Jun 9, 2005

கடவுளும், சிகரட்டும் - 2 கவிதைகள்

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் மிக நெருக்கமாகவும், பொருட்செறிவுடனும், காட்சியமைப்பாகவும் தோற்றமளித்தவை இந்த இரு கவிதைகள். முதல் கவிதை கடவுளின் நிலையைப் பற்றி பேசுகிறது. கடவுள் தான் ஜாதிகளை உருவாக்கினார் என்கிற உடைந்த கட்டுமானமும், அப்படி செய்ததற்கு ஈடாக இப்போது பறையடித்து பிராயசித்தம் தேடிக் கொண்டிருக்கிறார் என்ற முடிவும், கடவுள்தன்மை என்பது மனிதத்தன்மையே, சக மனிதனுக்கு ஆதரவாய் மனிதனாக இருப்பதே என்பதே அழகாக விளக்குகிறது ஆதவன் தீட்சண்யாவின் கவிதை. ஆதவன் தீட்சண்யா சமீப காலங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நபர். தலித் வெளியில், ரவிக்குமார் போன்றவர்கள் பெரியாரின் இருப்பினையும், தலித்-பெரியார்-மீட்சி சூழற்றலில் தீவிரமாய் இருக்கும் போது, பெரியாரின் கொள்கைகளையும், தலித் விடுதலைக்கு பெரியாரின் பங்கையும் அதிகமாக பேசி வருபவர்.

அடுத்த கவிதை ஒரு விதமான மேம்படுத்தப்பட்ட காட்சியமைப்பினை உள்வாங்கிய கவிதை. கவிதைகள் பெரும்பாலும் அரூபமான விஷயத்தினை சொல்லும்போது, சில கவிதைகளை கவிதையாக படிக்கமுடியாது, ஆனால் காட்சியாக பார்க்க முடியும். தேவதச்சனின் இந்த கவிதை ஒரு அருமையான நல்ல சினிமாவிற்கான காட்சியாக விரிவு படுத்த முடியும். கவிதைகளிலிருந்து நல்ல காட்சிகள் எடுக்கமுடியும் என்று இன்னொரு முறை நீருபிக்கும் இன்னொரு கவிதை.

கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும்


வா மகனே வா
வந்தாயே இப்பவாவது துணிஞ்சு
உள்ளே வர எனக்குத்தான் தடை
வெளியே வந்து பார்க்க உனக்கென்ன கேடு?

கோபம் நியாயந்தான் ஆனா
அவங்க கட்டுக்காவலை மீறி எப்படி நான் வரமுடியும்?
நாம சந்திச்சிடக்கூடாதுன்னு தான்
உள்ளே வெளியேன்னு பிரிச்சு வச்சிருக்கானுங்க

பிரிச்சு வைக்கிறதுதானே அவனுங்க குணம்
உம்புத்தி எங்கே பீ திங்கப்போச்சு
எம்புள்ளைங்களப் பாக்கறதைத் தடுக்க
உனக்கென்னடா அதிகாரம்னு
உதைச்சி வீசிட்டு வரவேண்டியதுதானே

தூபப் புகையில கண்ணவிஞ்சு
மந்திர இரைச்சல்ல காதடைஞ்சு
ஊதுபத்தி நெடியில மூர்ச்சையாகி
உன் கால்பட்ட கணத்தில்தான் மீண்டெழுந்தேன்
இனி இங்கே வேண்டாம் எனக் கிளம்பினார் அவனோடு

இப்போதெல்லாம் கடவுள்
கோயில்பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை
தன்பெயரால் நடந்த குற்றங்களுக்கு கழுவாயாய்
மோளமடிக்கவும் முட்டுத்துணி அலசவும்
மாடறுக்கவும் மயானங்காக்கவும் மலமள்ளவும்
நியமம் தவறாமல் போய்க்கொண்டிருக்கிறார்
இன்னமும் கோயிலில் கேட்கிற காண்டாமணிச்சத்தம்
யாருக்காகவென்று குழம்பியபடி.

தேவதச்சன் கவிதைகள்

ஜனநெரிசல் சாலைகளில் மூன்று பேர் சிகரட்
பிடிக்க விரும்பினார்கள். ஒருவன் ஒரு சிகரட்டை
வாயில் வைத்துக் கொண்டு லைட்டரை எடுத்தான்.
இன்னொருவன் தன் கையிலிருந்த சிகரட்டோடு
அவனை நெருங்கினான். வேறூ ஒருவன் அதேபோல்
அருகில் வந்தான். மூன்று கருந்தலைகளும் அருகா
மையில் நெருங்கின.

ஆஸ்பத்திரி மாடியில் நின்று கொண்டிருந்தவள்
ஃ எழுத்து ஒன்று
எங்கிருந்தோ நீந்தி வருவதையும்
பிரிந்து செல்வதையும் கண்டாள்.
பக்கங்களைல்
கீழே நழுவவிடும் கண்களிடம்
பிரிதல்கள் ஏதோ சொல்கின்றன.

நன்றி: தட்ஸ்டமில் - இலக்கியம் - ஆதவன் தீட்சண்யா கவிதைகள் | உயிர்மை-ஜூன் '05 - தேவதச்சன் கவிதைகள்

Comments:
நரேன், கவிதைப் பகிர்தலுக்கு நன்றி. ஆதவன் தீட்சண்யாவின் மேலேயுள்ள கவிதையை அவரது 'பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும் ஆட்டம்' (பெயர் சரியா? ) தொகுப்பில் வாசித்திருக்கின்றேன். அவரது கவிதைத் தொகுப்பு வாசித்த அனுபவத்தில் தமிழகத்தில் நின்றபோது அவரது சிறுகதைத் தொகுப்பும் வாங்கியிருந்தேன். அவரது கவிதைகள் வசீகரித்த அளவுக்கு கதைகள் வசீகரிக்கவில்லை. அவ்வாறே, தய். கந்தசாமியினது கவிதைகளிலும் கிண்டலும் ஆவேசமும் நிரம்ப இருக்கும். தலைப்பு கூட கடவுளும் கந்தாமிப்பிள்ளையும் என்ற புதுமைப்பித்தனின் கதைத் தலைப்பை நிராகரித்து எழுதப்படது என்று முதலாம் வாசிப்பில் அர்த்தம் கொண்டேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]