May 30, 2005

Hazaaron Khwaishein Aisi [2003]

"ஆயிரம் ஆசைகள் அவரவர்களுக்கு" என்று கொஞ்சம் லூசாக மொழிபெயர்க்கலாம். HKA ஒரு ஹிந்திப் படம். வழக்கமாக ஹிந்திப் படங்கள் 2 கதாநாயகர்கள், உலகம் சுற்றி பாடல்கள், கண்டிப்பாக ஒரு ஐட்டம் சாங் (இஷா கோபிகர், யானா குப்தா, மலாய்கா அரோரா, மீரா என ஐட்டம் சாங் நிபுணிகள் கூட்டம் தனி] இறுதியில், "மை துமே ஜிந்தா நஹி சோடுங்கா" என கத்திக் கொண்டு வில்லனைப் பார்த்து ஹீரோ துப்பாக்கியால் துவம்சம் செய்வது அல்லது காதலின் உச்சக்கட்ட உளறலாய் விட்டுக் கொடுப்பது என்று எண்ணெய் அதிகமான, ஆறிப் போன பீச் பஜ்ஜிப் போல இருக்கும். சடாலென சில படங்கள் திரும்பிப் பார்க்க வைக்கும் [பேஜ் 3, மை பிரதர் நிகில்] அந்த வரிசையில் HKAயையும் சேர்க்கலாம். படத்தின் பின்புலம் இதுவரை எந்த ஹிந்திப் படத்திலும் வராதது. வர்க்கப் போராட்டமும், எம்ர்ஜென்சி கால கட்டமும், நக்ஸல் எழுச்சியும், இளைஞர்களின் புரட்சி கனவும் அடங்கிய 1969 - 1975 காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. காதல், லட்சியம், கனவுக்கான போராட்டமாய் உருவாகியிருக்கிறது இந்த படம்.

சித்தாந்தங்கள் உருப்பெற்ற காலம். புரட்சிகரமான ஒரு கனவு எல்லா இளைஞர்களின் மனதிலும் இருந்த காலம். லட்சியவாதிகளும், சீர்திருத்த வாதிகளும், ஒரு கனவு தேசத்தினை நிர்மாணிக்க எதைவேண்டுமானாலும், இழக்க தயாராய் இருந்த காலகட்டம். இந்தியா என்னவாக உருமாறும் என்கிற தெளிவில்லாமல், நேருவின் சோஷலிச பாதையில் அதிருப்தியுற்று, கியுப விடுதலை, சீன வர்க்க எழுச்சி போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட கல்லூரி பல்கலைக் கழக மாணவர்கள் வாழ்ந்த காலக்கட்டம். இந்திராகாந்தியின் ஆட்சியில் இந்தியா திசை தெரியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்த போது, அடக்குமுறைகளை தாண்டியும், வர்க்கப் போராட்டத்தினை எதிர்த்தும் பல்வேறு சித்தாந்தங்கள் மேலெழும்பிய காலம். இரண்டு நபர்கள், ஒரு பெண், அவர்களின் பின்புலங்கள், அவர்களுகிடையே ஏற்படும் காதல், உணர்ச்சிகள், நக்சல் எழுச்சி, வர்க்கப் போராட்டம், அடித்தட்டு மக்களின் நிலை, இளைஞர்களின் புரட்சி கனவு, கனவின் முடிவு என நீளும் கதையின் முடிவு நெகிழ செய்வதாக இருக்கிறது.

கதை 1969-ல் ஆரம்பிக்கிறது. விக்ரம்,சித்தார்த், கீதா மூவரும் வசதியான குடும்பத்திலிருந்து டெல்லி பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள். சித்தார்த் இடதுசாரி கொள்கையுடையவன். நக்சல்பரி கொள்கையில் ஈர்க்கப்படுகிறான். புரட்சி வெடித்து, கனவு நிறைவேறும் என்று நினைப்பவன். கீதா ஒரு ஆந்திர செல்வந்தரின் பெண். லண்டனுக்கு சென்று படிக்கும் விருப்பமுடையவள். விக்ரம், ஒரு காந்தீயவாதி காங்கிரஸ் காரரின் மகன். பெரும் பணமும், அதிகாரமும் பெருவது தான் அவனின் குறிக்கோள். கீதா சித்தார்த்தினை காதலிக்கிறாள். ஆனால், சித்தார்த்தோ, லட்சியத்திற்காக, பீகாரில் இருக்கும் கிராமங்களுக்கு செல்கிறான். கீதா லண்டனுக்கு செல்கிறாள். விக்ரம் கீதாவினை காதலிக்கிறான். அனைவரும் பிரிகிறார்கள்.

வருடம் 1975. விக்ரம் ஒரு வளர்ந்து வரும் பிஸினஸ்மேனாக இருக்கிறான். ஒரு பார்ட்டியில் குடிகார ஐஏஎஸ் அதிகாரியான அருணை சந்திக்கிறான். கீதா அருணின் மனைவியாக இருப்பதை கண்டறிகிறான். அப்பார்ட்டியில், கீதாவையும் சந்திக்கிறான். உள்ளே இருக்கும் காதல் மீண்டும் துளிர்கிறது. கீதா, அருணை விவாகரத்து செய்கிறாள். கீதா அருணை விட்டு விலகுகிறாள். நடுகாட்டில் வசிக்கும் சித்தார்த்தினை தேடி போகிறாள். சித்தார்த் எங்கிருக்கிறான் என்பதை தன் ஆட்பலத்தினைக் கொண்டு விக்ரம் கண்டுபிடிக்கிறான்.

சித்தார்த்தோடு சேர்ந்து சித்தாங்களில் உந்தப்பட்டு, கீதா பீகாரின் அடித்தட்டு மக்களுக்கு பாடமெடுக்கிறாள். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. இந்தியாவில் எமர்ஜென்சி அமுலாகிறது. விக்ரம் அவ்வப்போது கீதாவினைப் பற்றி யோசிக்கிறான். பின் வேறொரு பெண்ணை மணம் செய்துக் கொள்கிறான். இந்தியாவெங்கும் நக்சல்பரிகள், கம்யுனிஸ்ட்டுகள், புரட்சிவாதிகள் என்று காங்கிரஸுக்கு எதிரானவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்படுகிறார்கள். கீதா தன் குழந்தையினை தன் பெற்றோரிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறாள்.

பீகாரில் போலிஸ் வேட்டை தொடங்குகிறது. நக்சல்பரிகளை தொடர்ந்து தாக்குகிறது. குழந்தையுடன் கீதாவும், சித்தார்த்தும் போலிஸ் துரத்தலினால் பிரிகிறார்கள். விக்ரமின் காந்தீயவாதி அப்பாவையும் கைது செய்கிறது போலிஸ். கீதாவையும், சித்தார்த்தையும் போலீஸ் கைது செய்கிறது. சித்தார்த்தின் கண் முன்னே கீதாவினை வன்புணர்கிறார்கள். அடித்தட்டு மக்கள் பெருமளவில் தாக்கப்படுகிறார்கள். சித்தார்த் சிறையிலிருந்து தோழர்கள் மூலம் தப்பி விடுகிறான். கீதாவின் நிலை விகரமிற்கு தெரிய வருகிறது.

தன் ஆட்பலத்தினை பயன்படுத்தி விக்ரம் கீதாவினை சிறையிலிருந்து வெளியேற்றுகிறான். சித்தார்த்தினை தேடும் பொறுப்பு வேறு வருகிறது. சித்தார்த் தப்பிப் போகும் போது போலீஸாரால் சுடப்பட்டு ஒரு மட்டரக மருத்துவமனையில் விலங்கோடு சேர்க்கப்படுகிறான். அவனை தேடிவரும் விக்ரம், லாரியோடு வீழ்ந்து அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். விக்ரமும், சித்தார்த்தும் ஒரே அறையில் சந்திக்கிறார்கள்.

ஆனால் விதி இங்கு விளையாடுகிறது. இரவு நக்சல்பரி தோழர்கள் சித்தார்த்தினை கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். காலையில் அவனை தேடும் போலிஸ் காணாமல் வெறுப்பேறி, விக்ரமினை கொன்று அவன் தான் சித்தார்த் என்று முடிவு கட்டும் நோக்கோடு அவனை வயல்வெளியில் தாக்குகிறார்கள். தாக்கும் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை, அதனால், கான்ஸ்டபிளின் இரும்புதடியால் மண்டையில் அடித்து கொல்ல முயற்சிக்கிறார்கள். அதற்குள் விக்ரமின் ஆட்கள் அங்கு வந்து அவனை காபாற்றுகிறார்கள். இந்த காட்சி நெஞ்சுறுக்க வைக்கிறது. செல்வ செழிப்பும், அதிகாரமும் பெற்ற ஒருவன் தன் உயிருக்காக, தான் சித்தார்த்தில்லை என்பதை ஒரு படிப்பறிவில்லாத பீகாரி கான்ஸ்டபிளுக்கு புரியும்படி கெஞ்சும் போது, உயிருக்குமுன் வேறெதுவும் பெரிதில்லை என்பது அப்பட்டமாக காட்சியாகிறது.

வீடு திரும்பும் விக்ரம் மண்டையில் அடிப்பட்டதால், மனநிலையை இழக்கிறான். இந்தியாவில் எமர்ஜென்சி நீக்கப்படுகிறது. சித்தார்த் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான். விக்ரம் காணாமல் போய்விடுகிறான். சித்தார்த்தின் கடிததோடு படம் முடிகிறது. சித்தார்த் விக்ரம் எங்கிருப்பான் என்று வாய்ஸ் ஓவரில் சொல்கிறான். அது அவர்கள் மூவரும் சந்தித்த ஏரிக்கரை. அங்கு போகும் கீதா, அவனருகில் கீழே ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறாள். ஐ லவ் யூ கீதா என்கிற கிறுக்கலுடன், மண்டையில் கட்டுப் போட்டு வெறித்தப் பார்வை பார்த்திருக்கும் விக்ரமினை நெஞ்சோடு அணைக்கிறாள் படம் முடிக்கிறது.

எல்லோரின் கனவுகளும் சிதைந்து போய்விட்டன என்பதை சூட்சுமமாக விளக்குவதோடு படம் முடிகிறது. படமுழுக்க கூர்மையான வசனங்கள். நையாண்டிகள். எள்ளல்கள். உதா. சித்தார்த், கீதா, விக்ரம் அனைவரும் ஒரு ஏரிக்கரையில் பியர் குடிக்கிறார்கள், நக்கலாக விக்ரம் சொல்லும் வசனம் "For Revolution"

சித்தார்த் [கேகே மேனன்], விக்ரம் [ஷைனி அஹூஜா], கீதா [சித்ரங்கடா சிங்] மூவருமே நன்றாக உணர்ந்து செய்திருக்கிறார்கள். சித்ரங்கடா சிங் சில கோணங்களில் சுமிதா பட்டேலை நினைவுறுத்துகிறார். சரியாக பயன்படுத்தினால் கொங்கனா சென் போல ஒரு நல்ல நடிகை இந்திய திரைக்கு கிடைப்பார். ஷைனி அஹூஜா மிரட்டியிருக்கிறார். ஏற்கனவே சின்ஸ் [Sins] என்கிற பாலியல் பாதிப்பில் உண்டான படத்தில் நடித்து பரபரப்பினை கிளப்பியவர். கேகே மேனன் ஆழமாய் ஒரு நக்சல் பரியின் கனவினையும், வாழ்க்கையையும் கண்முன் நிறுத்துகிறார். கடைசியில் வந்தாலும் செளரவ் சுக்லா [ஹேராம் லால்வானி ஞாபகம் வருகிறதா. வழுக்கை தலையர்] ஒரு படிப்பறிவில்லாத மூர்க்கமான பீகாரி கான்ஸ்டபிளை கண் முன் நிறுத்துகிறார். மொத்தத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு ஹிந்தியில் ஒரு ஆழமான படம்.

12 உலக விழாக்களில் காண்பிக்கப்பட்ட படமிது. இந்தியாவில் எம்ர்ஜென்சி / நக்சல் பாரம்பரியம் பற்றிய படங்கள் குறைவு. இந்த படத்தில் காந்தி / இந்திரா காந்தி /நேருவுக்கு எதிரான வார்த்தைகள் வருகின்றன. இன்று அறிவுஜீவி மட்டத்தில் மட்டுமே தெரிந்திருக்கும் சாரு மஜும்தார் பற்றிய வசனங்கள் வருகின்றன. கால் சென்டரில் வேலை செய்யும் ஏதேனும் இளைஞனைக் கூப்பிட்டு சாரு மஜூம்தார் பற்றிக் கேளுங்கள், அவர் ஏதாவது மராட்டி நடிகரா என்கிற கேள்வி வரும். இந்தியாவின் அத்தியாவசிய பிரச்சனைகளையொட்டிய ஹிந்திப்படங்கள் மிகக்குறைவு. இந்த படமாதிரி ஏதாவது வந்து மனசினை கொஞ்சம் ஆற்றும்.

இந்த மாத காலச்சுவட்டில் [ஜுன்] கூட அம்ஷன் குமார் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம், திராவிட பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினை அடிப்படையாக வைத்த ஒரு படமும் இல்லை என்பது தான். வர்க்கப் போராட்டத்தினை சரத் / பார்த்திபன் நடித்த அரவிந்தன் என்கிற படம் ஒரளவுக்கு தொட்டிருக்கும். ஆண்டே,அடிமைத்தனத்தினை வாட்டக்குடி இரணியனில் சொல்லியிருப்பார்கள். இதுதாண்டி, மணி ரத்னத்தின் இருவரில் கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்காது. இன்னமும், தமிழ்ப்படங்கள் தமிழ் மண்ணின் போராட்டங்களின் பின்புலத்தில் படங்கள் செய்ய ஆரம்பிக்கவில்லை.

தமிழில் நக்சல், வர்க்கப் போராட்டம் என்று சொன்னால், உடனே நினைவுக்கு வருவது தியாகுவின் ஜு.வியில் தொடராக வந்த "சுவருக்குள் சித்திரங்கள்" இது தாண்டி, நக்சல்பரிகளா, தனிநாடு போராளிகளா என்கிற ஒற்றை வித்தியாசத்தில் ஞானியின் "தவிப்பு" [ஆனந்த விகடனில் தொடராக வந்தது] போன்றவை நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திர நக்சல் தலைவராக அறியப்பட்ட சீதாராம கொண்டைய்யா சரணடைந்தார். கனவு நிறைவுற்றுவிட்டதா அல்லது அவர் சோர்ந்து விட்டாரா. சொல்ல தெரியவில்லை. காதல் அலை ஒய்ந்து, இளமையலை [பதின்ம வயது காதல், உடல் சார்ந்தியங்கும் பருவ காதல்கள்] அடித்துக் கொண்டிருக்கிறது. நல்ல படங்கள் வருமென்ற நம்பிக்கையுடன்.


பார்க்க: படத்தின் தளம் | ரெடிப் செய்தி | ஐஎம்டிபி

கொசுறு: நான் இந்த படத்தின் டிவிடி எடுத்தவுடன், கடைக்காரர் ரகசியமாய், நாளைக்கு கொடுத்துடுங்க சார் மறக்காம என்றார். என்னய்யா விஷயமென்றால், மணி ரத்னம் இந்த படத்தினை கேட்டிருக்கிறார். ஆக, நான் படம் பார்த்த பிறகுதான் மணி ரத்னம் பார்க்க போகிறார் ;-) மணி இந்த படத்தினைப் பார்த்து தமிழ்நாட்டு பின்புலத்தில் தமிழக மண்ணில் நடந்த ஏதேனும் பிரச்சனைகளையொட்டி படமெடுத்தால் நன்றாக இருக்கும். எஸ்.ரா வேறு கதை வசனமெழுதுகிறார் என்கிறார்கள். பார்ப்போம்.

Comments:
கதையைச் சொல்லிவிட்டதற்காக யாரேனும் பாயுமுன்னால் - என்னைப் போன்ற ஆத்மாக்களுக்கு இப்படிக் கதை கேட்பதுதான் லாயக்கு. இல்லையென்றால் நானெல்லாம் எந்தக் காலத்தில் மக்தலீனாவையும் இதையும் பார்க்க!

தமிழில், என்னத்துக்கு வம்பு என்று இருப்பவர்களால் வேறு என்ன மாதிரிப் படங்களை எடுக்க முடியும்?!
 
அதாவது தமிழ் திரைப்பட உலகத்தில் திராவிட இயக்கத்தினர் இவ்வளவு காலம் ஆட்சி செய்து தமிழ்நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் வரைக்கும் இருந்தாலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திரைப்படங்களில் தொடக்கூட இல்லை என்று சொல்கிறீர்கள்.
அதனையும் திரைப்படத்தில் காட்ட வேண்டுமென்றால் பார்ப்பனர்களைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். பார்ப்பனர் காட்டவில்லை என்றால் திட்டவும் செய்கிறீர்கள்.
 
நாராயண் : இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. [எமர்ஜென்ஸியின் போது தாண்டிக் குதித்த இளந்துருக்கியர்கள் எல்லாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்ததுதானே] ஆனால், படமாக்கம் எப்படி இருக்கிறது என்பதற்காகவாவது பார்க்கத்தான் வேண்டும். பன்ட்டி அவுர் பப்லி தான் உடனே பாத்தாகணும் :-)

வர்க்கப் போராட்டங்களை வைத்துப் படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. ஸ்ரீதர்ராஜன் இயக்கிய "கண்சிவந்தால் மண் சிவக்கும்" என்ற படம் சட்டென்று நினைவுக்கு வந்தது. இராம.நாராயணனை ஒத்துக் கொள்ளுவீர்கள் என்றால், 'சிவப்பு மல்லியையும்' சேர்த்துக் கொள்ளலாம்.

மணிரத்னத்துக்கு ஆசை வந்துடுச்சாமா? அது சரி..ஆய்த எழுத்து சுட்ட வடு இன்னமும் ஆறியிருக்காது. அதனாலே இந்தப் பக்கம் வரமாட்டார். :-)
 
நாராயணன், இரண்டு ஆங்கில விவரணங்கள் வந்திருக்கின்றன.

ஒன்று, Weather Underground; மற்றது அண்மையிலே மீள ஒரு விவரணமாக எடுக்கப்பட்ட, Patty Hearst இன் கடத்தல் குறித்த Symbionese Liberation Army உடன் சம்பந்தமான விவரணம் (American Experience: Guerrilla: The Taking of Patty Hearst)

இவை இரண்டும் இவ்வாறு கனவு சிதைந்ததைச் சொல்லும் அமெரிக்கப்புலத்திலே நிகழ்ந்த விவரணங்கள். எப்போதோ பார்த்த மலையாளப்படமொன்றும் இத்தகைய கனவு சிதைந்த கதையைச் சொல்லும். ஸ்ரீதரன் என்ற பொதுவுடமைக்காரர் பாத்திரத்தூடாக. அடூர் கோபாலகிருஷ்ணனுடையது என நினைக்கிறேன் (மூகாமுகம்?)

இலங்கையிலே இப்படியான படங்களை எடுப்பின், கதை சொல்லக்கூடிய எத்தனையோ eprlf, eros, plote இலே இருந்தவர்கள் இருக்கின்றார்கள்.

Volker Schlöndorff இன் Die Stille nach dem Schuß [The Legends of Rita] (2000) இனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

Peter's Friends, The Big Chill ஆகியவையும் ஓரளவுக்கு (அரசியல் குறைவான அளவிலே) இத்தகைய படங்களுடன் சேர்த்துப் பார்க்கக்கூடியவையே.
 
ஜெமினியின் ஜீஜீ வழி மருமகனின் "கண்சிவந்தால் மண் சிவக்கும்" இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் (மண்டைக்காடு சம்பவம்??) இன் பெயர்ப்பே. இரண்டு ஆண்களிருந்தால், எடுபடாதென்பதாலே, ராஜேஷுடன் பூர்ணிமா ஜெயராம்-பாக்கியராஜ் சேர்ந்துகொண்டார்.

சிவப்புமல்லியின் "கன்னம் இரண்டும் சந்தனக்கிண்ணம்" ஒரு காலத்திலே மிகவும் பிடித்துப்போய் வாயிலே கணமும் நின்றாடிக்கொண்டிருந்தது. இப்படியான படமெடுத்தவர் இப்போது, காளி, கரப்பான் என்று நின்றாடுகின்றார் என்கிறார்கள் (பார்க்கவில்லை).
 
நாராயண்:

இந்தப் படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! நான் எனது இந்தி நண்பர்கள் சிலரிடம் விசாரித்தேன். அறிந்திருக்கவில்லை. ஆனாலும் பார்த்துவிடுவேன். அப்போது பிடித்திருந்தால், குட்டி இளவரசனுக்காக மித்தாக்ஷி நன்றி சொல்வது போல, இன்னும் சில புத்தகங்களுக்காக சிலருக்கு நான் காலமெல்லாம் நன்றியறிதல் போன்று உங்களுக்கும் நன்றியுடையவனாய் இருப்பேன். :)

நிற்க.
தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள் படித்திருக்கிறீர்கள். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் அதுவும் ஒன்று. தியாகு எவ்வளவு நேர்மையாகவும், படிப்பவர்களது மனதுக்கும் அறிவுக்கும் புரியும் படியும் எழுதியிருப்பார்.

நான் அடிக்கடி அந்தப்புத்தகத்தையும், தியாகுவையும் நினைவு கூர்வேன். சுயானுபவம் எதுவுமற்ற, வெறும் கற்பிதம் ஒன்றை நம்புகிற, சொல்லிவிட்ட காரணத்துகாகவே வறட்டுத்தனமாய், பிடிவாதமாய் எந்த நிலையிலும் அதைப் பிடித்து தொங்கிக்கொண்டு மாற்றத்தை கண் கொண்டு பார்க்கவும் மறுத்து யாராவது கத்திக்கொண்டிருக்கும் போது (வலை உலகிலும்) நான் தியாகுவை நினைப்பேன். ஒரு கொள்கை, நம்பிக்கையை உண்மையென, மக்களை விடுவிக்கும் என நம்பி அதற்காக மக்களிடம் உழைத்து, அதனால் தூக்குதண்டனை வரை சென்ற ஒருவர் அந்த நம்பிக்கைக்காகவே எஞ்சிய காலத்தையும் கழித்து அதன் கனவிலும் பெருமிதத்திலும் உயிர் விடுவது இயல்பு, எளிது. ஆனால் எல்லா காலங்களிலும், நேர்மையாக தனக்கு உண்மையாக, மாற்றத்தை (அதுவும் உயிரையே விலையாகக் கொடுத்து வாங்கிய கொள்கையாய் இருந்தபோதும்) எப்போதும் ஒரு பற்றற்ற, உண்மையைத் தேடி அதைவாழ முயற்சி செய்யும் தியாகுவை நினைத்துக்கொள்வேன். உண்மைக்காக்க அதிஉயர் தியாகத்தையும் துறப்பதற்கு எவ்வளவு மனத்தின்மையும், உண்மையின் பேரில் விருப்பமும் இருக்கவேண்டும்?

நன்றிகள், அந்தப் புத்தகத்தை நினைவு கூர்ந்தமைக்கு.

திராவிட இயக்கங்களின் சில போராட்டங்களை, சரியான முறையில் அதன் வெற்றி தோல்விகளோடு அடுத்தத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல மறந்ததுதும் அவ்வியக்கங்கள் மக்களிடமிருந்து விலகிவருவதை குறிப்பது தான்.
 
/இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் (மண்டைக்காடு சம்பவம்??)//

ஆமாமாம்.. 'விடிவதற்குள் வாவெல்லாம்' ஞாவகத்துக்கு வந்துருமா :-)
 
தெளிவான பதிவு. நன்றிகள் நாராயணன்.
 
நரேன், படம் குறித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். படத்தைப் பார்க்க முயல்கின்றேன்.
 
நாராயணன்,நீங்கள் சொன்ன படக்கதைமாதிரியேதாம் நானுமொரு படத்தை ஜேர்மனியத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.இது ஜேர்மனிய மொழியில் மாற்றப்பட்ட கீழத்தேயப்படமாக இருக்கவேண்டும்.படத்தினது பெயர் ஞாபகமில்லை.நீங்கள் குறிப்பிட்ட படம் நிச்சியமாக இந்தப்படத்தின் திரைக்கதையையொட்டியே வருகிறது.பலபடங்களைப்பார்க்கிறோம் ஞாபகமில்லை.இந்தக் கந்திப்படத்தை ஜமுனாராஜேந்திரன் பார்த்தால் அதன் அசல் தன்மையையும்-நகலையும் நிச்சியம் கண்டுபிடிப்பார்.
 
இதைப் படித்தவுடன் எனக்கு ர.சு.நல்லபெருமாள் அவர்கள் எழுதிய போராட்டங்கள் என்ற நெடுங்கதைதான் நினைவிற்கு வந்தது.
 
சுந்தரவடிவேல், சூச்சூ, பிரகாஷ், ரமணீ, தங்கமணி, பாலாஜி-பாரி, டிசே, ஸ்ரீரங்கன், பாலராஜன்கீதா - நன்றிகள்.

பிரகாஷ், ரமணீ - கண் சிவந்தால் மண் சிவக்கும், சிவப்பு மல்லி போன்ற படங்களை ஒத்துக் கொள்கிறேன். அதுவும், இளமைக்கால சந்திரசேகர், சிவப்பு மல்லியில் கொஞ்சம் அழகாவே இருந்தார். முகாமுகம் பற்றி தெரியவில்லை. ஆனால், அடூரின் மதிலுகள் படத்தில் பொதுவுடமை கொள்கைக்காக, காலில் சங்கிலி கட்டி அழைத்துவரப்படும் முரளி [மலையாள முரளி, டும் டும் டும், ஜோதிகா அப்பா] கொஞ்சமாய் கண்முன் நிறுத்துவார்.

ஆனால், நான் கேள்விப்பட்ட எல்லா ஹிந்திப்படம் பார்க்கும் மக்களும், இந்த படத்தினை ஒதுக்கிவிட்டார்கள். அவர்களுக்கு இன்றைய தேவை ஷாருக்கானின் பஹேலி அல்லது பிரகாஷ் சொன்னது போல ஜுனியர் பி நடித்த பண்டி அவுர் பப்லி [தலைவா உண்மைய சொல்லுங்க, நீங்க ஒதுங்கறது ராணி முகர்ஜிக்கு தானே ;)]

தங்கமணி, தியாகுவின் தியாகங்கள் மிகப் பெரிது. சும்மா ஆங்கில விளம்பரபலகைகளுக்கு பெயிண்ட் அடிக்காமல், அம்பத்தூரில் தாய் தமிழ்பள்ளிகள் நடத்தி வருகிறார். போன பிறந்தநாளின் போது கமல் கூட ஏதோ தொகை கொடுத்து உதவியிருக்கிறார். ஒரு கனவினில் உத்வேகம் பெற்று, கனவினை மெய்ப்பிப்பதற்காக போராடி, வென்று பின் அந்த கனவினையை விவாத பொருளாக்கும், கேள்விக்குட்படுத்தும் கம்பீரமும், நேர்மையும் என்றைக்கும் என்னை கவரும். குமுதம் போன்ற இதழ்கள், தேவையில்லாமல், தியாகுவின் தனிப்பட்ட வாழ்வினை கிளறுவதன் பிண்ணணி [பாடலாசிரியர் தாமரையை மணம் செய்து கொண்டதும், முதல் மனைவியை தள்ளி வைத்ததும்] நீங்கள் அறிந்ததே.

சூச்சூ, நான் எங்குமே பார்ப்பனர்கள் என்று சொல்லவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தால் நான் என்ன செய்யமுடியும்.

இவையெல்லாம் தாண்டி, நான் எழுத மறந்தது, நக்சல் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை தன் காலில் சலங்கையோடும், கையில் சப்பளா கட்டையோடும், ஆந்திரா முழுவதும் பயணம் செய்து பாடல் பாடி, ஆடி பரப்பியவர் கத்தார். கத்தாரின் பாடல்கள் இணையத்திலிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், எப்போதோ, மொழி புரியாமல் கேட்ட சில பாடல்களின் தொனி இன்னமும் காதிலிருக்கிறது. ஒரு கனவுக்காக வாழ்வினை அர்ப்பணிப்பவர்கள் இயக்கவாதிகள் மட்டுமல்ல, கத்தார் போன்ற சில கலைஞர்களும் கூட.
 
நாராயணன், வழக்கம் போல கலக்கியிருக்கிறீர்கள். ஆனால்..//மணி இந்த படத்தினைப் பார்த்து தமிழ்நாட்டு பின்புலத்தில் தமிழக மண்ணில் நடந்த ஏதேனும் பிரச்சனைகளையொட்டி படமெடுத்தால் நன்றாக இருக்கும்// ஏன் இந்த கெட்ட எண்ணம்? பம்பாய் மதகலவரம் முதல் ஈழம் வரை இந்த ஆசாமி ரேப் செய்த பிரச்சனைகள் போதாதா?
 
நன்றிகள் நாராயணன்.
 
நன்றிகள் வசந்த், கார்த்திக். வசந்த், மணி எப்படி படமெடுக்கிறார் என்பது முக்கியமேயில்லை என்னைப் பொறுத்தவரை. ஆனால், ம்ணி படம் எடுத்தால் விமர்சிக்க, கலாய்க்க, வாழ்த்த என்று ஒரு பெரும் கூட்டம் வரும். பிரச்சனைகள் வெளியே தரும். மணி அபத்தமாக பிரச்சனைகளை கையாண்டாலும் பரவாயில்லை. பிரச்சனைகளைப் பற்றிய பிரக்ஞையாவது வருவதற்காகவே மணியை படமெடுக்க சொல்வது.
 

Peculiar article, just what I was looking for. itunes account login
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]