Mar 19, 2005

சிண்ட்ரெல்லாவின் செருப்பு

நாளை எழுதலாம் என்று நினைத்திருந்து, அதற்குள், குடும்பத்தோடு, நாளை வெளியே செல்லும் வேலை வந்துவிட்டதால், நாளைக்கான பதிவை இன்றே பதிந்துவிட்டு ஒடிப்போகிறேன். ஒடிப்போய்விட்டது ஒரு வாரம். தமிழ்மணம் குழுவினர் கொடுத்த நட்சத்திர பட்டம் துறப்பதால், நான் புத்தனாகவோ, இளங்கோவடிகளாகவோ ஆக மைக்ரான் அளவுக்குக் கூட வாய்ப்புகளில்லை. ஆனால், துறந்துதான் ஆக வேண்டும். நட்டு கழண்ட சித்திரத்திலிருந்து, இந்த பதிவு வரை, வாசித்து, பின்னூட்டமிட்டு, பதிந்து, அவரவர் பதிவுகளில் பீல்லாகி எழுதி, அதை மற்றவர்கள் படித்து, அவர்கள் பீல்லாகி, அவர்கள் எழுதி என நிகழ்ந்த இந்த வலைப்பதிவு சங்கிலி விளையாட்டை கொஞ்சநாட்கள் நிறுத்தி வைக்கலாம். உருப்படியாய் அவரவர் வேலையை பார்க்கலாம்.

சிண்ட்ரெல்லாவுக்கு கிடைத்த செருப்பு போல (செருப்புன்னு சொல்லலாம்ல..இல்ல அதுக்கு ஒரு தனிபதிவு போடணுமா ;-)) இளவரசர்கள் (அதாங்க வலைப்பதிவாளர்கள்....சரி சரி, இளவரசிகளும் :-)) இருக்குமிடத்தில் நடனமாடிவிட்டு, இன்றோடு, தெரிந்தே செருப்பினை தொலைக்கப்போகிறேன். இனி இளவரசர்கள் கூடும் மாளிகையின் வாசலில் (நம்ம தமிழ்மணம் முகப்பு தான்) என்னை அனுமதிக்க மாட்டார்கள். ஒரமாய் இருந்து பார்த்துவிட்டு போகலாம். ஒரமாய் இருந்தாலும் இந்த மாளிகையினுள் நானும் ஒருவாரம் இருந்தேன் என்கிற பந்தாவோடு கொஞ்சம் மண்டையில் ஈகோ ஏற்றி சுற்றலாம்.

பயத்தோடுதான் ஆரம்பித்தேன், ஏனெனில் எனக்கு முன்பு நட்சத்திரமாய் இருந்தவர்கள் அனைவருமே வலைப்பதிவுகளில் நெடுந்தொலைவு பயணித்தவர்கள். வந்தவர்களில் நான் தான் ஜூனியர் என்று நினைக்கிறேன். வெறும் வெள்ளையான நோட் பேடு பக்கம் என்னளவில் மிக அச்சுறுத்தும் விஷயம். அந்த பக்கத்தில் என்ன எழுதுவது என்பது அதைவிட பயமுறுத்தும் விஷயம். நடுஇரவில் மெல்லியதாய் திறந்து மூடும் ஜன்னல்களின் சத்தங்களில், சடாலென வயிற்றுக்குளூறும் அமிலம் போல ஒவ்வொரு பதிவும் குலுங்கும் அமிலத்தினூடேயே அதிகாலைகளில் எழுதியிருக்கிறேன். வேலைப் பளுவுக்கிடையில் நான் கஷ்டப்பட்டு எழுதினேன் என்றெல்லாம் பில்டப் கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும், எழுதுவதற்கு அசாத்திய மனபலமும், யோசனைகளும், கோர்வையான மொழியும், உடல் உழைப்பும் வேண்டுமென்பதை மட்டும் தெரிந்து கொண்டேன்.

சில சமயங்களில் கிரிக்கெட் ஆடும்போது பந்து பொறுக்கி போடும் சிறுவர்கள் திடீரென அசாதாரணமாய் அசத்துவார்கள், இதனால், ஆடியவர்களுக்கு நன்றாக ஆட தெரியாது என்று பொருளல்ல, அந்த சிறுவனுக்கு அன்றைக்கு நேரம் அவ்வளவுதான். அதே போல்தான் நானும். இந்த பதிவினை ஆரம்பித்து இன்னமும் முழுதாய் 100 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் ஏதோ சில நல்ல விஷயங்களை பகிர்ந்திருக்கின்றேன் என்பது பின்னூட்டங்களின் வழியே தெரிகிறது. எழுதிய அனைவருக்கும் என் வணக்கங்கள். இதைத் தாண்டி, தனி மடலில் நான் பதிந்த கெட்டவார்த்தைகளை விட மாறாக இன்னும் ஆழமான கெட்டவார்த்தைகளின் மூலம் என்னை "வாழ்த்திய" புண்ணியவான்களுக்கும் தனிப்பட்ட முறையில் வந்தனங்கள்.

அடிப்படையில் நான் ஒரு சோம்பேறி. நிறைய நண்பர்களைப் போன்று விரிவான வாசிப்பும், சங்க இலக்கிய பரிச்சயமும், சம கால இலக்கியத்தின் வீச்சும், ஆங்கில இலக்கியமும் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. தலையணை சைசு புத்தகங்களில் நான் செய்தது புக் கிரிக்கெட் விளையாடியது தானேயொழிய வேறெதுவும் கிடையாது. எனக்கு தெய்வம் கூகிள்தான். மதங்களையும், சாதிகளையும், படிப்பினையும், அறிவினையும் விட சக மனிதர்களை, மனிதர்களாக பார்த்தல் தான் மிக முக்கியம் என்பது தான் என் எழுத்தின் அடிப்படையாக கொண்டிருக்கிறேன். எல்லா எழுத்துகளும் மனித விடுதலை நோக்கியே, எல்லா தத்துவங்களும் அதைதான் கூறுகின்றன என லேட்டாக புரிகிறது. மொத்தமாக எழுதியதில் "கெட்ட வார்த்தைகளின் அரசியல்" தவிர்த்து மற்றெதுவும் எவ்வித முன்னேற்பாடுகளின்றி தோன்றியதை எழுதியது தான். ஏதேனும் கருத்துப்பிழைகள் இருந்திருந்தால், தாராளமாய் குட்டலாம். நானும் குனிகிறேன். எழுதியது ஏதாவது ஒரு வகையில் உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிப்பீர்களாக. என்னிடத்தில் எவ்விதமான மருத்துவ ஆலோசனைகளோ, லேகிய வகைகளோ கிடையாது.

இனி வரப்போகும் நட்சத்திர பதிவாளர்களுக்கு என் வாழ்த்துக்களைக் கூறி இந்தப் பதிவோடு சந்தோஷமாய் என் செருப்பினை கழற்றுகிறேன். என்ன காரணத்தினால் என்னை தமிழ்மணம் குழுவினர் நட்சத்திரமாய் தேர்ந்தெடுத்தார்கள் என்று இதுவரைக்கும் யோசித்துப்பார்த்தேன் ஒன்றும் புலப்படவில்லை.

இத்தனை நாளும் படித்ததற்கும், பின்னூட்டமிட்டதற்கும் நன்றி சொல்வது, தமிழ் சினிமாவில் 7 குண்டுகள் பாய்ந்தும் கதாநாயகன் இறக்காமல் கிளைமாக்சில் 3 பக்க A4 தாளின் வசனம் பேசுவதற்கு இணையான கிளிஷேவாக தெரிந்தாலும் என்ன செய்வது, நன்றி மறப்பது நன்றன்று. அதனால் நன்றிகள் - உங்களுக்கும், தமிழ்மணம் குழுவினர்களுக்கும்.

போவதற்கு முன், ஆண்களுக்கு வெட்கம் உண்டா, அதெல்லாம் இருக்கிறதா எனக் கேட்ட தோழிக்காக,

உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்
(நா.முத்துக்குமார்)

வரட்டா..........

Comments:
:) Thanks!
 
கலக்குங்க நாராயணன்!!!..குடும்பத்தோட எங்க திருப்பதிக்கா அல்லது உங்கள் தங்கை மகள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்க்கா....

அன்புடன்
 
great week narain. thanks

arul
 
நண்பரே இவ்வாரம் சிறப்பானதாய் பலரும் பேசத் துணியாத விடயங்களை பேசியதாய் அமைந்தது நன்றி.
 
மிக அருமையான வாரம், நாராயணன்.

பல பேசாப்பொருள்கள் பேசப்பட்டன, ஏசப்பட்டன.

எல்லாவற்றையும் மீறி, பலரை புதுக்கருத்துக்களில் சிந்திக்கவைத்தீர் - அதற்கு நன்றி.

இதே "ஃபார்மில்" தொடருங்கள்.
 
நாராயணன், மீண்டும் ஒரு வாரம் திருவாரமா போச்சு! எனக்குத்தான் ஒழுங்கா மறுமொழிய கொடுத்து வைக்கவில்லை! துருவ நட்சத்திரமா தொடர வாழ்துக்கள்!
 
நன்றாக எழுதிகிறீர்கள் நாரயண். என்ன எழுதுவது என்று யோசித்து நட்சத்திரம் பற்றியே எழுதினீர்களே. அது உங்கள் சாமர்த்தியம் :-) உங்களின் இந்தியா ஒளிர்கிறது வாதங்களையும் கவனித்தேன். நாம் பேசுவதெல்லாம் கிட்டதட்ட ஒரேவிதம்தான். நம் கவலைகளும் ஓரளவு ஒரே ரகம்தான். அப்புறம் குண்டூசியில் வாழ்தலின் அர்த்தத்தைத் தேடினீர்களே அது உங்கள் எண்ணப்போக்கையும் காண்பிக்கிறது. சீரிய என்ணங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து பதிந்து கொண்டிருங்கள் :-)

அருணா.
 
Dear Narayanan,You are Best.
The ability to turn to the new presupposes the ability to free oneself from the old.He who wants to read the future must leaf through the Narayanan Urupadathuuu.
Best Regards
P.V.Sri Rangan
 
கலக்குங்க நாராயணன்!!!..
 
நாராயணன்,

நல்ல விறுவிறுப்பான வாரம். என்ன சொல்வதுன்னே தெரியாம எட்டி நின்னு வேடிக்கை பாத்ததோட நம்ம வேலை முடிஞ்சுபோச்சு. இந்த 4-5 வாரமா நட்சத்திரங்க கலக்கின கலக்கலில் இனி வரும் ஆசாமிகளுக்கு சிரம காலம்தான். இதுக்காகவாவது அடுத்து ஒரு டம்மியைக் கொண்டுவரணும்:-)

நன்றி.
-காசி
 
அதெல்லாம் சரி காசி, நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் நீங்க பதில் சொல்ல. என்ன காரணத்தினால் என்னை போய் நட்சத்திரமாய் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது?
 
நரேன், சுவாரசியமாய் ஒரு வாரம் உங்களால் கழிந்துபோயிற்று. அதற்கு நன்றி.
மாண்ட்ரீஸர் சொன்னமாதிரி இது ஒரு நல்ல cocktail வாரமென்றாலும், இந்த cocktail partyஐ இறுதிநாளன்று பெரிதாய் கொண்டாட நான், Las Vegas (மாண்ட்ரீஸர் நீங்களும் வருகின்றீர்களா?) சென்று கொண்டாடுவதாய் முடிவுசெய்துள்ளேன். அதற்கான செலவை நரேன், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதைச் சொல்ல எல்லாம் தேவையில்லை (சொல்லாமற் செய்வர் பெரியர்). எனது Swiss bank, account number தனிமெயிலில் அனுப்பிவிடுகின்றேன். பணத்தை அங்கே deposit செய்துவிடவும் (depositடா மவனே, நீ deposeதான் என்று நீங்கள் பற்களை நறநற என்று கடிப்பதுவும் புரிகிறது :-) ).
 
நாரா,

மேலோட்டமாக, இந்த வாரத்தில் நீங்கள் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் எல்லாமே பரபரப்பாக, கவன ஈர்ப்புக்காக எழுதப்பட்டது போல தெரிந்தாலும், அதை ஆழமாக எழுதியதால், நிறைய புதிதாக தெரிந்து கொள்ள முடிந்தது. சிலுக்கு பதிவுக்கான என் எதிர்வினை எழுதி, எழுதி பப்ளீஷ் பண்ண முயற்சி செய்தால்ம் ப்ளாக்கர் தொந்தரவு கொடுத்துக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஎ இருக்கிறது.
ஆனால் கண்டிப்பாக என் கருத்தை - ஒரு பாமரனின் பார்வையில் இருந்து
பதிய உத்தேசம் உள்ளது.

பார்ப்போம்.

தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துகள்.
 
மறுபடி, நல்ல பதிவுகள், நாராயணன்....

டிஜே: // Las Vegas (மாண்ட்ரீஸர் நீங்களும் வருகின்றீர்களா?) சென்று கொண்டாடுவதாய் முடிவுசெய்துள்ளேன்.//
Fear and loathing in Las Vegas படம் ரேஞ்சுக்கு என்றால் ஓக்கே! ;-)
 
மிக நன்றாக இருந்தது உங்க வாரம். கதை, கவிதை, அரட்டை, சினிமா விமர்சனம், சொந்த வாழ்க்கைக் குறிப்புகள்னு, யாரையும் எதுக்கும் புண்படுத்தாம, ஒரு லெவலுக்கு மேற்பட்ட விஷயங்களைப் பேசாமல், பத்திருபது பேர் துவங்கின வலைப்பதிவு வட்டம், கொஞ்சம் கொஞ்சமா வயசுக்கு வந்துகிட்டு இருக்குதுங்கறதுக்கு உங்க பதிவுகள் நல்ல உதாரணம். இவ்வகைச் சிந்தனைகளுக்கு பலத்த வரவேற்பும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது, சந்தோஷமாகவும் இருக்கிறது. விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
 
இங்கேயும் செருப்பா? :-)

நாராயணன், உங்கள் பதிவுகள் மூலம் நல்ல சிந்தனைகளை வெளிக்கொணர்ந்தீர்கள். அருமை. உங்கள் சேவை தொடரட்டும்.

//மதங்களையும், சாதிகளையும், படிப்பினையும், அறிவினையும் விட சக மனிதர்களை, மனிதர்களாக பார்த்தல் தான் மிக முக்கியம் என்பது தான் என் எழுத்தின் அடிப்படையாக கொண்டிருக்கிறேன். எல்லா எழுத்துகளும் மனித விடுதலை நோக்கியே, எல்லா தத்துவங்களும் அதைதான் கூறுகின்றன என லேட்டாக புரிகிறது. //

எல்லாரும் சகமனிதர்களை மனிதனாக பார்க்கும் காலமும் நெருங்குகிறது. சாதி மதம் என்ற அடையாங்களை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வெளியே வரட்டும். அவனுடைய அடுத்த தலைமுறையில் அவைகள் அறவே இல்லாமல் ஒழியட்டும்.

தொடர்ந்து கலக்குங்கள் நாராயணன். வாழ்த்துக்கள்.

//டும்பத்தோடு, நாளை வெளியே செல்லும் வேலை வந்துவிட்டதால், நாளைக்கான பதிவை இன்றே பதிந்துவிட்டு ஒடிப்போகிறேன்.//

என்ன பொண்ணு பார்க்கவா? இத பார்த்து/கேட்டு டெண்ஷன் ஆகிறாதீங்க. டேக் இட் ஈஸி.
 
இந்த வாரம் நன்றாக இருந்தது நாராயணன்.
பொதுவா யாரும் தொடச் சங்கடப்படும் விசயங்களை தொட்டுச் சென்றுள்ளீர்கள்.
அன்புடன்,
கணேசன்
 
//இந்த 4-5 வாரமா நட்சத்திரங்க கலக்கின கலக்கலில் இனி வரும் ஆசாமிகளுக்கு சிரம காலம்தான். இதுக்காகவாவது அடுத்து ஒரு டம்மியைக் கொண்டுவரணும்//

அடுத்து வரப்போறது டம்மியில்லை என்று சொல்லிக்கொள்கிறேன். ;)
 
//இவ்வகைச் சிந்தனைகளுக்கு பலத்த வரவேற்பும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது, சந்தோஷமாகவும் இருக்கிறது. விடாதீர்கள்.// இதைத்தான் முக்கியமாக நினைக்கிறேன்.
இந்த கருத்துக்கள் "வயலும் வாழ்வும்" போல் பரவுவதுதான் / பேசப்படவேண்டும் என்பதுதான் ஒரு கனவாக உள்ளது. ஜாலக்கற்ற வாழ்வைப் பேசுவது ஒரு திருப்தியை தருகிறது. ஒரு குழந்தை கொஞ்சுவது போல்.

சூ... நாநா (சூப்பர் நாநா ந்னு சொன்னேன்)
 
//ஒரு குழந்தை கொஞ்சுவது போல்.
// ஒரு குழந்தையை கொஞ்சுவது போல - என்றிருக்கவேண்டும்

மதி, யாரந்த மம்மி? :)
 
அவ்வள தான் கேம் ஒவர். எல்லாரும் அவங்கவங்க வேலயை இனிமேல் உருப்படியாக பார்க்கலாம். ஒரு இரண்டு முணு நாள் ரெஸ்ட், அதுமில்லாம, செம்மை இண்ட்ரஸ்டிங்கான இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச், செவ்வாய்க்கு மேல வெறும்வாய்க்கு மெல்ல ஏதாவது அவல் குடுக்க பார்க்கிறேன் ;-)
 
பொதுவாக அனைவரும் பேச/எழுதத் தயங்கும் விஷயங்களை நன்றாகச் சரள நடையில் எழுதியிருந்தீர்கள் (சிலவற்றை இன்றுதான் படித்தேன்). நிஜ நட்சத்திரத்திற்கான ஜொலிப்பு! தொடர்ந்து ஜொலிக்க வாழ்த்துகள்!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]