Feb 4, 2005

மீனாவை மிஞ்சிய கலைஞர் (அ) நகர்வலம்: உதயம் திரையரங்கு

வீதியெங்கும் தோரணங்கள். கட்சிக் கொடிகள். சரிதான், ஏதோ கழக கண்மணிகள் ஏற்பாடு செஞ்சிருக்கற கூட்டம் போல அப்படின்னு நினைச்சிட்டு தான் அசோக் நகரிலிருந்து வந்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், மனசை ஒரு விசயம் லேசாக நெருடியது. இந்த மாதிரி, கூட்டம் கூட்டும்போதெல்லாம், சுவர் முழுக்க, "இளைய தளபதி ஸ்டாலின் அழைக்கிறார்" ,"டாக்டர் கலைஞர் அழைக்கிறார்" "தன்மான சிங்கம் XYZ அழைக்கிறார்" அப்படின்னு ஏதாவது இருக்கும். இங்க ஒண்ணுமேயில்லையேன்னு யோசிக்கிட்டே உதயம் திரையரங்கினைத் தொடும்போது தான் என் மரமண்டைக்கு உரைத்தது. இன்று, கலைஞர் கதை , வசனம் எழுதிய "கண்ணம்மா" பட துவக்கநாள். 'அட்றா சக்கை' என உதயம் திரையரங்கைப் பார்த்தால், முழுவதும் கலைஞர் மயம்.

நட்சத்திரம் பொறித்த, பிடித்த நடிகர் புகைப்படங்களை வைக்கும் ( "சீறும் புயல்" தனுஷ் ரசிகர் மன்றம், 37வது வட்டம். இவ்வண் தனுஷ் ராஜசேகர், கந்தசாமி, விருகை பாண்டியன், பீட்டர், தனராசு, மூர்த்தி, 'கறிக்கடை' முனீர், வேங்கை வரதன் மற்றும் அகில உலக தனுஷ் ரசிகர்கள்) ரசிகர்களை மிஞ்சிவிட்டார்கள் கழக உடன்பிறப்புகள். சாலையெங்கும் ஒரே கழகக் கொடிகள். இதில் "தி.நகர்" வட்ட திமுக தலைமை என்று, புவியியல் ரீதியான இடம்பிடித்தல் வேறு. ( தலவரே உங்க படத்துக்கு நம்ம தி.நகர் வட்டச்செயலாளர் தான் கைக்காசுப் போட்டு, முன்னாடி நின்னு எல்லா விசயத்தையும் செஞ்சாரு....அப்ப வர்ற அசெம்பிளி எலெக்ஷன்ல...ஹி...ஹி....நமக்கு ஒரு சீட்டு கொடுத்திங்கன்னா....ஹி....ஹி...இத விட பத்து மடங்கு செலவு பண்ணி, தூள் பண்ணிடுமோம்...தலைவரே!....ஹி...ஹி...கொஞ்சம் பாத்துக்குங்க) சாம்பிளுக்கு ஒன்று.

'உலக காவியம்' படைத்த கலைஞரின் 'கண்ணம்மா' பார்க்க வருகை தரும் ரசிகர்களை வாழ்த்தி, வரவேற்கிறோம் ( அப்படிப் போடு அரிவாளை!!)

இந்தப்படத்தின் மூலம் வந்த வருவாயை கலைஞர் முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்து விட்டார். ஆனால், பணம் போட்ட தயாரிப்பாளருக்கு வருவாய் வருமா என்று இனிமேல்தான் தெரியும். பெரிய கண்களோடு கிறங்கடிக்கும் மீனா பாவம். போனால் போனதென்று கொஞ்சமாய் இடம்விட்டு உள்ளே ஒரு போஸ்டரில் சிரித்துக் கொண்டிருந்தார். ஜெமினி மேம்பாலத்தில் உள்ள போஸ்டர் மட்டும் விதிவிலக்கு.

யார் சொன்னார்கள், திராவிட கட்சிகள் தமிழக மக்களின் வாழ்வில் விளக்கேற்றவில்லை என. சாலையெங்கும் ஒரே டிஜிட்டல் போஸ்டர்கள். பிளாஸ்டிக் கொடிகள். டாடா சுமோவில் வந்து சாக்லெட் தரும் கழக உடன்பிறப்புகள். தமிழர்கள் தொழில்நுட்பத்தில் உயர்ந்து விட்டார்கள். வண்ணமயமாகிவிட்டது சாலை. இவ்ளோவும் வந்தது யாராலே?

அத விட காமெடியான விசயம், மெட்டிஒலி "போஸ்" தான் இந்தப்படத்தின் கதாநாயகன் ( யார் போஸ்ஸா? கேள்வி கேட்டிங்க...அவ்வளதான்..."நீயெல்லாம் ஒரு தமிழனா ? சன் டிவி பார்க்காம போயஸ் கார்டன்ல் இருப்பாங்க...தமிழன் இருப்பானா ? அப்படி தெரியலைன்னா நீ தமிழனே கிடையாது. உனக்கு மோட்சமே கிடைக்காது. உங்களுக்கெல்லாம் *********** நல்லா வருது வாயில" என தமிழ்நாட்டுத் தாய்க்குலங்களின் சாபத்திற்கு உள்ளாவீர்கள்) சுவர் முழுக்க சின்னதாய் "அகில இந்திய போஸ் வெங்கட் ரசிகர் மன்றம்" என்ற சுவரொட்டி வேறு. இவர் எப்ப, அகில இந்திய ரீதியில் பெரியாளானாருன்னு ஒரே யோசனை. ஒருவேளை, ஏதாவது தேசிய கட்சில சேர்ந்திருப்பாரோன்ற சிந்தனை வேற. போஸ்ஸு, உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? ஏதாவது தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகலாம்ன்றா மாதிரி நாற்காலி கனவு ஏதாவது வந்துதா...வந்ததுன்னா சொல்லிடுங்க...உங்களுக்கும் கலைஞர் இதயத்துல ஒரு இடம் இருக்கும். ஒரே தமாசுதான் போங்க!!

இனி நடந்தாலும் நடக்கக்கூடியது.
ஒருவேளை, கலைஞரின் கழக உடன்பிறப்புகள் 50 நாட்கள் பார்த்தால், படம் தேறும் என்று கூட கணக்குப் போட்டிருக்கலாம். அப்படி ஏதாவது நடக்குமானால், விஜய்க்கு பின்னோடும் ஒரு கூட்டம் கலைஞர் பின்னாலும் வரலாம் (எல்லாம் மினிமம் கியாரண்டி பண்ற வேலை!!)

கலைஞர் பொதுக்குழுவைக் கூட்டி, ஒலக காவியத்தினைப் பற்றி வகுப்பெடுக்கலாம்

கழக உறுப்பினரட்டை உள்ளவர்கள் அனைவரும் இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்தலாம்.

உடன்பிறப்பே, என முரசொலியில் கடிதமெழுதலாம்.

சன் டிவியின் டாப் 10ல் நிரந்தரமான நம்பர் 1 படமாக 10 வாரங்கள் வரலாம்.

கலஞர் எளுதுன வசனம் பேசும்போது உடம்பெல்லாம் புல்லர்ச்சிப் போச்சி என்று, மீனா தமிழாங்கிலத்தில் கே டிவியில் பேட்டி கொடுக்கலாம்.
ஆயிரம் கலாய்த்தாலும், பராசக்தி எழுதின கலைஞர், Palm top-ம் செல்லுமாய் அலையும் தலைமுறைக்கு எப்படி வசனம் எழுதியிருக்கிறார் என்பதற்காகவாவது ஒரு முறை படம் பார்க்கவேண்டும்.

கடைச்செருகல்:

பதிந்து முடிந்தபின் சாவகாசமாய், குமுதத்தை மேய்ந்துக் கொண்டிருந்தபோது, குமுதம் ரிப்போர்ட்டரில் மாட்டியது இது. சத்தியமாக என் பதிவு இவற்றையெல்லாம் வாசிக்கும் முன்னரே பதிந்தது என்று உளமார, மனமார, ரகசிய காப்பு பிரமாணம் ஏதும் எடுக்காமலேயே கூறுகிறேன்.
‘‘உடன்பிறப்புகளின் அடுத்த புலம்பல் இது. ‘கண்ணம்மா’ படத் தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியால் சோர்ந்து போய்விட, படம் நின்று போனால் அவப்பெயர் என்று கருதி, தண்டராம்பட்டு வேலுவைத் தயாரிப்பாளராக்கி படத்தை முடித்து விட்டார்களாம். படத்தின் விநியோக உரிமையும் முக்கியமாக வசதியான கட்சிக்காரர்கள் தலையிலேயே கட்டப்பட்டுவிட்டதாம். அவர்களும் தலைமையுடன் நெருக்கமான உறவுக்கு இதுதான் வழி என்று சம்மதித்துவிட்டார்களாம். தமிழ் நாட்டின் முக்கியமான பல தியேட்டர் ஓனர்கள் ‘கண்ணம்மா’வைத் திரையிட விரும்பவில்லையாம். சென்னையிலும் முக்கியமான மா.செ.ஒருவர்தான் படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்..’’

‘‘ஓஹோ!’’

‘‘சென்னையில் ஸ்பெஷல் ஷோ நடத்த 300, 500, 1000 ரூபாய்களில் டிக்கெட் விற்கப்படுகிறதாம். அதுவும் அறிவாலயத்திலேயே டிக்கெட் விற்பனையாம். மாநகர தி.மு.க. நிர்வாகிகள்.. பாவம்.. புலம்பிக் கொண்டே டிக்கெட்டுளை வாங்கினார்களாம். ‘உண்மை உழைப்புக்கு மரியாதை இல்லை; வசதியானவர்கள்தான் வாழ முடிகிறது’ எனப் புலம்புகின்றனர் உடன்பிறப்புக்கள்..’’
ஆக ஒரு கற்பனை உண்மையாகிறது. பேஜாரு மக்கா நீ!! :-)


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]