Feb 25, 2005

விர்ஜின் மேரியும், வெஜிடபுள் சமோசாவும்

ஒரு வாரத்திற்கு முன்பு என் வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, லீ மெரிடியன் சென்றிருந்தேன். வழக்கம் போல இளிப்புகள், போலியான வரவேற்புகள், செயற்கையான உபசரிப்புகள் என்று போனது. குடிக்கும் பழக்கமில்லாத காரணத்தினால், நான் ஒரு விர்ஜின் மேரியும் என் வாடிக்கையாளர் வோட்காவும் எடுத்துக் கொண்டு கதைத்து கொண்டிருந்தோம். என் தொழில் விசயமாக மொத்தமே 10 நிமிடங்கள் பேசியிருப்போம். அதன்பிறகு, முழு வெட்டி அரட்டை. மிக நாகரிகமாக விர்ஜின் மேரியை அவ்வப்போது சிப்பிவிட்டு தொடர்ந்தது பேச்சு. கொஞ்சமும் ஒட்டுதலில்லாத சூழலது. செயற்கையான புன்னகைகள், வெட்டித் தனமான அமெரிக்க/ஜரோப்பிய ஜோக்குகள் என பேசிக் கொண்டிருந்தாலும், சற்றே என் நினைவு டீக்கடைகளுக்கு விரிந்தது.

ஸ்டார் ஒட்டல்களில் கொடுக்கும் காசுக்கு பரிமாறபடுபவை வெறும் வெற்று வாய்வார்த்தைகள், ஜாலங்கள். டீக்கடைகள் மிக உத்தமமானவை. இடங்கள் சற்றே அசுத்தமாக இருந்தாலும், கவனிப்பும், பரிமாறலும் அன்பு மிக்கவை. டீக்கடைகள் சுதந்திரமானவை. எவ்விதமான கட்டுக்கோப்புகள் இல்லாதவை. உலகம் பல சமயங்களில் டீக்கடைகளில் எனக்கு விரிந்திருக்கிறது. எல்லா விசயங்களும் டீக்கடைகளில் அலசப்படும். அரசியல், சினிமா, நண்பனின் துரோகம், காதல், அலுவலக ஏற்றத்தாழ்வுகள், குடும்ப பிரச்சினை, டிவி சமாசாரங்கள், திருட்டு விசிடி, மிட்நைட் மசாலா என விரியும் பொழுதுகளில், உலகம் டீயில் தோய்ந்த பிஸ்கெட் போல சாதுவாய் பக்கத்தில் இருக்கும். ஸ்டார் ஒட்டல்களை விட டீக்கடைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. மக்களை தெரிந்து கொள்ள, மக்களை புரிந்து கொள்ள, மக்களின் நாடிதுடிப்பை அறிந்து கொள்ள, டீக்கடைகள் போல வேறெதும் அமையாது. எல்லா தரப்பு மக்களையும் சந்திக்க உகந்த இடம் டீக்கடைகள் தான். டீக்கடைகளை சொல்ல விவரணைகள் தேவையில்லை. ஒரு மாஸ்டர், பாய்லர், அடுப்பு இருந்தால் போதும். நல்ல டீக்கடைகள் அமைவது உங்களின் பூர்வ ஜென்ம பாலன்ஸ் ஷீட்டைப் பொறுத்தது. சென்னையில் கடந்த 15 ஆண்டுகளில் எல்லாவிதமான கடைகளிலும் டீ குடித்திருக்கிறேன். நிறைய கடைகளோடு நீண்ட நாள் நட்புறவுகளுண்டு, கடன் பாக்கிகளையும் சேர்த்து. பத்தாவது படிக்கும்போது ஆரம்பித்த பழக்கம், இன்னமும் தொடர்கிறது.

முதலில் அறிமுகமான டீக்கடை, வடசென்னையின் கொண்டித்தோப்பில் சிவஞானம் (ஞாபகமிருக்கிறதா, தமிழகத்தில் வீரப்பனுக்கு முன் மீசையால் மிக பிரபலமாக இருந்த பெரியவர் ம.போ.சி பெயரிலமைந்த பூங்கா இது)பூங்காவிற்கு எதிரிலிருக்கூடியது. அந்த நாயரின் மகன் என் நண்பனுக்கு பள்ளித்தோழன். எல்லா கதைகளும் ஒடிய காலகட்டமிது. ஒரே நண்பர்கள் கூட்டமாய், "துள்ளித் திரிந்த காலத்தில்" வரும் அருண்குமார் & கோக்களை விட பெரிய ஆனால் பெரிதும் வம்புக்கு போகாத கூட்டமிது. என் இளமைப் பருவமனைத்தும் இந்த டீக்கடையில் தான் கழிந்திருக்கின்றன. சற்றே நசநசவென்றிருந்தாலும், பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தரும் சட்டினியில் தெரியும் கடை நாயரின் அன்பும், எங்களின் கடன்பாக்கியும்.

Aptech-ல் வேலை செய்தபோது ஏற்பட்ட நட்பில் எங்களுக்கு ஒரு புது டீக்கடை தேவைப்பட்டது. புரசைவாக்கம் நெடுஞ்சாலையின் கெல்லீஸின் கடைசியில் இருக்கும் ஹோட்டல் ஹீரா பிடிப்பட்டது. அசைவ விடுதியாயிருப்பினும், அருமையான டீ கிடைக்கும். அங்கு அமர்ந்தவாறே, உலகினை தலைகீழாக்கும் முயற்சிகளில் பேசிக் கொண்டிருப்போம். உலக சினிமா, தொழில்நுட்பம், டிஜிட்டல் ஜிகினாக்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொண்டது இங்கேதான். ஹீரா நள்ளிரவு வரை திறந்திருக்கும், ப்ராஜெக்ட் வேலையிருக்கிறது என்று கூறிவிட்டு, நண்பர்களோடு ஏதாவது ஒரு ஒயின்ஷாப்பில் தண்ணியடித்து விட்டு (எனக்கு பழக்கமில்லை, மற்றும் பெரிதாக அதில் பிடிப்பில்லை) அங்கிருக்கும் காலிப்ளவர் 65-வை காலிசெய்துவிட்டு, அலுவலகத்திற்கு வந்து நள்ளிரவு சினிமாக்களைப் பார்த்துவிட்டு, விடியற்காலை 1, 1.30 மணிக்கு ஷட்டர் இறக்கிய ஹீராவிலிருந்து டீ வாங்கி, நடு ரோட்டில் அமர்ந்து குடித்திருக்கிறோம். முகம் சுளிக்காமல், அந்த கடை தொழிலாளிகளும் சுட, சுட டீப்போட்டு தருவார்கள். வாழ்க நாயர்!!

சற்றே முன் தள்ளி சென்றால், மோட்சம் திரையரங்கத்திற்கருகே ஒரு டீக்கடை வரும், நள்ளிரவு படங்கள் முடித்து வருபவர்களுக்காக. அங்கேயும் பல நாட்கள் அமர்ந்து, மணிரத்னம், ஜார்ஜ் லூகாஸ், சிசில் பி டிமெலி என்று பேசியிருக்கிறோம். சினிமா, தொழில்நுட்பம், பெரியார், அரசியல், காதல், நட்பு, கனவுகள் என்று பேபபபபபபசிக் கொண்டே வாழ்ந்திருக்கிறோம். எத்தனையோ முறை, நள்ளிரவில், விடியற்காலையில் என பேட்ரோல் காவலர்கள் எங்களின் ஜாதகத்தை விசாரித்திருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கெல்லாம் பெண்களில்லை. அவர்களூக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி, வாயை ஊதி காட்டியிருக்கிறேன். லைட், மீடியம், ஸ்ட்ராங்க் என ஊற்றும் டீ டிகாஷனைப் பொறுத்து, அதன் நிறமும், திடமும், சுவையும் மாறும். எப்படியிருந்தாலும், பழுப்பு நிறத்தில் சூடாக இருத்தல் மிக அவசியம்.

டீக்கடைகள் தரும் சுகங்கள் அலாதியானவை. மிக அருமையான நட்புசூழல் டீக்கடைகளில் டீ ஊற்றி வளரக் காத்திருக்கிறது. எனக்கு நாய்களைப் பற்றி மிக அதிகமாக அறிந்து கொண்டதில் டீக்கடைகளுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். பட்டர்பிஸ்கேட் என்கிற வஸ்து பெரும்பாலான டீக்கடைகளில் கிடைக்கும். சில சமயங்களில் நாய்களுக்கும், பல சமயங்களில் எங்களுக்கும் அதுதான் இடைப்பட்ட உணவாகியிருக்கிறது. பட்டர் பிஸ்கேட், கேக், கீரீம் பிஸ்கேட், தேங்காய் பிஸ்கேட்,குட்டி சமோசா தவிர, பல சமயங்களில் நாய்களும், சில சமயங்களில் மனிதர்களும் சாப்பிடும் பொறை என சமர்த்தாய் கண்ணாடி பாட்டில்களில் அமர்ந்திருக்கும் பண்டங்கள், ராவாய் டீக்குடிக்கும்போது கிடைக்கும் அருமையான சைட் டிஷ்கள். இவையனைத்தும் எந்த ஸ்டார் ஒட்டல்களிலும் கிடைக்காது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் விதவிதமாய், கலர்கலராய் திரவ ரூபங்களில் பல்வேறு நாமகரணங்கள் சூட்டிய ஒரே மாதிரியான பழவகைகள்தான். பழுப்பு நிற சூடான டீக்கு ஈடாகுமா இவையெல்லாம் ?

அதன்பின் மயிலாப்பூரில் ஒரு மென்பொருள் நிறுவனவத்தில் வேலை செய்தபோது சென்னையின் மிகப்பெரிய டீக்கடையில் ஐக்கியமாகிவிட்டோம். வேறெங்கே, உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் தான். டாட்.காம் தலைதெறிக்க ஒடிய காலமது. வேலையில்லாமல் இருந்த என் நண்பன் (தற்போது அவன் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில், ஆறு இலக்க வருடாந்திர வருமானத்தோடு, தினமொரு பெக்கும், வளர்ந்துகொண்டிருக்கும் இடுப்பளவுமாக நன்றாக இருக்கிறான்) மதியம் வந்துவிடுவான். அலுவலகத்தில், உணவு இடைவேளை என்று ஒபி அடித்துவிட்டு, டிரைவ்-இன் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். சத்தியமாய் தலையிலடித்து கேட்டாலும் என்ன வெட்டிக்கதைப் பேசினோம் என்பது நினைவிலில்லை. இவ்வாறாக என் வேலைநாட்கள் டீக்கடைகளில் கழிந்தன.

பின் சொந்தமாக நிறுவனத்தினை தொடங்கியதால், அதன் பின் வேறெங்கும் வேலை செய்யவில்லை. ஆனாலும், மதிய நேரங்களில், பிற்பகல்களில், நீண்ட இரவுகளில் என்று டீக்கடைகளுக்கு போக ஏதாவது ஒரு சாக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இவ்வாறு இருந்த காலகட்டங்கள், பெரும்பாலானவை கழிந்த இடங்கள், நுங்கம்பாக்கம் பேசிக்ஸ் பக்கத்திலிருக்ககூடிய பேலஸ் என்கிற டீக்கடையிலும், சங்கீதா உணவகத்தின் எதிரிலிருக்ககூடிய சாய்ஸ் டீக்கடையிலும் தான் பெரும்பாலான நாடகளில் மாலைநேர வாசஸ்தலம். சாய்ஸ் டீக்கடை நிஜமாகவே சாய்ஸான டீக்கடைதான். எல்லாவிதமான டீயும் கிடைக்கும். ப்ளாக் டீ, லெமன் டீ, ஜிஞ்சர் டீ, ஏலக்காய் டீ என பலவகைகளில் டீ குடிக்கலாம்.

நுங்கம்பாக்கத்தின் டீக்கடைகளில் சென்னையினைப் பார்க்கலாம். எல்லாவிதமான மனிதர்களும், எல்லா தரப்பு மனிதர்களையும் இங்கே சந்திக்க இயலும். ஒரு இரண்டு வருடங்கள் ஏதேனும் ஒரு டீக்கடையின் ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால், அந்த பகுதி மக்களைப் பற்றியும், வாழ்வியல் பற்றியும் சுலபமாக படிக்க இயலும். இவ்வாறு சென்னையை சுற்றி நிறைய இடங்களை சொல்ல இயலும். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் போன எல்லா டீக்கடைகளும் எப்படியாவது எங்களை தத்தெடுத்துக்கொள்கின்றன. நுங்கம்பாகக்த்தில் சாய்ஸ், அண்ணா சாலையில் கலிமா (அந்த வெஜிடபுள் சமோசா....ஆஹா..ஆஹா!! இதெல்லாம் அனுபவிக்கனுமய்யா!) சத்யமில் படம் பார்த்தால் இரானி, எத்திராஜ் சாலையிலிருக்கும் ஒரு டீக்கடை, அல்சா மாலின் அருகில் இருக்கும் .நெட், நுங்கம்பாக்கத்திலுள்ள காவேரி காம்பெளக்ஸின் பின்புறமுள்ள டீக்கடை என சென்னை முழுவதும் எனக்கான ஜாகைகள் அநேகம். எவ்வளவு வளர்ந்தாலும், என்னால் டீக்கடைகளுக்கு போகாமல் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. நண்பர்களைப் பார்த்தல், சும்மா இந்த பக்கம் வந்தேன் என எவ்வளவு கதையளந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி, சமூகத்தை வெகு அருகிலிருந்து உற்று நோக்கும் விஷயம் தானோ என்னவோ என்னை அதீதமாய் வசீகரிக்கிறது.

என்னைப்போல சென்னையில் வாழும் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு டீக்கடையுடன் ஜென்ம சம்பந்தம் இருக்கும். குறைந்த பட்சம், மனைவிக்கு தெரியாமல் சிகரெட் அடிக்கவாவது ஒரு பெட்டிக்கடையோ டீக்கடையோ பார்க்காத தமிழன் இருக்க இயலாது. அப்படி இல்லாவிட்டால், ஒன்று அவர்கள் சமுதாயத்தின் உச்சாணிக்கொம்பில் இருக்கக்கூடும், இல்லையென்றால், அவர்கள் சென்னையில் மனிதர்களாக இருக்க லாயகற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து. டீக்கடைகள் இல்லாத ஊரினையும் மக்களையும் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. இந்த ஒரு காரணத்தினாலேயோ என்னவோ, இன்னமும் பெங்களுரின் மீது பிடிப்பே வராமல் இருக்கிறது.

21-ம் நூற்றாண்டில், ஒயின் ஷாப்புகளில், ஒடும் ரயில்களில், மேன்ஷன்களிலும் இலக்கிய கூட்டங்கள் நடப்பதுபோல், ஏன் டீக்கடைகளில் நடப்பதில்லை. சிகரெட்டும், டீயுமாக பொங்கிவரும் கற்பனைக்கு ஸ்டார் ஓட்டல்கள் ஈடுகொடுக்க இயலுமா? டீக்கடைகள் நாயருக்கு சொந்தமாயிருந்தாலும், அது பொது சொத்து. பொது மக்களின் உரிமை. தமிழகத்தின் எதிர்காலம், என்னளவில், டீக்கடைகளிலும், பேப்பர் கடைகளிலும், சலூன்களிலும் தான் இருக்கிறது. சற்றே ஊன்றி கவனித்தால், ஏதோ சாசருக்கு கீழேயும் ஒளிந்திருக்கலாம், தமிழகத்தின் அடுத்த தலைமுறை தலைவர்களும் ஹீரோக்களும்.

சாசரில் ஊற்றாத பின்குறிப்பு: யாரேனும் பின்மாலை (7 -10PM) நேரங்களில் நுங்கம்பாக்கம் சாலையினை கடந்து போனால் ஒரு எட்டு எட்டி சாய்ஸில் பாருங்கள். நான் இருந்தாலும் இருப்பேன். வந்தீர்களேயானால், மிதமான சூட்டில் அருமையான லெமன் டீக்கு நான் கியாரண்டி.

Comments:
வந்துட்டன்...! சாயங்கால நேரத்துல உம் பர்சுக்கு வருதப்பா சோதனை!
 
ஆஹா, எனக்கும் ஒரு டீக்கடை ஞாபகம் வந்துருச்சு!

அதுசரி, பொம்பிளைங்களுக்குன்னு ஏதாவது தனியா டீக்கடை இருக்கா?

என்றும் அன்புடன்,
துளசி.
 
எல்லாம் புரிந்தது ஆனால் விர்ஜின்மேரி என்றால் என்னவென்றுதான் தெரியவில்லை. ஆரஞ்ச் ஜூஸ் மாதிரியா ?.

சின்ன வயசில் நான் டீ கடைகளில் டீ குடித்தது வெகு அபூர்வம். என் இருபது வயது வரை நான் டீகடைகளில் டீ குடித்ததை விரல் விட்டு எண்ணிவிடலாம். உங்கள் பதிவைப் படித்தபின்னர்தான் தெரிகிறது எவ்வளவு இழந்திருக்கிறேன் என்று.
 
கண்ணுக்கும் முன்னால் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள் மெ-து-வா-க ரிவர்ஸில் போ-கி-ற-து (அதுதாங்க Flashback). சென்னைவாசியாக இருந்துகொண்டு குறைந்தது பத்து டீக்கடைகளாவது தெரியாவிட்டால் சென்னைவாசி என்று சொல்லிக்கொள்வதே தண்டம். எங்கள் நாயர் கடையில் உபரியாக கீரைவடை வேறு. சிகரெட் கணக்கு சொல்லும்போது ஆறு கிங்ஸ் பாக்கெட், இரண்டு ஃபில்டர் கோல்டு ஃபிளேக் பாக்கெட், அதில்லாம நாலு தனியா என்று சொல்வதை எழுதிக்கூடக் கொடுக்காமல் கொடுக்கும் மற்றொரு நாயர்...

கூட்டமாகப் போவது - டீ வரும்வரை, வந்தபின், முடித்தபின் என்று புகைவண்டி விட்டுக்கொண்டே இருப்பது, இதில் சுவாரஸ்யமான கோஷ்டிகள், 'நான் கொடுத்துர்றேன் மச்சி' என்று தன் பாக்கெட்டுக்குள் கைவிடுபவர்கள் - என்ன காரணத்தாலோ அவர்கள் பைகளுக்குள் கோந்து அதிகம் ஒட்டியிருக்குமென்று நினைக்கிறேன் - நோட்டுக்கள் வெளியே வரவே சிரமப்பட்டுக் கதறியழும்!!

எங்கள் கதை வேறு - ஒருவேளை அது அந்தக் காலகட்டமோ என்னமோ - சாயந்தரம் ஆறுமணி வாக்கில் டீக்கடை பக்கம் போனால், பிரச்னைகள் அனைத்தும் மறந்துபோகும், யாராவது வருவார்கள், ஏதாவது பேச்சு, புகை, டீ,மறுபடி ஒரு டீ, மறுபடி ஒரு டீ என்று திரும்ப வருவதற்கு எவ்வளவு நேரமாகுமென்று எங்களுக்கே தெரியாது. கோயம்புத்தூர் பக்கத்தில் பேக்கரியுடன் சேர்த்த டீக்கடைகள் இருக்கும் - புகைபிடிக்க அனுமதியும் உண்டு...அது ஒரு ரகம். எங்கள் ஊர்ப்பக்கம் மாஸ்டர் பாய்லர் டீக்கள்தான்; ஆந்திராவில் பாலிலேயே டீத்தூளைப்போட்டுக் கொதிக்கவைத்துக் கொடுப்பார்கள். அது ஒரு வித்தியாசமான சுவையுடனிருக்கும்...வடக்கில் (அஹமதாபாத் ரயில்வே ஸ்டேஷனா?) டீ கேட்டால் நாலு சென்னை டீ அளவில் சேர்த்துக் கொடுத்தார்கள் - கிட்டத்தட்ட அண்டா மாதிரி ஒரு தம்ளரில் ஒரு கிளாஸிலேயே டயாபடீஸ் வந்துவிடுமளவு சர்க்கரை போட்டு...

விர்ஜின் மேரி சமாசாரம் தாண்டி ப்ளடி மேரியெல்லாம் தொடங்குங்கள் தலைவா... (கழுதையோடு சேர்ந்தால் குட்டிச்சுவர் என்பதுபோல, நான் சொன்னால் பிறகு என்ன சொல்வேனாம்!!)

டீக்கடைகளைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம். முடிவற்ற புராணம். நல்ல பதிவு நாராயண்....
 
:))

http://karthikramas.blogdrive.com/archive/22.html
 
/சற்றே ஊன்றி கவனித்தால், ஏதோ சாசருக்கு கீழேயும் ஒளிந்திருக்கலாம், அடுத்த தலைமுறை தலைவர்களும் ஹீரோக்களும். /

நல்ல பதிவு
 
ஸ்பெஷல் ஒன் பை டூ போட்டிருக்கீங்க.

டீக்கடையை நட்பின் குறியீடாகப் பார்த்தால், அதே நட்புகளை பெங்களூர்களின் pub-களிலோ, ஐ.ஐ.எஸ்.சி மெஸ்களிலோ, ப்ரிகேட் ரோட் பக்கத்திலோ சந்தித்தாலும் அதே வாஞ்சைகள் தோன்றலாம்.
 
நான் இந்தியா வந்திருந்த போது ரசித்தவற்றில் ரீ கடையும் ஒன்று. அடிக்கடி ரீ வாங்கிக் குடிப்போம். (சாயா) நாராயணன் The Passion of the Christ பற்றி என்னுடைய தளத்தில் எழுதியிருக்கின்றேன். பாருங்கள். ஆனால் என்னுடைய தளத்தில் ஒருவரும் Comment விட முடியாதபடி தடுத்து விட்டேன். வீண் பிரச்சனைகள் வேண்டாம்.
ஏதாவது Comment இருந்தால் எனது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள் போதும்.
thamilachi2003@yahoo.ca
 
சுவையான பதிவு நாராயணன்.நன்றி.

முத்து:

வெர்ஜ்ன் மது என்றால்,உப்பு போடாத சாம்பார்-ரசம்,தாளிக்காத கூட்டு என்பது போல ஆல்கஹால் இல்லாத மது!
O'Doul's பியர் மாதரி,கிக் இல்லாத
சவம்;) குடித்துவிட்டு தட்டாமாலை சுற்றி தலை சுத்துது என சொல்லிக் கொள்ளலாம் :)

-வாசன்
 
நன்றாக எழுதியிருக்கீங்க நாராயணன். என்ன படிக்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. இந்த டீக்கடை அனுபவமெல்லாம் எங்காவது வெளியூருக்கு குடும்பத்தினரோடு சுற்றுப்பிரயாணம் போகும்போது வழியில் வரும் டீக்கடைகளில் கிடைக்கும். ஆனால், ஆற அமரக் குடித்ததெல்லாம் கிடையாது. ஆண்கள் வாங்கிக்கொண்டு வந்துதர, குடித்துவிட்டுக்கொடுப்பதுதான் எங்கள் வேலை.

ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி நாங்கள் எங்களுக்கு இடம்தேடி கடைசியாக Cake shop of Taj என்றோ, அல்சா மோல் அல்லது ஸ்பென்ஸர் பிளாசா என்று போகும் நிலை. இப்போது நம்மூரில் சந்திக்கு சந்தி coffee shops வந்திருக்கிறதாமே. அவர்களில் யாரையாவது பெண்களுக்கென்று அல்லது பெண்களும் வந்துபோகக்கூடியமாதிரி நம்ம ஊர் ஸ்டைல் டீக்கடை வைக்கச் சொல்லணும்.

ஏதோ என்னோட ஆத்தாமை. இங்க பொலம்பிட்டுப்போறேன்
 
ராம்கி, லெமன் டீ 3 ரூபா, இதனால என் பர்சுக்கு சோதனை பெரிசா வராது ;-))))))

வாசன், இப்படி போட்டு கலாச்சிட்டிங்களே சவம் மாதிரி, நாங்க என்ன, பெப்சிய ராவா குடிச்சிட்டு, மப்பேறிடுச்சுன்னு சொல்ற ஆளுங்களா!! ;-)

பாலா, அதெல்லாம் நானும் ஒத்துக்கறேன். ஆனா, டீக்கடை மாதிரி வருமா ?!! :-)
 
மாண்டீ, நோட்டெல்லாம் எங்களிடத்தில் அழாது. எல்லா இடங்களிலும் அக்கவுண்ட் தான். ஏதேனும் ஒரு சுபமுகூர்த்த நன்நாளில் (முக்கால்வாசி நேரம் அது என் விற்பனை பிரதிநிதி நண்பன் ட்ராவல் அலவன்ஸ் வாங்கும் போது ;-))அக்கவுண்ட் செட்டிலாகி விடும். மீண்டும் அமர்ந்து நாயரின் வருடாந்திர வருமானத்தை உயர்த்த போட்டி போடுவோம்.

கீரைவடைகள் நன்றாகதான் இருக்கும். நல்ல சட்டினியோ, சாம்பாரோ இல்லாவிட்டால் சுவைக்காது. வடக்கில் பம்பாய், டெல்லி பெருநகரங்களில் டீ குடித்திருக்கிறேன். ஆனாலும், நமக்கு செட்டாவதென்னவோ நாயர் கடைகள் தான். கிங்ஸ், பில்டர் சிசர்ஸ் எப்போதாவது மப்பில் பின்னிரவு போனால், செல்லமாக நாயரின் பீடி என நண்பர்கள் சொந்தம் கொண்டாடுவார்கள்.

பிரச்சனைகளா - அப்படின்னா ? ;-)
 
துளசி, கறுப்பி, மதி யக்காகளுக்கு நன்றி. சென்னையில் பெண்களுக்கென்று டீக்கடைகள் தனியாக கிடையாது. ஆனாலும், இப்போது நிலைமை மாறிவிட்டது. முந்தா நாள், ஏதோ ஒரு விசயத்துக்காக காதர் நவாஸ் கான் சாலையில் வந்து கொண்டிருந்த போது "பாரிஸ்தா"வில் 3 பெண்கள், 'மோர்' சிகரெட் பிடித்து கொண்டு, காபசினோவும், மசாலா சாயாவும் குடித்து கொண்டு, கிடார் வாசித்து கொண்டிருந்தார்கள்.

இது போல சென்னையெங்கும் 'காபி டே'க்கள் எல்லாவற்றிலும் மிகுதியாக பெண்களை பார்க்க இயலும். அருமையான அஸ்ஸாம் டீ கிடைக்கும்.

இதுபோக உங்களின் பர்சு கனமாக இருந்தால், பார்க் ஷெராடனிலிருந்து சற்று தள்ளி 'Eco Cafe' என்ற் ஒரு இடமிருக்கிறது. சொர்க்கம் அது. மரங்களடர்ந்த பிசியான சாலையிலிருந்து சற்று தள்ளி, குயில்கள் கூவுவதை கேட்டுக்கொண்டு, அருமையான, சுவையான இந்திய தேனீர் வகைகள் கிடைக்கும். தெருவோர டீக்கடைகளிலிடமிருந்து பெரிதும் வித்தியாசமாயிருந்தாலும் நன்றாக இருக்கும்.

அது சரி, என்னாத்துக்கு பொம்பளைக்குன்னு தனியா ஒரு டீக்கடை வேணும். போன பிலிம் பெஸ்டிவலில் பட இடைவெளிகளின் போது, நானும், சில நண்பர்களும், கலைராணியும் (முதல்வன் அர்ஜுன் அம்மா ) டீக்கடையில் தான் டீயும், மசால் வடையும் சாப்பிட்டோம். இங்கே யாரும் முன்னைப்போல தனியா பெண் டீ குடிக்கிறாளா இல்லையா என்று பார்ப்பது இல்லை.
 
கார்த்திக், கலக்கிட்டிங்க போங்க உங்க பதிவுல. பாரதிராஜா காட்டாத அசல் நகரத்தினை கண்முன் நிறுத்தியிருக்கீங்க. நான் முழுக்க முழுக்க நகர ஆளு. அதனால என் பார்வை நகரத்துல இருக்கற டீக்கடைகளை சுத்தி தான் இருக்கும்.
 
நாரா, கலக்கிட்டீங்க! எத்தனையோ ஞாபகங்கள் டீக்கடைகளுடன்! சென்னை மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் டீக்கடை கலாச்சாரம் பரவலானது. ஆனா இது தமிழகத்துக்கும் மட்டுமேயான தனித்தனமையாகத்தான் தெரிகிறது. மற்ற மாநிலங்களில் இத்தனை பரவலாய் பார்த்ததில்லை. நான் பல சினிமா பாடல்களை டீக்கடைகள் மூலமாகவே கேட்டிருக்கிறேன்.

ஆனால் இன்னும் பெண்களுக்கும் இடமளுக்கும் வகையில் டீக்கடைகள் ஜனநாயகமடையவில்லை என்றே தோன்றுகிறது.
 
அக்கா??? grr...

சுந்தர் முந்தி எழுதிய ஒரு கட்டுரை

http://maraththadi.com/article.asp?id=41
 
சில நாயர்கள் கோவித்து கொள்ளக்கூடாது, டீ தராமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த பிற்சேர்க்கை.

கெல்லீஸ், நாகப்பா மோட்டார்ஸ் எதிரே இருக்கக்கூடிய டீக்கடை, தி.நகர் ட்ரொளசர் டவுனுக்கு எதிரே உள்ள டீக்கடை, கொண்டித்தோப்பில் இருக்கும் செல்வம் பால்கடை [இந்த கடை நாயருக்கு சென்னையில் மட்டும் 3 வீடுகளிருக்கிறது, மகள்களுக்கு எனக்கு தெரிந்து ஊரிலேயே மிகப்பெரிய மண்டபத்தில் கல்யாணம் நடந்த்து, எல்லாம் எங்க காசு ;-)]வைணவ கல்லூரியின் [படிச்ச கல்லூரிபா]
எதிரிலிருக்கும் டீக்கடை என என் பட்டியலில் நீண்டு கொண்டே போகும் ஜாகைகள்.

வசந்த், எனக்கென்னமோ டீக்கடைகள் தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளங்கள் என்று தோன்றுகிறது. மற்ற மாநிலங்களில் இது இவ்வளவு பரவலாக இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் மட்டுமே, சுடும் வெயிலிலும் [சுட்டெரிக்கிறது சென்னையில் இப்போது]இளநீர் விற்பவர்கள் கூட சூடாக டீ குடிப்பதை இங்கு தான் பார்க்க முடியும்.
 
மதி [அக்கா/அம்மையார்/அம்மா/பிராட்டியார்- choose the best option :-)))] படித்துப்பார்த்தேன் சுந்தரின் பதிவை, கில்மாவாக இருக்கிறது.

கில்மா என்றால் அர்த்தம் தெரியுமா ? தெரியவில்லை என்றால் சொல்லுங்கள், சென்னை தமிழினைப் பற்றி விலாவரியாக ஒரு பதிவு போட்டு விடலாம்.

சொன்னேன் என்பதற்காக இரண்டொரு வார்த்தைகள்

பீலா - பொய்
சீன் காட்றது - பந்தா பண்ணுவது
மாஞ்சா - காற்றாடிக்கு பயன்படும் நூலிற்கு உரமேற்றுவது [மாஞ்சா பற்றி தனி புத்தகம் எழுதும் அளவிற்கு தகவல்கள் இருக்கிறது. பத்ரி, புத்தகமாய் போடுவாரா என்று அடுத்த முறை பார்க்கும் போது கேட்கிறேன் ;-))))) ]
 
மதி வெறும் மதி. அது மதி[நாயர் பத்தி பேசும்போது கொஞ்ச மலையாளமாவது வரணும்ல. ;)]

மெட்ராஸ் காரங்கப்பா நாங்க. எங்களுக்கே தண்ணியா? (குடிக்கிற பச்சத் தண்ணிங்க)

இன்னா நனைனான்னு எழுதலாம்தான். மரியாதைக்கோசரம் பேசாம விடுறேன்.
 
மதி. அப்படி போடுங்க அரிவாளை. அது சரி, இந்த நைனா விசயங்கள் எல்லாம் சந்திரபாபு, லூஸ்மோகன் காலத்து மெட்ராஸ் பாஷை. இப்போது நிறைய மாறிவிட்டது, மாற்றங்கள் இல்லாத மொழிதான் எங்கிருக்கிறது ?

லேட்டஸ்ட் பாஷையில் உங்களின் பதிவு//மெட்ராஸ் காரங்கப்பா நாங்க. எங்களுக்கே தண்ணியா?//

லோக்கல் பார்ட்டிதாம்பா நாங்களும், எங்களுக்கே டகுலா ?

//இன்னா நனைனான்னு எழுதலாம்தான். மரியாதைக்கோசரம் பேசாம விடுறேன்.//

இதோடா, வன்டாரு சொல்லிக்கன்னு எயுதலாம்னு ரோசனை , கலீஜாவ கூடாதேன்னு வுட்டுப்போறேன்
 
நரைன் இலங்கையில் தேனீர்க்கடைகள் சந்திப்பு நிலையங்களாகவோ அரட்டையடிக்கும் இடங்களாகவோ இருந்ததில்லை.ஆனால் தமிழகப் பாரம்பரியமோ என்னவோ சிங்கையில் அநேக இந்தியர் குறிப்பாக தமிழர்கள் டீ குடித்தவாறே உரையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.சமீபத்தில் அப்படி நான் கலந்துகொண்ட உரையாடல்கள் அதிகம்,காலச்சுவடு கண்ணன்,சாரு நிவேதிதா,போன்றவர்களின் கூட்டங்கள் முடிந்தபின் டீக்கடைகளில் தான் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.டீக்கடை அரட்டைகள் அருமையான மனப்பதிவுகளாக உங்களிடமிருப்பது மகிழ்ச்சியே
 
This comment has been removed by a blog administrator.
 
//டீக்கடைகள் இல்லாத ஊரினையும் மக்களையும் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. இந்த ஒரு காரணத்தினாலேயோ என்னவோ, இன்னமும் பெங்களுரின் மீது பிடிப்பே வராமல் இருக்கிறது//

இப்படிச்சொன்ன நம்ம நன்பர்கள் எல்லோரும் பெங்களுருக்கு வந்தாச்சு..நீங்கதான் பாக்கி...எப்படி வசதி.....
 
நாராயணன்....!!!...சென்னை நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டீர்கள்!!!கொண்டித்தோப்பு நினைவுகள் நெஞ்சிலே ஆழமாக....நம்ம பாபு வீட்டு திண்ணை எத்துனை முக்கியமான இடம் நம் வாழ்விலே...(நானும் நாரயணனும் ஒரே பகுதியில் வாழ்ந்தவர்கள்)எனது நன்பனின் தம்பியின் வகுப்புதோழனாக என்க்கு அறிமுகமானார்...அப்போது அவர் கல்லூரி மாணவர்..சென்னை அனைத்து கல்லூரி நாடகப்போட்டியில் சிறந்த இயக்குனராக தெரிவு செய்யப்பட்டிருந்த நேரம்....தமிழ்.சினிமா,இலக்கியம்,அரசியல் பலதுறைகளில் ஒத்த கருத்து எங்களை ஒன்று சேர்த்தது...அப்புறம் தினமும் மாலை வேலை முடிந்தபின்பு அந்த திண்ணைதான் எங்களுக்கு வீடு...கலாய்க்கறது,போட்டுவாங்கரதுன்னு நேரம் தெரியாமல் அரட்டை கச்சேரி தொடரும்...இரவு நேரம் பால்கடைகளும் எங்கள் தினசரி...நாரயணன்..அந்த செல்வம் பால்கடையில் வ்கிடைக்கும் குலோப்ஜூமூன் ஞாபகம் இருக்கிறதா..???.. ..எனது வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லத்தால் பெரும்பாலான் தண்ணி பார்ட்டி என் வீட்டில்தான் நடக்கும்...நாராயண் கானா பாட்டு பாட பார்ட்டி களை கட்டும்..ஆனா நாரயணன் இருக்கிறாரே...தண்ணி அடிக்காம ஆனா சைடிஷ் கொஞ்சம்கூட வைக்கமா புல் கட்டு கட்டுவார்....ஆனா பார்ட்டில யாராவது "தொங்கிட்டா" பத்திரமா வீட்டுக்கு கொண்டு செல்ல நாராயணந்தான் முன்னால் நிற்ப்பார்...
 
வசந்த்:
//சென்னை மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் டீக்கடை கலாச்சாரம் பரவலானது. ஆனா இது தமிழகத்துக்கும் மட்டுமேயான தனித்தனமையாகத்தான் தெரிகிறது. மற்ற மாநிலங்களில் இத்தனை பரவலாய் பார்த்ததில்லை.//

அதனால தான் தமிழ்னாட்ல அரசியல் விழிப்புணர்வு அதிகமோ?

"வேலு, எலய மாத்தி ஸ்ட்ராங்கா ஒரு டபுள் டீ போடு" என்று சொல்லிக்கொண்டே சைக்கிளை விட்டு இறங்கி தினத்தந்தி பிரித்து படிக்கும் கிராமத்து டீக்கடைகள் தமிழ்னாட்டில் ஊருக்கு ஊர் இருக்கும் என்பது என்பது உண்மைதான்.

ஆனால், "ஸ்வாமி, எரடு பை-டு காபி கொட்றீ" என்று னான்கு பேர் அடுத்த அரைமணி அரட்டைக்குத் தயாராகும் பெங்களூர் காபிகடைகளும் உண்டு(இருந்தன?). தம்மாத்துண்டு கிளாசில் பாதி காப்பியை உறிஞ்சிக்கொண்டே அரைமணி போக்குவதென்பதே ஒரு கலைதான். (வசந்த்: உங்கள் கதையின் ஒரு பகுதி டீக்கடையில் தானே னிகழ்கிறது?)

சுந்தரமூர்த்தி
 
நன்றி சுந்தரமூர்த்தி, அரவிந்தன். தமிழகத்தின் விழிப்புணர்வுக்கு மிக முக்கியமான காரணம் பெரியார், அதன்பின் டீக்கடைகளும், பெட்டிக்கடைகளும். எனக்கு தெரிந்த கம்யூனிச தோழர்கள் அனைவருமே டீ பிரியர்கள். ஒருவேளை, டீயும் கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவு கொண்டவை என்று கூட தோன்றும்.

அரவிந்தன், சொல்லிக்கொண்டே போகலாம் டீக்கடைகளின் பெருமையையும், கொண்டித்தோப்பின் மகிமையையும், என்ன செய்ய வேலை இருக்கிறது, விரிவாக பதிய இயலவில்லை. :-(
 
அடடா இப்படி ஒரு interesting ஆன matter ஓடிக்கொண்டிருந்ததைக் கவனிக்காமல் விட்டிட்டேனே (பரவாயில்லை, லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்யாய் வந்தேன் என்று என்னைத் தேற்றிக்கொள்கின்றேன்).
அற்புதமான பதிவு நரேன். சென்னையை, நேரடியாக அவ்வளவு பரீட்சயமில்லாத எனக்குக்கூட நல்ல அறிமுகத்தை ரீக்கடைகளை வைத்து தந்துவிட்டீர்கள்.
....
ஈழநாதன், ஈழத்திலும் இந்த ரீக்கடை சமாச்சாரங்கள் இருந்திருக்கின்றன என்றுதான் நினைக்கின்றேன். சில இலக்கிய நண்பர்களுடன் கதைத்தபோது ரீக்கடை அரட்டைகளையெல்லாம் சுவாரசியமாகச் சொல்லியிருக்கின்றார்கள். பிறகு போர் வந்துதான் நம்மைப்போன்றவர்கள் அதை அனுபவிக்க முடியாமற் போய்விட்டது (அததற்கு கொடுப்பினை வேண்டும் :-(
......
//21-ம் நூற்றாண்டில், ஒயின் ஷாப்புகளில், ஒடும் ரயில்களில், மேன்ஷன்களிலும் இலக்கிய கூட்டங்கள் நடப்பதுபோல், ஏன் டீக்கடைகளில் நடப்பதில்லை. சிகரெட்டும், டீயுமாக பொங்கிவரும் கற்பனைக்கு ஸ்டார் ஓட்டல்கள் ஈடுகொடுக்க இயலுமா?//
பிரச்சினையேயில்லை. நரேனின் ஒரு தொகுப்பை ரீக்டையில் வெளியிட்டால் போச்சுது.

சே....ஐந்தாறு மாதங்களுக்கு முன் இந்த வலைப்பூவை ஆரம்பித்து நரேனையும் தெரிந்திருந்தால், சென்னைக்கு வந்து நின்றபோது நரேனோடு, லெமன் ரீயும், starterயாய் Virgin Maryம் அருந்தியிருக்கலாம் :-).
 
டீஜே, அடுத்த முறை போனாலும் சென்னை வழியாகத்தானே இலங்கை செல்ல வேண்டும். அப்போது நானும் அங்கே இருக்கலாம். பார்போம்!

சுமு, பெங்களூரில் நீங்கள் குறிப்பிடும் காபி கடைகள் உண்டெனினும் அதை டீக்கடைகளுடன் ஒப்பிட முடியவில்லை. எனக்கு தமிழகத்து டீக்கடைகள் சுறுசுறுப்பின், விவாதத்தின், ஜனநாயகத்தின் குறியீடாய் தெரிகிறது. நீங்கள் குறிப்பிடும் கர்நாடக கடைகள் சோம்பலின் குறியீடாய் தெரிகிறது.ஏனோ? தமிழ்நாட்டில் பிறந்த தமிழன் என்பது மட்டும் இதற்கு காரணம் (என்று அதையும் சேர்த்து யோசித்தும் அப்படி) தோன்றவில்லை.

டீக்கடைகள் இந்தியா முழுக்க உண்டெனினும், தமிழகத்தில் பாட்டு, கூட்டம் அன்று அல்லோலபடுவது போல் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. அருகருகேயே ஒரு ஐந்து டீக்கடைகள் இருக்கும். எல்லாவற்றிலும் பாட்டு, சத்தம் கூட்டம். எல்லாமே நன்றாய் ஓடிகொண்டிருக்கும். டீக்கடைகள் டீக்குடிக்க மட்டுமல்ல. இந்த கலாச்சாரம் தமிழகத்தில் மட்டுமே இத்தனை வீரியத்துடன் இருப்பதாக தெரிகிறது. இங்கேயும் நாராயணன் குறிப்பிடும் சென்னையைவிட தென் தமிழகத்தில் இந்த கலாச்சாரம் இன்னும் அதிகம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை சட்டபிரச்சனைகளால் சென்னை டீக்கடைகளில் பாட்டு அலறுவது இல்லையோ என்னவோ? விவித்பாரதி மட்டுமே பொதுவாய் கேட்க கிடைக்கிறது.

//வசந்த்: உங்கள் கதையின் ஒரு பகுதி டீக்கடையில் தானே னிகழ்கிறது?)//

ஆமாம், அது ஜெயநகர் பக்கம் ஒரு தமிழ் ஏரியா!
 
//இங்கேயும் நாராயணன் குறிப்பிடும் சென்னையைவிட தென் தமிழகத்தில் இந்த கலாச்சாரம் இன்னும் அதிகம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை சட்டபிரச்சனைகளால் சென்னை டீக்கடைகளில் பாட்டு அலறுவது இல்லையோ என்னவோ? விவித்பாரதி மட்டுமே பொதுவாய் கேட்க கிடைக்கிறது.//
நீங்க வேற வசந்த், சென்னை டீக்கடைகளில் இப்போது FM-இன் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. சூரியன் எப்.எம் அல்லது ரேடியோ மிர்ச்சி தான் இப்போது இங்கே தினசரி கேட்கமுடியும். எப்போதாவது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமிருந்தால், நல்ல பாடல்களை கேட்க முடியும். எப்.எம்மின் ஆதிக்கம் டீக்கடைகளில் மட்டுமல்ல. ஆட்டோக்களிலும் உண்டு.
காரணம், ரிச்சி தெருவில் தெருவோரங்களில் 50ரூபாய்க்கு சிறிய 2 மாதங்கள் வரக்கூடிய எப்.எம் ரேடியோக்களை குவித்துவைத்து கூவி,கூவி விற்கிறார்கள்.

டிசே, நான் ரெடி. எப்போது சென்னை பக்கம் வந்தாலும், என் செல்லில் போன் செய்யுங்கள். டீக்கடையென்ன, சென்னையின் shoe string budget restaurent என பல இடங்களிருக்கின்றன. கூட்டிச் செல்லுகிறேன். உதாரணத்திற்கு, பாரிமுனை மூர் சந்திப்பில் இரவு 7 மணிக்கு மேல் ஒரு இஸ்லாமிய பெரியவர், அருமையான சிக்கன் கவாப் சுட சுட செய்து தருவார். 15 ரூபாய்க்கு தெருவோரத்தில் கிடைத்தாலும், சுவை ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்காது.
 
நாராயணன், வசந்த்:
தமிழ்நாட்டு டீக்கடைகள் எல்லா அரசியல் சித்தாந்தங்களும் சராசரி மனிதனின் வடிவில் சங்கமமாகும் ஜனநாயக மேடை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

என்னதான் டீக்கடைக்காரர் "இங்கு அரசியல் பேசக்கூடாது" என்று அட்டையில் எழுதி மாட்டியிருந்தாலும் அரசியல் பேசாமல் இருக்கமுடியாது. அதற்கு கடைக்காரர் பேச்சுமூலம் ஆட்சேபிக்கமாட்டார். அந்த அட்டையின் அர்த்தம் "ஏதாவது அடிதடி நடந்தால் நான் பொறுப்பில்லை" என்ற disclaimer தான்.

அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று, பிறகு சைக்கிள் ஓட்ட கஷ்டப்பட்ட என் மாமா ஒருவரை காலையில் பேப்பர் படிக்க டபுல்ஸில் ரோட்டில் உள்ள டீக்கடைக்கு அழைத்துச் செல்வது கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் அன்றாடக் கடமையாக இருந்தது. அவர் கதர் சட்டைப்போட்ட காங்கிரஸ்காரர். டீக்கடை வைத்திருந்தது தி.மு.க.வில் ஊறித்திளைத்த குடும்பம்.

இன்னும் ஒருபடி மேலே எங்கள் பக்கத்து ஊர் டீக்கடைகளில் மதச்சார்பும், ஜாதிவேறுபாடும் கூட இருந்ததில்லை. பாதிகடைகள் முஸ்லீம்களுக்குச் சொந்தமானவை. (மதவெறிக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஒரு இந்துவின் டீக்கடையில் தஞ்சம் புகும் முஸ்லிம் கணவன்-மனைவி பற்றிய களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ஒன்றை திண்ணையில் படித்ததாக நினைவு. உடனடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை). 'ரெட்டை கிளாஸ்' முறையை கூட நான் செய்தித்தாள்களில் மட்டும் தான் படித்திருக்கிறேன்.

நாராயணின் வலைப்பதிவே ஒரு டீக்கடை மாதிரி ஆகிவிட்டது இப்போது :-)

சுந்தரமூர்த்தி
 
நாராயணன் அண்ணாச்சி, உங்க பதிவை விட்ட குறை தொட்ட குறைய படிச்சேன். சூப்பர் பதிவு அப்பு. சென்னையில வந்து அலைஞ்சப்ப டீக்கடை தான்யா தெய்வம். அது தான்யா உலகம். ஒரு பேப்பரோட ஒரு பக்கத்தை 4 பேர் சேர்ந்து படித்து உலக அறிவை வளர்த்துக்கும் விசயம் இருக்கே..... ஆகா.....

பின்னூட்டமெல்லம் படிக்கலேண்ணே....கையேந்தி பவனை பத்தி ஒரு பதிவும் போட்டா சூப்பர் தான் போங்கோ... அப்பா அனுப்பிய சிக்கன காசில் சிக்கனமாக வயித்தை கழுவ உதவிய கையேந்தி பவன்கள் வாழ்க...கையேந்தி பவன் - ஆரோக்கிய உணவு - பிரச்டீஜ் = சூப்பர் பவன்கள்

டீக்கடை பக்கம் வர்ற மார்ச் 4 ஒரு சந்திப்பு போட்டிறலாமா?
 
அதுக்கென்ன விஜய் செஞ்சிட்டா போச்சி. வாங்க. வாங்க. என்னோட செல்லுல கூப்பிடுங்க. கண்டிப்பா சந்திப்போம். ஆனா, மார்ச் 4 தான் உதைக்குது. சென்னையில இருக்கமாட்டேன்னு நினைக்கறேன். எதுவாயிருந்தாலும், போன் பண்ணாம போயிராத அப்பு.

கையேந்தி பவன் தனிக்கதை. 2-3 மாசம் கழிச்சு வேணும்னா போடறேன்.
 
narain,

//சென்னையின் shoe string budget restaurent என பல இடங்களிருக்கின்றன. கூட்டிச் செல்லுகிறேன். உதாரணத்திற்கு, பாரிமுனை மூர் சந்திப்பில் இரவு 7 மணிக்கு மேல் ஒரு இஸ்லாமிய பெரியவர், அருமையான சிக்கன் கவாப் சுட சுட செய்து தருவார்//

ingae Montreal'il engae engae nalla sappaadu kidaikkum enRellaam ezuthuvaarhaL. ovvoru sanikkizamaiyum 5star hotel review ondru plus budget restaurent review ondru marrum innum pala vishayangaL kidaikkum. itha budget hotel reviewkkaarar perumpaalum EmaaRRiyathillai.

aanaal, namma oorla ennenna hotels vanthirukkindrana endru therinthu koLvathu kashtam. athilum, nilaiyum nalla padi irunthu nalla saappaadum kidaikkum idangaL madras'la irunthappavae konchamthaan theriyum. ippo SUTHTHAM!

munthi the hindu, chennai online nu paarthu note panni vaippen. madraskku naan varalainnaalum oorukkuppOhum cousins, friendskku notes kudukkuRathukku.

neenga ungaLukku time irukkumPothu oru kaariyam paNNunga.

ovvoru restaurent paththiyum, eppadi pOrathu vaaRathungra detail, best dishes, close pannuvaanganna entha day, price detailnu kuduththaa thamiz padikkira friends relativesku kuduthiralaam. maththavangaLukku naama translate panni details kuduthiralaam.

maybe this would influense bloggers from other cities to post as well. suRRulaa pOgumPothu vasathiyaa irukkum.

suratha.com/reader.htm access kidaikkalai. :( have to look for krupa's uruppadaathathu. it would be great if you could install the tamil transliteration.
 
sorry. it's

krupa's porambOkku

not uruppadaathathu.
 
உண்மை மதி. சொல்லப்போனால், நியூயார்க்கரில் ரெஸ்டாரெண்ட் கைய்டு என்ற சமாச்சாரம் ஒன்று உண்டு. அதுபோல வேறெங்கும் நான் பார்த்ததில்லை. அதைப்போல ஒன்று தமிழில் இருக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

முடிந்தவரை என்னால் பார்த்த, அனுபவித்த உணவகங்களைப் பற்றி எழுதப்பார்க்கிறேன். நடசத்திர ஒட்டல்களுக்கு சென்றாலும், அங்கு வழங்கப்படும் பாதி உணவுகளின் பெயர் எனக்கு தெரியாது, தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை.

எனக்கு தெரிந்த அளவில் தரமாக, மலிவாக கிடைக்கக்கூடிய உணவகங்களையும், உணவு ஸ்பெஷல் வகையறாக்களையும் சேர்த்து வைத்து பதிகிறேன்.

டீக்கடைப் பற்றி எழுதிவிட்டு, சரவணபவனின் டீயினைப் பற்றி எழுதாமல் போனால், நரகத்திற்கு போகும் பாக்கியம் கிடைக்கும். இங்கே என் அலுவலகத்திற்கு பக்கத்தில் அசோக்நகரில், சரவணபவனின் துரித உணவகம் ஒன்றிருக்கிறது. நாக்கிலே நிற்கக்கூடிய ருசியோடு, அருமையான டீ கிடைக்கும்.
 
அட அட அடா... சாதாரண ஒரு "டீ" யை கருப்பொருளாக்கி இவ்வளவு அருமையாக எழுத முடியுமா? அங்க தாங்க நீங்க நிக்கிறீங்க..!!!

தமிழகத்தில் நம் ஒவ்வொருவரோடும் டீக்கடை ஏதாவது ஒரு வகையில் சம்பந்தப் பட்டிருக்கும்! மலரும் நினைவுகளைத் தட்டி எழுப்பி விட்டீர். பசிக்கு கையில் காசில்லாதபோது வெறும் டீயில் பண்ணை நனைத்து உண்டு படுத்திருந்திருக்கிறோம் நண்பர்கள் நாங்கள்!!! அப்போது அந்த டீ தேவாமிர்தம் எங்களுக்கு!
 
மூர்த்தி, அது வெறும் டீ மட்டுமல்ல. டீயினூடே பயணிக்கும் எல்லாருடைய வாழ்வின் ஆட்டோகிராஃப். பார்க்கும் பார்வையைப் பொறுத்தே கருப்பொருள் அமைகிறது. என்னளவில் நான் செய்தது, நான் அனுபவித்த விசயங்களை பதிந்தது மட்டுமே. காதல், துக்கம், நட்பு வரிசையில் அவரவர்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு டீக்கடை சிலுமிஷிம் செய்யாமல் போயிருக்காது ;-)
 
இன்னாபா... வடகறிய விட்டுட்டீங்களே:)
(வடகறின்னா இன்னான்னு யாரும் கேட்டுக் கடுப்பக் கெளப்பிடாதீக...)

விரிவா எழுதாட்டியும் ஒரு சிறு குறிப்பு போலவாவது, சைவ/அசைவ கையேந்தி மற்றும் சற்று மேம்பட்ட குடும்பத்துடன் செல்லும் கடைகளையும் பற்றி எழுதுங்கள். ஊர் பக்கம் வந்து 3 வருசத்துக்கு மேலாய்டுச்சு. இந்த மே-யில் வந்தால் பயன்படும். நன்றி.
 
கோவையைச் சேர்ந்த எனக்கு, கல்லூரியில் படிக்குக்பொழுது சென்ற டீக்கடைகள் நினைவுக்கு வருகின்றன. பால் டீ, லைட், லைட் மீடியம், மீடியம், ஸ்ட்ராங் பை/2 என பல வகைகள். கோவையிலிருந்து பெரிய நாயக்கன் பாளையம் செல்லும் வழியில் உள்ள சரவணா மற்றும் KM (சரியான பெயர் ஞாபகமில்லை) செயின் பேக்கரிகள்/டீக்கடைகள், பூ. சா. கோ. கல்லூரி அருகில் உள்ள பேக்கரிகள்/டீக்கடைகள் மறக்க முடியாதவை.

பெங்களூரில் இருந்தபோது, கோரமங்களா, 1ஸ்ட் ப்ளாக் நயனா பேக்கரி (அக்மார்க் நாயர் கடை) டீயும், பப்சும் (முட்டை மற்றும் வெஜ்) , IMRGlobal company முன்னால் இருந்த திரு. மூர்த்தியின்(என்று நினைவு) தள்ளு வண்டி டீக்கடையும் மறக்க முடியாதவை.

தமிழ் நாட்டுத் தமிழனின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் தெருவோர டீக்கடைகள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]