Jul 31, 2005

கொத்து பரோட்டா

இந்த வாரம் சுஜாதா வாரம் போல இருக்கிறது. சுஜாதா க.பெ.துமில் எழுதிய ஸ்ரீரங்கத்தில் 13000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு மறுப்பு தெரிவித்து எழுதிய கடிதத்தினை வழக்கம்போல இரண்டு வரிகளில் தான் எதை எழுதினாலும் மறுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியபடி தாண்டிவிட்டார். விகடனுக்கு கடிதமெழுதிய இரண்டு பேர்கள் ஒரு பிரதியை காலச்சுவடுக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது. ஆகஸ்ட் மாத காலச்சுவட்டில், மூன்று பக்கங்களில் வெளியிட்டு வேறு "யாரையோ" எதிர்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். தமிழ் சிற்றிதழ்கள் வரவர, அ.தி.மு.க, தி.மு.க சார்பு தொலைக்காட்சிகள் போல ஆகிவருகின்றனவோ என்கிற சந்தேகம் வருகிறது. கட்சி பிரிந்து, கட்டம் கட்டி அடித்துக் கொள்கிறார்கள். வலைப்பதிவுகள் எவ்வளவோ தேவையில்லை பரவாயில்லை [நன்றி: ரம்யா]. இதன்மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், தமிழ் அறிவுஜீவிப் புத்தகங்களில் குறிப்பாக காலச்சுவட்டில் வரவேண்டுமானால் சுஜாதாவினை எதிர்த்து எழுதுங்கள். வாய்ப்புகளதிகம். இதுதாண்டி, எல்லா சிறுபத்திரிக்கைகளிலும், அடிக்கடி அடிபடும் இன்னொரு பெயர் அ.ராமசாமி. எனக்குத் தெரிந்து, படம் பார்க்க தியேட்டருக்கு, நோட்புக், ஸ்கேல், ரெபரென்ஸ் புத்தகங்கள், இருட்டில் எழுத ஒரு டார்ச்லைட் கொண்டு போகும் ஒரே ஜீவன் இவராக தான் இருக்கும். தமிழ்சினிமாவினை மெக்கானிக்கினைப் போல அக்குவேறு ஆணிவேறாக பிரித்து இவர் எழுத ஆரம்பித்தால், அ.ராமசாமி, அபத்த ராமசாமியாகிவிடுவார். பிப்ரவரி 14, தாஸ் போன்ற படங்களுக்கான விமர்சங்களை விரைவில் எதிர்ப்பாருங்கள்.

பார்க்க - காலச்சுவடு

"ஆறரை கோடி பேர்களில் ஒருவன், அடியேன் தமிழன், நான் உங்கள் நண்பன்" என்று ஏ.ஆர். ரஹ்மான் வாயி(யா)லாக ஆரம்பித்து, பிண்ணி எடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இது யாருக்கான பதிலாய் இருக்குமென்று உலகமக்களின் தீர்ப்புக்கு விட்டு விடலாம். ஏ.ஆர். ரஹ்மான் அந்நியனில் விட்டதை ஈடுகட்டியிருக்கிறார். அஆவில் 6 பாடல்கள். 4 தேரும் என்று நினைக்கிறேன். வக்கிரம் நிறைந்த தமிழ் இயக்குநர்களில் சூர்யாவும் ஒருவர் என்பது ஒரு புறமிருந்தாலும், ரசனைமிக்க ஆள். தன் படங்களை எவ்வாறு வியாபாரத்தில் விற்கவேண்டுமென்று நன்கு தெரிந்த சாமர்த்தியசாலி. "வருகிறாய், தொடுகிறாய் வெந்நீர் போல சுடுகிறாய்" ஒரு கிளாசிக் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல். ஹரிஹரனும், சித்ராவும் கலக்கியிருக்கிறார்கள். இதுதாண்டி, "மரங்கொத்தியே" என்கிற பாடலை ஒரு கூட்டமே பாடியிருக்கிறது. "மயிலிறகே" பாடல் ஒகே ரகம். ஆச்சர்யம். பி.எப்பில் ஒரு பாடலிலும் ஆங்கிலமே இல்லை. வாலி வூடு கட்டி வெளயாடி இருக்கிறார்.

கேட்க - அஆ

"பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் பொன், வெள்ளி, முத்து போன்ற உயர்மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கரூவூலம் என்பதாகும். கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை அரசுப் பண்டாரங்களைப் போலவே கோயில்களீலும் பண்டாரங்கள் இருந்தன. இப்பண்டாரங்களில் உயர் மதிப்புடைய தங்கம், வெள்ளியிலான சிலைகளும் நகைகளும் பாதுகாக்கப்பட்டன...................... பண்டாரம் என்பது செல்வக் குவிய்லைக் குறிக்கும் சொல் என்பதனால் அருட்செல்வத்தை அள்ளி வழங்கும் இறைவனே 'மூலபண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்" என்று நீள்கிறது பண்டாரங்கள் பற்றிய செய்தி குறிப்பு "அறியப்படாத தமிழகம்" புத்தகத்தில். காரணம், இரண்டு நாட்களுக்கு முன்பு தி.நகர் சந்திப்பில் ஒரு காவியுடையணிந்தவர் என் வண்டியை எடுக்கும் போது, "தம்பி நானொரு பண்டாரம். ஏதாவது இருந்தா கொடுங்க" என்று கேட்டதில் தொடங்கியது "பண்டாரங்கள்" பற்றிய ஆராய்ச்சி. என்ன ஆச்சரியம், ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் அதற்கு நேர்மாறாக மாறியுள்ளது. Treasury என்பதற்கு கஜானா என்பதற்கு பதிலாக, பண்டாரமென்று சொல்லலாமே. எவ்வளவு அருமையான சொல். ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் கொலைச் செய்யப்பட்டு, அதன் நேர்மறை பொருளை தந்துக் கொண்டிருக்கிறது. இதுப் போல வேறு எவ்வளவு சொற்களை தொலைத்திருக்கிறோம்.

படிக்க - அறியப்படாத தமிழகம் - பேரா. பரமசிவன், ஜெயா பதிப்பகம்.

பிரகாஷ் புத்தக விளையாட்டு ஆரம்பித்ததுப் போல இன்னொரு விளையாட்டு. போரடித்தால் விளையாடலாம். இசை விளையாட்டு விளையாடலாம். இதில் கேட்கும் கேள்விகள் கொஞ்சமே. ஆழமாய் எழுத வேண்டிய கட்டாயங்கள் இல்லை. நீளநீள பதிவுகள் தேவையில்லை. நீங்கள் மடிக்கணினியோ, மேசைக் கணினியோ, ஆடியோ சிஸ்டமோ எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள். நானே கேள்விக் கேட்டு பதிலையும் சொல்லி தொடங்கி வைக்கிறேன். இஷ்டமிருந்தால் தொடருங்கள்.

மொத்த பாடல்களின் எண்ணிக்கை: 700 +
மொத்தக் கொள்ளளவு: மடி, மேஜை கணினிகள் சேர்த்து 3.2 ஜிபி
பிடித்த இசையமைப்பாளர்: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, பரசுராம் ராதா
பாடகர்கள்: எஸ்.பி.பி. எஸ்.பி.பி, எஸ்.பி.பி & பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ், கண்டசாலா,
பிடித்த இசை வடிவங்கள்: தமிழ் சினிமாப் பாடல்கள், சூபி பாடல்கள், அரபி பாடல்கள், கொஞ்சமாய் நேரத்துக்கேற்றாற் போல் எம்.டிவியின் ஆங்கிலப் பாடல்கள்
சமீபத்தில் வாங்கிய குறுந்தகடு: இளையராஜாவின் திருவாசகம்
பாத்ரூமில் முணுமுணுக்கும் பாடல்/ல்கள்: - "காதல் யானை - அந்நியன்", "வருகிறாய், தொடுகிறாய் - அஆ" "அந்த நாள் ஞாபகம் -அது ஒரு கனாக்காலம்"
என்றைக்கும் பிடித்த ஒரே ஒரு பாடல்: "தென்றல் வந்து தீண்டும் போது" - அவதாரம்

சுடோகு விளையாடுவதை விட, டெக்கான் குரோனிகல் சப்ளிமெண்டரி படிப்பதை விட இது எவ்வளவோ தேவையில்லை ;-)

இது எப்படி இருக்கு?
சமீபத்தில் ஒரு பெரிய விளம்பரநிறுவனத்தின் நிர்வாகியோடு பேசிக் கொண்டிருந்தேன். பேச்சினிடேயே ஒரு சுவாரசியமான விதயத்தினை பகிர்ந்து கொண்டார். நிர்வாகி சங்கீத இசை ரசிகர். ஒரு இளம் பாடகரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அந்த பாடகர் இப்படி புலம்பியிருக்கிறார். "தமிழ்,தெலுங்கு, ஹிந்தின்னு கூப்புடராங்க சார். கூப்பிட்டு அப்பா மாதிரி பாடுங்கன்னு கேக்கறாங்க. அது கூட பரவாயில்லை. பாடி முடிச்சவுடனே, உங்க அப்பா மாதிரி பாட்டுக்கு நடுவுல கொஞ்சம் சிரியுங்க, இருமுங்க, குரல் மாத்திப் பாடுங்கன்னு வேற கேக்கறாங்க. அவர் எங்க நான் எங்க, அதனால பாடறதை கொறச்சுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்". அந்த இளம் பாடகர்: சரண் அவர் அப்பா: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

பைனாகுலர் என்கிற ஆங்கிலப் பெயருக்கு இணையாக தமிழ் பெயர் யோசித்து ரொம்ப நாட்களாய் தேடிக் களைத்து, ஜோதிகாவின் 50,000 கலர் முகூர்த்தப் பட்டு புடவையை சூர்யா பார்த்தாரா [நயன்தாராராராரா......] என்கிற சந்தேகத்தோடு சுற்றி, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஹோர்டிங்கில் இருக்கும் சன்சில்க் நேச்சுரல் விளம்பர மாடலின் அழகில் மயங்கி, ஒரமாய் வண்டியை விட்டு, யார் இந்த பெண் என்று என்னுளிருக்குள் கூகிளில் தேடி மாட்டாமல் போய், பேசாமல் மாடல் கோ ஆர்டினேட்டர்களைப் பிடித்து விசாரித்து, கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்னும் போது சடாலென யோசனை மின்னியதால் இன்று முதல் இந்த பத்தி "கொத்து பரோட்டா" என்கிற சுத்த தமிழ்பெயரோடு வரும் :-) அப்பாடா, சன் சில்க் பொண்ணுப் பத்தி சொல்லியாச்சு!!

Jul 27, 2005

நீரும், நெருப்பும்

மும்பையில் வரலாறு காணாத மழை. இப்போதுதான் என்.டி.டிவியில் முழு விவரத்தினையும் பார்த்தேன். ஒரு நாள், ஒரே ஒரு நாள் பெய்த மழை இந்தியாவின் வணிக தலைநகரை ஆட்டம் காணவைத்திருக்கிறது. நான் பார்த்த வரையில் 200 பேர்களுக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 18 மணி நேரங்கள், வாகனங்கள் செல்ல வழியின்றி நடுத் தெருவில் நின்றிருந்திருக்கின்றன. என்.டி.டிவியின் சீனிவாசன் ஜெயினின் புண்ணியத்தில், [அவர்கள் கெளதம் சிங்கானியாவுக்கு நன்றி சொல்கிறார்கள், ஹெலிகாப்டர் தந்தற்காக] வானிலிருந்து மும்பையினைப் பார்க்க முடிந்தது. நகரமா இல்லை இவர்கள் ஒடும் ஆற்றுக்குள் இருக்கிறார்களா என்கிற சந்தேகம் வந்துவிட்டது. இயற்கையின் சக்தியினை இம்மாதிரியெல்லாம் பார்க்கும் போதெல்லாம் வியப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் தண்ணீர். தண்ணீர். தண்ணீர் மட்டுமே. சில வருடங்களுக்கு முன் அப்போதைய நிலவரத்தில் கெவின் காஸ்ட்னரின் வாட்டர் வேர்ல்டு என்கிற படத்தில் இதேப் போல் செட் போட்டு எடுத்திருப்பார்கள், அது நிஜமான செவ்வியாக முகத்தில் அறையும்போது, படம் பார்த்த வியப்புப் போய், அங்கிருக்கும் மக்களை எண்ணி அக்கறையும், கேள்விகளும் எழுந்தது. மும்பை நான் பார்த்த வரையில் பணமும், பிச்சைக்காரத் தனமும் அருகருகே இருக்கும் நகரம். சென்னையிலாவது இதை கொஞ்சமாய் வடசென்னை பக்கம் தள்ளி விட்டு விடலாம். ஆனால், மும்பையில் தாராவியில் மட்டுமல்ல குடிசைகள், மும்பையே கமல் சொன்னதுப் போல ஒரு பெரிய சைஸ் தாராவி தான். ட்சுனாமி சென்னையினை தாக்கிய போது, கடுப்பாக சொன்னேன், இது மட்டும் மும்பையில் நடந்திருந்தால், பாதி வி.ஐ.பிகள் போயிருப்பார்கள் என்று. கரி நாக்கு. நல்லவேளை வி.ஐ.பிகள் யாரும் இறந்ததாக செய்திகளில்லை. இப்போது மழை நின்றிருக்கிறது. ஆனால், மும்பையின் கிழக்கு பகுதியில் இன்னமும் ட்ராபிக் குறையவில்லை. மூன்று நாட்களுக்கும் முன்பு சென்னையில் இரவு ஒரு இரண்டு மணிநேரம் மழை செம காட்டு காட்டியது. அதற்கே, என் அலுவலகத்தினை சுற்றி அகழிகளும், கொத்தளங்களும் உருவாகி, என்னை அரசனாக்கி, அலுவலகத்திலேயே இருக்கும் படியாக போனது. மும்பையில் பெய்த மாதிரி பெய்தால் அவ்வளவுதான் சென்னை!

மும்பையின் பேய் மழைப் பற்றிய பிற பதிவுகள்

சுதாகர் | அலெக்ஸ் பாண்டியன் | ராஜேஷ் ஜெயின்

பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்கிற மூத்தோர் சொல் நினைவுக்கு வந்தது. மும்பை கடலில் இருக்கும் மும்பை ஹை எனறழைக்கப்படும், ஒ.என்.ஜி.சியின் மிகப்பெரிய பெட்ரோல் ஆழ்துளை கிணறு தீப்பற்றி எரிகிறது. இன்று மதியம் ஆரம்பித்த தீ இன்னமும் அணையவில்லை. பெட்ரோல் ஆழ்துளை கிணறுகள் எரிந்தால் எப்படியிருக்கும் என்று யோசிப்பவர்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அமெரிக்கா, ஈராக்கிலும், ஈராக், குவைத்திலும் பற்ற வைத்த எண்ணெய் கிணறுகளையும் அதன் மூலம் ஏற்பட்ட பொருளிழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றையும், டார்டாய்ஸ் இல்லாமல் ரீவைண்ட் செய்யலாம். நீரில் 200 பேர் போனால், நெருப்பில் 3 பேர்கள் இறந்திருக்கிறார்கள். 271 தொழிலாளிகள் கடலில் குதித்து இன்னமும் மிதந்துக் கொண்டு இருக்கிறார்கள். தீ வெகுவாக பரவிவிட்டதால், கடல் பாதுகாப்பு துறை வீர்ர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த கிணற்றிலிருந்து தான் இந்தியாவின் உள்நாட்டு எரிப்பொருள் தேவையில் 50% பூர்த்தியாவதாக ஒரு செய்தியுண்டு. இப்போது தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பதால் 2-3 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு இருக்கும் என்று பூர்வாங்க தகவல்கள் சொல்கின்றன.

மும்பை பெருந்தீ பற்றிய சுட்டிகள் -இந்தியன் எக்ஸ்பிரஸ் | ஹிந்துஸ்தான் டைம்ஸ் | பிஸினஸ் ஸ்டாண்டர்டு

மழையினால் உண்டாகிய சேதம் 500 கோடி இருக்கும். நெருப்பினால் உண்டாகும் பொருளியல் சேதம் 2-3 பில்லியன் டாலர்களாகவும், சுற்றுச்சூழல் சேதம் மிக அதிக அளவிலும் இருக்கும். விவேக் ஒரு படத்தில் நக்கலாக சொல்வார், பஞ்சபூதங்களுக்கு எதிராக நடக்காதே என்று ஒரு ரோட்டோர ஜோசியன் சொல்வான். அதற்கு என்னால் எதுவும் முடியலைன்னா, நான் மாத்ரு பூதத்துக்கிட்டே போரேண்டா என்று. இங்கு இரண்டு பூதங்கள் ஒரே நாளில் சும்மா ஷோ காட்டியதற்கே நம்மால் தாங்க முடியவில்லை. பஞ்ச பூதங்களும் ஆடினால் அவ்வளவுதான்.

அவ்வப்போது இயற்கை தன் வலிமையினைக் காட்டும்போது தான் எவ்வளவு அற்ப பதர்கள் நாமெல்லாம் என்று மரமண்டைக்கு உரைக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு இனிமேலாவது நாம் மாறலாம் என்று ஒரு நாளும் நான் சொல்ல போவதில்லை. அவரவர் பார்வை அவரவர்களுக்கு.

ஜமீலாவின் பதிவுக்கான என் பதிலை தனிப் பதிவாக எழுதுகிறேன். அதுவரை தூற்றும் அநாமதேயங்கள் வேறு வேலைப் பார்க்கலாம். பின் வந்து இகழலாம்.

Jul 26, 2005

என் பெயர் நளினி ஜமீலா

என் பெயர் நளினி ஜமீலா, வயது 51, நானொரு பாலியல் தொழிலாளி. திருச்சூர், கேரளாவிலிருந்து வருகிறேன். என்னைப் பற்றி ஒரு வலைப்பதிவிலும் செய்திகள் இல்லை. சரியென்று நானே என்னைப் பற்றி எழுதிக் கொள்கிறேன். பெரிதாய் காரணங்கள் ஒன்றுமில்லை. நான் பாலியல் தொழிலை சார்ந்தவளாதலால், என்னையும், என் தொழிலையும், என் அனுபவங்களையும், என் வாடிக்கையாளர்களையும், சக தோழிகளையும், ஏமாற்றுபிசகுகளையும் கொண்டு புத்தகம் எழுதியிருக்கிறேன். இந்தியாவில் பாலியல் தொழிலாளியால் எழுதப்படும் முதல் புத்தகம் என்பதில் எனக்கு பெருமைதான். Oru Laimgika Thozhilaliyude Athmakatha (The Autobiography of a Sex Worker) என்றழைக்கப்படும் இதனை DC பதிப்பாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். நான் முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், இதற்கு மக்களிடேயே கிடைத்த வரவேற்பு அப்ரிதமானது. 2000 புத்தகங்கள் இதுவரை இரண்டு வாரத்தில் விற்றிருக்கிறது.

ஒடாதீர்கள். கண்டிப்பாக, இதில் நான் யாரோடு படுத்தேன், எப்படி என்னை புணர்ந்தார்கள் என்றெல்லாம் விரிவாக எதுவுமில்லை. ஏற்கனவே இரண்டு விவரணப் படங்களை எடுத்திருக்கும் அனுபவத்தில் தான் இப்புத்தகத்தினை எழுதியிருக்கிறேன். கிளுகிளுப்பூட்டவோ, கிறங்க வைக்கவோ இந்த புத்தகத்தில் இடமில்லை. கேரளாவின் பாலியல் வறட்சியையும், பாலியல் இரட்டைத்தன்மையையும் தான் இதில் போட்டு உடைத்திருக்கிறேன். நான் விரும்பி தான் இத்தொழிலை செய்கிறேன். எல்லா பாலியல் தொழிலாளியின் ஆரம்பமான வறுமை தான் என்னை இதில் இழுத்தது, ஆனால் இதில் எனக்கு இப்போது உடன்பாடே. பத்தினிகளாய் தினமும், கணவரோடு அடிப்பட்டு, இரவு எட்டு மணிக்கு மேல் ரோட்டில் நடமாட பயப்பட்டு, எல்லோருக்கும் அடங்கி நடுங்கும் ஒரு சராசரி கேரளப் பெண்ணை விட என் நிலை எவ்வளவோ பரவாயில்லை. எனக்காகவாவது, யாரை அனுமதிக்க வேண்டும், யாரோடு படுக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையிருக்கிறது.

நான் தற்போது கேரள பாலியல் தொழிலாளிகளின் மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். கேரளாவின் பாலியல் தொழில் ஒரு ஆண்களின் வடிகாலின் வறட்சியாக தான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு சராசரி மலையாளி ஆண், தன் பாலியல் சார்ந்த இச்சைகளை தணித்துக் கொள்ள முடியாத அளவிற்கு, இங்கே சமூக விலங்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே, அதிகமாக, தற்கொலைகளும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளும் நடக்குமிடம் கேரளாவாகதான் இருக்கும். சாதாரண தொழிலாளியிலிருந்து அமைச்சர்கள் வரை ஏதேனும் ஒரு வகையில் பாலியல் பலாத்காரர்களாகவோ, பலவீனர்களாகவோ இருக்கிறார்கள்.

நிறைவான பாலுறவு என்பது ஒரு அடிப்படை மானுட தேவை. சமூகமும், போலிஸூம், கலாச்சார காவலர்களும் இதனை ஒத்துக் கொள்ளாத வரையில் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும் இந்நாட்டினை விட்டு வெளியேறாது.

நளினி ஜமீலா, இந்தியாவின் முதல் பாலியல் எழுத்தாளர். பாலியல் உறவினைப் பற்றி மற்றவர்கள் எழுதுவதற்கும், ஒரு பாலியல் தொழிலாளியே எழுதுவதற்கும் உள்ள வித்தியாசங்களும், இந்த புத்தகம் வந்த இரண்டே வாரத்தில் 2000 பிரதி விற்றதும், இந்தியாவில் பாலியல் பற்றிய பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இன்னமும், பாலியல் தொழிலை அங்கீகாரம் பெற்ற தொழிலாய் அறிவிக்காத வரையில் ஜமீலா பேசும் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும், வன்புணர்வுகளும் குறையாது.


ஜமீலா என்றொரு மனுஷி
பார்க்க - நளினி ஜமிலாவின் புத்தகத்திற்கான தி வீக்கின் விமர்சனம்

பைனாகுலர் 10352

எம்.ஐ.டி என்கிற மண்டைப் பெருத்தவர்களடங்கிய பல்கலைக்கழகத்தின் சார்பில் Technoogy Review என்கிற இதழ் வெளிவருகிறது. Fast company, Business 2.0, Wired படிக்கும் புண்ணியவான்கள், இதையும் கொஞ்சம் பார்க்கலாம். இனி வரப்போகும் நுட்பங்களையும், வணிக சாத்தியக்கூறுகளையும் இன்னபிற அறிவியல் சங்கதிகளையும் உடைத்துச் சொல்கிறார்கள். கொஞ்சம் பின்னால் போய் [2003,2004] பார்த்தால், அவர்களின் இதழ்களில் எழுதியிருந்ததில் நிறைய விதயங்கள் நடந்திருக்கின்றன. கொஞ்சம் முன்னாலும், பின்னாலுமாக போய் படித்துக் கொண்டிருக்கிறேன். நுட்பத்தின் வாலைப் பிடித்து பயணம் செய்ய நினைக்கும் அன்பர்கள், சந்தா கட்டாமல் படிக்கலாம். எம்.ஐ.டி-யிலேயே எம்.ஐ.டி டெக்னாலஜி இன்ஸைடர் என்கிற இதழும் வருகிறது. ஒரு நல்ல இந்தியனாக சந்தா கட்டிப் படிக்கவேண்டும் என்கிற காரணத்தினால், பக்கத்தினை பார்த்ததோடு சரி. இது தாண்டி, தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆளுமை, மாறும் ஊடகங்களின் பங்கு, பன்முனை தொழில்கள் பற்றி படிக்க பாரெஸ்டர் மேகசீனை சிபாரிக்கிறேன். எழுதிப் போட்டால், வீட்டுக்கு இலவசமாக அனுப்பிவிடுவார்கள். பாரெஸ்டர் ஒரு உலகளாவிய மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம். இங்கே சென்னையில் மயிலாப்பூரில், ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை வைத்துக் கொண்டு உலகின் பல தொழில்களுக்கு ஆராய்ச்சி அறிக்கை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு "போதி" என்கிற புது சிற்றிதழ் காலாண்டிதழாக வெளிவந்திருக்கிறது. தலித்துகளின் குரலாக இது இருக்குமென்றும், வரலாற்றினை மீட்சி செய்யும் தளமாகவும், தலித் சார்ந்த எழுத்துக்களை ஒருங்கிணைக்கும் மேடையாகவும் இது அமையும் என்று எழுதியிருந்தது. ஆசிரியரின் முன்னுரையில் சே குவாராவின் "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்பதை மேற்கோள் காட்டி, நாம் வரலாற்றினை விடுதலை செய்வோம் என்று எழுதியிருந்தார் ரவிக்குமார். சமீப காலமாக ரவிக்குமாருக்கு தலித் எழுத்தாளர்களிடமிருந்து காட்டடி விழுந்துக் கொண்டிருக்கிறது. பிள்ளை கெடுத்தாள் வினை யாரைக் கெடுத்ததோ இல்லையோ, ரவிக்குமாரின் ஆளுமையை கெடுத்து அசைத்துப் பார்த்திருக்கிறது என்பது நிஜம். இதுதாண்டி, நான் கேள்விப்படும் சில விதயங்களும் சரியாக தோன்றவில்லை. இவ்வலைப்பதிவில் இதை தீவிரமாக எழுத ஆரம்பித்தால், இது ஒரு இலக்கிய "லைட்ஸ் ஆன்"னாகிவிடும் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் சனிக்கிழமை இரவு அர்ச்சனாவோடு பேசி முடித்துவிட்டு, என்னைப் பார்த்தால் சங்கதிகளை பகிர்ந்துக் கொள்கிறேன். போதி எல்லா சிற்றிதழ் விற்கும் கடைகளிலும் கிடைக்கிறது. என்னுடைய போன பதிவினைப் படித்து நீட்சியலிஸ்டாக மாறியவர்கள், சிறுபத்திரிக்கைகளோடு தொடர்பு கொண்டிருந்தால், ஏதெனும் கூகிளில் தேடி எடுத்து ஐந்தாறு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்க பெயர்களை முன் வைத்து நீட்சியலிஸ கோட்பாடினை எழுதலாம். கண்டிப்பாக வெளியிடுவார்கள். கொஞ்ச நாளில் க.பெயில் வாத்யார் இதை எழுதியதும் நம் விசைப்பலகை கத்திகளைக் கொண்டு போருக்கு கிளம்பலாம். இது தாண்டி, சந்திரவதனாவின் பதிவிலிருந்து, தமிழை உலகமொழியாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நாவிற்கு அனுப்பும் ஒரு பெடிஷன் பார்த்தேன். இதன் மூலம் பயனிருக்குமா, இல்லையா என்று தெரியாமல் போனாலும், நட்சத்திரப் பதிவுக்கு கள்ள வோட்டுப் போடுவது போல இந்த பெடிஷனிலும் ஒரு கையெழுத்துப் போடுங்கள்

ரெமோவா இது. முடி கொட்டி, இளந்தாரிகள் போல கத்திக் கொண்டு, தாவி குதித்துக் கொண்டு, ஸ்டிரிங்கில் கைவைக்காமலேயே கிடாரை ஆட்டிக் கொண்டு, "Love on SMS" என்று பாடிய பாடலை சஹாரவில் கேட்க நேர்ந்தது. மக்கள் முன்தீர்மானத்திற்கு போவதற்குமுன், இந்த ரெமோவும், சங்கரின் ரெமோவும் ஒன்றல்ல. இவர் ரெமொ பெர்னாட்டஸ். கோவாவிலிருந்து கிளம்பி, இந்தியாவில் ஆங்கில பாப் பாடல்களின் தலைமகனாக விளங்கியவர். பெப்சிக்காக இவர் பாடிய Yehi hai right choice baby.ah..ahaa விளம்பர வட்டங்களில் கனபிரசித்தம். தமிழில் கூட ஒரு பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதாக ஞாபகம். பாவம், வளர்ந்துவிட்ட நுட்பஜிகிடிகளாலும், புதுபாடகர்களாலும் ஒரம் கட்டப்பட்டு, போட்டியாக இறங்குகிறேன் பேர்வழி என்று மீண்டும் அரதப்பழசான " ஒரு பையன் ஒரு பொண்ணு" சமாச்சாரத்திற்காக மைக் பிதுங்க பாட்டுப் பாடுகிறார். ம்ஹும். காலம் முடிந்துவிட்டது. சில பேர்கள் இதுப் போல தன்னை தாண்டி காலம் போனாலும், அதை ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதமாய் தங்களையும் இருத்திக் கொள்ள முயல்கிறார்கள். [Avoid the blogs-- நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல ;-)]

கொஞ்ச நாட்களாகவே இந்தியாவில் தியாகிகளின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர், தியாகி சோட்டா ராஜன். தெஹல்காவின் சமீபத்திய பேட்டியில் தான் செய்த கொலைகள் அனைத்தும் [1992 மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நினைவுக்கு வருகிறதா] இந்தியாவின் நலனை முன்னிறுத்தியே செய்யப்பட்டன எனவும், தான் ஒரு தேசப்பற்று மிக்க இந்தியன் எனவும், இந்திய உளவுத்துறையும், தானுமே தாவுத் இப்ராஹீமின் வலைப்பின்னலை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் விரிகிறது. ஆகவே மக்களே, இந்தியாவுக்கு தியாகி சோட்டா ராஜன் செய்த பெரிய சேவையைப் பாராட்டி, ஏதேனும் ஒரு "பத்ம" விருதினை வழங்குமாறு அரசுக்கு மனு அனுப்புங்கள். இதனால், அவருக்கு அந்திம காலத்தில் பென்ஷனும், இந்திய ரயில்களில் சென்று வர இலவச பாஸூம் கிடைக்கும். பாவம் எவ்வளவுதான் ஒரு மனிதன் இந்தியாவுக்காக போராட முடியும்.

கூகிள் பற்றி எழுதாமல் இருப்பது நல்லதல்ல. சமீப காலமாக கூகிள் மெருக்கேறிக் கொண்டிருந்தாலும், கூடவே பிரச்சனைகளும் அதிகரித்திருக்கின்றன. மைக்ரோசாப்ட் [யாருப்பா இதை நுண்மென்மைன்னு எழுதினது?] கூகிளின் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்போவது கூகிளின் முதற்பக்கம். சாதாரணமாய் வெறுமனே www.google.com என்று அடிக்காமல், http://www.google.com/ig என்று அடித்து வரும் பக்கத்தினை உங்களுக்கு ஏற்றாற்ப் போல் நிரப்பிக் கொள்ளுங்கள். இதில் பிபிசி செய்திகள், வயர்டு, நுட்பவல்லுநர்களுக்காக ஸ்லேஷ் டாட், நியுயார்க் டைம்ஸ், ஜிமைல் என எல்லாவற்றையும் நிரப்பிக் கொள்ளலாம். கொஞ்சம் மை யாஹு! சாயல் அடித்தாலும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். செர்ஜி பிரின் வாழ்க!!

Jul 24, 2005

காவிரி நீரும், கலாட்டாக்களும்

வழக்கம்போல காவிரி நீர் குழு டெல்லிக்கு பறந்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை கேட்டு, மின்மடல் இருக்கும் காலக்கட்டத்தில், பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம், அரசாங்க தபால் வழியாகவோ, ப்ரொப்ஷனல் கூரியர் மூலமாகவோ போய் சேர்வதற்குள் அடுத்த வருடம் வந்துவிடும். இது வருடாவருடம் நடக்கும் கூத்து. மழை பெய்தால், காவிரியில் நீர் நிரம்பிவிட்டால், கர்நாடக அரசும் "மனசு" வந்து தண்ணீரை திறந்துவிடும். இல்லையென்றால், எங்களுக்கே தண்ணீரில்லை என்று பஞ்சப்பாட்டு பாடும். இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி, தொடர்ந்து நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. காவிரி நீருக்காக, கர்நாடகத்தின் மீது படையெடுக்காததும், இந்தியாவிலிருந்து பிரியாததும்தான் பாக்கி, அதைத் தவிர எல்லா விஷயங்களும் நடந்துவிருகிறது. காவிரி நீருக்காக தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைப்பெற்ற பல்வேறு போராட்டங்களையும், உணர்ச்சிக் குவியல்களையும் இங்கே பதிய விருப்பமில்லை. மொத்தத்தில், தஞ்சை விவசாயிகளுக்கு இன்னமும் தீர்வான ஒரு பதிலை நம்மால் சொல்ல முடியவில்லை.

இதற்கான தீர்வாக எதை சொல்ல முடியும்? நதிகள் ஒருங்கிணைப்பு, நீரை காசாக்கி விற்றல் [பத்ரியின் பதிவு - சுட்டி யாராவது பதியுங்கள்] போன்ற பல்வேறுவிதமான சிந்தனைகள் இப்போது நம்மிடம் உலவி வருகின்றன. நதிகள் ஒருங்கிணைப்பினை கருத்து ரீதியில் சுற்றுச்சூழல், மனிதர்கள் வாழ்சூழ்நிலை போன்ற பல காரணிகளை முன்வைத்து நான் எதிர்த்து எழுதியும் இருக்கிறேன். இந்நிலையில் மத்திய அரசில் வேலைசெய்த ஒரு தலைமை பொறியாளர் மாற்று சிந்தனையை முன்வைத்திருக்கிறார்.

பவானி சங்கர் (75) மத்தியப்பிரதேச அரசின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஹிராகுட், சம்பல், துங்கபத்ரா, நர்மதா போன்ற பல அணைக்கட்டுகளை வெற்றிகரமாக அமைத்தவர். இந்திய அரசின் தலைமைப் பொறியாளராகவும் இருந்திருக்கிறார். உலக வங்கியின் ஆலோசனைப் பொறியாளராக இருந்த போது தமிழகத்தின் முல்லை, பெரியாறு, வைகை அணைத்திட்டங்களுக்கு உதவியிருக்கிறார். ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். போனவார குமுதம் ரிப்போர்டர் இவரின் மாற்று சிந்தனையும், அதற்கு வழக்கம்போல அரசின் மெத்தனத்தையும் பதிவுசெய்திருக்கிறது.

இந்த நேர்காணலில் வரும் சில விஷங்களில் எனக்கு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இவ்விதமான சிந்தனைகள் பரவலாக்க படிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நேர்காணலினை தருகிறேன்.

உங்கள் திட்டம் என்ன?

‘‘காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர், அரைபாட்டில் அளவு என்று வைத்துக் கொள்வோம். அதனை கர்நாடகம்_தமிழ்நாடு இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும்போது, போதுமானதாக இல்லை. அந்த அரைபாட்டில் நீரை, முழுபாட்டில் நீராக நிரப்பிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். அனைவரும் இருக்கின்ற நீரைப் பகிர்ந்து கொள்ளத்தான் பேசுகிறார்களேயழிய, நீர் வரத்தை அதிகரிக்கச் செய்ய யோசிக்கவில்லை.’’

நீங்கள் தயாரித்துள்ள இத்திட்டம் பற்றி விரிவாகச் சொல்லுங்களேன்...

‘‘மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப்பக்கம் காவிரி உருவாகி இரு மாநிலங்களுக்கும் நீர் தருகிறது. இதில் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவுதான். ஆனால் அதே மலையின் மேற்குப்பக்கம் நேத்ராவதி, காலிநதி, சரசுவதி நதி போன்றவை மலைப்பகுதியில் எண்பது மைல் ஓடிவந்து, வெறும் முப்பது மைல் தொலைவே சமவெளியில் ஓடி அரபிக் கடலில் கலந்து விடுகிறது. இந்த நதிகளின் மீது மழைப்பொழிவு அதிகம். சுமார் இரண்டாயிரம் டி.எம்.சி. தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் அரபிக்கடலில் போய்ச் சேருகிறது. இந்த நதிகளையே திருப்பி விடுவது எனது திட்டமல்ல. இந்நதிகளில் வரும் அதிகப்படியான நீரை, நீரேற்றுத் திட்டம் மூலம் காவிரியில் திருப்பலாம்.’’

எப்படி இத்திட்டம் சாத்தியம்? முன்மாதிரிகள் உள்ளனவா?

‘‘வெரி சிம்பிள்.. உதாரணத்திற்கு... நேத்ராவதி நதி உருவாகும் மலை உச்சியில் பம்ப் ஸ்டோரேஜ் மெஷின் மூலம் ஒரு குளம் வெட்டி நீர் தேக்க வேண்டும். அதுபோல் மலையடியில் ஒரு குளம் வெட்டவேண்டும். மேலிருந்து விழும் நீரைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். பவர் ஜெனரேட்டரைக் கொண்டு கீழிருந்து நீரை மேலே ‘பம்பிங்’ செய்ய வேண்டும். மேலே உள்ள குளத்து நீர் வழிந்து கிழக்குப்பக்கம் அதாவது காவிரியில் போய்ச் சேரும். இத்திட்டத்தால் வீணாகும் நீர் சேமிக்கப்பட்டு காவிரி பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும். மூன்று மாத மழைக்காலம் மட்டுமல்ல.. ஆண்டு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் மலைவளம் பாதுகாக்கப்படும். வன விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பும் கிட்டும்.

இதுபோன்ற திட்டங்கள் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் நிறைய உண்டு. அண்டை நாடான சீனாகூட செயல்படுத்தி வருகிறது. தண்ணீர்ப் பிரச்னை தலைதூக்கி நிற்கும் இந்தியாவில் இப்படியரு திட்டம்கூட இல்லை என்பது வருந்தக்கூடிய விஷயமாகும்.’’

இத்திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும்? நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்?

‘‘இருநூறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க பதினாறாயிரம் கோடி செலவாகும். இதனை மத்திய_மாநில அரசுகள்கூட செலவு செய்யத் தேவையில்லை. டாடா நிறுவனம் ஏற்றுச் செயல்படுத்த தயாராக உள்ளது. அவர்கள் செய்யும் செலவிற்கு மின்சாரம் தயாரித்து விற்பதன் மூலம் லாபம் ஈட்டிக் கொள்வார்கள். நமக்கு காவிரியில் அறுநூறு டி.எம்.சி. தண்ணீர் இலவசமாகவே கிடைத்து விடும். முப்பது ஆண்டுகள் லீசுக்குக் கொடுத்தால் திரும்ப அரசிடம் ஒப்படைத்து விடவும் அவர்கள் தயார். இரண்டு மாநில விவசாயிகளின் நலனுக்காக சம்பளம் ஏதுமின்றி நானே முன் நின்று இத்திட்டத்தை நிறைவேற்றித் தரவும் தயாராக இருக்கிறேன்.’’

இத்திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் சிக்கல் வராதா?

(சிரிக்கிறார்) ‘‘அரசிடம் ஒப்படைத்தால்தான் சிக்கல் வரும். அரசு என்றால் அரசியல்வாதிகள்தான் காண்ட்ராக்ட் எடுப்பார்கள். அதில் பணம் சம்பாதிக்கத்தான் முயல்வார்களேயழிய, திட்டம் நிறைவேற்றுவதில் ஆர்வம் இருக்காது. அதற்கு முப்பது ஆண்டுகளுக்குமேல் இழுத்தடிப்பார்கள். தனியார் என்றால் போடும் மூலதனத்திற்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் மூன்றே ஆண்டுகளில் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். என்னிடம் பேசிய ஓர் அரசியல்வாதி, ‘இத்திட்டத்தை அரசு மூலம் நாமே செயல்படுத்தலாம். நல்ல பணம் கிடைக்கும்’ என்றே பேசினார். அதில் எனக்கு உடன்பாடில்லை.’’

இரண்டு மாநிலங்களுக்கும் பலன் தரும் திட்டத்திற்கு ஏன் ஆதரவு கிடைக்கவில்லை?

‘‘உருப்படாத திட்டங்களுக்கு ஏராளமான பணத்தை வாரி இறைக்கும் அரசியல்வாதிகள், நல்லதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட தயாராக இல்லை. உங்கள் ஊரில் வீராணம் திட்டம் பயன் தராது என்று தெரிந்தும், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் பணத்தை செலவழிக்கவில்லையா? நீர் பிரச்னையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம்தான் முன் வர வேண்டும். கர்நாடகத்தில் சிலர் ‘இயற்கை மாறுபடும் என்றும், அரபிக்கடலில் மீன்வளம் பாதிக்கப்படும்’ என்றும் உளறுகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. இத்திட்டம் ஒன்றும் புதிதில்லை. உலக அளவில் பல நாடுகளில் செயல்படுத்தப்படுவதைப் போல நம் நாட்டிலும் செயல்படுத்தலாம். செயல்படுத்த வேண்டும். அது காலத்தின் அவசியம்!’’

இதுவரை இத்திட்டம் பற்றி யாரிடம் பேசியிருக்கிறீர்கள்?

‘‘கர்நாடக அரசியல்வாதிகளிடம் பேசியிருக்கிறேன். பலனில்லை. மத்திய நீர்ப்பாசனத் துறையிடமே அறிக்கை சமர்ப்பித்தேன். பதிலில்லை. சரி... தமிழக_கர்நாடக விவசாய சங்கப் பிரமுகர்களிடம் எடுத்துச் சொல்வோம் என்று கருதி ‘காவிரி குடும்பக் கூட்டத்தில் பேச அனுமதி கேட்டேன். அவர்களுக்கு ஏனோ இதில் ஆர்வமில்லை. இரண்டு நிமிடம் பேச அனுமதி தருகிறார்கள். எப்படி இரண்டு நிமிடத்தில் பேச முடியும்? தற்போதுதான் தமிழக விவசாய சங்கப் பிரமுகர்கள் புரிந்திருக்கிறார்கள். விஞ்ஞானியான குடியரசுத்தலைவரிடமே இந்த விஷயத்தைக் கொண்டு போவதாக உறுதியளித்திருக்கிறார்கள். காலம் கடந்தாவது என்றாவது ஒருநாள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது அலுவலகம் எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும்!’’

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

இந்த நேர்காணலில் இரண்டு விதயங்கள் தெளிவாக தெரிகின்றது. 1. நம்மால் உண்டாக்கப் பட்ட தேக்கநிலை பிரச்சனைகளை தீர்க்க மாற்றுச்சிந்தனைகள் ஏராளமாய் இருக்கின்றன, அதை விடுத்து மொத்தமாக நதியின் போக்கினை மாற்றுகிறேன் பேர்வழி என்று குயுக்தியாக சிந்திக்காமல் இருக்கலாம். 2. நீர்வளம் என்பது அரசுக்கோ, தனியார் நிறுவனத்திற்கோ சொந்தமல்ல. அது சமூக சொத்தாக [Social asset] அறிவிக்காதவரையில் இம்மாதிரியான பிரச்சனைகள் தொடரும். நதிகளை தேசியமயமாக்கல் என்கிற மற்றொரு சிந்தனை இதனால் அடிப்பட்டுப் போகும், இதனால், கேரள, தமிழக நீர்வளத்தின் பகிர்ந்துணரும் உரிமையை டெல்லியில் உட்கார்ந்துக் கொண்டு தீர்மானிக்கமுடியாது.

விரிவாக விவாதிக்க வேண்டிய விதயமிது.

Jul 23, 2005

சனங்களின் குரல்

சப்போட்டா விலை ஏறிப்போச்சு. வெங்காயம் உருளைக்கிழங்கு போட்ட போண்டா போடும் மாஸ்டர் தேவை. இரா.முருகன் தமிழ்நாட்டின் தேசிய உணவாக பரோட்டாவினை அறிவித்துவிட்டு, சால்னாவை மறந்துவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கீரிஸிலும், நைஜீரியாவிலும் சந்திரமுகி 800 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ஐம்பது வயது அசின் ஒரு காலத்தில் தமிழ் மலையாள படங்களின் ராணியாக திகழ்ந்திருந்தார். மன்மோகன்சிங் ஆட்சிக்கு வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் இன்னமும் காங்கிரஸ் அபிமானிகளுக்கு இருக்கிறது, ராவ் விடுவாரா என்று தெரியவில்லை. சீவக சிந்தாமணியில் சீவகன் பெயர் இல்லையென்றால் வெறும் சிந்தாமணியினை வைத்துக் கொண்டு ஆர்.வி உதயகுமார், பொன்னுமணி படமெடுத்திருப்பாரா என்று தெரியாது.

சிந்துவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிஞ்சியிருப்பது காளையின் இலச்சினை தான். சிந்து பை ரவியில் பாடகர் ரவி உலக டூர் போகப்போகிறார். மக்புல் சாஹிப் தன் மகள் வஹிதாவுக்கு நிக்காஹ் செய்வதற்காக தினமும் தொழுகிறார். குஷ்டரோகிகள் தனியாக உள்ள ஒரு இடத்தில் தான் பென்ஹரில் திருப்பம் ஆரம்பிக்கிறது. மஹேந்திரா டிராக்டர்களுக்குப் போட்டியாக டாபேயின் ட்ராக்டர்கள் இருந்தாலும், ப்ரொக்டர் & கேம்பள் போல வராது. மஹேஷ் மூர்த்தி தெரியாமல், வென்ஞ்சர் பண்டிங் பேசமுடியாது. ஜானகிராமன்கள் எழுதும் கதையெல்லாம் மோக முள்ளாகாது. அபுர் ஜகரிதாஸ், வயது 67, கும்மிடிப்பூண்டி சரக்கு ரயிலில் பிணமாக கிடந்தார், அவரின் சட்டையெல்லாம் ரத்தமில்லை. அவர் அபுர்தானென்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது. சிட்டி ஆப் காட் தமிழில் புதுப்பேட்டையாக வரலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமல் தீட்சை வாங்கிக் கொண்டு ரஜினி,ஸ்ரீமன், யூகிசேது, ஜெயராம், நாசர் இவர்களுடன் நேற்று காலை சஹாரா விமானத்தில் இமயமலை வந்தடைந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையான சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். நாளை முதல் ரேடியோவில் சரோஜ் நாராயணசாமி செய்தி படிப்பார். சுசித்ராவோடு பேசும் போது தான் தெரிந்தது, சின்மயி போல அவரும் சிஃபி தயாரிப்புதான். ஐபாடில் வீடியோ வருமா என்று தீவிரமாக அதன் வெறிபிடித்த ரசிகரான பில் கேட்ஸ் கேட்டிருக்கிறார். அஸ்ஸாமினை பங்களாதேஷோடு ஒருங்கிணைக்க ஒரு மேல் மட்ட குழு இன்று பெஷாவரில் கூடுகிறது. பவணகொளசிக பண்டிதர் தான் முதன்முதலில் தலித்துகளுக்காக 1732-இல் போராடியவர் என்று "அடி பம்பு" சிற்றிதழில் காலபைரவன் ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார். இன்றோடு தெண்டுல்கரின் நூறாண்டு விழா கொண்டாடப் படுகிறது, இந்தியாவின் தலை சிறந்த் பேஸ்பால் விளையாட்டு வீரராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

இத்துடன் ஆல் இந்தியா ரேடியோவின் ஒலிபரப்பு முடிவடைகிறது. பிரபாகரனிடமிருந்து தனி நாடு கேட்கும் கோரிக்கையினை முஸ்லீம் முன்னேற்ற தலைவர்கள் தீவிரமாக செயல்படுத்தப் போவதாக அவர்களின் இணையதளம் தெரிவிக்கிறது. பசுல்லா ரோடு சங்கீதாவில் சர்வரிடமிருந்து தவறி விழுந்த காபி-சாம்பார் விஷயத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அயிரி-அக்பரி-பாபரி தீவிரவாத இயக்கம் அறிவித்திருக்கிறது. அத்வானி லாகூர் சென்றிருக்கிறார், இந்த முறையும் ஜின்னா பற்றி உளறுவதாக விமானம் ஏறுமுன் உறுதியளித்தார். ஆகஸ்ட் மாதம் நம் நண்பர் சந்திரன், சந்திரனுக்கு பிரதமருடன் போகப் போகிறார். சந்திரன் சந்திரனுக்கு போவதையொட்டி தமிழ்நாடு அரசு ஒரு நாள் விடுமுறை விடும் என தெரிகிறது. இந்த வார குமுதம் பழமை ஸ்பெஷலாக வெளிவருகிறது ... ராதா, மாதவி, சிம்ரன் போன்ற இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நடுப்ப்பக்க படங்கள் தனி இதழாக தரப்படுகிறது. இந்தியா 4000 கோடி ரூபாய்களை வறட்சி நிவாரண நிதியாக அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கிறது, மேலும், ஐ.நா சபையில் சீனாவோடு பேசி இன்னமும் உதவி, நலத்திட்டங்களை செய்வதாக உறுதியளித்திருக்கிறது. ரிலையன்ஸ் குழுமம், ஆப்ரிக்காவில் மூன்று நாடுகளை வாங்கியினைத்திருக்கிறது, இதன்மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்திருக்கிறது.

சென்னை ராஜதானியில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் புதிராக விளங்கிய மாண்டீ என்கிற மாண்டிரஸர் எனப்படும் வலை எழுத்தாளாருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக எதுவுமே எழுதவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காயில் இன்டெல் ஒசாமா கணினிகள் கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டன. கால்குலேட்டரின் விலை 35 ரூபாய்கள். பதினாறணா என்பது ஒரு ரூபாய். இவா ஊதுனா அவா வருவா. அவா அவா சேம லாபத்தை அவா அவா கவனிச்சுக்கணும். இப்ப அது தான் என்னோட அவா.

ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆட்டுக்கு கல்யாணம், ஸ்ரீபிரியா நேரில் வந்து வாழ்த்து சொன்னார். பாகிஸ்தானிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசரமாக இரண்டுக்கு வந்தது. வாந்தியெடுத்து கவிழ்ந்தபின் தமிழின் மிகச்சிறந்த கவிஞன் பாட்டிலை விட்டு வெளியேறினான். ஒரே போடில் துண்டாய் போன தலையை எடுத்துக் கொண்டு வந்தவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சத்யம் திரையரங்கில் மேஜிக் ஹாட் என்று புதிதாய் குழந்தைகளுக்கான காப்பகத்தினை திறந்திருக்கிறார்கள். வங்காளத்தில் வந்து இந்தியாவினை கலக்கிக் கொண்டிருக்கும் "நவ புருஷ்"ஷின் கதை எப்போதோ தமிழில் வந்த அந்நியன் படத்தின் தழுவல் என்று பாதாள பைரவியில் மு.ச.இ.க.வ.த.சவின் செயலாளர் மூன்று பக்கம் எழுதியிருக்கிறார். தமிழக முதல்வராய் நான்காவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் செல்வமணி, தன் நன்றிகளை மக்களுக்கு தெரிவித்தார், இவர் அன்புமணி ராமதாஸின் எள்ளூப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ் இன்னில் பார்த்த பெண்ணின் முகம் நினைவுக்கு வரவில்லையென்றாலும் கூட, இதை சாக்காக வைத்து இன்னொரு கூட்டம் போடலாமே என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக, என் கருத்தினை சொல்ல முனைந்து, அதை தவறாக பார்த்தால், தவறிவிடுமே என்கிற அச்சத்தினாலும், பயத்தினாலும், இக்கருத்தினை படித்ததை மறந்துவிடுங்கள். நோகியா போனில் வந்த எம்.எம்.எஸ் மல்லிகா ஷெராவத் இல்லை என்றாலும் நம்பி பாருங்கள், பிரச்சனைகள் ஏதுமில்லை. ஒரு வழியாக ஆத்திச்சுவடிக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார், 12 ஆண்டுகள் ஆப்ரிக்க ஆர்கெஷ்ட்ராவுடன் போராடி இதை எம்பி 3 வடிவத்தில் தந்திருக்கிறார்கள். கோவி மணிசேகரனின் முகம் ஏன் எப்போதும் எதையோ சிந்திக்கிறது. ஒல்ட் மாங்கிற்கு இணையாக சொல்லப்பட்டாலும், எம்.ஜி.எம்மில் கிக் இல்லையென்று டாஸ்மாக்கின் மனசாட்சி சொல்கிறது.

இஸ்கானிலிருந்த கிருஷ்ணர் புதிதாக டுஷான் கார் வாங்கியுள்ளார். சபரி கிழவி தாசில்தார் ஆபிஸ் வாசலில் பென்ஷன் சான்றிதழுக்காக காத்திருந்த போதில், இந்தியன் தாத்தா வந்திருக்கலாம். கில்மா, சில்மா, பல்மா, மல்மா போன்றவைகளை தேமா, புளிமாவின் நீட்சியாக பார்க்கவேண்டும் என்று டைமண்டு கவிஞர் சொல்லியிருக்கிறார். திருவண்ணாமலையில் ஜில்லட் விற்பதில்லை. கூகிளுக்கு பதிலாக பூபிள் என்று அடித்து பலான தளத்திற்கு போகும் அபாயமிருப்பதால், எப்போதும் பூபிள் என்றே டைப் செய்யவும். நெடுஞ்சாலை காணாமல் போய்விட்டது, தனிமைக்கு பயந்து ஏதாவது சந்தில் பதுங்கியிருக்கலாம். அர்ஜூன் என்றாலே நினைவுக்கு வருவது ஆரோக்கியா பால்தான். என்றைக்கு லாப்-டாப் எடுத்துக் கொண்டு டூர் போனாலும், மறக்காமல் காண்டம் எடுத்துப் போ என்று ஜெனரல் மேனேஜர் சேல்ஸ் டீமிற்கு அறிவுறுத்தினார். தர்மபுரி, ஒட்ரையாம்பட்டி குக்கிராமத்தில் High Definition எடுக்கும் நல்ல பாம்பு இருக்கிறது. நண்பன் பெண்பார்க்கும் படலம், ராம நாராயணன் படம் போல ப்ளாப்பாக போய்க் கொண்டிருக்கிறது. வாடாமல்லி பூ என்று எழுதினாலும் ஒரு நாளும் பார்த்ததில்லை.

திரையில் ஆர்.ஆர் அதிகமாகும்போது திரையரங்கில் முன் சீட்டு ஜோடிகளை உற்று கவனிக்காதீர்கள். நர்சரிகளில் ஏனோ பனைமரம் விற்பதில்லை. பேர் & லவ்லி போட்டாலும் காக்கா சிவக்காது. ஜனங்களுக்கான வரி ஜனவரி என்றால், பெரியவர்களுக்கான வரி பெப்ரவரியா. விபத்து நேரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு தொடங்கும் எல்லா வண்டிகளாலும், எலுமிச்சம்பழத்திற்கு விபத்து நேரிடுகிறது. வேலைக்காரிகளின் பெயர்கள் பெரும்பாலும் முனியம்மாளாக இருக்க ஒரு ஆதிமுனிதான் காரணமென்று சண்பக ஜோசியர் சொன்னார். பேர் ஒன்றாக முடிவதால் என்றைக்கும் ரவி சீனிவாஸ், சமிந்தாவாஸ்க்கு சொந்தக்காரராக முடியாது. கிணற்றிலிருந்து மேலே பார்த்தாலும், மேலிருந்து மேலே பார்த்தாலும், கிணற்றின் மேலேறி மேலே பார்த்தாலும், வானம் மட்டும் தான் தெரியும் என்பதை கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே இன்கா பழங்குடியினரின் போற்றப்பட்ட கவியான லோரென் ரெசோ பர்ஹா சொல்லியிருப்பதாக அமெசானின் கரையோரமிருக்கும் கல்வெட்டு சொல்கிறது. தாமஸ் ப்ரீட்மேன் வேர்ல்ட் இஸ் ஸ்கொயர் என்கிற புத்தகத்தினை ஃபோர் ஸ்கொயர் ஸ்பான்சர்ஷிப்பில் எழுதுகிறார். இரண்டு வரிகள், பதிமூணே முக்கால் வார்த்தைகளுக்கு மிகாமல் எஸ்.எம்.எஸ் கதைகள் எழுதி என்னுடைய மொபைலுக்கு அனுப்பினால் சிறந்த கதைகள் பிரசுரமாகும் என்கிற உத்தரவாதத்தினை தரமுடியாது.

Jul 21, 2005

பைனாகுலர் 10351

சரியாக 30 வினாடிகள். இரண்டு ப்ளாக்குகள். வைக்கப்பட்ட வெடிகுண்டில் இம்மியும் பிசகாமல் கீழே சரிந்தது. சா பாலோவில் [பிரேசில்] இருக்கும் கரென்திரு சிறைச்சாலையின் இரண்டு பளாக்குகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. கரென்திரு ஒரு ரத்தக்கறைப் படிந்த சிறைச்சாலை. 1992-ல் சிறைக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியில் 111 கைதிகளை போலீஸ் கொன்று குவித்த இடம். தரைமட்டமாகுமுன்பு சில நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. நான் பிரேசில் போனால் பார்க்கலாமென்று இருந்த இன்னொரு இடமும் இப்படியாக காணாமல் போகிறது. ரொம்ப நாட்களாய், விஜய், மாண்டீ, வசந்த் இவர்களை தொந்தரவு செய்து நான் கேட்டுக் கொண்டிருக்கும் படம் கேரன்திரு இந்த சிறைச்சாலையின் கிளர்ச்சியையும் படுகொலையையும் பிண்ணணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஒரு சரித்திரம், மண்ணாகிப் போனது.

பார்க்க - கேரன்திரு படம் | சிறை சிதைக்கப்பட்ட செய்தி

தமிழில் மாற்று சினிமாப் பற்றி வரும் சிற்றிதழ்கள் மிகக் குறைவு. இலக்கிய அக்கப்போர் செய்யும் சிற்றிதழ்கள் நிறைய இருந்தாலும், சினிமாப் பற்றி பேசும் இதழ்கள் குறைவு. பிற இதழ்கள், அந்நியனையும், காதலையும் பற்றி "எலக்கிய வெமர்சனம்" எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இதை முதலில் நிறைவு செய்ததற்காகவாவது "நிழல்" திருநாவுக்கரசிற்கு நன்றி சொல்லவேண்டும். பின்பு "கனவு" வந்தது. காஞ்சனை சீனிவாசன் சிற்றிதழ் தருகிறாரா என்கிற செய்தி என்னிடத்தில் இல்லை. டிஜிட்டல் கேமராக்கள், குறும்படங்கள் பற்றிய அறிமுகங்கள், திரைப்பட விழாக்களின் மூலமாக மாற்றுசினிமா பற்றிய விவரங்கள் கொஞ்சம் பரவலாய் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இதில் புதிதாய் வந்திருப்பது இரண்டு சிற்றிதழ்கள், இரண்டும் மாற்று சினிமா, நல்ல சினிமா, உலக சினிமாவினை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன.

சென்னையிலிருந்து வெளி வரும் அவ்விரு இதழ்கள் "செவ்வகம்" மற்றும் "படப்பெட்டி". இதில் செவ்வகம் முதல் இதழாக வெளியாகி இருக்கிறது. நல்ல முயற்சியாக தோன்றுகிறது. ஆனாலும், இவர்களும் அரைத்த மாவினையே அரைக்கிறார்கள். ஈரானிய சினிமா, பதேர் பாஞ்சாலி, அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன், விவரணப் படங்கள் என்று டெம்ப்ளேட் பிசகாமல் வந்திருக்கின்றன. இது தாண்டி, நான் எதிர்பார்ப்பது குறும்படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள், ஷாட் கம்போஷிஷன், திரைக்கதை எழுதுவது, மாற்று சினிமா பார்வைகள், கருவிகள் இவைப் பற்றிய தெரிதல்களடங்கிய பத்திகள் வரவேண்டும். வெறுமனே கிராமத்தான் விமானத்தினை ஆவெனப் பார்த்த கதையாய், உலக சினிமாவினை வாசிப்பதைத் தாண்டி, நாமும் படமெடுக்க என்ன செய்யவேண்டும் என்கிற விஷயமில்லாமல் மாற்றுசினிமா சிந்தனைகள் உருப்பெறாது.

படிக்க - செவ்வகம், படப்பெட்டி [இரண்டும் நியு புக்லேண்ட்ஸில் கிடைக்கிறது]

அருந்ததி ராயின் ஒரு கட்டுரையை புதுவிசையில் அ.முத்துக் கிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார். இதன் மூலக் கட்டுரையினைப் பற்றிய தெரிதல்கள் அக்கட்டுரையில் இல்லை. புதிய தாராளமயக் கொள்கையின் மூலம் ஒரு பக்கம் நுனிநாக்கு ஆங்கிலமும், ஹாரி போர்டருக்கு கியூவில் நிற்கும் ஜனங்களும், செல்போனும், காபி ஷாப்பும், கொழிக்கும் நாட்டில் தான், இந்து தேசியமும், இனவெறிக் கொலைகளும், ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் [பவாந்தர் பார்த்து வீட்டீர்களா?] ஊடக வன்முறைகளும், சார்பியல்புகளும், எதிர்-அரசு சார்பு ஊடக நசுக்கல்களும் நடந்துவருகின்றன. எந்த அளவிற்கு நமக்கு நுட்பங்கள் தேவைப்படுகிறதோ, அதேயளவிற்கு நம்மிடத்திலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் பார்க்கும் பார்வைகள் ஊடகங்களில் வரவேண்டும். இவையத்தனையையும் நல்ல காக்டெய்லாக எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்.

பார்க்க - புதுவிசை | அருந்ததிராயின் கட்டுரை-தமிழில்

சில வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் அழைப்புக்காக ஒரு வங்கிக்கு போக வேண்டியிருந்தது. வங்கியில் சந்தித்தவர்கள், அப்படியே அவரின் இன்னொரு நண்பரின் அறைக்கு சென்றோம். அந்த நண்பர், தமிழ் சினிமாவிலிருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களில் ஒருவர். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாய், சிறு பத்திரிக்கைகள், ஒரளவு சமூக பிரக்ஞை உள்ளவர். பேச்சு எங்கெங்கோ சுற்றி தமிழ்சினிமாவின் கதைக் களனில் வந்து நின்றது. சும்மா இல்லாமல், நான் ஒரு அவுட்லைன் சொல்கிறேன் என்று "ஸால்சா ஆடும் பெண்ணுக்கும், சால்னா தின்னும் பையனுக்குமான காதல்" என்று ஒரு வார்த்தையினை சொன்னேன். அருகிலிருந்த இன்னொரு உ.இ நண்பர், ஸால்சா-ன்னா என்ன சார் என்று கேட்க, நான் விளக்க, அவர் உடனே, இது "சூப்பர் நாட் சார், தமிழ்சினிமால இதுவரைக்கும் யாரும் சொல்லாத விஷயம். இதை டெவலப் பண்ணி தனுஷ் இல்ல புதுஆள் ஹீரோவா போட்டா நல்லா வரும் சார், ஹீரோயினுக்காக ஒரு ரிச் சாங், ஹீரோவுக்கு ஒரு குத்து சாங், இரண்டு பேருக்கிடையே இருக்கற வேறுபாடுகள், சமுகத்துனுடைய இரண்டு தளங்கள் ன்னு அருமையா இழுத்துறலாம். நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதுவீங்களா பாஸ்" என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா! தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா!

Jul 19, 2005

எத்தனாலா -2

இதுப் போன பதிவின் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். உலகின் எரிப்பொருள் மொத்தக் கொள்ளவினைக் கொண்டு இன்னும் 41 வருடங்கள் ஒட்டலாம். பின் எல்லோரும் குதிரையோட்டப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். போனவாரம், அத்திப்பட்டிக் காணாமல் போன சோகத்தினை சிரித்துக் கொண்டே அஜீத் சொன்னப்போது, கடுப்பாகி, வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டே, என்.டி.டிவிக்கு தாவினால், பாரீன் கரெஸ்பாண்டெண்ட்ஸ் (Foreign correspondents) ஒடிக் கொண்டிருந்தது. உள்ளேப் போவதற்குமுன் இந்த நிகழ்ச்சியினை பற்றிய குறுஅறிமுகம். இந்தியாவிலிருந்து உலகின் மற்றப்பத்திரிக்கைகளுக்கு செய்திகள் அனுப்பும் நிருபர்களைக் கொண்ட அலசல் இது. நான் பார்த்த போது, எல்லோரும் சீரியஸாக இந்தியாவின் எரிப்பொருள் தேவையையும், இந்திய அரசாங்கத்தின் முன்னிருக்கும் போராட்டங்களையும் மாற்று ஏற்பாடுகளையும் பற்றி அலசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாளைக்கு இந்தியாவில் 68 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்தியாவின் தேவையில் 70% இறக்குமதி செய்யப்படுகிறது. பேசிய தலைகள் அனைத்தும் இயற்கை எரிவாயுவினை ஒரு மாற்று ஏற்பாடாக முன்வைத்தார்கள். காரணமிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் எரிப்பொருள் பிரிவு (Reliance Energy) 200 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு கிடைக்குமிடத்தினையும், ஜிஎஸ்பிசி [Gujrat state petroleum corporation என்று நினைக்கிறேன்] 20 டிரில்லியன் மெட்ரிக் டன்னுள்ள இயற்கை எரிவாயு இடத்தினையும் கண்டறிந்திருக்கிறார்கள். உலகமெங்கும், ஹைட்ரஜன் பொருளாதாரம் என்று சொல்லப்படும் எரிவாயு, பெட்ரோல், மின்சாரம், பயோப்யூல் என பல்வேறு எரிப்பொருள்களைக் கொண்டு ஒடும் வாகனங்கள் அதிகரிக்கும் என்றும் 30% எரிப்பொருள் தேவை 2030-இல் இதன்மூலம் தீரும் என்று தலையணை சைஸ் புத்தகங்களிலிருந்து டேட்டா தந்தார்கள்.

இதன்பின் தான் ஆரம்பித்தது பிரச்சனை. நியுயார்க் டைம்ஸின் நிருபர் என்று நினைக்கிறேன், இந்தியா அணுமின்சக்தியினை இன்னமும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார். இந்தியாவின் மொத்தத்தேவையில் வெறும் 3% மட்டுமே அணுமின் உற்பத்தியின் மூலம் பெறமுடிகிறது [2770 மெகாவாட்]. இந்தியாவில் 14 ரியாக்டர்கள் என்று சொல்லப்படும் அணு உலைகள் இருக்கின்றன. இந்தியாவில் அணுமின்சக்தியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மிகுந்த செலவு பிடிக்கிறது. இதற்கான காரணங்களாக, முன்னேறிய நாடுகள் நுட்பத்தினை பகிர்ந்துக் கொள்ளாததினை முக்கியமாக சொல்கிறார்கள். ஆனாலும், பாதுகாப்பு காரணங்கள், கதிரியக்கம், சுற்றுச்சூழல் செலவு போன்றவற்றை கணக்கெடுத்தால், இவர்கள் கொஞ்சம் தப்பாக கணக்குப் போடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இதுதாண்டி, அவ்வப்போது செர்னோபில் நினைவில் வந்து பயமுறுத்துகிறது.

இந்தியாவின் எரிப்பொருள், சக்திக்கான ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கும். நிலக்கரி, அணுமின்சக்தி, நீர், காற்று, சூரியன் மூலம் உண்டாக்கப்படும் எரிசக்தி என்று பிரிகிறது. போன தலைப்பில் எழுதிய எத்தனால் மற்றும் சூரிய எரிசக்திக்கு இந்தியாவில் மிகுந்த தேவையிருக்கும் என்று தோன்றுகிறது. கதிரியக்க பிரச்சனைகள் இல்லாமல், சுரங்கங்கள் தோண்டாமல் நமக்கிருக்கும் ஒரே மாற்றுவழி எத்தனால் மற்றும் சூரிய எரிசக்தி தான் என்று தோன்றுகிறது. தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், சட்டீஸ்கரின் வெயில் ஒவர்டைம் எடுத்துக் காய்கிறது. இதனை எரிசக்தியாக நம்மால் மாற்றமுடியுமானால், இதை ஒரு சிறுபகுதிக்கு மாற்று எரிபொருள் ஏற்பாடாக கொள்ளலாம். அதைப் போல், தண்ணீர் குறைவாக கிடைக்குமிடத்தில் எத்தனாலையோ, மாற்று எரிபொருள்களை உருவாக்கக் கூடிய பயிர்களையோ பயிரிடலாம். இதன் சுற்றுச்சூழல் செலவினைக் குறித்த கவனத்தோடு இதைப் பார்த்தல் வேண்டும்.

இவ்வளவையும் குறுகிய காலத்தில் செய்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஏனெனில் 2030 என்பது ரொம்பதூரம் போலத் தெரிந்தாலும் அது உண்மையில்லை. இன்றைக்கு இந்தியாவின் மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு பிறகு மிக முக்கியமான செலவீனமாக நாம் எரிபொருளினை காசுக்கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால், இந்தியாவின் வளர்ச்சி 6% தாண்டாது, ஜிடிபி அவ்வளவு தான். அன்னிய செலவாணி வந்தாலும், புகைவிட்டே தீர்த்துவிடுவோம். அப்புறம் பில்லியன் டாலர் ரிசர்வ் வங்கி ரிஸர்வ்களை முன்னொரு காலத்தில் வைத்திருந்தோம் என்று 12-ம் வகுப்பு பொருளாதாரப் பாடத்தில் 97-ஆம் பக்கத்தில் சிறு குறிப்போடு நின்றுவிடும். இந்தியாவின் வளர்ச்சியென்பது அதிகமாய் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதிகமாய் வெளியே செலவழிக்காமல் இருப்பதிலும் அடங்கும்.

சமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணங்கள் ஏதாவது வழிவகுக்குமென்று நினைக்கிறேன். சர்வம் சிங்கார்ப்பணம்!!

எத்தனை அம்மாக்கள்

ரொம்ப நாளானாதே என்று கொஞ்சம் அண்ணா நகர் பக்கம் ஒரு ரவுண்ட் போகலாமே என்று போனால், ஆச்சர்யம் காத்திருந்தது. சிகப்பு துணியில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆஹா, காரல் மார்க்ஸ் இப்போது தான் அண்ணாநகருக்கு தெரிந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு செத்துக் கொண்டிருக்கும் கம்யுனிசத்தினை கொஞ்சமாவது உயிர்பிக்க, சாந்தி தியேட்டர் சப்வேயில் மட்டுமல்ல, அண்ணாநகரிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற பேரானந்தத்தில், தாடியாசானுக்கு மனதார ஒரு ரெட் சல்யூட் அடித்துவிட்டு எங்கே போகிறார்கள் என்று பின்னால் போனால், விஷயம் வேறுமாதிரியாகிவிட்டது. அவர்கள், "அம்மா" ஆதிபராசக்தி மேல்மருத்துவத்தூர் பக்திமான்கள். ...த்தா.. ஒழுங்கா போறானுங்களா பாரு என்று சைக்கிள்காரார்களை ஒரு சிகப்பு சட்டையணிந்தவர் சொல்வதை நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பக்தி பரவசம் பொங்கிவிடும். நம்மூரில் தான் மாலைப் போட்டிருந்தால், அவருக்கு ஒயின் ஷாப்பில் தனி மரியாதை கிடைக்கும். கிடைக்கும் நெகிழிக் கோப்பைக் கூட சுத்தமாக தருவார்கள். சாமி குடிக்குதில்லை. இப்படியாக இங்கே ஒரு "அம்மா" இருந்தால், தமிழ்நாட்டினை ஏமாந்தால் ஏலம் விட இன்னொரு அம்மா, இதயதெய்வம், கோட்டை நாயகி இருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தினை உலகின் தலைசிறந்த நரகமாக ஆக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் அம்மா இவர்கள். இது போதாதென்று, இங்கே விருகம்பாக்கத்தில் இருக்கும் "அம்மா" அமிர்த்தானந்தாமாயி வேறு எப்போதாவது சென்னை வந்தால் போதும், அந்த சாலையே பரபரப்பாகிவிடும். மாதா அமிர்தானந்தாமாயி பற்றி யோசித்தால், காலச்சுவட்டில் பால் சக்கரியா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நிறைய சைரன் வைத்த கார்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். அம்மா வரம் கிடைக்குதில்ல, வேறென்ன வேண்டும். இதைப் போல நியுமராலஜியில் ஒரு அம்மா, கையேழுத்தின் மூலம் உங்கள் தலையெழுத்தினை மாற்றும் அம்மா என தமிழ்நாட்டில் அம்மாக்களுக்கு பஞ்சமில்லை. இதை ஒரு படத்தில் பாக்யராஜ் இதை நன்றாக கலாய்த்திருப்பார். ஒரு பொட்டிக் கடையில் ஒரு பெரியவர் ஒரு சிறுவனுக்கு, அம்மா போனால் கிடைக்காது, அம்மா மாதிரி யாரும் கிடையாது, அம்மாவினை வாங்கமுடியாது என்று நீண்ட லெக்சர் கொடுக்கும்போது, சர்வசாதாரணமாக "ஒரு தாய் கொடுங்க" என்று வாரப்பத்திரிக்கையினை வாங்கிப் போய் பெரியவர் முகத்தில் கரியினை பூசுவார். தமிழ்நாட்டில் "அம்மாக்களுக்கு" பஞ்சமில்லை. அதுப் போல, தமிழ்நாட்டில் இனி வரப்போகும் பக்திமான்கள், கடவுளின் இடைத்தரகர்கள், அம்மாவினை விட்டு, சித்தி, அக்கா, பெரியம்மா, ஆயா வாக இருக்கலாம். தமிழ்நாட்டில் அம்மாக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதைத் தவிர பிற பொறுப்புகளினை இவர்கள் ஏற்கலாம். இல்லாவிட்டால், சத்தியராஜுடன் சேர்ந்து உம்மா, உம்மம்மா மாதிரி அம்மா, அம்மம்மா என்று பாடலாம்.

Jul 15, 2005

எத்தனாலா, எத்தன நாளா?

தன்மான சிங்கம், தங்க தலைவர் டி.ஆர் புறப்பட்டு விட்டார். பெட்ரோல் விலைவாசி உயர்வினை கண்டித்து, சென்னையில் சைக்கிள் பேரணியினை நடத்தி, சைக்கிளை பெட்ரோல் இல்லாமல் ஒட்டமுடியும் என்கிற அரிய உண்மையினை ஊருக்கு உணர்த்த, உலகிற்கு காட்ட, பெடலை மெறித்து கொண்டு கிளம்பிவிட்டார்.

"பெடல் கட்டை மெறீக்கும் போது மாரு எலும்பு வலிக்குது. பட்டை சாராயத்தை....."

டன் டணக்கா, ஏய்ய்ய்ய்ய் டணக்குணக்கா

தென்னமரிக்க நாடுகளில் மிக முக்கியமாக பிரெசிலிலும், சீலேயிலும், வென்சூலாவிலும் மிக முக்கியமான எரிபொருளாக எத்தனால் கருதப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளையே பெரும்பாலும் எரிப்பொருளுக்காக உலகம் தொங்கிக் கொண்டிருக்கும் போது, மாற்று எரிப்பொருளாக கரும்பு சக்கையிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை தென்னமரிக்க நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. பெட்ரோலினை பயிரிட முடியாது, ஆனால் கரும்பினை செய்ய இயலும்.

பெட்ரோல் நிலைய நிறுவனர்கள் தங்களுக்கு வரும் கமிஷன் தொகை பத்தாது என்பதற்காக, கால வரையற்ற தொடர் போராட்டத்தினை ஜுலை 18-ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறார்கள். அவர்களின் கமிஷன் ஏறுமா இல்லையை என்பது மணி சங்கர் அய்யரிடத்தில் தான் இருக்கிறது. மணி சங்கர் அய்யர் இன்றைய தேதியில் எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

ஏய், நான் எம்.ஜி.ஆர் காலத்துல, துணிச்சலா, எம்.ஜி.ஆரையே எதிர்த்து நின்னவன். கலைஞர் காலத்துல, வெளியில வந்து கலைஞரை எதிர்த்து நிக்கறேன். தங்க தலைவி அம்மா தான்டா எல்லாம். மத்ததெல்லாம் சும்மா. மத்தவங்களுக்கு பின்னாடி தமிழ்நாடு தான்டா நிக்கும், இதுக்காகவே டிடிகே மேப் வாங்கி என் ஆபிஸ்ல எனக்கு பின்னாடி உலகமே இருக்கற மாதிரி செட் பண்ணியிருக்கேன் டா. ரஜினி கூடவும் என்னால மோத முடியும். சிம்பு கூடவும் என்னால ஒடவும் முடியும். செட் போட்டு தமிழ்நாட்டை கலக்கினவன் டா நான், என்னாலயா, என் கூட்டத்துக்கு ஆட்களை செட் பண்ணமுடியாது.

எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் பொருட்டு இந்தியாவிற்கு மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இந்தியா கரும்பு உற்பத்தியில் உலகின் முதல் 5 நாடுகளுக்குள் வந்து விடும். இம்மாதிரியான முயற்சிகள் இந்தியாவில் ஏற்கனவே நடந்துக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும், அரசின் போதிய கவனத்தையும் ஒத்துழைப்பையும் பெறாததால், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிறதேயொழிய நாடு தழுவிய மாற்றத்தினை இதனால் உண்டாக்க முடியவில்லை. பயோடீசல் என அழைக்கப்படும் இத்தகைய மாற்று எரிப்பொருட்களைப் பற்றிய செய்தியொன்று சில மாத இடைவெளிக்கு முன் பிஸினஸ்வேர்ல்ட்டில் வந்திருந்தது. அதிலிருந்த ஒரு செய்தியினை ஆங்கிலத்திலேயே தருகிறேன்

The Chalbardi Model
When the natives at Chalbardi, a tribal hamlet in Andhra Pradesh's Adilabad forest, were told that they could pay for electricity with the abundant Pongamia [Karanji] seeds strewn on the forest floor, they gazed in disbelief.

Two off-the-shelf gensets of 7.5 KVA each were installed in a hut. The hamlet was wired. Karanji oil engines powered a decorticator and an oil mill. In June 2001, darkness made way to light, right in the middle of a forest with no pylons, no pollution, no down-time and no bills to pay. This self-sustaining miracle cost just Rs 5 lakh.

In the months since mid-2001, 10 forest villages in Adilabad have followed the Chalbardi model: converting vegetable oil to diesel power. In less than five years, the idea has begun to deliver results and make economic sense. It is an idea that has probably had the fastest run from lab to land in India.

States like Andhra Pradesh and Tamil Nadu are taking up large-scale plantation of the Karanji seeds. Andhra Pradesh has formulated an ambitious plan of bringing 15 lakh acres under these two crops by giving nearly 90 per cent subsidy for drip irrigation equipment on 5 acres per farmer. It is also planning to put wasteland into use and provide employment opportunities for thousands of local youth by leasing the land to individuals and companies.
இன்னா சார் உனுக்கே தெரியும் பெட்ரோல் வெல ஏறிப் போச்சுன்னு. சென்ட்ரலருந்து விருகம்பாக்கம் போகணும் சார், 120 ரூவா ஆவும். காலீயில முத சவாரி நீதான் சார், ஏறு சார், உழைப்பாளி நானு என்ன பெருசா கேட்டுற போறேன். பாத்து போட்டு குடு சார். மெட்ராஸ்ல ஒரே வெயிலு சார். பெட்ரோல் வெலய வேற ஏத்திப்புட்டாணுங்க, ஒவ்வொரு சவாரி கிட்டயும் கெஞ்ச வேண்டியதா இருக்கு. ஏறு சார், ஜோதிகாவை சூர்யா கல்யாணம் பண்ணிப்பாருன்னு சொல்றாங்களே சார், நெசமாவா சார்

நியுயார்க் டைம்ஸில் எழுதும் தாமஸ் ப்ரீட்மேன் [ The world is flat ] கொஞ்ச நாளைக்கு முன் ஜெனரல் மோட்டார்ஸீனை டொயட்டா வாங்கி விடவேண்டும் என்று எழுதினார். அதற்கு அவர் சொல்லும் மிக முக்கியமான காரணம், அமெரிக்க அரசு எரிப்பொருளுக்காக செலவிடும் தொகை. டொயட்டாவின் க்ரீன்ப்யூல் என்றழைக்கப்படும் பயோடீசலும், மின்சாரமும் பயன்படுத்தி ஒடும் கார்களினால், அமெரிக்க மக்களும், அரசும் நிறைய லாபமடையலாம் என்கிற நோக்கில் எழுதப்பட்ட பத்தியது. இதே கண்ணோட்டத்தினை இந்திய அரசும் எடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். பெட்ரோலொன்றும் வற்றாத ஜீவநதியல்ல. இப்போதே எரிப்பொருளுக்காக அமெரிக்க அரசும், அரசின் குடிதாங்கியும் என்னென்ன நாடுகளை குறிவைத்து போர் தொடுக்கிறார்கள் என்பது தெரிந்ததே. இன்னும் 20-30 வருடங்களில், எரிபொருள் வற்ற ஆரம்பிக்கும்போது, மூன்றாம், நான்காம், ஐந்தாம் உலகப்போர்கள் மூளுவதற்கான சாத்தியக்கூறுகள் ஈராகின் ஆளுகைக்கு பின் தெளிவாக தெளிகின்றன.

ஆகவே என் இனிய தோழர்களை, இந்த டி.ஆர் ஒரு நாளும் உண்மை பேசமாட்டான் ச்சீ.. உங்களை கை விட மாட்டான். எம்.ஏ படித்திருந்தாலும், ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதை, துடைப்பம் கொடுத்தால் பெருக்குவதை, முறவாசல் செய்வதை, துணி தோய்த்து கொடுப்பதை, பாத்திரம் அலம்புவதை தான் நான் விரும்புகிறேன்.

அர்ஜுனன் விட்டான்டா அம்பு
நாயுக்கு இல்லடா கொம்பு
எங்கிட்ட வச்சுக்காத வம்பு
நான்தான்டா அம்மாவோட சொம்பு

முடிவிலிருந்து ஆரம்பத்திற்கு

Back to square one again.....

இன்றைய பிபிசி தளத்தில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையேயான ட்சுனாமி மீட்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறைவேற்ற தடை செய்துள்ளது. சந்திரிகா அரசு, ஜே.வி.பியின் வற்புறுத்தலை தாண்டி, புலிகளோடு ஒப்பந்தம் போடுவோம் என்று சொன்னபோதே ஏதோ நடக்கப் போகிறது என்று உள்மனசு சொன்னது. இவ்விடைக்கால தடையின் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், செயல்பாட்டிற்கும் மிகப் பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

இனி புலிகளும், அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வார்கள். ஏற்கனவே, இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களோடு உலா வருவதாகவும், புலிகள் அரசு ஆயுதமில்லாத போராளிகளை கொல்வதாகவும் இருபுறமும் குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி அமைதி பேச்சுவார்த்தை நின்று போய், புலிகள் ஆயுதமேந்தினால், அரசு உடனே உச்சநீதி மன்ற தீர்ப்பினை கைக் காட்டும். புலிகள் அதை அவமதிப்பார்கள். மீண்டும் ஒரு போர்ச்சூழல் உருவாகும். இனி வழக்கம்போல புலி ஆதரவு, எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு வலைத்தளங்கள் செய்திகளை குவிக்கும்.

கவலையாகவும், வேதனையாகவும் இருந்தாலும், நிலைமை இப்போது back to square one.

Jul 13, 2005

ப்ளமரும் புஷ்ஷின் பொருளாதாரமும்

அன்னியனை எழுதும்போது வாத்தியார் இதற்கும் க்யாஸ் தியரிக்கும் சம்பந்தமிருக்கிறது என்று சொன்னது போல ஞாபகம். வாத்தியார் தவறாக சொல்லமாட்டார்,சரி எளிமையாக க்யாஸ் தியரியினை எப்படி விளக்கிக் கொள்வது?

உங்கள் வீட்டு பாத்ரும் அடைத்துக் கொண்டுவிட்டது, ப்ளம்பர் வரவில்லை. பள்ம்பர் வராததால், காலை, முன்னிரவு கடன்களை சுமந்துக் கொண்டு நீங்கள் ஆபீஸ் போய்விட்டீர்கள். டாய்லெட் போன சமயம் பார்த்து உங்கள் முதலாளி உங்களை தேடியிருக்கிறார். நீங்கள் கண்ணில் படாததால், உங்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலையை சொல்லாமல் போய்விடுகிறார். சொல்லாமல் போனதால் நீங்கள் வேலை செய்யவில்லை. நீங்கள் வேலை செய்யாததால் மின்னஞ்சல் அனுப்பவில்லை. இதனால், உங்களின் சப்ளையருக்கு குறித்த நேரத்தில் பொருள் போய் சேரவில்லை.

பொருள் சேராததால், அவர் தினமும் தொடர்பு கொள்ளும் பன்னாட்டு நிறுவனத்தின் தேவையை சமாளிக்க முடியாமல் அவர் அந்த ஆர்டரினை தவற விடுகிறார். இந்தியாவில் தவறவிட்ட ஆர்டர் ப்ரான்ஸுக்கு போகிறது. தரக் குறைவினாலும், குறைந்த கட்டணத்தினாலும் ப்ரான்ஸ் நிறுவனம் அதனை ஒரு இஸ்ரேல் நிறுவனத்திற்கு தாரை வார்க்கிறது. வாய்ப்பினை எடுத்த இஸ்ரேல் நிறுவனத்தின் முதலாளியின் கார் ஒரு வெடிகுண்டில் சேதமடைகிறது. சேதமடைந்த காரினை காப்பீடு செய்த நிறுவனம் அமெரிக்க நிறுவனம்.

இப்படியாக அதிகப்படியாக இழப்பீடினை சந்திக்கும் அமெரிக்க காப்பீடு நிறுவனம், அங்கே உள்ளவர்களை நிந்தித்து பாலஸ்தீனத்திற்கு எவ்வித உதவியும் தரக்கூடாது என்கிறது. பாலஸ்தீனியர்கள், பிற அமெரிக்க நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களும், அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சனைகள் செய்கிறார்கள். பிரச்சனைகள் பெருகியதாலும், பயம் அதிகரித்ததாலும், அரசு பாதுகாப்பிற்கு அதிக செலவினை செய்கிறது. பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் பெருகியதால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணுகிறது. டாலர் மதிப்பு குறைகிறது. புஷ்ஷின் பொருளாதாரம் டல்லடிக்கிறது. தேய்கிறது.

இப்படியாக அமெரிக்க பொருளாதாரத்தினை வெற்றிகரமாக சிதைக்க உங்கள் வீட்டு ப்ளம்பர் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். இப்படியாக உங்கள் வீட்டு ப்ளம்பரினால் அமெரிக்க பொருளாதாரம் சிதைவுறும் அபாயங்கள் உண்டு. இவ்வாறாக சம்பந்தா சம்பந்தமில்லாத இரண்டு நிகழ்வுகளின் பிண்ணணியினை தொடர்ந்துப் போய் பார்த்தால் க்யாஸ் தியரி புலப்படும் என்று யாராவது சொன்னால் நம்புவதும், நம்பாததும் உங்களிஷ்டம்.

தனியாக மடலெழுதினால், சீன, ஐரோப்பிய, பாகிஸ்தானிய பொருளாதாரத்தினை க்யாஸ் தியரியின் மூலம் எப்படி சிதைப்பது என்று கற்றுத்தருகிறேன்.

கடை நவீனத்துவம்

அவரவர் வாழ்வின் பிரச்சனையினைப் பொறுத்து அவரவர் பதில்கள் அமைகின்றன. பதில் எழுதும் எல்லோரும் நல்ல கேள்வி கேட்பவர்களாக இருப்பார்களா என்கிற சந்தேகம் எனக்குண்டு. சந்தேகமென்பது ஒரு நோய். நோய் வாயப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட கவனம் தேவை. கவனமின்மை என்பதும், கவலையின்மை என்பதும் வெவ்வேறான போதிலும், கவனமின்மையினால் வரும் கவலைகளைக் கொண்டு பார்க்கும் போது, கவனமின்மையோடு, கவலையினமையும் தோதாக இருக்குமென்று தோன்றுகிறது. தோதுபடுபவர்கள் ஒன்றாக சேர்த்து பாட்டுப் பாடலாம், நடனமாடலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம். எது செய்யவேண்டுமென்றாலும் ஏதாவது ஒன்று தேவையாக இருக்கிறது, அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒன்றெனப்படுவது பரம் பொருள். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறான் வள்ளுவன். உலகத்தின் மொத்த எடையை சரிபாதியாக வகுத்து அதனை 23865432975-யால் வகுத்தால் எந்த ஒரு தனி மனிதனின் எடையையும் குத்து மதிப்பாக சொல்லமுடியும் என்கிறது ஒரு கணினி விதி.

விதிப்பயனைக் கொண்டு நடக்கும் மனிதர்களுக்கு பிரச்சனைகள் குறைவாக இருக்குமென்று தோன்றுகிறது. மனிதர்கள் விசித்திரமானவர்கள். விசித்திரவீரியன் கதையை படித்தால், இந்திய புராணங்களின் புருடாக்கள் தெரியவரலாம். கருடபுராணம் அன்னியனாதிலிருந்து, மற்ற புராணங்களுக்கு கொஞ்சம் கிராக்கி ஏற்பட்டிருக்கிறதோ என்று கூட ஐயமுண்டு. கத்திரிக்காய் சந்தையில் ஒரே கிராக்கி. சந்தை பொருளாதாரத்தினை மையமாகக் கொண்டு எழுதப்படும் வணிக இதழ்களில் மனிதர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்களா என்றால் இல்லையென்றுதான் கூற முடியும். இதழ்களில் பிடித்தது தாமரை என்று சொன்னால், நான் ஒரு அகில இந்திய கட்சிக்கு ஆதரவாளன் என்கிற எதிர்ப்பலையை உங்களால் உண்டாக்க முடியும். ஆதரவு, அனாதை என்கிற பிரிவுகளில் உலகின் மொத்த பந்த பாசங்களும் அடங்கிவிடுகின்றன என்றாலும், ஆதரவுள்ள அனாதை அல்லது அனாதைக்கு ஆதரவு என்று எழுதும்போது அவ்வார்த்தையின் பொருளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் சற்றே கிலேசத்தினை உண்டு பண்ணுவது என்னமோ உண்மைதான்.

உண்மை விளம்பிகள் ஊர்தோறும் இருந்தாலும், கொல்லப்படுவர்கள் அவர்களிலேயே உரக்கச் சொல்லுபவர்கள். விளம்பிய சங்கர் ராமனிலிருந்து பின்னோக்கிப் போனால் வரலாறு நிறைய உண்மைகளை சொல்லும். வரலாறு என்பதை fill in the blanks என்று ஒருமுறை சுஜாதா சொல்லியிருக்கிறார். சுஜாதாவின் பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் பாலசந்தரின் முத்திரை தெரியும். அண்ணா நகர் போஸ்டாபிஸீல் குத்தும் முத்திரைக்காக, மூன்று மாடி ஏறி இறங்க வேண்டியதாக இருக்கிறது. உங்கள் வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்த்தால், கண்டிப்பாக யாரேனும் ஒரு பெண் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருப்பாள். விஷப்பரீட்சையாக முடியும் விஷயங்களில் முக்கியமாக பார்ப்பது காதலில் தோல்வியடையும் ஒரு இந்திய மாணவனாக தான் இருப்பான்.

காதல் படத்திற்கு பிறகு சந்தியாவினை பார்க்க முடியவில்லை. சந்தியாராகமில் பாகவதரை ஹீரோவாக போடும் துணிச்சல் இருந்த அளவிற்கு வேறெந்த படத்திலும் பாகவதர் ஹீரோவாக நடிக்கவில்லை. ஹீரோ சைக்கிளின் மார்க்கெட் ஷேர் கொஞ்சம் விழுந்திருக்கிறது போல் தெரிகிறது. சென்செக்ஸ் 7300 தாண்டினாலும் தொழில்வணிக நிறுவனங்களில் ஷேர்கள் என்னமோ ஹாலிவுட் நடிகைகளின் புடவை தலைப்பு மாதிரி சரிந்துதான் கிடைக்கிறது. நல்லியில் புடவைக்கு தள்ளூபடியில்லை என்று ஊரெங்கும் விளம்பரம். விளம்பரத்தினையும், இந்த விளங்காத உரையினையும் விமர்சிப்பது அவரவர் பார்வை.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]