Jun 7, 2005

காடு வா வா என்கிறது......

ஆக இறுதியாக சென்னை வந்தாகிவிட்டது. 4 நாட்கள் சென்னையில் இல்லாமலிருந்தது கொஞ்சம் கஷ்டமாயும், நிறைய மகிழ்வாகவும் இருந்தது. இதனை விவரித்து எழுதினால், மூன்றாம் வகுப்பு மாணவன் கல்விச் சுற்றுலா போய்விட்டு வந்து கட்டாயப்படுத்தி கட்டுரை எழுதியது போலாகிவிடும். ஆகவே, போன இடங்களின் அமைப்பு, இடம், பொருள், ஏவல் போன்ற விஷயங்களை தவிர்த்து அனுபவித்ததை மட்டுமே எழுதலாம். முதலில் முக்கியமாய் சந்தோஷப்பட்டது, நான் போன எந்த இடத்திலும் என்னருமை ஏர்டெல் இல்லை. ஆகவே, செல்லுக்கும் என் சொல்லுக்கும் மொத்தமாய் கெட் அவுட்டு. இதனால் வழமையாய் வரும் "Sir i am calling from XXXXXX Bank. We offer personal loans upto 15 lacs. Are you interested in taking one" போன்ற தொல்லைகளிலிருந்து தப்பித்தேன்.

இரண்டாவது மிக முக்கியமாய் சந்தோஷப்படுவது, நான் போன பெரும்பாலான இடங்கள், விஐபிகள் போக மட்டுமே அனுமதியுள்ள இடங்கள் [நான் கண்டிப்பாக விஐபியல்ல, ஆனால் கூட வந்த நண்பன் தமிழ்நாட்டில் விவிஜபி, அதனால், போகுமிடமெங்கும் ராஜபோசாரம்தான்] ஆகவே என் வாழ்நாளில் அடுத்த 10 வருடங்களில் எதையதை பார்க்க முடியாது என்று நினைத்தேனோ அவ்விஷயங்களைப் பார்க்க முடிந்ததுதான் மகிழ்வின் உச்சம்.

சேரன் எக்ஸ்பிரஸ் பிடித்து கோயமுத்தூர் இறங்கியதிலிருந்து ஆரம்பித்தது ஆட்டம். முதலில் போனது, ஆழியார் அணை. கொஞ்சமாய் தண்ணீர் இருக்கிறது. ஒரிரு ஆட்களைத் தவிர யாருமில்லை. இந்த அணையையும், நாங்கள் தங்கிய அரசினர் விருந்தினர் மாளிகையையும், "காதலிக்க நேரமில்லை"யில் பார்த்திருக்கலாம். பாலையாவின் வீடாகவும், நாகேஷ், பாலையாவிற்கு கதை சொல்லுமிடமும் தான் அவை. அங்கே கொஞ்சமாய் கொட்டிக் கொண்டிருந்த ஒரு அருவியில் நன்றாக ஊறி, குளித்து விட்டு [எருமை மாட்டினை விட நிறைய நேரம் தண்ணிரீலேயே இருந்தோம்.மெட்ராஸ்காரன்பா, தண்ணியோட அருமை எங்களுக்குத் தான் தெரியும்.] வந்தால் நல்ல சூடான சாப்பாடும், சிக்கன் கறியும், அருமையான ரசமும் காத்திருந்தது. வந்த களைப்பு, குளித்த களைப்பு என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வெட்டு வெட்டி, குவாலிஸில் மூணாறு கிளம்பினோம்.

மூணாறு, தமிழக கேரள எல்லையிலிருக்கும் மலையூர். கேரளாவுக்கு சொந்தமான ஊர். தமிழக காட்டு எல்லையும், கேரள காட்டு எல்லையும் சேருமிடம். சரக்கு போத்தல்கள் எடுத்துக் கொண்டு, கேரளா சுங்கச்சாவடியை தாண்ட முடியாது. ஆயிரம் சொன்னாலும், என் நண்பன் தமிழ்நாட்டில் தான் விஐபி. கேரளாவில் அல்ல. ஆகையால், மரியாதையாய் கொண்டு போயிருந்த 3 வோட்கா போத்தல்கள், ஒரு ஒயின் குப்பி, அநியாயமாய் 6 கிங் பிஷர் பியர் அனைத்தையும், எல்லையிலிருந்த தமிழக போலிஸ்காரர்களுக்கு தானம் கொடுத்தோம். அவர்களுக்கு வாயெல்லாம் பல்[குடலெல்லாம் ஆல்கஹால்!!]. நான் போகிற காலத்தில் இவர்களுக்கு சரக்கு தந்த புண்ணியங்கள் கைக் குடுக்குமென்று நம்புகிறேன். கேரள எல்லைக்கு கிளம்பியவுடன் முடிவெடுத்தது, காட்டுக்குள் நடக்க வேண்டியது என்பதுதான். அங்கேயே, மூணாறு செக் போஸ்டிலேயே வழிகாட்டிகள் கிடைக்கிறார்கள். தலைக்கு 60 ரூபாய். நடந்து உள்ளே போக வேண்டும்.

காட்டில் நடப்பதைப் பற்றி எவ்வளவோ கதைகளிலும், திரைகளிலும் படித்து, பார்த்திருந்தாலும் உண்மையாகவே கால் பதிய நடப்பதென்பது வித்தியாசமான அனுபவம். என்னோடு வந்த நண்பர்கள், சோர்வுற்றபோதும், நான் தொடர்ந்து முன்னேறி போனேன். உள்ளே செல்ல தனி உபகரணங்கள் எதுவும் எடுத்துக் கொண்டு போகவில்லை. வெறும் காலில் போட்ட செருப்போடும், என் குட்டை ஷார்ஷோடும் தான் உள்நுழைந்தேன். காட்டில் நடக்கும்போது, பேசாமல் நடக்க வேண்டும். கொஞ்சம் சத்தம் கேட்டாலும், விலங்குகள் ஒடிவிடும். இது தெரியாமல், முதல் அரைமணிநேரம், எங்களின் வீரதீர பிரதாபங்களை கதையளந்தபடி போனதால், நிறைய மான்கள் பயந்து ஒடிவிட்டன [சிங்கமுல நாங்க!!] பிறகு யதார்த்தத்தையுணர்ந்து, பேசாமல் நடக்க ஆரம்பித்தோம். நடந்தோம், நடந்தோம், நடந்து கொண்டேயிருந்தோம். அது ஒரு அற்புதமான அனுபவம். சருகுகள் மிதிபட, நடந்துக் கொண்டேப் போனால், ஏதாவது விலங்கு கொஞ்ச தொலைவில் நம்மை கடக்கும். மூணாறில் நான் பார்த்தது, காட்டு முயல், மான்கள், பன்றிகள், கொஞ்சமே தூரத்தில் யானை. மேற்குத் தொடர்ச்சி மலையினையொட்டியமைந்த காடது. அப்படியே காட்டு வழியேப் போனால், கொடைக்கானலை அடையலாம், குறுக்கு வழியில், கொஞ்சமாய் ஒரு 10 மணிநேரம் நடந்தால் போதும். கட் செய்தால், நாங்கள், வாந்தி, தலை சுத்தலோடு மூணாறிலிருந்து கீழிறங்கி, ஆனைமலை டாப் ஸ்லிப் போய் சேர்ந்தோம். அவ்வளவு வளைவுகள், மிதமாய் மழை வேறு. நான் 10 வருடங்களுக்கு முன் சாப்பிட்ட ஊசிப் போன போண்டா வரை எல்லாமே, வாந்தியாய் வந்துவிட்டது. "பாய்ஸ்" பாஷையில் சொல்லவேண்டுமானால், மலைவளைவுகளைங்கும் ஒரே ஆம்லெட் மயம்தான். வீரப்பனின் நினைவுதான் நடக்கும்போதெல்லாம் வந்தது.

டாப் ஸ்லிபில் மாலை ஆறு மணிக்கு மேல் யாரையும் காடும், வனவிலங்குகளுமிருக்கும் இடத்திற்கு அனுப்ப அனுமதி கிடையாது. நாங்கள் உள்ளே நுழையும்போது தான் ஹிந்துவின் எடிட்டர் ராமின் கார் எங்களைக் கடந்துப் போனது. நாங்கள் நுழையும்போது சரியாக ஆறேகால் ;-) போனதும், கொஞ்சமாய் சாப்பிட்டு, இளைப்பாறிவிட்டு, காட்டுக்குள் இரவில் சபாரி போனோம். இரவு சபாரி விவிஐபிகளுக்கு மட்டுமே. மற்றபடி, எல்லோரும், காலையில் வந்தால் மாலை 6 மணிக்குள் கீழிறங்கிப் போக வேண்டியது தான். எனக்கு மூணாறில் நடந்துவிட்டு, வண்டியில் போக பிடிக்கவில்லை. ஆனாலும், பாதுகாப்பு கருதி, ஒரு மெட்டாட்டர் வேனில் பயணித்தோம். நினைத்தப்படியே, கரடிகள், நாங்கள் போன வழியில் வெளிச்சத்தினைப் பார்த்து ஒடிப் போயின. நாங்கள் தங்கிய காட்டேஜின் வாசலில் சர்வசுதந்திரமாய், காட்டுப் பன்றிகளும், மான்களும், யானைகளும் உலாவின. பார்க்கவே ரம்மியமான காட்சியது. வெளியில் வந்து காட்டேஜின் படிக்கட்டில் உட்கார்ந்து வெறுமனேப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், பல விலங்கு பறவைகளைப் பார்க்கலாம். ஏற்கனவே, என்.ஜி.சி, டிஸ்கவரி, ஹிஸ்டரி சேனல்கள் பார்த்துக் கெட்டுப் போன என் மனசு, டாப் ஸ்லிப் போனதும் இன்னமும் கெட்டுப் போனது. சில தகவல்களை அங்கிருப்பவர்களிடமிருந்து சேர்த்து வைத்திருக்கிறேன். பார்ப்போம், மீண்டும் காட்டுக்குள் போகும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று.காட்டுக்குள் நடந்துப் போகும் மறுநாள் காலையினை எண்ணியவாறே உறங்கப் போனேன். விலங்குகளோடு டூயட் பாடியவாறே இரவு கழிந்தது.

அதிகமாய் எதிர்பார்த்த காலை வந்துவிட்டது. எங்களுக்கு வழிகாட்டியாய் வந்தவர் ஆறுமுகம் என்கிற இளைஞர். டாப் ஸ்லிப்பினை சுற்றியுள்ள அடர்காடு, தமிழகத்தின் மிகப் பெரிய காடாக திரிகிறது. 960 சதுர கீ.மீ பரப்பளவுள்ள இந்த அடர்காடு, சுமார் 300-400 வனவிலங்குகளின் உயிரினம். ஆறுமுகம் ஒரு திறமையான, புத்திக் கூர்மையுள்ள வழிகாட்டி. பிபிசி தொலைக்காட்சிக்காக இருவாட்சி பறவையினைப் [Hornbill] பற்றி எடுத்த ஒரு விவரணப்படத்தின் முழுக்குழுவினரோடு இரண்டு வருடங்கள் காட்டிலிருந்தவர். தமிழகத்தின் முன்னோடி விலங்கியல் விவரண இயக்குநராக இருக்கும் அல்போன்ஸ் ராஜ், காட்டு ஒலியியலை சேகரிக்கும் சிவ பிரசாத் போன்றவர்களுக்கு ஆறுமுகம் செல்லப்பிள்ளை. அப்பேர்ப்பட்டவர் தான் எங்களுக்கு முன் சர்வசாதாரணமாக ஒரு ஒலிம்பஸ் பைனாகுலரினை வைத்துக் கொண்டு வழிகாட்டினார். ஏற்கனவே காட்டில் பயணித்த அனுபவமிருந்ததால் இந்த முறை பேசாமல் போனோம். வழியெங்கும் இயற்கை வாரி வழங்கியிருக்கிறது. பச்சைபசேலென செடி,கொடிகள். காலில் பல்லியோ, பாம்போ, பிற ஊர்வன கடிக்குமே என்கிற பயங்களேதுமின்றி கொஞ்சம் தைரியமாக (கொஞ்சம் அதுப்பாக!!] நான் முன்னேறினால், நண்பர்கள், எல்லா திசைகளிலும் பயஎச்சரிக்கையோடு தான் அடியெடுத்து வைத்தார்கள். இதனால், நானும் ஆறுமுகமும் இன்னும் இரண்டு நண்பர்களும் ஆங்காங்கே தங்கி, தங்கி போக வேண்டிய கட்டாயம்.

உள்ளே போனதும் முதலில் நாங்கள் பார்த்தது, காட்டெருமைகள். ஆறுமுகம் பாஷையில் சொல்வதனால், காட்டு மாடுகள். கும்பல் கும்பலாக, கூட்டம் கூட்டமாக எங்களின் முன் கடந்து ஒடின. அந்த தருணம் இப்போது நினைத்தாலும் ஜில்லிடுகிறது. புத்தகத்திலும், படத்திலும், டிவியிலும் பார்த்த உருவங்கள், கண்முன் ரத்தமும், சதையுமாய், கும்பல் கும்பலாய் காணும் பரவசம், அனுபவித்து மட்டுமே உணரக் கூடியது. ஆறுமுகம் புலி பார்க்கலாம் என்கிற ஆசையை வேறு கிளப்பிவிட்டார். அதனால், கொஞ்சமும் சோர்வுறாது, தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தோம். மரத்திலமர்ந்து எங்களைப் பார்த்தவுடன் மிரண்டோடிய காட்டு அணில், சட்டையே செய்யாமல் கடந்து போன புள்ளி, சாம்பல் மான்கள், அவ்வப்போது புதர்களிலிருந்து எங்களை பயமுறுத்தி, தானும் பயந்து தறிக்கெட்டோடிய காட்டுப் பன்றிகள், பெயர் மறந்து போன நிறைய பறவைகள், தூரே பிளறிய யானைக் கூட்டம் என விதவிதமாய் விலங்குகளும், பறவைகளும் என் பயணத்தினை என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்திற்கு கொண்டு சென்றது. காலடியில் மிதிப்பட்டு எழும்பும் புற்கள், எங்கெங்கும் பச்சையினை மட்டுமே தத்தெடுத்திருக்கும் இயற்கை, கொக்கரிக்கும் சுவர்கோழிகள், முகம் காட்டாமல் கத்தும் குரங்குகள், பறவைகள், ரீங்காரிக்கும் பூச்சிகள், குத்தி கிழிக்கும் முட்செடிகள், கொஞ்சமசந்தாலும் கிழிக்க காத்திருக்கும் சப்பாத்தி கள்ளிகளென காடு ஒரு ரகளையான குடும்பம். டாப் ஸ்லிப்பில் நாங்கள் சுமார் 10 கீ.மீ தூரம் உள்ளே போயிருப்போம். மற்றவர்களுக்கு கால் கடுத்ததால், திரும்ப வேண்டியதாக போய்விட்டது. என்னை மட்டும் விட்டிருந்தால், குறைந்தபட்சம் 50 கீ.மீ.தூரம் அடர்காட்டினுள் சென்றிருப்பேன்.

நிறைய விஷயங்களை ரசிக்க வேண்டுமானால், காட்டினுள் கொஞ்சம் பாதுகாப்பாய் மழை பெய்து விட்டவுடன் போக வேண்டும். ஆறுமுகம் நடந்துக் கொண்டே சொன்ன தகவல்கள், ஆச்சர்யமாகவும், இயற்கையின் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையையும் இன்னமும் கூட்டியது. மழை பெய்தால், விலங்குகள், காட்டினுளிருந்து சமதளத்தினை தேடியோடிவரும். காரணம், காட்டினுள் கொசுத்தொல்லை அதிகரிக்கும். பெரும்பாலான யானைகள் தன் வாழ்நாளில் ஒரே ஒரு குட்டி தான் போடும். யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள். புலி தான் போகுமிடமெங்கும், தான் பாத சுவட்டினை பதிந்துவிட்டு தான் போகும். சிறுத்தை, சாய்வான மரங்களில் ஏறாது. நெட்டுக்குத்தான மரங்களில் தான் ஏறும். கரடிகள் புற்றினைக் கீறி உண்ணும். காட்டெருமைகள் கூட்டமாய் தான் வாழும். டாப் ஸ்லிப்பில் இருக்கும் பாம்புகள் பெரிதாய் விஷமற்றவை, கடித்தால் கொஞ்சம் மயக்கம் வரும். உயிர் போகாது. செந்நாய்கள் எந்த விலங்கினை குறிவைத்தாலும், முதலில் தாக்குவது எதிரியின் கண்களைத் தான். இப்படி என்னுடைய விலங்கறிவு, ஆறுமுகத்தினால் நீண்டுப் போனது. மறக்காமல், கொஞ்சம் அபூர்வ விலங்கு, பறவைகளைப் பற்றிய தகவல்களை சேர்த்து வைத்திருக்கிறேன். திரும்பி வரும்போது, காட்டினுள் இருக்கும் பூர்வகுடிகளான "காடர்கள்" என்னுமினத்தின் குடில்களுக்கு சென்றேன். புதிதாக ஏதுமில்லை. பெண்கள் நைட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மொத்த ஊரில் 27 வீடுகள் தான் இருக்கின்றன. திரெளபதியம்மன் தான் குலதெய்வம். நாங்கள் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அம்மனுக்கு தீமிதி திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. இவர்கள் பிள்ளைகள் படிப்பதற்கென்ற்கு, காட்டினுள்ளேயே ஒரு அரசு பள்ளிக்கூடமிருக்கிறது. இவர்கள் கொஞ்சம் நம்மாதிரியான ஆட்களைக் சேர்க்கிறார்கள். பேசும் தமிழ்தான் கொஞ்சம் மாறுகிறது. இன்னமும் ஆழ்ந்து காட்டினுள் போனால், "மலைமலை வாசிகள்" என்கிற ஆதிகுடிகள் வசிக்கிறார்கள். அவர்கள் நம்மாதிரி ஆட்களைப் பார்த்தால் ஒடிவிடுவார்கள் என்றார் ஆறுமுகம். நாகரிமடைந்த [அப்படி சொல்லலாமா நம்மை?!] மனிதர்களைக் கண்டு அவர்கள் அச்சப்படுகிறார்கள். அரசும், அவர்களின் வாழ்வியலினை கருதி, அவர்கள் வாழுமிடத்தினை தடைசெய்யப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட இடமாக செய்திருக்கிறது.

இயற்கையோடு இயற்கையாய், எல்லா விலங்குகளைப் போல நானும் ஒரு விலங்காய் எவ்விதமான கட்டுக் கோப்புகளின்றி என் வாழ்நாளில் இரண்டு நாட்கள் கழிந்தன. சுத்தமான காற்றினை சுவாசித்துக் கொண்டு, மினரல் வாட்டர் போத்தல்களற்ற, குளோரின் கலக்காத, நதி நீரினை குடித்து, இயற்கையின் ரகசியங்களை காதோரம் கேட்டு, கிசுகிசுத்துக் கொண்டு, யாருமற்ற வனத்தில், மர வீட்டில் தனியாய் அமர்ந்திருந்து, வனத்தின் இரவினை ரசித்துக் கொண்டு ஆனந்தமாய் இருந்தது வாழ்க்கை. வாழ்நாளின் மிக முக்கிய கடமையாக இதை கொண்டு வரலாம். எல்லோரும் ஹஜ்ஜூக்கும், ஜெருசெலமுக்கும், திருப்பதிக்கும் போவதைப் போல், இந்தியாவின் அடர்காடுகளில் தன் வாழ்நாளில் ஒரு வாரத்தினையாவது செலவு செய்யவேண்டும். இயற்கையின் பிரம்மாண்டங்களும், நுணுக்கங்களும், விளையாட்டுகளும் கண்டிப்பாக வியப்பிலாழ்த்தும்.

அதிகாலையில் டாப் ஸ்லிப்பினையடைந்தால், இந்த காட்டு நடைப்பயணத்தினை வழிகாட்டியோடு பதிவு செய்து உள்ளே போகலாம். வாழ்நாளில் தவறவிடாதீர்கள் இதை. பொள்ளாச்சியிலிருந்து 40-50 கீ.மீ. தொலைவிலிருக்கிறது என்று நினைக்கிறேன். கண்டிப்பாக இரவு பயணங்கள் கிடையாது. காலினை முழுக்க மறைக்கும் காலனிகளை அணிந்து உள்ளேப் போவது பாதுகாப்பானது. என் நண்பர்கள் நான்கு பேர்களுக்கு அட்டை கடித்து, கலவையாக பி பாஸிடிவ், ஓ பாஸிடிவ் என ரத்தத்தினை உறிஞ்சியெடுத்து விட்டது. முடிந்த வரையில் ஜீன்ஸ் அணியுங்கள், வழியில் இடரும் முட்செடிகள் கீறி கிழிப்பதிலிருந்து தப்பலாம்.

இந்த அனுபவத்தினை என்னதான் எழுதினாலும், வார்த்தைகளில் விவரிப்பது கடினம். வார்த்தைகள் வாழ்க்கையாகாது, அதனால் எழுதியதை விட ஆயிரம் மடங்கு ஆத்ம திருப்தியும், புத்துணர்வும் பெற்றவனாக இருக்கிறேன். காடு இன்னும் கொஞ்ச நாளில் என் வீடாகவும் மாறலாம். நான் அக்காலத்திற்காக காத்திருக்கிறேன்.

Comments:
ஆஹா... நல்ல பயணக்கட்டுரை... போட்டோ எங்கே?

//கொண்டு போயிருந்த 3 வோட்கா போத்தல்கள், ஒரு ஒயின் குப்பி, அநியாயமாய் 6 கிங் பிஷர் பியர் அனைத்தையும், எல்லையிலிருந்த தமிழக போலிஸ்காரர்களுக்கு தானம் கொடுத்தோம்//

வாழ்க பாரதம்

//நாங்கள் உள்ளே நுழையும்போது தான் ஹிந்துவின் எடிட்டர் ராமின் கார் எங்களைக் கடந்துப் போனது.//

நல்லவேளை உங்க கூட பெயரிலி இல்லை :-)
 
கறுப்பியின் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொள்கின்றீர்கள் கறுப்பியின் கனவை தாங்கள் அனுபவித்து
 
//நாங்கள் உள்ளே நுழையும்போது தான் ஹிந்துவின் எடிட்டர் ராமின் கார் எங்களைக் கடந்துப் போனது.//

எதுக்கும் கொஞ்சம் அவதானமாப் பாத்தீங்களா? வனவிலங்குகளிலே எதுக்காச்சியுங்கூட ஹிண்டு எடிட்டர் ரகசியமா ஏதாச்சும் பேச்சுவார்த்தை பண்ணப்போனாரோ, இல்லை, நெடுமாறன், கோபால், கல்யாணி அல்லாரும் காட்டுக்குள்ளே தீவிரவாதிகளோட போட்டோ புடிச்சாங்க, நாங்கூட பேட்டி எடுக்கிறேன்னு வீரமா வீரப்பன் செத்துட்டான்னு உறுதியானப்புறம் போனாரோ என்னவோ?
ஹி ஹி....
 
// வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொள்கின்றீர்கள்// அதே!!
நல்ல பதிவு நாரயணன். போட்டோ போட்டிருக்கலாம்.
 
நரேன் நல்லதொரு பதிவு. அதுசரி அந்த VVIP சினேகாவா அல்லது த்ரிஷாவா :-)?
 
/// நரேன் நல்லதொரு பதிவு. அதுசரி அந்த VVIP சினேகாவா அல்லது த்ரிஷாவா :-)?///
டிசே, :-)
 
This comment has been removed by a blog administrator.
 
அன்புள்ள நாராயண்,

நல்ல பதிவு. இன்னைக்குக் காலையிலே கண்முழிச்சதும் படிச்சேன். மனசுக்கு நிறைவா இருந்தது!!

you made my day!!!!

வாழ்த்துக்கள்!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
//என்னை மட்டும் விட்டிருந்தால், குறைந்தபட்சம் 50 கீ.மீ.தூரம் அடர்காட்டினுள் சென்றிருப்பேன்/

இந்தப்பதிவில் இப்படி பல இடங்களில் காட்டின் மேல் உங்களுக்கு உள்ள விருப்பமும், ஆர்வமும் உங்கள் எழுத்தையும் மீறித் தெரிகிறது. எனக்கும் காடு மிகவும் பிடிக்கும்.. இங்கே இருக்கிற காட்டுகளில் சுற்றித்தெரிகிறேன். சென்ற சனிக்கிழமை காட்டுக்குள் வழிதவறி ஒரு 10 மைல் சுற்றினோம். இங்கு பெரிதாய் விலங்குகள் இல்லை. ஆனால் காட்டின் இரகசியங்கள் அற்புதமானவை. அப்புறம் அது என்ன வீடு-காடு?
 
அருமையான அழகான ஆழ்ந்து அனுபவித்து எழதப் பட்டப் பயணகட்டுரை. உங்களைப் போல இல்லாவிட்டாலும் கல்லூரிப் படிக்கும் போழுது கோடைக்கானலில் காட்டில் போன நினைவு வந்தது. எதிர்காலத்தில் நிச்சயம் நாம் உங்கள் தலைமையில் போய் வரலாம். புகைப் படங்கள் எங்கே நரேன்?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
காடுகள் மலைகள் தேவன் கலைகள். நாங்கள் இரண்டு வருடம் முன் முதுமை சென்றிருந்தோம். இன்னமும் வியாபாரமாகாத இடம. ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தபோது விடிகாலம் யானைகள் பிளிறல் கேடு விழித்தோம். அற்புதமான இடம். அடர்ந்த மரங்களும் ஆழ்ந்த நிசப்தமும்சொல்ல முடியாது.
பரவாயில்லை நானும் ஒரு VVIp தெரிந்து கொண்டேன்!friendship is just an arm's distance.
 
It should be Mudhumalai.
 
வாங்க அண்ணாச்சி,

செம சுத்து போல? நல்ல கட்டுரை, கையோட நிழல் படக்கருவி எடுத்துட்டு போலையா? சீக்கிரமா படத்தப்போடுங்கையா.

நீங்க சொன்ன இடமெல்லாம் போனதில்ல ஆனா முதுமலையில நல்லா சுத்தியிருக்கேன். வனவிலங்குகள் சரணாலையம், சிங்காரமாயார் அணை, மின் உற்பத்தி நிலையத்தின் விஞ்ச் பயணம், கொசுவன் பட்டியா(ஊரு பேரு மரந்துபோச்சு) ல ராத்திரி தங்கி ஜன்னல் வழியா மான், யானை பாத்தது....ஹம்ம்ம்...
 
பிரகாஷ், கறுப்பி, பெயரிலி, கா.ரா, டிசே, முத்து, துளசி, தங்கமணி, சிவா, பத்மா நன்றிகள்.

டிசே,அந்த விவிஐபி சிநேகா,திரிஷா போன்ற நடிகைகள் அல்ல. தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியில் இருக்கும் ஒரு ஹெவிவெயிட் நண்பன். இதற்குமேல், அவனைப் பற்றி எழுதினால், நான் சபிக்கப்பட்டு விடுவேன் ;-)

தங்கமணி, காடுகள் எனக்கு பிடித்தமானவை. இயற்கையின் அற்புதங்களை மிக அருகிலிருந்து பார்க்க முடியும். அனுபவிக்க முடியும். காடு-வீடு என்பது ரொம்ப நாட்களாகவே, காட்டிலிருந்து என்.ஜி.சி, டிஸ்கவரி போல விவரணப்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசையிருந்தது. இந்த முறை போனபோது நிறைய விவரங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். உள்ளேப் போனால், குறைந்தது 6 மாதம் -1 வருடம் காடு வீடாக போக வாய்ப்புண்டு. நடக்கும் போதெல்லாம் வீரப்பன் நினைவு வந்துக் கொண்டேயிருந்தது. பறவைகளின் குரல், விலங்குகளின் நடமாட்டத்தினை அறிந்திருந்த வீரப்பன் சலீம் அலிக்கு பின் இந்தியாவின் மிக சிறந்த பறவை, விலங்கியல் நிபுணனாக இருந்திருக்க வேண்டியவன். அநியாயமாய் கொன்றுவிட்டோம்.

சிவா, பத்மா, முதுமலை தமிழகத்தில் இருந்தாலும், மிக அடர்த்தியான காடில்லை. மேலும், எங்கெங்கெல்லாம், அரசு ஒரு காட்டினை சுற்றுலாத்தலமாக அறிவிக்கிறதோ, அங்கெல்லாம் பெரும்பாலும் விலங்குகள் இருப்பதில்லை. எல்லாம் ஒடிப் போய்விடும். அதனால் தான் என்னமோ வேடந்தாங்கல், முதுமலை, எங்கள் லோக்கல் சென்னையிலுள்ள வண்டலூர் போன்றவை பெரிதாக அளப்பரிய அனுபவத்தினை தருவதில்லை. ஆனாலும், இந்த முறை சீசனுக்கு வேடந்தாங்கல் போகும் எண்ணமிருக்கிறது. பார்ப்போம்.

எல்லோருக்கும், புகைப்படங்களை நான் எடுக்கவில்லை. மேலும், ஒரு அனுபவத்தினை அவ்வளவு சுலபமாக ஒரு புகைப்படத்தில் சிறைப்படுத்த முடியாது. இரண்டொரு நாட்களில் எனக்கு புகைப்படங்கள் வந்து விடும். வந்தவுடன் தேர்ந்தெடுத்து போடுகிறேன்.
 
நாராயணன் - நீங்கள் அனுபவித்ததில் 80% நானும் அதே இடங்களில் அனுபவித்திருக்கிறேன். வீரப்பன் பெயரைச் சொல்லிக்கொண்டு பண்டிப்பூர் காடுகளை மூடுவதற்கு முன் நான்கு நாட்கள் அந்தக் காட்டிலும் காலார நடந்திருக்கிறேன். நீ யாரா இருந்த என்னடா பெரிய புடுங்கி என்று அலட்சியம் செய்து எங்கள் முன் ஒரு மயில் நிதானமாக இருபது நிமிடங்கள் ஆடி வழிவிட மறுத்தது. கண்ணில் நீர்வழிய நின்ற ஒற்றைக் ஆண்யானையை நாங்கள் அரைமணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கிருந்து வந்தார்களோ தெரியாது ஒரு ஜீப்பில் எங்களைக் கொத்தாகப் பிடித்துப் போட்டு காட்டேஜில் இறக்கிவிட்டுப் போனார்கள். அடுத்த வாரம் அதே இடத்தில் யானை மிதித்து ஒருவர் செத்துப் போனார்.
 
என்னய்யா இது இயந்திர வாழ்க்கையில் சிக்கி சீரழிஞ்சிக்கிட்டு இருக்கிற நம்ம கிட்ட இந்த மாதிரி சொல்லி வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிறீங்க.

//காடு இன்னும் கொஞ்ச நாளில் என் வீடாகவும் மாறலாம். நான் அக்காலத்திற்காக காத்திருக்கிறேன்.//

இன்னாபா! சீக்கிரமே வீரப்பன் ரேஞ்சுக்கு மாறப்போகிறீரா?
 
வெங்கட், விஜய் நன்றிகள்

//கண்ணில் நீர்வழிய நின்ற ஒற்றைக் ஆண்யானையை நாங்கள் அரைமணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.//
கண்ணில் நீர் வழிந்தால் அது மதநீர். ஆண்யானை சம்போகத்திற்கு தயாராக இருக்கிறது என்று பொருள். அப்பேர்ப்பட்ட இடங்களில்தான், பாகன்கள் அடக்கி, யானை பாகன்களையும், மற்றவர்களையும் தூக்கிப் போட்டு மிதித்துவிடும். நாங்கள் ஒரு யானை சவாரி செய்வதாக இருந்தது, காட்டுக்குள். ஆனால், நாங்கள் போனசமயம் தான் ஒரு காட்டுப்பன்றியினை புலி துரத்தியோடியது என்கிற செய்தி வந்தது. அதனால், பாதுகாப்பு கருதி, யானை சவாரி தடை செய்யப்பட்டது. நீங்கள் தப்பி பிழைத்தீர்கள் ;-)

விஜய், இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபடவே, இந்த மாதிரி பயணங்கள். இன்னும் அதிகமாக வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள, இமயமலை வருட இறுதியில் அல்லது அடுத்த மார்ச்-ஏப்ரலில் போகலாமென்று இருக்கிறேன் ;-)
 
நாராயணா, நாராயணா! இதெல்லாம்தான் தொழில்ரீதிப் பயணங்களா.. நடக்கட்டும், நடக்கட்டும்.
நல்லவேளையாக இதுபோல காட்டில் சுற்றித் திரிந்த அனுபவம் நமக்கு பலமுறை வாய்த்து விட்டதால் உங்களைப் பார்த்து பொறமைப்படவில்லை. ;-)
காடுகள் என்றைக்கும் அலுக்காதவை. அது சரி, திருப்பதி அருகிலுள்ள 'தலகோண' நீர்வீழ்ச்சிக்கும் அதை சுற்றி உள்ள காட்டுப் பகுதிக்கும் சென்றிருக்கிறீர்களா?
 
நரேன்!
அருமையாக இருக்கிறது. எனக்கும் உங்களைப் பார்த்துப் பொறாமையில்லை. காரணம், காட்டை நன்றாக அனுபவித்து விட்டேன். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அநதக் காடும் மிருகங்களும் நாசமடைந்து விட்டது. இன்று வன்னியில் ஒரு யானையைப் பார்க்க வேண்டுமென்றால் சிரமப்பட வேண்டும். 8 வருடங்களின் முன்பு நாம் தேடிப்போகத் தேவையில்லை. மக்கள் குடியிருப்பிருக்கும் இடங்கிற்கூட அதுவாகவே எமது பாதைகளை வழிமறித்து நிற்கும். இன்று எங்கே போனவையென்Nறு தேடும் அளவுக்கு வந்துவிட்டது.
 
சுவாரஸ்யமான பயன கட்டுரை ..

\\\மாட்டினை விட நிறைய நேரம் தண்ணிரீலேயே இருந்தோம்.மெட்ராஸ்காரன்பா, தண்ணியோட அருமை எங்களுக்குத் தான் தெரியும்//

சரியா சொன்னீங்க... !! என் recent பதிவை படிங்க ..ஏன் சொன்னேனு புரியும்.. (ஹஹ்ஹா. என் வலைப்பூ விளம்பரம் தான் ) :)

//போயிருந்த 3 வோட்கா போத்தல்கள், ஒரு ஒயின் குப்பி, அநியாயமாய் 6 கிங் பிஷர் பியர் அனைத்தையும், எல்லையிலிருந்த தமிழக போலிஸ்காரர்களுக்கு தானம் கொடுத்தோம்////

அப்புறம்.. கடைசி வரைக்கும் என்ன செய்தீங்க????? பாவம்.. !!

வீ .எம்
 
//அதிகமாக வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள, இமயமலை வருட இறுதியில் அல்லது அடுத்த மார்ச்-ஏப்ரலில் போகலாமென்று இருக்கிறேன் ;-)//

அதுக்குள்ள இமயமலைக்கா???? வேண்டாம் தலீவா! நீங்க வாழ்க்கையில அனுபவிக்க வேண்டியது நெறைய கெடக்கே.

அது மாதிரி கைய விசுக் விசுக்குன்னு ஆட்டி தமிழ்நாட்டையும் ஆடவச்சு அப்புறம் இமயமலைக்கு போனா அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கு... ஆனா நீங்க என்னடான்னா???
 
நாராயணன்
முதுமலை பெங்களூரின் பகுதியில் இருந்து வரும் ஆரம்ப இடங்கள் நன்றாகவ்வே உள்ளது. 10 குடில்களும் சமைத்து உணவு தர சிறிய இடமும் தான்.இதி எழுதுவதற்கு காரணம் படிப்ப்வர் யாரேனும் குழந்தைகளோடு செல்ல நினைத்தால் சென்று வரலாம் என்பதற்காக்த்தான்.
நான் ஏற்கெனெவே பலமுறை இமயமலை அடிவாரங்கள் சென்று வந்திருக்கிறேன். இப்போது ரஜனி சென்ற ருத்திரப்பிரயாக் கூட சென்று தங்கி வியந்திருக்கிறேன்
 
சுதர்சன், விஜய், வன்னியன், வீ.எம், பத்மா நன்றிகள்.

சுதர்சன், பல வேலைகளுக்கிடையில் இதையும் ஒரு வேலையாக எடுத்துதான் போனேன். இதை வேலையாக பார்க்கவில்லையென்றால், என் மனசு தேவையில்லாமல், கேளிக்கைக்கு செலவு செய்கிறாய் என்று குதிக்க ஆரம்பித்துவிடும். [என்ன நல்ல சப்பைக்கட்டா!]

விஜய், தலீவா, இமயமலை நான் போற காரணம் வேற, அவர் போன காரணம் வேற. கவலைப்படாதீங்க. எங்க போனாலும், நான் கானா, டாஸ்மாக், தண்ணி லாரி மறக்காத ஆளுதான்
 
அளியார், டாப்ஸ்லிப்'ன்னு நம்ம ஊர் பக்கம் வந்திருக்கீங்க.. சீசன் இல்லாத நேரத்துல வந்துட்டீங்களே..

//எல்லையிலிருந்த தமிழக போலிஸ்காரர்களுக்கு தானம் கொடுத்தோம்.//
தமிழக போலீசார் எதுக்குசாமி செக் பண்றாங்க, அவுங்க ஊருக்குள்ள போகும்போது, கேரளா போலீஸ்?
மூனார் செக்போஸ்ட்ல 200 ரூபா குடுத்து ஒரு 'கேஸ்' நிறையா எடுத்துட்டு போயிருக்கோம்.. நீங்க எப்படி மாட்னீங்க..
(இந்த ரேடியேட்டர்க்கு கீழ, ஏர் பில்டர்க்கு பக்கத்துல எல்லாம் எதுக்குங்க எடம் விட்டிருக்காங்க கார்ல.. கொஞ்சம் பேனட்ட திறந்து பாருங்க, அடுத்த தடவை இப்படி மாட்டிகிறதுக்கு முன்னாடி :-)

//இரவு சபாரி விவிஐபிகளுக்கு மட்டுமே.//
அப்படியா நான் அவ்ளோ பெரிய வி.வி.ஐ.பி'யா.. நிறைய தடவை நைட் சபாரி போயிருக்கேன்,, கொஞ்சம் செலவு.. அவ்ளோதான்.

//யாருமற்ற வனத்தில், மர வீட்டில் தனியாய் அமர்ந்திருந்து, வனத்தின் இரவினை ரசித்துக் கொண்டு ஆனந்தமாய் இருந்தது// டாப்ஸ்லிப்போட ஹைலைட்டே இது தான்ங்க.

//பொள்ளாச்சியிலிருந்து 40-50 கீ.மீ. தொலைவிலிருக்கிறது என்று நினைக்கிறேன்.//
டாப்ஸ்லிப் பொள்ளாச்சியிலிருந்து சரியா 34 கி.மி..
 
//நடக்கும் போதெல்லாம் வீரப்பன் நினைவு வந்துக் கொண்டேயிருந்தது. பறவைகளின் குரல், விலங்குகளின் நடமாட்டத்தினை அறிந்திருந்த வீரப்பன் சலீம் அலிக்கு பின் இந்தியாவின் மிக சிறந்த பறவை, விலங்கியல் நிபுணனாக இருந்திருக்க வேண்டியவன். அநியாயமாய் கொன்றுவிட்டோம். //


மிகச்சரியாக நானும் காடுகளில் நடக்கும் போது இதை நினைத்துக்கொள்வேன். அவனது காட்டைப்பற்றின அறிவு மகத்தானது. அதைப்பதிவு செய்துகொண்டிருந்தால்!
 
"மிருகம் போல் காட்டை நேசி,
மீண்டும் நாம் ஆதி வாசி"
 
என்ன தலை தலைப்பைப் பார்த்ததும் கூறாமற் சன்னியாசம் கொள் என்று புறப்பட்டுவிட்டீர்களோவென்று நினைத்தேன்.ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேன்ல சீக்கிரமா ஒரு பயணத் திட்டம் தயார் பண்ணி வையுங்க வருட இறுதியில் இந்தியா வரும் எண்ணமிருக்கிரது.
 
2002-இல் பரம்பிகுளம், தூனக்கடவு ஆகிய் இடங்களில் ஒரு சமையற்காரரோடு 8 நாள் leisurecamp அடித்தோம். கேரள வன பாதுகாப்பாளர்களுக்கு டிமிக்கி கொடுத்து handycam-இல் படம் பிடித்தது, நட்ட நடுக்காட்டில் வண்டி reverse எடுக்கையில் புகையால் கலைந்த காட்டு தேனீக்கள் கோபப்பட்டு கொட்டி அவஸ்தை பட்டது, மலைப்பாம்பும் hornbills-ஐயும் மணிக்கணக்கில் பார்த்து ரசித்தது ரம்யமான நாட்கள், இப்படி நினைவுகள் பலப்பல!! இரவு 10 மணிக்கு சிங்க வால் குரங்குகள் போடும் பாருங்கள் ஒரு குலை நடுங்கவைக்கும் சத்தம் (புலி வருதாம்!!) !! நம்ம VIP friend-உம் கதறினார் !! , btw, VIPs துணை இல்லாம போக முடியுமா?...hornbill- ஐ சோலைகாக்கா என்று அழைக்கின்றனர் - அது சரி அங்கே அதுதான் காக்காய் பொல !
 
நல்ல பதிவு நாராயண் அவர்களே. icarus அவர்கள் சொன்னபடி புகைப்படங்களையும் இணையுங்கள் என்பது என் வேண்டுகோள்.

என்னுடைய மூணார் முழுக்க கிளப் மஹிந்த்ராவிலேயே கழிந்தது... மழை அதிகம் பெய்ததால் காட்டிற்குள் போக வேண்டாமென்று தடுத்து விட்டனர்.

மத்தபடி, கமல் பிரபலாக்கும் முன்னரே நான் பார்த்த கோடைக்கானலின் devil's kitchen தான் என் நினைவுக்கு வருகிறது. 2004-ல் மீண்டும் சென்றபோது வழியெங்கும் பஞ்சுமிட்டாய், பலூன் விற்றுக் கொண்டிருக்கும் கடைக்காரர்களைத்தான் பார்க்க முடிந்தது. :(
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]