Mar 31, 2005

டெலிபோனில் முடிந்த திருமணம்

சாதாரணமாய் இந்த டெலிபோன் காதல் எல்லாம் "காதல் கோட்டை" அகத்தியன் சமாச்சாரங்கள். இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்த படம் புதிதாய் இருக்காது. இந்த படம் உருதுவில் டப் செய்யப்படவில்லை. ஆனாலும், அவர்களுக்கு விவரம் தெரியும். காரணம், அவர்கள் படம் பார்க்காமல் நேரிலேயே ஒரு ஹீரோவை பக்கத்தில் வைத்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோ: சோயப் மாலிக். பத்ரியின் பதிவில் ஜாகீர்கானுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த பெண்ணினை பற்றிய செய்தி வந்திருந்தது. நம்மை விட பாகிஸ்தானியர்கள் புத்திசாலிகள்.

சோயப் மாலிக் பாகிஸ்தானில் வளர்ந்து வரும் ஆட்டக்காரர் மற்றும் ஆப் ஸ்பின்னர். போன பாகிஸ்தான் டூரில் சதமடித்ததாக ஞாபகம். சோயப் மாலிகின் காதலி ஒரு இந்திய பெண். இதுல எங்கய்யா காதல் கோட்டை வருதுன்னு சொல்றிங்களா? மேட்டரே அங்கதான் தொடங்குது. காதலி, ஆயிஷா சித்திக் இருக்குமிடம் ஹைதராபாத் (இது நம்மூரு நாயுடுகாரு இடம், பாகிஸ்தானிய ஹைதராபாத் இல்லை). காதல் தொடங்கியது 1999ல்

2002 ஆம் ஆண்டு டெலிபோனிலேயே அவர்கள் மண வாக்குறுதிகளைக் கொடுத்து திருமணம் செய்து கொண்டார்கள். இஸ்லாமிய ஷரியா சட்டங்களின் படி இது முறையான திருமணமே. ஷிரியா சட்டத்தில் மணமக்கள், திருமண வாக்குறுதிகளை, மனஒப்பந்தத்தை டெலிபோன் மூலமே பரிமாறிக் கொள்ளலாம்.

பல்வேறு விதமான இந்திய-பாகிஸ்தான் அரசியல் பிரச்சனைகளுக்கிடையில் முடிவாக கடந்த செவ்வாய்க்கிழமை பெண் வீட்டுக்காரர்கள் ஹைதராபாத்தில் மொத்த பாகிஸ்தான் அணிக்கும் விருந்து கொடுத்து, அவர்களின் மாப்பிள்ளையை வரவேற்றனர். ஆயிஷா, ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் சென்று தன் இல்லற வாழ்க்கையை தொடங்குவார் என்று தெரிகிறது. இதுதான் சோயப் மாலிக் கீளின் போல்டான கதை.

இந்த திருமணம் செல்லுமா? போனில் எப்படி இவ்வளவு பெரிய வாழ்வின் மிக முக்கியமான விசயம் நடக்கலாம் ? இது பெண்ணுரிமையா , ஆணுரிமையா ? மதங்கள் இப்படிப்பட்ட சட்டங்களை இயற்றலாமா ?போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம், ஆயிஷா பாகிஸ்தான் போகும்வரை. அப்புறம் எல்லோரும் கிளம்பி "மெட்டி ஒலி"யோ "மனைவி"யோ பார்க்கப் போய்விடலாம். இல்லை, தமிழ் புத்தாண்டு சிறப்பு தள்ளூபடியில் போதீஸிலோ, சென்னை சில்க்ஸிலோ போய் வாங்குவதற்கான பட்ஜெட்டினை போட ஆரம்பிக்கலாம்.

பார்க்க:
1. http://in.rediff.com/cricket/2005/mar/31malik.htm
2. http://www.rediff.com/cricket/2005/mar/28malik.htm

இது தாண்டி, என் மொபைல் எண்ணினை தருகிறேன். ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலியாவில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் ;-) அதுவரை 'தேவுடா..தேவுடா...'

Mar 29, 2005

... கானாவுல கலாய்க்கலாம்

ரோசாவசந்தின் பதிவிற்கு பதிலெழுதப் போய், கொஞ்சம் பெரிய பதிவாகவே மாறிவிட்டது.

ஆஹா! ஆஹா! தலீவர இதை நான் சத்தியமா எதிர்பாக்கலை. இருந்தாலும், மொதல்ல எழுதினேன்ற காரணத்னால சொல்றது இது. மேட்டர் பொறவு. இப்ப மீட்டர். "காத்தடிக்குது, காத்தடிக்குது" பாட்டு உண்மையிலேயெ பேஜாரான பாட்டு. அதை விஷுவலாகவும், நல்லா பண்ணி கலாய்ச்சிருப்பரு பிரபு தேவா. பாட்டு நடு பீட்டுல, ராமாயண கதைய ரொம்ப சிம்பளாவும் அதை சமயம் மாடர்னாகவும் பண்ணியிருப்பார். லட்சுமணன், மிஷின் கன்னோட ராமரை தேட போவாரு ;-) அந்தப் பாட்டுல மிக முக்கியமான அம்சமே வாழ்க்கையோட அபத்தங்கள்தான்.

சாவு அப்படிங்கறது ஒரு கொண்டாட்டம் தான் சேரியுல. வடசென்னையில் இருந்தவன் என்கிற முறையில், மதியம் இறந்து போகும் எவரும் அன்றைக்கு எடுக்கப்படுவதில்லை. முதலில் "சரக்கு" விட்டு, சாவு மேளங்களை அழைத்து வந்து விடுவார்கள். சங்கு ஊதுவதிலிருந்தே ஆரம்பாமாகிவிடும். அந்த நாள், அந்த ஏரியாவில் இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு கொலை குத்து, வியாபாரத்துல. நல்லா சரக்குட்டு, லுங்கியை கழுத்துவரை இழுத்துக் கட்டிக் கொண்டு ஆரம்பிக்கும், பாட்டும் கூத்தும். பார்ப்பவர்களுக்கு கலீஜ்ஜாக தெரிந்தாலும், அதுதான் அவர்களின் கொண்டாட்டம். நான் தோள் கொடுத்து சுமந்த நிறைய சாவுகளில் எங்களுக்கு முன்னால், ஒரு மீன்பாடி வண்டியில், பூக்கூடைகள் போகும், அதற்கு முன்னால், பட்டாசு வெடியோடு ஒரு கூட்டம் அலையும், நடு ரோட்டில் டிராபிக்கினை நிறுத்தி, சரவெடிகளை அனாவசயமாக, கையில் பிடித்துக் கொண்டு வெடிப்பார்கள், அதற்கு பின்னால் தான் ஆட்டமும், பாட்டும், ஒப்பாரிகளும் நிகழும். கொஞ்சம் இந்த யதார்த்த சென்டிமெண்ட் விஷயங்களை தூக்கி தூரப் போட்டால், அந்த சாவின் நிறைவும், வாழ்வின் அபத்தமும், ஆடுபவர்களின் வேகமும் புரியும். சொன்னால் நிறைய பேருக்கு புரியாது, ஆனால், லுங்கியின் முனையினை வாயில் கவ்விக் கொண்டு "வூடு" கட்டும் போது ஆடும் ஆட்டம், ஸ்பானிஷின் பிளமிங்கோ நடனத்துக்கு இணையான சாகசம். தாளமும், சுருதியும் சற்றும் பிசகாமல், கத்திக் கொண்டே, எதிர்த்து ஆடுபவரோடு ஈடு கொடுத்து ஆடுவது என்பது சர்வ சாதாரணமான விஷயமல்ல. என்னுடைய நண்பர், அரவிந்தன் வூடு கட்டுவதில் வல்லவர். புலியாட்டமும், சென்னை லோக்கல் குத்தும், கானாவும் சேருமிடங்கள் (கொஞ்சம் பச்சையான வார்த்தைகளையும் சேர்த்து) நிச்சயமாக எதிர் இசைப் பாடல்கள். எக்ஸ்டென்ஷியலிசத்தின் மொத்தக் கூறுகளையும், கானாவிலும், அடித்தட்டு மக்களின் சாவிலும் பார்க்கலாம்.

சாஸ்திரிய சங்கீதத்தின் எல்லா மரபுகளையும் உடைத்து, எல்லோராலும் பாடப்படும் பாடல்தன்மை கானாப் பாடல்களுக்கே உரியது. வசந்த் சொன்ன, ரஸ்டிக், ராவான (தல இது இங்கிலிஷ் RAW ;-)) குரல் கொண்டு பாடும் பாடல்கள், குதூகலமானவை. ஒரு தலித்தின் வாழ்க்கை, பல்வேறு விதமான கொடும் சூழ்நிலையிலும், உற்சாகமும், துள்ளலும் நிரம்பியவை என்பதற்கு சான்றுதான் கானா பாடல்கள். இதேப் போன்றதொரு துள்ளலையும், உற்சாகத்தையும், கறுப்பின ராப் பாடல்களிலும், மெட்டல் ஜாஸிலும் பார்க்க இயலும் என்று தோன்றுகிறது. பல்வேறு, ஆப்ரிக்க இனக்குழுக்களின் பாடல்களும், உச்ச ஸ்தாயில், பெரும் கூட்டமே பாடுவது போல்தான் இருக்கும். கானா பாடல்களின் இன்னொரு முக்கியமான அம்சமாய் நான் பார்ப்பது, மிக எளிமையான உவமைகள், வலி நிரம்பிய யதார்த்தங்கள், அபத்தங்களையும், அபாயங்களையும் உள்ளடக்கிய காதல், கொச்சையான பாலியல் அழைப்புகள் என்று வாழ்வின் உள்ளே செல்லும் பாடல்கள் அதிகம்.

டர்ரர்க்க.. ரக்க... ரக்க. டர்ரக்க என இழுபடும் குச்சிகளில் தெரிக்கும் பறை இசையின் ஒலியேக் கேட்டால் "ஆடாத மனமும் ஆடுமே". இங்கே சென்னையில் அவ்விசையை "ஒத்தையடி" என்று சொல்லுவோம், ஒத்தையடி அடிக்கத் தெரியாத கல்லூரி மாணவர்கள் மிகக் குறைவு என்பது என் எண்ணம். இதைத் தாண்டி, டெஸ்க் சங்கீதம் என்கிற ஒரு genre கூட உண்டு, பின் வரிசையில் அமர்ந்து கொண்டு முன்வரிசை மாணவர்களுக்கு கேட்பது போல, டெஸ்கிலேயே தாளம் போட்டுக் கொண்டு ப்ரொபசர்களை கலாய்ப்பது.

கல்லூரி கானா பாடல்கள் இதிலிருந்து சற்று விலகி, பெண்களை வசியம் செய்யவும், பிகர்களைப் பற்றி பாடுதலும், தியேட்டர், பஸ் டிரைவர், ஹாஸ்டல் வார்டன், டிராபிக் கான்ஸ்டபிள் ("மாமா" - தெரியாதவர்களுக்கு, சென்னை கல்லூரிகளின் பாலபாடம், பொலிஸையும், டிராபிக் கான்ஸ்டபிளையும் மாமா என்று அழைப்பது) என கல்லூரி சார்ந்த விஷயங்களாய் அடங்கியிருக்கும். பிரகாஷ் குறீப்பிட்டிருந்த "பெரம்பூரு லோகோ - என்கிற கானா எனக்கு மறந்து விட்டாலும், சைவ/அசைவ/பாலியல் வெர்ஷன்கள் நிறையவே இருக்கின்றன.

கொஞ்சமாய் ஒரு சொந்த கானா - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல. கல்லூரி படித்த போன நாட்களில், சகட்டுமேனிக்கு யாரையும், எதையும் கலந்தடித்து கலாய்ப்போம். அப்படி கலாய்த்து எழுதிய ஒரு ஐயப்ப பஜனையின் உல்டா கானா ....

[ஒரிஜினல் பாட்டு ... ஒண்ணாம் திருப்படி, சாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா ]

14 ஏயில
ஆதர்ஷ் ஃபிகரப்பா (2 முறை)
வள்ளியம்மா ஃபிகரப்பா (2 முறை)
அதுல ஒண்ணு,
நம்ம டிசேயோட ஆளப்பா

27 ஏயில
காயிதே மில்லத் பிகரப்பா
யத்திராஜு பிகரப்பா
டபுள்யூ.சி.சி, பிகரப்பா
குயின் மேரிஸ் பிகரப்பா
அதுல ஒண்ணு
நம்ம பிரகாஷோட சைடுப்பா


(சும்மா உலுலுவாக்காட்டிக்கு, நண்பர்கள் டிசே, பிரகாஷ் ஸ்போர்டிவாக எடுத்துக்கொள்ளவும்.)

என பெண்கள் கல்லூரி வலம் வரும் எல்லா பேருந்து வழித்தடங்களுக்கும் பாடலிருக்கிறது.

மேலும், தமிழகத்தில் கிளிஷேவான எதுகை மோனை, கானாவில் பல இடங்களில் முக்கியம். ஒரு பாடலின் சடசடவென பொருள் மாறும் தன்மை கானாவில் அற்புதமாக வெளிப்படும். சடாலென தாவும் உதாரணங்கள், உவமைகள், நிகழ்வுகள் என மாறும் வெளிகளில் கானா நிஜமாகவே பேஜாராக இருக்கும்.

மல்லிகாவின் மாமன் பேரு மாரி,
சோமாரி...
அவன் பகிளு பிகிளு வுட்டதுமே சாரி
ஐ யம் வெரி சாரி
ரத்னா ஸ்டோர்ல விக்கிறாங்க ஸ்டீலு,
ஸ்டெயின்லெஸ் ஸ்டீலு,
ராங்கு காட்டி வாங்கிடாதே பெயிலு,
ஜெயிலுல பெயிலு

இன்னும் தீவிரமாய் படித்துக் கொண்டிருக்கிறேன், சில தகவல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். வந்ததும் விவரங்களோடு, கானாவின் ஆதிஅந்தங்களை பதிகிறேன்.

ஆசிய பூகம்பம் - 8 - எபிச்சென்டரும் பாதிப்புகளும்

Epicenter of the Indonesian Earthquake

தற்போதைய நிலவரம். குறைந்தது 200 பேர்கள் இறந்திருப்பார்கள் என்று இந்தோனேசிய தகவல் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார் - சுட்டி

நியாஸ் தீவின் 75% பகுதிகள் உருக்குலைந்து போய்விட்டன.
"Agus Mendrofa, deputy district head on Nias, off the western coast of Sumatra, earlier told local radio 296 people had died. He added that hundreds of buildings had been damaged or had collapsed." - சுட்டி

பளும்பெர்க் இறந்தவர்கள் 300க்கும் மேல் இருக்கலாம் எனவும், கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிகமோசமான நில அதிர்வுகளில் இதுவும் ஒன்று என்றும் தளத்தில் கூறுகிறது.

ABC தளம் 3 மீட்டரளவு உடைய பேரலைகள், சிமாயுலு என்கிற இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில், பூகம்பம் நடந்த ஒரு மணி நேரத்தில் கரை சேர்ந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய பெர்த் கடற்கரையிலும், சிறிய அளவு அலைகள் கரை சேர்ந்திருக்கின்றன.

ஆசிய பூகம்பம் - 7 - இந்தோனேசியாவில் நிலைமை

அமெரிக்க ஜியொலொஜிக்கல் சொசையிட்டியின் தளத்தைப் பார்த்தால், கொடுமையாக இருக்கிறது. நேற்றைய பெரும் பூகம்பத்துக்கு பிறகு, 12 முறை நியாஸ் தீவுகளிலும், சிம்யூலுவிலும் 4.9 - 6.1 ரிக்டர் அளவில் தொடர்ந்து பூகம்பங்கள் ஏற்பட்ட வண்ணமிருக்கின்றன. இந்தோனேசிய மக்களைப் பற்றி பரிதாபப்படுவதை தவிர வேறெதும் செய்ய இயலாது. மிகவும் வருந்தத்தக்க விஷயமாகவும், அபாயகரமானதுவாகவும் தெரிகிறது, பின் அதிர்வுகள் தொடர்ந்து இருக்கும் என்று நிபுணர்கள் கூறி வருகிறார்கள். பார்க்க:Earthquake Hazards Program

ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்தோனேசியாவில் 2000 பேர்கள் இறந்திருப்பார்கள் என்கிற யூகத்தை போட்டிருக்கிறது. ஆனாலும், நம்ப தகுந்த விவரங்கள் இதுவரையில்லை. பிபிசியிலும், சேதங்கள் நடந்திருக்கும் என்று சொல்கிறார்களே தவிர முழு விவரங்கள் தெரியவில்லை.

இந்திய, இலங்கை, தாய்லாந்து அரசுகள் தங்களின் ட்சுனாமி முன்னெச்சரிக்கையினை வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டன.

ஏன் இந்த பூகம்பம், ட்சுனாமியை உருவாக்கவில்லை என்பதற்கு, பல காரணங்களை அடுக்குகிறார்கள். சி.என்.என் இதைப் பற்றிய விரிவான செய்தியை தளத்தில் பதிந்திருக்கிறது. நிஜமா, பொய்யா என்று தெரியவில்லை, இந்துமாக்கடலில் ஒரு புதிய பூகம்பம் உருவாகியிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால், இதுவரை அவ்வாறான எவ்வித தகவலும், அமெரிக்க ஜியொலொஜிக்கல் தளத்தில் இல்லை.

ஆசிய பூகம்பம் - தமிழக நிலவரம் 6

நேற்று இரவு நல்லபடியாக கழிந்தது. எவ்விதமான ட்சுனாமி அச்சுறுத்தல்களோ, நில அதிர்வுகளோ இல்லை. ஆனால், மாமல்லபுர கடற்கரையில் கொஞ்சமாய் 50 மீட்டர் தூரம்கடல் உள் வாங்கியிருக்கிறது. இதற்கு சற்றே சம்பந்தமில்லாமல், நேற்று காலை 7.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு மரங்கள் சரிந்திருக்கின்றன. கன்னியாகுமரி, சென்னை சாந்தோம், கடலூர்,நாகை, நெல்லை போன்ற கடலோர இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அரசு, இன்னும் எச்சரிக்கையோடு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

இந்தோனெசிய சேதங்கள் பற்றிய தகவல்கள் குறைவாக உள்ளது. கடற்கரையிலும், நியாஸ் தீவிலும் நிறைய சேதங்கள் இருப்பதாக தெரிகிறது. பிபிசியின் நிருபர், முன்பை விட சேதங்கள் குறைவாகதான் இருக்குமெனவும், முக்கால்வாசி மக்கள், டென்டுகளில் குடியிருப்பதால், பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இன்று/நாளை பூகம்பத்தின் முழு சேதங்கள் தெரியவரும் என்று தெரிகிறது. இலங்கை நிலவரம் பற்றி செய்திகளில்லை.

ஆசிய பூகம்பம் (ட்சுனாமி) - 5 - ட்சுனாமி பயமில்லை

பசிபிக் ட்சுனாமி அறிவிப்பு மையம், இனி ட்சுனாமி பயமில்லை என அறிவித்துவிட்டது. நிம்மதியாக தூங்குங்கள். இந்திய கடலாராய்ச்சி நிறுவனமும் இதனை உறுதி செய்துவிட்டது. பயமில்லை என்று நினைக்கிறேன், இருந்தாலும், இந்த பரபரப்பு அடங்க சில மணி நேரங்களாவது ஆகும்.

ஆசிய பூகம்பம் (ட்சுனாமி) - 4

No Tsunami. இதுவரை நான் பார்த்த எல்லா சேனல்களும், ட்சுனாமி ஏற்படும் சாத்தியக்கூறினை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வருகின்றன. பிபிசியில் சொன்னப்படி பார்த்தால், பூகம்பம் நிகழ்ந்த, 1 மணிநேரத்திற்க்குள் ட்சுனாமி வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை உலகம் முழுக்க எவ்விதமான கடல் உயர்வோ, பேரலைகளோ, கடல் பரப்பில் மாற்றங்களோ நிகழவில்லை. முழுவதுமாக ஒதுக்கிவிட முடியாவிட்டாலும், கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.இந்திய அரசும், பல மாநிலங்களும் சொல்வது இதுதான்.No Panic. Precaution is better than anything.

அமெரிக்க ஜியொலெஜிக்கல் சொசையிட்டியின் படி, 8.7 ரிக்டர் ஸ்கேலில் நிகழ்ந்திருக்கிறது இது. இதனை தொடர்ந்து, அரைமணி நேர இடைவெளியில் இன்னொரு நில அதிர்வு 6.0 ரிக்டர் ஸ்கேலில் நடந்திருக்கிறது. சேனல்கள் சொல்வது போல் இது 8.2 ரிக்டர் அளவு அல்ல என்று தெரிகிறது.

ஜெ.ராம்கி சென்னை கடற்கரைக்கு சென்று வந்திருந்தார். பேட்ரோல் வண்டிகள், தொடர்ந்து முன்னெச்சரிகைகள் கொடுத்த வண்ணமிருக்கின்றன. சாந்தோமில் ப்ளாட்பாரத்தில் மக்கள் கூட்டம் ஒதுங்கியிருக்கிறது. துணைமேயர் வந்து பேசியிருக்கிறார். கடலூர் கலெக்டர் ககன்தீப் சிங் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், எவ்விதமான நில அதிர்வும், கடல் மட்ட உயர்வுமில்லை என்று சொன்னார்.

மாறுதலாய், அரசியல்வாதிகளின் பேட்டிகளை ஒளிபரப்பாமல், பல்துறை சார்ந்த (கடலாராய்ச்சி, வானியல், கடற்படை) நிபுணர்களை கலந்தாலோசித்து விஷயங்களையும், விவரங்களையும் தெரிவு படுத்திய என்.டி.டிவி, ஹெட்லையன்ஸ் டுடே போன்றவைகளை பாராட்ட வேண்டும்.

ஆனாலும், அடுத்த சில நாட்கள் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று உள்மனது எச்சரிக்கிறது.

இது காசிக்கு,
http://earthquake.usgs.gov/recenteqsww/rss.html - இந்த சுட்டி, அமெரிக்க ஜியோலாஜிகல் சொசையிட்டியின் RSS சுட்டி, இதில் நேற்றைய, ஒரு வாரத்திய விவரங்கள் கிடைக்கும், எங்கேனும் ஒரத்தில் தமிழ்மணத்தில் இருப்பின், உபயோகமாய் இருக்குமென்று தோன்றுகிறது.

ஆசிய பூகம்பம் (ட்சுனாமி) - 3

சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, தற்போதைய நிலை வரை எவ்விதமான ட்சுனாமி அச்சுறுத்தல்களுமில்லை என்று Indian Institute of Oceanographyயின் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், கடலோர தாழ்ந்த பகுதிகளில் இருப்பவர்களை மேடாக இருக்குமிடத்துக்கு செல்ல அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், காலை வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது. பூகம்பத்தின் பின் அதிர்வுகள் (aftershocks) இருக்குமாதலால், காலை வரை நிலையினை கூர்ந்து கவனித்தல் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

இதுவரை எவ்விதமான ட்சுனாமியின் பாதிப்போ, கடல்மட்ட உயர்வோ பதியப்படவில்லை. ஆகவே, இது ட்சுனாமியாக இருக்காது என நம்பலாம். இந்திய அரசு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு ட்சுனாமி எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை எவ்விதமான ட்சுனாமி அதிர்வு எங்கேயும் பதியப்படவில்லை

அமெரிக்க ஜியொஜிக்கல் சொசையிட்டியின் பதிவு

Mar 28, 2005

ஆசிய பூகம்பம் (ட்சுனாமி) - 2

இப்போது கிடைத்த தகவலின் படி, அடுத்த 3 மணி நேரங்களை கடந்தால்தான் எதையும் சொல்ல இயலும் என இந்திய கடலாராய்ச்சி, மற்றும் ராணுவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்திய நேரப்படி, நள்ளிரவு 1 - 2 மணி வரை இது நீடிக்கலாம். கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த பூகம்பம், கடலின் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பரவும் வேகமும், வலிமையும் குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தமிழக அரசு, அரசு ரீதியாக, சென்னை மாநகராட்சி மற்றும் பிற நகராட்சிகளுக்கு எச்சரிக்கையை கொடுத்துவிட்டது. கடலோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. This is the Official Warning message from the TN Government.

பூகம்ப அதிர்வுகள் மலேசியாவிலும் உணரப்பட்டுள்ளது. தாய்லாந்தில் மிக குறைவான சேதங்கள் என்று சொல்கிறார்கள். இலங்கை அரசு இன்னமும் Official Warning தரவில்லை. ஆனால், இலங்கையின் லோக்கல் வானொலிகள், தொலைக்காட்சிகள், மக்களை இடம் பெயருமாறு சொல்லத் தொடங்கிவிட்டன.

இதுவரை எவ்விதமான அசம்பாவிதங்களும் செய்திகளில் வரவில்லை. இனியும் வராமல் இருக்குமென்று நம்புவோம். தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அரை மணிக்கு ஒரு தடவை அப்டேட் செய்கிறேன்.

பார்க்க: கூகிள் செய்திகள்

Breaking News - வேண்டாம் இன்னொரு ட்சுனாமி

இந்திய நேரம் 9.30 இரவுக்கு, இந்தோனேசியாவில் 8.2 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் தாக்கியிருக்கிறது. இது நிகழ்ந்தது டிசம்பர் ட்சுனாமி நிகழ்ந்த அதே அலைவரிசையில். இப்போது கேட்ட என்.டி.டிவி செய்திகளின் படி கான் நிகோபார் தீவுகளில் லேசான நில அதிர்வுகள் காணப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் தகவல் அறிக்கையின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லா பாதுகாப்பு முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து டிவியினைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏதேனும் இருப்பின் மீண்டும் மறுபதிவு செய்கிறேன். இப்போதைக்கு பிபிசி, சிஎனென் பாருங்கள். இந்தியாவில் இருப்பின் என்.டி.டிவி பாருங்கள்

இன்னமும் முழுதும் மீளாத நிலையில் வேண்டாம் இன்னொரு ட்சுனாமி.

11.35 PM

என்.டி.டிவியில் கபில் சிபல் பேசினார் " Crisis Management Group-ம் , இந்திய உள்துறை அமைச்சகமும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். திரு. டாக்டர். ஷெட்டி, இந்திய கடலாரய்ச்சி துறை நிபுணர், ட்சுனாமியின் பாதிப்போ, அல்லது சீற்றமோ அடுத்த 3 மணி நேரங்களில் தெரிய வாய்ப்புள்ளது எனக் கூறியிருக்கிறார்.

Mar 27, 2005

ஒரு படமும் சில பார்வைகளும்

ஆஸ்கார் கொண்டாட்டங்கள் முடிந்து, எல்லாரும் போற்றி, பாராட்டி, அவரவர் வேலைகளைப் பார்க்க போனபின், மிக மெதுவாக இந்திய திரையரங்குகளில் மில்லியன் டாலர் பேபி, வெள்ளிக்கிழமை வந்திறங்கியது. முதல் நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒரு பாக்ஸிங் கதை என்று கேள்விப்பட்டவுடனே, எந்த விமர்சனங்களையும் நான் படிக்கவில்லை. ஏனெனில் சில வருடங்களுக்கு முன் இதைப் போல ஒரு பாக்ஸிங் வீரனின் கதையை பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் பாதிப்பில் உழன்றது நினைவுக்கு வந்தது. அதனாலேயே விமர்சனங்களுக்கு தடா (அ) பொடா.

ஒரு வழியாக சனி இரவு காட்சிக்கு டிக்கெட்டினை ரிசர்வ் செய்து வைத்து போனோம். போகும்போதும் ஒரு சொதப்பல், ரொம்ப சீக்கிரமா சத்யம் திரையரங்குக்கு வந்து விட்டோம் என்று நினைத்ததால், பக்கத்திலிருக்கிற ரிலையன்ஸ் வெப் வெர்ல்டுக்கு போய் அகலபாட்டையில் ஆப்பிளில் வந்திருக்கிற புதுப்பட டிரைய்லரும், ஐபிலிமிலின் முதல் உலகப்படங்கள் டிரைய்லரும் பார்க்க போய் உட்கார்ந்து, பொழுது போனது தெரியாமல்,சடாலென கடிகாரத்தைப் பார்த்து, அரக்க பறக்க ஒடிவந்து உள்ளேப் போனால், 5 நிமிஷ படம் போயே போயிந்தி.

படத்தினைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை. இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு போய்விடலாம். பாக்ஸிங் சேம்பியன் ஆகும் ஆசையுடன் இருக்கும் பெண், பாக்ஸிங் ஜிம் நடத்தும் பயிற்சியாளர் + பாக்ஸிங் மேனேஜர், அவரின் நண்பன், இவர்களை சுற்றி சுழலும் கதை. எப்படி, முதலில் பயிற்சியாளாரால் உதாசீனம் செய்யப்பட்ட பெண், பின் அதே பயிற்சியாளாரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, உலக சாம்பியன்ஷிப்பினை அடைந்து, பின் மிகவும் நெகிழ்ச்சித்தரதக்க இறுதி முடிச்சோடு முடியும் படம். 4 ஆஸ்கார் விருதினை வாங்கி குவித்திருக்கும் படம். பெண் பாக்ஸராக நடித்திருக்கும் ஹிலாரி ஸ்வாங்கின் நடிப்பினை ஏற்கனவே பாய்ஸ் டோண்ட் க்ரை படத்தில் பார்த்து பிரமித்து போனவன் நான். மார்கன் ப்ரீமேன், கிளிண்ட் ஈஸ்ட்வுட் போன்ற பழம் தின்று கொட்டைப் போட்டவர்களின் நடிப்பினைப் பற்றி எழுதுவது சிறுபிள்ளைத்தனம்.

ஆனால், இந்தப்படம் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது, லெனின் "நாக் அவுட்". தேசிய விருது பெற்ற குறும்படம். இறந்து கிடக்கும் ஒரு ஏழை குத்துச்சண்டை வீரனின் நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். நண்பர் சத்யேந்திரா ("சத்யா"வில் அமலாவிடமிருந்து, செயினை திருடிக் கொண்டு போகும் திருடனாக நடித்திருப்பார். மிகச் சிறந்த மாற்று சினிமா நடிகர். பன்மொழி வித்தகர்) மிக அருமையாக நடித்திருப்பார். இந்த படமும், மில்லியன் டாலர் பேபியின் முடிவும் ஏறக்குறைய ஒன்றுதான்.

குத்துச்சண்டை என்பது விளையாட்டா இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தின் வெளிப்பாடா ? வெறிக் கொண்டு கத்தும் பார்வையாளர்களின் உற்சாங்களை தாங்கி, தன்னோடு விளையாடுபவனை மரண அடி அடிக்கத்தூண்டுவது எது ? உணவுக்காக, பிற உயிரினங்களை தாக்கும் விலங்குகளைக் கூட மன்னித்து விட்டு விடலாம். விளையாட்டு எனக் கூறிக்கொண்டு வெறித்தனமாய் அடுத்தவரை காயப்படுத்துதலும், உடலால் பலவீனமடைய செய்தலும், எந்த விதத்திலும் நாகரீகமான மனிதர்களை முன்னிறுத்துவதில்லை. இதில் கிக் பாக்ஸிங் என்றொரு வகையுண்டு. இதில் கால்களும் உபயோகப்படுத்தப்பட்டு எதிர் அணி வீரர்களைத் தாக்குவார்கள். எத்தகைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என்ன கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நாம் அடுத்த தலைமுறைக்கு ? சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் WWF என்றழைக்கப்படும் ரைஸ்லிங் பெடரேஷனின் மனிதத்தனமையற்ற விளையாட்டு என்கிற பெயரில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லுதலும், கையில் கிடைத்ததைக் கொண்டு பிறரை அடிப்பதும், ஒருவரின் அங்கங்களை தாக்கி ஊனப்படுத்தலையும், குழந்தைகள் சர்வ சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது நாம் இன்னமும் மனித மேன்மையில் ஒரு சிறு அடியை கூட எடுத்துவைக்கவில்லை என்பதை தான் உணர்த்துகிறது. ரோமானிய கலோசியங்களில் அடிமைகளின் மீது சிங்கங்களையும், விலங்குகளையும் ஏவி விட்டு, அதனை வேடிக்கைப் பார்க்கும் காட்டுமிராண்டித்தனமிருந்தது. கிளேயேடிட்டர்கள் விலங்குகளோடோ, சக அடிமைகளோடோ போரிட்டு உயிர் பிழைத்தல் கேளிக்கையாக பார்க்கப்பட்டது. 21-ஆம் நூற்றாண்டிலும் பெரிதாய் நாம் வளர்ந்துவிடவில்லை என்பதற்கு சான்றுகள் தான் WWFம், ப்ரொப்ஷனல் கிக் பாக்ஸிங்கும், குத்துச்சண்டைப் போட்டிகளும். ஒரு மனிதனின் திறமையை முன்னிறுத்தி அடுத்தவரை தோற்கடித்தல், அதுவும் ஆரோக்கியமான முறையில், என்பது தான் சிறந்த விளையாட்டாக இருக்க முடியும். இதைத்தாண்டி, சக மனிதனை கொலைவெறியுடன் ரத்தகளாரியாய் தரையில் சாய்த்தலை எந்த விளையாட்டிலும் சேர்க்க முடியாது. இது நம்முள் இருக்கும் மிருகத்திற்கு தீனிப்போடும் காட்டுமிராண்டித்தனம்.

வாங்கிய குத்துகளாலும், வீழ்த்திய நபர்களாலும், இன்று குத்துச்சண்டையின் திருஉருவாக திகழும் முகமது அலியின் நிலையென்ன ? பார்க்கின்சன் (அல்லது அல்சைமரா ?) நோயின் உச்சக்கட்டத்தில், நிற்கக்கூட திராணியற்று, நடுநடுங்கிக் கொண்டு இருக்கிறார், எல்லாம் உடலில் வாங்கிய குத்துக்களின் பின்விளைவுகள். அது அப்படியென்றால், மிருகத்தனத்தினை ஊட்டி வளர்த்து, காதை கடித்து, பெண்ணை கற்பழித்து, ஜெயில் கம்பிக்கும், கோர்ட்டுக்கும் இடையில் வலம் வருகிறார் மைக் டைசன். தளர்ச்சியாலும், உடல் பலவீனத்தாலும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணத்தினை எதிர்நோக்கியிருக்கும் எத்தனையோ மல்யுத்த, குத்துச்சண்டை வீரர்களின் கண்ணீர்கதைகள் அவ்வப்போது செய்திகளில் அடிபடும். இத்தனையும் தாண்டி, மனதால் வளரும் வன்முறையினை விளையாட்டு என்கிற பெயரில் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

வரலாற்றிலிருந்து மனிதர்கள் பாடம் கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?

Mar 23, 2005

ஏமாறும் பெண்களும், எதிரொலிகளும்

பத்மா அரவிந்தின் பதிவில் எழுதியிருந்த விஷயம் காலையிலிருந்து உறுத்திக் கொண்டேயிருந்தது. இதேப் போல சில நிகழ்வுகளை நானும் கேட்டிருக்கிறேன். என் தூரத்து சொந்தகாரரின் மகளும் இதேப்போன்று அயல்நாட்டு மாப்பிள்ளையை தேடி கட்டிக்கொடுத்து, மாப்பிள்ளை அயல்நாட்டில் வேலையிலழந்ததால், பெண்ணை சென்னைக்கு அனுப்பி, அவர் அங்கிருந்தே வேலை தேடுவதாக சொல்லி, பல மாதங்கள் ஓடி, பின் அங்கிருக்கும் ஒரு கறுப்பின பெண்மணியை கல்யாணம் செய்து கொண்டுவிட்டு செட்டிலாகிவிட்டார். என் சொந்தகாரரின் மகள் விவாகரத்தினை எதிர்நோக்கி, சென்னையில் இருக்கிறார். ஆக, ஜமீன் பல்லாவரம்-மீனம்பாக்கம்-சிகாகோ-மீனம்பாக்கம்-ஜமீன் பல்லாவரம் என ரிடர்ன் டிக்கெட் எடுத்தது போலாகிவிட்டது. அவரும், அவரின் மகளும், எந்த நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. ஒரு சமூக தீண்டாமை சார்ந்த புறக்கணிப்பில் பலிகடாவாக ஆக்கப்பட்டு விட்டது அவர்களின் குடும்பம். இத்தனைக்கும் அந்த பெண் M.Sc படித்தவர். அவருக்கே இந்த நிலைமை. இந்த நிலையில் பத்மா அரவிந்த் குறிப்பிட்டிருந்த பெண்ணின் நிலைமை மிக பரிதாபகரமானதாகதான் இருக்கும்.

பத்மாஅரவிந்தின் பதிவில், திருமணம் என்பதே தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல ஒரு சடங்காகிவிட்டது என எழுதியிருந்தேன். இனப்பெருக்கத்தினை, வம்ச விருத்தியை தாண்டி, திருமண பந்தத்தின் தேவையென்ன ? கணவன், மனைவி என்பவர்களின் உறவு எத்தகைய வரையறைகளில் முன்நிற்கிறது ? அடிப்படை விஷயங்களான புரிதலும், பகிர்ந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருக்கிறது என்று தான் தோன்றுகிறது. உண்மையில் ஆழ்ந்து யோசித்தால், திருமணம் என்கிற பந்தத்தின் அத்தியாவசியத்தின் அடித்தளத்தை செப்பனிடும் நேரம் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. தன் மனைவியை மதிக்க தெரியாத, உணர்வுகளை புரிந்துக்கொள்ளாத கணவர்களும், ஊர் உலகம் தெரியாது கணவனின் கட்டுப்பாட்டில் வாழ்வினை நடத்தும் பெண்களும், கணவனை விட்டால் வேறு கதியில்லாமல் இருக்கும் பெண்களையும் பார்க்கும்போதெல்லாம், திருமணம் என்பது உரிமமிட்ட விபச்சாரமோ (licensed prostitution) என்று கூட கோவம் வருகிறது. இது திருமணத்தினை கேள்விக் குறியாக்கும் முயற்சியல்ல, மாறாக, திருமணம் என்கிற பந்தத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ள நமது சமூகத்தின் கோரமான நோய்முகம்.

இதில் ஏமாற்றப்படுவது பெண்கள் தான். மிக அபூர்வமாக ஆண்கள். கலாச்சாரம், பண்பாடு, மரியாதை போன்ற மேம்பூச்சுக்களை மையமாக வைத்து இன்னமும் ஆழமாக பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இன்னமும் எத்தனை காலம், தமிழ் பண்பாடு உலகின் தலைசிறந்த பண்பாடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்று அமெரிக்க மாப்பிள்ளைகளும், டாலர்களின் பளபளப்பும், திராம்களின் மினுமினுப்பும் நிறைய பெற்றோர்களின் கண்களை கூசச்செய்து ஏமாற்றுகின்றன. இவ்வாறாக பண்டமாற்று முறையில் அனுப்பப்படும் பெண்கள் பெரும்பாலும், ஊர் உலகமறியாத அப்பாவி பெண்களாகவே இருக்கிறார்கள். மேலும், அயல் நாடுகளிலேயே, கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருப்பது தெரிந்தாலும், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிஜங்கள் பற்றிய சில அறிமுகங்கள் மனதினை கனமாக்குகிறது. தன் குடும்ப கஷ்டத்திற்காக கல்யாணம் செய்து கொண்டு போகும் பெண்களின் வாழ்வின் நிஜ சரிதங்கள், கண்டிப்பாக கண்ணீரால் நிரம்பியிருக்கும். இன்னமும், விவாகரத்து செய்வதினைக் கூட சமூக பெரும்குற்றமாக பார்க்கும் சூழலில் தான் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறான பெண்களின் முன்னாலும், பின்னாலும் பேசப்படும் சொற்கள் அவலமும், குரூரமும் நிரம்பியதாக தான் உள்ளது.

திருமணம், குடும்பம் போன்ற நிறுவப்பட்ட அமைப்புகளுக்கு ஈடாக நம்மால் இணை அமைப்புகளை நிறுவ முடியவில்லை. இதனாலேயே, கலாச்சாரம் என்கிற ஒற்றைத்தன்மையின் அபத்தத்தினால், பெண்கள் காவு வாங்கப்படுகிறார்கள். லிவ்-இன் போன்ற அமைப்புகளில் நம்மால் முழுவதுமாய் ஒன்ற முடிவதில்லை. குடும்பம் என்பதை ஒரு ஆண் சர்வாதிகார அமைப்பாக இருக்குமிடத்தில், குடும்பத்தினுள், பெண்களின் நிலையினை குறித்து எழும் எல்லா வாதங்களுமே ஏமாற்றுவாதங்கள். அவ்வாறிருக்க, இன்னமும், ஏன் இதனை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் கேள்வியாக எழுகிறது. ஆனாலும், திருமணமல்லாத மாற்று ஏற்பாடுகளின் சமூக விஸ்தரிப்புகள் மிக குறைவாக உள்ள சூழலில், மாற்று அமைப்பினை அங்கீகரிக்காத ஒரு அமைப்பில், என்ன முக்கியமான காரணங்களினை வைத்து திருமணம், குடும்பம் போன்ற அமைப்புகளை தவிர்த்த ஒரு எதிர் அமைப்பை நிறுவ இயலும் என்பது வினா அளவிலேயே நிற்கிற விஷயம்.
இவ்வாறாக உலகமுழுக்க இருக்கும் தமிழ்பெண்களின் கதி என்னவாக இருக்கும் ?
இவர்களின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லும் வழிமுறைகள் உள்ளனவா?
இவர்களுக்கான கவுன்சலிங் தர தேர்ந்த ஆட்கள் உள்ளார்களா ?
பாஸ்போர்டினை அடகு வைத்து கணவனோடு குடும்பம் நடத்தும் பெண்கள், அந்நரகத்திலிருந்து மீள வழிவகைகள் இருக்கிறதா ?
அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலோ உள்ள தமிழ்ச்சங்கங்கள் / தமிழ் கூட்டமைப்புகளுக்கு இவற்றின் தீவிரம் பற்றிய புரிதல் உள்ளதா ?
ஏதேனும் வழிகளில் இனி வரும் காலங்களில் இவ்வாறான பெண்கள், பண்டங்களாக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தவிர்க்க முறைகளேனும் இருக்கிறதா ?
கொடுஞ்செயல் புரிந்து 'தள்ளி வைக்கப்பட்ட' பெண்களினை அயல் நாடுகளிலேயே தங்க வைக்கும், வாழ்வினை எதிர்நோக்கும் வண்ணம் செய்யும் செயற்பாடுகள் பற்றிய விஷயங்கள் எங்கு கிடைக்கும் ?
தமிழ்நாட்டிலிருந்து அயல்நாடுகளில் யாரேனும் பெண் கொடுத்தால், எங்கேயாவது மாப்பிள்ளைகளைப் பற்றி குறுக்கு விசாரணைகள், கிராஸ் செக்கிங் செய்ய இயலுமா ?
அதற்கு ஏதேனும் அமைப்புகள் உள்ளதா ?
அடக்கிவைக்கப்பட்ட கண்ணீரின் பிரவாகம் போல நீண்டுக் கொண்டே போகும் கேள்விகள், விடைகள் இல்லாமல். நாம் கூடி ஏதேனும் செய்ய இயலுமா என்பதை யோசிப்பதை தவிர ஆறுதல்கள் பயனளிக்காது என்றே தோன்றுகிறது. இதையும் தாண்டி, திருமணம் என்கிற பந்தத்தின் மீது எனக்கிருக்கிற நம்பிக்கைகளும் க(கு)ரைந்துக் கொண்டே இருக்கின்றன.

இது எப்படி தோணுது?

டீக்கடையில் உட்கார்ந்திருந்த சமயம் (ராம்கி, இது நுங்கம்பாக்கம் கடை இல்ல) வித்தியாசமாய் மாட்டிய பதிவு இது. இந்த பதிவில் மாநில சுயாட்சி, இந்திய அரசியல் கட்டமைப்பு பற்றிய சில விவரங்கள் இருந்தன. இவற்றில் சிலவற்றை தவிர பிற விஷயங்களை நானறியேன். ஒரு கூட்டமைப்பு நாட்டில் (இந்தியா, அமெரிக்கா) பல மாநிலங்களின் சுமையை சில மாநிலங்கள் தாங்க வேண்டுமா? அவ்வாறு தாங்குதலின் முன்/பின் விளைவுகள் என்னவாய் இருக்கும் ?

கூட்டுக்குடும்பத்திலேயே வேலையே செய்யாமல் சும்மா இருந்தால், "தண்டச்சோறு" எனத் திட்டி, கொஞ்சம் விவகாரமாக போனால், வெளியே அனுப்பி விடுவார்கள். இதுப் போல ஒரு நாட்டுக்கும் பொருந்துமா?

அந்த பதிவினை படித்து விட்டு இங்கு வந்து பின்னூட்டமிடுங்கள் . விஷயம் தெரிந்தவர்கள் விவாதித்தால் நன்றாக இருக்கும்.

Mar 22, 2005

ஜெமினிகணேசன் மரணம்

ஜெமினி கணேசன், தமிழ்படவுலகின் காதல் மன்னனாய், செல்லமாய் "சாம்பாராய்" அறியப்பட்டவர், அவரது இல்லத்தில் காலையில் மரணமடைந்தார். எம்.ஜி.ஆர் - சிவாஜி கதாநாயக பிம்பங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவர்களிடமிருந்து வேறுபட்டு, தனித்துவமான காதல் நடிப்பால், அந்நாளைய கனவுக்கன்னிகள் அனைவரோடும் நடித்தவர். தெரிந்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை, புகழ்பெற்ற ஹிந்தி நடிகை ரேகா, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த மருத்துவராக அறியப்படும் கமலா செல்வராஜ் ஆகியோரின் தந்தை. அவருக்கு, 7 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

கொஞ்சம் தாமதமாக பார்த்தேன், பத்ரியும் இதை பதிந்திருக்கிறார்.இந்த பதிவு தகவலுக்காகவே, விரிவாக ஜெமினியினைப் பற்றி அலசலாம்.

Mar 21, 2005

கானா - சென்னை நகர்ப்புற இசை வடிவம் - பகுதி 1

ஒரு வாரத்தில் மண்டைக்கு கனமான விஷயங்களாக எழுதி, மண்டை காய்ந்து போய்விட்டிருக்கும் உங்களுக்கு, அதனை நிவர்த்தி செய்யும் விதமாய், இந்த வாரமுழுதும் கொஞ்சம் லேசான விஷயங்களை கையில் எடுத்துக் கொள்வோம். எங்கிருந்து ஆரம்பிப்பது ? கானாவிலிருந்து தொடங்குவோமா? சென்னையின் மிகமுக்கியமான கல்லூரிகளை தாண்டிப் போகும் பேருந்து வழித்தடங்களில் கானா இல்லாமல் இருக்காது. கீழ்தட்டு மக்களின் இசை வடிவம் என்பதை தாண்டி, பெரும்பாலான கல்லூரி பேருந்துகளின் மிக முக்கியமான அடையாளம் - கானா. கானா பாடல்கள் இல்லாத ஒரு ஆண்கள் கல்லூரி வழித்தடத்தை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. சென்னையின் மிகமுக்கியமான நகர்ப்புற அடையாளம் கானா ... மிக கனமான விசயங்களை எளிமையான நடையில் பாடும் முயற்சி. கல்லூரி கானாக்களில், கூட்டம் அதிகமிருக்கும் பட்சத்தில் ஆபாச சொற்களுக்கு குறைவிருக்காது. 3 வருடங்கள் கல்லூரி பயின்ற காலத்தில் கானா பாடகனாக இருந்திருக்கிறேன். அதனால், கானாவின் மரியாதை என்னவென்று தெரியும். எங்கே கூட்டமாய் போனாலும், கானா பாடாமல் இருக்க மாட்டோம். கானா ஒரு கல்லூரியின் அடையாளம். இதற்காக பேருந்தினை மறித்து, இரண்டு கல்லூரிகள் அடித்துக்கொண்ட கதைகளெல்லாம், சென்னையில் ஏராளம்.

ஒரு சமயம், லயோலா கல்லூரியின் கேண்டீனில் போய் கானா பாடி, அங்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வந்து எதிர் கானா பாட, நாங்களும் பாட, சலசலப்பு உண்டாகி, கையில் கிடைத்ததை தூக்கி எறிந்து, லயோலா கல்லூரியின் மதில் சுவர் எகிறி குதித்து, தண்டவாளங்களினூடே, நுங்கம்பாக்கம் பாலத்தினை கடந்திருக்கிறோம். அன்றைக்கு ரயில் வந்திருந்தால், எல்லாரும் அபீட்டு. இதேப்போல் இன்னொரு முறை, பச்சையப்பன் கல்லூரி வாசலில் நிற்கும் போது பாடியதால், பஸ்ஸிலிருந்து இழுத்துப்போட்டு அடித்து, என் கண்ணாடி காலி. இவ்வாறாக, வீர விழுப்புண்களை சுமந்து கானா பாடியிருக்கிறோம். என்னமோ, சுதந்திர போராட்டத்தில் "வந்தே மாதரம்" சொல்லி, வெள்ளையனிடம் அடி வாங்கிய மாதிரியான பில்-டப் நிறையவே இருக்கிறது.

சிங்கள பைலா பாடல்கள் போல, கானா ஒரு கலாச்சார அடையாளம். அடித்தட்டு மக்களின் குதூகலம். பச்சையப்பன் கல்லூரி B மைதானத்தில் கிரிக்கெட் ஆடப்போகும் போது, டாஸ் ஜெயித்ததிலிருந்து, பேட்டிங் எடுத்தோமானால், நம்மணி வீரர்களை உற்சாகப் படுத்த தொடர்ச்சியாக 3 -4 பேர் மாற்றி, மாற்றி கானா பாடுவோம். கானாவின் மிக முக்கிய அம்சமே participation. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. கர்நாடக கச்சேரிகளுக்கு போனால், பாகவதர் பாடிக்கொண்டேயிருப்பார். நம் பக்கத்திலிருப்பவர் கொட்டாவி விட்டுக்கொண்டோ, சாப்பிட்ட போண்டாவின் பெருமைகளை பேசிக்கொண்டோ இருப்பார். ஆனால், கானாவில் அது கிடையாது. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசை கருவிகள் என்று எதுவுமில்லை. மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸில் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு பாடல்கள் அமைய வேண்டும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் கானாவினை அறிமுகப்படுத்தியவர் நிறைய பேர் நினைப்பது போல் தேவா கிடையாது. பச்சையப்பன் கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஒரு கூட்டம்தான். இயக்குநர் செல்வாவின் முதல் படமாகிய "தலைவாசல்" தான் பிறகு அதை தேவா காப்பிரைட் எடுத்துக்கொண்டுவிட்டார். மூன்று வருடங்களும், கல்லூரி முடித்து, நண்பர்களின் திருமணம், எங்கேயாவது ஒன்றிணைவது என்கிற சந்தர்பங்களில் 2001 வரை கானா பாடியிருக்கிறேன். எல்லா புது வருட துவக்கத்திலும், நண்பர் அரவிந்தனின் வீட்டு மொட்டை மாடியில் தொடர் கானாவும் திரைப்பாடலும் பாடுவதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறோம்.

இது கானாவினைப் பற்றிய அறிமுகம் பகுதி 1 மட்டுமே. காத்திருங்கள், என் சொந்த கானாக்களும், சில சூப்பர் கானாக்களும், இந்த பதிவில் இந்த வாரத்தில்.

Mar 19, 2005

சிண்ட்ரெல்லாவின் செருப்பு

நாளை எழுதலாம் என்று நினைத்திருந்து, அதற்குள், குடும்பத்தோடு, நாளை வெளியே செல்லும் வேலை வந்துவிட்டதால், நாளைக்கான பதிவை இன்றே பதிந்துவிட்டு ஒடிப்போகிறேன். ஒடிப்போய்விட்டது ஒரு வாரம். தமிழ்மணம் குழுவினர் கொடுத்த நட்சத்திர பட்டம் துறப்பதால், நான் புத்தனாகவோ, இளங்கோவடிகளாகவோ ஆக மைக்ரான் அளவுக்குக் கூட வாய்ப்புகளில்லை. ஆனால், துறந்துதான் ஆக வேண்டும். நட்டு கழண்ட சித்திரத்திலிருந்து, இந்த பதிவு வரை, வாசித்து, பின்னூட்டமிட்டு, பதிந்து, அவரவர் பதிவுகளில் பீல்லாகி எழுதி, அதை மற்றவர்கள் படித்து, அவர்கள் பீல்லாகி, அவர்கள் எழுதி என நிகழ்ந்த இந்த வலைப்பதிவு சங்கிலி விளையாட்டை கொஞ்சநாட்கள் நிறுத்தி வைக்கலாம். உருப்படியாய் அவரவர் வேலையை பார்க்கலாம்.

சிண்ட்ரெல்லாவுக்கு கிடைத்த செருப்பு போல (செருப்புன்னு சொல்லலாம்ல..இல்ல அதுக்கு ஒரு தனிபதிவு போடணுமா ;-)) இளவரசர்கள் (அதாங்க வலைப்பதிவாளர்கள்....சரி சரி, இளவரசிகளும் :-)) இருக்குமிடத்தில் நடனமாடிவிட்டு, இன்றோடு, தெரிந்தே செருப்பினை தொலைக்கப்போகிறேன். இனி இளவரசர்கள் கூடும் மாளிகையின் வாசலில் (நம்ம தமிழ்மணம் முகப்பு தான்) என்னை அனுமதிக்க மாட்டார்கள். ஒரமாய் இருந்து பார்த்துவிட்டு போகலாம். ஒரமாய் இருந்தாலும் இந்த மாளிகையினுள் நானும் ஒருவாரம் இருந்தேன் என்கிற பந்தாவோடு கொஞ்சம் மண்டையில் ஈகோ ஏற்றி சுற்றலாம்.

பயத்தோடுதான் ஆரம்பித்தேன், ஏனெனில் எனக்கு முன்பு நட்சத்திரமாய் இருந்தவர்கள் அனைவருமே வலைப்பதிவுகளில் நெடுந்தொலைவு பயணித்தவர்கள். வந்தவர்களில் நான் தான் ஜூனியர் என்று நினைக்கிறேன். வெறும் வெள்ளையான நோட் பேடு பக்கம் என்னளவில் மிக அச்சுறுத்தும் விஷயம். அந்த பக்கத்தில் என்ன எழுதுவது என்பது அதைவிட பயமுறுத்தும் விஷயம். நடுஇரவில் மெல்லியதாய் திறந்து மூடும் ஜன்னல்களின் சத்தங்களில், சடாலென வயிற்றுக்குளூறும் அமிலம் போல ஒவ்வொரு பதிவும் குலுங்கும் அமிலத்தினூடேயே அதிகாலைகளில் எழுதியிருக்கிறேன். வேலைப் பளுவுக்கிடையில் நான் கஷ்டப்பட்டு எழுதினேன் என்றெல்லாம் பில்டப் கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும், எழுதுவதற்கு அசாத்திய மனபலமும், யோசனைகளும், கோர்வையான மொழியும், உடல் உழைப்பும் வேண்டுமென்பதை மட்டும் தெரிந்து கொண்டேன்.

சில சமயங்களில் கிரிக்கெட் ஆடும்போது பந்து பொறுக்கி போடும் சிறுவர்கள் திடீரென அசாதாரணமாய் அசத்துவார்கள், இதனால், ஆடியவர்களுக்கு நன்றாக ஆட தெரியாது என்று பொருளல்ல, அந்த சிறுவனுக்கு அன்றைக்கு நேரம் அவ்வளவுதான். அதே போல்தான் நானும். இந்த பதிவினை ஆரம்பித்து இன்னமும் முழுதாய் 100 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் ஏதோ சில நல்ல விஷயங்களை பகிர்ந்திருக்கின்றேன் என்பது பின்னூட்டங்களின் வழியே தெரிகிறது. எழுதிய அனைவருக்கும் என் வணக்கங்கள். இதைத் தாண்டி, தனி மடலில் நான் பதிந்த கெட்டவார்த்தைகளை விட மாறாக இன்னும் ஆழமான கெட்டவார்த்தைகளின் மூலம் என்னை "வாழ்த்திய" புண்ணியவான்களுக்கும் தனிப்பட்ட முறையில் வந்தனங்கள்.

அடிப்படையில் நான் ஒரு சோம்பேறி. நிறைய நண்பர்களைப் போன்று விரிவான வாசிப்பும், சங்க இலக்கிய பரிச்சயமும், சம கால இலக்கியத்தின் வீச்சும், ஆங்கில இலக்கியமும் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. தலையணை சைசு புத்தகங்களில் நான் செய்தது புக் கிரிக்கெட் விளையாடியது தானேயொழிய வேறெதுவும் கிடையாது. எனக்கு தெய்வம் கூகிள்தான். மதங்களையும், சாதிகளையும், படிப்பினையும், அறிவினையும் விட சக மனிதர்களை, மனிதர்களாக பார்த்தல் தான் மிக முக்கியம் என்பது தான் என் எழுத்தின் அடிப்படையாக கொண்டிருக்கிறேன். எல்லா எழுத்துகளும் மனித விடுதலை நோக்கியே, எல்லா தத்துவங்களும் அதைதான் கூறுகின்றன என லேட்டாக புரிகிறது. மொத்தமாக எழுதியதில் "கெட்ட வார்த்தைகளின் அரசியல்" தவிர்த்து மற்றெதுவும் எவ்வித முன்னேற்பாடுகளின்றி தோன்றியதை எழுதியது தான். ஏதேனும் கருத்துப்பிழைகள் இருந்திருந்தால், தாராளமாய் குட்டலாம். நானும் குனிகிறேன். எழுதியது ஏதாவது ஒரு வகையில் உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிப்பீர்களாக. என்னிடத்தில் எவ்விதமான மருத்துவ ஆலோசனைகளோ, லேகிய வகைகளோ கிடையாது.

இனி வரப்போகும் நட்சத்திர பதிவாளர்களுக்கு என் வாழ்த்துக்களைக் கூறி இந்தப் பதிவோடு சந்தோஷமாய் என் செருப்பினை கழற்றுகிறேன். என்ன காரணத்தினால் என்னை தமிழ்மணம் குழுவினர் நட்சத்திரமாய் தேர்ந்தெடுத்தார்கள் என்று இதுவரைக்கும் யோசித்துப்பார்த்தேன் ஒன்றும் புலப்படவில்லை.

இத்தனை நாளும் படித்ததற்கும், பின்னூட்டமிட்டதற்கும் நன்றி சொல்வது, தமிழ் சினிமாவில் 7 குண்டுகள் பாய்ந்தும் கதாநாயகன் இறக்காமல் கிளைமாக்சில் 3 பக்க A4 தாளின் வசனம் பேசுவதற்கு இணையான கிளிஷேவாக தெரிந்தாலும் என்ன செய்வது, நன்றி மறப்பது நன்றன்று. அதனால் நன்றிகள் - உங்களுக்கும், தமிழ்மணம் குழுவினர்களுக்கும்.

போவதற்கு முன், ஆண்களுக்கு வெட்கம் உண்டா, அதெல்லாம் இருக்கிறதா எனக் கேட்ட தோழிக்காக,

உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்
(நா.முத்துக்குமார்)

வரட்டா..........

குண்டூசிகளை முன்வைத்து.....

குண்டூசிகள் அளவில் மிகச்சிறியவை. பெரிதாய் விஷயங்கள் இல்லாதவை. ஆனால் வீரியமானவை. புதிதாய் ஷோருமில் வாங்கிய சட்டையை போடும்போது, காலருக்கடியிலிருந்து சுருக்கென்று கழுத்தினை குத்தும் குண்டூசிகளின் வலி ஜென்மத்திற்கும் மறக்காது. சுருக்கென்று குத்தும்போது இருப்பினை உணரவைப்பவை. குத்தும் போதும், குத்திய பிறகும், அதி ஜாக்கிரதையாக அதனதன் வலியை நினைவில் தேக்கிவிட்டு செல்லுபவை.

சந்திரன் கூட குண்டூசிகள் என்று தனியாக ஏன் எழுதி வருகிறீர்கள் என்று கூட கேட்டதின் பதிலிது. [குண்டூசிகள் படிக்க என் முந்திய பதிவுகளை படியுங்கள்] நான் எழுதிய குண்டூசிகள் நகமும், சதையுமாய் என் வாழ்வில் நடந்த நிகழ்வுகள். கண்களுக்கு மெல்லியதாய் தெரியும் குண்டூசிகள், காரியத்தில் மிக அழுத்தமானவை. அந்நிகழ்வுகளினூடே வாழ்வினைப் புரிந்து கொள்ளும் அனுபவங்கள் கிடைத்தது. 100 புத்தகங்களை விட ஒரு அனுபவம் அதிகமாய் கற்றுக்கொடுக்கும். அசிரத்தையும், எள்ளல் பார்வையும் வாழ்வில் எவ்வளவு கீழ்த்தரமானவை என எனக்கு விளங்க வைத்தவை இந்த குண்டூசிகள். சமூக கவலையின்மையும், கிண்டல் மனப்பான்மையும் எந்தளவிற்கு தரம் குறைந்தவை என செவிட்டில் அடித்தது போல் சொல்லியவை இந்த குண்டூசிகள். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று படித்து பல்கலைக்கழக முதல் மார்க் வாங்கியிருந்தாலும், யதார்த்தத்தில் ஒருநாளும் கடைப்பிடித்ததில்லை நான். அகங்காரமும், தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய எண்ணங்களும்,குறை பார்வையும், தனி மனித மதிப்புகளை எப்படி குப்பைத்தொட்டியில் கடாசும் என்று ஆணித்தரமாய் காட்டியவை குண்டூசிகள். இந்த கருத்துக்களை புரிந்து கொள்ள எனக்கு வருடங்களாகின. வேணு அரவிந்தும், சேரனும், கோபி கிருஷ்ணனும் எதுவும் சொல்லாமல் ஒரு பிரளயத்தை மனதினுள் உண்டாக்கிவிட்டு போய்விட்டார்கள்.

இதன் பின்புலமோ அல்லது விவரங்களோ அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இது ஒரு பெரிய நிகழ்வாகவும் அவர்கள் வாழ்வில் இருக்கப்போவதில்லை. ஆனால், எனக்கு இந்த நிகழ்வுகள் வாழ்வின் பிம்பங்களை கலைத்துப்போட்டன. நம் எண்ணங்கள் என்பதை யுகயுகமாக தொடரும் மனித வேட்கையின் மொத்த குவியல் என்று படித்திருக்கிறேன். வாழ்க்கை என்பது என்ன என்பது பற்றிய கேள்விகளும், வாழ்வில் சாதிக்க நினைப்பது என்ன என்பதையும், சக மனிதர்களைப் பற்றிய கவலையும், உலகினைப் பற்றிய உலகார்ந்த பார்வையும் தேவை என கோடிட்டுக் காட்டின. மென்பொருள் வாழ்க்கையில் துக்கங்கள் பெரிதாய் ஏதும் கிடையாது. ஆலன் சோலி ட்ரெளசர்களும், பேசிக் சட்டைகளும், பிட்சா கார்னர் பர்கர்களுமாய் இருந்த வாழ்வினைத் திருப்பிப் போட்டு, பிச்சைக்காரர்களையும், திருடர்களையும், பாலியல் தொழிலாளிகளையும் மனிதர்களாக பார்க்க வழி கோலியவை குண்டூசிகள். பிரபலங்கள் என்றில்லை, வடசென்னை கிரவுன் தியேட்டர் சாலையில் 10 கலர் சாக்பீஸ்களோடு, ராமனையும், அனுமனையும், யேசுவையும் வரையும் சாலையோர ஒவியன் வரை திரும்பும் திசையெங்கும் ஆசான்களாய் இருக்கிறது உலகம். பார்க்கும் பார்வையிலும் மனிதர்களை அனுகவதிலும் தான் ஒளிந்திருக்கிறது வாழ்தலின் ரகசியம்.

மனிதர்களை பற்றிய என் பார்வையும், நிறுவனமாக்கப்பட்ட வரலாறுகளும், நிர்ணயிக்கப்பட்ட எண்ணங்களின் மீதும் கேள்விகள் எழுந்தன. இது என்னுடைய மீட்சி புராணமல்ல, இன்னமும் மீளாமல் இருப்பவர்களுக்காக எழுதப்படும் வாக்குமூலம். தன்னிலிருந்து விலகி தன்னையும் உலகையும் பார்பவன் தான் சிறந்த மனிதன். தன்னைப்பற்றிய சுயமதிப்பீட்டோடும், சகமனிதர்களைப் பற்றிய வாஞ்சையோடும் தொடர்ந்து இருந்து வருவதை விட பெரிதாய் எதுவும் சாதித்துவிடப்போவதில்லை நாம். வாழ்க்கை ஒரு மாயை என்கிற தத்துவார்த்த தளத்திற்கு போகாமல், அதே சமயம் ஒரு ஆலமரத்தினை விடவும், ஒரு கடலாமையை விடவும் குறைந்தே வாழும் வாழ்வின் யதார்த்ததை நினைவில் நிறுத்தி, வாழ்வினைப் பற்றிய கேள்விகளை தொடர்ந்து மறுவாசிப்பு செய்யலாம் என்று தோன்றுகிறது.

சாதாரணங்களின் வாயிலாய் வாழ்வின் அசாதாரண எல்லைகளை அறியமுடியும் எனக் காட்டிக் கொடுத்த டிவிஎஸ் 50யும், பிரிந்து விழுந்த புத்தகமும் வேர்கள் ஏதும் இல்லாவிடினும் என்னளவில் போதிமரங்கள்தாம். படித்தலும், படித்தலின் அர்த்தங்களின் புரிதலும் புரிய வருடங்களாகின. எல்லோர் வாழ்விலும் ஏதேனும் குண்டூசிகள் குத்திருக்கும். குத்திய குண்டூசிகளை குப்பையில் தூக்கிப்போடும் வேளையில் குத்திய இடங்களையும், வலிகளையும் மறுபார்வை பார்ப்பது இனி குண்டூசிகள் குத்தாமல் ஜாக்கிரதையாய் இருக்க உதவும்.

குண்டூசிகள் இல்லாமலும் பேப்பர்களை சேர்க்க இயலும், ஒரு காற்றில் சிதறிவிடக்கூடிய அபாயங்களோடு. குண்டூசிகள் பெரும்பாலும் புத்தகங்களோடு வருவதில்லை, மேலும் மனிதர்களை படிப்பதை விட பெரிய புத்தகமிருக்கிறதா உலகத்தில்!

Mar 18, 2005

No boom-boom, just ngam-ngam

காகங்கள் நேற்றிரவு என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தன. பாவம் காகங்கள், சரியான கறிசோறு சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆகிறதாம். என் வீட்டில் அதற்கு வழியில்லை. அதனால் என்னால் எதுவும் செய்ய முடியாது. இதுவல்லாமல், சென்னையின் தெருவோர கையேந்தி பவன்களில், காகங்களை அடித்துக்கொன்று, அதையே சிக்கன் கறி என விற்கிறார்களாம். பாவம் ஒரு பக்கம் கறிசோறுக்கு ஆசை, இன்னொரு பக்கம் தானே கறியாகிவிடும் அபாயம். கஷ்ட ஜீவனம்தான் காகமாய் இருப்பது. காகங்களுக்கு கறிசோறு எப்படி போடுவது ?

------------------------------------------
அமெரிக்க போருக்கு பிறகு வியட்நாம் சின்னாபின்னாமாகிவிட்டது. வேலையில்லை. எங்கு பார்த்தாலும் போரில் இறந்துபோன ஆண்களை தவிர எஞ்சியிருப்பவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தவிர கொஞ்சமே ஆண்கள். பொருளாதார சீர்கேடு, வறுமை, நோய்கள் என உலகின் எல்லா சீர்கேடுகளும் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தன. ஏதாவது வேலை கிடைக்குமா ?

---------------------------------

Page 3 பார்த்த பாதிப்பில் கொஞ்சம் துருவி துருவி இந்தியாவில் இந்த மாதிரி விசயங்கள் நடக்கிறதா என்று நோண்டிக்கொண்டிருந்தேன். கிடைத்த விவரங்கள் அதிர்ச்சியாயிருந்தது. வழக்கம்போல இது ஏதாவது பத்திரிக்கைகளின் சர்க்குலேஷன் ஜிகினாக்கள் என்று நினைத்து விட்டேன். ஆனாலும், தெஹல்காவின் மீது எனக்கு அபார நம்பிக்கையிருக்கிறது. இந்தியாவின் இருண்ட விஷயங்களை தெஹல்காவைப்போல் வேறெந்த வார இதழும் சொல்லுவதில்லை. இருந்தாலும் கொஞ்சமும் நம்பிக்கை வராமல் படித்து விட்டு மூடிவிட்டேன். இந்தியாவில் இதுவா..ச்சீசீ ?

---------------------------------------------

கேரளாஏரோடிகா என்கிற இணையதளம் மிகச் சிறப்பான இணையதளம். நவரசம் சொட்டும் பாலியல் கதைகளை (நம்மூரு லோக்கல் செக்ஸ் புத்தகங்கள் போல) தினமும் பதிந்து தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி வருகிறார்கள். எல்லாவிதமான கதைகளும் இலவசமாக கிடைக்கும்.

-------------------------------------

கம்போடியா என்றால் நமக்கு நினைவுக்கு வருவது அங்கோர் வாட் கோயிலும், அதன் இராமயண சிறப்புகளும் (சரியா நா.கண்ணன், நீங்கள் இப்போதுதானே போய்விட்டு வந்தீர்கள்) சற்றே உள்ளே தள்ளி போனால், நல்ல இடம்தான். என்ன ஒரே குறை, எங்கு பார்த்தாலும் பெண்கள், பாலியல் தொழில்..இதை தொழில் என்று சொல்லுவது அபத்தம், அவர்கள் பாலியல் கொத்தடிமைகள். தினமும் 4-5 வாடிக்கையாளர்களை கையாள வேண்டிய நிர்பந்தம். 10-15 பெண்களை ஒரே அறையில் தங்கவைத்து வாடிக்கையாளருக்காக மட்டுமே வெளியெ விடப்படும் நிலைமை. தப்பி ஓட நினைத்தீர்களோ தீர்ந்தீர்கள். ஒரே புல்லட்டில், சுமங்கலியாய் நெற்றிக்கு பொட்டிட்டு அனுப்பிவிடுவார்கள். புல்லட் வராத வழிகள் உண்டா தப்பியோட?

---------------------------------

அவன் அவளை அருகில் வா என்று சைகை செய்தான். அவள் அவனருகில் வந்தாள். மிக நீண்ட முத்தத்தோடு தொடங்கியது. அவளை நிர்வாணமாகி முத்தங்களை அள்ளி இறைக்கத் தொடங்கினான். சற்று நேரம் கழித்து, அவன் அவளிடம் "ம்ம்...வேலையை பார்" என உத்தரவிட்டான். அவளும் அவனின் வெற்று மார்ப்பினூடே பயணித்து, பேண்ட் ஜிப்பினை கழற்ற துவங்கினாள். அவளின் முக்கிய வேலையே அங்கே அதுதான். இன்னும் இன்றைக்கு எத்தனை பேரின் ஜிப்போ?

-----------------------------------------------

இந்தோனேசியாவில் ட்சுனாமியினால் அநாதையான குழந்தைகள், சிறார் பாலியல் தொழிலுக்காக தத்தெடுக்கப் படுகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும், இந்தோனேசிய அரசு, தத்தெடுப்புக்கு தடை விதித்து விட்டது. எங்கே போனார்கள் மற்ற சிறுவர்கள்?

-----------------------------------------------
இந்த மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்திருக்கும் ஒரு செய்தி. சிறுவர் பாலியல் பலாத்காரங்கள் உலகெங்கிலும் அதிகரித்து உள்ளது. உலகெங்கிலும் மிக வேகமாக பீடோஃபைல்கள் (Pedophile) அதிகரித்து வருகிறார்கள். புரியாதவர்களுக்கு, பீடோஃபைல்கள் எனப்படுபவர்கள் சிறுவர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளுபவர்கள். எவ்விதமான சட்டங்களிட்டும் சிறுவர் பாலியல் பலாத்காரத்தினை தடுக்கமுடிவதில்லை. முக்கியமாக, ஐரோப்பியர்கள், ஜெர்மானியர்கள், அமெரிக்கர்களுக்கான சிறுவர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த, இந்த "மாமா" வேலை செய்பவர்கள் உலகெங்கிலும் தங்களுக்கான இடங்களை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அதுவும் ஆசியா ஒரு மிகப் பெரிய விற்பனை சந்தை.

ஒரு மாத முந்திய தெஹல்காவில் கோவா எப்படி பீடோஃபைல்களின் சொர்கமாக மாறி வருகிறது என்பதைப் பற்றிய ஒரு அதிர்ச்சி அறிக்கை வந்திருக்கிறது. ஆயுர்வேத சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா என்பது போல், சற்றே சிறார் பாலியல் சுற்றுலா தேசமாக கோவா மாறி வருகிறது. சின்னஞ்சிறு சிறுவர்கள், வெளிநாட்டு பயணிகளின் வேட்கையை தீர்க்க வேட்டையாடப்பட்டு, கொத்தடிமையாக ஆகப்பட்டுள்ளார்கள். இதுப்பற்றிய கவலைகள் ஏதுமின்றி, கவர்னர் செய்தது தவறு என பிஜேபியும், சரி யென்று காங்கிரஸும் சண்டைப் போட்டுக்கொண்டு.

இதன் பின் எனக்கு எழும் கேள்விகள் மூன்று. 1. பீடோஃபைல்கள் உருவாக காரணமென்ன? 2. உளவியல் ரீதியாக இன்றைக்கு பலியாகும் சிறுவர்களின் எதிர்காலம் என்னவாகும் ? மாறிவரும் பாலியல் சுதந்திரப் போக்கும், இம்மாதிரியான சீர்கேடுகளையும் எவ்வாறு இனம் பிரிப்பது ? இதுப்பற்றிய அறிவார்ந்தோர் கருத்தினை எதிர்ப்பார்க்கிறேன்.

--------------------------------------------------------
Page 3-யில் இடம் பெற்றிருப்பது, உத்தரபிரதேஷத்திலிருந்து நட்சத்திர பார்ட்டிகளுக்காக கடத்தி வரப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் சிறுவர்கள்.

கம்போடிய பாலியல் சந்தையில் அதிகமாய் விற்கப்படுபவர்கள், வியட்நாமிய, தாய்லாந்து பெண்கள், சிறுவர்கள். ரீடர்ஸ் டைஜஸ்டில் ஆயிரக்கணக்கில் இருக்கும் சிறுவர் பாலியல் வன்முறையின் சராசரி வயது 15.. 4 வயதான பெண் குழந்தைகள் கூட அவர்களின் ஆல்பங்களில் உண்டு, சராசரியாக 8 -13 வயதுள்ள பெண் சிறார்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 5 வாடிக்கையாளர்களை கவனித்தல் வேண்டும்.

தெஹல்காவில் குறிப்பிடப்பட்டிருப்பது கோவா சிறுவர் பாலியல் சுற்றுலா தளமாக மாறிவருவதும், பிற நாடுகளில் அப்பயணிகள் துரத்தியடிக்கப்பட்டவர்கள் என்பதும்.

ஜிப்பினை இறக்கிய அவள் 8 வயதேயான வியட்நாமிய பெண், கம்போடிய சந்தையில் அமெரிக்க, ஜரோப்பிய ஆண்களுக்கான விற்கப்பட்டவள்.

"no boom-boom, just ngam-ngam" என்பது வியட்நாமிய ஸ்லேங்கில் நான் வாய் உறவு(oral sex) கொள்வேன் என்று சொல்லும் கீழ்த்தரமான வார்த்தை)

கேரளா ஏராடிகாவில் அதிகமாய் இடம்பெறுபவை வேலைக்கார சிறுமிகளுடனும், சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களுமான உடலுறவு (புனைவு/நிஜக்) கதைகள்

பீடோஃபைல்களின் குறிகளை "ரோசாவசந்த்" ட்ரீட்மெண்ட் கொடுத்து, காக்கைகளுக்கும் இடலாம். எவ்வளவு நாட்கள் தான் காக்கைகள் வெஜிடேரியன்களாக இருப்பது.

Mar 17, 2005

சிலுக்கு சுமிதா புராணம்

வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் என்னைப் பொறுத்தவரை சென்சார் போர்டு அதிகாரிகளை விட கண்டிப்பானவர்கள். பாருங்களேன், யார் எதைப்பற்றி எழுத வேண்டும், ஒரு தனிமனிதரைப் பற்றி அவரின் ரசிகர் எழுதலாமா, அப்படியே எழுதினாலும் நடுநிலை தவறாமல் எழுதுவாரா, அந்த நடிகரைப்பற்றி ஏன் எழுத வேண்டும், நானும் எழுதுகிறேனே சில நடிகைகளைப்பற்றி என நீளும் பின்னூட்டங்களின் வெப்பத்தில் மூச்சு திணறி பாவம் நிறைய நபர்கள் வலைப்பதிவிற்கே வருவதில்லை. நான் சொல்லவந்த விசயம் இதனை ஒட்டியது. இந்த விவாதம் நடந்த பதிவில் யாரோ ஒரு ஜீனியஸ் எனக்கும் வாய்ப்பு தாருங்களேன், சிலுக்கு சுமிதாவினைப் பற்றி எழுதுகிறேன் என்று கூறியிருந்தார், இதனூடே தெரிக்கும் சினிமா பெண்களைப் பற்றிய பார்வை மிக வக்கிரமாக தெரிந்தது. சினிமாவில் ஆடும் பெண்கள் அதுவும் சிலுக்கு சுமிதா எல்லோருக்குமான ஒரு பேச்சுப்பொருள். நம் பக்கத்து வீட்டுக்காரரின் நடத்தையினைப் பற்றி ரகசியமாய் பேசும் நமக்கு, சிலுக்கு சுமிதா என்றால் ஒரு எள்ளல்.யார் வேண்டுமானால் சிலுக்கு சுமிதாவினைப் பற்றி பேசலாம். கேவலமாய் கமெண்ட் அடிக்கலாம். தனியாய் இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் பாத்ரூமிற்கு சென்று கைகளுக்கும் வேலை கொடுக்கலாம். என்ன தெரியும் நமக்கு சிலுக்கு சுமிதாவைப் பற்றி?

சிலுக்கு சுமிதா என்கிற தனிநபரினைப் பற்றிய சொல் கிளப்பும் அதிர்வுகள் ஏராளம். பலபேருக்கு சிலுக்கு சுமிதா என்கிற பெண் ஒரு விளையாட்டுப் பொருள். என்னமோ சிலுக்கு பற்றி பேசுதலும், எழுதுதலும் தரக்குறைவான விசயமாக ஒரு பார்வையினை உண்டாக்கி விட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சிலுக்கு சுமிதாவின் இடம், அப்போதிருந்த சூழல், அவரின் இமாலய இமேஜ் இதைப்பற்றியெல்லாம் இங்கே கண்டிப்பாக பேசப்போவதில்லை. அது தெரிந்த விஷயம். சிலுக்கு சுமிதாவினை முன்வைத்து சினிமாவில் நடிக்கும் அதுவும் கவர்ச்சியாக நடிக்கும் பெண்களைப் பற்றிய பார்வைகளின் உளவியலும், அதனை கட்டுடைப்பதற்கும் தான் இது. [அதே பதிவிலோ அல்லது வேறெங்கோ உஷா ஷகிலா பற்றிய ஒரு பார்வையை முன்வைத்திருந்தார்.]

மிகக்கொடுமையான விசயம், தான் ஒரு பெண்ணின் கவர்ச்சியினால் உந்தப்பட்டு அதற்கு அடிமையாய் பைத்தியம் பிடித்து அலைந்ததை ஒத்துக்கொள்ளாமல், சுமிதாவைப் பற்றி பேசுவதே கலாச்சார சீர்கேடு என்பதாய் திரித்திருக்கும் "தமிழ்க் கலாச்சார காவலர்களின்" தொண்டினை நினைத்தால் புல்லரிக்கிறது. என்றைக்காவது சினிமா ஷூட்டிங்கினை அதுவும் இதுப்போன்ற கவர்ச்சி நடனங்கள் (ஹிந்தியில் இதற்கு ஐட்டம் சாங் என்று பெயர்) நடக்கும் அரங்கினுள் இருந்திருக்கின்றீர்களா? நான் பார்த்திருக்கிறேன். சிலுக்கு சுமிதாவும், அவரின் பின்னாடும் துணைநடிகைகளும் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. ஆண்களின் பார்வைகள் அனைத்தும் வெறித்தபடி பார்த்திருக்க, எல்லா அந்தரங்களும் வெளிப்படையாக யார் சொல்லுக்கோ குலுங்கச் சொல்லும் சூழலின் அவலத்தையும், அபத்ததையும் உங்களால் இனம் கண்டு கொள்ள முடியாது.

விஜயலட்சுமி சிலுக்கு சுமிதாவான கதை ஒரு தனி நிகழ்வல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு. இன்றளவும், சினிமா ஆசையினாலும், கவர்ச்சியினாலும், ஆண்களால் ஏமாற்றப்பட்டும், தமிழ் சினிமாவின் ப்ரேம்களில் மார்புகளையும், தொடைகளையும் காட்டிக்கொண்டு, சம்பளத்திற்காக அலையும், அலைகழிக்கப்படும் பெண்கள், துணை நடிகைகள் ஏராளம். "இன்னா வர்றீயா" என வெளிப்படையாக இவர்களை யார்வேண்டுமானாலும் அழைக்க இயலும். ஏனெனில் அவளின் அந்தரங்கத்தை உலகமே பார்க்கிறது, நான் தனியாக பார்த்தால் என்ன நினைக்கும் வக்கிரமனம். கொஞ்சம் அந்தரங்கமாய் இருந்தாலும், பாம்குரோவிலும், நியூ உட்லண்ட்ஸிலும் அறை எடுத்து, சிலுக்கு சுமிதாவோடு எப்படியாவது படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ரயிலேறி கோயம்புத்தூரிலிருந்தும், மதுரையிலிருந்தும் இன்ன பிற இடங்களிலிருந்தும் வந்த எத்தனையோ தொழிலதிபர்களைப் பற்றிய கதைகளை கேட்டிருக்கிறேன்.

சிலுக்கு சுமிதாவின் அரசியல் வித்தியாசமானது. தனக்கு வந்த வாய்ப்புகளை உபயோகித்துக் கொண்டு, தன் உடலினால் தமிழ்நாட்டினை கட்டிப்போட்ட பெண் அவள். நாக்கினை தொங்கப்போட்டு கொண்டு, மிட் நைட் மசாலா பார்க்கும் யார் பார்வையிலும் சிலுக்கு சுமிதா ஒரு சதை குன்று. ஒரு சாதாரண ரோட்டில் போகும் பெண்ணிற்கு இருக்கும் குறைந்த பட்ச கருணைக்கு கூட லாயகற்ற ஜென்மம். எல்லாரின் பார்வையிலும், சுமிதா ஒரு பெண் என்பதை தாண்டி, கிறங்கடிக்கும் பார்வையும், முலைகளும், யோனியும் மட்டுமே உடைய ஒரு காமவெளி. மொத்த தமிழ்நாட்டினையும் மோகவெறி பிடித்து தன் இருப்பினை மிக அசாதாரணமாய் காட்டி விட்டு சென்ற பெண் அவள். சிலுக்கு சுமிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சோகங்கள் பற்றிய கவலைகள் யாருக்குமில்லை. தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டபோது சுமிதாவின் வயது 30க்கும் குறைவு. சிலுக்கு சுமிதாவின் மார்பினை தாண்டி உள்ளே இருக்கும் விஜயலட்சுமியை யாருமே கண்டுகொள்ளாததின் விளைவு ஒரு உயிரின் மரணம்.

சிலுக்கு சுமிதா கடித்த ஆப்பிள் 750 ரூபாய்க்கு ஏலம் போனதாக படித்த நினைவு. ஒட்டுமொத்த ஆண்களையும் பரிகசித்துவிட்டு, உன் ஆளுமை என் பார்வைக்கு முன் நிற்காதுடா முட்டாள் என்று சர்வ அலட்சியமாக தூக்கிப்போட்டு விட்டு போன பெண். நிறைய 11 மணி லேடிஸ் கிளப் பெண்ணியவாதிகளுக்கு சிலுக்கு சுமிதாவினை கண்டால் பிடிக்காது. ஆனால், பல பெண்ணியவாதிகளின் அடிப்படைகளை ஆட்டம் காண செய்த பெண்.

காலச்சக்கரம் வெகு வேகமாக சுழலுகிறது. சிலுக்கு சுமிதாவினை எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டு கிரணையோ, நமிதாவையோ, சிந்து துலானியையோ பார்க்க போய்விடுவார்கள். ஆனால், சிலுக்கு சுமிதா என்கிற பெண் தமிழ் சினிமாவினையும், தமிழ் ரசிகர்களையும் மடையர்களாகிவிட்டு, தன் இருப்பினையும், தன் ஆளுமையையும் ஆழமாக பதித்து விட்டு போய்விட்டார்.

"பொன்மேனி உருகுதே"வை தாண்டி, அலைகள் ஒய்வதில்லை பாருங்கள். தியாகராஜனின் மனைவியாக வந்து, காதலர்களை சேர்த்துவைக்க முயற்சித்து, அதற்காக, தியாகராஜனிடம் அடிவாங்கும் முன் ஒரு பார்வை பார்ப்பாரே, அது தியாகராஜனுக்கு மட்டுமா, அல்லது ஒட்டுமொத்த ஆண்களின் சமுதாயத்திற்குமா என்பது அவர் மனதுக்கே வெளிச்சம். அங்கே தெரியும், எவ்வளவு அழுத்தமான ஒரு நடிகையை நாம் இழந்துவிட்டோமென்று.

யாருக்கேனும் நன்றாக சிலுக்கு சுமிதாவினைப் பற்றி தெரிந்திருந்தால் புத்தகமாய் எழுதுங்கள். தாராளமாய் ஒன்றுக்கு பத்தாக வாங்கி கொள்கிறேன்.

Mar 16, 2005

கெட்ட வார்த்தைகளின் அரசியல்

எச்சரிக்கை சங்கு: இந்த பதிவு முழுவதும் மூன்றாம் தர கெட்டவார்த்தைகள் மலிந்திருக்கும். நாகரீகமான சமூக மனிதராக உங்களை நீங்கள் எண்ணுபவராயின் இப்போதே இந்த பதிவினை மூடிவிடலாம். மேம்போக்காக சமூகத்தின் மூன்றாம் தர கெட்ட வார்த்தைகளை பேசுபவர்களை ஒதுக்குபவராயின் நீங்களும் ஒதுங்கிவிடலாம். இந்த பதிவு வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுத பட்டது அல்ல.

முக்கியமாய் இந்த பதிவினை படிக்கும் பெண்களுக்கு எந்நிலையிலும் இந்த பதிவு உங்களை சங்கடபடுத்துமேயானால், கலவரபடுத்துமேயானால், அப்படியே வெளியேறி விடுங்கள். இந்த வார்த்தைகள் கக்கும் விஷங்களின் பொசுங்கல்களை மிக அருகிலிருந்து பார்த்தவன் என்பதாலேயே இந்த கூடுதல் சங்கு. இனி காதைப் பொத்திக்கொண்டு படிக்க முயற்சியுங்கள்.

எல்லா மொழிகளிலும் கெட்ட வார்த்தைகளுண்டு. மிக சாதாரண வார்த்தைகளிலிருந்து, மிக மோசமான வார்த்தைகள் வரை எல்லா மொழிகளிலும் உண்டு. நான் அறிந்த தமிழ், ஆங்கிலம் மற்றும், கெட்டவார்த்தைகளும் கொஞ்சமே சம்பாஷனைகளுக்கு உதவும் வார்த்தைகளும் அறிந்த ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் இருக்கிற, பேசப்படுகிற கெட்டவார்த்தைகள் அனைத்தையும் அறிந்து சற்றே யோசித்து கொண்டிருக்கையில் உறுத்திய விசயங்கள் தான் இந்த பதிவு.

புதிதாக தமிழ்நாட்டில் காலடி எடுத்துவைத்தால், எல்லோரிடமும் பரவலாய் கேட்கக்கூடிய "ங்கோத்தா" வில் தொடங்கி மயிரு, டாபர், டோமர் என பேட்டைக்கு பேட்டை நீளும் கெட்ட வார்த்தைகளை கொண்டு சர்வசாதாரணமாய் ஒரு இழிசொல் அகராதி போடலாம்.

தமிழில், அதுவும் சென்னையில் மிக சாதாரணமாக கேட்க கூடிய முதல் 10 கெட்டவார்த்தைகளில் கீழ்க்கண்டவை மேலிடங்களில் வரக்கூடிய சாத்தியக்கூறுகளுண்டு. "தேவடியா பையா" , "ஒங்காமாளை ஓக்க" "வக்காலவோழி" "தாயோளி" "கூதி அதுப்பு" "புண்டை மவனே" என நீளும். காது கொள்ளாத தமிழ் வார்த்தைகளில் தொடங்கி, பெஹன்சூத், லவ் டே கா பால், மாதாசோத் என திட்டும் செளகார்பேட்டை சேடுகளிடமும், லஞ்சாகொடுக்கு என வைது கொண்டே ரிக்சாவில் ஏறும் செட்டியார்களும், ஈசிஆரில், வெளிநாட்டு கார்களில் வந்து, கூட்டமாய் கூடிக்கொண்டு fuck you bitch, bastard, motherfucker என வெள்ளைக்காரனின் பேரன்களாய் அவதாரமெடுக்கும் மென்பொருள் / உயர்தட்டு சமூகத்தினிரின் இழிசொற்களிடம் வெளிப்படும் கெட்டவார்த்தைகளின் பட்டியல், இந்திய அரசாங்க விசாரணை கமிஷன்களின் வாழ்வு காலங்களை விட நீளமானது.

ஏன் கெட்டவார்த்தைகளையாய் இவைகள் அறியப்படுகிறது ? ஏன் இவ்வார்த்தைகளை கொண்டு ஒரு தனிநபரை இகழ, கேவலபடுத்த வேண்டும்? சற்றே கூர்ந்து கவனித்தால் இதன்பின் சர்வசாதாரணமாய் இருக்கும் அரசியல் புரியும். ஒரு தனிமனிதனை கேவலபடுத்தவோ, இழிவு படுத்தவோ, இன்னொரு நபர் கையில் (வாயில்!) எடுக்கும் ஆயுதம் கெட்டவார்த்தைகள். தேவடியா பையா என ஒரு தனி நபரை திட்டும்போது முன்னிறுத்தப்படுவது திட்டப்படும் நபர் அல்ல, அவரின் தாய். பெஹன்சூத் என சொல்லும்போது முன்னிறுத்தப்படுவது, அந்நபரின் சகோதரி. ஆக, ஒரு தனிநபரை இழிவுபடுத்துவதின் மூலமாக பெண்களை இழிவு படுத்துகிறோம்.

ஆண் குடும்பதலைவன். அப்படிதான் எல்லா ரேஷன் கார்டுகளிலும் இருக்கிறது. ஒரு குடும்பத்தினை அவமதிக்க நாம் யாரும் அந்த குடும்பத்தின் ஆணினை கேவலபடுத்துவதில்லை, மாறாக, அந்த குடும்பத்தின் பெண்ணை தான் முன்னிருத்துகிறோம். "தேவடியா பையா" என இகழ படும் போது அவ்வார்த்தையின் வன்முறை அடங்கிய வீரியத்தினை சுமப்பவள் யார் ? எல்லா மொழிகளிலும், எல்லா வாய்சண்டைகளிலும், குறிவைக்கப்படுவது பெண். "தேவடியா பையா" என வையும் வாய்களில் டிராகன்கள் குடியேறிவிட்டன என்று தோன்றுகிறது. யாரை தேவடியா என்று குறிப்பிடுவீர்கள் ? தேவர் அடியாள் மகள் என முன்பொரு காலத்தில் பேசப்பட்ட ஒரு வார்த்தை, இன்று அதனளவில் மரியாதை தேய்ந்து, விபசாரம் (மன்னிக்க, என்னளவில் நான் இதனை பாலியல் தொழில் என்று கூறினாலும், சமூக அடையாளங்கள் இன்னமும் முற்றிலும் மாறிவிடவில்லை) செய்யும் பெண் என்ற அளவில், ஒரு பெண்ணின் பரப்பை குறுக்கி, உடலே பெண்ணாகவும், பெண்ணே உடலாகவும் பார்க்கும் பிரபுநிதித்துவத்தை இன்னமும் கைவிடாமல்தான் இருக்கிறோம். என்றைக்காவது நாம் திட்டும் நபரின் தந்தையையோ, சகோதரனையோ அவமதிப்பதுபோல் பேசியிருக்கிறோமா. கண்டிப்பாக இல்லை. எனக்கு தெரிந்த மொழிகளில் ஆணினை மையமாக வைத்து பின்னப்பட்ட வார்த்தைகள் மிகக்குறைவு. அப்படியே ஆணின் அந்தரங்கத்தை மிக மோசமாக தாக்க வேண்டுமானால், பிரயோகிக்கப்படும் வார்த்தை "போடா பொட்டை". ஆணின் இந்திரியத்தையும், அவனின் ஆண்மையையும் கேள்விக்குள்ளாக்கும் இந்த வார்த்தை, எல்லா ஆண்களையும் கலவரபடுத்தும்.இதை தவிர்த்து ஆணினை மையமாக கொண்ட கெட்டவார்த்தைகள் மிகக்குறைவு. இதிலும் கூட, பெண்ணின் இன்னொரு உருவம்தான் முன்வைக்கப்படுகிறது.

ஒரு தனிநபருக்கும், நமக்கும் இருக்கிற சண்டையின்/மனஸ்தாபத்தின்/ஆத்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி, அவரின் குடும்பபெண்களை இழிவுபடுத்துகிறோம். பெண்களை இழிவுபடுத்துதலின் மூலமாக ஒரு ஆணினை இழிவு படுத்துவதாக எண்ணி சந்தோஷமடைகிறோம். எல்லா வகையிலும் பார்த்தால், இது ஒரு ஆணாதிக்க மனபான்மை. பெண்களின் கற்பினை அல்லது பெண்களை உடலாக பாவித்து, அவ்வுடலின் மீதான நம் கட்டுபாடுகளை, கட்டமைப்புகளை நிறுவுவதின் மூலம், ஒரு ஆணாதிக்க மனப்பான்மையை, பெண்களை உடல்களாக பாவிக்கும் நம் அதிகாரத்தை நிலைநிறுத்த முயலுகிறோம். இது மிகப்பெரிய அரசியல்.

வடசென்னையில் 25 வருடங்கள் வாழ்ந்து இருந்ததால், எல்லாவிதமான கெட்டவார்த்தைகளையும், வீதி சண்டைகளையும், "பஜாரி"தனங்கள் என்றழைக்கபடும், சேரிமக்களின், குடிசைவாழ் மக்களின் தினசரி கூச்சல்களையும், கூப்பாடுகளையும் கேட்டிருக்கிறேன். நான் கேட்டவார்த்தைகளில் மிக மோசமாக பாலியல் உறுப்புகள் சார்ந்து சித்தரிக்கபடும், சந்தி சிரிக்கவைக்கும் வார்த்தைகள் ஏராளம். இவையனைத்துமே பெரும்பாலும் பெண்களையும், பெண்களின் பாலியல் சார்ந்த உறவுகளின் அமைவுகளையும் மையமாக வைத்தே அமைந்திருக்கிறது. சற்றே யோசித்தோமானால், ஒவ்வொரு முறையும் அறிந்தோ/அறியாமலோ மிகமோசமாய் நாம் அடுத்தவரை இகழும்போது நாம் நம்மையும் அறியாமல் முன்னிறுத்துவது பெண்களின் மீதான நம் ஆளுமை.

பெண்களை மையப்படுத்தி இழிவுபடுத்துவதின் மூலமாகவும், கற்பு என்கிற ஒற்றை தன்மை சொல்லாடலை கையிலெடுத்து அதனையே பெண்/ஆண்களின் உறவுகளின் மீதான அதிகாரங்களுக்கான கேள்விகளாகவும், அதிகார வரம்புமீறல்களை நிலைநிறுத்தலின் மூலமாகவும் பெண்கள் மீதான நம் உரிமைகளையும், உரிமையாக நினைத்து கொண்டிருப்பவைகளையும் வன்முறையாய் பிரயோகித்து கொண்டிருக்கிறோம். இன்னமும், தமிழ் செய்தித்தாள்களில் கற்பழிப்பு என்கிற வார்த்தை வழக்கொழியவில்லை (குறிப்பாக தினந்தந்தியில்). பார்க்க: தான்யாவின் "கற்பை அழித்தல்" [இன்றைக்கு படித்த கூடுதல் தகவல், மாலனின் கருப்பை அரசியல் ] இதை தான் அரசியலாகவும், கண்ணுக்கு தெரியாமல் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையாக பார்க்கிறேன். சில சமயங்களில் சில வார்த்தைகள் பெண்களை பிரத்தேயகமாக திட்டுவதற்கே கூட (அவுசாரி முண்டை, கூதி அதுப்பெடுத்து அலையறா) உபயோகிக்கப்படுகிறது. இங்கும், பாலியல் சார்ந்த விசயங்கள் தான் கையிலெடுத்துக்கொள்ள படுகின்றன. ஆக ஒரு மனிதனை கேவலபடுத்தும் காட்டுமிராண்டிதனத்திலேயே கூட பெண்களை அழுத்தும் அரசியல் தொடங்கிவிட்டது.

அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட காலங்களிலும், இன்னமும், வார்த்தை சவுக்குகளினால், தினமும், நம் எல்லைமீறிய அதிகாரத்தையும், பெண்களின் மதிப்பு, மரியாதை, அந்தரங்கம் குறித்த நம் குறைசிந்தனையையும் முன்னிறுத்தி வன்முறையை சன்னமாக ஆனால் வீரியமாக செலுத்தி ஆண்டு கொண்டு இருக்கிறோம்.

கெட்டவார்த்தைகள் பேசாத மனிதர்கள் குறைவு. இழிச்சொற்கள் பேசாமலேயே வாழ்ந்துவிடமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனாலும், அடுத்தமுறை ஒவர்டேக் செய்து போகும் காரினுள் அமர்ந்திருக்கும் முகம் தெரியாத அவன்/அவளை you fuckin bitch என்று திட்டும்போது நீங்கள் யாரை அவமதிக்கிறீர்கள் என்று சிக்னலுக்கு காத்திருக்கும்போது யோசிக்கவும் செய்யலாம்.

குண்டூசி: 2000 ஆண்டு புத்தக கண்காட்சி. புத்தகங்களை புரட்டி கொண்டிருக்கிறேன். ஒரு புத்தகத்தில் இடம்பெற்றிருந்த வரிகளை பார்த்தவுடன் கோவம் தலைக்கேறியது. கன்னாபின்னாவென்று எழுத்தாளரை திட்டிக்கொண்டே நண்பருடன் வெளியேறிவிட்டேன். என் மனதில் அந்த எழுத்தாளரை பற்றி மிகக்கேவலமான பிம்பமே தங்கியிருந்தது. 3-4 வருடங்கள் கழித்து, சாருவின் நட்பு இறுகியவுடன், மறுவாசிப்பு செய்த போது, அந்த எழுத்தாளர் உயிரோடு இல்லை. இந்த வார ஆ.விகடனில் எஸ்.ராவின் கதாவிலாசத்தில் அவரைப் பற்றிய குறிப்பு வந்திருந்தது. வாழ்வின் அபத்தங்களை, மத்திய தர வர்க்க மனநிலையை, இயலாமையை அற்புதமாக வடித்த கலைஞன். மிகத்தீவிரமான படைப்புகளை தமிழுக்கு தந்து வறுமையில் செத்துபோன அந்த எழுத்தாளன்: திரு. கோபி கிருஷ்ணன் நான் திட்டி தீர்த்த அந்த புத்தகம்: டேபிள் டென்னிஸ்

Mar 15, 2005

Made in India

Made in India - இந்தியாவின் தொழில்முனைப்புத் தேவைகளும் சாத்தியங்களும்வெங்கட்டின் லட்சுமி மித்தல் பற்றிய பதிவினில் பிரகாஷ் எழுப்பிய கேள்விகளும் அதற்கு வெங்கட் மற்றும் பிறரின் பதில்களும் படித்ததினால் எழுதுவது இது. இதை எழுதும்போதே, இதே தலைப்பில் வெங்கட் அவரின் காரணங்களை தனிபதிவாக இட்டிருக்கிறார். காபிரைட் வாங்காமல் அதே தலைப்பினை நானும் இங்கு பயன் படுத்துகிறேன். காரணம், அதே தலைப்பில் என் எண்ணங்களும், இன்றைய இந்தியாவில் நடப்பவைகளும்.

கொஞ்சம் உரிமை எடுத்து கொண்டு சில விசயங்களை இங்கே சொல்லலாம். முதலில், எழுதிய முக்கால்வாசி பேர் இந்தியாவில் இல்லை. வெங்கட்டும் இந்தியாவில் இல்லை. அவர்களனைவரும் இந்தியாவைப் பற்றி வலைத்தளங்களில் படித்து விட்டும், இந்தியாவிலிருந்து வரும் பத்திரிக்கைகளிடமிருந்தும் தான் விஷயஞானம் பெறுகிறார்கள். யதார்த்தமாய் இங்கே என்ன நடக்கிறது என்பது தெரியாது. இதை நான் குறையாக சொல்லவில்லை. வெங்கட் கூறும் விசயங்களோடும், பிரகாஷின் சில கருத்துக்களோடும் சிலபல இடங்களில் ஒத்துப்போகிறேன். ஆனாலும், வெங்கட்டின் பதிவு வெளிநாட்டிலிருந்து இந்தியாவை பார்க்கும் பார்வையிலேயே இருக்கிறது. பல்வேறு தருணங்களில் பலவிதமான விசயங்களை ஒத்துக்கொள்கிறோம் ஆனாலும், இந்தியாவிலமர்ந்து சற்றே கூர்ந்து கவனியுங்கள். ஒரு சிதறலாய் வைக்கப்பட்ட மாடர்ன் ஆர்ட் ஒவியம் போலதான் இப்போது இந்திய ஆளுமை இருக்கிறது. கொஞ்சமாய் நிதானித்து கவனித்தால், இந்திய அரசின், இந்திய நிறுவனங்களின் கழுகுப்பார்வை தெரியவரும்.

எல்லோரும் IT பற்றி பேசிவிட்டதால், அதனை தவிர்த்து இந்தியா 2005-ல் எங்கிருக்கிறது, நாம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பது பற்றியே இந்த பதிவு.

1. ஒன்றை முதலில் ஒத்துக்கொள்வோம், இந்தியாவின் வங்கி கட்டமைப்பு (Banking infrastructure & management) சீன வங்கி கட்டமைப்புகளோடு பார்க்கும்போது 100 மடங்கு உயர்வானது. சற்றே கூகிளில் "Collapse of chinese banks" என்று தேடிப்பாருங்கள். உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் தலையை பிய்த்துக்கொண்டு இதைப்பற்றி தலையணை சைசில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். 80களில் ஜப்பானில் உருவான நாணய சரிவினை விட மிகமோசமான சரிவினை சீன வங்கிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய தேதியில் சீனவங்கிகள் அமெரிக்க டாலர்களாக வாங்கி தள்ளுகின்றன. இரண்டு வருடங்களில் அமெரிக்க டாலர், யூரோவிலிருந்து ஏறத்தாழ 12 -17% குறைந்து விட்டது, இது இன்னமும் இரண்டு வருடங்களில் மேலும் குறையும் வாய்ப்புள்ளது. அப்போது சீனா சேர்த்து வைத்த டாலரின் மதிப்பு என்னவாகும் ? சீன வங்கிகள் இன்னமும் முழுமையான தனியார் வசம் ஒப்படைக்க படவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆக இன்னமும் சீன ஹர்ஷத்மேத்தாக்கள் உருவாக வாய்ப்புண்டு.

2. டாடா மோட்டார்ஸினைப் பற்றி பேச்சு வந்தது. பிரகாஷ் கூறியது உண்மை, ஆனால் அது மூன்று வருடங்களுக்கு முன்னால். இன்றைய நிலைமை வேறு. டாடா இண்டிகாவினை சற்றே நவீனப்படுத்தி, இங்கிலாந்தின் ரோவர் நிறுவனத்தோடு பங்காளியாய் போய், இன்றைக்கு இண்டிகா ரோவர் என்ற பெயரில் லண்டன் சாலைகளில் மினிகார் சந்தைப்படுத்த ஆரம்பித்தாகிவிட்டது. இதேப் போல் மஹிந்திராவின் ஸ்கார்பியோ MUV, மத்திய ஆப்ரிக்க நாடுகளிலும், பிரேசிலிலும் ஒட ஆரம்பித்தாகிவிட்டது. உலகில் டெட்ராய்ட்டுக்கு பிறகு மிகச்சிறந்த ஆட்டோமொபைல் நகரமாக சென்னை உருமாறி கொண்டிருக்கிறது. கொரிய தயாரிப்பானாலும் கூட, ஹூண்டாயின் மத்திய கிழக்கு ஆசிய வணிகமும், சார்க் நாடுகளுக்கான கார் தயாரிப்பும், திருபெறும்புதூரிலிருந்து தான் ஏற்றுமதியாகிறது. பி.எம்.டபுள்யு சென்னையில் இறங்குவதாக சலசலப்புகள் எழுந்திருக்கின்றன.

3. சென்னை ஐஐடியின் வயர்லெஸ்-இன்-லோக்கல் லூப்(WLL) தொழில்நுட்பத்தை போட்டிப்போட்டு முதலில் வாங்கியவை சீன நிறுவங்கள். இப்போது சென்னை ஐஐடி, ஐசிஐசிஐ வங்கிக்காக தயாரித்துள்ள ஏடிஎம் இயந்திரங்கள், அமெரிக்க இயந்திரங்களை விட தரமானதும், குறைவானதும் ஆகும். 5 லட்ச ரூபாய் செலவு வைக்கும் அமெரிக்க இயந்திரங்களுக்கு பதிலாக, சிறிய ஏடிஎம் இயந்திரங்கள் 30,000 ரூபாயில் தயாரிக்கப்பட்டு விட்டு, சோதனை ஒட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வெற்றியடைந்தால், இதன் வணிக வீஸ்திரனத்தை பற்றி சொல்ல தேவையில்லை.

4. அறிவுசார் தொழில்களில் உயிரியல்,மரபணுவியல் போன்றவற்றில் குறைவான மாணவர்களை இருக்கிறார்கள் என்று மாண்டீ குறைப்பட்டு கொண்டார். இருக்கலாம். ஆனால், உலகின் முதல் 10 மரபணுவியல் நிறுவனங்களில், சாதுவாய், பங்களுரில் ஒதுக்குப்புறமாய் அமர்ந்திருக்கும் கிரண் மஜூம்தாரின் "பயோகானும்" ஒன்று. இந்தியாவில் இதுவரை 3 மரபணுவியல் பூங்காக்கள் உண்டாக்கப்பட்டு ஆராய்ச்சிகளும், காப்புரிமைகளும் பெறப்பட்டுவருகின்றன. சற்றே நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலைக்கு திரும்புதற்கு முன் இருக்கும் ஆர்கிட்டின் கட்டிடத்தினை பாருங்கள். மிக அத்தியாவசியமான பலவிதமான மாலிக்யூல்களை காப்புரிமை பெற்றுக் கொண்டு ஜம்மென்று அமர்ந்திருக்கின்றது.ஸ்டைம் செல் ஆராய்ச்சியில் இந்தியா ஒரு முக்கியமான அங்கம். ஆட்டுதாடி வைத்த விஞ்ஞானிகள் கலர் கலர் திரவங்களை கலக்கிக்கொண்டு, ஏதோ உருப்படியா செய்து கொண்டிருக்கிறார்கள்.

5. ரான்பாக்ஸி குழுமம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தையான Off-the-Shelf-Drug சம்பந்தப்பட்ட நிறைய மாத்திரைகளை இரண்டு வருடங்களில் இறக்கிவிடுவார்கள். பிஃபைசரும், பி&ஜியும் ரான்பாக்ஸியினை எவ்வாறு எதிர்கொள்வது என்று கான்பரன்ஸ் ஹால்களில் பவர்பாயிண்ட் சிலைடுகள் அடங்கிய மடிக்கணினியோடு கவலையோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

6. சென்னையின் சுந்தரம் பாஸ்டர்னர்ஸ் நிறுவனம் ஜிஈ குழுமத்தின் உதிரிப்பாகங்கள் செய்வதில் விருதுகள் வாங்கியவர்கள். சீனாவில் தொழிற்சாலை ஆரம்பித்துவிட்டார்கள். உறவினரான வேணு சீனிவாசனின் டிவிஎஸ் மோட்டார்ஸ், இந்தோனேஷியாவில் இரு சக்கர வாகனங்களை சந்தைப்படுத்த இறங்கிவிட்டார்கள். தாய்லாந்து தெருக்களில் ஆட்டோ ஒட்டுநர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள். காரணம், பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் குறைந்த செலவு ஆட்டோக்கள் உள்நாட்டு நிறுவங்களின் ஆட்டோக்களை ஒவர்டேக் செய்துவிட்டதுதான். அரபுநாடுகளில் விற்கப்படுவதற்காக மும்பாய் துறைமுகத்தில் கன்டெய்னருள் பஜாஜ் பல்சர்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

7. ஐஒசி நிறுவனம் மூன்றே ஆண்டுகளில் இலங்கையின் முண்ணனி பெட்ரோல் நிலையங்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. சூடானின் எண்ணை கிணறுகளிலிருந்து கச்சா பெட்ரோலியத்தை எடுக்கும் உரிமைகளை ஒஎன்ஜிசி விதேஷ் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சத்தமேயில்லாமல், உலகெங்கிலுமுள்ள முண்ணனி எண்ணை கிணறுகளை நிர்வகிக்கும் நிறுவங்களின் பங்குகளை வாங்கி இந்திய அரசாங்கம் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

8. இந்திய மருத்துவமனைகள் "சுகாதார சுற்றுலா" என்கிற பெயரில் வெளிநாட்டு பயணிகளுக்கு குறைந்த செலவில் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கின்றன. அப்போலோ குழுமம் மட்டுமே கையில் 6 மருத்துவமனைகளுக்கான வரைப்படத்தோடு காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சியின் விளைவாக, பெரிய ஐரோப்பிய அமெரிக்க மருத்துவமனைகள், இந்திய மருத்துவமனைகளோடு ஒப்பந்தங்கள் போட்டு இறங்கி வந்துக்கொண்டிருக்கின்றன.

9. இஸ்ரோ ஏற்கனவே அரசாங்க பணத்தை எதிர்ப்பார்க்காமல், தன் தொழில்நுட்பத்தினை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஆன்டரிக்ஸ் என்கிற பெயரில் தனியாக நிறுவனத்தை துவக்கி கல்லா கட்ட தொடங்கிவிட்டது. ஏறத்தாழ 3000 மில்லியன் இந்திய ரூபாய்களை இதுவரை சம்பாதித்திருக்கிறது. ஆர்டர்கள் குவிகின்றன. பிரான்சின் ஏரியேன் (Ariane) ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் ஒரு ஒப்பந்தந்தத்தை ஏற்படுத்தி கொண்டு, $6.7 பில்லியன் உலக சந்தையை குறிவைத்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. Dr.கஸ்தூரிரங்கன் ஜெட்-லாகும், கையெழுத்திடப்பட்ட பத்திரங்களுமாய் உலகினை சுற்றிக்கொண்டிருக்கிறார். கிரையோஜெனிக் தொழில்நுட்பம் வசப்பட்டவுடன், அமெரிக்கா விழுந்தடித்துக்கொண்டு தடைகளை நீக்கிவிட்டது

10.பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், இலங்கை நாடுகளில் தொலைதொடர்பு வசதியினை (தரைவழி/செல்/வயர்லெஸ்) ஏற்படுத்தி தர இந்திய அரசாங்கத்தின் அனுமதிக்காக பாரதி குழுமத்தின் ஏர்டெல்லும், ரிலையன்ஸும் காத்துக்கொண்டிருக்கின்றன.

11. பிர்லா குழுமம், உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உருமாறிக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் தென்னமரிக்க நாடுகளிலுள்ள சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளை வாங்கி ஏப்பமிட்டு, இந்திய சந்தையிலும், ஆசிய சந்தையிலும் சிமெண்ட் உற்பத்தியில் முண்ணனியில் இருக்கிறது.

12. லீ, லெவீஸ், நைக்கி போன்ற பிராண்டுகளின் மொத்த டெனிம் வர்த்தகமும் குஜராத் அரவிந்த் மில்லில்தான் நடக்கிறது. சற்றே 90களின் இறுதியில் சொதப்பி சரிந்திருந்தாலும், தற்போது அரவிந்த் மில் அடுத்த பத்தாண்டுகளுக்கான வர்த்தகத்தை கையில் வைத்திருக்கிறது. இது தவிர லீயோடோ அல்லது லெவெஸோடோ செய்து கொண்டுள்ள ஒப்பந்தபடி, அரவிந்த மில் ப்ராண்ட் இந்திய பாணி ஆயத்த ஆடைகள் 2006/7-லிருந்து அவர்களின் பிராண்டடு கடைகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் விற்கப்படும்.

13. டோனி ப்ளையருக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும், பிராட் பிட்டுக்கும் சிக்கன் டிக்கா வாசனை பிடித்துப்போனதிலிருந்து, இந்திய உணவு வகைகளுக்கான சந்தை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பத்தாண்டுகளில் சப்பாத்தி, சால்னா மெக்டொனால்ட்சிலோ, ஸப்வேயிலோ கிடைக்கலாம். ப்ரெட் கிங் மகாதேவன், எல்லா வகையான உணவுவகைகளையும் உள்ளடக்கிய ஒரு விற்பனை முன்மாதிரியை (Planet Yumm) உலகெங்கும் எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார். லண்டனில் வாழ்ந்துவந்தால், கூடிய சீக்கிரத்தில் சங்கீதா இட்லியும், வேங்ஸ் கிச்சனின் சிக்கன் டிக்காவும், ஆனந்தா ஸ்வீட்டுகளும் உண்ணும் பாக்கியமடைவீர்கள்.

14. இண்டெல் நிறுவனத்தினர் இந்தியாவில் அவர்களின் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவும் அவசரத்தில் "ஜெட்-லாக்"கோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

15. இந்திய வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு அயல் நாடுகளில் முழுநேர கிளைகளை ஆரம்பித்து லோக்கல் கணக்கு வழக்குகளை நிர்வகிக்க அடிக்கால் போட்டு விட்டார்கள்.

16. ஹிந்துஸ்தான் லீவரின் (தற்போது யூனிலீவர் இந்தியா) பீடாக்கடைகளுக்காக அடுக்கப்பட்ட SKUக்களின் வெற்றி, உலகமெங்கிலும் உள்ள யூனிலீவரின் வெவ்வேறு பிரிவுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தயார் செய்யப்பட்ட இன்ஸ்டென்ட் சப்பாத்திகளை பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் பரிசோதித்து கொண்டிருக்கிறார்கள்.

17. ரிலையன்ஸ் குழுமம, பிஃளாக் டெலிகாமினை(Flag Telecom) வாங்கியதன் மூலம் ஐரோப்பியாவிலிருந்து உலகின் பிறபகுதிகளுக்கு செல்லும் அதி நவீன தகவல்பாட்டையினை(International gateway) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

அனுமனின் வால் போல் நீண்டு கொண்டே போகும். அதனால் இத்தோடு நிறுத்துகிறேன். இவையனைத்தயும் அடுக்குவதால், நான் வெங்கட் மற்றும் பிறரின் கூறுகளை மறுக்கிறேன் என்று பொருளல்ல. இந்தியாவிலும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய-சீன பொருளாதாரங்கள் இணையாக உலகின் 40% பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் என்று டெலாயிட் கன்ஸ்லடிங்கின் ஒரு அறிக்கை கூறுகிறது. ஆக, என்ன நினைத்தாலும், இந்தியா இல்லாத அல்லது இந்திய பொருட்களில்லாத ஒரு வருங்காலத்தை உலகம் நினைத்துப்பார்க்க முடியாது. வேண்டுமானால், பொருட்களின் மேல் "Made in India" என்கிற முத்திரை இல்லாமல் இருக்கலாம், ஆனால், பொருட்களின் தயாரிப்பிலும், சந்தையிலும், மேம்படுத்துதலிலும் இந்தியாவல்லாத ஒரு உலகினை யோசித்துப்பார்த்தல் இயலாது. சொல்லாமல் இருக்கவேண்டுமென்று நினைத்தாலும், இன்போசிஸ் முதல் எச்.சி.எல் வரை சீனாவிலிருந்து, போலந்து, சிலி, ஸ்பெய்ன் என எல்லா ஐரோப்பிய, தென்னமரிக்க, சீன ப்ராவின்ஸ்களில் உள்ள நிறுவனங்களை வாங்கி போட்டு, தங்களின் பாலன்ஸ் ஷீட்டினை, மனிதன் தும்புவதை விட, வேகமாக ஏற்றிக்கொண்டு வருகிறார்கள்.

உலகின் எல்லா தயாரிப்புகளிலும் 15% உள்ளடக்கமாவது இந்தியாவிலோ அல்லது இந்திய நிறுவனங்களிலோ தயாரித்தல் வேண்டும் என்கிற நிலையை உருவாக்குதல் முக்கியம். ஒரு மெகா நிறுவனம் தொடர்ந்து சந்தையில் பொருட்களை இறக்கிக்கொண்டே இருத்தலும், இறக்கிய பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுதலும், உலக வாடிக்கையாளர்களின் தேவையினையறிந்து சந்தைக்கேற்றபடி பொருட்களையும், சேவைகளையும் உண்டாக்குதலும், இந்தியாவென்கிற நிறுவனத்தின் குறிக்கோள்களாய் இருக்கவேண்டும்.

ஒருவகையில் பார்த்தால், இந்தியாவும் சீனாவும், ரஜினி கமல் மாதிரிதான். அவரவர்களுக்கான பாதையும், கூட்டமும் வேறு. ஆனாலும் இருவரும் வெற்றியாளர்கள். இருவரின் இருப்பும் மிக அவசியம்.

இவற்றை அடுக்குவதால், முகத்தில் கொடியை பூசிக்கொண்டு, மைதானத்தில் கத்தும் ஒரு pesudo இந்தியனாக என்னைக் காட்டிக் கொள்ள விருப்பமில்லை. எந்தளவிற்கு அடுக்குகிறேனோ அதே அளவிற்கு இந்திய அரசாங்கத்தின் மீதுள்ள என் தார்மீக கோவத்தையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம், லாட்டரி சீட்டுகளாய் மட்டுமே அறியப்பட்ட வட கிழக்கு மாநிலங்களும், வறுமைக்கோட்டினை தாண்டாத 30% இந்திய பிரஜைகளும், மின்சாரம் எட்டிப்பார்க்காத இந்திய கிராமங்களும், ஒரு மணிக்கு ஒரு பெண் என தலைவிரித்தாடும் பாலியல் வன்முறையும்,எல்லா வளங்களிருந்தும் அரசியல்வாதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகும் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களும், கழிப்பறை இல்லாத வீடுகளும் இதிலடங்கும். இவற்றையெல்லாம் தாண்டியும் "இந்தியா ஒளிர்கிறது"

உதவும் சுட்டிகள்:

1. http://www.businessweek.com/magazine/content/03_49/b3861003_mz001.htm
2. http://www.businessweek.com/magazine/content/03_49/b3861008_mz001.htm
3. http://www.henrythornton.com/article.asp?article_id=2398

Mar 14, 2005

Page 3 - ஒரு மாறுதலுக்கு ஒரு ஹிந்தி சினிமா

வழக்கமாக நான் விரும்பி பார்ப்பது தென்னமரிக்க படங்கள். சமீபத்தில் பார்த்தது மோட்டார் சைக்கிள் டைரி. ஏற்கனவே மாண்டீயும்,, டிசே தமிழனும் இதனை அலசி, பிழிந்து, காயப்போட்டு விட்டதால், சேவுக்கு ஒரு சல்யூட்டோடு, அங்கிருந்து எஸ்கேபாகிவிடுவோம்.

சமீபத்தில் வந்த ஹிந்தி படங்களில் என்னை உறுத்திய படம் Page 3. ப்ளாக், ஸ்வதேஷ் என்று ஆஸ்காரினை குறிவைத்து எடுக்கப்படும் படங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. அதுவும் ப்ளாக் என்னைப்பொறுத்தவரை ஒரு திறமையான சாமர்த்தியமான இயக்குநனின் அழகாய் எடுக்கப்பட்ட படம் என்பதை தாண்டி, எந்த பாதிப்பினையும் உண்டாக்காத படம். ஸ்வதேஷ் ....... ஆவ்......வ்வ்வ்வ்வ்..... இரண்டு சிட்டிகையோடு, கொட்டாவி விடுவதை நிறுத்த முயற்சித்து முடியாமல் தோற்றுபோய் தூக்கம் வந்த படம்.

குறைந்த செலவில், பெரிய, தெரிந்த முகங்கள் இல்லாமல், களமிறங்கி கலக்கிக்கொண்டிருக்கும் படம் (மாநகரம், மகாநகரங்களில் மட்டுமே) பேஜ் 3. பேஜ் 3 என்பது உயர்மட்ட சமூகத்தினரின் பார்ட்டி, அந்தரங்கம்,சந்திப்பு, கிசுகிசுக்கள் என்று அல்லாடும் நிலவரங்கள் அடங்கிய நாளிதழ்களில் வரும் பக்கம். கிட்டத்திட்ட இந்தியாவின் எல்லா பத்திரிக்கைகளிலும் ஏதேனும் ஒரு வகையில் இந்த பேஜ் 3 க்கு ஒதுக்கி ஷோ காட்டுகிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா இதில் முதலிலிடத்தில் இருக்கிறது. முதல் பக்கத்தில் அரசியல் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக கீளிவேஜ் காட்டும் ஒரு மாடல் வண்ணத்தில் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பார். [எப்பப்பா, டைம்ஸ் சென்னை எடிஷன் வருது...இதோ வருது, அதோ வருதுன்னு வடிவேலு கணக்காக பில்-டப்பிலேயே காலத்தை ஒட்றாங்கப்பா ;-)]

பேஜ் 3, மத்திய தரவர்க்கத்தின் அபிலாஷைகளையும், பணம், புகழ் மற்றும் அங்கீகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் இன்றைய இளைஞர்/ஞிகளையும், உயர்மட்ட, பணக்கார சமூகத்தின் கேவலமான முகங்களையும், மாறிவரும் இந்தியாவின் பாலியல் சிந்தனைகளையும் உள்ளடக்கிய படம். உலகபடங்களுக்கு இணையாக என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாமல், ஹிந்தி சினிமாவின் எல்லைகளுக்குள் "ஐட்டம் சாங்" உட்பட வைத்துக்கொண்டு, புதிதாய் ஒரு விசயத்தை சொல்ல முயற்சி செய்திருக்கும் படம். மதுகர் பண்டார்கரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த படத்தில் எனக்கு தெரிந்த நடிகர்கள் மிகக்குறைவு. கொங்கனா சென் (Mr. & Mrs. Iyer), பொமன் ஈரானி (முன்னாபாய் எம்.பி.பி.எஸ் - வசூல்ராஜாவின் ஒர்ஜினல் ஹிந்தி பதிப்பு), அதுல் குல்கர்னி (ஹே ராமில் வரும் இந்து தீவிரவாத ராம் அபயங்கர் மற்றும் ரன்னில் மீரா ஜாஸ்மினின் ரவுடி அண்ணனாக வருபவர்) மற்றும் பலர்.

கதை இன்றைய பம்பாயில் நடக்கிறது. மாதவி சர்மா (கொங்கனாசென்) நேஷன் பத்திரிக்கையின் Page 3 எழுதும் நிருபர். அவருடைய வேலை பார்ட்டி நடக்கும் இடங்களுக்கு சென்று அதனைப் பற்றி எழுதுவது. நேஷன் பத்திரிக்கையின் எடிட்டர் தீபக் சூரி (பொமன் ஈரானி) மற்றும் அந்த பத்திரிக்கையின் குற்றவியல் நிருபர் விநாயக் மானே (அதுல் குல்கர்னி). மாதவி, ஒரு ப்ளாட்டில் இரண்டு பெண்களோடு இருக்கிறாள், ப்யர்ல் ஒரு விமான பணிப்பெண், காயத்ரி, ஹிந்தி சினிமா நடிகையாக முயற்சி செய்து கொண்டிருப்பவள். மாதவியின் காதலன் ஒரு ஆண் மாடல், அவளின் நண்பன் அபிஜித் ஒரு ஒரினச்சேர்க்கையாளன். மாதவியின் வேலை பார்ட்டிகளுக்கு செல்வது, அங்கு நடக்கும் விசயங்களைப் பற்றி எழுதுவது, இதன் மூலம் சமூகத்தின் மிக உயர்தட்டில் இருக்கும் அனைவரின் அறிமுகங்களும் அவளுக்கு உண்டு. அவ்வாறான ஒரு அறிமுகம், ஹிந்தி சினிமாவின் உச்சநட்சத்திரம் ரோஹித்குமார். ரோஹித்குமாரின் சிபாரிசோடு, தன் நண்பி காயத்ரியை ஹிந்தி சினிமாவின் ஒரு பெரிய இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறாள். அந்த இயக்குநர் அவளோடு தவறாக நடக்க முயற்சிக்கிறார். பின்பு காயத்ரி, ரோஹித்குமாரோடு நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். பார்ட்டியில் சிநேகம் பிடித்த ஒரு பணக்கார, வயதான ஹோட்டல் அதிபரோடு ப்யர்ல் காதலிக்க ஆரம்பிக்கிறாள் ( ஒரு அற்புதமான சீன் ஒன்றுண்டு. ப்யர்லும், அவளின் வயதான காதலனும் மாதவியின் ப்ளாட்டிற்கு வரும் காட்சி. காயத்ரியும், மாதவியும், ப்யர்லை தனியே கூட்டிச் சென்று, "இந்த கிழவனையா கல்யாணம் செய்து கொள்ளப்போகிறாய். நீயும் இவரும் ரோட்டில் நடந்தால் அவர் உனக்கு தந்தையா என்று கேட்பார்கள் என்பதற்கு, ப்ய்ரிலின் பளிச்சென்ற பதில் "போடி முட்டாள், 2 மில்லியன் பெராரி காரில் நான் இறங்கும் போது யாரும் வயதைப் பார்பதில்லை")

ரோஹித்குமாருடன் பழகிய காயத்ரி, கர்ப்பமாகிறாள், அதனை கலைக்க சொல்லி ஆள் அனுப்பியதால், காயத்ரி, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் இடத்தில் ஏற்படும் போலீஸ் பார்மாலிட்டிகளை அங்கு வந்திருக்கும் விநாயக் மானேவின் சிபாரிசின் பேரில் மாதவி நடத்துகிறாள். விநாயக் மானேவுடன் ஒரு வாரம் குற்றங்கள், பாம் வெடிப்புகள் நடக்குமிடங்களில் பயணிக்கத் தொடங்குகிறாள். அப்போது தான் உலகின் நிஜ முகங்கள் புரிய ஆரம்பிக்கிறது. பிளாஸ்டிக் புன்னகைகளும், அலட்டல்களும் நிரம்பிய Page 3 என்பது பத்திரிக்கையாளனின் வேலை அல்ல, சமூகத்தில் அன்றாடம் நடக்கும் விசயங்களை பார்ப்பது தான் என்று புரிகிறது. ஒரு சமூக சேவகியின் துணையோடு, உத்தரபிரதேஷத்திலிருந்து கடத்தி வரப்பட்டு, பணக்கார பார்ட்டிகளில் (pedophile) சிறுவர் செக்ஸ்க்காக விற்கப்படும் சிறுவர்களைப் பற்றி தெரிந்து, போலிஸின் துணையோடு அவர்களை மீட்கிறாள். ஆனாலும் அந்த செய்தி அவளின் பத்திரிக்கையில் இடம்பெற அனுமதிக்கபடவில்லை மற்றும் அவளை வேலையிலிருந்து நீக்குகிறார்கள். [பத்திரிக்கையின் நிறுவனர், எடிட்டரிடம் சொல்லும் விளக்கங்கள் "தாபர் குழுமம்தான் மிக அதிகமான விளம்பர வருவாயை நம் பத்திரிக்கைக்கு தருகிறது. அதன் முதலாளியை சிறுவர் செக்ஸில் ஈடுபட்டார் என்று பத்திரிக்கையில் போட்டால் மொத்த விளம்பரவருவாயும் நின்றுவிடும். அதனால் அந்த விவகாரத்தை போடாதே" - எடிட்டர் - "சார், இது ஒரு முக்கியமான செய்தி." - முதலாளி - யார் அந்த பெண்? "Fire the bitch" ] இதற்கிடையே அவளின் காதலனும், அவளின் ஒரின சேர்க்கை நண்பனும் ஒன்றாய் செக்ஸில் இருப்பதை பார்த்துவிடுகிறாள். அங்கேயும் பிரிவு ஏற்படுகிறது. விநாயக் அவளிடம் உண்மையே சொல்வது எப்படி என்று கூறிவிட்டு, நாம் இப்போது இருக்கும் ஸிஸ்டத்திலிருந்தே, ஸிஸ்டத்தை எப்படி எதிர்ப்பது என்று சொல்லிதருகிறான். இன்னொரு பத்திரிக்கையில் மீண்டும் ஒரு Page 3 நிருபராக சேருகிறாள். அவளின் இன்னொரு பார்ட்டியின் சந்திப்போடு படம் முடிகிறது. அவள் பார்க்கும் கடைசி பார்ட்டியிலும் அவள் முதலிலிருந்து பார்த்த எல்லார் முகங்களும் பிளாஸ்டிக் புன்னகைகளோடு வலம் வருகிறார்கள்.

அவளின் முன்னாள் காதலன் ஒரு பேரிளம்பெண்ணின் வசமிருக்கிறான். காயத்ரி, அவளை ஹாரஸ் செய்ததாக சொன்ன இயக்குநரின் அடுத்த படத்தில் நடிப்பதாக சொல்லுகிறாள். ரோஹித்குமாரும், காயத்ரியும் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். தாபர் குழும முதலாளி, வேறொரு வெளிநாட்டுகாரரோடு ஒயின் குடிக்கிறார். நேஷன் பத்திரிக்கையின் முதலாளியும், மும்பாயின் கமிஷ்னரும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். கோம்ஸை* போலவே இன்னொருவன் பார்ட்டியில் போதை மருந்து விற்கிறான். அவளின் ஒரினசேர்க்கை நண்பன் இன்னொரு விளம்பரமாடலோடு பேசிக்கொண்டிருக்கிறான். இறுதியில் அவளின் ஒரின சேர்க்கை நண்பனைப் பார்த்து அவள் சொல்லும் ஒரு வசனம், சற்றே புன்முறுவலையும், சமூக வெளிப்பாட்டையும் சொல்லும். "Next time, lock the door".

இந்த படத்தில் மிக முக்கியமாய் சொல்லவேண்டிய பாத்திரங்கள், விநாயக் மானேயின் துணையோடு, போதை பொருட்கள் விற்போரை வேட்டையாடும் இன்ஸ்பெக்டர் போன்ஸ்லேயாக வரும் உபேந்திர லிமாயே, மிக அருமையாக கிராமத்திலிருந்து வந்து நேர்மையான போலீஸாக இருக்கும் ஒரு நிஜமான போலீஸை கண்முன் நிறுத்துகிறார். போதை பொருள் விற்று பிடிபடும் கோம்ஸ்*ஸினை என்கொவுண்டரில் கொல்லும் செயல் மிக நேர்த்தி. பம்பாயின் மிக மறைவான, இருளான இடங்களில் செய்தி சேகரிக்கும் அதுல் குல்கர்னி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். கொங்கனா சென், பொமன் ஈரானி, ப்யர்லாக வரும் பெண் அனைவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் உண்டாக்கும் கேள்விகள் ஏராளம். ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண் எனப்படும் பத்திரிக்கை உலகில் நடக்கும் சமரசங்கள், ஒரு சமூதாயத்தின் ஊடகங்கள் எவ்விதமான சமரசங்களோடு செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன, உயர்மட்ட சமூகத்தின் ஆரோக்கியமற்ற உணர்வுகள், பணமும், புகழும், அங்கீகாரமும் மட்டுமே வாழ்க்கை என நினைத்துக்கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள், பணத்திற்க்காக எவ்வாறு, பத்திரிக்கை தருமம் பலியிடப்படுகிறது, மத்திய தரவர்க்க இளைஞர்களின் அபிலாஷைகள், அவர்களின் கனவுகள், கனவுகளுக்காக பலியிடப்படும் நேர்மை, தன்னம்பிக்கை, எல்லா இடங்களிலும் மக்களின் இருப்பு எவ்வாறு ஒரு சில தனிநபர்களிடம் சிக்கியிருக்கிறது, எவ்வாறு முதலாளிகள் சமூகத்தை தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள், வெஸ்டர்னைஸ்சேஷன் என்பது எவ்வாறு தவறாக இந்தியாவில் கையாளப்படுகிறது, முன்னேறிய நாடுகளை பார்த்து முன்னேற்றங்களை கைக்கொள்ளாமல், தண்ணியடிப்பதையும், டான்ஸ் ஆடுவதையும் மட்டுமே தவறாக எடுத்துக்கொண்டு அதனை முன்னிறுத்தும் உயர்தட்டு சமூகங்கள் என விரிகிறது.

இந்த படத்தில் காணப்படும் ஆச்சரியங்கள். ஒரு ஒரினச்சேர்க்கையாளனை நண்பனாக வைத்திருக்கும் ஒரு பெண், சிகரெட் பிடிக்கும் சுய சம்பாத்திய பெண்கள் (தமிழில் அப்படி ஒரு சீன் வைக்க முடியுமா, அவ்வளவுதான், திருமா, மாலடிமை கோஷ்டிகள், தமிழ் கலாச்சாரம் கெட்டுப்போய்விட்டது என்று நன்றாக சரக்கடித்துவிட்டு, தொண்டர்களை உசுப்பேற்றி, எல்லா திரையரங்கு வாசல்களிலும் கலாட்டா செய்ய பூஜை போட்டு விடுவார்கள்), ஷாம்பெய்னை கொண்டாட்டமாக பார்த்து குடித்து அனுபவிக்கும் பெண்கள், சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்று காட்டும் தைரியம், முதலாளிகளின் கார் ஒட்டுநர்கள் வாயிலாக சினிமாவிற்க்குள்ளேயே சேம் சைடு கோல் போடும் சாமர்த்தியம் [ஒரு கார் ஒட்டுநர், தன் சக கார் ஒட்டுநர்களோடு சொல்லும் வசனம், "துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலில் என்ன நடக்கிறதென்று நினைக்கிறாய், Shopping இல்ல மச்சான், வெறும் Swapping"] என நீள்கிறது. கற்பனையான கதைகளை விட சமூகத்தினை வெகு அருகிலிருந்து பார்க்கும் இதைப்போன்ற கதைகள் சமூகத்தில் சினிமா என்கிற ஒரு பெரிய ஊடகத்தின் பங்கினை அருமையாக முன்வைக்கிறது.

பார்க்க: பேஜ் 3(2005)

பின்செய்தி: இந்த படத்தின் இயக்குநர் மதுர் பண்டார்க்கர் மேல் ஒரு இளம் நடிகை சான்ஸ் தருவதாக கூறி கெடுத்துவிட்டார் என்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தேவுடா...தேவுடா.....

குண்டூசி: 1997-ஆம் வருடம். பேனசோனிக் நிறுவனத்தின் அலுவலக தொடர்பு கருவிகளை விற்கும் விற்பனை பிரதிநிதியாக இருந்தேன். அப்போது ஒரு பட அதிபரின் அலுவலகத்தில் தேவையிருப்பதாக சொன்னதால், சாலிகிராமத்தில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். காத்திருந்த வேளையில் என்னருகில் ஒல்லியாய், ஒடிசலாய், தலை நிறைய முடியோடு, அழுக்கான சட்டையோடு ஒரு உருவம் அமர்ந்திருந்தது. டீ கொடுக்கும்போது, நீங்க எடுத்துகுங்க பாஸ் என எனக்கு வழி விட்டு ஒதுங்கி கொண்டது. உள்ளே கூப்பிட்டவுடன் நான் முதலில் போய் பேசி முடித்துவிட்டு வந்து, என் வண்டியை ஸ்டார்ட் செய்யும்வேளையில், பாஸ், கொஞ்சம் வண்டியை "டோ" பண்ண முடியுமா, பெட்ரோல் பங்க் வரைக்கும் என தன் டிவிஸ் 50 வண்டியை முன்னால் எடுத்தார். முனங்கிக்கொண்டே டோ செய்தேன். அந்த நபர், தற்போது நவீன தமிழ் சினிமாவின், சமரசம் செய்யாத மிக முக்கியமான படைப்பாளி: இயக்குநர் சேரன்.

நட்சத்திரம் அல்லது நட்டு கழண்ட சித்திரம்

இந்த வார நட்சத்திரம் இன்னார் இன்னார் என நீளும் தமிழ்மண பட்டியலில் இன்று நானும் ஒரு நட்சத்திரம். (நேரம் தான்!!) நட்சத்திரம் என்கிற வார்த்தை எழுப்பிய அதிர்வுகள் என்னிடத்தில் ஏராளம். சின்ன வயதில் மொட்டைமாடியில் தூக்கம்வராமல் படுத்திருக்கும்போது, பாட்டி சொன்னதிது. "மேல இருக்கற நட்சத்திரத்தை எண்ணிட்டே வா" பெரும்பாலான சமயங்களில் என்னுடைய எண்ணிக்கை 100-125 தாண்டியிருக்காது. தூங்கிவிட்டிருப்பேன் (ஏய் யார்ப்பா அது, அதுக்குமேல அந்த வயசுல உனக்கு எண்ணத் தெரியாதுன்னு ஊடால புகுந்து கலாய்க்கறது ;-)) எல்லா முனிவர்களும் ஏதேனும் ஒரு நட்சத்திரமாக தான் ஆகியிருப்பார்கள் என்கிற ஒரு வைணவ சம்பிரதாயமுண்டு (உண்டா நா.கண்ணன்?) ஆனாலும் எந்த முனிவரின் நட்சத்திரங்களின் பெயர்களும் இப்போது நினைவில்லை.

ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ராமர்கோயிலுக்கு போய் நட்சத்திரம், கோத்திரம் மற்றும் ஸ்தோஸ்திரங்கள் சொல்லிய காலங்களுண்டு. நான் இப்போது கோவிலுக்கு போய் 13 வருடங்களாகின்றது. படிக்கிற காலத்தில் நட்சத்திரங்கள் பெறும்பாலும் என் பாடபுத்தகங்களில் இருந்தவை தான். தமிழ்நாட்டின் ஜிப்பா கவிஞர்கள் எழுதிய எல்லா நிலா,வானம், மேகம் பற்றிய கவிதைகளிலெல்லாம் 'தேமே'னென்று நட்சத்திரங்கள் "கெளரவ நடிகர்களாக" வந்து போகும். பத்து பன்னிரடாவது படித்த காலத்தில் "உன் முகவானில், பரு நட்சத்திரங்கள்" என உளறிக்கொட்டி கவிதை என்று கிறுக்கி, உலகின் கவிதைகளை அவமதித்த காலங்களில் நட்சத்திரங்கள் எப்போதும் கனவு பிரதேச வாசிகள்.

அக்னி நட்சத்திரம் படம் பார்த்து விட்டு, சேர்ந்தால், மணிரத்னமிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேயாவது என உப்புமா குறிக்கோள்களை எடுத்து, சைக்கிளில், முகவரி விசாரித்து, வீனஸ் காலனி சுற்றிய அனுபங்கள் கொஞ்சமாகவும், ஒரு நிறைவேறா காதலின் சொச்சமாகவும் எப்போதேனும் மணிரத்னம் அலுவலகம் கடக்கும்போது அவ்வப்போது விக்கும். மேமாத அக்னி நட்சத்திர வேளைகளில், ரோட்டில் வரும் கிரிணிப்பழ ஜூஸூக்காக காத்திருந்து அதிகமாக ஐஸ் போட்டு வாங்கி குடித்தது இன்னொரு டிராக். அக்கால கட்டங்களில் அதற்காகவே காத்திருந்து வாங்கிய பத்மாவதியின் மேலும், கீதாலட்சுமியின் மேலும் கொண்ட பப்பி லவ் ஒரு காமெடி டிராக்.

"நட்ஷத்திரா" வைரங்களில் டான்சானிய பாலைவனத்தில் தாந்தீரிக அசைவுகளோடு ஐஸ்வர்யா ராய் வரும் தார்சேம் சிங் இயக்கிய விளம்பரம் ("தி செல்" என்கிற படத்தின் இயக்குநர் அவர். ஜெனிபர் லோபஸ் கதாநாயகி ;-)))

"நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்த்தது" என பாடி ஒரே பாடலில் சரத்குமார் பஸ் முதலாயியாய் வருவது.

"நட்சத்திரம்" என்கிற படம் பார்த்தது

உச்ச நட்சத்திரம், லிட்டில் உச்ச நட்சத்திரம், அல்டிமேட் நட்சத்திரம், சூப்பர் நட்சத்திரம் என தமிழ் சினிமா ஹீரோக்கள், நடிக்காமலேயே சிரிப்பு மூட்டுவது

"நீங்கள்
நட்சத்திரங்களைப் படிக்கக்
கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத
எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை
அறிந்திருப்பீர்கள்" என நீளும் அப்துல் ரகுமானின் கவிதைவரிகள்( பித்தன் - அப்துல்ரகுமான் )

"நட்சத்திரங்களைப் பற்றி
மூன்று விஷயங்கள்
தெரியும் எனக்கு

ஒன்று
சூரியன் இல்லாத இரவுக்கு
நட்சத்திரம் தான் ராஜா

இரண்டு
நட்சத்திரங்களின் தகதகப்பு
போலியானது
உண்மையில் அவை
ஒளி உமிழிகள் மட்டுமல்ல
ஒளி வாங்கிகளும் கூட

மூன்று
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்
சொந்தமாய் உண்டு
அதிகம் அதிகமான
இருண்ட பள்ளங்கள்" என விலாவரியாய் நட்சத்திரங்களை விமர்சிக்கும் கவிஞன் நா.முத்துக்குமாரின் விற்பனை ரகசியங்கள் (பட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்)

சூரியன் மிகப்பெரிய நட்சத்திரம் என்று கேள்விப்பட்டதும், ஏன் எல்லா நட்சத்திரங்ளும் நட்சத்திரவடிவமாக இருக்கும்போது, சூரியன் வட்டமாக இருக்கிறது என அதிபுத்திசாலிதனமாக எழுப்பிய முதல் அறிவியல் கேள்வி

90களில் சென்னையில் விழும் என சொல்லப்பட்டு, வானையே பார்த்து கொண்டிருக்க வைத்த ஹேலி வால் நட்சத்திரம்

எல்லா திருமண மண்டபங்களின் வாயிலும் கண்களை கலவரபடுத்தும், சீரியல் நட்சத்திர பல்புகள்

சமீபத்தில் "திருப்பாச்சி" வருவதற்கு இரண்டு நாளைக்கு முன் சாலிகிராமத்தில் பார்த்த நட்சத்திரம் செய்து அதில் போட்டோ ஒட்டி, ஜிகினாதாள் பளபளக்க, விஜய் அலுவலகத்தின் முன் மேனேஜரின் உத்தரவுக்காக காத்திருக்கும் ரசிக இளைஞர்கள், தெருவெங்கும் பரவியிருந்த வெவ்வேறு அளவுகளில் இருந்த நட்சத்திர வடிவங்கள், பேனர்கள்

என நீளும் என் நட்சத்திர பட்டியல்களில் இன்று இன்னொரு விசயமும் சேர்ந்திருக்கிறது.

நா.கண்ணனின் பதிவினை படித்ததும், ஏற்கனவே படித்த ஜே.கே யை மறுவாசிப்பு செய்ய தோன்றியது. சடாரென பிரித்த பக்கத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் - "எழுதுவது என தொடங்கிவிட்டாலே போலித்தனங்கள் வந்து விடுகிறது. நினைப்பதை எழுத இயலாமல், சொற்களை எழுதிக் கொண்டிருக்கிறோம். அர்த்தங்களின் அர்த்தங்களை உணராமல், வெறும் வார்த்தைகளால் நம் சார்பினை முன்வைக்கின்றோம்"

உண்மையாக தான் தோன்றுகிறது. எதை எழுதுவது. எழுதுவது என்று அமர்ந்த உடனேயே மனம் கணக்கு போட ஆரம்பித்துவிடுகிறது. எப்படி எழுதலாம், என்ன எழுதலாம், என்னென்ன வார்த்தைகளை போடலாம் என நீளும் விவாதத்தில் தோன்றிய எண்ணங்களை எழுதி முடிப்பதற்க்குள் வாழ்வின் எல்லைகள் வந்துவிடுமென்று தோன்றுகிறது. எழுதுதல் என்பதை ஒருவித வேதனையான சந்தோஷம் தானோ என்னவோ.

நட்சத்திரம் தான் நாம் எல்லோரும் , நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் தொடர்ந்து ஏதேனும் ஒரு வ்கையில் எரித்துக்கொண்டிருக்கிறோம். எழுதி தீர்ப்பதின் மூலமாகவும், பேசி களைப்பதின் மூலமாகவும் ஒரு கவர்ச்சியையும், பிரகாசத்தையும் முன்னிறுத்தி, பகலிலும், இரவிலும் மக்களிடேயே வாழ்ந்து வருகிறோம். எல்லாம் தீர்ந்த போன ஒரு நன்நாளில் எரிகல்லாய் மண்ணுக்குள் புதைகிறோம். புதைவதற்குமுன் ஏதேனும் விதைத்து விட்டு போவேன் என்கிற நம்பிக்கையுடன் இந்த வாரத்தை எழுத முயற்சிக்கிறேன்.

எழுதிவிட்டு வெளியில் வந்து பால்கனி வழியே வானத்தை பார்த்தேன். சுத்தமாய், நிர்மலமாய், நட்சத்திரங்கள் ஏதுமின்றி, கருநீலமாய்.

பொது மன்னிப்பு: அருணா சீனிவாசன் என்னை மன்னிக்கவும். பொதுவாக யார் நட்சத்திரமாய் வந்தாலும், அவரின் பதிவினை படித்து பின்னூட்டமிடுவேன். லீவிலிருந்த காரணத்தினால் இட இயலவில்லை, ஆனாலும் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டேன் என்பதை கற்பூரம் ஏற்றி அடித்து சத்தியம் செய்யாமல், விசைப்பலகையில் அடிக்கிறேன்.

குண்டூசி: என் கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் ஆண்டு. நாடகங்கள், கானா பாடல்கள், கல்ச்சுரல் என என்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த நேரம். அனைத்து கல்லூரி நாடக விழாவிற்காக எங்கள் கல்லூரியின் சார்பில் நடந்த விழாவிற்கு வந்து ஒரமாய் அமர்ந்து கொண்டிருந்தவரை எல்லா பேராசிரியர்களும் நலம் விசாரித்தார்கள். அன்றைக்கு இருந்த புகழ் போதையில், அவனென்ன பெரிய மயிரா என கேள்வி எழுப்பி, கடைசி இருக்கையில் அமர்ந்து கானா பாடிக்கொண்டிருந்தோம். திரும்பி பார்த்து ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டார். சில வருடங்களில் பாலுமகேந்திராவின் "கதை நேரத்திலும்" பல டீவி தொடர்களிலும் மிக ஆழமாய் நடித்து பெரும் பெயர் பெற்றிருந்தார். இன்று சின்னத்திரையின் தலை நட்சத்திரமாய் விளங்கும் அவர்: வேணு அரவிந்த்.

Mar 12, 2005

டார்ச்சர் திரும்பியாச்சு

வந்தாச்சு. இரண்டு வார விடுமுறையை கொஞ்சம் சீக்கிரமே முடிச்சாச்சு. இனி வழக்கம்போல டார்ச்சர் தொடரும். நிறைய பதிவுகளை படிக்கவில்லை. இப்போது படிக்கும் எண்ணங்களும் இல்லை. ஆனாலும், அவ்வப்போது, விட்ட குறை தொட்ட குறையாக படித்து வந்திருக்கிறேன். திங்கள் முதல் வழக்கம்போல உருப்படாமல் இருக்கலாம்.

Mar 1, 2005

லீவ் லெட்டர்

Chennai 78
1/3/05

From
R.L. Narayanan
Chennai

To
The Blog readers
Thamizhmanam.com

Sub: Leave letter

Ref: Check with my clients

Dear Thamizhmanam reader,

As I am suffering from hectic work pressure, i am unable to come & blog for next 2 weeks. Kindly grant me 2 weeks leave.

I will submit the necessary authorisation when i resume my blogging

Thanking you,

yours faithfully,
R.L. Narayanan

CC: ரோசாவசந்த், மதி, மாண்டீ, டிசே, கறுப்பி, மூர்த்தி, விஜய், பத்ரி, தங்கமணி, அரவிந்தன் மற்றும் என்னைப் படிப்பவர்களும், பின்னூட்டமிட்டவர்களும்

[கண்டிப்பாக பாட்டிகள் யாரும் சாகவில்லை. மெடிக்கல் சான்றிதழ் தர இயலாது. ]

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]