Jun 2, 2005

கோலம்

கோலம் போடுதல் என்பது ஒரு கலை நிகழ்வு. அது ஒரு நுண் கலை. என் வீடே ஒரு மிகப்பெரிய கோல நிறுவனம் மாதிரி தான் தோன்றும். என் வீட்டிலுள்ள எல்லோரும் அக்டோபர் - ஜனவரியில், ஜிஆர்டி காலண்டரை இரண்டாக பிளந்து, பின்னால் இருக்கும் வெண்ணிறப் பகுதியை பேப்பராக உபயோகித்து, கோலம் வரைந்து தள்ளுவார்கள். ரீல் ரீல்களாக, நிறைய பைண்ட் செய்யப்பட்ட கோல நோட்டுகள் என் பரணில் தூசியோடு தூங்கிக்கொண்டிருக்கின்றன. பன்னூடகத்தில் வேலை செய்தாலும், இன்னமும் கோலம் போடுதல் கைவரவில்லை.

இப்போதெல்லாம், யாரும் எனக்குத் தெரிந்து மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து கோலம் போடுவதில்லை. எல்லாம் இரவே போட்டு விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள். காலையில் காற்றாய் வரும் ஆண்டாளுக்கு கிடைப்பதென்னவோ, செகண்ட் ஷோ பார்த்துவிட்டு, வண்டியேறி காணாமல் போய் மிச்சமிருக்கும் கோலம் போட்ட தடங்கள்தான். திருமால் பாவம் கார்ப்பரேஷன் தண்ணீரில் குளோரின் வாசனையோடு ஸ்தானம் செய்கிறார். அடுக்கங்களில்,அரிசி மாக் கோலம் போட்டால், வேலைக்காரி பெருக்கும் போது பிரச்சனை செய்வாள் என்பதால், மயிலாப்பூரில் கிடைக்கும் ஸ்டிக்கர்களை வாங்கி வாசலில் ஒட்டி விட்டு, சோனி ஸ்டீரியோவில் சுதா ரகுநாதன் கேட்கலாம். கொஞ்சம் போரடித்தால், அவள் விகடனில் ரங்கோலி போட்டியில் கலந்து கொண்டு திறனை பறைசாற்றலாம். மற்றபடி, பிற தமிழின் தொல்கலைகளை போலவே இதுவும் ஐசியுவில் தான் இருக்கிறது என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

கோலம் போடுவது பற்றி நிறைய நூல்கள் கிடைக்கும். ஆனால், கோலத்தின் இலக்கிய அந்தஸ்து, ஆளுமைப் பற்றி பேசும் நூல்கள் குறைவு.

இந்த மாத "புதுவிசை" யில் பேரா. தொல்.பரமசிவன் கோலம் பற்றிய மிக அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறார். அங்கே போய் படிக்காமல் இங்கேயே தருகிறேன்.

கோலம் - தொல் பரமசிவன்

கோலம் என்னும் வரைகலை வெளிப்பாடு தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்ததாகும்.

கோலம் என்ற சொல் சங்க இலக்கியங்களின் மிகப் பிற்பட்டதான பரிபாடலில்தான் முதன்முதலாகத் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்க 'கேழற் கோலம்' என்ற தொடராகக் காணப்படுகிறது. பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தில் மூன்று இடங்களில் இத்தொடர் பயின்று வருகிறது. "மாதவி தன் கோலம் தவிர்ந்திருந்தாள் "மணமகளைப்போல யாழ் கோலம் செய்யப்பட்டிருந்தது " மாதவி எழுதுவரிக்கோலம் என்ற ஆட்டத்திற்காகக் கோலம் செய்திருந்தாள் "பழங்குடிமக்கள் குமரிப்பெண்ணைத் தெய்வக்கோலம் செய்திருந்தனர். இவையே சிலப்பதிகாரத்தில் கோலம் என்ற சொல் வருமிடங்களாகும். ஆடுமகளுக்கும், மணமகளுக்கும், இசைக்கருவிக்கும் செய்யப்பட்ட ஒப்பனைகளையே அதாவது கலை வெளிப்பாடுகளையே சிலப்பதிகாரம் கோலம் என்றது.

இன்று கோலம் என்பது அரிசிமாவினாலும் சுண்ணாம்புப்பொடியினாலும், பல வண்ணப்பொடிகளாலும் தரையில் இடப்படும் கோலத்தைக் குறித்து நிற்கின்றது. தரையில் இடப்படும் கோலம், வீட்டின் தலைவாயில், வீட்டிற்குள் தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படும் இடம், கோயில்கள் ஆகியனவற்றில் இடப்படுகின்றது. எனவே கோலம் என்பது அழகுணர்ச்சி சார்ந்த வரைகலை வெளிப்பாடாக மட்டுமின்றி புனிதத்தன்மை அல்லது சடங்கியல் தன்மையுடையதாகவும் விளங்குகின்றது என்பதை உணரலாம்.

தொல் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று தரையைப் புனிதப்படுத்துவதாகும். தூய்மைப் படுத்தப்படாத தரை தெய்வங்கள் காலூன்றி நிற்பதற்கு ஏற்றதன்று. தெய்வங்களும் வானவர்களும் பூமிக்கு (மண்ணுலகிற்கு)வரும்போது தரையினை மிதிப்பதில்லை. அவதாரமான இராமனும் கிருஷ்ணனும் மட்டுமே வெறுங்காலால் பூமியை மிதித்தவர்களாவர்.

"மேலொரு பொருளுமில்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி

கால் தரை தோய வந்து கட்புலக் குற்றதம்மா

என்பது கம்பராமாயணம். இதன் பொருள் பொதுவாகத் தெய்வங்கள் கால் தரைதோய வருவதில்லை என்பதாகும். தெய்வங்கள் வானுலகத்தில் அல்லது மண்ணுலகத்தில் மரங்களில்தான் வாழும். தரையில் மனிதர்களைப்போல வாழ்வதில்லை. மனிதனின் விருப்பத்திற்கும், தேவைக்குமேற்ப மண்ணிற்கு வரும் தெய்வங்களுக்கு மனிதன் "புனித இடங்களை " உருவாக்குகிறான். தெய்வச்சிலைகள் அனைத்தும் கவிழ்ந்த தாமரையின் மீதே (பத்ம பீடத்தின் மீதே)அமைக்கப்படுவதன் காரணமும் இதுதான். நாட்டார் வழிபாட்டு மரபிலும் தெய்வத்தின் கால்கள் தரையிலே பதியக்கூடாது என்பதற்காகப் 'பூடங்கள்' (பீடங்கள்) அமைத்துள்ளனர். பீடங்களின் உச்சிப்பகுதியில் கவிழ்ந்ததாமரை போன்ற வடிவம் காட்டப்பட்டிருப்பதனைக் கூர்ந்து கவனித்தால் அறிந்து கொள்ளலாம்.

படங்களோ, சிலைகளோ வீட்டுப்புழக்கத்தில் இல்லாத காலத்தில் வீட்டிற்குள் தெய்வத்தைத் திருநிலை கொள்ள வைப்பதற்கு குத்துவிளக்கு மட்டுமே இருந்தது. குத்துவிளக்கும் கூட மணைப்பலகை அல்லது மண்ணால் செய்த சிறு பீடம் அல்லது கோலத்தின் மீதுதான் வைக்கப்படுகிறது. வெளியிலும் குத்து விளக்கு இல்லாத நிலையிலும் வீட்டிற்குள்ளும் தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுவதுண்டு. அப்போதெல்லாம் அந்த இடங்களில் கோலங்கள் இடப்படுகின்றன. செம்மண் அல்லது பசுஞ்சாணத்தால் ஆன பிள்ளையாரும் கோலத்தின் பகுதியில்தான் வைக்கப்படுகின்றது.

கோலம் இடப்படுமுன் தரைப்பகுதி தண்ணீராலோ, சாணத்தாலோ தூய்மை செய்யப்படுகின்றது. இதன்மீதே கோலங்கள் இடப்படுகின்றன. இன்றளவும் தலைவாசல் கோலமும் தரையில் தண்ணீர் தெளித்தப்பின்னரே இடப்படுகின்றது. கோலம் இடப்பட்ட இடங்களையே சங்க இலக்கியங்கள் "களம் எனக் குறிப்படுகின்றன. குறிப்பாக முருகப்பூசாரி வெறியாடுமிடங்கள் களமாக அமைகின்றன. இக்களத்தின் மீதே வேலனாகிய முருகப்பூசாரி நின்று ஆடுகின்றான். கேரளத்தில் இம்மரபு இன்றும் உயிரோடுள்ளது. இதற்குக் களமெழுதுதல் அல்லது களமெழுத்து என்று பெயர்.

'களமெழுத்து' என்பது தூய்மை செய்யப்பட்ட இடத்தில் வரையப்பட்ட கோலத்தையே குறிக்கின்றது. சர்ப்பந்துள்ளல் போன்ற வழிபாட்டு நடனங்கள் பல வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட களத்தின் மீதே நடத்தப்பெறுகின்றன. வேலன் தை இய வெறி அயர் களனும் என்று திருமுருகாற்றுப்படை முருகப்பூசாரி வேலன் ஆடும் களத்தைக் குறிப்படுகின்றது.

இலக்கியங்கள் குறிப்படும் 'களன் இழைத்தல்' என்ற சொல் தமிழ்நாட்டில் இன்று மறைந்து போய்விட்டது. அதற்கு மாற்றாகவே அழகு படுத்துதல், ஒப்பனை செய்தல் என்ற பொருளுடைய கோலம் என்ற சொல் புழக்கத்தில் வந்துள்ளது. 'தலைவாசல் கோலம்' என்பது மேலிருந்து இறங்கும் தெய்வம் மண்ணில் கால் பதிப்பதற்கு இடப்பட்ட முதல் களமாகும். வீட்டிற்குள் இடப்படும் கோலம் தெய்வத்தைத் திருநிலைப்படுத்தச் செய்யப்பட்ட இடமாகும்.

கோலம் என்பது ஏன் பெண்களுக்கு மட்டுமேயுரிய கலை, சடங்கியல் வெளிப்பாடாக அமைகின்றது என்பது எஞ்சி நிற்கும் கேள்வியாகும். மனிதகுல வரலாற்றில் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்பது மானிடவியல் காட்டும் உண்மையாகும். சங்க இலக்கிங்களில் முருகனுக்கு வேலனைப்போலவே புலைத்தியும் பூசாரியாக இருந்துள்ள செய்தி காணப்படுகின்றது. அதனால்தான் இன்னமும் தெய்வத்தின் ஆற்றலைத் தன் உடலில் இறக்கி ஆடும் சாமியாட்டம் பெண்களுக்கு விலக்கப்பட்டதாக அமையவில்லை.

கோலம் என்னும் வரைகலையின் தோற்றம் பெண்களைச் சார்ந்தது என்பதையே மனிதகுல வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. கோலம் வரைதல் ஒரு கடமையாகவும் உரிமையாகவும் பெண்களுக்கு அமைந்தது இப்படித்தான். எனவேதான் வறுமைப்பட்ட குடும்பங்களில் கூட கோலமிடுவதற்கு ஒருபிடிச் சுண்ணாம்புப்பொடி இன்னமும் இருக்கின்றது.

நன்றி: புதுவிசை - ஜூன் இதழ்

பார்க்க: புதுவிசை | கோலம் கட்டுரை

Comments:
பேரா. தோ.ப. வின் பெயரை விட்டுவிட்டீர்களே! ( உங்கள் கட்டுரை என்று நினைத்து ரொம்பவே பரவசமாகி, கீழே வந்துதான் புதுவிசை கட்டுர்டை என்று அறிந்தேன்.)
 
மன்னிக்கவும் நாந்தான் சரியாய் படிக்கவில்லை. அவசரம்!
 
விடுங்க வசந்த், It happens ;-)
 
காலையில போட வேண்டிய கோலங்களை இரவு 7:30 மணிக்கு சன் டிவியில போட்டா எப்படிங்க?
 
நரேன்,

சிட்டியில் மட்டும்தான் ராக்கோலம். எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இன்னும் மார்கழி குளிரில் வெடவெடன்று நடுங்கியபடியே கோலம் போடுவதுண்டு. இன்னும் கொஞ்சம் நினைவுகள் இங்கே...http://rajniramki.blogspot.com/2004/12/blog-post_22.html#comments
 
This comment has been removed by a blog administrator.
 
நாராயணன்
சிறுவயதில் இரவே பழகிவிட்டு மறுநாள் 3 மணிக்கே கோலம் போட ஆரம்பித்துவிடுவேன்.தெruவிலேயே மிக பெரிய கோலம் என்னுடையதுதான். இப்போதும் பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க அதை அவன் கணிணியில் வரைந்து தன்னுடைய கலை வகுப்பில் பாராட்டுக்கள் பெறுகிறான்.
காலை வேளையின் சிலுசிலுப்பு பிடித்தமானது. அதன்பின் ozone அதிகம் என்றெல்லாம் கூட பலர் விவாதித்து ஏன் கோலம் போடுவது நல்லது என்று பட்டிமன்றமே நடந்தது.
 
ஊருக்குப் போயிருந்தபோது இன்றும் சின்னப் பிள்ளைகள் கோலம் போட்டுக் கொண்டுதானிருந்தார்கள். கோலம் = அழகு. "கோலக்கிளி மொழியும்..., கோலமாமரத்தின் மீது..." ஞாபகத்துக்கு வருகின்றன.
எனக்குத் தெரிந்து நிறைய ஆண்கள் கோலம் போடுவதும், கோலப் போட்டிகளில் கலந்து கொள்வதுமுண்டு. இம்மாதிரி ஒரு போட்டியில் நானும் என் நண்பனும் ஒரு முறை கோலம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பொடியைத் தூவி ஏதோ படம் ஒன்றை வரைந்தோம்! கோயில்களின் மேற்கூரைகளில் இருக்கும் ஓவியக் கோலங்களை வரைவதெல்லாம் ஆண் பெயிண்டர்கள்தானே? கோலம் என்பது ஒரு ஓவியக் கலை. யார் வேண்டுமானாலும் செய்யலாமில்லையா? "அந்த காலத்துலேருந்தே பெண்கள்தான்" என்று பெண்கள் தலையிலே கட்டுவதான ஒரு தொனி இருக்கிறதோ? அல்லது ஆண்கள் CADல் கோலம் போட்டால் கவுரவம்/தொழில், வாசலில் கோலம் போட்டால் ஹி ஹி என்று ஒரு நினைப்புமிருக்கலாமோ?
 
கோலம் என்ற பெயரே எவ்வளோ அழகு!!! இங்கே நாங்க நடத்திக்கிட்டிருந்த கடைக்குப் பேரே 'கோலம்'தான்!

பள்ளிக்கூடம் படிச்ச காலத்துலே 'எல்லா நோட்டுப் புஸ்தகத்திலும் பின்னாடி கோலமாப் போட்டுத்தள்ளீ
டீச்சருங்க கிட்டே திட்டு வாங்கியதையெல்லாம் எதுக்கு இப்ப ஞாபகப்படுத்தறீங்க?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]