Feb 16, 2005

பலூன் பார்க்கும் பெண்கள்

காதலர் தின கொண்டாட்டங்கள் முடிந்திருக்கும். எல்லோரும் அவரவர் வேலைக்கு திரும்பியிருப்பார்கள். நானும் திரும்பிவிடலாம் என்றால் முடியவில்லை. அதற்கு காரணம் ஒரு பெண்.

எல்லாம் சந்தோஷமாகதான் ஆரம்பித்தது, பதிவுகளில் கவிதைகள் பதிந்து, பிற பதிவுகளில் கவிதை படித்து ஒரு ஏகாந்தமான மனநிலையில் தான் இருந்தேன். 6 மணிக்கு ஆரம்பித்தது சனி. செல்லில் என் நண்பன், என் பால்ய நண்பனுக்கு நடந்த விபத்தை சொன்னதும், பால்ய நண்பனுக்கு தொலைபேசிவிட்டு, அவனைப் பார்க்க கிளம்பினேன். அவனுடைய இல்லம் இருக்குமிடம் கொடுங்கையூர் ( இது வட சென்னையில் இருக்கும் ஒரு இடம். நிறைய நண்பர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். சென்னை என்பது பல பேருக்கு சென்ட்ரல், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர், விமானநிலையம் பிற சில இடங்கள். இதைத் தாண்டி, வடசென்னை ஒரு மிகப்பெரிய பகுதி. தனியாய் வடசென்னையினை தொடராக எழுதும் எண்ணமுள்ளது, நான் ஒரு வடசென்னைவாசி. அது பிறகு) ஆக, என்னுடைய அலுவலகத்திலிருந்து, சற்றேறக்குறைய 25KM. பைக்கினை தொடக்கி, இன்னொரு நண்பனையும் அழைத்து கொள்ள எழும்பூர் விரைந்தேன்.

ஸ்டெர்லிங் சாலை சந்திப்பின் ட்ராபிக் சிக்னலில் நிற்கிறேன். சென்னையில் இப்போது ஒரு நல்ல வசதி சிக்னல்களில். ஒளிரும் சிகப்புடன், எவ்வளவு நேரம் நிற்கவேண்டும் என்னும் நொடிகளும் மேலே ஒடிக்கொண்டிருக்கும். மிகவும் நீளமான நிறுத்தங்களெனில் ( 120 விநாடிகள்) வண்டியை அணைத்து விட்டு பராக்கு பார்க்கலாம். இங்கும் அதே நிலைமைதான். எனக்கு இணையாக 4 பைக்குகள். இடதுபுறம் ஒரு பஜாஜ் காலிபர், இரு இளைஞர்கள். பார்க்க ஏதோ விற்பனை பிரதிநிதிகள் போல இருந்தார்கள். வலது புறம் ஒரு பல்சர். பல்சரில் ஒரு பணக்கார இளைஞன்/ஞி. அவள் கையில் ஒரு இதய வடிவ பலூன். அவள் மிகவும் அவனை நெருக்கமாய் அணைத்தப்படி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தாள். அதற்கு இணையாக ஒரு டிவிஸ் விக்டர். கணவன், இளம் மனைவி, அவள் கையில் ஒரு குழந்தை.

இளம் பெண் அவள். 23-25 வயதிருக்கலாம். கையில் குழந்தையுடன், பேசிக் கொண்டிருக்கும் கணவனை சற்றும் சட்டை செய்யாமல், பலூனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பலூன் வைத்திருந்த பல்சர் பெண்ணோ, உலகினை மறந்து தன் காதலனுடன்(?!) ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். பஜாஜ் இளைஞர்களோ, பல்சர் இளைஞனை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "செம பிக்கப். எங்கியாவது மேஞ்சிருவான் இன்னிக்கு" என்று முனங்குவது காதில் விழுந்தது. இவர்கள் எல்லாரையும் விட என்னை வசிகரித்தது அந்த இளம் தாய் தான். தன் பார்வையை சற்றும் விலக்காமல், பலூன் மீதே வைத்திருந்தாள். பார்வையா அது ? ஆழ்ந்த யோகம் என்றுதான் சொல்லவேண்டும். நானும் பலூனைப் பார்த்தேன். இதய வடிவில் அடர்சிவப்பாய், i love you என்பதை பெரிதாய் எழுதி வைத்திருந்தது.

அந்த பெண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனாலும், அவள், குழந்தை சிணுங்குவதைக் கூட கவனியாமல் பலூனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றே என் மூளையில் பல்ப் எரிந்தது. எத்தகைய சூழ்நிலையில் நான் இருக்கிறேன் என்பது அப்போது தான் விளங்கியது. காதலி இல்லாமல் பொறாமையில் மனம் வெம்பும் இளைஞர்கள் ஒரு புறம். காதலர் தினத்தினை தன் காதலனுடன் கொண்டாட வெளியில் வந்திருக்கும் ஒரு இளம்பெண். இதைத்தாண்டி, இளம் வயதில் கல்யாணமாகி கணவனோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு பெண்.

சிக்னலில் ஆரஞ்சு ஒளிர்ந்தது. அணைக்கப்பட்டிருந்த வாகனங்கள் உறும ஆரம்பித்தன. அப்போது தான் கவனிப்பவள் போல, குழந்தையை சமாளிக்க எத்தனித்தாள். சிக்னலில் பச்சை. வாகனங்கள் வேகமெடுத்தன. என் மனம் வேகமாய் கணக்கு போட்டு கொண்டிருந்தது. நான் நினைப்பது சரியென்றால், அந்த இளம் தாய் சற்று முன்போனபின் அந்த பலூன் பெண்ணை பார்ப்பாள். 10-15 விநாடிகளில் அது நடந்தது. அவள் அந்த பல்சர் சற்றே கடந்து போகுமுன் மீண்டும் பலூனையும் இந்த முறை அந்த பெண்ணையும் பார்த்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டு, தன் கணவனின் தோள் பற்றி, முன் செல்லும் வாகனங்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அங்கிருந்து என் சிந்தனை என்னையும் அறியாமல் ஒடிக் கொண்டிருந்தது. அவளின் பார்வையில் இருந்த சோகமும், இயலாமையும் சற்றே புலப்படலாயிற்று. அவள் யாரெயேனும் காதலித்திருக்கலாம் அல்லது காதலித்தவனையே கல்யாணம் பண்ணி, இன்று அவனுடன் எவ்வித கொண்டாட்டங்களும் இல்லாமல் காதலர் தினத்தில் போய் கொண்டிருக்கலாம் அல்லது கல்யாணம் அவளின் / அவர்களின் உள்ளிருக்கும் காதலை கொன்றிருக்கலாம் அல்லது முதலிரவில் அல்லது பிற்பாடு, கணவன் சொன்ன அவனின் முன்னாள் காதலியின் நினைவு வந்திருக்கலாம் அல்லது இதேப் போன்று காதலித்து வாழ ஆசைப்பட்டு நடக்காமல் கல்யாணம் நடந்திருக்கலாம் அல்லது நெருங்கிய தோழர் /ழிகள் இதேப் போல் அவளின் கல்லூரி காலங்களில் சென்றது நினைவுக்கு வந்திருக்கலாம் அல்லது 'காதல்' படம் போன்று ஏதேனும் அவள் / எவர் வாழ்விலோ நிகழ்ந்தது ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். இன்னமும் எவ்வளவோ சிந்தனைகள் ஒடிக் கொண்டிருந்தது. என் வாழ்வில் மறக்க இயலாத பார்வையது. எவ்விதமான குறுக்கீடுகளுமின்றி, தன் முன் இருக்கும் பலூனினை மட்டும் பார்த்து கொண்டிருக்கும் பெண்ணினை, ஆயுள் உள்ளவரைக்கும் மறக்க இயலாது. என்ன நினைத்து கொண்டு அவள் அந்த பலூனை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பாள் ? உலகெங்கிலும், பலூன் பார்க்கும் பெண்களும், ஆண்களும் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.வாழ்க்கை பல கேள்விகள் நிறைந்தது. எல்லா சந்தர்ப்பத்திலும் கேள்விகள் வாய்மொழியாய் வருவதில்லை.

காதலர் தினம் சில பேருக்கு கொண்டாட்டமாய் தெரிந்தாலும், நிறைய பேருக்கு அது ஒரு பேரவஸ்தை. சரெலேன மேலேறும் நினைவுகளில், மறைந்து இருப்பது காதலிகளும், காதலர்களும் மட்டும் அல்ல. இயலாமையும், சில நேரங்களில் கையாலகத தனமும் கூட. தூர் வாரிய கிணறு போல், மறந்துவிட்டதாய் நினைத்தவைகள் எல்லாம் திடீரென தலை காட்டி, சில சமயங்களில் சந்தோஷத்தையும், நிறைய நேரங்களில் தாங்கவியலா துன்பத்தையும் விட்டு சென்றுவிடும். மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப சில நாட்களாகும். யதார்த்தம் பல சமயங்களில், கவிதைகளை தோற்கடிக்கும்.

உள் மன விகாரங்கள், அம்மணமாய் பல்லிளிக்கும் வேளைகள் எல்லோர் வாழ்விலும் உண்டு. அவளுக்கு அது நேற்றாய் கூட இருந்திருக்கலாம். என்னாலும் சாதாரணமாய் இருக்க முடியாமல், ஊர் உலகம் சுற்றி பின்னிரவு வீடு திரும்பினேன். அவள் யார், என்ன என்று தெரியாவிட்டாலும் ஒன்று தெளிவாக தெளிந்தது, அவளால், இன்றிரவு, சத்தியமாக தூங்க முடியாது

அடுத்த காதலர் தினத்திலாவது நான் வெளியில் செல்லாமலிருக்க வேண்டும். அப்படியே சென்றாலும், பலூன் பார்க்கும் பெண்களை பார்க்காமல் இருக்க கடவது. [என் பால்ய நண்பனுக்கு அடி பலம்தான், இருந்தாலும் பெரியதாய் பிரச்சனைகளில்லை]

Comments:
நானும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் நேற்று இரவு இருந்தேன்...எங்கள் அலுவலகத்தில் மாலை நேர காதலர்தின கொண்ட்டத்தில் கலந்துகொள்ள முடியாத வேலை பளு..ஆனால்..கையிலோ ஒரு ரோசாப்பூ...மற்றும் சில பரிசுபொருட்கள்...சிவப்பு நிறச்சட்டை...இந்த வயதுக்கு இதெல்லாம் அதிகம்தான்..என்ன மனசுக்கு இதெல்லாம் தெரிகிறதா..இல்லை புரிகிறதா....அந்த ரோசாப்பூவை நகுக்காமல் யார் கண்ணிலும் படாமல் வைத்திப்பெருபபதென்பது மகா அவஸ்தை.
பதவி வயது சுழ்நிலை இதெல்லாம் காதல் உண்ர்விற்க்கு புரிகிறதா என்ன...
ஒரு வழியாக இரவு 11.30ரோசாவை கொடுத்து வாழ்த்துச்சொன்னேன்...

அப்புறம் இரவு ஒரு மணிக்கு வேலை முடித்த பின்னர் அலுவலக வாசல் வரை வந்து அவளை வழியனுப்பினேன்.அழைத்து செல்ல வந்த அவள் கணவரிடம் இரு பத்து நிமிடம் பேசினேன்..அவள் கணவருடன் பைக்கில் அமர்ந்த பின் மெள்ள திரும்பி புன் சிரிப்போடு காற்றில் முததம் தந்துவிட்டு சென்றாள்.....ஒவ்வொரு பைக்கு பின்னர் இதுபோன்ற பல காதல்கள்
 
எல்லா காதல்களுக்கும் பைக் ஒரு குறியீடாய் மாறி வருகிறதோ ?
 
யதார்த்தமான பதிவு...
 
ஒவ்வொரு பலூனும், அடுத்த வருடம் வெளுத்துப்போகிறது. அதன் எழுத்துக்கள் மறைந்தழிந்து போகின்றன. ஆனால் காதல் இருக்கிறது. நமது மனம் இழுத்துப்பிடித்து துன்பத்தைக் கொண்டாடச் செய்கிறது. நாம் பார்ப்பது நம்முடைய காதலையா, அல்லது நாம் காதெலென்று நினைப்பதையா என்ற கேள்வியில் தொடங்குகிறது காதலுக்கான முதல் அடி (அதன் பாதையீல்).
நல்ல பதிவு.
 
நல்ல பதிவு.
 
அண்ணாச்சி உங்க பைக்ல பின்னாடி யாரு இருந்தாங்கன்னு சொல்லவே இல்லையே?(ஹிஹிஹி)

காதலில் வெற்றி பெற்றவர்களைவிட தோல்வியுற்றவர்களே அதிகம் என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தன் சிசு அழுவதைக்கூட கவனிக்க மனமில்லாமல் அவள் பலூனையே வெறித்துப் பார்த்தால்...சந்தேகமில்லை. இது ஏற்கெனவே காதலித்த கேஸ்தான்!

பாருங்க..முதல் பின்னூட்டத்தில் யாரோ மாற்றான் மனைவிக்கே ரோசாப்பூ கொடுத்திருக்காங்க. யப்பூ...ஜாக்ரதையா இருக்கனும்பூ... ஆரையும் நம்பமுடில..
 
narain excellent post.
Even though I am personally against Valentine Celebrations.
To me Love is amazing thing that shouldn't be exploited by these cartels.
But I guess your answer to me will be 'Welcome to Globlization'

K.K.Nagar Kirukan
 
தங்கமணி, உண்மை. மனது காதலை மட்டுமல்ல, காதலின் வலியையும் ஒரு காலகட்டத்தில் கொண்டாட தயாராகிவிடுகிறது. என்னளவில்,இது அந்த பெண்ணின் உள்மனதில் இருக்கும் நிறைவேறா காதலில் இருக்கின்ற நிராசையும், குற்ற உணர்வும் சற்றே தெரிகிறது. தன் காரியங்கள் முடியாமல் தற்கொலை செய்பவர்கள், காரியங்கள் நிறைவேற்றுவதற்காக, ஆவியாய் அலைவார்கள் எனறு சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒரு விதத்தில் நாம் எல்லோரும் கூட சபிக்கப்பட்ட ஆவிகளோ என்று கூட தோன்றுகிறது. எனக்கென்னவோ, எல்லா வரத்தையும் கையில் கொண்டு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கும் தேவதைகளை விட, ஆவிகள் பெட்டர் என்று தோன்றுகிறது.

// ஒவ்வொரு பலூனும், அடுத்த வருடம் வெளுத்துப்போகிறது. அதன் எழுத்துக்கள் மறைந்தழிந்து போகின்றன.//

வெளுத்துப் போகிறது என்பதைவிட, மண்ணுக்குள் புதையுண்டு உயிர்த்தெழுவதைப் போல இயல்பாய் நடக்கிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது.

மூர்த்திக்கு, நண்பனையும் அழைத்து செல்லவேண்டிய கட்டாயத்திலிருந்ததால், என் பைக்னின் பின் யாருமில்லை.

அது சரி, கல்யாணமானால், காதலிக்க கூடாது என்கிற ஒற்றை சிந்தனை தேவையா? நீங்களோ, நானோ என்றைக்காவது நம் மனதளவில் யாரையுமே நினைத்ததில்லையா ? பெண்களையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஒரு வேளை இதற்கு என்னைவிட, மதியோ, பொடிச்சியோ, கறுப்பியோ உங்களுக்கு பதிலளிக்கலாம். ஒரே ஒரு முறை வந்து போக காதல் இறப்பா என்ன?
 
KKiruken,

Welcome to the Tamil blogosphere once again. I am unsure to comment on the Globalisation part, but it certainly is a "celebration of life". More than a static 'life' associated with work, family and other routine tasks, i believe it is more about "living your life"
 
நா..,

இப்போதுதான் படித்தேன். நல்ல பதிவு! ஆனால் கொஞ்ச நாள் ஊரப்போட்டு (உங்களுக்கோ வாழ்க்கைக்கும் அந்த பலூன் பார்வை மறக்காது), நீங்கள் அந்த பார்வை குறித்து வைக்கும் interpretationகள் மற்றும் கற்பனை சேர்த்து ஒரு சிறுகதையாய் எழுதியிருக்க முடியும்.

பதிந்துவிட்டாலும் கூட இப்போதும் கூட, ஒரு 6மாதம் கழித்து அந்த பார்வை நினைத்தது போலவே நினைவில் இருந்தால் முடியும்.
 
//தூர் வாரிய கிணறு போல், மறந்துவிட்டதாய் நினைத்தவைகள் எல்லாம் திடீரென தலை காட்டி, சில சமயங்களில் சந்தோஷத்தையும், நிறைய நேரங்களில் தாங்கவியலா துன்பத்தையும் விட்டு சென்றுவிடும்.//
உண்மைதான். பொங்கிவழியும் சந்தோசத்தைப் போல துயரம் கனக்கும் பொழுதுகளையும் இயல்பென நினைக்க நம் மனதுகளுக்கு தெரிவதில்லை.
நல்லாயிருக்கிறது நரேன்.
 
வசந்த், நன்றி. என்னால், இவற்றையெல்லாம் சிறுகதைகளாக பார்க்க முடியவில்லை. கதை என்கிற வடிவத்தினை விட்டு கொஞ்சம், கொஞ்சமாய் வெளியே வந்து கொண்டிருக்கிறேன். இதற்கு, புனைவுகள் பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. நான் புனைகதைகளை எழுத இஷ்டப்படாமலிருப்பதே. மேலும், என்னளவில், கதைகளை விட நிஜங்கள் சுவாரசியமும், எளிமையும், துயரமும் தோய்ந்தவை, அவற்றை பார்த்து, படிப்பினைகள் பெறுவதற்கே நேரம் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

டிசே, இந்த நிகழ்வினை பதிக்க காரணம் அதுதான். வலிகளும், வடுக்களுமாய் தான் இருக்கிறது எல்லோருடைய மனங்களும். இது அதுப்போன்று ஒரு எதிர்பாரா நிகழ்வினில் தலைதூக்கும் அடிகளை எடுத்துரைக்கவே.
 
வெற்றி பெற்ற காதல்கள் மட்டும் வாழ்ந்துவிடுவதில்லை என்ற உண்மையை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.மகிழ்வுகளைப் போலவே வலிகளையும் இயல்பென ஏற்றுக்கொள்ளும் மனம் கிடைத்தால் அதுவே அருங்கொடை
 
//, என்னளவில், கதைகளை விட நிஜங்கள் சுவாரசியமும், எளிமையும், துயரமும் தோய்ந்தவை, அவற்றை பார்த்து, படிப்பினைகள் பெறுவதற்கே நேரம் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.//

நா.., பாரா சொல்லி பலர் இதே போல ஒரு கருத்தை கொஞ்ச காலம் முன்னே பாராட்டியிருந்தார்கள்.

கதைக்கும் நிஜத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கமுடியுமா? அதைவிட பிரச்சனை என்னவெனில் நிஜத்தில் கதை இல்லாமல் இருக்க முடியுமா? நிஜத்தை அறிவதிலேயே 'கதை' இருக்கும் போது சொல்வதில் எவ்வளவு 'கதை' இருக்கும்!
 
//நிஜத்தை அறிவதிலேயே 'கதை' இருக்கும் போது சொல்வதில் எவ்வளவு 'கதை' இருக்கும்!//

கதையே நிஜம். நிஜமே கதை என்பது உண்மையே. ஆனாலும், புனைவினை சேர்க்காமல் நடப்பதை பார்த்து கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கலாம் என்று தோன்றிய எண்ணத்தை தான் சொல்லவந்து, சொதப்பியிருக்கிறேன் என்று தோன்றுகிறது. கண்டிப்பாக சம்பந்தம் இருக்கிறது, கதைக்கும் நிஜத்திற்கும். ஆனால், ஒரு கதையாக ஒரு நிஜத்தினை எழுதும்போது, அறிந்தோ,அறியாமலோ 'கதைகள்' அதனுள் தோன்ற ஆரம்பிக்கும்.

மொழியும், சொற்களும், வாக்கியங்களின் வழியாக சொல்லவந்தவைகளை விட எப்போதும் சொல்லாமல் விட்டவைகளை அதிகமாய் தோன்றும். இது என்னை குறித்தே, அல்லாது கதைகளையோ, நிஜங்களையோ, கதையான நிஜங்களையோ, நிஜமான கதைகளையோ முன்வைத்து அல்ல.
 
வணக்கோண்ணா!

அண்ணா பெர்சனல இந்த வலெண்டைன்ஸ் டே எனக்கு பிடிக்காதுன்னாலும், அந்த டே காதலர்களுக்கு மட்டுமுன்னு யார் சொன்னாங்கண்ணா?. முறைய தமிழ்ல நல்ல சொல்லனும்ன 'அன்பர்கள் தினம்' தான் கரெக்டுங்கண்ணா. அது போய் காதலர்களுக்கு மட்டும் சொந்தமாகி 'காதலர்கள் தினம்' ஆனது எப்படிங்கண்ணா? அந்த நாளின் மூலமே காதலர்களுக்கு தான் என்று சொன்னால் அந்த நாளை குப்பையில தூக்கி போடுங்கண்ணா. இயற்கை, கலை ஆகியவகளை காதலிப்பவர்களையும் காதலர்கள் என்று சொல்லி 'காதலர்கள் தினம்'-ன்னு பேரை வைக்கிறத விட அன்பர்கள் தினம் என்பதை தான் நான் ஆதரிக்கிறேன்.

ஏங்க! ஒரு பொண்ணு பலூனை பார்த்துகிட்டு இருந்தா காதலர்கள் தினங்கிறதுனால காதலை பற்றிய ஏக்கம் மட்டும் தான் தலை தூக்கனுமா. அதே பொண்ணு படு கேஷிவலாகவும் பலூனை பார்த்துக்கிட்டு இந்த மண்ணாங்கட்டிகளுக்கு இது தான் குறைச்சல்லுன்னு நினைச்சிகிட்டு பலுன் எப்படியெல்லாம் பறக்குதுன்னு பார்க்கலாமில்லையா.

ஏன் புருஷனே அந்த பொண்ணை ரொம்பவே நல்ல வைத்திருக்கலாம். ரோட்டில இந்த மாதிரி கேனத்தனமாய் பலூனை புடிச்சிக்கிட்டுப் போன அந்த லூசுங்க யாருன்னு கூட பார்த்திருக்கலாம்.

ஏனுங்க எல்லா புருஷங்களுக்கும் சரி, மனைவிக்கு சரி ஒரு எதிர்பார்ப்பு எப்போதும் இருந்துகிட்டு தான் இருக்கும் அந்த எதிர்பார்ப்பு தான் காதலை ஓட வைக்கிற சக்தி. அதுல ஒப்பீட்டு பார்க்கிறது என்கிற மனப்பான்மை வந்த தான் அந்த காதல் கொடுமையாகிறது. எல்லாரும் அவங்கவங்க வசதி,சக்தி ஏத்த மாதிரி ஒருத்தரையொருத்தர் நல்ல வச்சிக்க பார்ப்பாங்க. ஆனா அதே "சே அவன் பொண்டாட்டி அவனை எப்படி நல்ல கவனிச்சிக்கிறா, என் பொண்டாட்டியிருக்காலே.."-ன்னு கணவன் நினைக்கிறதும், "அந்த பொண்ணுக்கு பலூன்லாம் வாங்கி கொடுத்திருக்காரு அவ ஆளு, நம்மாளும் இருக்காறே ஒரு கிரீட்டிங்ஸ் கார்டோட நிப்பாட்டிடாரேன்னு" மனைவி ஒப்பிட்டு பார்க்கும் அன்பு உண்மையில் அன்பு தானா?

ஏனுங்க காதலில் தோல்வியடைந்த பொண்ணோ பையனோ கல்யாணம் கட்டிக்கிட்டு ஏக்கமாக தான் வாழுவாங்கன்னு சினிமா படம் பார்த்து பார்வை ஏங்க கெட்டுப் போகுது. எந்த சினிமாவாவது காதலில் தோற்றவர்கள் இன்னொருவரை கல்யாணம் செய்துக் கொண்டு இன்னொரு காதலில் ஜெய்த்ததாக அதிகம் படம் வந்திருக்கா? ஏன்ன யதார்த்ததை சினிமா காமிக்கிறது ரொம்ப கம்மி.

முதல் காதல் முற்றுப் பெறாத காதல் எல்லாம் சாகும் வரை கல்லாக மனதிலிருக்கும் என்பதெல்லாம் சும்மா... நிறைவேறாத காதலெல்லாம் இன்னொரிடத்தில் நிறைவேறும் போது பூரணமடைகிறது. அதுல தப்பு இருக்குமென நான் நம்பவில்லை. அதை விட்டு விட்டு 'பூவே உனக்காக' விஜய் கிளைமாக்ஸ் காட்சி மாதிரியான வசனமெல்லாம் யதார்த்தமில்லை.

நாராயணன் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என் நம்பிக்கை என்னவென்றால் கல்யாணத்திற்கு பிறகு தான் காதலின் முழுபரிணாமமும் தெரியுமென்பது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் விட்டு விட்டு இந்த பின்னூட்டம் அடிச்சதுனால கோர்வையா சொல்லவந்தது சொன்னேனான்னு தெரியல.... நிறைய இருக்கு சொல்ல... நேரம் தான் இல்ல...
 
விஜய், அந்த பார்வையை நீங்கள் பார்க்கவில்லை அல்லது என்னால் சரிவர மொழியில் கொண்டுவர இயலவில்லை. பார்த்தால் தெரிந்திருக்கும். வெளியே சென்று கொண்டிருப்பதால் இந்த அவசர மறுமொழி. அது சரி,
//முதல் காதல் முற்றுப் பெறாத காதல் எல்லாம் சாகும் வரை கல்லாக மனதிலிருக்கும் என்பதெல்லாம் சும்மா//

தங்கர்பச்சானின் 'அழகி'யை ஒருமுறை மீண்டும் பாருங்கள், வலி என்ன என்பது புரியும். எனக்கு கல்யாணமாகவில்லை என்பது கடைக்குறிப்பு
 
This comment has been removed by a blog administrator.
 
உட்டாரு பாருங்க முதல் பின்னூட்டமிட்ட அனானிமஸ், மாற்றன் மனைவிக்கு பூ கொடுக்கும் காதலை கொண்டாடுவது தான் காதலர் தினமோ???... நல்ல மன்மத காமெடி மன்னர் அவர். ஒவ்வொரு பைக்குக்கு பின்னாடியும் புகைதான் வரும்....
 
தலைவரே! அழகியைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. வலியெல்லாம் வரல. ஒரு வேளை எனக்கு காதலே வரலையோன்னு நினைச்சிப் பார்த்தேன். சே... அப்படியுமில்லைங்க...நான் இன்னும் காதலித்துக் கொண்டுதானிருக்கிறேன் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும். எனக்கு இன்னமும் காதலியிருக்கிறாள், மனைவியுமிருக்கிறாள். ஒரு வேளை எனக்கு கோணல் பார்வையாகவும் இருக்கலாம். சொல்லத் தெரியவில்லை.
 
விஜய்,
நிறைய எழுதலாம் என்றுதான் யோசித்தேன், உங்களின் பின்னூட்டம் பார்த்தபிறகு தோன்றியது.

அவரவர் வாழ்க்கை. அவரவர் பார்வை. இதில் எதுவும் நிரந்தரமான சரி தவறுகளில்லை.
 
//அவரவர் வாழ்க்கை. அவரவர் பார்வை. இதில் எதுவும் நிரந்தரமான சரி தவறுகளில்லை//

இந்த வரியை ஆதரக்கிறேங்கண்ணா...

சினிமாவில காதலை வச்ச தான் படம் ஓடுங்கிறதுக்காக 'அழகி'-யும் வரும், மன்மதனும் வரும், காதலும் வரும்... நானும் இன்னொரு மாதிரியான(மேலே பின்னூட்டமிட்ட கருத்தில் சொன்னப்படி) கதையுள்ள தமிழ் படத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

காதல் படம் இன்னும் பார்க்கவில்லை. விமர்சனங்களை படித்தவரையில், காதலியும், முன்னால் காதலைனையும் வைத்து தான் முழுகதையும் பின்னப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏன் அதுவே இரண்டாம் பாதியில் நிர்பந்தத்தால் இன்னொருவனை கல்யாணம் பண்ணிக் கொண்ட அவள் நல்ல மனம் படைத்த கணவன் அமைகிற மாதிரியும், உண்மையைச் சொன்னதால் அவர்களிடையே ஏற்படும் மனப்போரட்டாங்களும், பிறகு கணவனின் சுயநலமற்ற அன்பால் முன்னால் காதலை விட இந்த காதல் அவளுக்கு உயர்வாகப்பட்டு எதார்த்த வாழ்க்கை வாழுகிற மாதிரி என் ஒரு படம் வரக்கூடாது. காதலில் தோல்வியடைந்து லூசாக அலைபவர்களை விட, கோழையாக தற்கொலை செய்துக் கொள்பவர்களை விட எதார்த்ததுடன் போராடுபவர்களை தான் நிறைய பார்த்திருக்கிறேன். எனக்கு என்ன ஆசையென்றால் முன்னால் காதலனைவிட துரதிர்ஷ்டமான அந்த கணவன் தன் சுயநலமற்ற அன்பால் உயர்ந்து நிற்பதை சொல்லுகிற மாதிரி படங்களை நான் பார்க்க வேண்டும்.

'அழகி'யில் கூட பார்த்திபன், நந்திதா காதல் சொன்னதை விட தேவயாணியின் காதல் தான் உயர்வாகப்படுகிறது. என் பார்வையில் தேவயாணியின் காதலை உயர்த்தியிருந்தால் எனக்கு பிடித்திருக்குமோ என்னமோ....

நீங்கள் சொன்னமாதிரி பார்வைகள் பலவிதம். என்னது ஒரு விதம் அவ்வளவு தான்.
 
விஜய் சார்,
//எனக்கு என்ன ஆசையென்றால் முன்னால் காதலனைவிட துரதிர்ஷ்டமான அந்த கணவன் தன் சுயநலமற்ற அன்பால் உயர்ந்து நிற்பதை சொல்லுகிற மாதிரி படங்களை நான் பார்க்க வேண்டும்.//

உங்கள் ஆசையை ஹம் தில் சுகே சனம் என்ற இந்தி படத்தில் நிறைவேற்றி யுள்ளார்கள்.ஐஸ்வர்யா வும் அஜய் தேவ்கனும் நடித்தது.
 
This comment has been removed by a blog administrator.
 
Good post. Well written in a manner making any reader to get the 'implicit message'BTW, your comment in my post பல்லவியும் சரணமும் - 15

//விதிகளை மீறுவதற்கு மன்னிக்கவும். தூக்க கலக்கத்திலிருந்து பதிந்தது.//

என்ன மீறல்? புரியவில்லை!என்றென்றும் அன்புடன்
பாலா
 
பாலா, உங்களின் பதிவில் 3-4 பாடல்களுக்கு பல்லவியை பதிய சொன்னீர்கள். நான் 2 பாடல்களுக்கான பல்லவியை பதிந்ததால் தான் விதிமீறல் என்று சொன்னேன்.
 
முதல் பின்னூட்டம் தொடுத்த அதே அனானிமஸ் மீண்டும்....

என்னை மாதிரி வேறு யாராவது எழுதியிருந்தால் நானும் உங்களைபோல்"மாற்றான் தோட்டத்து மல்லிகை,அடுத்தவன் பொண்டாடிக்கு ரோசா குடுக்கலாமா என்று எழுதிருருப்பேன்..ஆனா நிஜம் வேறங்க!!!

நாராயணன் சரியாக சொன்னார்...கல்யாணம் ஆகிவிட்டால் காதல் வரக்கூடாது என்ற ஒற்றை சிந்தனை தேவையா??...மனதுக்குள் இயல்பாக தோன்றும் உண்ர்வுகளை வெளிப்படுதினேன்...உடனே அடுத்தவன் மணைவிக்கு ரோசாப்பூ கொடுக்கத்தான் காதலர்தினமா என்று கேட்டால் என்ன சொல்ல...
அவரவர் வாழ்க்கை அவரவர் பார்வை...இதில் நிரந்தர சரிதவறு எதுமில்லை...இதுதான் நிதர்சனம்........
 
அனானிமஸ், உங்க பின்னூட்டத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். எல்லாரும் நல்லயிருந்தா சரிதாங்க. முக்கியமா அந்த புருஷனுக்கு தெரியாம பார்த்துக்குங்க. அப்பறம் அவரு கோபத்துல யாரையாச்சும் பரலோகம் அனுபிச்சிறப் போறாரு.....நீங்களும் பத்திரமா இருங்க...
 
அனானிமஸ், இப்போ தான் ஞாபகம் வந்திச்சி தலைவா. 'கள்ளக் காதல்' என்றால் என்ன?
 
ம்ம். கொஞ்சம் சீரியஸா போகும் போல இருக்கு. நான் கேட்கும் கேள்விகள் உணர்வும், உண்மையும் நிறையவே யோசிப்பும் வேண்டியவை. ஆகவே ஒரு வரியில்,நல்லது, கெட்டது என்கிற அமைப்புமுறை சார்ந்த பதில்களை தவிர்த்தால் நலம்

அநாமதேய நண்பருக்கு, நீங்கள் பூ கொடுங்கள். காதலை சொல்லுங்கள். ஆனால், இந்த உறவுகளின் நிலைத்தன்மை என்னவாயிருக்கும் ? அந்தப் பெண்ணின் கணவருக்கு இது தெரியவந்தால் உங்களின் நிலை என்ன? கல்யாணத்திற்கு பின் வரும் காதலுக்கு முக்கிய காரணங்கள் எவை. செக்ஸ் தேவையா அல்லது எதிர்ப்பார்ப்பா ?

விஜய்,
'தினந்தந்தி' படிக்கும் வாசகனைப் போல அல்லாமல், கொஞ்சம் நிதானமாய் யோசிப்போம். கல்யாணம் எல்லா காதலுக்கும் முடிவா ? திருமணத்திற்கு பின் நீங்கள் கொண்ட எல்லா எதிர்ப்ப்பார்ப்புகளும் பூரணம் பெற்றுவிட்டதா ? திருமணத்திற்கு பின் உங்களுக்கு எல்லா பெண்களும்/ஆண்களும் நிறைவு பெற்றுவிட்டனர் சென்று அழுத்தமாக சொல்ல முடியுமா ? சரியாகவே அல்லது சரிவர நடக்காத திருமணங்களின் விழுப்புண்ணை பேக்கேஜ் போல காலமுழுக்க சுமந்து கொண்டு சுற்றவேண்டுமா?

சம்பந்தமில்லாத இன்னொன்று, ஒரின சேர்க்கையாளர்கள் இந்தியாவில் குற்றமாய் பார்க்கிறார்கள். ஒரு சந்திப்பில் கூட நமது பிரதமரும், கனடிய பிரதமரும் அமருகையில் பத்திரிக்கை நிருபர்களின் வாயிலாக இந்தியாவில் அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு முடியவே முடியாது என்று இந்திய பிரதமரும், வழங்கிவிட்டோம் என்று கனடிய பிரதமரும் பதிலளித்தார்கள். ஆக, உலகம் முழுக்க நடக்கும் நிகழ்வினைக் கூட தவறு என்று பார்க்க கற்று கொடுத்திருக்கிறது நமது கல்வியும், அரசியலமைப்பும். பின்பு இதனை விரிவாக எழுதுகிறேன்.
 
காதலுக்கு கல்யாணம் முடிவுன்னு சொல்ல வரல. காதலுக்கு கல்யாணம் ஒரு அங்கீகாரம். ஏனுங்க திருமணத்திற்கு அப்புறம் எல்லா எதிர்பார்ப்பும் பூரணம் பெறுகிறது என்று நான் சொல்லல. எதிர்பார்ப்பு தான் காதலை உயிரோட்டமா ஓட வைக்குதுன்னு சொல்றேன். திருமணத்திற்கு முந்திய காதலில் இருந்த அதே எதிர்பார்ப்பு திருமணத்திற்கு பிறகும் தொடரவேண்டும். அதை தான் நான் சொன்னேன்.

//திருமணத்திற்கு பின் உங்களுக்கு எல்லா பெண்களும்/ஆண்களும் நிறைவு பெற்றுவிட்டனர் சென்று அழுத்தமாக சொல்ல முடியுமா ?//

மனைவியோ/கணவனோ இறைவன் கொடுத்த வரங்கள். திருமணத்தின் வழியாக நிறைவு பெற்றுக் கொள்வதும், கொள்ளாததும் உங்கள் கையில் தான். நீங்களும், உங்கள் மனைவியும் வாழ்க்கை கப்பலின் மாலூமியாக இருந்தால் ஏன் நிறைவு பெற முடியாது?

//சரியாகவே அல்லது சரிவர நடக்காத திருமணங்களின் விழுப்புண்ணை பேக்கேஜ் போல காலமுழுக்க சுமந்து கொண்டு சுற்றவேண்டுமா?//

எல்லாத் திருமணங்களும் அப்படி தான் இருக்குமா என்ன? விழுப்புண் பட்ட நீங்க தான் எப்படி சரிபண்றதுன்னு கண்டுபிடிக்கனும் அப்போ தான் சுபிட்சமா இருக்க முடியும், அதை விட்டு எனக்கு விழுப்புண் இருக்குன்னு காலமுழுக்க பேக்கஜ் கட்டி அலஞ்ச யாருங்க பொறுப்பு?

ஏனுங்க கனடா நாட்டு கலாச்சாரத்தையும், நம்ம நாட்டு கலாச்சாரத்தையும் ஒப்பிட முடியுமா? இருக்கிற சூழ்நிலைக்கேற்றார் போல தான் சொல்ல முடியும். அதுக்காக ஓரின புணர்ச்சியை தப்பில்லன்னு சொல்றது இந்தியர் நமக்குக்கு கொஞ்சம் ஓவர் தான். எல்லாத்தையும் காப்பியடிக்க முடியுமா?
 
//உலகம் முழுக்க நடக்கும் நிகழ்வினைக் கூட தவறு என்று பார்க்க கற்று கொடுத்திருக்கிறது நமது கல்வியும், அரசியலமைப்பும். பின்பு இதனை விரிவாக எழுதுகிறேன்.//

சரி தான் அதுக்காக ஓரின புணர்ச்சியை கரெக்டுன்னு சொல்லனுமா என்ன? தேவையில்லாம கல்வியும் அரசியலமைப்பும் ஏங்க இதுக்காக குற்றம் சொல்றீங்க.
 
//ஏனுங்க கனடா நாட்டு கலாச்சாரத்தையும், நம்ம நாட்டு கலாச்சாரத்தையும் ஒப்பிட முடியுமா? இருக்கிற சூழ்நிலைக்கேற்றார் போல தான் சொல்ல முடியும். அதுக்காக ஓரின புணர்ச்சியை தப்பில்லன்னு சொல்றது இந்தியர் நமக்குக்கு கொஞ்சம் ஓவர் தான்.//
விஜய் நீங்கள் விவாதிக்கும் மற்ற விடயங்களில் எனக்கு no comments என்றபோதும், இதைப் பற்றிக் கதைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

முதலில் நீங்கள் சொல்லும், 'நம்ம நாட்டு கலாச்சாரம்'தான் என்ன? Valentines dayம், New Year Celebrationsம் (இன்னும் பல விசயங்கள் இருக்கிறது) எந்த நாட்டுக்கலாச்சாரம்?
இல்லாவிட்டால் ஓரினச்சேர்க்கையாளர்கள் எங்கள் சமூகத்தில் முந்தி இல்லைதான் என்கின்றீர்களா? Heterosexual மாதிரித்தான் Homosexualம் இயல்பான ஒன்று. எவரும் தான் gayயாய் lesbianயாய் மாறவேண்டும் என்று வரிந்துகட்டுவதில்லை. அவரவர்களில் உடல்களில் ஏற்படும் மாற்றம்/புறக்காரணிகள் என்பனவே இதற்கு முக்கிய காரணிகள். எப்படி எங்களை இனி opposite sexஐ பார்க்கக்கூடாது/திருமணஞ் செய்யக்கூடாது என்று கட்டளையிடுவது வன்முறையோ அப்படியே ஒருவர் gayயாய் இருக்கமுடியாது என்று கட்டளையிடுவதும். மற்றபடி, Being gay or lesbian is only for sexaul relationship (பார்க்க உங்கள் வாக்கியம்: ஓரினப்புணர்ச்சி) என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பின்குறிப்பாய், கனடாவில் homosexual marriagesற்கு இன்னும் முறையான அனுமதி கொடுக்கப்படவில்லை. அதற்கான விவாதம் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. பிரதமராயிருக்கும் Paul Martin கட்சியிற்குள்ளேயே இரண்டு குழுக்களாகப்பிரிந்து இதற்கு அடிபட்டுக்கொண்டிருக்கின்றனர். இதனாலேயே Liberal ஆட்சி கலைந்தும்போகலாம் என்றும் பத்திரிகைகளில் எழுதுகின்றார்கள்.
 
வாழ்த்துக்கள். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது என்று இதிலிருந்து தெரிகிறது. தொடரவும், நீண்ட நாள் இப்படியே இருக்கவும் என் வாழ்த்துக்கள்.

எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் ? இந்தியாவிலேயே மிக அதிகமான எய்ட்ஸ் நோயாளிகளை கொண்டுள்ள மாநிலம் தமிழகம். அதிலும், மதுரை, நாமக்கல் மாவட்டங்கள் ஸ்கோர் கார்ட்டில் எல்லோரையும் தோற்கடிக்கின்றன. இதன் காரணம் என்னவென்று தெரியுமா? உண்மையில் இந்திய கலாச்சாரம் என்பது செக்ஸினை வாழச்சொன்ன கலாச்சாரம், இதெல்லாம் மேல் நாட்டிலிருந்து வந்தது என்று சொன்னால், அதில் உணமை கொஞ்சம் கூட இல்லை.

நீங்கள் சொன்ன இதே கலாச்சார தேசத்தில் தான் மன்னர்களுக்கும், தளபதிகளுக்கும் நிறைய மனைவிகள் இருந்து வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள். இராஜ புத்திர மன்னர்கள், தோல்வி எனத் தெரிந்து போருக்கு கிளம்பும் முன்னாள், நன்றாக ஒபியம் அடித்துவிட்டு, மனைவிகளை புணர்ந்து விட்டு, அம்மணமாய் போருக்கு வெறியுடன் சென்று மாள்வார்கள் என்று "வந்தார்கள் வென்றார்கள்"-ல் படித்திருக்கிறேன். உலகின் மிக முக்கிய காம நூலான "காமசூத்திரா"-வை அமெரிக்கர்களோ, ஆப்ரிகர்களோ எழுதவில்லை. ஒரு காலகட்டத்தில் எவ்வளவு தான் புனைவுகள் எழுதப்படினும், அந்த காலகட்டத்தின் இயல்புகள் அந்த புனைவுகளில் வராமல் போகாது. அப்படிப் பார்த்தால், என்னதான் காமசூத்திராவை ஒரு பிரம்மச்சாரி எழுதியிருந்தாலும், அக்கால கட்டத்தில் உள்ள உண்மை நிலைமை கொஞ்சமாவது வெளிப்பட்டிருக்கும்

அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். நிறைய நாட்டுப்பாடல்களை கேளுங்கள். கி.ராஜநாராயணனை படித்துப் பாருங்கள். தமிழக கிராமங்களில் எந்த அளவிற்கு, பாலியல் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்று தெரியும். இரண்டு தலைமுறைக்கு முன்னுள்ள மனிதர்களை கணக்கிலெடுத்து பாருங்கள் (உங்க/எங்க தாத்தா, பாட்டன், பூட்டன்) எல்லோருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். இந்திய அரசியலைப்பு சட்டம், மனு தர்மத்தை அடிப்படையாக கொண்டது என்பது உலகறிந்த விசயம். மனு தர்மத்தில் பெண்ணோடு, பெண் உறவு கொண்டால் அதற்கான ஏதோ தண்டனை இருப்பதாக அம்பையின் (?!) கதையில் படித்திருக்கிறேன். ஆக, நீங்கள் சொல்லும், so called வெஸ்டர்ன் கலாச்சாரத்தின் பாதிப்புகள் நமக்கு புதிது ஒன்றுமில்லை.

இந்த வாதங்களை விட்டாலும், ஏன் நீங்கள் ஒரினச்சேர்க்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது ? தனி நபர் ஒரின சேர்க்கையாளனாக இருப்பது அவரவர் தனி விருப்பம். அது அவர்களின் சுதந்திரம். ஒரு சுதந்திர நாட்டில், தன் தேவையை பிறர்க்கு தொல்லை தராமல் தீர்த்துக் கொள்ளும் பட்சத்தில், நமக்கேன் அதில் வெறுப்பு வருகிறது ?அதில் நீங்களோ நானோ எப்படி குறுக்கிட முடியும் ? குடும்பம் என்கிற அமைப்பைவிட வேறு நல்ல மாற்று அமைப்புகளும் நம்மிடமில்லாத காரணத்தினாலேயே, மற்ற அமைப்புகள் எல்லாம் தவறு என்று எப்படி வாதிட முடியும் ? இதைத் தான் அடிப்படையில் கட்டமைப்பு கொண்டிருக்கும் வாதமாக நான் பார்க்கிறேன். இந்தியாவிலேயே, கேரளத்தில் ஒரு உயர்நீதி மன்றத்தில், இரு பெண்கள் தாங்கள் சேர்ந்து வாழ, வழக்கு போட்டு அதில் ஜெயித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படையில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், மனிதர்கள் மனிதர்கள் தான். ஆக, மனிததுக்கு மரியாதை என்பது அந்த மனிதனை மதிப்பது. மனிதனின் தேவைகள் என்பது வேறு. ஆதாம் ஏவாள் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் incest விசயங்கள் இருந்திருக்கும் என நம்பலாம். ஆக, இவையனைத்தும் நடந்திருக்கலாம். இந்தியர்கள் தான் உலகிலேயே மிக அதிக அளவிற்கு பாலியல் மன அழுத்தத்திற்கு (sexual depression) உள்ளாகிறார்கள் என்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. சற்றே, சிந்தாதிரிப்பேட்டை குடும்ப நல வழக்கு மன்றத்திற்கு வந்து பாருங்கள். தமிழகத்தின் குடும்ப அமைப்பு எந்தளவிற்கு உள்ளது என்று தெரியவரலாம். மேலும் நாம் எல்லோருமே என்னையும் சேர்த்து இதனை ஒரு 'ஆணின் பார்வை'யாக பார்க்கிறோமோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. யாரேனும் பெண் வலைப்பதிவாளர்கள் இதற்கான பதிலை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

என் கேள்வி, பரிபூரணம் என்பது சாத்தியமா என்பதை ஆராய்வதிலேயே உள்ளது. அப்படி பரிபூரணமாய் உள்ளவர்கள் இருப்பின் நல்லது. சந்தோஷம். இல்லாதவர்கள் ?

உறவு என்பது எதற்காக உருவாகிறது ? பரஸ்பர நம்பிக்கையிலும், பகிர்ந்து கொள்ளூதலிலும் தானே. அப்படி அது நடக்காத பட்சத்தில் அவ்வுறவு, கேள்விக்குறியாகிறது. நம்பிக்கைகள் பொய்த்து போகும்போது வலுக்கட்டாயமாய் வேறொரு உறவினையோ, நம்பிக்கைகளையோ முன்னோக்கி செல்வது மனித இயல்பு. இது ஒரு இடியாப்ப அல்லது சிங்கப்பூரில் இருப்பதால் நூடுல்ஸ் சிக்கலான கேள்வி. அடிப்படைவாதமாக கட்டமைக்கப்பட்ட சில கோட்பாடுகளை முன்வைத்துக் கொண்டு, நிறைய பேர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்களா அல்லது, நமது சமூகவியல் எல்லைகள் இத்தகைய உறவுகளை தவறாக பார்ப்பதனால் வரும் சிக்கல்களை எண்ணி பேசாமல் இருந்து வருகிறார்களா என்பதே ? இது வெறும் வார்த்தை விவாதங்களை தாண்டி, நுணுக்கமாக பார்க்கவேண்டிய பார்வை என்று தோன்றுகிறது.

உடனே, நாராயணன் கள்ளக் காதல் பார்ட்டி, 'கே' பார்ட்டி என்று முடிவு கட்டிவிடாதீர்கள் ;-)
 
டிசே,

தகவலுக்கு நன்றி. பின்னூட்டத்தை சரி செய்ய இயலாது என்ற போதிலும், கனடா நாட்டு விவரத்தை சரி செய்தமைக்கு நன்றி. மற்றவர்களுக்கு, கனடா நாட்டில் நான் கூறியவாறு, ஒரின சேர்க்கையாளர்கள் வாழ்தல் இன்னும் சட்டமாக்கப்படவில்லை. தவறான தகவலுக்கு என் தலையில் தாராளமாக மொளஸினால் குட்டலாம்.
 
for all you know she might have liked that baloon and wished that her husband should have got her one.or perhaps she wanted to fall in love and enjoy being in love but was too afraid to do that or could not find anyone worth loving.it is also possible that she likes baloons, of all shapes and colors just like a child.there are many such possibilities.but it may be that some men suffer from devadas syndrome.
they seem to get some pleasure in
getting defeated in love and become
either cry babies or stupid poets who write nonsense with a heavy dose of sentiments.what a horrible cocktail these comments are.
wichita
 
This comment has been removed by a blog administrator.
 
the baloon aunty (she is married !!) clearly reflect the power of the Western culture and its impact on us. Call it culture assasination or detoriaration, our people unmindful of their tradition and its high value system, just like that embrace all the unwanted elements from the West and try to emulate. I only wish if we imbibe and emulate their road discipline, public etiquette, courtesy and the conviction to excel, we can definitely raise to better heights.
Vazhga Western culture, athanudan vaLarga num makkaL
 
ஒரு குழப்பம்!
Narainம் நாராயணனும் ஒருவர்தானா?
 
ஓரினச் சேர்க்கை என்பது ஒரு அருவருப்பான விடயமாகவே என் மனதில் பதிந்திருந்தது.
முன்னர் நான் Martina Navaratilovaவின் Tennis matchஐ விருப்பமாகப் பார்த்து வந்தேன். அவருக்கு இன்னொரு செக்கெஸ்லோவிய ரெனிஸ் வீராங்கனையுடன் பாலியல் தொடர்பு இருக்கிறது என்ற செய்திகளைப் பார்த்த பின் எனக்கு Martina Navaratilovaவையே பார்க்க அருவருப்பாக இருந்தது.
யாருடனும் இது பற்றிப் பேசாவிட்டாலும் எனக்குள் கோபப் பட்டேன்.

பின்னர் ஒரு முறை என் மகனின் பாடசாலைக் கொப்பியொன்றில் ஒரினச் சேர்க்கை பற்றிய குறிப்புகள் இருந்ததைக் கண்டேன். Ethic பாடத்தில் அவர்கள் இது பற்றிப் படித்திருந்தார்கள்.
அதன் பின் அவனிடம் இது பற்றிப் பேசிய போது அவன் தனது Ethic புத்தகத்தையே தந்தான்.
அப்போதுதான் இதன் இயல்புநிலை புரிந்தது.

டிசே தமிழன் சொல்வது போல Heterosexual மாதிரித்தான் Homosexualம் இயல்பான ஒன்று. எவரும் தான் gayயாய் lesbianயாய் மாறவேண்டும் என்று வரிந்துகட்டுவதில்லை. அவரவர்களில் உடல்களில் ஏற்படும் மாற்றம்/புறக்காரணிகள் என்பனவே இதற்கு முக்கிய காரணிகள்.

இதில் நாம் தலையிடுவது அநாவசிய வேலை.
 
திருமணமான ஆணொருவன் காதல் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பெண் பின்னால ஓடுவதோ
அல்லது திருமணமான பெண்ணொருத்தி காதல் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு ஆண் பின்னால் ஓடுவதோ
மாற்றான் மனைவி மேல் ஆசை கொள்வதோ
மாற்றாள் கணவன் மேல் ஆசை கொள்வதோ மிகவும் தப்பான விடயங்கள்.

அதற்காக - என்றோ ஒரு நாள்
வசீகரமான ஒரு பார்வையின் வீச்சில் அல்லது
அன்பான ஒரு பேச்சில் அல்லது
இயல்பான ஒரு கனிவில்... ஒரு போதுமே மனசு தடுமாறியதில்லை என்று சொல்வது பொய்.

ஆண்களுக்குப் போலவே பெண்களுக்கும் மனசு தடுமாறலாம்.
ஆனால் ஒழுக்கம் பண்பாடு என்று சில விடயங்கள் இருக்கின்றன அல்லவா?
அதனால் மனசைக் கட்டுப் படுத்துகிறார்கள்.

மனைவியை மிகமிக ஆழமாக நேசிக்கும் ஒரு கணவன் இன்னொரு பெண்ணைக் கண்டு தடுமாறுவதில்லையா..!
அதே போல கணவனை ஆழமாக நேசிக்கும் ஒரு மனைவியும் தடுமாறலாம்.

இங்கே மனசைக் கட்டுப் படுத்த முடியாதவர்கள்தான் தவறிப் போகிறார்கள்.
 
'பலூன்' நாராயணன், டிசே தமிழன்,

இந்த ஓரின,பாலின புணர்ச்சி தலைப்பிலிருந்து நான் ஜகா வங்கிக்கிறேன். நீங்கள் சொல்வதையும் நான் மறுமொழிக்கவில்லை. அவைகளை நான் நிறைய படித்துக் கேட்டுமிருக்கிறேன். ஆண் பாலியல் தொழிலாளிகளைப் பற்றி கொஞ்ச நாள் முன்னால அமெரிக்கவில இருக்குதுன்னு நான் ஆச்சரியமா கேட்டுட்டு இருக்கும் போது மும்பைல காலேஜ் பசங்க அந்த தொழில்ல கொடிக்கட்டி பறந்ததையும் படிச்சேன். எதோ அவசரத்துல வேலைக்கு நடுவில ஒற்றை கண் பார்வையோட அந்த பின்னூட்டமிட்டு விட்டேன். நிறைய விவாதிக்க வேண்டும் போல உள்ளது. ஆனால் இந்த பதிவுக்கு அந்த தலைப்புங்கிறது... விவாதம் தடம் மாறிவிட்டது. தனியா ஒரு பதிவு போடுங்களேன்.

இந்த வார கடைசியில் ரொம்ப ரொம்ப அவசரமாக ஊருக்கு போக வேண்டியிருப்பதால் வீட்டிலும் வேலை முதுகெலும்பை ஒடிக்கிறது. இரண்டுவாரம் அல்வாசிட்டி காயுமென்பதால் முடிந்தவரை பதிவும் பின்னூட்டமும் இடுகிறேன்.

ஆனால் இந்த பதிவின் பலூன் பார்வைக்கும் நிறைய அம்மணிகள் கலந்துக் கொண்டு அவர்களின் பார்வைகளைக் கொடுத்தால் ஒரு முழுவடிவம் கிடைக்கும். தொடருங்கள்... பிறகு சந்திக்கிறேன்.
 
யோவ் அல்வா, தின்னவேலில எங்கய்யா இருக்கீரு?
 
This comment has been removed by a blog administrator.
 
ரோசா அண்ணாச்சி, பாளையங்கோட்டைய தாண்டுனா அந்தாப்புல இருக்கிற ஹைகிரவுண்டையும் தாண்டி தியாகராசநகருங்கோ....
 
சந்திரவதனா, இரண்டு பெயர்களும் என்னை குறிப்பதுவே. விஜய், சொந்த ஊருக்கு வருவது என்பது சந்தோஷமான விஷயம். தமிழகத்தில் உங்கள் ஊரில் எவரிடமும் உங்கள் பதிவினை காட்டிவிடாதீர்கள் ;-) உயிருக்கு உத்தரவாதங்கள் தர முடியாது. சென்னை தொட்டீர்களேயானால், மறக்காமல் தொலைபேசுங்கள். போனில் கலாய்க்கிறேன்.

நீங்கள் சொன்னபடி, ஒரின சேர்க்கையாளர்கள் விசயத்தை சற்றே ஆராய்ந்து தனி பதிவாக இடுகிறேன்.சாருவின் கோணல் பக்கங்களில் ஆண் பாலியல் தொழிலாளிகள் (ஜிகாளு) எழுதியிருப்பார். தமிழகத்தில் எனக்கு தெரிந்த அளவில் பாலியல் சார்ந்த கட்டுரைகளை சாருவும், ஜே.பி. சாணக்யாவும் தான் வெகுவாக எழுதி வருகிறார்கள். வசந்திற்கு ஏதேனும் விவரங்கள் தெரிந்திருக்கலாம்.
 
தியாகராஜ நகர் நல்லாவே தெரியும்,சரி வரும்போது பாத்துக்குவோம் (வண்ணாரபேட்டை)
 
விசிதா, உங்கள் பார்வைக்கு நன்றி. நீங்கள் சொன்னதுபோல அந்த பெண் பார்த்ததாக நினைவில்லை. அது என்ன தேவதாஸ் சின்ட்ரோம் ? உணர்வுகளை வெளிப்படுத்துவதனாலேயே ஒரு மனிதன் சறுக்குவானென்றால், நான் எதையும் சொல்லி புரிய வைக்க இயலாது.

மன்னிக்கவும்: இதற்கு முன்னிட்ட பின்னூட்டத்தை அழித்துவிட்டேன்
 
திருமணத்தின் பின் காதல் வரும். காதலிக்கலாம். இதற்கு விதிவிலக்கு யாருமல்ல. ஆனால் எத்தனை பேர் உறவு என்று ஒன்றுக்குள் புகுந்து கொள்கின்றார்கள் என்பதுதான் கேள்வி. ஆண்கள் சிலவேளைகளில் இவற்றை ஒத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்கள் நிச்சயமாக ஒத்துக் கொள்ளப் போவதில்லை. தம்மைப் பத்தினி என்று பிரகடனப்படுத்தவே “எல்லா” பெண்களும் விரும்புவார்கள்.
என் முற்போக்கு நண்பன் ஒருத்தன் சொன்னான். திருமணத்தின் பின் காதலிப்பது தவறில்லை. ஆனால் என் மனைவியை நான் நேசிக்கின்றேன். அவளுக்குத் துரோகம் செய்வதை நான் விரும்பவில்லை. என் மனச்சாட்சி அதற்கு இடம் கொடுக்கிறது இல்லை. ஆனால் பல பெண்கள் என்னை டிஸ்ரேப் பண்ணுகின்றார்கள். சிலவேளைகளில் நான் மனைவியுடன் உறவு கொள்ளும் போது எனக்குப் பிடித்த ஒரு பெண்ணை நினைத்துக் கொள்வேன் என்றார். நான் சொன்னேன் இதை விட நீங்கள் வேறு பெண்ணோடு உறவு வைத்திருப்பது ஒன்றும் துரோகம் இல்லை. இதுதான் மிகக் கொடுமை என்று. இதைத் தான் எம்மக்கள் பலர் சமூகத்திற்குப் பயந்தும் எல்லாவற்றிற்கும் பயந்தும் செய்துகொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
 
//பெண்கள் நிச்சயமாக ஒத்துக் கொள்ளப் போவதில்லை. தம்மைப் பத்தினி என்று பிரகடனப்படுத்தவே “எல்லா” பெண்களும் விரும்புவார்கள். //

இதனை முன்னிறுத்தி நீங்கள் சொல்லவருவது என்ன? சமூக அமைப்பில் மாறுதல்கள் வேண்டும் என்று சொல்கிறீர்களா அல்லது, பெண்களை பற்றி அழுத்தி வைக்கப்பட்ட புனைவுகளை, பிற்போக்குத்தனங்களை (உதா. பத்தினி, கற்புக்கரசி, சுமங்கலி)கைவிடமாட்டார்கள் என்பதா ? உங்களின் விரிவான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
 
சில விடையங்கள் முடிவில்லாமல் விமர்சனத்திற்கு உள்ளாகும். அது போல்த் தான் நான் பெண்ணியம்ää பெண் சுதந்திரம் என்பவற்றையும் பார்க்கின்றேன். பெண்ணியம் பேசும் பெண்களிலேயே பல வேறுபாடுகள்ää தளங்கள் இருக்கின்றன. எவ்வளவுதான் முற்போக்குத் தனமாகப் பேசினாலும் நாம் பிறந்து வளர்ந்த சு10ழல் சமூகம் என்பவற்றோடு ஒத்துப்போக வேண்டும். மற்றவர்கள் எம்மைத் தவறாக எடை போட்டு விடக்கூடாது என்பதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் கவனமாக உள்ளார்கள். கற்பு என்று ஒன்றில்லை என்று கூறினும்ää சுத்தம் என்று ஒன்றில்லை என்று பிறருக்குப் பிரச்சாரம் பண்ணினாலும் தமக்கென்று வரும் போது மென்று விழுங்குவார்கள். (இது கொஞ்சம் தலித்துக்கு வக்காளத்து வாங்கும் எழுத்தாளர்கள் தாங்கள் தலித்துக்கள் இல்லை என்று கூறுவது போல்த்தான்) எப்போதும் தம்மை ஒரு உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாம் உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர்களாகத் தம்மை பிரதிமை பண்ணுவார்கள்.
உணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்டதல்ல. இந்த உணர்வு. செக்ஸ் என்ற விடையமே ஒரு குற்றமான விடையம் போல் தான் எமது சமூகம் பார்க்கின்றது. திருமணம் செய்து குழந்தைகளும் பிறந்து விட்டால் முக்கியமாகப் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு இருக்கக் கூடாது என்பது போல்தான் எமது சமூகம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. எவ்வளவுதான் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் வைத்திருப்பினும். வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும் பிற்போக்குத் தனமாகவும் மூடநம்பிக்கைகளுக்குள்ளும் உறைந்து போயிருப்பினும் “கள்ளத் தொடர்பு” என்பது எமது பெண்களுக்குள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆண்கள் இதனை கொஞ்சம் வெளிப்படையாகவே செய்கின்றார்கள். பெண்கள் மிகவும் ரகசியமாகச் செய்கின்றாள். இதுதான் வேறுபாடு.
இங்கே சரி பிழை என்பதற்கான கேள்வி இல்லை. திருமணம் ஆன ஒரு ஆண் தனது மனைவியை விடுத்து வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்தால் அது தவறு. ஆனால் ஆண்கள் தண்டனைக்கு உள்ளாவது மிகமிகக் குறைவு. மாறாக அவர்களுக்கு அது ஒரு தகுதியாக பிரகடனப்படுத்தப்படுகின்றது. அதே வேளை ஒரு பெண் தனது கணவனை விடுத்து வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்தால் அங்கே குடும்பம் குலைவதற்கான சாத்தியங்கள் மிகக் கூடுதலாக உள்ளன.
பெண்ணியம் பேசுபவர்களும் பலவித தரங்களில் தமது கருத்துக்களை வைக்கின்றார்கள். நான் இவற்றிற்குள் அதிகம் போக விரும்புவதில்லை. காரணம் என்; கருத்தோடு ஒத்துப் போகும் பெண்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். எவ்வளவுதான் தம்மை முற்போக்காகப் பிரகடனப்படுத்துபவர்களும் ஒரு எல்லைக் கோட்டைப் போட்டு விட்டு அதற்குள் உழன்று கொண்டிருப்பவர்களாகவே எனக்குப் படுகின்றார்கள்.
 
//இது கொஞ்சம் தலித்துக்கு வக்காளத்து வாங்கும் எழுத்தாளர்கள் தாங்கள் தலித்துக்கள் இல்லை என்று கூறுவது போல்த்தான்)//

அதுக்காக புளுகவா முடியும்? - தலித்தாய் பிறக்காத போது, தலித்தின் துன்பங்களை அனுபவிக்காத போது, ஆதிக்க ஜாதியாய் இருப்பதன் பலனையும் 'ஏதோ ஒரு வகையில்' அனுபவைக்கும் போது!
 
மேலும் .. நீங்கள் தலித்தா?
 
அருமையான பதிவு
 
http://naledu.blogspot.com/2005/02/blog-post.html
 
This comment has been removed by a blog administrator.
 
சின்ன ஆனால் முக்கிய திருத்தம்! 'காந்தன' இல்லை காந்தள்.
 
ஒலகம் பெர்சு மாமே -- நன்றி வசந்த் அந்த பதிவிற்கு. பதிவினை பாராதவர்களுக்கு

" மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கும். அந்த இடத்தைத் தாண்டப் போகிறேன் என்றாலே இப்படித்தான். கால் என்னையறியாமலே பிறேக்கை மெதுவாக அழுத்தும். கார்க்கண்ணாடியினூடு கண்கள் அலை பாயும். அங்கேதான் அவன் நிற்பான். என்ன பார்வை அது! என்னைக் கொக்கி போட்டு இழுத்து விடும் காந்தப் பார்வை. ஒரு கணம்தான். எனது கார் அவனைத் தாண்டி விடும். அந்தப் பார்வையின் வாசம் மட்டும் என்னுள்ளே பரவி மனசெல்லாம் சந்தோச வாசனை வீசும். வாய் மலர்ந்து உதடுகள் விரிந்து தானறியாமலே ஏனிந்த நெஞ்சு விம்மி விம்மித் துள்ளுதோ... என்று முணுமுணுக்கும்.

அந்தப் பார்வை இனித்துக் கொண்டே இருக்கும், வீடு திரும்பிய பின் எதற்காகவாவது என் கணவன் என் மீது சீறிப் பாயும் வரை."
நன்றி: காந்தள் (திருத்தியாச்சு - வசந்த்) [ http://naledu.blogspot.com/2005/02/blog-post.html ]
 
This comment has been removed by a blog administrator.
 
புளுகுவதா? தலித்துக்காக பேசும் மக்கள் யாராவது
தாங்கள் தலித்தா என்ற கேள்வியை எழுப்பினால் உடனே “இல்லை” என்ற பதிலை அவசரமாக வைக்காமால் அது தங்களுக்குத் தேவையில்லாதது என்றாவது கூறலாம் தானே.
ரோசாவசந்த் - பிற்குறிப்பு நீங்கள் தலித்தா என்ற கேள்விக்கு எனது பதில் அது உங்களுக்குத் தேவையில்லாதது. நான் ஒரு பெண் அவ்வளவே.
மேலும் பேசப்பட்ட தலைப்பிலிருந்து வேறு எங்கோ போகின்றோம். திருமணத்தின் பின்னர் காதலிக்கலாமா? இதுதான் நரேனின் கேள்வி. இது என்ன கேள்வி? இல்லையென்று யாராவது கூறினால் அது வெறும் பொய் என்பது என் கருத்து.
முடிந்தால் இந்தனைப் பாருங்கள்.
http://www.thinnai.com/st0120056.html
 
வசந்த் & கறுப்பி, நாம் நம் தலைப்பை விட்டு விலகிவிட்டோம். அனைவருக்கும் நன்றி. இதற்கு மேல், இதனை நீடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆகவே, மக்களை "பலூன் பார்க்கும் பெண்கள்" இத்துடன் தற்காலிகமாக ஒரு "முற்றும்" போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம்.

வசந்த், விஜய், டிசே தமிழன், பொடிச்சி, தங்கமணி, மூர்த்தி, க்கிறுக்கன், ஈழநாதன், பாலா, யெஸ்ஸல், சந்திரவதனா, கறுப்பி, ஹரி, விசிதா மற்றும் ஒரு சாதாரண நிகழ்வினை தன் அனுபவமாக உரைத்து இந்த பதிவிற்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க செய்த என்னருமை அநாமதேய நண்பருக்கும், இன்னும் படித்து விட்டு பின்னூட்டமிடாமல் தன் வேலையை பார்த்து சென்ற நல்லவர்களுக்கும், படிக்காமலேயே போய் புண்ணியம் தேடிக் கொண்ட புண்ணியவான்களுக்கும் நன்றி. நன்றி. நன்றி.

தனியாக இதன் பாதிப்பினாலோ அல்லது சொந்தமாகவோ எழுதிய ராமசந்திரன் உஷா, காந்தள் மற்றும் நான் படிக்காத, கவனத்தில் வராத பிற வலைப்பதிவாளர்களுக்கும் நன்றி. நன்றி.

60க்கும் மேற்பட்ட மறுமொழிகள்!! என் பதிவினை இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பது சந்தோஷமும், பயமும் தருவதாக இருக்கிறது. நீங்கள் இதற்கு மேலும் இதனை கதைக்க விரும்பினால், தாராளமாய் கதையுங்கள்...நான் அந்த ஆட்டத்திற்கு வரவில்லை.. நீங்கள் தனியாக ஆடி கொள்ளுங்கள்.

விஜய் சொன்னதிற்கினங்க, ஒரின சேர்க்கையாளர்கள் பற்றி தனியாக பதிகிறேன். மீண்டும் அனைவருக்கும் நன்றி,நன்றி, நன்றி

எங்க லோக்கல் சென்னைபாஷையில் ... ரொம்ப டாங்க்ஸ்ப்பா...வரட்டா சனங்களே.... வுடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
 
கறுப்பி, பதிலுக்கு நன்றி!

நீங்கள் சொல்வதுபோல் 'அவசரமாய் தலித் இல்லை' என்று மறுப்பதற்கு பின் ஒரு உளவியல் காரணம் இருக்க கூடும்.

ஆனால் ஒருவர் தலித்துக்கு பரிந்து பேசும் போது, பேசுபவர் தலித்தா என்கிற தகவல் தேவையற்றது என்று நான் நினைக்கவில்லை. தலித் தன் பிரச்சனையை பேசிவதற்கும் மற்றவர் 'பரிந்து' பேசுவதற்கும் வித்தியாசங்கள் நிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன். அதன் அடிப்படையிலேயே என் இடையீடு அமைந்தது.

நா.., இதற்கு மேல் இங்கே கிடையாது என்று உறுதியளிக்கிறேன்.
 
இங்கப் போடலாம் என்றுதான் எழுதினேன். ஆனால் எழுதியதைப் படித்தால் இதற்கு சம்மந்தமில்லாததுப் போல் தோன்றியதால், "தோழியரில்" போட்டுவிட்டேன். எப்படியோ உங்கள் பதிவு பலரின் எண்ணங்களை
வெளிக் கொண்டு வந்துள்ளது, அதற்கு வாழ்த்துக்கள்.
உஷா
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]