Mar 14, 2005

நட்சத்திரம் அல்லது நட்டு கழண்ட சித்திரம்

இந்த வார நட்சத்திரம் இன்னார் இன்னார் என நீளும் தமிழ்மண பட்டியலில் இன்று நானும் ஒரு நட்சத்திரம். (நேரம் தான்!!) நட்சத்திரம் என்கிற வார்த்தை எழுப்பிய அதிர்வுகள் என்னிடத்தில் ஏராளம். சின்ன வயதில் மொட்டைமாடியில் தூக்கம்வராமல் படுத்திருக்கும்போது, பாட்டி சொன்னதிது. "மேல இருக்கற நட்சத்திரத்தை எண்ணிட்டே வா" பெரும்பாலான சமயங்களில் என்னுடைய எண்ணிக்கை 100-125 தாண்டியிருக்காது. தூங்கிவிட்டிருப்பேன் (ஏய் யார்ப்பா அது, அதுக்குமேல அந்த வயசுல உனக்கு எண்ணத் தெரியாதுன்னு ஊடால புகுந்து கலாய்க்கறது ;-)) எல்லா முனிவர்களும் ஏதேனும் ஒரு நட்சத்திரமாக தான் ஆகியிருப்பார்கள் என்கிற ஒரு வைணவ சம்பிரதாயமுண்டு (உண்டா நா.கண்ணன்?) ஆனாலும் எந்த முனிவரின் நட்சத்திரங்களின் பெயர்களும் இப்போது நினைவில்லை.

ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ராமர்கோயிலுக்கு போய் நட்சத்திரம், கோத்திரம் மற்றும் ஸ்தோஸ்திரங்கள் சொல்லிய காலங்களுண்டு. நான் இப்போது கோவிலுக்கு போய் 13 வருடங்களாகின்றது. படிக்கிற காலத்தில் நட்சத்திரங்கள் பெறும்பாலும் என் பாடபுத்தகங்களில் இருந்தவை தான். தமிழ்நாட்டின் ஜிப்பா கவிஞர்கள் எழுதிய எல்லா நிலா,வானம், மேகம் பற்றிய கவிதைகளிலெல்லாம் 'தேமே'னென்று நட்சத்திரங்கள் "கெளரவ நடிகர்களாக" வந்து போகும். பத்து பன்னிரடாவது படித்த காலத்தில் "உன் முகவானில், பரு நட்சத்திரங்கள்" என உளறிக்கொட்டி கவிதை என்று கிறுக்கி, உலகின் கவிதைகளை அவமதித்த காலங்களில் நட்சத்திரங்கள் எப்போதும் கனவு பிரதேச வாசிகள்.

அக்னி நட்சத்திரம் படம் பார்த்து விட்டு, சேர்ந்தால், மணிரத்னமிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேயாவது என உப்புமா குறிக்கோள்களை எடுத்து, சைக்கிளில், முகவரி விசாரித்து, வீனஸ் காலனி சுற்றிய அனுபங்கள் கொஞ்சமாகவும், ஒரு நிறைவேறா காதலின் சொச்சமாகவும் எப்போதேனும் மணிரத்னம் அலுவலகம் கடக்கும்போது அவ்வப்போது விக்கும். மேமாத அக்னி நட்சத்திர வேளைகளில், ரோட்டில் வரும் கிரிணிப்பழ ஜூஸூக்காக காத்திருந்து அதிகமாக ஐஸ் போட்டு வாங்கி குடித்தது இன்னொரு டிராக். அக்கால கட்டங்களில் அதற்காகவே காத்திருந்து வாங்கிய பத்மாவதியின் மேலும், கீதாலட்சுமியின் மேலும் கொண்ட பப்பி லவ் ஒரு காமெடி டிராக்.

"நட்ஷத்திரா" வைரங்களில் டான்சானிய பாலைவனத்தில் தாந்தீரிக அசைவுகளோடு ஐஸ்வர்யா ராய் வரும் தார்சேம் சிங் இயக்கிய விளம்பரம் ("தி செல்" என்கிற படத்தின் இயக்குநர் அவர். ஜெனிபர் லோபஸ் கதாநாயகி ;-)))

"நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்த்தது" என பாடி ஒரே பாடலில் சரத்குமார் பஸ் முதலாயியாய் வருவது.

"நட்சத்திரம்" என்கிற படம் பார்த்தது

உச்ச நட்சத்திரம், லிட்டில் உச்ச நட்சத்திரம், அல்டிமேட் நட்சத்திரம், சூப்பர் நட்சத்திரம் என தமிழ் சினிமா ஹீரோக்கள், நடிக்காமலேயே சிரிப்பு மூட்டுவது

"நீங்கள்
நட்சத்திரங்களைப் படிக்கக்
கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத
எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை
அறிந்திருப்பீர்கள்" என நீளும் அப்துல் ரகுமானின் கவிதைவரிகள்( பித்தன் - அப்துல்ரகுமான் )

"நட்சத்திரங்களைப் பற்றி
மூன்று விஷயங்கள்
தெரியும் எனக்கு

ஒன்று
சூரியன் இல்லாத இரவுக்கு
நட்சத்திரம் தான் ராஜா

இரண்டு
நட்சத்திரங்களின் தகதகப்பு
போலியானது
உண்மையில் அவை
ஒளி உமிழிகள் மட்டுமல்ல
ஒளி வாங்கிகளும் கூட

மூன்று
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்
சொந்தமாய் உண்டு
அதிகம் அதிகமான
இருண்ட பள்ளங்கள்" என விலாவரியாய் நட்சத்திரங்களை விமர்சிக்கும் கவிஞன் நா.முத்துக்குமாரின் விற்பனை ரகசியங்கள் (பட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்)

சூரியன் மிகப்பெரிய நட்சத்திரம் என்று கேள்விப்பட்டதும், ஏன் எல்லா நட்சத்திரங்ளும் நட்சத்திரவடிவமாக இருக்கும்போது, சூரியன் வட்டமாக இருக்கிறது என அதிபுத்திசாலிதனமாக எழுப்பிய முதல் அறிவியல் கேள்வி

90களில் சென்னையில் விழும் என சொல்லப்பட்டு, வானையே பார்த்து கொண்டிருக்க வைத்த ஹேலி வால் நட்சத்திரம்

எல்லா திருமண மண்டபங்களின் வாயிலும் கண்களை கலவரபடுத்தும், சீரியல் நட்சத்திர பல்புகள்

சமீபத்தில் "திருப்பாச்சி" வருவதற்கு இரண்டு நாளைக்கு முன் சாலிகிராமத்தில் பார்த்த நட்சத்திரம் செய்து அதில் போட்டோ ஒட்டி, ஜிகினாதாள் பளபளக்க, விஜய் அலுவலகத்தின் முன் மேனேஜரின் உத்தரவுக்காக காத்திருக்கும் ரசிக இளைஞர்கள், தெருவெங்கும் பரவியிருந்த வெவ்வேறு அளவுகளில் இருந்த நட்சத்திர வடிவங்கள், பேனர்கள்

என நீளும் என் நட்சத்திர பட்டியல்களில் இன்று இன்னொரு விசயமும் சேர்ந்திருக்கிறது.

நா.கண்ணனின் பதிவினை படித்ததும், ஏற்கனவே படித்த ஜே.கே யை மறுவாசிப்பு செய்ய தோன்றியது. சடாரென பிரித்த பக்கத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் - "எழுதுவது என தொடங்கிவிட்டாலே போலித்தனங்கள் வந்து விடுகிறது. நினைப்பதை எழுத இயலாமல், சொற்களை எழுதிக் கொண்டிருக்கிறோம். அர்த்தங்களின் அர்த்தங்களை உணராமல், வெறும் வார்த்தைகளால் நம் சார்பினை முன்வைக்கின்றோம்"

உண்மையாக தான் தோன்றுகிறது. எதை எழுதுவது. எழுதுவது என்று அமர்ந்த உடனேயே மனம் கணக்கு போட ஆரம்பித்துவிடுகிறது. எப்படி எழுதலாம், என்ன எழுதலாம், என்னென்ன வார்த்தைகளை போடலாம் என நீளும் விவாதத்தில் தோன்றிய எண்ணங்களை எழுதி முடிப்பதற்க்குள் வாழ்வின் எல்லைகள் வந்துவிடுமென்று தோன்றுகிறது. எழுதுதல் என்பதை ஒருவித வேதனையான சந்தோஷம் தானோ என்னவோ.

நட்சத்திரம் தான் நாம் எல்லோரும் , நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் தொடர்ந்து ஏதேனும் ஒரு வ்கையில் எரித்துக்கொண்டிருக்கிறோம். எழுதி தீர்ப்பதின் மூலமாகவும், பேசி களைப்பதின் மூலமாகவும் ஒரு கவர்ச்சியையும், பிரகாசத்தையும் முன்னிறுத்தி, பகலிலும், இரவிலும் மக்களிடேயே வாழ்ந்து வருகிறோம். எல்லாம் தீர்ந்த போன ஒரு நன்நாளில் எரிகல்லாய் மண்ணுக்குள் புதைகிறோம். புதைவதற்குமுன் ஏதேனும் விதைத்து விட்டு போவேன் என்கிற நம்பிக்கையுடன் இந்த வாரத்தை எழுத முயற்சிக்கிறேன்.

எழுதிவிட்டு வெளியில் வந்து பால்கனி வழியே வானத்தை பார்த்தேன். சுத்தமாய், நிர்மலமாய், நட்சத்திரங்கள் ஏதுமின்றி, கருநீலமாய்.

பொது மன்னிப்பு: அருணா சீனிவாசன் என்னை மன்னிக்கவும். பொதுவாக யார் நட்சத்திரமாய் வந்தாலும், அவரின் பதிவினை படித்து பின்னூட்டமிடுவேன். லீவிலிருந்த காரணத்தினால் இட இயலவில்லை, ஆனாலும் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டேன் என்பதை கற்பூரம் ஏற்றி அடித்து சத்தியம் செய்யாமல், விசைப்பலகையில் அடிக்கிறேன்.

குண்டூசி: என் கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் ஆண்டு. நாடகங்கள், கானா பாடல்கள், கல்ச்சுரல் என என்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த நேரம். அனைத்து கல்லூரி நாடக விழாவிற்காக எங்கள் கல்லூரியின் சார்பில் நடந்த விழாவிற்கு வந்து ஒரமாய் அமர்ந்து கொண்டிருந்தவரை எல்லா பேராசிரியர்களும் நலம் விசாரித்தார்கள். அன்றைக்கு இருந்த புகழ் போதையில், அவனென்ன பெரிய மயிரா என கேள்வி எழுப்பி, கடைசி இருக்கையில் அமர்ந்து கானா பாடிக்கொண்டிருந்தோம். திரும்பி பார்த்து ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டார். சில வருடங்களில் பாலுமகேந்திராவின் "கதை நேரத்திலும்" பல டீவி தொடர்களிலும் மிக ஆழமாய் நடித்து பெரும் பெயர் பெற்றிருந்தார். இன்று சின்னத்திரையின் தலை நட்சத்திரமாய் விளங்கும் அவர்: வேணு அரவிந்த்.

Comments:
அடப்பாவி! ஸ்டார்டிங்லேயே இந்தா பிக்கப்பு! ஒருவாரம் என்னா கலக்கி கலக்க போறியோ! நடத்து மாமு!
 
(கிராமத்து கிழவன் கண்களை தட்டியாக மறைத்துக் கொண்டு கண்களை சுருக்கி சிவாஜிதனமான குரலில்) யாரு.... நாராயணன???... நட்சத்திர வெளிச்சத்தில கண்ணு கூசி கண்ணு தெரியல நாராயணா...

தலைவரே! இந்த வாரம் ஒரு கலக்கு கலக்கி விட்டு கடைசியில் குளிர்ச்சியாக ஜில் ஜில் ஜிகர்தண்டா கொடுத்துவிட்டு போங்கள்.
 
எங்கே ஒரு நூறு அடிங்க பார்க்கலாம்.
 
நூறு.... போதுமா ;-) நீங்க வேற ஈழநாதன் நீங்க நூறுன்னு கேட்டவுடனே நமக்கு அயனாவரம் நூர் ஒட்டல் பிரியாணிதான் ஞாபகம் வருது. பொழப்பை கெடுக்காதங்கீய்யா...வேலை செய்யணும் இன்னிக்கு :-)
 
அண்ணாச்சி இந்த வெர்ஜின் மேரி உள்ள போனதுல இருந்து சாப்பிடுரதுக்கு நெரிய எடத்த காட்டுரீங்க. அயனாவரம் நூர் ஹோட்டல் பிரியாணி, நாயர்கடை டீ இத பத்தி தனியா ஒரு தலைப்பு போடுங்கணா?

எவம்ல அங்க..... இந்த வாரம் எனக்கு மதிய சாப்பாடு வேணாம்ல நம்ம ஆளு எழுத்துலயே மீல்ஸ் போடுவாருல....
 
பிரபஞ்சம் நாரண ஸ்வரூபம். சேதன, அசேதன வித்தியாசம் உள்ளே அந்தர்யாமியாக இருக்கும் உங்கள் பேருடையானின் சைத்தன்யம். எனவே நட்சத்திரங்களே ரிஷிகளாகவும், முனிகளாகவும் அவதரிக்க வாய்ப்புண்டு. நாரணனின் சங்கு, சக்கர, கதைகள் ஆழ்வார்களாய் பிறந்தார் போல :-) நட்சத்திர உம். துருவன்.

//"எழுதுவது என தொடங்கிவிட்டாலே போலித்தனங்கள் வந்து விடுகிறது. நினைப்பதை எழுத இயலாமல், சொற்களை எழுதிக் கொண்டிருக்கிறோம். அர்த்தங்களின் அர்த்தங்களை உணராமல், வெறும் வார்த்தைகளால் நம் சார்பினை முன்வைக்கின்றோம்"// இதுதான் எவ்வளவு உண்மை. எழுத உக்காந்ததுமே ஒரு போலி உலகிற்கு, கற்பனை உலகிற்குப் போய்விடுகிறோம். கிட்டக்கியே இருக்கு இதயம், மனசு ஆனா அதை நேரடியா மொழிபெயர்க்கத்தெரியாமல் எவ்வளவு திண்டாடுகிறோம்!

முதல் பதிவே நன்றாய் மினுமினுக்கிறது!
 
நாராயணா நாராயணா, நட்சத்திர நாராயணா!!!!

வர்றப்பவே என்னா ஒரு அட்டகாசம்:-)

ஜமாய்ச்சுட்டீங்க போங்க!!!!

ஆரம்பமே அமர்க்களம்!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
நீங்கள் இந்த வாரம் மட்டுமில்ல எப்பவுமே நட்சத்திரம் தான். இதுக்குத்தானோ லீவு லெட்டர் குடுத்தனியள்?
 
This comment has been removed by a blog administrator.
 
நட்சத்திர நினைவுகளை மினுக்கியபோது எனக்கு "என்னை நட்பு கொண்டிருப்பதால் உங்களுக்கு ஒரு நன்மை உண்டு; நீங்கள் நட்சத்திரத்தைப் பார்க்கும் போது நான் சிரிப்பது உங்களுக்கு நினைவுக்கு வரும்; அப்போது உங்களிடம் மட்டும் சிரிக்கும் நட்சத்திரம் இருக்கும்." என்பானே எக்ஸ்பரியின் 'குட்டி இளவரசன்', அது நினைவுக்கு வந்தது.

நாமெல்லாம் உண்மையில் இந்த உடல்கள் மட்டுமல்ல; உண்மையில் நட்சத்திர தூசுகளே நாமெல்லாம் என்ற அழகான உண்மையைச் சொல்லும் தென் அமெரிக்க பழங்குடியின ஞானம் நினைவுக்கு வந்தது.

நன்றி நாராயணன், உங்கள் வரவு நல்வரவாகுக!
நல்லது;
 
தங்கமணியின் வீட்டுக் கொல்லையிலிருந்து கேட்டால் சினிமாக் கொட்டகை பாட்டு கேட்கும். ஒரு ராத்திரியில் 'நட்சத்திரம்' படத்தில்(?) வரும் 'பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ' பாட்டு கேட்டது நினைவுக்கு வருது!
நல்ல பதிவு!
 
//"எழுதுவது என தொடங்கிவிட்டாலே போலித்தனங்கள் வந்து விடுகிறது. நினைப்பதை எழுத இயலாமல், சொற்களை எழுதிக் கொண்டிருக்கிறோம். அர்த்தங்களின் அர்த்தங்களை உணராமல், வெறும் வார்த்தைகளால் நம் சார்பினை முன்வைக்கின்றோம்"//

தொடங்குவது இப்படியில்லை (இப்படி இருப்பதாகவாவது குறைந்தபட்சம் தோன்றவில்லை) என்றாலும், போகப்போக அப்படித்தான் ஆகிவிடுகிறது.

விடுமுறையில் செய்தது வேலையா அல்லது கேரளா எங்காவது போய் மூலிகை வைத்தியமா? ;-) நல்ல தொடக்கம். கலக்குங்கள்...
 
வாப்பா நாராயணா...
வந்து மறுபடியும் கலக்கு..

இப்படிக்கு,
உருப்படாத நாராயணன் ரசிகர் மன்றம்
53- வது வட்டம்
கொண்டையம்பட்டி,

ரசிகர் மன்ற பதிவு எண்: 352657
 
வசந்த், விஜய், ஈழநாதன், சம்மி, நா.கண்ணன், துளசி கோபால், வசந்தன், தங்கமணி, சுந்தரவடிவேல், கணேசன், மாண்டீ அனைவருக்கும் நன்றி.

தங்கமணி, சிறப்பான நீட்சியாக அமைந்துவிட்டது உங்களின் பின்னூட்டம். கொஞ்சம் உங்களைப்போல் படித்திருந்தால், இன்னமும் ஒழுங்காக எழுதியிருப்பேன் என்று தோன்றுகிறது.

மாண்டீ, சத்தியமாக வேலை செய்தேன் என்பதை மவுஸின்மீதடித்து நிருபிக்கிறேன் ;-)கேரளா போகவில்லை. அத விடுங்கள், எப்போது இந்தியா வருகிறீர்கள், உங்களைப் போன்ற சிந்தனாவாதிகள் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு தட்டி கொண்டிருப்பது வீணெண்று தோன்றுகிறது. சீக்கிரம் கிளம்பி வர வழிய பாருப்பா

வசந்த், சுள்ளான் மாதிரி நாங்க (ப்ளாப்பான்னு கேட்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்).. 100% லோக்கல், ஆல் ஒவர் தமிழ்நாடு கலக்கல்

கணேசன், நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் ரசிகமன்றமெல்லாம் ஒவர்.தனிநபர் துதியினை பரிகசிப்பவன் என்கிற முறையில் எனக்கு அவற்றில் நம்பிக்கையில்லை.உங்களின் அன்புக்கு நன்றி.

பின்னூட்டமிட்டவற்களுக்கான எச்சரிக்கை. இன்னும் வேகமாக நட்டு கழல ஆரம்பித்து விட்டது. ஆகவே அபத்தங்களை வெகு சீக்கிரத்தில் எதிர்பாருங்கள்.
 
:-)))
பாசு சும்மா டமாசுக்குத்தான் சொன்னேன்...நீங்கபாட்டுக்கு ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக்கு என்று கோரிக்கை வைத்து விடாதீர்கள். :-)))
எங்கள் தலைவரின் சொல்லைக் கேட்டு 53- வது வட்டம், கொண்டையம்பட்டி, ரசிகர் மன்றம் கலைக்கப் படுகிறது.
 
கணேசன் என் கொள்கையினை சொன்னேனேயொழிய உங்களை புண்படுத்தும் எண்ணமில்லை. கலைச்சுறுங்க.... நான் 2011-ல கோட்டைய பிடிக்கலாம்னு இருக்கேன், அப்போ உபயோக படுத்திகிறேன் ;-)
 
இரண்டுவார விடுமுறையும், கேரளா மூலிகை மருத்துவமும் எடுத்துவந்தால், உடனே தமிழ்மணத்தில் நட்சத்திரமாகி விடலாமா? அடடா இது முன்கூட்டியே எனக்குத் தெரியாமல்போய்விட்டதே? நானும் இன்றிலிருந்து நான்குவாரம் விடுமுறையில் கோவா கடற்கரைக்குச் செல்லப்போகின்றேன். நான்கு வாரம் என்பதற்கு காரணம், திரும்பிவரும்போது இரட்டை நட்சத்திரமாகிவிடலாம் என்ற நப்பாசைதான் :-).
...........
நரேன், இந்த ஒருவாரத்தில் நிரம்ப எழுத என் வாழ்த்துக்கள்.
 
அடடடடடா. நாராயணன் தாங்களா??? இந்த வார ஹீரோ. நான் கவனிக்காமல் விட்டிட்டனே. ரொம்ப சொறி. வாழ்த்துக்கள். ஏதாவது எழுதிக்கிழியுங்கள் பக்கங்களையும், வாசகர்களையும்.
அது சரி தாங்கள் என்ன ஃபொண்ட் பாவிப்பீர்கள் தாங்கள் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் வாசிக்கமுடியவில்லை
 
வார ஆரம்பமே கலக்கலாகத் துவங்குகிறது. மேலும் கலக்குங்கள்!
 
டிசே, முதலில் என்னோடு சேருவதை நிறுத்துங்கள். நன்றாக கலாய்க்க ஆரம்பித்து விட்டீர்கள். கோவாவுக்கு போனால், இரண்டு டிக்கெட்டாய் பதிவு செய்யுங்கள், ஒரு ஓசி டிரிப் அடிக்கிறேன்.

நன்றி கறுப்பி. நான் உபயோகிப்பது யுனிகோடி பான்டுகள்

நன்றி இராதாகிருஷ்ணன்.
 
நல்ல நட்சத்திர ஆரம்பந்தான்.
வாழ்த்துக்கள். தொடருங்கள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]