May 26, 2005

பைனாகுலர் 10349

"..... ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க"

"நீ யார் என்று தெரியாது
ஆணா, பெண்ணா
பியரா, விஸ்கியா
நியுயார்க்கா, கலிப்போர்னியாவா
அதெல்லாம் தேவையில்லை
சோசியல் செக்குயுரிட்டி நம்பரென்ன
வங்கி கணக்கு எண் என்ன
வாகனத்தின் பதிவெண் என்ன

என்னைத் தவிர
எல்லோருக்கும்
என் எண்கள் தான் முக்கியம்
எண்ணாகிப் போனேன் நான்"

எப்போதோ படித்த அமெரிக்க கவிதை தான் மேலே சொன்னது. இன்னமும் இங்கே மனிதர்கள் வாக்குகளாக, எண்ணிக்கையாக தான் கணக்கெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் தேர்தல் சமயத்தில் நீங்களும், நானும் ஒரு எண் தான். அவ்வளவே, என்ன ஒரே பிரச்சனை கொஞ்சம் சுயமரியாதையோடும், பகுத்து உணர்வதாலும், நீங்களும் நானும், 500 ரூபாய்க்கும், பிரியாணிக்கும், ஒல்ட் மாங்க் குவார்ட்டர் அல்லது புடவை ரவிக்கைக்கும் அடித்துக் கொள்ள மாட்டோம். அவ்வளவுதான், மற்றபடி, சற்று தாமதமாக போனால், உங்களின் எண்ணிக்கை பூர்த்தியாகி விட்டிருக்கும். இந்த எண்ணிக்கை உண்டாக்கும் சிக்கல்கள் சுவாரசியமானவை, அதிலொன்று தான் கீழே தந்திருப்பது.

"சன் டி.வி. பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவல். சமீபத்தில் செய்திப் பிரிவில் எட்டுப்பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது டி.வி. நிர்வாகம். இடைத்தேர்தல் குறித்த செய்திகளை ஒளிபரப்பியபோது மக்கள் பேட்டியும் ஒளிபரப்பாகியிருக்கிறது. அப்படி காட்டப்பட்ட ஒரு பேட்டியில். ‘அ.தி.மு.க. ஆயிரம் ரூபாய் குடுத்தாங்க... தி.மு.க. ஐந்நூறு ரூபாய்தான் குடுத்தாங்க’ என ஒருவர் சொல்ல, அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பி விட்டார்களாம். இதுதான் நடவடிக்கைக்குக் காரணமாம்...’’

அட தேவுடா!!

பார்க்க: குமுதம் ரிப்போர்ட்டர்

"என்னுடைய சம்பளம் 30 ரூபாய்"
"என் பெயர் மஞ்சு. எனக்கு 40 வயதாகிறது. நான் காலையில் 6.00 மணியிலிருந்து 11 மணி வரை கக்கூஸ் கழுவுவேன். பின் மனிதக் கழிவுகளை எடுத்துப்போட்டுக் கொண்டு தலையில் வைத்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்றில் கொண்டுப்போய் கொட்டி விட்டு வருவேன். மதியம் கூரைகளை கழுவி விடுவேன். கூரைகளிலிருக்கும் அசுத்தங்களை தனியாக பெருக்கி, துடைத்து, வெளியில் குமித்து பின் ஒரு கீ.மீ தூரம் நடந்து சென்று கொட்டிவிட்டு வருவேன். என் கணவர் 10 வருடத்திற்கு முன்பு காலமாகிவிட்டார். அன்றிலிருந்து எனக்கு இதுதான் தொழில். ஒரு நாளைக்கு கூலி 30 ரூபாய் [$0.75] ஒன்பது வருடங்களுக்கு முன் இது 16 ரூபாயாக இருந்தது, பின் 22 ரூபாயாக மேலேறி, கடந்த இரண்டு வருடங்களாக 30 ரூபாய் தருகிறார்கள். ஆனால், சம்பளம் சரியாக கிடைக்காது. எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளமில்லை. எங்களுடைய சம்பளம் நகர் பாலிகா முனிசாபலிட்டியிலிருந்து வழங்கப்படுகிறது"
The UN Working Group on Contemporary Forms of Slavery, which comes under the UN Commission on Human Rights. It says: “Public latrines – some with as many as 400 seats – are cleaned on a daily basis by female workers using a broom and a tin plate. The excrement is piled into baskets which are carried on the head to a location which can be up to four kilometres away from the latrine. At all times, and especially during the rainy season, the contents of the basket will drip onto a scavenger's hair, clothes and body."

ஏற்கனவே தெரிந்திருந்தாலும், படித்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன். 30 ரூபாய், சென்னையில் கிங்ஸ் சிகரெட் முழு பாக்கெட் 30 ரூபாய்க்கும் மேல். ஹைதராபாத் பிரியாணியில் [எழும்பூர்] வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டால் 36 ரூபாய். அதிர்ச்சியாகவும், கேவலமாகவும், மனித தன்மையற்ற செயலாகவும் தெரிகிறது. இந்தியாவில் 787,000 பேர் இந்த மனிதக் கழிவுகளை சுமக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறது. இந்த தொழிலை எந்த தனியார் நிறுவனமும் செய்வதில்லை. செய்பவை அத்தனையும் அரசு நிறுவனங்கள், நகராட்சிகள், வாரியங்கள். தனியார் நிறுவனங்களில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஒரு மில்லியன் ஆட்கள் செய்யும் வேலையிது.

இது தலித் இதழ்களிலோ, ஹிந்துவிலோ வரவில்லை. இந்தியாவின் முதன்மையான வணிகம் சார்ந்த பத்திரிக்கைகளில் ஒன்றான பிஸினஸ் வேர்ல்டில் வந்திருக்கிறது. முழுவதுமாய் படிக்க உரிமம் வேண்டுமாதலால், மொத்த செய்தியையும், என் ஆங்கில பதிவில் இட்டிருக்கிறேன். அருணா சீனிவாசன் எழுதியதுப் போல நம்பிக்கைக் கீற்றுகள் விழும் அதே சமயம், இன்றைய இந்தியா எப்படியிருக்கிறது என்று பார்க்கும்போது ஆதங்கமும், துக்கமும் தான் பொங்குகிறது

பார்க்க: ஒரு மில்லியன் அடிமைகள் - அனைவரும் தலித்துகள் | பிஸினஸ் வேர்ல்டு சுட்டி [உறுப்பினராய் இருத்தல் அவசியம்]

"ராமா, உனக்கு புத்தி கெட்டுப் போச்சா! - சீதா இராமயணத்திலிருந்து"

ராமாயணத்தினை என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு கொஞ்சம் படிக்க ஆரம்பித்தபின் வெவ்வேறு வடிவங்களில், சொல்லாடல்களில் கேட்டிருக்கிறேன். பத்தாவது படிக்கும் போது கொஞ்சமாய் தேர்வுக்காக கம்பராமாயணத்தினை மக்கு அடித்து, வினாத்தாள்களில் வாந்தியெடுத்திருக்கிறேன். எல்லாரையும் போல எப்பொழுது வேண்டுமானாலும், அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள் என்று சொல்லத் தெரியும். அவ்வளவே. டிவியில் ராமாயணம் காண்பித்தப் போதும் கூட பெரிதாக ஈடுபாடு எதுவுமில்லை. ஆனால், சமீபகாலங்களில் படித்த பிற ராமாயணங்களும், கதையாடல்களும் வெவ்வேறு விதத்தில் ராமனை முன்னிறுத்துக்கின்றன. ஆனால், சீதாவினை முன்னிறுத்தி ராமாயணத்தினை படித்ததில்லை. அதுப்போன்ற ஒரு தளத்தில் சீதாவினை கதை நாயகியாக முன்னிறுத்தி ஒரு நபர் அனிமேஷனில் கதை சொல்லிக் கொண்டு வருகிறார். Site sings the blues என்கிற பெயரை தாங்கி வருமது "சீதாயணா" என்கிற வடிவத்தினை முன்னிறுத்துகிறது. இதுப் போன்ற தொன்மங்களில் எனக்கு பிடித்தது கதை சொல்லும் பாங்கும் கதாபாத்திரங்களும் தான். பெண்களின் பார்வையில் ஒரு தொன்மம் எப்படி சொல்லப்படுகிறது என்பதற்கு நான் படித்தவரையில் கதையாடல்கள் இல்லை. கண்டிப்பாக இருக்கும். ஆனால் நான் படித்ததில்லை. இலியட், ஒடிசி, ராமாயண, மகாபாரதம், கிரேக்க, எகிப்திய தொன்மங்கள் அனைத்தும் ஆண்களின் வெற்றி,தோல்வி, ஆட்சி பிடித்தல், பேராசை, பொறாமை, பெண்களை அடக்குதல், மக்களை ஆளுதல் இவற்றைக் கொண்டு தான் கதை சொல்லுகின்றன. எந்த தொன்மமும் பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதில்லை. பெண்கள் சில பேரை முக்கிய கதாபாத்திரங்களாக, கதைப் போக்கில் சித்தரித்து விட்டு போயிருப்பார்கள். [திரெளபதி, சபரி கிழவி, குந்திதேவி, கைகேயி, தாடகை, சூர்ப்பனகை ] 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இரண்டு பெண்கள் ராமாயணத்தினை பெண்களின் வழியாக பார்த்து சொல்லியிருக்கிறார்கள். மோலா என்ற பெண் தெலுங்கு ராமாயணத்தினையும், சந்திரபதி என்கிற பெண் வங்காள ராமாயணத்தையும் பெண் பார்வையில் மீட்சி செய்திருக்கிறார்கள்.[இருவரும் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாதவர்கள்]

இன்னமும் பெண்ணடிமை போகாத ஒரு சமூகத்தில், பெண்ணியம் என்பதே 19 ஆம் நூற்றாண்டு சிந்தனை என்கிற மேற்கத்திய சிந்தனாவாதம் இங்கு பொலிவிழந்து போகிறது. இந்தியாவிலும் பெண்ணியவாதிகள் இருந்திருக்கிறார்கள், கலகக்காரர்களாய் பெண்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே சுவாரசியமாகவும், அபூர்வமாகவும் இருக்கிறது.

பார்க்க - சீதாயணா - Sita sings the blues | பெண்களின் பார்வையில் ராமாயணம்

"த்தேறி.. வாடி நான் கூப்புடச் சொல்ல"
"உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள்? அப்படி செய்வதற்கு பெயர் கணவன் மனைவி உறவு இல்லை. காசு கொடுத்து நடத்தும் விபச்சாரம் என்று பெயர். என்னய்யா இது.. கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இலக்கணம் தெரியாமல் அதன் தவிப்புகள் தெரியாமல் எழுதுகிறீர்கள். ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ?
மேற் சொன்னது "இஸ்லாம் ஒரு அறிமுகம்" என்கிற பதிவில் நண்பர் அப்துல்லா சொல்லியிருப்பது. இஸ்லாத்தில் நபிகள் என்ன சொன்னார் என்று உள்ளே போக விருப்பமில்லை. என்னுடைய கருத்து வேறுபாடு மேற்குறிப்பிட்ட வார்த்தைகளையொட்டியே. நான் இதனை ஒரு தனி நபர் வாழ்வியல் சார்ந்த பிரச்சனையாக பார்க்கிறேன். ஒருவருடைய விருப்பமின்றி அவரோடு உடலுறவு கொள்வதற்கு பெயர் வன்புணர்வு. என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள் ? கூப்பிடவுடன் படுக்கைக்கு வந்து படுப்பவளுக்கு பெயர் தான் மனைவியா. எல்லா இடங்களிலும் சம்மதம் பெறுதல் அவசியம். அமெரிக்காவில் இப்படி செய்தால், கணவன் என்னை வன்புணர்ந்தான் என்று வழக்குத் தொடரலாம். இங்கே சென்னையில் மகளிர் காவல் நிலையத்தில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால், ஜட்டியோடு உட்கார வைத்து விடுவார்கள். கணவன் மனைவி உடலுறவு என்பது அவர்களுக்கிடையேயான அந்தரங்க விஷயம். ஜிஆர்டியில் அக்ஷ்ய திரிதியை அன்றைக்கு கூப்பிட்டுப் போகாமல் இருந்தால், 10 மணிக்கு மேல் பக்கத்தில் கைப் போட்டால், தூக்கி கடாசி விடுவார்கள் என்கிறான் நண்பன். நேற்றைக்கு தான் இரவு வெகுநேரம் என் நண்பனின் மனைவி மின்னஞ்சலில் விவாகரத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதைப் பற்றி கூட்டமாய் பேசிக் கொண்டிருந்தோம். நீங்களென்னடாவென்றால், எவ்வித பேச்சுக்களுமின்றி, கூப்பிடவுடனேனே உடலுறவுக்கு தயாராகி விடுவது போல சொல்லியிருக்கிறீர்கள். இதன் மூலம் ஒரு உறவின் இரு கூறுகளையும் அவமதித்து இருக்கிறீர்கள்.

//ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ?//

என்ன கேவலமான சிந்தனை இது. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அனுமதி கேட்டால் அதனை ஆண்மையின் பலவீனமாகவும், கையலாகத தனமாகவும் சித்தரிக்கிறார் ஆசிரியர். ஐயா, கணவன் மனைவி உறவு என்பது வேறு. கூப்பிட்டவுடனே படுக்கைக்கு வருபவள் வேறு. ஆண் பெண் உறவு என்பது கத்தியின் மேல் நடக்கக்கூடிய விஷயம். அதிலும், கணவன் மனைவி உறவு என்பது அதை விட ஆழமாகவும், கவனமாகவும் கையாளப் படவேண்டிய விஷயம். இதுப் போல விஷயத்தினை கையாளும் போது கவனமாக கையாளுங்கள்.

பார்க்க - இஸ்லாம் ஒரு அறிமுகம்

Comments:
நாராயணன்
கணவன் மனைவி உறவு பெரும்பாலானவரால் சரியாக புரிந்து கொள்ளாமலே இருக்கிறது. சொன்னதை கேட்டு நட என்று சொல்லி பெண்கள் தங்களின் உரிமைகளை புரிந்து கொள்வதில்லை. அதேபோல் சில பெண்கள் ஆண்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு” நகை இல்லாவிட்டால் தள்ளி படு “ என்று சொல்லி emotional blackmail செய்வதும் இதை கொச்சை படுத்திவிடுகிறது. தலையணை மந்திரம்(?) சொல்லி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்ள நினைப்பதற்கும், பணம் பெற்று கொண்டு உறவு கொள்வதற்கும் வித்தியாசம் இல்லை. இதை ஒரு ஆங்கில திரைப்படத்தில் கடைசியில் நீதிமன்றத்தில் ஒரு பாலியல் தொழிலாளி வாதிடுவது போல மிக அழகாக, இன்னும் விரிவாக விவாதம் செய்திருப்பதை பார்த்திருக்கிறேன். இன்னமும் உணர்ச்சிகளின் முழு புரிதலில் நடக்க வேண்டியதை திருமணங்களில் நேரம் நட்சத்திரமும் பார்த்து பலர் செய்வதையும் பெண்கள் அவமானத்தில் கூனி போவதையும் பார்த்திருக்கிறேன்.அமைதியாக நடக்க வெண்டியது ஆரவாரப்படுத்தபடுவதுடன், பொருளும் தவறாக போதிக்கப்படுகிறது. இன்னமும் அவள் போன்ற பத்திரிக்ககளில் பெண்களுக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ள அறிவுறை கூறப்படுகிறது. இதை சொல்பவர்களும் சில மன நல மருத்துவர்கள்!! நட்ட நடுவில் உதய சாந்தி என்று தலையில் தண்ணீர் கொட்டி பெண்ணை சுத்தம் செய்வதையும் சடங்குகளாக உற்சாகப்படுத்துவது நம் சமூகம். இதை எதிர்ப்பவர்களுக்கு தப்பை தவறி குழந்தை பிறக்காவிட்டால் வரும் பேச்சுக்களை சொல்லி மாளாது. மென்பொருள் புரிதலில் நாம் காட்டுகின்ற அக்கறை மனித உணர்வுகளை புரிந்து கொள்ளுதலில் இல்லை. சர்வ வல்லமை பொருந்திய ஆண்களுக்கு எங்கே இல்லை உரிமை!!!
சீதை, ஊர்மிளை மற்றும் இந்திரஜித்தின் மனைவி ஆகியோர் சொல்வது போலவும் அவர்களின் நியாயங்களை பார்ப்பது போலவும் நான் படித்திருக்கிறேன். புத்தகத்தின் பெயர் நினிவில் இல்லை. இது நாட்டுபுற பாடல்கள் போல வரும். ( வயதாகிப்போவதால் நினைவு தவறுகிறது!!)
பைனாகுலர் மீண்டும் வந்ததற்கு நன்றிகள்.
 
ப்ளாகர் சொதப்பி விட்டிருக்கிறது என்பதை இப்போதுதான் பார்த்தேன். நான் ஒரு முறை பதிந்ததை சொதப்பி அது இஷ்டத்திற்கு மாற்றிப் போட்டிருக்கிறது. இப்போது தான் சரி செய்தேன்.

கார்த்திக் எழுதிய பின்னூட்டம் காணாமல் போய்விட்டது.
கார்த்திக் சொன்னது இது தான். என் மின்னஞ்சலிலிருந்து பதிகிறேன்.
"நல்ல பதிவு! நன்றிகள்!"

பத்மா நான் கொஞ்சம் சுற்றி வளைத்து சொன்னதை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். இங்கே உடலுறவு என்பது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை தலைசுத்தும் விஷயம். என்னுடைய கோவம், கூப்பிடும் போதெல்லாம் படுப்பவள் மனைவி என்கிற தொனி ஒலித்த பத்தியைப் பற்றிதான். அவரவர்களின் உரிமைகள் என்பது அவரவர்களுக்கு. அடுத்தவர் அதில் தலையிடுதல் என்பது சகிக்கமுடியாதது.
 
நாராயணா, நாராயணா! இவங்க எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள்? ஆண்கள் பெண்கள் மேல் வைத்துள்ள இன்னொரு தவறான கணிப்பு இது. நாலு கல்யாணம் ஆன பார்ட்டிங்கள கேளுங்க.சோக கதைய சொல்வாங்க. நா சேம் சைடு கோல் போட மாட்டேன் :-)
 
Narayanan
Nice post,
I grew up with Ramayana and other methologis mosty hindu and greek.
If I am right, in Rajasthan and some other parts Sita gets more prominence than Rama ,in their folk songs. Sita is real woman unlike some who like to potray as a dumb slave of Rama. They also say since unlike other avatars Rama is very human he makes all the mistakes every human being makes and infact its a sad story.
BTW here in US most female right champions use Kali as their symbol
 
நாராயணன்

நல்ல பதிவு
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]