Apr 27, 2005

வலைப்பதிவுகள் புத்தகமாகலாமா?

டிசே தூபம் போட்டதால் எழுதும் விஷயமிது. வலைப்பதிவர்கள் இலக்கியவாதிகளா, கருத்து கந்தசாமிகளா, சும்மா விஷயங்களை வெட்டி ஒட்டுபவர்களா, ஆழமான விவாதத்தில் ஈடுபடுபவர்களா இல்லை போரடிக்கும் போது வந்து போகும் ஆட்களா என நீட்டிக் கொண்டேப் போகலாம் விவாதத்தினை. இவையனைத்தும் உண்மையாகவோ பொய்யாகவோ கூட இருக்கலாம். நான் பார்த்த வரையில், நிறைய நபர்கள் வலைப்பதிவுகளில் விரிவான, வித்தியாசமான அலசல்கள், புதுவிதமான எழுத்து என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். என்னளவில், மிக நுண்மையாக, ஆழமான கருத்து வெளியாக வலைப்பதிவுகள் உருமாறி வருகின்றன (சொந்த விருப்பு வெறுப்புகள், கசப்புணர்வுகளைத் தாண்டி)

கொஞ்ச நாள் முன்பு என் பதிவில் நடந்த ஒரு விவாதத்தில், டிசே, தேர்வு செய்யப்பட்ட வலைப்பதிவுகளை புத்தகமாக்கலாம் என்று சொல்லி, அதையே இப்போது விஜய்யின் பதிவிலும், என்னுடைய "நான் ஒரு காட்டுமிராண்டி பதிவிலும்" இட்டிருந்தார். கொஞ்சம் சுற்றிப் பார்த்தால், நாளொரு மேனியும் பொழுதொரு கிளிக்குமாய் வளர்ந்து கொண்டேயிருக்கிறது தமிழ்மணம். ஆக எப்படிப் பார்த்தாலும், தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் வளர்ந்துக் கொண்டே தான் போவார்கள். இவர்கள் எழுதுவதெல்லாம், இலக்கியமே இல்லை என்று இலக்கியவாதிகள் சண்டைப் போட்டுக் கொள்ளட்டும். நமக்கு அது தேவையற்ற விவாதம்.

புத்தகம் என்ற ஒரு வரையறைக்குள், பல்வேறுவிதமான விஷயங்களை உள்ளடக்க முடியுமா ? பதிவுகளை பதிய இயலுமா ? அப்படி பதிவோமேயானால், யார் , எவற்றை , எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் ? வெறும் நட்சத்திரக் குறிகள் தரத்தை நிர்ணயிக்குமா இல்லை பின்னூட்டங்களா ? எந்தமாதிரியான வடிவினை இப்புத்தகம் எடுக்கும் ? என கேள்விகள் எழாமலில்லை.

டிசேயின் கருத்தோடு ஒத்துப் போனாலும், இதனை ஒரு புத்தகமாக என்னால் பார்க்க முடியாது, காரணம், தொடர்ந்து எழுதப்பட்டு வரும் விஷயங்கள், செய்திகள் என விரிந்துக் கொண்டேயிருக்கும்போது ஒரு வருடத்தில் நமது புத்தகம் அவுட்டேட்டாக போகும் சாத்தியங்களுண்டு. இதுதாண்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை ஒரு காலாண்டிதழாக மாற்றி அதன் வடிவமைப்பினை ஏதேனும் ஒரு பொதுத்தளத்தில் வைத்துவிட்டு, அந்தந்த நாட்டிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்பக்கதார்கள் புத்தகமாக பதியலாம். இதன் உரிமை, வெளீயீடு, லாபத்தின் பங்கு போன்றவற்றினைப் பற்றி விரிவாக விவாதிக்கலாம். இதனை சொல்லக் காரணம், என்னால் பெரும்பாலான அமெரிக்கப் புத்தகங்களை வாங்க முடிவதில்லை. காரணம் மிகச் சுலபம், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஒரு புத்தகத்தினை அனுப்ப ஆகும் செலவு. மொத்த புத்தகத்தையும், கோரல் ட்ராவிலோ, அடொப் இன் டிசைனிலோ வடிவமைத்துவிட்டு ஒரு பொதுத்தளத்தில் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்பகத்தாருக்கு மட்டும் தரவிறக்க சொல்ல வேண்டியது தான். இதன்மூலம், எல்லா ஊரிலும் புத்தகங்கள் ஒரேவிதமாகவும், ஏறத்தாழ ஒரே விலையாகவும் இருக்கும் சாத்தியங்களதிகம். பத்ரி போன்ற, பதிப்பகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை விரிவாக விவாதிக்கலாம்.

ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் , அவரின் எழுத்துக்களை சந்தைக்கு கொண்டுவரும் போது அந்த புத்தகத்தின் வணிக விஷயங்கள் அவ்வெழுத்தாளனோடு முடிவுறும். ஆனால், பல்வேறு விதமான பதிவுகளை கொண்டு எழுதப்படும், தொகுக்கப்படும் புத்தகத்தின் உரிமைகள், பதிவு உரிமையாளர்களின் ஒப்புதல், வணிகமாகும்போது ஏற்படும் பங்கீட்டு சிக்கல்கள் பற்றிய கேள்விகள் எழுதல் நிச்சயம். ஆகவே இதனை நாம் விரிவாக விவாதிக்க வேண்டிய கட்டாயமுள்ளது.

என் தனிப்பட்ட கருத்து, என் எந்த பதிவினையும் தேர்ந்தெடுத்து புத்தகத்தில் தொகுத்துக் கொள்ளுங்கள். விற்றுக் கொள்ளுங்கள். விற்று, வரும் லாபத்தினை தமிழா.காம் மாதிரியான தமிழில் நிரலிகளையும், மென்பொருட்களையும் கொண்டு வர பாடுபடும் எண்ணற்ற தன்னார்வலர்களுக்கு கொடுத்து விடுவது என்பதுதான். எழுத்துக்கு எழுத்தும் ஆச்சு. தமிழினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஆதரவளித்தது போலுமாச்சு.. என்ன நான் சொல்றது.

Comments:
//என்ன நான் சொல்றது. //

சரிதான் நாரயணன். என்னை பொறுத்தவரை வலைப்பதிவுகளில் இருந்து சில விவாதங்களை, குறிப்பிட தகுந்த கட்டுரைகளை முதலில் தொகுக்கலாம். பல பதிவுகள் பதியப்பட்டு மறக்கப்பட்டு விட்டன. அவற்றில் 'முக்கியமான' சிலதை தொகுக்க வேண்டும். பிறகு காலாண்டிதழாக தொகுப்பதிலோ, புத்தகமாய் போடுவதிலே மேலும் பல சிக்கல்கள் இருக்கும், ஒரு சிலரின் தேர்ந்தெடுப்புகள் இருக்கும். அதை பிறகு பேசலாம். முதலில் இப்படி பேச தொடங்குவதே நல்ல விஷயம். பல கருத்துக்கள் வரும். வந்தபின் ஒரு நாள் திடமாய் உருவெடுக்கும். அப்போது மீண்டும் பேசுவோம். நல்ல பதிவு.
 
அன்பு நாராயண்,

நம்பினால் நம்புங்கள். நானும் காலையில் - அலுவலகத்திற்கு வரும் வழியில் - இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவர் 'எழுத்தாளர்' என்கிற தகுதி எப்படி அளக்கப்படுகிறது என்றால் - அதன் உள்ளடக்கம் என்ன கண்ணராவியாக இருந்தாலும் பரவாயில்லை - அவரது எழுத்தில் எத்தனை புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் ஒரு புத்தகமாவது எழுதியிருந்தால்தான் உங்களை எழுத்தாளர் என்கிற வட்டத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த அசட்டு concept எனக்குப் புரியவில்லை.

ஒருவன் தன் சிந்தனைகளை எந்த மாதிரியும் தொகுத்து வைக்கலாம். கிராமப் புறங்களில் கல்வி கற்றவனை விட அதிக நுண்ணறிவோடு இருப்பார்கள். மனித உறவுச் சிக்கல்களுக்கு அவர்கள் பாமர மொழியில் சொல்லும் யோசனைகள் ஒரு உளவியல் மருத்துவன் சொல்கின்ற அறிவுரையை விட சிறப்பானதாக இருக்கலாம். ஆனால் நம்மாட்கள் அதை ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால்தான் அவன் அறிவாளி என்று ஒத்துக் கொள்கிறார்கள். இன்று யாருடையாவது ஒரு புத்தகம் வெளியாகி இருந்தாலே அவன் தலை மேலே ஒரு ஒளிவட்டம் உருவாகிவிடுகிறது. அதன் பளு தாங்காமல் அவன் யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. (இதை நான் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டாக சொல்லவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே சொல்கிறேன்)

ஆக அச்சில் வந்தால்தான் அல்லது புத்தகமாக வெளிவந்தால்தான் ஒரு விஷயத்திற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் என்கிற மாதிரியான பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த cliche உடைய வேண்டும். வலைப்பதிவில் பதிந்திருந்தாலும் அதன் தர அளவுகோல்களுக்கேற்ப அது இலக்கியம்தான்.

கணியை பயன்படுத்த இல்லாதவர்களுக்கும் நம்முடைய சிந்தனைகள் போய்ச் சேர வேண்டும் என்பது மாதிரியாக சிந்திக்கும் போது நீங்கள் கூறுவது பரிசீலனைக்கு ஏற்றதாக தெரிகிறது.

- Suresh Kannan
 
சும்மா எழுத்தாளர், இலக்கியவாதிகள் என்று பதிப்பிலே வருகின்றவர்களை வம்புக்கிழுப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தீவிரர்எழுத்தாளர் (சிலவேளைகளில், தீவிரஎடுத்தாளர்), தீவிரர்இலக்கியவாதிகள் என்று சரியான கச்சடா முன்னொட்டுடன் அழைக்கவேண்டும் அல்லது அடுத்த முறை எம் இண்டர்வ்யூவிலே கிழிகிலியென்று கிளிப்பேச்சுவோம் என்பதை இணையவட்டத்துக்குத் தெரி விக்குகிறோம்.

மற்றப்படி, இணையத்திலே எழுதுகின்றவர்களிலே பெரும்பாலானோர் பொழுதுபோக்கிலே எழுதுகின்றவர்கள்; தேறுகின்ற பதிவுகள் நிறைய வரலாமென்றபோதுங்கூட, அவர்கள் முழுமையாகத் தமது கவனத்தினைக் குவித்துப் பதிவு செய்யின், இன்னும் சிறப்பாகலாம் என்று படுகின்றது.
 
நன்றி வசந்த், சுரேஷ், பெயரிலி.

பெயரிலி, வலைப்பதிவுகளில் விஷயங்கள் நடக்கவில்லை என்கிறீர்களா இல்லை இன்னும் வலைப்பதிவுகள் "இலக்கியத்தரத்துக்கு" அருகில் வரவில்லை என்று சொல்கீறிர்களா. எனக்குத் தெரிந்து, நான் படிக்கும் தமிழ் இடை இதழ்களை விட வலைப்பதிவுகள் நன்றாகவே இருக்கின்றன. இலக்கியம் தவிர்த்து, சினிமா, சமூகம்,அறிவியல், மொழியாளுமை, மென்பொருள் என எல்லா வெளிகளிலும் நன்றாகதான் போய்க் கொண்டிருக்கிறது. மிக முக்கியமான விஷயமாய் நான் பார்ப்பது வலைப்பதிவுகள் நிறைய பேரின் எழுத்தும், சிந்தனையும். இது ஒரு தனி எழுத்தாளனோ, தனி நபர் துதியோ இதிலடங்காது. இப்போதுதானே பேச ஆரம்பித்திருக்கிறோம். பார்ப்போம்.
 
நல்ல ஐடியா நாராயணன். இப்போது புத்தம் அடிப்பது வெளியிடுவது என்பது சும்மா ஒரு பொழுது போக்கு மாதிரிப் போய் விட்டது. எனவே என் பதிவுகளை நான் புத்தகமாக வெளியிடப் போகின்றேன்.

//அவர்கள் முழுமையாகத் தமது கவனத்தினைக் குவித்துப் பதிவு செய்யின், இன்னும் சிறப்பாகலாம் என்று படுகின்றது.\\


பெயரிலி தாங்கள் எப்படி? குவித்தா குவிக்காமலா?
 
/பெயரிலி, வலைப்பதிவுகளில் விஷயங்கள் நடக்கவில்லை என்கிறீர்களா இல்லை இன்னும் வலைப்பதிவுகள் "இலக்கியத்தரத்துக்கு" அருகில் வரவில்லை என்று சொல்கீறிர்களா./

இன்றைக்கு நான் என்ன சொன்னாலும் தவறாகவே புரிபடுகிற நாளாகிப்போச்சு! ;-)
நான் சொல்வதென்னவென்றால், ஏற்கனவே பதிப்பிலே வருகின்றதிலும்விட, சிறப்பாகவே பல பதிவுகள் இருக்கின்றன. ஆனால், அந்தப்பதிவுகளுக்குரிய பதிவர்களே பெரும்பாலானோர் வலைப்பதிதலைப் பொழுதுபோக்குதலாகவே செய்கின்றனர். அதனால், இன்னும் மிகவும் மெருகேறக்கூறிய பதிவுகளும் அப்படியாகாமல் இருக்கின்றன. கொஞ்சம் கவனமெடுத்து அந்தப்பதிவுகளை இன்னும் சிறப்பாகவேண்டும் என்று கூறுகிறேன்.

கறுப்பி, பன்னீரிலே குளிப்பாட்டினாலும் பண்டி பண்டிதான். -/பெயரிலி. அந்த வகை. குறித்துக் குவிந்து எழுதுதலுக்கும் குறித்து எழுதிக் குவித்தலுக்கும் ஒரே பெறுபேறுதான்; சட்டியிலே இருப்பதுதான் அகப்பைக்கு :-(
 
நான் கூட இதை முதலில் ஆதரித்ததுண்டு. இப்போது எனக்கு சிக்கல்கள் கண்ணுக்கு தெரிகிறது. இதற்கு அர்த்தம் வாசிப்பு எல்லோரிடம் போய்ச்சேரக்கூடாது என்பதல்ல.

தவறாக நினைக்கவேண்டாம்.
//புத்தகமாய் போடுவதிலே மேலும் பல சிக்கல்கள் இருக்கும்,//
இப்படித்தான் எனக்கும் படுகிறது. பதிப்பகங்களுக்கும் வலைப்பதிவர்களுக்கும் என்ன விதிமுறைகள் அமையும் என்பதைப்பொறுத்துத்தான் இதன் சாத்தியமும். என்னைப்போல் ஒன்றும் பெரிசாய் எழுதிக்கிழிக்காதவர்கள் 'இலவசமாய் எடுத்துக்கோ' என்று சொல்ல வரலாம். பிடித்த ,பிடிக்காத பதிப்பகங்கள் *வெர்சஸ்* பிடித்த பிடிக்காத, வலைப்பதிவர்கள் என பல விஷயங்கள் வெளிவரும். ஆனால் பதிப்பகங்கள் "வணிகம்" என்ற நோக்கில் செயல்படும்போது அதற்கேற்ப நெறிமுறைகளை வகுக்காதவரையில் இது பிரச்சினையில் கொண்டு போய் விடும். முதலில் எல்லா பிரச்சினைகளையும், மேசையின் மீது போட்டு அலசுவோம்.
 
பெயரிலி சொல்வதில் உண்மை இருப்பதாக நினைக்கிறேன். இணைய எழுத்துக்களில் தவிர்க்கமுடியாத சில அம்சங்கள்:

1. வேகம், அதனால் விளையக்கூடிய சில கவன இழப்புகள். புத்தகம் போடுவதற்கு தகுதியுள்ள படைப்புகள் என்று பிறகு அடையாளம் காணப்படுபவை (ஒருவர் எழுதும் எல்லாமுமே இந்தத் தகுதி பெறாது என்பது சொல்லாமலே புரியும்) இன்னொரு மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட்டு மெருகேற்றப்படலாம். அதற்காக முதலில் எழுதும்போதே புததகம் போடும் கண்ணோட்டம் தேவையில்லை. அது கொஞ்சம் கடிவாள வேலை செய்து எழுதுவதைக் குறைக்கும் வாய்பு இருக்கிறது.

2. பதிப்புரிமை: படங்கள், மேற்கோள்கள் என்று பல பதிப்புரிமை பெற்றவற்றை பரவலாக சுட்டுப் போடுவதையும் காணலாம். புத்தகமாக வரும்போது, காசுக்கு விற்கப்படும்போது அவற்றின் நிலை என்ன?

3. நுட்ப சங்கதிகள்: பல்லூடக இடையீடுகள் வலைப்பதிவு அனுபவத்தின் விசேஷக் கூறுகள். அவை அச்சில் வரா. தொடுப்புகளும் அப்படியே. அவற்றின் சுட்டியை அச்சிட்டாலும், யாரும் அதை மீண்டும் உலாவியில் தட்டச்சிட்டு பார்ப்பதற்கு மிகவும் உந்துதல் இருக்கவேண்டும்.

எனவே வலைப்பதிவுகளை அப்படியே அச்சுக்குக் கொண்டுபோவது நன்கு சிந்தித்து, செயல்படுத்தவேண்டியது.
 
ம் இது ரொம்ப இன்சல்ட். எனக்கில்லை பண்டிக்கு. அப்ப என்னைப் பண்டி எண்டுறீரோ? பண்டி எண்டா என்ன குறை.? அது தனக்குப் பிடிச்சதைச் சாப்பிட்டு தனக்குப் பிடிச்ச இடத்தில சுதந்திரமா வாழுது. விட்டா அதுக்கும் நீ இப்பிடித்தான் வாழவேணும் எண்டு சொல்லிக் குடுப்பீங்கள் போல இருக்கு. பண்டி வேணுமெண்டாத் தானாக் குளிக்கும். ஏன் பன்னீரிலதான் குளிக்க வேணும் எண்டு சட்டம் இருக்கோ. சேற்றுக்கு என்ன குறை. அதில தானே நீர் சாப்பிடுற நெல்லு வளருது.
நீர் என்ன சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் புத்தகம் விடத்தான் போறன் அதை யாரும் தடுக்கேலாது. பெரிசா காட் அடிச்சுப் புத்தகவிழா பற்றி அறிவிக்கிறன். வந்து கொஞ்சம் மொய் எழுதிப்போட்டுப் போம். இதுக்கு நீர் வீணா நேரத்தை வீணடிச்சுப் பதில் போட வேண்டாம். எனக்கு நேரம் இருக்கு நான் எழுதுறன்.
நாராயணன் மன்னிக்கவும் உங்கட உருப்படாததில எழுதுறதுக்கு.
 
பெயரிலி நான் எழுதும்போதே நீங்களும் எழுதியுள்ளீர்கள். என்னது பண்டி என்றீர்களா?
எருமை யென்று சொல்லியிருந்தால் என்னைதான் என்று சண்டை பிடிக்கலாம் என்று பார்த்தால்? ;-)
 
/ சிறப்பாகவே பல பதிவுகள் இருக்கின்றன. ஆனால், அந்தப்பதிவுகளுக்குரிய பதிவர்களே /
நன்றி நன்றி ;-)
 
கார்த்திக் எல்லோரும் சண்டை மூடில் இருக்கின்றார்கள். நானும் அப்பிடித்தான் வசந்தன் சொன்னது போல் யாரோடையாவது முண்ட வேணும் போல இருக்கு. இப்ப நான் சொல்லுறன் கார்த்திக் எருமை.
 
நன்றி நரேன்.
...
சுரேஷ் கண்ணன் சொன்ன விடயங்கள் பலதோடு உடன்படுகின்றேன். முக்கியமாய்
//ஆக அச்சில் வந்தால்தான் அல்லது புத்தகமாக வெளிவந்தால்தான் ஒரு விஷயத்திற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் என்கிற மாதிரியான பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த cliche உடைய வேண்டும். வலைப்பதிவில் பதிந்திருந்தாலும் அதன் தர அளவுகோல்களுக்கேற்ப அது இலக்கியம்தான். //
மிகச் சரி.
....
உண்மையில் புத்தகமாகப்போடுவது என்பது ஏற்கனவே முன்னொருபதிவில் நான் கூறியதுமாதிரி இலக்கிய அங்கீகாரத்திகோ அல்லது ஏற்கனவே existயான 'இலக்கியவாதிகளுக்கு' அறைகூவல் விடுவதற்காகவோ அல்ல. இங்கே எழுதப்படுபவை பரவலான வாசிப்பைப் பெறவேண்டும் எனபதே நான் நினைத்ததன் நோக்கம். இன்றும் ஈழம், இந்தியா போன்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு இணையம் மிகத்தொலைவில் எட்டாமல்தான் இருக்கின்றது. ஒரு உதாரணத்திற்கு பத்மாவின் சில பதிவுகள் அல்லது பாரி எடுத்த பத்மா அர்விந்தின் நேர்காணலை எடுத்துக்கொள்ளலாம். இப்படியான ஒரு நேர்காணல் ஒரு இலக்கிய சஞ்சிகையில் நிச்சயம் வெளிவரப்போவதில்லை (எழுதிக்கிழிக்கிறவரைவிட வேறொருவரும் மனிதர்கள் அல்ல என்று எங்களை இலக்கியச்சஞ்சிகைகள் பழக்கப்படுத்திவிட்டன)இப்படியொரு நேர்காணலை வாசிக்கையில், ஆகக்குறைந்து வெளிநாட்டில் ஒருவரை மணக்கும் பெண்ணுக்கு வரமுன்னரே சிலவிடயங்களை விரிவாக அறியவோ அல்லது இங்கே வந்து வன்முறைக்கு உட்படுகையில், கணவனைவிட்டு வெளியில் வந்தால் உதவிகள் கிடைக்கும் என்பதையோ அறியக்கூடியதான வாய்ப்புக் கிடைக்கிறது அல்லவா? மற்றது பாரி, நரேன், விஜய் என்று தொடர்ச்சியாக எழுதிய ஆதிக்குடிகள் பற்றிய கட்டுரைகள். சிற்றிதழ்களில் இவைகுறித்து எழுதுவதற்கு அறிந்தவர்கள் இருப்பினும் நிச்சயம் சிற்றிதழ்கள் இவைபோன்ற விடயங்களுக்கு பக்கங்களின் அளவுகோலால் இடங்கொடுக்காது. நான் இவையெல்லாவற்றையும் விட முக்கியமாய் பார்ப்பது, வேறொரு விடயத்தை. தமிழகத்துச் சஞ்சிகைகளோ அல்லது ஈழத்து/புலம்பெயர் சஞ்சிகைகளோ கண்ணுக்குத்தெரியாத நுட்பமான எல்லைக்கோடுகளை ஓவ்வொரு நாடுக்கும் (தங்களுக்குள்ளே) பிரித்தபடி இருக்கின்றன. உதாரணங்கள்: ... இந்த நாட்டுக்கு ஒரு சிறப்பிதழ், அந்த நாட்டுக்கு ஒரு சிறப்பிதழ்..... என்று ஒரே பிரிப்புக்கள். வலைப்பதிபவர்கள், உலகமெங்கும் பரந்திருப்பவர்கள், தம் சொந்த நாட்டில் இருப்பவர்கள் என்று எல்லோரும் எந்த வகையான எல்லைக்கோடுகளும் இல்லாமல் தமிழில் எழுதுவது என்ற ஒரேயொருகாரணத்தோடு ஓரிடத்தில் பார்க்கமுடிவது நல்லவிடயமல்லவா?
...
மற்ற்படி பெயரிலி சொல்லும் ஒரு கருத்தில் உடன்பாடுண்டு. இங்கே எழுதுபவர்கள் பலமுறை அடித்து திருத்தி எழுதுவது மிகக்குறைவு என்பது உண்மைதான். உடனேயே எழுதியதை அப்படியேதான் பதிவிலிடுகின்றோம் (விதிவிலக்காக சிலர் இருக்கலாம்). எனவே புத்தகத்திற்கு என்று தெரிந்தெடுக்கும்போது இன்னும் திருத்தமாய் எழுதித்தாருங்கள் என்று அதைத் தேர்ந்தெடுக்கும் குழு கேட்கலாம். ஆனால் ரோசா வசந்த் கூறுகின்றமாதிரி யார் இவற்றைத் தேர்ந்தெடுக்கப்போகின்றார்கள் என்பது இன்னொரு முக்கியமான விடயந்தான். ஆனால் அப்படித் தேர்ந்தெடுப்பவர்களும் இணையத்தில் நிச்சயம் புழங்குபவர்(களாக) இருக்கவேண்டும். இணையத்தில் போட்டிகள் என்று அறிவித்துவிட்டு பிறகு இணையத்தை அறியாவர்களைக் கொண்டு கதைகளை/கவிதைகளைப் பிரிசுக்கிறியவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்களாக மட்டும் நிச்சயம் இருக்கக்கூடாது. காசி கூறும் பதிப்புரிமை நிச்சயம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ஆக்கங்களைத் தெரிவுசெய்து பிரசுரிக்கமுன்னர் ஆக்கியோரின் முறையான அனுமதியை பெற்றால் பலபிரச்சினைகள் தீருமென்று நினைக்கின்றேன். ஆனால் காசுக்கு விற்பதாய் முடிவுசெய்தால், royalty குறித்து யோசிக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்.
....
பலவிசயங்கள் எழுதவேண்டும் என்று நினைத்தேன். எல்லாம் சாம்பராகிவிட்டது. அவ்வவ்போது வந்து இவை குறித்து பின்னூட்டமிடுகின்றேன்.
....
சோம்பல்படாமல் உடனேயே இப்படியொரு பதிவு எழுதிய நரேனுக்கு மீண்டும் ஒரு நன்றி :-)
 
இந்த பதிவின் மூலம் கோட்டை போட்ட நரேனுக்கு முதலில் நன்றி.

'புத்தகம் போடுவது' என்றால் கேட்க மிக இனிமையாக இருக்கிறதே தவிர நீங்கள் விவாதித்து கொண்டிருப்பது போன்ற நடைமுறை சிக்கல் இருக்கின்றன. அதுவுமில்லாமல் அச்சில் வரும் எழுத்தாளர்களை சவால் விடவோ, 'இணையத்தில் இலக்கியம்' இல்லை என்றதால் சவால் விடுவது மாதிரியோ செய்தால் கட்டாயம் நம்ம நோக்கத்திற்கு பால் தான்.

ஒரு பதிவரின் கருத்து என்றில்லாமல் பரவலாக தொகுக்கப்பட்டால் கட்டாயம் நல்ல தரத்தில் அந்த புத்தகம் விளங்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

என் பதிவில் நான் விட்ட பின்னூட்டத்தையே திரும்ப சொல்கிறேன். சிங்கை பாலு மணிமாறன் அவர்களின் மலேசிய பத்திரிக்கை நண்பர் ஒருவர் வலைப்பதிவு கருத்துக்களை வெளியிட ஒத்துக் கொண்டதாக தெரிவித்தார்(இதை ஏற்கனவே பாலு, காசி பதிவில் சொல்லிவிட்டார் என்ற தைரியம்+ உரிமையுடன் இதை லீக் அவுட் பண்ணுகிறேன்). உண்மையில் இது ஒரு நல்ல முயற்சியாக பட்டது.எனக்கு மலேசியாவில் பதிவுகளை பற்றி பத்திரிகை வழியாக மக்கள் படிக்கும் போது கிடைக்கும் ரியாக்ஷனை அறிய மிக ஆவலாக உள்ளேன்.கண்டிப்பாக நல்ல ரியாக்ஷன் + முயற்சியாக அமையும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.

Non-Profit or fund என்ற அடிப்படையில் புத்தகங்களை வெளியிட்டு வரும் லாபத்தில் மென் பொருள் தன்னார்வலர்களுக்கும், நலப்பணி தன்னார்வலர்களுக்கு fund ஒதுக்கலாம் என்றால், அதற்கு எத்தனை பேர் ஒத்திசைவு கிடைக்கும் என்பது கேள்விக்குறியே. பதிப்பகத்தில் இருப்பவர்களை தவிர சில பதிவர்களும் இந்த பொறுப்புக்கு முன் வர வேண்டும். இப்படியாக கருத்துக்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

விவாதங்கள் தொடருட்டும்.
 
பெயரிலி, கார்த்திக், கறுப்பி, காசி, டிசே, விஜய் நன்றிகள்.

இது விரிவாக விவாதிக்க வேண்டிய கருத்து. நான் சொன்னவை என் கருத்துக்களே. பிறரின் பார்வையில் பார்க்கும்போது மேலும் இது மெருகேறும் வாய்ப்புக்களதிகம். நான் சொல்லவருவது எல்லா கட்டுரைகளையும், அதன் பின்னூட்டங்களையும் சேர்த்து புத்தகத்தில் தந்தால் தான் ஒரு முழு நிறைவான, மாறுபட்ட கோணங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை வாசகனுக்கு அளிக்க முடியும். வெறுமனே கட்டுரைகளை மட்டுமே தொகுத்து அளித்தால், எண்ணற்ற கட்டுரைத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிடும் அபாயங்களுள்ளது. யார் தேர்ந்தெடுப்பார்கள், எதை தேர்ந்தெடுப்பார்கள் என்பது முழுக்க முழுக்க வலைப்பதிவாளர்களின் சுதந்திரம். காசி நட்சத்திரமாய் ஜொலித்தபோது அவரின் பதிவில் வாக்கெடுப்பு நடத்தினார். அது போல ஒரு குழுவினை யமைத்து, அவர்கள் மொத்தமாக 50 கட்டுரைகளை தேர்ந்தெடுக்கட்டும். அதனை பொது வாக்கெடுப்புக்கு விடுவோம். அதில் தேறும் முதல் 25 கட்டுரைகளை புத்தகமாக்கலாம். பெயரிலி சொன்னது போல, அவ் 25 கட்டுரைகளின் பதிவர்களை அக்கட்டுரைகளில் ஏதேனும் சிறு மாறுதல்கள் செய்ய சொல்லலாம். அல்லது சீரமைத்து எழுத வைத்து, பின்னூட்டங்களோடு வெளியிடலாம்.இது ஒரு முன்வரைவு மட்டுமே. இதை விட நல்ல ஐடியாக்கள் இருப்பின் யோசிப்போம்.
 
ஆர்டர் ஆர்டர், ஆர்டர்!

என்ன அங்கே ஒரே சத்தம் வலைப் பதிவுகளைப் புத்தகமாப் போடறதைப் பத்தி?

நான் முதல்லே ஒரு புத்தகத்தை அச்சுலே போட்டு வெளியிட்டு எழுத்தாளர் என்ற பரி வட்டத்தையோ
ஒளி வட்டத்தியோ ஏதோ ஒரு வட்டத்தைத் தலைக்குமேலே போட்டுக்கறேன்.

( ஏம்பா, யாராவது கொஞ்சம் சிபாரிசு செய்யுங்களேன் பதிப்பகத்துக்கு!)

இல்லேன்னா சொந்தக் காசுலே போட்டுறலாமா?

அப்புறமா வந்து யார் யாரோட பதிவுகளைப் புத்தகத்துக்கு தெரிவு செய்யலாமுன்னு யோசிக்கறேன்.

இப்ப வாய்தா வாங்கிக்கறேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

இது நல்ல ஐடியாதானே?
 
கறுப்பி, துளசி கோபால், இன்ன பிற தன் வலைப்பதிவினை தானே புத்தகமாக போட விரும்புவர்களுக்காக இது.

ப்ளாக்பைண்டர்ஸ்[Blog Binders] பாருங்கள். உபயோகமாக இருக்கும்.
 
நாராயணன் நான் நகைச்சுவையாகத்தான் புளொக்கில் எழுதியவற்றைப் புத்தகமாய்ப் போடுவது பற்றிச் சொன்னேன். (புத்தகம் போடுமளவிற்கு புளொக்கில் நான் ஒன்றும் எழுதவில்லை) இருந்தும் நான் எனது முதல் சிறுகதைத் தொகுப்பைச் செய்து விட்டேன். இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் கனடாவில் வெளியிட உள்ளேன். இந்தியாவில் கடந்த வருடம் வெளி வந்து விட்டது. இந்தியாவில் இருக்கும் எழுத்தாளர் எஸ்.போவின் மித்ரா ஆட்ஸ் வெளியிட்டிருந்தார்கள்.

துளசி கோபால்,
இவர்கள் மூலமும் புத்தக வெளியீடுகளைச் செய்யலாம்.
 
புத்தகமாக்கலாம் ,என்பதில் எனக்கும் யோசித்ததில் உடன்பாடே. ஆனால்..(ஆரம்பிச்சுட்டான்டா..)
நமது நோக்கம் என்ன? வலைப்பதிவுகளில் உலவும் கருத்துக்கள் பரவலாக வாசிக்கப்படவேண்டும் என்பதுதானே. அதற்கு புத்த்கம் போடுவது என்பது ஒரு யோசனைதான் என்றாலும்.
1. ஒரு புத்தகமாக வெளியிட்டதும் அது எத்தனை பேரை செனறடையும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?
2. குமுதத்துக்கே (கே.. என்பது நன்கு வளர்ந்த ஒரு வார இதழுக்கே என்பதாம்) 3 லட்சம் வாசகர்கள்தானே?
3. கருத்துக்களை வாங்கி படிக்கும் மக்களாக நமது மக்களை உருவகித்துக்கொண்டால், அம்பேத்கரையோ,பெரியாரையோ,காந்திஜியையோ 3 லட்சத்துக்கு மேல் வாசித்தவர்கள் இருக்கவேண்டுமே? இருக்கிறார்களா?


இதற்கு என்னெ செய்யவேண்டும்.

பிரகாஷ் சி-டாக் குறுந்தகட்டுக்கு சொன்ன யோசைனையைதான் நான் இதற்கும் சொல்வேன். முதலைல், "வெகு ஜன தளத்தி" வலைப்பதிவுகள் பற்றி வரட்டும். ஒரு பெட்டி செய்தியாகவோ அல்லது , "கருத்து கந்த சாமீ " ஒரு பத்து வரி முதலில் வரட்டும்.
பின் குறைந்தது 6 மாதமாவது, வேறு வேறு பிரச்சினைகளைப்பற்றிய "வலைப்பதிவர்கள் பார்வை" அல்லது "ஏரோப்ப்லேன் கருத்துக்கள்" என்று ஏதாவது மாதிரி தொடன்ர்ந்து , ப்திப்பு வட்டத்தில் இது இருக்க வேண்டும்.

பின்னர் நிறைய (என்பது சில லட்சம்) மக்களுக்காவது இது பற்றி தெரிந்த பின், புத்தகம் போட்டால் சில் ஆயிறம் பேராவது வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இப்போ புத்தகம் போட்டால் , எவனும் வாங்கவில்லை என்றால் என்ன செய்வது? வாங்க வில்லை என்பது கூட பொருளிழப்பு என்ற் அளவில் போகட்டும். ஆனால் , எடுத்த நோக்கமே நிறைவேறாதே?
 
// "வெகு ஜன தளத்தி" வலைப்பதிவுகள் பற்றி வரட்டும். ஒரு பெட்டி செய்தியாகவோ அல்லது , "கருத்து கந்த சாமீ " ஒரு பத்து வரி முதலில் வரட்டும். //

வருது சாமீ வருது.... வந்துகிட்டே இருக்கு ...:-)
 
நிஜமாவெ கேக்கறேன்,

புத்தகம் போடற நிலையிலேயா நான் எழுதிக்கிட்டு இருக்கேன். ஏதோ கிறுக்குனதுக்கு நான் இப்படி கேட்டது
கொஞ்சம் ஓவரா இல்லே! ( எனக்கே புரியுது!)

எல்லாம் 'ஹாரி பாட்டர்' எழுதுனவங்களைப் பத்தி, 'ஹாய் மதன்'லே படிச்ச மிதப்புலே
இருந்துட்டேன் போல!

ச்சும்மா விளையாட்டாக் கேட்டதுக்கு இப்படி 'டாண்'னு பதிப்பகத்துக்கு சுட்டி
கொடுத்துட்டீங்களே!

நல்லா இருங்க!

என்றும் அன்புடன்,
துளசி.
 
நாராயணன்,
சுட்டியைப் பாருங்க.
தமிழ்வலைப்பதிவிலிருந்து முதன்முதலாய் வெளிவந்த மின்புத்தகம் இதுதான்(!) :-)

http://muthukmuthu.blogspot.com/2005/01/blog-post_10.html
http://muthukmuthu.blogspot.com/2005/01/blog-post_110538376220943021.html
 
ஆக மொத்தம் இந்த ஐடியாவுக்கும் உருப்படியா ஒரு முடிவும் வரல போல. மொத்தத்துல இந்த ஐடியாவுக்கும் பால் தானா? காலம் போகும் போக்கில் பார்க்கலாம்.
 
//மொத்தத்துல இந்த ஐடியாவுக்கும் பால் தானா?//
விஜய், எனக்கும் அதே கவலைதான் :-(.
 
// //மொத்தத்துல இந்த ஐடியாவுக்கும் பால் தானா?//
விஜய், எனக்கும் அதே கவலைதான் :-( //

இவ்வளவு சீக்கிரம் மனதுடைந்தால் எப்படி விஜய்,டிசே. முதலில் இதுப் பற்றிய பேச்சினை ஆரம்பித்திருக்கிறோம்.நல்ல பதிவுகளைப் பார்க்கும்போது மீண்டும் வலியுறுத்துவோம். இங்கே கேள்வி கேட்டவர்களனவரும் மிக நியாயமான, யதார்தத்தில் உணரக்கூடிய கேள்விகளை முன்னிறுத்தி இருக்கிறார்கள். ஆக, முதலில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய அல்லது கேள்விகளை முறியடிக்கும்விதமான வலைப்பதிவு குமுகத்தினை உண்டாக்க வேண்டிய கட்டாயங்கள் நமக்குண்டு. நாம் யோசித்தோம் என்பதற்காக வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது. இதன் பயன் வெகுஜன மக்களை கொண்டு சேரவேண்டுமானால், கொஞ்ச காலம் காத்திருக்கலாம். முயற்சி திருவினையாக்கும் :)
 
ஆல்ரைட் நரேன். காத்திருப்போம் காலத்தாலும்/முயற்சியாலும்/கருத்து ஒருமிப்பாலும் கனியட்டுமே.
 
எல்லாருக்கும் வணக்கம்,

வலைப்பதிவுகளை புத்தகமாகப் போடுவதை வரவேற்கிறேன். ஒரு சின்ன யோசனை. இதற்கென்று ஒரு தனி வலைப்பதிவைத் தொடங்கி சிறந்த கட்டுரைகளை அந்தப் பதிவில் சேமிக்கத் தொடங்கினால் என்ன? எங்காவது சிறந்த பதிவுகளை ஒன்று சேர்க்க வேண்டுமில்லையா.

ஒரு கேள்வி - இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்க வேண்டுமில்லையா? ஏனென்றால் முதல் புத்தகம் வெளிவந்தப் பிறகும், நல்ல வலைப்பதிவுகள் வந்துகொண்டேயிருக்குமே? ஒரு வெளியீட்டுக்கும் அடுத்த வெளியீட்டுக்கும் எவ்வளவு இடைவெளியிருக்க வேண்டும்?

தாரா.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]