Feb 2, 2005

போர்முகம் - போரின் கோரத்தினைப் பற்றிய படங்கள் - பகுதி 2

"ரெக்ரெட் டூ இன்பார்ம்" போரின் கொடுமையை பெண் மொழி மூலம் பார்த்தால், "இன் திஸ் வேர்ல்டு" அதனை வாழ்தலின் வழியேப் பார்க்கிறது.

இன் திஸ் வேர்ல்டு, அகதிகளின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றிய படம். போரின் வெறித்தாக்குதலுக்கு பயந்து நாடு விட்டு நாடு சென்று, எந்தவிதமான துணையும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அகதிகள் பற்றிய படம். இந்த படம், பிரிட்டிஷ் இயக்குநர் எடுத்த படமென்றாலும் கூட, இது பாஸ்து மற்றும் ஃபார்சி மொழியில் எடுக்கப்பட்ட படம்.

பெப்ரவரி 2002
இந்தப் படத்தின் கதை, பாகிஸ்தானில் உள்ள ஷம்ஷாது அகதிகள் முகாமில் தொடங்குகிறது. ஷம்ஷாது அகதிகள் முகாமில் இருப்பவர்கள் ஆப்கானிய அகதிகள். 1979 வருட சோவியத் யூனியனின் தாக்குதலிருந்து தப்பித்தும், செப்.9/11 பிறகு அமெரிக்கப் படைகள், ஆப்கானிஸ்தான் மீது வான்வழியே குண்டுமழை பொழிந்ததுமாய் இருந்த காலகட்டங்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி, இங்கு தஞ்சம் புகுந்துள்ள அகதிகள். சற்றேறயக்குறைய 53,000 அகதிகளுக்கு மேல் இங்கு வசித்து வருகின்றனர். இந்தப் படத்தில் வரும் நாயகர்கள் இருவரும் உண்மையிலேயே நிஜமான அகதிகள். இனாயத் என்பவன், தன் குடும்பக் கஷ்டத்திற்காகவும், சம்பாதிப்பதற்காகவும் லண்டன் செல்ல திட்டமிடுகிறான். ஆனால், லண்டன் செல்லுமளவிற்கு அவனுக்கு வசதிகள் இல்லை. அதற்கு அவனுடைய உறவினனான ஜமால் உதவி செய்வதாகக் கூறி அவனை பெஷாவர் அழைத்துச் செல்லுகிறான். பெஷாவரில் இருக்கும் ஜமாலின் மாமா அவர்களை ஒரு தரகரிடம் அழைத்து செல்லுகிறார் (தரகர் என்பது வார்த்தைக்காக இடப்பட்டதே. அவர்கள் மனிதர்களை கடத்துபவர்கள். People smugglers) அந்த தரகரிடம் பேசி பணத்தை தருகின்றார்கள். தரகர் அவர்களை லண்டனுக்கு "சில்க் ரூட்" மூலமாக அழைத்துச் செல்ல உறுதியளிக்கிறார். அவர்களும் வீடு திரும்புகின்றார்கள். இனாயத் லண்டனுக்கு போவதையொட்டி, வேண்டுதலுக்காக ஒரு மாடு பலியிடப்படுகிறது.( இந்தக் காட்சியில், திமிறும் ஒரு மாட்டை கால்களைக் கட்டி, தரையில் படுக்கவைத்து, கழுத்தினை அறுக்கிறார்கள். கழுத்து கொஞ்சம் அறுபட்டதும், மாட்டின் முகத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு ஒரே அடியாய் அறுத்து முடிக்கிறார்கள். கழுத்திலிருந்து ரத்தம் பீச்சியடித்து, தரையை நிரப்புகிறது. எனக்கு இதனை எழுதும் போதும், அந்த காட்சிகள் நினைவில் வந்துப் போகின்றன. சாதாரணமாய் காட்டப்பட்டாலும், படு பயங்கரமான காட்சியது ) உறவினர்கள் கூடி ஒரு "வாக்-மென்"னை இனாயத்துக்கு பரிசளிக்கிறார்கள்.

தரைமார்க்கமாக பாகிஸ்தானிலிருந்து கள்ளத் தனமாக லண்டன் / ஐரோப்பா போவதற்கு "சில்க் ரூட்" என்று பெயர். இந்த சில்க் ரூட்டில் முக்கியமாக கடத்தப்படுபவை போதைப் பொருட்களும், ஆயுதங்களும். வேறு ஒரு நாட்டுக்கு கள்ளத்தனமாகக் குடியேற விரும்பும் அகதிகள் பண்டங்கள் போல இதன் வழியே கொண்டு செல்லப்படுவார்கள். பேசுவதற்கு சாதாரணமாய் தெரிந்தாலும், இந்த வழி படு பயங்கரமானது. ஆட்கள் கொல்லப்படுவதும், சாவதும் சர்வசாதாரணமாய் நிகழும் நிகழ்வு. உயிரினை கையில் பிடித்துக் கொண்டு தான் இதன் வழியே பயணிக்க முடியும். நீங்கள் பல்வேறு நாட்டு எல்லைக்கோடுகளின் வழியே பயணப்பட வேண்டி வருவதால், உயிருக்கு சிறிதளவேனும் உத்தரவாதம் கிடையாது. சரியான தாள்கள் (விசா, கடவுச்சீட்டு ) இல்லாவிடில், ஒன்று திருப்பி அனுப்ப படுவீர்கள் அல்லது கல்லால் அடித்து கொல்லுதல், கசையடி பெறுதல் போன்ற கொடுமையான சட்டங்களின் கீழ் தள்ளப்படுவீர்கள்.

இவையத்தனையும் தெரிந்தும், இனாயத்தும், ஜமாலும் வறுமையின் காரணமாக பெஷாவரிலிருந்து கிளம்புகின்றார்கள். இனாயத்துக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. ஜமாலுக்கு தெரியும். அதனால், இனாயத்துக்கு துணையாய், ஜமால் அவனோடு இந்தப் பயணத்துக்கு இணைகிறான். பெஷாவரிலிருந்து பயணம் தொடங்குகிறது. ஒரு பேருந்தில் அவர்கள் குவத்தாவை(Quetta) வந்து அடைகிறார்கள். குவைத்தா, பாகிஸ்தானுக்குள் அடங்கிய பலுசிஸ்தானின் தலைநகரம்.இந்த படமுழுக்க, இதுப் போல் ஒரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு சென்றவுடன் அங்கிருக்கும் ஒரு தரகரிடம் (contact) அவர்களை ஒப்படைத்துவிட்டு, கூப்பிட்டு வந்தவர்கள் ஒதுங்கி விடுவார்கள். குவைத்தாவிலிருந்து ஒரு ஜீப்பில் தபல்தின்(Dabaldin) என்ற ஊருக்குப் பயணமாகிறார்கள். தபல்தினில் இருக்கும் சுங்கச்சாவடியில் இவர்களிருவரும் கீழிறக்கப்படுகின்றனர். அந்த காவலருக்கு ஜமால், இனாயத்தின் "வாக்-மென்"னை லஞ்சமாக தந்துவிட்டு, வியாபாரத்திற்காக போவதாகக் கூறி, அங்கிருந்து தப்பித்து தப்தான்(Taftan) என்கிற இரானிய எல்லைக்கு அருகிலுள்ள ஒரு ஊருக்கு வருகிறார்கள். தப்தானில் உள்ள ஆங்கிலம் மட்டுமே தெரிந்த அந்த தரகன் 10,000 ரியால்களைப் பெற்றுக்கொண்டு ஒரு அறையில் தங்க வைக்கிறான்.(இது தனி செலவு!!) அவர்களுக்கு ஈரானிய உடைகளை அணிவித்து, அங்கிருந்து ஒரு காரிலேறி, ஒரு பேருந்தில் ஏற்றி விடுகிறான். பேருந்து ஈரானிய எல்லைக்குள், அனுமதிப் பெறுவதற்காக நிற்கிறது. சுங்க அதிகாரி பேருந்தினை பரிசோதிக்கிறார். இவர்கள் இருவரையும் கேள்விகள் கேட்க, இவர்கள் சொதப்பி விடுகிறார்கள். ( "I suspect you are Afghans". "No. we are working in a consturction work in Tehran".) இருவரும், பேருந்தினை விட்டு கீழிறக்கப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொள்ளும் அதிகாரி, அவர்களை ஒரு இயந்திர துப்பாக்கி தாங்கிய ஜீப்பிலேற்றி, பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்பி விடுகிறார். ஒரு வாரத்திற்குபின், லாரி, கார், ஜீப் என பயணம் செய்து, இனாயத்தும் ஜமாலும் பெஷாவர் திரும்புகிறார்கள். Back to square one.

ஏப்ரல் 2002
பெஷாவரில் மீண்டும் அந்த தரகனைப் பார்க்கையில் அவன் பணம் தீர்ந்துவிட்டது எனக் கூறி, மேலும் 6,000 இந்திய ரூபாய்கள் தந்தால், அவர்களை இந்த முறை லண்டனுக்கு சென்று சேர்ப்பதாக உறுதியளிக்கிறான். எல்லா பணத்தையும் ஈரானிய சுங்க அதிகாரியிடம் பறிகொடுத்துவிட்டதால், ஜமால் யோசித்துக்கொண்டிருக்கையில், இனாயத், தன் ஷீவில் ஒளித்து வைத்திருக்கும் அமெரிக்க டாலர்களை தரகனிடம் தந்து, மீண்டும் கிளம்ப தயாராகிறான். 5 நாட்களுக்கு பிறகு, இந்த முறை ஒரு மாற்றுப்பாதையின் மூலம், ஈரானிய எல்லைக்குள் புகுந்து டெஹ்ரானை (Tehran) வந்தடைகிறார்கள். டெஹ்ரான், ஈரானின் தலைநகரம். பின் அங்கிருந்து, தரகனின் மூலமாக, தக்காளிப்பழங்களை ஏற்றிச் செல்லும் ஒரு ஜீப்பிலமர்ந்து மகு(Maku) என்ற இடத்திற்கு வருகின்றனர். மகு மேற்கு அஜர்பைஜானில் உள்ள ஒரு முக்கியமான நகரமட்டுமல்லாமல், அது துருக்கியின் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரம். மகுவிலிருக்கும் தரகன் எல்லை பாதுகாப்பு பிரச்சனைகளால் இவர்களை ஒரு வீட்டில் தங்க வைத்து, பின்பு, பனி பெய்யும் ஒரு இரவில், துருக்கி எல்லைக்கோட்டினை மலைகளின் வழியே தாண்ட வைக்கிறான். ஆடுகளைத் தாங்கி செல்லும் ஒரு லாரியிலேறி அவர்கள் தரகரிடம் போய் சேருகிறார்கள். அந்த தரகன் இவர்களை இன்னொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கிறான். லாரியில் ஒரு குடும்பத்தை சந்திக்கிறார்கள். கணவன், மனைவி மற்றும் ஒரு 8 மாதக் குழந்தை. அந்த கணவன் தான் குடும்பத்தோடு, டென்மார்க் செல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறான். லாரி முழுக்கப் பொருட்களை ஏற்றி, தார்பாலினால் மூடி வேறு ஒரு இடத்துக்கு அனுப்பபடுகிறார்கள். அந்த இடத்தில் இவர்கள் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு, அருகிலுள்ள ஒரு எவர்சில்வர் ஸ்பூன்கள் செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டு, தரகனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, அவர்களும் அந்த குடும்பத்தினரும் ஒரு கன்டெய்னர் லாரியில் ஏற்றிவிடுகிறார்கள். இவர்களுக்கு சிறிது இடம் விடப்பட்டு, கன்டெய்னர் முழுக்க பொருட்கள் அடுக்கிவைக்கப்படுகின்றன. லாரி, இஸ்தான்புல்(Istanpul) (துருக்கியின் தலைநகரம்) அடைகிறது.கன்டெய்னர் ஒரு கப்பலில் ஏற்றப்படுகிறது. காற்று புக முடியாத ஒரு இருட்டுப் பெட்டியில் பயணம் தொடங்குகிறது. 40 மணி நேரம் கழித்து , கப்பல், ஏதென்ஸ், கிரேக்கம் வழியாக, அட்ரியாடிக் கடலில் பயணித்து, இத்தாலியின் வடக்கு எல்லையான திரியஸ்தே(Trieste)[நன்றி:ரோசாவசந்த்] என்ற ஊரை அடைகிறது.

பணியாளர்கள் கன்டெய்னரை திறக்கின்றார்கள். போதிய காற்று இல்லாததால், இனாயத்தும், அந்த கணவன், மனைவியும் இறந்துவிடுகிறார்கள். குழந்தை அனாதையாகிவிடுகிறது. ஜமால் இதனை காண சகிக்காமல் அங்கிருந்து ஒடுகிறான். 2 வாரங்களுக்குப் பிறகு, ஜமால், திரியஸ்தேயிலேயே மதுபான விடுதிகளில் Hand Band-களை விற்கிறான். ஒவ்வொரு விடுதியிலும் நாயை விட கேவலமாக விரட்டப்படுகிறான். இதனை எதிர்கொள்ளும் ஜமால் பொறுக்கமுடியாமல் ஒரு பெண்ணின் கைப்பையைத் திருடி, பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து, ரயிலேறி பிரான்சுக்கு பயணமாகிறான். வழியெங்கும், இனாயத் கதறிய கதறலும், குழந்தையின் அழுகையும் அவன் நினைவில் வருகிறது. அதன் எதிரொலிகள் அவனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. He is been haunted by horrific memories. பாரிஸுக்கு வந்து, அங்கிருந்து, பிரான்சின் சான்கேட்தே/சான்கேட்(Sangatte) என்கிற எல்லையிலிருக்கிற அகதிகளின் முகாமில் தஞ்சமடைகிறான்.(சான்கேட்தே முகாமை அடைக்க வேண்டும் என்பது பற்றிய பிபிசி செய்தி) சான்கேட்தே, பிரான்சின் கெலாயிஸ் முனையிலிருக்கும் அகதிகள் முகாம். அந்த ஊர்தான் கடல் வழியே பிரான்சையும் இங்கிலாந்தையும் பிரிக்கின்ற ஊர். அகதிகள் முகாமில் யூசுப் என்கிற இன்னொரு அகதியை பார்த்து, பேசி அவன் நண்பனாகிறான். இருவரும் சான்கேட்தேவை விட்டு லண்டனுக்கு கள்ளத்தனமாக செல்ல திட்டமிடுகின்றனர்.

சான்கேட்தேயிலிருந்து லண்டன் செல்லுவதற்கு இருக்கும் ஒரே வழி கன்டெய்னர் லாரியில் போவதுதான். ஆனால், இது தரைமார்க்கமென்பதால், உள்ளே உட்கார்ந்துப் போக முடியாது. தொலைதூரம் போகும் கன்டெய்னர் லாரிகளில் ஒன்றுக்கு இரண்டாக முன்னேற்பாடாக ஸ்டெப்னி லாரி டயர்கள், லாரியின் கீழே பொருத்தப்பட்டிருக்கும். அதற்கும், லாரியின் ஷாப்ட்டுகள் வேலை செய்யும் அடிப்பகுதிக்கும் இடையில் சிறு இடைவெளியிருக்கும். அதனால், அவர்களிருவரும் படு மோசமான திட்டத்திற்கு தயாராகிறார்கள். ஸ்டெப்னி டயர்களுக்கிடையே ஒரு கட்டையினை குறுக்காகப் போட்டு, அதன் மேல் இருவரும் பயணிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 2002
லண்டன். 1 வாரத்துக்கு பிறகு, ஜமால் அங்குள்ள ஒரு உணவு விடுதியில் பாத்திரம் கழுவுகிறான்.அங்குள்ள மசூதிக்கு சென்று தொழுகிறான். ஷம்ஷாது அகதிகள் முகாமிற்கு போனில் பேசி, இனாயத் இறந்ததை தெரிவிக்கிறான்.

(நான் இங்கே bold-ஆக பதிந்திருக்குமிடங்கள் அனைத்துமே சில்க் ரூட்டிற்கு உட்பட்டவை. சில்க் ரூட் பற்றிய புரிதலுக்காகவே இது)

ஷம்ஷாது அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் திரையில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அடித்து, பிடித்து, கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் குழந்தைகள். ஆண், பெண் என எந்தபேதமும் பாராமல், மணல் அடுக்குகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திரையில், ஜமாலின் அகதியாய் வாழ விருப்பப்படும் மனு இங்கிலாந்து அரசால் நிராகரிக்கப்படுகிறது. ஆனாலும், வயதை கருதி (16) அவனுக்கு மன்னிப்பு அளிக்கும் அதே தருணத்தில், 18 வயது நிரம்பும் முன்னர் நாட்டை விட்டு வெளியேற சொல்லும் அறிவிப்புடன் படம் முடிகிறது.

இந்தப் படம் முன்வைக்கும் செய்திகள் அதிர்ச்சியும், அபாயமும் தர வல்லவை. எத்தனை ஜமால்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். இவ்வளவு ஜமால்கள் உருவாக எத்தனையெத்தனை இனாயத்துகள் உயிர் துறக்கிறார்கள். ஈராக்கில் கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களை கழுத்தறுத்து கொல்லும் படங்களைக் கண்டு மேற்கு நாடுகள் அலறின. ஆனால் சத்தமேயில்லாமல் தினமும் எத்தனை உயிர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா ? நாடிழந்து, உரிமைகளிழந்து, வீடிழந்து, பஞ்சம் பிழைக்க வந்த பராரியாய் அவர்கள் அகதிகள் முகாமில் என்ன செய்வார்கள் ? சோறும், இருக்க இடமும் தந்தால் போதுமா ? உலகமுழுவதும் அகதிகளை மூன்றாம் தரக் குடிமக்களாகவே எல்லா நாட்டினரும் பார்க்கிறார்கள். அவர்கள் அகதியானதின் பின்புலம் பற்றிய உண்மைகள் மொத்தமாய் இருட்டடிக்கப்படுகிறது. இப்பதிவின் முதல் படம், போரின் பாதிப்புகளை அந்த நாட்டிலிருந்துப் பார்த்தென்றால், இந்தப் படம், வெவ்வேறு நாடுகளின் வழியேப் பார்க்கிறது. ஒரு போர் முடிந்தபிறகுதான் ஆரம்பிக்கிறது என்ற குரூரமான உண்மையை கண்முன் நிறுத்துகிறது இந்தப் படம். போர் ஆப்கானியர்களை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. ஆப்கானியர்களின் போர் பசியின் மீது, பட்டினியின் மீது, பிறருக்கு சமமாக தாங்களும் வாழவேண்டி செல்லும் வாழ்க்கையின் மீது. இந்தப் போரினை தடுத்து நிறுத்த முடியுமா நம்மால் ? ஐக்கிய நாடுகள் சபை இவர்களை பொருள்வயிற் அகதிகள் (economic refugees) என்று கூறுகிறது. இதனையொட்டி, நான் படித்த ஐக்கிய நாடுகளின் அகதிகள் பிரிவு (UNCHER) வலைத்தளத்தில், சுமார் 424,300 ஆப்கானியர்கள் ஈரானிலும் 362,900 பேர் பாகிஸ்தானிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாகக் கூறுகிறது. This is an official statstical report issued on Dec.2004 by UNCHER. இதில் கணக்கில் வராமல் இன்னமும் எத்தனையெத்தனை அகதிகளோ ?(பார்க்க: 'அன்சரின்' அகதிகள் பற்றிய விவரங்கள் )

Travalogue போலத் தோற்றமளித்தாலும், இந்தப் படத்தில் காட்டப்படும் காட்சிரீதியிலான விவரங்கள் அசாதாரணமானவை. வெம்மையும் வெக்கையும் நிறைந்த பாகிஸ்தான் எல்லையிலிருந்து தொடங்கும் படம், துருக்கி தாண்டும் வரை அழுக்கும், தூசியும் மண்டிக் கிடக்கும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறது. வெம்மை சூழ்நிலை மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கைப் பற்றிய குறீயிடும் கூட. சுருட்டு புகை கசியும், இருட்டுத் தெருக்களில், களேபாரமான வீதிகளில், மனிதர்கள் பண்டங்களைப் போல கை மாற்றப்படுகிறார்கள். கடைகளில் தேனீர் குவளைகளுக்கு பக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள், சொல்லாமல் பல கதைகள் சொல்லுகின்றன. உயிர் பிழைத்து நீங்கள் செல்ல வேண்டிய இடம் சென்று போன் செய்தால், ஹவாலாவின் மூலம் நீங்கள் பெஷாவரில் தந்த பணம் அங்கு கிடைக்கும். இப்படி, எத்தனை பேர்களின் பணம் திருப்பி வாங்கப்படாமல்,இத்தகைய மனித வல்லூறுகளை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது? ஆவணப் படங்களை மிஞ்சும் யதார்த்தத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்தப் படம், வெறும் சிறிய டிஜிடல் கேமராக்களில் எடுக்கப்பட்டது என்பது வியப்பிலாழ்த்தும் விசயம். படத்தயாரிப்பில் இந்தப்படம் கொரில்லா முறையில் கிடைக்குமிடங்களை பயன்படுத்திக் கொண்டு எடுக்கப்பட்ட படம்(Gurilla Filmmaking). ஆவணப்படம் போலத் தோற்றமளித்தாலும் இது ஆவணப்படமல்ல. பெப்ரவரியில் தொடங்கும் இந்தப் படத்தில், ஆகஸ்டில் ஜமால் லண்டனுக்கு வந்து சேருகிறான். இதுதான் ஜமால் போன்றவர்களுக்கு எடுக்கும் குறைந்தபட்ச காலககட்டம். உண்மையில் எல்லைக்கோடுகளின் பாதுகாப்பினைப் பொறுத்து இது நீளும்.

இது லண்டனில் இப்போது அகதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமாலின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் வரும் 90% கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அந்தந்த கதாபாத்திரங்களாகவே நிசத்திலும் வாழ்ந்து வருபவர்கள். இந்தப் படத்தின் பெயர் வரிசையில் இம்ரான் என்றொரு பெயரை நீங்கள் பார்க்கலாம். இம்ரான் பெஷாவரில் இதுப் போன்ற கள்ளத்தனமாக சில்க் ரூட்டின் மூலம் ஆட்களையும், 'சரக்குகளையும்' கடத்தும் ஒரு மிகப்பெரிய வலைப்பின்னலன் ஒரு அங்கம். இம்ரான் இந்த படத்தில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறார். அவர்தான் இயக்குநருக்கு, பிற நாடுகளிலுள்ள தரகர்களிடம் பேசி, அவர்களையும் இந்தப் படத்தில் பங்கு பெற வைத்துள்ளார். இம்ரான் மட்டுமல்லாமல் இந்த படமுழுக்க நாம் பார்க்கும் பெரும்பாலான தரகர்கள் (சில பேர்களைத் தவிர) இதை ஒரு தொழிலாக செய்து வருபவர்கள். இந்தப் படத்தில் எந்தவொரு வசனமும் எழுதி வைத்துப் பேசப்பட்டதல்ல. இயக்குநர் மைக்கேல் விண்டர்பாட்டம் அவரின் வர்ணனையில் இதைப் பற்றிக் கூறுகிறார். நாம் இந்தப் படத்தில், முந்தைய படத்தைப் போல அழுத்தமான வசனங்களைக் கேட்க இயலாது. ஆனால், அவர்களின் பயணம் நம்மை உலுக்கிப் போடுகிறது. இந்தப் படத்தில் தேர்ந்த நடிகர்கள் என்று எவரும் கிடையாது. ஆனாலும், எல்லோருமே அற்புதமாக கையாளப்பட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தில் பேசப்படும் புள்ளிவிவரங்கள் கோவத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்குகின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஷாம்ஷாது அகதிகள் முகாம் காண்பிக்கப்படும் போது பிண்ணணியில் குரல் நமக்கு அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் குண்டு வீசி முடித்த தாக்குதலுக்காக சுமார் 7.9 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது எனக் கூறுகிறது. ஒரு ஒசாமாவிற்கும், புஷ்ஷுக்கும் நடந்த சண்டையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஷம்ஷாது அகதிகள் முகாமில் மட்டும் 53,000 பேருக்கு மேல் (இந்தப்படம் கூறும் புள்ளிவிவரங்கள் - 2001-02) இறந்தவர்கள், ஈரான், ரஷ்யா, கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் பற்றிய விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால், இதுவரை, எவ்வளவு மில்லியன் டாலர்களை இவர்களின் வாழ்க்கை சீரமைப்பிற்காக அமெரிக்கா செலவழித்திருக்கிறது ?

வேலையற்று திரியும் ஆப்கானிய இளைஞர்கள் ஏன் கூலிப்படை தீவிரவாதிகளாய் மாறமாட்டார்கள் ? பணமும், வசதியும், சாப்பாடும் தரப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, இவர்கள் உலகமெங்கும் கூலிப்படைகளாய், ஆட்கொல்லும் தீவிரவாதிகளாய், எல்லைகளைக் கடந்து நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு நிலையில் எப்படி நம்மால் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டமுடியும் ? இந்திய ராணுவம் காஷ்மிரில் சுட்டுக் கொல்லும் பெரும்பாலான தீவிரவாதிகள் ஆப்கானியர்கள். இது எவ்வளவு நிசமான பயங்கரமென்பது இந்த விசயத்திலிருந்து விளங்கும்.

இந்தப் படம் எப்படி அகதிகளின் போருக்கு பின்னான வாழ்வினைப் பற்றி பேசுகிறதோ, அதே அளவிற்கு, மறைமுகமாக தீவிரவாதிகளின் இருப்பையும், தீவிரவாதத்தின் இயங்குதளத்தையும் குறியீடாய்க் காட்டி வருகிறது. உதாரணமாய், தல்பல்தீனில் இவர்கள் முகவரி விசாரிக்கும் கடைகளில் ஒசாமா பின் லேடனின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளதைக் போகிற போக்கில் காட்டிவிட்டு செல்கிறது.
கன்டேயனரில் அனாதையாய் விடப்படும் குழந்தையின் நிலை என்ன?
ஏன் இப்படியொரு படு பயங்கர பயணத்திற்கு, உயிரினை பணயம் வைத்து தயாரகுதலின் பின்புலத்தில் உள்ள கசப்பான உண்மைகள் எவை ?
ஒரு மேற்கு நாட்டின் ஈகோவிற்கு பலியாவது யார் ?
தீவிரவாததிற்கு எதிரான போர் எனச் சொல்லும் மேற்கு நாடுகளுக்கு, தீவிரவாதிகள் உண்டாதலின் காரணங்கள் பற்றிய அறிதல்கள் உண்டா ?
பயணிக்காமல், அகதிகள் முகாமிலேயே தங்குபவர்களின் எதிர்காலம் தான் என்ன ?
முடிவில் காட்டப்படும் குழந்தைகளின் சிரிப்பொலிகள் பெரும் துயரத்தை உண்டாக்குகின்றன. இந்த குழந்தைகள் எதிர்காலம் என்னவாகும் என்கிற மிகப்பெரிய கேள்வியுடன் படம் முடிகிறது. அதேப்போல் இறுதியில் காட்டப்படும் ஜமாலின் மனு நிராகரிப்பு, இத்தகைய அகதிகளின் இருப்பினைப் பற்றிய பிற கேள்விகளை எழுப்புகின்றன. 18 வயதானதும், ஜமால் என்ன செய்வான் ? லண்டனிலேயே கள்ளத்தனமாக வாழ்வானா ? இல்லை இதேப் போலொரு இன்னொரு ரூட்டில் கனடாவிற்கோ அல்லது வேறு ஒரு நாட்டிற்கோ உயிரினை பணயம் வைத்து பயணிப்பான். வேறுநாடுகளில் குடிபுகுந்தாலும், இவர்களின் இருப்பினைப் பற்றிய பல்வேறு கேள்விகளுடன் முடிகிறது.

இந்தப் படத்தின் இயக்குநர் மைக்கேல் விண்டர்பாட்டம் எனக்கு பிடித்த நவீன பிரிட்டிஷ் இயக்குநர்களில் ஒருவர். "ஜூடு" "வெல்கம் டூ சரஜீவோ" [இந்தப் படம் போஸ்னிய பிரச்சனையைப் பற்றியது. சில வாரங்களில் இந்தப் படத்தினைப் பற்றி பதிகிறேன்] "பட்டர்பிளை கிஸ்" "கோட் 46" போன்ற சிறப்பான படங்களை இயக்கியவர். இந்த படபிடிப்பின்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இரண்டாம் கட்ட போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அனுமதி கிடைக்காது என்று தெரிந்து, பழங்கால சில்க் ரூட்டினை ஆவணப் படமாக எடுக்கிறோம் என்ற பெயரில் மறைத்து எடுத்துள்ளார்கள்.2002-ல் வெளிவந்த இந்தப் படம் இங்கிலாந்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மிக நீளமாகப் போய்விட்ட காரணத்தினால், இந்த படம் வாங்கிய விருதுகளை ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

Won Awards on: Bafta award 2004, Golden Berlin Bear 2003, Peach Film Award 2003, Prize of Ecumenical Jury 2003, British Independent Film Award 2003, Directors Guild of Great Britain 2004

Nominated for Awards in: European Film Award 2003, British Independent Award 2003
Alexander Korda Award for Best British Film 2004

மேலும் இந்தப்படம் பெற்ற விருதுகள் பற்றிய சுட்டி இங்கே

Comments:
நாராயணன், மிக விரிவான மிகவும் பயனுள்ள பதிவு. நேரம் எடுத்து உழைப்புடன் எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து நீங்கள் இது போன்ற படங்கள் குறித்து எழுதுங்கள்.

ஒரு தகவலுக்கு:இடையில் நீங்கள் சொல்லும் இத்தாலிய ஊரின் பெயர் திரியஸ்தே(trieste). அங்கே ஆறுமாதம் தங்கியிருந்தேன். அற்புதமான சுற்றுலா நகரம். பல பாகிஸ்தான். பங்களாதேசியினரை எளிதாய் பார்க்கமுடியும். பார்த்திருக்கிறேன். (ஏனோ சிங்களவர்கள் அளவிற்கு அங்கே ஈழதமிழர்களை கண்டதில்லை.)
 
ரொம்ப பெரிசா.... எழுதிட்டீகளே நாராயணன் அண்ணாச்சி. RSS Reader-ல இறக்கி மெதுவா தான் படிக்கனும். சில சமயம் ஒருவர் ரசிச்சி எழுதின படத்தை விமர்சனம் படிச்சிட்டு பார்க்கிறதும் தனி கிக் தான். நீங்க சொன்ன படத்தை தேடுறேன் கையில மாட்ட மாட்டேங்குதே. பொறுமை கடலினிம் பெரிது.
 
அப்படியில்லை விஜய். இந்தப் படத்தை வெறுமே இரண்டு ஆப்கானிய இளைஞர்கள் தரைவழியாக லண்டன் சென்றார்கள் என்று சுலபமாக எழுதிவிட்டு போய்விடலாம். ஆனால், அதில் உள்ள கஷ்டநஷ்டங்கள் தெரியாது. உலகெங்கிலும் இதுப்போல வெவ்வெறு பாதைகளில் பயணிக்கூடிய அகதிகளைப் பற்றி சொல்லும்போது விரிவாக எழுத வேண்டியது உள்ளது. இந்தப்படத்தில் வரும் சில்க் ரூட் ஒரு உலகளாவிய வழித்தடம். படிக்கும் வாசகனாய், எனக்கு இந்த விவரங்கள் தேவைப்படுகிறது. அதே விவரங்களைத்தான் என் பதிவில் பதிந்திருக்கிறேன். அவர்களின் பயணமே படம். ஆகையால், பயணத்தினூடே பயணம் செய்யும் வகையில்தான் பதிந்திருக்கிறேன்.

நீளமாக இருப்பதானால் "லகான்" பார்க்கவில்லையா நாம் ;-)
 
அருமையாக படம்பிடித்திருக்கிறீர்கள்.நூலகத்தில் இருக்குமா தெரியவில்லை,கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.
ஐரோப்பாவில் வதியும் ஈழத்தமிழர்களிடம் கேட்டால் தாய்லாந் ரூட்,ஆபிரிக்க ரூட் என்று பல கதைகள் சொல்வார்கள்.ஒவ்வொன்றும் ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பாதைகள்.ஆப்கான் அகதிகள் துயரம் புரிந்துகொள்ள முடிகிறது.
 
உண்மையிலேயே இந்தப்படத்தை அவர்களை மனதிலிருத்தி தான் பார்க்க முயன்றேன். இந்தப் படம் வெளிப்படுத்தும் கோரங்கள் எழுத்தில் அறியப்படாதவை.
 
மிக நேர்த்தியான பதிவு. Bravo, நாராயண். சில்க் ரூட் என்பது கிட்டத்தட்ட வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரியோ என்னமோ இங்கே. அசல் சில்க் ரூட் என்பது சீனாவிலிருந்து மத்திய ஆசியா, மத்தியதரைக்கடல் வழியாக ஐரோப்பாவின் கலாச்சாரத் தலைநகரங்களுக்கு நீண்ட அரும்பொருள் வர்த்தகப் பாதையின் பெயர். இதுமாதிரி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்பவர்களின் சில கதைகள் கேட்கவே கொடூரமாக இருக்கும். சிலகாலத்துக்கு முன்பு, விமானமொன்றின் இறக்கையில் தொங்கிக்கொண்டே (லண்டன் என்றுதான் நினைவு) போய்ச்சேர்ந்த ஒரு நபரைப்பற்றிப் (இந்தியர்/பாகிஸ்தானியர்) படித்தேன். போர்களைப் புகழும் (glorify) சமுதாயங்கள் இருக்கும் வரை, இம்மாதிரியான துன்பங்களுக்கு முடிவில்லை.
 
உண்மை தான் மான்டீ ( மான் டிரிஸர் ன்னு பேரு அடிக்கிறதுக்குள்ள ஒரே சொதப்பல், ஈ-கலப்பையில ன் டி ன்னு அடிச்சா அது 'ந்'-ஆயிடுது. ஆகவே இனிமேல் நீங்கள் என்னைப் பொறுத்தவரை மான்டீ மட்டுமே ;-))

அதற்குப் பெயர் வந்ததன் காரணம் போதைப் பொருட்கள் கடத்தல் தான். மெக்சிவோவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், பயிராகும் ஒபியத்தை விட ஆசிய நாடுகளில் பயிராகும் ஒபியம் கொஞ்சம் தரம் குறைந்தது. அதற்காக, ஐரோப்பா வழியாக ஆசிய நாடுகளில் இதனை விற்கும் பாதைக்கு பெயர் தான் சில்க் ரூட்.
சிலுக்கிற்க்கும், ஒபியத்திற்கும் என்ன சம்பந்தமென்று கேட்காதிர்கள் (ஆனால், எனக்குத் தெரிந்த இறந்துப் போன சில்க்கின் (நடிகை) பார்வையே உயர் ரக ஒபியத்திற்கு ஈடானது - அப்பாடா, எப்படியோ சில்க் பேரை நுழைச்சாச்சு)
 
அப்பாடி ஒருவழியா படிச்சி முடிச்சிட்டேன். நல்ல எழுதியிருக்கீங்க. படிக்கும் போதே படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு. 'சில்க் ரூட்'-ன்னு ஒரு டாக்குமெண்டரி டிவிடியை பார்த்தேன். அட்டையில் மேலுள்ள content படிக்கும் போது மாண்டீ சொன்ன சில்க் ரூட் பத்தி தான் சீனா டூ மற்ற இடத்துக்கு. இந்தப் படத்தை தேடி பார்க்கனும். நன்றி நாராயணன்.
 
இன்னா விஜய், நல்லா கத சொல்றேனா, பேசாம், சாப்ட்வேரை விட்டு, மணிரத்னம், பாலுமகேந்திரா, சங்கர் கிட்ட உதவி இயக்குநனரா சேந்துட்டவா ? :-)(நம்மள தமிழ் சினிமா மதிக்காது அபபடிங்கறது வேற விசயம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]