May 8, 2005

பைனாகுலர் 10348

City of God என்கிற படத்தின் பெயர் மறந்து போனதால், அதை எஸ்.ராவின் பதிவில் படித்ததாக ஞாபகம். அவர் ஆயுத எழுத்து பற்றி அவரின் பதிவில் எழுதியபோது இந்த படத்தையும், அமொஸ் பெரொஸினையும் குறிப்பிட்டிருந்தார். ஆயுத எழுத்தினை அஃகு வேறு, ஆணி வேறாக கிழித்திருப்பார். நீங்களும் படித்திருப்பீர்கள். பெயர் மறந்து போனதால், அவரின் பதிவில் போய் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அந்த பதிவே காணவில்லை. மாதம், பதிவு என்று வெவ்வேறாக தேடிப் பார்த்துவிட்டேன். ம்ஹூம். சிக்கவே இல்லை. உங்களுக்கு சிக்குகிறதா என்று பாருங்கள், நான் தேடியவரை எனக்கு கிடைக்கவில்லை. அது மறந்து போய், அப்புறம் என் டிவிடி கடையில் விசாரித்து பெயர் கண்டுபிடித்தது தனிக்கதை.
இந்த வார குமுதம் செய்தி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மணிரத்னத்தின் புதிய படத்தில் பணியாற்றுகிறார்.(குமுதம் 18.5.2005 பக்கம்.66)எஸ்.ரா நீங்கள் தமிழ் சினிமாவிற்கு தயாராகிவிட்டீர்கள். இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்பீர்கள். சூட்சுமங்களை கைக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் : )

பார்க்க - எஸ்.ராவின் வலைப்பதிவு

சென்னையில் இருக்கும் மிக முக்கியமான சங்கிலி கடைகளான புட்வேர்ல்டு ஆர்.பி.ஜி யிடமிருந்து கைமாறுவது போல் தெரிகிறது. இனி சென்னை, பங்களூர், ஹைதராபாதிலிருக்கும் புட்வேர்ல்டு கடைகள், ஸ்பென்சர்ஸ் என்று பெயர் மாற்றப்படும் என்று தெரிகிறது. பெரம்பூர் லோக்கோவில் இருக்கும் நண்பனின் முதிர் சகாக்களோடு, பிரிட்டிஷ் ஒயின்ஸில் ஒதுங்கும்போது அவர்கள் ரம்முக்கு விரும்பிக் கேட்பது ஸ்பென்சர்ஸ் சோடாவாக தான் இருக்கும். இது 7-8 வருடங்களுக்கு முன்பு. அதன்பிறகு, ஸ்பென்சர்ஸ் சோடா வருகிறதா என்று தெரியவில்லை. புட்வேர்ல்டு ஸ்பென்சர்ஸாக மாறினால், சோடா கிடைக்குமா என்று விசாரிக்க வேண்டும். இது தாண்டி, மெட்டி ஒலிகள் வங்காளத்திலும் ஒலிக்கக் கூடும். சன் குழுமம், கொல்கத்தாவின் மிகப்பெரிய கேபிள் நிறுவனமான இண்டியன் கேபிள் நெட்டினை வாங்க இருக்கிறது. இதன் மூலம் 7 லட்சம் வாடிக்கையாளர்கள் கையிலிருப்பார்கள் அல்லது டிவி பார்ப்பார்கள். இது அவர்கள் கொண்டு வரப்போகும் சூர்ஜோ என்கிற வங்காள அலைவரிசைக்கு பெரிய பலம். அது சரி, சித்திக்கு வங்காளத்தில் என்ன ?

பார்க்க - பிஸினஸ்வேர்ல்டு

மார்ச் மாத காலச்சுவட்டினை புரட்டிக் கொண்டிருந்தேன். முகத்திலறைந்தாற் போல தெரித்தது முகுந்த் நாகராஜின் இந்த கவிதை

'இது என்ன ஸ்டேஷன்?' என்று கேட்டார்,
இரவுப் பயணம் முடிவை நெருங்கிய அதிகாலையில்.
'கிருஷ்ணராஜபுரம்' என்றேன் வெளியே பார்த்து.
'இங்கே என்ன பேமஸ்?' என்று கேட்டார் சகஜமாக.
திடுக்கிட்டேன் நான்.

இன்னொரு முறை கேட்டார்.
என்னவாக இருக்கும் ?
மலைக்கோவிலா, அருவியா,
மத்திய அமைச்சரா,
இனிப்புப் பலகாரமா,
நாடி ஜோசியனா...
என்னவாக இருக்கும் ?
இறங்கி உள்ளே போய்
ஊர்க்காரன் எவனையாவது
பிடித்துக் கேட்கலாம்
ஆனால், ஒன்றுமே ஃபேமஸ் இல்லாவிட்டால்,
அவமானத்தில் அவன்
மனம் உடைந்து விடக்கூடும்.
இல்லாவிட்டால், சனிக்கிழமைதோறும் கூடும்
சாதாரண சந்தையைப் பற்றி உற்சாகமாக
ஒரு மணி நேரம் பேசவும் கூடும்.
என்னைப் பிடித்து வைத்துக் கொண்டு.
ரயிலோ இரண்டு நிமிஷம்தான் நிற்கும்.
அட, வெட்கம் கெட்ட கிருஷ்ணராஜபுரமே,
உனக்கெல்லாம் ஒரு ஸ்டேஷன் கேடா?

பிரபலமாக எதுவுமே இல்லாமல் சாதாரணமாக இருப்பதின் வலியும், வெட்கமும், அவமானமும் பிடுங்கி தின்னும் சொற்கள். ஜென் கதைகளில் அற்புதங்கள் எதுவும் நிகழாது. சாதாரணமாய், எளிமையாய் இருப்பதின் சந்தோஷத்தையும், ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தும். ஆனால், நம் தமிழ், இந்திய மனவிலங்கு சாதாரணமாய் இருப்பதை ஒத்துக் கொள்வதில்லை. ஏதேனும் அற்புதங்களோ, அதிசயங்களோ, கோயிலோ ஏதாவது ஒன்றிருந்தாலேயொழிய நம்மால் ஒரு ஊரினை ஞாபகப்படுத்திக் கூட பார்க்க முடிவதில்லை. எளிமையாய் இருப்பதின் அவசியத்தையும், ஆச்சர்யங்களையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இப்படி எதுவுமே பிரபலமாக கிராமங்களிலும், நகரங்களிலும் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதை கொஞ்சமாய் நினைவில் வைக்க வேண்டும். மனித குணாதியங்களை விடவா, அற்புதங்கள் பெரிது..

பார்க்க - முகுந்த் நாகராஜன் கவிதைகள் | பிரகாஷின் முகுந்த் நாகராஜன் கவிதைகள் பதிவு

இந்த வார தெஹல்காவில் காப்பி கேட்ஸ் என்கிற தலைப்பில் எப்படி பாலிவுட் அதாங்க, இந்திய ஹிந்தி சினிமாக்கள் சர்வசாதாரணமாக ஹாலிவுட் படங்களை உருவியிருக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு அலசல். கொஞ்சம் சமீபத்தில் வந்த ஹிந்திப் படங்களையும், அவற்றின் மூலதாரங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ப்ளாக் (தி மிரக்கிள் வொர்க்கர்), மர்டர் (அன்பெய்த்புல்), முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (பேட்ச் ஆடம்ஸ்), ஹம் கிஸி ஸே கம் நஹின் (அனலைஸ் திஸ்). இப்படி உரித்தால், தமிழ் படங்களும் நிறைய தேரும் என்று பட்சி சொல்கிறது. எனக்கு தெரிந்த இரண்டொரு படங்களை சொல்கிறேன். மீதியை fill in the blanks. மகளிர் மட்டும் (நைன் டூ ஃபைவ்), ஜே.ஜே, ஸ்டார் (செரின்டிபிட்டி)

பார்க்க - தெஹல்கா செய்தி

மின்சாரம் போன நடு இரவில் என்ன செய்யலாம்
1. பால்கனி வழியே பராக்கு பார்க்கலாம்.
2. அடுக்கக்கத்தில் உள்ள நபர்களின் வீட்டில் என்னென்ன பிராணிகள் வளர்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
3. வானம் பார்த்து நட்சத்திரங்கள் எண்ணலாம். சிறுவயதில் பார்த்த மூன்று ஜோடியாக உள்ள நட்சத்திரங்கள் இப்போதும் இருக்குமா எனத் தேடலாம்.
4. சத்தத்தினை வைத்து சாலையில் என்ன வாகனங்கள் போகின்றன என்று யூகித்து விளையாடலாம்.
5. உங்கள் வீட்டினை சுற்றி எத்தனை செல் கோபுரங்கள் இருக்கின்றன என்று ஒளிரும் சிகப்பு விளக்கினை கொண்டு எண்ணலாம்.
6. உயர்ந்த அசோக அல்லது பாக்கு மரங்களில் மனித உருவங்களை தேடலாம்.
7. குல்பி ஐஸ் காரன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை மீட்சி செய்யலாம்.
8. அடுக்கக காவலாளி, எவ்வாறு தினமும் இரவினை கழிக்கிறான் என்று யோசிக்கலாம்.
9. எப்போதோ படித்த கல்யாண்ஜியின் "நிலா பார்த்தல்" ஞாபகம் வந்து நிலா இருக்கிறதா என்று தேடலாம்.
10. தூரத்தில் வெளிச்சங்களுடன் வீடுகளைப் பார்த்து பொறாமை படலாம்.
11. டெல்லியில் இருக்கும் மின்சார அமைச்சரிலிருந்து. லோக்கல் லைன் மேன் வரை ஒருவரும் வேலை செய்வதேயில்லை என்று எலீட்டாக கரித்துக் கொட்டலாம்.
12. பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் என்னென்ன இரவு ஆடைகள் அணிகிறார்கள் என்று அரைகுறை வெளிச்சத்தில் கூர்ந்து கவனிக்கலாம்.
13. ஜெனரேட்டர்கள் ஒடும் சத்தம் பெரிதாக முதலில் கேட்டு, பின் பழகிப் போய், ஜெனரேட்டர் நின்று போனால், ஏதோ குறைந்தால் போல் பதட்டமடையலாம்.
14. சுகமாக உள்ளே தூங்கும் நம் வீட்டுக்காரர்களையேப் பார்த்து ஆச்சர்யம் அல்லது எரிச்சலடையலாம்.
15. இந்தியாவில் இன்னமும் நிறைய கிராமங்களுக்கு மின்சாரமே இல்லாமல் இருப்பதையும், 20 நிமிட மின்சாரம் இல்லாமல் நாம் குமறிக் கொண்டிருப்பதையும் நினைத்து வெட்கப்படலாம்.
16. கீழ்வீட்டில் தனியாக இருக்கும் மென்பொருளாளர்கள் சொல்லும் "சிங்கப்பூர்ல இதெல்லாம் நடக்கவே நடக்காது மச்சான்" "கலிப்போர்னியால இது மாதிரி நடந்தா கேஸ் போடலாம் தெரியுமா" என்கிற உளறல்களை ஒட்டுக் கேட்கலாம்.
17. வெட்டியாக எதுவும் செய்யாமலிருக்கும்போதுதான் இதுவரை செய்யவேண்டும் என்று நினைக்கும் நிறைய வேலைகள் நினைவுக்கு வரலாம்.
18. நாளைக்கு எப்படியாவது ஒரு எமர்ஜென்சி விளக்கு வாங்கிட வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கலாம்.
19. காலில் மிதிபட்டு கூழாகும் எதுவோ, கரப்பான் பூச்சியாகவோ, பல்லியாகவோ, குழந்தை தின்றுப் போட்ட பிஸ்கெட்டாகவோ இருந்தாலும், அது என்னவென்பதை மின்சாரம் வரும்வரை யோசிக்கலாம்.
20. மொட்டை மாடி என்கிற விஷயம் ஒன்று நினைவுக்கு வந்து,மேலேறுகையில் மூன்றாம் ப்ளாக் ரிட்டையர்ட் பெரியவர், கைக்கடக்கமான எப்.எம் ரேடியோவில் "கும்பிட போன தெய்வத்தினை" மெல்லிசாக கேட்கலாம்.

இதுதாண்டி, மின்சாரம் வந்தால், இதைப் போல உட்கார்ந்து வெட்டியாக பதிவு எழுதலாம்.

Comments:
இந்த கிருஷ்ணராஜ புரத்தில்தான் ITI உள்ளது. உங்கள் வீட்டில் இருக்கு டெலிபோனை திருப்பியோ அல்லது அப்படியோ பார்த்தால் ITI என்ன என்பது தெரியும் ;). இந்தியாவின் இரண்டாவது தொங்குபாலம்(முதலாவது ஹௌரா பாலம் என்று நினைவு) இந்த ஸ்டேஷனின் மேல் கட்டப்பட்டுள்ளது. இப்படி சில இருந்தாலும் இதைவிட இந்த இடத்திற்கு புகழ் என் தங்கை வீடு அங்கு இருப்பதால். ;) சும்மா வம்புக்கு இந்த கமெண்ட்...
 
கனாடாவில், ஷிப்பாகனில் சென்ற வாரம் ஒரு நாள் ஐந்து மணி நேரம் மின் தடை. ஆனால் அது மாலை நேரத்தில் நிகழ்ந்தது.
 
//: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மணிரத்னத்தின் புதிய படத்தில் பணியாற்றுகிறார்.//

பாப்கார்ன், பாபாவில் விட்டதை இங்கே பிடிக்கிறாரா பார்க்கலாம் :-)

//பார்க்க - முகுந்த் நாகராஜன் கவிதைகள்//

http://icarus1972us.blogspot.com/2005/05/blog-post.html

//மின்சாரம் போன நடு இரவில் என்ன செய்யலாம்//

அங்கயும் கோவிந்தாவா? இப்பத்தான் இங்கே கரண்ட் வந்தது...
 
நல்ல பதிவு!

எஸ்.ரா மணிரத்தினத்தின் படத்திலா? சிக்கவே இல்லை அவரது பதிவா?

பார்ப்போம்.

கவிதை நன்றாக இருக்கிறது நாராயணன். சாதாரணமாய் இருப்பது இன்னும் தமிழ் மனத்துக்கு சம்பந்தமில்லாதது. பாடாண்தினை இருந்த நிலமல்லவா? அல்லது எளிமை என்ற பெயரில் இன்னும் அதிக கொடுமை பண்ணுவார்கள்.

வந்துட்டார்ப்பா, பாசமலர் பாலாஜி-பாரி!
 
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மணிரத்னத்தின் புதிய படத்தில் பணியாற்றுகிறார்
Godess save one from another and
us from both of them.
 
எங்கே சமீபத்தில் பைனாகுலரை கானோம் என்றிருந்தேன். சாதாரணமாய் இருப்பதென்றால் என்ன?
கவிதை நன்றாக இருக்கிறது, இயல்பாக இருப்பதனால்.
கிருஷ்னராஜபுரத்தில் தான் கிருஷ்ணன் தூது போகும் முன் தங்கியிருந்தாராம் (just kidding!!)என்று சொல்லி பாருங்கள், காலடியை கூட பார்த்தேன் என்றால் கூட்டம் அலை மோதும்.
 
Narain check my post
http://kkirukan.blogspot.com/2005/02/blog-post_25.html

I have given a big list of Kamals Hollywood inspired movies
 
பைனாகுலர் ஓசி கொடுத்ததுக்கு நன்றி நாராயணன். இப்பல்லாம் தமிழ்மணம் வந்தபிறகு, அடிக்கடி - கற்றதும் பெற்றதும்/ஓரிரு எண்ணங்கள்/அம்பலம் கட்டுரைகள் படிக்கும் திருப்தி, மிக்க நன்றி.

கோலார் தங்கவயல் போகும் வழியிலுள்ள, K.R. புறாவுக்கு ITIயோட இன்னோரு பெருமை நான் அங்க ஒரு 6 மாதம் அங்க இருந்தேன் MCA projectன்போது:)
 
பாலாஜி-பாரி, பிரகாஷ், தங்கமணி, விசிதா, பத்மா அரவிந்த்,கிறுக்கன் நன்றிகள்.

அந்த கவிதை கிருஷ்ணராஜபுரத்திற்கு மட்டுமல்ல. நடுஇரவில் நிற்கும் ஊர்பேர் தெரியாத எல்லா ஸ்டேஷன்களுக்கும்,அல்லது, பார்வையில் கடந்து போகும் மலைகளுக்கும், வயல்களுக்கும் சேர்த்துதான். எளிமையாய், இயல்பாய் இருப்பது தான் அழகு என்பதை உணராமல் இருக்கிறோம் என்பதுதான் மனக்குறை. ஆனாலும், பத்மா இவ்வளவு எள்ளல் ஆகாது. இதை வேண்டுமானால், ரெட் ஹில்ஸ் தாண்டி, நிலம் வாங்கிப் போட்டிருக்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடமும் சொல்லுகிறேன். வியாபாரம் பிய்த்துக் கொண்டு போகும் ;-)

பிரகாஷ், உங்களின் பதிவின் சுட்டியினை குடுக்காமல் விட்டது தப்புதான். வேண்டுமானால், கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.

எஸ்.ராவினைப் பற்றி எழுதியது கிண்டலுக்காக அல்ல. தன் சுயத்தினை இழந்து சினிமாவிற்குள் சேர வேண்டுமா என்பதுதான். இது என்னுடைய பார்வையாக கூட இருக்கலாம். எஸ்.ரா, ஜெயமோகன் போன்றவர்கள் இதுநாள்வரை கிழித்துப் போட்ட தமிழ்சினிமாவிற்கு எப்படி பிளாஸ்திரி போடுகிறார்கள் என்று பார்ப்போம். ஆனால், படம் முடிந்து வெளியே வந்து, வணிக சினிமாவின் எல்லைக்குள் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வார்களேயானால், அவர்கள் இனி தமிழ்சினிமா பற்றி பேசாமல் இருத்தல் நலம் என்று தோன்றுகிறது.
 
வணிக சினிமா என்பதை விட எத்தகைய கதைக்கு வசனம் எழுதுகிறார்கள், அதில் இவர்களுக்கு எந்த அளவு சுதந்திரமிருக்கிறது என்பதுதான் கேள்வி.இயக்குஞரின் தேவையைத் தான் இவர்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என்று இருக்கும் போது நாம் அதிகமாக எதிர்பார்க்க வேண்டியதில்லை.தமிழ் சினிமாவை விமர்சிக்கட்டும் அதே நேரத்தில் தங்கள் வரைய்றைகளையும், இயலாமையையும் ஒப்புக் கொள்ளட்டும்.எஸ்.ரா வின் கதை சொல்லும் பாணியும், மணி ரத்தினத்தின் கதை சொல்லும் பாணியும் வேறு.மணி ரத்தினத்திற்காக எஸ்.ரா எழுதிக் கொடுக்க வேண்டும்.ஒத்து வ்ராவிட்டால் இன்னொருவரை பயன்படுத்திக்கொள்ள மணியால் முடியும்.ஆனால் எஸ்.ரா எழுதுவது அவருடைய பாணியில் இல்லாமல் மணி பாணிக்காக வலிந்து எழுதியது போல் இருந்தால்......
அங்குதான் ஒரு எழுத்தாளன் எந்த அளவு சமரசம் செய்து கொள்கிறார் என்பது தெரியும். பாபா வைத் தொட்டது,பார்த்தது போல் புளகாகிதம் அடைந்து எழுதமாட்டார் என்று நம்புகிறேன்.என்ன நடக்குமோ நடக்க நடக்க நாராயணன் செயல்
 
//எஸ்.ரா, ஜெயமோகன் போன்றவர்கள் இதுநாள்வரை கிழித்துப் போட்ட தமிழ்சினிமாவிற்கு எப்படி பிளாஸ்திரி போடுகிறார்கள் என்று பார்ப்போம். ஆனால், படம் முடிந்து வெளியே வந்து, வணிக சினிமாவின் எல்லைக்குள் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வார்களேயானால், அவர்கள் இனி தமிழ்சினிமா பற்றி பேசாமல் இருத்தல் நலம் என்று தோன்றுகிறது.//

அதானே.... :-))))
 
அன்பு, விசிதா, விஜய் நன்றிகள். அட போகுற போக்கைப் பார்த்தால், கிருஷ்ணராஜ புரத்திற்கென்றே தனியாக பதிவு எழுதலாம் போல இருக்கிறதே. இப்படி சொல்வதும் நல்லதுதான், என்றைக்காவது எவரேனும் கூகிளில் தேடினால் அவருக்கு விஷயங்கள் கிடைக்கும்.
 
பாலா, சுட்டிக்கு நன்றி. ஆனால், அதன் தேதியினைப் பாருங்கள். [18/6/2004] ஆனால், ஜூன் மாத அட்சரத்தின் தொகுப்பில் போய் பார்த்தால் இந்த சுட்டியினைக் காணவில்லை. நான் முழுவதுமாக தேடிப் பார்த்துதான் இந்த பதிவினையிட்டேன். மற்ற எல்லா மாதங்களும் முழுதாய் வரும்போது, ஜூனில் இந்த சுட்டி மட்டும் மறைக்கப்படுவது ஏன்?
 
அட: பதிவு காணாமல் போனது ஆச்சரியம்தான். எஸ்.ராவின் அந்தப் பதிவைக் குறித்து முன்பு நானும் குழப்படியாக ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் - அது இங்கே. பதிவை எடுக்கவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை - இல்லையெனில் வெறுமனே ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா?
 
நன்றி மாண்டீ!

//பதிவை எடுக்கவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை - இல்லையெனில் வெறுமனே ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா?//

இதை வெறும் தொழில்நுட்பக் கோளாறாக என்னால் பார்க்க முடியவில்லை. மற்ற மாதங்களில் பதிவுகள் ஒரு சேர வரும்போது, இந்த பதிவு மட்டும் விடுபடுவது ஏன் ? பிண்ணணியில் அரசியலும் இருக்கலாம் அல்லவா ? அல்லது மணிரத்னத்தின் படத்தில் வசனமெழுதுவதால், இது ஒரு தர்மசங்கடமான நிகழ்வாக இருக்கலாம் என்பதால் மறைக்கப்பட்டதா ? இல்லையெனில் மறைக்கப்பட்டப் பின் மணிரத்னத்திடம் பேசப் போனாரா. இதனை சிண்டு முடியும் வேலையாக பாராமல், ஒரு எழுத்தாளனின் சுயம், அவனின் இருப்பு பற்றிய கேள்விகள், சினிமாவிற்காக செய்துக் கொள்ளவேண்டிய சமரசங்கள் குறித்த பார்வையாக பார்க்கலாம் அல்லவா.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]