Jul 13, 2005

கடை நவீனத்துவம்

அவரவர் வாழ்வின் பிரச்சனையினைப் பொறுத்து அவரவர் பதில்கள் அமைகின்றன. பதில் எழுதும் எல்லோரும் நல்ல கேள்வி கேட்பவர்களாக இருப்பார்களா என்கிற சந்தேகம் எனக்குண்டு. சந்தேகமென்பது ஒரு நோய். நோய் வாயப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட கவனம் தேவை. கவனமின்மை என்பதும், கவலையின்மை என்பதும் வெவ்வேறான போதிலும், கவனமின்மையினால் வரும் கவலைகளைக் கொண்டு பார்க்கும் போது, கவனமின்மையோடு, கவலையினமையும் தோதாக இருக்குமென்று தோன்றுகிறது. தோதுபடுபவர்கள் ஒன்றாக சேர்த்து பாட்டுப் பாடலாம், நடனமாடலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம். எது செய்யவேண்டுமென்றாலும் ஏதாவது ஒன்று தேவையாக இருக்கிறது, அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒன்றெனப்படுவது பரம் பொருள். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறான் வள்ளுவன். உலகத்தின் மொத்த எடையை சரிபாதியாக வகுத்து அதனை 23865432975-யால் வகுத்தால் எந்த ஒரு தனி மனிதனின் எடையையும் குத்து மதிப்பாக சொல்லமுடியும் என்கிறது ஒரு கணினி விதி.

விதிப்பயனைக் கொண்டு நடக்கும் மனிதர்களுக்கு பிரச்சனைகள் குறைவாக இருக்குமென்று தோன்றுகிறது. மனிதர்கள் விசித்திரமானவர்கள். விசித்திரவீரியன் கதையை படித்தால், இந்திய புராணங்களின் புருடாக்கள் தெரியவரலாம். கருடபுராணம் அன்னியனாதிலிருந்து, மற்ற புராணங்களுக்கு கொஞ்சம் கிராக்கி ஏற்பட்டிருக்கிறதோ என்று கூட ஐயமுண்டு. கத்திரிக்காய் சந்தையில் ஒரே கிராக்கி. சந்தை பொருளாதாரத்தினை மையமாகக் கொண்டு எழுதப்படும் வணிக இதழ்களில் மனிதர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்களா என்றால் இல்லையென்றுதான் கூற முடியும். இதழ்களில் பிடித்தது தாமரை என்று சொன்னால், நான் ஒரு அகில இந்திய கட்சிக்கு ஆதரவாளன் என்கிற எதிர்ப்பலையை உங்களால் உண்டாக்க முடியும். ஆதரவு, அனாதை என்கிற பிரிவுகளில் உலகின் மொத்த பந்த பாசங்களும் அடங்கிவிடுகின்றன என்றாலும், ஆதரவுள்ள அனாதை அல்லது அனாதைக்கு ஆதரவு என்று எழுதும்போது அவ்வார்த்தையின் பொருளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் சற்றே கிலேசத்தினை உண்டு பண்ணுவது என்னமோ உண்மைதான்.

உண்மை விளம்பிகள் ஊர்தோறும் இருந்தாலும், கொல்லப்படுவர்கள் அவர்களிலேயே உரக்கச் சொல்லுபவர்கள். விளம்பிய சங்கர் ராமனிலிருந்து பின்னோக்கிப் போனால் வரலாறு நிறைய உண்மைகளை சொல்லும். வரலாறு என்பதை fill in the blanks என்று ஒருமுறை சுஜாதா சொல்லியிருக்கிறார். சுஜாதாவின் பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் பாலசந்தரின் முத்திரை தெரியும். அண்ணா நகர் போஸ்டாபிஸீல் குத்தும் முத்திரைக்காக, மூன்று மாடி ஏறி இறங்க வேண்டியதாக இருக்கிறது. உங்கள் வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்த்தால், கண்டிப்பாக யாரேனும் ஒரு பெண் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருப்பாள். விஷப்பரீட்சையாக முடியும் விஷயங்களில் முக்கியமாக பார்ப்பது காதலில் தோல்வியடையும் ஒரு இந்திய மாணவனாக தான் இருப்பான்.

காதல் படத்திற்கு பிறகு சந்தியாவினை பார்க்க முடியவில்லை. சந்தியாராகமில் பாகவதரை ஹீரோவாக போடும் துணிச்சல் இருந்த அளவிற்கு வேறெந்த படத்திலும் பாகவதர் ஹீரோவாக நடிக்கவில்லை. ஹீரோ சைக்கிளின் மார்க்கெட் ஷேர் கொஞ்சம் விழுந்திருக்கிறது போல் தெரிகிறது. சென்செக்ஸ் 7300 தாண்டினாலும் தொழில்வணிக நிறுவனங்களில் ஷேர்கள் என்னமோ ஹாலிவுட் நடிகைகளின் புடவை தலைப்பு மாதிரி சரிந்துதான் கிடைக்கிறது. நல்லியில் புடவைக்கு தள்ளூபடியில்லை என்று ஊரெங்கும் விளம்பரம். விளம்பரத்தினையும், இந்த விளங்காத உரையினையும் விமர்சிப்பது அவரவர் பார்வை.

Comments:
ஆளை ரொம்ப நாளா காணுமே என்ற போதே நினைத்தேன். லேட்டா வந்தாலும்....

கலக்கிட்டீரய்யா! ரகளையை தொடர்க!
 
நல்ல சிந்தனைத் தொடர். டிவி தொடர் மெட்டி ஒலியைப்பற்றியும், மெட்டி வாங்கிய வெள்ளி விலை பற்றியும், விலைவாசி ஏற்றத்தைப்பற்றியும், கிராம எற்றங்கள், கிணறுகள், பெட்ரோல் பற்றியும் கூட கூறியிருக்கலாம்:-))

ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் ஃபுல் ஃபார்ம்லே வந்திருக்கீங்க - வாங்க!
 
வாங்க, வாங்க!
 
வா ஸார், நல்லா எய்திகிற, நீ நல்லாகீறியா..
 
do it, like it is.,
arul
 
எங்கே இத்தனை நாளாய் காணோம் என்று நினைத்தேன். பின்னூட்டங்களில் கூட இல்லை. மீண்டும் வருக புத்துணர்வோடு.
 
நல்லா இருக்கு கதம்பம். இதே போல தெடர் ந்து எழுதினீர்கள் என்றால்தான் இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள் என்று யோசிக்கனும்.
 
நாராயணன், நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கின்றீர்கள். ஏதாவது புதிய புரொஜெக்ட் தொடங்கியிருக்கின்றீர்களா? குறும்பட விழா ஒன்று செய்ய எண்ணியிருப்பதாகச் சொன்ன ஞாபகம்.
நன்றாக எழுதுபவர் நீங்கள். தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் படிக்க வேண்டும்.
 
அப்பப்பா நாராயணன் அசத்தல் பதிவு.அப்படி வந்த வேகத்தில் காணாமற் போய்விடாதீர்கள்
 
ஆஹா... வந்துட்டான்யா...... வந்துட்டான்யா.....
 
அனைவருக்கும், நன்றாக இருக்கிறேன். ரகளை இனி தொடரும். தமிழலக்கிய முற்போக்கு, பிற்போக்கு, புறம்போக்கு வட்டங்களிலிருந்து விலகி கொஞ்சம் சிவன்போக்காக இருந்தது தப்பாப் போச்சு. இவ்விதமான கடை நவீனத்துவத்தினை யார் வேண்டுமானாலும் தொடரலாம். தொடர்ந்து எழுதி தமிழிலக்கிய ஷேக்ஸ்பியர்கள், பெர்னாட்ஷாக்கள், போர்ஹேக்கள், மார்கவெஸ்கள், இன்னமும் வாயில் நுழையாத அட்லஸில் இல்லாத நாடுகளிலிருந்து எழுதுபவர்களின் பேர்களையும் சேர்த்து எழுதுபவர்கள் வயிற்றெரிச்சலை மொத்தமாக கொட்டிக் கொள்ளலாம். கொண்டு போகவா போகிறோம் கொட்டி இருப்பதை ;-))))
 
//விதிப்பயனைக் கொண்டு நடக்கும் மனிதர்களுக்கு பிரச்சனைகள் குறைவாக இருக்குமென்று தோன்றுகிறது//
அப்படித்தான் எனக்கும் தோன்றுகின்றது :-).
.......
நல்லவேளை நரேன் வந்துவிட்டீர்கள். இல்லாவிட்டால் நானும் கார்த்திக்கும் சேர்ந்து, மாண்ட்ரீஸருக்கு திருமணம் மதி ந்டத்திவைத்த மாதிரி, உங்களுக்கு திருமணம் நடத்திவைக்கலாம் என்று தீர்மானித்து இருந்தோம். தப்பிவிட்டீர்கள் :-). பின்னூட்டத்தில் மற்ற நண்பர்கள் கூறியதுமாதிரி அடிக்கடி இங்கே வந்து எழுதுங்கள்.
 
இதுக்குப் பேர்தான் நவீன 'அந்தாதி'யா? :-)
 
வருக வருக...
 
This comment has been removed by a blog administrator.
 
தூள் கிளப்பிட்டீங்க.
கலக்குங்க..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]