Apr 15, 2005

என்ஹெடுவான்னா - உலகின் முதல் பெமினிஸ்ட்

ஓ கோபுரங்களே!
பெருமூச்சுக்களின் நிலமான
இந்த மெசபடோமிய மண்ணைவிட்டு நீங்க இதுவே நேரம்.
சதிகளில் ஆழ்ந்து
செத்தவர்களை ஏராளமாக புதைத்திருக்கிறாய்
உன் அழிந்த நாட்கள்
வெறுமையின் காலம்

என் நாளங்களை நிரப்ப
கழிவிரக்கத்தின் குருதிவழிந்து கொண்டிருக்கிறது
என் நெஞ்சினின்று தப்பித்தப் புலம்பல்
பவரியன் கோயிலில் அனாதையாய்க் கிடக்கிறது
மூடு பனியால் மறைக்கப்பட்ட நிலவினைப் போல

ஓ கோபுரங்களே!
எங்களை யார் காபாற்றுவார்
ஏமாற்றும் என் பாலை நிலத்தையும் என் அமைதியையும் காபாற்று.

என்னைக் கைவிடு
நீ என்ன விரும்புகிறாயோ அதைச்செய்
காற்றின் போக்கில் என்னைப் பயிரிடு
என் மகிழ்ச்சியைச் சிதறவை
முகில்களும் வீண்பேச்சுக்களும் நிறைந்த வரைப்படத்தின் மீது
இன்று அவள் சென்றாள். அங்கு அவள் ஒய்வெடுத்தாள்
அவள் மனத்திலிருந்து எழுகிறது ஜின்னினுடைய அழுகை
அவள் உதட்டில் ஒய்வெடுத்தன. உருக்பகுதி எல்லைகள், அக்காடினுடைய ரகசியங்கள்
அவள் உடல் மலர்ந்தது எல்லா வதைகளுக்கும் ஆட்பட்ட தோட்டங்களில்
அழிவின் மகுடத்தின் மேல்
அவள் சார்கன் நகையாய் இருந்தாள்
சிதறலின் பெண் மதகுருவாக
சாபத்திற்குள்ளான உன் சிறுபலகைகளில்
எழுத மறக்காதே!
என் எஹெடுவான்னாவின் நெஞ்சம் சிறப்பானது
கொடுங்கோலனின் நற்செய்தியை விட
இந்த கவிதை ஒரு ஈராக்கிய கவிதை. எழுதியவர் அமல் அல் ஜீபுரி (1965) ஒரு ஈராக்கிய பெண் கவிஞர், இதழாளர், மொழிபெயர்ப்பாளரும் கூட.இவர் தற்போது ஜெர்மனியில் இருக்கிறார், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் தன் இளங்கலை படிப்பினை முடித்தவர். இதனை தமிழில் மொழி பெயர்த்தவர், புதுவை சீனு தமிழ்மணி. இந்த காலாண்டிதழ் "திசை எட்டும்" மொழிபெயர்ப்பு சிறப்பிதழாக வந்துள்ளது. அதில் இடம் பெற்ற முக்கியமான கவிதை இது. கவிதையை விட, இந்த கவிதையில் பாடப்படும் பெண்ணான என்ஹெடுவான்னா பற்றி படித்தால் மலைப்பாக இருக்கிறது.
Calcite disk of Enheduanna, daughter of Sargon of Kish, found at Ur

யார் இந்த என்ஹெடுவான்னா ?

என்ஹெடுவான்னா (Enheduanna - 2285-2250 கி.மு) தோராயமாக 4300 வருடங்களுக்கு முன் மெசபடோமிய என்றழைக்கப்படும் இன்றைய ஈரான்/ஈராகில் வாழ்ந்த புரட்சிக்கரமான எழுத்தாளர், பெண்ணியவாதி. உலகின் பெண் இலக்கியத்தின் முதல் எழுத்தாளராகவும், பெண்ணியம் சிந்தனை கொண்டவராகவும், பெண்ணிய சிந்தனைகளையும், கருத்துக்களையும் பதித்தவராக இவரை அடையாளம் சொல்லுகிறார்கள். இவரின் எழுத்துக்களில் மிக முக்கியமாக சொல்லப்படுவது 3 படைப்புகள். அதிலும், இரண்டு படைப்புகள் இனன்னா என்கிற பெண் கடவுளை போற்றி, புகழ்ந்து பாடும் துதிப் பாடல்கள் (hymn) வகையான படைப்புகள் (The Exaltation of Inanna and In-nin sa-gur-ra). The Temple Hymns என்கிற இவரின் மூன்றாம் படைப்பு கோயில்கள், கடவுள், கடவுளர்கள், பெண் கடவுள்கள், அவர்களின் உறவுகள் பற்றிய ஆன்மீக விஷயங்களை உள்ளடக்கியதுப் போல் தெரிகிறது. இதிலிருக்கும் விசேஷம் என்னவென்றால், எல்லா படைப்புகளிலும், கதாபாத்திரங்கள் பேசுவது போல் இல்லாமல், படைப்பாளியின் உணர்வாக (First person speaking) எழுதியிருக்கிறார். 4000 வருடங்களுக்கு முன் இவ்வாறு எழுதுதலை நினைத்துக் கூடப் பார்க்க இயலாது. இவரைப் பற்றிய சுவாரசியமான பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பெண்ணிய சிந்தனைகள் வலுப்படும் இக்காலத்தில், அதன் விதை 4,300 வருடங்களுக்கு முன்பே விதைக்கப்பட்டுள்ளது என்பதை அறியும்போது ஆச்சரியமாகவும், அபூர்வமாகவும் உள்ளது.

என்ஹெடுவான்னா பற்றிய குறிப்புகள்

- வாழ்க்கை வரலாறு
- படைப்புகள்
- கோயிலின் நிலையும், என்ஹெடுவான்னாவின் பெண்ணிய கருத்துக்களும்

ஒட்டுமொத்த கூகிள் தேர்வுகள் உங்கள் வசதிக்காக :)

கொசுறு: இரண்டு மூன்று நாளுக்கு முன் ஒரு புத்தகக்கடையில் இயேசு கிறிஸ்து தன் வாழ்வின் பிற்காலத்தை இந்தியாவில், இமயமலையில் கழித்தார் என்றும், அவர் சிலுவையில் உயிர்ந்தெழுதலுக்கும் முன்பும், பின்புமான இதுவரை சொல்லப்படாத வாழ்க்கைப் பற்றிய புத்தகத்தினை [ Jesus Lived in India: His Unknown Life Before and After the Crucifixion - Holger Kersten ] சும்மா புரட்ட நேரிட்டது. இந்த புத்தகத்தினை யாராவது படித்திருக்கிறீர்களா ? இது நிஜமா இல்லை புருடாவா?

Comments:
எங்கேய்யா பிடிக்கிறீர் இதையெல்லாம்? மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்பேனோ இந்த கேள்வியை உங்களிடம்..
 
//இரண்டு மூன்று நாளுக்கு முன் ஒரு புத்தகக்கடையில் இயேசு கிறிஸ்து தன் வாழ்வின் பிற்காலத்தை இந்தியாவில், இமயமலையில் கழித்தார் என்றும்,//
இதுபோன்றவை எக்கச்சக்கம் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஏசு உயிர்த்தெழுந்தது (resurrection) அமெரிக்காவில்தான் என்று நம்பும், அந்த நம்பிக்கைக்கேற்ப பிரத்யேகமானதொரு பைபிளை உருவாக்கிக்கொண்ட Mormons எனப்படும் ஒரு பிரிவு யு.எஸ்ஸில் உண்டு. பெரும்பாலும் யுட்டா மாநிலத்தில் உள்ள இவர்கள், தங்களது வம்சாவழி ஆவணங்களை வெகு துல்லியமாகக் கடந்த சில நூறு வருடங்களாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். இந்தளவு துல்லியமான வம்சாவழி ஆவணங்கள் வேறெந்த இனக்குழுவினரிடமும் இருக்கிறதா என்பது சந்தேகமே.
 
நாராயணன், 4300 வருடங்களுக்கு முன் எழுதியது ஆச்சர்யம்தான். அதேபோல் இப்போது அப்படி தமிழ்நாட்டில் எழுதுகிறவர்களோ, அல்லது உடலைப் பற்றி எழுதுகிறவர்களோ அத்தகைய விமர்சனங்களை, எதிர்ப்பைப் பெறுவதும் இன்னும் ஆச்சர்யம் இல்லையா?


நான் அந்தப்புத்தகத்தை ரொம்ப நாள் வைத்திருந்தேன் (Jesus lived in India) முழுவதும் படிக்கவில்லை. (நேரமில்லை என்று சொல்வேன்) இயேசு இந்தியாவுக்கு வந்தார். காஷ்மீரில் அவரது சமாதியும் மோசசின் சமாதியும் இருந்ததாக புகைப்படமெல்லாம் இருக்கும். அப்புறம் இந்திய, திபெத்திய புத்த விகாரைகளில் இயெசுவைப்பற்றிய குறிப்புகளும், இரகசிய முன்னறிவிப்பும் இருப்பதாகச் சொல்லும். படிக்கலாம் என்றுதான் சொல்லுவேன்.

எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கும் கருத்து, தேவனுக்கு உரியதை தேவனுக்கும், மனிதனுக்கு உரியதை மனிதனுக்கும் கொடுங்கள் என்று சொன்ன புத்திசாலி அப்படியெல்லாம் இறந்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. அதோடு எல்லா அதிசயங்களும் பெளதீக விதிகளுக்கு உடன்பட்டே இருக்கமுடியும். எனவே அவர் உயிர்த்தெழுந்தது நிச்சயமாக தப்பிப்பதைக் (மற்றவர்களின் உதவியுடன்) குறிக்கிறது என்றே நினைக்கிறேன். 30 வயதுக்குப் முன்னும் உயிர்த்தெழுந்தபின்னும் அவர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் சர்ச்சுக்கு இலாபமில்லாத விசயங்கள். சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவை விட மனித குற்ற உணர்வை உயிரோடு வைத்திருக்க, நினைவு படுத்த வேறு எதேனும் குறியீடு இருக்கிறதா என்ன? எனக்கு அவர் தனிமையில் மலையில் கைகளைக் கோர்த்தவாறு தியானம் செய்கிறதைப்போல அமைந்த படம் பிடிக்கும்.

ஆனால் இதெல்லம் மதவிசயங்கள், அங்கு கண்ணீரும், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களும் முக்கியம். கொஞ்ச காலம் முன் இயேசு சிரித்திருப்பாரா என்று ஒரு விவாதம் நடந்தது தெரியுமா?

நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இயேசு சிரித்திருப்பாரா?
 
தொடக்கதில் வரும் கவிதையின் மொழிபெயர்ப்பு உங்களுடையதா?
 
என்ஹெடுவான்னா பற்றிய தகவலுக்கு நன்றி நாராயணன். நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் எண்ஹெடுவான்னா பற்றி இன்னும் அறிந்துகொள்ள.
 
நாராயணன் நல்ல கவிதை; ரவி ஸ்ரீனிவாஸ் ஹிப்பேஷியா பற்றி எழுதிய பொழுது குறித்து என்ஹெடுவானா பற்றிக் குறிப்பிட எண்ணினேன்.

யேசு காஷ்மீர் வந்தது குறித்து: சில ஆண்டுகளின்முன்னால், இணையத்திலே, கலப்பிலாத தூய ஆரிய இரத்த மனிதர்கள் காஷ்மீரிலே இருப்பதாகத் தேடி வந்தவர்களும் அவர்கள் காஷ்மீரிகளோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்களும் ஒரு தளத்திலே இருந்தது.


//இதுபோன்றவை எக்கச்சக்கம் இருக்கிறதென்று நினைக்கிறேன்.//
எக்கச்சக்கம் என்பதே கொஞ்சம் என்கிற மாதிரிக்கு இப்படியான நம்பிக்கைகள் இருக்கின்றன ;-)

மதநம்பிக்கை என்கிறபோது, நேற்றிலிருந்து அமெரிக்க NBC ilee Revelations என்கிற 'அடிப்படைவாதத் தொலைக்காட்சித்தொடர்' தொடங்கியிருக்கின்றது. பார்த்து மகிழுங்கள் ;-)
 
சுதர்சன், மாண்டீ, தங்கமணி, வசந்த், செல்வநாயகி, ரமணி நன்றிகள்.

மாண்டீ, சுவாரசியமான விசயம். அவரவர் இயேசுவினை சொந்தம் கொண்டாடுதலுக்குப் பின்னிருக்கும் உளவியல் இன்னமும் சுவாரசியமாக இருக்கிறது.

தங்கமணி, தமிழ்நாட்டில் உடலைப் பற்றி எழுதும் பெண்களின் நிலை என்னைப் பொருத்தவரை மிக கேவலமாக இருக்கிறது. தீராநதியில் சுகிர்தராணியின் பேட்டியினைப் படியுங்கள். வருத்தமுறும் விஷயம் என்னவெனில், எழுதுபவர்களே கொஞ்ச பெண்கள். அவர்களும், கட்சி பிரிந்து பேசிக்கொள்வதிலிருக்கும் அபத்தமும், அரசியலும்.

வசந்த், கவிதையின் மொழிபெயர்ப்பினை எழுதியவர் புதுவை சீனு தமிழ்மணி. எனக்கு அவ்வளவு இலக்கிய பரிச்சயமும், மொழி ஆளுமையும், பரந்த வாசிப்பும் இன்னமும் கைகூடவில்லை என்பதுதான் உண்மை.

ரமணி, ரவிசீனிவாஸின் ஹிப்பேஷியா பற்றிய சுட்டி கிடைக்குமா (தேட நேரமில்லை) வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதீர்கள்ளய்யா. சென்னையின் எங்கிருந்து பார்ப்பது NBC -யை ?

இது எல்லோருக்கும். அதுசரி, இயேசுவிற்கு கல்யாணமானதா இல்லையா? என்னடா, இவன் தினமலர் கிசுகிசு அளவிற்கு இறங்கி கேட்கிறானே என்று நினைக்காதீர்கள். உலகையாளும் ஒரு ஆளுமையினை முழுமையாக தெரிந்து கொள்ளும் ஆவல்தான். மற்றபடி, கிறிஸ்துவம் என்னை பெரிதாக கவரவில்லை என்பது உண்மை. அண்மையில் போப்பின் இறுதி ஊர்வலத்தினை சன் நியுஸ் நேரடியாக ஒளிபரப்பியது. அப்போது, பல்வேறு கிறிஸ்துவ பெருந்தலைகளோடு பேட்டிகள் கண்டனர். அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி "ஒரு பெண் போப்பாக முடியுமா?" அதற்கான பதில் "தேவன் தன் சீடர்களாக ஆண்களை மட்டுமே வைத்திருந்தார். மேலும், பெண்களுக்கு பைபிளினை முழுவதுமாக படிக்கும் அதிகாரத்தினை தாண்டி, பெரும் பதவிகள் சென்றடையமுடியாது. தற்போதைக்கு ஒரு பெண் போப்பாக முடியாது". பாலின பேதங்களின் அடிப்படையில் அமைந்த எல்லா மதமும் பெண்களுக்கு எதிரானவையாகதான் தோன்றுகின்றன. இதில் கிறிஸ்துவமென்ன, இந்துவென்ன, இஸ்லாமென்ன. எல்லாம் காமராஜர் சொல்லுவது போல் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்"
 
தீராநதி சுகிர்தராணி பேட்டியின் தெறிப்புகள்

உடல் பற்றி எழுதும் பெண் கவிஞர்கள் பற்றி

"தீராநதி: சிலர் தொலைபேசி மூலமாக பெண் கவிஞர்களைச் சீண்டுகிறார்கள்; மோசமான வார்த்தைகளில் பேசுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா?

சுகிர்தராணி: உண்மைதான். எழுதும் பெண்களை எப்போதும் சமூகம் ஏற்றுக்கொண்டது இல்லை. எங்களை எழுதவிடாமல் செய்யும்படி ஏகப்பட்ட சீண்டல்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர்ந்து வருகின்றன. கவிதைகள் எழுதும் ஒரு பெண் ஒழுக்கக்கேடானவளாகத்தான் இருப்பாள் என்ற ஆணின் பார்வைதான் எல்லா இடங்களிலும் இருக்கிறது. பாலியல் விடுதலை என்று நாங்கள் சொல்வதை இரண்டு மூன்று ஆண்களுடன் சேர்ந்து, நினைத்த நேரத்தில் உறவு கொள்வது என்றும், உறவுக்கு அலைகிறவர்கள் என்றும் எடுத்துக்கொண்டு இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சீண்டுகிறார்கள். நவீன இலக்கியவாதிகள் என்று அறியப்பட்டுள்ளவர்கள் இதில் விதிவிலக்கல்ல. சமீபத்தில் ஒரு சிறுபத்திரிகை ஆசிரியர் தொலைபேசியில் வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளில் பேசினார். சிலர் செல்போன் எண்ணை எப்படியாவது தெரிந்துகொண்டு அசிங்கமான எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார்கள்."

பெண் படைப்பாளிகளின் கருத்து வேறுபாடுகள்

"தீராநதி: ‘‘பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண் தன் உடலை எழுதுதல் ஆகிவிடாது. உடலைப் பற்றி பேசுவது, எழுவது என்பது அரசியல். ஆண் மதிப்பீடுகளை குலைக்கவும் சிதைக்கவும் மாற்று மதிப்பீடுகளை உருவாக்குவதும்தான் பெண் அரசியல். ஆனால் சல்மா, குட்டிரேவதி, சுகிர்தராணி போன்றவர்களிடம் பெண்ணுடலை ஆணுடலுக்கு வழங்குவதற்கான அவஸ்தையே கவிதையாகியிருக்கிறது. மேலும் இக்கவிதைகள் ஆணிய கருத்தாக்கமான பெண்ணுடல் அருவருப்பானது என்பதையே வலியுறுத்துகின்றன’’ என்று ‘மாற்று’ இதழுக்கு அளித்த பேட்டியில் மாலதிமைத்ரி குறிப்பிடுகிறார். இதற்கான உங்கள் பதில் என்ன?

சுகிர்தராணி: மாலதிமைத்ரி சமீபகாலங்களில் சக பெண் கவிஞர்கள் அனைவரையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார். ‘‘பெண் உடல் அரசியல் வயப்பட்டது. அது போன்ற கவிதைகளை நான் மட்டும்தான் எழுதுகிறேன். இந்த அரசியலுக்குள் வரும் அளவிற்கு கவிதையில் என்னைத் தவிர யாரும் தயாராகவில்லை’’ என்று மற்ற அனைவரையும் மறுத்துவிட்டு, அவரை மட்டும் முன்னிறுத்துகிறார். இது ஒரு ஆரோக்கியமான போக்கு இல்லை.

பெண்ணுடல் அருவருப்பானது என்ற அர்த்தம் தரும்படி எந்தக் கவிதையிலும் நான் எழுதியதில்லை. ‘‘பெண், தன் உடலைக் கொண்டாட வேண்டும், ஆணுடலை நிராகரிக்க வேண்டும்’’ என்பது மாலதியின் விஷயமாக இருக்கிறது. ஆணுடலை மறுக்கவேண்டிய அவசியமல்லை என்னும் இடத்தில் நான் அவரிடம் இருந்து வேறுபடுகிறேன். ஆண் இல்லாத ஒரு உலகம் சாத்தியமில்லை. ஆண்களின் கட்டுருவாக்கத்திற்கும் கருத்துருவாக்கத்திற்கும் இசைந்ததாய், வாகாய் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்ணுடலை பெண்ணே உணர்வதும், கண்ணுக்குப் புலனாகாமல் உணர்வதற்கு மட்டுமே உரிய ஆணாதிக்கத் தளையிலிருந்து உடலை உருவி எடுப்பதும், அதற்கான தேவையும், அதைத் தொடர்ந்த மீளாக்கமும்தான் என்னுடைய பெண் விடுதலையின் அளவீடு. நுணுகிப் பார்த்தால் என் கவிதைகளில் அவை தெரியும். ஆணாதிக்க கருத்தாக்கத்திலிருந்து பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும்கூட மீட்டெடுக்க வேண்டியது தேவை என்று கருதுகிறேன். பெண்ணுடல் என்பது நுகர்வுப்பொருள் அன்று என்பதை பெண்ணியக் கோட்பாடாக முன்னிறுத்தும்போது, அவ்வாறே ஆணுடலும் நுகர்வுப்பொருள் அன்று என்பதும் உடன் எழுகிறது. ஆணுடலை ஒரு கருவியாக மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆணைப் பழிவாங்க வேண்டுமென்ற நைந்த முன்வைப்புச் சிந்தனை. பழிவாங்கல் என்பது பெண் விடுதலையின் படிக்கல்லாக அமைய முடியாது."

முழு பேட்டி, ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல்,
http://www.kumudam.com/theeranadhi/mainpage.php
 
நரேன், நல்லதொரு மொழிபெயர்ப்புக்கவிதையோடு புதியவிசயம் (எனக்கு) பற்றிப் பேசியிருக்கின்றீர்கள்.
//தீராநதியில் சுகிர்தராணியின் பேட்டியினைப் படியுங்கள். வருத்தமுறும் விஷயம் என்னவெனில், எழுதுபவர்களே கொஞ்ச பெண்கள். அவர்களும், கட்சி பிரிந்து பேசிக்கொள்வதிலிருக்கும் அபத்தமும், அரசியலும்.//
நானும் நேற்றுதான் இந்த நேர்காணலை வாசித்திருந்தேன். பேட்டி காண்பவர் கூட, கொஞ்சம் வலிந்து பெண் படைப்பாளிகளுக்கிடையிலான முரண்பாடுக்ளை ஊதிப் பெருப்பிப்பதற்கான கேள்விகளைத்தான் வலிந்து கேட்கின்றாரோ என்று எண்ணத்தோன்றியது.
...
பைனாகுலரை எழுதத்தொடங்கியபின், வரவர மற்றப்பதிவுகள் சுருக்கமாய் வருவதால், பைனாகுலரிற்கெதிராய் ஒரு போராட்டம் நடத்துவதாய் தீர்மானித்துள்ளேன் :-).
 
படிச்சேன் நாராயனன்,

என்னத்தச் சொல்றது!
 
நாராயணன்,
உலகின் முதல் பெமினிஸ்ட் நம்ம அல்லிராணி அப்படின்னு நினைச்சுட்டிருந்தேன் :-).
 
புதிய விஷயங்கள் பற்றி எழுதி இருக்கிறீர்கள். பெண்களின் நிலையில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு பிடித்திருக்கிறது. நன்றி
 
/ ரவிசீனிவாஸின் ஹிப்பேஷியா பற்றிய சுட்டி கிடைக்குமா /
பெண்களும் அறிவியலும்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]