Jul 19, 2005

எத்தனாலா -2

இதுப் போன பதிவின் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். உலகின் எரிப்பொருள் மொத்தக் கொள்ளவினைக் கொண்டு இன்னும் 41 வருடங்கள் ஒட்டலாம். பின் எல்லோரும் குதிரையோட்டப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். போனவாரம், அத்திப்பட்டிக் காணாமல் போன சோகத்தினை சிரித்துக் கொண்டே அஜீத் சொன்னப்போது, கடுப்பாகி, வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டே, என்.டி.டிவிக்கு தாவினால், பாரீன் கரெஸ்பாண்டெண்ட்ஸ் (Foreign correspondents) ஒடிக் கொண்டிருந்தது. உள்ளேப் போவதற்குமுன் இந்த நிகழ்ச்சியினை பற்றிய குறுஅறிமுகம். இந்தியாவிலிருந்து உலகின் மற்றப்பத்திரிக்கைகளுக்கு செய்திகள் அனுப்பும் நிருபர்களைக் கொண்ட அலசல் இது. நான் பார்த்த போது, எல்லோரும் சீரியஸாக இந்தியாவின் எரிப்பொருள் தேவையையும், இந்திய அரசாங்கத்தின் முன்னிருக்கும் போராட்டங்களையும் மாற்று ஏற்பாடுகளையும் பற்றி அலசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாளைக்கு இந்தியாவில் 68 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்தியாவின் தேவையில் 70% இறக்குமதி செய்யப்படுகிறது. பேசிய தலைகள் அனைத்தும் இயற்கை எரிவாயுவினை ஒரு மாற்று ஏற்பாடாக முன்வைத்தார்கள். காரணமிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் எரிப்பொருள் பிரிவு (Reliance Energy) 200 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு கிடைக்குமிடத்தினையும், ஜிஎஸ்பிசி [Gujrat state petroleum corporation என்று நினைக்கிறேன்] 20 டிரில்லியன் மெட்ரிக் டன்னுள்ள இயற்கை எரிவாயு இடத்தினையும் கண்டறிந்திருக்கிறார்கள். உலகமெங்கும், ஹைட்ரஜன் பொருளாதாரம் என்று சொல்லப்படும் எரிவாயு, பெட்ரோல், மின்சாரம், பயோப்யூல் என பல்வேறு எரிப்பொருள்களைக் கொண்டு ஒடும் வாகனங்கள் அதிகரிக்கும் என்றும் 30% எரிப்பொருள் தேவை 2030-இல் இதன்மூலம் தீரும் என்று தலையணை சைஸ் புத்தகங்களிலிருந்து டேட்டா தந்தார்கள்.

இதன்பின் தான் ஆரம்பித்தது பிரச்சனை. நியுயார்க் டைம்ஸின் நிருபர் என்று நினைக்கிறேன், இந்தியா அணுமின்சக்தியினை இன்னமும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார். இந்தியாவின் மொத்தத்தேவையில் வெறும் 3% மட்டுமே அணுமின் உற்பத்தியின் மூலம் பெறமுடிகிறது [2770 மெகாவாட்]. இந்தியாவில் 14 ரியாக்டர்கள் என்று சொல்லப்படும் அணு உலைகள் இருக்கின்றன. இந்தியாவில் அணுமின்சக்தியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மிகுந்த செலவு பிடிக்கிறது. இதற்கான காரணங்களாக, முன்னேறிய நாடுகள் நுட்பத்தினை பகிர்ந்துக் கொள்ளாததினை முக்கியமாக சொல்கிறார்கள். ஆனாலும், பாதுகாப்பு காரணங்கள், கதிரியக்கம், சுற்றுச்சூழல் செலவு போன்றவற்றை கணக்கெடுத்தால், இவர்கள் கொஞ்சம் தப்பாக கணக்குப் போடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இதுதாண்டி, அவ்வப்போது செர்னோபில் நினைவில் வந்து பயமுறுத்துகிறது.

இந்தியாவின் எரிப்பொருள், சக்திக்கான ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கும். நிலக்கரி, அணுமின்சக்தி, நீர், காற்று, சூரியன் மூலம் உண்டாக்கப்படும் எரிசக்தி என்று பிரிகிறது. போன தலைப்பில் எழுதிய எத்தனால் மற்றும் சூரிய எரிசக்திக்கு இந்தியாவில் மிகுந்த தேவையிருக்கும் என்று தோன்றுகிறது. கதிரியக்க பிரச்சனைகள் இல்லாமல், சுரங்கங்கள் தோண்டாமல் நமக்கிருக்கும் ஒரே மாற்றுவழி எத்தனால் மற்றும் சூரிய எரிசக்தி தான் என்று தோன்றுகிறது. தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், சட்டீஸ்கரின் வெயில் ஒவர்டைம் எடுத்துக் காய்கிறது. இதனை எரிசக்தியாக நம்மால் மாற்றமுடியுமானால், இதை ஒரு சிறுபகுதிக்கு மாற்று எரிபொருள் ஏற்பாடாக கொள்ளலாம். அதைப் போல், தண்ணீர் குறைவாக கிடைக்குமிடத்தில் எத்தனாலையோ, மாற்று எரிபொருள்களை உருவாக்கக் கூடிய பயிர்களையோ பயிரிடலாம். இதன் சுற்றுச்சூழல் செலவினைக் குறித்த கவனத்தோடு இதைப் பார்த்தல் வேண்டும்.

இவ்வளவையும் குறுகிய காலத்தில் செய்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஏனெனில் 2030 என்பது ரொம்பதூரம் போலத் தெரிந்தாலும் அது உண்மையில்லை. இன்றைக்கு இந்தியாவின் மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு பிறகு மிக முக்கியமான செலவீனமாக நாம் எரிபொருளினை காசுக்கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால், இந்தியாவின் வளர்ச்சி 6% தாண்டாது, ஜிடிபி அவ்வளவு தான். அன்னிய செலவாணி வந்தாலும், புகைவிட்டே தீர்த்துவிடுவோம். அப்புறம் பில்லியன் டாலர் ரிசர்வ் வங்கி ரிஸர்வ்களை முன்னொரு காலத்தில் வைத்திருந்தோம் என்று 12-ம் வகுப்பு பொருளாதாரப் பாடத்தில் 97-ஆம் பக்கத்தில் சிறு குறிப்போடு நின்றுவிடும். இந்தியாவின் வளர்ச்சியென்பது அதிகமாய் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதிகமாய் வெளியே செலவழிக்காமல் இருப்பதிலும் அடங்கும்.

சமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணங்கள் ஏதாவது வழிவகுக்குமென்று நினைக்கிறேன். சர்வம் சிங்கார்ப்பணம்!!

Comments:
அழகாய் எழுதியிருக்கிறீர். :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]