Apr 12, 2005

பைனாகுலர் - ஏப்ரல் 2வது வாரம்

தனிப்பதிவு தொடங்கியவுடன் நிறைய எழுதி தீர்க்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை. நான் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்தின் முதல் பதிவிலேயே தெளிவாக சொல்லியிருந்தேன். எழுதுவது என்று வந்துவிட்டாலே, எங்கிருந்தோ ஒரு போலித்தனம் வந்து விடுகிறது என்று. சில பதிவுகளில் நடக்கும் சண்டைகள் பார்க்கும்போது கருத்து சுதந்திரத்தின் எல்லை எதுவரை என்னவென்று என்னையே கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு பதிவின் மூலமாய் ஏதேனும் நல்ல விஷயங்கள், அல்லது நல்லது செய்யாவிடினும் எதுவும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க செய்வது அவசியமென்று நினைக்கிறேன். சரி. விடுங்க. இப்படி பேச ஆரம்பித்தால், அப்புறம் இது ஒரு தனிவிவாதமாகிவிடும்.

கொஞ்ச நாட்களாகவே, எழுதுவதற்கு நிறைய நேரம் கிடைப்பதில்லை. எழுதினால், முழுமையாக எழுத வேண்டும் என்கிற எண்ணமுடையவன் நான் (இதனால், மற்றவர்கள் முழுமையில்லாமல் எழுதுகிறார்கள் என்று அர்த்தப்படுத்திக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல). என் பதிவினால் ஏதேனும் நல்ல காரியங்கள் நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் தான் எழுதுகிறேன். நிற்க. சொல்லவந்த விஷயத்தை விட்டு சுற்றி வளைத்து மூக்கினைத் தொடுகிறேன்.

அவ்வப்போது நான் படிக்கும், கண்டறியும் விஷயங்களை தொகுத்து வைக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனாலும், வழக்கமான சோம்பேறித்தனத்தாலும், பிற கவனசிதறல்களினாலும் செய்ய இயலவில்லை. அதற்காகவும், நான் படிக்கும் விஷயங்களை மற்றவர்களையும் பார்க்கவைத்து சித்ரவதை செய்யவேண்டும் என்கிற மிக உயர்ந்த நல்லெண்ணத்துடனும் தான், ஆரம்பிக்கிறேன் - பைனாகுலர்.

பைனாகுலரில் பார்க்கும்போது சில மேட்டர்களும்,மீட்டர்களும் மாட்டும். அது அரசியலாகவோ, அறிவியலாகவோ, நுட்பமாகவோ, பொருளாதாரமாகவோ, சினிமாவாகவோ, சமூகமாகவோ, கவிதையாகவோ, செய்தியாகவோ, வேறு எதெதோ ஆகவோ இருக்கலாம். நான் படித்து எனக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். அதுக்கு தானே வலைப்பதிவு என்கிறீர்களா, உண்மை ஆனால், எனக்கு பிடித்ததை எழுத வேண்டுமானால், விரிவாக எழுத வேண்டும். அதிலும் என் பார்வைதான் இருக்கும். நான் அதை தாண்டி, நான் படித்த விசயத்தினை எவ்வித எழுத்து ஜிகினாக்களன்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த உரலை கிளிக் செய்து நீங்களும் பாருங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது ஜெனிப்பர் லோபஸின் வீடியோவோ, மைக்கேல் ஜாக்சன் வழக்கோ, இந்திய கிரிக்கெட் அணியின் திறமையோ வேறு ஏதோ. இந்த பதிவில் மாத, வார விஷயங்கள் போட்டிருப்பதால் உடனே இது தொடர்ச்சியாக வரும் என்று தப்பாக யோசிக்காதீர்கள். பைனாகுலருக்கு காட்சிகள் எப்படி மாட்டுகிறதோ அதைப் பொறுத்தே. எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல, நான் "கருத்து கந்தசாமி" அல்ல ;-)

பைனாகுலர் என்கிற பெயரை என்பதை தாண்டி, இந்த பதிவினைப் படித்து வேறு நல்ல பெயரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சரியான விடை சொல்லும் அதிர்ஷ்டசாலிக்கு, குலுக்கல் முறையில் எதுவும் கிடையாது. சென்னை வந்தால், லெமன் டீயும், குஸ்காவும் என் சொந்த செலவில் வாங்கி தருகிறேன்.

இந்த சுட்டிகள் எந்த விதமான பாகுபாடுகளாலும் வரிசைப்படுத்தப்படவில்லை. என் திருப்திக்கு நான் வரிசையிலமைத்தது தானிது. இனி இந்த பதிவுக்கான பைனாகுலர் - இதழ் 10342 ;) [இந்த இதழெல்லாம் சும்மா ஒரு பில்ட்-அப்தான்]

1. சுனிதா நாராயண், கோலாக்களில் பூச்சி மருந்து அதிகமாக இருக்கிறது என்கிற சர்ச்சையினை கிளப்பி, நிருபித்துக் காட்டியவர். அவரின் தண்ணீர் மேலாண்மை பற்றிய கருத்துகள் படிக்க கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது - பார்க்க

2. அமெரிக்க டாலர் சரிந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் இன்னமும் ஏன் பிற பொருளாதாரங்களைப் போல விழவில்லை. அதுவும், அமெரிக்கா இயங்குவதற்கு ஆசியா முக்கியமாக சைனாவும், ஜப்பானும் எவ்வளவு முக்கியம், டாலர் எங்கே போகிறது என்பது பற்றிய நியுயார்க்கரில் வந்த கட்டுரை - பார்க்க

3. மன்னர்கள் படையெடுத்தலும், இஸ்லாமிய மற்றும் இந்து படையெடுத்தலுக்கான அடிப்படை காரணங்கள், மாறுபாடுகள் குறித்து ஆ.சிவசுப்ரமணியன் எழுதியிருக்கும் வித்தியாசமான கட்டுரை. தட்ஸ்டமில்.காமின் புதுவிசையில் வந்திருக்கிறது - பார்க்க

4. வாழ்வின் 10 அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளைப் பற்றிய நியுசயன்டிஸ்டில் வந்திருக்கும் அதிஅற்புதமான கட்டுரை. முக்கியமாக கண்கள், மூளை, இறப்பு, பாலுறவு, போட்டோசிந்ததிஸ் (தமிழில் என்ன!?) என ஒரு மார்க்கமாக வாழ்வின் அற்புதங்களை அணுகும் நீள்கட்டுரை - பார்க்க

5. செய்தியோடை பற்றி தெரிந்திருந்தாலும், செய்தியோடைகளின் பலம், அவற்றின் வர்த்தக பயன்கள், வணிக மேன்மைகள் குறித்து மார்க்கெட்டிங் ப்ரோப்ஸ் குறித்திருக்கும், சிறிய ஆனால், தெம்புட்டக்கூடிய குறுந்தொகுப்பு - பார்க்க

இதைத்தாண்டி நான் சொல்லவிரும்பிய புலிகளின் தேசம் பற்றிய தெஹல்கா விஷயத்தினை பத்ரி சொல்லிவிட்டார். வேறெதாவது சுவாரசியமாக மாட்டும்வரைக்கும், பைனாகுலர் சுற்றிக் கொண்டிருக்கும். இதை எழுதுவதால், நான் பதிவு எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. இதில் சொல்லியிருக்கும் விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், விரிவாக என்னால் எழுத முடியாமல் போய்விடும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

எழுத மறந்து விட்டுப் போனது - இந்த மாத "புதிய பார்வை" - தொன்மங்களின் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. முக்கியமாக அதில் பட்டது பேரா.தொ.பரமசிவனின் - "பாமரர் ஏதறிவாரும்", விஸ்வநாதன் கண்டராதித்தனின் - "கிராமிய தொன்மங்கள்: சோறு போடுங்காயீ" யும், எம்.எஸ். செல்வராஜின் "தொதவர்... கோத்தர்... பனியர்..."ரும் மிக முக்கியமானதாக தெரிகிறது. இதில் வரும் இந்திரனின் "சேரிகள் எரியும் நகரம்" போலவே தெஹல்காவில், மும்பாயில் புல்டோசர்களால், அப்புறப்படுத்தப்படும் சேரிகள் பற்றிய சேதியொன்று மாற்றுக் கருத்தினை முன்வைக்கிறது.

பார்ப்போம் எவ்வளவு தூரம் பைனாகுலர் போகுமென்று.

Comments:
போட்டோசிந்ததிஸ்: ஒளித்தொகுப்பு
 
This comment has been removed by a blog administrator.
 
ஆ.சிவசுப்ரமணியன் இன் கிறீஸ்தவமும் சாதியும் பற்றிய நூலை, படித்திராவிட்டால், படித்துப்பாருங்கள்; அருமை. நாடார் - வேளாளர் இடையேயான வடக்கன்குளம் தேவாலயப்பிரச்சனையை ஆதாரங்களுடன் ஆய்ந்திருக்கிறார். வரலாற்றைத் தள்ளி நின்று பழைய ஆவணங்களைத் தேடிச் சேகரித்து ஆய்ந்து, இடங்களைச் சென்று கண்டு மிகவும் பரந்த பின்னிணைப்போடு எழுதியிருக்கின்றார் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன். திருவனந்தபுரத்தின் சீலைப்போராட்டம் பற்றியும் முன்னர் இவர் எழுதிக் காலச்சுவட்டிலே வந்திருக்கின்றது.
 
உருப்படாததுக்கு சம்பந்தமில்லாதது:P

இந்த tag
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" />
title tag க்கு முன்னால் வந்தால் உங்கள் பக்கம் திறக்கும்போதே யுனிகோடாகத் தெரியும். இப்போது பலசமயம் நாமாகப் போய் utf-8 தேர்வு செய்யவேண்டியிருக்கிறது
 
சிவசுப்பிரமணியனின் கட்டுரையை கவனப்படுத்த வேண்டுமென நான் நினைத்திருந்தேன். அதாவது சங்க பரிவாரங்கள், தமிழ் இயக்கங்கள் இந்தியர்கள் 3000 வருடங்களாக எந்த நாட்டையும் தாக்கி அழித்ததில்லை, அடிமைப்படுத்தியதில்லை, அப்படி ஒரு வரலாறு நமக்கில்லை, முகலாயர்கள் கொடுமை செய்தவர்கள் என்றெல்லாம் ஒரு ஜிகினா கதை சொல்வார்கள் (ஒரு முறை இது போன்ற ஒன்றை அப்துல் கலாமும், இந்திய அணு ஆயுதத்தைப்பற்றிச் சொல்லும் போது சொன்னதாக நினைவு).

புத்தக விபரங்களுக்காக பெயரிலிக்கும் நன்றி.

பைனாக்குலர் நன்றாகப் பார்க்கிறது!
 
நல்ல விடயம் நரேன்.
....
"உருப்படாததுகள் வாசிக்கச் சில உருப்படிகள்"
எப்படி நம்ம தலையங்கம் நரேன்? எங்கே கொண்டுவாருங்கள் என் பரிசை, இல்லை இருக்காது உடம்பில் உங்களுக்கு சிரசு :-). Warning from Vampire: டிசேயிற்குக் கொடுக்காது பெயரிலிக்கு பரிசு கொடுத்தால், உங்கள் இரண்டுபேரின் கதையும் அம்பேல்.
 
'பைனாகுலர்' என்று இங்கிலீஷில் பேரு வைக்க பயமா இல்லையா?

அது சரி. சென்னையிலே குஸ்கா கிடைக்குதா? அதுக்கு ஃபேமஸ் சேலம் இல்லையா?
முடிஞ்சா அதோட 'ரெஸிபி' ( யாரையாவது கேட்டு) எழுதுங்களேன். ஒரு முப்பத்தி
அஞ்சு வருசமாச்சு இதைச் சாப்பிட்டு!

நல்லாதான் பாக்குது உங்க பைனாகுலர்! நல்லா இருங்க!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
ஏங்க நாராயணன், இப்பவே படிக்கறதுக்கு நேரம் பத்தாம அல்லாடவேண்டியிருக்கு, இதுல இன்னும் சுட்டிகளைப் போட்டுத்தாக்கறீங்களே ;-) பைனாகுலர் நன்றாக உள்ளது.
 
சிவசுப்பிரமணியனின் 'கிறித்துவமும் சாதியும்' பற்றி.

இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்ததற்கு வேறு பல காரணங்களும் உண்டு. தமிழில் இது போன்று, மேற்கத்திய ஆராய்ச்சி முறை வழுவாமல் சுத்தமாக எழுதப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகங்கள் குறைவு. அடிக்குறிப்புகள், முழுமையான உதவிநூல் பட்டியல், ஏகப்பட்ட பின்னிணைப்புகள் என்று ஓர் ஆராய்ச்சியாளனுக்குத் தேவையான அத்தனையும் அதில் இருக்கும்.

இத்துடன் ஆசிரியரின் பிற நூல்கள் பற்றிய சிறு குறிப்பு இந்தப் புத்தகத்தில் உள்ளது. அந்தப் புத்தகங்களையெல்லாம் நான் தேடி வருகிறேன் என்றாலும் அவை என் கண்ணில் பட்டதில்லை. அவை இங்கே:

1. பொற்காலங்கள் - ஒரு மார்க்ஸிய ஆய்வுரை (1981)
2. அடிமைமுறையும் தமிழகமும் (1984)
3. வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986)
4. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986)
5. மந்திரம் சடங்குகள் (1988)
6. பின்னி ஆலை வேலை நிறுத்தம், 1921 (1990; ஆ.இரா.வேங்கடாசலபதியுடன் இணைந்து)
7. வ.உ.சி. - ஓர் அறிமுகம் (2001)
8. மகளிர் வழக்காறுகள் (2001)
 
பைனாகுலரை கொடுத்தாலும் கொடுத்தீங்க, உங்க நேர நெருக்கடியை எங்க மேல திணித்தி விட்டீர்கள். :-) அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இப்போது நீங்கள் கொடுத்த நல்ல பல தகவல் சுட்டிகளை படிக்க நேரம் ஒதுக்க வேண்டுமே.

பைனாகுலரை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி
 
ரமணி, நன்றிகள் பல. இந்த புத்தகத்தினை தேடிப் பார்க்கிறேன். காசி, நீங்கள் சொன்னது செய்தாகிவிட்டது. நன்றிகள்.

தங்கமணி, டிசே (ஒரே ஒரு சொல்லாக தேடிக் கொண்டிருக்கிறேன். அதனால், போட்டியிலிருந்து நீங்கள் விலக்கப்படுகின்றீர்கள் ;-)), துளசி கோபால் (அருமையான குஸ்கா சென்னையில கிடைக்கும், கொஞ்சம் அசைவ ப்ளேவர் வேண்டுமென்றால் ஆயிரம் விளக்கு, சைவ ப்ளேவர் வேண்டுமென்றால் ஸ்டெர்லிங் சாலை. சமையல் குறிப்பு கேட்டுப் பார்க்கறேன்), இராதா கிருஷ்ணன், பத்ரி (சாவகாசமா ஒருநாள் வந்து மற்ற புத்தகத்தை தூக்கிட்டு போறேன்), விஜய் நன்றிகள் பல.

பத்ரி, உங்களிடம் அந்த புத்தகமிருந்தால் கொடுங்கள். படித்து விட்டு தந்து விடுகிறேன். ஏற்கனவே, "பண்பாட்டு அசைவுகள்" "சே குவாரா வாழ்வும் மரணமும்" போன்ற புத்தகங்களை வாங்கியவுடனேயே என்னை மேலும் கீழும் வீட்டில் பார்க்கிறார்கள். அதனால், கொஞ்ச நாளைக்கு இரவல் புத்தகங்களில்தான் வாழ்க்கையை ஒட்டலாமென தீர்மானித்து வைத்திருக்கிறேன். ;-)

தங்கமணி, ரமணி, இதே அலைவரிசையில் பெண்களும், பெண்களின் மேல் வைக்கப்பட்ட அரசியல் கருத்தாக்கத்தினைக் கொண்ட புத்தகங்களை பரிந்துரைக்கமுடியுமா? சங்ககாலம் முதல் உதாரணங்களிருப்பின் நன்றாக இருக்கும். தமிழ் சமூகம், பாலியல் பற்றியும், பெண்களின் பங்களிப்பு பற்றியும், எப்படிப் பார்த்து வருகிறது என்பது வரலாற்றுப்படுத்தப்பட்டுள்ளதா?
 
“….The dollar has fallen for a simple reason: Americans spend a lot more than they save…”

So, while Americans earn, spend and push their currency down, Asians earn, save and buy American gilts and pull the American currency up :-)

Interesting analysis :-)
 
/இதே அலைவரிசையில் பெண்களும், பெண்களின் மேல் வைக்கப்பட்ட அரசியல் கருத்தாக்கத்தினைக் கொண்ட புத்தகங்களை பரிந்துரைக்கமுடியுமா?/

நாராயண், எனக்குத் தெரியவில்லை. ஒரு பொடிச்சி போன்றோருக்குத் தெரிந்திருக்கக்கூடும். பத்ரிபோல யாராவது அப்படி ஒரு பட்டியல் தந்தால், அஃது உங்களோடு சேர்த்து எனக்கும் பயனாக இருக்கும்.

ஆனால், வாசித்தவற்றிலே, தேவதாசிகள் குறித்து ஓர் ஆங்கிலப்புத்தகத்தினைப் பரிந்துரைக்கமுடியும்.
"Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu" (South Asia Research)
Leslie C. Orr
Oxford University Press, 2000, pp. 305+xii;
ISBN: 0 19 509962 1
(hbk)
Donors, Devotees, and Daughters of God: Temple Women in Medieval Tamilnadu

[பழங்காலம் பற்றிப் பெரிதாகப் பேசாதபோதும், வாசிக்கக்கூடிய இன்னொரு புத்தகம்,
Womanhood in the making : domestic ritual and public culture in urban South India / Mary Elizabeth Hancock.
Published: Boulder, Colo. : Westview Press, 1999;
ISBN: 0813335833
xv, 286 p.
(hbk)
Womanhood in the making : domestic ritual and public culture in urban South India
 
நன்றி ரமணி. பார்க்கிறேன்.
 
This comment has been removed by a blog administrator.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]