Jul 26, 2005

பைனாகுலர் 10352

எம்.ஐ.டி என்கிற மண்டைப் பெருத்தவர்களடங்கிய பல்கலைக்கழகத்தின் சார்பில் Technoogy Review என்கிற இதழ் வெளிவருகிறது. Fast company, Business 2.0, Wired படிக்கும் புண்ணியவான்கள், இதையும் கொஞ்சம் பார்க்கலாம். இனி வரப்போகும் நுட்பங்களையும், வணிக சாத்தியக்கூறுகளையும் இன்னபிற அறிவியல் சங்கதிகளையும் உடைத்துச் சொல்கிறார்கள். கொஞ்சம் பின்னால் போய் [2003,2004] பார்த்தால், அவர்களின் இதழ்களில் எழுதியிருந்ததில் நிறைய விதயங்கள் நடந்திருக்கின்றன. கொஞ்சம் முன்னாலும், பின்னாலுமாக போய் படித்துக் கொண்டிருக்கிறேன். நுட்பத்தின் வாலைப் பிடித்து பயணம் செய்ய நினைக்கும் அன்பர்கள், சந்தா கட்டாமல் படிக்கலாம். எம்.ஐ.டி-யிலேயே எம்.ஐ.டி டெக்னாலஜி இன்ஸைடர் என்கிற இதழும் வருகிறது. ஒரு நல்ல இந்தியனாக சந்தா கட்டிப் படிக்கவேண்டும் என்கிற காரணத்தினால், பக்கத்தினை பார்த்ததோடு சரி. இது தாண்டி, தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆளுமை, மாறும் ஊடகங்களின் பங்கு, பன்முனை தொழில்கள் பற்றி படிக்க பாரெஸ்டர் மேகசீனை சிபாரிக்கிறேன். எழுதிப் போட்டால், வீட்டுக்கு இலவசமாக அனுப்பிவிடுவார்கள். பாரெஸ்டர் ஒரு உலகளாவிய மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம். இங்கே சென்னையில் மயிலாப்பூரில், ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை வைத்துக் கொண்டு உலகின் பல தொழில்களுக்கு ஆராய்ச்சி அறிக்கை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு "போதி" என்கிற புது சிற்றிதழ் காலாண்டிதழாக வெளிவந்திருக்கிறது. தலித்துகளின் குரலாக இது இருக்குமென்றும், வரலாற்றினை மீட்சி செய்யும் தளமாகவும், தலித் சார்ந்த எழுத்துக்களை ஒருங்கிணைக்கும் மேடையாகவும் இது அமையும் என்று எழுதியிருந்தது. ஆசிரியரின் முன்னுரையில் சே குவாராவின் "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்பதை மேற்கோள் காட்டி, நாம் வரலாற்றினை விடுதலை செய்வோம் என்று எழுதியிருந்தார் ரவிக்குமார். சமீப காலமாக ரவிக்குமாருக்கு தலித் எழுத்தாளர்களிடமிருந்து காட்டடி விழுந்துக் கொண்டிருக்கிறது. பிள்ளை கெடுத்தாள் வினை யாரைக் கெடுத்ததோ இல்லையோ, ரவிக்குமாரின் ஆளுமையை கெடுத்து அசைத்துப் பார்த்திருக்கிறது என்பது நிஜம். இதுதாண்டி, நான் கேள்விப்படும் சில விதயங்களும் சரியாக தோன்றவில்லை. இவ்வலைப்பதிவில் இதை தீவிரமாக எழுத ஆரம்பித்தால், இது ஒரு இலக்கிய "லைட்ஸ் ஆன்"னாகிவிடும் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் சனிக்கிழமை இரவு அர்ச்சனாவோடு பேசி முடித்துவிட்டு, என்னைப் பார்த்தால் சங்கதிகளை பகிர்ந்துக் கொள்கிறேன். போதி எல்லா சிற்றிதழ் விற்கும் கடைகளிலும் கிடைக்கிறது. என்னுடைய போன பதிவினைப் படித்து நீட்சியலிஸ்டாக மாறியவர்கள், சிறுபத்திரிக்கைகளோடு தொடர்பு கொண்டிருந்தால், ஏதெனும் கூகிளில் தேடி எடுத்து ஐந்தாறு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்க பெயர்களை முன் வைத்து நீட்சியலிஸ கோட்பாடினை எழுதலாம். கண்டிப்பாக வெளியிடுவார்கள். கொஞ்ச நாளில் க.பெயில் வாத்யார் இதை எழுதியதும் நம் விசைப்பலகை கத்திகளைக் கொண்டு போருக்கு கிளம்பலாம். இது தாண்டி, சந்திரவதனாவின் பதிவிலிருந்து, தமிழை உலகமொழியாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நாவிற்கு அனுப்பும் ஒரு பெடிஷன் பார்த்தேன். இதன் மூலம் பயனிருக்குமா, இல்லையா என்று தெரியாமல் போனாலும், நட்சத்திரப் பதிவுக்கு கள்ள வோட்டுப் போடுவது போல இந்த பெடிஷனிலும் ஒரு கையெழுத்துப் போடுங்கள்

ரெமோவா இது. முடி கொட்டி, இளந்தாரிகள் போல கத்திக் கொண்டு, தாவி குதித்துக் கொண்டு, ஸ்டிரிங்கில் கைவைக்காமலேயே கிடாரை ஆட்டிக் கொண்டு, "Love on SMS" என்று பாடிய பாடலை சஹாரவில் கேட்க நேர்ந்தது. மக்கள் முன்தீர்மானத்திற்கு போவதற்குமுன், இந்த ரெமோவும், சங்கரின் ரெமோவும் ஒன்றல்ல. இவர் ரெமொ பெர்னாட்டஸ். கோவாவிலிருந்து கிளம்பி, இந்தியாவில் ஆங்கில பாப் பாடல்களின் தலைமகனாக விளங்கியவர். பெப்சிக்காக இவர் பாடிய Yehi hai right choice baby.ah..ahaa விளம்பர வட்டங்களில் கனபிரசித்தம். தமிழில் கூட ஒரு பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதாக ஞாபகம். பாவம், வளர்ந்துவிட்ட நுட்பஜிகிடிகளாலும், புதுபாடகர்களாலும் ஒரம் கட்டப்பட்டு, போட்டியாக இறங்குகிறேன் பேர்வழி என்று மீண்டும் அரதப்பழசான " ஒரு பையன் ஒரு பொண்ணு" சமாச்சாரத்திற்காக மைக் பிதுங்க பாட்டுப் பாடுகிறார். ம்ஹும். காலம் முடிந்துவிட்டது. சில பேர்கள் இதுப் போல தன்னை தாண்டி காலம் போனாலும், அதை ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதமாய் தங்களையும் இருத்திக் கொள்ள முயல்கிறார்கள். [Avoid the blogs-- நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல ;-)]

கொஞ்ச நாட்களாகவே இந்தியாவில் தியாகிகளின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர், தியாகி சோட்டா ராஜன். தெஹல்காவின் சமீபத்திய பேட்டியில் தான் செய்த கொலைகள் அனைத்தும் [1992 மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நினைவுக்கு வருகிறதா] இந்தியாவின் நலனை முன்னிறுத்தியே செய்யப்பட்டன எனவும், தான் ஒரு தேசப்பற்று மிக்க இந்தியன் எனவும், இந்திய உளவுத்துறையும், தானுமே தாவுத் இப்ராஹீமின் வலைப்பின்னலை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் விரிகிறது. ஆகவே மக்களே, இந்தியாவுக்கு தியாகி சோட்டா ராஜன் செய்த பெரிய சேவையைப் பாராட்டி, ஏதேனும் ஒரு "பத்ம" விருதினை வழங்குமாறு அரசுக்கு மனு அனுப்புங்கள். இதனால், அவருக்கு அந்திம காலத்தில் பென்ஷனும், இந்திய ரயில்களில் சென்று வர இலவச பாஸூம் கிடைக்கும். பாவம் எவ்வளவுதான் ஒரு மனிதன் இந்தியாவுக்காக போராட முடியும்.

கூகிள் பற்றி எழுதாமல் இருப்பது நல்லதல்ல. சமீப காலமாக கூகிள் மெருக்கேறிக் கொண்டிருந்தாலும், கூடவே பிரச்சனைகளும் அதிகரித்திருக்கின்றன. மைக்ரோசாப்ட் [யாருப்பா இதை நுண்மென்மைன்னு எழுதினது?] கூகிளின் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்போவது கூகிளின் முதற்பக்கம். சாதாரணமாய் வெறுமனே www.google.com என்று அடிக்காமல், http://www.google.com/ig என்று அடித்து வரும் பக்கத்தினை உங்களுக்கு ஏற்றாற்ப் போல் நிரப்பிக் கொள்ளுங்கள். இதில் பிபிசி செய்திகள், வயர்டு, நுட்பவல்லுநர்களுக்காக ஸ்லேஷ் டாட், நியுயார்க் டைம்ஸ், ஜிமைல் என எல்லாவற்றையும் நிரப்பிக் கொள்ளலாம். கொஞ்சம் மை யாஹு! சாயல் அடித்தாலும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். செர்ஜி பிரின் வாழ்க!!

Comments:
Ottu pooteen. nanRi.
 
//மைக்ரோசாப்ட் [யாருப்பா இதை நுண்மென்மைன்னு எழுதினது?] //

மன்ச்சிக்க ஸார், நான் நம்ம பதிவுல லாங்ஹார்னை 'நீளகொம்பு'ன்னு எழுத ஸொல்லொ, contivity ஸார்தான் ஃபீலாயி மைக்ரொசாப்டை 'நுண்மெண்மை'யாக்கிட்டாரு.
 
நரேன், நல்ல 'பாம்புப்பார்வை'. கருட புராணத் தத்துக்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் :-). புது இதழ்கள் வருவது நல்லதே. ஏறகவே இரவிக்குமார் ஒரு பத்திரிக்கைக்கு (தலித்?) ஆசிரியராகத்தானே இருந்தார். அதற்கு என்னாச்சு? இந்த இலக்கிய புலம்பல்கள், அறிக்கைகள், இன்னபிற 'பித்துக்கள்' போன்றவற்றை பார்க்கும்போது, நல்ல படைப்புக்கள் எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் வண்ணநிலவன், வண்ணதாசன், கோணங்கி, பூமணி, யூமா வாசுகி, கண்மணி குணசேகரன், சு.வேணுகோபாலன் போன்ற படைப்பாளிகள் மீது நிரம்ப மரியாதை வருகின்றது.
 
நல்ல அவியல் நாராயண்...
//நல்ல படைப்புக்கள் எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் //
//கண்மணி குணசேகரன்//
டிசே,

கையைக் கொடுங்கள்! வெள்ளெருக்கு என்ற சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. ஒரு ஐந்தாறு கதைகள் படித்தேன் - அருமை! முழுதும் படித்துவிட்டுப் பதியலாம் என்றிருக்கிறேன்.
 
//நல்ல படைப்புக்கள் எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் வண்ணநிலவன், வண்ணதாசன், கோணங்கி, பூமணி, யூமா வாசுகி, கண்மணி குணசேகரன், சு.வேணுகோபாலன் போன்ற படைப்பாளிகள் மீது நிரம்ப மரியாதை வருகின்றது.//

உண்மை. கண்ணன் சொல்லியது போல எதையும் படிக்கவில்லை. ஆனால், சமீபத்தில் கேள்விப்பட்டது, பாவண்ணன் மொழிபெயர்த்த பைரபா [சரியான பெயரா தெரியவில்லை!]ஒரு அருமையான நாவல். மகாபாரதத்தினை பெண்களின் வழியே பார்க்கும் கதை. தேடிக் கொண்டிருக்கிறேன்.
 
// சந்திரவதனாவின் பதிவிலிருந்து, தமிழை உலகமொழியாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நாவிற்கு அனுப்பும் ஒரு பெடிஷன் பார்த்தேன். இதன் மூலம் பயனிருக்குமா, இல்லையா என்று தெரியாமல் போனாலும், நட்சத்திரப் பதிவுக்கு கள்ள வோட்டுப் போடுவது போல இந்த பெடிஷனிலும் ஒரு கையெழுத்துப் போடுங்கள்//

இம்மனுவில் அன்பு, சுதர்சன் போன்றவர்கள் தமிழிலேயே கையொப்பமிட்டிருந்ததைப் பார்க்கையில் மகிழ்ச்சியாயிருந்தது! நன்று.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]