Jul 21, 2005

பைனாகுலர் 10351

சரியாக 30 வினாடிகள். இரண்டு ப்ளாக்குகள். வைக்கப்பட்ட வெடிகுண்டில் இம்மியும் பிசகாமல் கீழே சரிந்தது. சா பாலோவில் [பிரேசில்] இருக்கும் கரென்திரு சிறைச்சாலையின் இரண்டு பளாக்குகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. கரென்திரு ஒரு ரத்தக்கறைப் படிந்த சிறைச்சாலை. 1992-ல் சிறைக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியில் 111 கைதிகளை போலீஸ் கொன்று குவித்த இடம். தரைமட்டமாகுமுன்பு சில நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. நான் பிரேசில் போனால் பார்க்கலாமென்று இருந்த இன்னொரு இடமும் இப்படியாக காணாமல் போகிறது. ரொம்ப நாட்களாய், விஜய், மாண்டீ, வசந்த் இவர்களை தொந்தரவு செய்து நான் கேட்டுக் கொண்டிருக்கும் படம் கேரன்திரு இந்த சிறைச்சாலையின் கிளர்ச்சியையும் படுகொலையையும் பிண்ணணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஒரு சரித்திரம், மண்ணாகிப் போனது.

பார்க்க - கேரன்திரு படம் | சிறை சிதைக்கப்பட்ட செய்தி

தமிழில் மாற்று சினிமாப் பற்றி வரும் சிற்றிதழ்கள் மிகக் குறைவு. இலக்கிய அக்கப்போர் செய்யும் சிற்றிதழ்கள் நிறைய இருந்தாலும், சினிமாப் பற்றி பேசும் இதழ்கள் குறைவு. பிற இதழ்கள், அந்நியனையும், காதலையும் பற்றி "எலக்கிய வெமர்சனம்" எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இதை முதலில் நிறைவு செய்ததற்காகவாவது "நிழல்" திருநாவுக்கரசிற்கு நன்றி சொல்லவேண்டும். பின்பு "கனவு" வந்தது. காஞ்சனை சீனிவாசன் சிற்றிதழ் தருகிறாரா என்கிற செய்தி என்னிடத்தில் இல்லை. டிஜிட்டல் கேமராக்கள், குறும்படங்கள் பற்றிய அறிமுகங்கள், திரைப்பட விழாக்களின் மூலமாக மாற்றுசினிமா பற்றிய விவரங்கள் கொஞ்சம் பரவலாய் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இதில் புதிதாய் வந்திருப்பது இரண்டு சிற்றிதழ்கள், இரண்டும் மாற்று சினிமா, நல்ல சினிமா, உலக சினிமாவினை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன.

சென்னையிலிருந்து வெளி வரும் அவ்விரு இதழ்கள் "செவ்வகம்" மற்றும் "படப்பெட்டி". இதில் செவ்வகம் முதல் இதழாக வெளியாகி இருக்கிறது. நல்ல முயற்சியாக தோன்றுகிறது. ஆனாலும், இவர்களும் அரைத்த மாவினையே அரைக்கிறார்கள். ஈரானிய சினிமா, பதேர் பாஞ்சாலி, அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன், விவரணப் படங்கள் என்று டெம்ப்ளேட் பிசகாமல் வந்திருக்கின்றன. இது தாண்டி, நான் எதிர்பார்ப்பது குறும்படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள், ஷாட் கம்போஷிஷன், திரைக்கதை எழுதுவது, மாற்று சினிமா பார்வைகள், கருவிகள் இவைப் பற்றிய தெரிதல்களடங்கிய பத்திகள் வரவேண்டும். வெறுமனே கிராமத்தான் விமானத்தினை ஆவெனப் பார்த்த கதையாய், உலக சினிமாவினை வாசிப்பதைத் தாண்டி, நாமும் படமெடுக்க என்ன செய்யவேண்டும் என்கிற விஷயமில்லாமல் மாற்றுசினிமா சிந்தனைகள் உருப்பெறாது.

படிக்க - செவ்வகம், படப்பெட்டி [இரண்டும் நியு புக்லேண்ட்ஸில் கிடைக்கிறது]

அருந்ததி ராயின் ஒரு கட்டுரையை புதுவிசையில் அ.முத்துக் கிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார். இதன் மூலக் கட்டுரையினைப் பற்றிய தெரிதல்கள் அக்கட்டுரையில் இல்லை. புதிய தாராளமயக் கொள்கையின் மூலம் ஒரு பக்கம் நுனிநாக்கு ஆங்கிலமும், ஹாரி போர்டருக்கு கியூவில் நிற்கும் ஜனங்களும், செல்போனும், காபி ஷாப்பும், கொழிக்கும் நாட்டில் தான், இந்து தேசியமும், இனவெறிக் கொலைகளும், ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் [பவாந்தர் பார்த்து வீட்டீர்களா?] ஊடக வன்முறைகளும், சார்பியல்புகளும், எதிர்-அரசு சார்பு ஊடக நசுக்கல்களும் நடந்துவருகின்றன. எந்த அளவிற்கு நமக்கு நுட்பங்கள் தேவைப்படுகிறதோ, அதேயளவிற்கு நம்மிடத்திலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் பார்க்கும் பார்வைகள் ஊடகங்களில் வரவேண்டும். இவையத்தனையையும் நல்ல காக்டெய்லாக எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்.

பார்க்க - புதுவிசை | அருந்ததிராயின் கட்டுரை-தமிழில்

சில வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் அழைப்புக்காக ஒரு வங்கிக்கு போக வேண்டியிருந்தது. வங்கியில் சந்தித்தவர்கள், அப்படியே அவரின் இன்னொரு நண்பரின் அறைக்கு சென்றோம். அந்த நண்பர், தமிழ் சினிமாவிலிருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களில் ஒருவர். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாய், சிறு பத்திரிக்கைகள், ஒரளவு சமூக பிரக்ஞை உள்ளவர். பேச்சு எங்கெங்கோ சுற்றி தமிழ்சினிமாவின் கதைக் களனில் வந்து நின்றது. சும்மா இல்லாமல், நான் ஒரு அவுட்லைன் சொல்கிறேன் என்று "ஸால்சா ஆடும் பெண்ணுக்கும், சால்னா தின்னும் பையனுக்குமான காதல்" என்று ஒரு வார்த்தையினை சொன்னேன். அருகிலிருந்த இன்னொரு உ.இ நண்பர், ஸால்சா-ன்னா என்ன சார் என்று கேட்க, நான் விளக்க, அவர் உடனே, இது "சூப்பர் நாட் சார், தமிழ்சினிமால இதுவரைக்கும் யாரும் சொல்லாத விஷயம். இதை டெவலப் பண்ணி தனுஷ் இல்ல புதுஆள் ஹீரோவா போட்டா நல்லா வரும் சார், ஹீரோயினுக்காக ஒரு ரிச் சாங், ஹீரோவுக்கு ஒரு குத்து சாங், இரண்டு பேருக்கிடையே இருக்கற வேறுபாடுகள், சமுகத்துனுடைய இரண்டு தளங்கள் ன்னு அருமையா இழுத்துறலாம். நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதுவீங்களா பாஸ்" என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா! தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா!

Comments:
ம்ம்... தேடியும் கிடைக்கவில்லை 'கேரன்திரு'.முயற்சியை விடவில்லை. தென் அமெரிக்கா படமென்றால் அலர்ஜி தானோ என்னமோ இங்கே. எங்கெங்கு நோக்கினும் 'மோட்டர் சைக்கிள் டையரி குறிப்பும்', 'சிட்டி ஆப் காட்'-ம் தான் கிடைக்கிறது.

// நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதுவீங்களா பாஸ்" என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா! தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா! //

அதானே.... :-)
 
// இரண்டு ப்ளாக்குகள். வைக்கப்பட்ட வெடிகுண்டில் இம்மியும் பிசகாமல் கீழே சரிந்தது//

ஓவர் குசும்பு. அட, இதையும் பிளாக்குல ஆரம்பிச்சுட்டாங்களான்னு ஆஆஆஆஆஆஆச்சரியத்தோடு உள்ளே நுழைய வெச்சது.

அதுசரி, எத்தனை நாளைக்குத்தான் 'யோகியின் suyaசரிதை'யை படிச்சிட்டே இருப்பீங்க... பாபா பயமுறுத்துறாரா?
 
//எத்தனை நாளைக்குத்தான் 'யோகியின் suyaசரிதை'யை படிச்சிட்டே இருப்பீங்க//

என்ன பண்றது ராம்கி, நேரம் கிடைக்க மாட்டேங்குது. அதனால, இன்னும் இழுத்துட்டு இருக்கு. பிரச்சனை என்னன்னா, allconsuming-ல தமிழ் புத்தகங்கள் லிஸ்ட் பண்ணமுடியாது. அதனால படிச்சிட்டு, பீத்திகிற மத்த புத்தகங்களைப் போட முடியறதில்லை ;-)

விஜய்,

சிட்டி ஆப் காட் ஒரிஜினல் டிவிடி ஒண்ணு இப்பவே ரிசர்வ்-ல வைச்சுக்குங்க.
 
தலீவா!! தனி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருக்கிறேன். போய் பாருங்களேன்.
 
அடப்பாவிகளா! தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா!
did it take so long for you to realize this
 
அந்த உதவி இயக்குனர் கேட்டதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லையே நாராயணன்...?..மெளரியாவில் ரூம் போட்டு எழுதினாத்தான் திரை கதை எழுதமுடியுமா என்ன...நம்ம மிண்ட் வீட்டு மொட்டை மாடியில,சிவஞானம் பார்க் நாயர் டீக்கடையில, அப்புறம் உட்லண்ட்ஸ் டிரைவ்ன் ல நாம எழுதாத திரையா....அப்புறம் நாரயணன்..கேபிள் டிவிக்கு ஒரு நிகழ்ச்சி தயாரிக்க லோகேஷன் பார்க்க போனோமே அந்த அனுபவம் நினைவிருக்கா.....உங்களை பேசின் பாலத்தில் நடக்க விட்டு எடுத்த மூவிங் ஷாட் நினைவிருக்கிறதா.....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]