Mar 23, 2005

ஏமாறும் பெண்களும், எதிரொலிகளும்

பத்மா அரவிந்தின் பதிவில் எழுதியிருந்த விஷயம் காலையிலிருந்து உறுத்திக் கொண்டேயிருந்தது. இதேப் போல சில நிகழ்வுகளை நானும் கேட்டிருக்கிறேன். என் தூரத்து சொந்தகாரரின் மகளும் இதேப்போன்று அயல்நாட்டு மாப்பிள்ளையை தேடி கட்டிக்கொடுத்து, மாப்பிள்ளை அயல்நாட்டில் வேலையிலழந்ததால், பெண்ணை சென்னைக்கு அனுப்பி, அவர் அங்கிருந்தே வேலை தேடுவதாக சொல்லி, பல மாதங்கள் ஓடி, பின் அங்கிருக்கும் ஒரு கறுப்பின பெண்மணியை கல்யாணம் செய்து கொண்டுவிட்டு செட்டிலாகிவிட்டார். என் சொந்தகாரரின் மகள் விவாகரத்தினை எதிர்நோக்கி, சென்னையில் இருக்கிறார். ஆக, ஜமீன் பல்லாவரம்-மீனம்பாக்கம்-சிகாகோ-மீனம்பாக்கம்-ஜமீன் பல்லாவரம் என ரிடர்ன் டிக்கெட் எடுத்தது போலாகிவிட்டது. அவரும், அவரின் மகளும், எந்த நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. ஒரு சமூக தீண்டாமை சார்ந்த புறக்கணிப்பில் பலிகடாவாக ஆக்கப்பட்டு விட்டது அவர்களின் குடும்பம். இத்தனைக்கும் அந்த பெண் M.Sc படித்தவர். அவருக்கே இந்த நிலைமை. இந்த நிலையில் பத்மா அரவிந்த் குறிப்பிட்டிருந்த பெண்ணின் நிலைமை மிக பரிதாபகரமானதாகதான் இருக்கும்.

பத்மாஅரவிந்தின் பதிவில், திருமணம் என்பதே தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல ஒரு சடங்காகிவிட்டது என எழுதியிருந்தேன். இனப்பெருக்கத்தினை, வம்ச விருத்தியை தாண்டி, திருமண பந்தத்தின் தேவையென்ன ? கணவன், மனைவி என்பவர்களின் உறவு எத்தகைய வரையறைகளில் முன்நிற்கிறது ? அடிப்படை விஷயங்களான புரிதலும், பகிர்ந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருக்கிறது என்று தான் தோன்றுகிறது. உண்மையில் ஆழ்ந்து யோசித்தால், திருமணம் என்கிற பந்தத்தின் அத்தியாவசியத்தின் அடித்தளத்தை செப்பனிடும் நேரம் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. தன் மனைவியை மதிக்க தெரியாத, உணர்வுகளை புரிந்துக்கொள்ளாத கணவர்களும், ஊர் உலகம் தெரியாது கணவனின் கட்டுப்பாட்டில் வாழ்வினை நடத்தும் பெண்களும், கணவனை விட்டால் வேறு கதியில்லாமல் இருக்கும் பெண்களையும் பார்க்கும்போதெல்லாம், திருமணம் என்பது உரிமமிட்ட விபச்சாரமோ (licensed prostitution) என்று கூட கோவம் வருகிறது. இது திருமணத்தினை கேள்விக் குறியாக்கும் முயற்சியல்ல, மாறாக, திருமணம் என்கிற பந்தத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ள நமது சமூகத்தின் கோரமான நோய்முகம்.

இதில் ஏமாற்றப்படுவது பெண்கள் தான். மிக அபூர்வமாக ஆண்கள். கலாச்சாரம், பண்பாடு, மரியாதை போன்ற மேம்பூச்சுக்களை மையமாக வைத்து இன்னமும் ஆழமாக பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இன்னமும் எத்தனை காலம், தமிழ் பண்பாடு உலகின் தலைசிறந்த பண்பாடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்று அமெரிக்க மாப்பிள்ளைகளும், டாலர்களின் பளபளப்பும், திராம்களின் மினுமினுப்பும் நிறைய பெற்றோர்களின் கண்களை கூசச்செய்து ஏமாற்றுகின்றன. இவ்வாறாக பண்டமாற்று முறையில் அனுப்பப்படும் பெண்கள் பெரும்பாலும், ஊர் உலகமறியாத அப்பாவி பெண்களாகவே இருக்கிறார்கள். மேலும், அயல் நாடுகளிலேயே, கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருப்பது தெரிந்தாலும், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிஜங்கள் பற்றிய சில அறிமுகங்கள் மனதினை கனமாக்குகிறது. தன் குடும்ப கஷ்டத்திற்காக கல்யாணம் செய்து கொண்டு போகும் பெண்களின் வாழ்வின் நிஜ சரிதங்கள், கண்டிப்பாக கண்ணீரால் நிரம்பியிருக்கும். இன்னமும், விவாகரத்து செய்வதினைக் கூட சமூக பெரும்குற்றமாக பார்க்கும் சூழலில் தான் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறான பெண்களின் முன்னாலும், பின்னாலும் பேசப்படும் சொற்கள் அவலமும், குரூரமும் நிரம்பியதாக தான் உள்ளது.

திருமணம், குடும்பம் போன்ற நிறுவப்பட்ட அமைப்புகளுக்கு ஈடாக நம்மால் இணை அமைப்புகளை நிறுவ முடியவில்லை. இதனாலேயே, கலாச்சாரம் என்கிற ஒற்றைத்தன்மையின் அபத்தத்தினால், பெண்கள் காவு வாங்கப்படுகிறார்கள். லிவ்-இன் போன்ற அமைப்புகளில் நம்மால் முழுவதுமாய் ஒன்ற முடிவதில்லை. குடும்பம் என்பதை ஒரு ஆண் சர்வாதிகார அமைப்பாக இருக்குமிடத்தில், குடும்பத்தினுள், பெண்களின் நிலையினை குறித்து எழும் எல்லா வாதங்களுமே ஏமாற்றுவாதங்கள். அவ்வாறிருக்க, இன்னமும், ஏன் இதனை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் கேள்வியாக எழுகிறது. ஆனாலும், திருமணமல்லாத மாற்று ஏற்பாடுகளின் சமூக விஸ்தரிப்புகள் மிக குறைவாக உள்ள சூழலில், மாற்று அமைப்பினை அங்கீகரிக்காத ஒரு அமைப்பில், என்ன முக்கியமான காரணங்களினை வைத்து திருமணம், குடும்பம் போன்ற அமைப்புகளை தவிர்த்த ஒரு எதிர் அமைப்பை நிறுவ இயலும் என்பது வினா அளவிலேயே நிற்கிற விஷயம்.
இவ்வாறாக உலகமுழுக்க இருக்கும் தமிழ்பெண்களின் கதி என்னவாக இருக்கும் ?
இவர்களின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லும் வழிமுறைகள் உள்ளனவா?
இவர்களுக்கான கவுன்சலிங் தர தேர்ந்த ஆட்கள் உள்ளார்களா ?
பாஸ்போர்டினை அடகு வைத்து கணவனோடு குடும்பம் நடத்தும் பெண்கள், அந்நரகத்திலிருந்து மீள வழிவகைகள் இருக்கிறதா ?
அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலோ உள்ள தமிழ்ச்சங்கங்கள் / தமிழ் கூட்டமைப்புகளுக்கு இவற்றின் தீவிரம் பற்றிய புரிதல் உள்ளதா ?
ஏதேனும் வழிகளில் இனி வரும் காலங்களில் இவ்வாறான பெண்கள், பண்டங்களாக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தவிர்க்க முறைகளேனும் இருக்கிறதா ?
கொடுஞ்செயல் புரிந்து 'தள்ளி வைக்கப்பட்ட' பெண்களினை அயல் நாடுகளிலேயே தங்க வைக்கும், வாழ்வினை எதிர்நோக்கும் வண்ணம் செய்யும் செயற்பாடுகள் பற்றிய விஷயங்கள் எங்கு கிடைக்கும் ?
தமிழ்நாட்டிலிருந்து அயல்நாடுகளில் யாரேனும் பெண் கொடுத்தால், எங்கேயாவது மாப்பிள்ளைகளைப் பற்றி குறுக்கு விசாரணைகள், கிராஸ் செக்கிங் செய்ய இயலுமா ?
அதற்கு ஏதேனும் அமைப்புகள் உள்ளதா ?
அடக்கிவைக்கப்பட்ட கண்ணீரின் பிரவாகம் போல நீண்டுக் கொண்டே போகும் கேள்விகள், விடைகள் இல்லாமல். நாம் கூடி ஏதேனும் செய்ய இயலுமா என்பதை யோசிப்பதை தவிர ஆறுதல்கள் பயனளிக்காது என்றே தோன்றுகிறது. இதையும் தாண்டி, திருமணம் என்கிற பந்தத்தின் மீது எனக்கிருக்கிற நம்பிக்கைகளும் க(கு)ரைந்துக் கொண்டே இருக்கின்றன.

Comments:
உருப்படாதது என்று விட்டு உருப்படியா எழுதும் சிலரின் தாங்களும் ஒருவர். இப்படியான தலைப்பு அலசப்படும் போது நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் போய் விடுவேன். கோவம் உச்சிக்கு மேல் போய் விடும். எனக்கு அடக்கும் ஆண்களிலும் பார்க்க அடங்கிப் போகும் பெண்கள் மேல்தால் கோபம் அதிகமாக வருகின்றது. எவ்வளவு காலத்திற்குத்தான் பெண்கள் மென்மையானவர்கள் அவர்களால் தனித்து ஒன்றும் செய்ய முடியாது என்று புலுடா விட்டுக்கொண்டு அடக்கி ஆளும் ஆண்களுக்குச் சேவை செய்துகொண்டிருக்கப் போகின்றார்கள். எனக்குள் சந்தேகம் வருவதுண்டு பெண்கள் அடக்கப்படுதலை விரும்புகின்றார்களோ என்று. இந்தியா இலங்கை போன்ற நாடுகளை விடுங்கள் புலம்பெயர்ந்த பின்னரும் (வாயில் எனக்குக் கெட்ட வார்த்தை வருகின்றது) என்னத்துக்கு அவர் அவர் எண்டு வழிஞ்சு கொண்டு அடங்கிப் போய் சேவை செய்து கிடக்கீனம் என்று தெரியேலை. மொழி தெரியாவிட்டாலும் தொழிற்சாலைகளில் வேலை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தன்மானத்தோட வாழலாம் தானே. மற்றாக்கள் சமூகத்துக்கு (வீட்டுக்க அடிவாங்கி அழுதழுது கொண்டு) மனுசனோட வெட்டிக் கிழிக்கிற மாதிரி வெளியில காட்டிக்கொண்டு ஏனிந்த நடிப்பு.. எதற்காக தமது வாழ்க்கையை இப்படி சீரழிக்கின்றார்கள். கனடாவில் எத்தனை ஈழத்துத் தமிழ் பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் தெரியுமா? ஆண்கள் தமது சுகமான வாழ்க்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. பெண்கள் தான் சுதந்திரமாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும். சட்டம் முழுவதும் பெண்களுக்குச் சார்பாக இருக்கிறது. இருந்தும் ஏன் பெண்களுக்கு இந்தக் கோழைத்தனம் புரியவில்லை. அடங்கிக் கிடந்து அடிபடுவார்கள் இல்லையேல் தற்கொலை செய்து கொள்வார்கள் (வருது வாயில)
 
அமெரிக்காவில் பெண்கள் காவலரிடம் புகார் கொடுத்தால் உடனடியாக அவர்கள் விரும்பினால், ஆண்களை வீட்டினுள் நுழை ய அனுமதி மறுக்க படும். பெண்கள் ஒரு விடுதியில் நிலையான இடம் கிடைக்கும் வரை தங்க அனுமதி உண்டு. இதற்கும் மேல் பணி புரியும் பெண்கள் அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ சம்பந்தப்பட்ட ஆ ண் தொலைபேசவோ, சந்திக்கவோ சட்ட ரீதியாக அனுமதி பெறுவதும் மிக எளிது (சி ல மணி நேரம்). ஆனாலும் பெண்கள் தங்களுடைய பெற்றோர் என்ன சொல்வாரோ, சமுக்கம் என்ன சொல்வாரோ என்ற போலித்தனத்தில் அடிமையாக வாழ்ந்தாலும் பரவாயில்லை எ ன வாழ்கின்றனர்.
புகார் கொடுத்தால், எந்ததனை நாள், முறை வேண்டுமானலும் பெண்கள் கவுன்சிலிங் பெற முடியும். அ ரசு ஒரு கவுன்சிலிங்கிற்கு 90$ நேரடியாக நிறுவனங்களுக்கு வழங்குகிறது. குழந்தைகளுக்கும் இது போல வசதியுண்டு. ஆனால் பெண்கள் புகார் தந்தால் தானே. இதற்கு அவர்கள் அவர்கல் வசிக்கும் ஊரில் உள்ள பொதுநலத்துறைக்கு தொலைபேசினாலே போதும்.
 
//திருமணம் என்பது உரிமமிட்ட விபச்சாரமோ // பல நேரங்களில் அது நிதர்சனமான உண்மையே. கல்யாணக் கடனை அடைக்கவேண்டுமே என்பதற்காக மட்டும் ஒரு திருமண உறவை நீடிப்பது நீங்கள் சொன்ன மாதிரியே தான். உண்மையில் இப்படித்தான் நடக்கிறது. கடத்தி வரப்பட்ட சிறுமிகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்று விடுவார்கள். அந்தக் கடனை அடைக்கும் வரை அவள் அங்கு உழைக்க வேண்டும் (யாருடைய கடனை யார் அடைப்பது? )

இன்னொரு விஷயம். விருப்பமில்லாமல் எந்த சுகமும் பெறாமல் கட்டிக் கொண்டதாற்க்காக மட்டுமே சகித்துக் கொள்வதும் ஒரு வகை விபச்சாரம் தானே?

இப்படி ஒன்றூ முடியாமலிருப்பதற்கு நம்மனவிலங்கு தான் காரணமேதவிர வேறில்லை. இந்தியாவில் இது நடக்காமலிருக்கலாம். இந்தியர்களிடம் இல்லை எனச் சொல்லமுடியாது. எனக்குத் தெரிந்த சிலர் இருக்கிறார்கள். அவர்கள் திருமணம் என்கிற அமைப்பில் பெயரளவில் ஒட்டிக்கொண்டிருக்கும் பலரை விட அன்பாகவும், சிறப்பாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள்.

--வினோபா (http://parisal.weblogs.us)
 
//பெண்கள் தங்களுடைய பெற்றோர் என்ன சொல்வாரோ, சமுக்கம் என்ன சொல்வாரோ என்ற போலித்தனத்தில் அடிமையாக வாழ்ந்தாலும் பரவாயில்லை என வாழ்கின்றனர்.// இந்த அவல நிலையும் பிரச்சனைகள் தொடர்வதற்கு ஒரு காரணம்.
 
This comment has been removed by a blog administrator.
 
//இவர்களுக்கான கவுன்சலிங் தர தேர்ந்த ஆட்கள் உள்ளார்களா ? //
தேர்ந்த ஆட்கள் இருப்பார்கள். ஆனாலும் காலங் காலமாய் ஊறின "வீட்டு விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது" என்கிற மனப்பாங்கு தான் இவர்களைக் கட்டுப்படுத்தும். அப்படியே போனாலும் தீர்வாக இந்தப்பெண்கள் எதிர்பார்ப்பது கணவன் திருந்துவதை/ குடும்பம் ஒரு மகிழ்ச்சியானதொன்றாக மீண்டு வருவதையே. மீண்டு வரக்கூடியதான ஒரு சூழ்நிலையில் இருந்தால் , இதை ஏற்கலாம், விஷயம் கை மீறிப் போனபின்? திருமணம் செய்யாத பெண்ணைப் போலவே பிரிந்து வாழும் பெண்ணும் இன்னும் எங்கள் சமூகத்தில் ஒரு taboo தான். இந்தப்பயமே(சமூகம் ஒதுக்குமே என்கிற பயமே) சுதந்திரமாக முடிவெடுப்பதைப் பாதிக்கும். இப்படியே பயந்து பயந்து 98% பேர் மனவழுத்தத்துக்குள்ளாகி குடும்பத்தால்/சமூகத்தால் புரிந்து கொள்ளப்படாமல் தனித்துப் போய் அழகாக வாழ வேண்டிய வாழ்க்கையை கடனேயென்று கழிப்பார்கள். சரியான தீர்வுகளை சரியான நேரத்தில் எடுக்கும் தைரியம் வேண்டும். அதற்கு ஆரம்பம் அம்மாவும் அப்பாவும். , திருமணமே வாழ்க்கை என்கிற போதனையை நிற்பாட்டி சொந்தக்காலில் நிற்க தைரியமூட்ட வேண்டும்.
 
//அவரும், அவரின் மகளும், எந்த நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. ஒரு சமூக தீண்டாமை சார்ந்த புறக்கணிப்பில் பலிகடாவாக ஆக்கப்பட்டு விட்டது அவர்களின் குடும்பம்.//

இந்த மாதிரி தன் குடும்பத்தை யாரும் பேசி விடக்கூடாது என்பதற்காகவே 100ல் 75சதவிகித பெண்கள் பல்லை கடித்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.
கல்லானாலும் புருஷன் என்பதுதான் இந்திய திருமண பந்தத்தின் அடி நாதம். நீங்கள் சொல்வது போல் திருமண பந்தத்தை licensed prostitution & exploitataion என்று கூருவது தான் பொருந்தும்.

இந்த வித கொடுமை பெண்களுக்கு மட்டும் தான் என்று எண்ணினால் அது தவறு. பெண்களின் தயவோடு வெளிநாடு வந்துள்ள அநேக ஆண்களின் நிலையும் பரிதாபம்தான்.
 
தேன் துளியின் பதிவையும், நாராயணனின் பதிவையும் படித்தபோது சிலவற்றை எழுதத் தோன்றியது..

திருமணமோ அல்லது வேறந்த உறவோ அதில் சம்பந்தப்பட்டிருப்பவர்களின் நலனைமிஞ்சி தனக்கென தனித்தகுதியையும், புனிதத்தையும்கொண்டிருக்கக்கூடாது. முற்றும் முழுதாக அதில் சம்பந்தப்பட்டவர்களின் நலனே பிரதானமாக இருக்கவேண்டும். அப்படி இருவரும் தமது நலன்களை அடுத்தவரை பலிகொடுக்காமல் பாதுகாத்துக்கொள்ள ஒரு அடிப்படை நேர்மையும், சுயமரியாதையும் அவ்விருவர்களுக்கும் வேண்டும். இவ்விரண்டும் (நேர்மையும், சுயமரியாதையும்) திருமணம் புனிதமானது; குடும்பம் கோயில், கணவன் தெய்வம், கற்புள்ள மனைவி பெருந்தெய்வம் போன்ற கருத்தாக்கங்களால் முற்றாக அழிக்கப்படுகிறது. இதனால் அடிமைப்படுத்தலும், அடிமைப்படுவதும் சாத்தியமாகிறது. இதில் ஆண்களின் நலன்கள் பூரணமாகக் காக்கப்படுவதால் அவன் இந்த சமூக விழுமியங்களை எப்பாடுபட்டாவது காக்கமுனைவது இயல்பு. இக்கருத்தாக்கங்களுக்கு பலியான பெண்கள் இதை ஆதரிப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.

இந்த அமைப்புக்கு மாற்றான இன்னொரு சரியான அமைப்பைப் பற்றி பேசும்போது, அதைக் கண்டு பிடிப்பதும், வழக்கப்படுத்துவதும் சமூகத்தின் வேலையல்ல என்பதை உணரவேண்டும். ஏனெனில் அதன் மூலம் ஆண்கள் இப்போது அனுபவித்துவரும் மேலாண்மையை இழப்பது நேரும். ஆனால் சுயமரியாதையையும், நேர்மையையும் கண்டுகொண்டவர்களின் (பயில்பவர்கள், ஒழுகுபவர்கள் என்ற வார்த்தைப்பிரயோகங்களை கவனமாகத் தவிர்க்கிறேன்) தவிர்க்க முடியாத தேவை இதன் அடிப்படையில் அமைந்த உறவுகளே. ஏனெனில் வழமையான திருமணம் இந்த இரண்டு இயல்புகளை (குணங்களை என்பதை தவிர்க்கிறேன்) முற்றாக நிராகரிக்கிறது. ஏனெனில் இது இரண்டு பேருக்குள்ள உறவை ஒரு பொது சமூகசட்டக வரைமுறைக்குள் கொண்டுவருகிறது. அதாவது திருமணம் என்பது பெண்களுக்கு சில சமூக பாதுகாப்பை வழங்குதல், மரியாதையை தருதல், சொத்துவிவகாரங்களில் அனுகூலமாக இருத்தல் போன்றவகைகளில். எனவே திருமணத்தை முற்றாக இந்த சமூக சட்டகத்தில் இருந்து விடுவித்தல் மிக அவசியம். ஆனால் அதைச் சமூகமே செய்யாது.

சமூக சட்டகங்களினால் அல்லாது இயல்பாக தங்களது நேர்மையையும், சுயமரியாதையையும் கண்டுகொள்கிற இரண்டு நபர்கள் இத்தகைய உறவை தங்களுக்குள் மேற்கொள்ளலாம். இதற்கான சூழல் முன்னேப்போதையும் விட இப்போது மிக ஏதுவாய் இருக்கிறது. இந்த வகை உறவுகளில் கணவனை/ மனைவியைப் புரிந்துகொள்ளுதல் என்ற கருத்தே பொருளற்றது. இதில் ஒவ்வொருவரும் தன்னை மிகச்சரியாக (சமூக விதிகளின்/பார்வைகளின் வழியன்றி) புரிந்துகொள்வதே முக்கியமானது. தன்னை சரியாகப் புரிந்துகொண்டவளும் (வனும்), தனது சுயமரியாதையை, சுதந்திரத்தைப்பற்றிய அறிவுடையவர்களும் பிறரது உரிமைகளை, எல்லைகளை பறிக்கமுடியாது என்ற அனுபவமே இத்தகைய உறவுகளின் அடிப்படை. இத்தகைய உறவுகளைப் பாதுகாக்க சமுகத்துக்கு வேலையுமில்லை; இடமுமில்லை. எனவே சமூகம் படுக்கையறையில் இருந்தும், பூஜை அறையில் இருந்தும் வெளியேற்றப்படுகிறது. அது அதன் சரியான இடத்தை அடைகிறது. இதன் மூலம் திருமணத்துக்கு சமூகம் தருகிற வெகுமதிகள், மரியாதை இவை மெல்ல மெல்லக் குறையலாம். அதுபோலவே சமூகம் திருமணத்தின் (அல்லது உறவுகளின்) மேலான ஆதிக்கத்தை மெல்ல மெல்ல இழக்கும். ஆனால் இத்தகைய உறவுகள் மிகும் போது ஒரு வன்முறையற்ற, பொய்யற்ற சமூக வெளிப்பட ஆரம்பிக்கும். இன்றைய சகல சமூக வன்முறைகளும், பொய்களும், போர்களுக்குமான காரணங்களும் குடும்பத்திலும், ஆண் பெண் உறவிலுமே வேர்கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய உறவுகள் ஒருவரின் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே நிகழக்கூடியவை. இதை திருமணத்துக்கு மாற்றான நிறுவனமாக தயாரிக்க முடியாது. ஆனால் இவை காலப்போக்கில் சகஜமாகலாம். ஒவ்வொருவருடைய தேவையே அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை நியாயப்படுத்துகிறது. கூடப்படுப்பதற்கு ஒரு பொம்மையா, அடிமையா, எஜமானனா, அல்லது எனது யாரும் மறுக்கமுடியாத சுதந்திரமா என்பது அவர்களின் உள்ளார்ந்த தவிப்பையும், தேவையையும் சார்ந்தது.

மிக இயல்பான விசயங்களாகிய குடிதண்ணீராகட்டும், சுத்தமான காற்றாகட்டும், அல்லது சுதந்திரமாகட்டும் அதைக் கண்டுபிடிப்பதற்காக அதிகம் உழைக்க வேண்டியதும், அதற்காக பெரிய விலையைக் கொடுக்கவேண்டியதுமான காலத்தில் தான் நாம் இப்போதும் இருக்கிறோம். ஆனால் அதற்கான ஊற்றுக்கண்கள் எப்போதும் போல் இப்போதும் திறந்தே இருக்கின்றன. அவைகளைத் தேடுபவன் கண்டுகொள்கிறான்.இல்லையா?
 
நாராயண்,

தமிழ்நாட்டு பெண்களின் மிக முக்கிய தடையாக நான் கருதுவது இரண்டு. சுயமாக சம்பாதித்து தன் சொந்தக் காலில் நிற்க முடியாத நிலையும், பொதுவாக பெற்றோர் பார்த்து கல்யாணம் செய்து வைக்கும் நிலையும் தான். ஆண் பெண் தசவிகிதக்கணக்கில் 1000 ஆண்களுக்கு 980 பெண்கள் என்னும் நம் நாட்டுக் கணக்கில், மேற்சொன்ன இரண்டு காரணங்களும் தான் இந்திய ஆணுக்கு பல தாரங்களும் அதே சமயத்தில் கல்யானமாகாத முதிர்கன்னிகள் என்னும் இரண்டு வகை முரண்பாடான நிலை உருவாகும் நிலை. யோசித்துப்பாருங்கள். ஒவ்வொரு ஆணும் தன்னுடைய துணையை எல்லா உயிரிணங்களைப் போலவும் தானேத் தேடிக் கொள்ளும் நிலை வந்தால் அதுவும் சுயமாக சொந்தக் கால்களில் நிற்கும் பெண்கள் இருக்கும் நிலையும் சேர்ந்து வந்தால் தற்போதைய இந்திய "ஆண்கள்" நிலை என்ன என்று?

அனாதை.
 
கறுப்பி, பத்மா அரவிந்த், வினோபா, ராதாகிருஷ்ணன், காஞ்சி பிலிம்ஸ், தங்கமணி, அனாதை ஆனந்தன் அனைவருக்கும் நன்றி. இங்கு காலையில் வேலையிருப்பதால், பின்னூட்டம் பதிய இயலாது, இரவில் வந்து விரிவாக பதிகிறேன்.

ஆனாலும், நான் கேட்ட இந்த குறிப்பிட்ட கேள்விக்கு ஏதேனும் பதில்கள் உள்ளதா என்பதை மட்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

//தமிழ்நாட்டிலிருந்து அயல்நாடுகளில் யாரேனும் பெண் கொடுத்தால், எங்கேயாவது மாப்பிள்ளைகளைப் பற்றி குறுக்கு விசாரணைகள், கிராஸ் செக்கிங் செய்ய இயலுமா ? அதற்கு ஏதேனும் அமைப்புகள் உள்ளதா ?//
 
//தமிழ்நாட்டிலிருந்து அயல்நாடுகளில் யாரேனும் பெண் கொடுத்தால், எங்கேயாவது மாப்பிள்ளைகளைப் பற்றி குறுக்கு விசாரணைகள், கிராஸ் செக்கிங் செய்ய இயலுமா ? அதற்கு ஏதேனும் அமைப்புகள் உள்ளதா ?//

நரேன் இதுகுறித்து சரியாகத்தெரியவில்லை. ஈழத்திலிருந்தும் இப்படி வரும் அப்பாவிப்பெண்கள் பலரது வாழ்வு சீரழிந்திருக்கிறது (கறுப்பி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றார்). திருமணஞ்செய்யமுன்னர் விசாரிப்பதற்கு எந்த ஆணும் character certificate கொண்டு திரிவதில்லையாததால், அவர்களது உண்மையான பக்கத்தை அறிதல் மிகவும் கடினம். திருமணஞ்செய்துகொடுக்கமுன்னர், அந்த ஆணின் நண்பர்கள், உறவுகள் மூலந்தான் பெண்ணின் தரப்பினர் விசாரிக்கின்றனர். இவர்களும், ஆண் நடத்தை கெட்டவனாய் இருந்தாலும், 'நல்ல மனசு' பண்ணி அந்தமாதிரி நல்லவர் என்ற புராணத்தைத்தான் அதிகம் பாடுவார்கள். ஆனால், கொஞ்சம் நம்பிக்கையளிப்பது, இப்படி திருமணத்தின்பின்னும் நரித்தனமாய் விளையாடும் ஆண்களின் திருமண உறவுகளைத்துண்டித்து விட்டு சில பெண்கள் வெளியே வந்ததுதான் (ஆனால் அதற்காய் பலர் தற்கொலை என்னும் மிகவுயர்ந்த விலையையும் கொடுத்திருக்கின்றனர்).

//இதையும் தாண்டி, திருமணம் என்கிற பந்தத்தின் மீது எனக்கிருக்கிற நம்பிக்கைகளும் க(கு)ரைந்துக் கொண்டே இருக்கின்றன.//
இந்த பகடையாட்டத்தின் மீது தாயம் உருட்டும் நம்பிக்கை, எப்போதோ 50%ஐ என்னளவில் தாண்டிவிட்டது.
 
//திருமணம், குடும்பம் போன்ற நிறுவப்பட்ட அமைப்புகளுக்கு ஈடாக நம்மால் இணை அமைப்புகளை நிறுவ முடியவில்லை. //

திரும்ப திரும்ப கேட்கிறேன். மேல் சொன்னவற்றிற்கு மாற்றாக உங்கள் கனவு இணை அமைப்பை பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்.

நிறைய கருத்துக்களுக்கு ஒத்துப் போகிறேன். இருந்தாலும்

//இதில் ஏமாற்றப்படுவது பெண்கள் தான். மிக அபூர்வமாக ஆண்கள். //

நண்பரே இதில் ஏமாற்றபடுவது பெண்களும் ஆண்களும் 50-50 தான் என நினனக்கிறேன்.கலச்சாரத்தின் வரலாற்றை தூர எறிந்து விட்டு பார்த்தால் இந்த காலத்திலும் பெண்களே deepஆகா ஏமாற்றப்படுகிறார்கள் என்பதில் ஓரளவு தான் உண்மையிறுக்கிறது.

பெண் உரிமை பேசி நல்ல அன்பான குடும்பத்தில் சின்ன ஒரு விசயத்துக்காக போலீஸ் அது இதுவென போய் சின்னபின்னாப்படுத்தி இதனால் கணவனை தற்கொலைக்கு தூண்டிய பெண் உரிமை திலகத்தையும் பார்த்திருக்கிறேன்.

தன் விருப்ப திருமணத்தை மறுத்த குடும்பம் காட்டிய பையனை கட்டிக் கொண்டு, உயிருடன் அந்த குடும்பத்தின் உணர்வுகளை அவர்களை கொன்று ஓடிப்போன பெண்களையும் பார்த்திருக்கிறேன்.

பத்மா அர்விந்த் சொல்லிய சம்பவத்தை போன்றே கணவனால் ஒத்தி வைக்கப்பட்ட பெண் போராடி பார்த்து விவாகரத்து வாங்கி வெகுண்டெழுந்து தன் சொந்த காலில் நின்று முன்னேறி கொண்டிருக்கும் பெண்ணையும் எனக்கு தெரியும்.

ரியாலிட்டி தராசில் கொஞ்சம் ஒரு பக்கத்து எடை அதிகம் வைக்கபடுகின்றனவோ என்ற கவலை எனக்கு ஏற்படுகிறது.


பெண்ணை பெண்ணாக பார்த்துக் கொண்டு நாமெல்லாம் விவாதித்து கொண்டுருப்பதை விட பெண்கள் என்று பிரித்துப் பார்க்கும் உணர்வு எல்லாருடைய மனத்திலிருந்தும் தூக்கி எறியப்பட்டாலே போதும் என்பது என் கருத்து. பெண்ணிணுடைய மனதிலிருந்தும் சரி, ஆணின் மனதிலும் சரி. அந்த மாதிரியான சமூக பார்வை கொண்ட அமைப்பை உங்களால் நிறுவ முடியுமா?


அதற்காக பெண் உரிமை என்று ஆக்ரோஷம் கொண்டு துள்ளுவதால் மட்டும் என்னவாகி விடப்போகிறதென தெரியவில்லை.முதலில் பெண் என்று உங்களுக்கு நீங்களே உங்கள் மேலிருக்கும் பிம்பத்தை உடையுங்கள்.
 
டிசே, விஜய் நன்றி. டிசே உங்களின் பதிலில் திருப்தியடைந்தாலும், அங்கிருக்கும் ஏதேனும் ஒரு சங்கத்திலோ, அமைப்பிலோ, இங்கிருந்து போகும் நபர்கள், கட்டாயமாக இருத்தல் நலமென தெரிகிறது.ஏனெனில் அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்நபரின் உத்தியோகம், நிரந்தர வருமானம் போன்ற விஷயங்களை எளிதாக யூகிக்க இயலும். நீங்கள் சொல்லும் "நல்ல மனசு" பண்ணி என்பது நிகழ்வாக இருந்தாலும், ஒரு மூன்றாம் மனிதரின் மனநிலையில் ஒரு தனிமனிதனை அணுகினாலேயன்றி இதை தடுக்க இயலாது என்று தோன்றுகிறது. சென்னையாய் இருந்தால் பரவாயில்லை, ஏதோ கொஞ்சம் உலகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இதே அந்த பெண் ஏதாவது ஒரு சிறு நகரத்திலிருந்தோ, கிராமத்திலிருந்தோ வந்திருந்தால் அப்பெண்ணின் நிலையென்ன. எனக்கு புலப்படும் ஒரே வழி, ஆங்காங்கே இருக்கும் தமிழ் கடவுள்களும், கோயில்களும்தான். ஏனெனில் எங்கேப் போனாலும், நம்மால் "சாமி" கும்பிடாமல் இருக்க இயலாது. இதுப் போன்ற விஷயங்களை, கோயில்களில் தொடர்ந்து அறிவிப்பது மூலம் சில பெண்களையாவது தொட இயலுமென்று தோன்றுகிறது. இது தாண்டி, அங்கிருக்கும் லோக்கல் இந்திய தொலைக்காட்சிகள், கேபிள் டிவிக்கள் ஏதேனும் வருகிறதா என்பதைப் பார்த்து, அவற்றிலும் தொடர்ந்து கவுன்சலிங், பெண்களின் உரிமைகள், எப்படி புகார் கொடுப்பது போன்ற விஷயங்களை சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஊர்கூடி இழுத்தாலேயன்றி இந்த பெண்களுக்கெதிரான தேர் நகராது என்றுதான் தோன்றுகிறது.
 
விஜய், திருமணத்திற்கு மாற்றான ஒரு அமைப்பினை நம்மால் நிறுவ முடியவில்லை என்பது தான் வாதம். எது மாற்று அமைப்பு என்று கேட்டால், இப்போது என்னிடத்தில் விடைகளில்லை. விஜய் ஒத்துக் கொள்வோம், ஆண்களை விட பெண்கள் மிக அதிகமாக, கேவலமாக, குரூரமாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை. ஆண் தூக்கு மாட்டிக் கொண்டான், ஆண் போலீஸ் நிலையத்துக்கு போனான் என்பதெல்லாம் உண்மையாக இருந்தாலும், மனதளவில் இதேயளவு குரூரத்தையும், ஏமாற்றத்தையும் சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் எத்தாணாயிரம் பேர். அயல்நாடுகள் என்றில்லை, தமிழகத்திலும், இந்தியாவிலும் அதே நிலைதான்.

//பெண்ணை பெண்ணாக பார்த்துக் கொண்டு நாமெல்லாம் விவாதித்து கொண்டுருப்பதை விட பெண்கள் என்று பிரித்துப் பார்க்கும் உணர்வு எல்லாருடைய மனத்திலிருந்தும் தூக்கி எறியப்பட்டாலே போதும் என்பது என் கருத்து. பெண்ணிணுடைய மனதிலிருந்தும் சரி, ஆணின் மனதிலும் சரி. அந்த மாதிரியான சமூக பார்வை கொண்ட அமைப்பை உங்களால் நிறுவ முடியுமா?//

தலைவா, இதெல்லாம் ஸுப்பர் ஜிகினா. தூக்கியெறிய முடியுமா ? குப்பையில் போட முடியுமா என்றெல்லாம் விவாதிப்பதை விட்டுவிட்டு இன்றைய நிலையில் நம்மால் என்ன செய்ய இயலும் என்பது பற்றித்தான் பேசமுடியும். எப்படி ஒரு பெண் என்ற உணர்வை தூக்கியெறிய முடியுமென்று நினைக்கிறீர்கள். கண்டிப்பாக இயலாது என்பது தான் என் பதில், வித்தியாசங்கள், உடலளவிலும், மனதளவிலும் இருந்தே தீரும். சமமாக மதித்தல் என்பது வேறு, பெண் எனும் பிம்பத்தினை உதைத்தெறிதல் வேறு.
 
சுதந்திரமாய்த் தன் துணையைத் தன் காதலாலும், தகுதியாலும் மட்டுமே கண்டு கொண்டிருந்த ஒரு "சமூகத்தில்" கல்யாணத்தைப் புகுத்தியவன் (ஆம்பளயாத்தான் இருக்க முடியும்) அயோக்கியனாகத்தானிருக்க வேண்டும். காதலைக் கூட கல்யாணம் என்றொரு அட்ரஸைக் கட்டிவிட்டு அதில் கொண்டு போய் "முடித்து" விடுவார்கள். காவிரிப்பூம்பட்டிணத்தை நினைக்கும்போதெல்லாம் அங்கு வசந்த விழாவில் ஆண்களும் பெண்களும் தங்கள் துணைகளைத் தாமே கண்டு கொள்ளும் இனிய நடையில் இருப்பது மாதிரியான ஒரு கற்பனை வரும். (இதே கதையிடத்தில்தான் கண்ணகி-கோவலனின் அரேஞ்ச்ட் மேரேஜும் நடந்திருக்கு!). மறுபடியும் தலையீடில்லாக் காதல் நிறைந்த ஒரு உலகத்துக்குப் போக மாட்டோமா! அங்கு பெண் 30வது மாடியிலிருந்து குதிக்க மாட்டாள்; "வெற்றிகரமான" தம்பதியர் என்று சமூகம் சொல்லும் எங்கம்மாவும் "தலையெழுத்துடா சண்டாளா போட்டெழுத்துடி பொண்டாட்டி" என்று வீட்டுக்குள் பழமொழி சொல்லிக் கொண்டிருக்க மாட்டாள்.
 
நாராயணன்!!!...எந்த காலத்தில் இருந்துகொண்டு இதை எழுதியிருக்கிறீர்கள்....இந்த காலத்து பெண்கM எல்லாம் ரொம்பவே விவரமானவர்கள்!!!..எங்கோ ஒரு ஜமீன் பல்லாவரத்தில் நடந்ததை வைத்து பெருசு பண்ணாதீர்கள்...அமெரிக்க மாப்பிள்ளைகளால் வாழ்ந்த குடும்பங்கள்தான் அதிக்மே தவிற வாழ்விழந்த குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்...

இன்று நடுத்தர வயது பெண்கள் எல்லாம் கணவன் சரியில்லையென்றால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் குழந்தைகள்,எதிர்காலம் தங்களுக்கான இரசனைகள்,என்று வாழ்ககை இலகுவாக நடத்திகொண்டு செல்கிறார்கள்.

எத்தனை நடுத்தர வயது பெண்கள் தங்கள் இரசனைக்கு எற்ப நண்பர்களை இணையம் கண்டுவிடுத்து வாழ்க்கைய நிம்மதியாக நடத்துகிறார்கள்.....
 
விஜய், நரைன்,

நான் மீண்டும் சொல்வது, கல்யாணத்திற்கு மாற்று அமைப்பில்லை என்பது மனதளவில் நாம் நமக்கு விதித்துக்கொள்ளும் விலங்குதான்.

கல்யாணத்திற்கு மாற்றாக சில உதாரணஙள்:
2. கல்யாணம் கட்டிக் கொண்டுதான் வாழவேண்டும் என்பதில்லை. ஒரு பெண்ணோ ஆணோ தானாக விரும்பி கல்யாணம் கட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். இருக்கிறார்கள். கல்யாணமே வேண்டாம் என்றிக்கும் பெண்கள் மீது ஏக்கப் பார்வையும் அல்லது 'அவ அகங்காரி ஆண் துணை இல்லாம வாழ்ந்திட முடியுமா?' என்ற பேச்சுக்களும் இன்னும் இருக்கின்றன.
கல்யாணம் ஒன்றே வாழ்க்கையல்லவே. அது இல்லாமல் இருக்கலாம் தப்பில்லை என்கிற எண்ணம் வளர வேண்டும். அது அவரவர் விருப்பம். திருமணத்தில் உள்ள குறைகளைப் போலவே இதிலும் சில/பல குறைபாடுகள் உள்ளன. அது வேறு விஷயம்.
எனக்குத் தெரிந்தே ஓரிரண்டு பேர் இப்படி இருக்கிறார்கள். எல்லோரும் திருமணம் வேண்டாம் என்றவர்கள். மறுக்கப்பட்டவர்கள் அல்ல.

3. "சேர்ந்து வாழ்தல்" - இளைய சமுதாயத்தைச் சேர்ந்த எனது (புலம் பெயர்ந்த) நண்பர்கள் சில காலமாக இப்படிச் செய்து வருகிறார்கள் - பெற்றோர்கள் காதலுக்கு மறுத்துவிட்டதால். குறுகிய காலமே இருந்தாலும் இந்த அமைப்பு முளை விடத் துவங்கியுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

4. "ஓரு பால் உறவுகள்" - இந்தியாவைப் பொருத்த வரையில் இது இன்னமும் வளர்ச்சியடையாத, பல வேளைகளில் வளர்ச்சி சிதைக்கப்பட்ட அமைப்பாக உள்ளதாகத் தான் எனக்குத் தெறிகிறது. மாற்றுக் கருத்திருப்பின் தெரிவிப்பீராக.

1. பெற்றோர்கள் முடிவெடுக்காமல் சம்பந்தப் பட்டவர்கள் முடிவு செய்யும் (பெற்றோர்கள் ஆசியோடோ/இல்லாமலோ) திருமண அமைப்பு - இது ஒருவழியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுவருகிற அமைப்பு. பழம் திருமண அமைப்பின் சாயல்கள் நிறையவே இதன் மேல் கரை படிந்திருந்தாலும் அவற்றையெல்லாம் துலக்கி பளிச்சிட வைக்க முடியும் என்கிற நம்பிக்கை இப்படி விவாதங்கள் நடக்கும் போது தோன்றுகிறது.

-- வினோபா
 
அரவிந்தன், நான் 2005-ல் தான் இருக்கிறேன். பத்மா அரவிந்தும் 2005-ல் தான் இருக்கிறார்கள். இங்கு எழுதிய நண்பர்களூம் 2005-ல் தான் இருக்கிறார்கள். மிக தெளிவாக எழுதியிருந்ததையும், பிற நிகழ்வுகளையும் வைத்துதான் எழுதப்பட்டதேயொழிய, சும்மா, பெண்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்ற ஆசைகளில்லை. அது சரி, நீங்கள் பார்க்கும் மத்திய தர வர்க்க பெண்கள் அவ்வாறிருந்தால் நான் என்ன செய்வது? நன்றாக இருப்பின் சந்தோஷமே. என் பதிவு, அமெரிக்க மாப்பிள்ளைகள் மட்டுமல்ல. ஏதோ பெண்ணும் மென்பொருள் நிறுவனத்திலும், பையனும் மென்பொருள் நிறுவனத்திலும் வேலை செய்வதால், வாழ்க்கை மிகச் சுலபமாக ஆகிவிட்டது போலிருக்கிறது உங்களின் பதிவு. தலைவா, நான் பேசுவது, எங்கோ காஞ்சிபுரத்திலிருந்து 50 KM உள்ளே இருக்கும் ஒரு கிராமத்திலிருந்து வந்து, அம்மா-அப்பா பார்த்து வைத்திருக்கும் சொந்தக்கார அல்லது அதே ஜாதி அயல்நாட்டு மாப்பிள்ளையினை கட்டிக்கொண்டு, அரபு நாடுகளிலோ, அமெரிக்காவிலோ, கனடாவிலோ இருப்பவர்களைப் பற்றி. நீங்கள் சொல்லும் பெண்கள் வேண்டாம், அது சந்தர்ப்பவாதமும், சாதியமும் பேசப்படும் அபாயங்கள் இருப்பதால் தவிர்க்கிறேன்.
 
அரவிந்தன்
கனடாவில் வசிக்கும் பல பெண்களின் நிலை என்னவென்று தெரிய வேண்டுமெனின் நான் இயக்கி நடித்த (மனஷி) இந்தக் குறும்படத்தைப் பாருங்கள். நல்ல பதவிகளில் பல பெண்கள் இருக்கின்றார்கள் நன்றாக உழைக்கின்றார்கள் அதற்கான அவர்கள் முழுச்சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்றில்லை.
www.nirvanacreations.ca
 
நன்றி கறுப்பி வார இறுதியில் பார்க்கிறேன். சமீபத்தில் திண்ணையில் படித்த ஒரு கவிதை தான் நினைவுக்கு வந்தது.

தஸ்லீமா நஸ்ரின் எழுதி, தமிழில் சிபிச்செல்வனால் மொழிபெயர்க்கப்பட்ட கவிதையது.

நற்குணம்
நீ ஒரு பெண்
அதை மறக்காமலிருப்பது நல்லது
உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது
ஆண்கள் ஜாடையாகப் பார்ப்பார்கள்.
நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்.
நீ தெருவைக் கடந்து பிரதான சாலையில் நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னை ஒழுக்கங்கெட்ட பெண்ணென்று திட்டுவார்கள்.
உனக்கு நற்குணமில்லையெனில்
நீ திரும்பி போகலாம்,
நற்குணமிருந்தால்
இப்போது நீ நடந்துகொள்வதைப்போலவே
தொடர்ந்து செய்
ஓடு! ஓடு!
உன் பின்னால் ஒரு நாய்க்கூட்டம்
ஞாபகம், ராபீஸ், (வெறிநாய்க்கடிநோய்)
உன் பின்னால் ஒரு ஆண் கூட்டம்
ஞாபகம், பாலுறவு நோய் (சிபிலிஸ்)
ஒரு சில வார்த்தைகள்
“எல்லா வீடுகளிலும் அவர்கள் ஒரு பொருளை விற்கிறார்கள்.”
- யார் அவர்கள்?
“பெண்கள்”
- அவர்கள் எதை விற்கிறார்கள்?
“சுதந்திரம்”
- வாங்கும் பொருளுக்கு மாற்றாக எதைத் தருவார்கள்?
“கொஞ்சம் உணவு தருவார்கள், அணிந்துகொள்ள கொஞ்சம் புடவைகள்”
மேலும் கொஞ்சம் வாரமொருமுறை மாமூல் உடலுறவு” இருக்கிறது.
- சுதந்திரத்தைத் தவிர இந்த உலகில் வேறு என்ன பெரியதாக என்ன இருக்கிறது?
சுதந்திரத்திற்கு விலையில்லை. மனித உரிமை சட்டத்தின் பார்வையில் இவை சட்டத்திற்குப் புறம்பானவை.
“அவள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இந்தச் சமூகம் சட்டப்படி அவளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை”
தன் சொந்த காலில் நிற்பதற்கும், நடப்பதற்கும் அவளால் முடியுமா?
“இதுவரையில் இல்லை”
- அவளுடைய உணவு, உடைக்கு யாரையும் சந்திராமல் தானே வாழ முடிவெடுத்தால் அவளால் சிரிக்கவும் பேசவும் இயலுமா?
'இதுவரையில் இல்லை.'
நமது சமூகத்தின் வழக்கம் என்னவெனில் விற்கப்பட முடியாதவற்றை ஏளனமாகப் பார்ப்பது.
- இந்த சட்டதிட்டங்களை யார் உருவாக்கினார்கள்?
“சில ஆண்கள்?”
மகத்தான விஷயம்தான், நல்லது ஆண்கள் நன்றாக அறிவார்கள்
வியாபார தந்திரங்களையும், நிறுவனத்தின் சில்லறைத்தனமான விதிமுறைகளையும்.
 
Aravindan:
please let me know how many women ar eself relaint and confdant? please talk about women in ruarl areas, women who report to emergency room with broken jaws. Lets talk %. I am very happy, and can support my family. I have a great supporting spuse who understands when I go out to help other women as his own sister was burnt to death on dowry issue.The case wasl closed, pople marched to the polic station, staged dharna etc.Please do not make statements knowing a few women who are your friends or relatives. Even then they may not be telling you the truth. I have seen women who are vice presdients in ER. Even in India girls are molested at a rate that you will not or do not want to belief.
 
இங்கு சில நண்பர்கள் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். சமநிலை அடைந்து விட்டார்கள் என்பது போல எழுதியிருக்கிறார்கள். அது சில ஜீன்ஸ் போட்ட பெண்களைப்பார்த்து அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு உண்மையைச் சொல்லவில்லை.

உண்மையை சில நாட்களுக்கும் முன் ஒரு ஒரு உயர் போலிஸ் அதிகாரி ஏதோ மாநாட்டில் பேசியதாக படித்தேன். இந்தியாவில் சராசரியாக 12 நிமிடத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் இறக்கிறாள் (கொல்லப்படுகிறாள்). 54 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறாள்.

ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சேர்ந்திருப்பதற்காக அடையும் துன்பங்களும், வலிகளுமே சமநிலையற்ற தன்மையைக் காட்டும்.

பெண்டாட்டியை அடிமைப்படுத்த பெண்குலத்தையே அடிமைப்படுத்த வேண்டாம் என்பான் பாரதி!
 
அது வேறொன்றுமில்லை தங்கமணி. நண்பர் அரவிந்தன் இருப்பது பங்களூரில். அதனால், நிலை பிறழ வாய்ப்புகளதிகம் :-)
 
அன்பின் நாரா,

மிக நல்ல பதிவு.. பெண்கள் ஏமாறுகிறார்கள்.. ஏமாற்றப் படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முன்னைக்கு இப்போது எவ்வளவோ தேவலாம்! கல்வியறிவு அதிகம் கிடைக்கிறதே.. அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வுதான் அவர்களை வீறுகொள்ளச் செய்கிறது. சிறுமை கண்டு பொங்கியெழச் சொல்கிறது! எல்லா ஆண்களும் ஏமாற்றுவதில்லை.. ஏமாற்றும் எல்லா ஆண்களும் நல் மனிதனில்லை. பார்த்தீர்களானால் அக்கயவர்களுடன் சில பெண்களும் இருக்கலாம். உதாரணமாக சிறுமியரை வீட்டு வேலைக்கென அழைத்துச் சென்று மும்பையில் விற்கும் கும்பலில் தேனொழுகப் பேச அங்கே நிச்சயம் ஒரு பெண் இருப்பாள்! எனவே பெண்களுக்கு பெண்களும் எதிரி என்பதை மறுக்கக் கூடாது. திரைத்துறையில் பார்த்தீர்களானால் அரங்கேரும் காம நாடகம் சொல்லி மாளாது. சமீபத்தில் படித்திருப்பீர்கள்.. வினிதாவை அவரின் தாயும் தம்பியுமே விபசாரம் செய்யச் சொன்னதாக! எனவே ஒவ்வொரு பெண்ணும் சுயமாக நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேஎண்டும். சிறுமை கண்டு பொங்கி எழ வேண்டும். அடுத்தவர் சொல் கேட்டு நடக்கக் கூடாது. அகங்காரம் கொண்டவரை மோதி மிதிக்கும் மனவலிமை பெற வேண்டும்.

தமக்குக் கிடைக்கும் அனுமதியை தவறான வழியில் உபயோகப் படுத்தக் கூடாது. சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் கண்ணுற நேர்ந்தது. தொப்புளில் ஓட்டை போட்டு வளையம் மாட்டி அலையும் பெண்டிரையும் சுழல் குழலாய் புகை ஊதும் வீரப் பெண்களையும் பார்த்திருக்கிறேன். கண்களில் போதை மின்ன கையில் கோப்பையுடன் அரைகுறை ஆடையுடன் நடனமாட அழைத்த மேல்வர்க்க இளம்பெண்களோடு பேசி இருக்கிறேன். இதுதான் சுதந்திரமா? இதற்குத்தான் அவர்களின் கல்வியறிவு பயன்பட்டதா? டேட்டிங் என்ற பெயரில் வயசுப் பையன்களோடு சுத்தி வயிற்றில் பிள்ளை வாங்கிக் கலைத்து மானம்போய் மூலையில் அமர்ந்து சிந்தித்த இளம்பெண்களின் கதை கேட்டிருக்கிறேன். டெல்லியின் ஆர்.கே.புறம் பள்ளிப் பெண்ணின் கதை தெரியும்தானே? ஜம்முகாஷ்மீர் அழகியின் கர்வம் புளூ சிடியில் அடங்கியது நினைவிருக்கிறதா? படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சென்று அனைவரின் காம இச்சைக்கு உள்ளாகிய கேரளச் சிறுமியின் கதையறிவீரோ? இங்கே தாய், தந்தை, சுற்றம், வளர்ப்பு எல்லாமே எதிரியாக இருந்திருக்கிறது. எனவே பெண்கள் தங்களைச் சுயமாகக் காத்துக்கொள்ளும் அறிவு வேண்டும். நல்லது கெட்டது பிரித்தறியும் அன்னமாய் மாறி அவர்கள் உலகத்தினை எதிர்கொள்ள வேண்டும்!
 
This comment has been removed by a blog administrator.
 
மூர்த்தி, நன்றி. உங்களின் மறுமொழிக்கான பதிலை ஏற்கனவே தங்கமணியும், நானும் அரவிந்தனுக்காக இட்டிருக்கிறோம். இருப்பினும், மீண்டும், மீண்டும் நான் வலியுறுத்துவது, இந்திய பெண்கள் என்றால், சென்னை, மும்பாய், டெல்லி, பங்களூர், ஹைதராபாத், பூனே, கொல்கத்தா பெண்கள் மட்டுமில்லை. இங்கே வாருங்கள், மேற்கு மாம்பலத்திலேயே இந்த பதிவுக்கான சான்றுகளை காட்டுகிறேன். இங்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நிலைமை அதேதான். கொஞ்ச பெண்கள் மாறியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன், ஆனால், அது இறுதியான மாற்றமன்று. எனக்கு தெரிந்து, டிஸ்கோ ஆடி, பியர் அடித்து என்னையும் அடிக்குமாறு சொன்ன பெண், இன்றைக்கு குழந்தை பெற்றுக் கொண்டு, அடக்கவொடுக்கமாய், விரதமிருந்து மாங்காடு அம்மன் கோவிலுக்கும், பத்மா சேஷாத்திரி வாசலில் காவல் காத்துக் கொண்டிருக்கிறார். நிதர்சனம் இது தான். ஆகவே, குறைந்தது அடுத்த 25 ஆண்டுகளுக்காவது, பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்கிற பிரமை ஏற்படுத்தும் விளக்கங்களை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்.
 
நாராயணன்!!!...பெண்கள் நவீனமாக உடை அணிவதாலேயே அவர்கள் முன்னெறிவிட்டார்கள் என்று நான் சொல்லவரவில்லை...நீங்கள் அப்படி புரிந்துகொண்டிருந்தால் அது சரியல்ல..அதுபோல் நான் சொல்லவந்தது மெட்ரோ நகரங்களில் வசிக்கும் பெண்களை பற்றியும் இல்லை....நீங்கள் சொல்லும் அதே மாங்காடு விரதம்,பதமா ஷேஷாத்ரி பெண்கள் எல்லாம் கூட தற்போது முன்னேறித்தான் உள்ளனர்..முன்னேற்றம் என்று நான் சொல்லவந்தது "ஸ்மார்ட்னெஸ்" ஆனால் நீங்கள் புரிந்துகொண்டது ஜீண்ஸ் உடைகள்...சிறு நகரங்களிலும்,கிராமங்களீலும் உழைக்கும் மகளிரிடையே நல்ல முன்னேற்றம்...சுய உதவிக்குழுக்கள் சக்கைபோடு போடுகின்றன்....சுய உதவிக்குழுக்கள் பொதுப்பணித்துறையில் பெரிய சாலை ஒப்பந்தங்களை பெற்று சிறப்பாக செயல்படுகின்றனர்...பெண்கள் திறமையோ குடும்ப வாழ்விலும்,பொது வாழ்விலும் வெற்றி நடைபோடும் இந்த காலத்தில் பெண்கள் இன்னும் முன்னேற்வில்லை என்று கூக்குரலிடுவது மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது.....இந்தியா பலதுறைகளீல் முன்னீறி உள்ளது என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் நீங்கள் "பெண்கள் முன்னேற இன்னும் 25 வருடங்கள் ஆகும் என்று சொல்வதை என்ன சொல்ல
 
அன்பின் அரவிந்தன், விவாதம் திசை மாறுதோ என்று தோன்றுகிறது. இங்கே நாம் பேசிக்கொண்டிருப்பது ஏமாற்றப்படும் பெண்கள். அதுவும் அயல்நாடுகளில் ஏமாற்றப்படும் பெண்கள். இது அயல்நாடுகள் மட்டுமா, இல்லை உள்நாட்டிலுமா என்பது இன்னொரு விவாதம். ஆனால், பெருமளவில் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இன்று காலை தினசரித்தாள்களில் வந்த ஒரு நிகழ்ச்சியை முன்வைக்கிறேன். ஒரு 10வது படிக்கும் பெண்ணை அவளின் தாயும், இன்னொரு வாலிபரும் வற்புறுத்தி கட்டாயமாக அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இது நடந்தது சென்னையில். நான் சொல்வது இந்த பெண்களை தான். "ஸ்மார்ட்னெஸ்" போன்றவற்றை குறை சொல்லவில்லை. கண்டிப்பாக பெண்கள் ஆண்களை விட பல வேலைகளில் ஸ்மார்ட்டாக செய்யும் திறன் பெற்றவர்கள். முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், இன்னும் இந்தியாவில் ஆண்களுக்கு உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொன்னது போல், பெண்களுக்கு விதிக்கப்படவில்லை. ஆகையால், இன்னமும், அடுக்களை கரப்பான்கள் அதிகம் உள்ள ஊர் இது.

//இந்தியா பலதுறைகளீல் முன்னீறி உள்ளது என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் நீங்கள் "பெண்கள் முன்னேற இன்னும் 25 வருடங்கள் ஆகும் என்று சொல்வதை என்ன சொல்ல//

அந்த கணிப்பு பொய்யாகுமானால், கண்டிப்பாக சந்தோஷப்படுவேன். இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லையோ, அதே இந்தியாவில் தான் இன்னமும் 33% இடஒதுக்கீட்டுக்காக இன்னமும் பாராளுமன்றத்தில் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். தலைவரே, இதே இந்தியாவில் தான் பீகாரும், வடகிழக்கு மாநிலங்களும், ஜார்கண்டும், மணிப்பூரும் இருக்கிறது. முன்னேறி விட்டார்கள், முன்னேறி விட்டார்கள் என்பதின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. தயவு செய்து விளக்குங்கள்.

பெண்கள் (கவனியுங்கள், ஆண் துணை என்று குறிப்பிடவில்லை) யார் துணையும் இல்லாமல் தனியாய் சொந்த காலில் நிற்கிறார்களா? பெண்களைப் பற்றிய பார்வை இங்கு மாறியுள்ளதா ? இன்னும் கால் சென்டர் கார்களில் கடைசியாக பெண் விடவேண்டுமானால், ஒரு ஆணின் துணை தேவைப்படுகிறது. இதுதான் நிதர்சனம். தங்கமணி கூறிய போன்ற ஒரு புள்ளிவிவரத்தை மீண்டும் பதிய வேண்டாமென நினைக்கிறேன். பின்னூட்டத்துக்கு நன்றி.
 
நாராயண்ண்!!!...பெண்கள் முன்னேற்றம் பற்றி பெருமைப்படவேண்டிய இந்த காலத்தில் அவர்கள் இன்னமும் அடுக்களையில் தான் வாழ்கின்றனர்.முன்னேற வில்லை என்ற எதிர் மறை சிந்தனை தேவைதானா...பெண்கள் எமாற்றப்பட்டிருக்கலாம் அல்லது எமாற்றக்கொண்டு இருக்கலாம்.நான் சொல்லவந்தது அவர்கள் எமாற்றங்களை எதிர்கொண்டு ,வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடத்துவங்கிவிட்டார்கள்..அதேபோல் கால் செண்டர் பெண் ஒரு துணையத்தான் எதிர்பார்க்கிறாள்..அந்த எந்த பாலாக இருந்தாலும் சரி..பல் பெண்கள் இரவு 2 மணீக்கு மகிழுந்திலிருந்து இர்றங்கி தனியே வீட்டிற்க்குச் செல்கிறார்கள்...வட கிழக்கு மாநிலங்கள் பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை..பின்னர் விவரம் அறிந்து எழுதி சொன்னீர்கள்..எங்கள் அலுவலகத்திலேயே எராளமான் வடகிழக்கு மாநிலத்து பெண்கள் வேலை செய்லிறார்கள்..தனியே வீடு எடுத்து தங்கி சமைத்து தம்பி தங்கைகளை காபாற்றுகிறார்கள் தெரியுமா...வேண்டாமே இந்த எதிர்மறைச் சிந்தனை...
 
ஐயா, நான் சொன்னது எதிர்மறைச் சிந்தனையல்ல. எதார்த்தம். இதுதான் இன்றைய பெரும்பாலான பெண்களின் நிலைமை. நான் நேர்மறை சிந்தனையுடன் தான் பேசுகிறேன். ஆனாலும், யதார்த்தம் வேறாய் இருக்கும்போது என்னத்த பாஸிடிவ்வா எழுதறது

//நான் சொல்லவந்தது அவர்கள் எமாற்றங்களை எதிர்கொண்டு ,வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடத்துவங்கிவிட்டார்கள்.//

அது இந்தியா முழுக்க, உலக முழுக்க நடந்தால் நன்றாக இருக்கும். ஆனாலும், முன்பே கூறியதுபோல், இன்னமும் 33% ஒதுக்கிட்டைக் கூட வாங்கமுடியாத நிலையில் ஒரு பாலினம் இருக்கையில், என்னால் உங்களைப் போல் மிக உற்சாகமாக பேச முடியவில்லை.
 
Aravindan
There are women who are very successful. I am very appreciateive of positive thinking. But if you look at thats tamil.co, there is an article on father lived withhis daughter an dshe was pregnant etc story, go to dinamalar, a 3rd grade student is raped by head master headline etc is making m eworry about those women. I am very actively involved in women's movement at international level with UN members and we do not see changes in a big way. There are changes in sporadic. Can we stop talking about in Leprsosy as in western world it is irradicated?There is not even a single case leprosy in US, but go to safdarjung hospital leprosy clinic, and you will see them.Thats the truth.I agree with you, but we are referring to those huge # of women who are suppressed. Uneducated, poor women in rural ares
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]