Feb 14, 2005

இவற்றையும் காதல் கவிதைகள் என சொல்லலாம்.....

மனுஷ்யபுத்திரன், டிசெயின் வழியில் இங்கும் சில கவிதைகள், படிப்பதும், படிக்காமலிருப்பதும் அவரவர் விருப்பம்.

நீ

கொஞ்சம்
உறிஞ்சிக்குடித்தால்
பன்றியாவென்கிறாய்

அம்மாவோடேயே
இருந்துகொள்ள வேண்டியதுதானேவென்று
கோபப்படுகிறாய்

உனக்கெல்லாம்
பெண்பிள்ளை பிறந்திருக்கவேண்டுமென்று
சபிக்கிறாய்

உன்னோடு
எவளும் இருக்கமுடியாதென்று
குறைகூறுகிறாய்

எழுதுவதைத்தவிர
வேறென்னதெரியும் உனக்கென்று
குற்றம் சொல்கிறாய்

உன்னோடு
வாழ்தல் அரிது

தொலையவேயில்லை
விடுதலறியாவிருப்பம்

- விக்ரமாதித்யன்


தண்டவாளமும் இரு காதலர்களும்

பச்சைஓளி பரவசமூட்ட
தெளிந்த வானத்தில் ஆழ்ந்தவாறு
கற்பூக்களின்மேல் படுத்திருந்தேன்
சற்றுத்தள்ளிப் பரவியிருந்த புல்திட்டில்
இருவர் அமர்ந்திருந்தனர்
காதலர்களாக இருக்கக்கூடும்
பூவிரியும் சூட்சுமத்தோடு
அவன் விரல்களில் சொடுக்கெடுத்தாள்
ஒவ்வொரு சொடுக்கிற்கும்
காற்றிலவன் உதடுகுவிக்கையில்
வெட்கத்தின் சரிகை அவள் முகத்தில்
உரத்த குரலில் அவனொரு
கவிதை வாசித்தான் போலிருக்கிறது
கோடைமழையில் நனைந்த
வெடிப்புநிலமாய் இலகுவானாள்
வெகுநேரம் கெஞ்சிக் கொண்டிருந்த
அவன் உதடுகளில் முத்தத்தின் ஏமாற்றம்.
பின் எதுவும் பேசிக்கொள்ளவில்லை
பின்புறத்தைத் தட்டியபடி எழுந்த அவர்கள்
என்னை சமீபித்து மடியில்
தலைஉயர்த்தி படுத்துக் கொண்டனர்
அமைதியாக இருந்த என்னை
விநாடியில் புணர்ந்துபோட்டது ரயில்
காதலின் வலிமையைச் சொல்ல
காதலர் வலிமை சுயபலியிடுகிறது

- சுகிர்தராணி


டென்த் ஏ காயத்ரிக்கு......

நீ குடியிருந்த வீடு....
கைமாறி கைமாறி
கக்கடைசியில்
காயலான் கடையாகி
ஒட்டடை படிந்தது.
நீ தட்டச்சிய பயிலகம்.....
ஒரு மழைக்கால இரவில்
மகள் ஒடிப்போன துக்கத்தில்
asdfgf க்கு மத்தியில்
உரிமையாளர் தூக்கில் தொங்க
நொடிந்தது.
நீ தரிசனம் தந்த கோயில்....
வெளவால் சந்ததி பெருகி
புராதன வாசத்தில்.
உன்னைக் காதலித்த
எங்கள் கவிதைகள்
பரணேறிய் டைரித்தாளில்
கன்னி கழியாமல்.
தெரியும்,
மிலிட்டரிக்காரனுக்கு மணமாகி
நீ டெல்லியில் இருப்பது.

சப்தர்ஜங்கோ சர்தாஜி பேட்டையோ
சப்பாத்தியும், சால்னாவுமாய்
தேய்ந்து, துரும்பாகி
தூர்த்திருக்கும் உன் வாழ்வு.
பேருந்தில்,
டீக்கடையில் என
பொருள்வயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
'காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?'
என் பதில்:
'பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல.'

- நா.முத்துகுமார்


உன் நினைவெனும் புதைகுழி

தொலைதூரத்தில்
என் தனிமையின் சுமைகூடித்
தொலைபேசியில் கசியும்
உன் பிரியங்கள்
என் உயிர் பிளந்து
இரட்சிக்கும்
சிலந்தியின் கால்களில்
துவளும் எனதிருப்பை

உன் நினைவுகள்
கடும் பனியின் நிசப்தமாய்
என்னோடிருக்க
இன்று உன் இன்மையை உணர்த்த
ஏதொன்றும் நிகழவில்லையென்றாலும்
ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டிருக்கிறது

உன்னை வேண்டும்
ஆன்மாவிற்கு உயிரூட்ட
ஒலிக்கும் உன் குரல்
எப்போதோ தாழிடப்பட்டுவிட்ட
அதிர்ஷ்டத்தின் கதவுகளைத்
தட்டிவிட்டுப் போகும்

மெழுகின் ஒளியில்
சுவரில் வளர்ந்து ததும்பும்
நிழல்கள் போல
இந்த நிலவொளி
என் இதயத்தில் வளர்த்தெடுக்கும்
உன் பிம்பத்தை

சுடரும் நெருப்பாய் வெடித்து சிதறும்
மூச்சுக்காற்றில் கருகும்
இந்த அறையும்
எனது உடலும்

இந்த தவிப்புகளையெல்லாம்
நள்ளிரவில் இல்லாத எதிரியைத் துரத்தும்
நாயின் ஆவேசமெனவோ
அடர்ந்தேயிருக்கும் இருளை
துளையிட்டுச் செல்லும்
மின்மினிப் பூச்சியெனவோ
அர்த்தம்கொள்கிறேன்.

இந்த இரவை விடாப்பிடியாகப்
பற்றியிருக்கும் மழையைப்போல
எனைப் பற்றியிருக்கும்
உன் நினைவுகள் அழிக்கும்
எனது முந்தைய சுவடுகளை

எப்போது வீழ்ந்தாலும்
எப்படி வீழ்ந்தாலும்
பற்றியெழுவதென்னவோ
உன் நினைவுகளில் மட்டும்தான்

பாதைகளற்ற வனமொன்றிற்கு
நீ வந்து சேரவும்
இருக்கத்தான் செய்கிறது
ஒரு ஒற்றையடிப் பாதை

சருகென உலர்ந்த உடலில்
சிறு தளிர்கள் முளைவிட

இந்நினைவுகளின்
புதைகுழிக்குள்
மூழ்கிவிடும் அபாயத்துடன்

மறுபடியும்
அந்நினைவுகளௌக்குள்ளேயே
தடுமாறி நுழைகிறேன்.

- சல்மா


பெண்களுக்கென்று
பிரத்யேகமாக
வாசனைகள் உண்டென்று
கேள்விப்பட்டிருக்கிறேன்
குறுகலான மாடிப்படிகளின்
எதிரெதிர் திசைகளில்
ஒருவருக்கொருவர்
வழிவிடுவது போல் வழிமறித்து
உரசிக்கொண்டே கடந்தோமே
அன்றுதான் தெரிந்து கொண்டேன்
வாசனைக்கென்றே
பிரத்யேகமான பெண்களும்
இருக்கிறார்கள் என்று

- விஜய் மில்டன்.

முதல் ரயில் பயணம்
வற்றாத அனுபவம் நிறைந்தது
உன்னுடனான முதல் பயணமும்கூட
சக்கரம் வேகம் தூரம் காலம் பிரமிப்பு
என் முகம் ஜன்னலில் வெட்டும் காட்சிகளினூடாக
பால்ய காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு
வருகிறேன்.
நாம் இறங்கும் இடம் வந்தவுடன்
என் மீது கோபமா
பயணம்முழுவதும் என்னிடம் பேசவில்லையே என்கிறாய்
உன்னுடன்தானே பேசிக்கொண்டிருந்தேன்
இதழ் பிரியாத சிரிப்புடன் கனவிலா என்கிறாய்
நீ அருகில் இல்லாச் சமயங்களிலும்
உன்னுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்

காலம் வெளி அற்ற நம் உறவுகள்
சக்கரத்தின் ஒயாத உராய்வுகளோடு கிடக்கும்
நம் உடல்கள்

- மாலதி மைத்ரி

உன் பிரிவில் நிகழ்வது
துயரமல்ல
எதிர்பாராத
ஒரு வெளி

சற்று முன்
காலி செய்யப்பட்ட
ஒரு வீடு போல

-மனுஷ்ய புத்திரன் (1988) [நன்றி: டிசே.தமிழன்]
மனுஷ்யபுத்திரனுக்கு, உங்களின் இடமும் இருப்பும் தொகுப்பில் வரும் "சாரதா"வை பதியுங்களேன். என்னிடத்தில் இப்போது அந்த தொகுப்பு இல்லை என்பதனாலேயே....

Comments:
நரேன்,
தெரிவுகள் நன்றாகவிருக்கின்றன. மனுஷ்ய புத்திரனின் 'நீராலானது' எனக்குப்பிடித்த ஒரு தொகுப்பு (காதலை அல்லது உறவைப் பற்றிப்பேசுகின்ற அதிக கவிதைகள் இருப்பதால் இன்னும் அதிகம் பிடித்திருந்தது). சென்ற ஆண்டு ஈழம், தமிழகம் என்று பயணித்தபோது எடுத்துக்கொண்டுசென்ற மூன்று நான்கு புத்தகங்களில் அதுவும் ஒன்று. ஓவ்வொரு முறை வாசிக்கும்போது புதுப்புது அர்த்தங்களை எனக்கு அந்தத் தொகுப்பு தந்துகொண்டேயிருந்தது. விமானத்தில் மேகங்களிடையே, மெல்லிய இருள் திரைபோட்ட பொழுதில் பிரிவும் அன்பும் கசிந்துகொண்டிருந்த மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் வாசித்தது அவ்வளவு விரைவில் மறக்காது. அந்தத்தொகுப்பிலிருந்த கவிதைகள் எடுத்துப்போட பிரியமெனினும், வன்னியில் நின்றபோது நண்பரொருவர்க்கு அந்தப் புத்தகத்தை கொடுத்துவிட்டதால் இப்போது பதியமுடியவில்லை.
பிடித்த மனுஷ்ய புத்திரனின் சின்னக் கவிதையொன்று...

உன் பிரிவில் நிகழ்வது
துயரமல்ல
எதிர்பாராத
ஒரு வெளி

சற்று முன்
காலி செய்யப்பட்ட
ஒரு வீடு போல

-மனுஷ்ய புத்திரன் (1988)
 
நன்றி டிசே. நீங்கள் சொன்ன அந்த கவிதையை வாசித்திருக்கிறேன். "சாரதா" என்கிற மிக அருமையான கவிதையை மனுஷ்யபுத்திரன் எழுதியிருப்பார். என்னிடத்தில் அந்த தொகுப்பு இல்லை. மனுஷ்க்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம். உங்களின் அனுமதியுடன் இந்த கவிதையும் பதிவிலிடுகிறேன்.
 
என்ன நரேன் அண்ணாச்சி, காதலர் தின சிறப்பு பதிவா? அதெல்லாம் இருக்கட்டும் நீங்க பின்னூட்டமிடுகிற இடத்தில் ஒரு குட்டி படம் வருதே. அது நீங்களா? அமனுஷ்ய மானுடன் மாதிரி தோன்றுகிறது அது :-) :-)
 
விஜய், அது நானே தான். கொஞ்சம் போட்டோஷாப், கொஞ்சம் சே குவாரா பதிப்பு, கொஞ்சம் பசுமை சிந்தனைகளூடே என் புகைப்படத்தை மாற்றியமைத்திருக்கிறேன். அமானுஷ்யமாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ;-)
 
காதலர் தின ஸ்பெஷல் என்பதை விட, இதை சாக்காக வைத்துக்கொண்டு, நல்ல தமிழ் கவிதைகளை பதியலாம் படிக்கலாம் என்கிற சுயநலம் தான். ரொம்ப நாளைக்கு முன் வாசித்து, பரணோற்சவம் மேற்கொண்ட நிறைய நூல்களை, தூசி தட்டி, ஞாயிறன்று படித்துக் கொண்டிருந்தன் விளைவு தான் இது.

மேலும், நமக்கு தான் எதுவும் செட்டாக மாட்டேங்குது, இந்த மாதிரி சீன் போட்டாலாவது ஏதாவது கிடைக்குமா என்கிற நப்பாசை யான பேராசையின் விளைவாகவும் இந்த பதிவு ;-)
 
லேசா லேசா ஒரு பின்னூட்டம்.

அந்த மூஞ்சை எங்கோயோ பார்த்த மாதிரி ஞாபகம்... ஞ..ஞ... 'சே குவாரா'. தலையில ஒரு ஃபங்க் அடிச்சி சைடுல லேச முடிய பரப்பி விட்ட சே குவாரா படத்துல நீங்க தான் ஹீரோ.

அந்த படத்தைப் பார்த்த பிறகு மனுஷ்ய புத்திரனைப் பற்றி எழுதும் அமானுஷ்ய புத்திரன்.

செட்டாகி செட்டாகலன்னு இன்னொரு செட்டை தேடிறீங்களோ? ஒன்னும் புரியலையே.
 
Narain,

Kalakunga. Ipo thaan office vanthean. Oru commentum ezuthitean yerkanave - Uyirmmai blogla. Konjam Breakfast, konjam velai ellam parthutu, oru interval-la inga vara parkirean.

Anbudan, PK Sivakumar
 
விக்ரமாதித்யனின் நீ என்ற கவிதை ஆணின் பார்வையில் வெளிப்படுகிற சாதாரண குற்றச்சாட்டு. குற்றாலச் சாரலில் கண்டெடுத்த ஒற்றைச் சிலம்பு வரையும் பொற்பாதச் சித்திரம் பற்றியும், ஆயிரம் முறை அருவியில் குளித்தாலும் புத்திவராதது பற்றியும் என்று (etc) அவர் எழுதிய கவிதைகள் சிறப்பானவை. இந்தக் கவிதை சாதாரணமாக இருக்கிறது. தன்னை ஆணாதிக்கவாதி என்று சொல்வதை அவர் ஒத்துக் கொள்கிறார். எனவே, அவர் ஆணாதிக்கவாதியா இல்லையா என்பது பிரச்னையில்லை. சரியில்லாத கொள்கையைக் கொண்டவர்கள் என்று கணிக்கப்படுபவர்கள்கூட, புறந்தள்ள முடியாப் படைப்புகளை எழுதியுள்ளார்கள். விக்ரமாதித்யனின் இக்கவிதையில் கவிதையும் இல்லை, ஆழமும் இல்லை.

சுகிர்தராணியின் கவிதை நன்றாக இருக்கிறது. தேவதேவன் (அவரா அல்லது தேவதச்சனா? இரண்டு பெயருக்கும் எனக்குள் குழப்பம். அவரை இவரென்றும், இவரை அவரென்றும் நினைத்துக் கொண்டு.) ஞாபகம் கொணர்கிறது. நிகழ்வுகளைச் சொல்லி அதனுள் சில வார்த்தைகளிலும் வரிகளிலும் ஒரு கவியொளியைக் காட்டுகிற சித்தரிப்புகள் கொண்டவை. புதுக்கவிதை நகர்ந்து நவீன கவிதையானதற்கு அடையாளமாக இத்தகைய கவிதைகளைச் சொல்கிறார்கள். இக்கவிதையில் "அமைதியாக இருந்த என்னை / விநாடியில் புணர்ந்துபோட்டது ரயில்" என்கிற வரிகள் கவிதை பளிச்சிடும் வரிகள். கோடை மழையில் நனைந்த வெடிப்பு நில உவமை நன்றாக இருக்கிறது.

மீதி கவிதைகள் பற்றி எழுத நேரமில்லை. மன்னிக்கவும்.

மனுஷ்ய புத்திரனின் ஒரு கவிதை உண்டு. இடமும் இருப்பும் தொகுதியில் என்று நினைக்கிறேன். அதிலிருந்த இந்த வரிகள் இன்னும் நினைவிலுண்டு. அக்கவிதையை இணையக் குழுமங்களில் ஏற்கனவே இட்டிருக்கிறேன். "நான் எந்த வழியாக வந்தேனோ அந்த வழியாக நீ என்னைத் திருப்பி அனுப்பியதே யில்லை" என்று முடியும். (நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். தவறிருக்கலாம்.)

அன்புடன், பி.கே. சிவகுமார்
 
நன்றி சிவக்குமார். நீங்கள் கேட்ட கவிதையை கீழே கொடுத்திருக்கிறேன்.

மீளும் பாதைகள்

உன்னைத் தேடி வர
ஒரு வழிதான் என்றில்லை

கரிந்த நிலங்கள் வழியே
வந்திருக்கிறேன்

வேப்பம்பூ மணந்த
சாலையில் வந்திருக்கிறேன்

மழைக்குப்பின் தூயசோகம் கவிந்த
தெருவில் வந்திருக்கிறேன்

ஊர்வலத்தில் ஒருவனாக
வந்திருக்கிறேன்

அரவமற்ற இருளில்
வந்திருக்கிறேன்

அன்பின் கனிந்த ஸ்பரிசங்களோடு
பழி தீர்க்க வந்திருக்கிறேன்

துரோகத்தின் மிருகவிழிகளோடு
ஆரத் தழுவ வந்திருக்கிறேன்

திரும்பிப் போகும்போது
எந்த வழியாக வந்தேனோ
அந்த வழியாகப் போக
ஒரு போதும் விட்டதில்லை
நீ
 
Nanri Narain. Ennidam Neeralanathu Irukum (Nanbarkal yarum vasika eduthu sellavillai enraal). Irunthaal, inriravu, Saradha kavithaiyai ullidukirean. Regards, PK Sivakumar
 
சாரதா - மனுஷ்ய புத்திரன்

(Narain கேட்டுக் கொண்டதற்கிணங்க மனுஷ்ய புத்திரனின் இக்கவிதையைப் பதிக்கிறேன். - பி.கே.சிவகுமார்)

எனக்கு சாரதாவை
ரொம்பப் பிடிக்கும்

தனிமையானவள் சாரதா
அனாதியில் வாழ்ந்து வருபவள்
அதிகாலைக் காற்றாகி விலாவில் கூசுபவள்
ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்காதவள்

எனக்கு சாரதாவை
ரொம்பப் பிடிக்கும்

சாரதா காதலியல்ல
முன்னாள் காதலியல்ல
அதற்கு முன்னாள் காதலியல்ல
அதற்கும் முன்னாள் காதலியல்ல
ஒரு பால்ய கால சகிகூட அல்ல
சாரதா முக்கியமானவள்

சாரதா தோழியல்ல
தோழர் யாருக்கும் தோழியல்ல
பக்கத்து வீட்டுக்காரியல்ல
மறக்க முடியாத
மறக்கக் கூடிய
சம்பவம் எதிலும்
சம்பந்தப்பட்டவள் அல்ல
'சுசீலா'வும் அல்ல
சாரதா எதிர்பாராமல் குறுக்கிடுகிறவள்

நான் கடந்து சென்ற
சித்தாள்கள்
டைப்பிஸ்டுகள்
மனைவிகள்
குரூபிகள்
மாணவிகள்
விபச்சாரிகள்
யாருக்கும்
சாரதா எனும் பெயர் இல்லை
என் அறைக்கு வெளியே
நடந்துகொண்டேயிருக்கிறாள்

சாரதா
ஒரு புகைப்படமல்ல
குறியீடல்ல
மானசீகமல்ல
முலைகளல்ல
உதடுகளல்ல
கதகதப்பல்ல
கவுச்சியல்ல
ஒரு முகம்கூட அல்ல

சாரதா
ஒரு பெயர்

எப்படியோ காற்றில் வந்து
ஒட்டிக்கொண்ட பெயர்

சாரதா
ஒரு சப்தம்
பறவைக் குரலின் ஒரு துண்டு

மென்மையாகக் கூப்பிடுகிறேன்
எச்சிலால் அப்பெயரை நனைக்கிறேன்
வெவ்வேறு லயங்களில் சொல்லிப் பார்க்கிறேன்
தெருவில் யாருமில்லாத போது
உரக்கக் கூவியழைக்கிறேன்
என்னவென்று கேட்டு
நிஜமொருத்தி வந்துவிடுவாளோ எனப் பயந்து
அவ்விடம் விட்டகல்கிறேன்

சாரதா
தன் பெயருக்குள்
எந்த உடலையும் அனுமதிக்காதவள்
யாருடைய குரலுக்கும் பதில் சொல்லாதவள்

நன்றி: இடமும் இருப்பும் - மனுஷ்ய புத்திரன் - காலச்சுவடு பதிப்பகம், 151, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001
 
நன்றி சிவக்குமார். நான் பதிந்த மீளும் பாதைகளும் அதே தொகுப்பில் தான் இருந்தது. ஏனோ, இந்த கவிதையை பின்னூட்டமிட மறந்து போனது. ஆனாலும், எனக்கு பிடித்த கவிதையது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]