Mar 19, 2005

குண்டூசிகளை முன்வைத்து.....

குண்டூசிகள் அளவில் மிகச்சிறியவை. பெரிதாய் விஷயங்கள் இல்லாதவை. ஆனால் வீரியமானவை. புதிதாய் ஷோருமில் வாங்கிய சட்டையை போடும்போது, காலருக்கடியிலிருந்து சுருக்கென்று கழுத்தினை குத்தும் குண்டூசிகளின் வலி ஜென்மத்திற்கும் மறக்காது. சுருக்கென்று குத்தும்போது இருப்பினை உணரவைப்பவை. குத்தும் போதும், குத்திய பிறகும், அதி ஜாக்கிரதையாக அதனதன் வலியை நினைவில் தேக்கிவிட்டு செல்லுபவை.

சந்திரன் கூட குண்டூசிகள் என்று தனியாக ஏன் எழுதி வருகிறீர்கள் என்று கூட கேட்டதின் பதிலிது. [குண்டூசிகள் படிக்க என் முந்திய பதிவுகளை படியுங்கள்] நான் எழுதிய குண்டூசிகள் நகமும், சதையுமாய் என் வாழ்வில் நடந்த நிகழ்வுகள். கண்களுக்கு மெல்லியதாய் தெரியும் குண்டூசிகள், காரியத்தில் மிக அழுத்தமானவை. அந்நிகழ்வுகளினூடே வாழ்வினைப் புரிந்து கொள்ளும் அனுபவங்கள் கிடைத்தது. 100 புத்தகங்களை விட ஒரு அனுபவம் அதிகமாய் கற்றுக்கொடுக்கும். அசிரத்தையும், எள்ளல் பார்வையும் வாழ்வில் எவ்வளவு கீழ்த்தரமானவை என எனக்கு விளங்க வைத்தவை இந்த குண்டூசிகள். சமூக கவலையின்மையும், கிண்டல் மனப்பான்மையும் எந்தளவிற்கு தரம் குறைந்தவை என செவிட்டில் அடித்தது போல் சொல்லியவை இந்த குண்டூசிகள். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று படித்து பல்கலைக்கழக முதல் மார்க் வாங்கியிருந்தாலும், யதார்த்தத்தில் ஒருநாளும் கடைப்பிடித்ததில்லை நான். அகங்காரமும், தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய எண்ணங்களும்,குறை பார்வையும், தனி மனித மதிப்புகளை எப்படி குப்பைத்தொட்டியில் கடாசும் என்று ஆணித்தரமாய் காட்டியவை குண்டூசிகள். இந்த கருத்துக்களை புரிந்து கொள்ள எனக்கு வருடங்களாகின. வேணு அரவிந்தும், சேரனும், கோபி கிருஷ்ணனும் எதுவும் சொல்லாமல் ஒரு பிரளயத்தை மனதினுள் உண்டாக்கிவிட்டு போய்விட்டார்கள்.

இதன் பின்புலமோ அல்லது விவரங்களோ அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இது ஒரு பெரிய நிகழ்வாகவும் அவர்கள் வாழ்வில் இருக்கப்போவதில்லை. ஆனால், எனக்கு இந்த நிகழ்வுகள் வாழ்வின் பிம்பங்களை கலைத்துப்போட்டன. நம் எண்ணங்கள் என்பதை யுகயுகமாக தொடரும் மனித வேட்கையின் மொத்த குவியல் என்று படித்திருக்கிறேன். வாழ்க்கை என்பது என்ன என்பது பற்றிய கேள்விகளும், வாழ்வில் சாதிக்க நினைப்பது என்ன என்பதையும், சக மனிதர்களைப் பற்றிய கவலையும், உலகினைப் பற்றிய உலகார்ந்த பார்வையும் தேவை என கோடிட்டுக் காட்டின. மென்பொருள் வாழ்க்கையில் துக்கங்கள் பெரிதாய் ஏதும் கிடையாது. ஆலன் சோலி ட்ரெளசர்களும், பேசிக் சட்டைகளும், பிட்சா கார்னர் பர்கர்களுமாய் இருந்த வாழ்வினைத் திருப்பிப் போட்டு, பிச்சைக்காரர்களையும், திருடர்களையும், பாலியல் தொழிலாளிகளையும் மனிதர்களாக பார்க்க வழி கோலியவை குண்டூசிகள். பிரபலங்கள் என்றில்லை, வடசென்னை கிரவுன் தியேட்டர் சாலையில் 10 கலர் சாக்பீஸ்களோடு, ராமனையும், அனுமனையும், யேசுவையும் வரையும் சாலையோர ஒவியன் வரை திரும்பும் திசையெங்கும் ஆசான்களாய் இருக்கிறது உலகம். பார்க்கும் பார்வையிலும் மனிதர்களை அனுகவதிலும் தான் ஒளிந்திருக்கிறது வாழ்தலின் ரகசியம்.

மனிதர்களை பற்றிய என் பார்வையும், நிறுவனமாக்கப்பட்ட வரலாறுகளும், நிர்ணயிக்கப்பட்ட எண்ணங்களின் மீதும் கேள்விகள் எழுந்தன. இது என்னுடைய மீட்சி புராணமல்ல, இன்னமும் மீளாமல் இருப்பவர்களுக்காக எழுதப்படும் வாக்குமூலம். தன்னிலிருந்து விலகி தன்னையும் உலகையும் பார்பவன் தான் சிறந்த மனிதன். தன்னைப்பற்றிய சுயமதிப்பீட்டோடும், சகமனிதர்களைப் பற்றிய வாஞ்சையோடும் தொடர்ந்து இருந்து வருவதை விட பெரிதாய் எதுவும் சாதித்துவிடப்போவதில்லை நாம். வாழ்க்கை ஒரு மாயை என்கிற தத்துவார்த்த தளத்திற்கு போகாமல், அதே சமயம் ஒரு ஆலமரத்தினை விடவும், ஒரு கடலாமையை விடவும் குறைந்தே வாழும் வாழ்வின் யதார்த்ததை நினைவில் நிறுத்தி, வாழ்வினைப் பற்றிய கேள்விகளை தொடர்ந்து மறுவாசிப்பு செய்யலாம் என்று தோன்றுகிறது.

சாதாரணங்களின் வாயிலாய் வாழ்வின் அசாதாரண எல்லைகளை அறியமுடியும் எனக் காட்டிக் கொடுத்த டிவிஎஸ் 50யும், பிரிந்து விழுந்த புத்தகமும் வேர்கள் ஏதும் இல்லாவிடினும் என்னளவில் போதிமரங்கள்தாம். படித்தலும், படித்தலின் அர்த்தங்களின் புரிதலும் புரிய வருடங்களாகின. எல்லோர் வாழ்விலும் ஏதேனும் குண்டூசிகள் குத்திருக்கும். குத்திய குண்டூசிகளை குப்பையில் தூக்கிப்போடும் வேளையில் குத்திய இடங்களையும், வலிகளையும் மறுபார்வை பார்ப்பது இனி குண்டூசிகள் குத்தாமல் ஜாக்கிரதையாய் இருக்க உதவும்.

குண்டூசிகள் இல்லாமலும் பேப்பர்களை சேர்க்க இயலும், ஒரு காற்றில் சிதறிவிடக்கூடிய அபாயங்களோடு. குண்டூசிகள் பெரும்பாலும் புத்தகங்களோடு வருவதில்லை, மேலும் மனிதர்களை படிப்பதை விட பெரிய புத்தகமிருக்கிறதா உலகத்தில்!

Comments:
Nice
 
அருமை அருமை அருமை நரேன் படித்து முடிக்கும்போது ஆயாசமாக உணர்கிறேன் வாழ்வில் குத்திய சில குண்டூசிகளையாவது திரும்பிப்பார்க்க முனைதலே எம்மை நல்ல மனிதர்களாக்க முனைவதின் முதற்படியாகும்.ஒவ்வொருவரும் தான் தனது என்ற எண்ணத்திலிருந்து வெளியே வந்து தம்மைப் பற்றிய சுய மதிப்பீட்டையும் பிறரைப் பற்றிய புரிதல்களையும் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பது காலத்திற்கேற்ற கூற்று.அதுவும் வலைப்பதிவுகளின் இவ்வார விவாதப்பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது முக்கியமாகப் படுகிறது.
 
ஆகா அருமை நாரயண்!!!
..aadhi
 
//ஒரு ஆலமரத்தினை விடவும், ஒரு கடலாமையை விடவும் குறைந்தே வாழும் வாழ்வின் யதார்த்ததை நினைவில் நிறுத்தி, வாழ்வினைப் பற்றிய கேள்விகளை தொடர்ந்து மறுவாசிப்பு செய்யலாம் என்று தோன்றுகிறது.//

:)
 
//மனிதர்களை படிப்பதை விட பெரிய புத்தகமிருக்கிறதா உலகத்தில்!//
உண்மைதான் நரேன். புத்தகங்கள் ஓரளவு தான் நம்மை வழிநடத்திச் செல்லும் (நமக்குப்புரியாத உலகத்தை வேண்டுமானால் புத்தகங்கள் ஒரு தோழனை/தோழியைப் போல அதிகம் புரியவைக்கலாம்). ஆனால் நேரடியாக சூடுபட்டு, விழுந்தொழும்பி வரும் அனுபவங்களைப் போல ஒரு ஆசான் இந்த உலகில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனிதர்களை விலத்திப் பார்த்துக்கொண்டிருந்த என்னை, மனிதர்களும் அவர்களுக்கிடையிலான உறவுகளும்/சிக்கலகளும் தான் வியப்பானவை, அதை நெருங்கியிருந்து பார் என்று ஒருதோழிதான் எனக்கு வழிகாட்டினார். பாருங்கள், அதுவும் எதுவுமே பேசாமல் மனிதர்களை அவதானித்துக்கொண்டிருந்தபொழுதே நிறைய விசயங்களைக் கற்றிருக்கின்றேன். எத்தனையோ மனிதர்கள் காயப்படுத்தியோ, கோபப்படுத்தியோ போகப் போக அதை ஈடுசெய்வதற்கு மிகுந்த அன்போடு மனிதர்கள் என் வாழ்வில் நுழைந்துகொண்டிருக்கின்றார்களே என்று அடிக்கடி என்னளவில் வியப்பதுண்டு. அதுதான் மனித உறவின் அதிசயம். நல்ல பதிவு நரேன்.
 
அருமையான பதிவு நாராயண். இந்த வாரம் சிறப்பாகச் செய்தீர்கள் எனலாம். பேசத் தயங்கும் விசயங்களைக்கூட சிறப்பாக வெளிப்படுத்தினீர்கள். காமம் சற்றே விஞ்சி இருந்ததால் என்னால் பின்னூட்ட முடியவில்லை. வருத்தம் வேண்டாம்.

என்றும் அன்புடன்,
மூர்த்தி
 
இந்த வாரம் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது. மிகவும் யோசிக்க வைத்ததுவும்.

ஒவ்வொரு வாரமும் உங்களை நிரந்தர நட்சத்திரம் - துருவ நட்சத்திரம்னு ஒரு ஓரத்தில நிப்பாட்டி வைக்கலாம்னு யோசிக்கிறேன்.

மக்களே என்ன சொல்லுறீங்க?

நாராயணனுக்கு இதில் மறுப்புக் கூறும் அதிராகம் இல்லை. ;)
 
//நாராயணனுக்கு இதில் மறுப்புக் கூறும் அதிராகம் இல்லை. ;)//

மதி, 'காரம்'க்கு பதிலா 'ராகம்' பாடறீங்க? ;-) பேசாம, 25 வருஷத்துக்கொருதரம் Booker of Bookers கொடுக்கறமாதிரி, "துருவ நட்சத்திரம்" னு மூணு மாசத்துக்கொருதரம் யாரையாவது செலக்ட் பண்ணற மாதிரி ஐடியா வச்சிருக்கீங்களா என்ன?

--------

திசைதிருப்புவதை விட்டுவிட்டு: நாராயணன் - இதுதான் இந்த வாரக் கடைசிப் பதிவா இல்லை இன்னும் இருக்கிறதா தெரியவில்லை; ஆனால், நம்ம பாஷையில் சொன்னால், இந்த வாரம் முழுதுமாகச் சேர்த்துப் பார்த்தால், ஒரு நல்ல cocktail. ;-) நன்றி.
 
இன்னும் அதிகமாய் எழுதி டார்ச்சர் செய்யும் உத்தேசங்களில்லை ஒரு பதிவினை தவிர்த்து. என்னத்து க்கு cocktail... என்னளவில் நல்ல mocktail-ஆக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது ;-)
 
நாராயணன், எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல இந்த பதிவு. இந்த வாரம் பிச்சி உதறுனீர்கள். மதி சொன்னமாதிரி நிரந்தர நட்சத்திரம் என்ற பொறுப்பை கூட கொடுக்கலாம். டிசேவின் புத்தக ஐடியாவிற்கு வழிமொழிந்தது மாதிரி நானும் இதற்கு வழிமொழிகிறேன் டப் டப் டப்....

எல்லா ஸ்டார்கிட்டேயும் வழக்கம கேக்கிற கேள்வி.

"நாராயணன் நீங்க அரசியலில் இறங்கும் ஆர்வம் உண்டா?"

அப்படி உண்டென்றால் கோ.ப.செ இடம் காலியாக வைத்து விட்டு என்னை கூப்பிடுங்கள்.
 
சாரி. அது கோ.ப.செ இல்ல கொ.ப.செ. "கொள்கை பரப்பு செயலாளர்"
 
பீகாரின் முதல்வராக வேண்டுமானால் முயற்சிக்கலாம் ;-) இன்னா விஜய் நக்கலா ? இந்த நட்சத்திர ரேங்கிங்கில் எனக்கு நம்பிக்கையில்லை. நம்பர் 1, நம்பர் 2 என்பதில் பெரிதாய் விருப்பங்களில்லை. போதுமா விஜய், வழக்கமான சினிமா பிரபலங்கள் போலவே வழிந்திருக்கிறேனா?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]