Feb 6, 2005

தமிழ் இணைய திரையரங்கம் - சாத்தியமா?

இரண்டு வாரங்களாக மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் விசயமிது. ஒருவாறாக, என் எண்ணங்களை ஒருங்கிணைத்து இதனை தொகுத்திருக்கிறேன். திரைப்படங்கள், தமிழர்களாகிய நம் வாழ்வில் ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்துவிட்டது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை.வலைப்பதிவில் பதியும் நிறைய சக பதிவாளர்கள், திரைப்படங்கள் (உலக/உள்ளுர்/வேற்றுமொழி) பற்றிய பதிவுகளை முன் வைக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கு திரையிடப்படும் படங்களையும், என்னைப் போல் சென்னையில்/தமிழகத்தில் உள்ளவர்கள் இங்கு திரையிடப்படும் படங்களைப் பற்றிய பதிவுகளையும் பதிகிறோம்.

சில மாதங்களுக்கு முன் யாருடைய பதிவிலோ படித்தது. குறும்படங்கள் அல்லது மாற்று திரைப்படங்கள் ஏன் மக்களை சென்று அடையவில்லை? என்னளவில், அதற்கு மிக முக்கியமான காரணம் இரண்டு.

1. மாற்றுசினிமாவை மிக அதிக அளவில் பார்க்கக்கூடிய பார்வையாளர்களின்மை
2. குறும்படங்கள்/மாற்று சினிமாவை சந்தைப் படுத்த இயலாமை அல்லது அதற்கான ஒரு சந்தையில்லாமை.


இதனை சற்றே விரிவாகப் பார்க்கலாம். தமிழ்பாம்பு என் பதிவின் பின்னூட்டமாக இட்ட ஒரு விசயத்திலிருந்து இதனை தொடங்குவோம் "உண்மையில், எங்கெங்கே படம்பார்க்க சென்னையில் வாய்ப்புக்கள் கிடைக்கிறது என்பதே பலருக்குத் தெரியாது என்பதே நிஜம். ரஷ்யக் கலாச்சார மையம், ஃபிலிம் சொசைட்டி போன்றவை குறித்த தகவல்கள் பரவலாகத் தெரியவந்தாலே பெரும்பாலானோருக்கு உபயோகமாயிருக்கும்...மூன்று வருடங்கள் தண்டமாகச் சுற்றியபின்தான் அவைகளுக்கெல்லாம் நுழையத்தொடங்கியது...." [ பார்க்க: நன்றி: தமிழ்பாம்பு]

நமது பிரச்சனை இங்கிருந்து தான் துவங்குகிறது. மாற்று சினிமாவை எங்கு பார்ப்பது என்பது பற்றிய குறைந்தபட்ச தகவல்கள் கூட நிறைய பேருக்கு தெரியாது. அப்படியிருக்கையில் மாற்றுசினிமாவிற்கான பார்வையாளர்கள் எப்படி வருவார்கள்? பார்வையாளர்கள் குறைவு என்னும் போது அதன் வணிகத்தன்மை கேள்விகுறியாகிறது. வணிகத்தன்மை மிகப்பெரிய கேள்விகுறியாய் முன் நிற்கும்போது, எவ்வளவு பேர் அதில் பணம் போட முன் வருவார்கள் ? அப்படியே பணம் போட்டு படமெடுத்தாலும், அதனை எப்படி சந்தைப் படுத்துவார்கள் ? ஆக, இது ஒரு vicious circle.

இதன் விரிவாக உள்ள இன்னொரு பிரச்சினை, உலகெங்கிலும் எடுக்கப்படுகின்ற தமிழ் படங்கள் (குறும்படங்கள்/ஆவணப்படங்கள்) ? சென்னையில் உள்ளவர்கள், லண்டனில் எடுக்கப்படும் படங்களைப் பார்க்க இயலாது, அமெரிக்காவில் உள்ளவர்கள் சென்னையில் திரையிடப்படும் படங்களை பார்வையிட இயலாது. ஆக, யார் எதைப் பற்றி, எந்தக் கருத்தினை உள்ளடக்கி படம் எடுக்கிறார்கள் என்று தெரியவே பல வருடங்களாகிறது. இதனை தாண்டி, அந்தப் படங்களை பார்க்கும் பாக்கியம் பெறுபவர்கள் மிகச் சிலரே.

இவ்விதமான பிரச்சனைகளைத் தாண்டி வந்தால், படங்களை வணிகரீதியில் அனுகுவது என்பது அடுத்த பிரச்சனை. பணம் போட்டு படம்மெடுப்பவர்கள் என்னத்தான், விருதுகளுக்காகவோ, ஆத்ம திருப்திக்காகவோ படம் எடுத்தாலும், போட்ட முதலை எப்படி திருப்பிப் பெற போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி. வெளிநாடுகளிலுள்ள இயக்குநர்களைப் பற்றிய என் அறிதல்கள் குறைவாய் இருந்தாலும், சென்னையிலிருந்து, தன் பணத்தைப் போட்டு படம்மெடுக்கும் எத்தனையோ இயக்குநர்கள், பல்வேறு கஷ்டங்களுக்கிடையே இதனை செய்கிறார்கள். ஆயினும், முதல் வாராது. படத்தினை பிலிம்சேம்பரிலோ அல்லது ரஷ்ய கலாச்சார மையத்திலோ இலவசமாக, தெரிந்தவர்களுக்கு சொல்லி அனுப்பி, கூட்டம் சேர்த்து காண்பிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். வெளிநாடுகளிலுள்ள இயக்குநர்களும் இதில் விதிவிலக்கல்ல என்றே தோன்றுகிறது.

இதனையும் தாண்டி படமெடுத்து கையில் வைத்திருந்தாலும், அதனை சரியாக சந்தைப் படுத்த இயலாமை அல்லது தெரியாமை. சும்மா, படமெடுத்து என்னுடைய கணினியில் என் வீட்டுக்கு வருபவர்களுக்கு நானும் திரைப்பட இயக்குநன் என்று ஜம்பமடித்து, மார்தட்டிக் கொள்ள வேண்டுமானால் இது உதவும்.

இன்றைய தமிழ்சூழலில் குறும்படங்கள் / விவரணப்படங்கள் / ஆவணப்படங்கள் / மாற்றுசினிமா களின் நிலை இப்படித்தான் உள்ளது. விதிவிலக்காக, சில படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படலாம் ("நாக் அவுட்", "ஊருக்கு நூரு பேர்", "ஓருத்தி" )

உண்மையிலேயே குறும்படங்களுக்கு சந்தையில்லையா ? பார்வையாளர்கள் இல்லையா ? என்று கேட்டால் அது ஒரு தவறான பார்வை என்பது தான் என் பதில். நான் இணையத்தில் சந்தித்ததும், சென்னையில் சந்திக்கும் நிறைய நபர்கள் இத்தகைய படங்களை பார்க்கக்கூடிய ஆர்வம் உள்ளவர்கள். இந்த படங்களுக்காக ஒரு சந்தை இருக்கிறது. பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இங்கே எல்லாமே இருக்கிறது. படமெடுக்கக்கூடிய இயக்குநர்கள், சந்தை, விரும்பிப் பார்க்கக்கூடிய பார்வையாளர்கள், உலகமெங்கிலும் பரந்து விரிந்துகிடக்கும் தமிழினம், படங்களை காசு கொடுத்து பார்க்கும் நிலையில் உள்ள பார்வையாளர்கள் (Purchasing power) என ஒரு சந்தை பொருளாதாரத்தை முன்னிருந்தும் அளவிற்கு எல்லாம் இருந்தும், நம்மால் இதனை சந்தைப் படுத்த இயலவில்லை என்னும்போது, அதன் முக்கிய பிரச்சனையாக இருப்பது distribution.

என்னுடைய கேள்வி இங்கிருந்து தான் தொடங்குகிறது. பார்வையாளர்கள் உலகமுழுக்க இருக்கிறார்கள். இணையம் உலக முழுக்க பரவியிருக்கிறது. அகலப்பாட்டை(broadband) இணைப்புகள் உலகமெங்கிலும் செயல்ரீதியாக வரவேற்பினைப் பெற்றுள்ளது. படமெடுக்கக் கூடிய கருவிகளின் விலை வெகுவே குறைந்துள்ளது (ஆப்பிளின் தளத்தில் US$1300க்குள் உங்களால் ஒரு படத்தை எடுத்து, தொகுத்து, இசைக்கோர்த்து, க்ராபிக்ஸ் விசயங்கள் சேர்த்து, திரையில் திரையிடக்கூடிய பார்மெட்டில் தரக்கூடிய மென்பொருள்கள் வந்துவிட்டன. இன்னொரு பக்கம், செல்பேசிகளிலியே சலனப்படங்கள் பதிவு செய்யக்கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கருவிகள், மென்பொருட்கள் பற்றி தனியாக என் பதிவில், இந்த முயற்சிக்கு கிடைக்கும் ஆதரவினைப் பொறுத்து பதிகிறேன்) ஆக, மிகக் குறைந்த செலவில் தரமான படங்களை கொஞ்சம் விசயமும், கொஞ்சம் கற்பனைவளமும் உள்ளவர்கள் எடுக்கும் சாத்தியங்கள் இன்றளவில் ஏராளம்.

இணையம் மூலமாக இதனை ஒரு மிகப்பெரிய சந்தையாக உருவாக்க இயலும் என்பது, ஏற்கனவே இதைப்போலவே உள்ள வணீக ரீதியில் வெற்றிக்கண்டுள்ள தளங்களை கொண்டு அறிய இயலும்.(iFilm, ShockWave, IMDB ) ஒரு இணையதளத்தில் நம்மால் ஒரு திரையரங்கை கட்ட இயலும். இதனை திரையரங்காக மட்டும் பார்க்காமல், மக்கள் சினிமா வாக பாருங்கள். பல்லடுக்குகளைப் (Multiplex) போல், இந்த இணைய தளம் பல்வேறு படங்களை திரையிடலாம். இந்த இணையதளத்தின் மூலமாக மாற்று சினிமாவிற்கான நிறைய,உருப்படியான விசயங்களை உருவாக்க இயலும்.

உதாரணத்திற்கு, பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டி, படங்களைப் பார்க்க செய்யலாம்.ஒரு படத்தை திரையிட்டு, எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை இயக்குநர்க்கு பகிர்ந்தளிக்கலாம். மேலும், படங்களின், விசிடி, டிவிடிகளை ஒரு உரலாக குடுத்து, அதன் மூலம் குறிப்பிட்ட படத்தின் வருவாய்க்கு வழிசெய்யலாம். கேட்லாக் விற்பனைகள் போல, சிறந்த 10-20 குறும்படங்களை ஒரே டிவிடியில் பதிந்து விற்கலாம் (இதேப் போல சில டிவிடிகளை நான் பார்த்திருக்கிறேன்). நடைமுறை சிக்கல்கள் சில இருந்தாலும், இதனை அடிப்படை கட்டமைப்பாக வைத்துக்கொண்டு (framework) பல்வேறு கோணங்களில் இதனைப் பார்த்து செப்பனிட்டு ஒரு வணிகரீதியிலான முன்மாதிரியை உண்டாக்கலாம் (Business model)

நானறிந்த வரையில், இதன் மூலம் கிடைக்கும் பலன்கள்

குறும்பட இயக்குநர்களுக்கு
1. முதலில் இந்த சென்சார்/தணிக்கை சமாச்சாரங்களிருந்து விடுதலை கிடைக்கும். சில குறிப்பிட்ட மணித்துளிகளுக்கு மேல் எடுக்கப்படும் படங்கள் இந்தியாவில் தணிக்கைக்கு உட்பட்டவை. (அனுபம் கெர்ரின் பதவியிறக்கம், தாமிரபரணி குறும்படம், Final Solution என்கிற கோத்ரா ரயிலெறிப்பினை பற்றி பேசும் படம் போன்றவைகள் ஞாபகத்திற்கு வருகிறதா?)
2. நிறைய மக்களுக்கு படங்களை எடுத்து செல்ல இயலும்.
3. வணிக ரீதியிலான விசாரனைகள் முன்மொழியப் படலாம் (இந்தியா / அமெரிக்கா / லண்டன் -லில் இந்த படத்தை காண்பிக்க இயலுமா, இந்த படத்தின் விசிடி,டிவிடி எங்கு கிடைக்கும்)
4. குறும்படத்தையை பெரிய படமாகவோ, வேற்றுமொழி படமாகவோ தயாரிக்கும் உரிமை ( காப்பியடிப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது)
5. இதுவே வணிக ரீதியிலான ஒரு படத்தை இயக்க வழிகோலக்கூடிய படமாக (Demo Reel)
6. பார்வையாளர்களின் பிரதிபலிப்புகளை, கேள்விகளை தெரிந்து கொண்டு அதன்மூலம் ஒரு பரிவர்த்தனை வாயிலான (dialogues / interactive discussions) பங்களிப்பை உருவாக்குதல்
பார்வையாளர்களுக்கு
1. உலகெங்கிலும் எடுக்கப்படுகிற படங்களை பார்க்க இயலுதல்
2. எவ்வித ஊடகங்களின் துணையுமில்லாமல், படங்களை பார்ப்பதற்கான சுதந்திரம்
3. மாற்றுசினிமாவின் வீச்சினை புரிந்து கொள்ளவும், ஒவ்வொரு சமூகத்தில் நடக்கும் பல்வேறுவிதமான அனுபவங்களை உள்ளடக்கிய அறிதல்
4. ஒற்றை சாளரத்தின் வாயிலாக, பார்வையாளராகவும், இயக்குநனவாகவும் இருக்கக்கூடிய சுதந்திரம்
இணைய தளத்திற்கு
1. ஒரு மாற்றுசினிமா மின் வணிக தளமாக அணுகி வணிக ரீதியில் நிலைநிறுத்தலாம்
2. உதாரணத்தில் சொல்லியபடி, இன்று, பதிப்பகங்கள் எப்படி, பல்வேறு எழுத்தாளர்களை ஒன்றடக்கி பதிப்பித்து புத்தகங்களை விற்கிறதோ, அதேப்போல ஒரு 5-10 படங்கள் உள்ளடக்கிய பட டிவிடிகளை விற்கலாம்.
3. சிறு,சிறு டிரையலர்களை கொடுக்கசொல்லி இயக்குநர்களை வற்புறுத்துவதன் மூலம், இத்னை உலகின் பல்வேறு இடங்களிலுமுள்ள செல்லிடைப்பேசி நிறுவனங்களில்(Mobile Networks)விற்று பொருளிட்டலாம்.
4. ஒரு சமூகத்தின் வெளீப்பாடாக இந்த தளத்தினை (Ethinical Branding)முன்னிறுத்தி அதன்மூலம் அந்தந்த நாட்டு நுகர்வோர் நிறுவனங்களின் விளம்பரங்களையும்,உதவியையும் பெறலாம் (உதா. Raaga, BMW Films )
இப்படி பல்வேறு விதமான விசயங்களை இதன் மூலம் முன்னெடுத்து செல்லலாம். இதனை தாண்டி, வணிக சினிமாவிற்கும் கூட இந்த தளம் பல்வேறுவிதங்களில் பயன்படலாம். மேலும் இதன்மூலம், புவியியல் ரீதியிலான கோடுகளைத் தாண்டி, ஒரு முழுமையான பார்வையை பார்வையாளனுக்கு தர இயலும். தணிக்கை விசயத்தில் உள்ள சுதந்திரம்,மாற்று சினிமாவின் மிக முக்கியமான கரு. கட்டமைக்கப்பட்ட இயல்புகளிலிருந்து, விலகி, சமூகத்தை,சமூக வெளியை பார்த்தல் போன்ற பல்வேறு தளங்களில் இத்தகைய ஒரு முயற்சி, அடுத்த தலைமுறைக்கு மிக முக்கியமான ஆதாரமாக அமையும்.

இதற்கு உண்டாகும் செலவினை பகிர்ந்து கொள்ளலாம் (நண்பர் முகுந்தராஜின் ஈ-கலப்பைக்கான கீமென உரிமம் வாங்கிய நிகழ்வினை நினைவு கூறுங்கள்) வியாபார ரீதியிலான முன்னெடுத்து செல்லுதலை,பத்ரி, மீனாக்ஸ் மற்றும் பிற இணைய தளத்தின் மூலம் வணிகம் செய்பவர்கள் உற்று நோக்கலாம். காசி, சுரதா போன்றவர்கள் தொழில்நுட்ப ரீதியிலான விசயங்களை பார்வைமிடலாம். நான் என்னளவில் என் முழு பங்களிப்பினை (வணிக/தொழில்நுட்ப) வழங்க தயாராக இருக்கிறேன். படங்களயும், பட விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதி வரும் தமிழ்பாம்பு, விஜய், ரோசாவசந்த், கறுப்பி, அருண் வைத்யநாதன் மற்றும் எனக்கு தெரியாத பல சக பதிவாளர்கள் இதனை முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சும்மா, வணிகபடங்களை குறை சொல்லுவதை தவிர்த்து, மாற்று சினிமாவிற்கான ஒரு சந்தையை உருவாக்காமல், ஜல்லியடித்துக்கொண்டு, வீணே பேசிக் கொண்டிருப்பதால் எவ்விதமான பயனும் விளையப்போவதில்லை. இணைய இதழ்கள் என்று கூறப்பட்ட இலக்கிய/சமூக/அறிவியல் இதழ்கள், இன்று இணையத்தில் இருந்து, தமிழிலக்கியத்தில் ஒரு தீவிரமான பங்களிப்பை உண்டாக்கி வருகின்றன. இதேப் போன்றதொரு மாறுதலை தமிழ் திரைப்படங்களுக்கும் இதனை முன்வைத்து உண்டாக்க இயலும். இதனை முன்வைத்து, தமிழ் மாற்றுசினிமாவிற்கான ஒரு முழுமையான அதிகாரத்தினை உருவாக்கமுடியும் என்பதும், பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ் இயக்குநர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம் பார்வையினை உலக அரங்கில் நிலைநிறுத்த இயலும். இன்னமும் நிறைய விசயங்களையும், அனுகூலங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

நான் தயார். விவாதிக்க நீங்கள் தயாரா ?

ஒரு வேண்டுகோள்: இதுவரை இந்த பதிவினை படித்து வந்த நீங்கள் இந்த பதிவிற்கு ஒரு பின்னூட்டத்தையும், வாக்கினையும் அளிக்குமாறு கோருகிறேன். இது ஏதோ நான் என் பதிவினை முன்னெடுத்து செல்வதற்காக அல்ல. பரவலாக நிறைய வாசகர்கள் இதனை பற்றி தெரிந்துக்கொண்டு ஒரு ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கி விவாதிக்கவே. அதற்கு முதலில், இந்த பதிவு இருக்கிறது என்பது தெரியவேண்டும். அதற்காகவே இந்த வேண்டுகோள்.
----------------------------------------------------------
உலகளாவிய இணைய திரைப்படங்கள் பற்றிய பார்வை
உரல் 1 | உரல் 2 | உரல் 3 | உரல் 4 | உரல் 5

Comments:
'பின்னூட்டம் தேவை' என்று கேட்டு கொண்டதற்காக இந்த பின்னூட்டம். மீதி பிறகு வந்து எழுதுகிறேன். ஒரு வாக்கும் அளித்திருக்கிறேன். நல்ல முயற்சி. உருப்பட்டால் நானும் ஏதாவது செய்கிறேன்.
 
குறும்படம் ( short film), விவரணப் படம் ( documentary ), மாற்று சினிமா ( parallel cinema) வகை திரைப்படங்கள், வெகுசன சினிமா ( mainstream) அளவுக்கு அறியப்படவில்லை/ விரும்பப்படுவதில்லை என்பது முற்றிலும் உண்மை. அதற்கு நம் தமிழ் கலாசாச் சூழ்நிலையைத் தான் குறை சொல்ல வேண்டும். மாற்றான் மனைவி மீது காதல் கொள்ளுவது தவறு , அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று போன்ற எளிய நல்லொழுக்கம் கூட நமக்கு காப்பிய , கதை வடிவத்தில் தான் சொல்லப்பட்டது. நம் ஊரில் திரைப்படங்கள் எடுக்கத் துவங்கிய 1900 களில் , காப்பியங்களும் புராணங்களும் தான், திரைப்படங்களை பெருமளவில் ஆக்கிரமித்தன. அந்தக் காலத்திலேயே குறும்படங்களும், விவரணப்படங்களும் இருந்தன என்றாலும், இவை 'கதை சொல்லும் படங்களுக்கு' ஈடாக பரவலாகவில்லை. மௌனப்படங்களுக்குப் பிறகு வந்த டாக்கீ யுகத்திலும், காப்பியங்களில் இருந்து கிளைத்த உபகதைகள் தான் சினிமாவாகத் தயாரிக்கப்பட்டன. மேடை நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு இறக்குமதியான பல கலைஞர்கள், மேடைநாடகத்தையே, சினிமாவாக எடுத்தனர். இரண்டிற்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரியவில்லை. புகைப்படக் கருவி தரும் சாத்தியக்கூறுகளை முயற்சி செய்து பார்க்காமல், காமிராவை, ஒரே கோணத்தில் வைத்து படமாக்கினார்கள். திராவிட இயக்கம், சினிமாவுக்குள் நுழைந்த போது, சினிமா இளங்கோவன், டி.வி.சாரி, மு.கருணாநிதி போன்ற வசனகர்த்தாக்கள் கைக்கு வந்தது. ( மு.கருணாநிதி வசனம் எழுதிய மந்திரிகுமாரி, மனோன்மணீயம் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்). திரைப்படம் என்ற கலை வடிவத்தில், ஒரு கோர்வையான கதையை எதிர்பார்ப்பது , நம்முடைய நூற்றாண்டு கால மரபு. காட்சிப்படமங்களையும் குறியீடுகள் மூலமாக உணர்த்தும் மாற்று சினிமாவும், மற்ற வகைத் திரைப்படங்களும் பரவலாக ரசிக்கப்படாமல் போனதற்கு இவையும் ஒரு காரணம்.

மாற்று சினிமா/விவரணப்படங்கள் பார்க்க ஆளில்லை. ஆனால், எடுக்கவாவது ஆளிருக்கிறார்கள என்றால், இருக்கிறார்கள். வெகு குறைச்சலான அளவில். மௌனப்பட யுகத்திலேயே, குறும்படங்களும் விவரணப்படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சினிமா வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றார். அவரே, "1937இல் துவங்கி, இரண்டரை ஆண்டுகள் உழைத்து, பல நாடுகள் பயணம் செய்து காந்தி பற்றிய திரைக்காட்சிகளை தொகுத்தும், பல காட்சிகளைப் படமாக்கியும், ( ஏ.கே) செட்டியார் தயாரித்த " மகாத்மா காந்தி ' என்ற ஆவணப்படம் 1940 இல் வெளியிடப்பட்டது, தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வு" என்றும் வேறு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் . இந்தியாவின் அதிசயங்கள் பலவற்ற்றை காமிராவால் சுட்டு, அயல்நாட்டு international newsreel corp போன்ற திரைப்படக் கம்பெனிகளுக்கு விற்று, ஒரு அடிக்கு ஒரு டாலர் என்று சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். நம் விவரணப் படங்களுக்கு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மாற்று சினிமாவும் அதைப்ப் போலத்தான். லே மிசரபிள் என்ற ருஷ்ய நாலைத் தமிழ்ப்படுத்தி எடுத்த கே.ராம்நாத்தின் ஏழைபடும் பாடு, அவன் அமரன், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், என்று மாற்று சினிமா இயக்கம் வெகுகாலம் முன்பே துவங்கி விட்டது, அதிலே பணக்கவ்ர்ச்சி இல்லாததால், அந்த மாற்று சினிமா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, திரை முக்கியஸ்தர்கள் தவறிவிட்டனர். என்றாலும், தமிழ் திரைப்படங்களின் பிந்தைய பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் 1970களில் இறுதியில் தமிழில் பல நல்ல மாற்று சினிமா முயற்சிகள் தொடங்கப்பட்டன. ஏவிஎம் என்ற பகாசுர நிறுவனம், 1981 இல், திரைப்பட வர்த்தகத்தின் சமன்பாட்டை மாற்றி எழுதியது. மாற்று சினிமாவுக்கு என்று தனியாக ஒரு வருவாய் மாதிரி ( revenue model) இருந்தால், சூழ்நிலை மாறும். எடுப்பதற்கு திறமையான ஆசாமிகள் பலர் இருக்கின்றனர்.

சரி, மாற்று திரைப்படங்களின் சந்தையைப் பெருக்க முடியுமா? முடியும். மார்க்கெடிங் ஜித்தர்களின் உதவி கொண்டு, ஒரு நல்ல மாற்று சினிமாவை, மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். ஆனால், பிரச்சனை அதல்ல. ரசனை மாற்றம் தான், மாற்று சினிமா பரவலாக உள்ள வழி. ரசனை மாற்றம் ஏற்படுத்த முடியுமா என்பது தனிக் கேள்வி. என்னைப் போன்ற ஒரு சராசரி வாசகன், குமுதத்தில் இருந்து இலக்கியப் பயணத்தைத் துவங்கி, காலச்சுவடு, உயிர்மையில் வந்து நிற்கமுடியும் என்றால், சினிமாவின் சராசரி ரசிகனும், தன்னுடைய ரசனையை மேம்படுத்திக் கொள்ள இயலும். முன்னவருக்கு, இலக்கியத்தை பரிச்சயம் செய்யும் இணக்கமான நண்பர்கள் தேவைப்பகிறார்கள், பின்னவருக்கும் அதே போல, நல்ல சினிமாவை, அறிமுகப்படுத்தும் ஒரு நண்பர் குழு தேவைப்படுகின்றது. இலக்கியமோ சினிமாவோ, அங்கே ஆர்வலனின் தேடல் முக்கியம். அத்தேடல் இருந்தால், நல்ல சினிமாவைக் கண்டடையலாம்.
 
நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன் பிரகாஷ். அதே சம்யத்தில் சமீப காலங்களில் எவ்வளவு குறும்படங்கள் ஆக்கத்துடன் வந்திருக்கின்றன என்பதையும் கணக்கிலெடுக்கவேண்டியதிருக்கிறது. சற்றே, பிலிம் சேம்பர் வந்து பாருங்கள். கண்களில் கனவோடும்,கையில் சிகரெட்டோடும், ஜீன்ஸ் போட்ட இளைஞ்ர்/ஞிகளை பாருங்கள். உலக சினிமாவை எடுக்கும் நபர்களை சினிமாபேரடைசோவிலும், டிக் டாக்கிலும் கணக்கிலெடுங்கள். அல்லயன்ஸ் பிரான்சே, மாக்ஸ் முல்லர் பவன், ரஷ்ய கலாச்சார மய்யத்தை சுற்றி வரும் கூட்டத்தினை பாருங்கள். எவ்வளவு கல்லூரிகளில் Visual Communication என்கிற இளங்கலை படிப்பு இருப்பதையும், அதை கற்கும் மாணவர்களையும் யோசித்துப் பாருங்கள். மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

லீனா மணிமேகலையின் "மாத்தம்மா", ஆர்.வி.ரமணியின் "சு.ரா பற்றிய ஆவணப்படம்", அம்ஷன்குமாரின் "ஒருத்தி" வசந்தின் "தக்கையின் மீது நான்கு கண்கள்" என விரிந்து கொண்டே போகிறது. ரசனைமாற்றம் என்பது ஒரு வழி. ஆனாலும், அதையே இன்னமும் எவ்வளவு நாட்கள் சொல்லிக்கொண்டு ஜல்லியடிப்போம். ஆகவே இதற்கு மாற்றாக ஒரு சந்தையை உருவாக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது.

மேலும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழகத்திலிருந்து வேலைக்காக வெளிநாடு சென்றவர்களும், பரம்பரை பரம்பரையாக, வெளிநாடுகளிலேயே தங்கி விட்டவர்களும், ஆங்காங்கே தங்கள் கதைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. மேலும், நீங்கள் உங்கள் பதிவிலிட்டிருந்த ஜெ.மோகனின் பதிவிலிருந்தே ஒரு மாற்று ஊடகத்தை (இணையம்) ஒரு தலைமுறை சார்ந்தவர்கள் அல்லது ஒரு துறையை சார்ந்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களால், முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த இயலாது, ஆனால், முனங்கிக் கொண்டு இருக்க முடியும்.

அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வேலையாகாது. இன்று வலைப்பதியும் எவ்வளவு பேர்கள் தொழில்நுட்பத்துறையை சார்ந்தவர்கள். அவர்கள், மாற்று ஊடகங்களை, இலக்கியங்களை, சினிமாக்களைப் பற்றி பேசும்போது, கண்ணுக்குத் தெரியாமல், ஒரு சந்தை உருவாகிக்கொண்டிருக்கிறது. இதனை முறைபடுத்தலும், ஒருங்கிணைத்தலும், பயன்படுத்திக் கொள்ளுதலும், காலத்தின் கட்டாயம். இன்று இதனை நாம் செய்யாவிட்டால், வேறெவரோ செய்துவிட்டு போகப்போகிறார்கள். என் கனவு, இப்படி ஒரு தளத்தை முன்னிருத்தலின் மூலம், வணிக சினிமாவிற்கான மாற்று சினிமாவை பரவலாக்க செய்யலாம். ரசனை இல்லாமை என்ற ஒற்றை குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு இனிமேலும், கேமராவைப் பார்த்து வசனம் பேசிட்டு இருக்கும் ஹீரோக்களை பார்த்து சகித்துக் கொள்ள இயலாது.
 
நாராயணன்,

மூன்று நாட்களாக வலைப்பக்கம் ஒதுங்க முடியவில்லை. இன்று அவசரமாக மேய்ந்த போது இந்த 'உருப்படியான' ஆக்கத்தைக் கண்டேன். நல்ல கருத்துக்கள். அவசரமாக பின்னூட்டமிட விருப்பமில்லை. இரண்டொரு நாட்களில் என் கருத்தையும் பின்னூட்டமிடுகிறேன். இந்த கருத்தை உயர்த்திப் பிடிக்க என் வாக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளது. விவாதம் கவனிக்கப்படும். பதிவுக்கும் உங்கள் சிந்தனைக்கும் நன்றி.
 
நாராயணன்: எனக்கும் இந்த விஷயத்தில் நிறையக் கருத்துக்கள் உள்ளன. இதுபற்றி முன்னமே எழுதியும் இருக்கிறேன். நிச்சயமாக வணிக ரீதியில் - லாபம் சம்பாதிக்கும் வகையில் - இதனைச் செய்யமுடியும்.

நிச்சயமாக இதைப்பற்றி மேலே பேசிக்கொண்டாவது இருக்க வேண்டும். சரியான ஒரு நேரத்தில் பேச்சைச் செயலாக்க வேண்டும்.

நிற்க. இன்று "காதல்" திரைப்படம் பார்த்தேன். மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட திரைப்படம். அசந்து போனேன். இந்தப் படம் எந்த வகையில் சேர்த்தி? கமர்ஷியல் படமா? இல்லை பேரல்லல் சினிமாவா?

டெக்னாலஜியில் எந்தக் குறைவுமில்லை. திரைக்கதையில் எந்தத் தொய்வுமில்லை. ஆதாரமான கதை நன்றாக உள்ளது. வசனங்கள், ஒளிப்பதிவு, உறுத்தாத இசை, நல்ல எடிடிங் என்று அத்தனையுமே 50 லட்சத்துக்குள்ளாக முடிந்திருக்கும் என்று தோன்றுகிறது.

நல்ல படங்கள் இதைப் போன்று, ஜனரஞ்சகமாகவும் அமைக்க முடியும் என்று தெரிகிறது. இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்தால், வெத்து பந்தா வசனம் பேசும் ஹீரோக்கள் ஒழிவார்கள். இடுப்பையும்/மாரையும் மட்டும் காண்பிக்கும் ஹீரோயின்கள் அவுட். நல்ல படங்கள் நிறைய வரும்.
 
பத்ரி, 'காதல்' நீங்கள் சொன்ன எந்தப்படத்தில் சேர்த்தி கிடையாது. அது நல்ல சினிமாவிற்கான அடையாளம். 'சேது' 'ஆட்டோகிராப்"-ற்கு பிறகு, தமிழிலும் நல்ல படங்கள் பண்ண முடியும் என்பதற்கான ஆழமான அத்தாட்சி அது.

காதல் படத்திற்கான 50 லட்சத்திற்கும் மேல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இயக்குநர் சங்கரின் ஒரு பேட்டியில் 2 கோடி என்று சொல்லியதாக ஞாபகம். ஆனால், ஒரு நல்ல படம் 70 -80 லட்சங்களுக்குள் எடுக்கமுடியும். இங்கே செலவுகளை அதிகரிப்பவை, கதாநாயகர்கள்/கிகள் சம்பளம் தான்.

'திருப்பாச்சி' போன்ற மகா அபத்தமான படங்களுக்கு சற்றே அதிகமாய் 7-8 கோடி வரை செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதில் பாதி செலவு கதாநாயகனுக்கான சம்பளம். வணிகரீதியாக வெற்றியடையாமலே (செலவு 8 கோடி - வரவு 6 கோடி)சிம்பு போன்ற அரைவேக்காடுகள், கூச்சலிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 10-30 லட்சத்திற்குள் DV கேமராக்களின் மூலம் படமெடுப்பதன் மூலம், 45- 60 மணித்துளிகள் படங்களை எடுத்து, டிஜிட்டல் நகல்களெடுத்து, உலகமெங்கும் திரையிடுதலின் மூலம் வணிகரீதியாய் வெற்றி / நஷ்டமில்லாமை பெறலாம் எனத் தோன்றுகிறது.

நீங்கள் பாலசந்தர் விழாவில் திரு.வசந்த் வருவாரையானால், கேட்டுப்பாருங்கள்.
 
இதைப்பற்றி முன்பு எங்கேயோ பேசியிருக்கிறார்கள்.(பத்ரியின் வலைப்பதிவு என்று நினைக்கிறேன்.) மிகவும் நல்ல யோசனையைச் சொல்லி இருக்கிறீர்கள்.

தமிழ் இதழ்களிலும், நிழல் போன்ற சஞ்சிகைகளிலும் இணையத்திலும் பல நல்ல படங்களைப் பற்றிக் கேள்விப் படும்போது, இதையெல்லாம் எப்படி எங்கே பார்க்கப் போகிறோம் என்று நினைத்திருக்கிறேன்.

கொஞ்சம் ஆழமாக யோசிக்க வேண்டிய விஷய்ம். முனைப்பும் உழைப்பும் இருப்பவர்கள் சேர்ந்தால் நன்றாகச் செயப் படுத்தலாம். கொஞ்ச நாட்களில் எனக்குத் தோன்றியதை இங்கே எழுதுகிறேன். இது இப்போது படித்ததில் மிகவும் பிடித்த வலைப்பதிவு என்பதால் எழுதும் மறுமொழி

-சந்திரமதி
 
நாராயண்.

அருமையான பதிவு. வெகுஜன சினிமாக்களை, கட்டணம் வசூலித்து tamilgrounds.com என்ற இணையத்தளத்தில் திரையிடுகிறார்கள். மாற்று சினிமா திரையிட இதே மாதிரியான மாடலை நாம் பின்தொடரலாம்.

ஆனால் ஆரம்ப நிலை கலைஞர்களாலும் சோதனை முறையிலும் எடுக்கப்படுகின்ற படங்களை பார்வையாளர்கள் ரசிக்க, அதற்கான முறையான விவரணைகளையும், விமரிசனங்களையும் தர ஒரு குழு வேண்டும்.காசு கொடுத்து பார்த்து படம் நன்றாக இல்லாவிட்டால், இத்த்கைய முயற்சிகள் எடூபடாமல் போய்விடும். எனவே ஆரம்ப கட்டத்தில் **பிரபலமானவர்களின்** பரிட்சார்த்த முயற்சிகளை திரையிட்டால், இதற்கான சந்தை திடப்பட, நிலைப்பட ஆரம்பிக்கும். பிறகு பல்வேறு படங்களயும் திரையிட்டு இதை முழுவீச்சில் செய்யலாம்.

பி.கு:

1. சென்னையில் மாற்று சினிமாக்கள் திரையிடப்படும் இடங்களை , விவரங்களை உங்கள் தளத்தில் தொடர்ந்து சொல்லி வருவது சென்னை(இணைய) மாற்று சினிமா ரசிகர்களுக்கு உதவியாக இருக்கும்

2. குறும்படங்கள் எடுக்கும் பலர் அதை வெகுஜன சினிமாவுக்கான விசிட்டிங் கார்டாகத் தான் உபயோகப்படுத்துகிறார்கள் . மாற்று சினிமா மீதான ஆர்வத்தில் அல்ல. விதிவிலக்குகள் இருக்கலாம்.

தொடர்ந்து இதை கவனிப்பேன்.
 
இதுபோன்ற படங்கள் தற்போது பல வந்தாலும் அவற்றைப் பற்றிய தெரிதல் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது. எனவே அவற்றைப் பற்றிய விளம்பரம் (ஏதோ ஒரு வகையில்) இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு, சமீபத்தில் லீனா மணிமேகலையின் குறும்படங்கள் சில (மாத்தம்மா, பறை, உலகமயமாக்கல் பற்றிய ஒன்று...) ஈழத்தமிழர்கள் சிலரின் முயற்சியால் ஜூரிக் நகரில் காண்பிக்கப்பட்டது; இது பற்றிய அறிவிப்பைத் தொடர்ச்சியாக இணையதளம், வலைப்பதிவு போன்றவற்றில் வந்ததால் அப்படங்களைக் காணவேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது.

புதிதாக வெளியாகும் வணிக ரீதியிலான படங்களைப் பல இணைய தளங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏற்றி மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டுள்ளனர். அப்படங்களே வரும்போது, குறும்படங்களைத் தயாரிப்போர் ஏன் தங்களுடைய படங்களை இணையத்தில் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்யக்கூடாது?
 
மதி, மூக்கன், ராதாகிருஷ்ணன், பின்னூட்டத்திற்கு நன்றி. சில அவசர வேலைகள் அலுவலகத்தில் இருப்பதால், இன்று என் பதிவிற்கு திரும்பி வருவேன் என்று தோன்றவில்லை. நேரமெடுத்து, இரவு உங்களின் கேள்விக்கும், அதன் ஊடான என் பார்வையும் முன்வைக்கிறேன். தொடர்ந்து யோசிப்போம்.
 
நரேன், நல்ல முயற்சி. தொடர்ச்சியான விவாதம் ஏதாவது சில நல்ல விடயங்களுக்கு உதவக்கூடும். இங்கும் எனக்குத் தெரிந்து சில நண்பர்கள் நல்ல scriptடன் நிதி வசதியில்லாமல் அலைந்துகொண்டிருக்கின்றனர்.
 
நரைன் நல்லதொரு சிந்தனையும் பதிவும் இதனை இப்படியே விட்டுவிடாமல் முன்னெடுத்துச் செல்லுங்கள்.குறும்படங்கள் மற்றும் விவரணப் படங்கள் பொன்றவை வலைப்பதிவாளர்களைச் சென்றடையவேண்டுமென்ற நோக்கில் வலைப்பதிவொன்றை ஆரம்பித்தேன் என்னுடைய அறிவுப் பற்றாக்குறை காரணமாக ஈழத்தவர்களுடைய குறும்படங்கள் பற்றிய விபரங்களையே பதிய முடிகிறது நீங்கள் விரும்பினால் இணையுங்களேன்.
 
நல்ல முயற்சி.
 
நரைன்,
நிறைய எழுத வேண்டும் என்று நினைத்த்து விடுபட்டுப்போனது.
ப்ரகாஷ் சொன்னதை முக்கியமாய் பார்க்கிறேன். ரசனை தளத்தில் மாற்றம் வரவேண்டியதும்ம் முக்கியமான விஷயம். ஈழநாதன் சொல்வது போல் அந்த வலைப்பதிவில் நமக்கு தெரிந்த மாற்று சினிமாவாகிய திரைப்படங்கள் குறித்த தகவல்களை குறித்து வைக்கலாம். விமர்சனங்களை முன்வைக்கலாம். வலைப்பதிவர்களில் திரைப்படம் எடுப்பவர்கள் (அருண்,அஜீவன் போன்றவர்கள்) இதில் இணைந்து செயல்படலாம்.

மாற்று சினைமா கொண்ட மற்ற இணையதளங்களுக்கு இணைப்பு கொடுக்கலாம்.

1. இதுவரை நான் பார்த்த மாற்று சினைமாக்கள் பத்துக்குள் இருக்கும். கமர்சியல் திரைப்படங்கள் சில நூறு இருக்கும். என்ன செய்வது?
கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிக்கொள்ளவேண்டும்.

2. இணையத்தில் மாற்று சினிமா பார்ப்பதற்கு அரசு அளாவில் திட்டம் முன்வைக்கபடவேண்டும்.
பாசீ.cஒம் தலைவரை கைது செய்த அளவில்தான் இந்தியாவின் இணைய அறிவு உள்லது எனப்து குறிப்பிடத்தக்கது.

3. இணையத்தை பாவிக்கும் தமிழர்களை ஓராவுக்கு இத்த்கைய படங்களை பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் இணையத்தைவிட , அரங்குகள் தான் முன்னிறுத்த்படுபவை. இந்த அரங்குகளின் சங்கங்கள் , உரிமையாளர்களுக்கு மாற்று சினிமா குறித்த பார்வை இருக்கவேன்டும்.
முதைலில் இம்மாதிரியான ப்டங்களை வெளியிட்டு "கையை சுட்டுக்" கொள்வதைத்தான் யோசிப்பார்கள். ஆரம்ப நிலையில் , சில
வியாபரத் திட்டங்களுடன் செயல் படலாம்.[குலுக்கல் முறை சேலை வழங்குதல் போன்றது]

4. குடும்ப தினக்களான சனி ஞாயிருகளில் ஒரு காட்சி மட்டும் திரையிடலாம்.

இவெற்றுக்கெல்லாம் அடிப்படித்தேவை ,இது பற்றிய விழிப்புணர்வு. இதன் அவசியத்தின் அவசியம்.
 
டிசெ, ஈழநாதன், கார்த்திக், கணேசன் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி. வேலை கழுத்தை நெரித்து கொண்டிருப்பதால், உடனடியாக என்னால் பதில் கூற இயலவில்லை. வியாழனுக்கு பிறகு சற்று இளைப்பாறுவேன் என்று தோன்றுகிறது. வந்து, விரிவாக பதிகிறேன்.

அனைவருக்கும், என் தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.
 
உருப்படாதது என்ற தலைப்பின்கீழ் அனைத்துமே உருப்படியான யோசனைகள். தமிழ் இணைய திரையரங்கம் சாத்தியமே!!!
 
என்னையும் கணக்குல சேத்துக்கோங்க!
- இர.அருள் குமரன்
 
நீங்க இல்லாமலா, அருள். கண்டிப்பாக இருக்கீங்க. என்ன செய்யலாம்னு யோசிச்சு எழதறேன்.
 
நாராயணன் தாங்கள் குறிப்பிட்ட "ஓருத்தி" மற்றும் நல்ல குறுந்திரைப்படங்களை இங்கே கனடாவில் பெற்றுக் கொள்ள முடியாது. தாங்கள் டிவீடியிலோ இல்லாவிட்டால வீ எச் எஸ் இலோ பெற்று எமக்கு அனுப்பி வைக்க முடியுமா பணம் அனுப்பி வைப்பேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]