Apr 30, 2005

சென்ட்ரல் தொ ப்ரெசில் (1998)

ஹீரோவுக்கு வயது 9. ஹீரோயினுக்கு வயது 50. காதல் கிடையாது. சண்டை கிடையாது. பஞ்ச் டைலாக் கிடையாது. திடுக்கிடும் திருப்பங்கள் கிடையாது. பயங்கரம் கிடையாது. ஆனால், படம் முடியும்போது என்னையுமறியாமல் கண்கள் கலங்கின. தந்தையின் அன்புக்காக தந்தையினை தேடும் மகனையும், தனிமையின் ஏக்கங்களை தணிக்க திண்டாடும் பெண்ணையும் மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.மனித மனங்கள் பாசத்திற்கும், அன்புக்கு ஏங்கும் சூழ்நிலையின் விசித்திரத்தையும், தேவையையும் உணர வைக்கும் படம். அற்புதமான, அட்டகாசமான, மனதினை உருக வைக்கக் கூடிய படம். மொத்தமே 4-5 கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு வால்டர் சலேஸ், அற்புதமான படத்தினை தந்திருக்கிறார்.

டோரா, ரியோ டி ஜெனிரோ சென்டிரல் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு கடிதங்கள் எழுதி தரும் ஒரு டீச்சர். ஆனாலும் அவள் எழுதும் எந்த கடிதங்களையும் அவள் அனுப்பாமல், மொத்தமாக எடுத்துவந்து, அவளும், அவளுடைய தோழி ஐரீனும் படித்து கிழித்துப் போட்டு விடுவார்கள். அவர்களிருவரும் தனியே வாழ்பவர்கள். சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லாதவர்கள். சொற்ப சம்பளத்தில் ஒடும் வாழ்க்கை. நிறைய பேர்கள் அவளிடத்தில் ரயில்வே ஸ்டெஷனில் கடிதங்களை சொல்வதிலிருந்து தொடங்குகிறது படம். அவ்வாறு வரும் வாடிக்கையாளர்களில் ஆனாவும், அவளுடைய மகன் ஜொஷ்யே(9 வயது) ஒருவர். டோராவுக்கு ஜொஷ்யேவை பிடிக்கவில்லை. சதா எதையாவது நோண்டிக் கொண்டிருக்கும் அவன் மீது வெறுப்பினன உமிழ்கிறாள் டோரா. ஆனா அவளின் குடிக்கார கணவனுக்கு எழுதும் கடிதத்தில் தொடங்குகிறது படம். அவர்களின் மகன் தந்தையை பார்கக விரும்புவதாக எழுதசொல்லி காசு கொடுத்து போய்விடுகிறாள் ஆனா. சாலையினை கடக்கும்போது பராக்கு பார்த்து தன் பம்பரத்தினை நழுவவிடும் மகனை காக்க திரும்பும் ஆனாவை ஒரு லாரி அடித்து இழுத்துப் போய்விடுகிறது. ஸ்தலத்திலேயே மரணம். தன் அம்மாவை தவிர வேறெதுவும் தெரியாத ஜொஷ்யே, மீண்டும் ரயில்வே ஸ்டெஷனுக்குள் வந்துவிடுகிறான்.

ஜொஷ்யேவுக்கு தெரிந்த ஒரே வழி அம்மா எழுதிய கடிதத்தில் இருக்கும் முகவரியை கொண்டு தன் தந்தையை பார்ப்பதுதான். அதற்கு டோராவின் தயவு வேண்டும். டோராவோ அவனைப் பார்த்தாலே எரிந்து விழுகிறாள். ஜொஷ்யே ஸ்டேஷனிலேயே தங்கி சாப்பாட்டுக்கு திருடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவனுக்கு முன் ஒருவன் ஒரு ப்ரெட் துண்டினை எடுத்துக் கொண்டு ஒடுகிறான். ஸ்டேஷனின் பாதுகாப்புக்கு இருக்கும் தனியார் காவலாளிகள், அவனை துரத்தி சென்று, திருடியவன் மன்னிப்பு கேட்டு, கெஞ்ச, கெஞ்ச அவனை சுட்டு தண்டவாளத்தில் வீசுகிறார்கள். பிரேசிலில் எந்தளவிற்கு குற்றங்களும், அதற்காக தனிநபர் தண்டனைகளும் இருக்கின்றன என்பதை பளிச்சென்று சொல்லுகிறது இந்த காட்சி. பின் டோரா அவன் மீது பரிதாபப்பட்டு அவனை தன் வீட்டுக்கு கூட்டிச் செல்லுகிறாள்.

வீட்டில் ஐரினுக்கும் ஜொஷ்யேவை பிடித்துப் போகிறது. ஆனால், டோரா ஜொஷ்யேவை தனக்கு தெரிந்த வீட்டில் வெளிநாடுகளில் வேலை செய்வதற்காக சிறுவர்களை அழைத்து செல்லும் ஒரிடத்தில் ஜொஷ்யேவை விட்டுவிட்டு 1000 டாலர் பெற்றுக் கொண்டு, புது டிவி வாங்கிக் கொண்டு வீடு வருகிறாள். ஐரின், ஜொஷ்யேவைப் பற்றி கேட்க, இவள் விளக்க, ஐரின் அவர்கள் சிறுவர்களின் அங்கங்களை விற்பவர்கள் என்று கூறுகிறாள். எப்படியோ அங்கே போய், நாடகமாடி, ஜொஷ்யேவை கூப்பிட்டுக் கொண்டு, ஒரு பஸ்ஸில் ஏறி பாம் ஜீஸஸ் டி லாபா என்கிற இடத்துக்கு போக முற்படுகிறாள். இதுவரை ஒருவிதமான லவ்ஹேட் உறவு தான் அவர்களிடத்திலிருக்கிறது. பஸ்ஸில் டோரா குடிக்கும் மதுவினை திருட்டுத்தனமாக சிறுவனும் குடித்து கலாட்டா செய்ய, டோரா பஸ் டிரைவரிடம் காசு கொடுத்து அவனை பாம் ஜீசஸில் இறக்கிவிடுமாறு சொல்லி அங்கேயே இறங்கி விடுகிறாள். பஸ் புறப்பட்டுப் போகிறது.

தலையை திருப்பிப் பார்த்தால், ஜொஷ்யே அவளை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பையில் தான் எல்லா பணமும் இருக்கிறது. அது பஸ்ஸோடு போய்விட்டது. அவனை கரித்துக் கொட்டியபடி, உணவுவிடுதியில் அடுத்தவர் உண்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு லாரி டிரைவரின் சிநேகிதம் கிடைக்கிறது. லாரி டிரைவர் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து அவர்களை லாரியில் ஏற்றிக் கொள்கிறான். டோராவைப் போலவே அவனும் தனியாள். அவனுக்கு தெரிந்ததெல்லாம் சாலைகள், சாலைகள், சாலைகள் மட்டுமே. ஏதோ ஒருவிதமான உணர்வு மயக்கத்தில் , ஒரு உணவு விடுதியில், டோரா அவனை விரும்புவதாக சொல்லுகிறாள். அவன் ஒரு இவஞ்சலிச கிறிஸ்துவன். காதலெல்லாம் கிடையாது. உடல் இச்சைகளை தவிர்க்கவேண்டும் என்று நினைப்பவன். அவர்களிருவரையும் அங்கேயே விட்டுவிட்டு, அவன் லாரியினை எடுத்துச் சென்றுவிடுகிறான். மீண்டும் கையில் அதிக காசில்லை. போக வேண்டிய தூரமோ அதிகம்.

அங்கே வரும் ஒரு கிறிஸ்துவ இறைவாத துதிப்பாடல்கள் ட்ரக்கில் ஏறிக் கொண்டு பாம் ஜீச்ஸிற்கு போகிறார்கள். இந்த இடம் படத்தில் அருமையாக இருக்கும். தோற்றுப் போன காதலோடு, டிரக்கின் நடுவில் டோரா, கடவுளை காதலிக்க சொல்லி பாடல்கள் பாடும் கூட்டம் சுற்றிலும் என குறியீட்டுத் தன்மையுடன் இருக்கும். டிரக் பாம் ஜீசஸினை அடைகிறது. கையிலிருக்கும் முகவரியை கொண்டு அவர்கள் வீட்டினை கண்டுபிடிக்கிறார்கள். அகலமான வெறும் நிலங்கள் அடங்கிய நீண்ட பெரிய ஒரு இடத்தில் அந்த முகவரியிலுள்ள வீடு இருக்கிறது. கேட்டினை திறந்து அந்த சிறுவன் தன் தந்தையின் வீட்டினை நோக்கியோடும் லாங் ஷாட், கவிதை. அவ்வீட்டில் ஏற்கனவே மணமான பெண்ணும் 3 சிறுவர்களும் இருக்கிறார்கள். ஜெஸூஸ்க்காக (ஜொஷ்யேவின் தந்தை பெயர். அவரொரு) தர்மசங்கடமாக அந்த வீட்டில் காத்திருக்கிறார்கள். காற்றடித்து புழுதி கிளம்பும் வெளியிலிருந்து ஒரு மனிதன் வருகிறான். சிறுவன் ஆவலாக தன் தந்தையினை முதன் முதலில் காணும் உற்சாகத்துடன் காத்திருக்கிறான்.

டோரா அவனோடு பேசும்போதுதான் தெரிகிறது, அவன் பெயர் ஜெஸ்ஸியென்றும், ஜெஸூஸ் அங்கிருந்து 15கீ.மீ தொலைவில் ஒரு ஊரில் வசிக்கிறார் என்றும். லாட்டரியில் அடித்த பணத்தில் ஜொஷ்யேவின் தந்தை, வீடுகள் வாங்கிவிட்டதாகவும், குடித்து அழிவதாகவும் கூறுகிறான். ஏமாற்றத்தினை தாங்கமுடியாத சிறுவன் பாம் ஜீசஸின் இறைப் பிரார்த்தனைக் கூட்டத்தினுள் ஓடுகிறான். அவனைத் தொடர்ந்து ஒடும் டோராவால் துரத்த இயலாமல் மயங்கி சரிகிறாள். ஜொஷ்யே அவளை எழுப்புகிறான். கையில் காசில்லை. அந்நேரத்தில் அங்கிருக்கும் ஒரு துறவியின் சிலையின் முன் எல்லோரும் புகைப்படமெடுத்துக் கொள்கிறார்கள். அப்போது அங்கு வரும் ஒரு பெண், துறவியிடத்தில் சேதிகள் சொல்ல முடியுமா என்று போட்டோகிராபரை கேட்க அவன் மறுத்துவிடுகிறான். அதைப் பார்க்கும் ஜொஷ்யே, டோரவினடத்தில் கண்ணடித்து, டோரவை கடிதமெழுதுபவர் என்றும், இங்கே கடிதமெழுதினால், துறவியிடம் சேர்ப்பிக்கப்படும் என்று கூறி, அதையே வணிகமாக மாற்றி, கூவி,கூவி மக்களை அழைத்து காசு சேர்கிறான். இருவரின் கையிலும் நிறைய பணமிருக்கிறது. அந்த துறவி சிலையோடு போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். தன் காசில் டோராவுக்கு ஒரு ஆடைவாங்கி தருகிறான். கடிதங்களை கிழித்துப் போட்டு விடலாம் என்று கூறுகிறான் ஜொஷ்யே. டோரா மறுக்கிறாள். மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி பேருந்தில், ஜெஸூஸ் இருப்பதாக சொல்லும் ஊருக்குப் போகிறார்கள்.

அங்கே போய் அந்த முகவரியில் விசாரித்தால், அந்த வீட்டினை அவர் விற்றுவிட்டு எங்கோ போய்விட்டார் என்று சொல்கிறார்கள். இதற்கிடையில் டோராவும், ஜொஷ்யேவும் இடையில் ஒருவிதமான நட்பும், பாசமும் மலர்ந்திருக்கின்றது. டோரா, ஜொஷ்யேவை தன்னுடனே தங்கும்படி சொல்கிறாள். அவனும் சம்மதிக்கிறான். அவள் இதனை ஐரினுக்கு போன் செய்து சொல்கிறாள். உடனே பாம் ஜீசஸுக்கு போகலாம் என்று பஸ் ஸ்டாண்டுக்கு வருகிறாள். அன்றைக்கு அவர்கள் வந்த பேருந்தோடு முடிந்துவிட்டன என்றும், இனி நாளை மறுநாள் தான் பேருந்து வருமென்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இவர்கள் முகவரி விசாரித்த வீட்டில் இருக்கும் சிறுவன், ஒரு வயர்மென்னுக்கு விஷயத்தினை சொல்லுகிறான். அந்த வயர்மென், ஜெஸூஸின் மூத்த பிள்ளை. ஜொஷ்யேவை ஜெஸுஸின் பிள்ளை என்று அறிமுகப்படுத்தாமல், டோரா, அவள் ஜெஸூஸின் தூரத்து சொந்தமென்று சொல்லுகிறாள். வயர்மென்னின் வற்புறுத்தி அவர்களை வீட்டிற்கு இரவு தங்க செல்லுகிறான்.

வயர்மென்னும், அவனின் தம்பியும் அவர்கள் தந்தை எழுதியதாக ஒரு கடிதத்தினை தந்து டோராவைப் படிக்கச் சொல்லுகிறார்கள். ஜொஷ்யே அவனின் தந்தையின் போட்டோவினனப் பார்க்கிறான். அவர்கள் இருவருக்கும் எழுதப்படிக்கத் தெரியாது. 6 மாதங்களாக அந்த கடிதம் வீட்டிலேயே இருக்கிறதென்று சொல்கிறார்கள். அந்த கடிதம் ஆனாவுக்கு எழுதப்பட்ட கடிதம். அதில் தான் திரும்பி வருவேன் என்றும், ஆனாவினைப் பார்ப்பேன் என்றுமிருக்கிறது. வயர்மென்னும், ஜொஷ்யேவும் அவர்களின் தந்தை திரும்பி வருவார் என்று நம்புவதாக சொல்லுகிறார்கள். இரவு அனைவரும் படுத்திருக்கிறார்கள். டோரா வாசித்த கடிதம், போட்டோவின் கீழே இருக்கிறது. அதனருகில், அவள் ஆனாவின் கடிதத்தையும் வைக்கிறாள்.

ஜொஷ்யே வாங்கிக் கொடுத்த ஆடையினை அணிகிறாள். எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். விடியற்காலையில் எழுந்து முதல் பஸ்ஸிற்காக விரைகிறாள். எழுந்து பார்க்கும், ஜொஷ்யே டோராவை காணாமல் தேடுகிறான். பஸ் ஸ்டாண்டினை நோக்கி ஒடுகிறான். பஸ் கிளம்பிவிடுகிறது. பஸ்ஸினுள் கண்ணீரோடு டோரா, அவர்கள் எடுத்த புகைப்படத்தினைப் பார்க்கிறாள். அங்கே, ஒடிக் களைத்து நிற்கும் ஜொஷ்யே தன்னிடமிருக்கும் டோராவின் புகைப்படத்தினைப் பார்க்கிறாள். டோரா ஒரு கடிதத்தினை எழுதிக் கொண்டே வாய்ஸ் ஒவரில் சொல்லுவார் "இனி எந்த கடிதத்தையும், போஸ்ட் பண்ணாமல் இருக்க மாட்டேன்". புகைக் கக்கிக் கொண்டு லாங் ஷாட்டில் மலை வளைவுகளில் பஸ் போய்க் கொண்டிருக்கிறது. படம் முடிகிறது.

டோராவாக நடித்த பெர்னட்டோ மார்டென்கொரா (வயது 70+) தென்னமரிக்க சினிமாவின் மிக முக்கியமான, அசாதாரணமான நடிகை. சென்ட்ரல் ஸ்டேஷனுக்காக ஆஸ்கார் விருதுக்காக (1998) பரிந்துரைக்கப்பட்டவர். வினிசியல் டி ஒலிவியரா தான் ஜொஷ்யே என்ற சிறுவன். ஜொஷ்யேவாக வரும் சிறுவனின் முதல் படம் இது. இச்சிறுவனின் தொழில் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் ஷூ பாலிஷ் போடுவது. வால்டர் சலேஸ் அங்கிருந்து இவனை கண்டெடுத்து, படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முதல் படம் போலவே இல்லாமல், அசத்தியிருக்கிறான் சிறுவன். இந்த படத்தின் டைட்டிலுக்கான காரணம், ரியோ டி ஜெனிரோவின் முதன்மை ரயில்வே ஸ்டேஷனுக்கு பிரேசிலில் சொல்லப்படும் பெயரே.

இந்த படத்தில் நான் பார்த்து ரசித்த இன்னொரு விஷயம், ப்ரெசில். ரியோ டி ஜெனிரோ ரயில்வே ஸ்டெஷனும், (மக்கள், ஜன்னல் வழியாக உள்ளே போய் இடம் பிடிப்பது, ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்வது[அப்படியே மும்பாயில் பார்க்கலாம்], புட்போர்டில், ஜன்னலில் தொற்றிக் கொண்டு பயணிப்பது), டோராவும், ஜொஷ்யேவும் பயணம் செய்யும் பேருந்தில் ஒருவர் கோழி கால்களைக் கட்டி தலைகீழாக பிடித்து வருவதும், தெருவோர கடைகளும், நகர அமைப்பும், குண்டும்குழியுமான சாலைகளும், குவார்டர்ஸ் போல கட்டப்பட்ட வீடுகளும்,இறை நம்பிக்கையினை முதலீடாக வைத்திருக்கும் பெந்தகொஸ்தே மாதிரியான அமைப்புகள் என அச்சு அசலாக அப்படியே இந்தியாவை முன்னிறுத்துகின்றன. பிச்சைக்காரர்கள், திருடர்கள், படிப்பறிவில்லாதவர்கள், கையேந்தி பவன்கள் என நீளும் தென்னமரிக்க (ஸ்பானிஷ் ) படங்களுக்கும், இந்தியாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்று யூகிக்க முடிகிறது. புட்பாலை தாண்டி, அந்த நாட்டினை நேசிக்க நான் பார்க்கும் தென்னமரிக்க படங்களில் நிறைய காரணங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பிரேசிலுக்கு போய் வரவேண்டும்.Central Station (1998)

பார்க்க - ஐஎம்டிபி | சென்ட்ரல் தொ ப்ரெசில் இணையத்தளம்

விருதுகள்

Academy Award Nominations:
Best Actress: Fernanda Montenegro
Best Foreign Language Film

Golden Globe Nominations and *Winners:
Best Actress (Drama): Fernanda Montenegro
*Best Foreign Language Film (Brazil)

Other Awards:
Los Angeles Film Critics Association—Best Actress (tie): Fernanda Montenegro
National Board of Review—Best Actress: Fernanda Montenegro; Best Foreign Language Film
Golden Satellites—Best Foreign Language Film

Comments:
/வினிசியல் டி ஒலிவியரா தான் ஜொஷ்யே என்ற சிறுவன். ஜொஷ்யேவாக வரும் சிறுவனின் முதல் படம் இது. இச்சிறுவனின் தொழில் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் ஷூ பாலிஷ் போடுவது. வால்டர் சலேஸ் அங்கிருந்து இவனை கண்டெடுத்து, படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்/
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே வீதித்திருட்டு ஒன்றிலே சம்பந்தப்பட்டு இந்தப் பையன்(!) கைது செய்யப்பட்டான் அந்த நேரத்திலே, அவன் இயக்குநர் தன் சம்பளத்தினைத் தராமல் ஏமாற்றிவிட்டான் என்று குற்றம் சாட்டினான். எதுவாகத்தான் இருக்கட்டும்; இயக்குநர் என்ற அளவிலே, Walter Salles அருமையான இயக்குநர்; அண்மைய The Motorcycle Diaries ஒரு சான்று.

/வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பிரேசிலுக்கு போய் வரவேண்டும்./

இப்படித்தான் பல்கலைக்கழகத்திலே கற்ற நேரத்திலே எனக்கும் இலத்தீன் அமெரிக்கநாடுகளுக்குச் செல்லவேண்டுமென்ற விழைவு இருந்தது; மூன்று காரணங்கள்: அவற்றின் விடுதலை இறையியல் புரட்சி இயக்கங்கள்; அமேசன் காடு; முக்கியமாக, தொடர்ந்து உலக அழகுராணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டேயிருந்த மண்ணிறமேனி இலத்தீன் அமெரிக்கப்பெண்கள். எல்லாம் ஒரு காலமடா!

படத்திலே சென்ரல் ஸ்ரேசனை விரித்துப் பிரமாண்டமாகப் படமாக்கியிருக்கும் விதம் அருமை. பொதுவாகவே இலத்தீன் அமெரிக்கப்பேருந்துகள் மிகவும் வண்ணமயமான அமைப்போடும் ஆட்களோடும் இருக்கின்றன. அலியாவின் (Tomás Gutiérrez Alea) Guantanamera பார்த்திராவிட்டால், பாருங்கள்; இந்த உயிரூட்டமான கூறுகள் தெரியும்
 
//அலியாவின் (Tomás Gutiérrez Alea) Guantanamera பார்த்திராவிட்டால், பாருங்கள்; //

இப்போதுதான் என் டிவிடி நூலகத்தில் கையிலெடுத்துப் பார்த்து விட்டு, மெல்ஸ்டோர்ம் என்கிற ப்ரெஞ்ச் படமெடுத்து வந்தேன். ரஷ்யன் ஆர்க் தேடிப் போனால் சொதப்பிவிட்டார்கள். கவர் இருக்கிறது. டிவிடியை காணோம்.அடுத்தமுறை கட்டாயமாக எடுத்துப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றிகள் பெயரிலி.
 
குறிப்பு எடுத்துக்கொண்டு விட்டேன்.

//வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பிரேசிலுக்கு போய் வரவேண்டும்.//

//முக்கியமாக, தொடர்ந்து உலக அழகுராணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டேயிருந்த மண்ணிறமேனி இலத்தீன் அமெரிக்கப்பெண்கள். //

இன்னும் லத்தீன் அமெரிக்காவுக்கு வாய்ப்புகிடைக்கவில்லையென்றாலும், பழைய ப்ராஜக்டில் என் டீமில் இருந்த சில லத்தீன் அமெரிக்கா பெண்களுடன் வேலை பார்த்து சாப விமோசனம் அடைந்தாகி விட்டது. :-))) ஹிம்ம்ம்.... அதெல்லாம் ஒரு காலமடா... இப்பொல்லாம் சப்பை மூக்கு ஒல்லி குச்சி சூப்பர் ஃபிகருகளை தான் பார்க்க முடிகிறது.
 
விஜய், இந்த விஷயம் உங்க மனைவிக்கு தெரியுமா?;-) இல்லைன்னா சொல்லுங்க, நான் சொல்லி குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணறேன். ஏதோ, என்னாலான புண்ணிய காரியம் ;)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]