Jul 31, 2005

கொத்து பரோட்டா

இந்த வாரம் சுஜாதா வாரம் போல இருக்கிறது. சுஜாதா க.பெ.துமில் எழுதிய ஸ்ரீரங்கத்தில் 13000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு மறுப்பு தெரிவித்து எழுதிய கடிதத்தினை வழக்கம்போல இரண்டு வரிகளில் தான் எதை எழுதினாலும் மறுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியபடி தாண்டிவிட்டார். விகடனுக்கு கடிதமெழுதிய இரண்டு பேர்கள் ஒரு பிரதியை காலச்சுவடுக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது. ஆகஸ்ட் மாத காலச்சுவட்டில், மூன்று பக்கங்களில் வெளியிட்டு வேறு "யாரையோ" எதிர்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். தமிழ் சிற்றிதழ்கள் வரவர, அ.தி.மு.க, தி.மு.க சார்பு தொலைக்காட்சிகள் போல ஆகிவருகின்றனவோ என்கிற சந்தேகம் வருகிறது. கட்சி பிரிந்து, கட்டம் கட்டி அடித்துக் கொள்கிறார்கள். வலைப்பதிவுகள் எவ்வளவோ தேவையில்லை பரவாயில்லை [நன்றி: ரம்யா]. இதன்மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், தமிழ் அறிவுஜீவிப் புத்தகங்களில் குறிப்பாக காலச்சுவட்டில் வரவேண்டுமானால் சுஜாதாவினை எதிர்த்து எழுதுங்கள். வாய்ப்புகளதிகம். இதுதாண்டி, எல்லா சிறுபத்திரிக்கைகளிலும், அடிக்கடி அடிபடும் இன்னொரு பெயர் அ.ராமசாமி. எனக்குத் தெரிந்து, படம் பார்க்க தியேட்டருக்கு, நோட்புக், ஸ்கேல், ரெபரென்ஸ் புத்தகங்கள், இருட்டில் எழுத ஒரு டார்ச்லைட் கொண்டு போகும் ஒரே ஜீவன் இவராக தான் இருக்கும். தமிழ்சினிமாவினை மெக்கானிக்கினைப் போல அக்குவேறு ஆணிவேறாக பிரித்து இவர் எழுத ஆரம்பித்தால், அ.ராமசாமி, அபத்த ராமசாமியாகிவிடுவார். பிப்ரவரி 14, தாஸ் போன்ற படங்களுக்கான விமர்சங்களை விரைவில் எதிர்ப்பாருங்கள்.

பார்க்க - காலச்சுவடு

"ஆறரை கோடி பேர்களில் ஒருவன், அடியேன் தமிழன், நான் உங்கள் நண்பன்" என்று ஏ.ஆர். ரஹ்மான் வாயி(யா)லாக ஆரம்பித்து, பிண்ணி எடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இது யாருக்கான பதிலாய் இருக்குமென்று உலகமக்களின் தீர்ப்புக்கு விட்டு விடலாம். ஏ.ஆர். ரஹ்மான் அந்நியனில் விட்டதை ஈடுகட்டியிருக்கிறார். அஆவில் 6 பாடல்கள். 4 தேரும் என்று நினைக்கிறேன். வக்கிரம் நிறைந்த தமிழ் இயக்குநர்களில் சூர்யாவும் ஒருவர் என்பது ஒரு புறமிருந்தாலும், ரசனைமிக்க ஆள். தன் படங்களை எவ்வாறு வியாபாரத்தில் விற்கவேண்டுமென்று நன்கு தெரிந்த சாமர்த்தியசாலி. "வருகிறாய், தொடுகிறாய் வெந்நீர் போல சுடுகிறாய்" ஒரு கிளாசிக் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல். ஹரிஹரனும், சித்ராவும் கலக்கியிருக்கிறார்கள். இதுதாண்டி, "மரங்கொத்தியே" என்கிற பாடலை ஒரு கூட்டமே பாடியிருக்கிறது. "மயிலிறகே" பாடல் ஒகே ரகம். ஆச்சர்யம். பி.எப்பில் ஒரு பாடலிலும் ஆங்கிலமே இல்லை. வாலி வூடு கட்டி வெளயாடி இருக்கிறார்.

கேட்க - அஆ

"பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் பொன், வெள்ளி, முத்து போன்ற உயர்மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கரூவூலம் என்பதாகும். கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை அரசுப் பண்டாரங்களைப் போலவே கோயில்களீலும் பண்டாரங்கள் இருந்தன. இப்பண்டாரங்களில் உயர் மதிப்புடைய தங்கம், வெள்ளியிலான சிலைகளும் நகைகளும் பாதுகாக்கப்பட்டன...................... பண்டாரம் என்பது செல்வக் குவிய்லைக் குறிக்கும் சொல் என்பதனால் அருட்செல்வத்தை அள்ளி வழங்கும் இறைவனே 'மூலபண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்" என்று நீள்கிறது பண்டாரங்கள் பற்றிய செய்தி குறிப்பு "அறியப்படாத தமிழகம்" புத்தகத்தில். காரணம், இரண்டு நாட்களுக்கு முன்பு தி.நகர் சந்திப்பில் ஒரு காவியுடையணிந்தவர் என் வண்டியை எடுக்கும் போது, "தம்பி நானொரு பண்டாரம். ஏதாவது இருந்தா கொடுங்க" என்று கேட்டதில் தொடங்கியது "பண்டாரங்கள்" பற்றிய ஆராய்ச்சி. என்ன ஆச்சரியம், ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் அதற்கு நேர்மாறாக மாறியுள்ளது. Treasury என்பதற்கு கஜானா என்பதற்கு பதிலாக, பண்டாரமென்று சொல்லலாமே. எவ்வளவு அருமையான சொல். ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் கொலைச் செய்யப்பட்டு, அதன் நேர்மறை பொருளை தந்துக் கொண்டிருக்கிறது. இதுப் போல வேறு எவ்வளவு சொற்களை தொலைத்திருக்கிறோம்.

படிக்க - அறியப்படாத தமிழகம் - பேரா. பரமசிவன், ஜெயா பதிப்பகம்.

பிரகாஷ் புத்தக விளையாட்டு ஆரம்பித்ததுப் போல இன்னொரு விளையாட்டு. போரடித்தால் விளையாடலாம். இசை விளையாட்டு விளையாடலாம். இதில் கேட்கும் கேள்விகள் கொஞ்சமே. ஆழமாய் எழுத வேண்டிய கட்டாயங்கள் இல்லை. நீளநீள பதிவுகள் தேவையில்லை. நீங்கள் மடிக்கணினியோ, மேசைக் கணினியோ, ஆடியோ சிஸ்டமோ எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள். நானே கேள்விக் கேட்டு பதிலையும் சொல்லி தொடங்கி வைக்கிறேன். இஷ்டமிருந்தால் தொடருங்கள்.

மொத்த பாடல்களின் எண்ணிக்கை: 700 +
மொத்தக் கொள்ளளவு: மடி, மேஜை கணினிகள் சேர்த்து 3.2 ஜிபி
பிடித்த இசையமைப்பாளர்: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, பரசுராம் ராதா
பாடகர்கள்: எஸ்.பி.பி. எஸ்.பி.பி, எஸ்.பி.பி & பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ், கண்டசாலா,
பிடித்த இசை வடிவங்கள்: தமிழ் சினிமாப் பாடல்கள், சூபி பாடல்கள், அரபி பாடல்கள், கொஞ்சமாய் நேரத்துக்கேற்றாற் போல் எம்.டிவியின் ஆங்கிலப் பாடல்கள்
சமீபத்தில் வாங்கிய குறுந்தகடு: இளையராஜாவின் திருவாசகம்
பாத்ரூமில் முணுமுணுக்கும் பாடல்/ல்கள்: - "காதல் யானை - அந்நியன்", "வருகிறாய், தொடுகிறாய் - அஆ" "அந்த நாள் ஞாபகம் -அது ஒரு கனாக்காலம்"
என்றைக்கும் பிடித்த ஒரே ஒரு பாடல்: "தென்றல் வந்து தீண்டும் போது" - அவதாரம்

சுடோகு விளையாடுவதை விட, டெக்கான் குரோனிகல் சப்ளிமெண்டரி படிப்பதை விட இது எவ்வளவோ தேவையில்லை ;-)

இது எப்படி இருக்கு?
சமீபத்தில் ஒரு பெரிய விளம்பரநிறுவனத்தின் நிர்வாகியோடு பேசிக் கொண்டிருந்தேன். பேச்சினிடேயே ஒரு சுவாரசியமான விதயத்தினை பகிர்ந்து கொண்டார். நிர்வாகி சங்கீத இசை ரசிகர். ஒரு இளம் பாடகரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அந்த பாடகர் இப்படி புலம்பியிருக்கிறார். "தமிழ்,தெலுங்கு, ஹிந்தின்னு கூப்புடராங்க சார். கூப்பிட்டு அப்பா மாதிரி பாடுங்கன்னு கேக்கறாங்க. அது கூட பரவாயில்லை. பாடி முடிச்சவுடனே, உங்க அப்பா மாதிரி பாட்டுக்கு நடுவுல கொஞ்சம் சிரியுங்க, இருமுங்க, குரல் மாத்திப் பாடுங்கன்னு வேற கேக்கறாங்க. அவர் எங்க நான் எங்க, அதனால பாடறதை கொறச்சுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்". அந்த இளம் பாடகர்: சரண் அவர் அப்பா: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

பைனாகுலர் என்கிற ஆங்கிலப் பெயருக்கு இணையாக தமிழ் பெயர் யோசித்து ரொம்ப நாட்களாய் தேடிக் களைத்து, ஜோதிகாவின் 50,000 கலர் முகூர்த்தப் பட்டு புடவையை சூர்யா பார்த்தாரா [நயன்தாராராராரா......] என்கிற சந்தேகத்தோடு சுற்றி, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஹோர்டிங்கில் இருக்கும் சன்சில்க் நேச்சுரல் விளம்பர மாடலின் அழகில் மயங்கி, ஒரமாய் வண்டியை விட்டு, யார் இந்த பெண் என்று என்னுளிருக்குள் கூகிளில் தேடி மாட்டாமல் போய், பேசாமல் மாடல் கோ ஆர்டினேட்டர்களைப் பிடித்து விசாரித்து, கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்னும் போது சடாலென யோசனை மின்னியதால் இன்று முதல் இந்த பத்தி "கொத்து பரோட்டா" என்கிற சுத்த தமிழ்பெயரோடு வரும் :-) அப்பாடா, சன் சில்க் பொண்ணுப் பத்தி சொல்லியாச்சு!!

Comments:
எழுதியதற்க்கு மிக்க நன்றி...

13-ம் நூற்றாண்டிலிருந்து தமிழக கோவில்களிலிருந்து பண்டாரங்கள் வலுக்கட்டயமாக வெளியேற்றப்பட்டதன் உள்நோக்கம் பின்ணனி தெரியுமா..தெரிந்தால் தயவு செய்து எழுதுங்கள்...

அன்புடன்
அரவிந்தன்
 
அன்புள்ள நாராயணன்,

இந்தப் 'பண்டாரம்'ன்றதையே சர்நேமா வச்சு ஒரு குடும்பம்
சுமார் 80 வருசத்துக்கு முன்னே ஃபிஜி வந்து செட்டில் ஆகி இப்பப் பெரிய குடும்பமாவளர்ந்து அங்கே 'பெத்த' பேருலே நிலைச்சிருக்காங்க.

தமிழ்நாட்டுலேதான் பண்டாரத்தையும் பரதேசியையும் இணைச்சுடறது போல!

என்றும் அன்புடன்,
துளசி.
 
//வலைப்பதிவுகள் எவ்வளவோ தேவையில்லை.//

நாராயண், தேவலைன்னு சொல்ல வந்தீங்களா இல்லே நீங்களும் சுஜாதா கட்சியிலே சேந்துட்டீங்களா?? :-)
 
காலச்சுவடு இப்படிச் செய்வது புதிதல்லவே. இலக்கிய, அ இலக்கிய சர்சைகள்,வம்புகள், வதந்திகளுக்காக ஒரு தனி இதழ் ஆரம்பித்துவிடலாம்.அதற்கு இலவச இணைப்பாக காலச்சுவட்டைக் கொடுத்துவிடலாம்.

என் சுவாசக் காற்றில் தீண்டாய் மெய் தீண்டாய் கேட்டிருக்கிறீர்களா. அ, ஆ விற்காக ரகுமான் சிரமப்படாமல் போகிற போக்கில் இசை அமைத்திருக்கிறார். ஒப்போடுவிற்கு பிறகு எஸ்.பி.பிக்கு இந்த மாதிரி பாடல்கள்தான் அதிகம் கிடைக்கின்றனவா.

எஸ்.பி.பி.சரண் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்பா போல் பாடுகிறார்கள் என்பதே டி.எம்.எஸ் ஸின் இரண்டு மகன்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு தடையாக இருந்தது. எஸ்.பி.பி போல் சரண் பாடினால் இன்று அப்படிப் பாடச் சொல்பவரகள் அதை அவருக்கு எதிராக பயன்படுத்தக் கூடும். தனிக்குரல் இல்லாத பாடகர்கள் நிலைத்து நிற்பது கடினம்.

சதாசிவ பண்டாரத்தார் என்று கேள்விப்பட்டதில்லையா. நல்ல வேளை உங்களிடம் நான் ஒரு பண்டாரம் என்று சொன்னவரிடம் தினத்தந்தியில் இடம் பெறும் ஆண்டிப்பண்டாரம் நீங்கள்தானா என்று கேட்காமல் விட்டீர்கள்.
 
//வலைப்பதிவுகள் எவ்வளவோ தேவையில்லை.//

ramya, it is just a freudian slip.
put the smiley here.

பல ஆண்டுகள் முன்பு கோவை ஞானி தமிழ் பல்கலைகழகம் சுத்தானந்த பாரதியின் பாரத சக்தி மகாகாவியம் என்ற நூலிற்கு பரிசு கொடுத்ததை கண்டித்து எழுதினார். அதில் நூலின் பெயர் பாரத சகதி மகாகாவியம் என்று அச்சாகியிருந்தது. அதைப் படித்து விட்டு ஏ.வி.அசோக் இது
freudian slip என்று
நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஏ.வி.அசோக் யார் என்று உங்களிடம் கணவரிடம் கேளுங்கள்.
 
This comment has been removed by a blog administrator.
 
Narain,

இந்தப் பதிவு, நிஜமாகவே "கொத்து பரோட்டா" டைப் தான்,
A 'MIXED' பதிவு :)

எ.அ.பாலா
 
கொத்து பரோட்டா சூப்பர்.. சால்னா (காரம்!) தான் இல்லை :)
 
கொத்துப்பரோட்டா.... கொத்துப்பரோட்டாதான்...
 
மாயவரத்தான், சால்னா கொஞ்சம் அதிகமா போட்டா தேவையில்லாத பின்னூட்டம் வருது. அப்புறம் அதை ஒழிக்கறதுக்கு வழி கண்டுபிடிச்சு காரசாரமா ஒரு மட்டன் பரோட்டா போடுவோம். ஆமா நீங்களும் சண்டேன்னா "ரெண்டா" ;-)

//தினத்தந்தியில் இடம் பெறும் ஆண்டிப்பண்டாரம் நீங்கள்தானா என்று கேட்காமல் விட்டீர்கள்.//

ஆஹா சீனிவாஸ் பழைய தினந்தந்தி நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள். குரங்கு குசலா என்கிற கார்ட்டூன் ஒன்று வரும். பார்த்திருக்கிறீர்களா! ஒரு வேளை இப்போது அரசியல்வாதிகள் இரண்டு வேலைகளையும் எடுத்துக் கொண்டதால் தேவையில்லை என்று வெளியேற்றிவிட்டார்கள் போலிருக்கிறது.
 
ஹையோ... அந்த சண்டேன்னா ரெண்டுங்கிறது என்னன்னு புரியாம தான் நானும் கொழம்பியிருக்கேன். நான் சாட்டர்டே தான் 'ரெண்டு' :)
 
ஆஹா சீனிவாஸ் பழைய தினந்தந்தி நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள். குரங்கு குசலா என்கிற கார்ட்டூன் ஒன்று வரும். பார்த்திருக்கிறீர்களா! "


நாரயணா!!!..குரங்கு குசலா இராணி வாரப்பத்திரிக்கையில் வரும்..தினத்தந்தியில் அல்ல.....

அன்புடன்
அரவிந்தன்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]