Mar 17, 2005

சிலுக்கு சுமிதா புராணம்

வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் என்னைப் பொறுத்தவரை சென்சார் போர்டு அதிகாரிகளை விட கண்டிப்பானவர்கள். பாருங்களேன், யார் எதைப்பற்றி எழுத வேண்டும், ஒரு தனிமனிதரைப் பற்றி அவரின் ரசிகர் எழுதலாமா, அப்படியே எழுதினாலும் நடுநிலை தவறாமல் எழுதுவாரா, அந்த நடிகரைப்பற்றி ஏன் எழுத வேண்டும், நானும் எழுதுகிறேனே சில நடிகைகளைப்பற்றி என நீளும் பின்னூட்டங்களின் வெப்பத்தில் மூச்சு திணறி பாவம் நிறைய நபர்கள் வலைப்பதிவிற்கே வருவதில்லை. நான் சொல்லவந்த விசயம் இதனை ஒட்டியது. இந்த விவாதம் நடந்த பதிவில் யாரோ ஒரு ஜீனியஸ் எனக்கும் வாய்ப்பு தாருங்களேன், சிலுக்கு சுமிதாவினைப் பற்றி எழுதுகிறேன் என்று கூறியிருந்தார், இதனூடே தெரிக்கும் சினிமா பெண்களைப் பற்றிய பார்வை மிக வக்கிரமாக தெரிந்தது. சினிமாவில் ஆடும் பெண்கள் அதுவும் சிலுக்கு சுமிதா எல்லோருக்குமான ஒரு பேச்சுப்பொருள். நம் பக்கத்து வீட்டுக்காரரின் நடத்தையினைப் பற்றி ரகசியமாய் பேசும் நமக்கு, சிலுக்கு சுமிதா என்றால் ஒரு எள்ளல்.யார் வேண்டுமானால் சிலுக்கு சுமிதாவினைப் பற்றி பேசலாம். கேவலமாய் கமெண்ட் அடிக்கலாம். தனியாய் இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் பாத்ரூமிற்கு சென்று கைகளுக்கும் வேலை கொடுக்கலாம். என்ன தெரியும் நமக்கு சிலுக்கு சுமிதாவைப் பற்றி?

சிலுக்கு சுமிதா என்கிற தனிநபரினைப் பற்றிய சொல் கிளப்பும் அதிர்வுகள் ஏராளம். பலபேருக்கு சிலுக்கு சுமிதா என்கிற பெண் ஒரு விளையாட்டுப் பொருள். என்னமோ சிலுக்கு பற்றி பேசுதலும், எழுதுதலும் தரக்குறைவான விசயமாக ஒரு பார்வையினை உண்டாக்கி விட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சிலுக்கு சுமிதாவின் இடம், அப்போதிருந்த சூழல், அவரின் இமாலய இமேஜ் இதைப்பற்றியெல்லாம் இங்கே கண்டிப்பாக பேசப்போவதில்லை. அது தெரிந்த விஷயம். சிலுக்கு சுமிதாவினை முன்வைத்து சினிமாவில் நடிக்கும் அதுவும் கவர்ச்சியாக நடிக்கும் பெண்களைப் பற்றிய பார்வைகளின் உளவியலும், அதனை கட்டுடைப்பதற்கும் தான் இது. [அதே பதிவிலோ அல்லது வேறெங்கோ உஷா ஷகிலா பற்றிய ஒரு பார்வையை முன்வைத்திருந்தார்.]

மிகக்கொடுமையான விசயம், தான் ஒரு பெண்ணின் கவர்ச்சியினால் உந்தப்பட்டு அதற்கு அடிமையாய் பைத்தியம் பிடித்து அலைந்ததை ஒத்துக்கொள்ளாமல், சுமிதாவைப் பற்றி பேசுவதே கலாச்சார சீர்கேடு என்பதாய் திரித்திருக்கும் "தமிழ்க் கலாச்சார காவலர்களின்" தொண்டினை நினைத்தால் புல்லரிக்கிறது. என்றைக்காவது சினிமா ஷூட்டிங்கினை அதுவும் இதுப்போன்ற கவர்ச்சி நடனங்கள் (ஹிந்தியில் இதற்கு ஐட்டம் சாங் என்று பெயர்) நடக்கும் அரங்கினுள் இருந்திருக்கின்றீர்களா? நான் பார்த்திருக்கிறேன். சிலுக்கு சுமிதாவும், அவரின் பின்னாடும் துணைநடிகைகளும் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. ஆண்களின் பார்வைகள் அனைத்தும் வெறித்தபடி பார்த்திருக்க, எல்லா அந்தரங்களும் வெளிப்படையாக யார் சொல்லுக்கோ குலுங்கச் சொல்லும் சூழலின் அவலத்தையும், அபத்ததையும் உங்களால் இனம் கண்டு கொள்ள முடியாது.

விஜயலட்சுமி சிலுக்கு சுமிதாவான கதை ஒரு தனி நிகழ்வல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு. இன்றளவும், சினிமா ஆசையினாலும், கவர்ச்சியினாலும், ஆண்களால் ஏமாற்றப்பட்டும், தமிழ் சினிமாவின் ப்ரேம்களில் மார்புகளையும், தொடைகளையும் காட்டிக்கொண்டு, சம்பளத்திற்காக அலையும், அலைகழிக்கப்படும் பெண்கள், துணை நடிகைகள் ஏராளம். "இன்னா வர்றீயா" என வெளிப்படையாக இவர்களை யார்வேண்டுமானாலும் அழைக்க இயலும். ஏனெனில் அவளின் அந்தரங்கத்தை உலகமே பார்க்கிறது, நான் தனியாக பார்த்தால் என்ன நினைக்கும் வக்கிரமனம். கொஞ்சம் அந்தரங்கமாய் இருந்தாலும், பாம்குரோவிலும், நியூ உட்லண்ட்ஸிலும் அறை எடுத்து, சிலுக்கு சுமிதாவோடு எப்படியாவது படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ரயிலேறி கோயம்புத்தூரிலிருந்தும், மதுரையிலிருந்தும் இன்ன பிற இடங்களிலிருந்தும் வந்த எத்தனையோ தொழிலதிபர்களைப் பற்றிய கதைகளை கேட்டிருக்கிறேன்.

சிலுக்கு சுமிதாவின் அரசியல் வித்தியாசமானது. தனக்கு வந்த வாய்ப்புகளை உபயோகித்துக் கொண்டு, தன் உடலினால் தமிழ்நாட்டினை கட்டிப்போட்ட பெண் அவள். நாக்கினை தொங்கப்போட்டு கொண்டு, மிட் நைட் மசாலா பார்க்கும் யார் பார்வையிலும் சிலுக்கு சுமிதா ஒரு சதை குன்று. ஒரு சாதாரண ரோட்டில் போகும் பெண்ணிற்கு இருக்கும் குறைந்த பட்ச கருணைக்கு கூட லாயகற்ற ஜென்மம். எல்லாரின் பார்வையிலும், சுமிதா ஒரு பெண் என்பதை தாண்டி, கிறங்கடிக்கும் பார்வையும், முலைகளும், யோனியும் மட்டுமே உடைய ஒரு காமவெளி. மொத்த தமிழ்நாட்டினையும் மோகவெறி பிடித்து தன் இருப்பினை மிக அசாதாரணமாய் காட்டி விட்டு சென்ற பெண் அவள். சிலுக்கு சுமிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சோகங்கள் பற்றிய கவலைகள் யாருக்குமில்லை. தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டபோது சுமிதாவின் வயது 30க்கும் குறைவு. சிலுக்கு சுமிதாவின் மார்பினை தாண்டி உள்ளே இருக்கும் விஜயலட்சுமியை யாருமே கண்டுகொள்ளாததின் விளைவு ஒரு உயிரின் மரணம்.

சிலுக்கு சுமிதா கடித்த ஆப்பிள் 750 ரூபாய்க்கு ஏலம் போனதாக படித்த நினைவு. ஒட்டுமொத்த ஆண்களையும் பரிகசித்துவிட்டு, உன் ஆளுமை என் பார்வைக்கு முன் நிற்காதுடா முட்டாள் என்று சர்வ அலட்சியமாக தூக்கிப்போட்டு விட்டு போன பெண். நிறைய 11 மணி லேடிஸ் கிளப் பெண்ணியவாதிகளுக்கு சிலுக்கு சுமிதாவினை கண்டால் பிடிக்காது. ஆனால், பல பெண்ணியவாதிகளின் அடிப்படைகளை ஆட்டம் காண செய்த பெண்.

காலச்சக்கரம் வெகு வேகமாக சுழலுகிறது. சிலுக்கு சுமிதாவினை எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டு கிரணையோ, நமிதாவையோ, சிந்து துலானியையோ பார்க்க போய்விடுவார்கள். ஆனால், சிலுக்கு சுமிதா என்கிற பெண் தமிழ் சினிமாவினையும், தமிழ் ரசிகர்களையும் மடையர்களாகிவிட்டு, தன் இருப்பினையும், தன் ஆளுமையையும் ஆழமாக பதித்து விட்டு போய்விட்டார்.

"பொன்மேனி உருகுதே"வை தாண்டி, அலைகள் ஒய்வதில்லை பாருங்கள். தியாகராஜனின் மனைவியாக வந்து, காதலர்களை சேர்த்துவைக்க முயற்சித்து, அதற்காக, தியாகராஜனிடம் அடிவாங்கும் முன் ஒரு பார்வை பார்ப்பாரே, அது தியாகராஜனுக்கு மட்டுமா, அல்லது ஒட்டுமொத்த ஆண்களின் சமுதாயத்திற்குமா என்பது அவர் மனதுக்கே வெளிச்சம். அங்கே தெரியும், எவ்வளவு அழுத்தமான ஒரு நடிகையை நாம் இழந்துவிட்டோமென்று.

யாருக்கேனும் நன்றாக சிலுக்கு சுமிதாவினைப் பற்றி தெரிந்திருந்தால் புத்தகமாய் எழுதுங்கள். தாராளமாய் ஒன்றுக்கு பத்தாக வாங்கி கொள்கிறேன்.

Comments:
இந்த பதிவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! சிலுக்கை கேவலமாய் பேசுவது சாதராண மேலோட்டமான வலைப்பதிவர்கள் செய்வது மட்டுமல்ல. ஜெயமோகனின் உருப்படி சூரியா ஒருமுறை மருதம் மற்றும் திண்ணை இணய இதழ்களில் மிக மோசமான பார்வையையும் (முட்டாள்தனமான) தளத்தில் முன்வைத்திருந்தது.

எத்தனையோ ஆண்களுக்கு இன்பத்தை மட்டும் அளித்து, அதன் காரணமாகவே பழிக்கப்பட்டு, எல்லாவிதத்திலும் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு முடிவில் கொலையுண்ட (அது தற்கொலையாயினும் சமூகத்தால் நிகழ்த்தபட்ட கொலையாகவே பார்க்க முடியும்) சிலுக்கிற்கு இந்த வார பதிவுகளை நீங்கள் அர்பணிக்கலாம்! குறைந்த பட்சம் இந்த பதிவிற்கு நன்றி!
 
பொதுவாக நடிகைகளின் வாழ்க்கை நடிகர்கள் அளவு பணத்தாலும் புகழாலும் சூழப்பட்டதல்ல, தனிமையால் தான் சூழப்பட்டிருக்கிறது. பாலியல் பலிகளாய்த் தான் நடிகைகள் இருக்கிறார்கள். சில்க் சுமிதாவின் கண்களைப்பார்த்தால் அது ஏதோ ஒரு போதையிலும் சோகத்திலும் இருப்பதாய் படும். அது நிரம்பவும் தொந்தரவு செய்யும். அது தவிர்த்து சில்க்சுமிதாவோ மற்ற கவர்ச்சி நடிகைகளோ உடம்பால் மட்டுமே நினைவில் நிற்பது அவலமே....
 
நரேன், ஒரு சின்ன டவுட்டு! பெண்களை கவரும் டாக்டர், கொசுவலை துணியில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு மார்பழகைக் காட்டுபவர்கள், முண்டா, துடையின் பருமனைக் காட்டும் ஆண்களுக்கும் ஷகீலா, சிலுக்குகளுக்கு ஆண் பெண் என்பதைத் தவிர வேறு என்ன வித்தியாசம்?
ஒரு திருத்தம், சிலுக்கை நிறைய பெண்களுக்கு பிடிக்கும். இத்தகைய ஆட்டம் போடும் பெண்களைக் குறித்து பெண் இனத்தில் இரண்டே அபிப்ராயம்- ஒன்று இவளும் பொம்பளையா என்று திட்டி தீர்க்கும் பத்தினிகள், அடுத்து பாவம் என்று பரிதாபப்படுவார்கள். இரண்டு வருடம் முன்பு கேரளாவில் முன்னணி நடிகர்கள், ஷகீலா படத்திற்கு தடைப் போட வேண்டும் என்று கொடி பிடித்தார்கள். அப்போது ஷகீலா, நீங்களும் நடிக வந்தவர்கள், நானும் அப்படியே! ஏன் என்னை வெறுத்து ஒதுக்குகிறீர்கள் என்று பேட்டி கொடுத்தது மலையாள சேனல் ஒன்றில் வந்தது. அவர் சொன்னது சரிதானே? ஆண்கள் உடலைக் காட்டி நடித்தால் ஆட்சியையும் பிடிக்கலாம். ஆனால் பெண்களை ஏன் கேவலமாக நினைக்கிறீர்கள்? இவர்களுக்கு தொழில் இது. உடலும், சதையும் மூலதனம் இதில் ஆண் என்ன பெண் என்ன?
உஷா
 
நன்றி வசந்த், தான்யா. நீங்கள் சொல்வது உண்மை. சிலுக்கின் கண்களில் வழிவதாக சொல்லப்படும் காமத்தினை தவிர்த்து, ஒரு தீராவேதனையின் தவிப்பாய் தான் பார்க்க முடிகிறது. ஒரு சமூக கொலையின் குற்றவாளியாய் என்னையும் உங்களையும் பார்க்க இயலும் என்பது நிரம்ப உண்மை. மிக கீழ்த்தரமான தளங்களில் சுமிதாவினைப் பார்த்தல் ஒரு சக மனிதனுக்கு இழைக்கப்படும் அநிதீயாயாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இருக்கிறது. தன் உடலாலும், கவர்ச்சியாலும் தமிழ்சினிமாவினை வாழவைத்த பெண்ணின் மரணத்திற்கு கூட நிறைய நடிக,நடிகைகள் வராமலிருந்ததும் சினிமாவின் இன்னொரு முகம்.

சிலுக்கு, படாபட், ஷோபா, பிரதிக்யுஷா, மிக சமீபத்தில் சிம்ரனின் தங்கையான மோனல் என நீளும் பட்டியல்களில் நாம் பார்பபவர்கள் அனைவருமே, சமூக அனாதைகள்.
 
நல்ல பதிவு! பாராட்டுக்கள்...
 
நன்றி நாராயணா! சிலுக்கு பற்றி நடிகர் சிவகுமார் சிறிது எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். சிலுக்கு இறந்த பின் அவரது சவக்கிடங்கில் பலர் வரிசையில் காத்திருந்ததாகவும் (என்னத்துக்காக என்றது உங்களின் சிந்தனைக்கே) புத்தகமொன்றில் படித்திருக்கிறேன். (சிங்கார வேலரின் புத்தகமாயிருக்க வேண்டும்).
 
நரைன் உங்கள் பதிவில் சமூகத்தின் நோய்க்கூறுகள் பற்றி தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் நன்றி இந்தப் பதிவிற்கு.பணத்தையும் கொடுத்து ஆடவும் கவர்ச்சி காட்டவும் கேட்டுவிட்டு மனதுக்குள் ரசித்தும் விட்டு பொம்பிளையா அவ என்று கேட்கும் இந்த சமூகத்தை நினைத்துதான் வெட்கப்படவேண்டும்.ரஜனியைப் பற்றிய புத்தகம் குறித்த பேச்சுகளின் நடுவே அதனை இழித்துரைப்பதற்கு சிலுக்கின் பெயர் பயன்படுத்தப்படுகிறது சிலுக்கை விட ரஜனி என்ன உயர்வு அல்லது ரஜனிக்கு சிலுக்கு என்ன தாழ்வு என்று புரியவில்லை.
 
நன்றி கண்ணன், வசந்தன், ஈழநாதன். சில்க் சுமிதா ரஜினிக்கோ அல்லது வேறெவருக்கோ சற்றும் சளைத்தவர் அல்ல. என்ன செய்வது. கணவன் ஊர் மேயப்போகிறான் என்று தெரிந்தும் தன் சிலம்பினை கழட்டி கொடுக்கும் முட்டாள் கண்ணகியை பத்தினி தெய்வமாய் பார்க்கும் நாட்டில், சில்க் சுமிதாக்கள் வெறும் சதைப்பிண்டங்களாகத் தான் தெரிவார்கள்.

இங்கே பதியும், சில்க்கினைப் பற்றி புறம்பேசும் ஆண்களின் மனசாட்சியைத் தொட்டு உண்மை சொல்ல சொல்லுங்கள், எத்தனை பேர் சிலுக்கினை நினைத்து "சுயமைதுனம்" அனுபவித்திருப்பார்களென்று. ஒருத்தனும் மிஞ்ச மாட்டான் என்னையும் சேர்த்து. சில்க் சுமிதா மாதிரியான பெண்களை யூஸ் & த்ரோவாக நினைத்துக் கொண்டிருக்கும் சமூகத்தில் வேறென்ன பெரிதாக எதிர்பார்க்க இயலும்.
 
வசந்தன், நீங்கள் சொல்லும் காரணங்கள் புரிகிறது. இதே நிலைமைதான் சாவித்திரிக்கும் நடந்தது. சொல்ல நா கூசினாலும், அது தான் உண்மை. கோமாவில் இருந்த (கிட்டத்திட்ட 11/2 வருடங்கள்) சாவித்திரியை நடிகையாய் இருந்த காரணத்தினாலேயே பலரும் புணர்ந்துள்ளனர். டாக்டர் முதல் நைட் வாட்ச்மேன் முதற்கொண்டு அனைவரும் இதிலடங்குவார்கள். இதிலிருக்கும் மிகமோசமான மனநோய் அடையாளங்கள் புரியுமென்று நினைக்கிறேன். வெங்கட் போன பதிவில் கூறியது போல், நெக்ரோமேனியா விசயங்கள் எல்லாம் வெளிநாட்டு இறக்குமதியல்ல. இங்கும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
 
சிலுக்கின் கண்களில் ஒருபோதும் நான் காமத்தைக் கண்டதில்லை; ஆழமான ஏளனத்தையே அதில் காணமுடியும். ஆண்களின் முட்டாள்த்தனத்தை அது பார்த்துக்கொண்டே இருக்கும்.
 
நல்ல பதிவு நாராயணன்.

//Ramachandranusha said...
நரேன், ஒரு சின்ன டவுட்டு! பெண்களை கவரும் டாக்டர், கொசுவலை துணியில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு மார்பழகைக் காட்டுபவர்கள், முண்டா, துடையின் பருமனைக் காட்டும் ஆண்களுக்கும் ஷகீலா, சிலுக்குகளுக்கு ஆண் பெண் என்பதைத் தவிர வேறு என்ன வித்தியாசம்?
//

சமூக பார்வையும் தான் வித்தியாசம். இன்னும் நம்மூரில் பெண் என்றால் யூஸ் அண்ட் த்ரோ என்ற பார்வை தங்கியிருப்பது தான் வித்தியாசம். வெளிநாடுகளில் ஆண்களுக்கெனவும், பெண்களுக்கெனவும் நியூடு பார்கள் இருக்கின்றன. அந்த குறையை நம் சினிமாக்கள் ஓரவஞ்சனையுடன் ஆண்களுக்கு தான் அதிகம் செய்கிறது.

எனக்கு என்னமோ பெண் கற்பிதத்தையும் தாண்டி கீழிருக்கும் வறுமை தான் கண்ணில் தெரிகிறது. சிலுக்கு என்ன,அபிலாஷா என்ன, ஷகிலா என்ன எல்லாருக்கும் ஒரே அடிப்படை வறுமை. வறுமையை உடைக்க உந்துதல், ஆண் வர்க்கத்தின் வக்கிரத்திற்கு இரையாகி போகிறது. வறுமை பெண்களுக்கு மட்டும் தானா? சினிமா துறையில் இருக்கும் நிறைய துணைநடிகர்களுக்கும் இது பொது. அண்மையில் கூட ஒரு நடிகர் இறந்து போனார். பெயர் தெரியவில்லை.

//ஆட்டம் போடும் பெண்களைக் குறித்து பெண் இனத்தில் இரண்டே அபிப்ராயம்- ஒன்று இவளும் பொம்பளையா என்று திட்டி தீர்க்கும் பத்தினிகள், அடுத்து பாவம் என்று பரிதாபப்படுவார்கள்//

ஆட்டம் போடும் பெண்களைக் குறித்து ஆண் இனத்திலும் இரண்டே அபிப்ராயம் தான். 1) இவளும் பொம்பளை தான் என்று அவசரமாக தனிமையை தேடிப் போகும் ஆண்கள் 2) பிறகு வெளிவந்து பாவம் என்று பரிதாபப்படும் ஆண்கள்.

//சிலுக்கை விட ரஜனி என்ன உயர்வு அல்லது ரஜனிக்கு சிலுக்கு என்ன தாழ்வு என்று புரியவில்லை.
//

இரண்டும் ஓப்பிட முடியாத தனித்தனி நிகழ்வானாலும் சமூக பார்வையில் பெண் என்ற முத்திரையே சிலுக்கை தாழ்வுக்கு ஆக்கிறது.
 
மிகவும் நல்ல பதிவு. தவ றென்றும் சரி என்றும் சொல்ல இங்கே தகுதிஉள்ளார் யார்? பொது அளவுகோல் இங்கே இல்லை. நமக்கு நம் சூழ்நிலையில் சரியென்று படுவது மற்றவருக்கு தவறாக போகும். பெண்களின் அனைத்து துயரங்களுக்கும் ஏதொ ஒரு வகையில் சில ஆண்களே காரணமாகின்றனர். பாலியல் வக்கிரங்களுக்கு தேடும் வடிகால்களக இப்பெண்களின் ஏழ்மையும் helplessnessஉம் பயன்படுத்திக்கொள்ளபப்டுகின்றன. சமீபத்தில் மாதவிடாய் பற்றிய விவாதம் முடிந்தபின், ஸ்மிதா வைப்பற்றி நீங்கள் எழுதியதும், எனக்கு லஷ்மி நேர்காணல் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை அவரும் ஸ்மிதாவு ம் பங்கு கொள்ளும் schedule படமாக்கப்படுகிறது.ஸ்மிதாவை பலமுறை நீரில் நனைத்து நனைத்து குளியல் காட்சி ஒன்றை படமாக்கி கொண்டிருந்தனர். அப்போது ஸ்மிதாவிற்கு மாத விடாய் என்று சொல்லியிருந்தார். ஒரு பெண்ணுக்கு மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இதே ஒரு ஹீரோவிற்கு தலைவலி என்றாலும் ஷூட்டிங்கை ரத்து செய்துவிடும் தயரிப்பாளர்களுக்கு இது பெரிய அவ்ஸ்தையாகப் படவில்லை. சுமிதாவை பற்றி நான் நினவுகொள்ளும்போது இத்தான் என் நினைவுக்கு வ ரும். உங்களின் புரிதலுக்கும் இப்பதிவுக்கும் நன்றி
 
//அலைகள் ஒய்வதில்லை பாருங்கள். தியாகராஜனின் மனைவியாக வந்து, காதலர்களை சேர்த்துவைக்க முயற்சித்து, அதற்காக, தியாகராஜனிடம் அடிவாங்கும் முன் ஒரு பார்வை பார்ப்பாரே, அது தியாகராஜனுக்கு மட்டுமா, அல்லது ஒட்டுமொத்த ஆண்களின் சமுதாயத்திற்குமா என்பது அவர் மனதுக்கே வெளிச்சம்//

SUPER.

தயவுசெய்து பாலியல் தொழில் செய்யும் பாவப்பட்ட ஜென்மங்களின் அவலங்களை பற்றியும் நீங்கள் ஒரு பதிவு இட வேண்டுகிறேன்.
 
//சிலுக்கின் கண்களில் ஒருபோதும் நான் காமத்தைக் கண்டதில்லை; ஆழமான ஏளனத்தையே அதில் காணமுடியும். ஆண்களின் முட்டாள்த்தனத்தை அது பார்த்துக்கொண்டே இருக்கும்.//
நெத்தி அடி. அதுதான் நான் நினைப்பதும் கூட.
 
ஜெமினி ஒருமுறை, தான் காதல் மன்னனாய் கொடிக்கட்டி பறந்த காலத்தில் தன்னைப் பார்க்க பெரிய இடத்து பெண்கள் எல்லாம் வருவார்கள் என்று பெருமையாய் சொல்லிக் கொண்டார். பாகவதரிடம் மோகம் கொண்ட பெண்களைப் பற்றிய கதைகளும் உண்டு, ஆனால் இவை எல்லாம் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
அறந்தைநாராயணன் அவர்களின் நாவல் ஒன்று சினிமா உலகின் சீரழிவை குறித்து எழுதப்பட்டுள்ளது. பெயர் ஞாபகமில்லை. நடிகர், நடிகைகளின் அந்தரங்கம், ஓரளவு பெயரை கண்டுப் பிடித்துவிடலாம், அதில் தெய்வீகமாய் நடித்து பெயர் பெற்றவர், படங்களில் நடிக்க வரும் அழகிய இளைஞர்களை பார்த்தால் விடமாட்டார் என்று வரும். ஆக ஆணோ, பெண்ணோ திரையுலகம் இவ்வளவுதான். தவறு முழுவதும், சின்னஞ்சிறு வயதில் நடிப்புலகில் தள்ளும் பெற்றோர், உடன்பிறந்தோர்களை சொல்ல வேண்டும்.
எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொண்ட நடிகையர் கணவன் என்று ஒருவனை ஏற்றுக் கொண்டு பிள்ளைகளை பெற்று செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் இந்த சாமார்த்தியம் எல்லாருக்கும் வருவதில்லை. வருபவன், அனைவரும் அவளை வைத்து ஆதாயம் காணுவதிலேயேத்தான்
குறியாய் இருக்கிறார்கள். கவர்னர் பீடி என்று ஒன்று உண்டு. அதில் கவர்னருக்கும், பீடிக்கும் என்ன சம்மந்தமோ, அதே சம்பந்தம் நடிகையின் கணவனுக்கு என்றார் கண்ணதாசன்.
ஆனாலும் பதினைந்து பதினாறு வயதில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமிகளை நடிக்க அனுப்பினால், எத்தனை கொடுமைகளை அந்த சின்ன வயதில் அந்த பெண்கள் அனுபவிக்க வேண்டும்?
அந்த வெறுப்பே, ஆண்கள் மேல் ஒவ்வாமையாய் மாறிவிடுகிறது. நினைக்கும்பொழுது, மனம்
பரிதாபமே படுகிறது.
 
சின்ன வயதில் சினிமா பற்றிப் படித்த கதைகளில் நினைவில் தங்கியிருப்பது, அப்போதைய பாக்கெட் சைஸ் தினமணி கதிரில், கி.கஸ்தூரிரங்கன் எழுதித் தொடராக வந்த "இன்று புதிதாய்ப் பிறந்தோம்". ராணி என்ற சேரிப் பெண், ஒரு பிரபல நடிகையாவது, அதன்மூலம் வரும் சிக்கல்கள் குறித்தும். கிட்டத்தட்ட சிலுக்கின் கதை மாதிரியே இருக்கும். இப்போது படித்தால் பிடித்திருக்குமா என்று தெரியுமளவு தாக்கமேதும் ஏற்படுத்தவில்லை எனினும்...
 
அன்பு நரேன்
உங்கள் சில்க் பற்றிய பதிவு மிக அருமை!!!
உங்கள் பதிவை படித்து ஆண் ஆதிக்க சமுதாயம் தன் மனச்சாட்சியை கேட்டுப் பார்க்கட்டும்.
உங்களைப் போலவே நானும் சிலக் சுமிதா மீது நல்ல அபிப்பிராயம் மற்றும் அவருடைய கண்களில் தெரியும் ஏக்கதைக் கண்டு வருத்த படுபவன். உங்களது இந்த பதிவு சில்கிற்கு கிடைக்கும் உண்மையான கண்ணீர் அஞ்சலியாக இருக்கட்டும். இதுப் போல நிறைய எழதுங்கள்.
வணக்கம்.
நன்றி.
மயிலாடுதுறை சிவா...
 
கவிதை எழுதுபவர்களைக் கடித்துக் குதறும் அளவுக்கு கோபத்துடன் நம்மில பலர் இருந்தாலும், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இதைச் சொல்கிறேன்.

சில்க் சுமிதா இறந்தபோது ஒருவர் எழுதிய கவிதை ( கவிஞர் மேத்தா ? ).

எத்தனையோ பேருக்கு
நீ
அட்சய பாத்திரமாய் இருந்தாய்,
ஆனால்
உன்னையே நீ ஏன்
பிச்சைப் பாத்திரமாய் உணர்ந்தாய்.. ?

கவிதை எனது ஞாபகத்தில் இருந்து எழுதப்பட்டது , ஆனால் வரிகள் இதுதான். இந்தக் கவிதை எத்தனையோ உண்மைகளை அழகாகச சொல்கிறது.
 
வித்தியாசமான பதிவு.
//சிலுக்கு சுமிதா என்கிற பெண் தமிழ் சினிமாவினையும், தமிழ் ரசிகர்களையும் மடையர்களாகிவிட்டு, தன் இருப்பினையும், தன் ஆளுமையையும் ஆழமாக பதித்து விட்டு போய்விட்டார்.//
மிகச் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள் நரேன். சில்க் சுமிதா வண்டிச்சக்கரம் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளியிட்டிருக்கின்றார் என்று கேள்விப்பட்டிருகின்றேன். சில தினங்களுக்கு முன் பிரதாபோத்தன் இயக்கிய ஜீவா என்ற ஒரு படத்தைப் பார்த்தபோது சிலுக்கு அதிலும் நடித்திருந்தார். //சில்க் சுமிதாவின் கண்களைப்பார்த்தால் அது ஏதோ ஒரு போதையிலும் சோகத்திலும் இருப்பதாய் படும்// என்று தான்யா பின்னூட்டத்தில் சொன்னதுபோலத்தான், சிலுக்கின் கண்களைப் பார்க்கும்போது எனக்கும் தோன்றியது.
........
கொஞ்சம் இந்தப்பதிவிற்கு அப்பால். இங்கே வலைப்பதிவுகளில் பல்வேறு நண்பர்கள் எழுதும் பத்திகளை வாசிக்கும்போது எனக்கு மிகுந்த பிரமிப்பு ஏற்படுகிறது. சிற்றிதழ்களோ அல்லது வெகுசன இதழ்களிலோ வருவதுபோன்றில்லாமல் தனித்துவமாய் புதியவகையான எழுத்துக்களை இந்த வலைப்பதிவுகளில் வாசித்துவருகின்றேன். ஆகக்குறைந்து இவ்வாறு எழுதப்பட்ட சில பத்திகளை தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாய் கொண்டுவரவேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருக்கிறது. இதை ஒரு எண்ணமாக இங்கே பதிவுசெய்கின்றேன். யாரேனும் இப்படித் தொகுத்து புத்தகமாக வெளியிடவிரும்புவார்களாயின் அவர்களுக்கு என்னாளான உதவிகள் செய்யத் தயாராகவிருக்கின்றேன். இது இணையத்தில் இலக்கியம் இல்லை என்று சொல்லும் இலக்கியவாதிகளுக்கு சவால் விடுவதற்காகவல்ல, இன்னும் இணையம் நெடுந்தொலைவு நட்சத்திரமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கும் வாசகர்களுக்காய், இதைச் செய்யவேண்டும் என்று நினைக்கின்றேன்.
 
தான் ஏற்று நடித்த பாத்திரங்களில் பிடித்தது என்று 80களில் ஒரு பேட்டியில் சில்க் குறிப்பிட்டது சேலை கட்டிய பெண்ணாய் நடித்த படத்தை பற்றி ('கோழி கூவுது' என்று நினைக்கிறேன்). சில்க் இறந்தபின் அவரைப் பற்றி மனோரமா அளித்த ஒரு உருக்கமான பேட்டியும் நினைவுக்கு வருகிறது.

இது தொடர்பான இன்னொரு செய்தி. சில மாதங்களுக்கு முன் 'ஹிந்து' வில் சென்னைப் பாலியல் தொழிலாளிகளைப் பற்றி ரம்யா கண்ணன் ஒரு செய்திக் கட்டுரை எழுதியிருந்தார். அதில் பெரும்பாலானவர்கள் ஆந்திரத்திலிருந்து சினிமா ஆசைக்காட்டி அழைத்து வரப்பட்டவர்கள் என்று விவரிக்கப்பட்டிருந்தது.
 
//டிசே:இங்கே வலைப்பதிவுகளில் பல்வேறு நண்பர்கள் எழுதும் பத்திகளை வாசிக்கும்போது எனக்கு மிகுந்த பிரமிப்பு ஏற்படுகிறது. சிற்றிதழ்களோ அல்லது வெகுசன இதழ்களிலோ வருவதுபோன்றில்லாமல் தனித்துவமாய் புதியவகையான எழுத்துக்களை இந்த வலைப்பதிவுகளில் வாசித்துவருகின்றேன்//

100% உண்மை.

//ஆகக்குறைந்து இவ்வாறு எழுதப்பட்ட சில பத்திகளை தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாய் கொண்டுவரவேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருக்கிறது. இதை ஒரு எண்ணமாக இங்கே பதிவுசெய்கின்றேன்//

நானும் இந்த கருத்தை ஆதரிக்கிறேன். டப் டப் டப்......
 
என்ன ஆச்சர்யம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் பங்களூர் நண்பர், உங்கள் வலைப்பதிவினை புத்தகமாக கொண்டு வாருங்கள் என்று தூங்கிக் கொண்டிருக்கும் என் ஈகோவின் மீது தண்ணீர் தெளித்திருந்தார். இப்போது டிசேவும், விஜயும். ஆனால், இந்த கருத்தினை ஒத்துக்கொள்கிறேன். மிகத் தனித்தன்மையான இலக்கிய போலித்தனங்கள் இல்லாத எழுத்துக்களை வலைப்பதிவுகளில் படிக்க முடிகிறது. ஊடி ஆலனின் கூற்றா என்று நினைவில்லை, ஆனால் எங்கோ படித்ததிது "ஒரு சாதாரண மனிதனை சாதாரண மனிதனாக காட்டுவது தான் உலகின் மிக கஷ்டமான எழுத்து" என்னளவில் நான் முகப்பு பத்தியில் எழுதியிருந்தது போல் எழுதுவது என்று அமர்ந்தாலே போலித்தனங்கள் வந்துவிடுகிறது, இதனை தாண்டி, சிந்தனையைத் தூண்டும், மனதை தொடும், சிந்திக்க வைக்கும் எழுத்துக்கள் மிகக்குறைவு. எழுத்தாளர்களையும் நாம், ஹிட் பட இயக்குநர்களைப் போன்றே பார்க்கிறோம். ஒவ்வொரு எழுத்தும் பொன்னாலும், மனதாலும் பொறிக்கப்படவேண்டியவை என்று எதிர்பார்த்தலின் கோளாறுகளும் இதற்கு காரணமென்று தோன்றுகிறது. ஆயினும் வலைப்பதிவுகளை புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இல்லை. இல்லை.

விஜய் போல் நானும் மேஜையினை டப்..டப்...டப்
 
இங்கு பின்னுட்டம் இட்ட நண்பர்களிடம் ஒரு கேள்வி. சிலுக்கு போன்ற பெண்களின் மீது உங்கள் கரிசனத்தைல் கொட்டிவிட்டீர்கள். இவை உண்மையான கரிசனமா அல்லது கும்பலோடு கும்பலாய்
பதிவேட்டில் உங்கள் பெயரை பதிவு செய்கிறீர்களா?
உஷா
 
த்த்தோ பார்ரா.... இந்தாம்மே...இது இஸ்கூலு கும்பலோட கும்பல வருகை பதிவேட்டுல கையெழுத்து போடுறோம்.

இந்தாம்மே நீங்க கேட்ட கேள்விக்கும் என்னுடைய பழைய பதிலும்

//ஆட்டம் போடும் பெண்களைக் குறித்து பெண் இனத்தில் இரண்டே அபிப்ராயம்- ஒன்று இவளும் பொம்பளையா என்று திட்டி தீர்க்கும் பத்தினிகள், அடுத்து பாவம் என்று பரிதாபப்படுவார்கள்//

ஆட்டம் போடும் பெண்களைக் குறித்து ஆண் இனத்திலும் இரண்டே அபிப்ராயம் தான். 1) இவளும் பொம்பளை தான் என்று அவசரமாக தனிமையை தேடிப் போகும் ஆண்கள் 2) பிறகு வெளிவந்து பாவம் என்று பரிதாபப்படும் ஆண்கள்.

அதே பர்தாபம் தான் எங்களுக்கும்...ஆமா....
 
உஷா, கண்டிப்பாக என்னளவில் வருத்தப்பட்டிருக்கிறேன். இல்லையென்றால் இந்த பதிவினை எழுதியிருக்க மாட்டேன். பின்னூட்டமிட்ட அனைவரிடமும் அதே கரிசனம் கண்டிப்பாக இருந்திருக்கும். அதற்காக பின்னூட்டமிடாதவர்கள் எல்லாம் கரிசனமற்றவர்கள், கவலையற்றவர்கள் என்று பொருளல்ல, அவரவர் அலுவல்களுக்கிடையே கிடைக்கும் நேரத்தில் பதிகிறார்கள் அவ்வளவு தான். என்னதான் நீட்டி முழக்கி எழுதியிருந்தாலும், இன்னமும் சிலுக்கு சுமிதா என்கிற பெண்ணின் வேதனையை மொழிபெயர்க்க இயலவில்லையோ என்கிற எண்ணம் இருக்கிறது. ஒருவேளை நான் ஆணாய் இருப்பதும் காரணமாய் இருக்கலாம். இதைத்தாண்டி, யாரேனும் உங்களைப்போன்ற பெண்கள் இவ்வாறு சமூக வன்முறைக்குள்ளாகும் பெண்களின் உளவியல் பற்றி எழுதலாம்.
 
நரேன், பதிவின் ஓரத்தில் சிலுக்கின் கிறக்கமான படம் போட்டிருந்தால், முதல் சந்தேகம் உங்கள்
மேல் வந்திருக்கும். ஆனால் இங்கு குறிப்பிட்டு யாரையும் சொல்லவில்லை. ஆனால் இவ்வளவு பேர்கள்
இட்ட பின்னூட்டம் என்னை யோசிக்க வைக்கிறது :-))
விஜய், இந்த பதில் உங்களுக்கும் சேர்த்துதான்
 
நாராயணன்: ஒரு வகையில் சில்கின் கதை தமிழ் நாட்டு ஆண்களின் பாலியல் அறிவின்மை, வக்கிரத்தின் கதை. ஒண்டுக்குடுத்தனத்தில் வாழும் எத்தனை தம்பதிகளுக்கு குடும்ப சுகம் கிடைக்கிறது. நான் வளர்ந்த காலங்களில் எங்கள் தெருவிலேயே ஒரே ஒரு பணக்காரர் வீட்டில்தான் படுக்கை அறை உண்டு! தமிழ்நாட்டின் சினிமா, இலக்கியம், விமர்சனம் எல்லாவற்றிலும் இந்த sexual frustration விரவிக்கிடக்கிறது. நல்ல பெண் இன்பம் சுகிக்கும் ஒரு ஆணுக்கு பிற பெண்ணின் மீது வக்கிர ஆசை வர வழியே இல்லை. சில்க் தற்கொலைக்கு முன்பு 'தற்கொலை தடுப்பு' இயக்கத்திற்கு ஒரு தொலைபேசி கொடுத்திருக்கிலாம். 'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?' பாவம் சில்க்.
 
கண்ணன், தமிழ்நாட்டில் இருப்பது "sexual frustration" அல்ல "sexual starvation" நந்தா படத்தில் ஒரு வசனம் வரும், பெண்ணை கற்பழித்த ஒருவனைப் பற்றி பேச்சு வரும் போது ராஜ்கிரண் ஒரு வார்த்தை சொல்லுவார் அதுதான் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். "உள்ள தூக்கிப் போட்டா எல்லாம் சரியாயிடுமா. 7 வருஷம் உள்ள இருந்து நல்லா தின்னு கொழுத்து, அடுத்து எவ கிடப்பான்னு கையில் புடிச்சிக்கிட்டு அலைஞ்சிகிட்டு இருப்பான்" அதை கதைதான் இங்கேயும். காமம் இங்கே காற்றினைப்போல் பரவிக் கிடக்கிறது, குளிர் ஜுரம் வந்து நடுங்கும் நோயாளி போல், எல்லோரும் உள்ளே நடுக்கமும், வெளியே சிரிப்புமாய் இருக்கிறார்கள். மஞ்சள்காமாலை கண்ணுக்கும் எல்லாம் மஞ்சளாய் தெரிவதுபோல், பார்க்கும் பெண்களெல்லாம் இச்சை இயந்திரங்களாக தெரிவது தவிர்க்க முடியாமல் போய்விடுமோ என்கிற பயமுள்ளது. ஆண் பெண் பற்றிய நல்ல தெரிதல், புரிதல் இருந்தாலேயொழிய வேறெதுவும் மாற்றத்தை கொண்டுவர இயலாது.
 
"மிகக்கொடுமையான விசயம், தான் ஒரு பெண்ணின் கவர்ச்சியினால் உந்தப்பட்டு அதற்கு அடிமையாய் பைத்தியம் பிடித்து அலைந்ததை ஒத்துக்கொள்ளாமல், சுமிதாவைப் பற்றி பேசுவதே கலாச்சார சீர்கேடு என்பதாய் திரித்திருக்கும் "தமிழ்க் கலாச்சார காவலர்களின்" தொண்டினை நினைத்தால் புல்லரிக்கிறது."
யெஸ். ஒரு (தமிழ்)மாணவர் சொன்னார் 'ஒரு கற்பழிக்கப்பட்ட (அவர் உபயோகித்த வார்த்தை) பெண்ணைக்கூட திருமணம் செய்வேன் -அது அவளது தவறல்ல - ஆனால் ஒரு நடிகையை..இல்லை" என்று. நடிகைகள் தொடர்பாக அத்தகைய பார்வைக்கு (பாலியல் தொழிலாளிகளை ஒத்த) அது அவர்கள் 'தேர்ந்தெடுத்த' ஒன்று என்கிற எண்ணமும் காரணமென நினைக்கிறேன்.

உங்களுடைய பதிவு முக்கியமானது.
ரவிக்குமார் காலச்சுவடு இதழில் சுனாமி தொடர்பாக 'கருணையின் அதிகாரம்' என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் (நாங்கள் 'கொடுக்கிறோம்' என்பதே நாங்கள் 'பெறுபவர்கள்' மீது வைக்கிற வன்முறை என்று) ஒரு நடிகை மீதான பொதுமனதின் வெறுப்பும் பரிதாபம் கூட அப்படித்தான் படுகிறது. குமுதத்தில் நடிகையின் கதை வந்தபோது நடிகை ரேவதி எதிர்த்தார் - நினைக்கிறபோது ஆட்களிடமிருந்து வருகிற தங்களது வாழ்வை எதுவும் செய்யப்போகாத 'வெறுப்பும் பரிதாபமும்' வேண்டாமலேயே நடிகைகள் இவை தொடர்பாக வெளியில் பேசுவதில்லை என்று தோன்றுகிறது.
உங்களுடைய பதிவில் பரிதாபத்திற்குப் பதில் அக்கறையும் நேர்மையும் இருப்பதால் பலரை தாக்கியிருக்கும். நானும்,
டீ.ஜே மற்றும் விஜய் சொன்னதை வழிமொழிகிறேன்!
 
அடடா புல்லரிக்கிற்து. எல்லா ஆண்களும் இப்படியிருந்துவிட்டால்/இப்படியிருந்திருந்தால் சினிமாவில் சில்க்கு மின்பும் பிறகும் பெண்கள் கஷ்டப்பட்டு நடித்து நாட்டியமாடி பணம் சம்பாதிக்க மாட்டார்களே என்று நக்கலாக எழுதலாம் என்று காலையில் வந்தேன். உஷா ஒரு பெரிய போடாகப் போட்டிருந்தார்.

டிஸ்க்ளெய்மர்:
பதிவை எழுதிய நாராயணனைக் குறித்ததல்ல இந்த மறுமொழி பொதுவானது.

நம்ம ஆண் குலச் சிங்கங்கள் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்களா என்று மெய் சிலிர்க்கிறேன். ;)

=================

//யாருக்கேனும் நன்றாக சிலுக்கு சுமிதாவினைப் பற்றி தெரிந்திருந்தால் புத்தகமாய் எழுதுங்கள். தாராளமாய் ஒன்றுக்கு பத்தாக வாங்கி கொள்கிறேன்.//

நானும். சில்க்கின் தைரியம் மிகவும் பிடிக்கும். சிலுக்கு மட்டுமல்ல ராதிகா ரேவதி சுஹாசினியில் இருந்து தேவயானி முதல் இன்னும் யாரெல்லாம் தைரியமாக நின்று வாழ்கிறார்களோ அவர்களையெல்லாம் பிடிக்கும்.
இப்போதும் நினைத்து ஆச்சரியப்படுவது ராதிகாவை.
 
உஷாவும் மதியக்காவும் ஆண்சிங்கங்களை சீண்டியதால் கோபம் பொத்துக்கொண்டு எழுதவில்லை என்பதை முதலில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நரைனின் இன்னொரு பதிவில் சொன்னதுபோன்று காலத்தோடு நானும் மாற்றத்துக்குள்ளாகியே வந்திருக்கிறேன்(இது மற்றவர்களுக்கும் பொது அளவுகளில் வேறுபடும்)இங்கே பதில்கூறிய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மனநிலை இருந்திருக்கலாம்.
நரைன் சிலுக்கு கேவலப்படுத்தப்படுவதற்கு தனது மனக்குமுறலை வெளிக்காட்டியிருக்கலாம்.தங்கமணி சிலுக்கின் பார்வையே ஆண்களை ஏளனம் செய்வதென்று ஆண்களைப் பார்த்து நகைத்திருக்கலாம்.சந்தர்ப்ப சாக்கில் என்னைப்போன்றவர்கள் உள்ளே வந்து அட்டென்ஷன் போட்டுவிட்டுப் போயிருக்கலாம்.நிச்சயமாக எல்லோரும் ஒரே பார்வையில் அநியாயத்துக்கெதிரான குரலாய் இதனைப் படித்துப் பின்னூட்டியிருக்கமாட்டார்கள்.
என்னைப் பொறுத்தளவில் சிலுக்கை ரசித்ததுமில்லை வெறுத்ததுமில்லைதமிழ் சினிமாவில் வரும் கவர்ச்சி நடனங்களும் அசைவுகளும் எப்போதும் ஒத்து வருவதில்லை அவை பார்ப்பவனை முட்டாளாக்குபவை.ஒரு துண்டுக் காட்சிக்காக முழுப்படத்தையும் சகித்துக்கொண்டு பார்க்கப்பண்ணுபவை.அந்த வகையில் அதுபற்றி அபிப்பிராயம் இருந்ததில்லை.

நடிகை என்பதையும் மீறி பாலியல் ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டவர் என்ற முறையில் நரைனின் கட்டுரை படித்தபின்னர் குற்ற உணர்வும் எரிச்சலும் வந்தன அதையே பகிர்ந்துகொண்டேன்(என்னைப்பற்றி மட்டும்தான் கூற முடியும்)இதைப் படிக்க முன்னர் யாராவது சிலுக்கின் நீலப்படம் இருக்குதென்று சொன்னால் ஒருவேளை பார்க்க ஆசைப்பட்டிருக்கலாம்.இப்போது மாட்டேன்
 
ஈழநாதன், நாராயணனின் பெஸ்ட் பிரண்டு, சிலுக்கு என்ற விஜயலட்சுமியைப் பற்றி மிக சோகமாய் ஆண் வர்கத்தை பழித்து எழுதியிருந்தார். சாருவை தப்பாக நினைத்து விட்டேனே என்று சிலுக்கை மறந்து சாருவை நினைத்து மனம் கலங்கினேன். அதற்கு பிறகு அவரின் பெண்மையைப் போற்றுதலைக் கண்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன்.அப்புறம் கோணல் பக்கத்தில் ஒருமுறை ஸ்பென்சர் பிளாசாவில் உட்கார்ந்துக் கொண்டு, இன்றைய பெண்களின், அதாவது சிறுமிகள் மற்றும் சிறுபெண்களின் உடல் அமைப்பை கணித்து எழுதியிருந்தார். அதாவது மெல்லிய உடல் வாகு,ஆனால் முன்னால் மட்டும் பெரியதாக இருக்கிறது என்று விலாவாரியாய் புள்ளிகணக்கு எடுத்திருந்தார். பெண்ணைப் போற்றுகிறேன் என்றவன் செய்யும் செயலா இது? இங்கு பதிவேட்டில் கையெழுத்துப் போட்டவர்களின் எண்ணிக்கை ஆச்சரியமாய் இருக்கிறது, மனம் நம்ப மறுக்கிறது
உஷா
 
//இங்கு பதிவேட்டில் கையெழுத்துப் போட்டவர்களின் எண்ணிக்கை ஆச்சரியமாய் இருக்கிறது, மனம் நம்ப மறுக்கிறது//

எனக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
 
what is your view on Sornamalya..
 
மேலேயுள்ள தமிழனுக்கும்(thamizhan) டிசேயிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதை ஒரு தெளிவுக்காய் சொல்லிக் கொள்கின்றேன். வர வர வலைப்பதிவுகளில் நான் இல்லை அவன், அவனில்லை நான் என்று மறுப்பறிக்கை விடவே நேரம் சரியாகிவிடும் போலக்கிடக்கிறது. ஏற்கனவே ரோசாவசந்த் இதில் நொந்து நூலாகிப்போயிருக்கின்றார் :-(. எங்கை யாராவது இந்த situationற்கு ஏற்ற பாடல் ஒன்றைப் போடுங்கப்பா....அதைக்கேட்டுக்கொண்டு நிம்மதியாய் உறங்கிவிடுகின்றேன்.
 
ஆறு மனமே ஆறு..அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ;-)
 
எல்லா பின்னூட்டங்களையும் படிக்கல.
பதிவு சூப்பர்.

ஒரு coversationஇல்
prostitution is a jobனு சொல்லப்போக எங்கியோ போய் முடிஞ்சுது. anyway,

இப்போ சுஹாசினிகூட எனக்கு பழக்கம் ஏற்பட்ட பின்னாடி "என்னா, அடுத்த மணி படத்துல, என்னா ரோல்" அப்படின்னு கிண்டலா கேட்டப்போ, "ஐட்டம் சாங்க் கேட்டிருக்கேன்"னு நானும் கிண்டலா நான் சொல்ல, "ஓ, அது கிடைச்சாக்கூட பரவாயில்லன்னு போயிடுவீங்களா"ன்னு தோழமை கேட்க, "அது கிடைச்சாகூடவா, என்னா பேசறீங்க, ஐட்டம் சாங் தான் என்னோட ஜன்ம ஆசையே"ன்னு நான் சொல்ல தோழமை கொஞ்சம் அதிர்ந்து போக, ஓக்கே, ராங்கான இடத்துல ராங்கா விளையாடிக்கிட்டிருக்கோம்னு பேச்ச மாத்திட்டேன். :D

பெண்னியவாதிகள் பலவிதம். கோபம், கேள்வி கேட்பது, "சொன்னதை சொன்னபடியே" செய்ய மறுப்பது is the starting point. how do they steer from there depends on their surrounding/circumstances/exposure/upbringing(ability to reevaluate themselves comes from unsuppressed upbringing) and the things each one have suffered in the past or the sufferings they have witnessed or come across. I wouldn't say who/what is right and who/what is wrong. there is nothing called "right" or "wrong".
தெரிஞ்சவரைக்கும் புரிஞ்சு, முடிஞ்சவரைக்கும் வாழ முயற்சி எடுத்திக்கிட்டு..... we will survive. :)
 
நரேன்,
நல்ல பதிவு. பொதுவா சினிமா நடிகைகளின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்துவிட்டு பெருமூச்சு விடும் நாம் அவர்களின் இருண்ட பகுதிகள் அதிர்ச்சியாக இருக்கும் சமுதாயத்தில் இருக்கும் பலம் பொருந்திய அனைவரது காம வெறியை திருப்த்தி படுத்த வேண்டும். சமுகத்திலும் நல்ல பேர் கிடையாது. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமும் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. சினிமா துறையில் ஒரு நண்பர் சொன்னது பெரும்பாலான நடிகைகள் காதல் இல்லாவிட்டாலும் ஒரு நடிகரை காதலன் என்று சொல்லிக்கொள்வது பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்கவே என்று.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]