Feb 1, 2005

போர்முகம் - போரின் கோரத்தினைப் பற்றிய படங்கள் - பகுதி 1

போர் என்றால் என்னவென்று தெரியுமா. போரினிடையில் வாழ்ந்திருக்கிறோமா நாம்? இந்தியாவிலும் உண்டு இந்த கொடுமைகள். இவையத்தனையும் இல்லாமல், கடுமையான நெருக்கடிகள் ஏதுமில்லாமல், ஹிந்து, ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் படித்து, அலுவலகத்தில் எகானமிக் டைம்ஸும், ரீடர்ஸ் டைஜஸ்ட்டுமாய் வசதியாகத் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. போரின் நிஜ உருவம் சத்தியமாக எனக்கு தெரியாது. அந்த கொடுமையான வாழ்நிலைப் பற்றி மேடைகளில் வாய் கிழியப் பேசலாம், ஏன் கை வலிக்கும் வரை எழுதலாம்.ஆனால் உணர்தல் மிகக் கொடுமையானது. அதனை உணர்ந்துக் கொண்டு வாழ்தல் அதைவிட கொடுமையும், வலியும் நிறைந்தது. எனக்கு போரைப் பற்றி தெரிந்ததெல்லாம் நான் தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் படித்தது தான். வேறொரு நாட்டில் அகதியாய் வாழ்தலின் வலி சாதாரணமானதல்ல. இங்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு தெரியும்.

போர்களை மையமாக வைத்து எவ்வளவோ படங்களைப் பார்த்திருப்பீர்கள். போரினை "glorify" செய்யும் ஹாலிவுட் படங்கள். ஹீரோ தன் நாட்டை காப்பாற்ற அல்லது தன் வீரர்களை காப்பாற்ற, பத்தாயிரம் பேர்களை கொன்று வீழ்த்தி, வெற்றிக்கொடி நாட்டுவார்.படம் முடிந்துவிடும்.ஆனால் நாம் எல்லாரும் வசதியாக மறந்துபோவது, போர் முடிந்தபின் என்னவாகும் என்பது தான். எந்த போரும் வெற்றிகரமாக முடிந்ததில்லை. எல்லா போர்களுமே தோல்வியை தழுவியது தான். இரு தரப்பிலும் இழந்த இழப்புகளை, உயிர்களை திருப்பித் தர இயலுமா நம்மால். முந்தைய நூற்றாண்டின் முட்டாள்தனமான, மனிதாபிமானமற்ற கோஷம் தான் "போரில் வெற்றிபெறுதல் என்பது ஆண்மகனுக்கு அழகு" என்பது.

போரின் கோர முகங்களைப் பார்த்திருக்கிறோமா நாம்? எத்தனை உயிர்கள், எத்தனை பேரின் குருதியின் இறுதியில் பெற்றிருக்கிறோம் ஆர்ப்பரிக்கும் வெற்றிகள். ஆரவாரங்கள். மேள தாளங்கள். வெற்றி முரசுகள். பட்டங்கள். கோஷங்கள். எப்போதேனும் மறந்தும் நினைத்திருக்கிறோமா போருக்கு பின்னான அந்த மக்களின் வாழ்க்கையை ? போரில் கை இழந்து, கால் இழந்து, அகோரமாகி, முன்னாள் போர்வீரன் என்ற பெயரை சுமந்து கொண்டு, நடைப்பிணமாய் வாழும் மக்களைப் பார்த்திருப்போமா நாம்.அவர்களின் நிஜமான வலிகளை உணரமுடியுமா நம்மால் ? நம் எல்லோருக்கும் தேவை "வெற்றி" மட்டுமே. அந்த வெற்றியின் பின்னால் வழி நெடுகிலும் நிற்கும் சோகங்களின் முகவரிகளைப் பற்றி என்றைக்குமே அறிந்ததில்லை.

இப்படி, போரின் கோர முகங்களை சொல்லும் 2 படங்கள் (ரிக்ரெட் டு இன்பார்ம் & இன் திஸ் வேர்ல்டு) பற்றிய பதிவு தான் இது.முதலில். பார்பரா சொன்பர்னின் "ரிக்ரெட் டு இன்பார்ம்" அமெரிக்காவின் ஆதிக்க வெறியின் உச்சியில் 1967ல் அவர்கள், வியட்நாமை தாக்கினார்கள். வியட்நாம் அடித்து நொறுக்கப்பட்டது. வான்வெளியாலும், தரை மார்க்கவாகவும், அமெரிக்க வீரர்கள் வியட்நாமிற்க்குள் ஊடுருவி வியட்நாம் என்ற அந்த பசுமை நிறைந்த நாட்டினை சின்னாபின்னமாக்கினர். இந்தப் போர் 4-5 வருடங்கள் நீடித்து, பின் அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. இந்தப் படம், முழுக்க, முழுக்க பெண்களை சுற்றி எடுக்கப்பட்ட விவரணப்படம். பார்பரா சொன்பர்ன் ஒரு போர் விதவை. அவரின் கணவர், ஜெப் வியட்நாம் யுத்தத்தில் ( வியட்நாம் யுத்தம் என்பதே தவறு. அது அமெரிக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு யுத்தம். இந்தப் படத்தில் வரும் ஒரு வியட்நாமிய மூதாட்டி இதனை கோவத்துடன் விளக்குகிறார். நாம் நம் புரிதலுக்காக, வியட்நாம் யுத்தம் என்ற பெயரையே பயன்படுத்துவோம்) உயிர் இழந்தார். 20 வருடங்கள் கழித்து, தன் கணவர் உயிர் இழந்த இடத்தைப் பார்ப்பதற்காக, பார்பரா, வியட்நாமிற்கு, தன் தோழி, கியூவானனுடன் வருகிறார். கியூவான் வியட்நாமில் பிறந்து, போரில் அடிப்பட்டு, பின் ஒரு அமெரிக்கரை மணந்துக் கொண்டு, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். கியூவான் தான் இந்தப் படத்தின் மொழிபெயர்ப்பாளர். வியட்நாமிய பெண்களின் போர் பற்றிய புரிதல்களை கண் முன் நிற்க வைக்கிறது இந்தப்படம். இந்தப் படம் முழுக்க, முழுக்க, பெண்களை மையப்படுத்தி, போரினை ஒரு பெண் பார்வைக் கொண்டு பார்க்கவைக்கிறது. இதில் வியட்நாமிய பெண்களின் பேட்டி மட்டுமல்ல, அந்தப் போரில் உயிர் இழந்த அமெரிக்க வீரர்களின் மனைவிகளின் பேட்டிகளும் இடம் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையான பேட்டிகள் வியட்நாமிய சகோதரிகள் பேசுவதாக அமைந்துள்ளது. அவர்களின் தழுதழுக்கும் ஞாபகங்களும், போரினைப் பற்றிய நினைவுகளும், இடைஇடையே காட்டப்படும் போர்க்காட்சிகளும் (நிஜ வியட்நாமிய போர் காட்சிகள், war footage from various news sources, மிகவும் கஷ்டப்பட்டு இதனை தொகுத்து இருக்கிறார்கள்) அவர்களின் வாழ்வின் அவலங்களும் கண்களில் நீரை வரவழைக்கின்றன. இந்த படத்தில் வரும் கியுவானின் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அவர் விவரிக்கும் போர் கொடுமைகள், கேட்கும்போதே நெஞ்சை பிளக்க வைக்கின்றன. அவர் சொன்னதில் சில -
"அமெரிக்க வீரர்கள் வான்வழியே குண்டுகளை வீசி வந்தனர். வீடுகளில் வாழ்வது பாதுகாப்பற்றது என்பதை உணர்ந்து, நாங்கள் பதுங்கு குழிகளில் வாழத் தொடங்கினோம். அப்போது எனக்கு வயது 16. எங்கள் பதுங்கு குழி நிரம்பி வழிந்தது. எல்லாருடைய முகத்திலும் சாவின் கொடுர முகம் தங்கிவிட்டதாகவே பட்டது. ஒரு நாள் நானும் எனது தம்பியும் தண்ணீர் எடுப்பதற்காக வெளியில் வந்தோம்.வெளியேறுவதற்கு மிக முக்கிய காரணம், எல்லோருக்கும் தாகமெடுத்தது தான். அதிலும், எங்கள் குழியில் அடிப்பட்ட பெண் ஒருத்தி தாகத்தால் தவித்தாள். எவ்வளவோ சொல்லியும் என் தம்பியும் என்னுடன் வெளியேறி வந்தான். நாங்கள் தண்ணீர் எடுத்து முடித்து, தூக்கிக் கொண்டு ஒடுவதற்க்கு எத்தனித்தோம். அப்போது வயல்வெளியிலிருந்து வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு, என் தம்பியின் மீது பாய்ந்தது. குறைந்தது 10-12 குண்டுகளாவது அவன்மீது பாய்ந்திருக்கும். அவன் இறக்கும் போது அவனுக்கு வயது 7. ஒரு ஏழு வயது சிறுவன் அமெரிக்காவை என்ன செய்து விட முடியும்."

மேலும் கூறுகிறார். "அதன்பின் நான் விபச்சாரியாகி விட்டேன். ஒரு நாளைக்கு 5-7 அமெரிக்க சிப்பாய்களோடு படுக்க வேண்டியதிருக்கும். சில நேரங்களில், சில அமெரிக்க வீரர்கள் என் முன் கண்ணீர் விட்டு கதறுவார்கள். சில பேர் என்னை எதுவும் செய்யாமல் காசை கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். சில பேர் என்னை அடிப்பார்கள். இவையனைத்தையும் நான் பொறுத்துக் கொண்டேன். ஏனெனில் நான் உயிருடன் இருத்தல் எனக்கு அவசியமாகப் பட்டது."

இன்னொரு வியட்நாமிய பெண்மணி சொல்வது " அமெரிக்கர்களுக்கு வெறி பிடித்திருந்தது. அசையும் எந்தப் பொருட்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. மனிதர்கள், மாடுகள், நாய்கள், ஆடுகள் என எல்லாவற்றையும் சுட்டுத் தள்ளினார்கள். மரங்கள் அசைவது கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை. வேரோடு வெட்டி சாய்த்தார்கள். அமெரிக்க வீரர்கள் வரும் வரைக்கும் இந்த இடத்தைச் சுற்றி, 108 கிராமங்கள் இருந்தன. இன்று நீங்கள் பேட்டியெடுக்கும் போது அதில் ஒரே ஒரு கிராமம் தான் இருக்கிறது. போரின் கோலத்தைப் பார்த்தீர்களா. உங்களுக்கும் சோகமிருக்கும் என எனக்கு தெரியும். ஆனால், போருக்கு வெகு தொலைவிலிருந்து, போரினைப் பார்த்தவர்கள் நீங்கள், ஆனால் நான் போரினை வெகு அருகில் என் கண் முன்னே பார்த்திருக்கிறேன். என் கணவர், 7 குழந்தைகள் என அனைவரையும் இழந்திருக்கிறேன். ஒரு போர் ஆணை பெரிதாக பாதிப்பதில்லை. அவர்களுக்குத் தேவை வெற்றி அல்லது தோல்வி. ஆனால், ஒரு பெண்ணாய் ஒரு போர் எவ்வளவு அல்லல் மிகுந்தது என்று தெரியுமா உங்களுக்கு?"
இப்படி படமுழுக்க மனிதர்களின் உரையாடல்கள் போரின் கொடுமையை, அதன் வக்கிரமான வெளியை, கோரமான முகத்தைக் காட்டுகின்றது. இந்தப் படத்தின் முடிவில் கியூவான் சொல்வது நிதர்சனமான வார்த்தைகள்.
"இந்தப் போரில் என் பக்கத்து வீட்டு பெண்மணியின் கணவனும், மகனும் கொல்லப்பட்டர்கள். Sometimes, I am ashamed to cry, because what make my pain greater than my neighbour?"
காணாமல் போன கணவனின் நினைவை சொல்லி அழும் ஒரு வியட்நாமிய நாட்டுப்பாடலில் தொடங்கி 72 நிமிடங்களே ஒடக்கூடிய இந்தப் படம், சன்டேன்ஸ் திரைப்படவிழாவில் (1999) சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளையும், Independent Smart (1999) விருதையும் பெற்றுள்ளது. மேலும், 1998 வருடத்திய ஆஸ்கார்க்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த கண்ணீர் மிகுந்த விவரண படத்திற்க்கு நாம் தந்த விலை மிக அதிகம். இந்த பதிவினை ஒரு வியட்நாமிய பெண் கூறும் ஒரு மேற்கோளோடு முடிக்கிறேன்.

"Everybody feels the war was over. The war actually begins when it ends" - எவ்வளவு ஆழமான வார்த்தைகள்.

விவரங்களுக்கு : Regret to Inform

இரண்டாம் படம் பற்றிய பதிவு நாளை.

Comments:
நல்ல பதிவு. இங்கே கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன்...
 
கேட்பதற்கே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
அனுபவித்தவர்களின் வேதனை மிகக் கொடுமை.
நான் இந்த படத்தினை பார்க்கவில்லை, நூலகத்தில் தேடிப் பார்க்கிறேன்.
 
நல்ல பதிவு, நாராயணன்!
மற்றப்படங்களைப் பற்றியும் எழுதுங்கள்.
 
யோவ்!! உமக்கு ஏதாவது டெலிபதி தெரியுமாய்யா? நான் நேற்று இரவு தான் இந்த போர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உடனே அத ஒரு பதிவா போட்டீங்களே.

போரின் கோரத்தைப் பற்றி சிந்திக்க தூண்டிய்து நான் நேற்றுப் பார்த்த "The Day after Trinity" என்ற 'Jon Else'-ஆல் இயக்கப்பட்ட ஒரு டாகுமெண்டரி படம். இது முதன் முதலில் அணுகுண்டு தயாரிக்க உதவிய விஞ்ஞானி ராபர்ட் ஆப்பன்ஹிமரைப்(Robert Oppenheimer) பற்றியது.

இரண்டாம் உலகப் போரின் போது 'பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு அப்புறம் ஜெர்மனி நாஜி மற்றும் ஜப்பானின் அச்சுறுத்தலுக்கு பின் அமெரிக்க தன் பலத்தை காண்பிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறது. அணுகுண்டு தயாரிக்க ஏற்ப்பட்ட அரசியல் சூழ்நிலைகள் பற்றி பேட்டிகளின் மூலம் அந்தப் படம் அலசுகிறது. மண்காட்டன் பிராஜக்ட் என்ற பெயருடன் நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் நடந்த முதல் அணுகுண்டு பரிசோதனை எப்படி அழிவை நோக்கி நகர்த்தியது, பின் ஜப்பானின் மீது அணுகுண்டு போடப்பட்ட சூழ்நிலைகளை விவரித்தது.

அணுகுண்டு போட்டதை இது வரை அறிந்த நான், சுனாமிக்கு பின் நிகழ்ந்த கோர சம்பவங்கள் ஹிரோசிமா நாகசாகி அணுகுண்டு சேதாரங்களை ஒப்பு நோக்கிய போது என் மனது உடைந்து போனது. இந்த கோரம் இனியும் நிகழக் கூடாது என மனம் பதறியது.

ஆப்பன்ஹிமர் தன் இறுதி வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா தொடர்ந்த அணு ஆயுத ஆராய்ச்சிகளை எதிர்த்த வண்ணம் செலவிட்டுருக்கிறார். 1950-களில் அணுகுண்டுக்கு பின்னரும் ஹைட்ரஜன் குண்டுகள் தயாரித்து அமெரிக்கா பரிசோதித்திருக்கிறது.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் வசனம் தான் ஞாபகத்துக்கு வருது "தனக்கு கிடைக்கும் ஆயுதங்களை பரிசோத்துப் பார்க்கவே யுத்தங்கள் நடைபெறுகின்றன". அது இந்த அணுகுண்டு விசயத்தில் எவ்வளவு உண்மை.
 
போரின் முகம் எத்தகைய பயங்கரமானது என்பது அந்த வியட்னாமிய பெண்களின் குரல்களிலிருந்தே எடுத்துப் பதிந்தற்கு நன்றி நரேன். எல்லா இராணுவமும் திட்டமிட்டு முதலில் குறிவைப்பது பெண்களைத்தான். பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும். தொடர்ந்து, பார்த்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்
 
//"Everybody feels the war was over. The war actually begins when it ends" // Beautiful lines.. reminded me of Ashley wilkes' of Gone with the wind "The purpose of war is defeated the moment the first bullet is fired"
 
டிசெதமிழன், இந்தப் படம் எனக்கு முக்கியமாய் பட்டதற்கு காரணம் வியட்நாம் மட்டுமல்ல. இலங்கையும் தான். ஒரு வேளை நம்மால் சரியாக இலங்கையின் பாதிப்பினை சொல்லமுடியாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். இதனை நான் ஒரு குற்றமாக சொல்லவில்லை. கவிதை, கட்டுரை, உரைநடை என்று பல்வேறு விதமான வழிகளில் அதன் பாதிப்பினைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் மேற்கு உலகைப் படிப்பதுப் போல் அவர்கள் கிழக்கு உலகைப் படிக்கிறார்களா என்பது ஒரு பெருத்த சந்தேகமே. நான் யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ இதனை சொல்லவில்லை. இந்தப் படம் போல ஈழத்தின் நிலையை விளக்கும் படங்கள் உலக விழாக்களில் பங்கு பெறுவதின் மூலம் ஒரு எதிர்ப்பலையை உண்டாக்க இயலும். சினிமாவின் சக்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. Faranheit 9/11 உண்டாக்காத பாதிப்பா ? (ஏன் புஷ் இதனால் தோற்க்கவில்லை என கேள்வி கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதன் சமூக காரணங்கள் வேறு )புலம் பெயர்ந்த தமிழர்களில் எவ்வள்வோ நல்ல இயக்குநர்கள் இருக்கிறார்கள். தமிழக இயக்குநர்களை இங்கே கணக்கில் சேர்க்காதீர்கள். அவர்கள் நல்ல இயக்குநர்களாக இருக்கலாம். ஆனால், வலியை உணராதவர்கள். ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலக் கட்டத்தில், சினிமா ஒரு வலிமையான சாதனம். இதனை வைத்துக்கொண்டு, மக்களின் மனநிலைகளில் மாற்றங்களை கொண்டு வரமுடியும் என தீர்க்கமாய் நம்புவன் நான். உங்களுக்கு தெரிந்த இயக்குநர்கள் யாரெனும் இருப்பின், இந்தப் படத்தைப் பார்க்க சொல்லுங்கள்.
 
விஜய், நீங்க சொன்னப் படத்தைத் தேடிப் பார்க்கிறேன். கன்னத்தில் முத்தமிட்டால் வசனத்தை விடுங்க. திண்ணையில் ஞானி எழுதிய அமெரிக்காவை இயக்குவது யார் என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த ஒரு பத்தியைப் பாருங்கள். இதைப் பற்றி என்னுடைய இன்னொரு பதிவில் ஏற்கனவே பதிந்திருக்கிறேன். அவர்கள் உலகின் No.1 ஆயுத வியாபாரிகள்.அவ்ர்களின் வருமானம் ஆயுதங்கள் விற்பதும், அதனை பரிசோதிப்பதுமே ஆகும். Faranheit 9/11 பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் வரும் ஒரு காட்சி, அமெரிக்க அரசாங்கத்தின் நிலையை சரியாக படம் பிடித்துக் காட்டும். படத்தின் பின் பகுதியில், ஒரு கருத்தரங்கு நடைபெறும். அதில் மிகப் பெரும் நிறுவனங்களான Microsoft, HP, GM போன்றவை பங்குப் பெற்றிருக்கும். அந்த நிகழ்வின் தலைவர் கூறுவார்.
"The war devastated Iraq. Iraq needs to be rebuilt. That means this is big business. Billon dollar business. So you all have a propective dinner tonite"
(சரியான வசனங்கள் ஞாபகத்தில் இல்லை. மேலே குறிப்பிட்ட உள்ளர்த்தத்தை குறிக்கும் வாசகங்கள் அவை)
 
நன்றி நாராயணன். நீங்கள் சொன்ன குறிப்புகளை படித்துப் பார்க்கிறேன். நான் மேல் சொன்ன படம் போரின் காயங்களைப் பற்றி ரொம்ப கொஞ்சமாகத் தான் பேசுகிறது. ஆனால் ஆணவம் தான் படம் நிறைய இருக்கிறது. அணுகுண்டு போட்ட சில நாட்களில் விஞ்ஞானிகளை அனுப்பி தாக்குதல் நடந்த இடத்தில் அணுகுண்டின் வீரியத்தை ஆராய அமெரிக்கா அனுப்பியதாம். கொடுமையான விசயம்.
 
நாரயணன், கடந்த சில நாள் வேலைகளில் இதை படிக்க விடுபட்டு இப்போதுதான் படித்தேன். சிறந்த பதிவு. நீங்கள் தேர்ந்தெடுத்த விவரணைகளும், படம் குறித்து எழுதியவையும் கூர்மையாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
 
வசந்த், சொல்லப்போனால், நான் தேர்ந்தெடுத்த விவரணைகள் ஒன்றுமேயில்லை. ஏனெனில் இந்தப் படமுழுக்கவே இதுப் போன்ற வலியும், வேதனையும் நிறைந்த விவரணைகள் தான். ஆசியப் படமென்பதால், ஜப்பானில் கிடைக்குமென்று நினைக்கிறேன். கிடைத்தால் வாங்கிப் பாருங்கள்.
 
it's a PBS Documentary
 
ஈழப்போரின் பாதிப்புக்கள் பற்றி ஈழத்திலிருந்து சில குறும்படங்கள்/படங்கள் வந்துள்ளன. ஆனால் அவை வெளியுலகத்தை எவ்வளவு சென்றடைந்தனவோ தெரியாது. சென்றவருடம், In the name of Buddha என்று ஒரு படம் வெளிவந்தது புலம்பெயர்ந்த நாடுகளில் வெளியிடப்பட்டு, சில சர்வதேசப் பரிசுகளையும் பெற்றதென்று அறிகின்றேன். இந்தியாவிலும், ஈழத்திலும் தடைசெய்யப்பட்ட படம். இந்தப்படம் பற்றி விரிவாக எழுத விருப்பம். பார்ப்பம்.
 
அண்மையில் சமாதானச்சுருள் என்ற நிகழ்வில் திரையிடப்பட்ட 7 குறும்படங்களும் ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைச் சுற்றி எடுக்கப்பட்டவை.பெண்களைப் போலவே இல்லையில்லை அவர்களை விட அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்கள் தான்.
 
டிசெ தமிழன், In the name of Buddha பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் தடைசெய்யப் பட்டு விட்டதால், பார்க்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஈழநாதன், நீங்கள் சொல்வதோடு ஒத்துப்போகிறேன். என்னுடைய அடுத்த படம் (பகுதி 2) சிறுவர்களையும் இளைஞர்களையும் பற்றிய படமே.

நான் சொல்லவருவது நல்ல படங்கள் வருவதில்லை என்பதல்ல. சிறப்பான படங்களை இணையதளங்களின் மூலம் திரையிடுவதின் மூலம் நிறைய மக்களை சென்றடையும் வாய்ப்பும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள எதிர்ப்பையும் மீறி பார்க்கும் சந்தர்ப்பத்தையும் அளிக்கும் என நினைக்கிறேன்.
 
இந்த மறுமொழியும் முன்பு நரசிம்ம அவதாரத்திற்கு அனுப்பியதும் முன்பு மரத்தடியில் எழுதிய கடிதங்கள். உங்களின் தேடுதலுக்கு தேவையாக இருக்கலாம்.படித்துப்பாருங்கள்.முடிந்தால் சுனாமிக்கான உங்களின் கட்டுரைக்கு பதில் எழுதுகிறேன்.இப்போது எழுதநேரம் கிடைப்பதில்லை அதனால் இது மாதிரியான மறுமொழிகள்.

மேலும் ஒரு விஷயம்
"மேலும் இப்படியான மாறுதல் இவ்வுலகில் சில அழிவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் மேலும் அந்தப்படியான அழிவுகள் பல யுகங்களாக நடந்தும் இருக்கும் என்பதால் நம் வித்துகளில் அதுவே நமது Survival instinctஐ தூண்டி இது நிகழும் காலத்தில் அருகே மனிதனிடையே போர்களை தூண்டுவதாக கொள்ளலாம்.அதே சமயம் இப்படியான அழிவுகளில் இருந்து மனிதனின் தப்புவிற்கும் முயற்சி, இந்த நூற்றாண்டுகளின் கண்டுபிடிப்புகளின் பிரவாகத்திற்கும் காரணம் எனக்கொள்ளலாம்.இதனால் உலகம் அழியாது,ஆனால் மனிதன் எங்கு அதிகாமாக போராடுகிறானோ அங்கு அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதாக உணருகிறேன்,அதனால் தான் கூறுகிறேன்...போராடாதீர்கள் அல்லது போராடும் இடத்தில் வாழாதீர்கள்.போராடுவது என்றால் சண்டையிடுவது மற்றுமல்ல "survival" எனும் கருத்து அதிகம் உள்ள இடங்களும் அடங்கும் என்பதே.......அதாவது மிகப்பெரிய நகரங்களும் உலகை ஆளும் நாடுகளும் இதில் அடங்கும்.
என்று மரத்தடியில் ஒரு வருடம் முன்பு ஒரு கட்டுரையில் எழுதியது .சுனாமி வந்தபின்பு எழுதியது அல்ல


போர் ,போராட்டம் பற்றிய எனது பார்வையை படியுங்கள்


FREEDOM AT MIDNIGHT படித்து இருக்கிரீர்களா,ஐன்ஸ்டீன் சொன்னது அத்தனையும் அதில் உண்மையாகும்.அவ்வளவு தூரம் நம்மை வியப்பில் ஆழ்த்தும் காந்தியின் தலைமை.அவரது கடைசி காலப்போராட்டங்கள் அதாவது சுதந்திரத்திற்கு பின் நடந்த வகுப்பு கலவரங்களில் அவரது தலைமையின் வலிமை புரியும்.அதன் வீச்சு இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று நான் நினைக்கும் ஒரு விஷயத்தை இங்கு கூறுகிறேன்.
பிரிவினைக்கு பின் வட மாநிலமெங்கும் வகுப்பு கலவரம் கொழுந்து விட்டு எரியும்.நாட்டின் பிரதமரான நேருவே, சுதந்திர போரட்டங்களில் காலம் கழித்ததால் நிர்வாகத்தின் அணுகுமுறை தெரியாமல் அப்போது இருந்த மெளண்ட் பேட்டனிடம் உதவி புரியுமாரு அணுகியதாக அதில் இருக்கும். பல்லாயிரக்கணக்கான போலீஸார் கலவரத்தை அடக்க தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புரங்களிலும் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டு இருக்கும்.ஆனாலும் கலவரம் கொழுந்துவிட்டு எரியும்.இதே நிலை கல்கத்தாவிலும் ,ஆனால் காந்தி அங்கு கலவரத்தை நிறுத்த சொல்லி உண்ணாவிரதம் இருப்பார்.பின் நவகாளி எனும் பாதயாத்திரையை நடத்துவார்.உடனே அங்கு கலவரம் அடங்கிவிடும்.ஆனால் தலைநகர் தில்லியில் கலவரம் கொழுந்து விட்டு எரியும்.
அந்த புத்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கும்,பல்லாயிரக்கணக்கான போலீஸாரால் தில்லியில் அடக்க முடியாத கலவரம் காந்தியின் யாத்திரையால் கல்கத்தாவில் அடக்கப்படுகிறது.ஒரு தனி மனிதரின் தலைமையின் சாதனை இது. பின்பு அவர் இது மாதிரியான ஒரு யாத்திரையை தில்லியில் இருந்து பாகிஸ்தான் வரை நடத்த திட்டமிட்டு தில்லியில் வந்து ,அதனை நடத்த ஓரிருநாட்கள் இருக்கும் போதுதான் சுடப்பட்டு இறந்து போவார்.அவர் அந்த மாதிரியான ஒரு யாத்திரை நடத்தியிருந்தால் அங்கும் கலவரத்தை நிறுத்தியிருக்கலாம். மேலும், அது போல் ஒரு வகுப்பு கலவரம் பின்பு எப்போதும் அங்கு வராமல் இருந்திருக்கலாம்.ஏனென்றால், இப்பொழுதும் பார்த்தீர்களானால் நாட்டில் நடக்கும் மதக்கலவரங்களில் கல்கத்தாவிலும் அதன் சுற்றுப்புரங்களிலும் இப்போதும் இருக்காது.


அதாவது மனிதன் இயல்பாகவே வன்முறை நிறைந்தவன்.அதனால் தான் நான் முன்பு WEB OF LIFEல் இருந்து எழுதிய அந்த விதி போன்று,மனிதனின் உயிர் வாழ்வதற்கு(SURVIVAL)வன்முறை நிறைந்தவனாயிருப்பது மிகவும் எளிதான விஷயம் .ஆனால், சகோதரத்தத்துடன் புரிந்துணர்ந்து உயிர் வாழ்வது கடினம்.

அப்படியான ஒரு அணுகுமுறையில் ஒரு தலைவன் தனது மக்களை அணுகும்போது(அதாவது காந்தியின் யாத்திரையில் பெருவாரியான மக்கள் அவரது நிலையை பார்த்த மாத்திரத்தில் தங்களது எதிரிகளின் வலியை உணர ஆரம்பித்துவிடுகின்றனர்.அதாவது, நமக்காக இவர் எப்படி கஷ்டப்படுகிறார் என்பதன் மூலம்). அது பல காலம் நீடிக்கும் என்பது என் அனுமானம்.அப்படியான தலைவர்கள்தான் வரவேண்டும். ஆனால், அப்படியான போராட்டத்திற்கு எடுக்கும் காலமும் மக்களை அதற்காக தெரிவு(PREPARE) செய்தலும் மிக கடினம்.மேலும் அரசாங்கமே தனது மக்களை கொல்லும் போது(உலகம் முழுவதும் அரசாங்கங்கள் அதைத்தான் செய்கின்றன,சில தனது மக்கள் இல்லாமல் பிற மக்களை) போராடுவதற்கு மனிதர்கள் எளிதான வழியாக VIOLENCEஐ தேர்ந்தெடுக்கின்றனர்.அதனால் ஈழப்போராட்டமும் ஒரு ஆயுதப்போராட்டமானது.அல்லது பெருவாரியான போரட்டங்கள் ஆயுதப்போராட்டங்களாயின.

ஆதலால் இலங்கையில் நடந்த போரட்டங்களில் மக்கள் ஏதாவது ஒரு போராட்டக்குழுவில் ஈடுபட்டனர்.எனக்கு இதில் சிறீ சபாரத்தினம் என்பவரை ரொம்ப பிடிக்கும்.அவரின் சிரித்த முகம் இன்னமும் நினைவில் உள்ளது.ஆனால்,புலிகள் தங்களது சக போரட்டக்குழுவினரையும் தீர்த்துக்கட்டினர்.இது முதலில் சங்கடப்பட வைத்த விஷயங்களாக இருந்தாலும் பின்பு காலாகட்டங்களில் மக்களை ஒரே குழுவினராக்கிவிட்டது.அதாவது புலிகளின் இந்த வெற்றிக்கு எனது பார்வையில் பிரபாகரனை தவிர வேறு யாராயிருந்தாலும் முடியுமா? என்பது சந்தேகம் தான்.
அதாவது, பிரபாகரனின் தற்போதய பேட்டியை பார்க்கும் போது எனக்கு அவரின் பேச்சிலிருந்து ,இப்படியான ஒரு மக்களின் மனங்களை கவரும் படி பேச முடியாதபடி உள்ள ஒருவரிடத்தில் தான் இவ்வளவு தீர்க்கமானமா ஆயுதம் தாங்கும் போராட்டகுணம் நிறைந்து இருக்கும் என்று.

எல்லாவிதமான போராட்டங்களும் எதை சொல்லவருகின்றன?.அதாவது தங்களின் வலியும் வேதனையும் தனது எதிராளியும் புரிய வேண்டும் என்பதே.ஜனநாயகப்போராட்டங்களும் அதனைதான் செய்கின்றன.அதாவது அரசாங்கம் ஸ்தம்பித்து அதன் மூலம் அரசாங்கம் அவர்களின் வேதனையை அறியவேண்டும் என்பதே.ஜனநாயகப்போராட்டம் என தற்போது இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு போராட்டங்களும் மேலோட்டமாக ஜனநாயகப்போராட்டம் என்றாலும் மறைமுகமாக இதுவும் ஒரு ஆயுதப்போராட்டங்கள் தான்.அதாவது அரசாங்களுக்கு தங்களது வலியினை தெரிவுசெய்வதற்கு பதிலாக அதனை தெரிவு செய்த மக்களுக்கு உணர்த்துகின்றனர்(ஜாதி,மதக்கலவரம் ஒரு உதாரணம்).ஆயுதப்போராட்டங்களும் இதனைத்தான் செய்கின்றனர்.அதனாலேயே வெடிகுண்டு வீச்சுகளும்,தீவிரவாதமும்.அதாவது மக்களின் மனதினில் வலியும் வேதனையும் புரிந்து அதன் மூலம் அவர்கள் அரசாங்கத்தினை மாற்றி போராட்டக்காரர்களுடன் சமாதானம் கொள்ளுவதற்கு.அதனால் நான் இப்போது நமது நாட்டில் நடக்கும் படுகொலைகளுக்காக கொதிப்படைந்து விடுவதில்லை.காந்தியை போன்று தலைவர்கள் வராதபோது இது மாதிரியான விஷயங்கள் தான் நடக்கும் என்று.அதனால் அப்பாவி மக்கள் இறந்து போகின்றனர் எனும் போது ,அவர்கள் இம்மாதிரியான தலைவர்களை தேர்ந்தெடுக்காத போது அல்லது அவர்கள் இது மாதிரியான புரிந்துணர்வு இல்லாத போது(இதில் படித்தவர்களும் விதி விலக்கு இல்லை) இவைகள் எல்லாம் வந்து தான் ஒரு சமாதானம் வரும்.

மீண்டும் ஈழபோராட்டத்திற்கு வருவோம்,இன்று ஒரு மாதிரி மக்களுக்கு வலியும் வேதனையும் புரிந்து ஒரு மாற்று அரசாங்கம் வந்து ஒரு வழியாக சமாதான உடன்படிக்கை வந்துள்ளது.இரமணிதரன் எழுதியது போன்று இந்தியாவும் சமீபத்தில் பிரிட்டன் 2ம் உலக யுத்ததின் போது கட்டிய எண்ணை தொட்டிகள் பல LEASEக்கு எடுத்துள்ளது.அமெரிக்காவும் ஏதோ ஒரு உடன்பாட்டை இலங்கை அரசாங்கத்துடன் போட்டுள்ளது.ஆனாலும் சமாதானம் நோக்கிசென்று கொண்டுள்ளது.இலங்கை தமிழ் மக்களிடத்தில் இப்போது ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.அது எது வென்றால் தென் ஆப்ரிக்கா நாட்டில் நடந்தது போன்ற ஒரு பொது புரிந்துணர்வு( RECONCILIATION) நடக்க வேண்டும்.இது மற்ற சிங்களருடன் மட்டுமின்றி அவர்களின் இடையேயான ( தமிழ் முஸ்லீம் மக்களிடம் கேட்டது போன்று) பிற குழுக்களுடனும் நடக்கவேண்டும்.இவ்வாறு இல்லாமல் ஒரு ஆட்சி அமையும் பட்சத்தில் அதில் ஜனநாயகப் போரட்டங்கள் வரும் போது மக்களின் மனதினில் ஏற்கனவே ஏற்பட்டு இருக்கும் ஆறா வடு மீண்டும் ஒரு மிகப்பெரிய படுகொலைகளோ அல்லது தமிழகத்தில்/இந்தியாவில் நடப்பது போன்று ஜனநாயக குளருபடிகளோ நடக்கும் என்பது என் அனுமானம்.(தமிழ் நாட்டில் ஜாதிப்போராட்டத்தினால் உருவான துவேஷம்,இந்தியாவெங்கும் பிரிவினையின் போது நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தினால் உண்டான துவேஷம்)
அதற்கான வழிமுறைகளில் புலிகளும்,இலங்கை அரசும் ஈடுபட வேண்டும் என்பதே என் ஆவல்.


இப்படி பட்ட புரிந்துணர்தல் வரும் என்ற ஆசையில்
ரமேஷ் அப்பாதுரை

இதனையும் கவனியுங்கள்:
ஐரோப்பாவின் பெருவாரியான நாடுகளின் இடையில் இப்போது சண்டை என்பதே இல்லை.அது அவர்கள் எல்லாம் கல்வி அறிவு பெற்றவர்கள் என்பதால் இல்லை.அப்படியென்றால் அமெரிக்காவும் அப்படியாகத்தான் இருக்க வேண்டும்.எனது அனுமானம் அம்மக்கள் தாங்கள் 1ம் மற்றும் 2ம் உலகப்போரினால் அடைந்த எண்ணமுடியாத வலிகளும் வேதனைகளும் தான் அவர்களின் சமாதானத்திற்கு காரணம். நார்வே உலக அளவிலான சமாதான முயற்சிகளுக்கு உதவிசெய்வது அதனால் தான் என்றும் படித்தேன்.
ஜப்பானையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.அதனால் நமது நாடும் ,பாகிஸ்தானும் அணு குண்டு யுத்தம் நடத்தும் என செய்திகள் வரும் போது நான் மேற்கூறியவற்றைத்தான் நினைத்துக்கொள்வேன். நமக்கு பட்டுத்தான் புரிய வேண்டி இருக்கிறது.

அமேரிக்காவின் அடக்குமுறையை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்கள் உலக அளவில் நிகழ வில்லை.இதற்கு அதன் குடியேற்ற வழிமுறைகளும் மற்றும் கம்யூனிச நாடுகளில் அம்மக்களுக்கு நிகழ்ந்த அடக்கு முறைகளும் தான் காரணம் என நினைக்கிறேன்.ஆனால் இன்று நிலமை வேறு.பார்ப்போம் என்ன நடக்கும் என்று.காந்தி என் பார்வை:
நாம் ஒன்றை எழுதிய பின்னால் தான் அதில் இருந்து கிடைக்கும் பிற கருத்துக்கள் நம்மை மேலும் எழுத தூண்டுகின்றன.காந்தியின் அஹிம்சை எனும் கொள்கை,அவருக்கு முன்பு யாரும் போராட்டவடிவத்திற்கு கொண்டு வந்ததில்லை.இதற்கு முன்பு அதன் படிமம் மதம் எனும் வடிவாகத்தான் இருந்தது.ஆனால் இதனினும் வேறுபட்ட மனிதனின் போராட்டங்களுக்கு முதலில் கொண்டுவந்தவர் காந்தியாகும்.உண்மையில் இதனை செயலாக்குவது என்பது மிகக் கடினமான ஒன்றாகும்.நீங்கள் கூறிய காந்தியின் போராட்ட வடிவங்கள் ஒன்றே இந்திய சுதந்திரத்தை பெற்று தந்திருக்க முடியாது .அதனினும், இங்கிலாந்தின் குடியேற்றவாதத்தில் ஏற்பட்ட மாற்றமே என்பது மேலோட்டமாக பார்த்தால் உண்மையென்பதென்பது போல் இருக்கும். ஆனால் எனது அணுகுமுறை அதுவல்ல.


ஆயுதப்போராட்டங்களின் அர்த்தம் நமது எதிராளிக்கு நமது வலியினை புரிய வைப்பது ஆகும்.ஆனால் இதனில் மாறிய காந்தியின் போராட்டம் நீங்கள் ஆழ்ந்து நோக்கினால் தென்படுவது மனிதனின் மனிதத்தை புரிய வைப்பது.அதாவது மனமாற்றம் எனும் செயலாகும்.(சத்தியாகிரக தடியடியை முன்னால் சென்று வாங்கிக்கொள்ளும் சில படங்களை நான் பார்த்திருக்கிறேன்.அது சொல்லும் பல கதை)
இந்த மன மாற்றமே இங்கிலாந்தின் குடியேற்ற மனப்பான்மையை மாற்றி பிற நாடுகளுக்கும் சுதந்திரம் கொண்டு வந்திருக்ககூடாது எனக்கொள்ளக்கூடாது. மேலும் இப்படியான ஒரு மாற்றம் வந்திருக்கும் என்பதற்கு இன்றைய ஐரோப்பிய நாடுகளில் பிற நாட்டவரின் குடியேற்றம் என்பது என் எண்ணம்.

( மேலும் I & II உலகப்போரே இந்த காலனிகுடியேற்றத்திற்க்காக எழுந்த போர் என்பதும்,அதாவது ஜெர்மானி,ஜப்பான்,இத்தாலி முதலானவை பிற ஐரோப்பிய நாடுகளின் காலனிகளை கைப்பற்றுவதற்காக நடத்தியதான போர் என்பதானது என் பார்வை.அவ்வாறு இருக்கும் பட்சத்தில் போரை வென்ற பிரிட்டன்,பிரான்ஸ் முதலான நாடுகள் அதனை எந்த விதத்தில் இழக்க நினைத்திருக்கும்.இதற்காக சண்டையிட்டவை அதனை தக்கவைத்துக்கொள்ளவே பார்க்கும்.)
எனது இந்த எண்ணம் தவறு என்றால், அறநெறி கருத்துக்கள் என பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதனின் ஆறறிவு என்னும் வடிவாக மதரீதியாக போதிக்கப்பட்டுள்ளது அனைத்தும் தவறெனக்கொள்ளவேண்டியதிருக்கும்.அப்படி எண்ண என்னால் முடியவில்லை.ஏனென்றால் அறிவியலின் இன்றைய வடிவங்கள் அதுவாகத்தான் இருக்கின்றன.நான் எழுதிய கடிதங்கள் பலவும் அதனையே வலியுறுத்தும்.

மேலும் ,காந்தியின் இந்த அணுகுமுறையின் ஒரு வெற்றியே நான் அங்கு குறிப்பிட்டது.அது மறுக்க முடியாத வரலாறு,அதாவது ஒரு தனிமனிதனின் உண்ணாவிரதத்திலும்,பாதயாத்திரையிலும் கலவரம் அடங்குகின்றது.ஒரே இன,கூட்டத்திற்கான இந்த மாற்றம் ஏன் ஒட்டு மொத்த மனித மனங்களையும் மாற்ற முடியாது என நினைக்கிறீர்கள்.அது முடியும் ஆனால் அது மாதிரியான தலைவர்கள் இருக்கும் போது.(இயேசுவின் நடைமுறைகள் பல்லாயிரக்கணக்கான மக்களின்மன மாற்றத்திற்கு இன்றளவும் காரணமாக உள்ளது.இது போல் சிலர், ஆனாலும் இது பழுது பட்டுக்கொண்டிருந்தாலும் இதன் மாற்றங்கள் உலக சரித்திரத்தில் மறுக்கமுடியாது)

எனது தம்பி ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.அதாவது எனது கடிதம் கண்ட பின் அவருக்கு ஒரு விஷயத்தை பற்றி வேறுபாடான நிலை வந்ததாக.
ஏன் ,நானே முன்பு அவ்வாறக சிந்தித்தவனல்ல.தேவை ஒரு சிறு சுய பரிசோதனை.

நாம் எல்லோரும் குழு மனப்பான்மை உடையவர்கள்.என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் அடக்குமுறைக்கு எதிரான வழிமுறைகளில் ஆயுதப்போராட்டங்களின் நியாயங்களை ஏற்றுக்கொள்பவனாகவே இருக்கிறேன்.அதிலும் இலங்கை வாழ் தமிழர்களின் போராட்டங்களில் முக்கியமாக.ஆனாலும், என் எண்ணங்களை இதில் இருந்து மாற்றுவதற்கும்,அதற்காக என்னை தெளிவு செய்து கொள்வததுமாக இருக்கிறேன்.போராட்டம் தேவைதான் ஆனால் போராட்டத்திற்கான வழி முறைகள் மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.

மேலும் இந்தப்போராட்டங்கள் எதற்காக, அடக்குமுறைக்கு எதிராக என்று கொண்டாலும், பெருவாரியானவை ஆளுமைக்கான போராட்டங்களே.ஜார்ஜ் ஆர்வெல்லின் "விலங்குப்பண்ணை" போல.பெரும்பாலான சாமானியர்களுக்கு தேவை மிக எளிமையானவை.நம்மை ஆளுபவன் நமது குழுவினுள்,நாட்டினுள் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதான நமது ஆழ்மன உறுத்தல்களே பெருவாரியான சமயம் தூண்டப்பட்டு உள்ளது.இவ்வாறு இல்லாமல் அதனை முழுவதும் புரிந்ததான போராட்டங்கள் என்றால் இவ்வளவு தூரம் மோசமாயிருக்கமுடியாது.இந்தியா அதற்கான உதாரணம்,அல்லாவிடில் இந்த அளவுக்கு சீரழிந்திருக்க முடியாது.இன்று அது மேலும் கோரமாகிவருகிறது.
ஐரோப்பாவில் E.E.C என்று எல்லாநாடுகளும் சேர்ந்து கொண்டிருக்கும் போது ,மேலும் பல நாடுகள் அதில் சேர்ந்து கொண்டிருக்கும் போது இன்னும் வரும் காலங்களில் இந்த நாடு என்பதான கோடுகளே இல்லாமல் போய்விடும் என்பதானது என் அனுமானம்.அது மாதிரியாக நாமும் நமது மனதினை குறுக்கிக்கொள்ளாமல் ஒரு பரந்த நோக்கில் இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்.

அதனால் மதியின் வேண்டுகோளை சிறிது மாற்றி புதுவருட உலகம் எப்படி இருக்க வேண்டும் என கவிதைகளை வேண்டி,

ஜெ.கே யின் "NATIONALITY IS A GLORIFIED TRIBALISM" என்பதை மீண்டும் ஞாபகமூட்டி

ரமேஷ் அப்பாதுரை

P.S:-
நான் என் கல்லூரி நாட்களில் புத்தர் சொன்னது போன்று ஆசையைவிட்டு விட்டால் உலகமே ஒன்றுமில்லை எனவும்,எனது பேராசிரியரிடம் உலகப்போரில் தான் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் அதனால் நமது நாடு முன்னேர போர் வேண்டும் எனவும் கேட்டுள்ளேன்.
ஏன் இங்கு மரத்தடியில், இலங்கையில் இந்த காலகட்டத்திலேயே பல தரமான படைப்புக்கள் வருகின்றன எனவும் அதனால் இது போல இருப்பது தான் நலம் எனும் குரூர எண்ணம் வருகிறது என ஒருவரும் கூறினார்.
அப்படியானால் இது தான் உண்மையா?
 
Carol Reed in "Third Man" படத்தில் Orson Welles பேசும் ஓரு புகழ்ப்பெற்ற வசனம்

"In Italy for 30 years under the Borgias they had warfare, terror, murder, and bloodshed, but they produced Michelangelo, Leonardo da Vinci, and the Renaissance.
In Switzerland they had brotherly love - they had 500 years of democracy and peace, and what did that produce? The cuckoo clock."

----------------------------------------
நான் என் கல்லூரி நாட்களில் புத்தர் சொன்னது போன்று ஆசையைவிட்டு விட்டால் உலகமே ஒன்றுமில்லை எனவும்,எனது பேராசிரியரிடம் உலகப்போரில் தான் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் அதனால் நமது நாடு முன்னேர போர் வேண்டும் எனவும் கேட்டுள்ளேன்.
ஏன் இங்கு மரத்தடியில், இலங்கையில் இந்த காலகட்டத்திலேயே பல தரமான படைப்புக்கள் வருகின்றன எனவும் அதனால் இது போல இருப்பது தான் நலம் எனும் குரூர எண்ணம் வருகிறது என ஒருவரும் கூறினார்.
அப்படியானால் இது தான் உண்மையா?

மேலே உள்ளது உங்களின் சுனாமிக்கு வந்த ஒருவரது பதில் கீழே உள்ளது என் கல்லூரி நாட்களில் நான் கேட்டது இரண்டும் ஒன்றுதான் ஆனால் உண்மை அதுவல்ல என உணர்ந்து கொண்டது மரத்தடியில்...
அன்புடன்
ரமேஷ் அப்பாதுரை
 
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

ரமேஷ், உங்களின் கருத்துக்களைப் படித்தேன். இதனோடு, நான் பல இடங்களில் வேறுபடுகிறேன். ஆயினும், பின்னொரு பதிவில் இதனை, சாவகாசமாய் என் எதிர்வினைகளயும் சேர்த்து பதிகிறேன். நிரம்ப விவாதங்கள் தேவைப்படும் விசயமிது. பின்னூட்டத்திற்கு நன்றி.
 
நரைன்,
நிறைய எழுத வேண்டும் என்று நினைத்த்து விடுபட்டுப்போனது.
ப்ரகாஷ் சொன்னதை முக்கியமாய் பார்க்கிறேன். ரசனை தளத்தில் மாற்றம் வரவேண்டியதும்ம் முக்கியமான விஷயம். ஈழநாதன் சொல்வது போல் அந்த வலைப்பதிவில் நமக்கு தெரிந்த மாற்று சினிமாவாகிய திரைப்படங்கள் குறித்த தகவல்களை குறித்து வைக்கலாம். விமர்சனங்களை முன்வைக்கலாம். வலைப்பதிவர்களில் திரைப்படம் எடுப்பவர்கள் (அருண்,அஜீவன் போன்றவர்கள்) இதில் இணைந்து செயல்படலாம்.

மாற்று சினைமா கொண்ட மற்ற இணையதளங்களுக்கு இணைப்பு கொடுக்கலாம்.

1. இதுவரை நான் பார்த்த மாற்று சினைமாக்கள் பத்துக்குள் இருக்கும். கமர்சியல் திரைப்படங்கள் சில நூறு இருக்கும். என்ன செய்வது?
கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிக்கொள்ளவேண்டும்.

2. இணையத்தில் மாற்று சினிமா பார்ப்பதற்கு அரசு அளாவில் திட்டம் முன்வைக்கபடவேண்டும்.
பாசீ.cஒம் தலைவரை கைது செய்த அளவில்தான் இந்தியாவின் இணைய அறிவு உள்லது எனப்து குறிப்பிடத்தக்கது.

3. இணையத்தை பாவிக்கும் தமிழர்களை ஓரளவுக்கு இத்த்கைய படங்களை பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் இணையத்தைவிட அரங்குகள் தான் முன்னிறுத்த்படுபவை. இந்த அரங்குகளின் சங்கங்கள் , உரிமையாளர்களுக்கு மாற்று சினிமா குறித்த பார்வை இருக்கவேன்டும்.
முதலில் இம்மாதிரியான ப்டங்களை வெளியிட்டு "கையை சுட்டுக்" கொள்வதைத்தான் யோசிப்பார்கள். ஆரம்ப நிலையில் , சில
வியாபரத் திட்டங்களுடன் செயல் படலாம்.[குலுக்கல் முறை சேலை வழங்குதல் போன்றது]

4. குடும்ப தினங்களான சனி ஞாயிறகளில் ஒரு காட்சி மட்டும் திரையிடலாம்.

இவெற்றுக்கெல்லாம் அடிப்படித்தேவை ,இது பற்றிய விழிப்புணர்வு. இதன் அவசியத்தின் அவசியம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]