Feb 19, 2005

நிதமும் கூகிளை காதல் செய்!!

கூகிள்...அட இன்னாடா நம்மாளு லவ் மேட்டரை நல்லா மேஞ்சிட்டு தொழில்நுட்பம் பக்கம் சடார்ன்னு தாவறானேன்னு நக்கீர (ஜூ.வி/குமுதம் ரிப்போர்ட்டர்) பார்வை பாக்காதீங்க. இப்ப எழுதற விசயம் கொஞ்சம் புதுசான பழசு...[ புதுசு பழகினா பழசுதானே ...நற..நற...நற...]

சாதாரணமா கூகிள்-ல போய் தேடுவோம், தேடுவோம்.....தேடிக்கிட்டே இருப்போம். ஆனா, கூகிள்ல இருக்கற மக்கள் நமக்கு நிறைய வசதிகளை கொடுத்துட்டாங்க. என்ன ஒரே பிரச்சனை முக்கால் வாசி புது விசயங்கள் "பீட்டா"-லத் தான் ஓடிட்டிருக்கு...ஆக, இது சூப்பர் ஸ்டார் மாதிரி...எது எப்ப, எப்படி ஆகும்னு சொல்லமுடியாது. ஆனா வேலை செய்யும் போது பேஜாரா வேலை செய்யும். இதுவரைக்கும் எனக்கெந்த பிரச்சனையும் இல்லை...ஆகவே.....

சரி. மேட்டருக்கு வருவோம்.

இங்க பதியபோறது கூகிள் ஸஜஸ்ட், கூகிள் மேப்ஸ், ஜி-மின்னஞ்சல் வன்தகடு, கூகிள் டாஸ்க் பார் கொஞ்சம் பழைசானாலும் கூகிள் கால்குலேட்டர். இது எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சவங்க, உருப்படியா உருப்படாததை விட்டு போயிறலாம்.

கூகிள் ஸ்ஜஸ்ட் (Google Suggest)

கூகிளின் பலமே அதன் பலமான தேடல் தான். ஒரே உள்ளீடைக் கொண்டு நிறைய பேர்கள் உலக முழுக்க தேடியிருப்பார்கள் ( ஜேனட் ஜாக்சன், பமீலா ஆண்டர்சன், பிரிட்னி ஸ்பியர்ஸ், மல்லிகா ஷெராவத், ஜோதிகா, சிநேகா ;-) ). கூகிள் ஸஜஸ்ட் இதனை சுலபமாக்குகிறது. கூகிள் ஸஜஸ்ட்டில் ஒரு உள்ளீடை இடும் போதே, அதேயொத்த பிற தேடல் வார்த்தைகளும் அந்த உள்ளீட்டு பெட்டியிலேயே கீழே விரியும் (drop down) உங்களுக்கு தேவையான தேடல் உள்ளீடு அதில் இருந்தால் உங்களின் விசைப்பலகையின் அம்புக்குறிகளை பயன்படுத்தி, எஸ்கலேட்டர் இல்லாமல், மேலேறி, கீழிறங்கி, தேவையானதை தேர்ந்து எடுக்கலாம். அவ்வாறு வரும் ஆலோசனைகளோடு, அந்த தேடல் குறிகள் எத்தனை முறை தேடப்பட்டிருக்கிறது என்கிற விவரமும் வரும். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தேடல் வார்த்தையினை சார்ந்த, ஒத்த இதர பொறிகளும், அதன் தேடல் விவரங்களும் கிடைக்கும். உங்கள் தேடல் இன்னும் சுலபமாகி, கேபசினோவினை பராக்கு பார்த்துக் கொண்டே, விசைப் பலகையில் கொட்டலாம், அடுத்த கேபினில் பெண்கள் இருந்தால்.

கூகிள் ஸஜஸ்ட் சுட்டி

கூகிள் மேப்ஸ் (Google Maps)

பிற தமிழ் பதிவுகளில் ஏற்கனவே எழுதியது தான். இருந்தாலும், இது அமெரிக்காவிற்கு மட்டுமே. உங்கள் தெரு, பின்கோடு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை வரைப்படங்களின் வழியே பார்க்கலாம். சும்மா இருக்கும்போது உங்கள் வீடு தெரிகிறதா என்று சோதித்து பார்க்கவும். நன்றாக செய்திருக்கிறார்கள். ஆனாலும், நிறைய மாறுதல்கள் வரும் என்று தோன்றுகிறது.

முக்கியமான விசயம், வரைப்படத்தை இடவலமாக, விரிவாகவும் அலச வழியுண்டு. இது சொதப்பலாக தெரிந்தால், பேசாமல் அமேசானின் A9 yellow pages போய் விடுங்கள். புகைப்படத்தோடு உங்கள் தெருவினை காண்பிப்பார்கள். தேடிப்பார்க்கவும், சில சமயங்களில் ஏதாவது மாட்டும். எனக்கு கிட்டியது நண்பனின் அமெரிக்க முகவரியை தேடிப் பார்க்கும் போது வந்த புகைப்படத்தில் ஆப்ரோ-அமெரிக்கர்கள், கையில் துப்பாக்கியுடன் வானம் பார்த்து சுடும் படம் கிடைத்தது. உங்களுக்கும் ஏதேனும் மாட்டலாம்.

கூகிள் மேப்ஸ் | ஏ9 பக்கங்கள் சுட்டிகள்

ஜி-மின்னஞ்சல் வன்தகடு (Gmail Drive)

இது பேஜாரான விசயம். 1GB இருப்பு ஜிமைல் தருகிறது என்பது ஆதாம் ஏவாள் காலத்து விசயம். எப்படி இந்த 1GB-யினை உங்களின் வன்தகடாக மாற்றுவது ? இதுல இருக்கு சூட்சுமம். உங்களின் ஜிமைலினை ஒரு பெரிய சேமிப்பு கிடங்காக மாற்ற முடியும். எல்லா நல்ல/குப்பை விசயங்களையும் இந்த தகட்டில் போட்டு வைத்து விடலாம். முதலில் ஜிமைல் டிரைவ் என்பதை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவுங்கள். உங்களின் "மை கம்பூய்ட்டர்" க்கு சென்று பார்த்தீர்களேயானால் சமர்த்தாக இன்னொரு டிரைவ் உங்களின் கணினியில் "ஜிமைல் டிரைவ்" என்ற பெயரில் சேர்ந்திருக்கும்.

விளையாட்டு இனிமேல் தான் ஆரம்பிக்கிறது. அவசரப்பட்டு, அதனை கிளிக் செய்து சொதப்பாதீர்கள். உங்களின் ஜிமைலுக்கு சென்று பாருங்கள். நீண்ட நாள் பயனாளராக இருந்தால், உங்களுக்கு தற்போது 50 ஜிமைல் இணைப்புகள் வரை கிடைக்கலாம். உங்களுக்கே ஒரு ஜிமைல் வரவேற்பினை அனுப்பி, பயனாளராக பதிந்து கொள்ளுங்கள். இப்போது அந்த புதிதாக சேர்த்த ஜிமைலின் முகவரியையும், கடவு சொல்லையும், ஜிமைல் டிரைவினில் பதியுங்கள். மேட்டர் ஒவர். உங்களுக்கு 1GBக்கான வன்தகடு ரெடி.

நீங்கள் இனி செய்யவேண்டியது, சேமிக்கவேண்டியதை, இழுத்து உங்கள் ஜிமைல் டிரைவினில் இட்டால் போதும். அதுவே உங்களின் கோப்பை உங்கள் ஜிமைல் கணக்கில் கர்மசிரத்தையாக ஒரு இணைப்பாக அனுப்பிவிடும். நீங்கள் கொஞ்சம் ஜித்தராக இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி, ஐபாட்-டுக்கு இணையாக 20/40/80GB வன்தகடுகளை உருவாக்கிக் கொள்ளலாம். திரிஷா விசயங்களையெல்லாம் சேர்த்து வைக்காதீர்கள், இந்தியாவில் பெண்டு கழட்டி விடுவார்கள்.

ஜிமைல் டிரைவ் சுட்டி

கூகிள் டெஸ்க் பார் (Google Deskbar)

இதுவும் கூகிளின் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு ஒவ்வொரு முறையும் ஒரு உலாவியினை திறந்து, அதில் கூகிளின் தளத்தை பதிய வேண்டிய கட்டாயங்களில்லை. உங்களின் டாஸ்க் பாரினிலேயே, உள்ளீடு பெட்டி வந்து விடும். வேண்டுமென்றால், டாஸ்க் பாரிலேயே, தேடல் சொற்கள் இட்டால், அடிமைப் பூதம் பழைய ஜெய்சங்கரின் படங்களில் சடாரென மேல்வந்து "எஜமானே உத்தரவிடுங்கள்" என்று கேட்பது போல, மேலேறி வந்து, உங்களின் தேடல் முடிவுகளை காட்டும். மிகவும் பயனுள்ள குறும்செயலி இது. என்னைப்போல் நீங்களும் அதிகமாய் கூகிளினால்.

கூகிள் டாஸ்க் பார் சுட்டி

கூகிள் கால்குலேட்டர் (Google Calculator)

இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. கூகிளின் உள்ளீடு பெட்டியினை கால்குலேட்டராக உபயோக்கிக்கலாம். வேண்டுமானால் இன்னொரு சாளரத்தை திறந்து 2500 X 128745 + 8746 - 7530 /2345 என்று கணினிக்கே குழப்பம் வருமாறு கொடுத்துப் பாருங்கள். சர்வ சாதாரணமாக கணக்கு பண்ணும். இதுக்கு சுட்டி தேவையில்லை, நீங்கள் உபயோகிக்கும் கூகிளின் உள்ளீடு பெட்டி போதும்.

ஏற்கனவே கூகிளின் வீடியோ சேவை பற்றி பதிந்திருக்கிறேன் ( கூகிள் வீடியோ ) வேறு ஏதாவது சுவாரசியமாக கூகிளில் செய்தால் மறுபடியும் ஒரு தனிப்பதிவாக பதிகிறேன்.

அதுவரை, கணினி விளையாட்டுகளில் "ஏமாற்று சீட்டுகள்" என்று உண்டு. இதன்மூலம் நாம் தொடர்ந்து ஜெயிக்க முடியும். அதுபோல், கூகிளுக்கும் ஒரு ஏமாற்று சீட்டு உள்ளது. வேலையில்லாமல் என்னைப்போலிருக்கும் போது படிக்கலாம் (ஏமாற்று சீட்டு)

I Love Google ;-) ஹி...ஹி...இன்னமும் வெலைன்டன் ஜூரம் போகல...அதான் இந்த மாதிரி தலைப்பு
[321,871,243 - இது தான் அந்த கூட்டுத்தொகை, மேலுள்ள கணக்கிற்கு. கூகிளின் கைங்கரியம் ;-) ]

Comments:
கலக்குறீயே "காதல் நாராயணா"
 
உருப்படாததுன்னு தலைப்பு வச்சுட்டு நல்ல உபயோகமான தகவல்களைக் கொடுத்து இருக்கிங்க நரெய்ன்.
 
நீங்க சொன்ன மாதிரியே கணக்குப் போட்டுப்பார்த்தேன். சரியா வரல. did not match any documents அப்படீன்னு வருது.
 
கணேசு, "காதல்"-ன்னு டைட்டில் கொடுத்து இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதீர்கள் ;-)

வசந்தன், நான் போட்ட கணக்கினை விடுங்கள். அது எனது சொத்து கணக்குமில்லை. அது முக்கியமில்லை. முக்கால்வாசி பேர் தடுமாறுவது எண்களை பெருக்கும் போது தான். உங்கள் விசைப்பலகையில் உள்ள நட்சத்திர குறியினை பயனபடுத்துங்கள். அப்படியும் வரவில்லையென்றால், நீங்களோ இல்லை கூகிளோ எங்கோ சொதப்பறோம் என்று அர்த்தம்.

என்ன சொல்றீங்க, கங்கா, தலைப்புக்கு ஏற்றாற்போல் உருப்படாத விசயங்களை எழுதணுமா ? எழுதிட்டா போச்சு.
 
இல்லை நரேய்ன் தலைவா!! உபயோகம் இல்லாததுன்னு ஒன்னுமே இல்லன்னு 2 நாள் முன்னாடி ஒரு ஸென் கதை இங்க வந்து மாத்தி எழுதினா வாசகர்கள் என்னை என்ன நினைப்பாங்க.
எனக்கு உபயோகம் இல்லைன்னா வேறா யாருக்கு ஆவது உபயோகப் படும்ன்னு நினைச்சிக்கிறேன்.
Link: உபயோகம் இல்லாத ஓக் மரம் இதே மாதிரி உபயோகமான தகவல்களை அள்ளித் தள்ளுங்க
 
ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு பயன்படும் Google Scholar என்ற ஒரு தளமும் Beta வில் உள்ளது. கட்டுரை ஆசிரியர் பெயர், தலைப்புச் சொல் போன்றவற்றைக் குறிப்பிட்டுத் தேடலாம். இது போதாதென்று ஹார்வார்ட், ஸ்டான்போர்ட், மிச்சிகன் போன்ற பல்கலைக் கழகங்களோடு இணைந்து அவற்றின் நூலகங்களிலிருக்கும் நூல்களை digitize செய்யவும் முயற்சித்து வருகிறது ( http://www.print.google.com). முதல் தவணையில் ஹார்வர்ட் நூலகத்தில் இருக்கும் 15 மில்லியன் நூல்களில் 40,000 த்தை digitize செய்யும் பணி தொடங்கிவிட்ட நிலையில், பதிப்பாளர்களும், ஆய்விதழ்களை வெளியிடும் தொழில்முறைக் கழகங்களும் (professional associations) இதை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். American Chemical Society வழக்கே போட்டுவிட்டது. இது எங்கே போய் நிற்குமென்று தெரியவில்லை.
 
கங்கா, அது சும்மா உலூலூவாக்காட்டிக்கும் சொன்னது. ;-)

சுந்தரமூர்த்தி, நீங்கள் பதிந்த விசயங்கள் தெரிந்திருந்தாலும், ஒரு சாதாரண தனிநபருக்கு பெருமளவில் உதவாது என்ற காரணத்தினால் தான் நான் அவற்றை பதியவில்லை. நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், இரண்டு மூன்று அற்புதமான சேவைகள் கூகிளில் இருக்கின்றன.

கூகிள் எஸ்.எம்.எஸ்ப்ருகூகிள் வையர்லெஸ்

இவையிரண்டும் உங்களின் செல்பேசியின் மூலம் செயல்படக்கூடிய விசயங்கள். விரிவாக எழுத ஆசை, ஆனால் பெறும் மறுமொழியாக போய்விடும். அதனால், சுட்டியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

எழுத நினைத்து விட்டது "கூகிள் அலர்ட்ஸ்" எனக்கு தெரிந்து வேறெந்த தேடல் பொறிகளிலும் இந்த வசதியில்லை ( யாஹூவில் தேடல் சொற்தொடரை கொண்டு ஒரு XML - RSS பதிவாக தரும்)ஒரு குறிப்பிட்ட தேடல் உள்ளீட்டை (உதா. சங்கராச்சாரியார், இந்திய அயலுறவு கொள்கை, சச்சின் தெண்டுல்கர்) நிதமும், அல்லது தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனில் இந்த சேவை அதிஅற்புதமானது. என் வாடிக்கையாளர்களின் தொழில் சம்பந்தமான உலகளாவிய விசயங்களை இந்த சேவையின் மூலம் என் ஜிமையிலில் பார்க்கும் வசதி இருப்பதனால், வணிக சந்திப்புகளின் போது, நன்றாக ஜல்லியடிக்க முடிகிறது. இன்னமும் நிறைய பேர் அறியாத சேவையிது.

கூகிள் அலர்ட்ஸ் சுட்டி
 
நரேய்ன் உங்களுடைய அடுத்த கட்டுரை, மதமாற்றம் பற்றி படித்தேன், ஆனால் இப்பொழுது அதனைக் காணவில்லை. அன்று உங்கள் பக்கத்தின் சர்வர் டவுன் என்பதால் என்னால் பதில் மறுமொழி கொடுக்க இயலவில்லை.

Am I looking in the wrong plance?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]