Mar 15, 2005

Made in India

Made in India - இந்தியாவின் தொழில்முனைப்புத் தேவைகளும் சாத்தியங்களும்வெங்கட்டின் லட்சுமி மித்தல் பற்றிய பதிவினில் பிரகாஷ் எழுப்பிய கேள்விகளும் அதற்கு வெங்கட் மற்றும் பிறரின் பதில்களும் படித்ததினால் எழுதுவது இது. இதை எழுதும்போதே, இதே தலைப்பில் வெங்கட் அவரின் காரணங்களை தனிபதிவாக இட்டிருக்கிறார். காபிரைட் வாங்காமல் அதே தலைப்பினை நானும் இங்கு பயன் படுத்துகிறேன். காரணம், அதே தலைப்பில் என் எண்ணங்களும், இன்றைய இந்தியாவில் நடப்பவைகளும்.

கொஞ்சம் உரிமை எடுத்து கொண்டு சில விசயங்களை இங்கே சொல்லலாம். முதலில், எழுதிய முக்கால்வாசி பேர் இந்தியாவில் இல்லை. வெங்கட்டும் இந்தியாவில் இல்லை. அவர்களனைவரும் இந்தியாவைப் பற்றி வலைத்தளங்களில் படித்து விட்டும், இந்தியாவிலிருந்து வரும் பத்திரிக்கைகளிடமிருந்தும் தான் விஷயஞானம் பெறுகிறார்கள். யதார்த்தமாய் இங்கே என்ன நடக்கிறது என்பது தெரியாது. இதை நான் குறையாக சொல்லவில்லை. வெங்கட் கூறும் விசயங்களோடும், பிரகாஷின் சில கருத்துக்களோடும் சிலபல இடங்களில் ஒத்துப்போகிறேன். ஆனாலும், வெங்கட்டின் பதிவு வெளிநாட்டிலிருந்து இந்தியாவை பார்க்கும் பார்வையிலேயே இருக்கிறது. பல்வேறு தருணங்களில் பலவிதமான விசயங்களை ஒத்துக்கொள்கிறோம் ஆனாலும், இந்தியாவிலமர்ந்து சற்றே கூர்ந்து கவனியுங்கள். ஒரு சிதறலாய் வைக்கப்பட்ட மாடர்ன் ஆர்ட் ஒவியம் போலதான் இப்போது இந்திய ஆளுமை இருக்கிறது. கொஞ்சமாய் நிதானித்து கவனித்தால், இந்திய அரசின், இந்திய நிறுவனங்களின் கழுகுப்பார்வை தெரியவரும்.

எல்லோரும் IT பற்றி பேசிவிட்டதால், அதனை தவிர்த்து இந்தியா 2005-ல் எங்கிருக்கிறது, நாம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பது பற்றியே இந்த பதிவு.

1. ஒன்றை முதலில் ஒத்துக்கொள்வோம், இந்தியாவின் வங்கி கட்டமைப்பு (Banking infrastructure & management) சீன வங்கி கட்டமைப்புகளோடு பார்க்கும்போது 100 மடங்கு உயர்வானது. சற்றே கூகிளில் "Collapse of chinese banks" என்று தேடிப்பாருங்கள். உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் தலையை பிய்த்துக்கொண்டு இதைப்பற்றி தலையணை சைசில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். 80களில் ஜப்பானில் உருவான நாணய சரிவினை விட மிகமோசமான சரிவினை சீன வங்கிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய தேதியில் சீனவங்கிகள் அமெரிக்க டாலர்களாக வாங்கி தள்ளுகின்றன. இரண்டு வருடங்களில் அமெரிக்க டாலர், யூரோவிலிருந்து ஏறத்தாழ 12 -17% குறைந்து விட்டது, இது இன்னமும் இரண்டு வருடங்களில் மேலும் குறையும் வாய்ப்புள்ளது. அப்போது சீனா சேர்த்து வைத்த டாலரின் மதிப்பு என்னவாகும் ? சீன வங்கிகள் இன்னமும் முழுமையான தனியார் வசம் ஒப்படைக்க படவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆக இன்னமும் சீன ஹர்ஷத்மேத்தாக்கள் உருவாக வாய்ப்புண்டு.

2. டாடா மோட்டார்ஸினைப் பற்றி பேச்சு வந்தது. பிரகாஷ் கூறியது உண்மை, ஆனால் அது மூன்று வருடங்களுக்கு முன்னால். இன்றைய நிலைமை வேறு. டாடா இண்டிகாவினை சற்றே நவீனப்படுத்தி, இங்கிலாந்தின் ரோவர் நிறுவனத்தோடு பங்காளியாய் போய், இன்றைக்கு இண்டிகா ரோவர் என்ற பெயரில் லண்டன் சாலைகளில் மினிகார் சந்தைப்படுத்த ஆரம்பித்தாகிவிட்டது. இதேப் போல் மஹிந்திராவின் ஸ்கார்பியோ MUV, மத்திய ஆப்ரிக்க நாடுகளிலும், பிரேசிலிலும் ஒட ஆரம்பித்தாகிவிட்டது. உலகில் டெட்ராய்ட்டுக்கு பிறகு மிகச்சிறந்த ஆட்டோமொபைல் நகரமாக சென்னை உருமாறி கொண்டிருக்கிறது. கொரிய தயாரிப்பானாலும் கூட, ஹூண்டாயின் மத்திய கிழக்கு ஆசிய வணிகமும், சார்க் நாடுகளுக்கான கார் தயாரிப்பும், திருபெறும்புதூரிலிருந்து தான் ஏற்றுமதியாகிறது. பி.எம்.டபுள்யு சென்னையில் இறங்குவதாக சலசலப்புகள் எழுந்திருக்கின்றன.

3. சென்னை ஐஐடியின் வயர்லெஸ்-இன்-லோக்கல் லூப்(WLL) தொழில்நுட்பத்தை போட்டிப்போட்டு முதலில் வாங்கியவை சீன நிறுவங்கள். இப்போது சென்னை ஐஐடி, ஐசிஐசிஐ வங்கிக்காக தயாரித்துள்ள ஏடிஎம் இயந்திரங்கள், அமெரிக்க இயந்திரங்களை விட தரமானதும், குறைவானதும் ஆகும். 5 லட்ச ரூபாய் செலவு வைக்கும் அமெரிக்க இயந்திரங்களுக்கு பதிலாக, சிறிய ஏடிஎம் இயந்திரங்கள் 30,000 ரூபாயில் தயாரிக்கப்பட்டு விட்டு, சோதனை ஒட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வெற்றியடைந்தால், இதன் வணிக வீஸ்திரனத்தை பற்றி சொல்ல தேவையில்லை.

4. அறிவுசார் தொழில்களில் உயிரியல்,மரபணுவியல் போன்றவற்றில் குறைவான மாணவர்களை இருக்கிறார்கள் என்று மாண்டீ குறைப்பட்டு கொண்டார். இருக்கலாம். ஆனால், உலகின் முதல் 10 மரபணுவியல் நிறுவனங்களில், சாதுவாய், பங்களுரில் ஒதுக்குப்புறமாய் அமர்ந்திருக்கும் கிரண் மஜூம்தாரின் "பயோகானும்" ஒன்று. இந்தியாவில் இதுவரை 3 மரபணுவியல் பூங்காக்கள் உண்டாக்கப்பட்டு ஆராய்ச்சிகளும், காப்புரிமைகளும் பெறப்பட்டுவருகின்றன. சற்றே நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலைக்கு திரும்புதற்கு முன் இருக்கும் ஆர்கிட்டின் கட்டிடத்தினை பாருங்கள். மிக அத்தியாவசியமான பலவிதமான மாலிக்யூல்களை காப்புரிமை பெற்றுக் கொண்டு ஜம்மென்று அமர்ந்திருக்கின்றது.ஸ்டைம் செல் ஆராய்ச்சியில் இந்தியா ஒரு முக்கியமான அங்கம். ஆட்டுதாடி வைத்த விஞ்ஞானிகள் கலர் கலர் திரவங்களை கலக்கிக்கொண்டு, ஏதோ உருப்படியா செய்து கொண்டிருக்கிறார்கள்.

5. ரான்பாக்ஸி குழுமம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தையான Off-the-Shelf-Drug சம்பந்தப்பட்ட நிறைய மாத்திரைகளை இரண்டு வருடங்களில் இறக்கிவிடுவார்கள். பிஃபைசரும், பி&ஜியும் ரான்பாக்ஸியினை எவ்வாறு எதிர்கொள்வது என்று கான்பரன்ஸ் ஹால்களில் பவர்பாயிண்ட் சிலைடுகள் அடங்கிய மடிக்கணினியோடு கவலையோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

6. சென்னையின் சுந்தரம் பாஸ்டர்னர்ஸ் நிறுவனம் ஜிஈ குழுமத்தின் உதிரிப்பாகங்கள் செய்வதில் விருதுகள் வாங்கியவர்கள். சீனாவில் தொழிற்சாலை ஆரம்பித்துவிட்டார்கள். உறவினரான வேணு சீனிவாசனின் டிவிஎஸ் மோட்டார்ஸ், இந்தோனேஷியாவில் இரு சக்கர வாகனங்களை சந்தைப்படுத்த இறங்கிவிட்டார்கள். தாய்லாந்து தெருக்களில் ஆட்டோ ஒட்டுநர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள். காரணம், பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் குறைந்த செலவு ஆட்டோக்கள் உள்நாட்டு நிறுவங்களின் ஆட்டோக்களை ஒவர்டேக் செய்துவிட்டதுதான். அரபுநாடுகளில் விற்கப்படுவதற்காக மும்பாய் துறைமுகத்தில் கன்டெய்னருள் பஜாஜ் பல்சர்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

7. ஐஒசி நிறுவனம் மூன்றே ஆண்டுகளில் இலங்கையின் முண்ணனி பெட்ரோல் நிலையங்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. சூடானின் எண்ணை கிணறுகளிலிருந்து கச்சா பெட்ரோலியத்தை எடுக்கும் உரிமைகளை ஒஎன்ஜிசி விதேஷ் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சத்தமேயில்லாமல், உலகெங்கிலுமுள்ள முண்ணனி எண்ணை கிணறுகளை நிர்வகிக்கும் நிறுவங்களின் பங்குகளை வாங்கி இந்திய அரசாங்கம் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

8. இந்திய மருத்துவமனைகள் "சுகாதார சுற்றுலா" என்கிற பெயரில் வெளிநாட்டு பயணிகளுக்கு குறைந்த செலவில் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கின்றன. அப்போலோ குழுமம் மட்டுமே கையில் 6 மருத்துவமனைகளுக்கான வரைப்படத்தோடு காத்துக்கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சியின் விளைவாக, பெரிய ஐரோப்பிய அமெரிக்க மருத்துவமனைகள், இந்திய மருத்துவமனைகளோடு ஒப்பந்தங்கள் போட்டு இறங்கி வந்துக்கொண்டிருக்கின்றன.

9. இஸ்ரோ ஏற்கனவே அரசாங்க பணத்தை எதிர்ப்பார்க்காமல், தன் தொழில்நுட்பத்தினை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஆன்டரிக்ஸ் என்கிற பெயரில் தனியாக நிறுவனத்தை துவக்கி கல்லா கட்ட தொடங்கிவிட்டது. ஏறத்தாழ 3000 மில்லியன் இந்திய ரூபாய்களை இதுவரை சம்பாதித்திருக்கிறது. ஆர்டர்கள் குவிகின்றன. பிரான்சின் ஏரியேன் (Ariane) ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் ஒரு ஒப்பந்தந்தத்தை ஏற்படுத்தி கொண்டு, $6.7 பில்லியன் உலக சந்தையை குறிவைத்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. Dr.கஸ்தூரிரங்கன் ஜெட்-லாகும், கையெழுத்திடப்பட்ட பத்திரங்களுமாய் உலகினை சுற்றிக்கொண்டிருக்கிறார். கிரையோஜெனிக் தொழில்நுட்பம் வசப்பட்டவுடன், அமெரிக்கா விழுந்தடித்துக்கொண்டு தடைகளை நீக்கிவிட்டது

10.பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், இலங்கை நாடுகளில் தொலைதொடர்பு வசதியினை (தரைவழி/செல்/வயர்லெஸ்) ஏற்படுத்தி தர இந்திய அரசாங்கத்தின் அனுமதிக்காக பாரதி குழுமத்தின் ஏர்டெல்லும், ரிலையன்ஸும் காத்துக்கொண்டிருக்கின்றன.

11. பிர்லா குழுமம், உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உருமாறிக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் தென்னமரிக்க நாடுகளிலுள்ள சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளை வாங்கி ஏப்பமிட்டு, இந்திய சந்தையிலும், ஆசிய சந்தையிலும் சிமெண்ட் உற்பத்தியில் முண்ணனியில் இருக்கிறது.

12. லீ, லெவீஸ், நைக்கி போன்ற பிராண்டுகளின் மொத்த டெனிம் வர்த்தகமும் குஜராத் அரவிந்த் மில்லில்தான் நடக்கிறது. சற்றே 90களின் இறுதியில் சொதப்பி சரிந்திருந்தாலும், தற்போது அரவிந்த் மில் அடுத்த பத்தாண்டுகளுக்கான வர்த்தகத்தை கையில் வைத்திருக்கிறது. இது தவிர லீயோடோ அல்லது லெவெஸோடோ செய்து கொண்டுள்ள ஒப்பந்தபடி, அரவிந்த மில் ப்ராண்ட் இந்திய பாணி ஆயத்த ஆடைகள் 2006/7-லிருந்து அவர்களின் பிராண்டடு கடைகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் விற்கப்படும்.

13. டோனி ப்ளையருக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும், பிராட் பிட்டுக்கும் சிக்கன் டிக்கா வாசனை பிடித்துப்போனதிலிருந்து, இந்திய உணவு வகைகளுக்கான சந்தை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பத்தாண்டுகளில் சப்பாத்தி, சால்னா மெக்டொனால்ட்சிலோ, ஸப்வேயிலோ கிடைக்கலாம். ப்ரெட் கிங் மகாதேவன், எல்லா வகையான உணவுவகைகளையும் உள்ளடக்கிய ஒரு விற்பனை முன்மாதிரியை (Planet Yumm) உலகெங்கும் எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார். லண்டனில் வாழ்ந்துவந்தால், கூடிய சீக்கிரத்தில் சங்கீதா இட்லியும், வேங்ஸ் கிச்சனின் சிக்கன் டிக்காவும், ஆனந்தா ஸ்வீட்டுகளும் உண்ணும் பாக்கியமடைவீர்கள்.

14. இண்டெல் நிறுவனத்தினர் இந்தியாவில் அவர்களின் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவும் அவசரத்தில் "ஜெட்-லாக்"கோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

15. இந்திய வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு அயல் நாடுகளில் முழுநேர கிளைகளை ஆரம்பித்து லோக்கல் கணக்கு வழக்குகளை நிர்வகிக்க அடிக்கால் போட்டு விட்டார்கள்.

16. ஹிந்துஸ்தான் லீவரின் (தற்போது யூனிலீவர் இந்தியா) பீடாக்கடைகளுக்காக அடுக்கப்பட்ட SKUக்களின் வெற்றி, உலகமெங்கிலும் உள்ள யூனிலீவரின் வெவ்வேறு பிரிவுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தயார் செய்யப்பட்ட இன்ஸ்டென்ட் சப்பாத்திகளை பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் பரிசோதித்து கொண்டிருக்கிறார்கள்.

17. ரிலையன்ஸ் குழுமம, பிஃளாக் டெலிகாமினை(Flag Telecom) வாங்கியதன் மூலம் ஐரோப்பியாவிலிருந்து உலகின் பிறபகுதிகளுக்கு செல்லும் அதி நவீன தகவல்பாட்டையினை(International gateway) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

அனுமனின் வால் போல் நீண்டு கொண்டே போகும். அதனால் இத்தோடு நிறுத்துகிறேன். இவையனைத்தயும் அடுக்குவதால், நான் வெங்கட் மற்றும் பிறரின் கூறுகளை மறுக்கிறேன் என்று பொருளல்ல. இந்தியாவிலும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய-சீன பொருளாதாரங்கள் இணையாக உலகின் 40% பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் என்று டெலாயிட் கன்ஸ்லடிங்கின் ஒரு அறிக்கை கூறுகிறது. ஆக, என்ன நினைத்தாலும், இந்தியா இல்லாத அல்லது இந்திய பொருட்களில்லாத ஒரு வருங்காலத்தை உலகம் நினைத்துப்பார்க்க முடியாது. வேண்டுமானால், பொருட்களின் மேல் "Made in India" என்கிற முத்திரை இல்லாமல் இருக்கலாம், ஆனால், பொருட்களின் தயாரிப்பிலும், சந்தையிலும், மேம்படுத்துதலிலும் இந்தியாவல்லாத ஒரு உலகினை யோசித்துப்பார்த்தல் இயலாது. சொல்லாமல் இருக்கவேண்டுமென்று நினைத்தாலும், இன்போசிஸ் முதல் எச்.சி.எல் வரை சீனாவிலிருந்து, போலந்து, சிலி, ஸ்பெய்ன் என எல்லா ஐரோப்பிய, தென்னமரிக்க, சீன ப்ராவின்ஸ்களில் உள்ள நிறுவனங்களை வாங்கி போட்டு, தங்களின் பாலன்ஸ் ஷீட்டினை, மனிதன் தும்புவதை விட, வேகமாக ஏற்றிக்கொண்டு வருகிறார்கள்.

உலகின் எல்லா தயாரிப்புகளிலும் 15% உள்ளடக்கமாவது இந்தியாவிலோ அல்லது இந்திய நிறுவனங்களிலோ தயாரித்தல் வேண்டும் என்கிற நிலையை உருவாக்குதல் முக்கியம். ஒரு மெகா நிறுவனம் தொடர்ந்து சந்தையில் பொருட்களை இறக்கிக்கொண்டே இருத்தலும், இறக்கிய பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுதலும், உலக வாடிக்கையாளர்களின் தேவையினையறிந்து சந்தைக்கேற்றபடி பொருட்களையும், சேவைகளையும் உண்டாக்குதலும், இந்தியாவென்கிற நிறுவனத்தின் குறிக்கோள்களாய் இருக்கவேண்டும்.

ஒருவகையில் பார்த்தால், இந்தியாவும் சீனாவும், ரஜினி கமல் மாதிரிதான். அவரவர்களுக்கான பாதையும், கூட்டமும் வேறு. ஆனாலும் இருவரும் வெற்றியாளர்கள். இருவரின் இருப்பும் மிக அவசியம்.

இவற்றை அடுக்குவதால், முகத்தில் கொடியை பூசிக்கொண்டு, மைதானத்தில் கத்தும் ஒரு pesudo இந்தியனாக என்னைக் காட்டிக் கொள்ள விருப்பமில்லை. எந்தளவிற்கு அடுக்குகிறேனோ அதே அளவிற்கு இந்திய அரசாங்கத்தின் மீதுள்ள என் தார்மீக கோவத்தையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம், லாட்டரி சீட்டுகளாய் மட்டுமே அறியப்பட்ட வட கிழக்கு மாநிலங்களும், வறுமைக்கோட்டினை தாண்டாத 30% இந்திய பிரஜைகளும், மின்சாரம் எட்டிப்பார்க்காத இந்திய கிராமங்களும், ஒரு மணிக்கு ஒரு பெண் என தலைவிரித்தாடும் பாலியல் வன்முறையும்,எல்லா வளங்களிருந்தும் அரசியல்வாதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகும் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களும், கழிப்பறை இல்லாத வீடுகளும் இதிலடங்கும். இவற்றையெல்லாம் தாண்டியும் "இந்தியா ஒளிர்கிறது"

உதவும் சுட்டிகள்:

1. http://www.businessweek.com/magazine/content/03_49/b3861003_mz001.htm
2. http://www.businessweek.com/magazine/content/03_49/b3861008_mz001.htm
3. http://www.henrythornton.com/article.asp?article_id=2398

Comments:
ஏற்கனவே எழுதி பதிந்து, ப்ளாக்கர் சொதப்பியதால் மீண்டும் பதிகிறேன்.மிக நீளமான தலைப்புகளோடு, என்ன பங்காளி சண்டையோ ப்ளாக்கருக்கு என்று தெரியவில்லை. அதனால் சின்னதாய் ப்ளாக்கரை ஏமாற்ற ஒரு தலைப்பும், முழு தலைப்பினை அதன் கீழும் தந்திருக்கிறேன்.
 
இந்திய சூரியனில் ப்ளாக் ஹோல்கள் (Black holes) இருந்தாலும் ஒளிர தான் செய்கிறது. எட்டா தூரத்திலிருந்த இந்த சூரியனை உலக ஓடம் நெருங்கிக் கொண்டிருக்க, நம் இந்திய சூரியனும் (திமுக சூரியன் இல்லீங்கோ) ஒளிர தான் செய்கின்றன.

எதுக்கு இந்த பீடிகை. அய்யகோ புள்ளிராஜா கணக்காக புள்ளி விவரங்களை அள்ளி விடும் அளவிற்கு நம்மகிட்ட சரக்கு இல்ல. சாரி நான் ஒதுங்கிக்கிறேன்.

வெங்கட் பதிவின் பின்னூட்ட விவாதங்களும் கவனிக்கப்பட்டது. இதுவும் கவனிக்கப்படும்.நான் வெறும் பார்வையாளன்.
 
//எந்தளவிற்கு அடுக்குகிறேனோ அதே அளவிற்கு இந்திய அரசாங்கத்தின் மீதுள்ள என் தார்மீக கோவத்தையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம், லாட்டரி சீட்டுகளாய் மட்டுமே அறியப்பட்ட வட கிழக்கு மாநிலங்களும், வறுமைக்கோட்டினை தாண்டாத 30% இந்திய பிரஜைகளும், மின்சாரம் எட்டிப்பார்க்காத இந்திய கிராமங்களும், ஒரு மணிக்கு ஒரு பெண் என தலைவிரித்தாடும் பாலியல் வன்முறையும்,இயற்கை வளங்களிருந்தும் அரசியல்வாதிகள் கையில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கும் பீகார்,ஜார்கண்ட் போன்ற மாநிலங்களும், கழிப்பறை இல்லாத வீடுகளும் இதிலடங்கும். இவற்றையெல்லாம் தாண்டியும் "இந்தியா ஒளிர்கிறது"//

கட்டுரை முழுமையும் மிக பயனுள்ள தொழில்த் துறை செய்திகள். (சுட்டிகளை இன்னும் படிக்கவில்லை. விரைவில் படிப்பேன்.) மற்றவை அனைத்தும் அறிவார்ந்து நிற்கையில் மேலே மேற்கோளிடப் பட்டிருப்பவை உணர்வார்ந்து நிற்பது மிக மிகச் சிறப்பு.

உங்களிடமிருந்து இன்னும் பெறுவோம் தானே! நான் இங்கு கேட்ட வார்த்தைகள் கெட்ட வார்த்தைகள் அல்ல! (நகைச் சுவைக்காக மட்டும்)

அன்புடன்
மன்னை மாதேவன்
 
நரேன்...,
360 degree interactive என்ற நிறுவனத்தை நடத்திக் கொண்டு, கம்ப்யூட்டர் சமாச்சாரங்களோடு அடங்கியிருப்பீர்கள் என்று நினைத்தால்... 360 டிகிரி கோணத்திலும் என்ன நடக்கிறது என்பதை கவனித்து முடிந்தால் புள்ளிவிபரங்களையும்... புத்தகங்களில் biblography பட்டியல் கொடுப்பது போல சுட்டிகளின் பட்டியல் ஒன்றை கடைசியாக இணைத்து.... இவை எல்லாவற்றையும் 'உருப்படாதது' என்ற தலைப்பில் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களை சபிக்க விரும்புகிறேன். நீங்கள் உருப்படக் கடவது! - சந்திரன்.
 
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அறிவியல் துறையில் பெருமளவிற்கு ஆராய்ச்சிகள் செய்து வந்தாலும், இந்திய விஞ்ஞானிகள் அங்கீகாரம் பெற்ற சஞ்சிகைகளில் பதிப்பிப்பது இல்லை. அரசியலின் தலியீடு இன்னமும் இருப்பதாக அறிந்தேன். இதில் உண்மை இல்லாமலும் இருக்கலாம். நமக்கு தேவையான புரதங்களை (restriction enzymes) வருவிக்கும் போது அவை சுங்க அலுவலகத்தில் முடங்கிவிடுவதும், தேவையான அளவு வாங்க முடியாமல் போவதும் எத்தகைய பாதிப்புக்களை உண்டுபண்ணும் என்பதையும் உயிரியியல் ஆய்வகத்தில் நாம் முன்னேறவேண்டிய பாதை கரடு முரடானது என்பதையும் அறிவேன். இ வைஅனைத்தையும் மீறி நடக்கும் முற்ச்சிகளைப் பாராட்டியே ஆகவேண்டும். ஒரு நடிகனுக்கு இருக்கும் புகழும் அங்கீகாரமும் விஞ்ஞானிகளுக்கு இல்லை என்பதும் கசப்பான உண்மை. ஒரு முறை பிரதமருடன் உரையாடுகையில் அவர் சொன்ன சொற்கள் “உங்களின் எண்ணம் புரிகிறது. என்னால் ஆ ன உதவிகள் செய்ய முய ற்சிக்கிறேன். தேர்தல் வரும் போது விவசாயிகளுக்கு ஏதெனும் செய்தால் அவர்களின் ஒட்டாவது எ னக்கு கிடைக்கும். ஆனால் உங்களில் எத்தனைபேர் ஓட்டு போட வருவீர்கள், உங்களின் ஓட்டு வங் கி என்ன” கடந்த 10 வருடத்தில் நிலைமை மாறியதாக யானறியேன். Stem cell reserachஐ விட நமக்கு இப்போதைய தேவை போலியோ, காலர போன்றவைகளை முற்றிலும் அழிப்பதுதான் .
2. ரான்பாக்ஸியின் வளர்ச்சி பாரட்டக்கூடியதுதான். வரிகளின் அமெரிக்க கிளையான ஒம் பரிசோதனிச்சாலை பற்றியும் அறிவேன். இதில் கவனமாக இருக்கவேண்டிய ஒன்று, மேலை நாடுகளில் தடைசெய்ப்பட்ட மருந்துப் பொருட்களை தங்களின் சுய லாபம் கருதி இந்தியாவில் வெளியிடாமல் இருப்பது. இதற்கு இந்திய அரசின் கட்டுபாடுகளை நானறியேன். கீழை நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பதும் அதனால் வரும் உபாதைகள் பற்றியும் உ ல க அரங்கில் கவனித்து வருகிறார்கள்.
குறைகளுக்கு இடையே இந்தியா ஒளிர்வது உண்மையே, ஆனாலும் குறைகள் மிக பெரிய அளவில் வளரும் போது, நிறைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை.
 
நாராயணன்,
மிகச் சிறப்பான அலசல்.
எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியாது.
"Hazira -Gujarat" த்தில் உள்ள "Reliance Industries Ltd" உலகிலேயே பெரிய "Naptha Cracker "
ஐ கொண்டுள்ளது. "Backward Integration" க்கு உலகத்தின் சிறந்த எடுத்துக்காட்டு Reliance ன் பெட்ரோலியத் துறையாகும்.

அது போல இந்திய ரயில்வேத்துறையும் (புகை வண்டி) மிகச் சிறப்பான் ஒன்று. இது பல குறைபாடுகளைக்
கொண்டு இருந்தாலும் , இதன் நிர்வாகக் கட்டமைப்பு எந்த மேலை நாடுகளாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

அதை விடுங்கள் ...இந்தியாவில் நாம் பயன்படுத்தி வரும் "ஓட்டு" முறைக்கு (மின்னனு வாக்குப் பதிவு) உலகமே
"ஓ" போட்டு உள்ளது.

அரசியல் கட்சிகள் கொஞ்சம் நிதானித்தால் நமது நாட்டில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை
வேகமாக களைந்துவிடலாம்.

அன்புடன்,
கணேசன்.
 
நன்றி விஜய், மகாதேவன், சந்திரன், பத்மா அரவிந்த், கணேசன்.

பத்மா அரவிந்த், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கொஞ்சமே சுதந்திரமும், பணபலமும் இருக்கப்பெற்றால், இந்திய விஞ்ஞானிகள் சாதிக்க நிறையவே இருக்கிறது. ரான்பாக்சி தாண்டி, இரண்டாம் நிலை மருந்து, மாத்திரை நிறுவனங்களான Dr.ரெட்டி லேப்ஸ் இதர சில நிறுவனங்கள் மெதுவாய் மத்திய ஆப்ரிக்கா சந்தைக்குள் நுழைந்து விட்டன.

கணேசன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதை விட உன்னதம், மும்பாயின் டப்பாவாலாக்கள், சாப், ஆரக்கிள் போன்ற பெரிய நிறுவனங்கள், பொருட்களின் சப்ளை நிர்வாகத்தினைப் பற்றி மண்டையை பிடித்து யோசித்து கொண்டிருக்கும்போது, சர்வசாதாரணமாக எவ்வித சொதப்பல்களுமில்லாமல், மும்பாய் முழுதும், ஒரு நாளைக்கு குறைந்தது மில்லியன் சாப்பாட்டு கூடைகளை விநியோகிக்கிறார்கள். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் மும்பாயின் டப்பாவாலாகளின் செயல் ஆய்வுக் கட்டுரையாக உள்ளது.
 
நன்றி நரேய்ன். நீங்கள் விடுமுறையில் சென்றபோது உங்கள் வலைத் தளத்துக்கு வந்து சில முறைகள் ஏமாந்து போனேன். இம்ம்.. வந்து விட்டிர்கள் போலிருக்கிறது. அவசரம் ஒன்றும் இல்லை. உங்கள் மேல் கோபமும் இல்லை.
 
சற்றுக்காலம் முன்புவரை வெறும் generic drugs (அதாவது, பேட்டண்ட் காலாவதியான brand மருந்துகளை, brand name இன்றி, Ampicillin amoxycillin என்ற பெயரில் தயாரிப்பது) தயாரிப்பதில் மட்டுமே இருந்து, தற்போதைய நிலையிலான ரான்பாக்ஸியின் அபரிமிதமான வளர்ச்சி பாராட்டத்தக்க ஒன்றே. Product patent, process patent, product by process patent என்றுள்ள சிக்கலில், இந்திய மருந்துத் தயாரிப்புத் துறைக்குப் பெரும் உதவியாக இருந்தது, இந்தியாவிலுள்ள process patent முறைதான். ஹைதராபாதைச் சுற்றியும், புனேவிலும் பெரும்பாலான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ந்தது இதன்மூலம்தானென்று நினைக்கிறேன். இதன்மூலம், தயாராகும் end-result (அதாவது, மருந்து) காப்புரிமை செய்யப்படுவதைவிட, அந்த மருந்தை உருவாக்கும் "வழிமுறை" காப்புரிமை செய்யப்படும். பிறர் அதே மருந்தைத் தயாரிக்கவேண்டுமெனில், தயாரிப்பு வழிமுறையில் ஒரு படியை (one single step in the process) மாற்றினால் போதும். நமது பொருளாதாரத்துக்கு, தற்போதைய மக்கள் நிலைக்கு இதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், ஒரு புது மருந்தைக் களத்தில் இறக்குவதன்மூலம் ஃபைஸர், மெர்க், எலி-லில்லி போன்ற மருந்துத் தயாரிப்பு ராட்சதர்கள் ஈட்டும் லாபம் (தோற்கும் மருந்துகள் வேறு கதை) கூரையைப் பிய்த்துக்கொண்டு போகும். உதாரணத்துக்கு, 2002ல் ஃபைஸர் விற்ற க்ரெஸ்ட்டார் (கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரை) மாத்திரையின் ஒருவருட விற்பனை மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர்கள். அதே வருடம், இந்திய pharmaceutical industryயின் மொத்த மதிப்பும் 5.5 பில்லியன் டாலர்கள்! யோசித்துப் பார்த்தால், ஃபைஸரின் ஒரு மாத்திரை மட்டும், மொத்த இந்தியத் தொழிற்துறையைப்போல இரண்டுமடங்கு மதிப்புக்கு விற்றிருக்கிறது (முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்). இவ்வளவு விற்பதற்கு, கடுமையான சட்டதிட்டங்களுக்கிடையில், ஒரு புது molecule ஐ உருவாக்கி, அதை வெவ்வேறு கட்டங்களில் - சோதனைக்கூடம், மிருகங்கள், பின்பு மனிதர்களென்று சோதித்து, FDA (Food and drug administration)ன் அனுமதி பெற்று, சந்தைக்குக் கொண்டுவருவதற்கு, பெரிய நிறுவனங்களுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 600-700 மில்லியன் டாலர்கள். அவ்வளவு முதலீடு இருப்பதால்தான் அசுரத்தனமாக மருந்துகளை market செய்து, அவ்வளவு எண்ணிக்கையில் விற்கிறார்கள். அது ஒரு சுழற்சி. சாப்பிடு-குண்டாகு-மருந்துசாப்பிடு-ஒல்லியாகு-குண்டாக மறுபடிச் சாப்பிடு-கொலஸ்ட்ரால் ஏறுகிறது-மாத்திரை சாப்பிடு-மாத்திரையில் ஒரு பக்க விளைவு-அதைத்தீர்க்க மாத்திரை-அதிககாலம் வாழு-வாழ்ந்தால் பார்க்கின்ஸன் அல்ஸீமர் போன்ற முதுமை நோய்கள்-அதற்கு மாத்திரைகள் என்று இங்கே இருக்கும் கலாச்சாரம் நம் ஊரில் பெரும்பாலும் இருப்பதில்லை. Orchid, இப்போதுவரை generics தான் தயாரித்துக்கொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன். அதற்காக, நாளையே அனைத்து நிறுவனங்களும் ஃபைஸரையும் பிற தாதாக்களையும் முந்திவிடமுடியுமென்று கூறவில்லை: இந்தக் கண்ணோட்டத்தில்தான், வெங்கட்டின் பதிவில் நான் எழுதியது, "வேறு யாரோ தீர்மானிக்கும் முடிவுகளை வெறுமனே செயல்படுத்த மட்டும் செய்வது" என்ற அர்த்தத்தில். அதற்காக, வளர்ந்துவரும் நம் துறைகளைப்பற்றிக் குறைசொல்வதாக அர்த்தமில்லை. மேற்கொண்டு, தொழிலின் trends பற்றி, தெரிந்த துறையைத்தவிர பிற துறைகளைப்பற்றிய அவதானம், வெறும் பார்வை என்ற ரீதியில்தான் இருக்குமென்பதால், நான் சொல்வதனைத்தும் எவ்வளவுதூரம் சரியாக இருக்குமென்று எனக்குத் தெரியவில்லை.

//அறிவுசார் தொழில்களில் உயிரியல்,மரபணுவியல் போன்றவற்றில் குறைவான மாணவர்களை இருக்கிறார்கள் என்று மாண்டீ குறைப்பட்டு கொண்டார்.//
நான் எழுதியது ஒரு தொழில்முனைவுப் பார்வையில் அல்ல, ஒரு அடிப்படை ஆராய்ச்சியின் பார்வையில். இரண்டு பார்வைகளும் வேறுபட்டவை என்பதால், குறைப்பட்டுக்கொள்வதற்கு நான் கொள்ளும் காரணங்கள் வேறு. முடிந்தால் அதைப் பின்பு ஒரு பதிவாக இடுகிறேன்.

மற்றப்படி டாலரின் வீழ்ச்சி அமெரிக்காவால் செயற்கையாக உருவாக்கப்பட்டதென்று உலவும் செய்திகளை எப்படிப் பார்ப்பதென்று எனக்குத் தெரியவில்லை.
 
சொல்ல மறந்தது: நல்ல விபரமான பதிவு நாராயண்...
 
குமுதம் ரிப்போர்ட்டரில் (17/03/2005) வந்துள்ள "என்ன செய்யப் போகிறார் கலைஞர்?" என்ற "சோலை" யின் "காப்புரிமைச் சட்டம்" பற்றிய கட்டுரை
முக்கியமானதாகப் பட்டது.

இதனையும் ஒரு பார்வை பாருங்கள
 
நேர்த்தியான பதிவு நாராயண். மாண்டீ'யின் பின்னூட்டம் மிகவும் முக்கியமானது. இந்திய காப்புரிமைச் சட்டத்திருத்தம் சமீபத்தில் மாறியுள்ளது. இதனால் மருந்துத்தயாரிப்பாளர்களுக்கு உடனடி இழப்பு இல்லையெனினும் புது மருந்துக் கண்டுபிடுப்புகளிலும் அவர்கள் கவனம் செலுத்துவது அவசியம். இதைப்பற்றிய என்னுடைய பழைய சுட்டி இதோ:

http://neengalkettavai.blogspot.com/2005/01/blog-post.html
 
நாரா - எழுத ஆரம்பித்து நீண்டதால் என்னுடைய வலைப்பதிவிலேயே தொடர்ந்திருக்கிறேன். பார்க்க

http://www.domesticatedonion.net/blog/?item=435
 
நாராயணன் மும்பை டப்பாவாலக்களைப் பற்றி சொல்லியதால் ஒரு கொசுறு செய்தி.

GE ஆரம்பித்து வைத்த சிக்ஸ் சிக்மா (six sigma) என்ற கோட்பாடுகளும், அதை அடைய வரைமுறைகளும் சொல்லி விட்டு அதை எளிதில் அடைவது கஷ்டமென நினைத்துக் கொண்டிருந்தார்கள். (Six Sigma at many organizations simply means a measure of quality that strives for near perfection.) எல்லா கம்பெனிகளுக்கும் சிக்ஸ் சிக்மா பைத்தியம் பிடித்து ஆட்ட, நம்ம மும்பைகார டப்பா வாலாக்கள் சிக்ஸ் சிக்மாவையே மிஞ்சி விட்டார்கள்.

டப்பாவாலாக்கள் சிக்ஸ் சிக்மா மாஸ்டர் ப்ளாக் பெல்ட் காரர்களே.

கூகிளில் six sigma -வென அடித்து தேடுங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்கள் உங்கள் முன் கொட்டும்
 
வெங்கட்டின் பதிவிலிட்ட பின்னூட்டம். தொடர்ச்சிக்காக இங்கே பதிகிறேன்.

நன்றி வெங்கட். இன்னமும் போகவேண்டிய தூரம் நிரம்ப இருக்கிறது என்பதை கட்டாயமாக ஒத்துக்கொள்கிறேன். நான் குறிப்பிட்டது கண்ணருகில் நீங்கள் பார்க்கும் மாற்றங்கள். எல்லோரும் தான் செய்தித்தாள் படிக்கிறோம். இதில் மாற்றங்களொன்றுமில்லை. ஒரு அடிப்படை விசயத்தை மறந்து விட்டோம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஆங்கிலமென்பது இணைப்பு மொழி, தாய்மொழியின் வழியே நடக்கும் வியாபாரங்கள் மிகக்குறைவு. இது மிக முக்கியமான அடிப்படை. சீனாவில் அது கிடையாது. எந்த நிறுவனம் சீனா போனாலும், சீனமொழி பேசாமல் சீனாவிற்குள் வியாபாரம் செய்ய இயலாது. மேலும் சீனா உலகின் மிகப்பெரிய சந்தை. ஆகவே இந்தியாவில் இன்று ஹிந்தி ஆபிஸ் வெளியிடும் மைக்ரோசாப்ட், சில வருடங்களுக்கு முன்னரே சீனமொழியில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் வெளியிட்டு விட்டது.ஆக, இந்தியாவை விட சீனாவில் அதிக டாலர்கள் செலவழிக்கிறார்கள் என்பதில் வியப்பொன்றுமில்லை.

ஆராய்ச்சித்துறை மாணவன் அல்ல நான். நான் ஒரு தொழில்முனைவோன். என் கருத்துக்கள் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள். இன்னும் சீனாவுக்கு இணையாக முன்னேறவில்லை என்று சொல்லுவதை என்னவென்று சொல்லுவது என்று தெரியவில்லை. என்னை விட உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கலாம், லைசன்ஸ் ராஜ் முடிந்து இன்னும் 15 வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் சீனா தன் முன்னேற்றத்தினை 20+ ஆண்டுகளாக செய்துவருகிறது. இந்தியாவினைப் போன்று அரசியல் ஸ்திரத்தன்மை பிரச்சனைகள் (political stability)சீனாவில் கிடையாது. இங்கே ஒரு திட்டத்தை வரையறை செய்து அதனை செயல்படுத்துவதற்குள் ஏற்படும் சிரமங்கள் சீனாவில் கிடையாது. இதனால் நான் இந்தியாவிற்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. இந்தியா என்பது சீனா போல் ஒரு மொழி பேசும் ஒரேவிதமான மனப்பான்மையினை கொண்ட நாடல்ல. இடதுசாரி தொழில்துறை சித்திரவதைகளை மீறி அரசாங்கமும், நிறுவனங்களும், தொழில் முனைவோரும், பணமுதலாளிகளும் இந்தியாவினைப் பற்றி முன்னேற்றத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் போனபதிவிலிட்ட விசயங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. இன்னமும் நிறைய துறைகளில் நமக்கு வல்லமை உண்டு, அதனை கண்டறிந்து செயல்வடிவம் கொடுத்தால் மாற்றங்கள் நிறைய நிகழும். லட்சுமி மிட்டல் வெளியேறிய காலகட்டம் வேறு, இன்று அதே லட்சுமி மிட்டல் இந்தியாவில் வந்து உட்கார்ந்து கொண்டு ஒரிஸ்ஸா அரசாங்கத்தோடும், மத்திய அரசோடும் பேசிக்கொண்டிருக்கிறார். வெளியே போன சீன டயஸ்போரா எவ்வாறு சீனாவை பெரிய சந்தையாக முன்வைக்கிறதோ, அதேப்போல் இப்போது தான் இந்திய டயஸ்போரா பேச ஆரம்பித்திருக்கிறது. அவர்களும், நீங்கள் சொல்லும் அறிவுசார் தொழில்களில் தான் ஆரம்பித்திருக்கிறார்கள். இதையும் தாண்டி ஜூனிபர் நெட்வார்க்ஸ் போன்றவர்கள், இணையத்தை & அலுவலக கணினி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை இணைக்கும் ரொவுட்டர்களின் சந்தையில் சிஸ்கோ போன்ற மிகப்பெரும் நிறுவனங்களோடு மோதி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

நீங்களும் நானும் ஒரே விஷயத்தை தான் சொல்லிவருகிறோம், வெவ்வேறு விதமான விதங்களில். நீங்கள் வளர்ச்சி போதாது, இன்னமும் மாறவேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள், நான் சில துறைகளில் நாம் வளர்ச்சி பெற்றிருக்கிறோம், இதனையே பிற துறைகளுக்கும் நீட்சி செய்யலாம் என்று கூறியிருக்கிறேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக இன்னமும் கூட ஆழமாக விவாதிக்கலாம், கருத்துரைக்கலாம், சண்டை போடலாம். நம் விவாதங்களினூடே தெளியும் மனங்களிலிருந்து நாளைய இந்தியாவின் தலைமுறைகள் பாடம் கற்று கொள்ளட்டும்.

சிறு திருத்தம். டாடா ஸ்டீல் பற்றிய தங்கள் குறிப்புகள் ஒரு எதிர்மறை பார்வையை வைக்கிறது. டாடா ஸ்டீலும் உலகமயமாகிவருகிறது. லட்சுமிமித்தல் போல் அடாவடியாய் எல்லா தொழிற்சாலைகளையும் வாங்கி உற்பத்திதிறனை அதிகரிக்காமல், தேர்ந்தெடுத்து தன் "வாங்குதல்களை" தொடங்கிவிட்டது. பார்க்க:The new world of Tata Steel
 
மாண்டீ, தகவலுக்கு நன்றி. ஆர்கிட்டின் செயல்பாடுகள் பற்றி முழுவதுமாக அறிந்து பதிகிறேன். ஏற்கனவே எழுதியபடி, நான் ஆராய்ச்சி மாணவனல்ல, தொழில் முனைவோன். அமெரிக்க டாலரின் கான்ஸ்ப்ரைசி தியரி இப்போது தான் கேள்விப்படுகிறேன். நான் படித்த வரையில், அமெரிக்க அரசாங்கம் மிகப்பெரும் நெருக்கடியில் இருக்கிறது. ஒரு நாளைக்கு $2 பில்லியன் இல்லாமல் அமெரிக்க அரசாங்க குதிரை ஒட இயலாது. அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோவின் மதிப்பு உயர்ந்து வருவதால், அமெரிக்காவின் டாலர் அரசாங்க பாண்டுகளில் முதலீட்ட பல்வேறு அரசாங்கங்கள் மெதுவாக யூரோவின் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவிலும் இந்த குரல் பலமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தவிர்த்து, அமெரிக்கர்களுக்கு சேமிக்கும் பழக்கம் மிகக்குறைவு. ஆகவே அரசாங்கத்திற்கான பணம் சேமிப்பில் வாராமல், பிற அரசுகள் அமெரிக்க டாலரை வாங்கி சேர்த்து கொள்வதில் தான் வருகிறது (அதற்கு அமெரிக்க அரசாங்கம் தரும் வட்டி அநியாயம் 1% மட்டுமே) இதனையொட்டி தான் திருவாளர் புஷ், சோசியல் செக்யுரிட்டி நிதிக்கு பணமில்லை என்று கப்சா விட தொடங்கியுள்ளார். தொடர்ந்து பிறநாடுகளின் மீது தொடுத்த போர்களில் செலவும், போரின் பின்விளைவுகளின் செலவீனமும் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. எழுதிக்கொண்டே போகலாம் ஆனாலும் இங்கே வேலை கழுத்தினை நெரிக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
 
விரைவாக நன்றி கூறிவிட்டு ஒடிப்போகிறேன். நன்றி வெங்கட், மாண்டீ, கங்கா, இரவிக்குமார் மற்றும் மீண்டுமொருமுறை கணேசனுக்கும், விஜய்க்கும்.
 
Please be careful when you buy tramadol .

Please be careful when you buy tramadol online.

Please be careful when you buy fioricet

Please be careful aboutloss weight

Please be careful when you buy tramadol.

Please be careful when buying Tramadol.

Please be careful when buying from an online pharmacy .

Please be careful when buying penis enlargement pill .

Please be careful when buying penis enlargment pill .

Please be careful when buying penis pill .
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]