி திருப்பிப் பெற போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி. வெளிநாடுகளிலுள்ள இயக்குநர்களைப் பற்றிய என் அறிதல்கள் குறைவாய் இருந்தாலும், சென்னையிலிருந்து, தன் பணத்தைப் போட்டு படம்மெடுக்கும் எத்தனையோ இயக்குநர்கள், பல்வேறு கஷ்டங்களுக்கிடையே இதனை செய்கிறார்கள். ஆயினும், முதல் வாராது. படத்தினை பிலிம்சேம்பரிலோ அல்லது ரஷ்ய கலாச்சார மையத்திலோ இலவசமாக, தெரிந்தவர்களுக்கு சொல்லி அனுப்பி, கூட்டம் சேர்த்து காண்பிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். வெளிநாடுகளிலுள்ள இயக்குநர்களும் இதில் விதிவிலக்கல்ல என்றே தோன்றுகிறது.

இதனையும் தாண்டி படமெடுத்து கையில் வைத்திருந்தாலும், அதனை சரியாக சந்தைப் படுத்த இயலாமை அல்லது தெரியாமை. சும்மா, படமெடுத்து என்னுடைய கணினியில் என் வீட்டுக்கு வருபவர்களுக்கு நானும் திரைப்பட இயக்குநன் என்று ஜம்பமடித்து, மார்தட்டிக் கொள்ள வேண்டுமானால் இது உதவும்.

இன்றைய தமிழ்சூழலில் குறும்படங்கள் / விவரணப்படங்கள் / ஆவணப்படங்கள் / மாற்றுசினிமா களின் நிலை இப்படித்தான் உள்ளது. விதிவிலக்காக, சில படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படலாம் ("நாக் அவுட்", "ஊருக்கு நூரு பேர்", "ஓருத்தி" )

உண்மையிலேயே குறும்படங்களுக்கு சந்தையில்லையா ? பார்வையாளர்கள் இல்லையா ? என்று கேட்டால் அது ஒரு தவறான பார்வை என்பது தான் என் பதில். நான் இணையத்தில் சந்தித்ததும், சென்னையில் சந்திக்கும் நிறைய நபர்கள் இத்தகைய படங்களை பார்க்கக்கூடிய ஆர்வம் உள்ளவர்கள். இந்த படங்களுக்காக ஒரு சந்தை இருக்கிறது. பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இங்கே எல்லாமே இருக்கிறது. படமெடுக்கக்கூடிய இயக்குநர்கள், சந்தை, விரும்பிப் பார்க்கக்கூடிய பார்வையாளர்கள், உலகமெங்கிலும் பரந்து விரிந்துகிடக்கும் தமிழினம், படங்களை காசு கொடுத்து பார்க்கும் நிலையில் உள்ள பார்வையாளர்கள் (Purchasing power) என ஒரு சந்தை பொருளாதாரத்தை முன்னிருந்தும் அளவிற்கு எல்லாம் இருந்தும், நம்மால் இதனை சந்தைப் படுத்த இயலவில்லை என்னும்போது, அதன் முக்கிய பிரச்சனையாக இருப்பது distribution.

என்னுடைய கேள்வி இங்கிருந்து தான் தொடங்குகிறது. பார்வையாளர்கள் உலகமுழுக்க இருக்கிறார்கள். இணையம் உலக முழுக்க பரவியிருக்கிறது. அகலப்பாட்டை(broadband) இணைப்புகள் உலகமெங்கிலும் செயல்ரீதியாக வரவேற்பினைப் பெற்றுள்ளது. படமெடுக்கக் கூடிய கருவிகளின் விலை வெகுவே குறைந்துள்ளது (ஆப்பிளின் தளத்தில் US$1300க்குள் உங்களால் ஒரு படத்தை எடுத்து, தொகுத்து, இசைக்கோர்த்து, க்ராபிக்ஸ் விசயங்கள் சேர்த்து, திரையில் திரையிடக்கூடிய பார்மெட்டில் தரக்கூடிய மென்பொருள்கள் வந்துவிட்டன. இன்னொரு பக்கம், செல்பேசிகளிலியே சலனப்படங்கள் பதிவு செய்யக்கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கருவிகள், மென்பொருட்கள் பற்றி தனியாக என் பதிவில், இந்த முயற்சிக்கு கிடைக்கும் ஆதரவினைப் பொறுத்து பதிகிறேன்) ஆக, மிகக் குறைந்த செலவில் தரமான படங்களை கொஞ்சம் விசயமும், கொஞ்சம் கற்பனைவளமும் உள்ளவர்கள் எடுக்கும் சாத்தியங்கள் இன்றளவில் ஏராளம்.

இணையம் மூலமாக இதனை ஒரு மிகப்பெரிய சந்தையாக உருவாக்க இயலும் என்பது, ஏற்கனவே இதைப்போலவே உள்ள வணீக ரீதியில் வெற்றிக்கண்டுள்ள தளங்களை கொண்டு அறிய இயலும்.(iFilm, ShockWave, IMDB ) ஒரு இணையதளத்தில் நம்மால் ஒரு திரையரங்கை கட்ட இயலும். இதனை திரையரங்காக மட்டும் பார்க்காமல், மக்கள் சினிமா வாக பாருங்கள். பல்லடுக்குகளைப் (Multiplex) போல், இந்த இணைய தளம் பல்வேறு படங்களை திரையிடலாம். இந்த இணையதளத்தின் மூலமாக மாற்று சினிமாவிற்கான நிறைய,உருப்படியான விசயங்களை உருவாக்க இயலும்.

உதாரணத்திற்கு, பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டி, படங்களைப் பார்க்க செய்யலாம்.ஒரு படத்தை திரையிட்டு, எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை இயக்குநர்க்கு பகிர்ந்தளிக்கலாம். மேலும், படங்களின், விசிடி, டிவிடிகளை ஒரு உரலாக குடுத்து, அதன் மூலம் குறிப்பிட்ட படத்தின் வருவாய்க்கு வழிசெய்யலாம். கேட்லாக் விற்பனைகள் போல, சிறந்த 10-20 குறும்படங்களை ஒரே டிவிடியில் பதிந்து விற்கலாம் (இதேப் போல சில டிவிடிகளை நான் பார்த்திருக்கிறேன்). நடைமுறை சிக்கல்கள் சில இருந்தாலும், இதனை அடிப்படை கட்டமைப்பாக வைத்துக்கொண்டு (framework) பல்வேறு கோணங்களில் இதனைப் பார்த்து செப்பனிட்டு ஒரு வணிகரீதியிலான முன்மாதிரியை உண்டாக்கலாம் (Business model)

நானறிந்த வரையில், இதன் மூலம் கிடைக்கும் பலன்கள்

குறும்பட இயக்குநர்களுக்கு
1. முதலில் இந்த சென்சார்/தணிக்கை சமாச்சாரங்களிருந்து விடுதலை கிடைக்கும். சில குறிப்பிட்ட மணித்துளிகளுக்கு மேல் எடுக்கப்படும் படங்கள் இந்தியாவில் தணிக்கைக்கு உட்பட்டவை. (அனுபம் கெர்ரின் பதவியிறக்கம், தாமிரபரணி குறும்படம், Final Solution என்கிற கோத்ரா ரயிலெறிப்பினை பற்றி பேசும் படம் போன்றவைகள் ஞாபகத்திற்கு வருகிறதா?)
2. நிறைய மக்களுக்கு படங்களை எடுத்து செல்ல இயலும்.
3. வணிக ரீதியிலான விசாரனைகள் முன்மொழியப் படலாம் (இந்தியா / அமெரிக்கா / லண்டன் -லில் இந்த படத்தை காண்பிக்க இயலுமா, இந்த படத்தின் விசிடி,டிவிடி எங்கு கிடைக்கும்)
4. குறும்படத்தையை பெரிய படமாகவோ, வேற்றுமொழி படமாகவோ தயாரிக்கும் உரிமை ( காப்பியடிப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது)
5. இதுவே வணிக ரீதியிலான ஒரு படத்தை இயக்க வழிகோலக்கூடிய படமாக (Demo Reel)
6. பார்வையாளர்களின் பிரதிபலிப்புகளை, கேள்விகளை தெரிந்து கொண்டு அதன்மூலம் ஒரு பரிவர்த்தனை வாயிலான (dialogues / interactive discussions) பங்களிப்பை உருவாக்குதல்
பார்வையாளர்களுக்கு
1. உலகெங்கிலும் எடுக்கப்படுகிற படங்களை பார்க்க இயலுதல்
2. எவ்வித ஊடகங்களின் துணையுமில்லாமல், படங்களை பார்ப்பதற்கான சுதந்திரம்
3. மாற்றுசினிமாவின் வீச்சினை புரிந்து கொள்ளவும், ஒவ்வொரு சமூகத்தில் நடக்கும் பல்வேறுவிதமான அனுபவங்களை உள்ளடக்கிய அறிதல்
4. ஒற்றை சாளரத்தின் வாயிலாக, பார்வையாளராகவும், இயக்குநனவாகவும் இருக்கக்கூடிய சுதந்திரம்
இணைய தளத்திற்கு
1. ஒரு மாற்றுசினிமா மின் வணிக தளமாக அணுகி வணிக ரீதியில் நிலைநிறுத்தலாம்
2. உதாரணத்தில் சொல்லியபடி, இன்று, பதிப்பகங்கள் எப்படி, பல்வேறு எழுத்தாளர்களை ஒன்றடக்கி பதிப்பித்து புத்தகங்களை விற்கிறதோ, அதேப்போல ஒரு 5-10 படங்கள் உள்ளடக்கிய பட டிவிடிகளை விற்கலாம்.
3. சிறு,சிறு டிரையலர்களை கொடுக்கசொல்லி இயக்குநர்களை வற்புறுத்துவதன் மூலம், இத்னை உலகின் பல்வேறு இடங்களிலுமுள்ள செல்லிடைப்பேசி நிறுவனங்களில்(Mobile Networks)விற்று பொருளிட்டலாம்.
4. ஒரு சமூகத்தின் வெளீப்பாடாக இந்த தளத்தினை (Ethinical Branding)முன்னிறுத்தி அதன்மூலம் அந்தந்த நாட்டு நுகர்வோர் நிறுவனங்களின் விளம்பரங்களையும்,உதவியையும் பெறலாம் (உதா. Raaga, BMW Films )
இப்படி பல்வேறு விதமான விசயங்களை இதன் மூலம் முன்னெடுத்து செல்லலாம். இதனை தாண்டி, வணிக சினிமாவிற்கும் கூட இந்த தளம் பல்வேறுவிதங்களில் பயன்படலாம். மேலும் இதன்மூலம், புவியியல் ரீதியிலான கோடுகளைத் தாண்டி, ஒரு முழுமையான பார்வையை பார்வையாளனுக்கு தர இயலும். தணிக்கை விசயத்தில் உள்ள சுதந்திரம்,மாற்று சினிமாவின் மிக முக்கியமான கரு. கட்டமைக்கப்பட்ட இயல்புகளிலிருந்து, விலகி, சமூகத்தை,சமூக வெளியை பார்த்தல் போன்ற பல்வேறு தளங்களில் இத்தகைய ஒரு முயற்சி, அடுத்த தலைமுறைக்கு மிக முக்கியமான ஆதாரமாக அமையும்.

இதற்கு உண்டாகும் செலவினை பகிர்ந்து கொள்ளலாம் (நண்பர் முகுந்தராஜின் ஈ-கலப்பைக்கான கீமென உரிமம் வாங்கிய நிகழ்வினை நினைவு கூறுங்கள்) வியாபார ரீதியிலான முன்னெடுத்து செல்லுதலை,பத்ரி, மீனாக்ஸ் மற்றும் பிற இணைய தளத்தின் மூலம் வணிகம் செய்பவர்கள் உற்று நோக்கலாம். காசி, சுரதா போன்றவர்கள் தொழில்நுட்ப ரீதியிலான விசயங்களை பார்வைமிடலாம். நான் என்னளவில் என் முழு பங்களிப்பினை (வணிக/தொழில்நுட்ப) வழங்க தயாராக இருக்கிறேன். படங்களயும், பட விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதி வரும் தமிழ்பாம்பு, விஜய், ரோசாவசந்த், கறுப்பி, அருண் வைத்யநாதன் மற்றும் எனக்கு தெரியாத பல சக பதிவாளர்கள் இதனை முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சும்மா, வணிகபடங்களை குறை சொல்லுவதை தவிர்த்து, மாற்று சினிமாவிற்கான ஒரு சந்தையை உருவாக்காமல், ஜல்லியடித்துக்கொண்டு, வீணே பேசிக் கொண்டிருப்பதால் எவ்விதமான பயனும் விளையப்போவதில்லை. இணைய இதழ்கள் என்று கூறப்பட்ட இலக்கிய/சமூக/அறிவியல் இதழ்கள், இன்று இணையத்தில் இருந்து, தமிழிலக்கியத்தில் ஒரு தீவிரமான பங்களிப்பை உண்டாக்கி வருகின்றன. இதேப் போன்றதொரு மாறுதலை தமிழ் திரைப்படங்களுக்கும் இதனை முன்வைத்து உண்டாக்க இயலும். இதனை முன்வைத்து, தமிழ் மாற்றுசினிமாவிற்கான ஒரு முழுமையான அதிகாரத்தினை உருவாக்கமுடியும் என்பதும், பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ் இயக்குநர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம் பார்வையினை உலக அரங்கில் நிலைநிறுத்த இயலும். இன்னமும் நிறைய விசயங்களையும், அனுகூலங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

நான் தயார். விவாதிக்க நீங்கள் தயாரா ?

ஒரு வேண்டுகோள்: இதுவரை இந்த பதிவினை படித்து வந்த நீங்கள் இந்த பதிவிற்கு ஒரு பின்னூட்டத்தையும், வாக்கினையும் அளிக்குமாறு கோருகிறேன். இது ஏதோ நான் என் பதிவினை முன்னெடுத்து செல்வதற்காக அல்ல. பரவலாக நிறைய வாசகர்கள் இதனை பற்றி தெரிந்துக்கொண்டு ஒரு ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கி விவாதிக்கவே. அதற்கு முதலில், இந்த பதிவு இருக்கிறது என்பது தெரியவேண்டும். அதற்காகவே இந்த வேண்டுகோள்.
----------------------------------------------------------
உலகளாவிய இணைய திரைப்படங்கள் பற்றிய பார்வை
உரல் 1 | உரல் 2 | உரல் 3 | உரல் 4 | உரல் 5

Feb 4, 2005

மீனாவை மிஞ்சிய கலைஞர் (அ) நகர்வலம்: உதயம் திரையரங்கு

வீதியெங்கும் தோரணங்கள். கட்சிக் கொடிகள். சரிதான், ஏதோ கழக கண்மணிகள் ஏற்பாடு செஞ்சிருக்கற கூட்டம் போல அப்படின்னு நினைச்சிட்டு தான் அசோக் நகரிலிருந்து வந்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், மனசை ஒரு விசயம் லேசாக நெருடியது. இந்த மாதிரி, கூட்டம் கூட்டும்போதெல்லாம், சுவர் முழுக்க, "இளைய தளபதி ஸ்டாலின் அழைக்கிறார்" ,"டாக்டர் கலைஞர் அழைக்கிறார்" "தன்மான சிங்கம் XYZ அழைக்கிறார்" அப்படின்னு ஏதாவது இருக்கும். இங்க ஒண்ணுமேயில்லையேன்னு யோசிக்கிட்டே உதயம் திரையரங்கினைத் தொடும்போது தான் என் மரமண்டைக்கு உரைத்தது. இன்று, கலைஞர் கதை , வசனம் எழுதிய "கண்ணம்மா" பட துவக்கநாள். 'அட்றா சக்கை' என உதயம் திரையரங்கைப் பார்த்தால், முழுவதும் கலைஞர் மயம்.

நட்சத்திரம் பொறித்த, பிடித்த நடிகர் புகைப்படங்களை வைக்கும் ( "சீறும் புயல்" தனுஷ் ரசிகர் மன்றம், 37வது வட்டம். இவ்வண் தனுஷ் ராஜசேகர், கந்தசாமி, விருகை பாண்டியன், பீட்டர், தனராசு, மூர்த்தி, 'கறிக்கடை' முனீர், வேங்கை வரதன் மற்றும் அகில உலக தனுஷ் ரசிகர்கள்) ரசிகர்களை மிஞ்சிவிட்டார்கள் கழக உடன்பிறப்புகள். சாலையெங்கும் ஒரே கழகக் கொடிகள். இதில் "தி.நகர்" வட்ட திமுக தலைமை என்று, புவியியல் ரீதியான இடம்பிடித்தல் வேறு. ( தலவரே உங்க படத்துக்கு நம்ம தி.நகர் வட்டச்செயலாளர் தான் கைக்காசுப் போட்டு, முன்னாடி நின்னு எல்லா விசயத்தையும் செஞ்சாரு....அப்ப வர்ற அசெம்பிளி எலெக்ஷன்ல...ஹி...ஹி....நமக்கு ஒரு சீட்டு கொடுத்திங்கன்னா....ஹி....ஹி...இத விட பத்து மடங்கு செலவு பண்ணி, தூள் பண்ணிடுமோம்...தலைவரே!....ஹி...ஹி...கொஞ்சம் பாத்துக்குங்க) சாம்பிளுக்கு ஒன்று.

'உலக காவியம்' படைத்த கலைஞரின் 'கண்ணம்மா' பார்க்க வருகை தரும் ரசிகர்களை வாழ்த்தி, வரவேற்கிறோம் ( அப்படிப் போடு அரிவாளை!!)

இந்தப்படத்தின் மூலம் வந்த வருவாயை கலைஞர் முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்து விட்டார். ஆனால், பணம் போட்ட தயாரிப்பாளருக்கு வருவாய் வருமா என்று இனிமேல்தான் தெரியும். பெரிய கண்களோடு கிறங்கடிக்கும் மீனா பாவம். போனால் போனதென்று கொஞ்சமாய் இடம்விட்டு உள்ளே ஒரு போஸ்டரில் சிரித்துக் கொண்டிருந்தார். ஜெமினி மேம்பாலத்தில் உள்ள போஸ்டர் மட்டும் விதிவிலக்கு.

யார் சொன்னார்கள், திராவிட கட்சிகள் தமிழக மக்களின் வாழ்வில் விளக்கேற்றவில்லை என. சாலையெங்கும் ஒரே டிஜிட்டல் போஸ்டர்கள். பிளாஸ்டிக் கொடிகள். டாடா சுமோவில் வந்து சாக்லெட் தரும் கழக உடன்பிறப்புகள். தமிழர்கள் தொழில்நுட்பத்தில் உயர்ந்து விட்டார்கள். வண்ணமயமாகிவிட்டது சாலை. இவ்ளோவும் வந்தது யாராலே?

அத விட காமெடியான விசயம், மெட்டிஒலி "போஸ்" தான் இந்தப்படத்தின் கதாநாயகன் ( யார் போஸ்ஸா? கேள்வி கேட்டிங்க...அவ்வளதான்..."நீயெல்லாம் ஒரு தமிழனா ? சன் டிவி பார்க்காம போயஸ் கார்டன்ல் இருப்பாங்க...தமிழன் இருப்பானா ? அப்படி தெரியலைன்னா நீ தமிழனே கிடையாது. உனக்கு மோட்சமே கிடைக்காது. உங்களுக்கெல்லாம் *********** நல்லா வருது வாயில" என தமிழ்நாட்டுத் தாய்க்குலங்களின் சாபத்திற்கு உள்ளாவீர்கள்) சுவர் முழுக்க சின்னதாய் "அகில இந்திய போஸ் வெங்கட் ரசிகர் மன்றம்" என்ற சுவரொட்டி வேறு. இவர் எப்ப, அகில இந்திய ரீதியில் பெரியாளானாருன்னு ஒரே யோசனை. ஒருவேளை, ஏதாவது தேசிய கட்சில சேர்ந்திருப்பாரோன்ற சிந்தனை வேற. போஸ்ஸு, உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? ஏதாவது தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகலாம்ன்றா மாதிரி நாற்காலி கனவு ஏதாவது வந்துதா...வந்ததுன்னா சொல்லிடுங்க...உங்களுக்கும் கலைஞர் இதயத்துல ஒரு இடம் இருக்கும். ஒரே தமாசுதான் போங்க!!

இனி நடந்தாலும் நடக்கக்கூடியது.
ஒருவேளை, கலைஞரின் கழக உடன்பிறப்புகள் 50 நாட்கள் பார்த்தால், படம் தேறும் என்று கூட கணக்குப் போட்டிருக்கலாம். அப்படி ஏதாவது நடக்குமானால், விஜய்க்கு பின்னோடும் ஒரு கூட்டம் கலைஞர் பின்னாலும் வரலாம் (எல்லாம் மினிமம் கியாரண்டி பண்ற வேலை!!)

கலைஞர் பொதுக்குழுவைக் கூட்டி, ஒலக காவியத்தினைப் பற்றி வகுப்பெடுக்கலாம்

கழக உறுப்பினரட்டை உள்ளவர்கள் அனைவரும் இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்தலாம்.

உடன்பிறப்பே, என முரசொலியில் கடிதமெழுதலாம்.

சன் டிவியின் டாப் 10ல் நிரந்தரமான நம்பர் 1 படமாக 10 வாரங்கள் வரலாம்.

கலஞர் எளுதுன வசனம் பேசும்போது உடம்பெல்லாம் புல்லர்ச்சிப் போச்சி என்று, மீனா தமிழாங்கிலத்தில் கே டிவியில் பேட்டி கொடுக்கலாம்.
ஆயிரம் கலாய்த்தாலும், பராசக்தி எழுதின கலைஞர், Palm top-ம் செல்லுமாய் அலையும் தலைமுறைக்கு எப்படி வசனம் எழுதியிருக்கிறார் என்பதற்காகவாவது ஒரு முறை படம் பார்க்கவேண்டும்.

கடைச்செருகல்:

பதிந்து முடிந்தபின் சாவகாசமாய், குமுதத்தை மேய்ந்துக் கொண்டிருந்தபோது, குமுதம் ரிப்போர்ட்டரில் மாட்டியது இது. சத்தியமாக என் பதிவு இவற்றையெல்லாம் வாசிக்கும் முன்னரே பதிந்தது என்று உளமார, மனமார, ரகசிய காப்பு பிரமாணம் ஏதும் எடுக்காமலேயே கூறுகிறேன்.
‘‘உடன்பிறப்புகளின் அடுத்த புலம்பல் இது. ‘கண்ணம்மா’ படத் தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியால் சோர்ந்து போய்விட, படம் நின்று போனால் அவப்பெயர் என்று கருதி, தண்டராம்பட்டு வேலுவைத் தயாரிப்பாளராக்கி படத்தை முடித்து விட்டார்களாம். படத்தின் விநியோக உரிமையும் முக்கியமாக வசதியான கட்சிக்காரர்கள் தலையிலேயே கட்டப்பட்டுவிட்டதாம். அவர்களும் தலைமையுடன் நெருக்கமான உறவுக்கு இதுதான் வழி என்று சம்மதித்துவிட்டார்களாம். தமிழ் நாட்டின் முக்கியமான பல தியேட்டர் ஓனர்கள் ‘கண்ணம்மா’வைத் திரையிட விரும்பவில்லையாம். சென்னையிலும் முக்கியமான மா.செ.ஒருவர்தான் படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்..’’

‘‘ஓஹோ!’’

‘‘சென்னையில் ஸ்பெஷல் ஷோ நடத்த 300, 500, 1000 ரூபாய்களில் டிக்கெட் விற்கப்படுகிறதாம். அதுவும் அறிவாலயத்திலேயே டிக்கெட் விற்பனையாம். மாநகர தி.மு.க. நிர்வாகிகள்.. பாவம்.. புலம்பிக் கொண்டே டிக்கெட்டுளை வாங்கினார்களாம். ‘உண்மை உழைப்புக்கு மரியாதை இல்லை; வசதியானவர்கள்தான் வாழ முடிகிறது’ எனப் புலம்புகின்றனர் உடன்பிறப்புக்கள்..’’
ஆக ஒரு கற்பனை உண்மையாகிறது. பேஜாரு மக்கா நீ!! :-)


Feb 3, 2005

ஆப்ரோ-அமெரிக்கர்களின் இடம் பெயர்தல் அனுபவங்கள்

ஆப்ரோ-அமெரிக்கர்களின் இடம் பெயர்தல் அனுபவங்கள் என்ற பெயரில் நியூயார்க் பொது நூலகத்தின் டிஜிட்டல் பிரிவும், சொம்பர்க் கறுப்பின ஆராய்ச்சி மையமும் இணைந்து ஆப்ரோ-அமெரிக்கர்களின் 500 வருட வாழ்க்கையை அருமையாக ஒரு வலைத்தளத்தில் பதிந்திருக்கிறார்கள். In Motion: The African-American Migration Experience என்ற தலைப்பில் இருக்கும் இணைய தளம், ஆப்ரோ-அமெரிக்கர்களின் 500 வருட வாழ்க்கையை காப்சூலாக, சொல்ல முயன்றிருக்கிறது. அமெரிக்காவில் பெப்ரவரி 1 முதலான இந்த மாதத்தை கறுப்பினவரலாறு மாதமாக அறிவித்திருக்கிறார்கள். உலக வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலுடையவர்களுக்கு, இந்த தளம் செமதீனியாக இருக்கும்.
A sweeping narrative from the transatlantic slave trade to the Western migration, the colonization movement, the Great Migration, and the contemporary immigration of Caribbeans, Haitians, and sub-Saharan Africans. Told in historical texts, rare visual materials, and contemporary photo-journalism.
என் சந்தேகம்: நீக்ரோக்கள் என்கிற வார்த்தை தடை செய்யப்பட்ட வார்த்தையா?. அமெரிக்க நண்பர்கள் விளக்குமாறு வேண்டுகிறேன்.

Feb 2, 2005

மேன்ஷன் கவிதைகள் - பவுத்த அய்யனார்

(மேன்ஷன் வாழ்க்கையைப் பற்றி வந்த தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு என அறியப்படுகிறது, பவுத்த அய்யனாரின் "மேன்ஷன் கவிதைகள்" . ரோசாவசந்தின் காதல் பற்றிய பதிவில் டிசெதமிழன் கேட்டதற்காக....)

1. இந்த அறையை நோக்கி
பூமியின் எப்பகுதியிலிருந்தும்
ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை

இந்த அறைக்கு
நண்பர் என்றுசொன்ன
எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை

பறவையின் குரல்
நாயின் குரல்
வானின் குரல்

எதுவும் தொட்டதில்லை

சூரியனின் கதிருக்குக்
காத்திருந்து காத்திருந்து
மனமொடிந்ததுதான் மிச்சம்

காற்று மட்டும்
அறீயாமல் வந்து
உயிரைக் காப்பாற்றுகிறது

அறையும் நானும்
காத்திருக்கிறோம்
அறிமுகமான
மனித முகம் வேண்டி

2. அறையும் நானுமாய்
இரவைக் கழிக்கிறோம்
தூங்காத அறையுடன் சேர்ந்து
நானும் தூக்கத்தைத் துரத்திவிடுகிறேன்

எங்களுக்குள் பல ரகசியங்கள் உண்டு
யாரிடமும் எதுவும் கூறாத இந்த அறை
என் நண்பனைவிட உசத்தி

செருப்பும் அறைக்குள்தான்
குடிதண்ணீரும் குளிக்கும் தண்ணீரும் இதற்குள்தான்
புத்தகங்கள் துணிகள்
ஷேவிங் செட் கண்ணாடி
இன்னபிற என
எல்லாம் இந்த அறைக்குள்தான்

அறை என் வீடு
ஆனால் --
வீடு என்பது அறையா

3. வீசிவிட்டுச் சென்ற
ஒரே ஒரு சொல்
என் அறைக்குள்
சுற்றிச் சுற்றி வருகிறது

விர்ர்ர்ர்ரென்று
விஷக்குளவியாய்
மறைந்து திரிந்து
முகத்தில் அடிக்கிறது

ஒடிவிடுகிறது என நினைத்த நிமிஷம்
கதவிடுக்கிலிருந்து வருகிறது

தூங்கும் போதெல்லாம்
பறந்து நிரப்புகிறது
கனவை

மின்விசிறியோடு சுழன்று
நூறாய் ஆயிரமாய் இலட்சமாய் மாறி
நிரப்புகிறது அறையை

என் செல்போன் இசையைத்
தன் சிறகோசை கொண்டு
நிரப்புகிறது

நிரப்புகிறது
என் மயிர்க்கால் ஒவ்வொன்றையும்
தன் கொடுக்கு முனையால்

4. பொய்களின் இனிப்பில்
மயங்கிக் கிடந்தேன்

வேஷங்கள்
விலகும்போது
செத்துக் கிடந்தேன்

உயிர்த்தெழ மூன்று நாள்கள்
தேவைப்படவில்லை

எப்போது செத்தேனோ
அப்போதே உயிர்த்தெழுந்தேன்

(விலகுவதுபோல் பாசாங்கு செய்வது
வேஷத்தின் இயல்பு)

மூன்று நாள்களில்
உயிர்த்தெழுந்தவர்
சீடர்களுக்குத் தரிசனம் தந்தார்

எனக்கோ -
இன்னும் கிடைக்கவில்லை
என் தரிசனம்

5. வான் நடுவில் தொங்கும்
உறையற்ற கத்தி
எப்போதும் குறிபார்க்கிறது
என் உச்சந்தலையை

காங்கீரிட் கட்டடம்
கடல்மலைகாடு
பூமிச்சுரங்கம்
ஒளிந்து மறைந்தாலும்
விடுவதாய் இல்லை

எங்கு சென்றாலும்
கூடவே வருகிறது

க்ண்முன்னால் வந்து
க்ண்ணாமூச்சி காட்டும்
ஓடஓட விரட்டும்
பதுங்கிப் பாயும்
ஒழிந்ததுபோல் போக்குக்காட்டி
மீண்டும் ஒடிவரும்

மனமெங்கும் கத்தி
ஞாபகமாய் உறைய
மனமே கத்தியானது

6. முள் முளைத்த முகமாய்
யார் யார் முகமோ எட்டிப்பார்க்க
என் முகம் மட்டும் வருவதே இல்லை

அவமான முகங்களைத் திறந்து திறந்து
இருக்கலாம் இறுதியில்
எனக்கும் ஒரு முகம்

7. வட்டத்திற்குள்ளோ
சதுரத்திற்குள்ளோ
முள்ளில் மாட்டிய என் நேரம்

8. இரவின் வாசனை
பூமியைப் போர்த்தும்போது
அறை
தானே தைத்துக்கொள்கிறது
தன் வாயை

நிரந்தரமாய் அறிந்தவர்கள்
யாருமில்லை நகரில்
அறியாத முகங்கள் பூதங்களாக
ஒடுங்கிப்போகிறேன் குழந்தையாய்

புறம்பேசுபவன்
பொய்யன்
உளவாளி
பிலிம்காட்டுபவன்
துரோகி
பெண்பித்தன்
தளும்புக்காரன்
அப்பாவி
ஆடம்பரக்காரன்
ஆபத்தானவன்
ஆண்மையற்றவன்

தங்கள் தங்கள்
அடையாளம் ஒட்டி ஒட்டி
சரிபார்க்கின்றனர்
எல்லோரும்

கற்பனை அடையாளங்கள்
என் கழுத்தில்

கண் காணாத்தூரத்தில்
பனை ஒலைக்குள்
பதுங்கிக் கிடக்கும்
என் அடையாளம்

என் அடையாளம்
அறியாமனிதர்கள் அறிய
குறியிடப்படாத துணியாய்
அலைகிறது என் உடல்

9. அறைக்குள்
அறைந்து தள்ளி
பூட்டிவிடுகிற்து இரவு

சுவாசிக்கக் காற்றின்றி
ஒரு பிணம்போல்
கிடக்கிறது என் உடல்

புத்தகங்கள்
காசுக்கு வாங்கிய தண்ணீர்
அரைகுறை ஆடை அழகி
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
புத்தரின் கண்
எப்போதும் என்னைப் பார்த்திருக்க
இரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக
கிடக்கிறது என் உடல்

உடல் கட்டிலில் கிடக்க
மனம்
என்னை விட்டு அகலும்

ஒர் இரவுத்தூரத்தில் மனைவி

தெரிந்த பெண்களின்
முகங்கள் அலைய
கழிகிறது நீண்ட இரவு

என் மனம் உதிர்க்கும்
வார்த்தைகள் பார்க்க
யாருமில்லாத

அறைக்குள்
ஒர் இரவுத் தூரமாக
நிரம்பிக் கிடக்கிறது
மாநகரச் சூன்யம்

10. ஈட்டியால் குத்துங்கள்
பீறிட்டு வழியட்டும் என் பயம்

மறுபடியும் -
ஈட்டியால் குத்துங்கள்
வெளியேறட்டும் பயத்தின் ஆவி

ஆனாலும் அவ்வப்போது
உணவோடு சேர்த்து
பயத்தை விழுங்கிறேன்

தனி அறைக்குள்
பயத்தை விசிறியடிக்கிறது
மின் விசிறி

உடல் முழுக்க முள்ளாய்க் குத்தி நிற்கும்
சொற்களை
ஒவ்வொன்றாய்ப் பிடுங்கிப் போடுகிறேன்
மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொள்கிறது

ஆழத்தில் போய்த்
தைத்துக்கொள்கிறது

பிரமாண்ட நகரின்
சிறிய குடுவைக்குள்
மின்விசிறி
நான்
---------------------------------------------------------------------------
(மேன்ஷன் கவிதைகள் - பவுத்த அய்யனார், சித்தார்த்தா வெளியீடு )

போர்முகம் - போரின் கோரத்தினைப் பற்றிய படங்கள் - பகுதி 2

"ரெக்ரெட் டூ இன்பார்ம்" போரின் கொடுமையை பெண் மொழி மூலம் பார்த்தால், "இன் திஸ் வேர்ல்டு" அதனை வாழ்தலின் வழியேப் பார்க்கிறது.

இன் திஸ் வேர்ல்டு, அகதிகளின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றிய படம். போரின் வெறித்தாக்குதலுக்கு பயந்து நாடு விட்டு நாடு சென்று, எந்தவிதமான துணையும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அகதிகள் பற்றிய படம். இந்த படம், பிரிட்டிஷ் இயக்குநர் எடுத்த படமென்றாலும் கூட, இது பாஸ்து மற்றும் ஃபார்சி மொழியில் எடுக்கப்பட்ட படம்.

பெப்ரவரி 2002
இந்தப் படத்தின் கதை, பாகிஸ்தானில் உள்ள ஷம்ஷாது அகதிகள் முகாமில் தொடங்குகிறது. ஷம்ஷாது அகதிகள் முகாமில் இருப்பவர்கள் ஆப்கானிய அகதிகள். 1979 வருட சோவியத் யூனியனின் தாக்குதலிருந்து தப்பித்தும், செப்.9/11 பிறகு அமெரிக்கப் படைகள், ஆப்கானிஸ்தான் மீது வான்வழியே குண்டுமழை பொழிந்ததுமாய் இருந்த காலகட்டங்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி, இங்கு தஞ்சம் புகுந்துள்ள அகதிகள். சற்றேறயக்குறைய 53,000 அகதிகளுக்கு மேல் இங்கு வசித்து வருகின்றனர். இந்தப் படத்தில் வரும் நாயகர்கள் இருவரும் உண்மையிலேயே நிஜமான அகதிகள். இனாயத் என்பவன், தன் குடும்பக் கஷ்டத்திற்காகவும், சம்பாதிப்பதற்காகவும் லண்டன் செல்ல திட்டமிடுகிறான். ஆனால், லண்டன் செல்லுமளவிற்கு அவனுக்கு வசதிகள் இல்லை. அதற்கு அவனுடைய உறவினனான ஜமால் உதவி செய்வதாகக் கூறி அவனை பெஷாவர் அழைத்துச் செல்லுகிறான். பெஷாவரில் இருக்கும் ஜமாலின் மாமா அவர்களை ஒரு தரகரிடம் அழைத்து செல்லுகிறார் (தரகர் என்பது வார்த்தைக்காக இடப்பட்டதே. அவர்கள் மனிதர்களை கடத்துபவர்கள். People smugglers) அந்த தரகரிடம் பேசி பணத்தை தருகின்றார்கள். தரகர் அவர்களை லண்டனுக்கு "சில்க் ரூட்" மூலமாக அழைத்துச் செல்ல உறுதியளிக்கிறார். அவர்களும் வீடு திரும்புகின்றார்கள். இனாயத் லண்டனுக்கு போவதையொட்டி, வேண்டுதலுக்காக ஒரு மாடு பலியிடப்படுகிறது.( இந்தக் காட்சியில், திமிறும் ஒரு மாட்டை கால்களைக் கட்டி, தரையில் படுக்கவைத்து, கழுத்தினை அறுக்கிறார்கள். கழுத்து கொஞ்சம் அறுபட்டதும், மாட்டின் முகத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு ஒரே அடியாய் அறுத்து முடிக்கிறார்கள். கழுத்திலிருந்து ரத்தம் பீச்சியடித்து, தரையை நிரப்புகிறது. எனக்கு இதனை எழுதும் போதும், அந்த காட்சிகள் நினைவில் வந்துப் போகின்றன. சாதாரணமாய் காட்டப்பட்டாலும், படு பயங்கரமான காட்சியது ) உறவினர்கள் கூடி ஒரு "வாக்-மென்"னை இனாயத்துக்கு பரிசளிக்கிறார்கள்.

தரைமார்க்கமாக பாகிஸ்தானிலிருந்து கள்ளத் தனமாக லண்டன் / ஐரோப்பா போவதற்கு "சில்க் ரூட்" என்று பெயர். இந்த சில்க் ரூட்டில் முக்கியமாக கடத்தப்படுபவை போதைப் பொருட்களும், ஆயுதங்களும். வேறு ஒரு நாட்டுக்கு கள்ளத்தனமாகக் குடியேற விரும்பும் அகதிகள் பண்டங்கள் போல இதன் வழியே கொண்டு செல்லப்படுவார்கள். பேசுவதற்கு சாதாரணமாய் தெரிந்தாலும், இந்த வழி படு பயங்கரமானது. ஆட்கள் கொல்லப்படுவதும், சாவதும் சர்வசாதாரணமாய் நிகழும் நிகழ்வு. உயிரினை கையில் பிடித்துக் கொண்டு தான் இதன் வழியே பயணிக்க முடியும். நீங்கள் பல்வேறு நாட்டு எல்லைக்கோடுகளின் வழியே பயணப்பட வேண்டி வருவதால், உயிருக்கு சிறிதளவேனும் உத்தரவாதம் கிடையாது. சரியான தாள்கள் (விசா, கடவுச்சீட்டு ) இல்லாவிடில், ஒன்று திருப்பி அனுப்ப படுவீர்கள் அல்லது கல்லால் அடித்து கொல்லுதல், கசையடி பெறுதல் போன்ற கொடுமையான சட்டங்களின் கீழ் தள்ளப்படுவீர்கள்.

இவையத்தனையும் தெரிந்தும், இனாயத்தும், ஜமாலும் வறுமையின் காரணமாக பெஷாவரிலிருந்து கிளம்புகின்றார்கள். இனாயத்துக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. ஜமாலுக்கு தெரியும். அதனால், இனாயத்துக்கு துணையாய், ஜமால் அவனோடு இந்தப் பயணத்துக்கு இணைகிறான். பெஷாவரிலிருந்து பயணம் தொடங்குகிறது. ஒரு பேருந்தில் அவர்கள் குவத்தாவை(Quetta) வந்து அடைகிறார்கள். குவைத்தா, பாகிஸ்தானுக்குள் அடங்கிய பலுசிஸ்தானின் தலைநகரம்.இந்த படமுழுக்க, இதுப் போல் ஒரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு சென்றவுடன் அங்கிருக்கும் ஒரு தரகரிடம் (contact) அவர்களை ஒப்படைத்துவிட்டு, கூப்பிட்டு வந்தவர்கள் ஒதுங்கி விடுவார்கள். குவைத்தாவிலிருந்து ஒரு ஜீப்பில் தபல்தின்(Dabaldin) என்ற ஊருக்குப் பயணமாகிறார்கள். தபல்தினில் இருக்கும் சுங்கச்சாவடியில் இவர்களிருவரும் கீழிறக்கப்படுகின்றனர். அந்த காவலருக்கு ஜமால், இனாயத்தின் "வாக்-மென்"னை லஞ்சமாக தந்துவிட்டு, வியாபாரத்திற்காக போவதாகக் கூறி, அங்கிருந்து தப்பித்து தப்தான்(Taftan) என்கிற இரானிய எல்லைக்கு அருகிலுள்ள ஒரு ஊருக்கு வருகிறார்கள். தப்தானில் உள்ள ஆங்கிலம் மட்டுமே தெரிந்த அந்த தரகன் 10,000 ரியால்களைப் பெற்றுக்கொண்டு ஒரு அறையில் தங்க வைக்கிறான்.(இது தனி செலவு!!) அவர்களுக்கு ஈரானிய உடைகளை அணிவித்து, அங்கிருந்து ஒரு காரிலேறி, ஒரு பேருந்தில் ஏற்றி விடுகிறான். பேருந்து ஈரானிய எல்லைக்குள், அனுமதிப் பெறுவதற்காக நிற்கிறது. சுங்க அதிகாரி பேருந்தினை பரிசோதிக்கிறார். இவர்கள் இருவரையும் கேள்விகள் கேட்க, இவர்கள் சொதப்பி விடுகிறார்கள். ( "I suspect you are Afghans". "No. we are working in a consturction work in Tehran".) இருவரும், பேருந்தினை விட்டு கீழிறக்கப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொள்ளும் அதிகாரி, அவர்களை ஒரு இயந்திர துப்பாக்கி தாங்கிய ஜீப்பிலேற்றி, பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்பி விடுகிறார். ஒரு வாரத்திற்குபின், லாரி, கார், ஜீப் என பயணம் செய்து, இனாயத்தும் ஜமாலும் பெஷாவர் திரும்புகிறார்கள். Back to square one.

ஏப்ரல் 2002
பெஷாவரில் மீண்டும் அந்த தரகனைப் பார்க்கையில் அவன் பணம் தீர்ந்துவிட்டது எனக் கூறி, மேலும் 6,000 இந்திய ரூபாய்கள் தந்தால், அவர்களை இந்த முறை லண்டனுக்கு சென்று சேர்ப்பதாக உறுதியளிக்கிறான். எல்லா பணத்தையும் ஈரானிய சுங்க அதிகாரியிடம் பறிகொடுத்துவிட்டதால், ஜமால் யோசித்துக்கொண்டிருக்கையில், இனாயத், தன் ஷீவில் ஒளித்து வைத்திருக்கும் அமெரிக்க டாலர்களை தரகனிடம் தந்து, மீண்டும் கிளம்ப தயாராகிறான். 5 நாட்களுக்கு பிறகு, இந்த முறை ஒரு மாற்றுப்பாதையின் மூலம், ஈரானிய எல்லைக்குள் புகுந்து டெஹ்ரானை (Tehran) வந்தடைகிறார்கள். டெஹ்ரான், ஈரானின் தலைநகரம். பின் அங்கிருந்து, தரகனின் மூலமாக, தக்காளிப்பழங்களை ஏற்றிச் செல்லும் ஒரு ஜீப்பிலமர்ந்து மகு(Maku) என்ற இடத்திற்கு வருகின்றனர். மகு மேற்கு அஜர்பைஜானில் உள்ள ஒரு முக்கியமான நகரமட்டுமல்லாமல், அது துருக்கியின் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரம். மகுவிலிருக்கும் தரகன் எல்லை பாதுகாப்பு பிரச்சனைகளால் இவர்களை ஒரு வீட்டில் தங்க வைத்து, பின்பு, பனி பெய்யும் ஒரு இரவில், துருக்கி எல்லைக்கோட்டினை மலைகளின் வழியே தாண்ட வைக்கிறான். ஆடுகளைத் தாங்கி செல்லும் ஒரு லாரியிலேறி அவர்கள் தரகரிடம் போய் சேருகிறார்கள். அந்த தரகன் இவர்களை இன்னொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கிறான். லாரியில் ஒரு குடும்பத்தை சந்திக்கிறார்கள். கணவன், மனைவி மற்றும் ஒரு 8 மாதக் குழந்தை. அந்த கணவன் தான் குடும்பத்தோடு, டென்மார்க் செல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறான். லாரி முழுக்கப் பொருட்களை ஏற்றி, தார்பாலினால் மூடி வேறு ஒரு இடத்துக்கு அனுப்பபடுகிறார்கள். அந்த இடத்தில் இவர்கள் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு, அருகிலுள்ள ஒரு எவர்சில்வர் ஸ்பூன்கள் செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டு, தரகனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அவர்களும் அந்த குடும்பத்தினரும் ஒரு கன்டெய்னர் லாரியில் ஏற்றிவிடுகிறார்கள். இவர்களுக்கு சிறிது இடம் விடப்பட்டு, கன்டெய்னர் முழுக்க பொருட்கள் அடுக்கிவைக்கப்படுகின்றன. லாரி, இஸ்தான்புல்(Istanpul) (துருக்கியின் தலைநகரம்) அடைகிறது.கன்டெய்னர் ஒரு கப்பலில் ஏற்றப்படுகிறது. காற்று புக முடியாத ஒரு இருட்டுப் பெட்டியில் பயணம் தொடங்குகிறது. 40 மணி நேரம் கழித்து , கப்பல், ஏதென்ஸ், கிரேக்கம் வழியாக, அட்ரியாடிக் கடலில் பயணித்து, இத்தாலியின் வடக்கு எல்லையான திரியஸ்தே(Trieste)[நன்றி:ரோசாவசந்த்] என்ற ஊரை அடைகிறது.

பணியாளர்கள் கன்டெய்னரை திறக்கின்றார்கள். போதிய காற்று இல்லாததால், இனாயத்தும், அந்த கணவன், மனைவியும் இறந்துவிடுகிறார்கள். குழந்தை அனாதையாகிவிடுகிறது. ஜமால் இதனை காண சகிக்காமல் அங்கிருந்து ஒடுகிறான். 2 வாரங்களுக்குப் பிறகு, ஜமால், திரியஸ்தேயிலேயே மதுபான விடுதிகளில் Hand Band-களை விற்கிறான். ஒவ்வொரு விடுதியிலும் நாயை விட கேவலமாக விரட்டப்படுகிறான். இதனை எதிர்கொள்ளும் ஜமால் பொறுக்கமுடியாமல் ஒரு பெண்ணின் கைப்பையைத் திருடி, பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து, ரயிலேறி பிரான்சுக்கு பயணமாகிறான். வழியெங்கும், இனாயத் கதறிய கதறலும், குழந்தையின் அழுகையும் அவன் நினைவில் வருகிறது. அதன் எதிரொலிகள் அவனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. He is been haunted by horrific memories. பாரிஸுக்கு வந்து, அங்கிருந்து, பிரான்சின் சான்கேட்தே/சான்கேட்(Sangatte) என்கிற எல்லையிலிருக்கிற அகதிகளின் முகாமில் தஞ்சமடைகிறான்.(சான்கேட்தே முகாமை அடைக்க வேண்டும் என்பது பற்றிய பிபிசி செய்தி) சான்கேட்தே, பிரான்சின் கெலாயிஸ் முனையிலிருக்கும் அகதிகள் முகாம். அந்த ஊர்தான் கடல் வழியே பிரான்சையும் இங்கிலாந்தையும் பிரிக்கின்ற ஊர். அகதிகள் முகாமில் யூசுப் என்கிற இன்னொரு அகதியை பார்த்து, பேசி அவன் நண்பனாகிறான். இருவரும் சான்கேட்தேவை விட்டு லண்டனுக்கு கள்ளத்தனமாக செல்ல திட்டமிடுகின்றனர்.

சான்கேட்தேயிலிருந்து லண்டன் செல்லுவதற்கு இருக்கும் ஒரே வழி கன்டெய்னர் லாரியில் போவதுதான். ஆனால், இது தரைமார்க்கமென்பதால், உள்ளே உட்கார்ந்துப் போக முடியாது. தொலைதூரம் போகும் கன்டெய்னர் லாரிகளில் ஒன்றுக்கு இரண்டாக முன்னேற்பாடாக ஸ்டெப்னி லாரி டயர்கள், லாரியின் கீழே பொருத்தப்பட்டிருக்கும். அதற்கும், லாரியின் ஷாப்ட்டுகள் வேலை செய்யும் அடிப்பகுதிக்கும் இடையில் சிறு இடைவெளியிருக்கும். அதனால், அவர்களிருவரும் படு மோசமான திட்டத்திற்கு தயாராகிறார்கள். ஸ்டெப்னி டயர்களுக்கிடையே ஒரு கட்டையினை குறுக்காகப் போட்டு, அதன் மேல் இருவரும் பயணிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 2002
லண்டன். 1 வாரத்துக்கு பிறகு, ஜமால் அங்குள்ள ஒரு உணவு விடுதியில் பாத்திரம் கழுவுகிறான்.அங்குள்ள மசூதிக்கு சென்று தொழுகிறான். ஷம்ஷாது அகதிகள் முகாமிற்கு போனில் பேசி, இனாயத் இறந்ததை தெரிவிக்கிறான்.

(நான் இங்கே bold-ஆக பதிந்திருக்குமிடங்கள் அனைத்துமே சில்க் ரூட்டிற்கு உட்பட்டவை. சில்க் ரூட் பற்றிய புரிதலுக்காகவே இது)

ஷம்ஷாது அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் திரையில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அடித்து, பிடித்து, கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் குழந்தைகள். ஆண், பெண் என எந்தபேதமும் பாராமல், மணல் அடுக்குகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திரையில், ஜமாலின் அகதியாய் வாழ விருப்பப்படும் மனு இங்கிலாந்து அரசால் நிராகரிக்கப்படுகிறது. ஆனாலும், வயதை கருதி (16) அவனுக்கு மன்னிப்பு அளிக்கும் அதே தருணத்தில், 18 வயது நிரம்பும் முன்னர் நாட்டை விட்டு வெளியேற சொல்லும் அறிவிப்புடன் படம் முடிகிறது.

இந்தப் படம் முன்வைக்கும் செய்திகள் அதிர்ச்சியும், அபாயமும் தர வல்லவை. எத்தனை ஜமால்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். இவ்வளவு ஜமால்கள் உருவாக எத்தனையெத்தனை இனாயத்துகள் உயிர் துறக்கிறார்கள். ஈராக்கில் கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களை கழுத்தறுத்து கொல்லும் படங்களைக் கண்டு மேற்கு நாடுகள் அலறின. ஆனால் சத்தமேயில்லாமல் தினமும் எத்தனை உயிர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா ? நாடிழந்து, உரிமைகளிழந்து, வீடிழந்து, பஞ்சம் பிழைக்க வந்த பராரியாய் அவர்கள் அகதிகள் முகாமில் என்ன செய்வார்கள் ? சோறும், இருக்க இடமும் தந்தால் போதுமா ? உலகமுழுவதும் அகதிகளை மூன்றாம் தரக் குடிமக்களாகவே எல்லா நாட்டினரும் பார்க்கிறார்கள். அவர்கள் அகதியானதின் பின்புலம் பற்றிய உண்மைகள் மொத்தமாய் இருட்டடிக்கப்படுகிறது. இப்பதிவின் முதல் படம், போரின் பாதிப்புகளை அந்த நாட்டிலிருந்துப் பார்த்தென்றால், இந்தப் படம், வெவ்வேறு நாடுகளின் வழியேப் பார்க்கிறது. ஒரு போர் முடிந்தபிறகுதான் ஆரம்பிக்கிறது என்ற குரூரமான உண்மையை கண்முன் நிறுத்துகிறது இந்தப் படம். போர் ஆப்கானியர்களை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. ஆப்கானியர்களின் போர் பசியின் மீது, பட்டினியின் மீது, பிறருக்கு சமமாக தாங்களும் வாழவேண்டி செல்லும் வாழ்க்கையின் மீது. இந்தப் போரினை தடுத்து நிறுத்த முடியுமா நம்மால் ? ஐக்கிய நாடுகள் சபை இவர்களை பொருள்வயிற் அகதிகள் (economic refugees) என்று கூறுகிறது. இதனையொட்டி, நான் படித்த ஐக்கிய நாடுகளின் அகதிகள் பிரிவு (UNCHER) வலைத்தளத்தில், சுமார் 424,300 ஆப்கானியர்கள் ஈரானிலும் 362,900 பேர் பாகிஸ்தானிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாகக் கூறுகிறது. This is an official statstical report issued on Dec.2004 by UNCHER. இதில் கணக்கில் வராமல் இன்னமும் எத்தனையெத்தனை அகதிகளோ ?(பார்க்க: 'அன்சரின்' அகதிகள் பற்றிய விவரங்கள் )

Travalogue போலத் தோற்றமளித்தாலும், இந்தப் படத்தில் காட்டப்படும் காட்சிரீதியிலான விவரங்கள் அசாதாரணமானவை. வெம்மையும் வெக்கையும் நிறைந்த பாகிஸ்தான் எல்லையிலிருந்து தொடங்கும் படம், துருக்கி தாண்டும் வரை அழுக்கும், தூசியும் மண்டிக் கிடக்கும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறது. வெம்மை சூழ்நிலை மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கைப் பற்றிய குறீயிடும் கூட. சுருட்டு புகை கசியும், இருட்டுத் தெருக்களில், களேபாரமான வீதிகளில், மனிதர்கள் பண்டங்களைப் போல கை மாற்றப்படுகிறார்கள். கடைகளில் தேனீர் குவளைகளுக்கு பக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள், சொல்லாமல் பல கதைகள் சொல்லுகின்றன. உயிர் பிழைத்து நீங்கள் செல்ல வேண்டிய இடம் சென்று போன் செய்தால், ஹவாலாவின் மூலம் நீங்கள் பெஷாவரில் தந்த பணம் அங்கு கிடைக்கும். இப்படி, எத்தனை பேர்களின் பணம் திருப்பி வாங்கப்படாமல்,இத்தகைய மனித வல்லூறுகளை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது? ஆவணப் படங்களை மிஞ்சும் யதார்த்தத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்தப் படம், வெறும் சிறிய டிஜிடல் கேமராக்களில் எடுக்கப்பட்டது என்பது வியப்பிலாழ்த்தும் விசயம். படத்தயாரிப்பில் இந்தப்படம் கொரில்லா முறையில் கிடைக்குமிடங்களை பயன்படுத்திக் கொண்டு எடுக்கப்பட்ட படம்(Gurilla Filmmaking). ஆவணப்படம் போலத் தோற்றமளித்தாலும் இது ஆவணப்படமல்ல. பெப்ரவரியில் தொடங்கும் இந்தப் படத்தில், ஆகஸ்டில் ஜமால் லண்டனுக்கு வந்து சேருகிறான். இதுதான் ஜமால் போன்றவர்களுக்கு எடுக்கும் குறைந்தபட்ச காலககட்டம். உண்மையில் எல்லைக்கோடுகளின் பாதுகாப்பினைப் பொறுத்து இது நீளும்.

இது லண்டனில் இப்போது அகதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமாலின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் வரும் 90% கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அந்தந்த கதாபாத்திரங்களாகவே நிசத்திலும் வாழ்ந்து வருபவர்கள். இந்தப் படத்தின் பெயர் வரிசையில் இம்ரான் என்றொரு பெயரை நீங்கள் பார்க்கலாம். இம்ரான் பெஷாவரில் இதுப் போன்ற கள்ளத்தனமாக சில்க் ரூட்டின் மூலம் ஆட்களையும், 'சரக்குகளையும்' கடத்தும் ஒரு மிகப்பெரிய வலைப்பின்னலன் ஒரு அங்கம். இம்ரான் இந்த படத்தில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறார். அவர்தான் இயக்குநருக்கு, பிற நாடுகளிலுள்ள தரகர்களிடம் பேசி, அவர்களையும் இந்தப் படத்தில் பங்கு பெற வைத்துள்ளார். இம்ரான் மட்டுமல்லாமல் இந்த படமுழுக்க நாம் பார்க்கும் பெரும்பாலான தரகர்கள் (சில பேர்களைத் தவிர) இதை ஒரு தொழிலாக செய்து வருபவர்கள். இந்தப் படத்தில் எந்தவொரு வசனமும் எழுதி வைத்துப் பேசப்பட்டதல்ல. இயக்குநர் மைக்கேல் விண்டர்பாட்டம் அவரின் வர்ணனையில் இதைப் பற்றிக் கூறுகிறார். நாம் இந்தப் படத்தில், முந்தைய படத்தைப் போல அழுத்தமான வசனங்களைக் கேட்க இயலாது. ஆனால், அவர்களின் பயணம் நம்மை உலுக்கிப் போடுகிறது. இந்தப் படத்தில் தேர்ந்த நடிகர்கள் என்று எவரும் கிடையாது. ஆனாலும், எல்லோருமே அற்புதமாக கையாளப்பட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தில் பேசப்படும் புள்ளிவிவரங்கள் கோவத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்குகின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஷாம்ஷாது அகதிகள் முகாம் காண்பிக்கப்படும் போது பிண்ணணியில் குரல் நமக்கு அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் குண்டு வீசி முடித்த தாக்குதலுக்காக சுமார் 7.9 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது எனக் கூறுகிறது. ஒரு ஒசாமாவிற்கும், புஷ்ஷுக்கும் நடந்த சண்டையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஷம்ஷாது அகதிகள் முகாமில் மட்டும் 53,000 பேருக்கு மேல் (இந்தப்படம் கூறும் புள்ளிவிவரங்கள் - 2001-02) இறந்தவர்கள், ஈரான், ரஷ்யா, கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் பற்றிய விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால், இதுவரை, எவ்வளவு மில்லியன் டாலர்களை இவர்களின் வாழ்க்கை சீரமைப்பிற்காக அமெரிக்கா செலவழித்திருக்கிறது ?

வேலையற்று திரியும் ஆப்கானிய இளைஞர்கள் ஏன் கூலிப்படை தீவிரவாதிகளாய் மாறமாட்டார்கள் ? பணமும், வசதியும், சாப்பாடும் தரப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, இவர்கள் உலகமெங்கும் கூலிப்படைகளாய், ஆட்கொல்லும் தீவிரவாதிகளாய், எல்லைகளைக் கடந்து நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு நிலையில் எப்படி நம்மால் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டமுடியும் ? இந்திய ராணுவம் காஷ்மிரில் சுட்டுக் கொல்லும் பெரும்பாலான தீவிரவாதிகள் ஆப்கானியர்கள். இது எவ்வளவு நிசமான பயங்கரமென்பது இந்த விசயத்திலிருந்து விளங்கும்.

இந்தப் படம் எப்படி அகதிகளின் போருக்கு பின்னான வாழ்வினைப் பற்றி பேசுகிறதோ, அதே அளவிற்கு, மறைமுகமாக தீவிரவாதிகளின் இருப்பையும், தீவிரவாதத்தின் இயங்குதளத்தையும் குறியீடாய்க் காட்டி வருகிறது. உதாரணமாய், தல்பல்தீனில் இவர்கள் முகவரி விசாரிக்கும் கடைகளில் ஒசாமா பின் லேடனின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளதைக் போகிற போக்கில் காட்டிவிட்டு செல்கிறது.
கன்டேயனரில் அனாதையாய் விடப்படும் குழந்தையின் நிலை என்ன?
ஏன் இப்படியொரு படு பயங்கர பயணத்திற்கு, உயிரினை பணயம் வைத்து தயாரகுதலின் பின்புலத்தில் உள்ள கசப்பான உண்மைகள் எவை ?
ஒரு மேற்கு நாட்டின் ஈகோவிற்கு பலியாவது யார் ?
தீவிரவாததிற்கு எதிரான போர் எனச் சொல்லும் மேற்கு நாடுகளுக்கு, தீவிரவாதிகள் உண்டாதலின் காரணங்கள் பற்றிய அறிதல்கள் உண்டா ?
பயணிக்காமல், அகதிகள் முகாமிலேயே தங்குபவர்களின் எதிர்காலம் தான் என்ன ?
முடிவில் காட்டப்படும் குழந்தைகளின் சிரிப்பொலிகள் பெரும் துயரத்தை உண்டாக்குகின்றன. இந்த குழந்தைகள் எதிர்காலம் என்னவாகும் என்கிற மிகப்பெரிய கேள்வியுடன் படம் முடிகிறது. அதேப்போல் இறுதியில் காட்டப்படும் ஜமாலின் மனு நிராகரிப்பு, இத்தகைய அகதிகளின் இருப்பினைப் பற்றிய பிற கேள்விகளை எழுப்புகின்றன. 18 வயதானதும், ஜமால் என்ன செய்வான் ? லண்டனிலேயே கள்ளத்தனமாக வாழ்வானா ? இல்லை இதேப் போலொரு இன்னொரு ரூட்டில் கனடாவிற்கோ அல்லது வேறு ஒரு நாட்டிற்கோ உயிரினை பணயம் வைத்து பயணிப்பான். வேறுநாடுகளில் குடிபுகுந்தாலும், இவர்களின் இருப்பினைப் பற்றிய பல்வேறு கேள்விகளுடன் முடிகிறது.

இந்தப் படத்தின் இயக்குநர் மைக்கேல் விண்டர்பாட்டம் எனக்கு பிடித்த நவீன பிரிட்டிஷ் இயக்குநர்களில் ஒருவர். "ஜூடு" "வெல்கம் டூ சரஜீவோ" [இந்தப் படம் போஸ்னிய பிரச்சனையைப் பற்றியது. சில வாரங்களில் இந்தப் படத்தினைப் பற்றி பதிகிறேன்] "பட்டர்பிளை கிஸ்" "கோட் 46" போன்ற சிறப்பான படங்களை இயக்கியவர். இந்த படபிடிப்பின்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இரண்டாம் கட்ட போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அனுமதி கிடைக்காது என்று தெரிந்து, பழங்கால சில்க் ரூட்டினை ஆவணப் படமாக எடுக்கிறோம் என்ற பெயரில் மறைத்து எடுத்துள்ளார்கள்.2002-ல் வெளிவந்த இந்தப் படம் இங்கிலாந்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மிக நீளமாகப் போய்விட்ட காரணத்தினால், இந்த படம் வாங்கிய விருதுகளை ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

Won Awards on: Bafta award 2004, Golden Berlin Bear 2003, Peach Film Award 2003, Prize of Ecumenical Jury 2003, British Independent Film Award 2003, Directors Guild of Great Britain 2004

Nominated for Awards in: European Film Award 2003, British Independent Award 2003
Alexander Korda Award for Best British Film 2004

மேலும் இந்தப்படம் பெற்ற விருதுகள் பற்றிய சுட்டி இங்கே

Feb 1, 2005

போர்முகம் - போரின் கோரத்தினைப் பற்றிய படங்கள் - பகுதி 1

போர் என்றால் என்னவென்று தெரியுமா. போரினிடையில் வாழ்ந்திருக்கிறோமா நாம்? இந்தியாவிலும் உண்டு இந்த கொடுமைகள். இவையத்தனையும் இல்லாமல், கடுமையான நெருக்கடிகள் ஏதுமில்லாமல், ஹிந்து, ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் படித்து, அலுவலகத்தில் எகானமிக் டைம்ஸும், ரீடர்ஸ் டைஜஸ்ட்டுமாய் வசதியாகத் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. போரின் நிஜ உருவம் சத்தியமாக எனக்கு தெரியாது. அந்த கொடுமையான வாழ்நிலைப் பற்றி மேடைகளில் வாய் கிழியப் பேசலாம், ஏன் கை வலிக்கும் வரை எழுதலாம்.ஆனால் உணர்தல் மிகக் கொடுமையானது. அதனை உணர்ந்துக் கொண்டு வாழ்தல் அதைவிட கொடுமையும், வலியும் நிறைந்தது. எனக்கு போரைப் பற்றி தெரிந்ததெல்லாம் நான் தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் படித்தது தான். வேறொரு நாட்டில் அகதியாய் வாழ்தலின் வலி சாதாரணமானதல்ல. இங்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு தெரியும்.

போர்களை மையமாக வைத்து எவ்வளவோ படங்களைப் பார்த்திருப்பீர்கள். போரினை "glorify" செய்யும் ஹாலிவுட் படங்கள். ஹீரோ தன் நாட்டை காப்பாற்ற அல்லது தன் வீரர்களை காப்பாற்ற, பத்தாயிரம் பேர்களை கொன்று வீழ்த்தி, வெற்றிக்கொடி நாட்டுவார்.படம் முடிந்துவிடும்.ஆனால் நாம் எல்லாரும் வசதியாக மறந்துபோவது, போர் முடிந்தபின் என்னவாகும் என்பது தான். எந்த போரும் வெற்றிகரமாக முடிந்ததில்லை. எல்லா போர்களுமே தோல்வியை தழுவியது தான். இரு தரப்பிலும் இழந்த இழப்புகளை, உயிர்களை திருப்பித் தர இயலுமா நம்மால். முந்தைய நூற்றாண்டின் முட்டாள்தனமான, மனிதாபிமானமற்ற கோஷம் தான் "போரில் வெற்றிபெறுதல் என்பது ஆண்மகனுக்கு அழகு" என்பது.

போரின் கோர முகங்களைப் பார்த்திருக்கிறோமா நாம்? எத்தனை உயிர்கள், எத்தனை பேரின் குருதியின் இறுதியில் பெற்றிருக்கிறோம் ஆர்ப்பரிக்கும் வெற்றிகள். ஆரவாரங்கள். மேள தாளங்கள். வெற்றி முரசுகள். பட்டங்கள். கோஷங்கள். எப்போதேனும் மறந்தும் நினைத்திருக்கிறோமா போருக்கு பின்னான அந்த மக்களின் வாழ்க்கையை ? போரில் கை இழந்து, கால் இழந்து, அகோரமாகி, முன்னாள் போர்வீரன் என்ற பெயரை சுமந்து கொண்டு, நடைப்பிணமாய் வாழும் மக்களைப் பார்த்திருப்போமா நாம்.அவர்களின் நிஜமான வலிகளை உணரமுடியுமா நம்மால் ? நம் எல்லோருக்கும் தேவை "வெற்றி" மட்டுமே. அந்த வெற்றியின் பின்னால் வழி நெடுகிலும் நிற்கும் சோகங்களின் முகவரிகளைப் பற்றி என்றைக்குமே அறிந்ததில்லை.

இப்படி, போரின் கோர முகங்களை சொல்லும் 2 படங்கள் (ரிக்ரெட் டு இன்பார்ம் & இன் திஸ் வேர்ல்டு) பற்றிய பதிவு தான் இது.முதலில். பார்பரா சொன்பர்னின் "ரிக்ரெட் டு இன்பார்ம்" அமெரிக்காவின் ஆதிக்க வெறியின் உச்சியில் 1967ல் அவர்கள், வியட்நாமை தாக்கினார்கள். வியட்நாம் அடித்து நொறுக்கப்பட்டது. வான்வெளியாலும், தரை மார்க்கவாகவும், அமெரிக்க வீரர்கள் வியட்நாமிற்க்குள் ஊடுருவி வியட்நாம் என்ற அந்த பசுமை நிறைந்த நாட்டினை சின்னாபின்னமாக்கினர். இந்தப் போர் 4-5 வருடங்கள் நீடித்து, பின் அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. இந்தப் படம், முழுக்க, முழுக்க பெண்களை சுற்றி எடுக்கப்பட்ட விவரணப்படம். பார்பரா சொன்பர்ன் ஒரு போர் விதவை. அவரின் கணவர், ஜெப் வியட்நாம் யுத்தத்தில் ( வியட்நாம் யுத்தம் என்பதே தவறு. அது அமெரிக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு யுத்தம். இந்தப் படத்தில் வரும் ஒரு வியட்நாமிய மூதாட்டி இதனை கோவத்துடன் விளக்குகிறார். நாம் நம் புரிதலுக்காக, வியட்நாம் யுத்தம் என்ற பெயரையே பயன்படுத்துவோம்) உயிர் இழந்தார். 20 வருடங்கள் கழித்து, தன் கணவர் உயிர் இழந்த இடத்தைப் பார்ப்பதற்காக, பார்பரா, வியட்நாமிற்கு, தன் தோழி, கியூவானனுடன் வருகிறார். கியூவான் வியட்நாமில் பிறந்து, போரில் அடிப்பட்டு, பின் ஒரு அமெரிக்கரை மணந்துக் கொண்டு, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். கியூவான் தான் இந்தப் படத்தின் மொழிபெயர்ப்பாளர். வியட்நாமிய பெண்களின் போர் பற்றிய புரிதல்களை கண் முன் நிற்க வைக்கிறது இந்தப்படம். இந்தப் படம் முழுக்க, முழுக்க, பெண்களை மையப்படுத்தி, போரினை ஒரு பெண் பார்வைக் கொண்டு பார்க்கவைக்கிறது. இதில் வியட்நாமிய பெண்களின் பேட்டி மட்டுமல்ல, அந்தப் போரில் உயிர் இழந்த அமெரிக்க வீரர்களின் மனைவிகளின் பேட்டிகளும் இடம் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையான பேட்டிகள் வியட்நாமிய சகோதரிகள் பேசுவதாக அமைந்துள்ளது. அவர்களின் தழுதழுக்கும் ஞாபகங்களும், போரினைப் பற்றிய நினைவுகளும், இடைஇடையே காட்டப்படும் போர்க்காட்சிகளும் (நிஜ வியட்நாமிய போர் காட்சிகள், war footage from various news sources, மிகவும் கஷ்டப்பட்டு இதனை தொகுத்து இருக்கிறார்கள்) அவர்களின் வாழ்வின் அவலங்களும் கண்களில் நீரை வரவழைக்கின்றன. இந்த படத்தில் வரும் கியுவானின் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அவர் விவரிக்கும் போர் கொடுமைகள், கேட்கும்போதே நெஞ்சை பிளக்க வைக்கின்றன. அவர் சொன்னதில் சில -
"அமெரிக்க வீரர்கள் வான்வழியே குண்டுகளை வீசி வந்தனர். வீடுகளில் வாழ்வது பாதுகாப்பற்றது என்பதை உணர்ந்து, நாங்கள் பதுங்கு குழிகளில் வாழத் தொடங்கினோம். அப்போது எனக்கு வயது 16. எங்கள் பதுங்கு குழி நிரம்பி வழிந்தது. எல்லாருடைய முகத்திலும் சாவின் கொடுர முகம் தங்கிவிட்டதாகவே பட்டது. ஒரு நாள் நானும் எனது தம்பியும் தண்ணீர் எடுப்பதற்காக வெளியில் வந்தோம்.வெளியேறுவதற்கு மிக முக்கிய காரணம், எல்லோருக்கும் தாகமெடுத்தது தான். அதிலும், எங்கள் குழியில் அடிப்பட்ட பெண் ஒருத்தி தாகத்தால் தவித்தாள். எவ்வளவோ சொல்லியும் என் தம்பியும் என்னுடன் வெளியேறி வந்தான். நாங்கள் தண்ணீர் எடுத்து முடித்து, தூக்கிக் கொண்டு ஒடுவதற்க்கு எத்தனித்தோம். அப்போது வயல்வெளியிலிருந்து வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு, என் தம்பியின் மீது பாய்ந்தது. குறைந்தது 10-12 குண்டுகளாவது அவன்மீது பாய்ந்திருக்கும். அவன் இறக்கும் போது அவனுக்கு வயது 7. ஒரு ஏழு வயது சிறுவன் அமெரிக்காவை என்ன செய்து விட முடியும்."

மேலும் கூறுகிறார். "அதன்பின் நான் விபச்சாரியாகி விட்டேன். ஒரு நாளைக்கு 5-7 அமெரிக்க சிப்பாய்களோடு படுக்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில், சில அமெரிக்க வீரர்கள் என் முன் கண்ணீர் விட்டு கதறுவார்கள். சில பேர் என்னை எதுவும் செய்யாமல் காசை கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். சில பேர் என்னை அடிப்பார்கள். இவையனைத்தையும் நான் பொறுத்துக் கொண்டேன். ஏனெனில் நான் உயிருடன் இருத்தல் எனக்கு அவசியமாகப் பட்டது."

இன்னொரு வியட்நாமிய பெண்மணி சொல்வது " அமெரிக்கர்களுக்கு வெறி பிடித்திருந்தது. அசையும் எந்தப் பொருட்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. மனிதர்கள், மாடுகள், நாய்கள், ஆடுகள் என எல்லாவற்றையும் சுட்டுத் தள்ளினார்கள். மரங்கள் அசைவது கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை. வேரோடு வெட்டி சாய்த்தார்கள். அமெரிக்க வீரர்கள் வரும் வரைக்கும் இந்த இடத்தைச் சுற்றி, 108 கிராமங்கள் இருந்தன. இன்று நீங்கள் பேட்டியெடுக்கும் போது அதில் ஒரே ஒரு கிராமம் தான் இருக்கிறது. போரின் கோலத்தைப் பார்த்தீர்களா. உங்களுக்கும் சோகமிருக்கும் என எனக்கு தெரியும். ஆனால், போருக்கு வெகு தொலைவிலிருந்து, போரினைப் பார்த்தவர்கள் நீங்கள், ஆனால் நான் போரினை வெகு அருகில் என் கண் முன்னே பார்த்திருக்கிறேன். என் கணவர், 7 குழந்தைகள் என அனைவரையும் இழந்திருக்கிறேன். ஒரு போர் ஆணை பெரிதாக பாதிப்பதில்லை. அவர்களுக்குத் தேவை வெற்றி அல்லது தோல்வி. ஆனால், ஒரு பெண்ணாய் ஒரு போர் எவ்வளவு அல்லல் மிகுந்தது என்று தெரியுமா உங்களுக்கு?"
இப்படி படமுழுக்க மனிதர்களின் உரையாடல்கள் போரின் கொடுமையை, அதன் வக்கிரமான வெளியை, கோரமான முகத்தைக் காட்டுகின்றது. இந்தப் படத்தின் முடிவில் கியூவான் சொல்வது நிதர்சனமான வார்த்தைகள்.
"இந்தப் போரில் என் பக்கத்து வீட்டு பெண்மணியின் கணவனும், மகனும் கொல்லப்பட்டர்கள். Sometimes, I am ashamed to cry, because what make my pain greater than my neighbour?"
காணாமல் போன கணவனின் நினைவை சொல்லி அழும் ஒரு வியட்நாமிய நாட்டுப்பாடலில் தொடங்கி 72 நிமிடங்களே ஒடக்கூடிய இந்தப் படம், சன்டேன்ஸ் திரைப்படவிழாவில் (1999) சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளையும், Independent Smart (1999) விருதையும் பெற்றுள்ளது. மேலும், 1998 வருடத்திய ஆஸ்கார்க்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த கண்ணீர் மிகுந்த விவரண படத்திற்க்கு நாம் தந்த விலை மிக அதிகம். இந்த பதிவினை ஒரு வியட்நாமிய பெண் கூறும் ஒரு மேற்கோளோடு முடிக்கிறேன்.

"Everybody feels the war was over. The war actually begins when it ends" - எவ்வளவு ஆழமான வார்த்தைகள்.

விவரங்களுக்கு : Regret to Inform

இரண்டாம் படம் பற்றிய பதிவு நாளை.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]