Mar 21, 2005

கானா - சென்னை நகர்ப்புற இசை வடிவம் - பகுதி 1

ஒரு வாரத்தில் மண்டைக்கு கனமான விஷயங்களாக எழுதி, மண்டை காய்ந்து போய்விட்டிருக்கும் உங்களுக்கு, அதனை நிவர்த்தி செய்யும் விதமாய், இந்த வாரமுழுதும் கொஞ்சம் லேசான விஷயங்களை கையில் எடுத்துக் கொள்வோம். எங்கிருந்து ஆரம்பிப்பது ? கானாவிலிருந்து தொடங்குவோமா? சென்னையின் மிகமுக்கியமான கல்லூரிகளை தாண்டிப் போகும் பேருந்து வழித்தடங்களில் கானா இல்லாமல் இருக்காது. கீழ்தட்டு மக்களின் இசை வடிவம் என்பதை தாண்டி, பெரும்பாலான கல்லூரி பேருந்துகளின் மிக முக்கியமான அடையாளம் - கானா. கானா பாடல்கள் இல்லாத ஒரு ஆண்கள் கல்லூரி வழித்தடத்தை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. சென்னையின் மிகமுக்கியமான நகர்ப்புற அடையாளம் கானா ... மிக கனமான விசயங்களை எளிமையான நடையில் பாடும் முயற்சி. கல்லூரி கானாக்களில், கூட்டம் அதிகமிருக்கும் பட்சத்தில் ஆபாச சொற்களுக்கு குறைவிருக்காது. 3 வருடங்கள் கல்லூரி பயின்ற காலத்தில் கானா பாடகனாக இருந்திருக்கிறேன். அதனால், கானாவின் மரியாதை என்னவென்று தெரியும். எங்கே கூட்டமாய் போனாலும், கானா பாடாமல் இருக்க மாட்டோம். கானா ஒரு கல்லூரியின் அடையாளம். இதற்காக பேருந்தினை மறித்து, இரண்டு கல்லூரிகள் அடித்துக்கொண்ட கதைகளெல்லாம், சென்னையில் ஏராளம்.

ஒரு சமயம், லயோலா கல்லூரியின் கேண்டீனில் போய் கானா பாடி, அங்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வந்து எதிர் கானா பாட, நாங்களும் பாட, சலசலப்பு உண்டாகி, கையில் கிடைத்ததை தூக்கி எறிந்து, லயோலா கல்லூரியின் மதில் சுவர் எகிறி குதித்து, தண்டவாளங்களினூடே, நுங்கம்பாக்கம் பாலத்தினை கடந்திருக்கிறோம். அன்றைக்கு ரயில் வந்திருந்தால், எல்லாரும் அபீட்டு. இதேப்போல் இன்னொரு முறை, பச்சையப்பன் கல்லூரி வாசலில் நிற்கும் போது பாடியதால், பஸ்ஸிலிருந்து இழுத்துப்போட்டு அடித்து, என் கண்ணாடி காலி. இவ்வாறாக, வீர விழுப்புண்களை சுமந்து கானா பாடியிருக்கிறோம். என்னமோ, சுதந்திர போராட்டத்தில் "வந்தே மாதரம்" சொல்லி, வெள்ளையனிடம் அடி வாங்கிய மாதிரியான பில்-டப் நிறையவே இருக்கிறது.

சிங்கள பைலா பாடல்கள் போல, கானா ஒரு கலாச்சார அடையாளம். அடித்தட்டு மக்களின் குதூகலம். பச்சையப்பன் கல்லூரி B மைதானத்தில் கிரிக்கெட் ஆடப்போகும் போது, டாஸ் ஜெயித்ததிலிருந்து, பேட்டிங் எடுத்தோமானால், நம்மணி வீரர்களை உற்சாகப் படுத்த தொடர்ச்சியாக 3 -4 பேர் மாற்றி, மாற்றி கானா பாடுவோம். கானாவின் மிக முக்கிய அம்சமே participation. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. கர்நாடக கச்சேரிகளுக்கு போனால், பாகவதர் பாடிக்கொண்டேயிருப்பார். நம் பக்கத்திலிருப்பவர் கொட்டாவி விட்டுக்கொண்டோ, சாப்பிட்ட போண்டாவின் பெருமைகளை பேசிக்கொண்டோ இருப்பார். ஆனால், கானாவில் அது கிடையாது. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசை கருவிகள் என்று எதுவுமில்லை. மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸில் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு பாடல்கள் அமைய வேண்டும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் கானாவினை அறிமுகப்படுத்தியவர் நிறைய பேர் நினைப்பது போல் தேவா கிடையாது. பச்சையப்பன் கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஒரு கூட்டம்தான். இயக்குநர் செல்வாவின் முதல் படமாகிய "தலைவாசல்" தான் பிறகு அதை தேவா காப்பிரைட் எடுத்துக்கொண்டுவிட்டார். மூன்று வருடங்களும், கல்லூரி முடித்து, நண்பர்களின் திருமணம், எங்கேயாவது ஒன்றிணைவது என்கிற சந்தர்பங்களில் 2001 வரை கானா பாடியிருக்கிறேன். எல்லா புது வருட துவக்கத்திலும், நண்பர் அரவிந்தனின் வீட்டு மொட்டை மாடியில் தொடர் கானாவும் திரைப்பாடலும் பாடுவதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறோம்.

இது கானாவினைப் பற்றிய அறிமுகம் பகுதி 1 மட்டுமே. காத்திருங்கள், என் சொந்த கானாக்களும், சில சூப்பர் கானாக்களும், இந்த பதிவில் இந்த வாரத்தில்.

Comments:
எனக்கு வயசாகி போன இந்த நேரத்தில இன்னாத்துக்கு கானாவெல்லாம் போட்டு கலாய்க்கிறீங்க. கானா சென்னைக்கு மட்டுமே சொந்தமா என்ன? சென்னையில் தோன்றியதாக இருக்கலாம். ஆனால் அது என்னமோ கலேஜ் புள்ளையாண்டாங்களுக்கு எல்லாருக்கும் சொந்தமில்லையா?

கானா மாதிரி இல்லாட்டியும் பாட்டுல கெட்டவார்த்தையெல்லாம் போட்டு, அதுவும் வாத்தியாரை பக்கத்துல வச்சிக்கிட்டு பாடுற சொகமே சொகம். ஒன்னு ரெண்டு அரைகுறையா சொல்றேன்...

'செந்தமிழ் தேன் மொழியால்
************************* (சென்சார்)'

'பாட்டு பாடவா ******** (சென்சார்)'

'ரங்கராட்டினம் **** ரங்கராட்டினம் ***(சென்சார்)'

அப்படியே அடுத்த கில்மாவுல நிறைய எடுத்துவுடுவீங்கன்னு எதிர்பார்ப்புடன்.....
 
ஐயோ விஜய் அந்த மாதிரி நெறைய பாட்டு இருக்கு, பாடினேன் நேரா நியுசென்ஸ் கேஸ்ல உள்ள தள்ளிடுவாங்க. இப்பப்பாடினா கொஞ்சம் வெட்காமாகவும், ரொம்ப ஆபாசமாகவும் உணருகிறேன். ஆனா, கெட்ட வார்த்தை போடாம, நல்ல கானாக்கள் நிறைய இருக்கு எளிமையான வார்த்தையில, பெண் கல்லூரிகள் உள்ளடக்கி வரும் கானாக்களில், கவர்ச்சியுண்டு, ஆபாசம் கிடையாது. இந்த மாதிரி கானா பாடும்போது, பெண்களும், ரசிச்சுட்டு போயிடுவாங்க. மத்தபடி, அடுத்தவர்களின் அந்தரங்கத்தை போட்டுத் தாக்கறா மாதிரியான கானாவை நான் என்னைக்கும் பாடினதில்லை
 
மனசாட்சியின் குரல்!

'அவசரப்பட்டு உளறித் தொலைச்சுட்டேனோ?.. ஏற்கனவே ஒரு லெமன் டீ, இப்போ கானா பாட்டு. அந்த ராம்கி பிசாசு நேர்ல பார்த்தா உசுரை வாங்கிடுவானே!'
 
நாராயண்:
நான் ரொம்ப நாட்களாக கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தது எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். இப்போது அடிக்கடி இந்த 'கானா'ப் பாடல்களைப் பற்றி குறிப்பிடப்படுகிறது, உங்கள் பதிவுகள் உள்பட. கானாப் பாடல்களை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமேல்லாம் கூட வாங்குகிறார்கள் என்று எங்கோ படித்தேன். கானாப் பாடல் என்றால் என்ன? "மழ பெஞ்சி ஊரெல்லாம் தண்ணி..." வகைப் பாடல்களா? இதுபோன்ற பாடல்களை நாங்களும் பாடியதுண்டு, இந்த genreக்கு ஒரு பெயர் இருப்பது கூட தெரியாமல்.
 
சுந்தரமூர்த்தி, விரிவாய் நாளை பின்னூட்டம் வைக்கலாம் என்று இருக்கிறேன். 'மழை பெஞ்சி ஊரெல்லாம் தண்ணி..' (இதுல டீஸண்டா ரெண்டும்,' ...சுண்ணி'ன்னு முடிவதாய் வேறு இரண்டு வித இரண்டாம் வரிகொண்டதாகவும் குறைந்த பட்சம் எனக்கு தெரிந்து இருக்கிறது-நீங்கள் எதை குறிப்பிட்டாலும்) கானா போன்றது என்றாலும் கானா என்று அழைக்க முடியும் என்று தோன்றவில்லை. இதை கானா விலிருந்து வித்தியாசப்படுத்தும் இலக்கணம் என்னவென்று சரியாய் சொல்ல வராவிட்டாலும், இதுவரை கேட்ட கானாக்களை வைத்து குண்ட்ஸாய் இப்படி சொல்ல முடிகிறது. உங்கள் கேள்வி முக்கியமானது! இதற்கான பதிலில் கானாவின் இலக்கணமாய் எதையாவது வரையருக்க முடியும். நாநா என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு நாளை வருகிறேன். ஆனால் கானா அந்த கணநேர படைப்பக்கதன்மை கொண்டது.

நா.. வழக்கம் போல நல்ல பதிவு. சினிமாவிம் 'தலைவாச்ல்' மூலமே கானா நுழைந்தது என்றாலும் அதை பிரபலபடுத்தியவர் அண்ணன் தேவா. அண்ணன் தேவாவின் மௌஸு குறைந்து இப்போது கானாவுக்கும் குறைந்திருக்கிறது. மீண்டும் நாளை வருகிறேன். (இந்த கமெண்ட் நாந்தான் எழுதியது என்று ரஸ்ஸல் பரடாக்ஸ் போல் சொல்லிகொள்கிறேன்)
 
சுந்தரமூர்த்தி, நீங்கள் குறிப்பிட்ட பாடல் கானா சாயல் அடிக்கும் பாடல். இதுப்போல நிறைய பாடல்களை உதாரணம் காட்ட இயலும். "கொத்தவால் சாவடி லேடி" போல. ஆனால், கானா என்பது வசந்த் சொல்லுவதுப் போல், கணநேர படைப்புத்தன்மையும், இன்ஸ்டன்ட் இட்டுக்கட்டி பாடும் முறையும் நிறைந்தது. உதாரணத்திற்கு,

தெருவோட அண்டரு
ஒடுதுபார் வாட்டரு
தாண்டிகிட்டு போறாரு
மூணாம் மாடி சுந்தரு என உங்களை வைத்தே சடாலென கானா பாட இயலும். கானா பாடகர்கள் முக்கியமாக அடித்தட்டு மக்களின் எல்லா நிகழ்வுகளிலும், கானா கூட இருக்கும். நடு ரோட்டில் ஸ்டூல் போட்டு கேரம்போர்டு விளையாடுவதில் தொடங்கி (கறுப்பு, வெள்ளை கேரம் காய்களை பாடுவது போல் ஆபாசமாக பாடும் பாடல்கள்) எழவு வீடுவரை எல்லா இடங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் கானா அவர்களின் வெளிப்பாடு.

இதுப் போல, தடாலடியாகவும், உடனடியாகவும் பாட கூடியவையும், இட்டுக் கட்டி பாடுதலுமே கானாவாக அறியப்படும். வசந்தின் பின்னூட்டத்தைப் பார்த்து விரிவாக எழுதுகிறேன்.
 
நரைன் அபுல்கலாம் ஆசாத்தின் கானா புத்தகம் படித்தீர்களா?.கானா பற்றிய உங்கள் பதிவு நன்று ஒரு பதிவோடு விட்டுவிடாமல் நீங்கள் இட்டுக்கட்டிய அல்லது விரும்பிப் பாடிய கானாக்களையும் பதியுங்களேன்
 
நாராயணன்!!!....ரம்மியமான மொட்டை மாடி நினைவுகள்...நீங்கள் கானா பாட ,நான் புலியாட்டம் ஆட நம்ம பாபு தாளம் போட உடைந்தது எங்கள் வீட்டு பிளாஸ்டிக் வாளி....எல்லா வருட புத்தாண்டு கொண்ட்டாங்களும் தீர்த்தம் இல்லாமல் கொண்டாடுவது என்பதை ஒரு நல்ல கொள்கையாக வைத்திருந்தோம்....

இரவு ஒன்பது மணிக்கு நண்பர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சம் சேர ஆரபிக்கும்..நம்ம கூட்டத்தில் இருக்கும் ஆல்- இன் அழுகு ராஜா மொட்டை மாடியில் கரண்டு வயர் இழுத்து பல்ப் கனக்க்ஷ்ன் கொடுப்பார்...நண்பர்கள் எல்லோரிடம் கலெக்ஷ்ன் தேத்தி கூல்டிரிங்கஸ்,பரோட்டா,சிப்ஸ் வாங்கிய பிறகு....ஆரம்பிக்கும் எங்கள் கலாட்டா...
இளையராஜாவின் மெலோடியில் ஆரம்பித்து பின்னர்..நாட்டுபுற பாடலில் நுழைந்து பின்னர் அதிரடு கானாவில் வந்து நிற்க்கும்.....அக்கம் பக்கம் இருக்கும் அத்தனை வீட்டில் இருந்தும் ரசிகர்கள்(?) கூட்டம் வேடிக்கை பார்க்க எங்கள் ஆட்டம் பாட்டம் தொடரும்....11.59 50 மணீக்கும் கவுண்ட் டவுன் தொடங்கும்....புத்தாண்டு பிறந்தவுடன் ஆப்பி நீயு இயர் என்று காட்டு கத்தல் கத்தி எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி ரொம்ப நல்ல பிள்ளையாய் கீழே இறங்கி வருவோம்......
 
எனது திருமணத்தில் நீங்கள் பாடிய கானா பாடல் அந்த பாடல் பாடிய சூழ்நிலை..பொண்ணும் மாப்பிள்ளையும் தாலிகட்டியபின் பாலும் பழமும் சாப்பிடுவதற்க்காக தனியறைக்கு சென்றபோது அந்த அறையில் எனக்காக நீங்கள் பாடிய 'இராசாத்தி உன்னை எண்ணி இராப்பகலா கண்விழிச்சேன்...இராப்பகலா கண்விழிச்சு இராணி உன்னை கைப்பிடிச்சேன்'...........சுகமான நினைவுகள்!!!......

அன்புடன்
அரவிந்தன்........
 
ஈழநாதன், கானா என்று பேசிவிட்டு ஆசாத்தின் புத்தகமில்லாமலா? கண்டிப்பாக ஆசாத்தின் புத்தகத்திலிருந்தும் கானாக்கள் பதியப்படும்.

அரவிந்தன், ஹூம்ம்ம்ம்... அது ஒரு காலம்.
 
நா.., இப்போது என் கருத்துக்களை எழுத முடியவில்லை. நீங்கள் இன்னும் பாடல்கள் எல்லாம் சேர்த்து ஒரு கலக்கல் ரவுண்டை முடியுங்கள். நான் பிறகு ஒரு பதிவாய் எழுதுகிறேன். நன்றி!
 
இன்னா நெய்னா, நீ கானா ஸிங்கரா. நானு சூப்பரா டேப்ளா (அதாம்மே, டேபிள் தபலா) வாஸிப்பேன். இன்னாமோ இல்லாருக்கும் குப்பத்தாண்ட வந்தா லெமன் டீ வாங்குறேன்னு ப்ராமிஸ் உட்டியே. நானு வரும்போது நாலு கானா பாடு, நானு தாளம்போட்றேன். இன்னா ஸெர்யா :).

படிக்கிற காலத்தில் எல்லாரும் இந்த மாதிரி ரீமிக்ஸ் பாடியிருக்கிறோம் (உள்ளூர் பாடுபொருள்களை வைத்து). ஆனால், முழுக்க முழுக்க மெட்டு, பாட்டு என்று கிரியேட்டிவாய் கொண்டுவந்ததுதான் கானாவின் சிறப்பு என்று தோன்றுகிறது.

புத்தகம் எழுதியாச்சு, பிஹெச்டி... இன்னும் கொஞ்சம் நாள் கழித்து தேமா, புளிமா வரும் அப்புறம் கானாவுக்கு கண்ணம்மாபேட்டைல கருமாதி நடக்கும்.

ஆனால் என்ன, இன்னொரு பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழும். அதுதான் மக்கள் கலைகளின் சிறப்பு. இப்படி இலக்கணம் எழுதியும் சாகடிக்க முடியாதவைதான் செவ்வியல் கலை என்று மார்க்கண்டேய வரம் பெறுகின்றன. குர்மாவும் டேஸ்டுதான், கொழுக்கட்டையும் டேஸ்டுதான்.
 
இன்னா நெய்னா, நீ கானா ஸிங்கரா. நானு சூப்பரா டேப்ளா (அதாம்மே, டேபிள் தபலா) வாஸிப்பேன். இன்னாமோ இல்லாருக்கும் குப்பத்தாண்ட வந்தா லெமன் டீ வாங்குறேன்னு ப்ராமிஸ் உட்டியே. நானு வரும்போது நாலு கானா பாடு, நானு தாளம்போட்றேன். இன்னா ஸெர்யா :).

படிக்கிற காலத்தில் எல்லாரும் இந்த மாதிரி ரீமிக்ஸ் பாடியிருக்கிறோம் (உள்ளூர் பாடுபொருள்களை வைத்து). ஆனால், முழுக்க முழுக்க மெட்டு, பாட்டு என்று கிரியேட்டிவாய் கொண்டுவந்ததுதான் கானாவின் சிறப்பு என்று தோன்றுகிறது.

புத்தகம் எழுதியாச்சு, பிஹெச்டி... இன்னும் கொஞ்சம் நாள் கழித்து தேமா, புளிமா வரும் அப்புறம் கானாவுக்கு கண்ணம்மாபேட்டைல கருமாதி நடக்கும்.

ஆனால் என்ன, இன்னொரு பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழும். அதுதான் மக்கள் கலைகளின் சிறப்பு. இப்படி இலக்கணம் எழுதியும் சாகடிக்க முடியாதவைதான் செவ்வியல் கலை என்று மார்க்கண்டேய வரம் பெறுகின்றன. குர்மாவும் டேஸ்டுதான், கொழுக்கட்டையும் டேஸ்டுதான்.
 
//புத்தகம் எழுதியாச்சு, பிஹெச்டி... இன்னும் கொஞ்சம் நாள் கழித்து தேமா, புளிமா வரும் அப்புறம் கானாவுக்கு கண்ணம்மாபேட்டைல கருமாதி நடக்கும். //
ஆமா, கருமாதி வராம எஸ்கேப் ஆவணுண்ணா தேமா புளிமாவை டபாய்சிகிணு போணம். போகும்!
 
கலக்குங்க காணா பார்டீங்களா!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]