Apr 30, 2005

சென்ட்ரல் தொ ப்ரெசில் (1998)

ஹீரோவுக்கு வயது 9. ஹீரோயினுக்கு வயது 50. காதல் கிடையாது. சண்டை கிடையாது. பஞ்ச் டைலாக் கிடையாது. திடுக்கிடும் திருப்பங்கள் கிடையாது. பயங்கரம் கிடையாது. ஆனால், படம் முடியும்போது என்னையுமறியாமல் கண்கள் கலங்கின. தந்தையின் அன்புக்காக தந்தையினை தேடும் மகனையும், தனிமையின் ஏக்கங்களை தணிக்க திண்டாடும் பெண்ணையும் மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.மனித மனங்கள் பாசத்திற்கும், அன்புக்கு ஏங்கும் சூழ்நிலையின் விசித்திரத்தையும், தேவையையும் உணர வைக்கும் படம். அற்புதமான, அட்டகாசமான, மனதினை உருக வைக்கக் கூடிய படம். மொத்தமே 4-5 கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு வால்டர் சலேஸ், அற்புதமான படத்தினை தந்திருக்கிறார்.

டோரா, ரியோ டி ஜெனிரோ சென்டிரல் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு கடிதங்கள் எழுதி தரும் ஒரு டீச்சர். ஆனாலும் அவள் எழுதும் எந்த கடிதங்களையும் அவள் அனுப்பாமல், மொத்தமாக எடுத்துவந்து, அவளும், அவளுடைய தோழி ஐரீனும் படித்து கிழித்துப் போட்டு விடுவார்கள். அவர்களிருவரும் தனியே வாழ்பவர்கள். சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லாதவர்கள். சொற்ப சம்பளத்தில் ஒடும் வாழ்க்கை. நிறைய பேர்கள் அவளிடத்தில் ரயில்வே ஸ்டெஷனில் கடிதங்களை சொல்வதிலிருந்து தொடங்குகிறது படம். அவ்வாறு வரும் வாடிக்கையாளர்களில் ஆனாவும், அவளுடைய மகன் ஜொஷ்யே(9 வயது) ஒருவர். டோராவுக்கு ஜொஷ்யேவை பிடிக்கவில்லை. சதா எதையாவது நோண்டிக் கொண்டிருக்கும் அவன் மீது வெறுப்பினன உமிழ்கிறாள் டோரா. ஆனா அவளின் குடிக்கார கணவனுக்கு எழுதும் கடிதத்தில் தொடங்குகிறது படம். அவர்களின் மகன் தந்தையை பார்கக விரும்புவதாக எழுதசொல்லி காசு கொடுத்து போய்விடுகிறாள் ஆனா. சாலையினை கடக்கும்போது பராக்கு பார்த்து தன் பம்பரத்தினை நழுவவிடும் மகனை காக்க திரும்பும் ஆனாவை ஒரு லாரி அடித்து இழுத்துப் போய்விடுகிறது. ஸ்தலத்திலேயே மரணம். தன் அம்மாவை தவிர வேறெதுவும் தெரியாத ஜொஷ்யே, மீண்டும் ரயில்வே ஸ்டெஷனுக்குள் வந்துவிடுகிறான்.

ஜொஷ்யேவுக்கு தெரிந்த ஒரே வழி அம்மா எழுதிய கடிதத்தில் இருக்கும் முகவரியை கொண்டு தன் தந்தையை பார்ப்பதுதான். அதற்கு டோராவின் தயவு வேண்டும். டோராவோ அவனைப் பார்த்தாலே எரிந்து விழுகிறாள். ஜொஷ்யே ஸ்டேஷனிலேயே தங்கி சாப்பாட்டுக்கு திருடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவனுக்கு முன் ஒருவன் ஒரு ப்ரெட் துண்டினை எடுத்துக் கொண்டு ஒடுகிறான். ஸ்டேஷனின் பாதுகாப்புக்கு இருக்கும் தனியார் காவலாளிகள், அவனை துரத்தி சென்று, திருடியவன் மன்னிப்பு கேட்டு, கெஞ்ச, கெஞ்ச அவனை சுட்டு தண்டவாளத்தில் வீசுகிறார்கள். பிரேசிலில் எந்தளவிற்கு குற்றங்களும், அதற்காக தனிநபர் தண்டனைகளும் இருக்கின்றன என்பதை பளிச்சென்று சொல்லுகிறது இந்த காட்சி. பின் டோரா அவன் மீது பரிதாபப்பட்டு அவனை தன் வீட்டுக்கு கூட்டிச் செல்லுகிறாள்.

வீட்டில் ஐரினுக்கும் ஜொஷ்யேவை பிடித்துப் போகிறது. ஆனால், டோரா ஜொஷ்யேவை தனக்கு தெரிந்த வீட்டில் வெளிநாடுகளில் வேலை செய்வதற்காக சிறுவர்களை அழைத்து செல்லும் ஒரிடத்தில் ஜொஷ்யேவை விட்டுவிட்டு 1000 டாலர் பெற்றுக் கொண்டு, புது டிவி வாங்கிக் கொண்டு வீடு வருகிறாள். ஐரின், ஜொஷ்யேவைப் பற்றி கேட்க, இவள் விளக்க, ஐரின் அவர்கள் சிறுவர்களின் அங்கங்களை விற்பவர்கள் என்று கூறுகிறாள். எப்படியோ அங்கே போய், நாடகமாடி, ஜொஷ்யேவை கூப்பிட்டுக் கொண்டு, ஒரு பஸ்ஸில் ஏறி பாம் ஜீஸஸ் டி லாபா என்கிற இடத்துக்கு போக முற்படுகிறாள். இதுவரை ஒருவிதமான லவ்ஹேட் உறவு தான் அவர்களிடத்திலிருக்கிறது. பஸ்ஸில் டோரா குடிக்கும் மதுவினை திருட்டுத்தனமாக சிறுவனும் குடித்து கலாட்டா செய்ய, டோரா பஸ் டிரைவரிடம் காசு கொடுத்து அவனை பாம் ஜீசஸில் இறக்கிவிடுமாறு சொல்லி அங்கேயே இறங்கி விடுகிறாள். பஸ் புறப்பட்டுப் போகிறது.

தலையை திருப்பிப் பார்த்தால், ஜொஷ்யே அவளை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பையில் தான் எல்லா பணமும் இருக்கிறது. அது பஸ்ஸோடு போய்விட்டது. அவனை கரித்துக் கொட்டியபடி, உணவுவிடுதியில் அடுத்தவர் உண்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு லாரி டிரைவரின் சிநேகிதம் கிடைக்கிறது. லாரி டிரைவர் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து அவர்களை லாரியில் ஏற்றிக் கொள்கிறான். டோராவைப் போலவே அவனும் தனியாள். அவனுக்கு தெரிந்ததெல்லாம் சாலைகள், சாலைகள், சாலைகள் மட்டுமே. ஏதோ ஒருவிதமான உணர்வு மயக்கத்தில் , ஒரு உணவு விடுதியில், டோரா அவனை விரும்புவதாக சொல்லுகிறாள். அவன் ஒரு இவஞ்சலிச கிறிஸ்துவன். காதலெல்லாம் கிடையாது. உடல் இச்சைகளை தவிர்க்கவேண்டும் என்று நினைப்பவன். அவர்களிருவரையும் அங்கேயே விட்டுவிட்டு, அவன் லாரியினை எடுத்துச் சென்றுவிடுகிறான். மீண்டும் கையில் அதிக காசில்லை. போக வேண்டிய தூரமோ அதிகம்.

அங்கே வரும் ஒரு கிறிஸ்துவ இறைவாத துதிப்பாடல்கள் ட்ரக்கில் ஏறிக் கொண்டு பாம் ஜீச்ஸிற்கு போகிறார்கள். இந்த இடம் படத்தில் அருமையாக இருக்கும். தோற்றுப் போன காதலோடு, டிரக்கின் நடுவில் டோரா, கடவுளை காதலிக்க சொல்லி பாடல்கள் பாடும் கூட்டம் சுற்றிலும் என குறியீட்டுத் தன்மையுடன் இருக்கும். டிரக் பாம் ஜீசஸினை அடைகிறது. கையிலிருக்கும் முகவரியை கொண்டு அவர்கள் வீட்டினை கண்டுபிடிக்கிறார்கள். அகலமான வெறும் நிலங்கள் அடங்கிய நீண்ட பெரிய ஒரு இடத்தில் அந்த முகவரியிலுள்ள வீடு இருக்கிறது. கேட்டினை திறந்து அந்த சிறுவன் தன் தந்தையின் வீட்டினை நோக்கியோடும் லாங் ஷாட், கவிதை. அவ்வீட்டில் ஏற்கனவே மணமான பெண்ணும் 3 சிறுவர்களும் இருக்கிறார்கள். ஜெஸூஸ்க்காக (ஜொஷ்யேவின் தந்தை பெயர். அவரொரு) தர்மசங்கடமாக அந்த வீட்டில் காத்திருக்கிறார்கள். காற்றடித்து புழுதி கிளம்பும் வெளியிலிருந்து ஒரு மனிதன் வருகிறான். சிறுவன் ஆவலாக தன் தந்தையினை முதன் முதலில் காணும் உற்சாகத்துடன் காத்திருக்கிறான்.

டோரா அவனோடு பேசும்போதுதான் தெரிகிறது, அவன் பெயர் ஜெஸ்ஸியென்றும், ஜெஸூஸ் அங்கிருந்து 15கீ.மீ தொலைவில் ஒரு ஊரில் வசிக்கிறார் என்றும். லாட்டரியில் அடித்த பணத்தில் ஜொஷ்யேவின் தந்தை, வீடுகள் வாங்கிவிட்டதாகவும், குடித்து அழிவதாகவும் கூறுகிறான். ஏமாற்றத்தினை தாங்கமுடியாத சிறுவன் பாம் ஜீசஸின் இறைப் பிரார்த்தனைக் கூட்டத்தினுள் ஓடுகிறான். அவனைத் தொடர்ந்து ஒடும் டோராவால் துரத்த இயலாமல் மயங்கி சரிகிறாள். ஜொஷ்யே அவளை எழுப்புகிறான். கையில் காசில்லை. அந்நேரத்தில் அங்கிருக்கும் ஒரு துறவியின் சிலையின் முன் எல்லோரும் புகைப்படமெடுத்துக் கொள்கிறார்கள். அப்போது அங்கு வரும் ஒரு பெண், துறவியிடத்தில் சேதிகள் சொல்ல முடியுமா என்று போட்டோகிராபரை கேட்க அவன் மறுத்துவிடுகிறான். அதைப் பார்க்கும் ஜொஷ்யே, டோரவினடத்தில் கண்ணடித்து, டோரவை கடிதமெழுதுபவர் என்றும், இங்கே கடிதமெழுதினால், துறவியிடம் சேர்ப்பிக்கப்படும் என்று கூறி, அதையே வணிகமாக மாற்றி, கூவி,கூவி மக்களை அழைத்து காசு சேர்கிறான். இருவரின் கையிலும் நிறைய பணமிருக்கிறது. அந்த துறவி சிலையோடு போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். தன் காசில் டோராவுக்கு ஒரு ஆடைவாங்கி தருகிறான். கடிதங்களை கிழித்துப் போட்டு விடலாம் என்று கூறுகிறான் ஜொஷ்யே. டோரா மறுக்கிறாள். மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி பேருந்தில், ஜெஸூஸ் இருப்பதாக சொல்லும் ஊருக்குப் போகிறார்கள்.

அங்கே போய் அந்த முகவரியில் விசாரித்தால், அந்த வீட்டினை அவர் விற்றுவிட்டு எங்கோ போய்விட்டார் என்று சொல்கிறார்கள். இதற்கிடையில் டோராவும், ஜொஷ்யேவும் இடையில் ஒருவிதமான நட்பும், பாசமும் மலர்ந்திருக்கின்றது. டோரா, ஜொஷ்யேவை தன்னுடனே தங்கும்படி சொல்கிறாள். அவனும் சம்மதிக்கிறான். அவள் இதனை ஐரினுக்கு போன் செய்து சொல்கிறாள். உடனே பாம் ஜீசஸுக்கு போகலாம் என்று பஸ் ஸ்டாண்டுக்கு வருகிறாள். அன்றைக்கு அவர்கள் வந்த பேருந்தோடு முடிந்துவிட்டன என்றும், இனி நாளை மறுநாள் தான் பேருந்து வருமென்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இவர்கள் முகவரி விசாரித்த வீட்டில் இருக்கும் சிறுவன், ஒரு வயர்மென்னுக்கு விஷயத்தினை சொல்லுகிறான். அந்த வயர்மென், ஜெஸூஸின் மூத்த பிள்ளை. ஜொஷ்யேவை ஜெஸுஸின் பிள்ளை என்று அறிமுகப்படுத்தாமல், டோரா, அவள் ஜெஸூஸின் தூரத்து சொந்தமென்று சொல்லுகிறாள். வயர்மென்னின் வற்புறுத்தி அவர்களை வீட்டிற்கு இரவு தங்க செல்லுகிறான்.

வயர்மென்னும், அவனின் தம்பியும் அவர்கள் தந்தை எழுதியதாக ஒரு கடிதத்தினை தந்து டோராவைப் படிக்கச் சொல்லுகிறார்கள். ஜொஷ்யே அவனின் தந்தையின் போட்டோவினனப் பார்க்கிறான். அவர்கள் இருவருக்கும் எழுதப்படிக்கத் தெரியாது. 6 மாதங்களாக அந்த கடிதம் வீட்டிலேயே இருக்கிறதென்று சொல்கிறார்கள். அந்த கடிதம் ஆனாவுக்கு எழுதப்பட்ட கடிதம். அதில் தான் திரும்பி வருவேன் என்றும், ஆனாவினைப் பார்ப்பேன் என்றுமிருக்கிறது. வயர்மென்னும், ஜொஷ்யேவும் அவர்களின் தந்தை திரும்பி வருவார் என்று நம்புவதாக சொல்லுகிறார்கள். இரவு அனைவரும் படுத்திருக்கிறார்கள். டோரா வாசித்த கடிதம், போட்டோவின் கீழே இருக்கிறது. அதனருகில், அவள் ஆனாவின் கடிதத்தையும் வைக்கிறாள்.

ஜொஷ்யே வாங்கிக் கொடுத்த ஆடையினை அணிகிறாள். எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். விடியற்காலையில் எழுந்து முதல் பஸ்ஸிற்காக விரைகிறாள். எழுந்து பார்க்கும், ஜொஷ்யே டோராவை காணாமல் தேடுகிறான். பஸ் ஸ்டாண்டினை நோக்கி ஒடுகிறான். பஸ் கிளம்பிவிடுகிறது. பஸ்ஸினுள் கண்ணீரோடு டோரா, அவர்கள் எடுத்த புகைப்படத்தினைப் பார்க்கிறாள். அங்கே, ஒடிக் களைத்து நிற்கும் ஜொஷ்யே தன்னிடமிருக்கும் டோராவின் புகைப்படத்தினைப் பார்க்கிறாள். டோரா ஒரு கடிதத்தினை எழுதிக் கொண்டே வாய்ஸ் ஒவரில் சொல்லுவார் "இனி எந்த கடிதத்தையும், போஸ்ட் பண்ணாமல் இருக்க மாட்டேன்". புகைக் கக்கிக் கொண்டு லாங் ஷாட்டில் மலை வளைவுகளில் பஸ் போய்க் கொண்டிருக்கிறது. படம் முடிகிறது.

டோராவாக நடித்த பெர்னட்டோ மார்டென்கொரா (வயது 70+) தென்னமரிக்க சினிமாவின் மிக முக்கியமான, அசாதாரணமான நடிகை. சென்ட்ரல் ஸ்டேஷனுக்காக ஆஸ்கார் விருதுக்காக (1998) பரிந்துரைக்கப்பட்டவர். வினிசியல் டி ஒலிவியரா தான் ஜொஷ்யே என்ற சிறுவன். ஜொஷ்யேவாக வரும் சிறுவனின் முதல் படம் இது. இச்சிறுவனின் தொழில் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் ஷூ பாலிஷ் போடுவது. வால்டர் சலேஸ் அங்கிருந்து இவனை கண்டெடுத்து, படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முதல் படம் போலவே இல்லாமல், அசத்தியிருக்கிறான் சிறுவன். இந்த படத்தின் டைட்டிலுக்கான காரணம், ரியோ டி ஜெனிரோவின் முதன்மை ரயில்வே ஸ்டேஷனுக்கு பிரேசிலில் சொல்லப்படும் பெயரே.

இந்த படத்தில் நான் பார்த்து ரசித்த இன்னொரு விஷயம், ப்ரெசில். ரியோ டி ஜெனிரோ ரயில்வே ஸ்டெஷனும், (மக்கள், ஜன்னல் வழியாக உள்ளே போய் இடம் பிடிப்பது, ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்வது[அப்படியே மும்பாயில் பார்க்கலாம்], புட்போர்டில், ஜன்னலில் தொற்றிக் கொண்டு பயணிப்பது), டோராவும், ஜொஷ்யேவும் பயணம் செய்யும் பேருந்தில் ஒருவர் கோழி கால்களைக் கட்டி தலைகீழாக பிடித்து வருவதும், தெருவோர கடைகளும், நகர அமைப்பும், குண்டும்குழியுமான சாலைகளும், குவார்டர்ஸ் போல கட்டப்பட்ட வீடுகளும்,இறை நம்பிக்கையினை முதலீடாக வைத்திருக்கும் பெந்தகொஸ்தே மாதிரியான அமைப்புகள் என அச்சு அசலாக அப்படியே இந்தியாவை முன்னிறுத்துகின்றன. பிச்சைக்காரர்கள், திருடர்கள், படிப்பறிவில்லாதவர்கள், கையேந்தி பவன்கள் என நீளும் தென்னமரிக்க (ஸ்பானிஷ் ) படங்களுக்கும், இந்தியாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்று யூகிக்க முடிகிறது. புட்பாலை தாண்டி, அந்த நாட்டினை நேசிக்க நான் பார்க்கும் தென்னமரிக்க படங்களில் நிறைய காரணங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பிரேசிலுக்கு போய் வரவேண்டும்.Central Station (1998)

பார்க்க - ஐஎம்டிபி | சென்ட்ரல் தொ ப்ரெசில் இணையத்தளம்

விருதுகள்

Academy Award Nominations:
Best Actress: Fernanda Montenegro
Best Foreign Language Film

Golden Globe Nominations and *Winners:
Best Actress (Drama): Fernanda Montenegro
*Best Foreign Language Film (Brazil)

Other Awards:
Los Angeles Film Critics Association—Best Actress (tie): Fernanda Montenegro
National Board of Review—Best Actress: Fernanda Montenegro; Best Foreign Language Film
Golden Satellites—Best Foreign Language Film

Apr 29, 2005

தலித் அதிகாரிகளும், தமிழக அரசும்

பத்ரியின் பதிவில் "கட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்" என்கிற தலைப்பில் நீங்கள் சாராம்சத்தினைப் படிக்கலாம். நான் தெஹல்காவில் பார்த்தாலும், அவர்களின் இணையத்தளத்தில் இருக்கிறதா என்று தேடி, கிடைக்காத காரணத்தினால், முழு செய்தியினை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். இது ஏப்ரல் 30, சனிக்கிழமை தெஹல்கா இதழில் வெளியான செய்தி

Dalit Outcasts in Jayalalitha's bureaucracy

A 1977 Batch IAS Officer, Chirstodas Gandhi, known for his work for the downtrodden, has been put on 'compulsory wait" for more than three months. Gandhi, who serve as managing director of the Tamil Nadu Warehousing Corporation (TNWC) till Dec.2004, has approached the Central Administrative Tribunal (CAT) for remedy.

Gandhi's plea has caused ripples in the state's IAS circles. The senior officer has leveled serious charges against Vinayaga Moorthy, the non official chairman of TNWC, and alleged that Chief Secretary Lakshmi Pranesh advised him to desist from having any "association with scheduled castes". His allegations against Moorthy, a ruling party functionary, relate to the proposed construction of two go downs at an estimated cost of Rs.2.38 crore. Gandhi has alleged that Moorthy forced him to annual a MoU signed with the Central Warehousing Corporation for the construction of the go downs.

Gandhi, a dalit himself, points out in his petition that "there are four IAS officers who are on compulsory wait and all of them belong to the scheduled castes". The other officers are Govindan, Sivakami and Kannagi Packianathan. Two of them have been given postings after Gandhi filed his plea.

Pranesh has issued show-cause memos to Gandhi and Sivakami on April 4, 2005 seeking explanation for attending a dalit meeting in Chennai in January. Terming the meeting as "communal" Pranesh noted in her letter to Sivakami, "In the above said meeting, you had made a speech and stressed the need for true and sincere participation of the said community to get their rights.. You had also criticized the alleged acquirement of Panchami land from dalits". In the letter to Gandhi, Pranesh stated, "You had addressed and urged the dalits to work unitedly to get at least 20 seats in the next Assembly polls"

Advocate K. Chandru, representing Gandhi, argues he hadn't violated rules. Citing rules in the All India Services (Conduct) Rules, 1968, he points out "a member of the service may, without the previous sanction of the government, undertake honorary work of a social or charitable nature". Gandhi has claimed in his petition that the Chief Secretary wanted to punish him as “he was a member of the scheduled caste"

The issue has put the spotlight on the caste factor in the bureaucracy. "Brahmins hold the key posts. Among the top 50 IAS Officers, about 45 are Brahmins", a senior officer says. In the past few years, there has been increasing solidarity among dalit officers. Some of them formed an association in 1996 called Paalam, which means bridge. Gandhi is the president of this forum

Report by PV Vinoj Kumar, Chennai, Tehelka

திருமதி. லட்சுமி பிரெனேஷின் கூற்றில் இருக்கும் லாஜிக் புரியவில்லை. காந்தி சொன்னது, தலித்துக்கள் தங்கள் உரிமையை கோரவேண்டுமானால், நேர்மையான முறையில் வரும் தேர்தலில் 20 இடங்கள் பெற வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். இதில் எங்கு வந்தது "வகுப்புவாதம்"? எல்லா அரசியல் கட்சிகளும் கூடதான், ஏன் விஜயகாந்த் கூட இன்னும் கட்சி ஆரம்பிக்காமலேயே, 25 இடங்களை பிடிப்போம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.அதிலும், தொடர்ச்சியாக சிவகாமி தலித் கூட்டங்களுக்கு சென்று பேசி வருபவர். புதிய கோடங்கியில் தொடர்ந்து எழுதி வருபவர். பெரியாரின் தலித்திய சிந்தனைகளை விமர்சித்து முன்வைக்கும் நபர்களில் மிக முக்கியமானவர். லட்சுமி பிரனேஷ் போன்றவர்கள் இருக்கும்வரை ஐ.ஏ.எஸ் ஆனாலும், ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது போல. ஒரு தனி மனிதனாக, நான் எனக்கு பிடித்த அரசியல் கட்சியோ, வேறு எதுவோ அல்லது பச்சையாக எந்த ஜாதி கட்சியையோ ஆதரிக்கவோ, எதிர்க்கவோ சுதந்திரமுண்டு. ஐ.ஏ.எஸ் படித்து நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த சுதந்திரம் கூட இல்லையென்றால் பேசாமல் மாடு மேய்க்க போகலாம்.

Apr 28, 2005

என்.ஜி.சி ஆசியா - விவரணப்பட விழா

இரண்டு பதிவுகளுக்கு முன் டிஸ்கவரியில் எகிப்திய நாகரீகம் பற்றிய தொடர் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் தந்தேன். இதோ போட்டி கிளம்பிவிட்டது என்.ஜி.சியிடமிருந்து. நேஷனல் ஜிகராபிக் ஆசிய சேனலில் (சுருக்.. என்.ஜி.சி.ஆசி) ஆசியாவின் சிறந்த விவரணப்பட கலைஞர்களைக் கொண்டு "ஷோ ரீல் ஆசியா" என்றொரு நிகழ்ச்சி வரப் போகிறது. இதில ஆசியாவின் தலைசிறந்த விவரணப் பட இயக்குநர்களோடு நேர்காணல்களும், அவர்களின் படங்களும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இது தாண்டி, இத்தகைய உலக தரம்வாய்ந்த விவரணப் படங்கள் எடுக்க கற்றும் கொடுக்கிறார்கள். தாய்வான் (தைப்பே), தாய்லாந்து (பேங்காக்) மற்றும் சிங்கப்பூரில். ஆனால் ஒரே துரதிர்ஷ்டம், சிங்கப்பூரில் ஏற்கனவே முடிந்துவிட்டது. தைப்பே மற்றும் பேங்காங்கில் மே 1 அன்று கருத்தரங்கு நடைப்பெற உள்ளது. சோனி, ஈ.டி.பி சிங்கப்பூர், என்.ஜி.சி.ஆசி ஆகிய மூவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியினை தருகிறார்கள்.

ஆனால், இதில் சொல்லப்பட்டிருக்கும் படங்கள் போதும்,பார்ப்பதற்கு, இந்தியா,சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, தாய்வானில் வசிக்கும் தமிழர்கள் பார்க்கலாம். நோக்கலாம். க்கலாம். லாம். ம். நான் வழக்கம் போல செட்-டாப் பாக்ஸினை சபித்துக் கொண்டு "அந்நியன்" பாடல்கள் கேட்கலாம் (தனியாக எழுதுகிறேன்.. ஹாரிஸ், சங்கர் கூட்டணி மிரட்டியிருக்கிறது. சங்கர் மீண்டும் தன் பழைய பார்ம்முக்கு வந்து விட்டார் என்று நினைக்கிறேன் ;))

பார்க்க - என்.ஜி.சி.ஆசி நிகழ்ச்சி

பைனாகுலர் 10347

தேவரடியார்கள் என்றழைக்கப்பட்ட முறையான பாலியல் அமைப்பு எவ்வாறு திரிக்கப்பட்டது, எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டது என விரிவாக எழுதியிருக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன் புதுவிசை ஏப்ரல் இதழில். இதேப் போன்றதொரு செய்தியினை தெஹல்காவும் "கடவுளின் அடிமைகள்" என்று தலைப்பிட்டு தனியாக வங்காளத்தில் நடந்துவரும் கொடுமைகளைப் பற்றிய குறிப்பினை சொல்லியிருக்கிறது. இது தாண்டி, இனி "புதுவிசை" இதழ் புத்தகமாகவும் ஏப்ரல் முதல் வர இருக்கிறது.

பார்க்க - ஆ.சிவசுவின் பத்தி | தெஹல்காவின் செய்தி

வித்தியாசமான வேலைகள் உலகில் நிறைய இருக்கின்றன. நான் முன்பு வேலை பார்த்த இடத்தில், வேலை நிமித்தமாய் ஒரு நபரை சென்னையில் சந்தித்தேன். அவருடைய வேலை, தேவாலயங்களில் உயரே காணப்படும் பெரிய வெண்கல மணிகளை செய்வது. சென்னை வெலிங்டன் ப்ளாசாவிலிருக்கும் அவரது அலுவலகத்திலிருந்துதான் உலகெங்குமிருக்கிற நிறைய தேவாலயங்களுக்கு மணிகள் போகின்றன. வாடிகனுக்கு சென்றதா என்று தெரியவில்லை. இவ்வரிசையில், இன்று மாலை எந்த டிவிடி எடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட டிவிடி இது. இது ஒரு விவரணப்படம். ப்ரெட் லாய்ஸ்டர் என்கிற பொறியாளனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ப்ரெட் ஒரு மரண தண்டனை இயந்திரங்கள் வடிவமைப்பாளன் (Execution devices specialist). ஆஸ்விட்ஸில் "கேஸ் சேம்பர்கள்" இல்லவே இல்லை என்று பொய் சான்றிதழ் கொடுத்து செய்தி எழுதியதால் பாழாய்ப் போனவர். வித்தியாமான களன். வித்தியாமான மனிதர். Mr. Death என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் உள்ளடக்கம் என்னை கவர்ந்தது. பார்த்து விட்டு பதிகிறேன்.

பார்க்க - Mr. Death: The rise and fall of Fred A. Leuchter, Jr.

குரு தேசம், சூரஸேந தேசம், குந்தி தேசம், குந்தலதேசம், விராட தேசம், மத்ஸ்ய தேசம், த்ரிகர்த்த தேசம், கேகய தேசம், பாஹ்லிக தேசம், கோஸல தேசம், பாஞ்சால தேசம், நிஷத தேசம், நிஷாத தேசம், சேதி தேசம், தசார்ண தேசம், விதர்ப்ப தேசம், அவந்தி தேசம், மாளவ தேசம், கொங்கண தேசம், கூர்ஜர தேசம், ஆபீர தேசம், ஸால்வ தேசம், ஸிந்து தேசம், ஸெள்வீர தேசம், பாரஸீக தேசம், வநாயு தேசம், பர்பர தேசம், கிராத தேசம், காந்தார தேசம், மத்ர தேசம், காச்மீர தேசம், காம்போஜ தேசம், நேபாள தேசம், ஆரட்ட தேசம், விதேஹ தேசம், பார்வத தேசம், சீந தேசம், காமரூப தேசம், ப்ராக்ஜோதிஷ தேசம், ஸிம்ம தேசம், உத்கல தேசம், வங்க தேசம்,அங்க தேசம், மகத தேசம், ஹேஹய தேசம், ஆந்தர தேசம், யவன தேசம், மஹாராஷ்டிர தேசம், குளிந்த தேசம், த்ராவிட தேசம், சோள தேசம், ஸிம்மள தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், கர்ணாடக தேசம். சோம்பல் படாமல், எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் 56 தேசங்கள் இருக்கிறதா என்று. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் என்கிற 1918-ல் பி.வி. ஜகதீச அய்யர் என்பவரால் எழுதப்பட்டுள்ள நூலில் சொன்ன தகவல் தான் மேலே சொன்னது. அதை அப்படியே அச்சுப் பிசகாமல், மணிபிரவாள நடையில் பதிப்பித்திருக்கின்றார்கள். இரண்டு தொகுதிகளாக இருக்கும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிறைய செய்திகளில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை சுவாரசியமாக இருக்கின்றன. நிறைய செய்திகளையும், மக்கள், கலைகள், சுற்றுச்சூழல், நதிகள், அரசு என நிறைய விஷயங்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. சென்னையில் நியு புக்லேண்ட்ஸில் கிடைக்கிறது. விலை ரூ.125 (இரண்டு பகுதிகளும் சேர்த்து)

படிக்க - புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்

கூகிள் என்றொரு நிறுவனம் என்னை அடிக்கடி பிரமிப்புக்குள்ளாகினால், அதே வரிசையில் தொடர்ச்சியாக இன்ப அதிர்ச்சி தரும் நிறுவனம் நோக்கியா (இதில் இன்னும் இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன - ஆப்பிள் & இகியா) முந்தாநாள் நெதர்லாந்தில் நடந்த ஒரு அரங்கில் புதிதாக நோக்கியா N91 என்றொரு செல்பேசியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இனி எல்லா இடங்களிலும் விற்றுக் கொண்டிருக்கும் MP3 ப்ளேயர்களுக்கு ஆப்பு வைத்தாகிவிட்டது. இந்த பேசியில் குறைந்தது 4 GB வரை (அதாவது சராசரியாக 3000 பாடல்கள்) பாடல்களை சேமிக்கலாம். சும்மா ஜிகினா போனுப்பா இது என்று எஸ்-ஆக வேண்டாம். ஸ்மார்ட் போன் வகையினை சார்ந்த இந்த புது செல்லில் எல்லாவிதமான அலுவலக வேலைகளையும் செய்ய முடியும். நேற்று தான் நோக்கியா 7710 பார்த்து வாங்கலாம் என்ற யோசனையில் இருந்தேன். சரி ஐபாடு, செல் என்று இரண்டு தனித்தனியாக வாங்காமல், இந்தியா வரும்வரை நோக்கியா N91க்கு காத்திருக்கலாம் என்ற யோசனையுடன் வாங்குவதை தள்ளி வைத்து விட்டேன். :)

பார்க்க - நோக்கியா N91 | நோக்கியா 7710

இந்தியப் பத்திரிக்கைகளில் இரண்டு நாட்களாக அடிபடும் விஷயம், திருவள்ளுவரின் பிறப்பிடம், அவர் வாழ்ந்த இடமும். நாகர்கோயிலில் இருக்கும் கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார ஆய்வு மையத்தின் தலைவரான எஸ்.பத்மநாபன் திருவள்ளுவர் "வள்ளுவ நாடு" என்றழைக்கப்படும் கன்னியாகுமரியின் மலைகளையொட்டிய பகுதிகளை ஆண்டவர் என்றும், அங்கு இப்போதிருக்கும் பழங்குடிகளின் வாழ்க்கைமுறைக்கும், செய்திகளுக்கும், திருக்குறளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும் அறிவித்திருக்கிறார். ஆக, தற்போதைக்கு, திருவள்ளுவர் மயிலாப்பூரிலிருந்து பேக்-அப்.

பார்க்க - ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி

Apr 27, 2005

வலைப்பதிவுகள் புத்தகமாகலாமா?

டிசே தூபம் போட்டதால் எழுதும் விஷயமிது. வலைப்பதிவர்கள் இலக்கியவாதிகளா, கருத்து கந்தசாமிகளா, சும்மா விஷயங்களை வெட்டி ஒட்டுபவர்களா, ஆழமான விவாதத்தில் ஈடுபடுபவர்களா இல்லை போரடிக்கும் போது வந்து போகும் ஆட்களா என நீட்டிக் கொண்டேப் போகலாம் விவாதத்தினை. இவையனைத்தும் உண்மையாகவோ பொய்யாகவோ கூட இருக்கலாம். நான் பார்த்த வரையில், நிறைய நபர்கள் வலைப்பதிவுகளில் விரிவான, வித்தியாசமான அலசல்கள், புதுவிதமான எழுத்து என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். என்னளவில், மிக நுண்மையாக, ஆழமான கருத்து வெளியாக வலைப்பதிவுகள் உருமாறி வருகின்றன (சொந்த விருப்பு வெறுப்புகள், கசப்புணர்வுகளைத் தாண்டி)

கொஞ்ச நாள் முன்பு என் பதிவில் நடந்த ஒரு விவாதத்தில், டிசே, தேர்வு செய்யப்பட்ட வலைப்பதிவுகளை புத்தகமாக்கலாம் என்று சொல்லி, அதையே இப்போது விஜய்யின் பதிவிலும், என்னுடைய "நான் ஒரு காட்டுமிராண்டி பதிவிலும்" இட்டிருந்தார். கொஞ்சம் சுற்றிப் பார்த்தால், நாளொரு மேனியும் பொழுதொரு கிளிக்குமாய் வளர்ந்து கொண்டேயிருக்கிறது தமிழ்மணம். ஆக எப்படிப் பார்த்தாலும், தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் வளர்ந்துக் கொண்டே தான் போவார்கள். இவர்கள் எழுதுவதெல்லாம், இலக்கியமே இல்லை என்று இலக்கியவாதிகள் சண்டைப் போட்டுக் கொள்ளட்டும். நமக்கு அது தேவையற்ற விவாதம்.

புத்தகம் என்ற ஒரு வரையறைக்குள், பல்வேறுவிதமான விஷயங்களை உள்ளடக்க முடியுமா ? பதிவுகளை பதிய இயலுமா ? அப்படி பதிவோமேயானால், யார் , எவற்றை , எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் ? வெறும் நட்சத்திரக் குறிகள் தரத்தை நிர்ணயிக்குமா இல்லை பின்னூட்டங்களா ? எந்தமாதிரியான வடிவினை இப்புத்தகம் எடுக்கும் ? என கேள்விகள் எழாமலில்லை.

டிசேயின் கருத்தோடு ஒத்துப் போனாலும், இதனை ஒரு புத்தகமாக என்னால் பார்க்க முடியாது, காரணம், தொடர்ந்து எழுதப்பட்டு வரும் விஷயங்கள், செய்திகள் என விரிந்துக் கொண்டேயிருக்கும்போது ஒரு வருடத்தில் நமது புத்தகம் அவுட்டேட்டாக போகும் சாத்தியங்களுண்டு. இதுதாண்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை ஒரு காலாண்டிதழாக மாற்றி அதன் வடிவமைப்பினை ஏதேனும் ஒரு பொதுத்தளத்தில் வைத்துவிட்டு, அந்தந்த நாட்டிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்பக்கதார்கள் புத்தகமாக பதியலாம். இதன் உரிமை, வெளீயீடு, லாபத்தின் பங்கு போன்றவற்றினைப் பற்றி விரிவாக விவாதிக்கலாம். இதனை சொல்லக் காரணம், என்னால் பெரும்பாலான அமெரிக்கப் புத்தகங்களை வாங்க முடிவதில்லை. காரணம் மிகச் சுலபம், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஒரு புத்தகத்தினை அனுப்ப ஆகும் செலவு. மொத்த புத்தகத்தையும், கோரல் ட்ராவிலோ, அடொப் இன் டிசைனிலோ வடிவமைத்துவிட்டு ஒரு பொதுத்தளத்தில் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்பகத்தாருக்கு மட்டும் தரவிறக்க சொல்ல வேண்டியது தான். இதன்மூலம், எல்லா ஊரிலும் புத்தகங்கள் ஒரேவிதமாகவும், ஏறத்தாழ ஒரே விலையாகவும் இருக்கும் சாத்தியங்களதிகம். பத்ரி போன்ற, பதிப்பகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை விரிவாக விவாதிக்கலாம்.

ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் , அவரின் எழுத்துக்களை சந்தைக்கு கொண்டுவரும் போது அந்த புத்தகத்தின் வணிக விஷயங்கள் அவ்வெழுத்தாளனோடு முடிவுறும். ஆனால், பல்வேறு விதமான பதிவுகளை கொண்டு எழுதப்படும், தொகுக்கப்படும் புத்தகத்தின் உரிமைகள், பதிவு உரிமையாளர்களின் ஒப்புதல், வணிகமாகும்போது ஏற்படும் பங்கீட்டு சிக்கல்கள் பற்றிய கேள்விகள் எழுதல் நிச்சயம். ஆகவே இதனை நாம் விரிவாக விவாதிக்க வேண்டிய கட்டாயமுள்ளது.

என் தனிப்பட்ட கருத்து, என் எந்த பதிவினையும் தேர்ந்தெடுத்து புத்தகத்தில் தொகுத்துக் கொள்ளுங்கள். விற்றுக் கொள்ளுங்கள். விற்று, வரும் லாபத்தினை தமிழா.காம் மாதிரியான தமிழில் நிரலிகளையும், மென்பொருட்களையும் கொண்டு வர பாடுபடும் எண்ணற்ற தன்னார்வலர்களுக்கு கொடுத்து விடுவது என்பதுதான். எழுத்துக்கு எழுத்தும் ஆச்சு. தமிழினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஆதரவளித்தது போலுமாச்சு.. என்ன நான் சொல்றது.

Apr 26, 2005

நான் ஒரு காட்டுமிராண்டி

3 மாதங்களாக தேடியலைந்த டிவிடி கடைசியில் கண்டேன் சீதையை கணக்காய், சின் சிட்டி கிடைக்குமா என்கிற ஆவலில், தேடிய போது சினிமா பேரடைசவோவில் கிடைத்தது. அல்வாசிட்டி விஜய் சென்னை வந்து என்னோடு தொலைபேசியில் பேசிய நீண்ண்ண்ண்ண்ட சம்பாஷனையில் நான் குறிப்பிட்டு சொன்ன படமிது.

வருடம் 1955. ஒரு மனிதன் அமெசான் நதியோடும் கரையிலுள்ள பெருவினுள்ளே (தென்னமரிக்கா அல்லது இன்றைய லத்தின் அமெரிக்கா) மனிதர்களை தின்னும் ஒரு காட்டுமிராண்டி ஆதிவாசிகளிடம் போய்ச் சேர்ந்தான். அஸ்மத் என்கிற மனிதர்களை தின்னும் பழங்குடிகளிடம் மாட்டிய எவரும் உயிரோடு திரும்பியதில்லை. அவனிடத்தில் ஒன்றுமில்லை. வரைப்படமில்லை. துணைக்கு ஆளில்லை. அவனுக்கு சொல்லப்பட்ட ஒரே விஷயம், "நதியை எப்போதும் உன் வலது பக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்". உள்ளே போனவன் திரும்பி வரவில்லை. இறந்துப்போய்விட்டதாக முடிவு கட்டிவிட்டார்கள்.

ஒரு வருடம் கழித்து அங்கிருந்து நிர்வாணமாக ஒரு மனிதன், உடலெங்கும் சாயங்களுடன் வெளிப்பட்டான். அவன் டோபியாஸ் ஷீன்பீம். அவனை அஸ்மத் இனவாசிகள் தத்தெடுத்துக் கொண்டார்கள். ஒரு வெள்ளையன் நரபலி கொடுக்கும் இனத்திலிருந்து வாழ்ந்து வெளிவருவது ஆச்சர்யமென்றால், டோபியாஸ், அஸ்மத் இனக்குடியில் தத்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பின் வருடங்கள் கழித்து மீண்டும் நியுயார்க் வந்தடைந்தார். அன்றிலிருந்து 1975 வரை தொடர்ச்சியாக அஸ்மத் மக்களிடேயே சென்று வாழ்ந்து, அவர்களின் மொழியினை கற்று உண்டு, உறங்கி, அவர்களின் கலைப்படைப்புகளை நியுயார்க்கிற்கு கொண்டு வந்து அவர்களுக்கான ஒரு மையத்தினை உருவாக்கி, அவர்களின் வாழ்வியல் முன்னேற பாடுபட்டவர்.

45 வருடங்கள் கழித்து மீண்டும் டோபியாஸ் தான் வாழ்ந்த அஸ்மத் இனக்குடி இடங்களை பார்வையிட செல்கிறார். அது தான் Keep the river on your right என்கிற இந்த ஆவணப்படத்தின் கதை. 93 நிமிடங்களே ஒடக்கூடிய இந்த படம் தரும் அனுபவங்கள் பரவசமானவை. இரண்டொரு நாட்களுக்கு முன் பாலாஜி-பாரி எழுதிய இன்ன்யூட்களுக்கு சற்றும் சளைக்காத பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொண்டவர்கள் அஸ்மத் தொல்குழுவினர். உலகின் நாகரிகங்கள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம், ஏனோ இன்கா நாகரிகத்திற்கு சரியான அளவில் இடமளிப்பதில்லை. கிரேக்க, ரோம, எகிப்திய, சிந்து சமவெளி நாகரிகங்களுக்கு இணையான நாகரிகமாக இருந்தது தான் மட்சூ-பிட்சூ மலைகளை சூழ்ந்திருக்கும் இன்கா தொல்குடியினரின் நாகரிகம். அஸ்மத் இனத்தவர்கள் இன்கா காலக்கட்டத்திலிருந்து (கிமு 1200 -1575) வாழ்ந்தவர்கள். பெருவிலுள்ள மட்சூ-பிட்சூ தான் (இப்போது பெருவிலுள்ளது) இன்காக்களின் நகராக விளங்கியது. அத்தகைய பழமை வாய்ந்த ஒரு தொல்குடியினரின் கலாச்சாரம் இப்படத்தில் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

டோபியாஸ் என்ற மனிதன் செய்திருக்கும் வேலை சாதாரணமானதல்ல. உலகே அஞ்சிய நரமாமிச பட்சிணிகளான அஸ்மத் இனக்குடியில் நுழைந்து, அவர்களோடே வாழ்ந்து, அவர்களின் கலாச்சாரத்தினைக் கற்று, உறவு கொண்டு, அவர்களின் கலைகளை வெளியுலகிற்கு கொண்டுவந்தவர் சாதாரணமானவராக இருக்க இயலாது. அஸ்மத் கலாச்சாரத்தில் கட்டாயமாக அனைவருமே ஃபை செக்ஸ்வல்தான். எல்லா ஆண்களும், அவர்களுக்கு துணையான ஒரு அல்லது பல ஆண்களோடு உறவு வைத்திருப்பார்கள். அத்தோடு பெண்களோடும் அவர்கள் உறவு கொள்வார்கள். ஆடைகள் ஏதும் கிடையாது. கொலை நடந்ததில்லை. உணவுப் பொருட்கள், ஒரு தலைவரின் மூலம் சரியாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. டோபியாஸின் காதலன் அர்கெட். படத்தில்வரும் இந்த காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். 50 வருடங்கள் கழித்து படக்குழுவினர் அர்கெட்டினை தேடி கண்டுபிடித்து அவர்களிருவரையும் ஒரு படகில் ஒன்றாக செல்ல செய்து படம் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் சம்பாஷனைகளின் முடிவில், அர்கெட்டின் ஊர் வருகிறது. அவர் படகிலிருந்து இறங்கி, டோபியாஸினை முத்தமிட்டு பின் விடைபெறுகிறார். இருவரின் கண்களும் கலங்குகின்றன. கேமரா, டோபியாஸின் முகத்தையும், அர்கெட்டின் முகத்தையும் காண்பிக்கிறது. ஒரு வெள்ளையன், ஒரு கருப்பன். மார்ட்டின் லூதர் கிங்கின் ஞாபகம் தான் வந்தது. இருவரின் கண்களும் கலங்கியிருக்கின்றன. வாழ்வில் அன்பு, பாசம், காதல் எனப்படுவதின் அர்த்தங்கள் கணநேரத்தில் தெரிகிறது. மாறாத அன்பும், காதலும் சாஸ்வதமானவை.

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, படக்குழுவினர், டோபியாஸ் சொல்லிய திசையில் சென்றால், அவர் முந்தி சென்ற இடத்தின் பாதியில் அமெசான் பெருக்கெடுத்து ஒடுகிறது. அங்கிருக்கும் இனக்குடிகளிடம் பழைய போட்டோக்களை காண்பித்து அடையாளம் கேட்கிறார்கள். அவர்களில் முதியவர்கள் டோபியாஸினை அடையாளம் கண்டுக் கொள்கிறார்கள். ஒரு பள்ளி, கல்லூரி ரீ-யூனியனை போல அவர்கள் பேசுகிறார்கள். குதூகலிக்கிறார்கள். ஆனந்தம் அடைகிறார்கள். அவர்களோடு நடக்கும் உரையாடலில் அவர்கள்
"அஸ்மத்க்கள் மாறி விட்டார்கள். மனிதர்களை கொல்லுவதில்லை இப்போது. ஆனாலும், உலகம் அவர்களை இன்னமும் அகிரெய்கெர் என்று தான் பார்க்கிறது. அகிரெய்கெர் என்றால் கிரிமினல், கொலைக்காரன், திருடன் என்று பொருள். ஆனால், தங்களை "ஹம்பெர்கெட்"கள் என்று இடத்தினாலான பெயரிட்டு அழைப்பதேயே தாங்கள் விரும்புவதாக"
சொல்லுகிறார்கள்.

பின் கொஞ்ச கொஞ்சமாய் காடுகளை வெட்டி, டோபியாஸ் முதன்முதலில் சென்ற இடத்திற்கு செல்கிறார்கள். இன்றைக்கு 78 வயதாகும் அந்த முதியவர், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் பிண்ணணியில் அஸ்மத்களின் வாத்தியங்களின் இசை சங்கமங்கள் தெறிகின்றன. படமுழுக்க அவர் வெவ்வேறு இடங்களில் வகுப்பெடுக்கும் போது பாடிக் காட்டும், அஸ்மத் இனக்குடிகளின் பாடல் ஒலிக்கிறது. படம் நிறைவு பெறுகிறது.

அப்பாடலின் தமிழாக்கம்

நதியில் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.
நதியில் நாம் மலம் கழிக்கிறோம்.
நதியில் நாம் மூத்திரமடிக்கிறோம்.
மீன்கள் மலத்தை உண்கின்றன
மீன்கள் மூத்திரத்தினை உண்கின்றன.
நாம் மீன்களை உண்கிறோம்.
இது ஒரு சுழற்சி
(நதியில் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.....)

“I am a cannibal... No matter into what far corner of my mind I push those words, they flash along the surface of my brain like news along the track that runs around the building at Times Square.”Keep the River on your Right - A Modern Cannibal Tale ---
IMDB | Docurama | Book

விருதுகள்:
Best Documentary Feature; Hamptons International Film Festival, 2000
Special Jury Award; Amsterdam International Documentary Film Festival, 2000
Audience Award, Special Critics Award; Los Angeles Independent Film Festival, 2000
Truer Than Fiction Award; IFP Independent Spirit Awards, 2001
Best Documentary, Newport Beach Film Festival

Apr 22, 2005

பைனாகுலர் 10346

இரண்டு விளம்பரங்கள். இரண்டுமே ஆரஞ்சு சம்பந்தப்பட்டவை.

முதலில், திரிஷாவின் பேன்டா விளம்பரம். "புது புட்டி, புல்லா Naughty" என்கிற வாசகத்தோடு வருகிற புதிய டிவி விளம்பரத்தினைப் பார்த்தால் பகீரென்றிருக்கிறது. அதில் வரும் ஆண் பெண் உடலை சைகையால் காட்டுகிறார். அதற்கு திரிஷாவும் ஆமாமென்கிறார். என்னடா வென்று பார்த்தால், பேன்டா ஆரஞ்சு பானம் புதிய புட்டியில் வந்திருக்கிறது. அந்த புது புட்டி, மேலே உப்பி, இடையிலே மெலிந்து, மீண்டும் அடிப்பாகம் பெருத்து இருக்கிறது. இது பெண் உடல் போல இருக்கிறதாம். இதில் அதில் வரும் விளம்பர பாடலில் "குட்டி, புட்டி" என்று ஒப்பீடுகள் வேறு. கேவலமாக இருக்கிறது. பேர் & லவ்லியில் ஒரு பெண் கலராக இல்லாததால், கல்யாணம் நடக்காமல் போய்விடுவது போல ஒரு விளம்பரம் ஒரு வருடத்துக்கு முன்பு வந்தது. உடனே இந்தியாவின் எல்லா மகளிர் சங்கங்ளும் களத்தில் குதித்தன. லீவர் நிறுவனம் அவ்விளம்பரத்தினை நிறுத்தியது. அதைவிட மோசமாக, ஒரு குளிர்பானம் இருக்கும் குப்பியினை, பெண்ணுடலாக சொல்லி ஒரு விளம்பரம் வருகிறது. ஒரு சத்தத்தையும் காணோம். இத்தனைக்கும், மதர்த்த டைட்டான டீ-சர்ட்டோடு திரிஷா, புது புட்டி என எல்லா விளம்பரபலகைகளிலும் நகரெங்கும் சிரித்துக் கொண்டிருக்கிறார். சூடு சுரணையற்று போய்விட்டோமா நாம் ? பெண்ணுடலாக எப்படி ஒரு குப்பியினை பார்க்கமுடியும். அதிலொளிந்திருக்கும் வக்கிர சிந்தனைக்கு செருப்படி தரவேண்டாமா ? சீரியல் பார்த்து,பார்த்து இங்கே உணர்வுகள் மங்கி போய்விட்டன என்று நினைக்கிறேன். வெட்கமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இது, விவேக் நடிக்கும் மிரிண்டா விளம்பரம். "ஜாலிக்கு டேஸ்டே இதான் டா....." என நீளும் விளம்பரத்தில் மிக முக்கியமான வாசகம் "லோக்கல் தான் டா கலக்கல்".ஐயா, என்றைக்கு பெப்சி இந்திய கம்பெனியானது. இன்னும் அது பன்னாட்டு கம்பெனிதானே? நான் உலகமயமாக்கலை எதிர்ப்பவனில்லை. அதே சமயத்தில் உலகமயமாக்கம் என்கிற பெயரில் எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடாதீர்கள். மிரிண்டா எப்படி லோக்கல் பானமாக இருக்கும். இங்கே ஆரஞ்சினை கொள்முதல் செய்து போட்டால் உடனே அது லோக்கலாகிவிடுமா ? என்னய்யா கதையிது. என்றைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக தான் இருக்கும். உள்நாட்டு நிறுவனங்களாக மாறப் போவதில்லை. அப்படியிருக்கையில், மிரிண்டா லோக்கல் என்று விளம்பரம் செய்வது எவ்விதத்தில் நியாயம்? அதில் கொடுமை, லோக்கல் என்று சொல்லிவிட்டு, வரும் விளம்பர அழகிகளைப் பார்த்தால் ஒரே மும்பாய் மயம். இதிலே எங்கே லோக்கல் வந்தது? விவேக் முதன்மையாக வரும் விளம்பரம், தமிழ்நாட்டினை சார்ந்துதான் இருக்கும். இங்கே பக்கத்து மாநில மலையாளியே லோக்கல் கிடையாது. அப்படி இருக்கும்போது மும்பாய் மாடல்கள் எப்படி லோக்கலாக முடியும். நல்லா அரைக்கறாங்கய்யா தலையில மொளகா..

தாஸில் சங்கர் மகாதேவனும், மகாலட்சுமியும் பாடியிருக்கும் பாடல் ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு சரியான டூயட் கலவையான பாடல். ரொம்ப கவித்துவமாகவுமில்லாமல், அதே சமயம் ரொம்ப லோக்கலாவும் இல்லாமல் நன்றாக கலந்தடித்திருக்கிறார். ஏற்கனவே கேட்ட நிறைய ராஜாவின் பாடல் சாயல் அடித்தாலும், ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. லாஜிக்கெல்லாம் இந்த பாடலில் பார்க்காதீர்கள். தூக்கி குப்பையில் போடுங்கள். எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி சுவாரசியமான பாடல் கேட்டு. வா,வா நீ வராங்காட்டி போ என்கிற பாடல் அப்படியே அவர் அப்பாவின் "அடியே மனம் நில்லுனா நிக்காதேடியின்" டிட்டோ காப்பி. அது சரி யார் யாரோ அவர் அப்பா பாடலை காப்பியடிக்கும்போது, பையன் அடிக்கக் கூடாதா ;-)எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இந்த பாடல் சூப்பர் ஹிட்.இன்னொரு "அப்படிப் போடு" ரெடி. (இசை: யுவன் சங்கர் ராஜா )

பால் சக்கரியா, மலையாள எழுத்தின் மிகமுக்கியமான அங்கம். நிறுவனமயமாக்கப்பட்ட பல்வேறு இலக்கிய கோட்பாடுகளை கட்டுடைத்தவர். சமூக போராளி. முக்கியமாய், பாலியலை தொடாத மலையாள எழுத்தாளர்கள் மத்தியில், துணிச்சலாய், பாலியல் தொடர்பான விஷயங்களை எழுதி, இன்றைய எழுத்தாளர்களுக்கு பாட்டை போட்டுக் கொடுத்தவர். இப்போது காலச்சுவட்டில் பத்தி எழுதி வருகிறார். தருண் தேஜ்பால், தெஹல்கா என்கிற ஒரு இணையதளத்தினை வைத்துக் கொண்டு ஆயுத பேர ஊழலை வெட்ட வெளிச்சமாக்கியவர். இன்றைக்கு தெஹல்கா வாரப் பத்திரிக்கையாக வருகிறது. அரசும், ஊடகங்களும் மறைக்கும் இடங்களில் தெஹல்கா, துணிச்சலாக பயணம் செய்கிறது. தருண் தேஜ்பால், இன்று இந்தியாவின் பத்திரிக்கைத்துறையின் மிக முக்கியமான நபர். இப்போது முதன்முறையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார். Alchemy of Desire என்று பெயரிடப்பட்ட அப்புத்தகத்திற்கு, பால் சக்கரியா விமர்சனமெழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள், என்ன நடை, என்ன ஆங்கிலம்.
"Tarun Tejpal’s first novel takes on what could be called near-impossible ground in the Indian cultural situation, or, for that matter, in a lot of ‘advanced’ cultures all over the world. It is the depiction of sexuality in fiction in words that squarely face up to their task — or in words, so to say, that are accountable. Khajuraho and Kama Sutra may be recalled fondly, but Indians in general, in public, wince when they run into sex in writing. "

"The Alchemy of Desire — in deciding to be accountable for his words and his genius. And he powers his words with an exhilarating energy and force, making them re-state the erotic in Indian writing. Tejpal’s novel is easily the most beautifully sensuous work by an Indian that I’ve ever read. His narrative of the body’s desire shines with a heart-warming vibrancy."
- பால் சக்கரியாவின் விமர்சனம் | புத்தகம் பார்க்க, வாங்க

ஜென்சி என்றொரு பாடகி இருந்தார். அவரது குரல் குரலல்ல. தேவகானம். சோகமும், தவிப்பும் இழையோட "விழியில் விழுந்து, இதயம் நுழைந்து" என்று ஆரம்பித்தால் போதும். உலகம் கொஞ்சம் நின்று கேட்டு விட்டுப் போகும். எத்தனைப் பாடல்கள். "தெய்வீக ராகம்" "ஆசையை காத்துல தூது விட்டு" "ஏன் வானிலே ஒரே வெண்ணிலா" "ஆயிரம் மலர்களை, மலருங்கள்" "நம்தன நம்தன தாளம் வரும், புது ராகம் வரும்" என நீளும் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு பாடலையும் குறைந்தது ஆயிரம் தடவைகளாவது கேட்டிருப்பேன். யாராவது மொத்த ஜென்சியின் பாடல்கள் கலெக்ஷன் வைத்திருப்பின் சொல்லுங்கள், Fed Ex செலவு முதற்கொண்டு வாங்கி கொள்கிறேன். உச்சத்தில் இருக்கும்போது, கேரளாவில் ஒரு பள்ளியில் இசையாசிரியராக வாய்ப்பு கிடைத்து சென்றுவிட்டார். 20 வருடங்கள் ஒடி விட்டன. சிறிது காலத்திற்கு முன்பு ஆனந்த விகடனுக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். இளையராஜா அழைத்தால் பாட ஆசைப் படுவதாக. இசைஞானி கொஞ்சம் மனசு வைக்கணும். கந்தர்வ குரலென்பார்களே அப்படிப்பட்ட குரல். அதேப் போன்றதொரு குரல் பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு. போஸ் என்கிற டப்பா படத்திலும் ஒரு அருமையான பாடல் பாடியிருப்பார் - "நிஜமா, நிஜமா, இது என்ன நிஜமா, நீயா நான் நிஜமா". தாஸிலும் ஒரு அருமையான பாடல ("சாமி கிட்ட சொல்லிப்புட்டேன். உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்")பாடியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் அலையோய்ந்து இது யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா, இமான் காலம். இப்போதைக்கு ஜென்சிக்கு பதில் ஸ்ரேயா கோஷலுக்காவது நிறைய பாடல்கள் தரவேண்டுமென்று பிரார்த்திக்கலாம்.

நண்பர் சொன்னது: "உலகத்திலேயே சொல்லும் சொல் படி நடப்பவர்களில் மைக்கேல் ஜாக்சனும் ஒருவர். பார், நமக்கெல்லாம் மூக்கு ஒழுகிறது என்றால், மூக்குக்குள்ளிருந்து ஒழுகும். அவரை பார், சொன்ன சொல் தவறாமல் மூக்கே ஒழுகுகிறது (பிளாஸ்டிக் மூக்கு ;-)) "

Apr 21, 2005

பைனாகுலர் 10345

நவோமி கிளெய்ன் தெரியுமா? விளம்பரத் துறையிலிருப்பின் கண்டிப்பாக தெரிந்திருக்கும். உலகமெங்கும் பரபரப்பினை உண்டாக்கிய No Logo என்கிற புத்தகத்தினை எழுதியவர். அந்த புத்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் திரு உரு (Brand) என்கிற பெயரில் அடிக்கும் கூத்துக்களை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பார். உதாரணத்திற்கு, அமெரிக்காவில் நைக்கி நிறுவனம் $145 விற்கும் ஷூவினை தயார் செய்யுமிடம் பிலிப்பெய்ன்ஸ். அங்குள்ள உற்பத்தி நிறுவனங்களில் (sweat shops) பிலிப்பினோ தொழிலாளிகள் 14 மணிநேரம் வேலை செய்து இந்த ஷூக்களை தயாரிக்கிறார்கள். ஒரு பிலிப்பினோ தொழிலாளியின் மாத சம்பளம் $150க்கும் குறைவு. ஆனால், நைக்கி என்கிற திரு உரு இருக்கின்ற காரணத்தினால், விலையதிகம். தொழிலாளியின் வாழ்க்கைப் பற்றிய கவலை படாதவர்கள், மில்லியன் டாலர்கள் செலவு செய்து சூப்பர் பொளலில் விளம்பரம் செய்வார்கள். இதேப் போல கோக், ஜி ஈ என எல்லோரையும் பற்றி எழுதியிருப்பார். மேட்டர் அதுவல்ல. ஜனநாயகம் இன்று என்கிற தளத்திற்காக அவர் தந்த நேர்காணலில் இருந்த செய்தி உலுக்கியெடுத்துவிட்டது. அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாய் பேரழிவு முதலாளித்துவத்திற்கு (Disaster Captalism) மாறிக் கொண்டிருக்கிறது என்பதேயது. முன்னெச்சரிக்கை போர் அறிவிப்பு என்றறிவித்து இராக்கின் மீது தொடுத்த போருக்கு பின்னால் நடந்த சங்கதிகளைப் படித்தால் வில்லங்கமாக இருக்கிறது. ஆகஸ்ட் 5,2004 இல் வெள்ளை மாளிகை மறுசீரமைப்பு நிலைநாட்டல் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உக்ரைனிலிருந்த முந்நாளைய அமெரிக்க தூதுவரான கார்லோஸ் பாஸ்கலை தேர்ந்தெடுத்தது. அவர், நேர்காணலில் ஒரு நாட்டினை முழுவதுமாக சீரமைக்க குறைந்தது 5-7 வருடங்களாகும், இப்போதைக்கு மூன்று நாடுகளோடு முழு அளவில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது" என்று கூறியிருக்கிறார். அதற்கு முன்பேஅமெரிக்க உளவுத்துறையின் மூலம், உலகமுழுவதும் 25 நாடுகளை தேர்ந்தெடுத்து அவற்றின் மீது போரினை துவக்கும் ஆயத்தங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன. அதன் விளைவுதான் ஈரானை எச்சரிப்பதும், வடகொரியாவின் மீது பொருளாதார தடை விதித்தலும், துருக்கியினை பிடித்து கேள்வி கேட்க ஆரம்பித்திருப்பதும்.
Gone are the days of waiting for wars to break out and then drawing up ad hoc plans to pick up the pieces. In close cooperation with the National Intelligence Council, Pascual's office keeps "high risk" countries on a "watch list" and assembles rapid-response teams ready to engage in prewar planning and to "mobilize and deploy quickly" after a conflict has gone down. The teams are made up of private companies, nongovernmental organizations and members of think tanks--some, Pascual told an audience at the Center for Strategic and International Studies in October, will have "pre-completed" contracts to rebuild countries that are not yet broken. Doing this paperwork in advance could "cut off three to six months in your response time.
இதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க மக்களை தொடர்ந்த அச்ச நிலையில் வைத்திருக்க விரும்புகிறது. இதேப் போல ஒரு செய்தியினை நீங்கள் பாரன்ஹீட் 9/11-லிலும் பார்க்க முடியும். அதே சமயம், அது போர்தொடுக்கும் ஒவ்வொரு நாட்டின் மீதும் ஏதேனுமொரு காரணத்தினை சொல்லி அந்நாட்டினை நிர்மூலமாக்கி, மறுசீரமைப்பு செய்ய உதவி செய்வதாக சொல்லி, அத்தனை குத்தகைகளையும் அமெரிக்க நிறுவங்களுக்கே வழங்கி, காசு பார்க்கும். அமெரிக்க அரசாங்கத்தின் புதிய முதலீட்டு திட்டமாக இது மாறிவருகிறது. பொருட்களை விற்று, வாங்கி காசுப் பார்த்து சலித்துப் போன அமெரிக்க அரசு, தற்போது பொருட்களுக்கு பதிலாக மனித உயிர்களை பண்டமாற்றாக பேசத்தொடங்கியிருப்பது அபாயகரமானதாக தெரிகிறது - பார்க்க நேஷனில் வந்த செய்தி | நோ லோகோ புத்தகம் | நவோமி களெயினின் இயக்கம்

புதிய போப்பினைப் பற்றி நிறைய பேர்கள் எழுதிவிட்டார்கள். மறைந்த போப் ஜான் பாலுக்கு பிறகு பதவியேற்றிரும் இரட்சிங்கர் ஒரு அடிப்படைவாதி. ஜனநாயகம் இன்று தளத்தின் செய்தி தலைப்பே புது போப் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிடுகிறது. Pope Benedict XVI: Anti-War, Anti-Gay, Anti-Choice, Anti-Reform. இந்த தளத்தின் நிறுவனர் ஆமி குட்மேன் பல்வேறு சமய, மத, பல்கலைக் கழக வாதிகளிடம் நடத்திய நேர்காணல் சுட்டியில் உள்ளது. மிகப் பெரிய பயமாக பார்க்கப் படுவது, புதிய போப் ஒரு அடிப்படை பழமைவாதி. பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்கிற கருத்தாக்கத்தினை முழுவதுமாக நம்புவர். பைபிளின் படி நடக்கவேண்டும் என்று நினைப்பவர். லிபரேஷன் தியாலஜி கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர். கடந்தாண்டு அமெரிக்க தேர்தலில் மிக முக்கிய பங்கு வகித்தவர். அவரின் உத்தரவு படியே, அமெரிக்க கிறிஸ்துவ பிஷப்புகள் ஜான் கெர்ரியினை எதிர்த்து மக்களை வாக்களிக்க சொன்னார்கள். காரணம், கெர்ரி கருக்கலைப்பினை ஆதரித்தவர். ஒரினச்சேர்க்கை திருமணங்களுக்கு ஆதரவு தருபவர். கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பார்கள். இங்கே போப்பாக ஒரு அடிப்படைவாதியிருக்கிறார். அமெரிக்க அதிபராக இன்னொரு அடிப்படைவாதி இருக்கிறார். விஷயமறிந்தவர்கள் கவலையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் இயேசு கிறிஸ்து. இனி அவரை மக்கள் தான் காபாற்ற வேண்டும். - பார்க்க

கே.வி. ஆனந்த் இந்தியாவின் முதன்மையான கேமராமேன்களில் ஒருவர். வடசென்னை வாசி. சரியாக சொல்லவேண்டுமென்றால் ஏழுகிணறு பார்ட்டி. இந்தியாவின் எல்லா பெரிய இயக்குநர்களோடும் வேலை செய்தவர். தற்போது இயக்குநராக பதவிஉயர்வு பெற்று "கனாக் கண்டேன்" என்றொரு படமெடுக்கிறார். ஸ்ரீகாந்த், கோபிகா இருவரும் இணை. தமிழ் சினிமா வெவ்வேறு காலகட்டங்களில் பெரும்பாலான கதாநாயகிகளை பக்கத்து மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்வது வழக்கம். சிம்ரன், ஜோதிகா, சோனியா அகர்வால் என்று விந்திய மலைக்கு அப்பாலிருக்கும் நாயகிகளை இறக்குமதி செய்து அலுத்துவிட்டதோ என்னவோ, இப்போது காற்று கேரளா பக்கம். மீரா ஜாஸ்மின், கோபிகா, நயன் தாரா, அசின், நவ்யா நாயர் என்று ஒரே சேச்சிகளாக இருக்கிறது. மலையாளத் தேசத்தினைப் போல நூறு மடங்கு எழுதப்படிக்க தெரிந்தவர்களாகிறோமோ இல்லையோ, மலையாள நாயகிகளோடு கனவில் டூயட் பாடுகிறோம். எண்பதுகளில் இதேப் போல ராதா, அம்பிகா,ஷீலா என சேச்சி ராஜ்ஜியமாக இருந்தது. அப்புறம் கொஞ்சமாய் மணவாடு பக்கம் திரும்பி, பானுப்பிரியா, மீனா, ரோஜா, சினேகா என்றாகி, இப்போது மீண்டும் சேர நாட்டு பெண்களோடு டூயட் பாடப் போய்விட்டது. இப்போது தான் பாடல்களைக் கேட்டேன். வித்யா சாகர் இசையில் 6 பாட்டில் 3 தேறிவிடும். அதிலும் "சின்ன சின்ன சிகரங்கள் காட்டி" என்கிற பாடல் சென்சாராகுமா என்று தெரியாது. வைரமுத்து என்று நினைக்கிறேன் [ஏனெனில் பாடலில் "ட்சுனாமி" என்ற வார்த்தை 3 இடங்களில் வருகிறது ;-)] பூடகமாக ஒரே பச்சைமயம். இது தாண்டி, "சின்னப் பொண்ணு சொன்னா கேளு" என்றொரு பாடல் சயனோரா பிலிப் என்கிற புது பாடகி பாடியிருக்கிறார். கொஞ்சம் ரஸ்டிக்கான குரல், நமது மால்குடி சுபா, இலாஅருண், அனுபமா சாயல். குரலில் அலட்சியமும், வித்யாகர்வமும், கொஞ்சமே ஆண்மையும் தெறிக்கும். ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது. அது தாண்டி, பேஜாராக தத்துவவிசாரங்களடங்கிய ஒரு குத்துப் பாடல், தன் செந்தமிழால் கலக்கியிருக்கிறார் உதித் நாராயணன். மற்றப் பாடல்களும் பரவாயில்லை. ஆனந்த் இயக்குநராக தேருவாரா என்று காத்திருந்து பார்ப்போம். அதுவரைக்கும் "ஐய்யா ராமய்யா ஆசை இல்லாத ஆளை சொல்லய்யா ஒய்ய்ய்ய்ய்ய்யா" - பார்க்க

அவன் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி. அவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாகி. இருவரும் கணவன் மனைவியர்கள். அவர்கள் சந்திப்பதெல்லாம் விமான நிலைய லொன்ஞ்சுகளிலும், ஹோட்டல் செக்-அவுட்களிலும், ட்ரான்சிட் விமானங்களிலும் தான். இருவரும் தங்களின் ப்ரீப்கேசில் குறைந்தது 6-7 கைக்கடிகாரங்கள் வைத்திருப்பார்கள். பறக்குமிடத்துக்கேற்றார்போல. அவன் டாம் ஹேங்ஸ். அவள் ஆஞ்சலினா ஜோலி. இவர்களிருவரும் வாழ்வின் சின்ன சின்ன சந்தோஷங்களை எப்படி மீட்சி செய்கிறார்கள், எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய கார்ப்ரேட் டிராமா, கொஞ்சம் இந்திய சென்டிமெண்ட்ஸ், அமெரிக்கா, ஐரோப்பா,சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா என மாறும் களன்கள், வால் ஸ்ட்ரீட் அழுத்தங்கள், சாதாரண அமெரிக்கனின் வாழ்க்கை, வியாபார ஒப்பந்தங்களின் பின்னடக்கும் கைமாறல்கள், அரசாங்கத்தினை ஏமாற்றுதல் என பயணிக்கும் கதையில் சுவாரசியத்துக்கு பஞ்சமில்லல. உடனே ஐம்டிபியில் தேடாதீர்கள் என்ன படமென்று. இந்த படம் இதுவரையில் வரவில்லை இனிமேலும் வருமா என்கிற உத்தரவாதமில்லை. ஏனெனில் இது நான் உருவாக்கிய கதை. பாஸ்ட் கம்பெனி தளத்தில் எக்ஸ்ட்ரீம் வேலைகள் என்கிற செய்தி படித்ததிலிருந்து உருவி உருவாக்கிய கதை. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்பவர்களளப் பற்றிய குறிப்பு. இது பிலிப்பைன்ஸ், ஆப்ரிக்கா போன்ற மூன்னேறிக் கொண்டிருக்கும் தொழிலாளிகள் பற்றிய கதையல்ல. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருக்கும் கார்ப்பரேட் தலைகளைப் பற்றிய கதை. தமிழ்மணம் படிப்பவர்களில் யாருக்காவது ஹாலிவுட் ஏஜெண்ட்கள் தெரியுமானால், கதை பிடித்து தேர்ந்தெடுத்தால் என் சம்பளத்தில் 25% தருவதாக வாக்களிக்கிறேன் - பார்க்க

இந்தியாவிலிருந்தால் , டிஸ்கவரி சேனலில் ஏப்ரல் 24லிருந்து ஒரு வாரத்திற்கு எகிப்து பற்றிய விவரணப்படங்கள் திரையிடப்படுகின்றன. செட்டாப் பாக்ஸ் பிரச்சனையால் என் வீட்டில் டிஸ்கவ்ரி சேனல் வருவதில்லை. சென்னையில் செட்டாப் பாக்ஸ் வைத்திருக்கும் செல்வந்தர்களுக்காக (:-)) நிகழ்ச்சி நிரல்
ராம்சேஸ் - கடவுளின் சாபமா அல்லது மனிதர்களின் சாபமா? - ஏப்ரல் 24 - 8PM IST
ஸ்பின்ங்ஸ் - மூகமூடிகள் தாண்டி - ஏப்ரல் 25 - 8PM IST
கிளியோபாட்ராவின் மர்ம மரணம் - ஏப்ரல் 26 - 8PM IST
பாரோவின் வெஞ்சினம்: மறக்கடிக்கப்பட்ட எகிப்து புதையல்கள் - ஏப்ரல் 27 - 8PM IST

சாபமிடுகிறேன் அனைவருக்கும். பார்த்து நாசமாய் போங்கள் ; ) - பார்க்க

Apr 18, 2005

ஏலேய்...நீ ஒத்திப் போ

சென்னை சென்சார் போர்டு அதிகாரிகள் கலாச்சார காவலர்களாக ஏதாவது பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறார்களா ? எனக்குத் தெரியவில்லை. மும்பை எக்ஸ்பிரஸில் ஒரு முழு பாடல் வெட்டப்பட்டிருக்கிறது. பாடலைக் கேட்டவுடன் தெரிந்துவிட்டது, என்ன நடந்திருக்குமென்று.

"ஏலேய்...நீ ஒத்திப் போ" என்று தொடங்கும் பாடலில் ஒரு பாலியல் தொழிலாளி, மும்பையினைப் பற்றி விவரிப்பதாக வசன கவிதையுடன் கூடிய கட்டமொன்று வருகிறது. மும்பை இந்தியாவின் வணிக தலைநகரமென்பதும், பாலியல் தொழிலாளிகள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும், மும்பையிலிருக்கும் அடிமட்ட பாமரனிலிருந்து பணக்காரர்கள் வரை எல்லோரும் அங்கே போகிறார்கள் என்பது உலகறிந்த சேதி. இதைப் பாட்டில் சொன்னால் பார்ப்பவர்கள் கெட்டுப் போய்விடுவார்களா? இதை விட மோசமான தமிழ் பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் ("சின்னவீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா", "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா" என்று இந்த வரிசை நீளும்)கலகம் செய்யவதற்காகவே இந்த பாட்டினை அதன் சுட்டியோடு தருகிறேன். இப்போது சென்சார் போர்டால் என்ன செய்ய முடியும், எல்லாரும் கேட்க முடியும்.

எப்போதோ பேட்டியில் படித்தது, ஆ.வி என்று நினைக்கிறேன். கமல் மும்பை எக்ஸ்பிரஸ் பற்றி சொல்லும்போது இது மும்பையின் இன்னொரு முகமான சேரிகளைப் பற்றிய கதை என்று சொன்னார். கதையும் தாராவியிலுள்ள ஒரு சேரியில் தான் தொடங்குகிறது. இந்த பாடலின் ஹம்மிங்கும், பட இறுதியில், பாடலுக்கு இடையே வரும் "மும்பை மகா நகரம். இந்தியாவின் வர்த்தக வாசல்" என்பது மட்டும் கேட்கும் மற்றதெல்லாம் கத்திரிக்கோலுக்கு கொடுத்தாகிவிட்டது. இதில் வரும் சுவாரசியமான வசன கவிதையினை கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஒன்று
"வாசல் சின்னது, ஆனா கொல்லைப்புறம் பெரிசு"

"உலகத்தின் மிகப் பெரிய ஏழை குப்பம்"

"என் அக்கா பேரு இன்பா.
தங்கை பேரு சிற்றின்பா
குடிசையில் இருக்கறவங்க கூட எங்களை பார்க்கலாம். ரசிக்கலாம்.
ஆனா லேசுல தொட முடியாது"
இந்த நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்வினைப் பற்றிக் கூட சொல்ல ஒரு கலைஞனுக்கு உரிமையில்லையா ? இல்லை பாலியல் தொழிலாளிகளின் வாயிலாக வெளிப்படும் வசன கவிதையில், பாலியல் தொழிலாளிகள் இந்தியாவில் பேசக்கூடாது என்றிருக்கிறதா ? அவ்வாறெனில் "நான் சிரித்தா தீபாவளி" மற்றும் கரீனா கபூர் காமத்திப்புத்ராவிலிருக்கும் பாலியல் தொழிலாளியாக நடித்த "செமிலி" போன்றவைகள் தடைசெய்யப்பட்டு விட்டதா?

பார்வையாளனை விட பெரிய சென்சார் அதிகாரி வேறு யாராவது இருக்கமுடியுமா ? ஒரு இருட்டறையில் 4 பேர்கள் எப்படி இந்த தேசத்தின் மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும்? அல்லது சென்சார் செய்யப்பட்டதால், நாட்டில் வன்முறையும், வன்புணர்வும், வன்கொடுமையும் குறைந்து விட்டதா? "ஏ" சான்றிதழ் கொடுக்கப்பட்ட படம் தொலைக்காட்சியில் வரும் போது எப்படி குழந்தைகள் தவிர்த்து பார்ப்பது? இதில் எல்லாவற்றுக்கும் விடை "இல்லை" என்பது தான்.

என்ன விதிகளோ, என்ன சட்டங்களோ.... பேசாமல் ஆனந்த் பட்வர்தன் சொல்வது போல் இந்த சென்சார் போர்டினை ஒட்டுமொத்தமாக தூக்கி விடலாம்.

கொசுறு: இந்திய அரசாங்கம் வெளியே தெரியாமல் மிக முக்கியமான ஒரு காரியத்தை செய்திருக்கிறது. இந்திய பாஸ்போர்ட்டில் இனிமேல் ஆண், பெண் மற்றும் அரவாணிகள் (Eunuchs) என்று அவர்களுக்கான பாலினத்தினை தனியாக பதிவு செய்யும் வசதி (M / F / E) செய்திருக்கிறது. எத்தனை நாட்டு பாஸ்போர்டுகளில் இந்த வசதி இருக்கிறது என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசாங்கம், எல்லோரையும் மனிதர்களாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பது.

Apr 16, 2005

பைனாகுலர் 10344

சபீர் பாட்டியா, ஞாபகமிருக்கிறதா? ஹாட்மெயிலினை நிறுவி, பின் அதனை மைக்ரோசாப்டிற்கு விற்று கோடிகள் ஈட்டியவர். நடுவில் செய்த சில விஷயங்கள் சொதப்பிவிட்டன (ஆர்சூ.காம்). இப்போது மீண்டும் புயலென ஒரு புதிய சேவையோடு, மைக்ரோசாப்டின் கோட்டைக்குள் கலகம் செய்ய நுழைந்திருக்கிறார். மைக்ரோசாப்ட் வேர்டு, எக்ஸெல் போன்ற செயலிகள் கூட்டுப்பங்கேற்போடு (Colloboration) செய்ய மைக்ரோசாப்டில் வழியில்லை. நம்மாளு, அந்த சைக்கிள் கேப்பில் ஆட்டோ இல்லை, ஆகாயவிமானமே ஒட்டியிருக்கிறார். அவரின் இன்ஸெட்டாகோல் (InstaColl) கூட்டு பங்கேற்பு முறையினை புரட்சிகரமாக மாற்றியமைத்திருக்கிறது. இப்போது இலவசமாக இந்த சேவையினை இறக்கிக் கொண்டு பயன்படுத்தலாம். நான் சோதித்துப் பார்த்ததில் எனக்கென்னமோ கொஞ்சம் திருப்தியாக தான் இருந்தது. நிறைய போட்டிகள் வரும். நிறைய விஷயங்கள் சேர்க்கப்படலாம்.ஆனாலும், எவ்வளவு நாள் இலவசமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அதுவரை என்சாய். - பார்க்க | பதிவிறக்க

கூட்டுப் பங்கேற்பு என்றவுடன், சொஞ்ச நாட்களுக்கு முன்பு படித்த பஸ்வண்ணா பற்றிய நினைப்பு வந்தது. கி.பி.1100 களில் கர்நாடகத்தில் பிறந்து, சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடி, எல்லாரும் ஒரினமே என்று பேசி, பின்னாளில் லிங்காயத்துகளின் தலைவராய் விளங்கியவர். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சிறந்த சிந்தனை யாளர், சமூக சமய சீர்திருத்தவாதி. கன்னட இலக்கியத்தில் வசனம் என்ற புது நடையைத் துவக்கியவர். வீரசைவம் அல்லதுலிங்காயத் மதப் பிரிவின் பெருந்தலைவர். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், லிங்காயத்துகள் உயர்சாதிக் காரர்களாக தானே இன்னமும் வடக்கு கர்நாடகத்தில் கருதப்படுகிறார்கள் ? என்னமோ, ஆனாலும், சுருக்கமான, சுவையான பஸ்வண்ணா புராணம் - பார்க்க

சாதி ஏற்றத்தாழ்வுகள் என்று பேசினாலே தலித்துகள் பற்றிய பேச்சு இல்லாமலிருக்காது. தலித்தியம் உரக்கப் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில் தலித்துகள் (பறையர்கள்) ஒரு காலகட்டத்தில் சமூக அமைப்பில் மிக உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்காது ? நிறைய சந்தேகமும் (வரலாற்று ரீதியிலான உண்மையா?), பெருத்த ஆச்சர்யமும் பொங்க இந்த பதிவினை படித்து முடித்தேன்.
"தீண்டாத தொழிலாளர்கள் நிலவுடைமை உரிமையுள்ள சாதிகளுக்கு சொந்தமான "இனாம்" நிலங்களை விளைவிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்; பல சந்தர்ப்பங்களில் (குறிப்பாக தஞ்சாவூரில்) உயர் சாதிகளிலுள்ள ஏழைகள் போல நேரடியான குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

மேலும்/ இவர்கள் தங்களின் அந்தஸ்து உயர்வுக்கு வேளாண் பொருளாதாரத்திற்கு வெளியிலும்/ அதாவது நெசவு/ கட்டிடம்/ இராணுவம் மற்றும் பிற தொழில்களிலும் வாய்ப்புகள் பெற்றிருந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் (பிந்தைய பகுதியில்) காலனிய அதிகாரிகள் சாதி அந்தஸ்தையும் உண்மையான பொருளாதார செயல்பாடு மற்றும் ஊதியத்தையும் இணைக்க முற்பட்ட போது சாதிய அமைப்பின் எச்சத்தின் உறுதியின்மையால் மிகவும் குழம்பிப் போயிருந்தனர். கோயில்/ பரம்பரை மற்றும் அரசு மரியாதை முறைகளில் இருந்த நெகிழ்வுத்தன்மை பொருளாதார முன்னேற்றம் சமூக அந்தஸ்து அளவிலும் வெளிப்பட்டதை உணர்த்துகிறது."
- பார்க்க

சந்தோஷமும், சந்தேகமும் இருந்தாலும், இன்றைய தலித்துகளின் நிலை வருந்தத்தக்கது. தமிழகத்தில் எழுந்துள்ள குரல்களைப் போலவே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் குரல் உரத்து ஒலிக்கத்தொடங்குகியிருக்கிறது. இதில் பீஹாரில் நிலைமை ரொம்ப மோசம். சாதாரணமாகவே, எனக்கு பீஹார் இன்னமும், ஏதோ ஒரு ஆப்ரிக்க சர்வாதிகாரியாளும், குறுங்குடியாக தான் தோன்றுகிறது. அதிலும், தலித்துகள் என்று வந்தால், சொல்லவே தேவையில்லை. நிழல் வரிகள் (Shadow lines) என்கிற தலைப்பில் தலித் குரல் என்கிற தலைப்பில் தொடர்ந்து தெஹல்காவில் முனைவர். ஷியராஜ் சிங் பெச்செய்ன் (Dr. Sheoraj Singh 'Bechain') என்கிற ஹிந்தி எழுத்தாளர் எழுதி வருகிறார். தலித்திய சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும், இந்திய அளவில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருபவர் இவர். இவரின் ஜனநாயகமென்பது ஒரு சமூகமா அல்லது கட்டமைப்பா என்கிற கடிதம், இந்தியாவின் தலித் புள்ளிவிவரங்களை துல்லியமாக சொல்லுகிறது. நான் பார்த்த படித்த தலித்திய சிந்தனைகளில், மிகவும் தர்க்க ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் இந்த கடிதமைந்திருக்கிறது.
(உதா. தலித்துகள் இந்தியாவில் நான்கில் ஒரு பங்காக இருக்கிறார்கள் [16.48% SCs 8.08% STs]. 100 கோடி மக்கள் தொகையில் இது 20-25 கோடி நபர்கள். இது பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். ஆனாலும், இன்றுவரை ஒரு தலித்திய பத்திரிக்கையாளனும், டெல்லியின் ஊடகங்களில் இல்லை).
ஆழமாகவும், அகலமாகவும் போகிறது இந்த கட்டுரை - தெஹல்காவின் நிழல் வரிகள் | சிங்கின் கடிதம்

டெல்லியிலிருந்து நேராக புதுக்கோட்டைக்கு வந்தால், நமது ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் "கல்வெட்டுகள், செப்பேடுகள் காட்டும் தலித் வாழ்வியல்" என்கிற தலைப்பில், தலித் அமைப்பின் உட்கட்டமைப்புகள், கல்வெட்டு சான்றுகளோடு அடுக்குகிறார். பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் மிக முக்கியமான சமூக விஞ்ஞானிகளில் ஒருவர். (எனக்கு தெரிந்த இன்னொருவர் "பண்பாட்டு அசைவுகள்" எழுதிய பேரா. தொ.பரமசிவம்) நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். புதுவிசையில் தொடர்ந்து தலித்துகள், பழந்தமிழர் மரபுகள் பற்றி எழுதி வருபவர். இவரின் "கிறிஸ்துவமும் சாதியும்" பற்றி ஏற்கனவே
முந்தைய பைனாகுலரில் சொல்லியிருந்தேன். - பார்க்க

வார் ஆப் தி வேர்ல்ட்ஸ் இன் டிரைய்லரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏனோ மைனாரிட்டி ரிப்போர்ட் ஞாபகம் வந்தது. இரண்டும் ஸ்பீல்பெர்க்கின் படங்கள் என்பதை தாண்டி, மைனாரிட்டி ரிப்போர்ட் எனக்கு தனிப்பட்ட அளவில் பிடித்த படம். ஏனெனில், வருங்காலத்தில் மாறுகடை துறையில் என்னனென்ன வசதிகள் வரும் என்பதை இயல்பாகவும், ரசிக்கத்தக்க அளவிலும் சொன்ன படம். கில்லர் ஜீன்ஸ் என்று நினைக்கிறேன். கடைக்குள் நுழையும் டாம் குருஸ்ஸின் இடுப்பளவினை சரிப்பார்க்க சொல்லும் இயக்கிகள், பில்போர்டிலிருந்து உங்களின் பெயரை சொல்லி அழைக்கும் பெண் என நீளும் படத்தில் மிக முக்கியமான விஷயம், டாம் உபயோகிக்கும் கணி(னி தேவையில்லை என்று ஐயா இராம.கி சொல்லிவிட்டார் : )) மவுஸ், விசைப்பலகையின்றி, வெறும் க்ளவுஸ் மாட்டிய கைகளினாலேயே உபயோகிக்கும் வசதியுடன் இருக்கும். அது இன்னும் சிறிது நாட்களில் நிறைவேறிவிடும் போலிருக்கிறது. அமெரிக்காவில் ராணுவ பொருட்களை தயாரிக்கும் ரேதியான் அதேபோலொரு நுட்பத்தினை பரிசோதித்துக் கொண்டிருக்கிறது. அண்டர்கோப்ளர் என்கிற அறிவியல், நுட்ப வஸ்தாதுவினை கொண்டு அவரின் கீழியங்கும் ஒரு குழு அத்தகைய ஒரு ஸிஸ்டத்தினை பரிசோதித்துக் கொண்டிருக்கிறது. வந்தால், இந்த மவுஸ் நகராமல் விண்டோஸ் செத்துப் போவதை பாராமல் இருக்கலாம் - பார்க்க

நேற்று கூச்சல், களேபாரங்களுக்கிடையே எஸ்.எஸ்.ஆர். பங்கஜமில் மும்பை எக்ஸ்பிரஸ். நேற்று இரவு டிக்கெட் கவுண்டரில் கிடைத்தது. படம் - எனக்கென்னவோ தேறுமுன்னு நம்பிக்கையில்லை. கமலுக்கு, கிரேசி மோகனின் அருமை இப்போது புரிந்திருக்கும். வசனங்களில் சிரிப்பு வருவதற்கு பதிலாக வெறுப்பு தான் வருகிறது. கிளைமேக்ஸூக்கு ஒரு 20 நிமிடங்களுக்கு முன் நடக்கும் ஆள்மாறாட்ட சங்கதிகள் கொஞ்சமாய் சிரிப்பினை வரவழைக்கின்றன. ஆனால், இதையெல்லாம் தாண்டி, படம் என்னமோ கல்யாண கேசட்டினை பார்க்கு உணர்வினை ஏற்படுத்துகிறது. எடிட்டிங்கும், காட்சிகளும் படுமோசமாய் இருக்கிறது. டிஜிட்டல் நுட்பம், எச்.டி என்றெல்லாம் சுஜாதா போலவே ஜல்லியடித்த கமல் இறுதியில் படத்தினை பிலிமில் தான் வெளியிட்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்த படம் டிஜிட்டலில் தான் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. சென்னனயில் சத்யம், உதயம், அபிராமி, தேவி திரையரங்குகளில் ரியல் இமேஜ் நிறுவனத்தினரின் " கியுப் சினிமா " என்கிற டிஜிட்டல் புரோஜெக்ட்டர் இருக்கிறது. Mr.கமல், உங்களுக்கு நுட்பத்தின் மீது ஆசையிருக்கலாம். ஆனால், தயவுசெய்து அடுத்தமுறை ஏதாவது பத்திரிக்கைக்கும், ஊடகங்களுக்கும் பேட்டி கொடுக்கும் முன் விஷயம் தெரிந்தவர்களை கூட அமர்த்திக் கொண்டு, செய்கிற விஷயத்தினை முழுமையாக செய்யுங்கள். சும்மா சீன் போட்டு ஊரை ஏமாற்றாதீர்கள். (இதே துறையில் நானும் இருப்பதால் எனக்கு எங்கெல்லாம் சொதப்பியிருக்கிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. அதிலும் இந்தியாவிலேயே முதல்முறையாக முழு எச்.டியில் எடுக்கப்பட்ட படம் என்பதற்கு என்ன சான்றுகளிருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து "கிஷ்கிந்தா" அவர்களின் தீம்பார்க்குக்காக ஏற்கனவே ஒரு எச்.டி படமெடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு சந்தேகமுண்டு)

Apr 15, 2005

என்ஹெடுவான்னா - உலகின் முதல் பெமினிஸ்ட்

ஓ கோபுரங்களே!
பெருமூச்சுக்களின் நிலமான
இந்த மெசபடோமிய மண்ணைவிட்டு நீங்க இதுவே நேரம்.
சதிகளில் ஆழ்ந்து
செத்தவர்களை ஏராளமாக புதைத்திருக்கிறாய்
உன் அழிந்த நாட்கள்
வெறுமையின் காலம்

என் நாளங்களை நிரப்ப
கழிவிரக்கத்தின் குருதிவழிந்து கொண்டிருக்கிறது
என் நெஞ்சினின்று தப்பித்தப் புலம்பல்
பவரியன் கோயிலில் அனாதையாய்க் கிடக்கிறது
மூடு பனியால் மறைக்கப்பட்ட நிலவினைப் போல

ஓ கோபுரங்களே!
எங்களை யார் காபாற்றுவார்
ஏமாற்றும் என் பாலை நிலத்தையும் என் அமைதியையும் காபாற்று.

என்னைக் கைவிடு
நீ என்ன விரும்புகிறாயோ அதைச்செய்
காற்றின் போக்கில் என்னைப் பயிரிடு
என் மகிழ்ச்சியைச் சிதறவை
முகில்களும் வீண்பேச்சுக்களும் நிறைந்த வரைப்படத்தின் மீது
இன்று அவள் சென்றாள். அங்கு அவள் ஒய்வெடுத்தாள்
அவள் மனத்திலிருந்து எழுகிறது ஜின்னினுடைய அழுகை
அவள் உதட்டில் ஒய்வெடுத்தன. உருக்பகுதி எல்லைகள், அக்காடினுடைய ரகசியங்கள்
அவள் உடல் மலர்ந்தது எல்லா வதைகளுக்கும் ஆட்பட்ட தோட்டங்களில்
அழிவின் மகுடத்தின் மேல்
அவள் சார்கன் நகையாய் இருந்தாள்
சிதறலின் பெண் மதகுருவாக
சாபத்திற்குள்ளான உன் சிறுபலகைகளில்
எழுத மறக்காதே!
என் எஹெடுவான்னாவின் நெஞ்சம் சிறப்பானது
கொடுங்கோலனின் நற்செய்தியை விட
இந்த கவிதை ஒரு ஈராக்கிய கவிதை. எழுதியவர் அமல் அல் ஜீபுரி (1965) ஒரு ஈராக்கிய பெண் கவிஞர், இதழாளர், மொழிபெயர்ப்பாளரும் கூட.இவர் தற்போது ஜெர்மனியில் இருக்கிறார், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் தன் இளங்கலை படிப்பினை முடித்தவர். இதனை தமிழில் மொழி பெயர்த்தவர், புதுவை சீனு தமிழ்மணி. இந்த காலாண்டிதழ் "திசை எட்டும்" மொழிபெயர்ப்பு சிறப்பிதழாக வந்துள்ளது. அதில் இடம் பெற்ற முக்கியமான கவிதை இது. கவிதையை விட, இந்த கவிதையில் பாடப்படும் பெண்ணான என்ஹெடுவான்னா பற்றி படித்தால் மலைப்பாக இருக்கிறது.
Calcite disk of Enheduanna, daughter of Sargon of Kish, found at Ur

யார் இந்த என்ஹெடுவான்னா ?

என்ஹெடுவான்னா (Enheduanna - 2285-2250 கி.மு) தோராயமாக 4300 வருடங்களுக்கு முன் மெசபடோமிய என்றழைக்கப்படும் இன்றைய ஈரான்/ஈராகில் வாழ்ந்த புரட்சிக்கரமான எழுத்தாளர், பெண்ணியவாதி. உலகின் பெண் இலக்கியத்தின் முதல் எழுத்தாளராகவும், பெண்ணியம் சிந்தனை கொண்டவராகவும், பெண்ணிய சிந்தனைகளையும், கருத்துக்களையும் பதித்தவராக இவரை அடையாளம் சொல்லுகிறார்கள். இவரின் எழுத்துக்களில் மிக முக்கியமாக சொல்லப்படுவது 3 படைப்புகள். அதிலும், இரண்டு படைப்புகள் இனன்னா என்கிற பெண் கடவுளை போற்றி, புகழ்ந்து பாடும் துதிப் பாடல்கள் (hymn) வகையான படைப்புகள் (The Exaltation of Inanna and In-nin sa-gur-ra). The Temple Hymns என்கிற இவரின் மூன்றாம் படைப்பு கோயில்கள், கடவுள், கடவுளர்கள், பெண் கடவுள்கள், அவர்களின் உறவுகள் பற்றிய ஆன்மீக விஷயங்களை உள்ளடக்கியதுப் போல் தெரிகிறது. இதிலிருக்கும் விசேஷம் என்னவென்றால், எல்லா படைப்புகளிலும், கதாபாத்திரங்கள் பேசுவது போல் இல்லாமல், படைப்பாளியின் உணர்வாக (First person speaking) எழுதியிருக்கிறார். 4000 வருடங்களுக்கு முன் இவ்வாறு எழுதுதலை நினைத்துக் கூடப் பார்க்க இயலாது. இவரைப் பற்றிய சுவாரசியமான பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பெண்ணிய சிந்தனைகள் வலுப்படும் இக்காலத்தில், அதன் விதை 4,300 வருடங்களுக்கு முன்பே விதைக்கப்பட்டுள்ளது என்பதை அறியும்போது ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும் உள்ளது.

என்ஹெடுவான்னா பற்றிய குறிப்புகள்

- வாழ்க்கை வரலாறு
- படைப்புகள்
- கோயிலின் நிலையும், என்ஹெடுவான்னாவின் பெண்ணிய கருத்துக்களும்

ஒட்டுமொத்த கூகிள் தேர்வுகள் உங்கள் வசதிக்காக :)

கொசுறு: இரண்டு மூன்று நாளுக்கு முன் ஒரு புத்தகக்கடையில் இயேசு கிறிஸ்து தன் வாழ்வின் பிற்காலத்தை இந்தியாவில், இமயமலையில் கழித்தார் என்றும், அவர் சிலுவையில் உயிர்ந்தெழுதலுக்கும் முன்பும், பின்புமான இதுவரை சொல்லப்படாத வாழ்க்கைப் பற்றிய புத்தகத்தினை [ Jesus Lived in India: His Unknown Life Before and After the Crucifixion - Holger Kersten ] சும்மா புரட்ட நேரிட்டது. இந்த புத்தகத்தினை யாராவது படித்திருக்கிறீர்களா ? இது நிஜமா இல்லை புருடாவா?

Apr 13, 2005

பைனாகுலர் - 10343

ஜூராசிக் பார்க் படமா? இல்லை பாடமா? பாடமாக கூட இருக்கலாம். நேஷ்னல் ஜியோகிரபிக் தளத்தில் படித்தது. ஜப்பானிய விஞ்ஞானிகள், பொஸைய்லிருந்து மெமோத்தின் உயிரணுவை எடுத்து, இப்போதிருக்கும் ஒரு யானைக்குள் செலுத்தி மீண்டும் மெமோத்தை உருவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். அறிவியலில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? - பார்க்க

1 ரூபாய் சம்பளம் வாங்குவீர்களா? இதைப் போலதான் ஒரு அம்மையார் ஒரே ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, தமிழகத்தின் சொத்துக்களை இந்தியா மற்றும் உலகமெங்கும் விதைத்து வைத்திருக்கிறார். ஆனால், கூகிளின் தலைமை இயக்குநர்கள் (லாரி பேஜ் & செர்ஜி ப்ரின்) இருவரும் $1-ரை சம்பளமாக பெற்றுக் கொள்கிறார்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மில்லியன், பில்லியன் கணக்கில் சம்பளம் வாங்கும்போது, இது ஆச்சரியமாக தான் இருக்கிறது. சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவார்கள் என்கிறீர்களா, கூகிளின் பங்கு மூலம் $7 பில்லியன் எப்போதும் இருக்கிறது இருவருக்கும். ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள்) கூட ஆப்பிள் கஷ்டகாலத்திலிருக்கும் போது $1தான் சம்பளமாக பெற்றுக் கொண்டாராம். சுவாரசியமாக இருக்கிறது - பார்க்க

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அங்கத்தின் சார்பாக உலகளாவிய புகைப்பட போட்டியொன்று நடைபெற்றது. இதில் ஒரு இந்தியர் இந்தியாவில் மான்களின் நிலையைப் பற்றி எடுத்திருக்கும் புகைப்படம் முதல் பரிசு பெற்றிருக்கிறது. அதை விட இரண்டாம் பரிசும், ஆறுதல் பரிசுகளில் உள்ளடங்கிய சில புகைப்படங்களும் மனதை பிசைகின்றன - பார்க்க

கொஞ்சம் பமீலா ஆண்டர்சன் சமாசாரம். பெண்கள் செயற்கை மார்பகங்கள் (சிலிக்கான்) பொருத்தலாமா, அதன் பின்விளைவுகள், உண்டாகும் பாதிப்புகள் போன்றவை குறித்து பெரிய விவாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் நடந்துவருகிறது. ஒருபுறம் பொருத்துவதால் உடல் உபாதைகள் (மார்பக புற்று நோய்) வருவதால் தடை செய்ய வேண்டுமென்றும், இன்னொருபுறம் போதிய ஆலோசனைக்கு பின், அதனை பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தினை பெண்களிடமே விட்டு விடவேண்டும், என்று கூட்டம் பிரிந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சமூக, கலாச்சார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது - பார்க்க

தமிழ் புதுவருட களிப்பிலிருக்கும் மக்களுக்கு, இன்றைய தேதியின் வரலாற்று முக்கியத்துவம் தெரியுமா ? (13, ஏப்ரல்) இன்றைக்கு சரியாக 86 வருடங்களுக்கு முன்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. எல்லா எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே படித்து முடித்திருந்தாலும், இந்த படுகொலையினை முழுவதுமாக அறிந்து, ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களோடு பேசி, இரண்டு புத்தகங்களாக (சராசரியாக 780 பக்கங்கள்) பதித்தவர் சந்தானம் என்கிற ஒரு தமிழன். இது நடந்தது 1920இல். மறைக்கப்பட்டிருந்த வரலாறு இப்போது வெளிவந்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் தகவல்கள் - பார்க்க

"தெருக்கூத்து வடிவத்திலிருந்து வளர்ந்த ஒரு நாடகக் கலை. தஞ்சை மாவட்டத்தில் விளங்கும் இக்கூத்தில் நரசிம்ம அவதாரம் தவிர்த்த பிற கதாபாத்திரங்கள் இரட்டை இரட்டையாக இடம் பெறுவது இக்கூத்தில் உள்ள சிறப்புப் பாணியாகும்" - இது நார்த்தேவன் குடிகாடு கூத்து என்கிற தமிழகத்தின் மரபுக் கலைவடிவங்களில் ஒன்று. இதைப் போல இரண்டு பேர் ஆட்டம், மூணு பேர் ஆட்டம், செம்பட்டி சந்தை காமிக், கல்யாண காமிக், சாமியாட்டம், டப்பாத் தெம்மாங்கு, சுத்து மற்றும் எதிர்த்தெம்மாங்கு, ஒயிலாட்டம், ராசாராணியாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் என்று தமிழ் மண்ணின் பாரம்பரிய கலைகளை விரிவாக விளக்குகிற புத்தகத்தினை புக்லேண்ட்ஸில் பார்க்க நேரிட்டது. பேரா. கரு.அழ. குணசேகரன் (தமிழ் சினிமாவில் வீணடிக்கப்பட்ட மாற்றுத்தள நபர்களிலொருவர்) "தமிழ் மண்ணின் மரபுக்கலைகள்" என்ற இந்த புத்தகத்தை சுவையாகவும், விரிவாகவும் எழுதியிருக்கிறார். இது ஒரு மித்ர வெளியீடு.

Apr 12, 2005

பைனாகுலர் - ஏப்ரல் 2வது வாரம்

தனிப்பதிவு தொடங்கியவுடன் நிறைய எழுதி தீர்க்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை. நான் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்தின் முதல் பதிவிலேயே தெளிவாக சொல்லியிருந்தேன். எழுதுவது என்று வந்துவிட்டாலே, எங்கிருந்தோ ஒரு போலித்தனம் வந்து விடுகிறது என்று. சில பதிவுகளில் நடக்கும் சண்டைகள் பார்க்கும்போது கருத்து சுதந்திரத்தின் எல்லை எதுவரை என்னவென்று என்னையே கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு பதிவின் மூலமாய் ஏதேனும் நல்ல விஷயங்கள், அல்லது நல்லது செய்யாவிடினும் எதுவும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க செய்வது அவசியமென்று நினைக்கிறேன். சரி. விடுங்க. இப்படி பேச ஆரம்பித்தால், அப்புறம் இது ஒரு தனிவிவாதமாகிவிடும்.

கொஞ்ச நாட்களாகவே, எழுதுவதற்கு நிறைய நேரம் கிடைப்பதில்லை. எழுதினால், முழுமையாக எழுத வேண்டும் என்கிற எண்ணமுடையவன் நான் (இதனால், மற்றவர்கள் முழுமையில்லாமல் எழுதுகிறார்கள் என்று அர்த்தப்படுத்திக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல). என் பதிவினால் ஏதேனும் நல்ல காரியங்கள் நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் தான் எழுதுகிறேன். நிற்க. சொல்லவந்த விஷயத்தை விட்டு சுற்றி வளைத்து மூக்கினைத் தொடுகிறேன்.

அவ்வப்போது நான் படிக்கும், கண்டறியும் விஷயங்களை தொகுத்து வைக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனாலும், வழக்கமான சோம்பேறித்தனத்தாலும், பிற கவனசிதறல்களினாலும் செய்ய இயலவில்லை. அதற்காகவும், நான் படிக்கும் விஷயங்களை மற்றவர்களையும் பார்க்கவைத்து சித்ரவதை செய்யவேண்டும் என்கிற மிக உயர்ந்த நல்லெண்ணத்துடனும் தான், ஆரம்பிக்கிறேன் - பைனாகுலர்.

பைனாகுலரில் பார்க்கும்போது சில மேட்டர்களும்,மீட்டர்களும் மாட்டும். அது அரசியலாகவோ, அறிவியலாகவோ, நுட்பமாகவோ, பொருளாதாரமாகவோ, சினிமாவாகவோ, சமூகமாகவோ, கவிதையாகவோ, செய்தியாகவோ, வேறு எதெதோ ஆகவோ இருக்கலாம். நான் படித்து எனக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். அதுக்கு தானே வலைப்பதிவு என்கிறீர்களா, உண்மை ஆனால், எனக்கு பிடித்ததை எழுத வேண்டுமானால், விரிவாக எழுத வேண்டும். அதிலும் என் பார்வைதான் இருக்கும். நான் அதை தாண்டி, நான் படித்த விசயத்தினை எவ்வித எழுத்து ஜிகினாக்களன்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த உரலை கிளிக் செய்து நீங்களும் பாருங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது ஜெனிப்பர் லோபஸின் வீடியோவோ, மைக்கேல் ஜாக்சன் வழக்கோ, இந்திய கிரிக்கெட் அணியின் திறமையோ வேறு ஏதோ. இந்த பதிவில் மாத, வார விஷயங்கள் போட்டிருப்பதால் உடனே இது தொடர்ச்சியாக வரும் என்று தப்பாக யோசிக்காதீர்கள். பைனாகுலருக்கு காட்சிகள் எப்படி மாட்டுகிறதோ அதைப் பொறுத்தே. எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல, நான் "கருத்து கந்தசாமி" அல்ல ;-)

பைனாகுலர் என்கிற பெயரை என்பதை தாண்டி, இந்த பதிவினைப் படித்து வேறு நல்ல பெயரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சரியான விடை சொல்லும் அதிர்ஷ்டசாலிக்கு, குலுக்கல் முறையில் எதுவும் கிடையாது. சென்னை வந்தால், லெமன் டீயும், குஸ்காவும் என் சொந்த செலவில் வாங்கி தருகிறேன்.

இந்த சுட்டிகள் எந்த விதமான பாகுபாடுகளாலும் வரிசைப்படுத்தப்படவில்லை. என் திருப்திக்கு நான் வரிசையிலமைத்தது தானிது. இனி இந்த பதிவுக்கான பைனாகுலர் - இதழ் 10342 ;) [இந்த இதழெல்லாம் சும்மா ஒரு பில்ட்-அப்தான்]

1. சுனிதா நாராயண், கோலாக்களில் பூச்சி மருந்து அதிகமாக இருக்கிறது என்கிற சர்ச்சையினை கிளப்பி, நிருபித்துக் காட்டியவர். அவரின் தண்ணீர் மேலாண்மை பற்றிய கருத்துகள் படிக்க கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது - பார்க்க

2. அமெரிக்க டாலர் சரிந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் இன்னமும் ஏன் பிற பொருளாதாரங்களைப் போல விழவில்லை. அதுவும், அமெரிக்கா இயங்குவதற்கு ஆசியா முக்கியமாக சைனாவும், ஜப்பானும் எவ்வளவு முக்கியம், டாலர் எங்கே போகிறது என்பது பற்றிய நியுயார்க்கரில் வந்த கட்டுரை - பார்க்க

3. மன்னர்கள் படையெடுத்தலும், இஸ்லாமிய மற்றும் இந்து படையெடுத்தலுக்கான அடிப்படை காரணங்கள், மாறுபாடுகள் குறித்து ஆ.சிவசுப்ரமணியன் எழுதியிருக்கும் வித்தியாசமான கட்டுரை. தட்ஸ்டமில்.காமின் புதுவிசையில் வந்திருக்கிறது - பார்க்க

4. வாழ்வின் 10 அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளைப் பற்றிய நியுசயன்டிஸ்டில் வந்திருக்கும் அதிஅற்புதமான கட்டுரை. முக்கியமாக கண்கள், மூளை, இறப்பு, பாலுறவு, போட்டோசிந்ததிஸ் (தமிழில் என்ன!?) என ஒரு மார்க்கமாக வாழ்வின் அற்புதங்களை அணுகும் நீள்கட்டுரை - பார்க்க

5. செய்தியோடை பற்றி தெரிந்திருந்தாலும், செய்தியோடைகளின் பலம், அவற்றின் வர்த்தக பயன்கள், வணிக மேன்மைகள் குறித்து மார்க்கெட்டிங் ப்ரோப்ஸ் குறித்திருக்கும், சிறிய ஆனால், தெம்புட்டக்கூடிய குறுந்தொகுப்பு - பார்க்க

இதைத்தாண்டி நான் சொல்லவிரும்பிய புலிகளின் தேசம் பற்றிய தெஹல்கா விஷயத்தினை பத்ரி சொல்லிவிட்டார். வேறெதாவது சுவாரசியமாக மாட்டும்வரைக்கும், பைனாகுலர் சுற்றிக் கொண்டிருக்கும். இதை எழுதுவதால், நான் பதிவு எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. இதில் சொல்லியிருக்கும் விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், விரிவாக என்னால் எழுத முடியாமல் போய்விடும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

எழுத மறந்து விட்டுப் போனது - இந்த மாத "புதிய பார்வை" - தொன்மங்களின் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. முக்கியமாக அதில் பட்டது பேரா.தொ.பரமசிவனின் - "பாமரர் ஏதறிவாரும்", விஸ்வநாதன் கண்டராதித்தனின் - "கிராமிய தொன்மங்கள்: சோறு போடுங்காயீ" யும், எம்.எஸ். செல்வராஜின் "தொதவர்... கோத்தர்... பனியர்..."ரும் மிக முக்கியமானதாக தெரிகிறது. இதில் வரும் இந்திரனின் "சேரிகள் எரியும் நகரம்" போலவே தெஹல்காவில், மும்பாயில் புல்டோசர்களால், அப்புறப்படுத்தப்படும் சேரிகள் பற்றிய சேதியொன்று மாற்றுக் கருத்தினை முன்வைக்கிறது.

பார்ப்போம் எவ்வளவு தூரம் பைனாகுலர் போகுமென்று.

Apr 11, 2005

Text-Align:Justify - பிரச்சனை தீர்ந்துவிட்டதா?

நான் இந்த மின்மடலை வாசிக்கும்வரை இக்குறும்பதிவினை எழுதும் உத்தேசம் எதுவுமில்லை. ஆனால், ஒட்டுப் போட்டிருப்பதால், வந்த மின்மடலில் "Tamil unicode characters mess up on "text-align: justify; - Status: Resolved" என்று போட்டிருந்தது. பஃக் ரிப்போர்ட் பார்க்க பிரச்சனை தீர்ந்துவிட்டதா? விஷயஞானமுள்ளவர்கள் பதில் சொன்னால் தேவலை. நான் மண்டையை உடைத்துப் படிக்க வேண்டிய அவசியமில்லை.

Apr 10, 2005

23 பேரும், ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் சிலோன் பரோட்டாவும்

பிரகாஷ் வெற்றிகரமாக சொன்னதை செய்து காட்டிவிட்டார். சென்னை வலைப்பதிவர் சந்திப்பு என்னளவில் நிறைவாக சென்றது, நான் பேசலாம் என்று நினைத்து விஷயத்தைத் தவிர. பிரகாஷின் பதிவில் அவர் சொன்னதை தாண்டி, தனிப்பட்ட அளவில் நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நெடுநேரம் நான் நுட்பமும், டிஜிட்டல் ஜிகனாக்களையும் பேசியதைக் கேட்ட எஸ்.கேக்கு நன்றி. அடுத்த முறை சந்திப்பினை டீக்கடையிலோ, ஒயின் ஷாப்பிலோ வைத்தாலேயொழிய இதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்காது என்று கலாய்த்தற்கும், ஆதரவு அளித்து பேசிய பிரகாஷ், மீனாக்ஸ், ராம்கிக்கு நன்றிகள் (தனியாக பிளான் போடுவோம் ;-)) இராம.கி ஐயா அழகாக ஆழமாக பேசினார். தோழியர் பதிவின் உரலை என் வலைப்பதிவில் எப்போதோ சேர்த்திருந்தாலும், கொஞ்சம் சந்தேகமாக இருந்ததினால், உரத்து பேசவில்லை. ராமசந்திரன் உஷா, நான் உங்கள் பக்கம். தாமதமாக கை தூக்குவதற்கு மன்னிக்கவும்.

காசிக்கு ஏதேனும் ஒருவகையில் உதவவேண்டும் என்பதை ஒரு விவாதமாக முன்வைத்து எடுத்துச்சென்ற எஸ்.கேவுக்கும், உடனடியாக ஏதேனும் செய்யலாம் என்று உறுதியளித்த மாலனுக்கும் நன்றிகள். வராத நபர்களை கட்டம் கட்டாமல் பெருந்தன்மையாக மன்னித்து விட்ட பிரகாஷுக்கும், பக்கத்தில் சாதாரணமாய் பள்ளி மாணவன் போல் இருந்து, தன் கவிதைகளை தளத்தில் பார்வைக்கு வைக்கும் மணிகண்டனுக்கும், பொது பேச்சுக்கள் முடிந்து எம்.ஆர்.ராதா என்கிற ஆளுமையை சிலாகித்து பேசி, என்னை மீண்டும் "சுட்டாச்சு, சுட்டாச்சு" படிக்க தூண்டிய பத்ரிக்கும், காக்டெய்ல் பற்றிய பேச்சினை ஆரம்பித்து வைத்த சந்தோஷ் குருவுக்கும், ஒரம் கட்டி விரிவாக விவாதித்த சுரேஷுக்கும், எவ்வளவு கடுமையான விமர்சனங்களை ரஜினி மீது வைத்த போதும் அமைதியாய் பதில் சொன்ன ராம்கிக்கும், சொன்ன சொல்லை சரியாக ஞாபகம் வைத்து புத்தகங்களை கொடுத்த சந்திரனுக்கும், பொறுமையாக பதில் சொன்ன வெங்கடேஷுக்கும், பார்த்தும் பேச இயலாமல் போன நண்பர்களுக்கும் ஸ்பெஷல் சல்யூட்கள்.

இந்தியப் பொருளாதாரம் பற்றி விவாதிக்க நினைத்து அருணா சீனிவாசனிடம் பேச இயலாமல் போனதும், மாற்று சினிமா பற்றிய விவாதத்துக்கு சரியான களமில்லாமையும் தவிர நிறைவாகவே சென்றது.

இதற்காகவே, சொல்லி வைத்தாற்போல் 4.30 மணிக்கே கிரிக்கெட் மேட்சினை முடித்தருளிய இந்திய கிரிக்கெட் அணிக்கும், கங்குலிக்கும் தனிப்பட்ட நன்றிகள்.

சபை நாகரீகம் கருதி இங்கேயே முடிக்க நினைத்தாலும், நல்ல சிக்கன் பிரியாணியும் சிலோன் பரோட்டவும் வாங்கி தந்து இலக்கிய விவாதங்களையும், கல்லூரி கதைகளையும் பகிர்ந்து கொண்ட பிரகாஷுக்கு ஒரு சூப்பர் சலாமு. இதை இங்கே பதிய மறந்தால் நன்றியற்றவனாவேன். (அடுத்த முறை பஃப்-ல பார்ப்போம் தலைவரே)

பாலியல் தொழிலும், அங்கீகாரமும் - பகுதி 3- க்கான சில பூர்வாங்க விஷயங்களை சேகரித்துக் கொண்டிருப்பதால், அப்பதிவு கொஞ்சம் தாமதமாக வரும்.

காசி, உங்கள் சந்திப்பு இந்நேரம் நடந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். விமான நிலையத்திற்கு எத்தனை பேர்கள் வந்தார்கள் ?

Apr 5, 2005

பாலியல் தொழிலும், அங்கீகாரமும் - பகுதி 2

ஏன் பாலியல் தொழிலை அங்கீகாரம் செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்திற்கும் மேல். (UNAIDS Global Report 2004) இந்தியாவில் செல்போன்களுக்கு அடுத்து மிக அதிக மக்களை சென்றடைவது எய்ட்ஸ் நோய்தான் என்பது கொடுமையான, கேவலமான ஆனால் சத்தியமான நிஜம். இந்தியாவில் ஊசி வழியாகவோ, அல்லது ஒரின புணர்ச்சிவழியாகவோ, எய்ட்ஸ் பரவும் விதங்கள் மிகக் குறைவு. அதிகப்படியான எய்ட்ஸ் பரவுதல், ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உறவு கொள்ளுதலும், பாலியல் தொழிலாளியின் அறியாமையும் தான். இதில் இன்னொரு கொடுமையான விஷயம் முக்கால்வாசி பாலியல் தொழிலாளிக்கோ அல்லது வாடிக்கையாளனுக்கோ, தான் உறவு கொள்ளப் போகும் நபர் ஆரோக்கியமானவரா என்றெல்லாம் தெரியாது. இடம் கிடைத்ததா, பெண் கிடைத்தாளா, படு என்பது தான் இங்கே. என்னதான் புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்று கூவினாலும், மாற்றங்கள் பெரிதாய் இல்லை. இதற்கு காரணம், நாம் வாடிக்கையாளனை அவனின் இயல்பை மாற்ற முயல்கிறோம். இந்தியா போன்ற இன்னமும், படிப்பறிவு முழுமையாக இல்லாத நாட்டில் இது வேலைக்காகாது. எங்கே அவன் போகிறானோ அங்கேதான் அறிவுறுத்தவேண்டும் இந்தியாவில், பெரும்பான்மை லாரி ஒட்டுநர்கள், எய்ட்ஸ் நோய் பாதிப்பின் அருகாமையில் இருப்பது மிகப் பெரிய சோகம். அங்கீகாரம் செய்தால் மட்டும் படுக்காமல் இருக்கப் போவதில்லையா என்று கேட்பீர்கள். கண்டிப்பாக படுக்காமல் இருக்கப் போவதில்லை. ஆனால், பாலியல் தொழிலாளிக்கு விஷயங்கள் தெரியும். எப்படி ?

உதாரணத்திற்கு ஆட்டோ ஒட்டுபவர்களை எடுத்துக்கொள்வோம். அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில், இதனால், எல்லா ஆட்டோ ஒட்டுநர்களும், ஒட்டுநர் உரிமம், ஒட்டும் வண்டியின் ஆர்.சி புத்தகம், காப்பீடு ரசீது, வண்டி முதலாளியின் பெயர், முகவரி, ஆட்டோ பதியப்பட்ட நகர எல்லை என எல்லா விஷயங்களையும் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம், காவலர்களோ அல்லது வேறெவரோ தடுத்து நிறுத்தி கேட்பார்களேயானால், உரிய காகிதங்களை காட்டி விட்டு, எந்த நிர்பந்தங்களும் இல்லாமல் இருக்கலாம். ஒரு ஆட்டோ ஒட்டுநர் இழிவு படுத்தப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ அல்லது விபத்திற்குள்ளானாலோ, ஆட்டோ யூனியனும், சங்கமும், தேவையான உதவிகளை செய்வார்கள். முறைபடுத்தப்பட்ட தொழிலாக இருப்பதனால், வரி கட்டுகிறார்கள், அதனால், அவர்களின் கேள்விக்கு அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயமிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அவர்களால்,நேர்மையான, நியாயமான முறையில் தங்களின் தொழிலினை பாதிக்கும் விஷயங்களுக்கெதிராக, ஒன்றிணைந்து போராட இயலும். இந்த சுதந்திரம், உரிமை, பாதுகாப்பு உணர்வு, ஒரே தொழில் செய்வோரின் ஆதரவெனைத்தும் ஒரு தொழில் அங்கீகாரம் பெறுவதால் மட்டுமே வருவது.

இதுதான் இன்றைய பாலியல் தொழிலாளிக்கு கிடைக்காமல் இருப்பது. மருத்துவவசதிகள் கிடையாது. வாடிக்கையாளன் ஏமாற்றலாம். போலீஸ்காரர்களும், ரவுடிகளும் மாமூல் பிடுங்கிவிட்டு நிற்கதியாய் நடுதெருவில் விட்டுவிட்டு போகலாம். புரோக்கர்கள் கமிஷனடித்துவிட்டு ஒன்றுமே தாராமல் போகலாம். எது வேண்டுமானால் நடக்கலாம். ஆனால், யாராலும், முறைத்துக் கொண்டு ஆட்டோவிற்கு காசு கொடுக்காமல் போக முடியாது. ஒன்றிணைந்து விடுவார்கள். இதுதான் அங்கீகாரம் பெற்ற தொழிலுக்கும், இல்லாத தொழிலுக்கும் இருக்கும் வேறுபாடு.

அங்கீகாரம் தருகிறோம், பெரிதாய் என்ன நடந்து விடும்? நடக்கும், நிச்சயமாக நடக்கும்.

1. கொத்தடிமைகள் போல அடைத்து வைத்து வியாபாரம் நடத்தும் "மாமா பசங்களிடமிருந்தும்" , "யக்கா" களிடமிருந்தும் விடுதலை. தனக்கான வாடிக்கையாளரை தேர்ந்தெடுக்கவும், எத்தனை வாடிக்கையாளர்களோடு இருப்பதையும் நிர்ணயிக்க செய்யும் விடுதலை. அங்கீகாரம் பெற்ற தொழிலாய் இருக்கும்போது யாரும் கேவலமாக பார்க்க இயலாது. இது நடக்குமா என்றால், நடக்கும். 50 ஆண்டுகளுக்கு முன்னர், முடி திருத்தும் நாவிதர் தொழில் வேறுமாதிரியாக தான் பார்க்கப்பட்டது, இன்று நிலைமை வேறு. தேர்ந்தெடுத்த மருத்துவ ஆலோசனைகள் இவர்களுக்கு கிடைக்கும். தன்னார்வ நிறுவங்களோ, அல்லது இவர்களுக்கான கூட்டமைப்பின் மூலமாகவோ பாலியல் நோய்கள், எய்ட்ஸ் போன்றவைகள் பற்றிய தெரிதல் வரும். யாரும் உடல்நிலை சரியில்லாத போது, மாதவிலக்கின் போதோ உறவு கொள்ள கட்டாய படுத்த முடியாது. முக்கியமாக, அங்கீகாரம் பெறும் எந்த தொழிலுக்கும் இந்தியாவில் சில அடிப்படைகள் இருக்கின்றன. எப்படி ஓட்டு போடும் வயது, உரிமம் பெறும் வயது என்று நிர்ணயிக்கிறோமோ, அதைப் போல பாலியல் தொழிலாளியாக இயங்குவதற்கும் குறைந்த பட்ச வயதினை நிர்ணயம் செய்து விடலாம். இதன் மூலம், சிறுவர், சிறுமியர்களை பாலியல் தொழில் பெற்றோர்களை நினைத்தாலும் உட்புகுத்த இயலாது. ஏற்கனவே இந்தியாவில் இது கிரிமினல் குற்றம். பாலியல் தொழிலினை அங்கீகரிப்பதின் மூலம், இதனை இன்னமும் கடுமையாக்கலாம்.

2. இந்தியாவில் பாலியல் தொழிலுக்கான மிக முக்கியமான மனிதர்கள் - இடைத்தரகர்கள் (pimps), குண்டர்கள், ரவுடிகள், போலீஸ்காரர்கள், கொஞ்சம் பச்சையாக சொன்னால், எல்லா கட்சிகளிலும் இருக்கும் மகளிர் அணித் தலைவிகள். அரசியல் செல்வாக்கினாலும், அராஜகத்தினாலும், எத்தனையோ பெண்களை முதலீடாக வைத்து, நோகாமல் சம்பாதிப்பவர்கள் இவர்கள். இவர்களின் ஒட்டுமொத்த செல்வாக்கும் ஒரே அடியில் அழிந்து விடும். அங்கீகரிக்கப் பட்ட பாலியல் நிலையங்கள் நடத்தினால், அதற்கு வரியும், சம்பாதிக்கும் பணத்திற்கான சான்றும் காட்டுமாறு சட்டமியற்றலாம். இதனைத் தாண்டி, சத்துணவுக் கூட ஆயாக்களைப் போல், இவர்களையும் ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் பதிவு செய்ய சொல்லலாம். இவர்களின் அங்கீகாரம் சொல்லும் உரிமத்தினை தர வேண்டும்,இதன்மூலம், அத்துமீறல்களும், தேவையற்ற பயமுறுத்தல்களையும் (இங்கே போலீஸ்காரர்களும், ரவுடிகளும் கில்லாடிகள். பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டால், சில பாலியல் தொழிலாளிகளையே, நீ அங்கீகாரம் பெறவில்லை என்று சொல்லி காசு கறப்பார்கள் அல்லது இலவசமாக படுக்கைக்கு அழைப்பார்கள். ) களைய முடியும்.

3. மாறி வரும் உலகிற்கேற்ப, நமது உணவுமுறைகளிலும் மாற்றங்கள் வந்துள்ளது. இதனால், என் முந்தைய பதிவில் கார்த்திக் சொல்லியது போல், "வயதுக்கு வரும்" பெண்ணின் வயது என்பது குறைந்து கொண்டே வருகிறது. முன்பு 14-17 வயதுகளில் முழுமையான பெண்ணாக வளரும் நிலையை அடைந்த பெண்கள், இன்று 11-13 வயதுகளிலேயே வளர்ச்சி பெற்று விடுகிறார்கள். அவர்களின் மாதவிலக்கு தொடங்கி விடுகிறது. இதே நிலை தான் ஆண் சிறுவர்களுக்கும். 13 வயதிலிருந்து குறைந்த பட்சம் 24-25 வயது வரையாவது தனியாக இருக்க வேண்டிய கட்டாயங்கள், சமூக சூழல்கள் உள்ள நாடிது. மேலை நாடுகள் போல பெற்றோரே துரத்தி விடும் நாடு கிடையாது. அவர்களின் பாலியல் உணர்வுகள் கட்டாயமாக கவனிக்கப்பட்டு, அதற்கான மதிப்பினை அளிக்க வேண்டும். ஊடகங்கள் இதற்கு மிக முக்கியமான காரணங்கள். என் நண்பர் ஜோக்காக சொல்லும் ஆனால் மிக தேர்ந்த வாசகம், "Indian songs are the height of porn. The best sex you can ever have with dress" அது தான் உண்மையும் கூட. வடிகால் இல்லாத காரணத்தினால் தான் செல் பேசிகளிலும், மூன்றாம் தர கருக்கலைப்பு கிளினிக்களிலும் பள்ளிச் சீருடையோடு நிறைய பெண்களை பார்க்க முடிகிறது. இதற்கு காரணம், முறையான பாலியல் வடிகால் இல்லாதது. பாலியல் தொழிலாளிகளை நாடு தழுவிய குழுக்களின் மூலமும், அரசாங்கமும், பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கற்று கொடுக்க வேண்டும். கேட்க, கொஞ்சம் ஒவராக தெரிந்தாலும், மாத்ரு பூதங்களிடமும் போவதற்கு பதிலாக, பாலியல் தொழிலாளியே உடலின் சூட்சுமத்தினை கற்றுக் கொடுத்து விட்டால், நிலைமை மாறும் சாத்தியக் கூறுகளுண்டு. அதிகபட்சமாக இன்றைக்கு தெரிந்தாலும், இதன் நீட்சிதானே, மசாஜ் செய்வதும், ஆயுர்வேத குளியலும். உடலை சமச்சீராக்கும் விஷயமல்லவா அது. இதைத் தாண்டி, பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகள் தங்களுக்குள் உறவு கொண்டால் என்ன செய்வது என்று கேட்டால், என்னிடத்தில் பதிலில்லை. முறையான பாலியல் கல்வியற்ற சமூகத்தில் எல்லாம் சாத்தியமே. மேலும், 2010-ல் இந்தியா உலகின் மிக இளமையான நாடாக இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையில் 45% மேற்பட்டவர்கள் 18-40 வயதுக்குட்பட்டவர்களாய் இருப்பார்கள். இவர்களின் பாலியல் தேவைகளையும், இச்சைகளையும் எவ்வாறு கையாளப் போகிறோம் ?

4. மிக முக்கியமான விஷயமாய், பாலியல் தொழிலின் அங்கீகாரத்தில் நான் பார்ப்பது, குழந்தை பாலியல் தொழிலாளிகளை நீக்குவதுதான். அங்கீகாரம் தருவதின் மூலம், யார் வேண்டுமானாலும், தங்களை விளம்பரபடுத்திக் கொண்டு தொழில் செய்ய முடியும். அவ்வாறு செய்யும்போதும், அதற்கான வரைமுறைகளின் படி வாடிக்கையாளரை அணுகும் போதும், குழந்தை பாலியல் தொழிலாளிகள் இருக்க முடியாது. நான் படித்த இணைய தளங்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், கண்களில் ரத்தம் வருகிறது. கிரை அமைப்பின் புள்ளிவிவரங்களின் படி, சற்றேறக்குறைய 20 லட்சம் குழந்தை பாலியல் தொழிலாளிகளும், (5-15 வயதிற்குள்) 33 லட்சம் குழந்தை பாலியல் தொழிலாளிகள் (15-18 வயதிற்குள்) இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு வருடத்தில் இந்த தொழிலில் தள்ளப்படும் குழந்தை தொழிலாளிகளின் எண்ணிக்கை, 5 லட்சத்திற்கும் மேல். 71% பேர்கள் இவற்றில் படிப்பறிவற்றவர்கள். இந்த தொகை இந்தியாவின் 40% பாலியல் தொழிலாளிகளின் மக்கள்தொகை. என்ன சொல்வீர்கள் இதற்கு ? வெட்கமாகவும், பயங்கரமாகவும் இருக்கிறது, இந்தியாவில் பெண்/ஆண் குழந்தையாக, கிராமத்தில் ஏழையாய் பிறப்பதற்கு. இதையெல்லாம் கவனிக்க நேரமில்லாமல் நாம் F-16 வாங்கவும், இந்திய-பாகிஸ்தான் ஒரு நாள் தொடரை இந்தியா ஜெயிக்குமா என்கிற விவாதத்திலும் இருக்கிறோம். இந்த குழந்தை பாலியல் தொழிலாளிகள் அனைவரும் மாமூல் கொடுக்கப்பட்டும், ரவுடிகளின் துணையோடும் பெருத்துக் கொண்டு வருகிறார்கள். பாலியல் தொழிலை அங்கீகரிப்பதின் மூலம், இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளியினை வைக்க முடியும். மாறுதல்கள் உடனே நடக்காது என்று தெரிந்தாலும், இப்போது தொடங்கினாலேயொழிய முற்றிலுமான மாறுதல் சாத்தியமாகாது என்று தோன்றுகிறது. குறைந்த பட்ச வயதினையும், பாலியல் தொழிலாளிக்கான உரிமத்தினையும் பெறாமல் யாரும் தொழில் செய்ய முடியாது என்கிற நிலை வரும்போது, அரசின் கடுமையாலும், தொழில் போட்டிகளாலும் குழந்தை தொழிலாளிகள் கட்டுப்படுத்தப் படுவார்கள். இதை சொல்லும் இதே தருணத்திலும், சாராய கடைகள் இருக்கும் போது, கள்ளச்சாராயம் ஒடுவது போல், முற்றிலுமாக, இந்த பரந்த நிலமுள்ள இந்தியாவில், குழந்தை பாலியல் பலியாடுகளை தடுக்க முடியாது. ஆனால், குறைக்க முடியும்.

ஒரே அறையில் கொத்தடிமையாய் இருப்பதினால், சுதந்திரமும், வெளியுலகமும் தெரிய வாய்ப்பில்லை.இதயெல்லாம் தாண்டி, பாலியல் தொழிலினை அங்கீகாரம் செய்வதின் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தின் மூலம், இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகள், வாழ்வதற்கான அடிப்படை சம்பாதித்யத்தை சம்பாதித்துக் கொண்டு, அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தினை பற்றி சிந்திக்க முடியும்.நோக்க முடியும். இப்போதிருக்கும் சூழ்நிலையில் அது சாத்தியமாகாது. வெளியுலக தொடர்பினால், வேறு தொழில்கள் கற்கலாம். வாழ்வின் புதிய பரிமாணத்தினை துவங்க முடியும். என்னதான் அங்கீகாரம் கொடுத்தாலும், அவர்கள் வாழ்நாள் முழுக்க பாலியல் தொழிலாளாய் இருக்க சாத்தியங்களில்லை. சாத்தியப் படவும் வேண்டாத சூழல் அமைய வேண்டும்.

இன்னமும் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த பதிவு புரிந்துணர்வையும், அங்கீகாரத்தின் பின்னுள்ள நியாயத்தையும் எடுத்துரைப்பதற்குமே. முதல் பதிவு, பாலியல் தொழிலின் சூழலையும், இந்த பதிவு, பாலியல் தொழிலின் அங்கீகாரத்தின் பயன்களையும், மூன்றாம் பதிவு, அங்கீகாரத்தின் அவசியத்தையும் சொல்லும்.

இந்த பதிவுகளை எழுதுவதற்கு, துணை புரிந்த நண்பர்களையும், தகவலுக்கு உதவிய தளங்களைப் பற்றியும் மொத்தமாய் மூன்றாம் பதிவின் இறுதியில் பட்டியலிடுகிறேன்.

Apr 3, 2005

பாலியல் தொழிலும் அங்கீகாரமும் - பகுதி 1

"ஷக்தி கபூரிடம் சான்ஸ் கேட்க சென்ற ஒரு நிருபரை படுக்கைக்கு அழைத்தார்"
"டெல்லி பள்ளியில் ஒரு மாணவனும் மாணவியும் உறவு கொண்டதை, செல்பேசியில் படம்பிடித்து பரப்பியுள்ளார்கள்"
"தலைமையாசிரியர் தன் பள்ளி மாணவியை கற்பழித்தார்"
"சென்னையில் வேனில் விபச்சாரம் செய்த அழகிகள் கைது"
"நடிகை புவனேஸ்வரியின் மீதான விபச்சார வழக்கு தள்ளுபடி"
"மைத்துனியோடு இருந்த கணவரை வெட்டிக் கொன்றாள் பெண்"
"9வது படிக்கும் மாணவி திருமணம் செய்து கொண்டார்"
செய்தி தாள்களில் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். பொருளாதாரமில்லாமல் இருக்கலாம். ஆனால் மேற்கண்ட மாதிரியான செய்திகள் இல்லாமல் இருக்காது. இவையனைத்திலும் அடிநாதமாக விளங்குவது அடக்கி வைக்கப்பட்ட, கட்டவிழ்க்கப்பட்ட பாலியல் இச்சைகள், வன்முறைகள்.

ஈவ் டீஸிங் அத்துமீறல்களால் சரிகா ஷா என்கிற மாணவி உயிரிழந்ததும், அதற்கு பிறகு ஊடகங்கள் தாவி குதித்ததும் தெரிந்ததே. அம்மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால், ஆதாரமான விஷயத்தை நாம் கண்டுகொள்ளவேயில்லை. அவர்களை ஒரு பெண்ணினை சாகுமளவிற்கு கிண்டல் செய்ய தூண்டியதெது ? இதே ஊடகங்கள் தான். தமிழ் சினிமா கல்லூரி கதாநாயகன்கள் அனைவருமே பெண்ணினை கிண்டல் செய்து ஒரு பாடல் பாடாமல் இருந்ததில்லை. பெண்ணின் இருப்பினை கீழ்த்தரப் படுத்தும் உச்ச நட்சத்திரங்களின் நிலை இன்னொரு கதை. இதையும் தாண்டி, நாம் புரிந்து கொள்ள தவறிய மிக முக்கியமான விஷயம் பதின்ம வயதில் ஏற்படும் பாலியல் இச்சைகள், மாற்றங்கள். இதற்கு முறையான, தெளிவான ஒரு கல்விமுறை இன்னமும் இல்லை. விலங்குகளின், பூச்சிகளின் இனப்பெருக்கத்தை படித்து, அறிவியல் தேர்வில் மதிப்பெண் வாங்கும் நம் மாணவர்களுக்கு தத்தம் உடல் சார்ந்த மாற்றங்கள், இச்சைகள், அதற்கான வடிகால்கள் பற்றிய தெரிதல் இல்லை. உடனே நான், வயதுக்கு வந்த எல்லா ஆண்/பெண்களும் உறவு கொள்ளவேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால், வடிகால் இல்லாத, பாலியல் தெளிவு இல்லாத ஒரு சமூகத்தில் எவ்வளவு போதித்தாலும் மாற்றங்கள் வாராது என்பது தான் அடிப்படை.

பாலியல் சார்ந்த பிரச்சனைகள் எல்லோருக்குமுண்டு. திருவல்லிக்கேணி அல்லது வடசென்னை ஒண்டுக்குடித்தனங்களை நினைத்துப் பாருங்கள். ஒரே வீட்டில், வெவ்வேறு போர்ஷன்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களிருக்கும். அவர்களுக்கான அந்தரங்க தனிமை எங்கு கிடைக்கும் ? அவர்களின் வீடு தவிர வேறெந்த இடங்களும் பாதுகாப்பானவையல்ல. எல்லா லாட்ஜ்களும், தனியறைகளும், ஹோட்டல்களும் போலீஸ் சோதனைக்கு உட்பட்ட்வையே. தாலியிருந்தாலும், சரியான சாட்சிகள் வரும்வரை போலீஸ் நிலையத்தில் இருக்கவேண்டிய கட்டாயம். இந்த நாட்டில், என் பாலியல் இச்சையினை நிர்ணயிப்பவை போலிஸூம் அரசும்தான். இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு பாலியல் சார்ந்த ஒழுங்குமுறையை எதிர்பார்க்க முடியும். அரசே, நீங்களும் நானும் அடல்ட்ரி செய்யவோ, வேலைக்காரியினை புணரவோ தூண்டுகின்றன. அடக்கி வைக்கப்படும் வன்முறையும், பாலியல் உணர்வும் வேறெப்படி வெளியேறும் என்று நினைக்கிறீர்கள் ? இவர்களை நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால், இவ்வடக்குமுறையினால் தான் நிறைய பாலியல் வன்புணர்வுகளும், வன்முறைகளும் நடக்கின்றன.

பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், அவர்களை விலைமகளாக்க பார்க்கலாமா என்கிற விவாதங்கள் தனி. ஆனால், இன்றைக்கு நடக்கும் நிஜங்களென்ன. பீகாரில் பெற்றோர்க்கு தெரிந்தே பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். பயம் தெளியவேண்டும் என்பதற்காகவும், முதல் உடலுறவில் பெண் மிரண்டு விடக் கூடாது என்பதற்கும், தகப்பனை பெற்ற பெண்ணை தாயின் அனுமதியுடன் புணர்வது நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இன்னமும், கலாச்சார ஜல்லியடித்துக் கொண்டிருப்பது இன்னமும் நிறைய பெண்களின் நிம்மதியை குலைக்குமேயொழிய எந்தளவிற்கும் பெரிதாய் பயன் தராது. வருமானத்திற்கு கையேந்திக் கொண்டிருக்கும் பெண்ணிடத்தில் தீர்க்க வேண்டியது வயிற்றுப் பசியையும், நிரந்தர வருமானத்திற்கான வழியையும். பட்டினியாய் கிடந்தாலேயொழிய சாப்பாட்டின் அருமையும், பசியின் கொடுமையும் தெரியாது. ஒழுக்கங்கள், கலாச்சார விதிகள் போன்ற ஜிகினாக்கள் அனைத்தும் வயிற்றுக்கு பிறகு தான். மனிதன் உயிரோடு இருந்தால் தானே இதெல்லாம். வறுமையால், பட்டினியால், ஒழுக்கமாய் வாழ்ந்து செத்து போனால், இந்தியாவில் "பாரத் ரத்னா" தரப்போவதில்லை. உயிர் வாழ்தல் முதலில் மிக அவசியம். பிறகு பார்க்கலாம், ஒழுக்கமாய் இருப்பதைப் பற்றி.

சென்னையில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான விலை மகளிர், ஆந்திராவிலிருந்து வந்தவர்கள். சென்னையிலிருந்து திருப்பதி போகும் வழியில் இருக்கும் சத்யவேடு, சிலுக்களூர்பேட்டைகளில் இருக்கும் முக்கால்வாசி பெண்களின் தொழில் இதுதான். சாமி கும்பிட்டு வரும் நம்மாட்கள், உடனே, தம் உடலுக்கு அங்கே படையல் போட்டு விடுவார்கள். இந்த பெண்களுக்கு கிடைக்கும் சம்பளம் கேட்டீர்களேயானால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள் - 100 ரூபாய்க்கும் குறைவாக தான். வறுமை, ஆதரவற்ற தன்மை, பாதுகாப்பின்மை, இதைத் தாண்டி பாலியல் நோய் வந்து செத்து போவார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல. எல்லை தாண்டி வரும் நேபாள பெண்களின் நிலையும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும், தென் மாநிலத்திங்களிருக்கும் வானைப் பார்த்துக் கொண்டிருக்கும் விவசாய நிலங்களிருந்தும் வருபவர்களில் பெரும்பாலோனோர் இத்தொழிலில் முடக்கப்படுகிறார்கள். இன்னமும், காமத்திப்புத்ராவிலும், சோனாகஞ்சியிலும் ரெய்டுகள் நடக்கும், சம்பாதித்த பணம் ஏதேனும் போலீஸ்காரருக்கோ, மாமா வேலைப் பார்ப்பவர்களுக்கோ, அல்லது விடுதியை நடத்தும் கிழ முதலாளிகளும் போய்விடும். உடலை விற்று, பலருடன் படுப்பவளுக்கு கிடைப்பது 3 வேளை சோறும், இலவசமாக பால்வினை நோய்களும், எய்ட்ஸூம். அணுகுண்டு வெடித்து, ராணுவ செலவீனத்தினை அதிகரித்து கொண்டு "பெரியண்ணவாய்" காட்டிக் கொள்ள முயற்சிக்கும் இந்திய அரசுக்கு, தன்னை விற்கும் இந்த பெண்கள் குற்றவாளிகள். கேவலமான பிறவிகள். சமூகவிரோதிகள். வாழ்க இந்திய ஜனநாயகம்!

பெண்களை தெய்வமாக பார்க்கும் தேசத்தில் தான் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நாட்டில் தான் உண்மையில் 72% பெண்கள் தங்கள் நெருங்கிய உறவினாரால் தங்களுடைய வாழ்நாளுக்குள் ஒருமுறை பாலியல் பாலத்காரம் செய்ய படுவதாக ஆரய்ச்சிகள் கூறுகின்றன." பெண்களை கற்புமிக்கவளாக சித்தரிக்கும் நாட்டில்தான், பாலிவுட் கதாநாயகிகள், கர்ச்சீப்பினை ஆடையாக உடுத்திக் கொண்டு பேட்டிக் கொடுக்கிறார்கள். போலீஸ்காரரிலிருந்து(ஜெயலட்சுமி), மடாதிபதி (அனுராதா ரமணன்) குஞ்சாலி குட்டி (நன்றி: சுதர்சன்) வரை எல்லோரும் பெண்களை "தெய்வமாய்" பார்க்கிறார்கள். உடல் இச்சை என்பது மனித வாழ்வின் அடிப்படை. அதனை சட்டபுத்தகத்தில் சில பக்கங்களில் அடக்க நினைப்பது சிறுபிள்ளைத்தனம். "ஒருவனுக்கு ஒருத்தி" என்று ராமன் வாழ்ந்த நாடு என்று யாராவது சொவாரேயானால், கொஞ்சம் காதைக் கொடுங்கள், அவர் தந்தைக்கு 60,000 மனைவிகள் என்று வரி வருகிறது. கொஞ்சம் கொச்சையாய் இருந்தாலும், எப்படி இவர் இவ்வளவு மனைவியரை உடல், உடமை, மனரீதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியும். தமிழனின் பரம்பரையில் அதெல்லாம் கிடையாது என்று சொல்ல வருகீறிர்களா ... பிடியுங்கள், தமிழ் கடவுள் முருகனுக்கு ஒன்றுக்கு இரண்டு மனைவிகள். அப்புறம் இந்த இந்திரன் என்றொரு கதாபாத்திரமிருக்கிறது, அவர் பாதி நாட்கள், பிறன் மனை பார்த்து சாபத்திலேயே வாழ்வை கழித்தவர். புராண, இதிகாசத்திலிருந்து உதாரணங்கள் காட்டுவதை முதலில் நிறுத்துவோம். எனக்கென்னவோ, அதெல்லாம், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் வேலைகள்.

விபச்சாரம் அல்லது பாலியல் தொழில் என்பது இந்தியாவில் ஏன் உலகிற்கு ஒன்றும் புதிதில்லை. உலகின் புராதன தொழில் என்றழைக்கப்படும் இதனை நெறிப்படுத்துவதில் தவறொன்றிருக்க முடியாது. நான் பார்த்த இணைய தள புள்ளி விவரங்களிலிருந்து இந்தியாவில் 2 மில்லியன் பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்றும், இதில் 40% பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் சொல்கிறார்கள் (ஜூலை 2001). ஆனால், இது எனக்கென்னமோ மிகக் குறைவான எண்ணிக்கையாக இருக்கிறது. நாமக்கல்லிலும், மதுரையிலும் மட்டுமே 50,000 மேலான பாலியல் தொழிலாளிகள் இருக்கக்கூடும் என்பது இவ்விரண்டு ஊர்களின் எய்ட்ஸ் மக்கள் தொகையிலிருந்தே தெரியும். இரண்டு பக்கங்களிருந்து பார்த்தாலும் (பாலியல் தொழிலாளி, வாடிக்கையாளர்) பாலியல் தொழிலை தொழிலாக அங்கீகரிப்பதால் பலன்கள்தான் அதிகம். கலாச்சார காவலர்கள் உடன டியாக கலாச்சார சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறினால், என் பதில் குடிப்பது கூடத்தான் உடலுக்கு கெடுதி, ஏன் அரசாங்கமே ஒயின் ஷாப்புகளை நடத்துகிறது (ஆனாலும், குடிப்பதினால் மனிதன் கெட்டு போவான் என்பது இன்னொரு இட்டுக்கட்டிய பொய்) இதில் சட்டசபையில் புரட்சிதலைவி நடத்தி, மிக அதிகமான வருமானம் ஈட்டிய துறை என்கிற பெயர் வேறு. இதனால், நான் அரசை "மாமா வேலை" பார்க்கச் சொல்லவில்லை. அரசாங்கம், என் குறியினை வேவு பார்க்கும் வேலையினை விட்டு மற்ற உருப்படியான வேலைகளை செய்யலாம். பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாம். அங்கீகரிப்பதினால், போலீஸாரின் வேலையும் (மாமூலும்) குறையும். மற்ற உருப்படியான சமூக மேன்மைக்கான விஷயங்களை எதிர்கொள்ளலாம்.

பாலியல் தொழிலாளி என்றவுடன் பெண்கள் மட்டும்தான் என்றில்லை. நான் பார்த்த சில மாதங்களுக்கு முந்திய ஸ்டார் ப்ளஸின் செய்தியில் பணக்கார பெண்களுக்கு, "சேவை" செய்வதற்காக செய்யும் ஆண்களைப் பற்றிய ஒரு குறிப்பினைக் காட்டினார்கள். நம்பாதவர்கள், சுட்டியினை படித்து விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மும்பையில் மட்டும் சுமார் 50,000 ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக இந்த சுட்டி சொல்லுகின்றது. அங்கீகாரம், பெண் பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல. ஜிகாலோ என்றழைக்கப்படும் ஆண் பாலியல் தொழிலாளிகளுக்கும் சேர்த்துதான்.

பாலியல் தொழிலை அங்கீகரிப்பதால் விளையும் நன்மைகள், விளைவுகள், எதிர்வினைகள், இந்தியாவில் பாலியல் தொழிலின் பாதிப்பும், எய்ட்ஸின் பாதிப்புகள் அடுத்தடுத்த பதிவுகளில்.

(மூன்று பகுதிகளாக விரியும் தொடர் பதிவில் முதல் பகுதி இது)

நன்றி (சரவணன், பாலாஜி, பத்மா அரவிந்த், தங்கமணி, பாலாஜி-பாரி)

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]