Apr 18, 2005

ஏலேய்...நீ ஒத்திப் போ

சென்னை சென்சார் போர்டு அதிகாரிகள் கலாச்சார காவலர்களாக ஏதாவது பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறார்களா ? எனக்குத் தெரியவில்லை. மும்பை எக்ஸ்பிரஸில் ஒரு முழு பாடல் வெட்டப்பட்டிருக்கிறது. பாடலைக் கேட்டவுடன் தெரிந்துவிட்டது, என்ன நடந்திருக்குமென்று.

"ஏலேய்...நீ ஒத்திப் போ" என்று தொடங்கும் பாடலில் ஒரு பாலியல் தொழிலாளி, மும்பையினைப் பற்றி விவரிப்பதாக வசன கவிதையுடன் கூடிய கட்டமொன்று வருகிறது. மும்பை இந்தியாவின் வணிக தலைநகரமென்பதும், பாலியல் தொழிலாளிகள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும், மும்பையிலிருக்கும் அடிமட்ட பாமரனிலிருந்து பணக்காரர்கள் வரை எல்லோரும் அங்கே போகிறார்கள் என்பது உலகறிந்த சேதி. இதைப் பாட்டில் சொன்னால் பார்ப்பவர்கள் கெட்டுப் போய்விடுவார்களா? இதை விட மோசமான தமிழ் பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் ("சின்னவீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா", "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா" என்று இந்த வரிசை நீளும்)கலகம் செய்யவதற்காகவே இந்த பாட்டினை அதன் சுட்டியோடு தருகிறேன். இப்போது சென்சார் போர்டால் என்ன செய்ய முடியும், எல்லாரும் கேட்க முடியும்.

எப்போதோ பேட்டியில் படித்தது, ஆ.வி என்று நினைக்கிறேன். கமல் மும்பை எக்ஸ்பிரஸ் பற்றி சொல்லும்போது இது மும்பையின் இன்னொரு முகமான சேரிகளைப் பற்றிய கதை என்று சொன்னார். கதையும் தாராவியிலுள்ள ஒரு சேரியில் தான் தொடங்குகிறது. இந்த பாடலின் ஹம்மிங்கும், பட இறுதியில், பாடலுக்கு இடையே வரும் "மும்பை மகா நகரம். இந்தியாவின் வர்த்தக வாசல்" என்பது மட்டும் கேட்கும் மற்றதெல்லாம் கத்திரிக்கோலுக்கு கொடுத்தாகிவிட்டது. இதில் வரும் சுவாரசியமான வசன கவிதையினை கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஒன்று
"வாசல் சின்னது, ஆனா கொல்லைப்புறம் பெரிசு"

"உலகத்தின் மிகப் பெரிய ஏழை குப்பம்"

"என் அக்கா பேரு இன்பா.
தங்கை பேரு சிற்றின்பா
குடிசையில் இருக்கறவங்க கூட எங்களை பார்க்கலாம். ரசிக்கலாம்.
ஆனா லேசுல தொட முடியாது"
இந்த நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்வினைப் பற்றிக் கூட சொல்ல ஒரு கலைஞனுக்கு உரிமையில்லையா ? இல்லை பாலியல் தொழிலாளிகளின் வாயிலாக வெளிப்படும் வசன கவிதையில், பாலியல் தொழிலாளிகள் இந்தியாவில் பேசக்கூடாது என்றிருக்கிறதா ? அவ்வாறெனில் "நான் சிரித்தா தீபாவளி" மற்றும் கரீனா கபூர் காமத்திப்புத்ராவிலிருக்கும் பாலியல் தொழிலாளியாக நடித்த "செமிலி" போன்றவைகள் தடைசெய்யப்பட்டு விட்டதா?

பார்வையாளனை விட பெரிய சென்சார் அதிகாரி வேறு யாராவது இருக்கமுடியுமா ? ஒரு இருட்டறையில் 4 பேர்கள் எப்படி இந்த தேசத்தின் மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும்? அல்லது சென்சார் செய்யப்பட்டதால், நாட்டில் வன்முறையும், வன்புணர்வும், வன்கொடுமையும் குறைந்து விட்டதா? "ஏ" சான்றிதழ் கொடுக்கப்பட்ட படம் தொலைக்காட்சியில் வரும் போது எப்படி குழந்தைகள் தவிர்த்து பார்ப்பது? இதில் எல்லாவற்றுக்கும் விடை "இல்லை" என்பது தான்.

என்ன விதிகளோ, என்ன சட்டங்களோ.... பேசாமல் ஆனந்த் பட்வர்தன் சொல்வது போல் இந்த சென்சார் போர்டினை ஒட்டுமொத்தமாக தூக்கி விடலாம்.

கொசுறு: இந்திய அரசாங்கம் வெளியே தெரியாமல் மிக முக்கியமான ஒரு காரியத்தை செய்திருக்கிறது. இந்திய பாஸ்போர்ட்டில் இனிமேல் ஆண், பெண் மற்றும் அரவாணிகள் (Eunuchs) என்று அவர்களுக்கான பாலினத்தினை தனியாக பதிவு செய்யும் வசதி (M / F / E) செய்திருக்கிறது. எத்தனை நாட்டு பாஸ்போர்டுகளில் இந்த வசதி இருக்கிறது என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசாங்கம், எல்லோரையும் மனிதர்களாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பது.

Comments:
couple of trackbacks:
http://etamil.blogspot.com/2005/04/blog-post_08.html
&
http://etamil.blogspot.com/2005/04/blog-post_111281736330994366.html
 
நாரயணன் தங்கள் இந்தப் பதிவைப் படிக்கும் போது நான் மாயா திரைப்படம் கனடாவில் பார்த்தபோது எம் நாட்டுக் குப்பையைப் படமாக்கி வெளிநாட்டுக்காறர்களுக்குப் போட்டுக்காட்டுகின்றார்கள் என்று பல இந்தியர்கள் புறுபுறுத்ததுதான் ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு நாட்டில் நடக்கும் அதர்மங்களை ஏதோ ஒரு வகையில் வெளி உலகிற்குக் கொண்டு போவதால் அவற்றிற்கு ஒரு தீர்வு வரலாம் என்றே நான் நம்புகின்றேன். மூடி மூடி மறைக்க அது இன்னும் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டுதான் போகும்.
மும்பை நகரின் அவல நிலையை மகாநதியில் ஏற்கெனவே கமல் காட்டிவிட்டார். இப்படித் தொடர்ந்து மும்பையின் உண்மை நிலையைச் சொல்வதால் அங்கு செல்லும் சிலருக்கு அது இடஞ்சலாக இருக்கலாம் அதனால்த்தான் தடுக்கின்றார்கள் என்று நம்புகின்றேன்.
தங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் சமூக நோக்கோடும் உபயோகமானதாகவும் உள்ளன. நன்றிகளும் வாழ்த்துக்களும்.
 
நல்ல பதிவு. இதுப் போல் நீங்கள் நிறைய எழத வேண்டும்.
அரவாணி பற்றிய செய்திக்கு மிகவும் நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
இந்த நாட்டில் சென்சார் அதிகாரிகள் என்றில்லை; ஒவ்வொருவரும் சமூகத்துக்கு தெரிவிக்க என ஒரு பண்பாட்டு முகமூடியை வைத்திருக்கின்றனர். பண்பாட்டை போதிப்பதற்க்கான (சமூகத்துக்கு) முழு உரிமையுடன் வந்திருப்பதாக என்ணிக்கொள்கின்றனர். இது ஒரு மன வளர்ச்சியற்ற தன்மை.

அதுக்கப்புறம் இதில் தேசபக்தி இந்தியக் கலாச்சாரம் என்ற மசாலாக்கள் வேறு இருந்துவிட்டால் நமக்கு வெறியே வந்துவிடும்.

விஜய்-ஷாலினி நடித்த படம். காதலை புனிதமாகச் சொல்கிறேனென்று ஜல்லி அடித்த படம். அதில் ஷாலினி விஜயையை திருமணம் செய்யவேண்டாம் என்று முடிவு செய்து தம் வீடு திரும்புவார். வீட்டில் அம்மாவிடம் (அண்ணன்களிடம்) நான் கெட்டுப்போகலேம்மா, உங்க்க பொண்ணும்மா என்பார். எல்லோரும் கண்ணீர் விடுவார்கள். இப்படி ஒரு அருவருப்பான காட்சியை நான் எங்கும் கண்டதில்லை. அதுவரை எனது மற்ற மொழி நண்பர்களுக்கு அவ்வப்போது மொழியெயர்த்து வந்தேன். அப்போது சொன்னேன் "இதை மொழி பெயர்க்கமுடியாது, உங்களுக்குப் புரியாது. இதில் இரண்டாயிர வருட பண்பாடு, ஒழுக்கம், குடும்பப் பாரம்பரியம் இதையெல்லாம் தனது இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்துக்காப்பாற்றும் தமிழ் பண்பாடு இருக்கிறது இது மிக நுட்பமானது"

அப்படி ஒரு பாரம்பரியம் நமக்கு.


பம்பாயில் சிவப்பு விளக்கு இருக்கலாம். சேலத்தில் இருக்கலாம். அதை வெளியில்ல்சொல்லலாமா?

நாகராஜன் ஒரு முறை எழுதியிருப்பார், "நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள், ஏன் இப்படி இங்கு இருக்கிறதென்று கேளுங்கள் என்று".

எனக்கும் ஆனந்த்படவர்த்தன் சொலவது சரிஎன்றுதான் தோன்றுகிறது.

நன்றி நாராயணன், பதிவுக்கும் பாஸ்போர்ட் பற்றிய தகவலுக்கும்.
 
அப்படத்தின் பாடல்களை ஒரே ஒரு முறை கேட்ட போது கொஞ்சம் சுமாராகத் தெரிந்தது இப்பாடல்தான். அதற்கும் வெட்டா?
 
// வீட்டில் அம்மாவிடம் (அண்ணன்களிடம்) நான் கெட்டுப்போகலேம்மா, உங்க்க பொண்ணும்மா என்பார். எல்லோரும் கண்ணீர் விடுவார்கள்.//
இதை நானும் உணர்ந்தேன். இவங்க லாஜிக்கே லாஜிக்கு; ஆனால் இதே ஆட்கள் மேலை நாடுகளுக்கு போகும் போது இவர்கள் நடந்து கொள்வதைல் ஏற்படும் முரணைப் பார்த்து எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை ;-) ஒரு அளவுக்கு மேலே பேட்ரனைஸ் செய்வதன்(கலாச்சாரத்தையும், கபோதிகளையும்) விளைவு இது. இன்னும் 100 ஆண்டுகள் ஆகுமா இது சரியாக? தெரியவில்லை?
 
அண்ணாச்சி...

நான் விரும்பி படிக்கும் வலைப்பதிவுல ஒன்னா ஆக்கிப்புட்டீக... எல்லாமே சமுதாய அக்கறையுள்ள விசயங்களா எழுதறீங்க... வாழ்த்துக்கள்.
 
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி.

//இந்த நாட்டில் சென்சார் அதிகாரிகள் என்றில்லை; ஒவ்வொருவரும் சமூகத்துக்கு தெரிவிக்க என ஒரு பண்பாட்டு முகமூடியை வைத்திருக்கின்றனர். பண்பாட்டை போதிப்பதற்க்கான (சமூகத்துக்கு) முழு உரிமையுடன் வந்திருப்பதாக என்ணிக்கொள்கின்றனர். இது ஒரு மன வளர்ச்சியற்ற தன்மை.//

இது மனவளர்ச்சியற்ற தனமையாக பார்க்க முடியாது. ஒரு மிகப் பெரிய சமூக குற்ற அமைப்பின், நோயின் அறிகுறியாகதான் தெரிகிறது. ஏற்கனவே எழுதியிருந்தது போல, அனுபம் கெர் போனதற்கு காரணம் சென்சாரில் Final Solution படத்திற்கு ஏற்பட்ட தடைகள்தான். பிஜேபி ஆதரவு ஆட்களை தூக்கி எறிவதற்காக காங்கிரஸ் செய்த விஷயமது. இன்று அதே நிலையைத்தான் காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் வரும் சென்சார் அதிகாரிகளும் எடுக்கிறார்கள். பிரச்சனை அதிகாரிகளில்லை. சட்ட திட்டங்களில் இருக்கிறது. எல்லாம், 1950-களில் போடப்பட்ட அழுக்கு சட்டங்கள். அவர்களின் இணையத்தளத்தினை படித்தால் சிரிப்பு வருகிறது. எவ்வளவு நீளத்திற்கு, மார்பகங்களை காண்பிக்கலாம், எவ்வளவு அகலத்துக்கு தொடைகளை விரிக்கலாம், எவ்வளவு நேரம் ரத்தத்தினை திரையில் காண்பிக்கலாம் என்பதெல்லாம் பார்த்தால், கோவம்தான் வருகிறது.

எப்போதோ ராதாரவி ஒரு பேட்டியில் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. 80களில் வில்லன்கள் Bastard என்கிற சொல்லை உபயோகிக்கலாம். ஆனால், அதையே தமிழில் "தேவடியா பையா" என்று சொல்லக்கூடாது. இரண்டுக்கும் ஏறக்குறைய பொருள் ஒன்றுதானே. அந்த நிலையில் தான் இருக்கிறது சட்டங்கள். ஹிந்தி படங்களில் சர்வசாதாரணமாக Bitch, Fuck, Screwing என்கிற வார்த்தைகள் வருகின்றன. இதையே ஹிந்தியில் சொன்னால், ஒலியினை வெட்டி விடுவார்கள்.

பேசாமல், இரண்டே பகுதிகள் தான் தேவை, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் என்கிற வகையும், பிற படங்கள் 15க்கு மேற்பட்டவர்களுக்கான படம் என்று பிரித்தால் போதும். A சான்றிதழ் தரப்பட்ட படங்களுக்கு, கவுண்டரில் ரேஷன் கார்டு பார்த்து யாரும் டிக்கெட் தரப்போவதில்லை. அதனால், இது மொத்தமாகவே பம்மாத்து.
 
சமேலிய செமிலி ஆக்கிப்புட்டீங்களே தலைவா!!
 
அண்ணாச்சி, நா பாடல கேட்டவரைக்கும் அதுல பாலியல் தொழில சொன்ன் மாதிரி இல்லை. நீங்க சொன்ன வரிகளுக்கு அப்புறம் 2 வரி வரும்.

"என் பேரு இன்பா
என் தங்கச்சி சிற்றின்பா
குடிசைல இருக்குறவங்க எங்கள பாக்கலாம் ரசிக்கலாம் ஆனா லேசுல தொடமுடியாது.
எங்க தொழில் என்னா-னு கேக்குறீங்களா குரங்கு வளக்குரோம்."

இதுல அவங்க மனுசனோட மனச சொன்ன மாதிரி இருக்குது. அதைதான் கமல் ஒரு பேட்டிலையும் சொன்னதா நியாபகம். நீங்க சொல்லுர அதே ஆ.வி ல படிச்ச மாதிரிதான் நியாபகம்.
 
நன்றி நாராயணனன். நியாயமான கேள்விகள். வக்கரங்களை வளர்ககிற பாடல்களை விட்டுவிடுகிறவர்கள் இத்தகைய பாடல்களில்தான் எதையோ காக்கப்போகிறார்களா.. கலைஞர்களுக்கு இத்தகைய சுதந்திரங்கள்கூட இல்லாதது கோபந்தான் வருகிறது.

"இந்திய அரசாங்கம் வெளியே தெரியாமல் மிக முக்கியமான ஒரு காரியத்தை செய்திருக்கிறது. இந்திய பாஸ்போர்ட்டில் இனிமேல் ஆண், பெண் மற்றும் அரவாணிகள் (Eunuchs) என்று அவர்களுக்கான பாலினத்தினை தனியாக பதிவு செய்யும் வசதி (M / F / E) செய்திருக்கிறது."
ஆம்.மிகவும்ம் மகிழ்சசியான செய்தி!
 
குரங்கு வளர்த்தல் என்பதை ஒரு குறீயிடாக சொல்லி மும்பையின் பாலியல் வறுமையையும், அழுத்தத்தையும் சொல்லியிருப்பார் கவிஞர். ஒருவேளை, இந்திய ஊடகங்களில் மறைமுகமாக எதுவும் சொல்லக்கூடாதோ ? நேரடியாக, தினமும் என் உடலை 10 பேர் தொடுகிறார்கள். உறவு கொள்கிறார்கள் என்று சொல்லவேண்டுமோ என்னவோ?
 
//தினமும் என் உடலை 10 பேர் தொடுகிறார்கள். உறவு கொள்கிறார்கள் என்று சொல்லவேண்டுமோ என்னவோ//

இது நியாயமான கேள்வி. இப்படி பார்த்த 'சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சி'லேயிருந்து 'அப்பன் பண்ண தப்பிலே ஆத்த பெத்த வெத்தலை' வரைக்கும் எல்லாமே ஓப்பனோ ஓப்பன். நீங்க சொன்ன மாதிரி பாட்டுங்க லிஸ்ட்டுல நிறைய இருக்கு.

//இந்திய அரசாங்கம் வெளியே தெரியாமல் மிக முக்கியமான ஒரு காரியத்தை செய்திருக்கிறது. இந்திய பாஸ்போர்ட்டில் இனிமேல் ஆண், பெண் மற்றும் அரவாணிகள் (Eunuchs) என்று அவர்களுக்கான பாலினத்தினை தனியாக பதிவு செய்யும் வசதி (M / F / E) செய்திருக்கிறது//

நல்ல தகவல் நாராயணன்.
 
நேற்றுதான் அந்த பாடலை கேட்டேன். மிக நல்ல வரிகள், பாலியல் தொழில் பற்றி பேசபடுவதால் மட்டும் தடை செய்யப்பட்டிருந்தால் அது அராஜகம், நாம் அனைவரும் அதற்கு குரல் கொடுக்க வேண்டும். (பாடலில் காட்சியில் எதாவது பிரச்சனை இருந்தால் கூட வெட்டியதை நியாயபடுத்த முடியாது என்றே நினைக்கிறேன்.) மன்மதன் படத்தை(யூ சர்டிஃபிகேட் கூட கொடுத்திருக்கலாம், தெரியாது) அனுமதித்த சென்சார் இதை தடை செய்தது ,(தடை செய்யாவிட்டால் ஒருவேளை கூக்குரல்கள் கூட கேட்டிருக்கும் ) நம் சமுதாயத்தின் அழுகிய முகத்தைத்தான் காட்டுகிறது.
 
என்ன விதிமுறைகள் இந்திய சென்சார் போர்டில் இருக்கின்றன என்பதை கீழே அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன். இதில் முக்கால்வாசி விதிமுறைகளுக்கான மீறல்களை தமிழ் சினிமாவிலேயே காட்டமுடியும். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், நம் சென்சார் புண்ணியவான்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Detailed Guidelines for certification

(i) anti social activities such as violence are not glorified or justified
(ii) the modus operandi of criminals, other visuals or words likely to incite the commission of any offence are not depicted;
(iii) scenes

showing involvement of children in violence as victims or perpetrators or as forced witnesses to violence, or showing children as being subjected to any form of child abuse;
showing abuse or ridicule of physically and mentally handicapped persons; and
showing cruelty to, or abuse of animals, are not presented needlessly

(iv) pointless or avoidable scenes of violence, cruelty and horror, scenes of violence primarily intended to provide entertainment and such scenes as may have the effect of de-sensitising or de-humanising people are not shown;
(v) scenes which have the effect of justifying or glorifying drinking are not shown;
(vi) scenes tending to encourage, justify or glamorise drug addiction are not shown;
(vi-a) scenes tending to encourage, justify or glamorise consumption of tobacco or smoking are not shown;
(vii) human sensibilities are not offended by vulgarity, obscenity or depravity;
(viii) such dual meaning words as obviously cater to baser instincts are not allowed;
(ix) scenes degrading or denigrating women in any manner are not presented; (x) scenes involving sexual violence against women like attempt to rape, rape or any form of molestation or scenes of a similar nature are avoided, and if any such incidence is germane to the theme, they shall be reduced to the minimum and no details are shown
(xi) scenes showing sexual perversions shall be avoided and if such matters are germane to the theme they shall be reduced to the minimum and no details are shown
(xii) visuals or words contemptuous of racial, religious or other groups are not presented
(xiii) visuals or words which promote communal, obscurantist, anti-scientific and anti-national attitude are not presented
(xiv) the sovereignty and integrity of India is not called in question;
(xv) the security of the State is not jeopardized or endangered
(xvi) friendly relations with foreign States are not strained;
(xvii) public order is not endangered
(xviii) visuals or words involving defamation of an individual or a body of individuals, or contempt of court are not presented
EXPLANATION: Scenes that tend to create scorn, disgrace or disregard of rules or undermine the dignity of court will come under the term 'Contempt of Court' : and
(xix) national symbols and emblems are not shown except in accordance with the provisions of the Emblems and Names (Prevention of Improper Use) Act, 1950 (12 of 1950)
 
நரேன் சென்சாரைப் பற்றி என்ன சொல்வது? விஜய் சொன்னமாதிரி மேலே குறிப்பிட்ட பாடல்களை எல்லாம் அனுமதித்துவிட்டு, விலைமாதர்கள் பற்றிக்கூறும் பாடலை வெட்டியதில் தெரிகின்றது சென்சாரின் சமூகம் பற்றிய 'தொலைநோக்குப்பார்வை'. அதுசரி மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் பற்றி ஒன்றும் நீங்கள் கூறவில்லையே? இன்னமும் பார்க்கவில்லையா?
 
நான் எழுதியபோதே டிசே நீங்களும் பதிந்திருக்கிறீர்கள்.படம் பார்த்துவிட்டேன். படம் பற்றிய என் கருத்துக்களை பைனாகுலர் 10344 - இல் இட்டிருக்கிறேன். சென்சார் இந்த படத்தில் முழுவதுமாக விளையாடி, தீய்ந்துப் போன தோசையைப் போல் மாறிவிட்டது. ஆனாலும், நுட்ப சமாச்சாரங்களில், எனக்கும் கமல் செய்ததற்கும் நிறைய கருத்து வேறுபாடுகளுண்டு.
 
நன்றி நரேன். நீங்கள் மேலே சுட்டிக்காட்டிய பதிவை வாசிக்காமல் தவறவிட்டுவிட்டேன். நான் சந்திரமுகிதான் பார்த்திருந்தேன். சச்சின் பார்க்கும் ஆசையில் நண்பர்கள் மண்ணள்ளிப்போட்டதால் சந்திரமுகியோடு சமரசமாகிப்போய்விட்டேன்.
 
//பார்வையாளனை விட பெரிய சென்சார் அதிகாரி வேறு யாராவது இருக்கமுடியுமா ? ஒரு இருட்டறையில் 4 பேர்கள் எப்படி இந்த தேசத்தின் மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும்? அல்லது சென்சார் செய்யப்பட்டதால், நாட்டில் வன்முறையும், வன்புணர்வும், வன்கொடுமையும் குறைந்து விட்டதா? "ஏ" சான்றிதழ் கொடுக்கப்பட்ட படம் தொலைக்காட்சியில் வரும் போது எப்படி குழந்தைகள் தவிர்த்து பார்ப்பது? இதில் எல்லாவற்றுக்கும் விடை "இல்லை" என்பது தான்.//

neththiyadi ;-) The said 4 guys sitting in a dark room are treating the general public as stupid who cannot differentiate between good and bad! This is atrocious, really!

enRenRum anbudan
BALA
 
கமல் படத்துக்கு எதிராக சென்ஸர்போட்டுக்குள்ளும் ஒரு குழுவை செட் பண்ணிப்போட்டினம் போல கிடக்கு.

பாலியல் பற்றிய தகவல்களை வெறும் கற்பழிப்புகளாகவும் வல்லுறவுகளாகவும் சித்தரித்துவருவதால்தான் இதில் இன்னமும் கீழ்த்தரங்களை சமுதாயம் எதிர்நோக்கியுள்ளது என்பதை இனி சென்சர் போட்டுக்கும் சொல்லிக்கொடுக்க வேணும் போலத்தான் கிடக்கு.
 
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி. கமல் ஏன் இந்த பாடல் வெட்டுக்கு ஒத்துக் கொண்டார் என்று புரியவில்லை. இப்பாடல் இல்லாததால், படமே கந்தகோலமாகிவிட்டது. Better luck next time Kamal
 
நல்ல பதிவு நரைன் வெட்டப்படுவதற்கும் வெளியிடப்படுவதற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்தால் முதலில் தணிக்கைக் குழுவின் அளவுகோலைத் தணிக்கை செய்யவேண்டும் போலிருக்கிறது
 
i read somewhere that kamal agreed to the cut as otherwise the censor board would have given an Adults Only certificate.Since it was advertised as a film for the family Kamal might have chosen to forego the song and the related scences.as i have not seen the film i cant say anything about it.but i hold brief neither for kamal nor for censor board.
 
நன்றி அருணன், பாலா, ஈழநாதன், ரவி சீனிவாஸ். ரவி நீங்கள் சொன்னதுதான் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தற்சமயம் கிடைத்த செய்தி என்னவென்றால், பொட்டி நிறைய தியேட்டர்களிலிருந்து ராஜ்கமல் அலுவகத்தினை நோக்கி வர ஆரம்பித்துவிட்டது. புத்தாண்டுக்கு வந்த படங்களில் மோசமான தோல்விப் படமாக மும்பை எக்ஸ்பிரஸ் பிரேக் டவுனாகி நின்றுவிட்டது. Better luck next time Kamal.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]