May 30, 2005

Hazaaron Khwaishein Aisi [2003]

"ஆயிரம் ஆசைகள் அவரவர்களுக்கு" என்று கொஞ்சம் லூசாக மொழிபெயர்க்கலாம். HKA ஒரு ஹிந்திப் படம். வழக்கமாக ஹிந்திப் படங்கள் 2 கதாநாயகர்கள், உலகம் சுற்றி பாடல்கள், கண்டிப்பாக ஒரு ஐட்டம் சாங் (இஷா கோபிகர், யானா குப்தா, மலாய்கா அரோரா, மீரா என ஐட்டம் சாங் நிபுணிகள் கூட்டம் தனி] இறுதியில், "மை துமே ஜிந்தா நஹி சோடுங்கா" என கத்திக் கொண்டு வில்லனைப் பார்த்து ஹீரோ துப்பாக்கியால் துவம்சம் செய்வது அல்லது காதலின் உச்சக்கட்ட உளறலாய் விட்டுக் கொடுப்பது என்று எண்ணெய் அதிகமான, ஆறிப் போன பீச் பஜ்ஜிப் போல இருக்கும். சடாலென சில படங்கள் திரும்பிப் பார்க்க வைக்கும் [பேஜ் 3, மை பிரதர் நிகில்] அந்த வரிசையில் HKAயையும் சேர்க்கலாம். படத்தின் பின்புலம் இதுவரை எந்த ஹிந்திப் படத்திலும் வராதது. வர்க்கப் போராட்டமும், எம்ர்ஜென்சி கால கட்டமும், நக்ஸல் எழுச்சியும், இளைஞர்களின் புரட்சி கனவும் அடங்கிய 1969 - 1975 காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. காதல், லட்சியம், கனவுக்கான போராட்டமாய் உருவாகியிருக்கிறது இந்த படம்.

சித்தாந்தங்கள் உருப்பெற்ற காலம். புரட்சிகரமான ஒரு கனவு எல்லா இளைஞர்களின் மனதிலும் இருந்த காலம். லட்சியவாதிகளும், சீர்திருத்த வாதிகளும், ஒரு கனவு தேசத்தினை நிர்மாணிக்க எதைவேண்டுமானாலும், இழக்க தயாராய் இருந்த காலகட்டம். இந்தியா என்னவாக உருமாறும் என்கிற தெளிவில்லாமல், நேருவின் சோஷலிச பாதையில் அதிருப்தியுற்று, கியுப விடுதலை, சீன வர்க்க எழுச்சி போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட கல்லூரி பல்கலைக் கழக மாணவர்கள் வாழ்ந்த காலக்கட்டம். இந்திராகாந்தியின் ஆட்சியில் இந்தியா திசை தெரியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்த போது, அடக்குமுறைகளை தாண்டியும், வர்க்கப் போராட்டத்தினை எதிர்த்தும் பல்வேறு சித்தாந்தங்கள் மேலெழும்பிய காலம். இரண்டு நபர்கள், ஒரு பெண், அவர்களின் பின்புலங்கள், அவர்களுகிடையே ஏற்படும் காதல், உணர்ச்சிகள், நக்சல் எழுச்சி, வர்க்கப் போராட்டம், அடித்தட்டு மக்களின் நிலை, இளைஞர்களின் புரட்சி கனவு, கனவின் முடிவு என நீளும் கதையின் முடிவு நெகிழ செய்வதாக இருக்கிறது.

கதை 1969-ல் ஆரம்பிக்கிறது. விக்ரம்,சித்தார்த், கீதா மூவரும் வசதியான குடும்பத்திலிருந்து டெல்லி பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள். சித்தார்த் இடதுசாரி கொள்கையுடையவன். நக்சல்பரி கொள்கையில் ஈர்க்கப்படுகிறான். புரட்சி வெடித்து, கனவு நிறைவேறும் என்று நினைப்பவன். கீதா ஒரு ஆந்திர செல்வந்தரின் பெண். லண்டனுக்கு சென்று படிக்கும் விருப்பமுடையவள். விக்ரம், ஒரு காந்தீயவாதி காங்கிரஸ் காரரின் மகன். பெரும் பணமும், அதிகாரமும் பெருவது தான் அவனின் குறிக்கோள். கீதா சித்தார்த்தினை காதலிக்கிறாள். ஆனால், சித்தார்த்தோ, லட்சியத்திற்காக, பீகாரில் இருக்கும் கிராமங்களுக்கு செல்கிறான். கீதா லண்டனுக்கு செல்கிறாள். விக்ரம் கீதாவினை காதலிக்கிறான். அனைவரும் பிரிகிறார்கள்.

வருடம் 1975. விக்ரம் ஒரு வளர்ந்து வரும் பிஸினஸ்மேனாக இருக்கிறான். ஒரு பார்ட்டியில் குடிகார ஐஏஎஸ் அதிகாரியான அருணை சந்திக்கிறான். கீதா அருணின் மனைவியாக இருப்பதை கண்டறிகிறான். அப்பார்ட்டியில், கீதாவையும் சந்திக்கிறான். உள்ளே இருக்கும் காதல் மீண்டும் துளிர்கிறது. கீதா, அருணை விவாகரத்து செய்கிறாள். கீதா அருணை விட்டு விலகுகிறாள். நடுகாட்டில் வசிக்கும் சித்தார்த்தினை தேடி போகிறாள். சித்தார்த் எங்கிருக்கிறான் என்பதை தன் ஆட்பலத்தினைக் கொண்டு விக்ரம் கண்டுபிடிக்கிறான்.

சித்தார்த்தோடு சேர்ந்து சித்தாங்களில் உந்தப்பட்டு, கீதா பீகாரின் அடித்தட்டு மக்களுக்கு பாடமெடுக்கிறாள். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. இந்தியாவில் எமர்ஜென்சி அமுலாகிறது. விக்ரம் அவ்வப்போது கீதாவினைப் பற்றி யோசிக்கிறான். பின் வேறொரு பெண்ணை மணம் செய்துக் கொள்கிறான். இந்தியாவெங்கும் நக்சல்பரிகள், கம்யுனிஸ்ட்டுகள், புரட்சிவாதிகள் என்று காங்கிரஸுக்கு எதிரானவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்படுகிறார்கள். கீதா தன் குழந்தையினை தன் பெற்றோரிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறாள்.

பீகாரில் போலிஸ் வேட்டை தொடங்குகிறது. நக்சல்பரிகளை தொடர்ந்து தாக்குகிறது. குழந்தையுடன் கீதாவும், சித்தார்த்தும் போலிஸ் துரத்தலினால் பிரிகிறார்கள். விக்ரமின் காந்தீயவாதி அப்பாவையும் கைது செய்கிறது போலிஸ். கீதாவையும், சித்தார்த்தையும் போலீஸ் கைது செய்கிறது. சித்தார்த்தின் கண் முன்னே கீதாவினை வன்புணர்கிறார்கள். அடித்தட்டு மக்கள் பெருமளவில் தாக்கப்படுகிறார்கள். சித்தார்த் சிறையிலிருந்து தோழர்கள் மூலம் தப்பி விடுகிறான். கீதாவின் நிலை விகரமிற்கு தெரிய வருகிறது.

தன் ஆட்பலத்தினை பயன்படுத்தி விக்ரம் கீதாவினை சிறையிலிருந்து வெளியேற்றுகிறான். சித்தார்த்தினை தேடும் பொறுப்பு வேறு வருகிறது. சித்தார்த் தப்பிப் போகும் போது போலீஸாரால் சுடப்பட்டு ஒரு மட்டரக மருத்துவமனையில் விலங்கோடு சேர்க்கப்படுகிறான். அவனை தேடிவரும் விக்ரம், லாரியோடு வீழ்ந்து அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். விக்ரமும், சித்தார்த்தும் ஒரே அறையில் சந்திக்கிறார்கள்.

ஆனால் விதி இங்கு விளையாடுகிறது. இரவு நக்சல்பரி தோழர்கள் சித்தார்த்தினை கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். காலையில் அவனை தேடும் போலிஸ் காணாமல் வெறுப்பேறி, விக்ரமினை கொன்று அவன் தான் சித்தார்த் என்று முடிவு கட்டும் நோக்கோடு அவனை வயல்வெளியில் தாக்குகிறார்கள். தாக்கும் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை, அதனால், கான்ஸ்டபிளின் இரும்புதடியால் மண்டையில் அடித்து கொல்ல முயற்சிக்கிறார்கள். அதற்குள் விக்ரமின் ஆட்கள் அங்கு வந்து அவனை காபாற்றுகிறார்கள். இந்த காட்சி நெஞ்சுறுக்க வைக்கிறது. செல்வ செழிப்பும், அதிகாரமும் பெற்ற ஒருவன் தன் உயிருக்காக, தான் சித்தார்த்தில்லை என்பதை ஒரு படிப்பறிவில்லாத பீகாரி கான்ஸ்டபிளுக்கு புரியும்படி கெஞ்சும் போது, உயிருக்குமுன் வேறெதுவும் பெரிதில்லை என்பது அப்பட்டமாக காட்சியாகிறது.

வீடு திரும்பும் விக்ரம் மண்டையில் அடிப்பட்டதால், மனநிலையை இழக்கிறான். இந்தியாவில் எமர்ஜென்சி நீக்கப்படுகிறது. சித்தார்த் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான். விக்ரம் காணாமல் போய்விடுகிறான். சித்தார்த்தின் கடிததோடு படம் முடிகிறது. சித்தார்த் விக்ரம் எங்கிருப்பான் என்று வாய்ஸ் ஓவரில் சொல்கிறான். அது அவர்கள் மூவரும் சந்தித்த ஏரிக்கரை. அங்கு போகும் கீதா, அவனருகில் கீழே ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறாள். ஐ லவ் யூ கீதா என்கிற கிறுக்கலுடன், மண்டையில் கட்டுப் போட்டு வெறித்தப் பார்வை பார்த்திருக்கும் விக்ரமினை நெஞ்சோடு அணைக்கிறாள் படம் முடிக்கிறது.

எல்லோரின் கனவுகளும் சிதைந்து போய்விட்டன என்பதை சூட்சுமமாக விளக்குவதோடு படம் முடிகிறது. படமுழுக்க கூர்மையான வசனங்கள். நையாண்டிகள். எள்ளல்கள். உதா. சித்தார்த், கீதா, விக்ரம் அனைவரும் ஒரு ஏரிக்கரையில் பியர் குடிக்கிறார்கள், நக்கலாக விக்ரம் சொல்லும் வசனம் "For Revolution"

சித்தார்த் [கேகே மேனன்], விக்ரம் [ஷைனி அஹூஜா], கீதா [சித்ரங்கடா சிங்] மூவருமே நன்றாக உணர்ந்து செய்திருக்கிறார்கள். சித்ரங்கடா சிங் சில கோணங்களில் சுமிதா பட்டேலை நினைவுறுத்துகிறார். சரியாக பயன்படுத்தினால் கொங்கனா சென் போல ஒரு நல்ல நடிகை இந்திய திரைக்கு கிடைப்பார். ஷைனி அஹூஜா மிரட்டியிருக்கிறார். ஏற்கனவே சின்ஸ் [Sins] என்கிற பாலியல் பாதிப்பில் உண்டான படத்தில் நடித்து பரபரப்பினை கிளப்பியவர். கேகே மேனன் ஆழமாய் ஒரு நக்சல் பரியின் கனவினையும், வாழ்க்கையையும் கண்முன் நிறுத்துகிறார். கடைசியில் வந்தாலும் செளரவ் சுக்லா [ஹேராம் லால்வானி ஞாபகம் வருகிறதா. வழுக்கை தலையர்] ஒரு படிப்பறிவில்லாத மூர்க்கமான பீகாரி கான்ஸ்டபிளை கண் முன் நிறுத்துகிறார். மொத்தத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு ஹிந்தியில் ஒரு ஆழமான படம்.

12 உலக விழாக்களில் காண்பிக்கப்பட்ட படமிது. இந்தியாவில் எம்ர்ஜென்சி / நக்சல் பாரம்பரியம் பற்றிய படங்கள் குறைவு. இந்த படத்தில் காந்தி / இந்திரா காந்தி /நேருவுக்கு எதிரான வார்த்தைகள் வருகின்றன. இன்று அறிவுஜீவி மட்டத்தில் மட்டுமே தெரிந்திருக்கும் சாரு மஜும்தார் பற்றிய வசனங்கள் வருகின்றன. கால் சென்டரில் வேலை செய்யும் ஏதேனும் இளைஞனைக் கூப்பிட்டு சாரு மஜூம்தார் பற்றிக் கேளுங்கள், அவர் ஏதாவது மராட்டி நடிகரா என்கிற கேள்வி வரும். இந்தியாவின் அத்தியாவசிய பிரச்சனைகளையொட்டிய ஹிந்திப்படங்கள் மிகக்குறைவு. இந்த படமாதிரி ஏதாவது வந்து மனசினை கொஞ்சம் ஆற்றும்.

இந்த மாத காலச்சுவட்டில் [ஜுன்] கூட அம்ஷன் குமார் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம், திராவிட பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினை அடிப்படையாக வைத்த ஒரு படமும் இல்லை என்பது தான். வர்க்கப் போராட்டத்தினை சரத் / பார்த்திபன் நடித்த அரவிந்தன் என்கிற படம் ஒரளவுக்கு தொட்டிருக்கும். ஆண்டே,அடிமைத்தனத்தினை வாட்டக்குடி இரணியனில் சொல்லியிருப்பார்கள். இதுதாண்டி, மணி ரத்னத்தின் இருவரில் கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்காது. இன்னமும், தமிழ்ப்படங்கள் தமிழ் மண்ணின் போராட்டங்களின் பின்புலத்தில் படங்கள் செய்ய ஆரம்பிக்கவில்லை.

தமிழில் நக்சல், வர்க்கப் போராட்டம் என்று சொன்னால், உடனே நினைவுக்கு வருவது தியாகுவின் ஜு.வியில் தொடராக வந்த "சுவருக்குள் சித்திரங்கள்" இது தாண்டி, நக்சல்பரிகளா, தனிநாடு போராளிகளா என்கிற ஒற்றை வித்தியாசத்தில் ஞானியின் "தவிப்பு" [ஆனந்த விகடனில் தொடராக வந்தது] போன்றவை நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திர நக்சல் தலைவராக அறியப்பட்ட சீதாராம கொண்டைய்யா சரணடைந்தார். கனவு நிறைவுற்றுவிட்டதா அல்லது அவர் சோர்ந்து விட்டாரா. சொல்ல தெரியவில்லை. காதல் அலை ஒய்ந்து, இளமையலை [பதின்ம வயது காதல், உடல் சார்ந்தியங்கும் பருவ காதல்கள்] அடித்துக் கொண்டிருக்கிறது. நல்ல படங்கள் வருமென்ற நம்பிக்கையுடன்.


பார்க்க: படத்தின் தளம் | ரெடிப் செய்தி | ஐஎம்டிபி

கொசுறு: நான் இந்த படத்தின் டிவிடி எடுத்தவுடன், கடைக்காரர் ரகசியமாய், நாளைக்கு கொடுத்துடுங்க சார் மறக்காம என்றார். என்னய்யா விஷயமென்றால், மணி ரத்னம் இந்த படத்தினை கேட்டிருக்கிறார். ஆக, நான் படம் பார்த்த பிறகுதான் மணி ரத்னம் பார்க்க போகிறார் ;-) மணி இந்த படத்தினைப் பார்த்து தமிழ்நாட்டு பின்புலத்தில் தமிழக மண்ணில் நடந்த ஏதேனும் பிரச்சனைகளையொட்டி படமெடுத்தால் நன்றாக இருக்கும். எஸ்.ரா வேறு கதை வசனமெழுதுகிறார் என்கிறார்கள். பார்ப்போம்.

May 27, 2005

அந்நியன் - பட பதிவு அல்ல

அந்நியர்கள் [Aliens] பற்றி ஹாலிவுட் படங்கள் சொல்லாத கதைகளில்லை. வேற்றுகிரக வாசிகள், தண்ணிருக்கு அடியில், காற்றில், காடுகளில் என்று அவர்கள் விடும் பீலாவிற்கு அளவேயில்லை. ஆனாலும், சுவாரசியமாக கதை சொல்லுவார்கள். என்.ஜி.சி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அம்பானியின் அருளுடன் ஏதாவது வெப்வேர்ல்டில் முதல் தொகுப்பின் சில மணித்துளிகளையாவது பார்க்க வேண்டும். பிற கிரகங்களின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு அங்கிருக்கும் உயிரிகள் எப்படியிருக்கும் என்பதை அறிவியில் பார்வைக் கொண்டு விளக்க முயற்சிக்கிறார்கள். வெறுமனே 1000 தலை பாம்பு, ஐந்து தும்பிக்கை யானை, நூறடி நீள முதலை என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கொஞ்சம் நம்பகத்தன்மையோடு கதை சொல்லுகிறார்கள். அவர்களின் இணையத் தளத்தில் இரண்டுவிதமான கிரகங்களை [நீல நிலவு[Blue Moon], அவுரேலியா[Aurelia]] எடுத்துக் கொண்டு, அவற்றின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எவ்விதமான ஜீவராசிகள் இருக்கும், அவற்றின் உணவு, தாக்கும் முறை, உயிர் வாழ்தல், ஒடுதல், பறத்தல் வேகம், மோப்பம் பிடிக்கும் முறை, இடம் பெயர்த்தல் என எல்லா கோணங்களிலும் படம் காட்டுகிறார்கள். முப்பரிமாண கிராபிக்ஸ் உத்திகளுடன் உயிரினங்களை உருவாக்கி ஒரு செயற்கையான வெளியை உண்டாக்கிக் காட்டுகிறார்கள்.

இது உண்மையா, பொய்யா, இருக்குமா, இருக்காதா என்கிற விவாதம் தனி. ஆனால், இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க அவர்கள் எடுக்கும் வழிமுறைகளும், தயாரிப்பு முன் உத்திகளும், அவர்கள் கலந்துரையாடும் அறிவியல், உயிரியல், மண்ணியல், சமூக விஞ்ஞானிகளின் பார்வைகளும் தான் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. எந்த ஸ்டாருமில்லாமல், விவரணப் படங்களை இப்படிக் கூட எடுக்கமுடியுமா என்று திகைக்க வைக்கின்றார்கள். இதனை விரிவாக எழுதுதலை விட பார்த்து அனுபவித்தல் தான் சிறப்பாக இருக்கும். மறக்காமல், அவர்களின் ப்ளாஷ் இணைய தளத்தினைப் பாருங்கள், அதில் தான் உயிரினங்கள், அவற்றின் வீடியோ, முப்பரிமாண எக்ஸ் ரே பார்வை என நிறைய காணக் கிடைக்கும்.

பார்க்க - என்.ஜி.சியின் எக்ஸ்ட்ராடெரஸ்ட்ரியல் | நிகழ்ச்சியின் முதல் தொகுப்பு வீடியோ

May 26, 2005

பைனாகுலர் 10349

"..... ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க"

"நீ யார் என்று தெரியாது
ஆணா, பெண்ணா
பியரா, விஸ்கியா
நியுயார்க்கா, கலிப்போர்னியாவா
அதெல்லாம் தேவையில்லை
சோசியல் செக்குயுரிட்டி நம்பரென்ன
வங்கி கணக்கு எண் என்ன
வாகனத்தின் பதிவெண் என்ன

என்னைத் தவிர
எல்லோருக்கும்
என் எண்கள் தான் முக்கியம்
எண்ணாகிப் போனேன் நான்"

எப்போதோ படித்த அமெரிக்க கவிதை தான் மேலே சொன்னது. இன்னமும் இங்கே மனிதர்கள் வாக்குகளாக, எண்ணிக்கையாக தான் கணக்கெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் தேர்தல் சமயத்தில் நீங்களும், நானும் ஒரு எண் தான். அவ்வளவே, என்ன ஒரே பிரச்சனை கொஞ்சம் சுயமரியாதையோடும், பகுத்து உணர்வதாலும், நீங்களும் நானும், 500 ரூபாய்க்கும், பிரியாணிக்கும், ஒல்ட் மாங்க் குவார்ட்டர் அல்லது புடவை ரவிக்கைக்கும் அடித்துக் கொள்ள மாட்டோம். அவ்வளவுதான், மற்றபடி, சற்று தாமதமாக போனால், உங்களின் எண்ணிக்கை பூர்த்தியாகி விட்டிருக்கும். இந்த எண்ணிக்கை உண்டாக்கும் சிக்கல்கள் சுவாரசியமானவை, அதிலொன்று தான் கீழே தந்திருப்பது.

"சன் டி.வி. பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவல். சமீபத்தில் செய்திப் பிரிவில் எட்டுப்பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது டி.வி. நிர்வாகம். இடைத்தேர்தல் குறித்த செய்திகளை ஒளிபரப்பியபோது மக்கள் பேட்டியும் ஒளிபரப்பாகியிருக்கிறது. அப்படி காட்டப்பட்ட ஒரு பேட்டியில். ‘அ.தி.மு.க. ஆயிரம் ரூபாய் குடுத்தாங்க... தி.மு.க. ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க’ என ஒருவர் சொல்ல, அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பி விட்டார்களாம். இதுதான் நடவடிக்கைக்குக் காரணமாம்...’’

அட தேவுடா!!

பார்க்க: குமுதம் ரிப்போர்ட்டர்

"என்னுடைய சம்பளம் 30 ரூபாய்"
"என் பெயர் மஞ்சு. எனக்கு 40 வயதாகிறது. நான் காலையில் 6.00 மணியிலிருந்து 11 மணி வரை கக்கூஸ் கழுவுவேன். பின் மனிதக் கழிவுகளை எடுத்துப்போட்டுக் கொண்டு தலையில் வைத்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்றில் கொண்டுப்போய் கொட்டி விட்டு வருவேன். மதியம் கூரைகளை கழுவி விடுவேன். கூரைகளிலிருக்கும் அசுத்தங்களை தனியாக பெருக்கி, துடைத்து, வெளியில் குமித்து பின் ஒரு கீ.மீ தூரம் நடந்து சென்று கொட்டிவிட்டு வருவேன். என் கணவர் 10 வருடத்திற்கு முன்பு காலமாகிவிட்டார். அன்றிலிருந்து எனக்கு இதுதான் தொழில். ஒரு நாளைக்கு கூலி 30 ரூபாய் [$0.75] ஒன்பது வருடங்களுக்கு முன் இது 16 ரூபாயாக இருந்தது, பின் 22 ரூபாயாக மேலேறி, கடந்த இரண்டு வருடங்களாக 30 ரூபாய் தருகிறார்கள். ஆனால், சம்பளம் சரியாக கிடைக்காது. எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளமில்லை. எங்களுடைய சம்பளம் நகர் பாலிகா முனிசாபலிட்டியிலிருந்து வழங்கப்படுகிறது"
The UN Working Group on Contemporary Forms of Slavery, which comes under the UN Commission on Human Rights. It says: “Public latrines – some with as many as 400 seats – are cleaned on a daily basis by female workers using a broom and a tin plate. The excrement is piled into baskets which are carried on the head to a location which can be up to four kilometres away from the latrine. At all times, and especially during the rainy season, the contents of the basket will drip onto a scavenger's hair, clothes and body."

ஏற்கனவே தெரிந்திருந்தாலும், படித்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன். 30 ரூபாய், சென்னையில் கிங்ஸ் சிகரெட் முழு பாக்கெட் 30 ரூபாய்க்கும் மேல். ஹைதராபாத் பிரியாணியில் [எழும்பூர்] வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டால் 36 ரூபாய். அதிர்ச்சியாகவும், கேவலமாகவும், மனித தன்மையற்ற செயலாகவும் தெரிகிறது. இந்தியாவில் 787,000 பேர் இந்த மனிதக் கழிவுகளை சுமக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறது. இந்த தொழிலை எந்த தனியார் நிறுவனமும் செய்வதில்லை. செய்பவை அத்தனையும் அரசு நிறுவனங்கள், நகராட்சிகள், வாரியங்கள். தனியார் நிறுவனங்களில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஒரு மில்லியன் ஆட்கள் செய்யும் வேலையிது.

இது தலித் இதழ்களிலோ, ஹிந்துவிலோ வரவில்லை. இந்தியாவின் முதன்மையான வணிகம் சார்ந்த பத்திரிக்கைகளில் ஒன்றான பிஸினஸ் வேர்ல்டில் வந்திருக்கிறது. முழுவதுமாய் படிக்க உரிமம் வேண்டுமாதலால், மொத்த செய்தியையும், என் ஆங்கில பதிவில் இட்டிருக்கிறேன். அருணா சீனிவாசன் எழுதியதுப் போல நம்பிக்கைக் கீற்றுகள் விழும் அதே சமயம், இன்றைய இந்தியா எப்படியிருக்கிறது என்று பார்க்கும்போது ஆதங்கமும், துக்கமும் தான் பொங்குகிறது

பார்க்க: ஒரு மில்லியன் அடிமைகள் - அனைவரும் தலித்துகள் | பிஸினஸ் வேர்ல்டு சுட்டி [உறுப்பினராய் இருத்தல் அவசியம்]

"ராமா, உனக்கு புத்தி கெட்டுப் போச்சா! - சீதா இராமயணத்திலிருந்து"

ராமாயணத்தினை என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு கொஞ்சம் படிக்க ஆரம்பித்தபின் வெவ்வேறு வடிவங்களில், சொல்லாடல்களில் கேட்டிருக்கிறேன். பத்தாவது படிக்கும் போது கொஞ்சமாய் தேர்வுக்காக கம்பராமாயணத்தினை மக்கு அடித்து, வினாத்தாள்களில் வாந்தியெடுத்திருக்கிறேன். எல்லாரையும் போல எப்பொழுது வேண்டுமானாலும், அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள் என்று சொல்லத் தெரியும். அவ்வளவே. டிவியில் ராமாயணம் காண்பித்தப் போதும் கூட பெரிதாக ஈடுபாடு எதுவுமில்லை. ஆனால், சமீபகாலங்களில் படித்த பிற ராமாயணங்களும், கதையாடல்களும் வெவ்வேறு விதத்தில் ராமனை முன்னிறுத்துக்கின்றன. ஆனால், சீதாவினை முன்னிறுத்தி ராமாயணத்தினை படித்ததில்லை. அதுப்போன்ற ஒரு தளத்தில் சீதாவினை கதை நாயகியாக முன்னிறுத்தி ஒரு நபர் அனிமேஷனில் கதை சொல்லிக் கொண்டு வருகிறார். Site sings the blues என்கிற பெயரை தாங்கி வருமது "சீதாயணா" என்கிற வடிவத்தினை முன்னிறுத்துகிறது. இதுப் போன்ற தொன்மங்களில் எனக்கு பிடித்தது கதை சொல்லும் பாங்கும் கதாபாத்திரங்களும் தான். பெண்களின் பார்வையில் ஒரு தொன்மம் எப்படி சொல்லப்படுகிறது என்பதற்கு நான் படித்தவரையில் கதையாடல்கள் இல்லை. கண்டிப்பாக இருக்கும். ஆனால் நான் படித்ததில்லை. இலியட், ஒடிசி, ராமாயண, மகாபாரதம், கிரேக்க, எகிப்திய தொன்மங்கள் அனைத்தும் ஆண்களின் வெற்றி,தோல்வி, ஆட்சி பிடித்தல், பேராசை, பொறாமை, பெண்களை அடக்குதல், மக்களை ஆளுதல் இவற்றைக் கொண்டு தான் கதை சொல்லுகின்றன. எந்த தொன்மமும் பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதில்லை. பெண்கள் சில பேரை முக்கிய கதாபாத்திரங்களாக, கதைப் போக்கில் சித்தரித்து விட்டு போயிருப்பார்கள். [திரெளபதி, சபரி கிழவி, குந்திதேவி, கைகேயி, தாடகை, சூர்ப்பனகை ] 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இரண்டு பெண்கள் ராமாயணத்தினை பெண்களின் வழியாக பார்த்து சொல்லியிருக்கிறார்கள். மோலா என்ற பெண் தெலுங்கு ராமாயணத்தினையும், சந்திரபதி என்கிற பெண் வங்காள ராமாயணத்தையும் பெண் பார்வையில் மீட்சி செய்திருக்கிறார்கள்.[இருவரும் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாதவர்கள்]

இன்னமும் பெண்ணடிமை போகாத ஒரு சமூகத்தில், பெண்ணியம் என்பதே 19 ஆம் நூற்றாண்டு சிந்தனை என்கிற மேற்கத்திய சிந்தனாவாதம் இங்கு பொலிவிழந்து போகிறது. இந்தியாவிலும் பெண்ணியவாதிகள் இருந்திருக்கிறார்கள், கலகக்காரர்களாய் பெண்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே சுவாரசியமாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது.

பார்க்க - சீதாயணா - Sita sings the blues | பெண்களின் பார்வையில் ராமாயணம்

"த்தேறி.. வாடி நான் கூப்புடச் சொல்ல"
"உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள்? அப்படி செய்வதற்கு பெயர் கணவன் மனைவி உறவு இல்லை. காசு கொடுத்து நடத்தும் விபச்சாரம் என்று பெயர். என்னய்யா இது.. கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இலக்கணம் தெரியாமல் அதன் தவிப்புகள் தெரியாமல் எழுதுகிறீர்கள். ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ?
மேற் சொன்னது "இஸ்லாம் ஒரு அறிமுகம்" என்கிற பதிவில் நண்பர் அப்துல்லா சொல்லியிருப்பது. இஸ்லாத்தில் நபிகள் என்ன சொன்னார் என்று உள்ளே போக விருப்பமில்லை. என்னுடைய கருத்து வேறுபாடு மேற்குறிப்பிட்ட வார்த்தைகளையொட்டியே. நான் இதனை ஒரு தனி நபர் வாழ்வியல் சார்ந்த பிரச்சனையாக பார்க்கிறேன். ஒருவருடைய விருப்பமின்றி அவரோடு உடலுறவு கொள்வதற்கு பெயர் வன்புணர்வு. என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள் ? கூப்பிடவுடன் படுக்கைக்கு வந்து படுப்பவளுக்கு பெயர் தான் மனைவியா. எல்லா இடங்களிலும் சம்மதம் பெறுதல் அவசியம். அமெரிக்காவில் இப்படி செய்தால், கணவன் என்னை வன்புணர்ந்தான் என்று வழக்குத் தொடரலாம். இங்கே சென்னையில் மகளிர் காவல் நிலையத்தில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால், ஜட்டியோடு உட்கார வைத்து விடுவார்கள். கணவன் மனைவி உடலுறவு என்பது அவர்களுக்கிடையேயான அந்தரங்க விஷயம். ஜிஆர்டியில் அக்ஷ்ய திரிதியை அன்றைக்கு கூப்பிட்டுப் போகாமல் இருந்தால், 10 மணிக்கு மேல் பக்கத்தில் கைப் போட்டால், தூக்கி கடாசி விடுவார்கள் என்கிறான் நண்பன். நேற்றைக்கு தான் இரவு வெகுநேரம் என் நண்பனின் மனைவி மின்னஞ்சலில் விவாகரத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதைப் பற்றி கூட்டமாய் பேசிக் கொண்டிருந்தோம். நீங்களென்னடாவென்றால், எவ்வித பேச்சுக்களுமின்றி, கூப்பிடவுடனேனே உடலுறவுக்கு தயாராகி விடுவது போல சொல்லியிருக்கிறீர்கள். இதன் மூலம் ஒரு உறவின் இரு கூறுகளையும் அவமதித்து இருக்கிறீர்கள்.

//ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ?//

என்ன கேவலமான சிந்தனை இது. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அனுமதி கேட்டால் அதனை ஆண்மையின் பலவீனமாகவும், கையலாகத தனமாகவும் சித்தரிக்கிறார் ஆசிரியர். ஐயா, கணவன் மனைவி உறவு என்பது வேறு. கூப்பிட்டவுடனே படுக்கைக்கு வருபவள் வேறு. ஆண் பெண் உறவு என்பது கத்தியின் மேல் நடக்கக்கூடிய விஷயம். அதிலும், கணவன் மனைவி உறவு என்பது அதை விட ஆழமாகவும், கவனமாகவும் கையாளப் படவேண்டிய விஷயம். இதுப் போல விஷயத்தினை கையாளும் போது கவனமாக கையாளுங்கள்.

பார்க்க - இஸ்லாம் ஒரு அறிமுகம்

May 24, 2005

உதவும் கரங்கள் நீளுமா ?

சேத் கொடின் தெரியுமா ? Permission Marketing என்று அழைக்கப்படும் சந்தைப்படுத்துதலை பிரபலமாக்கியவர். அது கொஞ்சம் மீனாக்ஸ் எழுதும் விஷயத்தினையொட்டி அமைந்த விஷயம். அவரின் வலைப்பதிவு உலக பிரபலம். நானும் அவரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன். சமீபத்தில் ஒரு சுவாரசியமான தளத்தினைப் பற்றி படிக்க நேர்ந்தது. அந்த தளத்தின் பெயர் பண்டபுள் (Fundable) கொஞ்ச நேரம் மேய்ந்ததில் மிக சுவாரசியமான அதே சமயத்தில் உபயோகமான தளமாக தெரிகிறது. இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும், உறுப்பினராகலாம். உங்களுக்கு தேவையான பணத்தினை பெறுவதற்கு நீங்கள் கூட்டாக ஆட்களைச் சேர்த்துக் கொண்டு பணத்தினை சேர்க்கத் தொடங்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு திறமூல நிரலி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அதற்கு சில செலவுகளை செய்தாக வேண்டிய கட்டாயமிருக்கும். உரிமம் பெறுதல், இணைய செலவுகள், பீட்டா டெஸ்ட் செய்பவர்கள் என்று கண்டிப்பாக செலவு இருக்கும். இதனை தனியாளாய் எவ்வாறு மேற்கொள்வீர்கள் ? இங்கே தான் பண்டபுள் வருகிறது. நீங்கள் கூட்டம் சேர்த்து காசு வசூலிக்கலாம். 100 பேராக பிரித்துக் கொண்டு ஆளுக்கு $10 என்று கணக்கு வைத்துக் கொண்டு $1000 முதலீட்டினை உங்கள் செயலுக்கு உண்டாக்கலாம்.

நிறைய விஷயங்கள் இதன்மூலம் செய்ய முடியுமென்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் இணையத்தளத்திலோ, அல்லது செய்தித்தாள்களிலோ தமிழகத்தின் மூலையில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் மேற்படிப்பு படிக்க முடியாமால் இருப்பதை படித்து உதவவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படி அதற்கான மூலதனத்தினை சேர்ப்பீர்கள். யார் கொண்டு சேர்ப்பார்கள் ? பண்டபுளில் இதை செய்யமுடியும். ஆனால், காசு கொண்டு சேர்ப்பது என்னமோ தமிழகத்திலுள்ள ஒருவரால் தான் செய்யமுடியும். ஆனால், கொஞ்சம் நோண்டினால், நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று தோன்றுகிறது. இதன் மூலம் வலைப்பதிவர்கள் ஏதேனும் நல்ல காரியங்கள் செய்யலாம் என்று நினைத்தால், கூட்டாக பங்காற்ற முடியும்.

தமிழ்நாட்டில் நிறைய நபர்கள் கையில் [மூளையில்] ஐடியாக்களை வைத்துக் கொண்டு செயல் படுத்த முடியாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும், இன்னமும், உதவி தேவைப்படும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதவி தொகை சிறிதாக கூட [$2-$5] கூட இருக்கலாம். வோட்கா $8 க்கும், ஸ்டார்ப்க்ஸில் காபி $5 க்கும், இங்கே சென்னையிலோ, பெங்களூரிலோ ட்ராட் பியர் 200 ரூபாய்க்கும் குடிப்பவர்கள், ஒரு ரவுண்டினை குறைத்துக் கொண்டு காசு தரலாம் அல்லது ரவுண்டினை குறைக்காமல், காசு மட்டும் குடுத்தாலும் சரி. நிறைய சாத்தியங்கள் இருப்பதாக தெரிகிறது. பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஊதற சங்கை ஊதியாச்சு.. இனி நீங்க பாத்துக்குங்க

பண்டபுள் இணையதளம்
பண்டபுள் உதாரணங்கள்
சேத் கொடின் வலைப்பதிவு
சேத் கொடினின் பண்டபுள் பதிவு

May 22, 2005

கண் கெட்ட பிறகு.....

"தமிழ் வேறு; நான் வேறா? தமிழை நான் பழித்தால் அது மல்லாந்து துப்பிக் கொள்கிற மாதிரி ஆகாதா? தமிழ்மீது படைப்பாளிகளுக்கு இருக்கும் சொந்தம் வேறு. மற்றவர்களுக்குத் தமிழ் தாய் என்றால் படைப்பாளிகளுக்குத் தமிழ் மனைவி. நம்முடைய பெருமை நம்மீது மட்டும் இருக்கக் கூடாது. பிறரையும் நேசிப்பதாக இருக்கவேண்டும். அதற்காக மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள் வித்தியாசத்தைச் சொன்னேன். அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்ளவா சொன்னேன். இதனால் சில சமயம் பேசாமலே இருந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. இன்னும் பேசுவதற்கு சீண்டுகிறார்கள். நான் யாரையும் புண்படுத்துவதற்குப் பேசுவதில்லை. நான் அப்படிப் பேசிவிட்டால் அன்று முழுவதும் தூக்கம் வராமல் தவிப்பேன். அந்த மாதிரியான ஆத்மா நான். ஆறாவது அறிவால் வந்த வினையைப் பாருங்கள்.

என்னை நம்புகிறவர்களை நான் நம்புகிறேன். என் பிடிவாதம் என்னுடன் நின்று போகட்டும். என்னதான் பல மொழிகள் பேசினாலும் அது என் தமிழ்மொழி போலாகுமா? எந்த அச்சமும் எனக்கில்லை. பகைமை நிரந்தரமானதில்லை. வாழ்க்கையிலும் அப்படி இருக்கக்கூடாது. ஏதோ நான் நாய் என்று பேசியதாகச் சொல்கிறார்கள். அதை சிங்கம் என்று திருத்திக் கொள்ளுங்கள். ஜெயகாந்தன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் என்று எழுதுங்கள். சரியாகப் பேனா பிடிக்கிறவர்கள் இதை எழுதுங்கள்.

கோவம் ஒரு பருவத்தில் அழகு. கிழப் பருவத்தில் அது ஒரு நோய். என்னுடைய கோபத்தை தமிழ்ச் சமூகம் தவறாக நினைத்துவிடக்கூடாது."

- புதிய பார்வையில்(மே 16-31) ஜெயகாந்தன் சொன்னதாக வெளியாகி இருக்கிறது.

பல்டியடிப்பது எதிர்ப்பினைக் கண்டா அல்லது சரியான சொற்களை கையாள தவறியதாலா ? இன்னமும், ஜெயகாந்தனின் எதைப் பற்றியும் கவலையற்ற தன் நிலையினை அடித்து சொல்லும் பாங்கு அப்படியே இருக்கிறது. இதில் கொஞ்சமும் மாற்றமில்லை. இதில் தன்னுடைய ஆறாவது அறிவினால் சொன்ன சொற்கள் வினையாக போய் விட்டதாக புலம்புகிறார். ஆறாவது அறிவு வடமொழியாக கூட இருக்கலாம் ;-) எதுவாயினும், ஜெ.கா கண் கெட்ட பிற்கு சூரிய நமஸ்காரம்.

May 10, 2005

எஸ்கேப்

அடுத்த மூன்று வாரங்களுக்கு நான் எஸ்கேப். தொழில் ரீதியாக நிறைய பயணங்கள் காத்திருக்கின்றன. நான் போனாலேயொழிய வேலை நடக்காது. அதுவுமில்லாமல், என்னுடைய அலுவலகமும் இடம்பெயரும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே, மக்களே, கோடையினை என் கழுத்தறுப்புகள் எதுவுமின்றி கொண்டாடுங்கள். கொஞ்சநாள் பைனாகுலர் பரண் மேல் கிடக்கட்டும், வந்து தூசு தட்டி பார்க்க ஆரம்பிக்கிறேன். அதேப் போல் டிவிடியில் படம் பார்ப்பதற்கும் அடுத்த மூன்று வாரங்கள் தடா/மிசா/பொடா. தமிழ்மணம் தொடர்ந்து படிப்பேன் என்றெல்லாம் கதை விட விரும்பவில்லை. நேரம் கிடைக்கும் போது படிப்பேன் அவ்வளவே.

போவதற்கு முன், முந்தா நாள் மாலை, நண்பர் ஒருவர் போன் செய்து 1.50 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்திற்கு எவ்வளவு தருவாய் என்று கேட்டார், விவரங்கள் கேட்டறிந்தபின் 200 ரூபாய் கொடுத்து வாங்கினேன். 1936-இல் இராஜாஜி இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். இது ஒரு கதை தொகுப்பு. 1957 இல் மலிவுப் பதிப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள். கதைகள் அனைத்தும், 1900த்தின் ஆரம்பங்களில் கதாசிரியன் எப்படி சமூகத்தை பார்த்திருக்கிறான் என்று சொல்லும்போது நெருப்பாய் வாழ்ந்திருக்கிறான் அவனென்று தெரிகிறது. தமிழின் மிகச்சிறப்பான கதாசிரியனாகவும், கவிஞனாகவும் இருந்திருக்க வேண்டியவன், அல்பாயுசில் செத்துப் போனான். (தமிழில் சாகாவரம் படைத்த நிறைய பேர்கள் அல்பாயுசில் போயிருக்கிறார்கள். கணித மேதை ராமானுஜம், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என ஒரு பெரும் பட்டியல் நீளும்.)

அவன் - சுப்பிரமணிய பாரதி. மகாகவி பாரதியார் எழுதிய கதைகளை கொண்ட தொகுப்பிது. பாரதியின் கவிதைகளைப் படித்திருக்கிறேன், சில வசன கவிதைகளை கதைப் போல சொல்லியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், கதைகளை படித்ததில்லை. வாங்கி புரட்டி பார்த்ததில் (ஜாக்கிரதையாக வேறு புரட்ட வேண்டும். செல்லரித்து போய், கிழியாமல் அட்டைப் போட்டிருக்கிறார்கள்) தான் வாழ்ந்த காலத்தின் சமூகத்தினை அதன் அழுக்குகளோடு சொல்லியிருக்கிறான். இந்த புத்தகத்தினை வாங்க காரணம், பாரதியின் மீதிருக்கும் காதல் மட்டுமல்ல, அந்த கால உரைநடையின் மீதும், செத்துப் போன தமிழ் சொற்கள் மீதிருக்கும் காதலும் கூட. கொஞ்சம் மணிபிரவாள நடையின் சாயலடித்தாலும், நிறைய புதிய சொற்களை மீட்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நைந்துப் போன புத்தகத்தின் முதல் பக்கம் பாரதியாரின் சங்கற்பங்கள்.இது ஜெயகாந்தனுக்கு அல்ல
"இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி - முழு உலகின் முதற்பொருள் - அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஒயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்."
இது தாண்டி சொல்லிவைத்து வாங்கியிருப்பது Same-Sex Love in India – Readings from Literature and History , by Ruth Vanita and Saleem Kidwai. இந்தியாவில் தன்பால் புணர்ச்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இலக்கியம், புராணம், கதைகள் வாயிலாக நிறுவும் ஒரு அட்டகாசமான புத்தகம். கொஞ்சம் தலையணை சைஸ் இருந்தாலும், படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

ஒரு மாதம் கழித்து இவற்றை படித்து முடித்திருந்தால் எழுதுகிறேன்.

இப்போதைக்கு அபீட்டு. மூணு வாரம் கழிச்சு ரிபீட்ட்டு.

May 8, 2005

பைனாகுலர் 10348

City of God என்கிற படத்தின் பெயர் மறந்து போனதால், அதை எஸ்.ராவின் பதிவில் படித்ததாக ஞாபகம். அவர் ஆயுத எழுத்து பற்றி அவரின் பதிவில் எழுதியபோது இந்த படத்தையும், அமொஸ் பெரொஸினையும் குறிப்பிட்டிருந்தார். ஆயுத எழுத்தினை அஃகு வேறு, ஆணி வேறாக கிழித்திருப்பார். நீங்களும் படித்திருப்பீர்கள். பெயர் மறந்து போனதால், அவரின் பதிவில் போய் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அந்த பதிவே காணவில்லை. மாதம், பதிவு என்று வெவ்வேறாக தேடிப் பார்த்துவிட்டேன். ம்ஹூம். சிக்கவே இல்லை. உங்களுக்கு சிக்குகிறதா என்று பாருங்கள், நான் தேடியவரை எனக்கு கிடைக்கவில்லை. அது மறந்து போய், அப்புறம் என் டிவிடி கடையில் விசாரித்து பெயர் கண்டுபிடித்தது தனிக்கதை.
இந்த வார குமுதம் செய்தி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மணிரத்னத்தின் புதிய படத்தில் பணியாற்றுகிறார்.(குமுதம் 18.5.2005 பக்கம்.66)எஸ்.ரா நீங்கள் தமிழ் சினிமாவிற்கு தயாராகிவிட்டீர்கள். இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்பீர்கள். சூட்சுமங்களை கைக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் : )

பார்க்க - எஸ்.ராவின் வலைப்பதிவு

சென்னையில் இருக்கும் மிக முக்கியமான சங்கிலி கடைகளான புட்வேர்ல்டு ஆர்.பி.ஜி யிடமிருந்து கைமாறுவது போல் தெரிகிறது. இனி சென்னை, பங்களூர், ஹைதராபாதிலிருக்கும் புட்வேர்ல்டு கடைகள், ஸ்பென்சர்ஸ் என்று பெயர் மாற்றப்படும் என்று தெரிகிறது. பெரம்பூர் லோக்கோவில் இருக்கும் நண்பனின் முதிர் சகாக்களோடு, பிரிட்டிஷ் ஒயின்ஸில் ஒதுங்கும்போது அவர்கள் ரம்முக்கு விரும்பிக் கேட்பது ஸ்பென்சர்ஸ் சோடாவாக தான் இருக்கும். இது 7-8 வருடங்களுக்கு முன்பு. அதன்பிறகு, ஸ்பென்சர்ஸ் சோடா வருகிறதா என்று தெரியவில்லை. புட்வேர்ல்டு ஸ்பென்சர்ஸாக மாறினால், சோடா கிடைக்குமா என்று விசாரிக்க வேண்டும். இது தாண்டி, மெட்டி ஒலிகள் வங்காளத்திலும் ஒலிக்கக் கூடும். சன் குழுமம், கொல்கத்தாவின் மிகப்பெரிய கேபிள் நிறுவனமான இண்டியன் கேபிள் நெட்டினை வாங்க இருக்கிறது. இதன் மூலம் 7 லட்சம் வாடிக்கையாளர்கள் கையிலிருப்பார்கள் அல்லது டிவி பார்ப்பார்கள். இது அவர்கள் கொண்டு வரப்போகும் சூர்ஜோ என்கிற வங்காள அலைவரிசைக்கு பெரிய பலம். அது சரி, சித்திக்கு வங்காளத்தில் என்ன ?

பார்க்க - பிஸினஸ்வேர்ல்டு

மார்ச் மாத காலச்சுவட்டினை புரட்டிக் கொண்டிருந்தேன். முகத்திலறைந்தாற் போல தெரித்தது முகுந்த் நாகராஜின் இந்த கவிதை

'இது என்ன ஸ்டேஷன்?' என்று கேட்டார்,
இரவுப் பயணம் முடிவை நெருங்கிய அதிகாலையில்.
'கிருஷ்ணராஜபுரம்' என்றேன் வெளியே பார்த்து.
'இங்கே என்ன பேமஸ்?' என்று கேட்டார் சகஜமாக.
திடுக்கிட்டேன் நான்.

இன்னொரு முறை கேட்டார்.
என்னவாக இருக்கும் ?
மலைக்கோவிலா, அருவியா,
மத்திய அமைச்சரா,
இனிப்புப் பலகாரமா,
நாடி ஜோசியனா...
என்னவாக இருக்கும் ?
இறங்கி உள்ளே போய்
ஊர்க்காரன் எவனையாவது
பிடித்துக் கேட்கலாம்
ஆனால், ஒன்றுமே ஃபேமஸ் இல்லாவிட்டால்,
அவமானத்தில் அவன்
மனம் உடைந்து விடக்கூடும்.
இல்லாவிட்டால், சனிக்கிழமைதோறும் கூடும்
சாதாரண சந்தையைப் பற்றி உற்சாகமாக
ஒரு மணி நேரம் பேசவும் கூடும்.
என்னைப் பிடித்து வைத்துக் கொண்டு.
ரயிலோ இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.
அட, வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே,
உனக்கெல்லாம் ஒரு ஸ்டேஷன் கேடா?

பிரபலமாக எதுவுமே இல்லாமல் சாதாரணமாக இருப்பதின் வலியும், வெட்கமும், அவமானமும் பிடுங்கி தின்னும் சொற்கள். ஜென் கதைகளில் அற்புதங்கள் எதுவும் நிகழாது. சாதாரணமாய், எளிமையாய் இருப்பதின் சந்தோஷத்தையும், ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தும். ஆனால், நம் தமிழ், இந்திய மனவிலங்கு சாதாரணமாய் இருப்பதை ஒத்துக் கொள்வதில்லை. ஏதேனும் அற்புதங்களோ, அதிசயங்களோ, கோயிலோ ஏதாவது ஒன்றிருந்தாலேயொழிய நம்மால் ஒரு ஊரினை ஞாபகப்படுத்திக் கூட பார்க்க முடிவதில்லை. எளிமையாய் இருப்பதின் அவசியத்தையும், ஆச்சர்யங்களையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இப்படி எதுவுமே பிரபலமாக கிராமங்களிலும், நகரங்களிலும் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதை கொஞ்சமாய் நினைவில் வைக்க வேண்டும். மனித குணாதியங்களை விடவா, அற்புதங்கள் பெரிது..

பார்க்க - முகுந்த் நாகராஜன் கவிதைகள் | பிரகாஷின் முகுந்த் நாகராஜன் கவிதைகள் பதிவு

இந்த வார தெஹல்காவில் காப்பி கேட்ஸ் என்கிற தலைப்பில் எப்படி பாலிவுட் அதாங்க, இந்திய ஹிந்தி சினிமாக்கள் சர்வசாதாரணமாக ஹாலிவுட் படங்களை உருவியிருக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு அலசல். கொஞ்சம் சமீபத்தில் வந்த ஹிந்திப் படங்களையும், அவற்றின் மூலதாரங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ப்ளாக் (தி மிரக்கிள் வொர்க்கர்), மர்டர் (அன்பெய்த்புல்), முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (பேட்ச் ஆடம்ஸ்), ஹம் கிஸி ஸே கம் நஹின் (அனலைஸ் திஸ்). இப்படி உரித்தால், தமிழ் படங்களும் நிறைய தேரும் என்று பட்சி சொல்கிறது. எனக்கு தெரிந்த இரண்டொரு படங்களை சொல்கிறேன். மீதியை fill in the blanks. மகளிர் மட்டும் (நைன் டூ ஃபைவ்), ஜே.ஜே, ஸ்டார் (செரின்டிபிட்டி)

பார்க்க - தெஹல்கா செய்தி

மின்சாரம் போன நடு இரவில் என்ன செய்யலாம்
1. பால்கனி வழியே பராக்கு பார்க்கலாம்.
2. அடுக்கக்கத்தில் உள்ள நபர்களின் வீட்டில் என்னென்ன பிராணிகள் வளர்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
3. வானம் பார்த்து நட்சத்திரங்கள் எண்ணலாம். சிறுவயதில் பார்த்த மூன்று ஜோடியாக உள்ள நட்சத்திரங்கள் இப்போதும் இருக்குமா எனத் தேடலாம்.
4. சத்தத்தினை வைத்து சாலையில் என்ன வாகனங்கள் போகின்றன என்று யூகித்து விளையாடலாம்.
5. உங்கள் வீட்டினை சுற்றி எத்தனை செல் கோபுரங்கள் இருக்கின்றன என்று ஒளிரும் சிகப்பு விளக்கினை கொண்டு எண்ணலாம்.
6. உயர்ந்த அசோக அல்லது பாக்கு மரங்களில் மனித உருவங்களை தேடலாம்.
7. குல்பி ஐஸ் காரன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை மீட்சி செய்யலாம்.
8. அடுக்கக காவலாளி, எவ்வாறு தினமும் இரவினை கழிக்கிறான் என்று யோசிக்கலாம்.
9. எப்போதோ படித்த கல்யாண்ஜியின் "நிலா பார்த்தல்" ஞாபகம் வந்து நிலா இருக்கிறதா என்று தேடலாம்.
10. தூரத்தில் வெளிச்சங்களுடன் வீடுகளைப் பார்த்து பொறாமை படலாம்.
11. டெல்லியில் இருக்கும் மின்சார அமைச்சரிலிருந்து. லோக்கல் லைன் மேன் வரை ஒருவரும் வேலை செய்வதேயில்லை என்று எலீட்டாக கரித்துக் கொட்டலாம்.
12. பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் என்னென்ன இரவு ஆடைகள் அணிகிறார்கள் என்று அரைகுறை வெளிச்சத்தில் கூர்ந்து கவனிக்கலாம்.
13. ஜெனரேட்டர்கள் ஒடும் சத்தம் பெரிதாக முதலில் கேட்டு, பின் பழகிப் போய், ஜெனரேட்டர் நின்று போனால், ஏதோ குறைந்தால் போல் பதட்டமடையலாம்.
14. சுகமாக உள்ளே தூங்கும் நம் வீட்டுக்காரர்களையேப் பார்த்து ஆச்சர்யம் அல்லது எரிச்சலடையலாம்.
15. இந்தியாவில் இன்னமும் நிறைய கிராமங்களுக்கு மின்சாரமே இல்லாமல் இருப்பதையும், 20 நிமிட மின்சாரம் இல்லாமல் நாம் குமறிக் கொண்டிருப்பதையும் நினைத்து வெட்கப்படலாம்.
16. கீழ்வீட்டில் தனியாக இருக்கும் மென்பொருளாளர்கள் சொல்லும் "சிங்கப்பூர்ல இதெல்லாம் நடக்கவே நடக்காது மச்சான்" "கலிப்போர்னியால இது மாதிரி நடந்தா கேஸ் போடலாம் தெரியுமா" என்கிற உளறல்களை ஒட்டுக் கேட்கலாம்.
17. வெட்டியாக எதுவும் செய்யாமலிருக்கும்போதுதான் இதுவரை செய்யவேண்டும் என்று நினைக்கும் நிறைய வேலைகள் நினைவுக்கு வரலாம்.
18. நாளைக்கு எப்படியாவது ஒரு எமர்ஜென்சி விளக்கு வாங்கிட வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கலாம்.
19. காலில் மிதிபட்டு கூழாகும் எதுவோ, கரப்பான் பூச்சியாகவோ, பல்லியாகவோ, குழந்தை தின்றுப் போட்ட பிஸ்கெட்டாகவோ இருந்தாலும், அது என்னவென்பதை மின்சாரம் வரும்வரை யோசிக்கலாம்.
20. மொட்டை மாடி என்கிற விஷயம் ஒன்று நினைவுக்கு வந்து,மேலேறுகையில் மூன்றாம் ப்ளாக் ரிட்டையர்ட் பெரியவர், கைக்கடக்கமான எப்.எம் ரேடியோவில் "கும்பிட போன தெய்வத்தினை" மெல்லிசாக கேட்கலாம்.

இதுதாண்டி, மின்சாரம் வந்தால், இதைப் போல உட்கார்ந்து வெட்டியாக பதிவு எழுதலாம்.

May 6, 2005

ஒயிட் நாய்ஸ் (White Noise)

இறந்தவர்களின் குரல்களை கேட்டிருக்கிறீர்களா ? நான் கேட்டதில்லை. எனக்கு வழக்கமாக வரும் குறுஞ்செய்திகளில் என் டிவிடி கடையிலிருந்து வாராவாரம் புதிதாக என்ன படங்கள் வந்திருக்கிறது என்றும் வரும். அப்படி இன்றைக்கு வந்த ஒரு படம் ஒயிட் நாய்ஸ். பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று தேடினால், மிரட்டும் ஒரு இணையத்தளத்தினை அமைத்திருக்கிறார்கள். இறந்தவர்கள் பேசினால் ? என்பது தான் கரு போலிருக்கிறது.

ஆனால், சுவாரசியம் அதிலில்லை. Electronic Voice Phenomena (EVP) என்றழைக்கப்படும் விஷயத்தில் தான் இருக்கிறது. இறந்தவர்களின் குரல் அல்லது அசிரிரீ எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். EVP பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. எல்லா அமெரிக்க டாப்லாய்ட்டுகளைப் போல இதற்கும் கிளப்புகள், நேர்காணல்கள், குறுந்தகடுகள் என கூட்டம் சேர்த்துக் கொண்டு கலக்குகிறார்கள். என இந்த படத்தின் தளத்தில் EVPக்காக மட்டுமே நிறைய விதயங்களை போட்டு வைத்திருக்கிறார்கள். சில இறந்தவர்களின் குரல்களை வேறு பதிவு செய்து ப்ளாஷில் காண்பித்து பயமுறுத்துகிறார்கள்.

ஏற்கனவே வுடுக்கள் (Voodoo) இறந்தவர்களை அடிமையாக்கி ஆட்டி படைப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.(உப்பு கண்ணில் காட்டக் கூடாது என்று எங்கோ படித்த ஞாபகம்). இங்கே லோக்கலில் ஆவி அமுதா, வீரப்பனோடு பேசி, வீரப்பர் நக்கீரனுக்கு பேட்டிக் கொடுக்கிறார். விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்பவர் ஆவிகள் உலகம் என்று ஒரு பத்திரிக்கை நடத்துகிறார். என்னமோ போங்கள், நம்புகிறேனோ இல்லையோ, படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒயிட் நாய்ஸ் தளத்தில் "நீங்கள் நம்புகிறீர்களா (Do you believe?)" என்றொரு சுவாரசியமான கேள்வி பதில் வைத்திருக்கிறார்கள். எனக்கு ஸ்பிரிட்சுவலான ஆள் என்று செய்தி வந்தது. நாசமா போக, நான் இறைநம்பிக்கையற்றவன் என்பது இறந்தவர்களுக்கு தெரியாது போலும். பாவம், இந்த முறை அவர்களின் பதிலை சாய்ஸில் விட்டுவிடலாம்.

இதுதாண்டி, இந்திய படங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வயதுக்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு படத்தின் டிரைய்லர் பார்த்தேன் - My Brother Nikhil. ஹிந்தியாங்கிலத்தில் வந்திருக்கும் படம். இதற்கு நாசூக்காக hinglish என்று பெயர். இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ஒரினப்புணர்ச்சியாள எய்ட்ஸ் நோயாளியினை பற்றிய கதை. பாக்ஸ் ஆபிஸில் வழக்கம்போல படம் காலி. ஆனால், நிறைய பேர் நல்லவிதமாக விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். ஆக இதையும் என் ஹிட்லிஸ்டில் சேர்த்து வைத்துக் கொள்கிறேன்.

என் போன பதிவில் எழுதிய ஹோட்டல் ரூவாண்டா போலவே இன்னொரு படத்தினையும் பரிந்துரைக்கிறேன். நான் பார்த்துவிட்டாலும், எழுத அலுப்பாக உள்ளது. ஒவ்வொரு படமும் எழுத தொடங்கினால், நிறைய குறிப்புகள் எடுக்க வேண்டியதிருக்கிறது. அது இல்லாமல் படத்தினை என்னால் ஒழுங்காக எழுத முடியாது. அதனால், நீங்களே பார்த்து உங்களின் விமர்சனங்களை எழுதி கொள்ளுங்கள் - படம் சேவியர்(1998). போஸ்னிய பிரச்சனையின் பிண்ணணியில் மனிதாபிமானத்தினை கண்டறியும் ஒரு ராணுவவீரனின் கதை. இந்த படத்தில் வரும் செர்பிய/போஸ்னிய தாலாட்டு பாடல் போதும், இந்த படத்தினை ரசிப்பதற்கு

பார்க்க - ஒயிட் நாய்ஸ் | மை ப்ரதர் நிகில்

EVP பற்றி அறிய - சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3

[ ப்ளாகரில் திடீரென இந்த பதிவு காணாமல் போய்விட்டது. நல்ல வேளையாக என் RSS Reader - இல் ஒரு நகலிருந்ததால் மீண்டும் பதிப்பிக்கிறேன்.]

May 5, 2005

என் பெயர் பால் ரோசெசாபெகினா...

"என் பெயர் பால் ரோசெசாபெகினா(Paul Rusesabagina). நான் டி மெலே காலின்ஸ் ஐந்து நட்சத்திர விடுதியின் மேலாளன். ரூவாண்டாவின் தலைநகரான கிகாலியில் இருக்கும் மிகச் சிறந்த விடுதியிது. ருவாண்டா தான் என்னுடைய வீடு. மிகப் பெரும் மனிதர்களும் வரும் விடுதியானதால், மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களுடன் பழகியவன் நான். உலகம் ரொம்ப சின்னதாக தோன்றியது... அது நடக்கும்வரை"

ரூவாண்டா ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. தொடர்ந்து இனக்குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நாடு. எல்லா ஆப்ரிக்க நாடுகளும் அப்படித்தான் என்கிறீர்களா, எனக்கு தெரியாது. ஒரு வேளை எரித்ரியா போன்ற நாடுகளில் இதேப் போன்றதொரு பிரச்சனை இருக்கலாம். நாம் ருவாண்டா பற்றி பேசலாம். ரூவாண்டாவில் இருக்கும் பிரச்சனை மிகவும் தீவிரமானது. ரூவாண்டா சில வேளைகளில் இலங்கையையும் நினைவுறுத்தலாம். அமெரிக்க,பிரிட்டிஷ், பிரெஞ்ச் காலனி நாடாக இருந்து பின்னர் விடுதலை பெற்ற ரூவாண்டாவின் அரசின் பொறுப்பினை டுட்ஸியிடம் கொடுத்துவிட்டு, சிண்டு முடிந்து போய்விட்டது பிரெஞ்ச் அரசு. டுட்ஸி என்பது ரூவாண்டாவில் இருக்கும் ஒரு இனக்குழு. ஆனால், பெருமளவில் இன்று இருப்பவர்கள் ஹூட்டு என்கிற இனக்குழுவினர். ஏன் ஹூட்டுக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று தெரியவேண்டுமானால், கொஞ்சம் 10 வருடம் முன்னால் போகவேண்டும் .......

"மாமா, வாசலில் காவலாளிகள் துப்பாக்கியோடு பக்கத்துவீட்டுக்காரரை மிரட்டுகிறார்கள் என்று சொன்னவுடன், நான் சன்னலை விலக்கிப் பார்த்தேன். அவர்கள் ஹூட்டு போராளிகள். எதிர்வீட்டுக்காரன் ஒரு டுட்ஸி. நான் ஒரு ஹூட்டு. ஆனாலும் என் மனைவி தாட்டியானா டுட்ஸி. ஏதோ பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. ஆனாலும், எனக்கு ருவாண்டாவின் ஜெனரலை தெரியும். இதுதாண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் என் விடுதியில் நடக்கிறது. பெரிதாய் ஒன்றும் நடக்காது. பார்த்துக் கொள்ளலாம். ஆனால், என் மைத்துனன் மறுநாள் விடுதிக்கு வந்து இனக்கலவரம் வெடிக்கும் அபாயமிருக்கிறது என்று சொன்னான். ஜெனரலும், ஐ.சபையின் சமாதான குழு தலைவர் கர்னல் ஆலிவரும் இருந்ததால் அதை நிராகரித்து விட்டேன். மறுநாளிலிருந்து, என் மைத்துனன் பற்றியும், அவனின் குழந்தைகள் பற்றியும் தகவலில்லை.ஏதோ தீவிரமாய் நடக்க இருக்கிறது....."

1994-ல் ஹூட்டு இனக்குழுவினர் ஆளும் டுட்ஸியினரின் மீது அபாரமான அன்பு வைத்திருந்தனர். அப்போதுதான் ரூவாண்டாவின் பிரதமர் கொல்லப்பட்டார். பார்க்கும் டுட்ஸிகள் ஒருவரை கூட இந்த உலக கஷ்டங்கள் எதையும் அனுபவிக்க இடம் தராமல் கொல்ல ஆரம்பித்தனர். சில சமயத்தில் அன்பு மிகுதியாகும் போது, வீடுகளை எரித்து, அனைவரைம் கொன்று எக்களித்தனர். இது இலங்கையினை நினைவுறுத்தினால் நான் பொறுப்பல்ல. கொஞ்சம் கொஞ்சமாய் தனி ரேடியோவினை வைத்துக் கொண்டு கரப்பான் பூச்சிகளை (டுட்ஸீகளின் செல்லப்பெயர்) கொல்ல இளைஞர்களை உருவேற்றிக் கொண்டிருந்தனர். வேலையின்மை, வறுமை, பொருளாதார கீழ்நிலைமை இவற்றில் சிக்கியிருக்கும் நாட்டின் இளைஞர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமில்லையா, அடுத்தவர்களை சீண்டுவதற்கும், தன் ஹூரோயிசத்தை நிருபிப்பதற்கும். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு பார்க்கும் கரப்பான்பூச்சிகளை கொல்ல ஆரம்பித்தனர். கரப்பான்களை முழுவதுமாக அழித்தொழிப்பதில் தான் தங்களின் வாழ்க்கையிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வேட்டையாட ஆரம்பித்தார்கள். ஹேராமில் அதுல் குல்கர்னி (ஸ்ரீராம் அபயங்கர்) கமலை முதலில் சந்திக்கும் போது ஒரு கேள்வி கேட்பார்... ஹன்டிங்(hunting) எப்படிப் போச்சு ? இங்கே ரூவாண்டாவில் ஹன்டிங் இப்போதுதான் ஆரம்பித்தது.

"மறுநாள் என் வீட்டு வாசலில் போராளிகளின் ஜீப் நின்றது. நேற்று இரவுதான் கொஞ்ச டுட்ஸிகள் என் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர். காலையில் கரப்பான்கள் எங்கே என்று கேட்டுக் கொண்டு ஜீப் வந்துவிட்டது. நான் அவர்களை சமாதானகும் படி பேசி பார்த்தேன். ஒரே வழி, லஞ்சம் கொடுப்பதுதான். அவர்களின் தலைவனிடத்தில் பேரம் பேசினேன். தலைக்கு 10,000 பிராங்குகள் என்று சொல்ல, அவர்களையும் அழைத்துக் கொண்டு என் விடுதிக்கு வந்தேன். என் லாக்கரிலிருந்து பணத்தினை எடுத்து தந்து அவர்களை மீட்டேன். ஆனாலும், ரொம்ப நாளைக்கு கைவசம் இருப்பு இருக்காது. அதனால், கர்னலுடனும், பிற வெளிநாட்டினருடனும் பேசினேன். அவர்களும் அவர்களின் நாடுகளோடு பேசினார்கள். இரண்டு நாட்களில், அமெரிக்க, பிரெஞ்ச் ராணுவம் உதவிக்கு வந்தது. ஒரு வழியாக கஷ்டங்கள் முடிந்து விட்டது. இனி நிம்மதியாக வேலையைப் பார்க்கலாம் என்றிருந்தபோது, கர்னல் ஒரு குண்டினை தூக்கிப் போட்டார்"

ஹூட்டுகளில் இருக்கும் தீவிரவாத பிரிவினர் இன்ட்ராஹாம்வே (Interahamwe). வடகிழக்கு ரூவாண்டாவில் இருந்து பயணித்து டுட்ஸீகளுக்கு பரலோக பதவி கொடுத்தவர்களில் முதன்மையானவர்கள். ரூவாண்டாவின் ராணுவம் டுட்ஸீகள் நிறையபேர் அடங்கிய ராணுவம். அதனால், இன்ட்ராஹாம்வேயின் முக்கிய குறிக்கோள், அடுத்த தலைமுறை டுட்ஸிகள் இருக்கக் கூடாது என்பதுதான். டுட்ஸி குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர்கள் என்று தேடி, தேடி, ஹன்டிங் தொடங்கியது. பார்க்குமிடங்களிலெல்லாம் ஹூட்டு இளைஞர்கள் கையில் கத்தி, துப்பாக்கியுடன் 1. டுட்ஸிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள் 2. பெண்களை வன்புணர்ந்து கொண்டிருந்தார்கள் 3. ஆப்ரிக்க தொல்குடி நடனத்தினை ஆடிக் கொண்டிருந்தார்கள். சாத்தான் ஹூட்டுகளிடம் தோழமையுடன் பழகி, வன்மத்தினை வளர்த்துக் கொள்ள சொல்லிக் கொடுத்தான். அவர்களும், நல்ல மாணாக்கர்களாக வெகு சீக்கிரத்தில் சாத்தானின் பாடத்திட்டத்தினை கற்றுத் தேர்ந்தார்கள். இனி ரோட்டில் இறங்கி சொல்லிக் கொடுத்ததை நல்ல மாணாக்கனாய் பரிசோதித்து பார்த்துவிடுவதுதான்.

"ராணுவ உதவி எங்களுக்கு இல்லை. எங்கள் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பயணிகளுக்கு. அவரவர் அவரவர் நாடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல தனி விமானமும், ராணுவமும் வந்தது. நீ ரூவாண்டனா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அப்படியானால், உனக்கு விமானத்தில் இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஸ்காட்ச் வாங்கி தந்து, கியுப சுருட்டுகள் வாங்கிக் கொடுத்து, நிமிடத்துக்கொருமுறை, பால் இதை செய்வாயா, அதை செய்வாயா என்று கேட்டவர்கள், மொத்தமாய் புட்டத்தை காண்பித்து விட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேறுவதில் கர்னலும் ஒருவர். பாவம் அவர் என்ன செய்யமுடியும். ஐ.நா சபையின் குழுவினரையும், பாதுகாப்பாக அழைத்து செல்லதான் ராணுவம் வந்திருக்கிறது. மழை கொட்டியது. என் விடுதியினுள்ளே திடீரென நூற்றுக்கணக்கில் ஆங்கில பாதிரிமார்களோடு, டுட்ஸீ மக்கள் வந்தார்கள். எல்லாம் இன்ட்ராஹாம்வேயின் சதிராட்டம். இந்த பெயரினை ரொம்ப நாள் கழித்து தான் அறிந்துக் கொண்டேன். ராணுவம், அக்கூட்டத்தில் வந்த வெளிநாட்டவர்களை மட்டும் பிரித்து அவர்களையும் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு கிளம்பிப் போய் கொண்டிருக்கிறார்கள். இனி நான் பேசுவதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. மரணம் நிச்சயம். இன்றோ, நாளையோ ....."

மக்களை கொன்று, அண்டை ஆப்ரிக்க நாடுகளிடமிருந்தும், மலேசியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும், சர்வ சாதாரணமாய் கத்திகளும், துப்பாக்கிகளும் புழங்க ஆரம்பித்தன. எப்படி வாங்குவது ? இருக்கவே இருக்கிறது, டுட்ஸிகளின் வீடுகள். அவர்களை கொன்றுவிட்டால், அவர்களின் உடமை ஹூட்டுதாகிவிடும். அப்புறம் என்ன கவலை. துப்பாக்கிகளும், கத்திகளும் வெகு சுலபமாக கிடைக்கும். இங்கே சென்னையில் நல்ல அரிவாள் வேண்டுமானால் சொல்லுங்கள், எழும்பூரின் காந்தி இர்வின் பாலத்தில் ஏறி இறங்கி, நேராக வந்து சித்ரா திரையரங்கு போகுமிடத்தில் இருக்கும் குடிசைகளில் இருக்கும் புரோக்கர்கள் நீங்கள் கொடுக்கும் காசுக்கு வஞ்சனையில்லாமல் வாங்கி தருவார்கள். அப்படியே வலதுபுறம் திரும்பி புதுப்பேட்டில் நுழைந்தால், திருடிய வண்டியிலிருந்து சைக்கிள் செயின், ஆசிடு பாட்டில்கள் வரை சல்லிசாக கிடைக்கும் - அம்மா அப்பா தவிர. பெரிதாய் கஷ்டப்பட தேவையில்லை. அமைதிப் பூங்காவான சென்னையிலேயே இவ்வளவு சல்லிசாக கிடைக்கும்போது, உள்நாட்டு கலவரமும், பசியும்,பட்டினியும் தாண்டவ மாடும் ஆப்ரிக்காவில் ஆயுதங்களுக்கா பஞ்சம். ரூவாண்டா ராணுவம் அப்போதுதான் வந்திறங்கிய ஹென்கெய்ன் பியர் அருந்தி தாகத்தினை தணித்துக் கொண்டிருந்தது. பாவம், சூடு உச்சத்தில் இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்

"என்ன செய்வது என்று தெரியவில்லை. விடுதியில் இருக்கும் அனைவரையும், அவர்களுக்கு தெரிந்த வெளிநாட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் செய்ய சொல்லி, அவர்களின் நிலலயினன எடுத்து சொல்வதன் மூலம், உலகின் கவனத்தினை திருப்ப சொன்னேன். வேறு வழியில்லை. இனி எங்களை நாங்கள் தான் காபாற்றிக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக டுட்ஸீகளை வைத்திருப்பதால், போராளிகள் வருவார்கள் இல்லை வந்தார்கள். காலையில் என் கன்னத்தினை தழுவியது ஒரு பிஸ்டல். தலைவன் போல் தெரிந்த ஒருவன் என்னை எழுப்பி, விடுதியில் இருக்கும் மொத்த கரப்பான்களின் விவரத்தினை கேட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் மெதுவாக நழுவி, என் முதலாளிக்கு போன் செய்தேன். என் முதலாளி நல்லவர். பெல்ஜியத்தில் இருக்கிறார். பெருந்தலை. நான் நிலவரத்தினை சொன்னேன். எப்படியாவது கொஞ்ச நேரத்தினை கழிக்குமாறு சொல்லி மீண்டும் பேசுவதாக சொன்னார். ஒவ்வொரு விநாடியும் நரகமாக கழிந்தது. வாழ்வில் யாராவது மரணத்தினை வெளியில் உட்காரச் சொல்லி பியர் தந்து உபசரிப்பார்களா ? நான் செய்தேன். எல்லா போராளிகளும் பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள். என் குடும்பம் மற்றும் என் விடுதியிலிருக்கும் அனைவரின் உயிரும், அவர்கள் மெதுவாக குடிக்கும் பியரில்தான் அடங்கியிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அது நடந்தது. அதன் தலைவன் என்னை கூப்பிட்டு என் பெயரினைக் கேட்டு, வாழ்நாளின் அவன் என்னை மறக்கமாட்டேன் என்று சொல்லி அவன் படையுடன் கிளம்பி போனான். என் முதலாளி பேசினார். அவர் பிரெஞ்ச் ஜனாதிபதியோடு இதுப்பற்றி பேசியிருக்கிறார். அப்பாடா, உயிர் திரும்பி வந்தது. உள்ளே வந்த ஜீப்பில் கர்னல் சந்தோஷத்துடன் விடுதியில் இருக்கும் பெரும்பாலானோரை விடுவிக்க விமானமும்,பாதுகாப்புக்கு வீரர்களும் வந்திருக்கும் சந்தோஷ செய்தியை சொல்லி இறங்கினார். எங்களின் பிரார்த்தனையும், போன் அழைப்புகளும் வீண்போகவில்லை. எல்லா துயர்களும் முடிவுக்கு வந்து விட்டன....."

ஐக்கிய நாடுகளின் அமைதி படை மிகவும் சிறியது. அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை, அமைதியாக வேலை செய். அவ்வளவு தான். அமைதியை நிலைநாடுவது அவர்களின் வேலையல்ல. அது அந்தந்த நாட்டின் ராணுவத்தினரின் பணி. இது ஹூட்டுகளுக்கு வசதியாகி போனது. அவர்கள் வெளிநாட்டவர்கள் மீது கைவைக்கவில்லை. அதனால் எந்த நாடும் அவர்களை பகையாய் பார்க்கவில்லை. எல்லா நாடுகளும், காப்பசினோ குடித்து கொண்டு, ஐரோப்பிய லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனெட்டட் ஜெயிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹூட்டுக்கள் இங்கே கொலைக்கார ஆட்டத்தில் இடைவெளியே இல்லாமல் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நான் 95-இல் நண்பனின் காதலியை பார்க்க துணையாக, நல்ல திருந்திய தமிழ் சினிமா நண்பன் போல, எத்திராஜ் கல்லூரி வாசலில், டீயும் பிஸ்கெட்டும் சாப்பிட்டுக் கொண்டு, 3 மணிக்கு விடும் கல்லூரிக்கு, 12 மணியிலிருந்தே காத்துக் கொண்டிருந்தேன். அங்கே ரூவாண்டாவின் ஜெனரல் சாதுரியமாக யார் கை ஒங்குகிறதோ அங்கு சேர்ந்துவிடலாம் என்பதால், கவலையில்லாமல் ஸ்டார் குத்திக் கொண்டு ஸ்காட்ச் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்.

"என்னையும் சேர்த்து சில நூறு பேர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. பஸ் புறப்பட காத்திருந்தது. இந்த யுத்த பூமியிலிருந்து விடுதலை. இனி தினம் தினம் நாளைக்கு வாழ்வோமா, உயிரோடு இருப்போமா என்கிற கவலையிருக்காது. என் மனைவி மக்கள் உட்பட எல்லோரும் இங்கிருந்து புறப்படலாம். எல்லோரும் ஏறிவிட்டார்கள். கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன். ஏறியவர்களை விட நிறைய பேர் எங்களை நிராதராவாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாட்டேன். நான் போகமாட்டேன். போக விரும்பவில்லை. இது என் வீடு, ரூவாண்டா. இவர்கள் என் சகோதர, சகோதரிகள். இவர்களை விடுத்து நான் எங்கேயும் போகமாட்டேன். பஸ்ஸில் ஏறிய நண்பனொருவனிடத்தில் என் மனைவி மக்களை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி ஏறாமல் இறங்கிவிட்டேன். பஸ் புறப்பட்டு போனது. இனி இவர்கள் தான் என் மக்கள். ஒரு முறை பணமும், ஒரு முறை முதலாளியும், சில முறை ஜெனரலும் காபாற்றிவிட்டார்கள். விடுதியில் உணவு இருப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. ஜெனரலும் கையை விரித்து விட்டார். முதலாளியும் இதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது. ஒருவேளை நாளை காலை என் நெற்றியினை புல்லட் துளைத்து ஈ மொய்க்க கிடைப்பேனோ என்னவோ........ ஆனால், எது நல்லது என்று நினைத்தனோ,அது நடக்கவில்லை. பாதி உயிர்கள் ஊசலாட போன பஸ் ரத்தக் களரியுடன் திரும்பி வந்தது. கர்னல் வழியில் ஹூட்டுக்கள் மடக்கி தாக்குதல் நடத்தினார்கள் என்று சொன்னார்... ஆக நாளை உயிர் பிழைப்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை"

பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் கூட்டுமுயற்சியால், ரூவாண்டாவில் நடக்கும் கலவரத்தின் மீது கொஞ்சமாய் பாலேடு போல், உலக நாடுகளின் கவனம் திரும்பியது. அப்போதும், அவர்கள் ஐ.நாவின் அமைதிப்படை இருப்பதால் பெரிதாய் கலவரங்கள் நடக்க வாய்ப்பில்லை என்கிற தோரணையில் மீண்டும் செகண்ட் ஹாப் ஸாக்கர் பார்ப்பதில் மும்முரமானார்கள். நானும், ஒரு ஹோலி பண்டிகையின் போது எத்திராஜ் வாசலில் தெரிந்த பெண்ணுக்கு சாயம் பூசப் போய், போலிஸ் பேட்ரோல் துரத்த, ஒரு நக்ஸலெட் போல் பேருந்து மாறி, மாறி கல்லூரி அடைந்து நண்பர்களுடன், எங்களின் வீரதீர சாகசங்களை பேசி மகிழ எம்.எம்.டி.ஏ காலனிக்கு எதிரிலிருக்கும் அய்யனார் ஒயின்ஸில் சரணடைந்தோம். அங்கே டுட்ஸிகளை மொத்த மொத்தமாய் ஹூட்டுகள் வேட்டையாட தொடங்கினார்கள். வீடுகள் கொளுத்தப்பட்டன. ஒரு நதிக் கரையின் ரோடெங்கிலும், டுட்ஸிகளின் பிணங்களைப் போட்டு வேகத்தடை ஏற்படுத்தினார்கள். போராட்டம் உச்சக்கட்டத்தினை எட்டியது. டூட்ஸியல்லாதவர்கள் மட்டுமே, கையில் கத்தியுடனும், துப்பாக்கியுடனும், சாலைகளில் வலம் வந்தார்கள். அத்துமீறல்கள் தொடங்க ஆரம்பித்தன. கொன்று போடுவதற்கு டூட்ஸிகள் இல்லாததால், கத்தி பிடித்த கை, பிற நாட்டவர்களைப் பார்க்க ஆரம்பித்தது. ஆப்ரிக்க சனி பகவான் சற்றே ஹூட்டுகளை பார்த்து புன்னகை சிந்தினார்.

"கர்னல் தைரியம் சொன்னார். என் முதலாளியிடம் பேசினேன். ஜெனரலிடம் பேசினேன். ஜெனரலிடம் பேசி, அமெரிக்க படைகள் சாட்டிலைட் மூலமாக அவரை கண்காணிப்பதாக பொய் சொன்னேன். அவர் நிரபராதி என்று நிருபிக்க வேண்டுமெனில் நான் அமெரிக்கர்களோடு பேச வேண்டியது அவசியமென்று புருடா விட்டேன். ஜெனரல் முதலில் என்னை குறிப்பார்த்தாலும், என் வார்த்தைகள் உரைத்திருக்கவேண்டும். இறுதியில் சம்மதித்தார். இங்கேயிருக்கும் 1,268 பேர்களின் வாழ்க்கைக்கும் ஒரே வழி, ஜெனரலின் படையுடன், கர்னலோடு எல்லைக்கருகில் செல்ல வேண்டியதுதான். அங்கிருந்து எங்கேயாவது சென்றுவிடலாம். நாளை காலை தான் எங்களின் இத்தனை நாள் போராட்டங்களுக்கு இறுதிநாள். வாழ்வோ, சாவோ நாளை தெரிந்துவிடும்.

காலையில் கிளம்பினோம். எதிர்பார்த்தபடியே கையில் ஆயுதங்களோடு ஹூட்டுகள் எதிர்திசையில். முன்னால் சென்ற ஜெனரலின் வீரர்களை அவர்கள் வீழ்த்திவிட்டார்கள். மரணம் கண்முன்னே ஜெகஜோதியாய் தெரிய ஆரம்பித்தது. இன்னமும் 200 அடி தூரம் தான் எங்களின் வாகனம் அவர்களிடத்தில் சிக்கி சின்னாபின்னமாக. வாகனத்திலிருக்கும் அனைவரும் கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அது நடந்தது. எங்களின் பக்கவாட்டு திசைகளிலிருந்து ஜெனரலின் படைகள் ஹூட்டு படைகளை தாக்க ஆரம்பித்தன. இதை எதிர்ப்பார்க்காத ஹூட்டுக்கள் சிதறி ஒட ஆரம்பித்தார்கள். கண்களின் முன்னே சாலை தெரிகிறது. என்னை கிள்ளிப் பார்க்கிறேன். நான் உயிரோடு இருக்கிறேன். என்னோடு பயணித்தவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். தங்கு தடையின்றி எங்கள் பயணம் ஐ.நா. அமைதி முகாமிற்கு வந்தது. நானும், என்னோடு வந்தவர்களும் உயிரோடு இருக்கிறோம். இனி பயமில்லை. எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். "

95-இல் உலக படைகள் ரூவாண்டாவில் களத்தில் இறங்கின. இன்ட்ராஹாம்வேயினை எல்லைக்கு அப்பால் துரத்தியடித்தன. அவர்களுக்கு பயந்து ஏற்கனவே நிறைய டூட்ஸிகள் பக்கத்து நாடான காங்கோவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள். விரட்டியடித்தபின் கணக்கெடுத்து பார்க்கையில் ஒரு வருட அவகாசத்தில் ஹூட்டு தீவிரவாதிகள் பத்து லட்சம் டூட்ஸிகளை கொன்று குவித்திருந்தனர். நாடும், ரோடும் பிணக்காடாய் மாறியிருந்தது. 2005-இல் பத்தாம் வருட நினைவாக டுட்ஸிகள் நினைவுறுத்துகின்றார்கள். இன்னமும், ரூவாண்டாவின் எல்லைகளில் இன்ட்ராஹாம்வேயினர் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள். சென்ற மார்ச்சில் தான் ஹூட்டுக்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள். இரு இனக்குழுக்களுக்கு இடையே நடந்து வந்த தொடர் போர் ஒரளவிற்கு இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. 2005-இல் தான் ஆப்ரிக்க பிரச்சனைகளைப் பற்றி அறிய ஆரம்பித்திருக்கிறேன். கலவரம் நடந்த காலத்தில் கிரிக்கெட் பார்த்து, கல்லூரி வாசல்களில் காத்திருந்தற்காக வெட்கப்படுகிறேன்.

இதுவரை பேசிய நான், பால் ரோசெசாபெகினா இப்போது பெல்ஜியத்தில் இருக்கிறேன். ஆனால், நாராயணாகிய நான் பார்த்தது, பால் ரோசெசாபெகினாவின் உண்மை சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஹோட்டல் ரூவாண்டா என்கிற திரைப்படத்தினை. டான் சியேடுல், பால் ரோசெசாபெகினாவாக வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தினைப் பற்றி எழுதினால், ரூவாண்டாவின் பின்புலம் தெரிய வேண்டும். அதற்காகவே, வழமையான நடையிலிருந்து மாறி, பால் ரோசெசாபெகினாவாக இதை எழுத வேண்டியிருந்தது.

பால் ரோசெசாபெகினாவிற்கு மிக உயர்ந்த விருதுகள் கிடைத்தன. உலகமே கை கழுவி விட்டு போன நிலையில், தன் ஹோட்டலினை வைத்துக் கொண்டு 1,268 டூட்ஸி இனத்தவர்களை காத்திருக்கிறார். ஹாலோகாஸ்ட்டில், எவ்வாறு ஷிண்டலரின் பெயர் நிலைத்திருக்கிறதோ, அதேப் போல ரூவாண்டா படுக்கொலை பேசப்படும் போதெல்லாம் பால் ரோசெசாபெகினா நினைவு கூறப்படுவார். இன்றுவரை அவரின் மைத்துனரைப் பற்றிய தகவல்கள் இல்லை. அவர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், மைத்துனரின் குழந்தைகளிருவரையும், ஜ.நா. அமைதி முகாமில் கண்டெடுத்து, இன்று தன் பிள்ளைகளோடு அவர்களையும் சேர்த்து பெல்ஜியத்தில் வளர்க்கிறார்.

இந்த படத்தின் டிவிடியில் வரும் தொடக்கப்பாடல், டூட்ஸிகளின் இனக்குழு பாடல். அதில் ஆங்கிலம் சேர்த்து பாடியிருப்பார்கள். அதன் ஒலம் இன்னும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அசல் பால் ரோசெசாபெகினாநகல் பால் ரோசெசாபெகினாபடம்: ஹோட்டல் ரூவாண்டா (2004)
இயக்கம்: டெர்ரி ஜ்யார்ஜ்
நடிப்பு: டான் சியேடுல், ஜீன் ரெனோ, நிக் நோல்டே

Winner AGF People's Choice Award - Torento international Film Festival
Winner Audience Award - Best Feature AFI Festival 2004
Winner One of the top films of the year Nation Board of Review
Winner Stanley Kramer Award Producers Guild Awards
Winner IFP Gotham Awards - Actor of the Year
Oscar Nomiation - Original Screen Play, Actor in a Leading Role, Actress in a Supporting Role

May 2, 2005

நெடுமாறன் மீதான பொடா வழக்கு

பழ. நெடுமாறன் மற்றும் நால்வர் மீதான பொடா வழக்கினை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு பொடா மறுபரீசிலனை குழு அறிவுறுத்தல்பொடா வழக்கினைப் பார்த்துக் கொள்ளும், மறு பரீசிலனை கமிட்டி, பழ.நெடுமாறன் மீதான பொடா வழக்கினை வாபஸ் வாங்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது, புலிகளை ஆதரித்ததாக காரணம் காட்டி, பழ.நெடுமாறன் மற்றும் நால்வர் ( சுப.வீரபாண்டியன்(சுபவீ), தாயப்பன், புதுக்கோட்டை பாவாணன், சாகுல் அமீது) மீது தமிழக அரசு இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தது.

முதல் வழக்கு, ஏப்ரல் 13,2002 அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக போடப்பட்டு பொடாவில் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது வழக்கு, தமிழ் தேசிய கழகத்தின் செயலாளர் பரந்தாமன், ஒரு தனியார் டிவிக்கு அளித்த நேர்காணலுக்காக போடப்பட்டது. அந்த நேர்காணலில் பரந்தாமன், புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும், ஜெயலலிதா அரசினை குற்றம் சாட்டினார்.

மறுபரீசிலனை குழுவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி. உஷா மெஹ்ரா தமிழக அரசு குற்றம் சாட்டி சிறையிலடைத்தமைக்கு சரியான காரணங்கள் இல்லையென்றும், ஈழத்தமிழர்களை ஆதரித்து பேசுவதால் வன்முறையினை தூண்டிவிடுகிறார்கள் என்கிற தவறான கருத்தமைவும் கொண்டதாக தமிழக அரசுக்கு சொல்லியிருக்கிறார். புலிகள் எதிர்ப்பில் முழு ஈடுபாடு காட்டிவரும் தமிழக அரசுக்கு இது பெரிய பின்னடைவாக இருக்கும்.

முழு செய்தி. ஹிந்துவில் இன்று வந்தது.

POTA panel asks TN Govt. to withdraw case against Nedumaran

New Delhi, May. 2 (PTI): In a setback to the Tamil Nadu Government, the Review Committee on POTA has directed the State to close two separate cases booked under anti-terrorism law against Tamil National Movement (TNM) leaders, including its chief P Nedumaran.

In the first case, the committee cleared Nedumaran and four others from the allegation that their speech delivered on April 13, 2002 in Chennai amounted to supporting the Liberation Tigers of Tamil Eelam (LTTE) -- banned under POTA.

In the second case, the panel held that the Tamil Nadu Government was not justified in invoking POTA against TNM General Secretary Paranthaman, for his alleged interview to a private channel criticising the Jayalalithaa Government for its stand against the Tamil Tigers.

While asking the Tamil Nadu Government to withdraw the charges under POTA against Nedumaran, Suba Veerapandian (then spokesman of MDMK), Paavanan alias Podukottai Paawanan, Thayappan and Shahul Hameed, the panel said "there is no prima facie case for proceeding under POTA against them."

"In the material placed before the committee, there is nothing to suggest that the accused had in any manner, been involved in any act of violence which leads to terrorism. In these circumstances, sympathy or oral support for the cause of Eelam Tamils does not mean support for the ideology or methodology adopted by LTTE," a three-member committee headed by Justice Usha Mehra said.

Other members of the Committee comprise K Roy Paul (retired IAS officer) and R C Jha (retired IPS officer).

The committee held that "expressing sympathy and asking others to understand and appreciate or even share the misery suffered by Eelam Tamils in Sri Lanka and to espouse the cause of Tamils would not bring their said speeches within the ambit of encouraging or furthering terrorism or the terrorist activities of LTTE."

The Tamil Nadu police had slapped the charges of POTA against them for their speeches evaluating the interview given by LTTE Chief Prabhakaran, in Sri Lanka.

Police had alleged that the speech of Nedumaran and others instigated the gathering to act against the Government and amounted to supporting the banned LTTE.

However, the panel said the accused persons made the speeches primarily to support the cause of Tamils, including Eelam. "Therefore their speeches will not fall within the ambit of encouraging support for a terrorist organisation under Section 21 of POTA," it added.

On Nedumaran's speech, the committee observed that his speech was only political in nature and was not indicative of any support to the LTTE.

The TNM leader only criticised the State Government in handling the Tamils in Sri Lanka, the committee said adding, that emphasis was on the state of affairs of Tamils living in various parts of the world.

ஹிந்துவின் சுட்டி

இதன் மூலம், ஈழத்தமிழர்களின் வாழ்வினைப் பற்றி பேசுதலில் மாற்றங்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மேலும், தமிழகத்தின் இரண்டாம் நிலை அரசியல் தலைவர்களாக உருவெடுத்திருக்கும் (கலைஞர், ஜெயலலிதா தாண்டி) வை.கோ, மருத்துவர் ராமதாசு, திருமா வளவன் ஆகியோர் ஆரம்பம் முதலே ஈழத்தமிழர்கள் பற்றி பேசி வந்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் மீதான நேரடியான ஆதரவாக இதை கருத முடியாமல் போனாலும், ஈழத்தமிழர்களின் வாழ்வினைப் பற்றி தமிழகத்தில், புலிகளைச் சார்ந்து தைரியமாக பேசலாம் என்பது காலம் கடந்து நிருபணமாகியிருக்கிறது

May 1, 2005

மனித இனத்தின் வரலாறு

முதலில் தெஹல்காவிலும், பின்னர் என்.டி.டிவியிலும் பார்த்து, இணையத்தளத்தில் ஆராய்ந்த பின்னரே இதனை எழுதுகிறேன். போன புதன்கிழமை, என்.ஜி.சி ஒரு முக்கியமான உலகளாவிய திட்டத்தினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்வைத்திருக்கிறது.

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். என்னுடைய அறிவியல் அறிவு குறைவாக இருக்கும் பட்சத்தில் இதைப் பற்றி விரிவாக விளக்கமாக எழுத இயலாது என்று நினைக்கிறேன். இந்த தளத்தினைப் பார்த்து பத்மா அரவிந்த், தங்கமணி இன்னபிற வலைப்பதியும் ஆராய்ச்சியாளர்கள் விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

நான் படித்து புரிந்தவரையில், இந்த திட்டத்தினைப் பற்றி எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன். மனித உடல் ஜீன்களின் கட்டமைப்பாலானது. ஆதி மனிதனின் ஜீனிலும், உங்கள் பக்கத்து பெஞ்சுக்காரரின் ஜீனிலும் நிறைய ஒற்றுமை, வேற்றுமைகள் இருக்க வாய்ப்புண்டு. மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள், திறவுகோல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்கு நோய் வருதலும், எவ்வளவு வெயிலில் கிரிக்கெட் ஆடினாலும் தலைவலியே இல்லாமல் சிலபேர் இருப்பதும் ஜீன்களை சார்ந்ததே. இதற்கு மேல், ஜீன்கள், ஜீன்களின் கட்டமைப்பு, மனித உடலில் ஜீன்களின் பங்கு போன்றவற்றை ஆழமாக அறிய விரும்பினால், HGP என்றழைக்கப்படும் மனித ஜீன்களை கண்டறியும் ப்ரொஜெக்ட் (humane genome project) தளத்தில் பாருங்கள்.

உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்கு சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது தான் இந்ததிட்டம். GP இணையத்தளத்தில் ஒரு அருமையான, அவசியமான, ஜீன் உலக வழித்தடத்தினை வைத்துள்ளார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் சில செய்திகள். இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். என்.ஜி.சியின் மொழியில் M என்பதற்கான அடையாளப் பொருள்
M is a macro-haplogroup that arose from the African lineage defined by L3. Haplogroups M and N trace the first human migrations out of Africa. M's various sub groups are found in Eastern Eurasia , East Asia (M7,M8) America (C,D) and the Indian subcontinent -though not in europe.
ஒவ்வொரு வழித்தடமும், ஆப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியா, இலங்கையினை குறுக்காக கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130. இது நடந்தது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர். 30,000 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலையின் கணவாய்களின் வழியாக வந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும் வழித்தடம் M20. M52 என்பது "இந்தியன் மார்க்கர்" என்றே அழைக்கப்படுகிறது. இது 20,000 -30,000 ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய ஆசியாவிலிருந்து, ஈரான், கிழக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஒருமுறை பாலாஜி-பாரியோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஜராவாஸ் என்கிற அந்தமானில் வசிக்கும் பழங்குடிகள், தொல் ஆப்ரிக்கக் குடிகளாக இருப்பார்கள் என்கிற சந்தேகத்தினை முன்வைத்திருந்தேன். அது இப்போது உறுதியாகிவிட்டது.

ஆக வரலாறு, மொழி ஒற்றுமை, பழங்குடிப் பாடல்கள், உருவ அமைப்புகள் இவற்றினைத் தாண்டி எல்லா இனத்தையும், அதன் ஆதி மூலங்களோடு பட்டியலிடும் காலம் வந்துவிட்டது. இனி நாங்கள் வந்தேறிகள் இல்லை என யாரும் ஜல்லியடிக்கமுடியாது. இதைத் தாண்டி, உலகளாவிய இனங்களின் ஆதி,அந்தங்கள் புலனாகும். எனவே, கொலம்பஸ் அமெரிக்க பழங்குடிகளை நசுக்கிக் அழித்தொழித்ததையும், பிரிட்டிஷ், ஸ்பானிய மாலுமிகள், ஆஸ்திரேலிய இனக்குடிகளை ஒரம் கட்டியதையும், கைபர்-போலன் கணவாய் வழியாக வந்து தமிழகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் இனத்தவர்கள் வரை எவரும் தப்பமுடியாது. இனிமேல் கண்ணாமூச்சி ஆடமுடியாது. ஆட்டம் ஒவர் என்று நினைக்கிறேன். அவரவர்கள் அவரவர்களின் சுயங்களையும், மூலங்களையும் ஒத்துக் கொண்டாகவேண்டிய கட்டாயம் வந்துவிடும்.

ஆதாம் கண்டிப்பாக கறுப்பினத்தவனாக தான் இருந்திருக்கவேண்டும், நீங்கள் ஆதாம்-ஏவாள் தியரியை நம்புவதாக இருந்தால். நாம் எல்லோரும் ஒரு வயிற்றிலிருந்து வந்தவர்கள் என்பதற்கான மிக முக்கியமான ஆய்விது. ஆனாலும், வாடிகன் ஒரு ஆப்ரிக்க இயேசுவினை ஒத்துக் கொள்ளுமா என்பது கேள்வி.

இது வெறும் ஆராய்ச்சிக் கூடத்தில் நடக்கும் ஆய்வல்ல. இதில் நீங்களும், நானும் கூட பங்கு பெறலாம். உலகெமெங்கும் நிறைய நபர்களின் ஜீன்கள் இந்த ஜீன் வரைப்படத்தினை சரி பார்க்க உதவும். பங்கேற்பார்கள் கிட் ஒன்று தருகிறார்கள். அதன் மூலம் உங்களின் ஜீன்களை நீங்களை மாதிரிகள் எடுத்து, இந்த GP இணையத்தளத்தில் கொடுத்துவிடலாம். ஒரு ரகசிய GP எண்ணினைக் கொண்டு உங்களது ஜீனின் முடிவுகளை, பாதுகாப்பான இணையத்தளத்தில் பார்வையிட இயலும். உங்களின் மூதாதையர்களின் பாரம்பரியம், அவர்களின் ஜீன்களின் பயணம், எங்கிருந்து வந்தார்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள் என்பது போன்ற கழுகுப்பார்வை தகவல்கள் கிடைக்கும். மனித இனத்தின் கதை உங்களுக்கு மொத்தமாய் $99.95 களில் தெரியவரும். இந்த பணம் இதைப் போன்ற பல்வேறு மனித இனத்தேடல்களுக்கு செலவிடப்படும்.

இந்தியாவில் மொத்தமாக கிடைக்க வழி செய்யுமானால், எல்லா பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் இதனை பல்வேறு இனத்தவரிடையே எடுத்து செல்லமுடியும். இதற்கான செலவும் குறையும். இதை இந்தியாவிலிருந்து படிக்கும் பல்கலைக்கழக, IIT, IISc போன்ற பெரு கல்விநிறுவனங்களில் உள்ளவர்கள் இதை முன்னெடுத்து செல்லலாம். ஆனாலும், இந்தியாவில் ஒரு சோதனைக்கு 4,500 ரூபாய்கள் கொடுத்து பரிசோதிப்பவர்கள் எவ்வளவு பேர் என்பது கேள்விக்குறி. இருந்தாலும், மனித இனத்தின் மிக முக்கியமான ஆய்வு இது. அமெரிக்கா, கனடாவில் இருப்பவர்கள் கொஞ்சம் காசு பார்க்காமல் இதை வாங்குங்கள். உங்களின் ஜீன்களின் மூலம் இந்திய/ஈழத் தமிழர்களின் பின்புலம் புலப்படும்.
There was a massive genetic influx into India from the steppes within the past 10,000 years. Taken with the archaeological data, we can say that the old hypothesis of an invasion of people - not merely their language - from the steppes appears to be true - Spencer Wall, Team leader of Genographic Project
பார்க்கவேண்டிய சுட்டிகள்

ஜெனோகிராபிக் ப்ரொஜெக்ட்
ஜீன் வழித்தடங்கள்
பங்கேற்பாளர் கிட் வாங்குதல்

இதன் தொடர்ச்சியாக, கொஞ்ச நாள் கழித்து, சுந்தரவடிவேல் எழுதியிருந்ததை இங்கே படிக்கலாம்

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]