Feb 11, 2005

பகுதி 2: தமிழ் இணைய திரையரங்கம் - சாத்தியமா?

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கொஞ்சம் தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும். மிகுந்த வேலைகள் இந்த வாரத்தில். இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள மின்வணிக பொழுதுபோக்கு தளங்களை ஓயாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்றே முயற்சித்தால் சாத்தியம் என்று கூட தோன்றுகிறது. எல்லா மறுமொழிகளையும் படித்து பார்த்தவுடன் முதலில் செய்யவேண்டியவை என சில விசயங்கள் தோன்றுகிறது.

எல்லா மறுமொழிகளிலும், மிக அதிகமாக சிலாகிக்கப்பட்டது "ரசனை மாற்றம்". ரசனை மாற்றமென்பது ஒரு நீண்ட நாள் முயற்சி. ஆனாலும், திட்டவட்டமாக, 10-20 வருடங்களில் ரசனை மாறிவிடும் என்று தோன்றவில்லை. சீரியல்கள், வணிக சினிமாக்கள், தொலைக்காட்சி என ஆக்ரமிக்கப்பட்டுள்ள, பார்வையாளனின் பார்வையை மாற்று சினிமாவிற்கு திருப்ப நல்ல அறிமுகங்கள் தேவைப்படுகிறது.

நான் விசாரித்த வரையில், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், சினிமா பேரடைசோ, மாக்ஸ் மூலர் பவன், ரஷ்ய கலாச்சார மையம் பிலிம் சேம்பர் திரையரங்கம், சத்யம் திரையரங்கம், ஆனந்த் திரையரங்கம் போன்றவர்கள் இதில் ஆர்வமாக உள்ளார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு நான் சொன்ன இடங்களுக்கு மட்டும், ஒரு 1000-1200 பேர்கள் வந்து போகிறார்கள் (எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்). இவர்களுக்கு மாற்று சினிமா பார்க்க ஆர்வமும், தேடலும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் ICAF [Indo Cine Appreciation Forum]-இன் தங்கராஜிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மாதிரியாக இந்த விசயத்தை கோடிட்டு காட்டியபோது, அவர் மிக்க ஆர்வத்துடன் எப்போது செய்யப்போகிறீர்கள் என்று கேட்டார். ஒவ்வொரு முறையும் ஏதேனும் உலக சினிமா விழா பார்க்கும் போதும், குறைந்தது 100-150 பேர்களாவது பிலிம் சேம்பர் திரையரங்கில் தலை காட்டுவார்கள். மான்ட்ரீஸர், மூக்கன் சொன்னது போல் நிறைய பேர்களுக்கு எங்கு படம் பார்ப்பது என்ற தகவலே தெரியாது.

ஆக, ரசனை மாற்றத்திற்கு எனக்கு தெரிந்த மிக சிறந்த வழி, கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இந்த படங்களைப் பற்றிய அறிமுகங்களை கொடுப்பது தான். [நான் பள்ளி படித்த காலத்தில், ஒரு தேய்ந்து போன ப்ரொஜக்டரில் "ஆயிரத்தில் ஒருவன்" பார்த்திருக்கிறேன்] எல்லா கல்லூரி விழாக்களிலும், புகைப்பட கலைப் போல 5 நிமிட படமெடுத்தலை ஒரு போட்டியாக நடத்தி, சில திரை பிரபலங்களை விட்டு பரிசு தர சொன்னால், மாற்று சினிமாவிற்கான அடித்தளம் அமைக்கப்படும். இந்த தலைமுறை தட்டு தடுமாறி, தேடி, அலைந்து, திரிந்து கற்றுக்கொண்டதை, அடுத்த தலைமுறை சுலபமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். மாற்று சினிமா பற்றிய அறிமுகம் பெருகும். உண்மையிலேயே மாற்று சினிமாவை ரசிக்கும், வணிக சினிமா பிரபலங்களின் மூலம் இதனை முன்னிறுத்தலாம் (உதா. இயக்குநர் வசந்த், நாசர், பாலு மகேந்திரா) ஒரு பேட்டியில் கூட பாலு மகேந்திரா, சினிமாவைப் பார்ப்பது பற்றி ஒரு பாடம் வைக்க வேண்டும் என்று படித்ததாக ஞாபகம். ஆக, ரசனை மாற்றமென்பது ஒரு நீண்ட காலப் தொடர் பணி.

சிறு/பெரும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து இந்த தளத்தின் மூலம் பார்க்கப்படும் குறும்படங்களை பற்றி பத்தி இருத்தல் அவசியம் என்று தோன்றுகிறது. இணைய பத்திரிக்கைகளில் தொலைக்காட்சி, நிகழ்ச்சி நிரல் போல சிறு இடம் கிடைத்தால், குறும் பட நிரல்களை ( புதிதாக வந்த 5 படங்கள், விரும்பி பார்த்த 5 படங்கள் ...) பிரசுரிக்கலாம்.(திரு. மாலன் அவர்களின் கவனத்திற்கு இது)- தொலைக்காட்சிகளின் ஃபில்லர்களாக(Gap Fillers) சில சமயங்களில் சில படங்களை உபயோகப்படுத்தலாம்

மாற்று சினிமாக்களைப் பற்றிய தெரிதல். யார் என்ன படமெடுக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் - போன்ற விசயங்கள். என் பதிவில் ஏற்கனவே இதனை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இதற்கு மிகச் சிறந்த வழி இணையம் தான். சிதறி கிடக்கும் பல்வேறு தகவல்களையும் ஒரு தளத்திலோ, வலைப்பூவிலோ ஒருங்கிணைக்க வேண்டும். இப்போது தொடங்கினால், 2005 டிசம்பருக்குள், ஒரு நல்ல எண்ணிக்கையை எட்ட முடியும். எண்ணிக்கை தான் வணிகத்தை தீர்மானிக்கும். நிறைய படங்களிருப்பின், பார்வையாளனுக்கு சந்தோஷமும், படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கும் உரிமையும் இருக்கும். எண்ணிக்கையை கொண்டே நம் இலக்குகளை நம்மால் குறிப்பிட இயலும். சற்றேரக்குறைய, ஒரு 400-500 படங்கள் இருப்பின், ஒரு சந்தையை நம்மால் உருவாக்க இயலும், அதற்கு முதலில் தேவைப்படுவது, உலகமெங்கும் எடுத்த, எடுக்கும், எடுக்கப்போகின்ற படங்களைப் பற்றிய அறிமுகங்களும், பார்வைகளும். வெறுமே மின்வணிக தளமாக இராமல், iTunes போல ஒரு படத்தை தரவிறக்கிப் பார்க்க $1.99 என்று செய்யலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன். பைரசி வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என யாராவது திருவாய் மலர்ந்தால், அவர்களுக்கான என் பதில் "சாமி, முதல்ல அவன் படத்தை பாக்கட்டும். இல்லைன்னா உங்க வீட்டு DVD Player-ல இலவசகாட்சி தான் ஓட்டணும்"

மேலும், உலகமெங்கும் நடக்கும் திரை விழாக்களிலும், குறும்பட, இலக்கிய, தன்னார்வ விவாதங்களிலும், அந்த தளத்தை பிரபலப் படுத்துவமேயானால், படங்களை ஒருங்கிணைக்க இயலும். என்னளவில், சென்னையில் நான் சொன்ன எல்லா இடங்களிலும் பேசிப் பார்த்து அதனை ஒரு நிரந்தர தளமாகவோ, வலைப்பூவாகவோ பதியப்படுத்துகிற வேலையை செய்ய இயலும். மேலும், ஒரு கூட்டமைவு என்ற முறையில் எல்லா குறும்பட, மாற்று சினிமா இயக்குநர்களுக்கும் இந்த தளத்தை அவர்களின் படத்தின் பெயர்வரிசையில் இடம்பெற வேண்டுகோள் வைக்கலாம். அவ்வாறு செய்யும்போது, படம் பார்க்கும் சிறிய கூட்டத்திற்கும், மாற்று சினிமா பற்றிய உலகளாவிய ஒரு நிரந்தர ஆணையத்தை பார்க்கும் வாய்ப்பும் அதன்மூலம் தளத்தில் உள்ள பிற படங்களைப் பற்றிய அறிமுகமும் கிடைக்கும்.

அரசு அளவில் மாற்று சினிமாவை முன்வைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால், இந்தியாவில் அது சாத்தியமா என்று தெரியவில்லை. அரசாங்கம் புகும் எந்த வேலையும் வேகமாக, லாபமாக செய்ய இயலும் என்று தோன்றவில்லை. மாற்றுக் கருத்துக்கள் இதில் இருக்கலாம். ஆனால், என்னளவில், மக்கள் ஒரளவிற்கு தயாராகிவிட்டால், அரசு தானாக உள்ளே வரும் என்று தான் எண்ணம்.

திரையரங்குகளில் மாற்று திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்பது கொஞ்சம் ஓவரான எதிர்பார்ப்பாக தோன்றுகிறது. லாபம் மிக முக்கியம். மாற்று சினிமாவின் நீளம் மிகக்குறைவு. ஆக இடைவேளை, லேஸ், காபி, சமோசா, எஃக் பஃப், சாக்லேட் விற்க முடியாது. படத்தின் நீளத்தை விட பார்வையாளர்கள் குறைவு. அதனால், தொடர்ச்சியாக படம் காண்பிக்க முடியாது. எனக்கென்னவோ இந்த திரையரங்க அதிபர்கள் அனைவரும் இன்னும் 2-3 வருடங்களில் காணாமல் போய்விடுவார்கள் என்று தோன்றுகிறது. 39" பிளாஸ்மா ஸ்க்ரின்கள் மூலம், ப்ரிவியு திரையரங்க அளவிற்கு DVD திரைகள் இந்தியாவெங்கும் மொய்க்கக்கூடும் என்பது என் ஊகம். இல்லாவிடினும், ரிலையன்ஸ் ப்ரொஸிங்கினைக் கொண்டு, தாமதமில்லாத ஸ்ட்ரீமிங்கு வீடியோ(streaming video) மூலமாக, அகல திரையில் படங்களை திரையிட்டு கல்லா கட்டிவிடலாம், திரையரங்குகளை தொங்குவது வேலையத்த வேலை எனத் தோன்றுகிறது.

ஆக முதலில் செய்யவேண்டியது, மாற்று சினிமாவினை ஒருங்கிணைப்பது. உங்களின் ப்ரெஷ்ஷான கருத்துக்களோடு, இந்த விவாதத்தினை நீட்டிக்கலாம்.

பகுதி 1: தமிழ் இணைய திரையரங்கம்

Comments:
நாராயண் : ரசனை மாற்றம் என்கிற பாய்ண்ட்டை விட்டு நான் நகர்வதாக இல்லை :-). ரசனை மாற்றம் என்பது ஒரு நீண்ட பிராசஸ் என்று நான் நம்பவில்லை. சில குறுக்கு வழிகள் உண்டு.

சென்னையில் இருக்கும் வெகுசனக்கூட்டம் எப்படிப்பட்டது? என் சொந்த அனுபவத்தில் இருந்து, கில்லி படத்துக்கு கும்பலாகப் போய், கலாட்டா செய்து, படத்தை ரசித்து விட்டு வரலாம். ஆனால் மிஸ்டர் அண்ட் மிஸிஸ் ஐய்யருக்கு தன்னந்தனியாக அனுஈகாவில் ஒன்றாவது வரிசையில் ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்க வேண்டும். திண்ணை வாசிக்கிறதை விடவும், நரேன் கார்த்திகேயனின் சாதனைப் பட்டியலை நெட்டில் வாசிப்பது சிலாக்கியமானது. காலச்சுவடுக்கு சந்தாவை கட்டுவதைக் காசை கிங்·பிஷர் லாகர் போத்தல்களுக்கும் சைட் டிஷ்களுக்கு செலவழிப்பது உத்தமம். இந்த இடத்திலே மாற்று திரைப்படங்களுக்கான ரசனையை எப்படி ஏற்படுத்துவது?

ஒரு எளிமையான லாஜிக் சொல்கிறேன் கேளுங்கள். இந்த பியர் ( beer அல்ல :-)). ப்ரெஷர் என்கிற ஒரு சமாச்சாரம் இருக்கிறது தெரியுமா? பத்தாங்கிளாஸ் படித்து விட்டு இன்னொரு ஸ்கூலுக்குப் போன போதுதான், எனக்கு ·ப்ரெட்ரிக் ·பார்சித் என்கிற ஆசாமியையே தெரிய வந்தது. நண்பர்கள் நாலு பேர் பேசிக் கொண்டிருந்த போது அங்கே கலந்து கொள்ள முடியாமல் பட்ட அவஸ்தைக்கு பெயர் 'தாழ்வுமனப்பான்மைச்சரணாகதி' ஒரு தோழரிடம் இருந்து இன்று தான் தெரிந்துகொண்டேன். அந்த அவஸ்தைதான் இன்றைக்கும் என் ரசனையை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதற்கு வெவ்வேறு ரசனைகள், புரிதல்கள் கொண்ட ஒரு heterogenous கூட்டம் தேவை. அதற்கு இணையம் மிகவும் உதவியாக இருக்கும். முதல் கட்டமான, எழுத்தாளர், நண்பர் என்பதை அடுத்து, தேர்ந்தெடுத்த ரசனையாளர் என்று நான் நம்புகிற இரா.முருகனும், நானும் ( இன்னும் சில நண்பர்களும் இணைவார்கள்) ஒரு ·பிலிம் க்ளப் ஒன்று துவங்கப் போகிறோம். அட்டை , கொடி, பேனர், ரெஜிஸ்ட்ரேஷன் என்று எந்த சிக்கலும் இல்லாமல், வெறுமனே மாசத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை நண்பர்களுடன் சேர்ந்து பார்ப்பது மட்டுமே நோக்கம். தோணினால் இணையத்தில் எழுதுவோம்., இல்லாட்டா இல்லை. ஜஸ்ட் நல்ல படங்களாக பார்த்து குவிப்பது. வேணுன்னா வந்து ஜாய்ன் பண்ணிக்குங்க. அடுத்த கட்டமாக....... அதை அப்பறமாச் சொல்றேன் :-)
 
போன பதிவிலேயே எழுதியிருக்கவேண்டியது...சந்தர்ப்பம் வாய்க்கவில்லையா என்று எனக்கே தெரியவில்லை.

இணையத் திரையரங்கம் என்பதுகுறித்த தொழில்நுட்ப, வணிக ரீதியான கருத்துக்களைக் கூறுவது என்னளவில் சாத்தியமில்லை என்பதால், தோன்றிய வேறு சிலவற்றைச் சொல்கிறேன் - இந்தப் பிரச்னைக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.....

தமிழ் தவிர பிறமொழிப் படங்களைப் (பிற இந்தியமொழிப் படங்களையும்) பார்க்கச்செய்வது, அல்லது ஆர்வங்கொள்ளச்செய்வதுதான் பிரதான நோக்கமெனில், அதற்கு முதல் தேவை - அதுகுறித்துத் தேடமுயல்பவர்களுக்கு சுருக்கில் அகப்படும் ஒரு தகவல் கிடங்கு அவசியம் - IMDB வலைத்தளத்தில் வெளிவிமர்சனங்களுக்கென ஒரு வசதி உண்டு - ஐஎம்டிபியில் சுருக்கமாகத் தகவல்களைத் தெரிந்துகொண்டு பின் வெளிவிமர்சனச் சுட்டிகளைத் தட்டினால், கிட்டத்தட்ட ஐம்பது-நூறு வெளிவிமர்சனங்களைப் படிக்கமுடியும்.
http://www.imdb.com/title/tt0361596/externalreviews

IMDBயை ஒரு உதாரணமாகத்தான் சொல்கிறேன், அச்சு அசலாக அப்படியே இருக்கவேண்டியதில்லை - அது தேவையும் இல்லை. பெரும்பாலான பிரச்னைகள், தகவல்கள் தொகுக்கப்படாமல், சிதைந்து காற்றோடு போவதுதான். என் நண்பர்கள் சிலர் வெகு தேர்ந்த திரைப்பட ரசனை உள்ளவர்கள், அவர்களுடன் பேசியதையெல்லாம் தொகுத்தாலே எவ்வளவோ எழுதலாம் - அவர்கள் எழுதுவதும் இல்லை, அந்த உரையாடல்கள் தொகுக்கப்படுவதும் இல்லை. வலைப்பதிவுகளில், பொதுவாக இணையத்தில் எழுதப்படும் மாற்றுத் திரைப்படங்கள் பற்றிய குறிப்புக்கள் - அவை நன்றாயிருக்கிறதோ இல்லையோ, ஓரிடத்தில் தொகுக்கப்படவேண்டும். பிரகாஷ் சொன்னமாதிரி நண்பர்கள் குழு பார்க்கும் திரைப்படங்களைப்பற்றி எழுதுகையில், ஒரு stance எடுத்து எழுதினால் தற்போதைய நிலவரத்துக்கு நன்றாயிருக்குமென்பது என் அபிப்ராயம் - படம் பிடித்திருக்கிறதா இல்லையா, என்றால் ஏன் என்ற அளவில் இருந்தாலே போதுமானது. விமர்சனங்கள் எழுதுபவர்கள் எழுதட்டும் - திசைகளைத் தீர்மானிக்க பெருமளவு உதவுபவை அவை என்பது உண்மை. ஆனால், விமர்சனங்கள் என்ற வரையறைக்குள் எழுதவேண்டும் என்று நினைத்து எழுதத்தொடங்கிவிட்டாலே தவறாமல் வந்து ஒட்டிக்கொள்ளும் ஒப்பனைகள் தனிப்பட்ட அவதானங்களின் நுட்பத்தை, ரசிப்பை மழுங்கடிக்கும் தன்மையைப் பெருமளவு கொண்டிருப்பதால், தனிப்பட்ட அவதானங்களைக்கொண்டு எழுதப்படும் திரைப்படங்குறித்த பதிவுகளும் மேலும் எழுதப்படவேண்டும் - அப்பதிவுகளும் பொதுவில் கூடுமானவரையில் தொகுக்கப்பட்டுக் கிடைக்கவேண்டும்.

மேலும், பெரும்பாலானோருக்குத் திரைப்படங்கள் பார்ப்பது வலப்பக்கம் இடப்பக்க வரையறைகள் தெளிவாக உள்ள ஒரு காலகட்டத்துக்குள் நிகழ்வது: அதன்மேல் குடும்பச் சூழ்நிலைகளோ வேறு விஷயங்களோ அவர்களை அனுமதிப்பதில்லை. திரைப்படங்கள் பார்க்கும் வேகமுள்ள காலகட்டத்தினுள்ளேயே அதுகுறித்த செய்திகளை வாய்மொழியாகப் பரப்பிக்கொண்டிருப்பினும், அதனை archive செய்வதில் கிடைக்கும் உபயோகமே தனி. நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இதேபோலப் படம்பார்ப்பேனென்று சொல்லமுடியாது (இப்படித்தான் பல வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ;)) - அதேபோன்ற நிலைதான் பலருக்கும். விருப்பமும், சந்தர்ப்பமும் இருப்பவர்கள் சேர்ந்து திரைப்படங்கள் குறித்த கூட்டு வலைப்பதிவொன்றைத் (if not a website) தொடங்கலாம். முன்பே நான் சொல்லியதுபோல, அத்தியாவசியத் தகவல்கள் - எங்கெங்கே திரைப்படங்களைப் பார்க்கமுடியும், என்னென்ன படங்கள் என்றென்று திரையிடப்படுகின்றன என்ற ரீதியில் அடிப்படைத் தகவல்களை, முடிந்தளவு update செய்யலாம் - காப்புரிமைப் பிரச்னையில்லாத திரைப்படம் குறித்த விமர்சனங்களை, தகவல்களை வெளியிடலாம், வலைப்பதிவுகளில் எழுதப்படும் திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை, தகுதியிருப்பின் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

கல்லூரி மாணவர்களிடம் இதை எடுத்துச்செல்வது என்பது சாத்தியமே எனினும், மிகச் சோர்வூட்டும் விஷயம் என்பது என்வரையில் தெரிந்த விஷயம். மாற்று சினிமா என்றால் ஏதோ ஆகாயத்திலிருந்து வந்து குதித்தது, அதைப் பார்ப்பவர்களெல்லாம் ஏதோ elite slickers என்ற hypeஐ உடைப்பதுதான் பெரும்பாடு. நூற்றுக்கணக்கில் ஆட்டம் பாட்டம் நிறைந்த படங்களைப் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு அது கசப்பு மருந்து போல்தான் இருக்கும். அதை நாம் ஊட்டவேண்டியதில்லை, அவர்கள் பார்வையில் படும்படி வைத்தாலே போதும் - ஆர்வமிருப்பவர்கள் தானாக வந்தே தீருவார்கள். பிடித்து இழுத்துக்கொண்டு வருபவர்களால் யாருக்கும் பிரயோஜனமில்லை.

தூரதேசத்தில் உட்கார்ந்துகொண்டு டகடகவென்று அடித்துத் தள்ளிவிடலாம், என்னைப் போன்றவர்களால் என்ன செய்யமுடியுமென்று நானே யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு அது தொழில் அல்ல - அதற்காக என் வாழ்வையும் அர்ப்பணித்துக்கொண்டவனும் அல்ல, ஆனால் அதில் உள்ள ஆர்வம் மட்டும் போலி கிடையாது - சுருக்கமாக, நமக்குத் தெரியாமலே நாம் செய்யும் அன்றாட வாழ்க்கையின் multitaskingல் இதுவும் ஒரு விருப்பமுள்ள task என்ற ரீதியில் பார்க்கும் படங்களைப்பற்றி சந்தர்ப்பம் வாய்க்கும்போது எழுதமுடியும். ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு அதுவாவது பரவாயில்லையென நினைக்கிறேன். ஓடிக்கொண்டிருக்கிறேன் - வெள்ளிக்கிழமை சாயந்தரம்...முடிந்தால் மறுபடி எழுதமுயல்கிறேன்.....
 
icarus:நனறாக இருக்கிறது. கரும்பு திண்ண கூலியா?.. ஆனால் ஒரு பிரச்சனை வெவ்வேறு இடங்களில் இருப்பவர்கள் ஒரே படத்தை பார்த்து இரசிப்பதில் இருக்கும் சிக்கல் தான்
 
icarus, நானும் விட்றதாயில்லை. நீங்க சொன்ன பிலிம் க்ளப் நல்ல யோசனை. ஆனால், மான்டீ சொல்வதையும் யோசிக்க வேண்டும். தகவல்கள் மிக முக்கியம். அதற்கு, முதலில் படங்களைப் பார்க்கும், தேடலும், பார்வையும் உள்ள மனிதர்களின் ஒருங்கிணைப்பு அவசியம்.

இதனை ஒரு தளமாகவோ/வலைப்பதிவாகவோ செய்தல் என்பது சாத்தியம். தளமென்று இருந்தால், வணிக முயற்சிகளை பரீட்சார்த்த ரீதியில் யோசிக்க முடியும். பிரகாஷ் சொல்லும் peer pressure சமாச்சாரம் ஒரு வித்தியாசமான பார்வை. இன்றைய தொழில்நுட்பத்தில் இதற்கு ஏகப்பட்ட வாயில்களின் வழியாக விஷயஞானம் கிடைக்கிறது. என்ன ஒரே குறை, விஷயம் எங்கே இருக்கிறது என்பதற்கான தேடல், குறைவாக உள்ளது.

மான்டீ, கல்லூரி மாணவர்கள் மாற்றுசினிமா பார்க்க வரமாட்டார்கள் என்று தோன்றவில்லை. எல்லா மாணவர்களிடமும் ஏதாகிலும் ஒரு urge இருக்கிறது. அட, சைட் அடித்து பிகரை மடக்கக்கூடியதற்கு, பிலிம் காண்பித்தால் (உண்மையான பிலிம் சாமி)நமக்கென்ன வந்தது. நமக்கு தேவை, வணிக சினிமாவை தாண்டி, பிற சினிமாக்களும் உண்டு என்ற அறிமுகத்தை தான் சொல்ல தேவையிருக்கிறது. அது முடிந்து விட்டால், அவரவர் வாழ்வின் நீள,அகலத்தை பொறுத்து, படங்களைப் பார்த்து கொள்வார்கள் என்று தோன்றுகிறது.

கங்கா சொன்னது மிக முக்கியமான கருத்து. வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் ஒரு படத்தை ரசிக்கின்ற சிக்கல், இதற்காக தான் இணையம் தேவை என்று கூறுகிறேன். இன்னமும் கொஞ்சம், அகலமாகவும், ஆழமாகவும் விவாதிப்போம். திசை புலப்படாமலா போய்விடும் ?
 
நாரயணன் அண்ணாச்சி,

முந்திய பதிவிலேயே கருத்தை எழுத நினைத்து என் கவனம் வேறு எங்கேயோ போய்விட்டது. என்னுடைய சிறு கருத்துக்களை இங்கு முன் வைக்க விரும்புகிறேன். என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன். இரண்டு மாதம் முன்பு வரை உலகச் சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ் சினிமா, ஹாலிவுட் சினிமாக்களைத் தவிர வேறு எந்த சினிமாவையும் பார்த்தறியேன் 2 மாதம் முன்பு வரை. என்னுள் இரசனை மாற்றம் எற்பட்டது எப்படியெனில் வலைப்பதிவுகளில் வேற்று மொழிப்பட விமர்சனங்களைப் பார்த்து தான். அந்த மாதிரி விமர்சனத்தால் ஆர்வம் கூடிய போது என்னையறியாமல் ஒரு தேடல் ஆரம்பித்தது. தேடல் ஆரம்பித்ததும் அதற்குரிய விசயங்கள் உடனே கவனத்துக்கு வர ஆரம்பித்தது. உதாரணத்துக்கு HMV music audio/video கடையை எந்தனையோ முறை ஹாலிவுட் படங்களுக்காக அலசியிருக்கிறேன். அங்கே உலக சினிமாக்களை அடுக்கி வைத்த அலமாரி அப்போது புலப்படாமல், தேடல் ஆரம்பித்ததும் கண்ணில் பட்டது. இதற்கும் கூட்டம் வருகிறது. படங்களின் டிவிடிகளும் விசிடிகளும் விற்றுத் தான் தீருகின்றன. தேட தேட உலகச் சினிமாக்கு என்று ஒரு நூலகம் இருக்க, ஆர்வம் தீயாக பற்றிக் கொண்டது. இது நான் சொன்னது சிங்கப்பூர் சூழலில்.

இந்த மாதிரி இரசனை மாற்றம் நம்மூரில் மேல் மட்ட மக்களை வேண்டுமானால் மிக இலகுவாக தொற்றிக் கொள்ளலாம். ஆனால் சினிமா பார்க்கும் கூட்டம் மேல் மட்டத்தை விட கீழ்மட்ட மக்களுக்கு தான் ஆர்வம் அதிகம். கூட்டமும் அதிகம். அவர்களுக்கு வெகுஜன சினிமாவைத் தவிர வேறு மாற்று சினிமாவில் ஆர்வம் வருமென்பதே மிக கஷ்டம். நீங்கள் சொல்கிறப்படி பார்த்தால் இணையம், உலகளாவிய தமிழ் மக்களை உலகச் சினிமாவின் மூலம் ஒருங்கிணைப்பது என்ற கூற்றுப்படி மேல்மட்ட மக்களை முதலில் குறிவைப்பது என்பதை விளங்கிக் கொள்கிறேன். மேல் தட்டு மக்களை வேண்டுமானல் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் மிக இலகுவாக இரசனை மாற்றம் ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையிருக்கிறது.

குறுகிய கால திட்டமாக உலகச்சினிமாவை தமிழ் மக்களுக்கு இணையம் வழி அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் அவை ஒரிடத்தில் ஒருங்கிணைக்கப் பட வேண்டும். அதற்கு கட்டாயம் மாண்டீயின் கருத்துப்படி IMDB போன்ற வலைத்தளங்களின் கருத்துக்கள் போல விமர்சனங்களுடன் கூடிய தமிழ் உலகச்சினிமா இணைய கூட்டமைப்பு தேவைப்படுகிறது. எடுத்த உடனேயே இணையத்தில் காசுக்கு படங்களை இறக்கி பார்ப்பது என்று திட்டமிடுவதைத் தவிர, இந்த இணைய கூட்டமைப்பில் உலகப்படங்களின் விமர்சனம் கருத்து சொல்லுவதை தவிர, அந்தந்த ஊரில் எங்கெங்கு உலகச் சினிமாக்கள் டிவிடி/விசிடி வாடகைக்கு கிடைக்கும், எந்தந்த திரையரங்களில் உலகச்சினிமாக்கள் நடைபெறுகிறது, என்ன மாதிரியான ஃபிலிம் பெஸ்டிவல் அந்த ஊரில் எந்த மாதத்தில் எங்கு நடக்கிறது, உலகச் சினிமா ரசிகர்கள் சங்கம் போன்று ஏதாவது அந்த ஊரில் இருந்தால் அதைப் பற்றிய விவரங்களை கொடுக்கலாம். மக்களின் ஆதரவைப் பொறுத்து அடுத்த காயை, படங்களை டவுன்லோட் முறைக்கு நகர்த்தலாம். நீங்கள் சொல்லும் மல்டிபிளக்ஸ் எல்லாம் கொஞ்ச காலமாகும் என்பது என் கருத்து. முதலில் தேவைப்படுவது விழிப்புணர்வு.

இணையத்தை தவிரவும், உலக தமிழர்களைத் தவிரவும் நம்மூரில் கீழ் மற்றும் அடித்தட்டு மக்களின் இரசனையை மாற்ற ரொம்பவே கஷ்டப்படனும். உங்கள் பதிவில் சொன்னபடி கல்லூரிகளில் பிற மொழி/பிற நாட்டு சினிமாக்களை பார்க்க வைத்து, அதன் மூலம் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாம். ஆனால் இது லேசான காரியமாக தெரியவில்லை. அரசு,கல்வித் துறை என பலவும் இதைச் சார்ந்துள்ளது. எளிதில் சென்றடைய மாஸ் மீடியாக்கள் தான் முக்கியம். தமிழ் பத்திரிக்கைகளில் (குமுதம்,ஆனந்த விகடன், வாரமலர்) போன்றவைகள் தமிழ் சினிமா விமர்சனம் மட்டுமில்லாமல் உலகச் சினிமா விமர்ச்சனங்களையும் எப்போதாவது கொடுக்காமல், அடிக்கடி கொடுக்க வேண்டும். அது மிக முக்கியமென நான் நினைக்கிறேன். நீங்கள் பதிவில் சொன்னப்படி தனியார் தொலைக்காட்சிகளில் gap filler -களாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக அண்மை காலமாக சன் டிவியில் ஆங்கில படங்களை டப் செய்து போட்டார்கள். அதே போல் நல்ல பிற உலகப்படங்களையும் டப் செய்து போடலாம்(ஆனால் அதில் உள்ள லீகள் இஸ்யூக்கள் எனக்கு தெரியாது). நாம் என்ன தான் ஆங்கில சீமான்களாக இருந்தாலும் அடிமட்ட மக்களை சென்றடைய தமிழ் டப்பிங் பெரும் பங்காற்றுகிறது எனத் தெரிகிறது.

மக்களிடம் கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தவுடன் உலகச் சினிமாக்களை ஏன் டிவிடியில் தமிழ் சப்-டைட்டிலுடன் வாடகைக்கு விட முடியாது. நமக்கு ஆங்கிலம் போதுமென்றாலும், கீழ்மட்ட மக்களுக்கு ஆங்கிலம் எல்லாருக்கும் தெரியுமென சொல்ல முடியாதல்லவா? நான் டிவிடி சப்-டைட்டில் டெக்னாலஜியை இப்போது தான் டெக்னிகலாக கற்க ஆரம்பித்துள்ளேன். அதனால் தான் இந்த ஐடியாவும் :-)

அதே போல் உலகப்பட டிவிடி வாடகைக்கு விடும் போது வசனங்களை மட்டும் ஒரு சிறிய புத்தகமாக அச்சிட்டுத் தரலாம். அண்மையில் உணர்ந்ததை என் கேள்வியாக கடைசி பத்திகளில் தருகிறேன்.

மீண்டும் மேல் தட்டிற்கு வருகிறேன். நண்பர் ஈழநாதன் ஈழத்து குறும்படங்களை எழுதியும், விமர்ச்சித்தும் வருகிறார். அதே போல் எனக்கு தெரிந்து அருண் வைத்தியநாதன், அஜீவன் போன்றவர்கள் குறும்படங்களை எடுக்கிறார்கள். அந்தந்த இயக்குனர்கள் உதவியுடனும்,அனுமதியுடனும் இணையத்தில் இறக்கிக் கொள்ளும் வசதி மட்டுமல்லாமல் படங்களை டிவிடி/விசிடி படுத்தி அந்தந்த ஏரியாவில் உள்ள ஆர்வமுள்ள நண்பர்களுக்குள் ரவுண்ட்ஸ் விடலாம். அதே போல் பிறநாட்டிலுள்ள நண்பர்களுக்கும் நகல் எடுத்து அனுப்பலாம்.

என்னுள் சில கேள்விகள் இருக்கிறது.....

1. ஈரானிய படங்களைப் போல் வெறும் கையடக்க கேமிராவில் குறும்படமெடுத்து இணையத்தில் போட்டாலும் நம்மூரில் உள்ள சைபர் லா படி ஏதாவது பிரச்சனை வருமென நான் நினைக்கிறேன்.

2. பதிப்பகங்களில் ஏராளமான உலகச் சினிமா புத்தகங்களைப் பார்க்கிறேன். எடுத்துக்காட்டாக, யமுனா ராஜேந்திரனின் ஆப்பிரிக்க சினிமாக்கள், இன்னொருவர் எழுதிய ஈரானிய சினிமாக்கள் பிறகு இங்மார் பெர்க்மானின் "The seventh Seal" படத்தின் கதை வசனத்தை தமிழில் "ஏழாவது முத்திரை" பெயரில் தமிழினி வெளியிட்டுருந்தது. எனக்கு என்ன தெரியவேண்டுமென்பது என்னவென்றால், இந்த புத்தகங்கள் யாரை குறி வைத்து வருகின்றன? எத்தனை பிரதிகள் விற்பனையாகிறது?

விவாத போக்கில் மீண்டும் பின்னூட்டமிடலாம்.
 
அண்ணாச்சி, முந்தைய பின்னூட்டம் மற்றமொழி உலகச்சினிமா என்ற பார்வையில் எழுதிவிட்டேன். தமிழில் குறும்படம், விவாரண படம் போன்றவற்றை மறந்துவிட்டேன். நேரம் கிடைக்கும் போது விவரித்து பின்னூட்டம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
 
நாராயணன்!!!...நாம செவ்வாய் அன்று விவாதித்த "ரியல் லைஃப்" குறும்படத்திட்டத்தில் எதாவது முன்னேற்றம் உள்ளதா..????...இல்லை வட பழனி ஹோட்டல் மெளரியாவில் ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணலாமா..????
 
விஜய்,
வாங்க. வாங்க. என்னடா நம்மாளு ஒரேயடியா நம்மள போட்டு கிழிக்கிறாரேன்னு பார்த்தேன் ;-) பொறுமையா எழுதுங்க. காத்திருக்கிறேன்.
 
அரவிந்தன்,

மொளரியா-ல ரூம் போடத்தேவையில்லை. ஏற்கனவே நிறைய நடிகைகள் தங்கி இருப்பதால், ரெய்டு நடக்கும் அபாயங்களூண்டு. நீங்கள் சொன்ன கருவின் அடிப்படையில், இப்போது தான் யோசிக்கத் தொடங்கியிருக்கிறேன். இடையில் சரவணன் எடுத்துக் கொண்டிருக்கும் குறும்படத்தின் வேலைகளும் அவ்வப்போது தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த முறை சென்னையில் நீங்களிருக்கும்போது, முதல் ட்ராப்ட் ஸ்கிரிப்ட்டை காண்பிக்க முடியும் என்ற நம்பிக்கை யிருக்கிறது. சில முன்னேற்றங்கள் நடக்க உள்ளது. தனியாக எழுதுகிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]