Apr 5, 2005

பாலியல் தொழிலும், அங்கீகாரமும் - பகுதி 2

ஏன் பாலியல் தொழிலை அங்கீகாரம் செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்திற்கும் மேல். (UNAIDS Global Report 2004) இந்தியாவில் செல்போன்களுக்கு அடுத்து மிக அதிக மக்களை சென்றடைவது எய்ட்ஸ் நோய்தான் என்பது கொடுமையான, கேவலமான ஆனால் சத்தியமான நிஜம். இந்தியாவில் ஊசி வழியாகவோ, அல்லது ஒரின புணர்ச்சிவழியாகவோ, எய்ட்ஸ் பரவும் விதங்கள் மிகக் குறைவு. அதிகப்படியான எய்ட்ஸ் பரவுதல், ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உறவு கொள்ளுதலும், பாலியல் தொழிலாளியின் அறியாமையும் தான். இதில் இன்னொரு கொடுமையான விஷயம் முக்கால்வாசி பாலியல் தொழிலாளிக்கோ அல்லது வாடிக்கையாளனுக்கோ, தான் உறவு கொள்ளப் போகும் நபர் ஆரோக்கியமானவரா என்றெல்லாம் தெரியாது. இடம் கிடைத்ததா, பெண் கிடைத்தாளா, படு என்பது தான் இங்கே. என்னதான் புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்று கூவினாலும், மாற்றங்கள் பெரிதாய் இல்லை. இதற்கு காரணம், நாம் வாடிக்கையாளனை அவனின் இயல்பை மாற்ற முயல்கிறோம். இந்தியா போன்ற இன்னமும், படிப்பறிவு முழுமையாக இல்லாத நாட்டில் இது வேலைக்காகாது. எங்கே அவன் போகிறானோ அங்கேதான் அறிவுறுத்தவேண்டும் இந்தியாவில், பெரும்பான்மை லாரி ஒட்டுநர்கள், எய்ட்ஸ் நோய் பாதிப்பின் அருகாமையில் இருப்பது மிகப் பெரிய சோகம். அங்கீகாரம் செய்தால் மட்டும் படுக்காமல் இருக்கப் போவதில்லையா என்று கேட்பீர்கள். கண்டிப்பாக படுக்காமல் இருக்கப் போவதில்லை. ஆனால், பாலியல் தொழிலாளிக்கு விஷயங்கள் தெரியும். எப்படி ?

உதாரணத்திற்கு ஆட்டோ ஒட்டுபவர்களை எடுத்துக்கொள்வோம். அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில், இதனால், எல்லா ஆட்டோ ஒட்டுநர்களும், ஒட்டுநர் உரிமம், ஒட்டும் வண்டியின் ஆர்.சி புத்தகம், காப்பீடு ரசீது, வண்டி முதலாளியின் பெயர், முகவரி, ஆட்டோ பதியப்பட்ட நகர எல்லை என எல்லா விஷயங்களையும் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம், காவலர்களோ அல்லது வேறெவரோ தடுத்து நிறுத்தி கேட்பார்களேயானால், உரிய காகிதங்களை காட்டி விட்டு, எந்த நிர்பந்தங்களும் இல்லாமல் இருக்கலாம். ஒரு ஆட்டோ ஒட்டுநர் இழிவு படுத்தப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ அல்லது விபத்திற்குள்ளானாலோ, ஆட்டோ யூனியனும், சங்கமும், தேவையான உதவிகளை செய்வார்கள். முறைபடுத்தப்பட்ட தொழிலாக இருப்பதனால், வரி கட்டுகிறார்கள், அதனால், அவர்களின் கேள்விக்கு அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயமிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அவர்களால்,நேர்மையான, நியாயமான முறையில் தங்களின் தொழிலினை பாதிக்கும் விஷயங்களுக்கெதிராக, ஒன்றிணைந்து போராட இயலும். இந்த சுதந்திரம், உரிமை, பாதுகாப்பு உணர்வு, ஒரே தொழில் செய்வோரின் ஆதரவெனைத்தும் ஒரு தொழில் அங்கீகாரம் பெறுவதால் மட்டுமே வருவது.

இதுதான் இன்றைய பாலியல் தொழிலாளிக்கு கிடைக்காமல் இருப்பது. மருத்துவவசதிகள் கிடையாது. வாடிக்கையாளன் ஏமாற்றலாம். போலீஸ்காரர்களும், ரவுடிகளும் மாமூல் பிடுங்கிவிட்டு நிற்கதியாய் நடுதெருவில் விட்டுவிட்டு போகலாம். புரோக்கர்கள் கமிஷனடித்துவிட்டு ஒன்றுமே தாராமல் போகலாம். எது வேண்டுமானால் நடக்கலாம். ஆனால், யாராலும், முறைத்துக் கொண்டு ஆட்டோவிற்கு காசு கொடுக்காமல் போக முடியாது. ஒன்றிணைந்து விடுவார்கள். இதுதான் அங்கீகாரம் பெற்ற தொழிலுக்கும், இல்லாத தொழிலுக்கும் இருக்கும் வேறுபாடு.

அங்கீகாரம் தருகிறோம், பெரிதாய் என்ன நடந்து விடும்? நடக்கும், நிச்சயமாக நடக்கும்.

1. கொத்தடிமைகள் போல அடைத்து வைத்து வியாபாரம் நடத்தும் "மாமா பசங்களிடமிருந்தும்" , "யக்கா" களிடமிருந்தும் விடுதலை. தனக்கான வாடிக்கையாளரை தேர்ந்தெடுக்கவும், எத்தனை வாடிக்கையாளர்களோடு இருப்பதையும் நிர்ணயிக்க செய்யும் விடுதலை. அங்கீகாரம் பெற்ற தொழிலாய் இருக்கும்போது யாரும் கேவலமாக பார்க்க இயலாது. இது நடக்குமா என்றால், நடக்கும். 50 ஆண்டுகளுக்கு முன்னர், முடி திருத்தும் நாவிதர் தொழில் வேறுமாதிரியாக தான் பார்க்கப்பட்டது, இன்று நிலைமை வேறு. தேர்ந்தெடுத்த மருத்துவ ஆலோசனைகள் இவர்களுக்கு கிடைக்கும். தன்னார்வ நிறுவங்களோ, அல்லது இவர்களுக்கான கூட்டமைப்பின் மூலமாகவோ பாலியல் நோய்கள், எய்ட்ஸ் போன்றவைகள் பற்றிய தெரிதல் வரும். யாரும் உடல்நிலை சரியில்லாத போது, மாதவிலக்கின் போதோ உறவு கொள்ள கட்டாய படுத்த முடியாது. முக்கியமாக, அங்கீகாரம் பெறும் எந்த தொழிலுக்கும் இந்தியாவில் சில அடிப்படைகள் இருக்கின்றன. எப்படி ஓட்டு போடும் வயது, உரிமம் பெறும் வயது என்று நிர்ணயிக்கிறோமோ, அதைப் போல பாலியல் தொழிலாளியாக இயங்குவதற்கும் குறைந்த பட்ச வயதினை நிர்ணயம் செய்து விடலாம். இதன் மூலம், சிறுவர், சிறுமியர்களை பாலியல் தொழில் பெற்றோர்களை நினைத்தாலும் உட்புகுத்த இயலாது. ஏற்கனவே இந்தியாவில் இது கிரிமினல் குற்றம். பாலியல் தொழிலினை அங்கீகரிப்பதின் மூலம், இதனை இன்னமும் கடுமையாக்கலாம்.

2. இந்தியாவில் பாலியல் தொழிலுக்கான மிக முக்கியமான மனிதர்கள் - இடைத்தரகர்கள் (pimps), குண்டர்கள், ரவுடிகள், போலீஸ்காரர்கள், கொஞ்சம் பச்சையாக சொன்னால், எல்லா கட்சிகளிலும் இருக்கும் மகளிர் அணித் தலைவிகள். அரசியல் செல்வாக்கினாலும், அராஜகத்தினாலும், எத்தனையோ பெண்களை முதலீடாக வைத்து, நோகாமல் சம்பாதிப்பவர்கள் இவர்கள். இவர்களின் ஒட்டுமொத்த செல்வாக்கும் ஒரே அடியில் அழிந்து விடும். அங்கீகரிக்கப் பட்ட பாலியல் நிலையங்கள் நடத்தினால், அதற்கு வரியும், சம்பாதிக்கும் பணத்திற்கான சான்றும் காட்டுமாறு சட்டமியற்றலாம். இதனைத் தாண்டி, சத்துணவுக் கூட ஆயாக்களைப் போல், இவர்களையும் ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் பதிவு செய்ய சொல்லலாம். இவர்களின் அங்கீகாரம் சொல்லும் உரிமத்தினை தர வேண்டும்,இதன்மூலம், அத்துமீறல்களும், தேவையற்ற பயமுறுத்தல்களையும் (இங்கே போலீஸ்காரர்களும், ரவுடிகளும் கில்லாடிகள். பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டால், சில பாலியல் தொழிலாளிகளையே, நீ அங்கீகாரம் பெறவில்லை என்று சொல்லி காசு கறப்பார்கள் அல்லது இலவசமாக படுக்கைக்கு அழைப்பார்கள். ) களைய முடியும்.

3. மாறி வரும் உலகிற்கேற்ப, நமது உணவுமுறைகளிலும் மாற்றங்கள் வந்துள்ளது. இதனால், என் முந்தைய பதிவில் கார்த்திக் சொல்லியது போல், "வயதுக்கு வரும்" பெண்ணின் வயது என்பது குறைந்து கொண்டே வருகிறது. முன்பு 14-17 வயதுகளில் முழுமையான பெண்ணாக வளரும் நிலையை அடைந்த பெண்கள், இன்று 11-13 வயதுகளிலேயே வளர்ச்சி பெற்று விடுகிறார்கள். அவர்களின் மாதவிலக்கு தொடங்கி விடுகிறது. இதே நிலை தான் ஆண் சிறுவர்களுக்கும். 13 வயதிலிருந்து குறைந்த பட்சம் 24-25 வயது வரையாவது தனியாக இருக்க வேண்டிய கட்டாயங்கள், சமூக சூழல்கள் உள்ள நாடிது. மேலை நாடுகள் போல பெற்றோரே துரத்தி விடும் நாடு கிடையாது. அவர்களின் பாலியல் உணர்வுகள் கட்டாயமாக கவனிக்கப்பட்டு, அதற்கான மதிப்பினை அளிக்க வேண்டும். ஊடகங்கள் இதற்கு மிக முக்கியமான காரணங்கள். என் நண்பர் ஜோக்காக சொல்லும் ஆனால் மிக தேர்ந்த வாசகம், "Indian songs are the height of porn. The best sex you can ever have with dress" அது தான் உண்மையும் கூட. வடிகால் இல்லாத காரணத்தினால் தான் செல் பேசிகளிலும், மூன்றாம் தர கருக்கலைப்பு கிளினிக்களிலும் பள்ளிச் சீருடையோடு நிறைய பெண்களை பார்க்க முடிகிறது. இதற்கு காரணம், முறையான பாலியல் வடிகால் இல்லாதது. பாலியல் தொழிலாளிகளை நாடு தழுவிய குழுக்களின் மூலமும், அரசாங்கமும், பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கற்று கொடுக்க வேண்டும். கேட்க, கொஞ்சம் ஒவராக தெரிந்தாலும், மாத்ரு பூதங்களிடமும் போவதற்கு பதிலாக, பாலியல் தொழிலாளியே உடலின் சூட்சுமத்தினை கற்றுக் கொடுத்து விட்டால், நிலைமை மாறும் சாத்தியக் கூறுகளுண்டு. அதிகபட்சமாக இன்றைக்கு தெரிந்தாலும், இதன் நீட்சிதானே, மசாஜ் செய்வதும், ஆயுர்வேத குளியலும். உடலை சமச்சீராக்கும் விஷயமல்லவா அது. இதைத் தாண்டி, பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகள் தங்களுக்குள் உறவு கொண்டால் என்ன செய்வது என்று கேட்டால், என்னிடத்தில் பதிலில்லை. முறையான பாலியல் கல்வியற்ற சமூகத்தில் எல்லாம் சாத்தியமே. மேலும், 2010-ல் இந்தியா உலகின் மிக இளமையான நாடாக இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையில் 45% மேற்பட்டவர்கள் 18-40 வயதுக்குட்பட்டவர்களாய் இருப்பார்கள். இவர்களின் பாலியல் தேவைகளையும், இச்சைகளையும் எவ்வாறு கையாளப் போகிறோம் ?

4. மிக முக்கியமான விஷயமாய், பாலியல் தொழிலின் அங்கீகாரத்தில் நான் பார்ப்பது, குழந்தை பாலியல் தொழிலாளிகளை நீக்குவதுதான். அங்கீகாரம் தருவதின் மூலம், யார் வேண்டுமானாலும், தங்களை விளம்பரபடுத்திக் கொண்டு தொழில் செய்ய முடியும். அவ்வாறு செய்யும்போதும், அதற்கான வரைமுறைகளின் படி வாடிக்கையாளரை அணுகும் போதும், குழந்தை பாலியல் தொழிலாளிகள் இருக்க முடியாது. நான் படித்த இணைய தளங்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், கண்களில் ரத்தம் வருகிறது. கிரை அமைப்பின் புள்ளிவிவரங்களின் படி, சற்றேறக்குறைய 20 லட்சம் குழந்தை பாலியல் தொழிலாளிகளும், (5-15 வயதிற்குள்) 33 லட்சம் குழந்தை பாலியல் தொழிலாளிகள் (15-18 வயதிற்குள்) இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு வருடத்தில் இந்த தொழிலில் தள்ளப்படும் குழந்தை தொழிலாளிகளின் எண்ணிக்கை, 5 லட்சத்திற்கும் மேல். 71% பேர்கள் இவற்றில் படிப்பறிவற்றவர்கள். இந்த தொகை இந்தியாவின் 40% பாலியல் தொழிலாளிகளின் மக்கள்தொகை. என்ன சொல்வீர்கள் இதற்கு ? வெட்கமாகவும், பயங்கரமாகவும் இருக்கிறது, இந்தியாவில் பெண்/ஆண் குழந்தையாக, கிராமத்தில் ஏழையாய் பிறப்பதற்கு. இதையெல்லாம் கவனிக்க நேரமில்லாமல் நாம் F-16 வாங்கவும், இந்திய-பாகிஸ்தான் ஒரு நாள் தொடரை இந்தியா ஜெயிக்குமா என்கிற விவாதத்திலும் இருக்கிறோம். இந்த குழந்தை பாலியல் தொழிலாளிகள் அனைவரும் மாமூல் கொடுக்கப்பட்டும், ரவுடிகளின் துணையோடும் பெருத்துக் கொண்டு வருகிறார்கள். பாலியல் தொழிலை அங்கீகரிப்பதின் மூலம், இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளியினை வைக்க முடியும். மாறுதல்கள் உடனே நடக்காது என்று தெரிந்தாலும், இப்போது தொடங்கினாலேயொழிய முற்றிலுமான மாறுதல் சாத்தியமாகாது என்று தோன்றுகிறது. குறைந்த பட்ச வயதினையும், பாலியல் தொழிலாளிக்கான உரிமத்தினையும் பெறாமல் யாரும் தொழில் செய்ய முடியாது என்கிற நிலை வரும்போது, அரசின் கடுமையாலும், தொழில் போட்டிகளாலும் குழந்தை தொழிலாளிகள் கட்டுப்படுத்தப் படுவார்கள். இதை சொல்லும் இதே தருணத்திலும், சாராய கடைகள் இருக்கும் போது, கள்ளச்சாராயம் ஒடுவது போல், முற்றிலுமாக, இந்த பரந்த நிலமுள்ள இந்தியாவில், குழந்தை பாலியல் பலியாடுகளை தடுக்க முடியாது. ஆனால், குறைக்க முடியும்.

ஒரே அறையில் கொத்தடிமையாய் இருப்பதினால், சுதந்திரமும், வெளியுலகமும் தெரிய வாய்ப்பில்லை.இதயெல்லாம் தாண்டி, பாலியல் தொழிலினை அங்கீகாரம் செய்வதின் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தின் மூலம், இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளிகள், வாழ்வதற்கான அடிப்படை சம்பாதித்யத்தை சம்பாதித்துக் கொண்டு, அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தினை பற்றி சிந்திக்க முடியும்.நோக்க முடியும். இப்போதிருக்கும் சூழ்நிலையில் அது சாத்தியமாகாது. வெளியுலக தொடர்பினால், வேறு தொழில்கள் கற்கலாம். வாழ்வின் புதிய பரிமாணத்தினை துவங்க முடியும். என்னதான் அங்கீகாரம் கொடுத்தாலும், அவர்கள் வாழ்நாள் முழுக்க பாலியல் தொழிலாளாய் இருக்க சாத்தியங்களில்லை. சாத்தியப் படவும் வேண்டாத சூழல் அமைய வேண்டும்.

இன்னமும் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த பதிவு புரிந்துணர்வையும், அங்கீகாரத்தின் பின்னுள்ள நியாயத்தையும் எடுத்துரைப்பதற்குமே. முதல் பதிவு, பாலியல் தொழிலின் சூழலையும், இந்த பதிவு, பாலியல் தொழிலின் அங்கீகாரத்தின் பயன்களையும், மூன்றாம் பதிவு, அங்கீகாரத்தின் அவசியத்தையும் சொல்லும்.

இந்த பதிவுகளை எழுதுவதற்கு, துணை புரிந்த நண்பர்களையும், தகவலுக்கு உதவிய தளங்களைப் பற்றியும் மொத்தமாய் மூன்றாம் பதிவின் இறுதியில் பட்டியலிடுகிறேன்.

Comments:
நல்ல பதிவு. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
 
நரேன், முக்கியமானதொரு விடயத்தை எடுத்து விரிவாக எழுதிக்கொண்டு வருகின்றீர்கள். இப்பொழுதான் ஆறுதலாக இரண்டு பதிவுகளையும் வாசித்து முடித்தேன். இந்தியாவில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படவில்லையென்றால், சிவப்பு விளக்குப்பகுதிகள் எனப்படும் பகுதிகளும் இப்படியான சுரண்டல்கள் உள்ள இடமா? தெளிவுக்காக கேட்கின்றேன். மேலைத்தேயங்களில் அரச அங்கீகாரம் பெற்ற இடங்களைப்போன்ற, இந்தியா அரசு அங்கீகரித்த இடங்களைத்தான் சிவப்பு விளக்குப்பகுதியென்று அழைக்கின்றார்கள் என்றுதான் இதுவரைகாலமும் நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் கூறியதுமாதிரி,பாலியல் தொழிலை அங்கீகரிப்பதன் மூலம் பல விடயங்களை ஒழிக்க முடியாவிட்டாலும் குறைக்க முடியுமென்பது மிகவும் உண்மை.
........
இது உங்களின் கட்டுரைக்குத் தொடர்பு இல்லையெனினும், எனது மனதில் பலவருடங்களாய் இருக்கும் கேள்வியொன்று. இங்கே, sexual freedom முழுதாய் இருக்கின்றதாய் சொல்லிக்கொள்ளும் நாட்டில், ஏன் இன்னும் பாலியல் வன்புணர்ச்சிகள், சிறுமிகள் மீதான பாலியல் சுரண்டல்கள் அதிகரித்து வருகின்றதென்று அடிக்கடி யோசிப்பதுண்டு. விருப்பமென்றால், கொஞ்சம் காசைக்கொடுத்துவிட்டு அவரவர் அரிப்பை அதற்கென்று உள்ள இடங்களில் சென்று சொரிந்து கொள்ளலாம்தானே (அதற்காய் விலைமாதர்களின் அவலத்தை தவிர்ப்பதென்று அர்த்தமில்லை). அதைவிட்டு விட்டு ரோட்டில் போகின்றவர்களை, வீட்டில் தனிய இருப்பவர்களை abuses செய்வதற்கான உளவியல் என்னவாயிருக்கக்கூடுமென்று அடிக்கடி இவைபற்றிய செய்திகளை வாசிக்கும்போது நினைப்பேன். அதிலும் சில மாதங்களுக்கு ஒரு பதின்மூன்றோ அல்லது பதின்நான்கு வயதுச் சிறுமியோடு உடலுறவு கொண்ட ஒருவரை (இணையத்தின் மூலம் அறிமுகமாகி இன்னொரு நாட்டிலிருந்து வந்து ஹோட்டலில் தங்கிநின்று சிறுமியுடன் உடலுறவு வைத்துக்கொண்டாராம் அவர்), சிறுமியுடன் சம்மதத்துடன்தான் உடலுறவு கொண்டார் என்று அவரை எந்தத்தண்டனையும் அனுபவிக்கச்செய்யாது 'நீதி'மன்றம் விடுதலை செய்து 'நீதி'யை நிலைநாட்டியது.
........
பாலியல் கல்வி பதின்ம வயதினருக்கு மிகவும் முக்கியமானது. அதைப்போன்றே safe-sexம் ஏற்றுக்கொள்ளலாம் என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏற்கனவே நீங்கள் மற்றும் கார்த்திக் குறிப்பிட்டமாதிரி இன்றையகாலகட்டத்தில் மிக இளவயதிலேயே பருவமடைகின்ற சிறுமிகளும், சிறுவர்களும் ஏதோ ஒருவகையில் பாலியல் உறவில் ஈடுபடவேவிரும்புவார்கள் (நாம் என்னசொல்லி அதை நிராகரித்தாலும்). பாருங்கள், இன்றுகூட ஒரு பத்திரிகையில் பதின்மவயதுக்காரர்களின் பாலியல் விருப்புக்கள் பற்றிய ஓர் ஆய்வின் முடிவை வாசித்திருந்தேன். கிட்டத்தட்ட பதினான்கு வயதிலுள்ளவர்களில் 30%மானோர் oral sexயும், 20% intercourse லிலும் ஈடுபட்டதாய்/ஈடுபடப்போவதாய் கூறியதாய் ஆய்வு சொல்கின்றது. அதிலும் அநேக பதின்மவயதுக்காரர்கள், oral sex உண்மையான் உடலுறவு இல்லையென்ற எண்ணத்தையும், Virginityயோடும், பாதுகாப்போடும் (நோய்கள் தொற்றாது) sexual pleasure and intimacyயை அனுபவிக்கமுடியுமென்று கூறியிருக்கின்றார்கள். அத்தோடு intercourse ஐவிட, oral sexன் மூலம் நோய்கள் பரவும் வீதம் குறைவாயிருப்பதாகவும் வைத்தியர்களும் கூறுகின்றனர். இவை குறித்தெல்லாம் ஆழமாய் உள்ளே செல்ல இப்போது விருப்பமில்லையெனினும், ஆக்ககுறைந்தது இந்தப் பதின்மவயதுக்காரர்கள் பாலியல் உறவுகள் குறித்து ஓரளவு தெளிவாக இருக்கின்றார்கள் என்பதைச் சொல்வதே என் நோக்கம். மேலைத்தேய வாழ்க்கைமுறையின் மூலம்பெறும் முடிவுகளை நமது நாடுகளுக்கு பொறுத்திப்பார்க்க எவ்வளவு தூரம் முடியுமென்பது ஒருபுறமிருந்தாலும், இங்கே ஓரளவு earlyயாக பாலியல் கல்வி கற்பிக்கப்படுவதால் ஆக்ககுறைந்தது பாலியல் நோய்கள், teen pregnacny போன்றவற்றைக் குறைக்கக்கூடியதாக இருக்கின்றது. என்னதான் சொன்னாலும் இவையெல்லாம் எவ்வளவு சாத்தியமென்பது, அவரவர்களின் தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு போன்றவற்றிலும் தங்கியுள்ளது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். (நீங்கள் எழுதிய விடயத்தைவிட்டு வெளியே போனதற்கு மன்னிக்கவும் நரேன்.)
.......
//என் நண்பர் ஜோக்காக சொல்லும் ஆனால் மிக தேர்ந்த வாசகம், "Indian songs are the height of porn. The best sex you can ever have with dress" அது தான் உண்மையும் கூட//
உண்மைதான். Dreams படம் இங்கே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோது, 'Dreams, soft-porno movieயாம் பார்க்கப்போவோமா' என்று ஒரு நண்பன் அழைத்தது ஞாபகத்திற்கு வருகிறது.
 
பாரி,டிசே நன்றிகள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும், பாலியல் தொழில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. சிகப்பு விளக்கு பகுதிகள் என்பவை மொத்த சரக்கு கடை போன்றவை. அங்கும் ரெய்டுகள் நடக்கும். ஊருக்கே தெரிந்தாலும், மாமூல் வாங்கியும், அரசியல் செல்வாக்கும் இருப்பதால்,அங்கெல்லாம் பெரிதாய் போலீஸிடம் பிரச்சனைகள் இருக்காது என்பது தான் நிலவரம். ஆனால், எங்குமே பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படவில்லை.

நீங்கள் சொன்ன பதின்ம வயதினரின் கருத்தை நானும் பிரதிபலிக்கிறேன். கனடா சூழ்நிலையோடு, முழுதும் ஒத்து போகவில்லையென்றாலும் கூட இரண்டு வருடத்துக்கு முந்திய இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் திருமணத்துக்கு முன் உறவு கொள்வோரின் , உறவு வைத்துக் கொள்ள விரும்புவோரின் எண்ணிக்கை நிறைய பழைமைவாதிகளின் வயிற்றில் அமிலத்தை கரைத்தது.

பாலியல் தொழிலை அங்கீகாரம் கொடுப்பதால், எதுவும் உடனே மாறிவிடப் போவதில்லை. ஆனால், இந்தியாவில் இன்னமும், அங்கீகாரம் பெறும் தொழிலுக்கு இருக்கும் அடிப்படை மரியாதை கூட தெரியாமல் உளறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தான் மனது கனத்துப்போகிறது. பாலியல் தொழிலை அங்கீகரிப்பதின் மூலம் சிறார் பாலியல் அத்துமீறலை பெருமளவு தடுக்க இயலும். ஆசியாவின் பீடோஃபைல்களின் சொர்க்கமாக விளங்குவது தாய்லாந்து கிடையாது, கோவா என்றால் நம்புவீர்களா? ஆனால் அது தான் நிலை இங்கே. இதனை கொஞ்சமேனும் மாற்ற/குறைக்க முடியுமென்றால், அது பாலியல் தொழில் அங்கீகாரத்தினால் மட்டுமே முடியும்.
 
நாராயணன், பாலியல் தொழில் அங்கீகாரம் மிக அவசியமானது.

நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரில் எஸ்.ஐ-ஆக இருந்த, நேர்மையான மனிதர் என்று சொல்லப்பட்ட ஹானஸ்ட் ராஜ் என்பவர் ஒரு முறை ஒரு பாலியல் தொழிலாளியின் கையைப்பற்றி புல்லட்டின் கொதிக்கும் சைலன்ஸரில் வைத்தார். அப்போது அவள் அலறியதை நான் பார்த்தேன்; உள்ளங்கை வெந்துவிட்டது. அதை நான் மறக்கவே இல்லை. அதிகாரம், ஒழுக்கம், பாலுறவு இவைகளின் இடையே இருக்கும் நுட்பமான தொடர்பு பின்னாளில் ஆன்மீக காரணங்களை முன் வைத்து தேடுகையில் புரிந்தது. அன்று நடந்தது மேலோட்டமாகப் பார்த்தால் கொடுமை என்று புரியும். ஆனால் அந்தக்கொடுமையைச் செய்யத்தூண்டியது ஒழுக்கம் சார்ந்த மனநிலை; ஆனால் அதே சமயத்தில் அதில் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு எந்த தண்டனையும் இல்லை; சில வசைகளும், கேலிகளும் தான்.

இந்த விசயத்தில் செய்யவேண்டியது சில.
1. பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம்- அது தொடர்பாக நீங்கள் எழுதியிருக்கும் உரிமைககளை உறுதிப்படுத்துவது

2. எல்லோருக்கும் முறையான, பாதுகாப்பான பாலியல் உறவுகளைப் பற்றிய கல்வி

3. குழந்தை-பாலுறவு, பாலியல் வல்லுறவுக்கு மிகக் கடுமையான தண்டனை (மரண தண்டனை அல்ல)

4. அங்கீகாரம் பெற்ற தொழிலாளிகள் விடுதிகள், சுற்றுலாத் தலங்கள் இவைகளில் அச்சமின்றி தங்கள் தொழிலைச் செய்யும் உரிமை.

2. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களுடைய ஒழுக்கத்தை, கண்ணியத்தை, அறவியலை, பண்பாட்டை, ஆன்மிகத்தை, அதிகாரத்தை, அரசியலை அவர்களது கால்களுக்கு இடையில் இருந்து விடுவிக்கும் கல்வியைப் பரவச்செய்தல். மேற்சொன்ன தமிழர்களுடைய இத்தனை குணாதிசயங்களையும் சுமந்துகொண்டிருக்கும் பெண்/ஆண் குறிகளை நினைத்தால் பாவமாய் இருக்கிறது; இவைகளில் இருந்து அவற்றை விடுவித்து தமது இயல்பான தொழில்களைச் செய்யுமாறு செய்தாலே பல பிரச்சனைகள் மறைந்துவிடும்.

நன்றி நாராயணன். உலகத்திலே மிகவும் hypocritical-ஆன சமூகமாக நான் நம்முடையதைத்தான் நினைக்கிறேன்.
 
பின்னூட்டம் அளிப்பதில்லை என்ற முடிவில் இருந்ததால் போன பதிவில் எழுதவில்லை. அதை தளர்த்திகொண்டு..

திண்ணையில் மோகன் என்று ஒருவர் இது குறித்த சில கட்டிரைகளி எழுதியுள்ளார். அவைகள் முக்கியமானது. அதற்கு பிறகு மோனிகா ஒரு கட்டுரை எழுதியிருப்பார். இது தகவலுக்கு.

நாராயணம், மிக சிறந்த வேலை செய்கிறீர்கள். மிகவும் தேவையான பதிவு. பல காரனங்களால் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட வேண்டும். தொடருங்கள்.
 
அடசே... காலையில இருந்து இந்த ப்ளாக்கர் தொல்லை பெரும் தொல்லையா இருக்கு. எத்தனை வாட்டி பின்னூட்டம் விட வந்தாலும் உதச்சி அனுப்பிக்கிட்டே இருந்தது. சொல்ல வந்தது என்னன்னு எனக்கே மறந்து போச்சி....
 
நாரயணன்
உங்களின் இந்த பதிவுகளை படித்து வருகிறேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
பலியல் தொழிலை சட்டபூர்வமாக ஆக்குவதன் மூலம் அவர்கள் தங்களுக்குள் சங்கம் அமைத்து தங்களின் உரிமை கோரவும், மருத்துவ, மனநல ரீதியாக சிகிச்சை பெறவும் முடியும். மேலும் பால்வினை நோய்கள் உள்ளவர்கள் மருத்துவர்களால் அவமானத்திற்கு உள்ளாவதையும் தடுக்க முடியும் என நினைக்கிறேன். அமெரிக்காவில் படிக்கும் நிறைய இந்திய மாணவர்கள் (உதவி தொகைஇல்லாதவர்கள் )பாலியல் தொழிலாளிகளாக பணி செய்து, பொருளீட்டுவதும், பால்வினைநோயால் பாதிக்க பட்டு அரசு நடத்தும் மருத்துவ மனைக்கு வருவதும் உண்டு. இதில் கொடுமை என்னவெனில் இம்மாணவர்கள் ஊருக்கு செல்லும் போது எதையும் சொல்லாமல், திருமணம் செய்துகொண்டு வருவதும், அவர்களின் மனைவிகளுக்கு நோயை பரவச் செய்வதும் ஆகும்.
டிசே: வாய்வழி உறவு கர்ப்பமாகாமல் இருக்க வழி செய்யுமே தவிர, சிலவகை கிருமிகள் பரவவும் காரணமாகிறது. கரு உருவாவதில்லை என்ற காரணத்தினால் நிறைய அமெரிக்க மாணவர்கள் இதில் ஈடுபட்டு அதன் மூலமாக மன சிதவும் மற்ற மாணவர்களால் அடக்குமுறைக்கு ஆளாவதும் அதிகம். பள்ளி கவுன்சிலர்கள் மாணவர்களை இதில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.
தங்கமணி
நீங்கள் சொல்வது உண்மை. இங்கே ஒழுக்கம் என்பது கலவியை சுற்றியே. போய் சொல்வதும், புறம் பேசுவதும், அழுக்காறு இவறரை விட படவை விலகியதால் தற்கொலை செய்யும் பெண் தெய்வமென போற்றப்படும் நிலை மாறவேண்டும்.
 
நாராயணன் என்னவோ போங்கள். இந்தியாவை உருப்படியாக்குவதற்கான மாற்றங்கள் வரும் என்பது என்னவோ எனக்குக் கற்பனையான விஷயம் போலுள்ளது. நம்பிக்கைதானே வாழ்க்கை என்று கூறாதீர்கள். அரசு மதம் என்று எல்லாமே இந்திய மக்களை நிமிர விடாமல் அல்லவா வைத்திருக்கின்றது. இதற்குள் பெண்களுக்கான நியாயமான கோரிக்கையை யார் கண்டு கொள்ளப்போகின்றார்கள்
 
அன்பின் நாராயணன் உங்கள் முதலாவது பதிவு படித்தே பின்னூட்டமிடவேண்டுமென நினைத்திருந்தேன்.அதற்குள் இரண்டாவதை எழுதிவிட்டீர்கள்.

எதற்கெடுத்தாலும் ஒப்பிடுவது தவறுதான் ஆனால் நல்லவற்றை ஒப்பிட்டுப் பார்த்துச் சீர்படுத்துவதில் தவறில்லை.

சிங்கப்பூரில் பாலியல் தொழில் சட்டபூர்வமானது.அதற்கு உரிமம் உண்டு இருவாரங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை குறிக்கப்பட்ட இடங்கள் என்று பலவிதமான வசதிகளும் சலுகைகளும் உண்டு.இவற்றை இந்தியாவில் கொண்டுவந்தால் ஆகக்குறைந்தௌ பதின்ம வயதினர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறையைக் குறைக்கலாம்.

இந்தியா பாலியல் தொடர்பான கடுமையான சட்டங்கள் இயற்றமுன்னர் அதற்கு வடிகால் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.
 
ரோசா சொன்ன மோகனின் கட்டுரைகள் இங்கே.
http://www.thinnai.com/pl111901.html
http://www.thinnai.com/pl0822035.html
இரண்டாம் சுட்டி கட்டுரையின் கீழே இன்னும் 3 கட்டுரைகள் உண்டு.
 
நாராயன், முதல் பதிவிலே சொல்லவேண்டுமென்று இருந்தேன், ஆங்காங்கே(சில இடங்களில்) ஒரு அரசியல் மேடைப்பேச்சு போன்ற நடை இருப்பதாகப்பட்டது. அதைத் தவிர்த்தால் நலம் என்று நினைத்தேன். அன் -கான் சியஸாய் செய்வதாய் இருந்தால், கவனிக்கவும் நான் சொல்வது தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.
 
காலையில் கூகுள் சாமி அருளியது இது. யூ.கே விலே பாலியல்தொழில் ஈடுபடு(த்தப்படு)ம் சிறார்களை குறித்து, அவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை குறித்துப் பேசுகிறது.

http://www.dfes.gov.uk/acpc/safeguardingchildren.shtml
 
விஜய், பத்மா அரவிந்த், கறுப்பி, ஈழநாதன், கார்த்திக் நன்றிகள்.

கறுப்பி, நம்பிக்கையில் தான் வாழ்க்கை இருக்கிறது. மறுநாள் காலையில் உயிரோடு இருப்போம் என்கிற அசாத்திய நம்பிக்கையில் தான் இட்லிக்கு ஊரவைத்து படுக்கபோகும் மக்கள் நாம். மோகன் பேசியிருக்கிறார். கார்த்திக் பேசியிருக்கிறார்.வேறு யாராவது கண்டிப்பாக பேசியிருப்பார்கள். இன்று நான் பேசுகிறேன். இது ஒரு தொடர்ச்சி. தொடர்ந்து வற்புறுத்தல்கள் மூலமாகவே இம்மாதிரியான யுக மாற்றங்கள் நிகழும் சாத்தியங்கள் இருக்கின்றன. கணவனுடன் உடன்கட்டையேறுதல் கூட ஒருகாலத்தில் மாற்ற முடியாது என்று தான் நினைத்தார்கள். இன்று மாறிவிட்டது. அதுபோலதான் இதுவும்.

ஈழநாதன், ஒப்பீடல்களில் எனக்கு எவ்விதமான பிரச்சனைகளுமில்லை. ஆனால், நம்மாட்கள், சிங்கப்பூரின் வளர்ச்சியை மட்டும் ஒப்பீட்டு, விமான நிலையம் வெளியே வந்தவுடன் ரோட்டில் எச்சில் துப்புவார்கள். அதுப்போன்ற நிலை இங்கு இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

கார்த்திக், சுட்டிகளுக்கு நன்றி. என்னுடைய குலதெய்வமும் கூகிள் சாமிதான் ;-) அரசியல் மேடைப்பேச்சு வாசனை எங்கே அடிக்கிறது என்று தனியாய் மடலெழுதுங்கள். பார்க்கிறேன். ஆனால், தெரிந்தே, சில இடங்களில் அரசினையும், ஒப்பீட்டையும் செய்திருப்பேன். அது அவமானத்தாலும், அரசின் அலட்சியத்தையும் சொல்லுவதாய் இருக்குமேயொழிய, தெருவோர கழகப் பேச்சு போலிருக்காது என்று நம்புகிறேன். மடலை எதிர்ப்பார்க்கிறேன்.
 
நரைன்,

மிக நல்ல பதிவு. மூன்றாம் பகுதியையும் படித்துவிட்டு பிறகு வந்து பின்னூட்டமிடுகிறேன்

வினோபா
 
Narain
Good write up.
Remember things are chaning from bad to worse in our country.
The morality of public is degrading by the second.
We could rather watch a porn instead of tami/telugu hindi movie, vakram romba jasthi ayaipochu.
Do you think only certain economically backward and other socities unforunates have been pushed to prostn. time for reality check, do you know whats going on metros like Delhi,Mumbai,Mangalore?
This has become million dollar/rupees business.
According to recent Times of India report nowadays people with excellent education background are taking this business.These pimps are well educated folks and they lures college girls,housewife,models and actress
They cooly make Rs10,000 to all the way even to 1lakh per day.
Pretty scary !!
So do we still want to make this thing legalized?!!
Even the most liberal country like USA its a crime, except if I am right its allowed in Las Vegas
I may be corrected on that

KKNK
 
Thanks for such a powerful writeup. Looking back, luring young into prostitution is a worldwide phenomina. A while ago, I watched a documentary on smuggling of girls from Baltic to UK. Same can be said about young girls in the US - where I live. It is a very profitable biz for pimps and detremental for the society as a whole.

Some level of sexual freedom and education might help youngsters from becoming victims in our country.
 
நல்ல கட்டுரை நரைன். மனதை ரொம்ப பாதித்த விசயங்கள். பெரிய பெண்களைப் பற்றி என்றாலும்கூட மனதை சற்று எளிதாக்கலாம். குழந்தைத் தொழிளாலர்களா... அய்யோ! ரொம்ப பாவம்.

அரசே கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து பாலியலை அங்கீகரிக்கலாம். இதன்மூலம் கற்பழிப்பு, காமக் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.

கல்கத்தா ரயில்வேயில் பணிபுரியும் என் நண்பன் சொன்ன தகவல் என்னை மேலும் நிலைகுலையச் செய்தது. சோனாகஞ்ச் பகுதியில் 8 வயது முதலாகவே குழந்தைகளை இதில் ஈடுபடுத்துவார்களாம்!!!

"அடப்பாவமே?... எப்படிடா?"

"ப்ளேடு வெச்சி கீறிடுவாங்கடா!"

ச்சே... மிருகங்கள்!!!
 
நல்ல பதிவு, பாலியல் தொழில் அங்கீகரிக்கபட வேண்டும் என்னும் உண்மையை ஆணித்தரமாக, தேவையான புள்ளி விவரங்கள், எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளீர்கள்.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]