Apr 13, 2005

பைனாகுலர் - 10343

ஜூராசிக் பார்க் படமா? இல்லை பாடமா? பாடமாக கூட இருக்கலாம். நேஷ்னல் ஜியோகிரபிக் தளத்தில் படித்தது. ஜப்பானிய விஞ்ஞானிகள், பொஸைய்லிருந்து மெமோத்தின் உயிரணுவை எடுத்து, இப்போதிருக்கும் ஒரு யானைக்குள் செலுத்தி மீண்டும் மெமோத்தை உருவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். அறிவியலில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? - பார்க்க

1 ரூபாய் சம்பளம் வாங்குவீர்களா? இதைப் போலதான் ஒரு அம்மையார் ஒரே ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, தமிழகத்தின் சொத்துக்களை இந்தியா மற்றும் உலகமெங்கும் விதைத்து வைத்திருக்கிறார். ஆனால், கூகிளின் தலைமை இயக்குநர்கள் (லாரி பேஜ் & செர்ஜி ப்ரின்) இருவரும் $1-ரை சம்பளமாக பெற்றுக் கொள்கிறார்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மில்லியன், பில்லியன் கணக்கில் சம்பளம் வாங்கும்போது, இது ஆச்சரியமாக தான் இருக்கிறது. சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவார்கள் என்கிறீர்களா, கூகிளின் பங்கு மூலம் $7 பில்லியன் எப்போதும் இருக்கிறது இருவருக்கும். ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள்) கூட ஆப்பிள் கஷ்டகாலத்திலிருக்கும் போது $1தான் சம்பளமாக பெற்றுக் கொண்டாராம். சுவாரசியமாக இருக்கிறது - பார்க்க

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அங்கத்தின் சார்பாக உலகளாவிய புகைப்பட போட்டியொன்று நடைபெற்றது. இதில் ஒரு இந்தியர் இந்தியாவில் மான்களின் நிலையைப் பற்றி எடுத்திருக்கும் புகைப்படம் முதல் பரிசு பெற்றிருக்கிறது. அதை விட இரண்டாம் பரிசும், ஆறுதல் பரிசுகளில் உள்ளடங்கிய சில புகைப்படங்களும் மனதை பிசைகின்றன - பார்க்க

கொஞ்சம் பமீலா ஆண்டர்சன் சமாசாரம். பெண்கள் செயற்கை மார்பகங்கள் (சிலிக்கான்) பொருத்தலாமா, அதன் பின்விளைவுகள், உண்டாகும் பாதிப்புகள் போன்றவை குறித்து பெரிய விவாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் நடந்துவருகிறது. ஒருபுறம் பொருத்துவதால் உடல் உபாதைகள் (மார்பக புற்று நோய்) வருவதால் தடை செய்ய வேண்டுமென்றும், இன்னொருபுறம் போதிய ஆலோசனைக்கு பின், அதனை பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தினை பெண்களிடமே விட்டு விடவேண்டும், என்று கூட்டம் பிரிந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சமூக, கலாச்சார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது - பார்க்க

தமிழ் புதுவருட களிப்பிலிருக்கும் மக்களுக்கு, இன்றைய தேதியின் வரலாற்று முக்கியத்துவம் தெரியுமா ? (13, ஏப்ரல்) இன்றைக்கு சரியாக 86 வருடங்களுக்கு முன்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. எல்லா எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே படித்து முடித்திருந்தாலும், இந்த படுகொலையினை முழுவதுமாக அறிந்து, ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களோடு பேசி, இரண்டு புத்தகங்களாக (சராசரியாக 780 பக்கங்கள்) பதித்தவர் சந்தானம் என்கிற ஒரு தமிழன். இது நடந்தது 1920இல். மறைக்கப்பட்டிருந்த வரலாறு இப்போது வெளிவந்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் தகவல்கள் - பார்க்க

"தெருக்கூத்து வடிவத்திலிருந்து வளர்ந்த ஒரு நாடகக் கலை. தஞ்சை மாவட்டத்தில் விளங்கும் இக்கூத்தில் நரசிம்ம அவதாரம் தவிர்த்த பிற கதாபாத்திரங்கள் இரட்டை இரட்டையாக இடம் பெறுவது இக்கூத்தில் உள்ள சிறப்புப் பாணியாகும்" - இது நார்த்தேவன் குடிகாடு கூத்து என்கிற தமிழகத்தின் மரபுக் கலைவடிவங்களில் ஒன்று. இதைப் போல இரண்டு பேர் ஆட்டம், மூணு பேர் ஆட்டம், செம்பட்டி சந்தை காமிக், கல்யாண காமிக், சாமியாட்டம், டப்பாத் தெம்மாங்கு, சுத்து மற்றும் எதிர்த்தெம்மாங்கு, ஒயிலாட்டம், ராசாராணியாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் என்று தமிழ் மண்ணின் பாரம்பரிய கலைகளை விரிவாக விளக்குகிற புத்தகத்தினை புக்லேண்ட்ஸில் பார்க்க நேரிட்டது. பேரா. கரு.அழ. குணசேகரன் (தமிழ் சினிமாவில் வீணடிக்கப்பட்ட மாற்றுத்தள நபர்களிலொருவர்) "தமிழ் மண்ணின் மரபுக்கலைகள்" என்ற இந்த புத்தகத்தை சுவையாகவும், விரிவாகவும் எழுதியிருக்கிறார். இது ஒரு மித்ர வெளியீடு.

Comments:
//இந்த படுகொலையினை முழுவதுமாக அறிந்து, ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களோடு பேசி, இரண்டு புத்தகங்களாக (சராசரியாக 780 பக்கங்கள்) பதித்தவர் சந்தானம் என்கிற ஒரு தமிழன். இது நடந்தது 1920இல். மறைக்கப்பட்டிருந்த வரலாறு இப்போது வெளிவந்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் தகவல்கள் - பார்க்க//

நன்றி நாராயண். பல புதிய செய்திகள். புகைப்படத்தில் அப்படியே மணிசங்கர அய்ய்யரின் ஜாடை .... எங்கருந்துய்யா புடிக்கிறே... இந்த மாதிரி மேட்டரை எல்லாம்? ....
 
சார்.. நீங்க கூகிள் அபிமானி என்று தெரியும் ;-) இருந்தாலும் உங்களுக்காக F____dGoogle தளத்தில் இருந்து: the total figure of stock sold by those three is now over 815 million dollars!

பமீலாவின் (ப்ராக்ஸி!) வலைப்பதிவு இங்கே படிக்கலாம்: Stacked
 
பாலா, 'F____dGoogle' தளம் பார்த்தேன். மெனக்கெட்டு தகவல்கள் தேடி கூகிளை தாக்கு தாக்கென்று தாக்கியிருகிறார்கள். கூகிளுக்கு இன்னொரு முகம் இருக்கும் என நான் கற்பனை கூட செய்ததில்லை. ஹ்ம்ம்...
 
யோவ், என்ன ஐயா எழுதுரீர்? உள்ள வந்தா 1/2 மணி நேரத்துக்கு மேல ஆகுது வெளிய போக? அப்புறம் அலுவலக வேலைய எப்ப பாக்குறது?

அண்ணாச்சி இப்படி ஒரு பதிவு எழுதனும்-னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்படி எழுதியிருந்தாலும் இத்தனை தகவல்களை திரட்ட என்னால் முடியாது. நல்ல தகவல்கள் மற்றும் சுட்டுகள். தொடர்க.

உள்ள வரவங்களுக்கு தோதா மேல ஒரு டிஸ்கிளைம்பர் கொடுத்துருங்க. உள்ள வந்தா வெளிய போக நேரமாகும்-னு.
 
பாலா, நான் கூகிள் அபிமானிதான். ஆனால், ரசிகனில்லை.நிறைகுறைகளோடுதான் கூகிளை அணுகுகிறேன். F_____dGoogle பார்த்தேன், கூகிளை நிந்திக்க வேண்டுமென்றே எழுதப்படும் தளமாக தெரிகிறது. $1 என்பது சம்பளம் தான். மற்றபடி எக்ஸிகியுடிவ் வசதிகள், விஷயங்கள் எல்லாமுண்டு. கூகிளின் ஐபிஒ-வின் போது துணிச்சலாக சில விஷயங்களை சொல்லியிருப்பார்கள். இன்றளவும், கூகிள்தளம் இலவச தளமாகதான் இருக்கிறது. ஐபிஒ போனாலே, காசாக மாறும் தளங்களில் கூகிள் மிகப்பெரிய வித்தியாசம். இன்றளவும், தேடல் பொறியில் இலவசமான லிஸ்டிங்தான் பெருமளவு இடத்தை ஆக்ரமித்திருக்கும். ஒரு சமூகதேடல் பொறியாக கூகிளை வடிவமைத்து இன்றளவும், அதை தொடர்ந்து செய்து கொண்டுவருகிறார்கள். இதைத் தாண்டி, எனக்கும் கூகிளின் மீது விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், கூகிள் ஒரு சமூக நிறுவனமாக தான் தெரிகிறது. ஆயிரக்கணக்கான டாலர்கள் டிஜிட்டல் வெளியில் விளம்பரத்திற்காக தேவைப்படும்போது, வெறும் $5-ரில் இணையவெளியில் விளம்பரம்செய்ய சிறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளித்தவர்கள் கூகிள். (நடைமுறை சிக்கல்கள் ஒருபுறமிருக்கட்டும்) ஆனாலும், நன்றாகதான் எழுதியிருக்கிறார்கள். இது மைக்ரோசாப்ட்டின் வலைப்பதிவாக கூட இருக்கலாம் ;-)
 
//"தெருக்கூத்து வடிவத்திலிருந்து வளர்ந்த ஒரு நாடகக் கலை. தஞ்சை மாவட்டத்தில் விளங்கும் இக்கூத்தில் நரசிம்ம அவதாரம் தவிர்த்த பிற கதாபாத்திரங்கள் இரட்டை இரட்டையாக இடம் பெறுவது இக்கூத்தில் உள்ள சிறப்புப் பாணியாகும்"//
சுவாரஸ்யமான விஷயம். புத்தகத்தை முழுதும் படித்திருந்தால் ஒரு சிறு அறிமுகப் பதிவாக எழுதமுயலுங்களேன்...
பைனாகுலர் நன்றாகவே பார்த்துக்கொண்டிருக்கிறது... தொடருங்கள்!
 
Mondy, Will post once I finish the book sometime next week. Get you a detailed, informative look inside that.
 
Nanri Narain
-balaji
 
படங்கள் அருமை.
சந்தானம் என்பவரைப் பற்றிய செய்தி கேட்டறியாத ஒன்று. அவரது எழுதிய புத்தகங்கள் பதிப்பிலோ விற்பனையிலோ இருப்பதுபற்றித் தெரிந்தால் அச்செய்தியையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கூத்து பற்றிய நூற் செய்திக்கும் நன்றி!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]