Mar 29, 2005

... கானாவுல கலாய்க்கலாம்

ரோசாவசந்தின் பதிவிற்கு பதிலெழுதப் போய், கொஞ்சம் பெரிய பதிவாகவே மாறிவிட்டது.

ஆஹா! ஆஹா! தலீவர இதை நான் சத்தியமா எதிர்பாக்கலை. இருந்தாலும், மொதல்ல எழுதினேன்ற காரணத்னால சொல்றது இது. மேட்டர் பொறவு. இப்ப மீட்டர். "காத்தடிக்குது, காத்தடிக்குது" பாட்டு உண்மையிலேயெ பேஜாரான பாட்டு. அதை விஷுவலாகவும், நல்லா பண்ணி கலாய்ச்சிருப்பரு பிரபு தேவா. பாட்டு நடு பீட்டுல, ராமாயண கதைய ரொம்ப சிம்பளாவும் அதை சமயம் மாடர்னாகவும் பண்ணியிருப்பார். லட்சுமணன், மிஷின் கன்னோட ராமரை தேட போவாரு ;-) அந்தப் பாட்டுல மிக முக்கியமான அம்சமே வாழ்க்கையோட அபத்தங்கள்தான்.

சாவு அப்படிங்கறது ஒரு கொண்டாட்டம் தான் சேரியுல. வடசென்னையில் இருந்தவன் என்கிற முறையில், மதியம் இறந்து போகும் எவரும் அன்றைக்கு எடுக்கப்படுவதில்லை. முதலில் "சரக்கு" விட்டு, சாவு மேளங்களை அழைத்து வந்து விடுவார்கள். சங்கு ஊதுவதிலிருந்தே ஆரம்பாமாகிவிடும். அந்த நாள், அந்த ஏரியாவில் இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு கொலை குத்து, வியாபாரத்துல. நல்லா சரக்குட்டு, லுங்கியை கழுத்துவரை இழுத்துக் கட்டிக் கொண்டு ஆரம்பிக்கும், பாட்டும் கூத்தும். பார்ப்பவர்களுக்கு கலீஜ்ஜாக தெரிந்தாலும், அதுதான் அவர்களின் கொண்டாட்டம். நான் தோள் கொடுத்து சுமந்த நிறைய சாவுகளில் எங்களுக்கு முன்னால், ஒரு மீன்பாடி வண்டியில், பூக்கூடைகள் போகும், அதற்கு முன்னால், பட்டாசு வெடியோடு ஒரு கூட்டம் அலையும், நடு ரோட்டில் டிராபிக்கினை நிறுத்தி, சரவெடிகளை அனாவசயமாக, கையில் பிடித்துக் கொண்டு வெடிப்பார்கள், அதற்கு பின்னால் தான் ஆட்டமும், பாட்டும், ஒப்பாரிகளும் நிகழும். கொஞ்சம் இந்த யதார்த்த சென்டிமெண்ட் விஷயங்களை தூக்கி தூரப் போட்டால், அந்த சாவின் நிறைவும், வாழ்வின் அபத்தமும், ஆடுபவர்களின் வேகமும் புரியும். சொன்னால் நிறைய பேருக்கு புரியாது, ஆனால், லுங்கியின் முனையினை வாயில் கவ்விக் கொண்டு "வூடு" கட்டும் போது ஆடும் ஆட்டம், ஸ்பானிஷின் பிளமிங்கோ நடனத்துக்கு இணையான சாகசம். தாளமும், சுருதியும் சற்றும் பிசகாமல், கத்திக் கொண்டே, எதிர்த்து ஆடுபவரோடு ஈடு கொடுத்து ஆடுவது என்பது சர்வ சாதாரணமான விஷயமல்ல. என்னுடைய நண்பர், அரவிந்தன் வூடு கட்டுவதில் வல்லவர். புலியாட்டமும், சென்னை லோக்கல் குத்தும், கானாவும் சேருமிடங்கள் (கொஞ்சம் பச்சையான வார்த்தைகளையும் சேர்த்து) நிச்சயமாக எதிர் இசைப் பாடல்கள். எக்ஸ்டென்ஷியலிசத்தின் மொத்தக் கூறுகளையும், கானாவிலும், அடித்தட்டு மக்களின் சாவிலும் பார்க்கலாம்.

சாஸ்திரிய சங்கீதத்தின் எல்லா மரபுகளையும் உடைத்து, எல்லோராலும் பாடப்படும் பாடல்தன்மை கானாப் பாடல்களுக்கே உரியது. வசந்த் சொன்ன, ரஸ்டிக், ராவான (தல இது இங்கிலிஷ் RAW ;-)) குரல் கொண்டு பாடும் பாடல்கள், குதூகலமானவை. ஒரு தலித்தின் வாழ்க்கை, பல்வேறு விதமான கொடும் சூழ்நிலையிலும், உற்சாகமும், துள்ளலும் நிரம்பியவை என்பதற்கு சான்றுதான் கானா பாடல்கள். இதேப் போன்றதொரு துள்ளலையும், உற்சாகத்தையும், கறுப்பின ராப் பாடல்களிலும், மெட்டல் ஜாஸிலும் பார்க்க இயலும் என்று தோன்றுகிறது. பல்வேறு, ஆப்ரிக்க இனக்குழுக்களின் பாடல்களும், உச்ச ஸ்தாயில், பெரும் கூட்டமே பாடுவது போல்தான் இருக்கும். கானா பாடல்களின் இன்னொரு முக்கியமான அம்சமாய் நான் பார்ப்பது, மிக எளிமையான உவமைகள், வலி நிரம்பிய யதார்த்தங்கள், அபத்தங்களையும், அபாயங்களையும் உள்ளடக்கிய காதல், கொச்சையான பாலியல் அழைப்புகள் என்று வாழ்வின் உள்ளே செல்லும் பாடல்கள் அதிகம்.

டர்ரர்க்க.. ரக்க... ரக்க. டர்ரக்க என இழுபடும் குச்சிகளில் தெரிக்கும் பறை இசையின் ஒலியேக் கேட்டால் "ஆடாத மனமும் ஆடுமே". இங்கே சென்னையில் அவ்விசையை "ஒத்தையடி" என்று சொல்லுவோம், ஒத்தையடி அடிக்கத் தெரியாத கல்லூரி மாணவர்கள் மிகக் குறைவு என்பது என் எண்ணம். இதைத் தாண்டி, டெஸ்க் சங்கீதம் என்கிற ஒரு genre கூட உண்டு, பின் வரிசையில் அமர்ந்து கொண்டு முன்வரிசை மாணவர்களுக்கு கேட்பது போல, டெஸ்கிலேயே தாளம் போட்டுக் கொண்டு ப்ரொபசர்களை கலாய்ப்பது.

கல்லூரி கானா பாடல்கள் இதிலிருந்து சற்று விலகி, பெண்களை வசியம் செய்யவும், பிகர்களைப் பற்றி பாடுதலும், தியேட்டர், பஸ் டிரைவர், ஹாஸ்டல் வார்டன், டிராபிக் கான்ஸ்டபிள் ("மாமா" - தெரியாதவர்களுக்கு, சென்னை கல்லூரிகளின் பாலபாடம், பொலிஸையும், டிராபிக் கான்ஸ்டபிளையும் மாமா என்று அழைப்பது) என கல்லூரி சார்ந்த விஷயங்களாய் அடங்கியிருக்கும். பிரகாஷ் குறீப்பிட்டிருந்த "பெரம்பூரு லோகோ - என்கிற கானா எனக்கு மறந்து விட்டாலும், சைவ/அசைவ/பாலியல் வெர்ஷன்கள் நிறையவே இருக்கின்றன.

கொஞ்சமாய் ஒரு சொந்த கானா - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல. கல்லூரி படித்த போன நாட்களில், சகட்டுமேனிக்கு யாரையும், எதையும் கலந்தடித்து கலாய்ப்போம். அப்படி கலாய்த்து எழுதிய ஒரு ஐயப்ப பஜனையின் உல்டா கானா ....

[ஒரிஜினல் பாட்டு ... ஒண்ணாம் திருப்படி, சாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா ]

14 ஏயில
ஆதர்ஷ் ஃபிகரப்பா (2 முறை)
வள்ளியம்மா ஃபிகரப்பா (2 முறை)
அதுல ஒண்ணு,
நம்ம டிசேயோட ஆளப்பா

27 ஏயில
காயிதே மில்லத் பிகரப்பா
யத்திராஜு பிகரப்பா
டபுள்யூ.சி.சி, பிகரப்பா
குயின் மேரிஸ் பிகரப்பா
அதுல ஒண்ணு
நம்ம பிரகாஷோட சைடுப்பா


(சும்மா உலுலுவாக்காட்டிக்கு, நண்பர்கள் டிசே, பிரகாஷ் ஸ்போர்டிவாக எடுத்துக்கொள்ளவும்.)

என பெண்கள் கல்லூரி வலம் வரும் எல்லா பேருந்து வழித்தடங்களுக்கும் பாடலிருக்கிறது.

மேலும், தமிழகத்தில் கிளிஷேவான எதுகை மோனை, கானாவில் பல இடங்களில் முக்கியம். ஒரு பாடலின் சடசடவென பொருள் மாறும் தன்மை கானாவில் அற்புதமாக வெளிப்படும். சடாலென தாவும் உதாரணங்கள், உவமைகள், நிகழ்வுகள் என மாறும் வெளிகளில் கானா நிஜமாகவே பேஜாராக இருக்கும்.

மல்லிகாவின் மாமன் பேரு மாரி,
சோமாரி...
அவன் பகிளு பிகிளு வுட்டதுமே சாரி
ஐ யம் வெரி சாரி
ரத்னா ஸ்டோர்ல விக்கிறாங்க ஸ்டீலு,
ஸ்டெயின்லெஸ் ஸ்டீலு,
ராங்கு காட்டி வாங்கிடாதே பெயிலு,
ஜெயிலுல பெயிலு

இன்னும் தீவிரமாய் படித்துக் கொண்டிருக்கிறேன், சில தகவல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். வந்ததும் விவரங்களோடு, கானாவின் ஆதிஅந்தங்களை பதிகிறேன்.

Comments:
உங்களுக்கு தெரியாத துறையே இல்லை என நினைக்கிறேன். நாட்டுப்புற பாடல்களை மட்டுமே அறிந்த எனக்கு உங்கள் கானா பாடல்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.ஆவலோடு இதன் அடிமுடி அறிய காத்திருக்கிறேன்
 
கலக்குங்க!
 
//இன்னும் தீவிரமாய் படித்துக் கொண்டிருக்கிறேன், சில தகவல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். வந்ததும் விவரங்களோடு, கானாவின் ஆதிஅந்தங்களை பதிகிறேன். //

தகவல் வந்தவுடனே வூடு கட்டுங்க தலீவா... காத்திருக்கிறோம்....
 
ஊட்டி மல மேல மாமனனோட வூடு
அந்த மாமனுக்குண்டு ஒரு அழகான பொன்னு...

ஜகு ஜக்கு ஜகு ஜக்கு ஜச்சா
ஜக்கா ஜகு ஜக்கு ஜகு ஜக்கு ஜச்சா

ஹம்ம்ம் கல்லூரி சாப்பாட்டு இடைவெளியில் இந்த பாடல்களை பாடியதாக நினைவு.

நீங்க இன்னும் நெரிய தகவல் கொடுங்க, அப்படி சென்னை வந்தா ஒங்க ஆளுக கூட சேந்து குத்துபோட ஒரு வாய்ப்பும் கொடுங்க.
 
//கல்லூரி கானா பாடல்கள் இதிலிருந்து சற்று விலகி, பெண்களை வசியம் செய்யவும், பிகர்களைப் பற்றி பாடுதலும்..//

//14 ஏயில
ஆதர்ஷ் ஃபிகரப்பா (2 முறை)
வள்ளியம்மா ஃபிகரப்பா (2 முறை)
அதுல ஒண்ணு,
நம்ம டிசேயோட ஆளப்பா//
அடடா இப்படி போட்டுத்தாக்க, 'நரேன்', 'கானா' போன்ற ஏவுகணைகள் கைவசம் சென்ற வருடமே இருந்திருந்தால் நானும் முத்தையா முரளீதரன் மாதிரி தமிழ்நாட்டு மருமகனாய் எப்பவோ ஆயிருப்பேனே. Just missed pa :-)!
 
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி. கானாவைப் போன்ற நிறைய மக்கள் கலைகள், "மேம்பட்ட கலைகளின்" ஆதிக்கத்தினால், இழிவாக பார்க்கப்பட்டு வந்தன. தற்போது நிலைமை மாறி வருகிறது. குறிப்பிட்டு சொல்ல மறந்தது, கவிஞர் கபிலன் (ஆல்தோட்ட பூபதி நானடா - ஞாபகம் வருகிறதா) கானாவினைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டத்திற்கு எழுதிக் கொண்டிருக்கிறார். நிறைய தகவல்களை அவரிமிடருந்து திருடியாவது "கில்மா"-வாக பதிகிறேன்.

தேன்துளி, நாட்டுப்புற பாடல்கள், கிராமியப் பாடல்கள் இதற்கெல்லாம் ஒரு பின்புலம் இருப்பது போல், கானாவும் அடித்தட்டு மக்களின் வெளிப்பாடு. ஆனால், சென்னையை தவிர்த்து வேறெங்கும் கானாவினை நான் கேட்கவில்லை. ஓப்பாரி கேட்டிருக்கிறேன். நாட்டுப் பாடல்களை இன்னமும் நாம் மறக்காமல் இருப்பதற்கு நன்றி சொல்ல தகுதியுடைய ஒரே நபர் - திரு. இளையராஜா மட்டுமே. ராஜா மட்டுமில்லாமல் போயிருந்தால், நாட்டுப் பாடல்களில் முடங்கிப்போயிருக்கும்.

உதாரணத்திற்கு, கரகாட்டகாரனில் வரும் "மாங்குயிலே, பூங்குயிலே, சேதி ஒண்ணு கேளு" என்னும் பாடல்
'ஏறுமயில்
ஏறி விளையாடும்
முகம் ஒன்று
ஈசனுடன்
ஞானஒளி பேசும்
முகம் ஒன்று'
என்கிற நாட்டுப் பாடலின் அடிப்படையில் அமைந்த பாடல். ராஜாவின் வரவுக்கு பின்தான், தமிழகத்தில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, கொல்லங்குடி கருப்பாயி போன்றவர்களின் மண்வாசனை மிக்க பாடல்கள் அறிமுகமாயின.

வசந்த் குறிப்பிட்டு இருந்ததுபோல், அண்ணன் தேவாதான் சென்னையின் அடித்தட்டு கானாவினை திரையிசையாக்கி அதற்கொறு நட்சத்திர அந்தஸ்து தந்தது.
 
இது வெங்கட்டிற்கு, உங்களின் மறுமொழி என் மின்னஞ்சலுக்கு வந்துவிட்டது.ஆனால், இந்த பதிவில் பதியவில்லை. அழித்து விட்டீர்களா, இல்லை ப்ளாக்கர் சொதப்புகிறதா?
 
//"மாங்குயிலே, பூங்குயிலே, சேதி ஒண்ணு கேளு" //

(இருக்கிற ட்ராக் மாறி ஒரு கருத்து சொல்றேன். ஸாரி. )

இதே மெட்டில் சந்திரமுகியில் ஒரு பாட்டு வருகிறதே யாராவது கேட்டீர்களா?
 
மிக அருமையான பதிவு நாராயணன். (நிச்சயமாக உருப்படாதது அல்ல)

திரையில் கானாப்பாடல், எனக்குத் தெரிந்து "நான்கு கில்லாடிகள்" படத்தில்

பூக்கடைப்பக்கம் டீக்கடையோரம்
ஏக்கத்தோடு நான் காத்துக்கினு இருந்தேன் -
என்னாத்தெ நீயும் வரலே

என்ற பாட்டுதான் முதல் என்று நினைக்கிறேன்.
 
//தமிழகத்தில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, கொல்லங்குடி கருப்பாயி போன்றவர்களின் மண்வாசனை மிக்க பாடல்கள் அறிமுகமாயின. //
அப்படியே நரேன், எனதும், எனது அண்ணாவின் மகனினதும் favouriteயான 'பரவை' முனியம்மா, (மற்றும் குஞ்சரம்மாவையும்) சேர்த்துக்கொள்ளவும்.
 
டிசே, இப்பவும் ஒண்ணும் கெட்டுபோகலை, நீங்கள் தமிழ்நாட்டு மாப்பிள்ளையாக. வசந்த் பதிவில் நீங்கள் எழுதியிருந்த, கானாவுக்கும், ராப்புக்கும் இடையே நிறைய சம்பந்தமிருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு தெரிந்த காரணங்கள்.

1. இரண்டுமே அடித்தட்டு, புறக்கணிக்கப்பட்ட மக்களால் பாடப்படுவது
2. இரண்டுமே கிண்டலாக, நக்கலாக, ஆதிக்க சக்தியினை இடைச்செருகலாய் திட்டுவது (கறுப்பினத்தவர்களுக்கு "வெள்ளைக்காரர்கள், நம்மாளுக்கு "அய்யிரு")
3. சுஃபி பாடல்களையொத்த ஏகாந்தமான மனநிலையை பாடலிலும்,கேட்பவர் மனதிலும் கொண்டுவருவது
4. மிக முக்கியமாக, பொது கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் உடைத்தெறிவது (குடித்து விட்டு பாடுதல், கையில் கொடுத்ததை கொண்டு இசையமைப்பது)
5. தங்களின் இருப்பின் ஆளுமையை ரசிக்கும்படியாக செய்வது.

டிசே, நான் இங்கே குறிப்பிட்டது இளையராஜாவால் கொண்டு வரப்பட்டவர்கள் மட்டுமே. பரவை முனியம்மாவை வித்யாசாகரும் (தூள்) தேனி குஞ்சரம்மாவை ஏ.ஆர்.ரகுமானும் (காதலன்?!!) திரைக்கு கொண்டு வந்தார்கள்.

இன்னமும், தேவா, சபேஷ், திப்பு தவிர ரஸ்டிக்காக, ராவாக, கனத்த அடித்தட்டு குரல்கள் தமிழ்திரையில் நிறைய பேர் இல்லை.
 
சுரேஷ், நான்கு கில்லாடிகள் பற்றிய தெரிதல் இல்லை. ஆனால், "சொக்கா போட்ட நவாபு, செல்லாது உன் ஜவாபு" என்கிற பாடலிலேயே கானா வாசனையடிக்கும். இதைத் தாண்டி, இளையராஜா, பல்வேறு காலகட்டங்களில் கொஞ்சமாய், கானா மாதிரியான ஒன்றை தொட்டுப் போயிருப்பார் ("அண்ணே, அண்ணே", "ருக்குமணி வண்டி வருது, ஒரம்போ", "ஐயா வூடு தொறந்துதான் கிடக்கு" "மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு")

ஆஹா, சுரேஷ், ஆசையை கிளப்பிவிட்டீரய்யா. ரொம்ப நாட்களாக, பாரதி ராஜாவின் என் உயிர்த் தோழன் பற்றி எழுதவேண்டுமென்று அசைப் போட்டுக் கொண்டிருந்தேன், நீங்கள் கேட்ட கேள்வி, அதைத் தூண்டி விட்டு விட்டது.
 
கானா வாசனை அடிக்கும் பாடல்கள் என்றால் உத்தம புத்திரன் -
"ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு - உன்மேல் ஆசை உண்டு,
ரெண்டும் மூணும் அஞ்சு - என்னை நீயும் கொஞ்சு" வைக்கூட சொல்லலாம்.

நான்கு கில்லாடிகள் படத்திற்குள் ஒரு படம் எடுப்பார்கள், அந்தப் படத்தில் ஒரு கானாப்பாடல் வைக்கலாம் என்று முடிவு செய்து, நான் மேற்கூறிய பாடலை, ராயபுரம் கவிஞரை வைத்து இசை அமைப்பார்கள்.. எனவே, கானா என்ற அடைமொழியுடன் முதலில் வந்த பாடல் இதுவே என நினைக்கிறேன்.

'என் உயிர்த் தோழன்" - எனக்கும் பிடித்த படம் - எழுதுங்கள், படிக்க ஆவலாய் உள்ளேன்.
 
//மல்லிகாவின் மாமன் பேரு மாரி,
சோமாரி...//

நாராயணன், இது 'அண்ணா நகரு ஆண்டாளு, அய்நாவரம் கோபாலு , ஐசிஎஃப்லே எடுக்கிறாண்டா தண்டாலு..' இல்லே? ('கவர்மெண்டு ஜின்னை போட்டா தலவலிடா மாமு!') சினிமாலா 'சோமாரியை, தொண்டிதோப்பி மாரி'யாக்கிடாங்க போல!
 
//இளையராஜா, பல்வேறு காலகட்டங்களில் கொஞ்சமாய், கானா மாதிரியான ஒன்றை தொட்டுப் போயிருப்பார் ("அண்ணே, அண்ணே", "ருக்குமணி வண்டி வருது, ஒரம்போ", "ஐயா வூடு தொறந்துதான் கிடக்கு" "மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு")//

நாராயண் : இந்தப் பாடல்களை எல்லாம் கானாக் கணக்கில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. அவை நல்ல டப்பாங்குத்துப் பாட்டுக்கள். இந்த ரேஞ்சில் நிறைய ராஜா பாடல்கள் இருக்கின்றன ( தென்ன மரத்துல தென்றலடிக்குது - லக்ஷ்மி, போடய்யா ஒரு கடுதாசி - தெருவிளக்கு, ஏய்.. ஆத்தா ஆத்தோரமா... பயணங்கள் முடிவதில்லை
என்ன பாட்டு பாட - சக்களத்தி etc). மச்சி மன்னாரு, மெட்ராஸ் பாஷையின் ஒகாபிலரியைக் கொண்டு அமைந்ததால், கானா மாதிரி காட்சி அளிக்கும். இந்த வரியைக் கேளுங்கள்... " டாவு ஒரு டாவு நா கட்டும் நேரம்/ நோவு ஒரு நோவு புரியாம ஏறும்.../ ஆ... சம்மு சம்முன்னு வாசம்../ சல்லு சல்லுன்னு தூக்கும்... . ஒரு முறை பாடிப்பார்த்தால், இது எத்தனை அற்புதமான காம்போசிஷன் என்று புரியும். கானாவுக்கு இத்தனை sophistication ஆகாது. ராஜாவின் இந்த வகைப் பாடல்கள், ஸ்ப்ரைட் சேர்த்த ஒரு லார்ஜ் ராயல் சேலஞ் என்றால், ஒரிஜினல் கானாக்கள், பாக்கெட் தண்ணீர் பீச்சி அடித்த ப்ல்ட் மாங்க் 90 கட்டிங் :-). இன்னா... பிரியிதா? :-)
 
//இளையராஜா, பல்வேறு காலகட்டங்களில் கொஞ்சமாய், கானா மாதிரியான ஒன்றை தொட்டுப் போயிருப்பார் ("அண்ணே, அண்ணே", "ருக்குமணி வண்டி வருது, ஒரம்போ", "ஐயா வூடு தொறந்துதான் கிடக்கு" "மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு")//

நாராயண் : இந்தப் பாடல்களை எல்லாம் கானாக் கணக்கில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. அவை நல்ல டப்பாங்குத்துப் பாட்டுக்கள். இந்த ரேஞ்சில் நிறைய ராஜா பாடல்கள் இருக்கின்றன ( தென்ன மரத்துல தென்றலடிக்குது - லக்ஷ்மி, போடய்யா ஒரு கடுதாசி - தெருவிளக்கு, ஏய்.. ஆத்தா ஆத்தோரமா... பயணங்கள் முடிவதில்லை
என்ன பாட்டு பாட - சக்களத்தி etc). மச்சி மன்னாரு, மெட்ராஸ் பாஷையின் ஒகாபிலரியைக் கொண்டு அமைந்ததால், கானா மாதிரி காட்சி அளிக்கும். இந்த வரியைக் கேளுங்கள்... " டாவு ஒரு டாவு நா கட்டும் நேரம்/ நோவு ஒரு நோவு புரியாம ஏறும்.../ ஆ... சம்மு சம்முன்னு வாசம்../ சல்லு சல்லுன்னு தூக்கும்... . ஒரு முறை பாடிப்பார்த்தால், இது எத்தனை அற்புதமான காம்போசிஷன் என்று புரியும். கானாவுக்கு இத்தனை sophistication ஆகாது. ராஜாவின் இந்த வகைப் பாடல்கள், ஸ்ப்ரைட் சேர்த்த ஒரு லார்ஜ் ராயல் சேலஞ் என்றால், ஒரிஜினல் கானாக்கள், பாக்கெட் தண்ணீர் பீச்சி அடித்த ப்ல்ட் மாங்க் 90 கட்டிங் :-). இன்னா... பிரியிதா? :-)
 
//ராஜாவின் இந்த வகைப் பாடல்கள், ஸ்ப்ரைட் சேர்த்த ஒரு லார்ஜ் ராயல் சேலஞ் என்றால், ஒரிஜினல் கானாக்கள், பாக்கெட் தண்ணீர் பீச்சி அடித்த ப்ல்ட் மாங்க் 90 கட்டிங் :-). இன்னா... பிரியிதா? :-)//

த்தோடா, இன்னா கண்ணு நமக்கேவா. நாங்கெல்லாம், 2 ரூபா ஊறுகா, ஒல்டு மாங்க் இல்ல மானங்கெட்ட மானிட்டரை, கழுத்து திருகி, எச்சி கிளாஸ்ல குடிச்சத பக்கத்துல இருந்து பாத்தவங்க.எங்குளுகேவா... அண்ணாத்தே, அந்த மாதிரி பாட்டு, லேசா, கானா சாயலடிக்கும், ஆனா கானா கிடையாதுங்கறதுதான் மேட்டரு ;)

//மச்சி மன்னாரு, மெட்ராஸ் பாஷையின் ஒகாபிலரியைக் கொண்டு அமைந்ததால், கானா மாதிரி காட்சி அளிக்கும். இந்த வரியைக் கேளுங்கள்... " டாவு ஒரு டாவு நா கட்டும் நேரம்/ நோவு ஒரு நோவு புரியாம ஏறும்.../ ஆ... சம்மு சம்முன்னு வாசம்../ சல்லு சல்லுன்னு தூக்கும்... . ஒரு முறை பாடிப்பார்த்தால், இது எத்தனை அற்புதமான காம்போசிஷன் என்று புரியும்.//

அந்த படமே ஒரு மார்க்கமான கம்போஸிஷன்தான். அதுவும் இந்த பாடல் படு பேஜாரான பாடல். நீங்கள் சொல்வதுபோல், இவ்வளவு செறிவும், சரியான நடையும் கானாவுக்கு ஆகாது. கானா என்பது ப்ரு இன்ஸ்டெண்ட் காபி போல, பாத்தோமா, இட்டு கட்டினோமா, பாட ஆரம்பிச்சோமான்னு இருக்கணும்.
 
வச்ந்த, நீங்கள் சொன்ன பாடலில் வரும் கொண்டித்தோப்பில் தான் நான் 25 வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். எங்க் ஏரியாவுக்கு மருவாதயே, தேவா அண்ணணாலதான் வந்துச்சு... அண்ணன் தேவா வாழ்க!! :)
 
http://icarus1972us.blogspot.com/2005/03/chennai-tamil-bloggers-meet-2005.html#c111216839850178944
 
வசந்த், இதைப்பற்றி பேசிப் பார்க்கிறேன். மக்களின் ஆதரவைப் பொறுத்துதான் எல்லாமே, இல்லாவிட்டால், கடைதிறந்து வைத்துவிட்டு, ஈ யோட்ட வேண்டியதிருக்கும். சமீப காலங்களில் மாற்று சினிமா பற்றிய சிற்றிதழ்கள் அதிகரித்து இருக்கின்றன (நிழல், கனவு, கலை, சொளந்தர குகன்) - இதைத் தாண்டி காலச்சுவடு, உயிர்மை, கவிதாசரண் போன்ற இதழ்களிலும், அவ்வப்போது மாற்று சினிமா செய்திகள் வருகின்றன.

நான் தற்போது யோசித்துக் கொண்டிருப்பது, ஏதேனும் ஒருவழியில் இவர்களையும், உலகமுழுக்க படமெடுப்பவர்களுக்குமான ஒரு பாலத்தினை உருவாக்குதல். இணையம் தான் இதிலும் மிக முக்கியமாக தெரிகிறது. பேசிப் பார்க்கிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]