Jun 2, 2005

11/2 இலட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ?

ஜூன் 1 அன்றைக்கு நிறைய பள்ளிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட இருந்தன. தமிழகக்கல்வித்துறை இயக்குநரகம் கொடுத்த ஒரு அறிவிப்பு, நிறைய பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. நகரெங்கும் புற்றீசல் போல முளைந்திருந்த நிறைய நர்சரி பள்ளிகளில், ஆங்கில வழியில கற்றுத் தருகிறார்கள் என்கிற ஒரே காரணத்தினால், கவர்ச்சியினால், சைக்கிள் ரிக்சா ஒட்டும் சுப்பனிலிருந்து, ஏதேனும் ஒரு சிறிய பிரைவேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் குமரன் வரை எல்லா நிலைகளிலும் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். ஒரு ஒலைக் குடிசை, இரண்டு டீச்சர்கள், கொஞ்சம் கான்கீரிட் கட்டிடம் இருந்தால் போதும், தமிழகத்தில் மிக லாபகரமாக ஒரு நர்சரி பள்ளியை உண்டாக்கி சம்பாதிக்க முடியும். இப்படி உண்டாக்கப்பட்ட, அங்கீகாரமில்லாத பள்ளிகளை மூடச்சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தொடக்க கல்வித் துறையின் கிடுக்கிப்பிடி உத்தரவு நேற்று தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு அந்த பள்ளிகளுக்கு உடனடியாக "பூட்டு' மாட்டுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனால் அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகள் எதுவும் நேற்று திறக்கப்படவில்லை. அங்கீகாரம் இல்லாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பயிலும் ஒன்றரை லட்சம் குழந்தைகளை ஜூன் மாதத்திற்குள் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள நர்சரி பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். - தினமலர் செய்தி
தமிழக அரசு, கும்பகோணம் தீ விபத்து ஏற்பட்ட பின்னரே அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு சுற்றிக்கை கொடுத்துவிட்டது. இது மெட்ரிக், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு பொருந்தும். ஆனால், நேற்று வரை வெகு குறைவான பள்ளிகளே அங்கீகாரத்திற்கு உட்பட்டு வந்திருக்கிறார்கள். நேற்றைய அறிவிப்பினால், தமிழகமெங்கும் 11/2 இலட்சம் நர்சரி/பிரைமரி குழந்தைகள் பள்ளிக்கு போக முடியாமல் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் அங்கீகாரமில்லாத 195 நர்சரி பள்ளிகள் [தினந்தந்தி 215 பள்ளிகள் என்று சொல்கிறது]மூடப்பட்டுள்ளன. இதேப் போல தமிழகமெங்கும் அங்கீகாரமில்லாத பள்ளிகள் [சுமார் 2000 பள்ளிகள்] இருக்கின்றன, கணக்கில்வராத 500 பள்ளிகளும் இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

நல்ல செய்தி. நல்ல நோக்கம். ஆனால், இதனை பள்ளி திறக்கும்போது தான் செய்ய வேண்டுமா ? கல்வித்துறை இயக்குநரகத்திற்கு ஏற்கனவே இந்த பள்ளிகள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கும். இவர்கள் ஏன் இதனை மே மூன்று/நான்காம் வாரத்திலேயே, தமிழ் தினசரிகளில் பள்ளிகளை பட்டியிலிட்டிருக்கக்கூடாது ? 11/2 குழந்தைகளின் பெற்றோர்கள் இன்றைக்கு தங்கள் குழந்தைகளை எங்கே சேர்ப்பார்கள் ?
"இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது,""195 பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற நர்சரி பள்ளிகளிலோ சேர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெற்றோர் விரும்பினால் அரசு பள்ளிகளில் சேர்ப்போம். இல்லையென்றால் நர்சரி பள்ளிகளில் சேர்ப்போம்,'' என்று தெரிவித்தனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுப் பள்ளிகளில் சேர்க்கும் பணிகள் நேற்று துவங்கிவிட்டன. ஜூன் மாதத்திற்குள் எல்லா குழந்தைகளையும் மாற்றுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. - தினமலர்
ஆனால், நர்சரி பள்ளிகளில் சேர்த்த குழந்தைகளை, அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் தயங்குகிறார்கள். ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வமாயிருக்கும் பெற்றோர்கள் தமிழ் வழிப் பள்ளிகளில் சேர விருப்பப்படுவதில்லை.

குழந்தைகளை "அரசு வழிப் பள்ளிக்கூடங்கள், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றில் தான் மாணவர்கள் சேருவதற்கு நிறைய இடங்கள் காலியாக இருக்கும். எனவே தமிழ்வழிக்கல்வி பள்ளிக்கூடங்களில் தான் சேரமுடியும், ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்க முடியாது" என்றொரு கல்வித்துறை அதிகாரி கூறுகிறார்.

ஆக இதிலேயே குழப்பங்கள் இருக்கின்றன. இது தாண்டி மூடப்பட்ட அங்கீகாரமில்லாத பள்ளிகளின் பட்டியலை ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவகத்தில் ஒட்டி வைத்திருக்கிறார்கள். சென்னையென்றால் பரவாயில்லை. மதுரை, சேலம், கோயமுத்தூரிலிருந்து 30-40 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு சிற்றூரில் இருக்கின்ற பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்று எவ்வாறு தெரிந்து கொள்ளுவார்கள். ஆக, அவ்வூரிலிருக்கும் எல்லா பெற்றோர்களும், எல்லா பள்ளிகளும், 40 மைல்கள் பயணம் செய்து ஒட்டியிருக்கும் பட்டியலில் தங்கள் குழந்தைகளின் பள்ளியின் பெயர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். என்ன மடத்தனம் இது. பள்ளி இறுதித் தேர்வு முடிவினை அறிவிக்க செய்தித்தாள்களைப் பயன்படுத்தும் அரசு, ஏன் இவ்வளவு முக்கியமான விஷயத்தினை வெறும் செய்தியாக மட்டுமே பார்க்கிறது ? பட்டியிலிடப்பட்ட அத்தனைப் பள்ளிகளையும், மாவட்ட வாரியாக பிரசுரித்திருக்க வேண்டாமா ? ஏன் இன்னமும் பெற்றோர்களின் டென்ஷனை அதிகரிக்க வேண்டும் ?

எவ்வளவு அலைச்சல் பாருங்கள். நான் இதை பார்த்தவுடன், தமிழக அரசின் கல்வித்துறை இயக்குநரகத்தின் இணையத் தளத்தினை பார்வையிட்டேன். ஒரு தகவலுமில்லை. இவ்வாறு அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூடிவிட்டோம் என்கிற தகவல் கூட தளத்தில் இல்லை. ஜூன் 1 அன்றைக்கு மூடப் போகிறோம் என்கிற தகவலையாவது ஒரு வாரத்திற்கு முன்பு செய்தித்தாள்களில் கொடுத்திருக்கலாம்.ஏன் அவர்களின் தளத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளைப் பற்றிய தகவல் இல்லை? எத்தனை பெற்றோர்கள் இந்த பிரச்சனைக்காக, பல்வேறு அலுவலக, வேலை பிரச்சனைகளுக்கிடையில் இதனை எதிர் கொண்டாக வேண்டும் ? இப்போது அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பெறப்படும் சான்றிதழகள் எவ்வாறு பார்க்கப்படும்? [மத்திய அரசு கல்வித்துறையின் (CBSE) இணையத்தளத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை பட்டியலிட்டுள்ளார்கள்]11/2 இலட்சம் குழந்தைகளின் வாழ்க்கையினைப் பற்றிய தகவல் எவ்வளவு அலட்சியமாக கையாளப்படுகிறது. இவ்வளவுக்கும் மேலாக, சொந்தக்காரர் வீட்டுக்கு போய், அங்கிருக்கும் ஏதேனும் ஒரு பொருளை தொட்டாலே, வீட்டிற்கு வந்து குழந்தையை அடிக்கும் மக்கள் நாம். இப்படியிருக்கையில், இவ்வாறான சூழ்நிலையில், குழந்தைகளின் மீது பிரயோகிக்கப்படும் வன்சொல், வன்முறைகளை நினைத்தால் பயமாகவும், பாவமாகவும் இருக்கிறது.

நோக்கம் நன்றாக இருந்தாலும், அதனை செயல் படுத்தும் போது ஒழுங்காக செயல் படுத்தவில்லையென்றால், நோக்கத்தின் அடிப்படை குறை கூறப்படும். அவ்வாறு நேராமலிருக்க தமிழக அரசு முனையுமா?

Comments:
\\\ நோக்கம் நன்றாக இருந்தாலும், அதனை செயல் படுத்தும் போது ஒழுங்காக செயல் படுத்தவில்லையென்றால், நோக்கத்தின் அடிப்படை குறை கூறப்படும். அவ்வாறு நேராமலிருக்க தமிழக அரசு முனையுமா \\\\

அம்மாக்கு பேரே அதிரடி தானே.. அப்புறம் இதெல்லாம் எதிர்பார்த்தா எப்படி???

வீ .எம்
 
வீ.எம். அம்மா அதிரடியாகவோ, ஐபிஎஸ் விஜயசாந்தி மாதிரியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இதையெல்லாம் அரசியலில் காட்டட்டும், அது அவர்களின் விஷயம். நான் கவலைப்படுவது, இங்கே அடுத்த தலைமுறையின் எதிர்காலம். சிறார்களின் வாழ்க்கைப் பிரச்சனை. 11/2 இலட்சம் பெற்றோர்களின் தலைவலி. இதையெப்படி சாதாரணமாக கையாள முடியும். டூபாக்கூர் பள்ளியில் சேர்த்தவர்களை குறை சொல்ல முடியுமா ? பாவம் அவர்கள், சமூக வெளியில் தான் பெறாத அங்கீகாரத்தினை தன் குழந்தைகளாவது பெற வேண்டுமென்கிற உந்துதலில் ஆங்கில வழி அரைகுறை நர்சரிகளில் சேர்த்து விட்டார்கள். இங்கே பேசுவது ஒரு தலைமுறையின் எதிர்காலம். இன்றைக்கு ஆரம்ப வகுப்பில் சேரும் ஒரு சிறுவன் தான் இன்னும் 20 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தின் இன்றியமையாத அடையாளம். அவர்களை இப்படியா அணுகுவது?
 
நேற்று 'தி ஹிந்து' வில் நாலைந்து செய்திகள் கல்வித்துறை தொடர்பானவை. அதில் முக்கியமானது நீங்கள் எழுதியுள்ளது. மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம். பூட்டுபோடும் அதிகாரிகள் அதே பள்ளியின் கதவில் பெரிதாக நோட்டீஸ் ஒட்டலாம். கூடவே மாவட்டத்தில் மூடப்பட்ட மற்ற பள்ளிகளின் பட்டியலையும் ஒட்டலாம். தமிழ் நாட்டில் (அது திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும்) எல்லா அறிவிப்புகளையும் முதல்வர் தான் செய்வது வழக்கமாக உள்ளது. கல்வி அமைச்சர், அதிகாரிகள் இவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? இவ்வளவு நாட்கள் ஏன் வாய் திறக்கவில்லை? கும்பகோணம் தீவிபத்து நிகழ்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப்போகிறது. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஊடகங்களும் அதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. (பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாட்டில் வசிக்கும் வலைப்பதிவர்கள் எழுதினால் நன்று).

1. மழலையர் பள்ளி முதல் எல்லா கல்வி நிலையங்களும் சில (3-5) ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்ச வசதிகளுக்காக சோதிக்கப்பட்டு accreditation வழங்கப்படவேண்டும்.

2. Accreditation சோதனையின்போது பெற்றோர்கள் முறையீட்டுக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும்.

3. ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் அமைக்கப்படவேண்டும்.

இந்தப் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவரும் சில வழிமுறைகளைக் குறிப்பிடவும்.

(நாராயண்: ஞாநியிடம் தீம்தரிகிட அனுப்பப்படாதது குறித்து விசாரித்தீர்களா?)
 
கவனிக்க வேண்டியது, மக்களுடைய அறியாமை, அதைக் கட்டிக் காக்கும் அரச, தனியார் ஊடகங்கள். தன் குழந்தை படிக்கும் பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பது குறித்த கவலையின்மை (அதிலும் கும்பகோணம் விபத்துக்குப் பின் அரசல் புரசலாகவேனும் இந்தந்தப் பள்ளிகள் மூடப்படலாம் என்று தெரிந்திருக்கும்). அப்புறம் இதைப் பற்றி அறிந்திருந்தும் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று இதைப் பற்றிய விவாதங்கள், கருத்துச் சேகரிப்புகள், விளம்பரங்கள் போன்றவற்றை நடத்தாத கூத்தூடகங்கள். முந்தையவர்களின் விழிப்புணர்வற்ற வெற்று நம்பிக்கையும், பிந்தையவர்களின் பிள்ளைகள் எப்பாடு பட்டால் நமக்கென்ன என்ற பொறுப்பற்றதனமுமே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதற்கும் மேல் ஆட்டோராணியின் சலுகைகளைப் பார்த்தீர்களா, ஒவ்வொரு ஆட்டோவிலும் மேலும் 5 (?)பிள்ளைகளை ஏற்றிக் கொள்ளலாமாம். ஏற்கெனவே ஆட்டோ நிறையத் திணிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டு போய்க் கவிழும் பிள்ளைகளுக்கு இன்னும் கொஞ்சம் சௌகர்யம் செய்து கொடுக்கிறார்கள்!
 
சுந்தரமூர்த்தி, சுந்தர வடிவேல் நன்றிகள்.

சு.மூ, எனக்கு தீம்தரிகிட வருகிறது. வடிவமைப்பினை மாற்றிவிட்டார். இந்த இதழில் சந்தாதாரர்கள் கட்டாததுப் பற்றி புலம்பி எழுதியிருக்கிறார். மொத்த சந்தாதாரர்கள் 500 பேர் என்கிற கணக்கு இப்போது தான் எனக்குத் தெரிந்தது. வேண்டுமானால், அடுத்த வாரம் சென்னையிலிருக்கும் போது பேசிப் பார்க்கிறேன்.

சுந்தர வடிவேல், எனக்கென்னமோ பெற்றோர்களை குறை சொல்வதில் உடன்பாடில்லை. அரசும்,ஊடகங்களும் தான் என்னளவில் மிகப் பெரிய குற்றவாளிகள். சந்திரமுகி, ஜெயகாந்தன், சு.ரா, இடைத்தேர்தல், நயன்தாராவின் உதடு என விரியும் ஊடகங்கள், மக்களின் அடிப்படையான இந்த விஷயத்தினை எழுதாமலிருந்தது கண்டிப்பாக உறுத்துகிறது. சு.மூ சொன்னதுப் போல எல்லா அறிவிப்புகளையும் முதல்வர் தந்து, முதல்வர் வந்தால் தான் எதுவும் நடக்குமென்கிற நிலை கேவலமானது. தி.மு.க ஆட்சியிலாவது கலைஞர் தவிர பிற அமைச்சர்கள் கண்ணில் தென்படுவார்கள், இந்த ஆட்சியில் சுத்தம். அவ்வப்போது அமைச்சர்கள் பந்தாடப்படும்போதுதான் எந்த துறைக்கு யார் அமைச்சர் என்றே தெரிய வருகிறது.

சாதி சான்றிதழ் வாங்கவே அலைக்கழிக்கும் ஊரிது. இங்கே பெற்றோர்களுக்கு பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றீய யோசனையெல்லாம் ரொம்ப தூரம்.
 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் குழந்தைகளே கிடையாதா? இப்படி இவ்வளவு அறிவு கெட்டத்தனமாக நடந்து கொள்ள முடிகின்றது இவர்களால்?

அனுமதி மறுக்கப் பட்ட பள்ளி விவரங்கள் கல்வித்துறை அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதுவே அம்மாவிற்கு வாழ்த்து என்றால் ஊரிலுல்ல எல்லா பத்திரிக்கைகளில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கும்.

பத்திரிக்கைகளை பற்றி கேட்கவே வேண்டாம். காசுக்காகவே நடத்தப் படுபவைகளை நாம் என்ன சொல்ல முடியும்.

இதை பற்றி நினைத்தாலே இரத்த அழுத்தம் தான் அதிகரிக்கின்றது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]