Jun 20, 2005

பள்ளிகள் சொல்லும் தீண்டாமை்பள்ளிகள்ப

பள்ளிகளும், நவீன சமூக தீண்டாமையும்

தீண்டாமை ஒரு பாவச் செயல்.
தீண்டாமை ஒரு சமூக குற்றம்

என்றெல்லாம், தமிழ்நாட்டின் எல்லா பாடப் புத்தங்களின் முதல் மூன்று பக்கங்களுக்குள் அச்சிடப்பட்டிருக்கும். சாதீய ரீதியிலான தீண்டாமை இன்னமும் வேரூன்றியிருக்க, இன்னொருவிதமான தீண்டாமை தமிழ்நாட்டில் இப்போது பரவலாக புக ஆரம்பித்திருக்கிறது. அது பாவம் எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்/ சிறுமியர்கள். இவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இவர்களுக்கான கிருமிகள் கருவிலிருந்தே பரவியிருக்கக்கூடும். வெகு அபூர்வமாக, ரத்த மாற்றின் மூலம் இடம் பெயர்ந்திருக்கலாம். எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்/சிறுமியர்களை பள்ளிக் கூடங்களில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று நிறைய பள்ளிக் கூடங்கள் முடிவெடுத்திருக்கின்றன.

இதைப் பற்றி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு செவ்வி வந்திருக்கிறது. திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி நினைவு இடைநிலைப் பள்ளியின் முதல்வர் திரு. பத்மநாபன் 4 எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை [மணிகண்டன் (8), சவடமுத்து (10), மோகன் (5) புகழேந்தி (4)] பள்ளியில் சேர்க்கமுடியாது என்று சொல்லிவிட்டார். இத்தனைக்கும், பத்மநாபன் நிறைய எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தியவர். இது ஒரு முக்கியமான பிரச்சனை. தமிழகம், இந்தியாவிலேயே முதன்மையான எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மாநிலம். நாமக்கல், மதுரை, திண்டுக்கல் போன்ற பெருநகரங்களில் 10,000 க்கும் அதிகமான எய்ட்ஸ் பாதிப்பாளர்கள் உள்ளார்கள். இது வளர்ந்த ஆண்/பெண் மட்டுமான புள்ளிவிவரங்களில்லை. இதில், புகழேந்தி போன்ற நான்கு வயது சிறுவர்களும் அடங்குவார்கள்.

இறுதியான தீர்வேதுமில்லாத பட்சத்தில், எய்ட்ஸின் முடிவு மரணம் மட்டுமே. அப்படியிருக்கையில் கொஞ்ச நாளே வாழப்போகும் இப்பிஞ்சுகளின் வாழ்வினை அடிப்படையாகக் கொண்டாவது அரசு இவர்களுக்கான மாற்று திட்டங்களை முன் வரைய வேண்டும். அவர்களையும், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாட படிக்க அனுமதிக்க வேண்டும். எய்ட்ஸ் கிருமியானது, தொட்டாலோ, பழகினாலோ, ஒன்றாக குளித்தாலோ வராது என்பது அறிவியற்பூர்வமாக நிச்சயிக்கப்பட்ட உண்மை. இக்குழந்தைகள் ரத்தமாற்றம் செய்யப்போவதில்லை. உடலுறவு செய்தல் இயலாது. பிற போதையூசிகள் பழகக்ங்கள் ஏற்படப்போவதில்லை. அப்படியிருக்கையில் என்ன காரணங்களினால், இக்குழந்தைகள் பிற குழந்தைகளோடு ஒன்றாக பள்ளியில் சேர்ந்து படிக்கக் கூடாது என்று எனக்குப் புரியவில்லை. திரு. பத்மநாபன் சொல்லும் காரணம் மிக பலவீனமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாடும் போது அடிப்பட்டால் அதன் மூலம் பரவும் வாய்ப்புகளிருக்கிறது என்கிறார். அக்குழந்தைகளுக்கு அறிவுறுத்தினால் போதும், கேட்டுக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. கீழே விழுந்து அடிப்பட்டால், எச்சில் தொட்டு குழந்தைகள் தடவும், அவ்வளவே. இதனையும் முறையாக சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் கேட்டுக் கொள்ளப்போகிறார்கள். அதை விடுத்து, அவர்களை பள்ளியிலேயே சேர்க்க மாட்டேன் என்று சொல்வது, அவர்களை தனிமைப்படுத்துதலாகிவிடும். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் மனநிலையினை அணுகுவது எளிதான விஷயமல்ல.

அரசு உடனே தலையிட்டு இதற்கான தீர்வினை கண்டறியவேண்டும். இதனை பரவலாக்கல் மிக முக்கியம். இது நான்கு குழந்தைகளைப் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு பெரிய சமூக பிரச்சனையின் ஆரம்ப அடித்தளம். இது கண்டிப்பாக இந்தியா முழுக்க விரிவாகும். இந்தியாவிலேயே தமிழகம்தான் எய்ட்ஸில் முதன்மையான மாநிலம் என்பது கூட என்னளவில் ஒரு ஒப்புமையே. ஏனெனில் சரியான புள்ளிவிவரங்கள் வடமாநிலங்களில் கிடைப்பதில்லை. கொஞ்ச நாளைக்கு முன்பு வடகிழக்கு இந்தியாவில் பாதுகாப்பிலிருந்த நிறைய ராணுவ வீரர்களுக்கு எய்ட்ஸ் கிருமிகளின் பாதிப்பு இருந்தது இந்தியாவில் அதிர்ச்சியலையை உண்டாக்கியிருந்தது. இதே நிலை இந்தியா முழுக்க இருக்கிறது. இந்நிலையில், "எய்ட்ஸ் அநாதைக் குழந்தைகள்" என்றொரு பரிதாபகரமான சமூக வெளி உருவாகும். ஏற்கனவே ஆப்ரிக்காவில் இது ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதையெப்படி நாம் கையாளப் போகிறோம் ?

Jun 12, 2005

பைனாகுலர் 10350

ஜின்னா பாய்!!

ஒரு வழியாக எதிர்பார்த்தது போல அத்வானி மீண்டும் பா.ஜ.க தலைவராக இருக்க சம்மதித்து தன் ராஜினாமாவினை வாபஸ் வாங்கிவிட்டார். சங் பரிவார், விஹெச்பி கும்பல்கள், பா.ஜ.கவின் புதிய "ஜின்னா பற்றிய அறிக்கையினைக் கண்டு சந்தோஷப்பட்டு தங்கள் ஆதரவினை அளிப்பதாகக் கூறி கடந்த 4-5 நாட்களாக, செய்தித்தாள்களுக்கு போட்டிருந்த தீனியில் மண்ணள்ளிப் போட்டார்கள். பா.ஜ.க வும் தன் பங்குக்கு அத்வானி, ஜின்னாவினைப் பற்றி சொன்ன வார்த்தைகளை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை தங்களின் அறிக்கையின் மூலம் வெளியிட்டு, மக்களை தெள்ளத் தெளிவாக சிந்திக்க வழி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான ஜின்னா, முஸ்லீம் லீக்கின் தலைவர், பாகிஸ்தானை பிரித்தவர், பிரிவினைவாதி என்றெல்லாம் இன்றைக்கும் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பு வருகிறது. நடந்தது என்ன? யார் பிரிவினைவாதத்தினை உண்மையிலேயே உண்டாக்கினார்கள் என்று கொஞ்சம் வரலாற்றினை பின்நோக்கிப் பார்த்தோமானால், உண்மைகள் வெட்ட வெளிச்சமாகலாம். 1946 வரை முஸ்லீம் லீக் கேட்டது, இந்தியாவில் சிறுபான்மையினராய் இருக்கும் முஸ்லீம்களுக்கு, தனி அரசியல் சலுகைகள் (constitutional rights) தரப்படவேண்டும் என்பதுதான். தனி நாடு என்கிற கோரிக்கை எழவில்லை. ஆனால், இதை முழுக்க முழுக்க சொதப்பியது நேருவும், சர்தார் வல்லபாய் படேலும் தான். அவர்களுக்கு முஸ்லீம்களுக்கு தனிப்பட்ட அரசியல் சமூக சலுகைகள் வழங்குவதில் உடன்பாடில்லை. இழுத்தடித்து, இழுத்தடித்து, 1930களின் பிற்பகுதியில் தேர்தலில் வெற்றிக் கொண்டு வந்த ஒரு மாநிலத்திலும், முஸ்லீம்கோடு முன்பு செய்த யோசனைகளைக் காற்றில் பரக்கவிட்டு ஏமாற்றினார்கள். இந்தியா பிளவுண்டதற்கான மிக முக்கியமான காரணம் காங்கிரஸும், நேருவும் தான். வெறுத்துப் போன ஜின்னா, பின்னாளில் முஸ்லிம் த்தோ முஸ்லீம் லீக் மேய்ன் ஆ! [முஸ்லீமாய் இருந்தால், முஸ்லீம்லீக்கோட்டு சேருங்கள்] என்ற கோஷத்தினை எழுப்பி, தனிநாடுக் கேட்டு, பாகிஸ்தானின் முதல் பிரதமராய் இருந்து காசநோய் வந்து செத்துப் போனார். இன்றைய சென்னை பதிப்பு டெக்கான் கிரோனிகளில் இதுப் பற்றிய முழு செய்தி வந்திருக்கிறது.

இது தாண்டி, An autobiography of an unknown indian [by Nirad C. Chaudhuri] என்கிற புத்தகம், நாம் பள்ளியில் படித்த சுதந்திரப் போராட்டத்தினை தாண்டி, கண் முன் நடந்த உண்மைகளை அப்பட்டமாக விவரிக்கும். நிராத் செளத்ரி காந்தியினை முற்றுமுதலாய் நிராகரித்தவர். காந்தியினை எதிர்த்துப் பேசினாலே தேச துரோகம் மஹா பாபம் என்று நினைக்கும் நாட்டில் காந்தியின் எளிமைக்காகும் செலவினை எள்ளலாய் சொன்னவர். காந்தியையும், நேருவினையும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பார்த்து விமர்சித்து எழுதியவர். கொஞ்ச நாளைக்கு முன் பத்ரியின் பதிவில் இடம்பெற்றிருந்த திரு.கல்யாணத்தின் பதிவின் பின்னூட்டத்திலும் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். இது தாண்டி, காங்கிரஸ் சுதந்திர இந்தியா என்று பேச்செடுத்ததே 1930க்கு பின்தான், அதுவரை அவர்கள் சுயாட்சி உரிமை என்கிற அளவில் தான் இருந்தார்கள். ஜின்னா பிரிவினைவாதி என்றால், ஜின்னாவினை பிரிவினைக்கு தள்ளிய நேருவினை என்ன சொல்வீர்கள் ?

பார்க்க - நிராத் சொளத்ரியின் புத்தகம் | ஹிந்துவில் வந்த சொளத்ரியின் நேருப் பற்றிய குறிப்பு

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

சுஜாதா இப்போது ஒவர் டைம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விகடனில் ஏற்கனவே எழுதும் கற்றதும் பெற்றதும் தாண்டி, இந்த வாரம் குமுதத்திலும் கேள்வி-பதில் பகுதியொன்றை தொடக்கியிருக்கிறார். குமுதம் என்னென்னமோ செய்கிறது. பாவம் NRS கவலைப் போட்டு ஆட்டுகிறது. விகடனில் ரஜினிப் பற்றிய தொடர் வந்தால், குமுதத்தின் ஜவஹர் பழனியப்பன், ரஜினியின் வீட்டுக்குப் போய் பேட்டியெடுக்கிறார். விகடனில் யுக பாரதியா, குமுதமில் நா. முத்துக் குமார். விகடனில் எஸ்.ராவா, குமுதமில் ஜெயமோகன். இதற்கு நடுவில் 600% வளர்ச்சி [?!!] பெற்று இந்தியாவின் நேஷ்னல் ரீடர்ஷிப் சர்வேயில், "பெஸ்ட் கண்ணா பெஸ்ட்" குங்குமம் நான்காவது இடத்திலிருக்கிறது [55.71 இலட்சம் பிரதிகள்], குமுதம் ஐந்தாவது இடத்திலும் [46.64 இலட்சம் பிரதிகள்], ஆனந்த விகடன் பத்தாவது இடத்திலும் [27.41 இலட்சம் பிரதிகள்] இருக்கிறது. அடுத்தமுறை யாராவது இலவசமாக ஷாம்பூ, சாக்லெட்டுகள் கொடுத்து சினிக்கூத்தினையும், ஜெமினி சினிமாவையும் ஏற்றிவிட்டால் புண்ணியமாக போகும்.

பார்க்க - NRS முடிவுகள்

பாதாளச்சிறையில் 20 வருடங்கள்

சமீபத்தில் படித்து நெகிழ்ந்தது தாஹர் பென் ஜெலோன் எழுதி இம்பேக் டப்ளின் என்கிற இலக்கிய விருதினைப் பெற்ற This Blinding Absence of Light என்கிற புத்தகத்தினைப் பற்றி சாரு நிவேதிதா தன் கோணல் பக்கங்களில் எழுதி இருந்த சுருக்கமான தொகுப்புரை. புத்தகம் படிக்கவில்லையாயினும் இந்த தொகுப்புரையினைப் படித்தவுடன் மனம் கனத்துப் போனது. இருபது வருடங்கள், பாலைவனத்தில் தரைக்கடியில் இருக்கும் பாதாளச்சிறையில், துணையேதுமில்லாமல் இருந்த அரசியல் கைதிகளை சுற்றி சுழலும் உண்மை சம்பவம்.ஆழமான, நம் தர்க்கரீதியான வாழ்வின் சாரங்களைச் சற்றே அசத்திப் பார்க்கும் புத்தகம்.

பார்க்க - சாருவின் தொகுப்புரை | அமெசானின் புத்தகம்

அப்துல் பாய்!!

இங்கே முக்கியமான செய்தி எங்களுடைய அலுவலகத்தினை ஒரு புதிய இடத்திற்கு [தி.நகர்] மாற்றி விட்டோம். விஷயம் அதுவல்ல. நாங்கள் குடியேறியிருக்கும் வீட்டுக்கு சொந்தகாரர் சென்னையின் இஸ்லாமிய கோடிஸ்வரர்களில் ஒருவர். அவருக்கு இதுபோல 150-200 அபார்ட்மெண்ட்கள் சென்னையிலுண்டு. இத்தனை வீடுகளையும் நிர்வகிக்க, வாடகை வசூலிக்க, இன்ன பிற காரியங்கள் பார்ப்பதற்காகவே கல்லூரி சாலைக்கு அருகில் ஒரு தனி அலுவலகமே இயங்குகிறது. சில சட்டரீதியான டாக்குமெண்டுகளைப் பெறுவதற்காக அவ்வலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. நான் பேசிய அலுவலரும் ஒரு முஸ்லிம். அவரின் அறையில் "ட்சுனாமி இறைவன் அளித்த தண்டனை. குற்றமிழைத்ததர்கான பலன்" என்கிற ரீதியில் ஒரு செய்தித்தாளில் வந்த கட்டுரையினை நகலெடுத்து ஒட்டி வைத்திருந்தார். இணையம், நோக்கியா கம்யுனிக்கேட்டர், இனோவா கார் எல்லாம் இருந்தும் இன்னமும் நிறைய மக்கள் மாறவேயில்லை. எங்கே போய் முட்டிக் கொள்ள!

Jun 9, 2005

கடவுளும், சிகரட்டும் - 2 கவிதைகள்

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் மிக நெருக்கமாகவும், பொருட்செறிவுடனும், காட்சியமைப்பாகவும் தோற்றமளித்தவை இந்த இரு கவிதைகள். முதல் கவிதை கடவுளின் நிலையைப் பற்றி பேசுகிறது. கடவுள் தான் ஜாதிகளை உருவாக்கினார் என்கிற உடைந்த கட்டுமானமும், அப்படி செய்ததற்கு ஈடாக இப்போது பறையடித்து பிராயசித்தம் தேடிக் கொண்டிருக்கிறார் என்ற முடிவும், கடவுள்தன்மை என்பது மனிதத்தன்மையே, சக மனிதனுக்கு ஆதரவாய் மனிதனாக இருப்பதே என்பதே அழகாக விளக்குகிறது ஆதவன் தீட்சண்யாவின் கவிதை. ஆதவன் தீட்சண்யா சமீப காலங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நபர். தலித் வெளியில், ரவிக்குமார் போன்றவர்கள் பெரியாரின் இருப்பினையும், தலித்-பெரியார்-மீட்சி சூழற்றலில் தீவிரமாய் இருக்கும் போது, பெரியாரின் கொள்கைகளையும், தலித் விடுதலைக்கு பெரியாரின் பங்கையும் அதிகமாக பேசி வருபவர்.

அடுத்த கவிதை ஒரு விதமான மேம்படுத்தப்பட்ட காட்சியமைப்பினை உள்வாங்கிய கவிதை. கவிதைகள் பெரும்பாலும் அரூபமான விஷயத்தினை சொல்லும்போது, சில கவிதைகளை கவிதையாக படிக்கமுடியாது, ஆனால் காட்சியாக பார்க்க முடியும். தேவதச்சனின் இந்த கவிதை ஒரு அருமையான நல்ல சினிமாவிற்கான காட்சியாக விரிவு படுத்த முடியும். கவிதைகளிலிருந்து நல்ல காட்சிகள் எடுக்கமுடியும் என்று இன்னொரு முறை நீருபிக்கும் இன்னொரு கவிதை.

கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும்


வா மகனே வா
வந்தாயே இப்பவாவது துணிஞ்சு
உள்ளே வர எனக்குத்தான் தடை
வெளியே வந்து பார்க்க உனக்கென்ன கேடு?

கோபம் நியாயந்தான் ஆனா
அவங்க கட்டுக்காவலை மீறி எப்படி நான் வரமுடியும்?
நாம சந்திச்சிடக்கூடாதுன்னு தான்
உள்ளே வெளியேன்னு பிரிச்சு வச்சிருக்கானுங்க

பிரிச்சு வைக்கிறதுதானே அவனுங்க குணம்
உம்புத்தி எங்கே பீ திங்கப்போச்சு
எம்புள்ளைங்களப் பாக்கறதைத் தடுக்க
உனக்கென்னடா அதிகாரம்னு
உதைச்சி வீசிட்டு வரவேண்டியதுதானே

தூபப் புகையில கண்ணவிஞ்சு
மந்திர இரைச்சல்ல காதடைஞ்சு
ஊதுபத்தி நெடியில மூர்ச்சையாகி
உன் கால்பட்ட கணத்தில்தான் மீண்டெழுந்தேன்
இனி இங்கே வேண்டாம் எனக் கிளம்பினார் அவனோடு

இப்போதெல்லாம் கடவுள்
கோயில்பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை
தன்பெயரால் நடந்த குற்றங்களுக்கு கழுவாயாய்
மோளமடிக்கவும் முட்டுத்துணி அலசவும்
மாடறுக்கவும் மயானங்காக்கவும் மலமள்ளவும்
நியமம் தவறாமல் போய்க்கொண்டிருக்கிறார்
இன்னமும் கோயிலில் கேட்கிற காண்டாமணிச்சத்தம்
யாருக்காகவென்று குழம்பியபடி.

தேவதச்சன் கவிதைகள்

ஜனநெரிசல் சாலைகளில் மூன்று பேர் சிகரட்
பிடிக்க விரும்பினார்கள். ஒருவன் ஒரு சிகரட்டை
வாயில் வைத்துக் கொண்டு லைட்டரை எடுத்தான்.
இன்னொருவன் தன் கையிலிருந்த சிகரட்டோடு
அவனை நெருங்கினான். வேறூ ஒருவன் அதேபோல்
அருகில் வந்தான். மூன்று கருந்தலைகளும் அருகா
மையில் நெருங்கின.

ஆஸ்பத்திரி மாடியில் நின்று கொண்டிருந்தவள்
ஃ எழுத்து ஒன்று
எங்கிருந்தோ நீந்தி வருவதையும்
பிரிந்து செல்வதையும் கண்டாள்.
பக்கங்களைல்
கீழே நழுவவிடும் கண்களிடம்
பிரிதல்கள் ஏதோ சொல்கின்றன.

நன்றி: தட்ஸ்டமில் - இலக்கியம் - ஆதவன் தீட்சண்யா கவிதைகள் | உயிர்மை-ஜூன் '05 - தேவதச்சன் கவிதைகள்

புத்தம் சரணம் கச்சாமி

இலங்கையில் ட்சுனாமி நிவாரண நிதியாக உலக நாடுகளிடம் இருந்து கிடைத்த தொகையை, தமிழர் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 புத்த சாமியார்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள் - தினந்தந்தி செய்தி
விடுதலைப்புலிகளுக்குட்பட்ட பகுதிகளில், அவர்களைத் தவிர வேறெவரும் மீட்பு,மறுவாழ்வு பணிகளில் ஈடுபடமுடியாது என்பது உலகறிந்தது. புலிகள் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் தான் பெருமளவு சேதம் விளைந்திருக்கிறது. இந்நிலையில் கட்சி, இன வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு மனிதர்க்ளை காபாற்றும் பணியில் தான் முழு கவனமும் இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உலக மக்களின் உதவித் தொகை மிக அதிக அளவில் தேவை.

ஆனால், அமைதியையும், சாந்தத்தையும் போதித்த புத்தனை தொழுபவர்கள், அடுத்த மனிதன் எக்கேடாவது கெட்டுப் போகட்டும், ஆனால் புலிகளுக்கு எவ்விதமான உதவித்தொகையும் கிடைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். புத்தனின் எல்லா கொள்கைகளும் ஆலயத்தோடு முடிந்துவிடும் போல. பசியால் வாடும் ஒரு மனிதனுக்கு போதனைகளை விட உணவு தான் முக்கியம், அதனால் முதலில் உணவு கொடுங்கள் என்று தன் சீடர்களுக்கு புத்தர் சொன்னதாக ஒரு கதையுண்டு. இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது.

தானும் தரமாட்டேன், அடுத்தவர் கொடுப்பதையும் அளிக்க மாட்டேன், துயரத்தில் இருக்கும் மனிதன் சாகட்டும் என்று நினைப்பதை என்னவென்று சொல்வது? காட்டுமிராண்டிகள் கூட தனக்கு தேவையானவற்றை தான் வேட்டையாடுவார்கள்.புத்த சாமியார்கள் என்கிற பெயரில் உலாவும் இவர்கள், காட்டுமிராண்டிகளை விட கேவலமானவர்கள். புத்த மதக் கோட்பாடுகளை கேவலப்படுத்துகிறார்கள். புத்தன் பாவம், பாமியானில் மூக்குடைந்தது போததென்று இன்று தன் சீடர்களினால் அவமானப்பட்டு நிற்கிறான். உலகெங்கும், இறை தூதர்கள், தங்களின் சீடர்களால், வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டு கூனி, குறுகி உலகினை காண அச்சப்பட்டு ஒடிவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

புத்தம் சரணம் கச்சாமி! - இனி இதனை இலங்கையில் இருக்கும் புத்த சாமியார்கள் சொல்லத் தேவையில்லை. சொன்னால் "உன்னால் முடியும் தம்பி"யில் வரும் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

"வாயிலென்ன மந்திரமா
மனசு என்ன யந்திரமா"

Jun 7, 2005

காடு வா வா என்கிறது......

ஆக இறுதியாக சென்னை வந்தாகிவிட்டது. 4 நாட்கள் சென்னையில் இல்லாமலிருந்தது கொஞ்சம் கஷ்டமாயும், நிறைய மகிழ்வாகவும் இருந்தது. இதனை விவரித்து எழுதினால், மூன்றாம் வகுப்பு மாணவன் கல்விச் சுற்றுலா போய்விட்டு வந்து கட்டாயப்படுத்தி கட்டுரை எழுதியது போலாகிவிடும். ஆகவே, போன இடங்களின் அமைப்பு, இடம், பொருள், ஏவல் போன்ற விஷயங்களை தவிர்த்து அனுபவித்ததை மட்டுமே எழுதலாம். முதலில் முக்கியமாய் சந்தோஷப்பட்டது, நான் போன எந்த இடத்திலும் என்னருமை ஏர்டெல் இல்லை. ஆகவே, செல்லுக்கும் என் சொல்லுக்கும் மொத்தமாய் கெட் அவுட்டு. இதனால் வழமையாய் வரும் "Sir i am calling from XXXXXX Bank. We offer personal loans upto 15 lacs. Are you interested in taking one" போன்ற தொல்லைகளிலிருந்து தப்பித்தேன்.

இரண்டாவது மிக முக்கியமாய் சந்தோஷப்படுவது, நான் போன பெரும்பாலான இடங்கள், விஐபிகள் போக மட்டுமே அனுமதியுள்ள இடங்கள் [நான் கண்டிப்பாக விஐபியல்ல, ஆனால் கூட வந்த நண்பன் தமிழ்நாட்டில் விவிஜபி, அதனால், போகுமிடமெங்கும் ராஜபோசாரம்தான்] ஆகவே என் வாழ்நாளில் அடுத்த 10 வருடங்களில் எதையதை பார்க்க முடியாது என்று நினைத்தேனோ அவ்விஷயங்களைப் பார்க்க முடிந்ததுதான் மகிழ்வின் உச்சம்.

சேரன் எக்ஸ்பிரஸ் பிடித்து கோயமுத்தூர் இறங்கியதிலிருந்து ஆரம்பித்தது ஆட்டம். முதலில் போனது, ஆழியார் அணை. கொஞ்சமாய் தண்ணீர் இருக்கிறது. ஒரிரு ஆட்களைத் தவிர யாருமில்லை. இந்த அணையையும், நாங்கள் தங்கிய அரசினர் விருந்தினர் மாளிகையையும், "காதலிக்க நேரமில்லை"யில் பார்த்திருக்கலாம். பாலையாவின் வீடாகவும், நாகேஷ், பாலையாவிற்கு கதை சொல்லுமிடமும் தான் அவை. அங்கே கொஞ்சமாய் கொட்டிக் கொண்டிருந்த ஒரு அருவியில் நன்றாக ஊறி, குளித்து விட்டு [எருமை மாட்டினை விட நிறைய நேரம் தண்ணிரீலேயே இருந்தோம்.மெட்ராஸ்காரன்பா, தண்ணியோட அருமை எங்களுக்குத் தான் தெரியும்.] வந்தால் நல்ல சூடான சாப்பாடும், சிக்கன் கறியும், அருமையான ரசமும் காத்திருந்தது. வந்த களைப்பு, குளித்த களைப்பு என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வெட்டு வெட்டி, குவாலிஸில் மூணாறு கிளம்பினோம்.

மூணாறு, தமிழக கேரள எல்லையிலிருக்கும் மலையூர். கேரளாவுக்கு சொந்தமான ஊர். தமிழக காட்டு எல்லையும், கேரள காட்டு எல்லையும் சேருமிடம். சரக்கு போத்தல்கள் எடுத்துக் கொண்டு, கேரளா சுங்கச்சாவடியை தாண்ட முடியாது. ஆயிரம் சொன்னாலும், என் நண்பன் தமிழ்நாட்டில் தான் விஐபி. கேரளாவில் அல்ல. ஆகையால், மரியாதையாய் கொண்டு போயிருந்த 3 வோட்கா போத்தல்கள், ஒரு ஒயின் குப்பி, அநியாயமாய் 6 கிங் பிஷர் பியர் அனைத்தையும், எல்லையிலிருந்த தமிழக போலிஸ்காரர்களுக்கு தானம் கொடுத்தோம். அவர்களுக்கு வாயெல்லாம் பல்[குடலெல்லாம் ஆல்கஹால்!!]. நான் போகிற காலத்தில் இவர்களுக்கு சரக்கு தந்த புண்ணியங்கள் கைக் குடுக்குமென்று நம்புகிறேன். கேரள எல்லைக்கு கிளம்பியவுடன் முடிவெடுத்தது, காட்டுக்குள் நடக்க வேண்டியது என்பதுதான். அங்கேயே, மூணாறு செக் போஸ்டிலேயே வழிகாட்டிகள் கிடைக்கிறார்கள். தலைக்கு 60 ரூபாய். நடந்து உள்ளே போக வேண்டும்.

காட்டில் நடப்பதைப் பற்றி எவ்வளவோ கதைகளிலும், திரைகளிலும் படித்து, பார்த்திருந்தாலும் உண்மையாகவே கால் பதிய நடப்பதென்பது வித்தியாசமான அனுபவம். என்னோடு வந்த நண்பர்கள், சோர்வுற்றபோதும், நான் தொடர்ந்து முன்னேறி போனேன். உள்ளே செல்ல தனி உபகரணங்கள் எதுவும் எடுத்துக் கொண்டு போகவில்லை. வெறும் காலில் போட்ட செருப்போடும், என் குட்டை ஷார்ஷோடும் தான் உள்நுழைந்தேன். காட்டில் நடக்கும்போது, பேசாமல் நடக்க வேண்டும். கொஞ்சம் சத்தம் கேட்டாலும், விலங்குகள் ஒடிவிடும். இது தெரியாமல், முதல் அரைமணிநேரம், எங்களின் வீரதீர பிரதாபங்களை கதையளந்தபடி போனதால், நிறைய மான்கள் பயந்து ஒடிவிட்டன [சிங்கமுல நாங்க!!] பிறகு யதார்த்தத்தையுணர்ந்து, பேசாமல் நடக்க ஆரம்பித்தோம். நடந்தோம், நடந்தோம், நடந்து கொண்டேயிருந்தோம். அது ஒரு அற்புதமான அனுபவம். சருகுகள் மிதிபட, நடந்துக் கொண்டேப் போனால், ஏதாவது விலங்கு கொஞ்ச தொலைவில் நம்மை கடக்கும். மூணாறில் நான் பார்த்தது, காட்டு முயல், மான்கள், பன்றிகள், கொஞ்சமே தூரத்தில் யானை. மேற்குத் தொடர்ச்சி மலையினையொட்டியமைந்த காடது. அப்படியே காட்டு வழியேப் போனால், கொடைக்கானலை அடையலாம், குறுக்கு வழியில், கொஞ்சமாய் ஒரு 10 மணிநேரம் நடந்தால் போதும். கட் செய்தால், நாங்கள், வாந்தி, தலை சுத்தலோடு மூணாறிலிருந்து கீழிறங்கி, ஆனைமலை டாப் ஸ்லிப் போய் சேர்ந்தோம். அவ்வளவு வளைவுகள், மிதமாய் மழை வேறு. நான் 10 வருடங்களுக்கு முன் சாப்பிட்ட ஊசிப் போன போண்டா வரை எல்லாமே, வாந்தியாய் வந்துவிட்டது. "பாய்ஸ்" பாஷையில் சொல்லவேண்டுமானால், மலைவளைவுகளைங்கும் ஒரே ஆம்லெட் மயம்தான். வீரப்பனின் நினைவுதான் நடக்கும்போதெல்லாம் வந்தது.

டாப் ஸ்லிபில் மாலை ஆறு மணிக்கு மேல் யாரையும் காடும், வனவிலங்குகளுமிருக்கும் இடத்திற்கு அனுப்ப அனுமதி கிடையாது. நாங்கள் உள்ளே நுழையும்போது தான் ஹிந்துவின் எடிட்டர் ராமின் கார் எங்களைக் கடந்துப் போனது. நாங்கள் நுழையும்போது சரியாக ஆறேகால் ;-) போனதும், கொஞ்சமாய் சாப்பிட்டு, இளைப்பாறிவிட்டு, காட்டுக்குள் இரவில் சபாரி போனோம். இரவு சபாரி விவிஐபிகளுக்கு மட்டுமே. மற்றபடி, எல்லோரும், காலையில் வந்தால் மாலை 6 மணிக்குள் கீழிறங்கிப் போக வேண்டியது தான். எனக்கு மூணாறில் நடந்துவிட்டு, வண்டியில் போக பிடிக்கவில்லை. ஆனாலும், பாதுகாப்பு கருதி, ஒரு மெட்டாட்டர் வேனில் பயணித்தோம். நினைத்தப்படியே, கரடிகள், நாங்கள் போன வழியில் வெளிச்சத்தினைப் பார்த்து ஒடிப் போயின. நாங்கள் தங்கிய காட்டேஜின் வாசலில் சர்வசுதந்திரமாய், காட்டுப் பன்றிகளும், மான்களும், யானைகளும் உலாவின. பார்க்கவே ரம்மியமான காட்சியது. வெளியில் வந்து காட்டேஜின் படிக்கட்டில் உட்கார்ந்து வெறுமனேப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், பல விலங்கு பறவைகளைப் பார்க்கலாம். ஏற்கனவே, என்.ஜி.சி, டிஸ்கவரி, ஹிஸ்டரி சேனல்கள் பார்த்துக் கெட்டுப் போன என் மனசு, டாப் ஸ்லிப் போனதும் இன்னமும் கெட்டுப் போனது. சில தகவல்களை அங்கிருப்பவர்களிடமிருந்து சேர்த்து வைத்திருக்கிறேன். பார்ப்போம், மீண்டும் காட்டுக்குள் போகும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று.காட்டுக்குள் நடந்துப் போகும் மறுநாள் காலையினை எண்ணியவாறே உறங்கப் போனேன். விலங்குகளோடு டூயட் பாடியவாறே இரவு கழிந்தது.

அதிகமாய் எதிர்பார்த்த காலை வந்துவிட்டது. எங்களுக்கு வழிகாட்டியாய் வந்தவர் ஆறுமுகம் என்கிற இளைஞர். டாப் ஸ்லிப்பினை சுற்றியுள்ள அடர்காடு, தமிழகத்தின் மிகப் பெரிய காடாக திரிகிறது. 960 சதுர கீ.மீ பரப்பளவுள்ள இந்த அடர்காடு, சுமார் 300-400 வனவிலங்குகளின் உயிரினம். ஆறுமுகம் ஒரு திறமையான, புத்திக் கூர்மையுள்ள வழிகாட்டி. பிபிசி தொலைக்காட்சிக்காக இருவாட்சி பறவையினைப் [Hornbill] பற்றி எடுத்த ஒரு விவரணப்படத்தின் முழுக்குழுவினரோடு இரண்டு வருடங்கள் காட்டிலிருந்தவர். தமிழகத்தின் முன்னோடி விலங்கியல் விவரண இயக்குநராக இருக்கும் அல்போன்ஸ் ராஜ், காட்டு ஒலியியலை சேகரிக்கும் சிவ பிரசாத் போன்றவர்களுக்கு ஆறுமுகம் செல்லப்பிள்ளை. அப்பேர்ப்பட்டவர் தான் எங்களுக்கு முன் சர்வசாதாரணமாக ஒரு ஒலிம்பஸ் பைனாகுலரினை வைத்துக் கொண்டு வழிகாட்டினார். ஏற்கனவே காட்டில் பயணித்த அனுபவமிருந்ததால் இந்த முறை பேசாமல் போனோம். வழியெங்கும் இயற்கை வாரி வழங்கியிருக்கிறது. பச்சைபசேலென செடி,கொடிகள். காலில் பல்லியோ, பாம்போ, பிற ஊர்வன கடிக்குமே என்கிற பயங்களேதுமின்றி கொஞ்சம் தைரியமாக (கொஞ்சம் அதுப்பாக!!] நான் முன்னேறினால், நண்பர்கள், எல்லா திசைகளிலும் பயஎச்சரிக்கையோடு தான் அடியெடுத்து வைத்தார்கள். இதனால், நானும் ஆறுமுகமும் இன்னும் இரண்டு நண்பர்களும் ஆங்காங்கே தங்கி, தங்கி போக வேண்டிய கட்டாயம்.

உள்ளே போனதும் முதலில் நாங்கள் பார்த்தது, காட்டெருமைகள். ஆறுமுகம் பாஷையில் சொல்வதனால், காட்டு மாடுகள். கும்பல் கும்பலாக, கூட்டம் கூட்டமாக எங்களின் முன் கடந்து ஒடின. அந்த தருணம் இப்போது நினைத்தாலும் ஜில்லிடுகிறது. புத்தகத்திலும், படத்திலும், டிவியிலும் பார்த்த உருவங்கள், கண்முன் ரத்தமும், சதையுமாய், கும்பல் கும்பலாய் காணும் பரவசம், அனுபவித்து மட்டுமே உணரக் கூடியது. ஆறுமுகம் புலி பார்க்கலாம் என்கிற ஆசையை வேறு கிளப்பிவிட்டார். அதனால், கொஞ்சமும் சோர்வுறாது, தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தோம். மரத்திலமர்ந்து எங்களைப் பார்த்தவுடன் மிரண்டோடிய காட்டு அணில், சட்டையே செய்யாமல் கடந்து போன புள்ளி, சாம்பல் மான்கள், அவ்வப்போது புதர்களிலிருந்து எங்களை பயமுறுத்தி, தானும் பயந்து தறிக்கெட்டோடிய காட்டுப் பன்றிகள், பெயர் மறந்து போன நிறைய பறவைகள், தூரே பிளறிய யானைக் கூட்டம் என விதவிதமாய் விலங்குகளும், பறவைகளும் என் பயணத்தினை என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்திற்கு கொண்டு சென்றது. காலடியில் மிதிப்பட்டு எழும்பும் புற்கள், எங்கெங்கும் பச்சையினை மட்டுமே தத்தெடுத்திருக்கும் இயற்கை, கொக்கரிக்கும் சுவர்கோழிகள், முகம் காட்டாமல் கத்தும் குரங்குகள், பறவைகள், ரீங்காரிக்கும் பூச்சிகள், குத்தி கிழிக்கும் முட்செடிகள், கொஞ்சமசந்தாலும் கிழிக்க காத்திருக்கும் சப்பாத்தி கள்ளிகளென காடு ஒரு ரகளையான குடும்பம். டாப் ஸ்லிப்பில் நாங்கள் சுமார் 10 கீ.மீ தூரம் உள்ளே போயிருப்போம். மற்றவர்களுக்கு கால் கடுத்ததால், திரும்ப வேண்டியதாக போய்விட்டது. என்னை மட்டும் விட்டிருந்தால், குறைந்தபட்சம் 50 கீ.மீ.தூரம் அடர்காட்டினுள் சென்றிருப்பேன்.

நிறைய விஷயங்களை ரசிக்க வேண்டுமானால், காட்டினுள் கொஞ்சம் பாதுகாப்பாய் மழை பெய்து விட்டவுடன் போக வேண்டும். ஆறுமுகம் நடந்துக் கொண்டே சொன்ன தகவல்கள், ஆச்சர்யமாகவும், இயற்கையின் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையையும் இன்னமும் கூட்டியது. மழை பெய்தால், விலங்குகள், காட்டினுளிருந்து சமதளத்தினை தேடியோடிவரும். காரணம், காட்டினுள் கொசுத்தொல்லை அதிகரிக்கும். பெரும்பாலான யானைகள் தன் வாழ்நாளில் ஒரே ஒரு குட்டி தான் போடும். யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள். புலி தான் போகுமிடமெங்கும், தான் பாத சுவட்டினை பதிந்துவிட்டு தான் போகும். சிறுத்தை, சாய்வான மரங்களில் ஏறாது. நெட்டுக்குத்தான மரங்களில் தான் ஏறும். கரடிகள் புற்றினைக் கீறி உண்ணும். காட்டெருமைகள் கூட்டமாய் தான் வாழும். டாப் ஸ்லிப்பில் இருக்கும் பாம்புகள் பெரிதாய் விஷமற்றவை, கடித்தால் கொஞ்சம் மயக்கம் வரும். உயிர் போகாது. செந்நாய்கள் எந்த விலங்கினை குறிவைத்தாலும், முதலில் தாக்குவது எதிரியின் கண்களைத் தான். இப்படி என்னுடைய விலங்கறிவு, ஆறுமுகத்தினால் நீண்டுப் போனது. மறக்காமல், கொஞ்சம் அபூர்வ விலங்கு, பறவைகளைப் பற்றிய தகவல்களை சேர்த்து வைத்திருக்கிறேன். திரும்பி வரும்போது, காட்டினுள் இருக்கும் பூர்வகுடிகளான "காடர்கள்" என்னுமினத்தின் குடில்களுக்கு சென்றேன். புதிதாக ஏதுமில்லை. பெண்கள் நைட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மொத்த ஊரில் 27 வீடுகள் தான் இருக்கின்றன. திரெளபதியம்மன் தான் குலதெய்வம். நாங்கள் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அம்மனுக்கு தீமிதி திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. இவர்கள் பிள்ளைகள் படிப்பதற்கென்ற்கு, காட்டினுள்ளேயே ஒரு அரசு பள்ளிக்கூடமிருக்கிறது. இவர்கள் கொஞ்சம் நம்மாதிரியான ஆட்களைக் சேர்க்கிறார்கள். பேசும் தமிழ்தான் கொஞ்சம் மாறுகிறது. இன்னமும் ஆழ்ந்து காட்டினுள் போனால், "மலைமலை வாசிகள்" என்கிற ஆதிகுடிகள் வசிக்கிறார்கள். அவர்கள் நம்மாதிரி ஆட்களைப் பார்த்தால் ஒடிவிடுவார்கள் என்றார் ஆறுமுகம். நாகரிமடைந்த [அப்படி சொல்லலாமா நம்மை?!] மனிதர்களைக் கண்டு அவர்கள் அச்சப்படுகிறார்கள். அரசும், அவர்களின் வாழ்வியலினை கருதி, அவர்கள் வாழுமிடத்தினை தடைசெய்யப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட இடமாக செய்திருக்கிறது.

இயற்கையோடு இயற்கையாய், எல்லா விலங்குகளைப் போல நானும் ஒரு விலங்காய் எவ்விதமான கட்டுக் கோப்புகளின்றி என் வாழ்நாளில் இரண்டு நாட்கள் கழிந்தன. சுத்தமான காற்றினை சுவாசித்துக் கொண்டு, மினரல் வாட்டர் போத்தல்களற்ற, குளோரின் கலக்காத, நதி நீரினை குடித்து, இயற்கையின் ரகசியங்களை காதோரம் கேட்டு, கிசுகிசுத்துக் கொண்டு, யாருமற்ற வனத்தில், மர வீட்டில் தனியாய் அமர்ந்திருந்து, வனத்தின் இரவினை ரசித்துக் கொண்டு ஆனந்தமாய் இருந்தது வாழ்க்கை. வாழ்நாளின் மிக முக்கிய கடமையாக இதை கொண்டு வரலாம். எல்லோரும் ஹஜ்ஜூக்கும், ஜெருசெலமுக்கும், திருப்பதிக்கும் போவதைப் போல், இந்தியாவின் அடர்காடுகளில் தன் வாழ்நாளில் ஒரு வாரத்தினையாவது செலவு செய்யவேண்டும். இயற்கையின் பிரம்மாண்டங்களும், நுணுக்கங்களும், விளையாட்டுகளும் கண்டிப்பாக வியப்பிலாழ்த்தும்.

அதிகாலையில் டாப் ஸ்லிப்பினையடைந்தால், இந்த காட்டு நடைப்பயணத்தினை வழிகாட்டியோடு பதிவு செய்து உள்ளே போகலாம். வாழ்நாளில் தவறவிடாதீர்கள் இதை. பொள்ளாச்சியிலிருந்து 40-50 கீ.மீ. தொலைவிலிருக்கிறது என்று நினைக்கிறேன். கண்டிப்பாக இரவு பயணங்கள் கிடையாது. காலினை முழுக்க மறைக்கும் காலனிகளை அணிந்து உள்ளேப் போவது பாதுகாப்பானது. என் நண்பர்கள் நான்கு பேர்களுக்கு அட்டை கடித்து, கலவையாக பி பாஸிடிவ், ஓ பாஸிடிவ் என ரத்தத்தினை உறிஞ்சியெடுத்து விட்டது. முடிந்த வரையில் ஜீன்ஸ் அணியுங்கள், வழியில் இடரும் முட்செடிகள் கீறி கிழிப்பதிலிருந்து தப்பலாம்.

இந்த அனுபவத்தினை என்னதான் எழுதினாலும், வார்த்தைகளில் விவரிப்பது கடினம். வார்த்தைகள் வாழ்க்கையாகாது, அதனால் எழுதியதை விட ஆயிரம் மடங்கு ஆத்ம திருப்தியும், புத்துணர்வும் பெற்றவனாக இருக்கிறேன். காடு இன்னும் கொஞ்ச நாளில் என் வீடாகவும் மாறலாம். நான் அக்காலத்திற்காக காத்திருக்கிறேன்.

Jun 2, 2005

11/2 இலட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ?

ஜூன் 1 அன்றைக்கு நிறைய பள்ளிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட இருந்தன. தமிழகக்கல்வித்துறை இயக்குநரகம் கொடுத்த ஒரு அறிவிப்பு, நிறைய பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. நகரெங்கும் புற்றீசல் போல முளைந்திருந்த நிறைய நர்சரி பள்ளிகளில், ஆங்கில வழியில கற்றுத் தருகிறார்கள் என்கிற ஒரே காரணத்தினால், கவர்ச்சியினால், சைக்கிள் ரிக்சா ஒட்டும் சுப்பனிலிருந்து, ஏதேனும் ஒரு சிறிய பிரைவேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் குமரன் வரை எல்லா நிலைகளிலும் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். ஒரு ஒலைக் குடிசை, இரண்டு டீச்சர்கள், கொஞ்சம் கான்கீரிட் கட்டிடம் இருந்தால் போதும், தமிழகத்தில் மிக லாபகரமாக ஒரு நர்சரி பள்ளியை உண்டாக்கி சம்பாதிக்க முடியும். இப்படி உண்டாக்கப்பட்ட, அங்கீகாரமில்லாத பள்ளிகளை மூடச்சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தொடக்க கல்வித் துறையின் கிடுக்கிப்பிடி உத்தரவு நேற்று தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு அந்த பள்ளிகளுக்கு உடனடியாக "பூட்டு' மாட்டுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனால் அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகள் எதுவும் நேற்று திறக்கப்படவில்லை. அங்கீகாரம் இல்லாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பயிலும் ஒன்றரை லட்சம் குழந்தைகளை ஜூன் மாதத்திற்குள் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள நர்சரி பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். - தினமலர் செய்தி
தமிழக அரசு, கும்பகோணம் தீ விபத்து ஏற்பட்ட பின்னரே அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு சுற்றிக்கை கொடுத்துவிட்டது. இது மெட்ரிக், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு பொருந்தும். ஆனால், நேற்று வரை வெகு குறைவான பள்ளிகளே அங்கீகாரத்திற்கு உட்பட்டு வந்திருக்கிறார்கள். நேற்றைய அறிவிப்பினால், தமிழகமெங்கும் 11/2 இலட்சம் நர்சரி/பிரைமரி குழந்தைகள் பள்ளிக்கு போக முடியாமல் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் அங்கீகாரமில்லாத 195 நர்சரி பள்ளிகள் [தினந்தந்தி 215 பள்ளிகள் என்று சொல்கிறது]மூடப்பட்டுள்ளன. இதேப் போல தமிழகமெங்கும் அங்கீகாரமில்லாத பள்ளிகள் [சுமார் 2000 பள்ளிகள்] இருக்கின்றன, கணக்கில்வராத 500 பள்ளிகளும் இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

நல்ல செய்தி. நல்ல நோக்கம். ஆனால், இதனை பள்ளி திறக்கும்போது தான் செய்ய வேண்டுமா ? கல்வித்துறை இயக்குநரகத்திற்கு ஏற்கனவே இந்த பள்ளிகள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கும். இவர்கள் ஏன் இதனை மே மூன்று/நான்காம் வாரத்திலேயே, தமிழ் தினசரிகளில் பள்ளிகளை பட்டியிலிட்டிருக்கக்கூடாது ? 11/2 குழந்தைகளின் பெற்றோர்கள் இன்றைக்கு தங்கள் குழந்தைகளை எங்கே சேர்ப்பார்கள் ?
"இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது,""195 பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற நர்சரி பள்ளிகளிலோ சேர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெற்றோர் விரும்பினால் அரசு பள்ளிகளில் சேர்ப்போம். இல்லையென்றால் நர்சரி பள்ளிகளில் சேர்ப்போம்,'' என்று தெரிவித்தனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுப் பள்ளிகளில் சேர்க்கும் பணிகள் நேற்று துவங்கிவிட்டன. ஜூன் மாதத்திற்குள் எல்லா குழந்தைகளையும் மாற்றுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. - தினமலர்
ஆனால், நர்சரி பள்ளிகளில் சேர்த்த குழந்தைகளை, அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் தயங்குகிறார்கள். ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வமாயிருக்கும் பெற்றோர்கள் தமிழ் வழிப் பள்ளிகளில் சேர விருப்பப்படுவதில்லை.

குழந்தைகளை "அரசு வழிப் பள்ளிக்கூடங்கள், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றில் தான் மாணவர்கள் சேருவதற்கு நிறைய இடங்கள் காலியாக இருக்கும். எனவே தமிழ்வழிக்கல்வி பள்ளிக்கூடங்களில் தான் சேரமுடியும், ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்க முடியாது" என்றொரு கல்வித்துறை அதிகாரி கூறுகிறார்.

ஆக இதிலேயே குழப்பங்கள் இருக்கின்றன. இது தாண்டி மூடப்பட்ட அங்கீகாரமில்லாத பள்ளிகளின் பட்டியலை ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவகத்தில் ஒட்டி வைத்திருக்கிறார்கள். சென்னையென்றால் பரவாயில்லை. மதுரை, சேலம், கோயமுத்தூரிலிருந்து 30-40 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு சிற்றூரில் இருக்கின்ற பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்று எவ்வாறு தெரிந்து கொள்ளுவார்கள். ஆக, அவ்வூரிலிருக்கும் எல்லா பெற்றோர்களும், எல்லா பள்ளிகளும், 40 மைல்கள் பயணம் செய்து ஒட்டியிருக்கும் பட்டியலில் தங்கள் குழந்தைகளின் பள்ளியின் பெயர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். என்ன மடத்தனம் இது. பள்ளி இறுதித் தேர்வு முடிவினை அறிவிக்க செய்தித்தாள்களைப் பயன்படுத்தும் அரசு, ஏன் இவ்வளவு முக்கியமான விஷயத்தினை வெறும் செய்தியாக மட்டுமே பார்க்கிறது ? பட்டியிலிடப்பட்ட அத்தனைப் பள்ளிகளையும், மாவட்ட வாரியாக பிரசுரித்திருக்க வேண்டாமா ? ஏன் இன்னமும் பெற்றோர்களின் டென்ஷனை அதிகரிக்க வேண்டும் ?

எவ்வளவு அலைச்சல் பாருங்கள். நான் இதை பார்த்தவுடன், தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநரகத்தின் இணையத் தளத்தினை பார்வையிட்டேன். ஒரு தகவலுமில்லை. இவ்வாறு அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூடிவிட்டோம் என்கிற தகவல் கூட தளத்தில் இல்லை. ஜூன் 1 அன்றைக்கு மூடப் போகிறோம் என்கிற தகவலையாவது ஒரு வாரத்திற்கு முன்பு செய்தித்தாள்களில் கொடுத்திருக்கலாம்.ஏன் அவர்களின் தளத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளைப் பற்றிய தகவல் இல்லை? எத்தனை பெற்றோர்கள் இந்த பிரச்சனைக்காக, பல்வேறு அலுவலக, வேலை பிரச்சனைகளுக்கிடையில் இதனை எதிர் கொண்டாக வேண்டும் ? இப்போது அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பெறப்படும் சான்றிதழகள் எவ்வாறு பார்க்கப்படும்? [மத்திய அரசு கல்வித்துறையின் (CBSE) இணையத்தளத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை பட்டியலிட்டுள்ளார்கள்]11/2 இலட்சம் குழந்தைகளின் வாழ்க்கையினைப் பற்றிய தகவல் எவ்வளவு அலட்சியமாக கையாளப்படுகிறது. இவ்வளவுக்கும் மேலாக, சொந்தக்காரர் வீட்டுக்கு போய், அங்கிருக்கும் ஏதேனும் ஒரு பொருளை தொட்டாலே, வீட்டிற்கு வந்து குழந்தையை அடிக்கும் மக்கள் நாம். இப்படியிருக்கையில், இவ்வாறான சூழ்நிலையில், குழந்தைகளின் மீது பிரயோகிக்கப்படும் வன்சொல், வன்முறைகளை நினைத்தால் பயமாகவும், பாவமாகவும் இருக்கிறது.

நோக்கம் நன்றாக இருந்தாலும், அதனை செயல் படுத்தும் போது ஒழுங்காக செயல் படுத்தவில்லையென்றால், நோக்கத்தின் அடிப்படை குறை கூறப்படும். அவ்வாறு நேராமலிருக்க தமிழக அரசு முனையுமா?

கோலம்

கோலம் போடுதல் என்பது ஒரு கலை நிகழ்வு. அது ஒரு நுண் கலை. என் வீடே ஒரு மிகப்பெரிய கோல நிறுவனம் மாதிரி தான் தோன்றும். என் வீட்டிலுள்ள எல்லோரும் அக்டோபர் - ஜனவரியில், ஜிஆர்டி காலண்டரை இரண்டாக பிளந்து, பின்னால் இருக்கும் வெண்ணிறப் பகுதியை பேப்பராக உபயோகித்து, கோலம் வரைந்து தள்ளுவார்கள். ரீல் ரீல்களாக, நிறைய பைண்ட் செய்யப்பட்ட கோல நோட்டுகள் என் பரணில் தூசியோடு தூங்கிக்கொண்டிருக்கின்றன. பன்னூடகத்தில் வேலை செய்தாலும், இன்னமும் கோலம் போடுதல் கைவரவில்லை.

இப்போதெல்லாம், யாரும் எனக்குத் தெரிந்து மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து கோலம் போடுவதில்லை. எல்லாம் இரவே போட்டு விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள். காலையில் காற்றாய் வரும் ஆண்டாளுக்கு கிடைப்பதென்னவோ, செகண்ட் ஷோ பார்த்துவிட்டு, வண்டியேறி காணாமல் போய் மிச்சமிருக்கும் கோலம் போட்ட தடங்கள்தான். திருமால் பாவம் கார்ப்பரேஷன் தண்ணீரில் குளோரின் வாசனையோடு ஸ்தானம் செய்கிறார். அடுக்கங்களில்,அரிசி மாக் கோலம் போட்டால், வேலைக்காரி பெருக்கும் போது பிரச்சனை செய்வாள் என்பதால், மயிலாப்பூரில் கிடைக்கும் ஸ்டிக்கர்களை வாங்கி வாசலில் ஒட்டி விட்டு, சோனி ஸ்டீரியோவில் சுதா ரகுநாதன் கேட்கலாம். கொஞ்சம் போரடித்தால், அவள் விகடனில் ரங்கோலி போட்டியில் கலந்து கொண்டு திறனை பறைசாற்றலாம். மற்றபடி, பிற தமிழின் தொல்கலைகளை போலவே இதுவும் ஐசியுவில் தான் இருக்கிறது என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

கோலம் போடுவது பற்றி நிறைய நூல்கள் கிடைக்கும். ஆனால், கோலத்தின் இலக்கிய அந்தஸ்து, ஆளுமைப் பற்றி பேசும் நூல்கள் குறைவு.

இந்த மாத "புதுவிசை" யில் பேரா. தொல்.பரமசிவன் கோலம் பற்றிய மிக அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறார். அங்கே போய் படிக்காமல் இங்கேயே தருகிறேன்.

கோலம் - தொல் பரமசிவன்

கோலம் என்னும் வரைகலை வெளிப்பாடு தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்ததாகும்.

கோலம் என்ற சொல் சங்க இலக்கியங்களின் மிகப் பிற்பட்டதான பரிபாடலில்தான் முதன்முதலாகத் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்க 'கேழற் கோலம்' என்ற தொடராகக் காணப்படுகிறது. பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தில் மூன்று இடங்களில் இத்தொடர் பயின்று வருகிறது. "மாதவி தன் கோலம் தவிர்ந்திருந்தாள் "மணமகளைப்போல யாழ் கோலம் செய்யப்பட்டிருந்தது " மாதவி எழுதுவரிக்கோலம் என்ற ஆட்டத்திற்காகக் கோலம் செய்திருந்தாள் "பழங்குடிமக்கள் குமரிப்பெண்ணைத் தெய்வக்கோலம் செய்திருந்தனர். இவையே சிலப்பதிகாரத்தில் கோலம் என்ற சொல் வருமிடங்களாகும். ஆடுமகளுக்கும், மணமகளுக்கும், இசைக்கருவிக்கும் செய்யப்பட்ட ஒப்பனைகளையே அதாவது கலை வெளிப்பாடுகளையே சிலப்பதிகாரம் கோலம் என்றது.

இன்று கோலம் என்பது அரிசிமாவினாலும் சுண்ணாம்புப்பொடியினாலும், பல வண்ணப்பொடிகளாலும் தரையில் இடப்படும் கோலத்தைக் குறித்து நிற்கின்றது. தரையில் இடப்படும் கோலம், வீட்டின் தலைவாயில், வீட்டிற்குள் தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படும் இடம், கோயில்கள் ஆகியனவற்றில் இடப்படுகின்றது. எனவே கோலம் என்பது அழகுணர்ச்சி சார்ந்த வரைகலை வெளிப்பாடாக மட்டுமின்றி புனிதத்தன்மை அல்லது சடங்கியல் தன்மையுடையதாகவும் விளங்குகின்றது என்பதை உணரலாம்.

தொல் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று தரையைப் புனிதப்படுத்துவதாகும். தூய்மைப் படுத்தப்படாத தரை தெய்வங்கள் காலூன்றி நிற்பதற்கு ஏற்றதன்று. தெய்வங்களும் வானவர்களும் பூமிக்கு (மண்ணுலகிற்கு)வரும்போது தரையினை மிதிப்பதில்லை. அவதாரமான இராமனும் கிருஷ்ணனும் மட்டுமே வெறுங்காலால் பூமியை மிதித்தவர்களாவர்.

"மேலொரு பொருளுமில்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி

கால் தரை தோய வந்து கட்புலக் குற்றதம்மா

என்பது கம்பராமாயணம். இதன் பொருள் பொதுவாகத் தெய்வங்கள் கால் தரைதோய வருவதில்லை என்பதாகும். தெய்வங்கள் வானுலகத்தில் அல்லது மண்ணுலகத்தில் மரங்களில்தான் வாழும். தரையில் மனிதர்களைப்போல வாழ்வதில்லை. மனிதனின் விருப்பத்திற்கும், தேவைக்குமேற்ப மண்ணிற்கு வரும் தெய்வங்களுக்கு மனிதன் "புனித இடங்களை " உருவாக்குகிறான். தெய்வச்சிலைகள் அனைத்தும் கவிழ்ந்த தாமரையின் மீதே (பத்ம பீடத்தின் மீதே)அமைக்கப்படுவதன் காரணமும் இதுதான். நாட்டார் வழிபாட்டு மரபிலும் தெய்வத்தின் கால்கள் தரையிலே பதியக்கூடாது என்பதற்காகப் 'பூடங்கள்' (பீடங்கள்) அமைத்துள்ளனர். பீடங்களின் உச்சிப்பகுதியில் கவிழ்ந்ததாமரை போன்ற வடிவம் காட்டப்பட்டிருப்பதனைக் கூர்ந்து கவனித்தால் அறிந்து கொள்ளலாம்.

படங்களோ, சிலைகளோ வீட்டுப்புழக்கத்தில் இல்லாத காலத்தில் வீட்டிற்குள் தெய்வத்தைத் திருநிலை கொள்ள வைப்பதற்கு குத்துவிளக்கு மட்டுமே இருந்தது. குத்துவிளக்கும் கூட மணைப்பலகை அல்லது மண்ணால் செய்த சிறு பீடம் அல்லது கோலத்தின் மீதுதான் வைக்கப்படுகிறது. வெளியிலும் குத்து விளக்கு இல்லாத நிலையிலும் வீட்டிற்குள்ளும் தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுவதுண்டு. அப்போதெல்லாம் அந்த இடங்களில் கோலங்கள் இடப்படுகின்றன. செம்மண் அல்லது பசுஞ்சாணத்தால் ஆன பிள்ளையாரும் கோலத்தின் பகுதியில்தான் வைக்கப்படுகின்றது.

கோலம் இடப்படுமுன் தரைப்பகுதி தண்ணீராலோ, சாணத்தாலோ தூய்மை செய்யப்படுகின்றது. இதன்மீதே கோலங்கள் இடப்படுகின்றன. இன்றளவும் தலைவாசல் கோலமும் தரையில் தண்ணீர் தெளித்தப்பின்னரே இடப்படுகின்றது. கோலம் இடப்பட்ட இடங்களையே சங்க இலக்கியங்கள் "களம் எனக் குறிப்படுகின்றன. குறிப்பாக முருகப்பூசாரி வெறியாடுமிடங்கள் களமாக அமைகின்றன. இக்களத்தின் மீதே வேலனாகிய முருகப்பூசாரி நின்று ஆடுகின்றான். கேரளத்தில் இம்மரபு இன்றும் உயிரோடுள்ளது. இதற்குக் களமெழுதுதல் அல்லது களமெழுத்து என்று பெயர்.

'களமெழுத்து' என்பது தூய்மை செய்யப்பட்ட இடத்தில் வரையப்பட்ட கோலத்தையே குறிக்கின்றது. சர்ப்பந்துள்ளல் போன்ற வழிபாட்டு நடனங்கள் பல வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட களத்தின் மீதே நடத்தப்பெறுகின்றன. வேலன் தை இய வெறி அயர் களனும் என்று திருமுருகாற்றுப்படை முருகப்பூசாரி வேலன் ஆடும் களத்தைக் குறிப்படுகின்றது.

இலக்கியங்கள் குறிப்படும் 'களன் இழைத்தல்' என்ற சொல் தமிழ்நாட்டில் இன்று மறைந்து போய்விட்டது. அதற்கு மாற்றாகவே அழகு படுத்துதல், ஒப்பனை செய்தல் என்ற பொருளுடைய கோலம் என்ற சொல் புழக்கத்தில் வந்துள்ளது. 'தலைவாசல் கோலம்' என்பது மேலிருந்து இறங்கும் தெய்வம் மண்ணில் கால் பதிப்பதற்கு இடப்பட்ட முதல் களமாகும். வீட்டிற்குள் இடப்படும் கோலம் தெய்வத்தைத் திருநிலைப்படுத்தச் செய்யப்பட்ட இடமாகும்.

கோலம் என்பது ஏன் பெண்களுக்கு மட்டுமேயுரிய கலை, சடங்கியல் வெளிப்பாடாக அமைகின்றது என்பது எஞ்சி நிற்கும் கேள்வியாகும். மனிதகுல வரலாற்றில் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்பது மானிடவியல் காட்டும் உண்மையாகும். சங்க இலக்கிங்களில் முருகனுக்கு வேலனைப்போலவே புலைத்தியும் பூசாரியாக இருந்துள்ள செய்தி காணப்படுகின்றது. அதனால்தான் இன்னமும் தெய்வத்தின் ஆற்றலைத் தன் உடலில் இறக்கி ஆடும் சாமியாட்டம் பெண்களுக்கு விலக்கப்பட்டதாக அமையவில்லை.

கோலம் என்னும் வரைகலையின் தோற்றம் பெண்களைச் சார்ந்தது என்பதையே மனிதகுல வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. கோலம் வரைதல் ஒரு கடமையாகவும் உரிமையாகவும் பெண்களுக்கு அமைந்தது இப்படித்தான். எனவேதான் வறுமைப்பட்ட குடும்பங்களில் கூட கோலமிடுவதற்கு ஒருபிடிச் சுண்ணாம்புப்பொடி இன்னமும் இருக்கின்றது.

நன்றி: புதுவிசை - ஜூன் இதழ்

பார்க்க: புதுவிசை | கோலம் கட்டுரை

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]