Jul 24, 2005

காவிரி நீரும், கலாட்டாக்களும்

வழக்கம்போல காவிரி நீர் குழு டெல்லிக்கு பறந்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை கேட்டு, மின்மடல் இருக்கும் காலக்கட்டத்தில், பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம், அரசாங்க தபால் வழியாகவோ, ப்ரொப்ஷனல் கூரியர் மூலமாகவோ போய் சேர்வதற்குள் அடுத்த வருடம் வந்துவிடும். இது வருடாவருடம் நடக்கும் கூத்து. மழை பெய்தால், காவிரியில் நீர் நிரம்பிவிட்டால், கர்நாடக அரசும் "மனசு" வந்து தண்ணீரை திறந்துவிடும். இல்லையென்றால், எங்களுக்கே தண்ணீரில்லை என்று பஞ்சப்பாட்டு பாடும். இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி, தொடர்ந்து நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. காவிரி நீருக்காக, கர்நாடகத்தின் மீது படையெடுக்காததும், இந்தியாவிலிருந்து பிரியாததும்தான் பாக்கி, அதைத் தவிர எல்லா விஷயங்களும் நடந்துவிருகிறது. காவிரி நீருக்காக தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைப்பெற்ற பல்வேறு போராட்டங்களையும், உணர்ச்சிக் குவியல்களையும் இங்கே பதிய விருப்பமில்லை. மொத்தத்தில், தஞ்சை விவசாயிகளுக்கு இன்னமும் தீர்வான ஒரு பதிலை நம்மால் சொல்ல முடியவில்லை.

இதற்கான தீர்வாக எதை சொல்ல முடியும்? நதிகள் ஒருங்கிணைப்பு, நீரை காசாக்கி விற்றல் [பத்ரியின் பதிவு - சுட்டி யாராவது பதியுங்கள்] போன்ற பல்வேறுவிதமான சிந்தனைகள் இப்போது நம்மிடம் உலவி வருகின்றன. நதிகள் ஒருங்கிணைப்பினை கருத்து ரீதியில் சுற்றுச்சூழல், மனிதர்கள் வாழ்சூழ்நிலை போன்ற பல காரணிகளை முன்வைத்து நான் எதிர்த்து எழுதியும் இருக்கிறேன். இந்நிலையில் மத்திய அரசில் வேலைசெய்த ஒரு தலைமை பொறியாளர் மாற்று சிந்தனையை முன்வைத்திருக்கிறார்.

பவானி சங்கர் (75) மத்தியப்பிரதேச அரசின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஹிராகுட், சம்பல், துங்கபத்ரா, நர்மதா போன்ற பல அணைக்கட்டுகளை வெற்றிகரமாக அமைத்தவர். இந்திய அரசின் தலைமைப் பொறியாளராகவும் இருந்திருக்கிறார். உலக வங்கியின் ஆலோசனைப் பொறியாளராக இருந்த போது தமிழகத்தின் முல்லை, பெரியாறு, வைகை அணைத்திட்டங்களுக்கு உதவியிருக்கிறார். ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். போனவார குமுதம் ரிப்போர்டர் இவரின் மாற்று சிந்தனையும், அதற்கு வழக்கம்போல அரசின் மெத்தனத்தையும் பதிவுசெய்திருக்கிறது.

இந்த நேர்காணலில் வரும் சில விஷங்களில் எனக்கு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இவ்விதமான சிந்தனைகள் பரவலாக்க படிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நேர்காணலினை தருகிறேன்.

உங்கள் திட்டம் என்ன?

‘‘காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர், அரைபாட்டில் அளவு என்று வைத்துக் கொள்வோம். அதனை கர்நாடகம்_தமிழ்நாடு இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும்போது, போதுமானதாக இல்லை. அந்த அரைபாட்டில் நீரை, முழுபாட்டில் நீராக நிரப்பிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். அனைவரும் இருக்கின்ற நீரைப் பகிர்ந்து கொள்ளத்தான் பேசுகிறார்களேயழிய, நீர் வரத்தை அதிகரிக்கச் செய்ய யோசிக்கவில்லை.’’

நீங்கள் தயாரித்துள்ள இத்திட்டம் பற்றி விரிவாகச் சொல்லுங்களேன்...

‘‘மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப்பக்கம் காவிரி உருவாகி இரு மாநிலங்களுக்கும் நீர் தருகிறது. இதில் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவுதான். ஆனால் அதே மலையின் மேற்குப்பக்கம் நேத்ராவதி, காலிநதி, சரசுவதி நதி போன்றவை மலைப்பகுதியில் எண்பது மைல் ஓடிவந்து, வெறும் முப்பது மைல் தொலைவே சமவெளியில் ஓடி அரபிக் கடலில் கலந்து விடுகிறது. இந்த நதிகளின் மீது மழைப்பொழிவு அதிகம். சுமார் இரண்டாயிரம் டி.எம்.சி. தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் அரபிக்கடலில் போய்ச் சேருகிறது. இந்த நதிகளையே திருப்பி விடுவது எனது திட்டமல்ல. இந்நதிகளில் வரும் அதிகப்படியான நீரை, நீரேற்றுத் திட்டம் மூலம் காவிரியில் திருப்பலாம்.’’

எப்படி இத்திட்டம் சாத்தியம்? முன்மாதிரிகள் உள்ளனவா?

‘‘வெரி சிம்பிள்.. உதாரணத்திற்கு... நேத்ராவதி நதி உருவாகும் மலை உச்சியில் பம்ப் ஸ்டோரேஜ் மெஷின் மூலம் ஒரு குளம் வெட்டி நீர் தேக்க வேண்டும். அதுபோல் மலையடியில் ஒரு குளம் வெட்டவேண்டும். மேலிருந்து விழும் நீரைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். பவர் ஜெனரேட்டரைக் கொண்டு கீழிருந்து நீரை மேலே ‘பம்பிங்’ செய்ய வேண்டும். மேலே உள்ள குளத்து நீர் வழிந்து கிழக்குப்பக்கம் அதாவது காவிரியில் போய்ச் சேரும். இத்திட்டத்தால் வீணாகும் நீர் சேமிக்கப்பட்டு காவிரி பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும். மூன்று மாத மழைக்காலம் மட்டுமல்ல.. ஆண்டு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் மலைவளம் பாதுகாக்கப்படும். வன விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பும் கிட்டும்.

இதுபோன்ற திட்டங்கள் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் நிறைய உண்டு. அண்டை நாடான சீனாகூட செயல்படுத்தி வருகிறது. தண்ணீர்ப் பிரச்னை தலைதூக்கி நிற்கும் இந்தியாவில் இப்படியரு திட்டம்கூட இல்லை என்பது வருந்தக்கூடிய விஷயமாகும்.’’

இத்திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும்? நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்?

‘‘இருநூறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க பதினாறாயிரம் கோடி செலவாகும். இதனை மத்திய_மாநில அரசுகள்கூட செலவு செய்யத் தேவையில்லை. டாடா நிறுவனம் ஏற்றுச் செயல்படுத்த தயாராக உள்ளது. அவர்கள் செய்யும் செலவிற்கு மின்சாரம் தயாரித்து விற்பதன் மூலம் லாபம் ஈட்டிக் கொள்வார்கள். நமக்கு காவிரியில் அறுநூறு டி.எம்.சி. தண்ணீர் இலவசமாகவே கிடைத்து விடும். முப்பது ஆண்டுகள் லீசுக்குக் கொடுத்தால் திரும்ப அரசிடம் ஒப்படைத்து விடவும் அவர்கள் தயார். இரண்டு மாநில விவசாயிகளின் நலனுக்காக சம்பளம் ஏதுமின்றி நானே முன் நின்று இத்திட்டத்தை நிறைவேற்றித் தரவும் தயாராக இருக்கிறேன்.’’

இத்திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் சிக்கல் வராதா?

(சிரிக்கிறார்) ‘‘அரசிடம் ஒப்படைத்தால்தான் சிக்கல் வரும். அரசு என்றால் அரசியல்வாதிகள்தான் காண்ட்ராக்ட் எடுப்பார்கள். அதில் பணம் சம்பாதிக்கத்தான் முயல்வார்களேயழிய, திட்டம் நிறைவேற்றுவதில் ஆர்வம் இருக்காது. அதற்கு முப்பது ஆண்டுகளுக்குமேல் இழுத்தடிப்பார்கள். தனியார் என்றால் போடும் மூலதனத்திற்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் மூன்றே ஆண்டுகளில் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். என்னிடம் பேசிய ஓர் அரசியல்வாதி, ‘இத்திட்டத்தை அரசு மூலம் நாமே செயல்படுத்தலாம். நல்ல பணம் கிடைக்கும்’ என்றே பேசினார். அதில் எனக்கு உடன்பாடில்லை.’’

இரண்டு மாநிலங்களுக்கும் பலன் தரும் திட்டத்திற்கு ஏன் ஆதரவு கிடைக்கவில்லை?

‘‘உருப்படாத திட்டங்களுக்கு ஏராளமான பணத்தை வாரி இறைக்கும் அரசியல்வாதிகள், நல்லதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட தயாராக இல்லை. உங்கள் ஊரில் வீராணம் திட்டம் பயன் தராது என்று தெரிந்தும், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் பணத்தை செலவழிக்கவில்லையா? நீர் பிரச்னையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம்தான் முன் வர வேண்டும். கர்நாடகத்தில் சிலர் ‘இயற்கை மாறுபடும் என்றும், அரபிக்கடலில் மீன்வளம் பாதிக்கப்படும்’ என்றும் உளறுகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. இத்திட்டம் ஒன்றும் புதிதில்லை. உலக அளவில் பல நாடுகளில் செயல்படுத்தப்படுவதைப் போல நம் நாட்டிலும் செயல்படுத்தலாம். செயல்படுத்த வேண்டும். அது காலத்தின் அவசியம்!’’

இதுவரை இத்திட்டம் பற்றி யாரிடம் பேசியிருக்கிறீர்கள்?

‘‘கர்நாடக அரசியல்வாதிகளிடம் பேசியிருக்கிறேன். பலனில்லை. மத்திய நீர்ப்பாசனத் துறையிடமே அறிக்கை சமர்ப்பித்தேன். பதிலில்லை. சரி... தமிழக_கர்நாடக விவசாய சங்கப் பிரமுகர்களிடம் எடுத்துச் சொல்வோம் என்று கருதி ‘காவிரி குடும்பக் கூட்டத்தில் பேச அனுமதி கேட்டேன். அவர்களுக்கு ஏனோ இதில் ஆர்வமில்லை. இரண்டு நிமிடம் பேச அனுமதி தருகிறார்கள். எப்படி இரண்டு நிமிடத்தில் பேச முடியும்? தற்போதுதான் தமிழக விவசாய சங்கப் பிரமுகர்கள் புரிந்திருக்கிறார்கள். விஞ்ஞானியான குடியரசுத்தலைவரிடமே இந்த விஷயத்தைக் கொண்டு போவதாக உறுதியளித்திருக்கிறார்கள். காலம் கடந்தாவது என்றாவது ஒருநாள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது அலுவலகம் எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும்!’’

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

இந்த நேர்காணலில் இரண்டு விதயங்கள் தெளிவாக தெரிகின்றது. 1. நம்மால் உண்டாக்கப் பட்ட தேக்கநிலை பிரச்சனைகளை தீர்க்க மாற்றுச்சிந்தனைகள் ஏராளமாய் இருக்கின்றன, அதை விடுத்து மொத்தமாக நதியின் போக்கினை மாற்றுகிறேன் பேர்வழி என்று குயுக்தியாக சிந்திக்காமல் இருக்கலாம். 2. நீர்வளம் என்பது அரசுக்கோ, தனியார் நிறுவனத்திற்கோ சொந்தமல்ல. அது சமூக சொத்தாக [Social asset] அறிவிக்காதவரையில் இம்மாதிரியான பிரச்சனைகள் தொடரும். நதிகளை தேசியமயமாக்கல் என்கிற மற்றொரு சிந்தனை இதனால் அடிப்பட்டுப் போகும், இதனால், கேரள, தமிழக நீர்வளத்தின் பகிர்ந்துணரும் உரிமையை டெல்லியில் உட்கார்ந்துக் கொண்டு தீர்மானிக்கமுடியாது.

விரிவாக விவாதிக்க வேண்டிய விதயமிது.

Comments:
அரபிக் கடலுக்குள் செல்லும் எல்லா நீரையும் எடுத்து அந்த முப்பது மைல் மக்களை/காடுகளை வருத்த வேண்டியதில்லை. அதில் பாதியாவது இந்தப் பக்கம் வந்தால் நிலைமை தேறி விடும்.
இன்னொன்று என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அது காவிரியினுள்ளேயும் ஏனைய ஆறுகளினுள்ளேயும் தமிழகத்தில் மண்டிக் கிடக்கும் நெய்வேலிக் காட்டாமணி என்ற கொடிப் பூவரசு. வரும் நீரை முழுக்கக் குடித்தும் மண்ணைக் கட்டிக் கொள்வதால் ஓட்டத்தினை மட்டுப் படுத்தியும் நீரை வீணாக்கும் இந்தச் செடிகளை முழுமையாகக் களைந்தாலே அதிகமான நீரைப் பயிர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடலாம்.
மக்களுக்காய் இல்லாத அரசுகளையே ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி மாற்றித் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்!
 
தனி ஒருமனிதர் இது போல செடிகளை களைந்து நீக்குவதை பற்றி படித்தேன். ஊடகங்கள் கூட இவற்றை பாராட்டி எழுதுகின்றனவே தவிர வேறுதுவும் செய்வதில்லை.
 
நாரயணன், மொத்தமாக ஆறுகளை இணைப்பது என்பது சுற்றுச்சூழல் தற்கொலையையும், ஊழலையும்தான் கொண்டுவரும். ஆனால் இதுபோன்ற சிறுசிறு தடுப்பணைகள், சரியாக நீரைப்பயன்படுத்துவது் போன்றவை பயனளிக்கக்கூடும். இதைப்பற்றி உண்மையான அறிஞர்களும், ஆர்வலர்களும் விவாதிக்கவேண்டும். அரசியல்வாதிகளை வெளியேற்ற வேண்டும்.
 
வனங்கள் அழிவதால், மரங்களில்லாத வெட்ட வெளிகளில் நிலத்தின் தன்மை கடுமையடைந்து, அதில் மழை நீர் இறங்கி நிலத்தடி நீராக சேமிக்கப்படாமல், பள்ளப் பகுதிகளை நோக்கிப் பாய்கிறது, நதிகளாகவும், ஓடைகளாகவும். அதனுடன் விவசாயத்திற்கு மிகவும் அத்தியாவசியமான மணற்ப்பரப்பையும்(top soil) அரித்துக் கொண்டுச் செல்கிறது. இவை முடிவில் கடலில் சென்று கலக்கிறன. இப்படிக் காலகாலமாக உருவாக்கிவிட்ட பிரச்சனைக்கு நாம் கண்ட quick fix தீர்வுதான் அணைகள். இந்த அணைகள் தீர்த்து வைத்த பிரச்சனைகளை விட, அவை உருவாக்கிய பிரச்சனைகளே அதிகம்.

இன்னொன்று, (இரு மாநிலங்களிலும்) நம் விவசாயிகள் கடைபிடிக்கும் பாசன முறைகள். சொட்டு நீர்ப்பாசனம் போன்ற சிக்கனமான முறைகள் பரவலாகக் கடைபிடிக்கப் படுகின்றனவா என்று ஆராய வேண்டும். 'தண்ணீர் ஒரு அளவிலா செல்வம்' என்ற எண்ணம் மறைந்து, அதனை கவனத்தோடு, சிக்கனத்தோடு பாசனத்திற்கு உபயோகித்தால் நிலைமை ஒரு கட்டுக்குள் வரலாம்.
 
நாராயணன்: நல்ல பதிவு மற்றும் பகிர்வு.

சுந்தரவடிவேல் கூறியுள்ளது போல இந்த நெய்வேலி காட்டாமணி செடிகள். மைசூரிலிருந்து அடிக்கடி திருச்சி வரை பஸ்ஸில் பயணம் செய்துள்ளதால் இதை நேரடியாகக் கண்டிருக்கிறேன். பல இடங்களில், காவிரியாற்றில் பாதி பரப்பை இச்செடிகள்
ஆக்கிரமித்துள்ளன. ஈரோடு / கரூர் பகுதிகளில் சில இடங்களில் தொழிற்சாலை மற்றும் பிற கழிவுகள் சாக்கடைகள் போல காவிரியில் ஓடுகின்றன. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான சமயத்தில், இவையெல்லாம் தூர் வாரப்பட்டு, ஆற்றை அதன் ஒரிஜினல் கொள்ளளவில் வைத்துக் கொண்டாலே, மும்பை மழை மாதிரியான மழை (ஒருக்கால்?!) தமிழகத்திலோ, கர்நாடகத்திலோ பெய்யுங்கால், நிறைய நீர் வரும்.

மேலும் கோவையில் 'சிறு துளி' அமைப்பினர் செய்த மாதிரி, பல ஊர்களின் குளங்களை தூர் வாரி, ஆற்றிலிருந்து குளங்களுக்குச் நீர் செல்லும் கட்டமைப்பினை சரியாக வைத்துக் கொண்டாலே, தமிழகத்தின் பல காவிரி பாசனப் பகுதிகளின் நீர் ஆதாரம் பெருகும். அம்மாவுக்கு ஐயாவுக்கும் யார் பிரதமரிடம் பேசி, பெயர் வாங்குவது அல்லது இன்று நடத்தும் மத்திய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் என ஏதோ ஜல்லியடிக்கத்தான் நேரமும் எண்ணமும் இருக்கிறது. என்ன செய்ய..!

கர்நாடகத்தில் காவிரி/துணை ஆறுகள் பகுதிகளில் இந்த நெய்வேலி காட்டாமணி அதிகம் இல்லை.

15 வருடங்கள் முன்பு வரை ஆடிமாதத்தில் சுழித்துக்கொண்டு ஓடும் தண்ணீரை ஆற்றில் பார்த்த தஞ்சை மாவட்டக்காரனான எனக்கு பெருமூச்சு தான் விட முடிகிறது.

- அலெக்ஸ்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]