Jul 27, 2005

நீரும், நெருப்பும்

மும்பையில் வரலாறு காணாத மழை. இப்போதுதான் என்.டி.டிவியில் முழு விவரத்தினையும் பார்த்தேன். ஒரு நாள், ஒரே ஒரு நாள் பெய்த மழை இந்தியாவின் வணிக தலைநகரை ஆட்டம் காணவைத்திருக்கிறது. நான் பார்த்த வரையில் 200 பேர்களுக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 18 மணி நேரங்கள், வாகனங்கள் செல்ல வழியின்றி நடுத் தெருவில் நின்றிருந்திருக்கின்றன. என்.டி.டிவியின் சீனிவாசன் ஜெயினின் புண்ணியத்தில், [அவர்கள் கெளதம் சிங்கானியாவுக்கு நன்றி சொல்கிறார்கள், ஹெலிகாப்டர் தந்தற்காக] வானிலிருந்து மும்பையினைப் பார்க்க முடிந்தது. நகரமா இல்லை இவர்கள் ஒடும் ஆற்றுக்குள் இருக்கிறார்களா என்கிற சந்தேகம் வந்துவிட்டது. இயற்கையின் சக்தியினை இம்மாதிரியெல்லாம் பார்க்கும் போதெல்லாம் வியப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் தண்ணீர். தண்ணீர். தண்ணீர் மட்டுமே. சில வருடங்களுக்கு முன் அப்போதைய நிலவரத்தில் கெவின் காஸ்ட்னரின் வாட்டர் வேர்ல்டு என்கிற படத்தில் இதேப் போல் செட் போட்டு எடுத்திருப்பார்கள், அது நிஜமான செவ்வியாக முகத்தில் அறையும்போது, படம் பார்த்த வியப்புப் போய், அங்கிருக்கும் மக்களை எண்ணி அக்கறையும், கேள்விகளும் எழுந்தது. மும்பை நான் பார்த்த வரையில் பணமும், பிச்சைக்காரத் தனமும் அருகருகே இருக்கும் நகரம். சென்னையிலாவது இதை கொஞ்சமாய் வடசென்னை பக்கம் தள்ளி விட்டு விடலாம். ஆனால், மும்பையில் தாராவியில் மட்டுமல்ல குடிசைகள், மும்பையே கமல் சொன்னதுப் போல ஒரு பெரிய சைஸ் தாராவி தான். ட்சுனாமி சென்னையினை தாக்கிய போது, கடுப்பாக சொன்னேன், இது மட்டும் மும்பையில் நடந்திருந்தால், பாதி வி.ஐ.பிகள் போயிருப்பார்கள் என்று. கரி நாக்கு. நல்லவேளை வி.ஐ.பிகள் யாரும் இறந்ததாக செய்திகளில்லை. இப்போது மழை நின்றிருக்கிறது. ஆனால், மும்பையின் கிழக்கு பகுதியில் இன்னமும் ட்ராபிக் குறையவில்லை. மூன்று நாட்களுக்கும் முன்பு சென்னையில் இரவு ஒரு இரண்டு மணிநேரம் மழை செம காட்டு காட்டியது. அதற்கே, என் அலுவலகத்தினை சுற்றி அகழிகளும், கொத்தளங்களும் உருவாகி, என்னை அரசனாக்கி, அலுவலகத்திலேயே இருக்கும் படியாக போனது. மும்பையில் பெய்த மாதிரி பெய்தால் அவ்வளவுதான் சென்னை!

மும்பையின் பேய் மழைப் பற்றிய பிற பதிவுகள்

சுதாகர் | அலெக்ஸ் பாண்டியன் | ராஜேஷ் ஜெயின்

பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்கிற மூத்தோர் சொல் நினைவுக்கு வந்தது. மும்பை கடலில் இருக்கும் மும்பை ஹை எனறழைக்கப்படும், ஒ.என்.ஜி.சியின் மிகப்பெரிய பெட்ரோல் ஆழ்துளை கிணறு தீப்பற்றி எரிகிறது. இன்று மதியம் ஆரம்பித்த தீ இன்னமும் அணையவில்லை. பெட்ரோல் ஆழ்துளை கிணறுகள் எரிந்தால் எப்படியிருக்கும் என்று யோசிப்பவர்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அமெரிக்கா, ஈராக்கிலும், ஈராக், குவைத்திலும் பற்ற வைத்த எண்ணெய் கிணறுகளையும் அதன் மூலம் ஏற்பட்ட பொருளிழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றையும், டார்டாய்ஸ் இல்லாமல் ரீவைண்ட் செய்யலாம். நீரில் 200 பேர் போனால், நெருப்பில் 3 பேர்கள் இறந்திருக்கிறார்கள். 271 தொழிலாளிகள் கடலில் குதித்து இன்னமும் மிதந்துக் கொண்டு இருக்கிறார்கள். தீ வெகுவாக பரவிவிட்டதால், கடல் பாதுகாப்பு துறை வீர்ர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த கிணற்றிலிருந்து தான் இந்தியாவின் உள்நாட்டு எரிப்பொருள் தேவையில் 50% பூர்த்தியாவதாக ஒரு செய்தியுண்டு. இப்போது தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பதால் 2-3 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு இருக்கும் என்று பூர்வாங்க தகவல்கள் சொல்கின்றன.

மும்பை பெருந்தீ பற்றிய சுட்டிகள் -இந்தியன் எக்ஸ்பிரஸ் | ஹிந்துஸ்தான் டைம்ஸ் | பிஸினஸ் ஸ்டாண்டர்டு

மழையினால் உண்டாகிய சேதம் 500 கோடி இருக்கும். நெருப்பினால் உண்டாகும் பொருளியல் சேதம் 2-3 பில்லியன் டாலர்களாகவும், சுற்றுச்சூழல் சேதம் மிக அதிக அளவிலும் இருக்கும். விவேக் ஒரு படத்தில் நக்கலாக சொல்வார், பஞ்சபூதங்களுக்கு எதிராக நடக்காதே என்று ஒரு ரோட்டோர ஜோசியன் சொல்வான். அதற்கு என்னால் எதுவும் முடியலைன்னா, நான் மாத்ரு பூதத்துக்கிட்டே போரேண்டா என்று. இங்கு இரண்டு பூதங்கள் ஒரே நாளில் சும்மா ஷோ காட்டியதற்கே நம்மால் தாங்க முடியவில்லை. பஞ்ச பூதங்களும் ஆடினால் அவ்வளவுதான்.

அவ்வப்போது இயற்கை தன் வலிமையினைக் காட்டும்போது தான் எவ்வளவு அற்ப பதர்கள் நாமெல்லாம் என்று மரமண்டைக்கு உரைக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு இனிமேலாவது நாம் மாறலாம் என்று ஒரு நாளும் நான் சொல்ல போவதில்லை. அவரவர் பார்வை அவரவர்களுக்கு.

ஜமீலாவின் பதிவுக்கான என் பதிலை தனிப் பதிவாக எழுதுகிறேன். அதுவரை தூற்றும் அநாமதேயங்கள் வேறு வேலைப் பார்க்கலாம். பின் வந்து இகழலாம்.

Comments:
narain, spoke to few of my friends...almost every one has got stuck into some sub-urb train or other...no electricity... most of the landlines are dead... but they say, things are getting under control..lets see...

btw,read this (:

http://youthcurry.blogspot.com/2005/07/stop-selling-for-once.html
 
அன்பு நாராயணன்

Thanks for the Quick Update.

மயிலாடுதுறை சிவா...
 
Narain!!!

Most of the banks ATM(whose main server based in Mumbai) are not working in Bangalore...due to this rain.UTI is affected fully..
 
Narain!!!....

Many call centers are getting affected..Calls were routed to others sites.....
 
அன்புள்ள நாராயணன்,

இயற்கையின் சீற்றம்!!! நாமெல்லாம் வெறும் துரும்புதான்.

எல்லா இடத்துலேயும் கஷ்டம் என்னவோ பரம ஏழைக்குத்தான்.

மனக்கவலையா இருக்கு.
விவரங்களுக்கு நன்றி.

என்றும் அன்புடன்,
துளசி.
 
//ஜமீலாவின் பதிவுக்கான என் பதிலை தனிப் பதிவாக எழுதுகிறேன். அதுவரை தூற்றும் அநாமதேயங்கள் வேறு வேலைப் பார்க்கலாம். பின் வந்து இகழலாம்.//

நாராயணன்,

பெருமழைக்கும் ஜமீலாவுக்கும் என்ன சம்பந்தம்? எங்கேயோ உதைக்கிறதே? கற்புள்ள பெண்கள் பெய்யெனச் சொன்னால் பெய்யுமாமே மழை அதனாலா? நல்லோர் சிலராவது இருந்தால் மழை பெய்யுமாமே அதனாலா? ஜமீலாவை உங்களையோ தவறாகச் சொல்லவில்லை. காமம் சார்ந்த பதிவுகள் என்று மட்டும்தானே சொன்னேன்.
 
காலச்சுவடு இப்படிச் செய்வது புதிதல்லவே. இலக்கிய, அ இலக்கிய சர்சைகள்,வம்புகள், வதந்திகளுக்காக ஒரு தனி இதழ் ஆரம்பித்துவிடலாம்.அதற்கு இலவச இணைப்பாக காலச்சுவட்டைக் கொடுத்துவிடலாம்.

என் சுவாசக் காற்றில் தீண்டாய் மெய் தீண்டாய் கேட்டிருக்கிறீர்களா. அ, ஆ விற்காக ரகுமான் சிரமப்படாமல் போகிற போக்கில் இசை அமைத்திருக்கிறார். ஒப்போடுவிற்கு பிறகு எஸ்.பி.பிக்கு இந்த மாதிரி பாடல்கள்தான் அதிகம் கிடைக்கின்றனவா.

எஸ்.பி.பி.சரண் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்பா போல் பாடுகிறார்கள் என்பதே டி.எம்.எஸ் ஸின் இரண்டு மகன்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு தடையாக இருந்தது. எஸ்.பி.பி போல் சரண் பாடினால் இன்று அப்படிப் பாடச் சொல்பவரகள் அதை அவருக்கு எதிராக பயன்படுத்தக் கூடும். தனிக்குரல் இல்லாத பாடகர்கள் நிலைத்து நிற்பது கடினம்.

சதாசிவ பண்டாரத்தார் என்று கேள்விப்பட்டதில்லையா. நல்ல வேளை உங்களிடம் நான் ஒரு பண்டாரம் என்று சொன்னவரிடம் தினத்தந்தியில் இடம் பெறும் ஆண்டிப்பண்டாரம் நீங்கள்தானா என்று கேட்காமல் விட்டீர்கள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]